Mon. Sep 16th, 2024

நீ பேசும் மொழி நானாக – 4

(4)

 

சர்வாகமனின் வருகைக்காக அந்த வீடே காத்திருந்தது. அவனை அழைத்து வருவதற்காக, குலவேந்தர், முன்தினமே கொழும்பு சென்றுவிட்டிருந்தார். அவனுடைய விமானம், காலை பத்து மணியளவில் தரையிறங்கியிருக்கும் என்பதால், எந்த நேரத்திலும் அவனை அழைத்துக்கொண்டு, வவுனியாவிற்கு குலவேந்தர் வந்து சேரலாம். அப்படிப் பார்த்தாலும், மிஞ்சி மிஞ்சிப் போனால், ஐந்து மணிக்கெல்லாம் வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் அவர்கள் வந்து சேரவில்லை. அவருக்கு கைப்பேசியில் தொடர்பு கொண்டு பார்த்த வள்ளியம்மை சலித்துப் போனார்.

 

“எத்தனை முறை தொடர்பு கொண்டும், இன்னும் மனுஷன், அழைப்பை ஏற்கவில்லையே…” என்று சினந்தவருக்கு, அங்கே என்ன பிரச்சனையோ என்கிற யோசனை வேறு எழுந்தது.

 

இரவு பத்துமணியாகியும் இருவரையும் காணவில்லை என்றதும் தாமரை சிணுங்கத் தொடங்கிவிட்டாள்.

 

“அந்தாள் எப்போ வாரது… நான் எப்போது தூங்குவது… தூக்கம் வருகிறதும்மா…” என்ற மகளிடம், படுக்குமாறு பணித்துவிட்டு வெளிவந்த வள்ளியம்மை நேரத்தைப் பார்த்தாள் பத்து முப்பது என்றது கடிகாரம்.

 

சமையலறையை எட்டிப்பார்க்க, எப்போதும்போல பளிச் என்று நிரந்தரியின் கைவண்ணத்தில் மின்னியது.

 

சரிதான், என்று திரும்பியவளுக்குப், பாழாய்ப்போன தூக்கம் வேறு, பாடாய்ப் படுத்த,

 

“நிரந்தரி…!” என்று அழைத்தாள். பின்னறையிலிருந்து விழுந்தடித்துக்கொண்டு ஓடிவந்தாள் அவள்.

 

எப்போதும் போல, அவளைக் கண்டதும், எரிச்சல் மேலிட,

 

“அவர்களை இன்னும் காணவில்லை. உணவை எடுத்துக் குளிர் பெட்டியில் வை. வந்ததும் சூடாக்கலாம்… எத்தனை மணிக்கு வருகிறார்களோ தெரியவில்லை. என்னத்திற்குத்தான் கைப்பேசி வைத்திருக்கிறார்களோ. தொடர்புகொண்டு எங்கே இருக்கிறோம் என்று சொன்னால் குறைந்தா போய்விடுவார்கள்?” என்று சலித்தவாறே,  தன் அறைக்குள் நுழைய, நிரந்தரி, தன் அத்தையின் கட்டளையை நிறைவேற்றுவதற்காகச் சமையலறை நோக்கிச் சென்றாள்.

 

நிரந்தரியும் எல்லாவற்றையும் கவனமாக எடுத்து வைத்துப் பரவியிருந்த பாத்திரங்கள் அனைத்தையும் கழுவி அதற்குரிய இடங்களில் வைத்துவிட்டு முன்னறைக்கு வர, அந்த வீட்டின் இளஞ்சிங்கம், குலவேந்தர், வள்ளியம்மையின் இரண்டாவது மகன், சூரியப்பிரகாஷ், இருக்கையில் சாய்ந்தவாறே, குழந்தைபோல் தூங்கிவிட்டிருந்தான்.

 

அதைக் கண்டதும், இதழ்களில் எழுந்த புன்னகையுடன், அவனருகே வந்து, மெதுவாக  அவன் தோளைத் தொட்டசைக்க,

 

“சிக்சர்… சிக்சர்…” என்று அலறியவாறு விழிகளைத் திறந்து எழுந்தமர்ந்தான் பிரகாஷ்.

 

அவன் கத்திய கத்தலில், பதறியடித்து இரண்டடி பின்னால் வைத்து மலங்க மலங்க விழித்தாள் நிரந்தரி.

 

தூக்கக் கலக்கத்தில் தன் விழிகளைத் திறந்தவன், அதிர்ந்த முகத்துடன், தன் முன்னால் நின்றிருந்த அண்ணியைக் கண்டதும், தாம் கனவில் ஏதோ கத்திவிட்டோம் என்பதைப் புரிந்துகொண்டவனாகச் சங்கடத்துடன்,

 

“ஹீ… ஹீ… சாரி அண்ணி… க்ரிக்கட்… நான் பட்டிங்… டென்டுல்கர் போலிங்… சிக்சர்…” என்று அசடு வழிந்தவாறு, இன்னும் தூக்கக் கலக்கம் மாறாது அவன் தடுமாற, அதைக் கண்டவளுக்குச் சிரிப்புப் பீரிட்டுக்கொண்டு வந்தது. சிரமப்பட்டு அதை அடக்கியவாறு,

 

போய்ப் படுக்குமாறு அவனைப் பணிய, “எத்தனை மணி அண்ணி?” என்று கேட்டவாறு தானே சுவரில் தொங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தான்.

 

“பதினொரு மணியா…?” என்று வியந்தவன், “இன்னுமா அப்பா வரவில்லை?” என்று கேட்டவனிடம், ஆம் என்பதுபோலத் தலையாட்டினாள் நிரந்தரி.

 

“இனியும் என்னால் விழித்திருக்க முடியாது அண்ணி… நான் தூங்கப்போகிறேன்… காலை வேறு எழும்பவேண்டும்… புதிதாக வருபவன் என்ன என்ன பில்டப் கொடுக்கப் போகிறானோ… குட் நைட்…” என்றவாறு நீண்ட கொட்டாவியைத் தன் கையிடுக்கில் விட்டபடி

 

“சே… கொட்டாவி கூட அம்மாவைப் போலச் சொல்லாமல் கொள்ளாமல் முந்திரிக் கொட்டைபோல் முன்னுக்கு வருகிறது” என்று, நக்கலுடன் கூறி, நழுவிய ‘சறத்தை’ இழுத்து இடையில், இறுகக் கட்டிக்கொண்டு, தன் அறைக்குள் புகுந்தான்.

 

அவன் சொன்னவை திவ்வியமாக நிரந்தரியின் காதில் விழ எவ்வளவுதான் முயன்றும், அவளால் நகைப்பை அடக்க முடியவில்லை. இடக்கரம் வயிற்றை அணைத்தவாறிருக்க, வலக்கரத்தின் முழங்கை, மறுகரத்தின் மீது தாங்கித் தன் உள்ளங்கையால் வாயைப் பொத்தித் தன் சிரிப்பை அடக்க முயன்றும் முடியாமல், ‘க்ழுக்’ எனச் சிரித்துவிட்டாள்.

 

அவள் சிரித்ததுதான் தாமதம், அதுவும் சிரித்தது, நிரந்தரி… பாம்புச் செவி கொண்ட வள்ளியம்மைக்குக் கேட்காமல் விடுமா என்ன?

 

“அதென்னடி இரவு வேளையில் சிரிப்பு? அறிவில்லை. போய் இருக்கிற மிச்ச வேலைகளைப் பார், ஊமைக்கோட்டான்” என்று ‘ஐ பாடில்’ ஏதோ சீரியலைப் பார்த்தவாறிருந்தவர், சினத்துடன் கடிய, அவசரமாகத் தன் சிரிப்பை மறந்து, மின்விளக்குக்களை அணைப்பதற்காக விரைந்தாள் நிரந்தரி.

 

“இத்தனை நேரத்திற்குப் பிறகு இனி இவர்கள் எங்கே வரப் போகிறார்கள் மழை வேறு கொட்டத் தொடங்கிவிட்டது. இந்த அகோர மழைக்குள் அவரால் ஓட்ட முடியாது. இனி நாளைதான் வருவார்கள்.” என்றவாறு வாயைத் திறந்து பெரிய கொட்டாவியை விட்டுக்கொண்டே, ஐ பாடை அணைத்து ஓரமாக வைத்திவிட்டுத் தலையைத் தலையணையில் பதிக்க, அது வரை தூங்கவா தூங்கவா என்று கேட்டுக்கொண்டிருந்த விழிகளுக்குச் சம்மதம் கூற, அவர் விழிகள் தாமாகவே மூடிக்கொண்டன.

 

நிரந்தரிக்கு இனி செய்வதற்கு வேறு வேலை எதுவம் இல்லாததால், அந்த மாளிகையின் பின்பக்கம், அவளுக்கென்று கொடுக்கப்பட்டிருந்த, அறைக்குள் நுழைந்து, மின் விளக்கைப் போட, அறை வெளிச்சமானது. சிறிய அறைதான்… ஆனால் மிக மிக சுத்தமாக இருந்தது.

 

சிறு மேசை, ஒரு கதிரை. பழைய ஒற்றைக் கட்டில். அவளுடைய துணிகள் வைக்கும் ஒரு சிறிய பெட்டி. மேசைக்குமேல் அவள் கணவனின் சிரித்த முகத்துடனான ஒரு புகைப்படம்.

 

குலவேந்தன் வள்ளியம்மையின் மூத்த மகன் ஜெயப்பிரகாஷ். அப்படியே வள்ளியம்மாளையே உரித்துவைத்திருந்தான். அவன் உருவத்தில் மட்டுமல்ல, குணத்திலும் வள்ளியம்மை தான். அந்தப் படத்தைக் கரத்தில் எடுத்து உற்றுப் பார்த்தாள்.

 

ஏதாவது இதயம் படபடக்கிறதா? தவிக்கிறதா என்று தன் மார்பின் மீது கரம் வைத்து உணர முயன்றாள். ம்கூம்… வெறுமையாக இருந்தது இதயம். தன் கணவனை எண்ணி நாணம் கொள்ளவில்லை. பதறவில்லை. தவிக்கவில்லை. ஏன் அவன் அருகேயில்லை என்று கலங்கக்கூட இல்லை.

 

சலிப்புடன், மீண்டும் அதே இடத்தில் படத்தை வைத்துவிட்டு, மின்விளக்கை அணைத்து, படுக்கையில் அமர்ந்தவளுக்குத் தூக்கம் வரும்போல இல்லை. சிந்தனை இன்று வருவதாகச் சென்ன மாமனாரிடமே நிலைத்தது.

 

‘ஏன் இன்னும் வரவில்லை? ஒரு வேளை அந்த விருந்தினர்கள் வரவில்லையோ? அவருக்காகத்தான் காத்திருக்கிறாரோ? மழை வேறு அடித்துப் பெய்யத் தொடங்கிவிட்டது… பாவம், என்ன சிரமப்படுகிறாரோ?’ என்று எண்ணியவள், மீண்டும் தன் அறைக்குள் மாட்டியிருந்த அந்தக் கடிகாரத்தைப் பார்த்தாள். ஒரு மணியாவதற்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன.

 

யோசனையுடன் அங்கிருந்த மேசை விளக்கைப் போட்டுவிட்டு, தாமரை கொடுத்த, சிவஷங்கரியின் மலையின் மறுபக்கம் நாவலைத் தொடர்ந்து படிக்கத் தொடங்கினாள். அந்தக் கதையில் ஆழ்ந்து போயிருந்தவளுக்கு, நேரம் போனதுகூடத் தெரியவில்லை.

 

திடீர் என்று பெரும் இடிச் சத்தம் கேட்கப் பதறித் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் நிரந்தரி.. வெளியே அடை மழை கொட்டிக்கொண்டிருப்பதை அந்த இடி உணர்த்தினாலும், அந்த இடியினூடாக வேறு சத்தத்தையும் அவளுடைய கூரிய செவிகள் உள்வாங்கின.

 

அவளுடைய பாம்புச் செவிகளுக்கு, யாரோ கதவைத் திறக்கும் ஓசை கேட்க “மாமா வந்துவிட்டார் போல் இருக்கிறதே” என்று நிம்மதியுடன் எண்ணியவாறு நேரத்தைப் பார்த்தாள். நடுச்சாமம் இரண்டுமணியைக் கடிகார முற்கள் எட்டத் தொடங்கியிருந்தன.

 

‘இந்த நேரத்தில் வந்திருக்கிறாரே’ என்று துள்ளி எழுந்தவள், கதவை நோக்கிப் போகவும், மின்சாரம், தற்காலிகமாகத் தனது, உயிரை விடவும் நேரம் சரியாக இருந்தது.

 

‘சுத்தம்… மின்சாரம் போய்விட்டதே?’ என்று எண்ணியவளுக்கு, எங்கே மாமனார் இந்த இருட்டில் எங்காவது முட்டிவிடுவாரோ என்கிற அச்சம் எழ, அடிக்கடி தெறித்த மின்னலின் வெளிச்சத்தில், மேசையைத் தேடிச் சென்று, அதன் இழுப்பறையைத் தடவிப் பிடித்து, இழுத்து, அங்கிருந்த இரண்டு மெழுகுவர்த்திகளைக் கரங்களில் எடுத்து, ஓரமாக இருந்த தீப்பெட்டியால் மெழுகு திரியை ஒளி ஏற்ற, ஓரளவு அறை வெளிச்சமானது.

 

அதே நேரம், கதவைத் திறந்து உள்ளே வந்த குலவேந்தர், வீடு இருட்டாக இருக்கிறதே என்கிற யோசனையில், எப்படியோ தட்டுத்தடுமாறி, மின்விளக்கு விசையை அழுத்திப் பார்த்தார்.

 

“அடடே… மின்தடை ஏற்பட்டுவிட்டது போலும்… சர்வாகமன்… கவனமா வாப்பா… நான் போய் மெழுகுதிரியை எடுத்து வருகிறேன்” என்று அவர் மெல்லிய குரலில் உத்தரவிட்டுக்கொண்டிருக்கும் போதே, நிரந்தரி ஏற்றப்பட்ட மெழுகுதிரியை வலக்கரத்தில் ஏந்தியவாறு முன்னறைக்குள் வந்துகொண்டிருந்தாள்.

 

அவளுடைய கவனம் முழுவதும், மெழுகுதிரி அணைந்துவிடக் கூடாது என்பதிலேயே இருந்ததால், மிக மிக மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தவளுடைய இடக்கரத்தின் உள்ளங்கை, அந்த சுவாலையின் மீது காற்றுபடாதவாறு குவித்துப் பிடித்திருந்தன.

 

அதே நேரம், கதவு திறந்திருந்தால், பேயாய் வீசிய காற்றில், மெழுகுதிரி ‘நான் அணையப்போகிறேன், நீ யார் என்னைத் தடுக்க,’ என்பது போல, உயிரைக் கையில் பிடித்தவாறு, அங்கும் இங்கும் நடுங்கியவாறு ஆட, வெளிச்சம் அணையப்போகிறதே என்கிற பதற்றத்தில், “ஓ…” என்கிற ஓசையுடன், தன் அழகிய செவ்விதழ்களைக் குவித்து, ஒளியை அணையாது காப்பதில் தன் கவனத்தைச் செலுத்தித் தடுமாறிக்கொண்டிருந்த அந்த நேரத்தில், தன் பெட்டிகளை உள்ளே வைத்துவிட்டுத் தலை நிமிர்ந்தான் சர்வாகமன்.

 

நிமிர்ந்தவனின் விழிகளில் முதலில் விழுந்தாள் அப்பழுக்கில்லா அத் தேவதை. முதலில் அது உயிருள்ள உருவம்தான் என்பதை நம்பவே அவனுக்கு சற்று நேரம் எடுத்தது. சற்றுக் கலைந்து சுருண்டு முன் பக்கம் விழுந்த குழலில் ஒளிரும் மதியாய் அவள் முகம். சற்றுக் கவிழ்ந்த இமைக்குக் காவாலாய் அடர்ந்த இரு புருவங்கள். கடவுளே… இது பெண்ணா? இல்லை ரவிவர்மன் தீட்டிய ஓவியமா? இதயம் வேகமாக அடிக்க, இமைகளை மூட மறந்துபோய் சிலையென நின்றான் அக் காந்தர்வன்.

 

அந்தக் காந்த விழிகளுக்குள் அவள் விழுந்த அந்த நொடியே, அவன் உணராமலே, நழுவிச் சென்று, இதயம் என்னும் கோவிலின் கற்பக்கிரகத்தினுள் குடியிருந்த கற்பனைக் காதலிக்கு மெது மெதுவாக உயிர் ஊட்டத் தொடங்கினாள் அந்தப் பதுமினி.

 

தன் உயிரில்லாக் காதலி, உயிர்பெறத் தொடங்கிவிட்டாள் என்பதை உணராமலே, தன் முன்னால், மெழுகுவர்த்தியின் ஒளியில், ஒரு கவிதையாக நின்றிருந்த பெண்ணைக் கண்டு, தன் வாழ்வில் முதன் முறையாக மூச்செடுக்க மறந்துபோய்த் திகைத்துப் போய் நின்றிருந்தான் சர்வாகமன்.

 

சிக்கிமுக்கிக் கற்கள் இல்லாமலே தீப்பற்றிக்கொண்டது அவன் உள்ளம். காற்று வீசாமலே அவள் பக்கம் இழுபட்டுச் செல்ல முயன்றது இதயம். மழை இல்லாமலே தளைக்கத் தொடங்கியது காதலெனும் தளிர். யாருடைய வற்புறுத்தலும் இன்றி வானும் மண்ணும் கட்டிக்கொள்ள முயன்றன. இது என்ன உணர்வு என்பதைப் புரியாமலே, அவள் நெருங்க நெருங்க, அவனுடைய இதயம் கன வேகமாகத் துடிக்கத் தொடங்கியதை ஒரு அதிர்வுடன் உணர்ந்துகொண்டான் அந்த ஆண்மகன்.

 

அப் புதுவித உணர்வில், எதுவும் புரியாதவனா, அவசரமாகத் தன் இடது மார்பின் மீது வலது கரத்தைப் பதித்துக் குழம்பிப்போனவனாக,

 

“வட் த ஹெல் இஸ் ஹப்பனிங் டு மீ… எதற்கு என் இதயம் இப்படி வேகமாகத் துடிக்கிறது?” என்கிற ஆராய்ச்சியில் இருக்கும் போதே, அவர்களை நெருங்கியிருந்தாள் அந்த தேவலோகத்துப் பெண்.

 

பெறாமகனின் அதிர்வை இருட்டு மறைத்ததால், அவனைப் பற்றி அக்கறை கொள்ளாது, தன் முன்னால், மெழுகுதிரியுடன் வந்தவளைக் கண்ட குலவேந்தருக்கு உள்ளம் குளிர்ந்து போனது.

 

“அடடே… நிரந்தரி… இன்னும் நீ தூங்காமல் விழித்தா இருக்கிறாய்?” என்றவரின் குரலில் கனிவிருந்தாலும், கூடவே ஏன் தூங்கவில்லை என்கிற கண்டிப்பும் அதில் தெரிய, மெதுவாகத் தன் முத்துப்பல் தெரியச் சிரித்தவளைக் கண்டதும், மீண்டும் அந்த இருதய சத்திர சிகிச்சை நிபுணனுக்கு, இருதயம் தடம் புரண்டு, அவள் காலடியில் விழ முயன்றது.

 

தனக்குள் புதிதாக அதுவும் திடீர் என்று ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணம் என்ன என்பது தெரியாமல், தடுமாறி நின்றவனை அந்தப் பெண்ணவள் சற்றும் ஏறிட்டுப் பார்த்தாளில்லை.

 

அவளுடைய கவனம் முழுவதும் தன் மாமனாரிடமே நிலைத்திருக்க, அதே நேரம், குளிர் காற்றுத் திறந்திருந்த கதவினூடாக அவர்களைத் தீண்டிச் செல்லும் நோக்கத்தோடு, வீச, அது வீசிய வேகத்தில் தாக்குப் பிக்க முடியாது மெழுகுதிரி தன் ஒளியை இழந்துவிட இருந்த வெளிச்சமும் தொலைந்த நிலையில், மீண்டும் அவ்விடம் கும்மிருட்டாகியது.

 

கூடவே அருகே எங்கேயோதான். இடி விழுந்திருக்கவேண்டும். பெரிய இடி முழக்கத்துடன் மின்னலும் அடிக்க, அதிர்ந்துபோய், பெரும் அச்சத்துடன் தன் இரு காதுகளையும் பொத்திக்கொண்டாள் நிரந்தரி.

 

தன் முன்னால் நின்றிருந்த தேவதையின் தளிர் உடல், பதறுவதை, அந்த மின்னல் வெளிச்சத்தில் கண்ட சர்வாகமன், அவசரமாக வாசல் கதவைப் பூட்டிவிட்டு, தன் முன்னால் நிற்பவளை வேகமாக நெருங்கினான்.

 

அதே நேரம், நிரந்தரியின் நிலையை ஏற்கெனவே குலவேந்தர் அறிந்திருப்பார் போலும்,

 

“நிரந்தரி… பதறாதே… ஒன்றுமில்லை… வெறும் இடி மின்னல்தான்… கொஞ்சம் பொறுமா… நெருப்புப் பெட்டி எங்கே என்று பார்க்கிறேன்” என்றவாறு, அவர் மெதுவாக உள் நோக்கிப் போக முயன்றவரைத் தடுத்தவனாக,

 

“வெய்ட் பெரியப்பா… என்னிடம் லைட்டர் இருக்கிறது…” என்று தன் ஆழமான அழுத்தமான, ஆண்மை மிக்க குரலில் கூறியவாறு தன் பான்ட் பாக்கட்டில் கைவிட, அது வரை தன் காதுகளைப் பொத்தியிருந்தவளின் செவியை அவனுடைய குரல் தீண்டிச் சென்ற மறுகணம், அந்தக் குரலிலிருந்த ஏதோ ஒரு சக்தி, அவளை விதிர் விதிர்க்கச் செய்ய, அவசரமாக, தன் கரங்களைக் காதுகளிலிருந்து சற்று விலக்கித் தன் முன்னால் நின்றிருந்தவனை, ஏறிட்டுப் பார்த்தாள் அவ் வண்மகள்.

 

ஆம் முதன் முறையாக அந்த வண்மகளும், வன்மகனும் பார்வைகளால் ஒருவரை ஒருவர் தரிசித்த தருணம் அது. வானோர் வாழ்த்தியரோ, இல்லை மாபெரும் அபத்தம் என்று பொங்கினரோ, இடியுடன் கூடிய மின்னல் படு பயங்கரமாய் வானையும் மண்ணையும் தாக்க, இது எதையும் உணராமல் இருவரும் அந்த மின்னல் வெளிச்சத்தில் விழிகளை விலக்க மறந்து, சிலையென ஒருவரை ஒருவர் பார்த்தவாறே நின்றிருந்தனர்.

 

அடிக்கடி ஒளிந்த அந்த மின்னல் வெளிச்சத்தில், மிக மிக உயரமாக, அவள் அண்ணாந்து பார்க்கும் உயரத்தில், செதுக்கிய சிலைபோல, எழுந்து வந்த திருமால் போல, காக்க வந்த ஐயனார் போல, நின்றிருந்தவனைக் கண்டவளுக்கு விழிகள் கூட இமைக்க மறுத்தன.

 

மீண்டும் எழுந்த இடியில் சுயநினைவு பெற்ற சர்வாகமன், தன் லைட்டரை வெளியே எடுத்து உயிர்ப்பித்தவாறு, தன் முன்னால் நின்றிருந்தவளை நெருங்கினான். அவனுடைய கவரும் விழிகள், எந்தத் தடுமாற்றமுமின்றி, அவளுடைய கயல் விழிகளுடன் கலந்து உறவாட முயல, அவனுடைய இடது கரம், காதினருகே மெழுகுதிரியைச் சுமந்திருந்த, அவளுடைய வலது கரத்தைப் பற்றிக் கீழிறக்கி, அதில் வீற்றிருந்த மெழுகுதிரிக்கு, ஒளியேற்றத் தொடங்கியது.

 

அணைந்து போயிருந்த மெழுகுதிரி இப்போது ஒளிபெற்று பிரகாசமாக எரியத் தொடங்க, மீண்டும் அறை வெளிச்சமானது.

 

அவனுடைய கரம் பட்ட நொடி, கரங்களுக்குள்ளாக ஏதோ ஒரு புது வித உணர்ச்சிகள் பரவிப் படர்ந்து நாடி நரம்புகள் முழுவதும் வேகமாகப் பாய்ந்தோடத் தொடங்க, என்றுமில்லாதவாறு அது வரை குளிர்ந்திருந்த உடல் அதி வேகமாகச் சூடேறத் தொடங்கியது. அவளையும் மீறி முடிக் கால்கள் குத்திட்டு நின்றன. இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. ஏதோ ஒரு தவிப்பு… ஏதோ ஒரு மயக்கம்… சொல்ல முடியாத ஒரு தயக்கம் அவளுக்குள்.

 

அவன் ஸ்பரிசத்தின் அதிர்வுடன் அவனை வெறித்துப் பார்க்க, அந்த ஆடவனின் மயக்கும் விழிகள், தன்னை மயக்கிச் சுருட்டி உள்வாங்க முயல்வது போன்ற உணர்வில், நிரந்தரி சிக்கித் தடுமாறித் தவித்துப் போனாள். அது எந்தவிதமான உணர்வு என்பதை அவளால் சற்றும் ஊகிக்க முடியவில்லை.

 

சர்வாகமனோ, அவள் மீதிருந்த தன் பார்வையைச் சற்றும், விலக்காமல், மெழுகுவர்த்தியின் ஒளியில், தனக்கு மிக மிக அருகே நின்றிருந்த அந்தப் பைங்கிளியை விழிகள் மூடாது முதன் முறையாக ஒரு பெண்ணைச் சற்றுக் காமம் கலக்க வெறித்துப் பார்க்கத் தொடங்கினான். அவளைக் கண்ட அந்தக் கணத்தில், அவனுடைய ஆறறிவும் சற்று மந்தமாகிப் போனதுதான் பரிதாபம்.

 

இருவருக்கும் இடைப்பட்ட தூரம் வெறும் ஒன்றரை அடி மட்டுமே. ஆனாலும் அந்தத் தூரமே ஏதோ காத தூரம் என்கிற எண்ணத்தில் ஓரடி முன் வைத்து அவளை நெருங்கி,  தன் வெம்மையான உயிர்க்காற்று, அவள் முகத்தில் படும் நெருக்கத்தில் நிற்க, அவளுக்கே உரித்தான புது வித சுகந்தம் அவனுடைய நாசியைத் தீண்டிச் செல்ல, ஏனோ உடல் சிலிர்த்துப் போனான் சர்வாகமன்.

 

அந்த சுகந்தம் கிடைக்கா விட்டால், உயிர் நீத்து விடுவோமோ என்று அஞ்சியவன் போல, அவ்வாசனையை ஆழமாக மூச்செடுத்து, உள்வாங்கி சுவாசப்பை முதல் இதயம் வரை நிரப்பிக்கொண்டவன், தன்னைத் தடுமாற வைத்த அந்தத் தையலை, அந்த நிலையிலும் அணு அணுவாக ரசித்து ஆராயத் தொடங்கினான்.

 

அந்த மெல்லிய ஒளியிலும், அழகாய் தெரிந்த பிறை நெற்றியும், எந்நேரமும், அம்பெய்யத் தயார் என்பதுபோல அச்சுறுத்தும் திருத்தமான வில் போன்ற புருவங்களும், அதன் கீழ், மாறனின் அம்பென, அவனைக் குத்தி வீழ்த்த முயலும் நீண்ட பெரிய கயல்விழிகளும், ஈட்டியென அவனைத் தொட்டுப் பார்க்கத் தூண்டிய மெல்லிய கூர் நாசியும், அழகாகச் சிறிது வளைந்த சற்று சதைப்பற்றுக் கொண்ட பலாச்சுளை உதடுகளும், வட்டமும் நீளமும் அல்லாத அளவான முகமும் இவை அனைத்தும் சேர்ந்து ஒளிவீசிய அந்த அழகும், என்று ரசனையுடன் பார்த்துக்கொண்டு வந்தவனின் ஆண்மை நிறைந்த விழிகள், முதன் முறையாக, ஒரு  பெண்ணிடம், அவசரமாகக் கழுத்துக்குக் கீழே ஆவலுடன் சென்று அங்கே தஞ்சம் புகத் தவித்தன.

 

அந்தோ பரிதாபம். மார்புக்கு நேராக மெழுகுதிரியைப் பற்றியிருந்ததால், அவனால் அத்தனை சுலபத்தில் அப் பெண்மையின் அழகை தரிசிக்க முடியவில்லை. சற்று விழிகளைக் கீழிறக்க, பிரம்மன் கொஞ்சம் கஞ்சப் பேர்வழியோ… இடைக்குப் பதிலாகத் துடியை வைத்துவிட்டான் என்று எண்ணியவனாக நிமிர்ந்து தன் முன்னால் நின்றிருந்தவளின் முகத்தை ஆவலுடன் பார்த்தான் அவன்.

 

அவளை ஒட்டுமொத்தமாகப் பார்த்தபோது, அவளைச் செதுக்கப் பிரம்மன் அதிக நேரத்தைச் செலவழித்திருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட அந்த ஆண்மகனுக்கு ஏனோ தான் முதன் முதலாக ஒரு பெண்ணை அதுவும் அன்னியப் பெண்ணை இப்படிப் பார்க்கிறோம் என்கிற எண்ணம் சிறிதும் தோன்றவில்லை. ஏதோ தனக்குரிய ஒரு பொருளை ரசிப்பது போலவே அவன் ரசிக்கத் தொடங்கினான்.

 

எந்தப் பெண்ணிடமும் இல்லாத வசீகரத்தை அந்த ஆண்மகன், அவளிடத்தே அளவுக்கதிகமாகவே கண்டான். குறிப்பாக அவளுடைய துடிக்கும் நீண்ட விழிகளிலும், சற்று ஈரப்பற்றுடன் சிவந்திருந்த உதடுகளிலும் தன்னை மறந்தான். அவனையும் மீறி, அந்த உதடுகளைத் தீண்டவேண்டும் என்கிற பேரவா அவனிடத்தே எழ, தன்னையும் மீறி மேலும் அவளை நோக்கிக் குனிந்தான் சர்வாகமன்.

 

திடீர் என அந்த அன்னியனின் ரசனையுடன் கூடிய அந்த முகம், தன்னை நோக்கி மேலும் குனிய, உள்ளுணர்வு எச்சரித்தவளாகத் திடுக்கிட்டுத் தன்னிலை பெற்றவளுக்குக் கொஞ்ச நேரம், ஒன்றுமே புரியவில்லை. புரிந்த போது, அதிர்ந்து போனாள்.

 

‘நானா… நானா ஒரு ஆடவனை… என்னை மறந்து பார்த்துக்கொண்டிருந்தேன்… கடவுளே.. என்ன காரியம் செய்கிறேன்… நான்… நான் எப்படி ஒருவனை அதுவும் ஒரு ஆணை… எனக்கு என்னவாகிவிட்டது?” என்று எண்ணிய நிரந்தரிக்கு அச்சத்தில் மூச்சு அடைத்துக் கொண்டு வந்தது. அவளுக்கு இது தான்தானா என்கிற சந்தேகம் வேறு எழுந்தது.

 

பெரும் விதிர் விதிர்ப்புடன், அவன் விழிகளில் சிக்கியிருந்த தன் விழிகளை வேகமாகப் பிரித்தெடுத்து, சடார் என்று இரு அடி பின்னோக்கி வைத்தவளின் விழிகளில் இப்போது, பெரும் பதட்டமும், பரிதவிப்பும் சூழ்ந்து கொண்டன. இதயம் அவள் கட்டுப்பாட்டையும் மீறித் தாறுமாறாகத் துடித்தது.

 

நல்லவேளை, நிரந்தரியை அதிகம் தவிக்கவிடாமல், குலவேந்தரே உதவிக்கு வந்தார்.

 

“ஏன்மா… நிரந்தரி… வள்ளி படுத்துவிட்டாளா?” என்று கிசு கிசுத்த குரலில் கேட்டவாறு நெருங்கிவர, அவசரமாகத் தன் கவனத்தை மாமனார் பக்கம் செலுத்தியவள், “ஆம்” என்று தலையாட்டியவாறே, பதட்டம் தீராமல், தன் கரத்திலிருந்த மெழுகுதிரியை நடுங்கும் கரங்களால், சற்றே சரித்துப் பிடிக்க, உருகியிருந்த மெழுகு, அவள் சரித்த வேகத்தில், அவள் கரங்களின் மீது விழ முயன்ற நொடி,

 

“ஹேய்… பார்த்து…” என்று பதற்றத்துடன் அவளை ஓரெட்டில் நெருங்கியவன், அவளுடைய இடது கைத்தலத்தைத் தன் வலது கரத்தால் பற்றி இழுத்து, மெழுகுவர்த்தியைத் தாங்கியிருந்த அவளுடைய வலது கரத்தினைத் தன் இடது கரத்தால் பற்றித் தள்ளிப் பிடித்துக்கொள்ள, அந்த நேரம் மணி இரண்டு என்பதைப் பறைசாற்றுவதுபோலக் கடிகாரம், இருமுறை அடித்து ஓய்ந்தது.

 

எங்கே அவளுக்குக் காயம் பட்டுவிடுமோ என்கிற பதற்றத்தில்தான் அவளுடைய கரங்களை அவன் பற்றிக்கொண்டதே. ஆனால், அந்தக் கைத்தலத்தின் தீண்டலில் அங்கமெல்லாம் சிலிர்த்துப்போய், இனி ஒருபோதும் அந்தக் கரங்களை விடக்கூடாது என்கிற புதிய மனோநிலை அவன் உள்ளத்திலே படர, அக் கரங்களை விடும் எண்ணமேயில்லாமல் அவற்றைப் பற்றிக்கொண்டேயிருந்தான் சர்வாகமன்.

 

இரு மெய் தீண்டலிலும், அதுவரை தொலைந்துபோன மின்விளக்கு மீள ஒளிர்ந்து அந்த இடத்தையே பிரகாசிக்கச் செய்ய, அந்த மின்விளக்கின் பிரகாசமான ஒளியில் தன் கைப்பிடியில் நின்றிருந்த ஓவியத்தை அணு அணுவாக ரசிக்கத்தொடங்கினான் அந்தக் கள்வன்.

 

அந்த மெல்லிடையாளின் கவர்ந்திழுக்கும் அழகு அவனைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பித்தம் கொள்ளச் செய்தது. தாபத்துடன் தன் விழிகளால், அவள் முகத்தைப் பருகியவனுக்கு, அவள் உதட்டின் ஓரத்தில் மெல்லியதாய்த் தெரிந்த மச்சத்தைக் கண்டதும், அந்தக் கணமே, அதனுள் ஐக்கியமாகிவிட அவன் உள்ளம் தயாராகிப் போனது. சிறு தீண்டலில் கூட, கண்டிவிடும் வெண் தோலின் மென்மையில் அவன் உலகமே தலைகீழாகிப்போனது.

 

எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், விழித்துக்கொள்ளாத அவனுடைய ஆண்மை, முதன் முதலாக அந்த மெல்லிய ஸ்பரிசத்தில், தன்னிலை கெட்டது. எந்தப் பெண்ணிடமும் தலை வணங்காது நின்ற, கர்வம் முதன் முறையாகப் அவளுக்கு முன்பாக, விரும்பியே பொடிப் பொடியாக உதிரத்தொடங்கியது. எதற்கும் சாயாத அவனுடைய கடின உள்ளம், முதன் முறையாக அவள் பக்கம் சாய்ந்து சிவப்புக் கம்பளமாக அவளை வரவேற்கத் தயாரானது, எந்தப் பெண்ணிடமும் சிக்காத அவன் புத்தி, மழுங்கிப்போய் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி நின்றது.

 

ஆண்களுக்கே உரிய புத்தி. பிடித்துவிட்டால் ஆராயத் தொடங்குவது. அவனும் விதிவிலக்கா என்ன?

 

இடது கரத்தின் பிடியிலிருந்த அவளுடைய வலது கரத்தின் மென்மையை உணர்ந்துகொண்டவன், அவசரமாக, அவளுடைய இடது கரத்தின் உள்ளங்கையின் மென்மையைத் தன் வலது கரத்தின் உள்ளங்கையால், உணர முயன்றான். ஆனால், அவன் உணர்ந்துகொண்டதோ, அவனுடைய கற்பனைக்கும் எட்டாத ஒன்று.

 

தடித்துக் கண்டி, சொறசொறப்புடன், நிச்சயமாக அந்த உருவத்திற்கு ஏற்ற உள்ளங்கை அல்ல அது. ஏதோ காடு மேடுகளில் இராப்பகலாக வேலை செய்தவர்களுடைய கரங்கள் போல, அத்தனைக் கடினப்பட்டிருந்தது அக் கைத்தலம்.

 

யோசனையுடன் தன்னை மறந்து, வலக்கரத்தில் சிக்கியிருந்த உள்ளங்கையைத் திருப்பிப் பார்க்க முயல, உடனே சுய நினைவு பெற்ற நிரந்தரி, அவசரமாக அவன் கரங்களிலிருந்து தன் கரங்களை விடுவித்து ‘என்னைத் தீண்டாதே…’ என்பதுபோல, அவனை முறைத்துப் பார்த்துவிட்டு விலகியவள், தன் மாமனாரின் அருகே வந்தாள்.

 

அவரிடம் ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு, அவருடைய கனமான, பையை தன் கரத்தில் ஏந்த முயல, அதை நொடியில் புரிந்துகொண்ட சர்வாகமனும், அவளைத் தடுக்கும் முகமாக, அவளுடைய கரத்தின் மேற்புறத்தைப் பற்ற, மீண்டும் அதிர்ந்துபோனாள் நிரந்தரி.

 

அவன் கரம் பட்டதுதான் தாமதம், உதறித் தன்னை விடுவித்துக்கொண்டவள், மாமனாரிடம், இதோ வருகிறேன் என்பது போலப் பார்த்துவிட்டு எதற்கோ பயந்தவள் போல, உள்ளே விரைந்து செல்ல, அவளையே வைத்த விழி வாங்காது செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தான் சர்வாகமன்.

What’s your Reaction?
+1
20
+1
9
+1
2
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!