Mon. Sep 16th, 2024

நீ பேசும் மொழி நானாக – 34

(34)

 

நிரந்தரியின் மனதைப்போல ரயில் வண்டியும் தடக் தடக் என்ற சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. அது முதல் வகுப்புப் பெட்டியாகையால் அந்தப் பெட்டியில் சர்வாகமனையும், நிரந்தரியையும் தவிர வேறுயாரும் இருக்கவில்லை. நிரந்தரியின் சிந்தனைகள் அனைத்தும் சர்வாகமனையே சுற்றிச் சுற்றி வந்தன. அது வரை பெரிதாகத் தெரியாத அவன் செயல், இப்போது பார தூரமாக அவளுக்குத் தோன்றியது..

 

‘இவருக்கொன்று நடந்தால்’ என்ற சிந்தனை அவளை உலுக்க விலுக்கென்று நிமிர்ந்து சர்வாகமனைப் பார்த்தாள். இவனுக்கென்ன குறை? அழகு, படிப்பு, செல்வம் எல்லாம் நிறைந்த ஒருவன், எதுவுமே இல்லாத என்னைப் போய், அதுவும் பிடிவாதமாக மணந்துகொண்டானே. அப்படி என்னிடம் என்ன கொட்டிக்கிடக்கிறது.’ என்று அவள் உள்ளம் அவளையே கேட்டுக்கொண்டது.

 

சர்வாகமனுக்கோ அவளது உள்ளத்தின் வேதனை புரியாமலில்லை. ஆனால் அந்த வேதனையை இப்போது தேற்றி ஆற்ற முடியாது. தன் நிலையைச் சொன்னாலும் அவளுக்குப் புரியாது. அதை விட அவள் ஆறும் வரைக்கும் காத்திருப்பதுதான் சிறந்தது.

 

ஆனாலும், யாருமில்லாத தனிமையில், தன்னவள் பக்கத்திலிருக்க, அவளைத் தொட முடியாத கையறு நிலையில் மார்புக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டியவாறு, தலையைச் சீட்டுக்குப் பின்னால் சாய்த்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

 

இன்று இந்தத் திருமணம் சரியாக நடந்திருந்தால், இந்த இரவு அவர்களின் இன்பமான முதல் இரவாக இருந்திருக்கும். இந்த இரவிற்காக அவன் எத்தனை கற்பனைகளுடன் காத்திருந்தான். அந்தக் கற்பனைகள் அத்தனையும் இன்று வெறும் கற்பனைகளாகவே மாறிவிட்டதே என்ற சிந்தனை அவன் உள்ளத்தில் தோன்றி, வேதனையைத் தர ஒரு பெருமூச்சுடன், தன்னவளையே இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தான்.

 

அப்போதுதான், அவள் கரத்தில் இன்னும் அந்தக் கொலுசுகள் வீற்றிருப்பதைக் கண்டான்.

 

எந்த நிலையிலும் அவள் அதைக் கைவிடவில்லையே. வியப்புடன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

 

அவளோ, மறந்துபோயும் சர்வாகமனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஜன்னலின் வெளியே அதுதான் முக்கியம் என்பதுபோலப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவளின் செய்கை சர்வாகமனுக்குப்  புன்னகையைத் தர இருக்கையை விட்டு எழுந்து, அவளின் அருகே நெருங்கி அமர்ந்தான்.

 

என்னதான் வெளியே பார்ப்பதுபோல நின்றிருந்தாலும், அவனுடைய ஐம்புலன்களும், சர்வாகமனிடமே தங்கியிருந்தது. அவன் எழுந்து தன்னருகே வர, ஒரு விதப் படபடப்புடன். அவனை நிமிர்ந்து பார்த்தாள் நிரந்தரி.

 

அவனோ, அவளருகே எவ்விதத் தயக்கமும் இல்லாது அமர, முன்தினம் அவன் தனக்குக் கொலுசு அணிவித்தது நினைவுக்கு வந்தது. உடனே முகம் வெட்கத்தில் அவளையும் மீறிச் சிவந்து போனது. தன் முகத்தை அவனுக்குக் காட்டாது, மறைக்க முயன்றவாறு, ஜன்னலின் அருகே ஒட்டியமர்ந்து தலையைக் குனிய, தன்னவளின் உணர்வுகளை உடனே படித்துக் கொண்டவனுக்கு அதுவரையிருந்த இறுக்கம் சற்றுத் தளர்ந்தது.

 

உதட்டிலே சிறு புன்னகை தோன்ற அவள் கரத்திலிருந்த கொலுசைத் தன் கரத்தில் பறித்தெடுத்து,

 

“இதை ஏன் நேற்றுக் கழற்றினாய்?” என்று கண்டிப்புடன் கேட்டான். இப்போது அவனைப் பார்த்து முறைத்தவள்,

 

“நீங்கள் அணிவித்துவிட்டுச் சென்று விட்டீர்கள், அத்தை கண்டால் என்னைக் கொன்று இருப்பார்கள்… அதுதான் கழற்றினேன்…” என்று சைகை செய்தவள், மீண்டும் அத்தையின் நினைவு வர, இவள் முகம் கறுத்துக் கண்டிப் போனது.

 

அதைப் பொருட்படுத்தாது, அவளுடைய கால்களைப் பற்றித் தன் மடியில் வைத்தவன், அக் கொலுசுகளை ஆசையுடன் அணிவித்துவிட்டு, அப்போது தெரிந்த வெண் பாதங்களையும், சற்று பிறைச் சந்திரன் போலத் தெரிந்த மேல் கால்களையும் தன் புறங்கையால் மெதுவாக வருடிவிட, அவனுடைய தொடு உணர்ச்சியில் உடல் சிலிர்க்க அவசரமாகத் தன் கால்களை இழுத்துக் கீழே வைத்துவிட்டு அவனைப் பார்க்க முடியாது, கூசியவளாக, ஜன்னல் புறம் பார்க்க, தன் வரிசைப் பற்கள் தெரிய நகைத்தவன், அவளுடைய காலடி நோக்கி மீண்டும் குனிந்தான்.

 

அவள் பதறியவாறு தன் கால்களைத் தூக்கி, சீட்டிலேயே மடித்து வைத்துக்கொண்டு அவனை முறைக்க, அவனோ, அவள் காலடியில் வைத்திருந்த சாப்பாட்டுப் பொதியை எடுத்துக் கொண்டிருந்தான்.

 

அத்தனை நேரமும் சாப்பிடாமல் இருந்ததால் வயிற்றில் பசி தெரிய, ஒன்றை அவளிடம் நீட்ட, அவள் வேண்டாம் என்று மறுத்தாள். இப்போதிருக்கும் நிலையில் பசியே மரத்துவிட்டிருந்தது.

 

“நிரந்தரி, இன்று முழுவதும் நீ சாப்பிட்டிருக்க மாட்டாய்… இந்தா சாப்பிடு…” என்று அவன் அழுத்தமாகக் கூற, அவளோ காது கேட்காதவள் போல எங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள். பொறுமையிழந்து ஒரு பெருமூச்சு விட்ட சர்வாகமன், தன் நெற்றியைப் பெரும் விரலால் தடவிக் கொடுத்துவிட்டு,

 

“நிரந்தரி…! நீ என் பொறுமையை மிகவும் சோதிக்கிறாய். என் பொறுமைக்கும் ஒரு அளவுண்டு. அதைத் தாண்டுமாறு செய்துவிடாதே” எனக் கடுமையாக எச்சரித்து விட்டு, ஒரு சாப்பாட்டுப் பொதியை மீண்டும் உள்ளே வைத்து, மறு பொதியைத் திறந்து, அதிலிருந்த உணவைக் குழைத்துக் கவளமாக உருட்டி, அவள் வாயருகே கொண்டு சென்று,

 

“நான் கூட இன்னும் சாப்பிடவில்லை கண்ணம்மா… மிகவும் பசிக்கிறது… ப்ளீஸ்… சாப்பிடு… நீ சாப்பிட்டால்தான் என்னால், சாப்பிட முடியும்…” என்றவாறு அவள் உதட்டருகே கையைக் கொண்டு போக, கண்கள் கலங்க அதை வாங்கி உண்டாள் அவள்.

 

“தட்ஸ் மை கேர்ள்…” என்றவாறு அவன் ஊட்ட, அவசரமாக, மெல்லாமல், உணவை உள்ளே தள்ளினாள். அவளுடைய வேகத்திற்கு, ஏற்கனவே சின்னதாகப் போயிருந்த தொண்டையால் கையாள முடியவில்லை. அது அடைபட, மூச்சுக் குழாயும் சேர்ந்து அழுத்த, பிரக்கேறியது நிரந்தரிக்கு.

 

“டேக் இட் ஈசி…” என்று கூறியவாறு, உடனே, உணவை ஓரமாக வைத்துவிட்டு, தண்ணீர் போத்தலை எடுத்து அவளின் வாயில் வைக்க, அவசரமாக அவனிடமிருந்து போத்தலை வாங்கியவள், மூடியைத் திறந்து, அடைத்திருந்த உணவு உள்ளே போவதற்காகத் தண்ணீர் குடிக்க, ஒரு மாதிரி, உணவு உள்ளே இறங்கி, மூச்சும் சீரானது.

 

“பார்த்துச் சாப்பிடக் கூடாதா?” என்று கடிந்தவன், அவளுக்கும் ஊட்டித் தானும் உண்டு, ஒருவாறு பசியாற்றிக்கொண்டான்.

 

உண்டு முடித்துவிட்டு உள்ளே போய்க் கைகளை அலம்பிவிட்டு மறுபடியும் இருக்கைக்கு வந்தவன்,

 

“நிரந்தரி.! நீ கை கால் கழுவவேண்டும் என்றால் அதோ அந்த நீலக் கதவிற்கு அப்பால் குளியல் அறை இருக்கிறது. அங்கே போய்க்கொள்” என்று கூற, அவன் சொன்னது போலக் குளியல் அறைக்குள் சென்றவள் தன் கைகால்களைக் கழுவிவிட்டு மீண்டும் பழைய இடத்தில் வந்து அமர்ந்துகொண்டாள்.

 

சற்று நேரம், இருவரும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு அமர்ந்து கொண்டனர். மெதுவாக சர்வாகமனுக்கு தூக்கம் கண்களைச் சுழற்ற,

 

“ஓக்கேமா… நான் தூங்கப் போகிறேன்… அதோ, அதை இழுத்தால், விளக்குகள் அணைந்து விடும்… படுக்கும் போது அணைத்துவிடு…” என்று கூறிவிட்டுச், சீட்டில் கால் நீட்டி கரங்களைத் தலைக்கு முட்டுக் கொடுத்தவாறு மல்லாக்காக நிமிர்ந்து படுத்துக் கொள்ள, அன்றைய அலைச்சலில், தூக்கமும் ஓரளவு அவனைத் தழுவிக் கொள்ள, உறக்கத்தின் வசமானான்.

 

அவன் உறங்கிவிட்டான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட நிரந்தரியின் விழிகள் ஆவலுடன்,  சர்வாகமனைப் பார்த்து ரசிக்கத் தொடங்கின.

 

அடர்ந்த சுருட்டைமுடி, நேர் நாசி, பிடிவாதத்தை உணர்த்தும் உதடுகள், அதன் மேலும் கீழும் சீராக வெட்டிய அடர்ந்த மீசையும் தாடியும்… அவனது உயரத்திற்குப் போதாமல் அவன் படுத்திருக்கையில் சிறிதாகக், காணாமல் போய் இருந்த இருக்கை. நித்திரையால் ஏறி இறங்கிய பரந்த மார்பு… தலைக்கு வாகாக மடித்து வைத்திருந்ததால், கிண்ணென்றிருந்த பலம் பொருந்திய கரங்கள், இதில் எதுவும் அவள் கண்களிற்குத் தப்பவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தித்த ஆபத்தினால் விழுந்தெழுந்ததற்கான சாட்சியாக ஒரு சில காயங்கள் கண்டிச் சிவந்துபோய் இருந்தன. அவனைப் பார்த்துக்கொண்டே ஜன்னலில் தன் தலையைப் பதிக்கத் தன்னையும் மீறி விழிகளை மூடிக்கொண்டாள்.

 

உறங்கிக் கொண்டிருந்த சர்வாகமன், மெதுவாகத் திரும்பிப் படுத்தான். சற்றுத் திறந்து மூடிய விழிகளுக்குள், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைபோல கைகளை மார்பிற்குக் குறுக்கே வைத்து கால்கள் இரண்டையும் அவற்றிற்கு இணையாக மடித்தவாறு தூங்கிக்கொண்டிருந்த நிரந்தரி விழுந்தாள்.

 

யோசனையுடன் ஜன்னலைப் பார்க்க அது சற்றுத் திறந்திருந்தது.

 

பாவம் குளிர்காற்றைத் தாங்க முடியவில்லை போலும், என்று எண்ணியவாறு, எழுந்து சென்று சத்தம் எழுப்பாது அதை சாத்திவிட்டுத் திரையைக் கீழே இறக்கிவிட்டான்.

 

தன் பையைத் திறந்து தான் விரும்பி அணியும் கெட்டியான மேற்சட்டையை இழுத்து எடுத்து, தன்னவளின் அருகே அமர்ந்தான். ஒரு சிறு புன்னகையுடன் அவளை இழுத்துத் தன் மடியில் படுக்கவைத்தவன். கையிலிருந்த மேற்சட்டையை அவளுக்குக் குளிராமல் போர்த்திவிட்டு, பட்டும் படாமலும் அவளுடைய கூந்தலை  வருடத் தொடங்கினான்.

 

அந்தக் கணம், அவனுக்கு நிரந்தரி ஒரு பெண் என்கிற எண்ணமோ, அவள் தன் மனைவி என்ற சிந்தனையோ எழவில்லை. மாறாக, ஆறுமாதக் குழந்தையொன்று தன் மடியில் தவழ்வது போன்ற உணர்வில் மெய் சிலிர்த்துப் போனான்.

 

எத்தனை நேரம், அப்படியே இருந்தானோ, அவனுடைய விழிகளும், மெதுவாக மூடத் தொடங்க, தன் தலையை, சீட்டின் பின் புறத்தில் பதித்து, தன்னவளுக்கு இணையாக உறக்கத்தின் வசமானான்.

 

புகையிரத வண்டி கொழும்பை வந்தடைய ஒரு சில மணித்தியாலங்களே இருந்த நிலையில், அவர்களின் உறக்கத்தைக் கலைப்பது போல் கதவு தட்டப்பட, திடுக்கிட்டு எழுந்தான் சர்வாகமன். இன்னும் உறக்கம் கலையாமல், அவன் மடியில் நிரந்தரி உறங்கிக்கொண்டிருந்தாள்.

 

அவனது இடக்கரம் அவளது மார்பைச்சுற்றியிருந்தது. வலது கை அவள் தலையில் படிந்திருந்தது. நிரந்தரியின் கரங்களோ, தன்னைச் சுற்றி வளைத்திருந்த அவனுயை இடது கரத்தை ஒருபோதும் விடமாட்டோம் என்று சொல்வது போலக் கெட்டியாகப் பற்றியிருந்தன.

 

சற்று நேரம், அவளுடைய அருகாமையை ரசித்துக்கொண்டிருக்க, மீண்டும் கதவு தட்டப்பட்டது. எரிச்சலுடன், தன் மனைவியின், தூக்கத்தைக் கலைக்காது தன் கரங்ககளை விலக்கி, தன் பையை எடுத்து அவள் தலைக்கு அணையாக வைத்துவிட்டு ஓசை எழுப்பாது கதவருகே வந்தான்.

 

தட்டியவருக்கும், பொறுமைக்கும் சம்பந்தம் இல்லைபோலும், மீண்டும் படபடவெனக் கதவைத் தட்ட, எரிச்சலடைந்த சர்வாகமன், இரண்டெட்டில் கதவைத் திறந்து யார் என்று பார்க்க, சீட்டுப் பரிசோதகர் நின்றிருந்தார்.

 

‘நல்ல நேரம் பார்த்தார், பரிசோதிப்பதற்கு, என்று மனதிற்குள் சினந்தவனுக்கு, எங்கே நிரந்தரியின் தூக்கம் கலைந்துவிடுமோ எனப் பயந்தான். அவசரமாகத் தன் பான்ட் பாக்கட்டில் வைத்திருந்த, சீட்டை எடுத்துக் கொடுக்க.

 

அலட்சியமாக அதைப் பெற்ற அதிகாரி அதை ஒரு நறுக்கு நறுக்கி அதை ஓட்டையாக்கிவிட்டு சர்வாகமனிடம் கொடுத்துவிட்டுத் திரும்ப,

 

“எக்ஸ்கியூஸ் மி! இந்த வண்டி எப்போது கொழும்பைச் சென்றடையும்” என்று ஆங்கிலத்தில் கேட்டான்.

 

அவனுடைய ஆங்கிலத்தை வைத்தே, அவன் வெளிநாட்டில் வளர்ந்திருக்க  வேண்டும் என்பதைப் புரிந்துகொண்ட பரிசோதகர்,

 

“இன்னும் நான்கு மணி நேரத்தில், கொழும்பை அடைந்து விடும் “ என்று கூறிவிட்டு அங்கே படுத்திருந்த நிரந்தரியைக் காட்டி,

 

“அது யார்” என்று கேட்டார்.

 

“ஷி இஸ் மை வெஃப்…” எனக் கூறியவன் அவர் வேறு கேள்விகள் கேட்கும் முன்பாகவே ஒரு புன்னகையுடன் விடைபெற்று கதவைச் சாத்திக்கொண்டான்.

 

சிறிது சத்தத்தில் துயில் கலைந்து எழுந்த நிரந்தரிக்கு, முன்தினம் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வர விலுக்கென எழுந்து உட்கார்ந்தாள்.

 

இத்தனை பிரச்சனைக்கு நடுவிலும் எப்படித் தூங்கினேன்? எனத் தன்னையே கேட்டுக்கொண்டவள், தன் மேல் போர்த்தியிருந்த கனத்த சட்டையை எடுத்துப் பார்த்தாள். அதிலிருந்து வந்த வாசனை, அது சர்வாகமனுடையது என்பதைச் சொல்ல, குளிருக்கு இதமாகப் போர்த்தியிருக்க வேண்டும்… என்பது தெரிந்தது. அவள் மீது அவனுக்கிருக்கும், அக்கறை புரிய. இதயம் பெருமையில் விம்மியது.

 

தன்னை மறந்து, அவனுடைய சட்டையை எடுத்துத் தன் முகத்தில் பதித்து ஆழ மூச்செடுத்து, அவன் சுகந்தத்தைத் தனக்குள் நிரப்பிக் கொண்டவளுக்கு, அந்தக் கணம் அத்தனை வேதனையும் மாயமாக மறைந்து போனது.

 

தன்னையும் மறந்து அந்தச் சட்டையை வருடியவள் சர்வாகமன் திரும்பி வருவதைக் கண்டதும் அந்தச் சட்டையை அவசரமாகத் தூக்கி மறு இருக்கையில் விசிறிவிட்டு நிமிர்ந்தமர்ந்தாள். அவளருகே வந்தவன்,

 

“இன்னும் நான்கு மணி நேரத்தில் நாம் கொழும்பிற்குச் சென்று விடுவோம். தூங்க வேண்டுமானால் தூங்கு” என்றான்.

 

நிரந்தரி தூக்கம் வரவில்லை எனத் தலையாட்ட அவன் தன் பையைத் திறந்து அதிலிருந்த புது பல்துலக்கியை எடுத்து அவளிடம் நீட்டி..

 

“நீ ஒரு பொருட்களும் கொண்டுவர வில்லை என்பது எனக்குத் தெரியும். அதனால் போ.. போய் முகத்தைக் கழுவிவிட்டு வா” என உத்தரவிட, மறுக்காது பெற்றுக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

 

அவள் சென்றதும் நேரத்தைப் பார்த்தான். நேரம் நான்காகியிருந்தது. தேநீர் குடித்தால் நன்றாக இருக்குமே என்று தோன்ற, வண்டி ஒரு நிறுத்தத்தில் நின்றதும். முகம் கழுவிவிட்டு வந்த நிரந்தரியைப் பார்த்து,

 

“இங்கேயே இருந்துகொள் நிரந்தரி, இப்போது வந்துவிடுகிறேன்” என்றபடி அவள் அனுமதியையும் பெறாது, வெளியே வந்தான்…

 

சற்றுத் தொலைவில் ஒரு கடை கண்ணில் பட அதைநோக்கி விரைந்து சென்றான். ஒரு சில பயணிகளும் அந்தக் கடையை நோக்கித்தான் விரைந்துகொண்டிருந்தனர்.

 

“இந்த நிறுத்தத்தில் ஐந்து நிமிடங்கள் மட்டும்தான் வண்டி நிற்கும்” என்று அவர்கள் பேசிக்கொண்டு செல்வதைக் கேட்ட சர்வாகமன் விரைந்து சென்று இரண்டு தேநீரும் காலை உணவிற்கு அங்கிருந்த ரொட்டியையும் பெற்றுக்கொண்டு வண்டியை நோக்கி வந்தான். அவன் வண்டியில் ஏற வருவதற்கும், வண்டி புறப்படுவதற்கும் நேரம் சரியாக இருந்தது.

 

பெட்டிக்குள் இருந்த நிரந்தரி வண்டி புறப்படுவதைக் கண்டதும் பதறினாள். சர்வாகமன் இன்னும் வந்து சேரவில்லையே என்று அஞ்சியவளுக்கு, அந்த சிறு பெட்டிக்குள் இருப்பதற்கே பயமாக இருந்தது. அவன் வண்டிக்குள் ஏறாவிட்டால் என்ன செய்வது என்ற சிந்தனை எழ பதறியடித்துக்கொண்டு எழுந்தாள்.

 

கதவைத்திறந்து வாசல் பக்கம் எட்டிப் பார்த்தவள், சுற்றுமுற்றும் கண்களால் துழாவினாள். கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரைக்கும், அவனைக் காணவில்லை. உள்ளம் பதற, நெஞ்சம் நடுங்க, என்ன செய்வது என்று புரியாது தவித்துக்கொண்டிருந்த நேரம், மறு பக்கத்தால் ஏறி வந்த சர்வாகமன் பெட்டிக்குள் நிரந்தரியைக் காணாது குழம்பினான். தன் கரத்திலிருந்த பொருட்களை, சீட்டில் வைத்துவிட்டு,

 

“எங்கே போயிருப்பாள்?” என்கிற யோசனையுடன் அங்கிருந்த கழிப்பறையை நோக்கிச் சென்றவனுக்கு, அவள், கதவோரமாக இருப்பதைக் கண்டதும் பதறிப்போனான். தப்பான முடிவு எடுப்பதற்காகத்தான் அங்கே நிற்கிறாள் என்று தவறாகப் புரிந்தவன், பாய்ந்து அவளருகே சென்று கரத்தைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தவன், என்ன செய்கிறோம் என்பதை உணர்வதற்குள்ளாக, ஓங்கி அவளுடைய கன்னத்தில் அறைந்திருந்தான்.

 

யாரோ தன்னை இழுக்கப் பதறித் திரும்பியவள், அங்கே சர்வாகமனைக் கண்டதும்,   நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறு ஏதோ சொல்ல வர, அவளை ஓங்கி அவன் அறைந்த வேகத்தில் கதிகலங்கிப்போனாள் நிரந்தரி.

 

போதாததற்கு, அவளை இழுத்துக்கொண்டு, தங்களுக்குரிய பெட்டியில் அவளைத் தள்ளிக் கதவைப் பூட்டியவன், பூட்டிய வேகத்திலேயே எலும்புகள் உடையும் அளவில், அவளை இழுத்துத் தன்னோடு இறுக அணைத்துக்கொண்டான். அணைத்த வேகத்திலேயே  அவளை விடுவித்து, அவள் தோள்களைத் தன் கரங்களால் அழுந்தப் பற்றி,

 

“என்ன காரியம் செய்யத் துணிந்தாய்? உனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது… நான் வராமல் இருந்திருந்தால், என்னவாகியிருக்கும்… இனி ஒருதரம் ஒரு தரம், இப்படி நடந்துகொண்டால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது… புரிந்ததா…? புரிந்ததா…?” எனக் கர்ஜித்தவாறு அவளை உலுப்ப, அவளுக்கு அடியும் புரியாமல், நுனியும் புரியாமல் குழம்பிப்போய் நின்றவளை, ஆத்திரம் குறையாது பார்த்தவன்,

 

“உன்னைத் தொலைத்து விட்டு, இழந்து விட்டு… நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று நினைத்தாயா? முட்டாள்… முட்டாள்… அப்படியே போவதாக இருந்தால், முதலில் என்னைக் கொன்று விட்டு நீ போ…?” என்று சீறிவிட்டு, ஆத்திரத்துடன், அவளைத் தள்ளிவிட்டு குளியல் அறைக்குள் புகுந்து அதன் கதவை அறைந்து சாத்திக்கொண்டான் .

 

சர்வாகமன் ஏன் தன்னை அடித்தான் என்பதையோ, எதற்காக அப்படிக் கோபமாகக் கர்ஜித்தான் என்பதையோ அறிந்து கொள்ளாத நிரந்தரி திகைத்துப்போனாள். அவன் அடித்த அடியில் ஒரு பல் இதழிலே பட்டு இரத்தம் வேறு கசிந்தது.

 

ஏன் இப்படிக் கோபப்பட்டான் எனத் தனக்குள் எண்ணியவளுக்கு மெதுவாக அவன் அடித்ததன் காரணம் புலனாயிற்று. ‘தான் தற்கொலை செய்ய முயன்றதாக நினைத்துக் கொண்டான் போலும்…” என்று நினைத்தவளுக்கு நகைப்புதான் வந்தது.

 

விரைந்து சென்று அவனை அழைத்து ‘நான் தற்கொலை செய்யப் போகவில்லை, உங்களைக் காணவில்லையென்று தேடிக்கொண்டிருந்தேன்’ எனச் சொல்லவேண்டும் போல இருந்தது. ஆனால், அவள் மீது கோபமாக இருப்பவனிடம் எப்படிச் சொல்வது என்றுதான் புரியவில்லை. அவனைக் கலங்கவைத்து விட்டோமே என்கிற, வேதனையுடன் கண்களில் கண்ணீர் உற்பத்தியாகத் தன் இருக்கையில் அமர்ந்தவள் அவன் வரவுக்காகக் காத்திருந்தாள்.

 

குளியல் அறையிலிருந்து இருக்கைக்கு வந்த சர்வாகமனின் முகம் இன்னும் தெளிந்திருக்கவில்லை. உள்ளே வந்தவன், தன்னை அடிபட்ட குழந்தையாய் பயத்துடன் தன்னை பார்த்துக்கொண்டிருந்த நிரந்தரியைக் கண்டதும், அவனுக்குத் தன் மீதே கோபம் வந்தது.

 

நெற்றியில் அடித்துக்கொண்டவன், பரிதவிப்புடன், அவள் அருகே மண்டியிட்டமர்ந்து, அவள் இதழோரம் வழிந்த இரத்தத்தைக் கண்டு இதயம் வலிக்கத் தன் பெரு விரலால், அதைத் துடைத்தவாறு,

 

“ஏன்டி இப்படி என்னை வதைக்கிறாய்? ஒரு கணம் ஆடிப்போய்விட்டேன் தெரியுமா? எங்கே என்னை விட்டுப் போய்விடுவாயோ என்று நினைத்து… மடத்தனமாக… சாரிடா… இதோ பார்… நான் உன்மேல் என் உயிரையே வைத்திருக்கிறேன் என்பது உனக்குத் தெரியுமல்லவா? தெரிந்து கொண்டும் இப்படி ஒரு காரியத்தை செய்யத் துணியலாமா? நீ கீழே விழுந்து உனக்கேதாவது ஆகியிருந்தால், நான் மட்டும்… நான்மட்டும் நிம்மதியாக வாழ்வேன் என்று நினைத்தாயா? பைத்தியம் அடுத்த கணமே உன் கூட வந்துவிடுவேன்டி…” என்று கூறியவன், எழுந்து அவளருகே அமர்ந்து, அவள் மடியில் தன் தலையைச் சரித்தான்.

 

அவள் கரத்தைப் பற்றித் தன் மார்பில் பதித்தவன்,

 

“நிரந்தரி… நீ இல்லாத வாழ்க்கையை என்னால் கற்பனை செய்யக்கூட முடியவில்லை. என்றவன், தலைநிமிர்ந்து அவளைப் பார்த்து,

 

“என் வாழ்வில் இந்த ஜென்மம் மட்டுமல்ல நிரந்தரி!  எத்தனை ஜென்மம் எடுத்தாலும்  உன்னைத்தவிர வேறு எந்தப் பெண்ணிற்கும் என் மனதில் இடமில்லை… என்னுடன் வாழ உரிமையுள்ள ஒரே ஒருத்தி, அது நீ… நீ மட்டும்தான்… அதைமட்டும் புரிந்துகொள். இத்தனை நாட்கள் வேதனைப் பட்ட நீ, இனி வரும் காலங்களில் மகிழ்ச்சியாக மட்டும் இருக்கவேண்டும் என்று நான் தவிப்பது உனக்குப் புரிகிறதா? அதற்காக, நான் எதையும் இழக்கத் தயாராக இருக்கிறேன்… அப்படியிருக்கையில், அத்தனை முயற்சிகளையும், ஒரு நிமிடத்தில் அழிக்கப் பார்த்தாயே… “ என்று குரல் கம்மக் கூறியவன், அவள் கரங்களை எடுத்துத் தன் கன்னத்தில் பதித்து,

 

“இப்போது மட்டுமல்ல, நிரந்தரி, என் முதுமைக் காலத்திலும் தலைவைத்துப் படுக்க இந்த மடி எனக்கு வேண்டும்… இயலாத காலத்திலும், என்னைத் தாங்கிக்கொள்ள உன் தோள்கள் வேண்டும்… இந்தக் காதுகள், கேட்கும் சக்தியை இழக்கும் வரை… “ என்றவன் தன் கரத்தைக் கீழிறக்க, அவளுடைய பாதத்தையும், கொலுசையும் வருடிக் கொடுத்து, “ இந்தப் பாதத்தில் தொங்கும் கொலுசுகளின் சத்தத்தை நான் கேட்கவேண்டும்… உன் அருகே படுக்கும் போது, உன்னுடைய மூச்சுக் காற்றின் வெம்மையில்… நான் குளிர் காயவேண்டும். தயவுசெய்து…. தயவுசெய்து இப்படியொரு காரியத்தை செய்து, என் ஆசைகளைப் பொடி பொடியாக்காதே… ப்ளீஸ்… எனக்காக நிரந்தரி” என்றவனின் விழிகளில் மினுக்கென்று நீர் எட்டிப்பார்த்ததைக் கண்டவள் உடைந்து போனாள்.

 

பின் வேகமாக எழுந்தமர்ந்தவன், அவள் முன்னால் தன் கரத்தை நீட்டி,

 

“இப்படி இனி நடக்கமாட்டேன் என்று சத்தியம் செய்” என்றான் கறாராக.

 

நிரந்தரிக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியும், கூடவே சிரிப்பும் எட்டிப்பார்த்தன. ‘நான் இவரைக் காணவில்லை என்று எட்டிப்பார்த்தால் அதைத் தவறாக எண்ணியது மட்டுமல்லாது சத்தியம் செய்யுமாறு வேறு கேட்கிறாரே’ என எண்ணியவள் அவன் வேதனை தாங்காமல் அவனுடைய கரத்தைத் தன் கரங்களில் ஏந்தி, அதை உருட்டித் தன் மார்போடு அணைத்தவள்,

 

“நான் ஒன்றும் தற்கொலை செய்யப் போகவில்லை, வண்டி கிளம்பியதும், உங்களைக் காணவில்லை. எங்கே என்று எட்டிப் பார்த்தேன்…” என்று சைகை செய்ய,

 

“வட்…” என்று அதிர்ந்தான் சர்வாகமன். அவளோ மெல்லிய சிரிப்புடன், ஆம் என்று தலையை ஆட்ட, கடைசியில் அவன்தான் அசடு வழியவேண்டியதாயிற்று.

 

மீண்டும் சந்தேகம் தீராதவன் போல அவளைப் பார்க்க, மெல்லிய புன்னகையுடன், அவன் தலை மீது தன் கரத்தைப் பதித்து,

 

‘உங்களைக் காணவில்லை என்றுதான் தேடினேன்… மற்றும்படி அப்படி ஒரு சிந்தனையே எனக்கு வரவில்லை…’ என்று தன் பாஷையில் கூறினாள் நிரந்தரி. .

 

பெரும் நிம்மதியுடன், அவள் பிடியிலிருந்த தன் கரத்தை விலக்கித் தன் தலையைக் கோதியவாறு இருக்கையில் சாய்ந்தமர்ந்தவனின் உதட்டில் நிம்மதியாகப் புன்னகை ஒன்று உட்கார்ந்துகொண்டது.

 

‘என்ன காரியம் செய்துவிட்டேன். என்னைக் காணவில்லை எனத் தேடிக்கொண்டிருந்தவளை அடித்துவிட்டேனே’ என்ற கழிவிரக்கம் வர அவளை இழுத்து இறுகத் தன்னோடு அணைத்துக் கொண்டு,

 

“ஐ ஆம் சாரி கண்ணம்மா… நீ என்னைத் தேடுவது புரியாமல் முரட்டுத் தனமாக அடித்துவிட்டேன். அதற்காக இந்த முட்டாளை மன்னித்து விடு… என்று வேண்டியவனின் முகத்தைத் தன் கரங்களால் பற்றியவள், மற்றவர்களால் முடியாத காரியமான, அவன் விழிகளுக்குள், தன் விழிகளைக் கலக்கவிட்டுக் கொஞ்ச நேரம் அப்படியே நின்று, தன்னை மறந்து எக்கி, அவன் நெற்றியில் தன் உதடுகளைப் பொருத்தி விலக்க, மறு கணம், அவள் அவனுடைய இறுகிய அரவணைப்பில் சிக்கியிருந்தாள்.

 

What’s your Reaction?
+1
28
+1
6
+1
4
+1
3
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!