Mon. Sep 16th, 2024

நீ பேசும் மொழி நானாக – 32/33

(32)

 

அனைவரும் என்ன ஏது என்று புரிவதற்குள்ளாகவே, அவளுடைய கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்திருந்தான் சர்வாகமன். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. எதுவுமில்லாத அன்னக் காவடிக்கு கோடீஸ்வர மாப்பிள்ளையா? இருவருக்கும் எந்த விதத்தில் ஒத்துப் போகும்… எதுவுமேயில்லையே… பேச வாயிருந்தும் பேச்சிழந்து அதிர்ந்துபோய் நின்றனர் அனைவரும்.

 

நிரந்தரி கூட இதை எதிர் பார்க்கவில்லை. தன் கழுத்தில் தொங்கிய புத்தம் புதுத் தாலியை அதிர்வுடன் தூக்கிப் பார்த்தவள், பெரும் வலியுடன், சர்வாகமனை ஏறிட்டாள். அவளுடைய பார்வை, ‘என்ன காரியம் செய்தாய்?’ என்று அவனைச் சாடியவாறு, என்னென்னவோ சொல்ல முற்பட்டு நாவைத் திருப்பினால், அவை திரும்பினால் அல்லவா?

 

அது தன் விருப்பத்திற்கு அங்கும் இங்கும் அசைந்து, என்ன சொல்ல வந்தோம் என்பதைக் கூட, மறந்து தவித்துத் தயங்கி, இறுதியில் கேவலில் முடிய, அதைப் பார்க்க முடியாது, இழுத்துத் தன்னோடு இறுக்கிக்கொண்டான் அந்த வீரமகன்.

 

சர்வாகமன் நிரந்தரியின் கழுத்தில் தாலியைக் கட்டியதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அதிர்ந்தனர்.

 

‘ஐயோ… இவனை ரஞ்சனிக்காகப் பார்த்தால் இந்த ஊமை தட்டிக்கொண்டு போய்விட்டதே, பாவி இவள் நன்றாக இருப்பாளா’ என்று எண்ணிய வள்ளியம்மை,

 

“தம்பி என்ன காரியம் செய்துவிட்டீர்கள்… உங்களுக்கு வேறு நல்ல பெண்ணே கிடைக்கவில்லையா, இவளைப் போய்…” என்று சீறத் தொடங்க,

 

‘எத்தனையோ ஆண்களைப் பார்த்த நான் விரும்பி இவரைத் திருமணம் முடிக்கவேண்டும் என ஆசைப்பட்டேன். இறுதியில் இந்தப் பரதேசியைத் திருமணம் முடித்துவிட்டாரே’ என் நினைத்த ரஞ்சனியும்,

 

“சே… போயும் போயும்… அலைபவளைப் போய்…” என்று சீறி,

 

‘ஐயோ! என் மகளின் வாழ்க்கை போய் விட்டதே. என் மகள் ஒரு புளியங்கொம்பைப் பிடித்துவிட்டாள் என்று எத்தனை மகிழ்ச்சியில் இறுமாந்திருந்தேன். அத்தனையையும் இந்தப் பாழாப்போனவள் காரியத்தையே கெடுத்துவிட்டாளே’ என்றெண்ணிய மரகதம்

 

“தம்பி… கட்டிய தாலியை அறுத்து விடுங்கள்… உங்களுக்குத் தங்கமான பெண்ணாக நாங்கள் பார்த்து முடித்து வைக்கிறோம்” என்று எரிச்சலுடன் கூற,

 

‘இவளை அடைய எத்தனை நாட்கள் காத்திருந்தேன், கடைசியில் இலவுகாத்த கிளிபோல் ஆகிவிட்டதே.’ என ராஜேசும்

 

“சீ… சீ… இது நம் குடும்பத்திற்கே அடுக்காது…” என்று பொறாமையில் கத்தினான்.  அனைவரையும் அலட்சியமாகப் பார்த்த சர்வாகமன், தன்னவளை இழுத்துக்கொண்டு, ஆணியடித்தாற் போல நின்றுகொண்டிருந்த குலவேந்தரை நெருங்கினான்.

 

“பெரியப்பா என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு வேறு வழி தெரியவில்லை… உங்கள் அனுமதியில்லாது சாக்கடையில் வீசியெறிந்த இந்த மலரை நான் கொண்டு செல்லப்போகிறேன். புழுதி படிந்த இந்த வீணையை நான் தூசு தட்டப் போகிறேன்… இவள் பேசமாட்டாள் என்று தெரிந்தும் உங்கள் மகனுக்குத் திருமணம் முடித்துவைத்த உத்தமர் நீங்கள். யார் சபித்தாலும் எனக்குப் பரவாய் இல்லை. உங்கள் ஆசீர்வாதம் இருந்தாலே போதும்… எங்களை வாழ்த்துங்கள் பெரியப்பா…” என்றவாறு அவரின் காலில் விழப் போக, உடனே அவனைப் பற்றி நிறுத்தினார்.

 

“சர்வாகமா… நீ அவசரப் பட்டு…” அவர் முடிக்கவில்லை, வேகமாகத் தன் தலையை ஆட்டியவன்,

 

“இல்லை பெரியப்பா… நான் என்று நிரந்தரியை முதல் முதலில் கண்டேனோ, அன்றே என் இதயத்தை அவளிடம் பறிகொடுத்து விட்டேன். அன்றே இவள்தான் எனக்கானவள் என்று முடிவு செய்துவிட்டேன்… என்னுடைய காதலை இவளிடம் சொன்னேன். ஆனால் இவள் தான், ஏறெடுத்துக் கூடப் பார்க்கவில்லை. எப்படியும் இவள் உள்ளத்தை வென்று, இவளைக் கைப்பிடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்… அது இப்போது நிறைவாகிவிட்டது…” என்று அவளைத் தன் தோளோடு இறுக்கியவாறு சொன்னவன், பின்னால் நின்றிருந்தவர்களைப் பார்த்துவிட்டு,

 

“இதற்கு மேலும் நிரந்தரி துன்புறுத்தப்படுவதை பார்க்கும் சக்தி எனக்கில்லை…” என்று கூறியவாறு திரும்பி தன் பெரியப்பாவின் கரங்களைப் பற்றி, “அவள் இதுநாள் வரை பட்டதெல்லாம் போதும். இனிவரும் காலங்களிலாவது என்னோடு, என் மனைவியாக மகிழ்ச்சியோடு இருக்கட்டும்… அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க என்னால் மட்டும் தான் முடியும். ஏனெனில் அவளை அந்த அளவிற்கு விரும்புகிறேன் பெரியப்பா. தயவுசெய்து எங்களை ஆசீர்வதியுங்கள்!” என மீண்டும் அவர் காலில் விழப்போனான் சர்வாகமன். அவனுடன் சேர்ந்து நிரந்தரியும் விழ, இருவரையும், எழுப்பி விட்ட குலவேந்தரின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.

 

“சர்வாகமன்! நீ வயதில் சின்னவன் என்றாலும் உள்ளத்தால் உயர்ந்தவன். நிரந்தரியை இட்டு நான் வருந்தாத நாட்களே இல்லை. அவளுடைய வாழ்வை நல்லது செய்கிறோம் என்று நான்தான் நாசமாக்கிவிட்டேனோ என்று எத்தனை முறை தூக்கம் இல்லாமல் தவித்திருக்கிறேன், துடித்திருந்திருக்கிறேன் தெரியுமா… இப்போதுதான் என் மனம் நிம்மதியடைந்திருக்கிறது. இந்த வீணையை இங்கே இருக்கும் யாருக்குமே மீட்டத் தெரியாது. நீயாவது இவளை நன்றாகப் பார்த்துக்கௌளப்பா. நீ அவளை நன்றாகப் பார்த்துக்கொள்வாய். அந்த நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஆனால் உன் தந்தையிடம் என்ன சொல்வது என்றுதான் தயக்கமாக இருக்கிறது. இதுதான் என் மகனைப் பார்த்த லட்சணமா எனக் கேட்டால் நான் என்ன சொல்வேன். அதோடு இவளை அவன் தன் மருமகளாக ஏற்பானா” என்றார் வேதனையுடன்.

 

“கவலைப் படாதீர்கள் பெரியப்பா… அப்பாவிற்கு நான் நிரந்தரியை விரும்பும் விடயத்தை ஏற்கனவே சொல்லி அவர் சம்மதத்தையும் பெற்றுவிட்டேன். என் திருமணம் ஊர் அறிய உலகறிய நடக்கவேண்டும் என்றுதான் விரும்பினேன். ஆனால் இப்படி அவசரமாக நடக்கும் என்று எண்ணவில்லை. இந்தத் தாலிகூட, எங்களது திருமணத்திற்கென்றுதான் வாங்கினேன்” என்றான் வேதனையுடன்

 

“எப்படியோ சர்வாகமன் நீங்கள் இருவரும் பலகாலம் மகிழ்ச்சியாக வாழவேண்டும். என்றும் இந்தப் பெரியப்பாவின் ஆசீர்வாதம் உங்களுக்குண்டு. உள்ளே வா சர்வாகமன். அம்மா நிரந்தரி… உன்னைப் பிடித்த தரித்திரம் இன்றோடு முடிந்துவிட்டது. இனியாவது  நீயும், சர்வாகமனும், எந்தவிதமான துன்பமும் இல்லாமல் சந்தோஷமாக வாழவேண்டும். இருவரும் முதலில் உள்ளே வாருங்கள்” என்றார் குலவேந்தன் அன்பாக மகிழ்ச்சி கொப்பளிக்க.

 

“வேண்டாம் பெரியப்பா… எங்களை மன்னித்துவிடுங்கள். இனி ஒரு போதும், உங்கள் வீட்டு வாசலை நானோ, நிரந்தரியோ மிதிக்கமாட்டோம்…” என்றவன் திரும்பி அனைவரையும் வெறுப்புடன் பார்த்து, தன் சுண்டு விரலை நீட்டி,

 

“இவள் என் மனைவி… என் உயிரானவள், இவளைப் பற்றி இனி ஒரு வார்த்தை, ஒரு வார்த்தை தப்பாகப் பேசினீர்கள்… அதற்குப் பிறகு என்னை ஒரு வைத்தியனாகப் பார்க்க மாட்டீர்கள்… ஜாக்கிரதை…” என்று எச்சரித்துவிட்டு, பிரகாஷின் அருகே வந்தான்.

 

“எனக்குத் தம்பியில்லை என்கிற குறையைத் தீர்த்தவன் நீ… உன்னுடைய ஆதரவு இல்லையென்றால், இவள் இன்று எனக்கில்லை… தாங்க்ஸ்டா… ஒரு போதும் உன்னை நான் மறக்கமாட்டேன்…” என்று விட்டுத் தாமரையின் அருகே வந்து, அவள் தலையை வருடிக் கொடுத்து,

 

“உனக்கு பிரகாஷ் மட்டும் அண்ணன் இல்லை… நானும்தான்… எப்போது வேண்டுமானாலும், இந்த  அண்ணனிடம் நீ வரலாம்… என்ன புரிந்ததா?” என்று அவள் தலையைத் தட்டிவிட்டுத் திரும்ப, அப்போதுதான் நினைவு வந்தவனாக,

 

“அண்ணா ஒரு நிமிஷம்…” என்றவாறு பிரகாஷ் உள்ளே ஓடினான்.

 

திரும்பி வந்தபோது, அவன் கையில் ஒரு பொதி வீற்றிருக்க. அதை சர்வாகமனிடம் நீட்டினான்.

 

“என்ன பிரகாஷ் இது…” என்று கேட்க,

 

“உங்களுக்குத் தெரிந்ததுதான் அண்ணா… இது என் அண்ணிக்காக நான் வாங்கியது. அவள் என் அண்ணியாக இருந்தாலும் அவள் என் சகோதரி. இந்தச் சகோதரிக்கு இந்த சகோதரனின் அன்புத் திருமணப்பரிசு. மறுக்காமல் பெற்றுக்கொள்ளுங்கள்…” என்றவாறு நீட்ட, நிரந்தரிக்கு அழுகையில் உதடுகள் பிதுங்கின. விரைந்து சென்று அவள் கரத்தைப் பற்றிய பிரகாஷ்,

 

“ஐ ஆம் கோய்ங் டு மிஸ் யு அண்ணி.. நானும் தாமரையும்… நீங்கள் இல்லாமல் எப்படி இருக்கப் போகிறோமோ தெரியவில்லை…” என்று கண்கலங்க, தாமரையும் ஓடிவந்து நிரந்தரியை இறுக அணைத்து அழத் தொடங்க, அங்கே அன்பு கண்ணீராகிக் கரைகடந்து ஓடியது.

 

கொஞ்ச நேரம் அவர்களை அப்படியே விட்டவன், அதற்கு மேல் தன் மனைவி அழுவதைக் காணப் பிடிக்காமல் விரைந்து சென்று அவளைத் தன் கைவளைவில் பற்றிகொண்டு,

 

“நேரமாகிவிட்டது… நாங்கள் கிளம்புகிறோம்… விதி நமக்கு வழி விட்டால், மீண்டும் சந்திப்போம்…” என்று பிரகாஷைப் பார்த்துக் கூறிவிட்டுத் திரும்பியவனுக்கு ஏதோ நினைவு வர, தன் மனைவியைப் பார்த்து,

 

“ஒரு இரண்டு நிமிடம் தாம்மா… இதோ ஒரு கணக்கு நிறைவு செய்யவேண்டி இருக்கிறது… அதை முடித்து விட்டு வருகிறேன்…” என்று கூறியவன், தன்னவளை விட்டுப் பிரிந்து, நீண்ட கை சட்டையை மடித்தவாறு சிறிய புன்னகையுடன் ராஜேஷை நெருங்கினான்.

 

அவன் எதற்காக இவன் என்னருகே வருகிறான் என்பதை யோசிப்பதற்குள்ளாக, ஓங்கி அவன் மூக்கில் குத்திவிட்டிருந்தான் சர்வாகமன்.

 

அவன் குத்திய வேகத்தில், மூக்கும் உடைந்து முன்பக்க இரு பற்கள் நொறுங்கிக் கீழே விழ, துடித்துப் போனான் ராஜேஷ். அதைச் சற்றும் இரக்கமில்லாது பார்த்த சர்வாகமன்,

 

“இது எதற்குத் தெரியுமா? என்னவளை அவள் விருப்பமில்லாமல் பலவந்தப் படுத்த முயன்றதற்கு… என்ன… மற்றவர்கள் போல நானும் நம்புவேன் என்று நினைத்தாயா? முட்டாள்… என்னவளைப் பற்றி எனக்குத் தெரியாதா… அவளுடைய ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி… யாருக்கும் எந்தத் துன்பமும் செய்ய நினைக்காதவள் அவள்… அவளைப் போய்… சே…” என்று சீறியவன், மீண்டும் அவனைக் குத்துவதற்காகத் தன் கரத்தை ஓங்க, உடனே வந்து தடுத்த, பிரகாஷ்,

 

“வேண்டாம் அண்ணா… விட்டுவிடுங்கள், அவனை அடித்து உங்களை அசிங்கப்படுத்திக் கொள்ளாதீர்கள்…” என்று கூற, தன் கரத்தை உதறியவாறு விலகியவன், மரகதத்தின் அருகே வந்தான்.

 

எங்கே தன் மகனுக்கு கிடைத்த தண்டனை தனக்கும் கிடைத்துவிடுமா என்று அஞ்சி தன மூக்கையும் வாயையும் பொத்த, அதைக் கண்டு வெறுப்புடன் சிரித்த சர்வாகமன், செத்தபாம்பு என்று நினைத்தவனாக, மீண்டும் தன்னவளின் அருகே வந்தான். அவனுடைய நெஞ்சம் மகிழ்ச்சியில் நிறைந்துபோயிருந்தது.

 

தன்னவளுடன் வெளியே செல்ல முயன்றவனின் அருகே வந்த குலவேந்தர்,

 

“வண்டியில் ஏறு சர்வாகமன். நீ போகவேண்டிய இடத்திற்குக் கொண்டு செல்கிறேன்” என்று கூற, அதற்கு மறுத்து வள்ளியம்மை ஏதோ சொல்ல வர அவளைச் சுட்டெரிப்பதுபோலப் பார்த்தார் குலவேந்தன்.

 

அவர் பார்வையில் சர்வ நாடியும் ஒடுங்கிப் போனாள் வள்ளியம்மை. திரும்பிய குலவேந்தர் சர்வாகமனை வண்டியில் ஏறுமாறு பணிய, அவர் வேண்டுதலை சர்வாகமனால் மறுக்க முடியவில்லை.

 

திரும்பித் தன் மனைவியைப் பார்க்க, அவள் அதிர்ச்சியின் பிடியிலிருந்து விலகாது இன்னும் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தாள். அவளது, கரத்தைப் பற்றியவாறு வண்டியில் ஏறி அமர்ந்தான் சர்வாகமன். ஐந்து வருடங்களின் பின்னர் நிரந்தரி சுதந்திரமாக, எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாது, மனம் நிறைந்தவனுடன் வெளியுலகைக் காணச்சென்றாள்.

 

(33)

 

ரயில் நிலையத்தை வந்தடைந்ததும் குலவேந்தன் தன் சாவிக்கொத்திலிருந்து ஒரு சாவியைப் பிரித்தெடுத்து அதை சர்வாகமனிடம் கொடுத்து,

 

“தம்பி! இது கொழும்பு வீட்டுச் சாவி. இந்த பெரியப்பாவின் வீட்டிற்குத் தான் வர மறுத்தாய். இதையும் மறுக்காதே. இன்னும் ஒரு சில தினங்களில் கொழும்பு வந்து சந்திக்கிறேன். இவளுக்கு கடவுச்சீட்டு பெறவேண்டும். அதற்கான எத்தனையோ வேலைகள் இருக்கின்றன. ஒன்றுக்கும் நீ யோசிக்காதே. இந்தப் பெரியப்பாவின் உதவி எப்போதும் உனக்குண்டு” என்றவாறு சாவியை அவன் கைகளில் தணித்துவிட்டு, இருவரையும், ஆரத்தழுவி விடுவித்தார். அவர் விழிகளில் கண்ணீர் சாரி சாரியாக விழத்தொடங்கியது.

 

நிரந்தரியின் கரத்தைப் பற்றியவர்,

 

“கண்ணம்மா… நான் உனக்கு மாமா இல்லை… உன் அப்பா… எப்போதும், உனக்காக உன் பக்கமே இருப்பேன் புரிந்ததா?” என்று கேட்க, அவளும் அழுதவாறே ஆம் என்று தலையசைக்க, நெஞ்சம் அடைத்தது.

 

“ஒரு நிமிஷம் தம்பி…” என்ற குலவேந்தர், தொடர் வண்டிக்கான சீட்டுக்கள் வாங்கும் இடத்திற்குள் நுழைந்து, இரண்டு முதல் வகுப்புச் சீட்டுக்கள் வாங்கிச் சட்டைப்பைக்குள் வைத்தார். பணத்தை எண்ணிக் கொடுத்துவிட்டு

 

“வண்டி எத்தனை மணிக்கு இங்கே வந்து சேரும்” என்று வினவினார்

 

“இன்னும் பத்து நிமிடத்தில் வந்துவிடும்” எனக் கடிகாரத்தைப் பார்த்துக் கூறிவிட்டு தன் வேலையில் மூழ்கிப்போனார் அலுவலகர்.

 

வந்ததற்கு இருவருமே சாப்பிடவில்லை என்ற உணர்வு வர அருகிலிருந்த கடைக்குள் நுழைந்தார். இரண்டு போத்தல் தண்ணீரும், உணவும் வாங்கிக்கொண்டு  சர்வாகமன், நிரந்தரியை நோக்கி விரைந்தார்.

 

அங்கே ஒரு இருக்கையில், சர்வாகமனும், நிரந்தரியும் எதுவுமே பேசாது பதுமைகளாக அமர்ந்திருந்தனர். அவர்களை நெருங்கி,

 

“இந்தாப்பா சர்வாகமன் பிரயாணச் சீட்டுகள்” எனச் சட்டைப்பைக்குள் வைத்ததை எடுத்து சர்வாகமனிடம் கொடுத்துவிட்டுக் கையிலிருந்த உணவுப் பொதியை நிரந்தரியிடம் ஒப்படைத்துவிட்டு அவள் குனிந்த தலையை நோக்கினார்.

 

“அம்மாடி நிரந்தரி” என அன்பொழுக அழைத்தார். அவள் மெதுவாகத் தலையை நிமிர்த்தி குலவேந்தரைப் பார்த்தாள். அவள் கண்களில் கலக்கமும், வேதனையும் அதிகமாக மண்டியிருப்பதைக் கண்டவர் உள்ளுக்குள் கலங்கிப் போனார். அவளுடைய கரத்தைப் பற்றியவர்,

 

“நிரந்தரி…..! உனக்கு இந்த மாமாமேல் கோபம் இல்லையே” வேதனையுடன் வினாவ, அதிர்ச்சியுடன், நிமிர்ந்து அவரைப் பார்த்தாள் நிரந்தரி.

 

“எதற்கு? “ என்று கரங்களால் கேட்க,

 

“உன்னை… இத்தனை காலம் நரகத்தில் தள்ளியதற்கு…” என்றார் பெரும் வேதனையுடன். உடனே மறுப்பாகத் தலையாட்டியவள்,

 

“இல்லை மாமா…! இல்லை. உங்களால்தான், எனக்கு உறவுகள் கிடைத்தன… பாதுகாப்பான சூழல் கிடைத்தன… நான் உயிருள்ள வரை உங்களை மறக்கமாட்டேன் மாமா… உங்கள் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை.” என்று அவள் பதற்றமாகக் கூற, குலவேந்தர், அவள் சொல்வது புரியாமல், சற்றுத் தடுமாற, சர்வாகமன், அவள் என்ன சொல்கிறாள் என்பதைத் தெளிவாக அவருக்குக் கூறினான்.

 

அதைக் கேட்டதும், குலவேந்தர் திகைத்துப் போனார். ஐந்து வருடங்கள், சேர்ந்திருந்தும் அவளுடைய பாஷையை அவர் புரிந்துகொள்ள வில்லை… வெறும் பத்து நாட்கள் தங்கியிருந்தவன், இத்தனை தெளிவாகப் புரிந்துகொண்டானே…’ என்று திகைத்துப்போய் வெட்கியவராக,

 

“நான் உன் நன்மைக்காகத்தான், என் மகனை உனக்குக் கட்டிவைத்தேன். அப்போது எனக்கு வேண்டியது ஒன்றே ஒன்றுதான்… நீ நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான்… ஆனால் அவனுக்குத்தான், உன்னுடன் வாழக் கொடுத்துவைக்கவில்லை. அதற்காக நீ காலம் முழுதும் சிலுவை சுமக்க முடியுமா. உனக்கு இப்போது ஒரு அற்புதமான வாழ்க்கை கிடைத்திருக்கிறது. சர்வாகமன் ஒரு உத்தமன். அவன் எந்தக் குறையும் இல்லாமல் வைத்திருப்பான். அவனை நீ வருத்தக் கூடாது நிரந்தரி. அவனுடன் நீ கடைசிவரை மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அதுதான் இந்த மாமாவின் ஆசை, விருப்பம், எண்ணம் எல்லாம்… அதை நிறைவேற்றுவாய் அல்லவா?” என்று அவர் கேட்கச் சற்று  நேரம் தலையைக் குனிந்து கொண்டவள், பின் அவரைப் பார்த்து,

 

“மாமா…! நான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவள், நான் விரும்பிய எதுவுமே என்னிடம் நிலைத்ததில்லை, உங்கள் மகனின் இறப்பு, என் பெற்றோர்களின் இறப்பு, என் தம்பியின் இறப்பு இவை எல்லாமே என்னைக் காயப்படுத்திவிட்டன. என் உள்ளம் இப்போது கருகிப்போய் துடிக்கவேண்டும் என்பதற்காகத் துடித்துக்கொண்டிருக்கிறது. இதோ இந்த நல்ல மனிதர் என் கழுத்தில் தாலிகட்டிவிட்டு ஏதோ சாதித்துவிட்டதாக இருக்கிறாரே… இல்லை மாமா! இவர் பெரும் பிரச்சனை ஒன்றைத் தன் தலையில் தூக்கிவைத்திருக்கிறார். இவர் வெளியில் செல்லும் போதெல்லாம் திரும்பி வருவாரா… மாட்டாரா… என்று தினமும் ஏங்கி ஏங்கித் தவித்து… எப்படி மாமா? எப்படி என்னால் நிம்மதியாக இருக்கமுடியும். இத்தனை காலமாக நான் சிலுவை சுமக்கவில்லை… இப்போதுதான், இப்போதுதான் நான் சுமக்கிறேன்.” இத்தனையையும் அவள் சொல்லத்தான் நினைத்தாள். சொன்னாலும் குலவேந்தர் புரிந்துகொள்ள மாட்டார்… புரிந்துகொள்ளக் கூடியவன், அதைக் கேட்டு மனம் உடைந்து போவான்.. அதை விட, அமைதியாக குலவேந்தன் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். வேறு என்னதான் அவளால் செய்ய முடியும்.

 

அதே நேரம், தூரத்தில் வண்டி வரும் ஓசை கேட்டதும் அங்கு வந்திருந்த பயணிகள் வண்டி நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். இருவரும் வண்டியில் ஏற முயல,   மீண்டும் ஒருமுறை இருவரையும், ஆரத்தழுவி விட்டு வண்டியில் ஏற்றிவிட்டார்.

 

“அப்பா… சர்வாகமன். நிரந்தரி இத்தனை காலம் பட்ட துன்பத்திற்கு இன்றுதான் விடிவு கிடைத்திருக்கிறது. இன்னும் ஒருமுறை அவள் துன்பப்படக் கூடாது. எந்தக் காரணத்தைக் கொண்டும் அவளை வெறுத்துவிடாதே. இது அவள் மாமனாக நான் கூறவில்லை. அவள் தந்தையாகக் கூறுகிறேன்” என்றவர் சர்வாகமனின் கைகளை அழுந்தப் பற்றிவிட்டுக் கலங்கிய கண்களுடன் விடைபெற்றார்.

 

அவர்களது வண்டி கண்களுக்கு மறையும் வரை அந்த வண்டியையே பார்த்துக்கொண்டிருந்தார் அந்த உன்னத மனிதர்.

What’s your Reaction?
+1
29
+1
7
+1
1
+1
1
+1
2
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!