Mon. Sep 16th, 2024

நீ பேசும் மொழி நானாக – 28

(28)

 

தம்மை நோக்கிக் குண்டுகள் சிதறுவதைக் கண்ட பிரகாஷ் உடனே செயற்பட்டான். சற்றுத் தள்ளித் தெருவோரத்தில் ஒரு பதுங்கு குழியிருக்க, அருகே சுருண்டிருந்த சர்வாகமனைப் பார்த்து,

 

“லிசின் அண்ணா… அங்கே பாருங்கள்… பதுங்கு குழி, இப்படியே உருண்டு வாருங்கள்… அதற்குள் போய்விட்டால், அதிக பாதுகாப்பு…” என்று விட்டு, முன்னுடல் அரைய, பதுங்கு குழிவரை சென்றவன், அதில் இறங்க, சர்வாகமனும் அதையே பின்பற்றிச் சென்று அதற்குள் இறங்க, மறு குண்டு சற்றுத் தள்ளி விழுந்தது. இப்படி அரை மணி நேரம் தமது உயிரைக் கையில் பிடித்தவாறு அனைவரும் இருந்த இடத்தில் அப்படியே இருக்க, அதன் பின் குண்டு விழுவது நிறுத்தப் பட்டது.

 

ஒருவாறு, அனைவரும் வெளியே வர, அங்கே கண்ட காட்சியில், அனைவருக்கும் சுவாசம் தடைப்பட்டுக் கிடந்தது. காயம் பட்டவர்களின் ஓலமும், எரிந்த பேருந்தில் உயிருக்குப் போராடும் மனிதர்களும்… ஒரு கணத்தில், இந்த மனித உயிர் எதற்கும் மதிப்பில்லை என்று காட்டிவிட்டது அந்த சம்பவம்.

 

யார் மீது குற்றம் சொல்வது? இறந்தவர்கள் என்ன தவறு செய்தார்கள்? எதற்காக இத்தனை பெரிய தண்டனை? ஒரு பக்கமாக நான்கு வயதுக் குழந்தை ஒன்றின் கால், துண்டாடப்பட்டிருக்க, அது வீல் என்று அலறிக்கொண்டிருந்தது.

 

பதறியவாறு அந்தக் குழந்தையின் அருகே சென்ற சர்வாகமன், வேறு எங்காவது அடிபட்டிருக்கிறதா என்று பார்த்தான். இல்லை. நிச்சயம் அந்தக் குழந்தையைக் காப்பாற்றலாம். உடனே தன் ஷேர்ட்டைப் பிய்த்து, காலைச் சுற்றி அழுந்தக் கட்டித் தன்னால் முடிந்த முதலுதவியைச் செய்ய, அதற்கிடையில், செய்தியறிந்து காயப்பட்டவர்களை ஏற்றிச் செல்ல வாகனங்கள் வந்திருந்தன.

 

இதற்கிடையில் எங்கிருந்தோ, ரஞ்சனியும், ராஜேஷ_ம் அவனை நோக்கி ஓடி வந்தனர். அவர்களுக்கு ஒன்றுமில்லை என்பதை அறிந்ததும், அந்தக் குழந்தையைத் தன் கரத்தில் ஏந்திய சர்வாகமன், பிரகாஷைப் பார்த்து,

 

“பரகாஷ் முதலில் பெரியப்பாவிற்குத் தொலைப்பேசியில் அழைத்து இங்கே வரவேண்டாம் என்று சொல்” எனக் கட்டளையிட்டவாறு குழந்தையை வண்டியில் ஏற்றுவதற்காகப் போகத் தொடங்க, அதைக் கேட்ட ரஞ்சனிக்குப் படு ஆத்திரம் வந்தது.

 

‘என்ன இவன்! இங்கே நின்றாலே பயத்தில் உயிர் போய்விடும்போல் இருக்கிறது. இந்த நிலைமையில் மாமாவை வரவேண்டாம் என்கிறானே! இவனுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது. முதலில் இங்கிருந்து கிளம்ப வேண்டும்’ என்று எரிச்சலுடன் நினைத்தவள்,

 

“வட் த ஹெல் ஆர் யு டாக்கிங்… ஆர் யு அவுட் ஆஃப் யுவர் மைன்ட்… மாமாவை வரவேண்டாம் என்றால் நாங்கள் எப்படி வீடுபோய்ச் சேர்வது. என்னால் இங்கெல்லாம் இருக்க முடியாது… இனி எந்த நேரம் இங்கே குண்டு விழுமோ… நோ… மாமாவை இங்கே வரச் சொல்லுங்கள் பிரகாஷ்” எனக் கோபத்துடன் கத்தினாள் ரஞ்சனி.

 

“அதுதானே… இனி திரும்பக் குண்டு விழுந்தாலும் விழும்! முதலில் நாம் இந்த இடத்தைவிட்டுச் செல்லவேண்டும்… அதுதான் எல்லோருக்கும் நல்லது” எனப் பயத்தில் கையும் காலும் வெடவெடக்கச் சொன்ன ராஜேஷை வெறுப்புடன் பார்த்தான் சர்வாகமன்.

 

“அப்படியா… மிக்க மகிழ்ச்சி. பிரகாஷ்! யாரையாவது கேட்டு இவர்களை அனுப்பிவிடு. நீ வேண்டுமானாலும் போய்க்கொள். என்னால் முடிந்த உதவிகளை இவர்களுக்குச் செய்துவிட்டு வருகிறேன்.” என்று அடக்கிய கோபத்தில் கூறினான் சர்வாகமன்.

 

“என்ன சொல்கிறீர்கள். உங்களுக்குக் கொஞ்சமாவது மூளையிருக்கிறதா. நீங்கள் இங்கே இருந்து என்ன செய்யப் போகிறீர்கள். இது என்ன வெளிநாடென்று நினைத்தீர்களா. எந்த நேரம் என்ன நடக்கும் என்று தெரியாது. பைத்தியம் போலப் பேசாமல் கிளம்புங்கள்..” என ரஞ்சனி உத்தரவிட,

 

“ஏய்…” எனக் கண்கள் சிவக்க முஷ்டிகள் இறுகக் கோபமாகக் கத்திய சர்வாகமன் சுற்றுப்புறம் உணர்ந்தவனாகத் தன்னை அடக்கிக்கொண்டான்.

 

“திஸ் இஸ் யுவர் லிமிட்… உனக்கு மரியாதை இவ்வளவுதான்… உன் அதிகாரத்தை என்னிடம் காட்டாதே. நான் அமைதியாக இருக்கிறேன் என்பதற்காக என்னை உன் அடிமை என்று நினைக்காதே. நீயும் ஒரு மனுஷிதானே… எத்தனை குழந்தைகள்… கொஞ்சமாவது உனக்கு மனம் இரங்கவில்லை… சே… உன்னிடம் போய் சொல்கிறேன் பார்… குழந்தையின் மீது காரை ஏற்றிக் கொல்ல முயன்றவள்தானே நீ…” சினத்துடன் சொன்னவனைக் கோபத்துடன் பார்த்து முறைத்த ராஜேஷ்

 

“என்ன நீங்கள் என் தங்கையை மிரட்டுகிறீர்கள். அவள் யார் தெரியுமா?” என்றான். சர்வாகமன் அவனை அலட்சியமாகப் பார்த்துவிட்டுப் பிரகாஷிடம்,

 

“பிரகாஷ்….! பேரியப்பா இந்தக் காட்சிகளைப் பார்க்கவேண்டாம்… அவர் ஹார்ட் பேஷன்ட் வேறு… தாங்க மாட்டார்… இதோ இந்த இருவருக்கும் அவசரம் வீடு போக வேண்டும் என்றால் ஏற்றி அனுப்பிவிடு.” என்றவாறு, வாகனம் நோக்கி ஒடி அதில் அந்தக் குழந்தையைக் கிடத்திவிட்டு, மற்றையவர்களைப் பரிசோதிக்க ஓடினான்.

 

தன் தந்தையுடன் சிறிது நேரம் தொலைப்பேசியில் பேசியவன். ரஞ்சனியைப் பார்த்து,

 

“அப்பா செய்தி கேட்டு பாதி வழி வந்துவிட்டாராம். சிறிது நேரம் இங்கே இருந்தீர்கள் என்றால் உங்களை அழைத்துச் செல்வதாகக் கூறினார்” என்றவன் சர்வாகமன்கமனை நோக்கிச் சென்றான்.

 

அங்கே அடிபட்டவர்களைத் தூக்கி ஒருபக்கம் கிடத்திக்கொண்டிருந்தான் சர்வாகமன். பிரகாஷஷ{ம் அவனுக்கு உதவி செய்ய முற்பட மருத்துவக் குழுவும் அவர்களுடன் இணைந்து கொண்டது. அவனும் ஒரு வைத்தியன் என்பதை அறிந்ததும், அவர்களுக்குப் பாதி சிக்கல் தீர்ந்து போனது.

 

தன்னால் முடிந்த வரை பரிசோதித்து, யாருக்கு அவசர சிகிச்சை வேண்டும் என்பதைக் கண்டறிந்து, அவர்களை உடனே வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்க, அங்கேயே சிகிச்சை கொடுக்கக் கூடியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

முடிந்த வரை அனைவருக்கும் உதவி செய்துவிட்டு நிமிர்ந்த போது குலவேந்தர் வந்துவிட்டிருந்தார்.

 

இருவரை முழுதாகக் கண்ட பிறகுதான் அவருக்கு ஒழுங்காகவே மூச்சு வந்தது. இருவரையும் ஆரத் தழுவி விடுவித்துவிட்டு, நிம்மதியுடன்,

 

“உங்கள் எல்லோரையும் உயிருடன் பார்க்கும் மட்டும் என் உயிர் என்கையில் இல்லையப்பா” என வேதனையுடன் உரைக்க, வண்டிக்குள் ஏறியபோதுதான். ரnஜேஷ_ம், ரஞ்சனியும் கடு கடு முகத்துடன் உள்ளே அமர்ந்திருப்பது தெரிந்தது. எதுவும் பேசாமல் வண்டிக்குள் அமர, அது தாமதிக்காமல் வீடு நோக்கிப் புறப்பட்டது.

 

வீட்டிற்கு வந்தபோது, வாசலில் அனைவரும் கூடி நின்றவாறு ஒப்பாரி வைப்பதைக் கண்டு, வண்டிக்குள் இருந்த அனைவரும் திகைத்துப் போயினர்.

 

பொருட்கள் வாங்க நெடுங்கேணிக்கு சென்றிருந்தவர்கள் மாலையாகியும் வீட்டிற்கு வந்து சேரவில்லை. சரிதான், மாலை சிற்றுண்டியைச் செய்யலாம் என்று எண்ணிய நிரந்தரி, சமையலறைக்குள் புகுந்த நேரத்தில், தாமரை தொலைக்காட்சியில் ஏதோ ஒரு திரைப்படத்தைப் போட்டவாறு, உறங்கும் நிலையில் சோபாவில் சாய்ந்திருந்தாள்.

 

பிரகாஷ் இல்லாமல் அவள் போரடித்திருப்பது புரிய, உள்ளே சென்று அவளுக்குத், தேநீர் வார்த்துக்கொண்டு வெளியே வந்தபோதுதான், அவசர செய்திகள், என்கிற தலைப்பில், நெடுங்கேணியில் நடந்த குண்டுவெடிப்பில், பலர் இறந்த செய்தி ஓடிக்கொண்டிருந்தது.

 

அதைக் கண்டவளின் கரங்கள் நடுங்கின. இதயம் வெடித்துவிடுமோ என்கிற அச்சத்தில் தன் கரங்களில் வைத்திருந்த தேநீர் தட்டைக் கீழே போட்டுவிட்டு அந்த செய்தியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க, சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு விழித்த தாமரை, அங்கே நிரந்தரி நின்ற நிலையைக் கண்டு புரியாமல்,

 

“அண்ணி… வட் இஸ் இட்… என்னாச்சு” என்றாள். பதில் கூறாது நிரந்தரி தொலைக்காட்சியை வெறித்துக்கொண்டிருக்க, இவளும் ஏறிட்டாள்.

 

படத்திற்குக் கீழே ஓடிக்கொண்டிருந்த செய்தியைக் கண்டதும், பதற்றத்துடன்,   ரிமோல்டினால், செய்தி அலைவரிசைக்கு மாற்றிவிட, அதில் அவசர எச்சரிக்கையென்றும், அவசரக்கால செய்தியென்றும் அந்தக் குண்டுவெடிப்பைப் பற்றி செய்தியாளர் வாசித்துக்கொண்டிருந்தார்.

 

நெடுங்கேணியில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில், அங்கிருந்த பல பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்,  என்று அறிவித்துக்கொண்டிருக்க, அதைக் கேட்ட நிரந்தரியின், அடிவயிற்றிலிருந்து கதறல் ஒன்று தொண்டையினூடாகப் புறப்பட்டு வெளிவந்தது.

 

அதைச் சத்தமாக வெளிப்படுத்த முடியாத குரல்வளை திணறி மூச்சுத் தடைப்பட்டுத் திக்கித் திணறித் தவித்து, மேலும் அடிவயிற்றைச் சுருட்டும் விகார ஒலியொன்றை அவள் எழுப்ப, அந்த அலறலைக் கேட்ட தாமரையே அதிர்ந்து போனாள்.

 

பலியாட்டின் கழுத்தில் வெட்டும்போது, அது இறுதியாக ஒரு சத்தம் கொடுக்குமே… அதை விடக் கொடியதாக இருந்தது அந்த ஓசை.

 

நிரந்தரிக்கு ஒரு நிமிடம் என்ன செய்வது என்று புரியவில்லை. எங்கே போவது, என்ன செய்யவேண்டும்… என்று எதுவுமே அவளுக்குத் தெரியவில்லை. அவள் இதயம் தன் வேலையை நிறுத்திவிடும் போலப் படபடவென்று வேகமாகத் துடித்தது. மூச்சுக் கூட வெளிவரமாட்டேன் என்ற அடம் பிடித்தது. உள்ளே எடுத்த சுவாசம் வெளியேவர முடியாது அடைத்துப்போக உடல் தள்ளாட தளர்வுடன் தரையில் அப்படியே அமர்ந்தாள் நிரந்தரி.

 

“சர்வாகமன்… ஆகமன் அவனுக்கென்னாகிவிட்டது… கடவுளே…” என்று அவனை எண்ணிய மாத்திரத்தில், அது வரை அடக்கியிருந்த மூச்சு வெளியே வந்தபோது, அது கூட ஒரு விதப் பயங்கர ஒலியாகவே வெளியே வந்தது.

 

“ஐயோ…! இந்தக் கோரத்தைச் சொல்லக் கூட இந்த வாயால், முடியவில்லையே…. நான் யாரை எப்படிக் கூப்பிடுவேன். எப்படி சொல்வேன்… கடவுளே… இரக்கமில்லாதவனே. என் ஆகமனும் போய் இருந்தானே. அவன் வெளிநாட்டில் வசித்தவன். நம் உள்ளூர் பிரச்சனைக்குத் தன்னைக் காவந்து பண்ணத் தெரியாதவன். அவன் இதில் சிக்கியிருந்தால்! இல்லை… இல்லை… அவனுக்கு ஒன்றுமில்லை… ஒன்றுமாகியிருக்காது…” என்று மனதிற்குள் தனக்குத் தானே சொன்னவள், அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல், சுவாமியறையை நோக்கி ஓடினாள்.

 

உள்ளத்திலிருந்து சொல்லமுடியாத வேதனை அவளைக் கொன்றது. மரகதமும், வள்ளியம்மையும் சிறிது நேரத்திற்கு முன்புதான் யாரோ ஒருவருடைய வீட்டிற்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றிருந்தார்கள். அவர்கள் இந்தச் செய்தியைப் பார்த்திருப்பார்களா? நான் என்ன செய்வேன். எதுவும் செய்ய முடியாத பாவியாகிவிட்டேனே” எனக் கதறியவளிடம் விரைந்து வந்த தாமரை,

 

“அண்ணி… பயப்படாதீர்கள்… நீங்கள் நினைப்பது போல் யாருக்கும் எதுவும் ஆகியிருக்காது… உங்கள் மனத்தைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள்…” என்று சாமதானம் கூறியவளுக்குப் பிரகாஷையும், தன் தந்தையையும், சர்வாகமனையும் எண்ணிப் பெரும் வேதனை எழுந்தது.

 

”அதில்லை தாமரை… உன் அண்ணா… வெளிநாட்டிலிருந்து வந்தவர்… அவருக்கு இது புதிது… குண்டு விழுந்தால், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது கூடத் தெரியாது… அவருக்கு… அவருக்கு ஏதாவது… ” என்று அவள் கதறியவாறு சைகை செய்ய,

 

“ஷ்… அண்ணி… அதுதான் பிரகாஷ் அண்ணா இருக்கிறானே… அவன் பார்த்துக்கொள்வான்… நீங்கள் கலங்காதீர்கள் அண்ணி… ப்ளீஸ்…” என்று அவள், வேண்ட, நிரந்தரிக்கு அந்த இடத்தில் சர்வாகமனைத் தவிர, வேறு யாரும் நினைவுக்கு வரவில்லை.

 

“சாமியறைக்குள் சென்று விழுந்தவளுக்கு என்ன வேண்டுவது என்று கூடப் புரியவில்லை. தாரை தாரையாகக் கண்ணீர் சொரிய, அங்கே வீற்றிருந்த தெய்வங்களை வெறித்துப் பார்த்தவளுக்குத் தன் வேதனை அவர்களுக்குப் புரியுமா என்று கூடத் தெரியவில்லை.

 

வாய் பேசுபவர்களுக்கு மட்டும்தான் தெய்வம் நின்று கொடுக்குமோ? ஊமை நான்… வேண்டுவதை அந்த தெய்வம் கேட்குமா? அப்படிக் கேட்கும் என்றால், இதுவரை நான் வேண்டியதை ஏன் அது கேட்கவில்லை? உள்ளம் முழுவதும் எழுந்த வலியில் இரண்டு கரங்களையும் நீட்டி, உள்ளம் உருக, உடல் வதங்க, கண்களில் கண்ணீர் சொரிய,

 

“என் சர்வாகமன்யின் உயிரைப் பறித்துவிடாதே. அவனை முழுமையாக என்னிடம் ஒப்படைத்துவிடு. இந்த அதிரஷ்டம் கெட்டவள் ஆசைப்பட்டதால்தானே அவனுக்கு இந்தத் தண்டனை கொடுக்க முயன்றாய்… அவனை விட்டுவிடு… வேண்டுமானால் என் உயிரை எடுத்துக் கொள்… என் உயிரைத் தவிர என்னிடமிருந்து எடுத்துக்கொள்ள வேறு எதுவும் இல்லை… இதற்கு மேல், இன்னும் என்னைச் சோதிக்காதே. அம்மா…. இந்த ஊமை யாரிடமும் எதுவும் கேட்டதில்லை. உன்னிடம் இன்று கையேந்திக் கேட்கிறேன். என் சர்வாகமனை முழுமையாக என்னிடம் ஒப்படைத்துவிடு.” என மனதால் கூறிக் கதறி வாய்விட்டழுதவளைத் தேற்ற முடியாது தாமரை தவித்துப் போனாள்.

 

கூடவே தன் தந்தைக்குக் கைப்பேசி எடுக்க முயன்று, அவரிடமிருந்து எந்த பதிலும் வராது போனது வேறு தாமரையின் வயிற்றைக் கலக்கியது. அடுத்து என்ன செய்வது, எங்கு போவது என்று கூட அவளுக்குத் தெரியவில்லை. தாய் எங்கே போனாள் என்று கூட அவள் கேட்கவில்லை.

 

“தெய்வமே… அவனுக்கேதாவது ஒன்று நடந்தால் அதன் பின் நானும் உயிரோடு இருக்கமாட்டேன். இது உன்மீது சத்தியம்.” என உறுதியோடு சபதம் எடுத்த, நிரந்தரி, தன் கால்களை மடித்தமர்ந்து கண்களை மூடியவாறு, கடவுளைப் பிரார்த்திக்கத் தொடங்கினாள்.”

 

பக்கத்து வீட்டிற்கு சென்றிருந்த மரகதமும், வள்ளியம்மையும் செய்தியைக் கேட்டதும் பதறியடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தனர். வீடே செத்தவீடாக மாறியது. அவர்களின் அழுகுரலைக் கேட்ட பக்கத்து வீட்டினர் அலறியடித்து வந்தனர்.

 

“ஐயோ! இப்படியாகும் என்று தெரிந்திருந்தால் அவர்களை இந்த வீட்டுப்படியைத் தாண்டவே விட்டிருக்க மாட்டேனே…. நான் இப்போது என்ன செய்வேன். என் குடும்பம் முழுவதையும் ஒட்டுமொத்தமாகத் தொலைத்துவிட்டேனே” என வள்ளியம்மையும்,

 

“என் இரண்டு குழந்தைகளுக்கும் என்ன ஆனதென்றே தெரியவில்லையே” என மரகதமும் கதறித் துடித்துக்கொண்டிருந்தார்கள்.

 

சுற்றியிருந்தவர்களுக்கு  அவர்களை எப்படித் தேற்றுவது என்று கூடப் புரியவில்லை. யாரிடம் போவது, எங்கென்று விசாரிப்பது என்று எதுவும் தெரியாது, ஆள் ஆளுக்குத் தமது கைப்பேசியிலிருந்து எங்கெங்கோ விசாரித்துக்கொண்டிருந்தனர்.

 

கிட்டத்தட்ட ஐந்து மணி நேரங்களுக்குப் பின், குலவேந்தரின் வாகனம் வீட்டை வந்தடைந்தது. அது வரை, பெரும் சத்தத்துடன் ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்த, வள்ளியம்மை, தம் வீட்டிற்கு முன்னால் வாகனம் வந்து நிற்க, அது வரையிருந்த வேதனை காற்றில் பறந்து போக, எங்கிருந்துதான் அத்தனை பலம் வந்ததோ, எழுந்து முன்புறம் ஓட, எந்த வித சேதாரமும் இன்றி, கீழே இறங்கினார் குலவேந்தர்.

 

“என்னாச்சு…. உங்களுக்கொன்றுமில்லையே… ஐயோ… நான் எப்படிப் பயந்துபோனேன் தெரியுமா?” என்று வள்ளியம்மை தன் கணவரை இறுக்கி அணைத்தவாறு அழ, அடுத்து இறங்கிய ரஞ்சனியையும், ராஜேஷையும் கண்டு மரகதம் ஓடிச்சொன்று அணைத்து, அவர் பங்குக்கு அழுது முடித்தார்.

 

இறுதியாக இறங்கிய பிரகாஷையும், சர்வாகமனையும் கண்ட, வள்ளியம்மைக்கு அப்போதுதான் பெரும் நிம்மதி எழுந்தது. ஓடிச்சென்று தன் மகனை அணைத்து, அழுது கரைந்தவர், சர்வாகமனின் கன்னத்தை வருடிக் கொடுத்து,

 

“கொஞ்ச நேரத்தில், நாம் அனைவரும் செத்துப் பிழைத்துவிட்டோம் தம்பி…” என்றவருக்கு மீண்டும் உதடுகள் நடுங்கியது.

 

அதே நேரம், வெளியே வாகனம் வரும் ஓசையைக் கேட்டு  ஓடிவந்த தாமரை, அங்கே அனைவரும் பாதிப்பில்லாமல் இருக்கிறார்கள் என்பதைக் கண்டதும் பெரும் நிம்மதி எழ, தன் அன்புத் தமையன், பிரகாஷை ஏறிட்டாள். அவன் அங்கும் இங்கும் இரத்தம் பட்டிருக்க, வேறு எந்தப் பாதிப்புமில்லாமல் முழுதாக இருப்பதைக் கண்டு, அதுவரையிருந்த இறுக்கம் வடிந்து போகத் தன்னை மறந்து, ஓடிச் சென்று பிரகாஷை இறுகக் கட்டிக்கொண்டு அழத் தொடங்கினாள்.

 

“அண்ணா… நான் ரொம்பப் பயந்துவிட்டேன் தெரியுமா… உனக்கொன்றும் இல்லையல்லவா…” என்று அழத் தன் தங்கையின் அண்ணா என்கிற அழைப்பில் உள்ளம் இளக அவளை இறுக அணைத்தாலும், அவனுடைய கண்களிலும் கண்ணீர் பொங்கத்தான் செய்தது. ஆனாலும் துறுதுறுத்த தங்கை இப்படி கலங்குவது பிடிக்காது கண்ணீருடனே புன்னகைத்தவன்

 

“ஏய் இப்படி என் மீது முட்டி எருமை மாடு என்று நிறுவுகிறாய் பார்த்தாயா?” என்று அந்த நிலையிலும் அவளை வம்புக்கு இழுக்க, அதுவரையிருந்த வேதனை மறைந்து, கோபத்துடன் சிலிர்த்துக்கொண்டாள் அவன் தங்கை.

 

“யாரடா எருமை… நானா… நீயா… நீங்கள் போன இடத்தில் குண்டு போட்டார்களாம் என்கிற செய்தி கேட்டு நாங்கள் எப்படிப் பதறிப்போனோம் தெரியுமா? உன்னுடன் தொடர்பு கொள்ள முயன்றால், உன்னுடைய கைப்பேசி அணைப்பிலிருந்தது… நம்மைப் பற்றிக் கொஞ்சமாவது யோசித்தாயா டொங்கி…? உனக்கு உடம்பு வளர்ந்த அளவுக்கு மூளை வளரவில்லை தடியா…” என்று அவள் சிலிர்க்க, சிரித்த பிரகாஷ்,

 

“என்னடி செய்வது… விழுந்த இடத்தில் எல்லாமே எங்கோ விழுந்து தெறித்து விட்டது…” என்றான் கவலையுடன்.

 

“தெறித்து விட்டதா? உனக்குத்தான் அது இல்லையே… எப்படித் தெறித்திருக்கும்?” என்று யோசிப்பதுபோல அவள் தன் தலையைச் சொரிய, முதலில் குழம்பிய பிராகாஷிற்கு  அவள் என்ன சொல்கிறாள் என்பது புரிந்தது.

 

“அடிக் காக்கா முட்டை… கைப்பேசி விழுந்து தெறித்து விட்டது என்கிறேன்… நீ என் மூளையைப் பத்திப் பேசுகிறாயா சுண்டக்காய்…” என்று அவள் தலையில் அழுத்தமாகக் கொட்டிவிட,

 

“சீ பே…” என்று தன் தலையை வருடி, அழகு காட்டிவிட்டுத், தன் அருகே நின்றிருந்த சர்வாகமனை, மூக்கைச் சிந்தியவாறு பார்த்தாள். அவனுடைய உடல் முழுவதும் இரத்தம். வெறும் கையில்லா வெள்ளை பெனியன், சிவப்பு பெனியனாக மாறியிருந்தது. அதைத் தவிர, பெரிய காயங்கள் பட்டதற்கான அறிகுறிகள் இல்லை. அங்கும் இங்கும் சிறு சிராய்ப்புகள் மட்டுமே.

 

நிம்மதியுடன். அருகே போய் அவனையும் இறுக கட்டிப்பிடித்து எம்பி, அவன் காதுக்கு மட்டும் கேட்கும் குரலில்,

 

“பாவம் அண்ணா அண்ணி… ரொம்ப உடைந்து போனார்கள்… செய்தி கேட்டு சாமியறைக்குள் நுழைந்தவர்கள்தான்… இன்னும் வெளியே வரவில்லை…” என்று கூற, இவனுடைய உடல் இறுகியது.

 

அவசரமாகத் தாமரையை விலக்கியவன், உள்ளே நோக்கிச் செல்லத் தொடங்கினான்.

 

நிலைமையை அறிந்த பிரகாஷ், “எல்லோரும் இங்கேயே உட்காருங்கள்… என்ன நடந்தது என்று சொல்கிறேன்…” என்று உள்ளே சென்றவனுக்கும், நிரந்தரிக்கும் யாரும் அறியாது, உதவி செய்ய, கதை கேட்கும் ஆர்வத்தில், சர்வாகமன்  உள்ளே நுழைந்ததை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

 

சாமியறையை நோக்கி விரைந்தவன் கதவிலிருந்து உள்ளே எட்டிப் பார்த்தான்.

 

விழிகளை இறுக மூடியவாறு, கால்களை மடித்து, மார்புக்குக் குறுக்காகக் கட்டி வெறி வந்தவள் போல, முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருந்தவளைக் கண்டு, இவனுக்கு இதயத்தில் இரத்தமே கசிந்தது. தாள முடியாத வேதனையில்,

 

“நிரந்தரி…” என்று மென்மையாக அழைக்க, படக் என்று தன் விழிகளைத் திறந்து பார்த்தவளுக்கு, முன்னால் திருமால் போல நெடுநெடுவென்று நின்றிருந்த சர்வாகமன் தெரிந்தான்.

 

அவனைக் கண்டதும், அதுவரை அழுத்தியிருந்த வேதனையும் பாரமும் மாயமாக மறைந்து போகத் தன்னை மறந்து ஓலமிட்டவாறு எழுந்தவள், அவனை நோக்கிப் பாய்ந்து, அவனுடைய கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டு அக் கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைக்க, தன்னவள் தன்னை ஏற்றுக்கொண்டாள் என்கிற மகிழ்ச்சியில், சற்று முன் நடந்த பயங்கர அனுபவத்தின் வலி காணாமல் போகத் தனக்குள் அவளைப் புதைப்பது போல, இறுக்கி மூச்சு முட்டும் அளவுக்கு அணைத்துக்கொண்டான் அந்தக் காதலன்.

 

அவனுடைய உயரத்திற்கு ஏற்ப அவள் பாய்ந்ததால், நிரந்தரியின் கால்கள், ஓரடிக்கு மேல் எறியிருந்தது. அதனால் அவளுடைய தொடையைச் சுற்றித் தன் கரங்களைப் போட்டு ஏந்தியிருந்தான் அந்தக் காவலன்.

 

தன்னை இறுக அணைத்துக் கொண்டிருந்தவளின் மென்மையில் கரைந்தவனுக்கு, அவளுடைய கண்ணீர் வழிந்து தன் கழுத்தின் வளைவில் விழுவதைக் கண்டு துடித்தவனாக,

 

“கண்ணம்மா… இட்ஸ் ஓக்கேடா… அதுதான் நான் வந்துவிட்டேனே… பிறகு என்ன… இதோ பார்… எனக்கு ஒன்றுமேயில்லைம்மா… ஐ ஆம் பேர்ஃபக்ட்லி ஆல் ரைட்…” என்று ஒற்றைக் கரத்தால் அவளை ஏந்தியவாறு, மறு கரத்தால், அவளுடைய முதுகை வருடிக் கொடுத்து சமாதானப் படுத்த முயல, அவன் கழுத்திலிருந்த தன் முகத்தை விலக்காமல், மறுப்பாகத் தலையை ஆட்டி மேலும் குலுங்கி, அவனுடைய முதுகை ஆவேசமாக வருடிக் கொடுக்க,

 

“ஹே… ரியலிமா… எனக்கு ஒன்றுமேயில்லை… வேண்டுமானால் எழுந்து பார்… கமான்…” என்று இவனும் அவளுடைய கழுத்து வளைவில் அவளுடைய வாசனையை உள் இழுத்து இடது கரம் அவளை ஏந்தியிருக்க வலது கரம் கொண்டு அவள் புறக்கழுத்துப் பூனை முடிகளை வருடிக்கொடுத்துத் தன்னை நோக்கி அழுத்தி அக் கழுத்து வளைவில் உதடுகளை பொருத்தி எடுக்க, அவளோ  பிடிக்காமலே அவனை விட்டு சற்று விலகினாள்.

 

ஆனாலும், அவளுடைய விழிகள், அவன் முகத்தை விட்டு விலகுவதாக இல்லை. தன் இரு கரங்களாலும், அவனுடைய முகத்தைப் பற்றி, நெற்றி, கன்னம், கண்கள், மூக்கு தாடை, கழுத்து என்று நம்ப மாட்டாதவள் போல, வருடிக் கொடுக்க. சற்று நேரம், அவளுடைய கரகரத்த கரங்களின் வருடலில் தன்நிலை மறந்திருந்தவன், அவள் நிறுத்தும் எண்ணமே இல்லாதவள் போன்று மேலும் மேலும் தடவியவாறு இருக்க, அந்தக் கரங்களின் நடுக்கத்தைப் புரிந்துகொண்ட சர்வாகமனின் உள்ளம் பாகாய் உருகிப்போனது.

 

“எனக்கொன்றும் இல்லைம்மா… குண்டு விழுந்தபோது, பிரகாஷ் என்னைக் காப்பாற்றி விட்டான்… கீழே தள்ளியதால் தப்பித்தேன்…“ என்றான் இதமாக.

 

“எதற்கு இத்தனை தாமதமாக வந்தீர்கள்?“ என்று தன் மூக்கை உரிஞ்சியவாறு மறு கேள்வியைக் கைகளால் கேட்டாள் நிரந்தரி.

 

“குண்டு விழுந்த இடத்தில் நிறையப் பேர் அடிபட்டிருந்தார்கள் கண்ணம்மா… சின்னக் குழந்தைகள் கூட… அடிபட்டு… அதுதான், என்னால் முடிந்த முதலுதவியைச்   செய்துவிட்டு வந்தேன்… கூடவே மருத்துவ உதவி தேவையென்றால், என்னையும் அழைக்குமாறு கேட்டிருக்கிறேன்…“ என்று அவன் கூற. மீண்டும் அவன் தலையைத் தன் மார்போடு அணைத்து அவன் தலையின் மீது தன் முகத்தைப் பதித்தவளுக்கு, அப்படியே அவனைத் தன்னுள் புதைத்துவிட வேண்டும் என்கிற வெறியே எழுந்தது.

 

ஒருவாறு சுயநினைவுக்கு வந்து, எழுந்தவள், அவனைப் பார்த்து,

 

“நீ முல்லைத்தீவிற்குப் போகக் கூடாது…“ என்றாள் சைகையாக. அவள் முகத்தையே இமைக்காது பார்த்தவன்,

 

“ஏன்மா… நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யவேண்டாமா?“ என்றான் சற்று இறுகிய குரலில்.

 

“அதுக்கு ஆயிரம் பேர் இருப்பார்கள்… நீங்கள் போனால், இன்று நடந்தது போல ஏதாவது நடந்தால்… உங்களுக்கு ஏதாவது நடந்தால், அதன் பின் நான் உயிரோடு இருக்கமாட்டேன்…“ என்று தன் பாணியில் சொன்னவளை இமைக்காது பார்த்தவன்,

 

“அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் நிரந்தரி… இப்போது… இந்தக் கணம் நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் தெரியுமா? வானையே வென்று விட்ட மகிழ்ச்சி.“ என்று அவன் கூற, அப்போதுதான், தான் நிற்கும் நிலை நிரந்தரிக்குப் புரிந்தது.

 

பதறி அடித்தவாறு அவன் பிடியிலிருந்து குதித்து இறங்கியவள் மீண்டும் அவனைத் தலை முதல் கால் வரை நன்றாக இருக்கிறானா என்று பார்த்தாள். அவன் அணிந்திருந்த பெனியனில் இரத்தக் கறையைக் கண்டதும் துடித்துப்போய் வருடப் போக, அக் கரத்தைப் பற்றிய சர்வாகமன்,

 

“இது அங்கே காயப்பட்டவர்களுடையது… எனக்கொன்றுமில்லை…“ என்றான் சமாதானப் படுத்தும் முகமாக.

 

அனால் அவளோ, வேகமாக அவனை நெருங்கி அவன் மார்பு வயிறு என வருடி உணர முயல,

 

“ஹே… நான் சொல்வதை நம்பவில்லையா?“ என்று கேட்டவன், அவள் கசங்கிய முகத்தைக் கண்டு, அவளைப் பற்றித் தள்ளி நிறுத்தி,

 

“ஓக்கே… இதோ பார்…“ என்றவாறு தன் பெனியனைக் கழற்றி இரு கரங்களையும் விரித்துத் தலையை மேலும் கீழுமாக ஆட்டி,

 

“ஆர் யு சட்டிஸ்ஃபை நவ்?“ என்றான்.

 

அன்று இரசம் கொட்டிய காயத்தின் மீது இரத்தக் கறை இருந்தனவே தவிர வேறு எந்தக் காயமும் இருக்கவில்லை. நிம்மதியுடன் நிமிர்ந்தவள் அங்கும் இங்குமாக இருந்த கீறல்களை வலியுடன் பார்த்தாள்.

 

அதைக் கண்டவன், மேலும் நகைத்தவாறு, தன் பனியனை மீண்டும் அணிந்துகொண்டு எப்படி வந்தது என்று, கூற, நிம்மதியுடன், அவனுடைய கீறல்களை வருடிக் கொடுத்து,

 

“வலிக்குதா?“ என்பது போல அவனை  நோக்கி அண்ணாந்து பார்த்தாள்.

 

“இல்லைம்மா… முன்பு வலித்தது… எப்போது என்னை வந்து கட்டிக்கொண்டாயோ, அப்போதே அதெல்லாம் பறந்து போய்விட்டது…” என்றான் அவள் முகத்தைத் தன் கரங்களில் ஏந்தியவாறு.

 

மெதுவாகத் தன் முகத்தில் பதிந்திருந்த அவன் கரத்தை விடுவித்து,

 

“உனக்கு நான் வேண்டாம்… நான் அதிர்ஷ்டம் இல்லாதவள்… உன்னை நான் விரும்பியதால்தான், உனக்கு இந்த ஆபத்து வந்திருக்கிறது…“ என்று அவனுக்குப் புரியவைக்க முயன்றவள், பின் தன்னைக் காட்டி,

 

“நான் உன்னை விரும்புகிறேன்… உயிருக்கும் மேலாக…  ஆனால் உன்னை என்னால் மணக்க முடியாது…“ அவனையும், சாமியையும் சுட்டிக்காட்டி, “நீ கடவுள் போல… கடவுளைத் தொழத்தான் முடியும்… உரிமை கொண்டாட முடியாது. சேர்ந்து வாழ முடியாது… நீ எங்கிருந்தாலும் சந்தோஷமா… மகிழ்ச்சியா இருக்கவேண்டும்… இருப்பாய்… அதைப் பார்த்து நான் மகிழ வேண்டும்… தயவு செய்து… ஒரு முறை என் பின்னால் வராதே…” என்று அவள் தன் பாஷையில் கூற, மெதுவாகச் சிரித்த சர்வாகமன், அவளை நெருங்கி, அவளை இழுத்துத் தன்னோடு அணைத்தவாறு,

 

“பைத்தியம்… உன்னை விட்டுவிட்டு நான் எப்படிடி இருப்பேன்… நீ இல்லாத வாழ்க்கை எனக்கு வெறும் பாலைவனம்… அங்கே சந்தோஷம் இருக்காது… மகிழ்ச்சி இருக்காது… இன்பம் இருக்காது… அப்படிப்பட்ட வாழ்க்கையை யாராவது வாழ்வார்களா?” என்று அவன் கேட்க, அவனுடைய அணைப்பிலிருந்தவாறே, தன் தலையைத் தூக்கிப் பார்த்து,

 

“என்னோடு வாழும் வாழ்க்கை உனக்கு ஆபத்தைக் கொடுக்கும்…” என்று விழிகளால் கூற,

 

“நீ இல்லாத வாழ்வுதான் எனக்குச் சாவைக் கொடுக்கும்…” என்றவனுக்கு அப்போதுதான் நினைப்பு வந்தது. அவசரமாகத் தன் பான்ட் பாக்கட்டிலிருந்த பெட்டியை எடுத்து அதைத் திறந்து  அவளுக்குக் காட்டினான். அதில் தாலி மினுமினுத்தது.

 

“இது உனக்காக நான் வாங்கினேன் கண்ணம்மா… இது என்னிடம் இருந்ததால்தான் தப்பித்தேன்… அப்படியானால், நீ தான் எனக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக் கூடிய தேவதை தானே…” என்று இவன் கூறி அவளை மீண்டும் தன் கைவளைவில் கொண்டு வந்து, “இப்போது நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் தெரியுமா… இதோ என் உலகமே என் கைவளைவில் இருப்பதுபோல உணர்கிறேன்… ஐ லவ் யு மா… ஐ லவ் யு சோ மச்…” என்றவனின் அணைப்பை விட்டு விலகவேண்டும் என்று அவளுக்கும் தோன்றவில்லை, அவனை விடவேண்டும் என்று அவனுக்கும் தோன்றவில்லை.

What’s your Reaction?
+1
26
+1
14
+1
2
+1
2
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!