Mon. Sep 16th, 2024

நீ பேசும் மொழி நானாக – 26/27

(26)

 

வெளியே வந்த சர்வாகமன், அங்கே பிரகாஷ் நிற்பதைக்கண்டதும் அவன் அருகே சென்றான்.

 

“என்னடா தம்பி… தனிமையில் இனிமை காண்கிறாய்…” என்று கேட்க, அவனை வலியுடன் நிமிர்ந்து பார்த்த பிரகாஷ்,

 

“கஷ்டமாக இருக்கண்ணா… பாவம்ண்ணா அண்ணி… என்னை விட, இரண்டு வயதுதான் இளையவர்கள்… அவர்களின் வயதை ஒத்தவர்கள், எப்படி சந்தோஷமாக இருக்கிறார்கள் தெரியுமா? இவர்கள் என்னவென்றால்…” என்று பெரும் வலியுடன் கூறியவன் பின் எங்கோ வெறித்துப் பார்த்தவாறு,

 

“அண்ணா… அண்ணி எங்கும் போய் நான் பார்த்ததில்லை தெரியுமா… எனக்குத் தெரிந்து அவர்கள் வந்தது… கோனேஸ்வரம் மட்டும்தான்… அதுவும் உங்கள் புண்ணியத்தால் அந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. இப்படியே போனால் அவர்களின் மனநிலை பாதிக்கப்படுமோ என்று அச்சமாக இருக்கிறது…” என்று தவிப்புடன் கூற, தன் தம்பியின் தோளைத் தட்டிக்கொடுத்த சர்வாகமன்,

 

“வருந்தாதே தம்பி… எல்லாம் நல்லதே நடக்கும்…” என்று மறைமுகமாகக் கூறினான்.

 

“அடப் போங்கண்ணா… எங்கே நல்லது நடக்கப் போகிறது… இந்த ஐந்து வருஷத்தில் எதுவும் அப்படி நடந்ததாகத் தெரியவில்லை…” என்று விரக்தியுடன் கூறியவனைப் பார்த்து மெதுவாக நகைத்தவன்,

 

“நடக்கும்டா… நான் உத்தரவாதம் கொடுக்கிறேன்…” என்றான் சர்வாகமன் அழுத்தமாக.

 

“அதுதான் எப்படியண்ணா… அண்ணிக்கு ஒரு திருமணம் நடந்து, அவர்கள் இங்கிருந்து சென்றால்தான் உண்டு… நிச்சயமாக அது நடக்க வாய்ப்பில்லை… அப்படியிருக்கிறப்போ…”

 

“ஏன் நடக்காது… நிச்சயம் நடக்கும்… வேண்டுமானால் பந்தயம் வைக்கலாமா?” என்று சிரித்தவாறு சர்வாகமன் கேட்க, வியப்புடன் நிமிர்ந்து தன்னை விட மிக உயரமாக நின்றவனை அண்ணாந்து பார்த்து,

 

“நடக்குமா… எப்படியண்ணா… அவர்களைத் திருமணம் முடிக்க யார் வரப்போகிறார்கள்… நிச்சயமாக யாரும் வரமாட்டார்கள்… இரண்டாம் திருமணத்திற்கே வாய்ப்பில்லை… அதுவும் அதிர்ஷ்டம் இல்லாதவள் என்று இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் எண்ணிக்கொண்டிருக்கிற நம் மக்கள் இருக்கும் வரை, அதற்கு வாய்ப்பில்லை…” என்றான் வலியுடனான உறுதியுடன்.

 

“ம்… நடந்தால் என்ன தருவாய்?” என்று கேட்டான் சர்வாகமன்.

 

“என்ன தருவேனா? அப்படி மட்டும் நடந்தால்… ஆனால் யார் அண்ணா அப்படி வரப்போகிறார்கள்?” என்று சோர்வுடன் பிரகாஷ் கேட்க,

 

“ஏன் நான் வரமாட்டேனா…” என்றான் சர்வாகமன், சாதாரணமாக.

 

“அடப் போங்கண்ணா… நீங்கள் அண்ணியை…” என்றவன், அப்போதுதான், சர்வாகமன், என்ன சொல்ல வருகிறான் என்பதைப் புரிந்துகொண்ட பிரகாஷ், அதிர்ச்சியில் வாய் பிளந்து, அதிர்ந்து மயங்கிக் குழம்பி நிற்க, அவன் நிலையைக் கண்டு சிரித்த சர்வாகமன்,

 

“என்னப்பா… அப்படி என்ன அதிர்ச்சியான செய்தியைக் கூறிவிட்டேன் என்று இப்படிப் பார்க்கிறாய்?” என்று புரியாதவன் போலக் கேட்டான்.

 

“இப்போது என்ன சொன்னீர்கள் அண்ணா… நீங்கள்… நீங்கள் அண்ணியை…” என்று இழுக்க, இன்னும் தன் தமையன் கூறியதை அவனால் உண்மையென்று நம்ப முடியவில்லை.

 

“ஆமாம்.. உன் அண்ணியை நான் மணக்கப்போகிறேன்… இதில் என்ன அதிர்ச்சியான செய்தி இருக்கிறது?” என்று புரியாமல் கேட்க,

 

“நீங்கள் ஒன்றும், சும்மா… விளையாட்டிற்கு…” என்று அவன் இழுக்க,

 

“என்னைப் பார்த்தால் விளையாட்டிற்குச் சொல்பவன் போலவா இருக்கிறது?” என்று திரும்பிக் கேட்டான்.

 

“அப்போ… நீங்கள் அண்ணியை…”

 

“விரும்புகிறேன்… உயிருக்கும் மேலாக… அவள்தான் என் மனைவி என்று முடிவு செய்துவிட்டேன்… போதுமா?” என்று கேட்டதும், அது வரை நம்ப முடியாமல் திகைத்துப்போயிருந்தவனின் முகத்தில், அதுவரையிருந்த வலி காணாமல் போக, முகம் பிரகாசமாக மலர,

 

“ஓ மை காட்… அண்ணா… ரியலி…. ரியலி?” என்று கேட்டவன், பாய்ந்து சென்று சர்வாகமனைக் கட்டிப் பிடிக்க, அந்த நேரம்,

 

“என்னது… எம்ஜிஆர் செத்துப்போய்ட்டாரா? எப்போ?” என்றவாறு வந்தாள் தாமரை.

 

“சனியனே… நல்ல காரியம் பேசும் போது, சாவைப் பற்றிப் பேசுகிறாயே… எருமை மாடு…” என்று பிரகாஷ், தமையனை அணைத்திருந்த பிடியை விட்டு விலகிச் சீற,

 

“தடிமாடு… நீ நல்ல காரியம்தான் பேசுகிறாய் என்று எனக்கெப்படித் தெரியும்?” என்று இவள் சீறிவிட்டு, “என்னண்ணா… ஆச்சு… இவன் கட்டிப்பிடிக்கிற அளவிற்கு அப்படி என்ன நல்ல செய்தி…” என்றவாறு பிரகாஷிடம், கையிலிருந்த தண்ணீர் போத்தலை நீட்ட, அதை வாங்கி கட கட என்று குடித்த பிரகாஷ்,

 

“நம்ம அண்ணியை, அண்ணா விரும்புகிறாராம்…” என்றதும்,

 

“என்ன…” என்று இரண்டாவது உலகத்தைப் பக்கத்தில் கண்டதுபோல ஒரு எதிர்வினை கொடுத்தவள், இருந்தும் நம்ப முடியாதவளாக,

 

“உண்மையாகவா… சத்தியமாகவா… ப்ராமிசா… நெசமா…” என்று நம்பமுடியாமல் திரும்பத் திரும்பக் கேட்டாள்.

 

“இதே ரியாக்ஷன்தான்டி நானும் கொடுத்தேன்…” என்ற பிரகாஷ் திரும்பி தன் அண்ணணைப் பார்த்து,

 

“இன்னும் என்னால் நம்ப முடியவில்லை அண்ணா… ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கண்ணா… எங்கே அண்ணியுடைய வாழ்க்கை இப்படியே வறண்ட நிலமாகப் பாழ்பட்டுப் போய்விடுமோ என்று நினைத்தேன்…” என்று கலங்கிய கண்களுடன் கூறியவன், மீண்டும் தன் தமையனைப் பார்த்து,

 

“இப்போதுதான் என் மனம் நிம்மதியடைந்திருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? எங்கள் அண்ணி இங்கே பட்ட சித்திரவதைகளை நான் உங்களுக்கு எப்படிச் சொல்வேன். நீங்கள் அண்ணியை விரும்புவது, எத்தனை பெரிய வரப்பிரசாதம் தெரியுமா? இனி என் அண்ணி மகிழ்ச்சியாக இருப்பாள் என்ற நிம்மதியும், இனி இந்த சிறையிலிருந்து விடுதலை என்கிற ஆறுதலும், மனதை நிறைத்துவிட்டது… இதற்கு நான் எப்படி நன்றிசொல்வது என்று எனக்குப் புரியவில்லையண்ணா…” என்றான் பிரகாஷ் நெகிழ்ச்சியாக.

 

“இல்லை பிரகாஷ்… நீ சொல்வது தவறு. நிரந்தரி ஒரு பொக்கிஷம். அவளை மனைவியாக அடைய நான் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவள் சேற்றில் மலர்ந்த செந்தாமரை. என்னையும், என் பெற்றோரையும் நிரந்தரியால் மட்டும்தான் பாதுகாத்துக் கொள்ள முடியும். எனக்கென்று குழந்தைகள் பிறக்க வேண்டுமானால் அந்த குழந்தைகளின் தாய் என் நிரந்தரியாக மட்டும்தான் இருக்க முடியும். நான் அவளை என் உயிருக்கும் மேலாக விரும்புகிறேன் பிரகாஷ். ஆனால் அவள்தான் இன்னும் என்னைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாள்” என்றான் வேதனையுடன்.

 

“அண்ணா..! அண்ணியுடைய காயம் மிகவும் ஆழமானது. புரையோடிப்போய் இருக்கிறது… அதைப் பக்குவமாகத்தான் சுத்தப்படுத்த வேண்டும்… அவளுடைய காயங்கள் புற்று நோய் போல் எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. தனக்குள் ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு அதை மீறிவர விரும்பாது, முடியாது… அதற்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருக்கிறாள். நம்முடைய சமூகம் வேறு, எவ்வளவு குட்ட முடியுமோ அவ்வளவிற்குக் குட்டி அவளைக் குறுக வைத்து விட்டது. அவள் இந்தக் கூட்டிலிருந்து வெளியேறுவது அத்தனை சுலபமில்லையண்ணா” என்று பெருமூச்சுடன் பிரகாஷ் கூற, அவன் பக்கம் நன்றாகத் திரும்பி நின்ற சர்வாகமன், அவனுடைய தோளில் தன் கரத்தைப் பதித்து அழுத்திக் கொடுத்து,

 

“கவலைப் படாதே பிரகாஷ்… அவளுடைய காயங்களை ஆற்றும் மருத்துவன் நான்… எத்தனை பேருடைய இதயத்தைச் சரியாக்கியிருக்கிறேன்… என்னவளின் மனத்தை நான் மாற்றமாட்டேனா… இல்லை ஆற்ற மாட்டேனா….” என்று உறுதி தொனிக்கக் கூறியவாறு, அவன் தோளில் தட்டிக் கொடுக்க, அக் கரத்தைப் பற்றித் தன் கரத்தில் வைத்து அழுத்திக் கொடுத்த பிரகாஷ்,

 

“அந்த நம்பிக்கை எனக்கும் இருக்கிறது அண்ணா. ஆனால் சின்னம்மா… உங்கள் திருமணத்திற்கு ஒத்துக்கொள்வார்களா? “ என்று தயக்கத்துடன் கேட்டான்.

 

“என் அம்மா ஒப்புதல் இல்லாமல், திருமணம் பற்றி உன்னுடன் பேசியிருக்கமாட்டேன் பிரகாஷ்… என் தாய் கடவுளுக்கு நிகரானவர்கள்… அவர்களுக்கு நல்லது கெட்டது எல்லாம் நன்றாகத் தெரியும்… ஒருபோதும் நான் தவறான முடிவு எடுக்கமாட்டேன் என்பதும் அவர்களுக்கு உறுதியே…” என்று கூற, பெரும் நிம்மதி மூச்சு விட்ட பிரகாஷ்,

 

“தாங்க் காட்… அண்ணியை நீங்கள் மணப்பதானால், அதற்கு, என்னுடையதும், தாமரையுடையதுமான உதவி எப்போதும் உங்களுக்குண்டு. நாங்கள், அண்ணியின் மைத்துனர்கள் என்பதையும் மீறி, அவளுடைய சகோதரர்கள். அவள் மகிழ்ச்சியாக இருப்பதற்குத் தேவையான அத்தனை உதவிகளையும் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம்” என்று சர்வாகமனின் கரத்தைப் பற்றி உறுதிமொழி கொடுக்க,

 

“அது போதும் பிரகாஷ்… நிரந்தரியின் மனதை நான் வென்றுவிடுவேன்…” என்று மகிழ்ச்சியுடன் கூற, தன் தமையனின் கரத்தைத் தட்டிக் கொடுத்துவிட்டு மட்டற்ற மகிழ்ச்சியுடன் உள்ளே செல்ல முயன்றவனின் விழிகளில், சற்று நாட்களுக்கு முன்பு சர்வாகமன் நட்ட அந்தக் குச்சி கண்ணில் பட்டது. விரைந்து அந்தத் தண்டை நோக்கிச் செல்ல, அப்போதுதான் கவனித்தான், அந்தத் தண்டு இப்போது தளைத்து, அதில் இரு பக்கமும் இலைகள் துளிர்க்கத் தொடங்கியிருந்தது, நிரந்தரியின் வாழ்க்கையைப் போல.

 

(27)

 

பத்து மணிக்கு வருவதாகக் கூறியிருந்த ரஞ்சனியும் அவள் குடும்பத்தினதும் தேர், வந்து சேர மதியம் பதினொரு மணியையும் தாண்டிவிட்டிருந்தது. அவர்கள் வந்ததும், அந்த மாளிகை ஏக கலகலப்பிலிருந்தது. ரஞ்சனியின் சகோதரனும் வந்திருந்தான். அவனது ஆடையே, அவன் பெரும் அலப்பறை என்று கூறாமல் கூறியது. கூடவே தன் பேச்சுக்களால், மொக்கையடித்துக் கொண்டிருந்தான்.

 

வந்தவன் சும்மா இருக்கக் கூடாதோ… மற்றவர்களை நகைச்சுவையாகப் பேசுகிறேன் என்று கேலிசெய்து கொண்டிருந்த நேரம், வெளியே சென்றிருந்த சர்வாகமன் அப்போதுதான் உள்ளே வந்தான்.

 

அவனது பார்வை அவசரமாகக் கூட்டத்தைப் பார்த்து பிரகாஷிடம் நிலைத்து, யாருக்கும் தெரியாமல் ‘எங்கே’ என அவன் இமைகள் மட்டும் சற்று மேலேறிக் கேட்க, பிரகாஷ், தன் உதடுகளைப் பிதுக்கிப் பார்வையால் ‘உள்ளே’ என்ற கூற, “ப்ச்…” என்று மெதுவாகக் கூறியவன், தன் தோளைக் குலுக்கிவிட்டு, மற்றவர்களைப் பார்க்க,

 

“வாப்பா சர்வாகமன்… வா… உனக்காகத்தான் காத்திருக்கிறோம்…” என்ற குலவேந்தர், மகிழ்ச்சியுடன், இதோ… இவர்கள்தான் ரஞ்சனியின் தாய் மரகதம், இது அவள் தந்தை சந்திரபாபு, இது அவள் அண்ணன் ராஜேஷ்” என பெரியப்பா அறிமுகப் படுத்த எல்லோருக்கும் வணக்கம் சொன்னவன், அன்று அரைக்கை டீ ஷேர்ட்டும், ஷோர்ட்சும் அணிந்திருந்தான்.

 

அவனுடைய கம்பீரத்தில், பிரகாஷே மயங்கிப்போனான் என்றால், ரஞ்சனியைப் பற்றிக் கேட்கவே தேவையில்லை. அவளது கண்கள் சர்வாகமனை, விட்டகலாது அவனையே மொய்த்துக் கொண்டிருந்தன. இவன் என்னவன், எனக்கு மட்டுமே உரித்தானவன் என்கிற கர்வச் சிரிப்பும் அவள் இதழ்களில் பரவ, அவளையும் மீறி அவள் நெஞ்சம் விம்ம நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

 

அது வரை தான் மட்டுமே இருப்பதாக நினைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்த ராஜேஷ்   கூட சிறிது நேரம் வாயடைத்துப் போனான்.

 

அறிமுகம் செய்ததும், வெளிநாட்டுப் பழக்கத்தில், ஒவ்வொருவரின் கரத்தையும் பற்றிக் குலுக்கி “நைஸ் டு சீ யூ…” என்று உதட்டளவில் கூறியவன், ரஞ்சனியைக் கண்டதும்,

 

“ஹாய்… நைஸ் டு சீ யு எகெய்ன்… ஹவ் ஆர் யு…” என்று கேட்க,

 

“குட் தாங்க் யு… அன்ட் ஹவ் ஆர் யு…” என்று திருப்பிக் கேட்டவளுக்கு அவனுடைய கரத்தை விடும் எண்ணம் இருக்கவேயில்லை.

 

“ஐ ஆம் குட்… தாங்க் யூ” என்றவன், ராஜேஷின் கரத்தையும் குலுக்கி, அவன் தோளில் தட்டிக் கொடுத்து, அவனிடமும் நலம் விசாரித்துவிட்டு, அங்கிருந்த இருக்கையில் கம்பீரமாக அமர்ந்து கொள்ள, வெளிநாட்டிலிருந்த வந்தவர்களிடம் வழமையாகக் கேட்கும் கேள்விகளான, ஊர் பிடிச்சிருக்கா, எங்கே எங்கே போனீர்கள், என்ன சாப்பிட்டீர்கள்… இந்த நாட்டு உணவு பிடித்திருக்கிறதா?” என்கிற கேள்விகளுக்குப் பதில் கூறிவிட்டு நிமிர,

 

“தம்பி எத்தனை நாட்களுக்கு இங்கே தங்கப் போகிறீர்கள்” என வினாவிய, மரகதத்திற்கு நிற்கும் நாட்களுக்குள், தன் மகளுக்கும், அவனுக்கும் நிச்சயம் செய்துவிடவேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. ஆனால் பாவம், ரஞ்சனி முன்னம் ஏமாந்தது போலவே இப்போதும் ஏமாறப் போகிறாள் என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

 

‘இவர்களின் கைங்கர்யம்தானே அந்தக் காயத்தின் வடு…’ என்று எண்ணியவனுக்குக் கோபம் உச்சஸ்தாயியில் ஏறியது. ஆனாலும் அவ்விடத்தே காட்ட முடியாதே அதனால் எப்படியோ சமாளித்து

 

“ஐ டோன்ட் நோ… முல்லைத்தீவுக்குப் போகவேண்டும்…” என்றதும், அனைவரும் திகைத்துப் போயினர். கூடவே சமையலறையில் வேலையாக இருந்த நிரந்தரி கூட தான் செய்த வேலையை மறந்து அதிர்ந்துபோய் நின்றாள்.

 

“தம்பி என்ன சொல்கிறீர்கள்… அங்கு எதற்காகப் போகிறீர்கள்… அங்கே இன்னும் நிலைமை சரிவரவில்லை… எந்த நேரமும் எதுவும் நடக்கலாம்… அந்த திட்டத்தை விட்டுவிடுங்கள்…” என்று, சந்திரபாபு கூற, மெதுவாக நகைத்த சர்வாகமன்,

 

“சோ… உங்கள் பயணம் எப்படி இருந்தது?” என்று கதையை மாற்ற, மற்றையவர்களுக்குப் புரிந்துபோனது. அவனுக்கு அந்தப் பேச்சு பிடிக்கவில்லை என்று. அதை உடனே புரிந்துகொண்ட வள்ளியம்மை,

 

“சரி சரி… பேசியே நேரத்தைப் போக்கடித்து விட்டோம்… நேரம் கூட பன்னிரண்டிற்கும் மேலாகிவிட்டது… வாருங்களேன் சாப்பிட…” என்று அழைக்க, அனைவரும் எழுந்தனர்.

 

ஏற்கெனவே சாப்பாடு மேசையில் எடுத்துவைக்கப்பட்டிருந்ததால், அனைவரும் தமக்குத் தாமே பரிமாறி உண்ணத் தொடங்கினர்.

 

உண்டு முடிந்ததும், கைகழுவி விட்டு முன்னறைக்கு வர, தன் தொண்டையைக் கனைத்துக் கொண்ட சரந்திரபாபு,

 

“குலவேந்தன்… நமக்கு சேந்தாற் போல, லீவு கிடைத்திருக்கிறது, நாம் ஏன் இலங்கைச் சுற்றுலா போகக் கூடாது? என்று கேட்க, அந்த யோசனை அனைவருக்கும் பிடித்துப் போனது. எப்படியும், சர்வாகமனுக்கு முல்லைத்தீவுக்குப் போக, சில நாட்கள் எடுக்கும் அதற்கிடையில் போய்விட்டு வரலாம்தான்…” என்று முடிவு  செய்ய, குலவேந்தர் யோசனையாக சர்வாகமனைப் பார்க்க, அவனுக்கும் அந்த யோசனை பிடித்துப் போனது.

 

அதுவும் நிரந்தரியோடு போவதென்றால் அவனுக்குக் கசக்கவா போகிறது? எப்படியும் ஏழு நாட்கள் எடுக்கும் என்பதால், எங்கெங்கு போவது என்று திட்டம் போடத் தொடங்க, அனைவருமே அதில் மகிழ்ச்சியாகப் பங்குபற்றத் தொடங்கினர்.

 

மறுநாள் பயணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள், ஆரம்பமாகிவிட்டதால் அனைவரும் தங்கள் பொருட்களை அடுக்குவதில் மும்மரமாக இருந்தனர்.

 

ராஜேஷின் நிலையையோ கேட்கவே தேவையில்லை. முன்பு தாயோடு வந்தபோது, நிரந்தரியைக் கண்டவனுக்கு அவள் மணம் முடித்தவள்  என்கிற எண்ணமே வரவில்லை. ஆனால் ரஞ்சனியின்  இடத்தில் அவள் இருந்ததால் தன் குடும்பமே அவளை வெறுத்த நிலையில் அவளருகே செல்லக்கூட  முடியவில்லை. பின் ஜெயன் இறந்த பின் கணவனை இழந்தவள் தானே என்கிற அலட்சியத்தில் அவளை நெருங்க முயன்றால் அவளோ அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

 

அன்றிலிருந்து எப்படியாவது ஒரு பொழுது அவளுடன் தன் நேரத்தைப் போக்கிவிடவேண்டும் என்று கற்பனையில் மிதந்தவனுக்கு இப்போதுதான் வாய்ப்பே கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பை விட அவன் என்ன முட்டாளா? சந்தர்ப்பம் கிடைத்ததும், ஆசையை நிறைவேற்றிவிட வேண்டியதுதான் என்கிற எண்ணத்தில், அதற்கான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கத் தொடங்கினான்.

 

அவள் பேசமாட்டாள் என்பது வேறு அவனுக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது. அவன் என்ன செய்தாலும், அவளால் கத்தவும் முடியாது, சென்று நடந்ததைச் சொல்லவும் முடியாது… பார்க்க வேறு பலவீனமாக இருக்கிறாள்… இது போதாதா? அவளை அடைவது சுலபம் என அவன் எண்ணினான்.

 

அவன் நிரந்தரியைப் பல விதங்களில் ரசித்துக்கொண்டிருப்பதையும், அவனுடைய சிந்தனை படு கேவலமான முறையில் நிரந்தரியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதையும், சர்வாகமன் அறிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால், ராஜேஷின் உயிர் அவனிற்குச் சொந்தமாகி இருந்திருக்காது.

 

அன்று குலவேந்தர் நெடுங்கேணியில் தன் நண்பர் ஒருவரைச் சந்திக்கவேண்டியிருந்தது. இந்த நேரத்தில், ரஞ்சனிக்கும் சில பொருட்கள் வாங்கவேண்டியிருந்ததால், அவளையும், அவளுடன் சேர்த்து, ராஜேஷ், பிரகாஷ், சர்வாகமன் என மூவரையும் அழைத்துக்கொண்டு நெடுங்கேணி பயணமானார்.

 

நெடுங்கேணிக்கு அருகாமையில் உள்ள கடைகளில், பொருட்கள் சற்று மலிவு என்பதாலும், அங்கே வாங்குவதால், போரில் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு ஓரளவு வருமானம் வரும் என்கிற காரணத்தாலும், பிரகாஷ{ம் சர்வாகமனும் மகிழ்ச்சியுடனேயே ராஜேஷ், ரஞ்சனியுடன் இணைந்து கொண்டனர்.

 

நெடுங்கேணி வந்ததும், அவர்களைக் கடைத்தெருவில் விட்டுவிட்டுத் தன் நண்பரைப் பார்க்கக் குலவேந்தர் சென்று விட, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கமாகக் கிளம்பித் தமக்குத் தேவையானதை வாங்கத் தொடங்கினர். .

 

சுற்றும் முற்றும் பார்த்த சர்வாகமனுக்கு அருகே இருந்த புடவைக்கடை கண்களில் பட்டது. பிரகாஷ்வை அழைத்துக் கொண்டு அதற்குள் நுழைந்தான். அழகான புடவைகள் அவன் கண்ணைப் பறித்தன. கடைக்காரர், அவர்கள் இருவரையும் கண்டதும் வந்திருப்பவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல என்பது புரிய, பெரும் உபசரிப்போடு வரவேற்றார்.

 

“வாருங்கள் தம்பி… வாருங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்? ஏய்! முருகா வந்திருப்பவர்களைக் கவனி” என உத்தரவிட

 

“வாருங்கள் ஐயா.! உங்களுக்கு என்ன வேண்டும்? புடவையா சுரிதாரா” என்றான் முருகன்.

 

“எனக்கு முகூர்த்தப் புடவை வேண்டும்” என்றான் சர்வாகமன். அவன் எதற்கு முகூர்த்தப் பட்டுத் தேடுகிறான் என்பது புரிந்ததும், இவனுக்குக் குதூகலமானது.

 

“என்ன பார்க்கிறாய் பிரகாஷ். உன் அண்ணிக்குத்தான் வாங்குகிறேன். என்றைக்கோ ஒருநாள் வாங்க வேண்டியதுதானே. அதை இப்போது வாங்கினால் என்ன? பிறகு வாங்கினால் என்ன?” என்றவன் கடைக்காரப் பையன் எடுத்துப் போட்ட சோலைகளை ஆவலாகப் பார்க்கத் தொடங்கினான்.

 

பிரகாஷிற்கோ மகிழ்ச்சி பிடிபடவில்லை. துள்ளிக்கொண்டு அவனும், ஒவ்வொன்றாகப் பார்த்துத் தேர்வுசெய்யத் தொடங்க, சர்வாகமன், சேலைகளை விரித்துப் பார்த்து, அது நிரந்தரிக்குப் பொருத்தமாக இருக்குமா என்று கற்பனையில் கண்டு, அது திருப்தி  தராததால், “ இதை விட வேறு இல்லையா சார்? “ என்றான் எரிச்சலாக.

 

“என்ன அப்படிச் சொல்லிவிட்டீர்கள்… இதோ.. இதைப் பாருங்கள். இது புது வரவு. விலை கொஞ்சம் அதிகம். என்றார் கடைக்காரர்.

 

“விலையைப் பற்றிக் கவலைப் படாதீர்கள் சேலையைக் காட்டுங்கள்” என்று பொறுமையற்றுக் கூற, உடனே அனைத்தையும் எடுத்து மேசையில் கடை பரப்பினார் அவர்.

 

கடைக்காரர் காட்டிய அத்தனை சேலைகளும் அழகாக இருந்தன. எதை எடுப்பது எனச் சற்று நேரம் திணறினான். அதில் குங்குமத்துடன் சிவப்பும் கலந்து ஜரிகை வேலைப்பாடமைந்த ஒரு சேலை பிடித்துப் போக, அதைத் தூக்கிக் கொடுத்து,

 

“இதற்கு பில் போடுப்பா…” என்றான். அவனோ சற்றுத் தயங்கியவனாக,

 

“சார்…! இதன் விலை சற்று அதிகம் சார்… இரண்டரை லட்சத்திற்கு வரும். இதில் உள்ள ஜரிகைகள் அனைத்தும் இருபத்திரண்டு கரட் தங்கத்தால் நெய்தது” என்றான் தயக்கமாக,

 

மெல்லியதாக நகைத்தவன்,

 

“பக் பண்ணுப்பா…” என்று கூற, அவனால் நல்ல வியாபாரம் நடந்த மகிழ்ச்சியில் அந்த சேலைக்கு பில் போட ஓடினான் அவன். கூடவே தனக்குப் பிடித்த நிறத்தில், இன்னும் இரண்டு மூன்று சேலைகளைத் தேர்ந்தெடுக்க, அதில் பிரகாஷ{ம் இரண்டு மூன்று சேலைகள் தேர்ந்தெடுக்கவும் அவன் வியந்துபோனான்.

 

“யாருக்கு பிரகாஷ் இது… உனக்கும் ஏதாவது காதல் அப்படி இப்படி”

 

“ஐயையோ! காதலா… எனக்கா… நீங்கள் வேறுண்ணா… இது என் அண்ணிக்கு. அவள் பக்கமாக இருந்து செய்வதற்கு யாருமே இல்லை. அதனால் அவள் சகோதரனாக என்னால் முடிந்தது…” என அந்தச் சேலைகளை வருடியவாறு கூற, உருகிப்போனான் சர்வாகமன்.

 

உன் அன்பு ஒன்றே போதும்பா… அதை விடப் பெறுமதியான வாழ்த்து எதுவும் கிடையாது… “ என்று சொன்னவன், அருகிலே இருந்த நகைக் கடைக்குச் சென்றனர்.

 

முதலில் அவன் பார்த்ததே மாங்கல்யத்தைத்தான். ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதைக் அவன் கைகளில் ஏந்தியபோது, அவன் உடல் சிலிர்த்தது. தன்னவள், தனக்குரியவளானவள் என்பதை முத்திரை குத்தும் சான்றல்லவா அந்தத் தாலி. பத்திரமாக அதை எடுத்து வைத்தவன், கூடவே தன்னவளுக்காத் தன் கரங்களில் சிக்கிய அத்தனை நகைகளையும் வாங்கிக் குவித்தான். கூடவே வெள்ளிக் கொலுசையும் வாங்கியவன், அதைத் தன்னவளின் பாதத்தில் போடுவது போன்ற கற்பனையில் தன்னை மறந்தவனாக எங்கோ பார்த்துக்கொண்டிருக்க,

 

“என்னண்ணா… கற்பனையிலேயே அண்ணியுடன் குடும்பம் நடத்தப் பிளானா… கிளம்புங்கள்… வரும் வாடிக்கைக்காரர்களுக்கும் கொஞ்சம் மிச்சம் வையுங்கள்…” என்று கூற, மெல்லிய வெட்கத்துடன் எழுந்தவன், எல்லாவற்றையும் பக்குவமமாக பக்பண்ணி அவன் கையில் ஒப்படைக்க, தாலிப் பெட்டியை மட்டும் பிரித்தெடுத்து, ஆவலுடன் திறந்து பார்த்தான்.

 

‘நிரந்தரி…. இதை உன் கழுத்தில் கட்டும் நாளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன். இது வரை, இதிலெல்லாம் நம்பிக்கையில்லாமல் இருந்தவன் நான்… என்னையே இந்த தாலி சென்டிமென்டில் வீழ்த்திவிட்டாயே…’ எனத் தனக்குள் சொல்லிக்கொண்டவன், அதை மட்டும் தன் பான்ட் பாக்கட்டில் வைத்துவிட்டு, அனைத்தையும் தன் கரத்தில் எடுத்துக்கொண்டு பிரகா{டன் வெளியே வந்தான்.

 

வெளியே வந்தவர்களை ரஞ்சனியும், ராஜேசும் எதிர் கொண்டனர்.

 

“என்ன சர்வாகமன். எங்கே அதற்குள் ஓடிவிட்டீர்கள். உங்களைக் காணவில்லையென்று ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினோம் தெரியுமா” என்று சிறு எரிச்சலுடன், ரஞ்சனி கூற,  அதைக் கேட்டு, கோபம் கொண்ட பிரகாஷ்,

 

“அப்படியா ரஞ்சனி. நாங்கள் கூட எங்கே தொலைந்துவிடுவோமோ என்று பயந்தே போனோம்…” என்றான் கிண்டலாக.

 

மெல்லியதாகச் சிரித்த சர்வாகமனுக்கு இப்போதே சென்று தன் கரத்திலிருக்கும் கால்கொலுசை, அவளுடைய பாதத்தில் போட்டு அழகு பார்க்கவேண்டும் என்கிற பேராவல் தோன்ற,

 

“சரி சரி எல்லோரும் உங்கள் வேலைகளை முடித்துவிட்டீர்கள் அல்லவா? கிளம்புங்கள்… வீட்டிற்குச் செல்லலாம்… பிரகாஷ்… அப்பாவை அழைக்கிறாயா?.” கூறிக்கொண்டிருந்த  அந்த நேரம் அது நடந்தது.

 

திடீர் என்று எங்கிருந்தோ வந்த குண்டு ஒன்று அவர்களுக்குச் சற்றுத் தள்ளி விழுந்து வெடிக்க, முதலில் அதிர்ந்த பிரகாஷ், குண்டுக்குப் பழக்கப்படாத சர்வாகமன் விதிர் விதிர்த்து நிற்பதைக் கண்டு, அவனை இழுத்துத் தரையில் தள்ளி தானும் கீழே விழுந்து தன் காதுகளைப் பொத்திக்கொண்டான்.

 

அதே நேரம், ரஞ்சனியும், ராஜேஷ_ம், உயிருக்குப் பயந்து, பிரகாஷ{ம், சர்வாகமனும் என்ன செய்கிறார்கள் என்பதைக் கூடக் கவனிக்க நேரமில்லாமல், கிடைத்த இடைவெளியில், ஓடிய மக்களையும் பிளந்துகொண்டு, மறுபக்கமாக ஒடி ஒதுங்கி நின்றனர்.

 

சிறிது நேரத்திற்கு சர்வாகமனுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.  ஒவ்வொரு திக்கிலும் மக்கள் மண்ணோடு மண்ணாக விழுந்திருக்க அடுத்த குண்டு வந்துகொண்டிருந்த பேருந்து வண்டியின் மேல் விழுந்தது. அந்தக் கோரத்தைப் பார்த்த சர்வாகமன், இந்தக் குண்டுக்கெல்லாம் அனுபவம் இல்லாத சர்வாகமன் பேச்சிழந்து அதிர்ந்துபோய் சிலையென எரிந்துகொண்டிருந்த பேருந்தையே பார்த்துக்கொண்டு தரையோடு தரையாகக் கிடந்தான்.

 

எத்தனை பெரும் கொடூரம் இது… சற்று முன், எத்தனை மகிழ்ச்சியாக எல்லோரும் அந்த இடத்தில், ஓடித் திரிந்தனர். கண்ணிமைக்கும் நொடியில் அனைத்தும் தொலைந்து போனதே… என்று அவன் எண்ணும் போதே, சற்றுத் தொலைவில் இன்னொரு குண்டு வந்து விழுந்து உடைந்து சிதறிய பாகமொன்று, சர்வாகமனை நோக்கிச் சீறிப் பாய்ந்தது.

What’s your Reaction?
+1
13
+1
2
+1
0
+1
0
+1
10
+1
2

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!