Mon. Sep 16th, 2024

நீ பேசும் மொழி நானாக – 25

(25)

 

அன்று, ரஞ்சனியும், அவள் குடும்பமும் சர்வாகமனைப் பார்ப்பதற்கு வருவதாகக் கூறியிருந்த நிலையில், அவர்களை வரவேற்க ஒவ்வொரு திக்கிலும் ஒவ்வொருவரை அனுப்பி வேலை வாங்கிக் கொண்டிருந்தாள் வள்ளியம்மை.

 

அப்போது அந்தப் பக்கமாக வந்த சர்வாகமனைக் கண்டதும்,

 

“வாருங்கள் தம்பி…. உட்காருங்கள். அன்று பார்த்தோமே ரஞ்சனி, என் அண்ணன் மகள், அவளும், அவள் குடும்பமும் எங்கள் வீட்டிற்கு வருகிறார்கள்…” என்று மகிழ்வுடன் கூற,

 

“அப்படியா?” என்றவாறு அங்கிருந்த சோபாவில் காலுக்கு மேல் காலைப் போட்டு, தேநீர் மேசையில் வைத்திருந்த, ஆங்கில செய்தித்தாளை எடுத்துப் பிரித்துப் படிக்கத் தொடங்கினான் சர்வாகமன்.

 

“ஆமாம் தம்பி… நமக்குக் கூட, அவளை உங்களுக்குப் பார்க்கலாமே என்று ஒரு யோசனை… உங்கள் அப்பா இதைப் பற்றி பேசியிருப்பாரே…” என்று வள்ளியம்மை ஆவலுடன் கேட்க, அந்த நேரம் நிரந்தரி தேநீர் கோப்பையுடன் முன்னறைக்கு வந்துகொண்டிருந்தாள்.

 

அதை ஓரக்கண்ணால் பார்த்த சர்வாகமன்,

 

“ஆமாம் பெரியம்மா… ரஞ்சனியை எனக்குத் திருமணம் முடிப்பதுபற்றி அப்பா என்னிடம் கூறினார்” என்றான் தன்னவளை உற்றுப் பார்த்தவாறு.

 

அவன் கூறியதைக் கேட்டதும், அவளுடைய நடையில் சிறு தடுமாற்றத்தைக் கண்ட சர்வாகமனுக்குச் சிறு உற்சாகம் ஏற்பட்டது.

 

“அப்படியா தம்பி! நீங்கள் என்ன சொன்னீர்கள். உங்களுக்குச் சம்மதம்தானே” எனப் பரபரத்தாள் வள்ளியம்மை. அவள் பரபரப்பை சிறு நகைப்புடன் நோக்கிய சர்வாகமன்.,

 

“பெரியம்மா! எனக்கு ரஞ்சனியைப் பற்றி என்ன  தெரியும் சொல்லுங்கள்? அவள் எப்படிப் பட்டவள், என்ன குணம் என்னோடு ஒத்துப்போவாளா? இதையெல்லாம் நான் அறிந்து கொள்ளவேண்டும். அதற்கு நான் ரஞ்சனியுடன் பழக வேண்டும். சோ… அவளைப் பிடித்தால் திருமணம் முடிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்” என்றான் பொய்யாக. முகம் மலர்ந்த வள்ளியம்மை,

 

“அதுவும் சரிதான். ஆனால் இருந்து பாருங்கள். உங்களுக்கு அவளை எப்படியும் பிடிக்கும். நீங்கள் வெளிநாட்டில் வசித்தவர். உங்கள் சுவைக்கேற்ப நடந்து கொள்ளுவாள்” என்று கூறிவிட்டு, தடுமாற்றத்துடன் வந்தவளைக் கண்டு,

 

“இதோ பாரடியம்மா…. ஒரு நல்ல காரியத்திற்காக, இன்று ரஞ்சனியும் அவள் குடும்பமும் வருகிறார்கள். வரும் போது அவர்கள் கண்ணில் பட்டுத் தொலைக்காதே. உன்னுடைய அதிர்ஷ்டம் கெட்ட மூஞ்சையைப் பார்க்கப் பயந்துதான் அவர்கள் இங்கே வருவதில்லை. புரிந்ததா? அவர்கள் வரும் போது எங்காவது தூரமாகப் போய் நின்றுகொள். மீறி உன்னைப் பார்த்தேன்…” என்று வள்ளியம்மை எச்சரிக்க,

 

முகம் இறுக அதில் எந்த உணர்ச்சியையும் காட்டாது சரி எனத் தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்ற நிரந்தரியைக் கண்டதும், சர்வாகமனுக்கு மேலும் மேலும் ஆத்திரம்தான் வந்தது.

 

‘இரு தினங்களுக்கு முன், ஒருவனைக் கல்லால் அடித்துக் கொல்லப் பார்த்த பெண்ணா இவள்… எங்கே போயிற்று அந்த ஆவேசமும், கோபமும்… எல்லாவற்றிற்கும் பூம் பூம் மாடுபோல தலையாட்டிக்கொண்டு அடிமைபோல நடந்துகொள்கிறாளே. சற்று எதிர்த்து நின்றால்தான் என்ன? அப்படி நின்றால் இந்தம்மாவால் இப்படிப் பேச முடியுமா’ என தனக்குள் கோபமாக எண்ணியவனுக்குத் தன் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்துவதே பெரும் சிரமமாக இருந்தது.

 

எரிச்சலுடன் தன் கரத்திலிருந்த செய்தித்தாளை, முன் மேசையில் போட்டுவிட்டு, வள்ளியம்மையைப் பார்க்கப் பிடிக்காதவனாக, எழுந்து பின்னால் சென்றவனுக்கு, எப்படி, உள்ளே சென்றவளின் கூட்டை உடைத்து, வெளியே கொண்டுவருவது என்று புரியவில்லை.

 

வெளிப் பக்கக் கதவில் சாய்ந்திருந்தவனைக் கூடக் கவனிக்காது, பிரகா{டன் தாமரையும் சேர்ந்து, சோர்வுடன் சமையலறைப் பக்கம் போக அட எலியும் பூனையும் ஒன்றாகப் போகின்றனவே என்று அதிசயித்தவனாக, இவனும் அவர்களைப் பின்தொடர்ந்து, சென்றான்.

 

“அண்ணி…” என்ற அழைப்புடன் பிரகாஷ் வர அவனைத் தொடர்ந்து அந்த சமையல் அறைக்குள் சர்வாகமனும், தாமரையும் நுழைந்தனர். ‘என்ன வேண்டும்’ என ஏறிட்ட நிரந்தரி சர்வாகமனைக் கண்டதும் தலையைக் குனிந்து கொள்ள,

 

“அண்ணி இன்று ரஞ்சனி வருவதால் அவளுடன் எதிர்த்து நின்று பேசுவதற்கு, எங்கள் உடலிற்குச் சக்தி தேவைப்படுகிறது. எனவே எங்களுக்குத் தேநீர் தருவீர்களா” எனச் சமையல் அறையின் மேசைமீது தொப்பென்று அமர்ந்த பிரகாஷ், தன் தலையில் கைவைத்தவாறு, சோகமயமாகக் கேட்க,

 

அவன் கேட்ட விதம் நிரந்தரிக்குச் சிரிப்பை வரவழைத்தது. “தேநீர் வேண்டும் என்றால் கேட்க வேண்டியதுதானே. எதற்குப் பாவம் அந்த ரஞ்சனியை இழுக்கிறாய்” என்று புன்னகையுடன் சைகையால் வினவ,

 

“என்னண்ணி அப்படிக் கேட்டுவிட்டீர்கள்? போன முறை அவள் அம்மா இங்கே வந்தபோது நீங்கள் பட்ட பாட்டை மறந்துவிட்டீர்களா?” என்ற தாமரை திரும்பி சர்வாகமனைப் பார்த்து

 

“அண்ணா! எங்கள் பெரியண்ணா அண்ணியைத் திருமணம் முடித்திருந்த நேரம். அப்போது இந்த ரஞ்சனியுடைய அம்மா மரகதம் வந்திருந்தார்கள்… அன்றைக்கென்று அண்ணி சமைத்துக்கொண்டிருந்தார்கள்… இந்தம்மா சமையலறைக்குள் எதையோ எடுப்பதற்காக வருவது பொல வந்து, அண்ணி சமைத்துக்கொண்டிருந்த கொதி குழம்பைத் தட்டிவிட்டார்கள். அது காலில் விழுந்து… இன்னும் அந்தக் காயத்தின் தழும்பு இருக்கிறது.” எனக் கோபத்துடன், தாமரை நடந்ததை உரைத்தாள்.

 

அவளுக்குத் தெரியவில்லை, தன் மகள் இருக்கவேண்டிய இடத்தில், எங்கிருந்தோ, வந்த ஒரு பரதேசி இருப்பதைத் தாங்க முடியாத ஆத்திரத்தில், வேண்டும் என்றே அவள் தட்டிவிட்டாள் என்பது.

 

தாமரை கூறி முடித்ததும்தான், அன்று அவள் காயம் பட்ட பாதத்தில், கட்டுப் போட முயன்றபோது, தெரிந்த வடு இப்போது நினைவுக்கு வந்தது.

 

“ஓ… அவர்களின் கைங்கரியமா அது?” என்று எண்ணியவனின் பற்கள் ஒன்றை ஒன்று முட்டி நறநறத்தன.

 

அதே நேரம், இப்படி தாமரை எல்லாவற்றையும் கொட்டுவாள் என்று எதிர்பார்க்காத நிரந்தரி வெட்கத்திலும் அவமானத்திலும் திணறிப் போனாள். தாமரையைக் கண்டிப்புடன் நோக்கியவள்

 

“இப்படி மற்றவர்களின் முன்னிலையில் நமது வீட்டுக் கதைகளை ஒலி பரப்பாதே. அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்.” என்று சைகை செய்ய,

 

“ஏன் அண்ணி…! தாமரையை எதற்குக் கண்டிக்கிறீர்கள்? அண்ணா வேற்று மனுஷனா? அவருக்கு நம் கதைகள் அனைத்தும் தெரியும். அவருக்கு மட்டுமல்ல, இந்த உலகத்திற்கே தெரியும்… ஏன் அண்ணி… ஏன் இப்படி ஒரு கோழைத்தனமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று பிரகாஷ் விரக்தியுடன் கேட்க,

 

அவன் கோபத்தைப் பொருட்படுத்தாத நிரந்தரி, “எனக்கென்ன… நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்… இருக்க ஒரு வீடு… உறவென்று  சொல்ல நீங்கள்… இதோ தங்கையென்று இவள்…” என்று சைகையால் கூறியவாறு தாமரையை இழுத்துத் தன்னோடு அணைத்தவள், பின் பிரகாஷைச் சுட்டிக்காட்டித் ‘என் நண்பனாக நீ…’ என்று கைகளால் சைகை செய்ய, அதைக் கேட்ட பிரகாஷ் உடைந்து போனான்.

 

“ஸ்டாப் இட் அண்ணி… ஸ்டாப் இட்… நீங்கள் சந்தோஷமாக இல்லை… நிச்சயமாக இல்லை… சத்தியமாக உங்களைப் போல என்னால் வாழ முடியாது… எவ்வளவு காலத்திற்கு நாங்கள் உங்களுடன் கூடவே வருவோம் என்று நினைக்கிறீர்கள்… நமக்கென்று ஒரு வாழ்க்கை தொடங்குகிறபோது, உங்கள் முக்கியத்துவம் நமக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கிவிடும்… அப்போது நீங்கள் தனிமரமாக, யாரும் அற்ற அநாதையாக, அழுதால் கூட தோள் கொடுக்க ஒருவரும் இல்லாமலிருப்பீர்கள்… நோ… நீங்கள் இப்படியே வாழ முடியாது… நிச்சயமாக இப்படி வாழவும் கூடாது…” என்றான் பிரகாஷ் உள்ளம் முழுவதும் வலிக்க. பின் தன் அண்ணியை நெருங்கி, அவளுடைய கரத்தைத் தன் கரங்களில் பற்றித் தூக்கி,

 

“ஒவ்வொரு நாளும், எல்லோருடைய வாழ்வும் இப்படியே இருக்காது அண்ணி. இன்று கருகியிருக்கும் உங்கள் வாழ்வு நாளை வேர்விட்டு விருட்சமாகத்தான் போகிறது. வேண்டுமானால் இருந்து பாருங்கள், உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் நன்றாகத்தான் இருப்பீர்கள். அந்த நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது. அதற்கு நீங்கள் உங்கள் சிறையை விட்டு வெளியே வரவேண்டும் அண்ணி… யு கான்ட் லிவ் லைக் திஸ்… இப்படியே இருந்தீர்கள் என்றால்… நீங்களே உங்களை அழித்து விடுவீர்கள்…” என்றவன் அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைக்க, கோபமும் வேதனையும் ஆக்கிரமிக்க அவ்விடத்தை விட்டு வேகமாக வெளியே சென்றான்.

 

எப்போதும், தன்னைத் திட்டும் அண்ணன் கலங்கிப்போய் நிற்பதைக் கண்டு தாங்க முடியாமல் தாமரை அவனைச் சமாதானப் படுத்தும் முகமாக அவன் பின்னால் செல்ல, சர்வாகமனோ, பிரகாஷின் பேச்சில் அடிபட்டவளாக, உள்ளம் வலிக்க, கண்களில் உற்பத்தியாகிய கண்ணீர் வெளிவந்து விடாது அங்கும் இங்கும் பார்வையை ஓட்டி, கண்ணீர் விழாதிருக்க முயற்சிசெய்து தவித்துக் கொண்டிருந்தவளின் அருகே நெருங்கினான்.

 

கண்ணீர் கூட, அவளை மதிக்காது, கன்னங்களில் வழிய, அதைத் தன் முன்னால் நின்றிருந்தவன் பார்த்துவிடுவானோ என்று அஞ்சி மறுபக்கம் திரும்பி நின்றுகொள்ள, வேகமாக அவளை நெருங்கிய சர்வாகமன், தன் முன்னால் உள்ளம் கதற நின்றிருந்தவளைப் பற்றித் தன் பக்கம் திருப்பத் தன் வலியை அவன் கண்டுவிடுவானோ என்று அஞ்சி, தன் தலையைக் குனிந்துகொண்டவளை ஏக்கத்துடன் பார்த்தான் சர்வாகமன்.

 

அவளுடைய நாடியைப் பற்றித் தூக்கி, அவள் பால்வண்ண முகத்தில் தன் விழிகளை நிலைக்கச் செய்து,

 

“நிரந்தரி.! எப்போதுமே நீ இப்படி இருக்கமுடியாது… இப்படி கூண்டுக் கிளியாக அடைபட்டு, உன் வாழ்க்கை கருகிப்போக நான் ஒருபோதும் விடமாட்டேன்… நீ என்னவள், உன் பிற்காலம், என் கூட வசந்தம் நிறைந்ததாகவே இருக்கும்…” என்று கூற, நிரந்தரிக்கு எங்கிருந்துதான் அத்தனை பலம் வந்ததோ. அவனைத் தள்ளி விட்டு,

 

‘என்னைப் பற்றிக் கவலைப் பட நீ யார்? உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்… உனக்கு என்ன உரிமை இருக்கிறது. என் வாழ்க்கை இதுதான். இப்படித்தான் இருக்கும்.. மண்ணோடு மண்ணாகப் போகும் வரை, நான் வேறு திருமணம் முடிக்க மாட்டேன்… நீ அந்த ரஞ்சனியைக் கட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக இரு… இப்போது தயவு செய்து வெளியே போ” அடக்கமாட்டா ஆத்திரத்துடன், கதறலாகச் சொன்னவள், நடுங்கிய உடலை அவனுக்குக் காட்டப் பிடிக்காது, திரும்பி நின்றுகொண்டாள்.

 

சற்றைக்கு முன், ரஞ்சனிக்கும் அவனுக்குமான திருமணப் பேச்சு அவள் காதில் ஓதிக்கொண்டே இருந்தது. கூடவே, அவளுடைய அதிர்ஷ்டம் எத்தகையது என்பதை வள்ளியம்மை கூறியது கூட அவளுடைய காதில் நராசமாய் ஒலித்துக்கொண்டிருக்க, அவளால் தாள முடியவில்லை.

 

விட்டு விட்டு அலறலாய் அவள் ஒலி சீறிப்பாய, என்ன சொன்னாள் என்பது கூடப் புரியாத அந்த மொழியில், அவள் என்ன சொன்னாள் என்பதைப் புரிந்துகொண்ட சர்வாகமன், அவளுடைய கோபத்திற்கான காரணம் என்ன என்பதை உடனேயே தெரிந்துகொண்டான்.

 

ரஞ்சனியைத் தான் மணந்துவிடுவேனோ என்கிற ஏக்கத்தின் பிரதிபலிப்பே அது என்பதை ஒரு மருத்துவனாகப் புரிந்துகொண்டவனுக்கு, அந்த நிலையிலும் மனம் குதியாட்டம் போட்டது.

 

‘உனக்கே இத்தனை திமிர் இருந்தால் எனக்கு எத்தனை இருக்கும்’ என எண்ணியவனாக வெளியே சென்றவன், சமையல் அறைக் கதவைச் சாத்த, சர்வாகமன் வெளியே சென்றுவிட்டான் என ஒரு ஏமாற்றத்துடன் நினைத்தவளுக்கு மேலும் தன்னிரக்கம்தான் ஏற்பட்டது.

 

தன் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டு, எரிந்த உள்ளத்தை அடக்கும் திராணி இல்லாது திரும்பியவள் அங்கே கரங்களை மார்புக்குக் குறுக்காகக் கட்டியவாறு இவளைப் பார்த்துத் தன் கவரும் கண்களால், சிரித்துக்கொண்டிருந்தான் சர்வாகமன்.

 

இவள் அதிர்ந்து விழிக்க, இவனோ, அவளை நோக்கி மெதுவாக அடியெடுத்து வைக்கத் தொடங்கினான்.

 

இப்போது வலியில் நிறைந்திருந்த இதயத்தில் பதட்டமும், பயமும் அவசரமாக இடம் பெயர, அச்சத்துடன் பின்னேறினாள். அந்தோ பரிதாபம், சமையலறை மேடை இவளைத் தடுக்க, அச்சத்துடன் தன் உடலைப் பின்னுக்குக் கொண்டு சென்றாள். இவனோ, இவளுடைய முன் உடல் முட்டும் அளவிற்கு நெருங்கியவனாக,

 

“நீ என்னைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய். நீ துரத்தியதும் ஓடிவிடும் கோழையென்றா? என்னை யாரும் இப்படி அலட்சியம் செய்ததில்லை தெரியுமா?” என்றவாறு சிவந்த அவள் நாசியைத் தன் சுண்டு விரலால் தட்டிவிட்டவன், பின், தன் சுவாசக் காற்று அவள் முகத்தில் தராளமாகப் படும் அளவுக்குக் குனிந்து நின்று,

 

“என் மீது உனக்குக் காதல் இருக்கிறது… அதை எப்போது வெளிப்படுத்தப் போகிறாய் ம்…?” என்றவன், அவளுடைய கன்னத்தில் தன் கரத்தைப் பதிக்கப் போக, நிரந்தரி வேகமாக அதைத் தட்டிவிட்டாள்.

 

ஆச்சரியமாகத் தன்னவளைப் பார்த்தவன்,

 

“அன்று ஒருவன் உன்னை நெருங்கியதற்கே அவனைக் கல்லால் அடித்துக் கொல்ல முயன்றாய்… ஆனால் என்னை மட்டும்… எதுவும் செய்யாது விட்டு வைத்திருக்கிறாயே… அது ஏன்?” என்று கிசுகிசுப்புடன் கேட்டவன், மேலும் அவளை நோக்கிக் குனிய, இப்போது அவனுடைய மூச்சுக் காற்று தாராளமாக அவள் முகத்தில் பட்டுத் தெறித்தது.

 

பதற்றத்துடன், அவன் மார்பில் தன கரங்களைப் பதித்துத் தள்ள முயல, அவனுடைய இரும்பு போன்ற உடலை அசைக்கக் கூட முடியாமல், தவித்தவளின் பட்டுப் போன்ற கரங்கள், மார்பில் பட்டதும் சிலிர்த்துக் கொண்டான்.

 

அதன் இனிமையை விட மனமில்லாதவனாகத் தன் வலக்கரத்தைத் தூக்கி அவளுடைய கரங்களில் பதித்து, அழுத்திக் கொடுத்து, கரைபுரண்டோடிய காதலிலிருந்து வெளி வர முடியாதவனாகத் தன் கரத்தில் சிறைப்பட்டிருந்த அவ்வெண் கரங்களைத் தூக்கித் தன் உதட்டில் பொருத்தி எடுத்து, மீண்டும் மார்பில் பதித்து அவள் விழிகளையே நோக்க, அவன் விழிகளின் இழுப்பு விசைக்கு இழுபட்டுச் சென்ற நிரந்தரிக்கு இப்படியே காலம் நீண்டு செல்லாதா என்று ஏக்கமாக இருந்தது.

 

அதே நேரம், ஐயோ இவனிடமிருந்து எப்படித் தப்புவது என்று தெரியாக் குழப்பத்திற்கும், கடவுளே என்னால் இவனுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்கிற பரிதவிப்புக்கும் இடையில், குழம்பித் தவிக்க, அவனோ அவளை அசைய விடாது அவளின் இரு பக்கங்களும் தன் கரங்களைக் கொன்டு சென்று, சமையல் மேடையில் பதித்துத் தனக்குள் சிறைசெய்து,

 

“நிரந்தரி… நான் இதுவரை என் உணர்வுகளை அடக்கி வைத்துப் பழக்கப்படாதவன். உனக்காக, உன் விருப்பத்தை மதித்தே இத்தனை நாட்களாக உன்னை விட்டுத் தள்ளியிருந்தேன். ஆனால்… எப்போதும் இப்படியே இருக்கமாட்டேன் நிரந்தரி…” என்றவனின் காந்த விழிகள், அந்தக் கர்வம் கொண்ட விழிகள், பெரும் போதையுடன் அவள் முகத்தில் தெரிந்த அங்கங்களை ரசித்து ருசித்துத் தரிசித்துக் கவிபாடத் தொடங்கின.

 

“இந்த சிவந்த சதைப்பற்றுக் கொண்ட உதடுகள், இந்த நீண்ட பெரிய கருவிழிகள்   செம்மை நிறம் கொண்ட கடிக்கத் தூண்டும் கன்னங்கள்… இதோ இந்த மெல்லிய கூரிய நாசி… இந்த வெண் கழுத்து… இந்த…” என்றவனின் பார்வை, அவள் பெண்மையில் பட்டுப் பின் மேல் எழுந்து அவள் விழிகளுடன் கலந்து. “உன் மொத்த அழகும், அந்த அழகுக்குள் ஒழிந்துள்ள உன் மனசும்… எத்தனை நாட்கள் என்னைத் தூங்கவிடாது இம்சித்துவிட்டன என்று உனக்குத் தெரியுமா?” என்றவன், இப்போது நன்றாகக் குனிந்து அவளைத் தொடாமலே, கழுத்து வளைவின் சுகந்தத்தை ஆழ மூச்செடுத்துத் தன்னுள் நிரப்பிக் கொண்டு,

 

“இந்த வாசனை… ஓ மை காட்… நிரந்தரி… யு மேக் மி கிரேசி… ஐ ஆம் கோய்ங் டு பி கிரேசி… ஓ பேபி… அத்தனை இம்சைகளையும் நான் தாங்கிக்கொள்கிறேன் ஏன் தெரியுமா? உனக்காக, உன் அனுமதியில்லாமல், உன்னை நெருங்கக் கூடாது என்கிற ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் நான் தள்ளியிருக்கிறேன் என்றால் நீ நம்புவாயா…” என்றவன், தன் மார்பில் அழுத்தியிருந்த அவளுடைய கரங்களை இறுகப் பற்றியவாறே,

 

“ஐ நீட் யு மா… இம்மைக்கும் மறுமைக்கும் நீ வேண்டும்… என்னவளாய் வேண்டும்… எப்போதும் பிரியாத மனைவியாய், மடிதாங்கும் அன்னையாய், தோள் சாய்க்கும் தோழியாய் நீ வேண்டும்… வருவாயா?” என்றவன், அவளுடைய பதில் எதுவாக இருக்கும் என்பது புரிந்தவனாகத் தலையசைத்து,

 

“இதுவரை நான் இப்படியிருந்ததில்லை தெரியுமா? எதற்கும் காத்திருந்ததில்லை… உன் நன்மைக்காகவே தள்ளியிருந்த என்னையே வெளியே போகச் சொல்கிறாயே கண்ணம்மா.. நான் எப்படிப் போவேன்… ம்…” என்றவன், அவள் கரங்களைப் பிரித்துத் தன் கன்னங்களின் இருபக்கமும் பதித்தான்.

 

“ப்ளீஸ் பேபி… அன்டர்ஸ்டான்ட் மி… என்றவன், அதற்கு மேலும் முடியாது என்பதைப் புரிந்துகொண்டவனாக, வேகமாக அவளுடைய உதடுகளை நோக்கிக் குனியத் தொடங்க அவன் என்ன செய்யப்போகிறான் என்பதைப் புரிந்துகொண்டவள், அவன் பிடியிலிருந்த தன்னை விடுவிக்க முயன்றாள்.

 

அந்தோ பரிதாபம் அவனுடைய இரும்புப் பிடியில் சிறைப்பட்டவளால், ஒரு அடிதன்னும் விலகமுடியவில்லை. தன் இயலாமையை நினைத்து நிரந்தரிக்குப் பெரும் அழுகையே வரும்போலிருந்தது. நெஞ்சு பயத்தில் வெடித்துவிடும் போல் படபடத்தது. கால்களும் கைகளும் பயத்தில் துவண்டன. இனியும் அவனிடம் போராட முடியாது என்பது அவளுக்குப் புரிய, அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்கிற அச்சத்தில் அவள், தன் இரு விழிகளையும் அழுந்த மூடிக்கொண்டாள்.

 

தாபத்துடன் அவளை நோக்கிக் குனிந்த சர்வாகமன், நிரந்தரியின் பதட்டம், பயம், அவள் நடுக்கம் அனைத்தையும் கண்டதும், அவனால் அதற்கு மேல் முன்னேற முடியவில்லை.

 

ஒரு முறை தன்னை நிதானப்படுத்திக்கொண்டவன், தன் பலவீனத்தை எண்ணித் தன் மீதே கோபம் கொண்டவனாகத், தன் கீழ் உதட்டைப் பற்களால் அழுந்தக் கடித்தவாறு, விழிகளை இறுக மூடித் திறந்து, தன் முன்னாள் நின்றிருந்தவளைக் கண்வெட்டாது பார்த்தான்.

 

ஏற்கெனவே மீளாத் துயரில் இருப்பவளிடம் சென்று தன் ஆளுமையைக் காட்ட அவன் விரும்பவில்லை. தான் எண்ணியதைச் செயற்படுத்த முடியாமல், அவளுடைய நெற்றியில் தன் நெற்றியைப் பதித்து,

 

“ஏன்டி இப்படி இம்சிக்கிறாய்… ஐ கான்ட் வெய்ட் லாங்கர் கண்ணம்மா… ப்ளீஸ் அக்சப் மீ… நீ இல்லாமல்.. முடியவில்லைம்மா…” என்றவன், தன் நெற்றியைப் பிரியமில்லாமல் விலக்கி, அவள் நெற்றியில் மென்மையாக முத்தம் பதித்துவிட்டு விலகி, அவள் கரங்களையும் விடுவித்துவிட்டு இரண்டடி தள்ளி நின்றுகொண்டான்.

 

அவளின் சம்மதத்துடன்தான் அவளைத் தீண்ட வேண்டும் என அவன் எண்ணியிருந்தான். ஆனால் அவளைப் பார்க்கும் போதெல்லாம், அந்தக் கட்டுப்பாடு உடைந்து போவதை ஒரு இயலாமையுடன் அறிந்துகொண்டான் அவன்.

 

அவன் நிலை அப்படியிருக்க, இவளின் நிலைதான் படு பரிதாபமாக இருந்தது. அவன் நெருங்கும் போதெல்லாம், தன் வைராக்கியத்தைத் தொலைப்பவள், தீண்டினால் சொல்லவும் வேண்டுமா? அவனுடைய அந்த நெருக்கத்தில் ஆவி பிரிந்துவிடும் தவிப்பில், கைகள் நடுங்கின, கால்கள் தரையில் படாது உதறின, தலையைச் சுற்றி மயக்கம் வருவதுபோல் தோன்றியது. முதல் முதலாக ஒரு ஆணின் உரிமையுடனான தொடுகை அவள் பெண்மையை என்னவோ செய்தது.

 

அவள் நிலையைப் புரிந்துகொண்ட சர்வாகமன், இரண்டெட்டில் அவளை நெருங்கிப் பற்றிக்கொண்டவன், இடது காலால் அருகே இருந்த கதிரையை இழுத்து அதில் பலவந்தமாக அவளை இருத்தினான்.

 

நடுங்கிய உதடுகளை நிறுத்த முயன்று தோற்றவளாகத் தன் பற்களால் தன் உதட்டை இறுகப் பற்றித் தன் நிலையைச் சமாளிக்க முயன்றவளுக்கு முடியாமல், இதழ்களில் பல்பட்டு, இரத்தம் கசிந்ததுதான் மிச்சம்.

 

அதைக் கண்டவன், பொறுமையற்ற மூச்சுடன், அவள் அருகே குனிந்து, உதட்டை விடுவித்துத் தன் பெரு விரலால் அவள் உதட்டில் வடிந்த இரத்தத்தைத் துடைத்து,

 

“பாவம் இந்த உதடுகள். அவற்றையேன் இந்தப் பாடுபடுத்துகிறாய். அதற்குத்தான் நான் இருக்கிறேனே… என் உதடுகள் இருக்கின்றனவே…” என்று கூறியவாறு ஒற்றைக் கண் அடிக்க, அவளுக்கு இருந்த பதற்றம் கூடியதுதான் மிச்சம்

 

நெற்றியில் விழுந்துகிடந்த கூந்தற் சுருளை ஒதுக்கி அவளுடைய காதுக்குள் செருகியவன், அவள் முன், மண்டியிட்டு அமர்ந்தான். குளிர்ந்து போய் இருந்த அவள் இரு கரங்களையும் தன் கரத்தில் எடுத்து, மென்மையான குரலில்

 

“பயப்பட என்ன இருக்கிறது…” என்றான் கனிவாக, அவளோ சிரமப்பட்டு மறுப்பாகத் தலையை ஆட்டியவள், நடுங்கும் கரம் தூக்கி, அவனையும் தன்னையும் சுட்டிக்காட்டி, இணைத்துக் காட்டி பின் மறுப்பாகக் கரத்தை ஆட்டி, நம் திருமணம் நடக்காது என்று உறுதியுடன் கூற, கோபம் கொண்ட சர்வாகமன்,

 

“ஏன்? எதற்காக நடக்காது என்கிறாய்?” என்றான் சீற்றத்துடன்.

 

“நீ… மலை… பெரியவன்… உன்னிடம் நிறைய இருக்கிறது… நான் ஒன்றுமில்லாதவள்… உனக்கு நிகரில்லாதவள்…” என்று சைகைசெய்து, தன் வெற்று நெற்றியைக் காட்டி, “நான் விதவை… என்னால் இன்னொரு திருமணத்தை ஏற்க முடியாது… என்னை விட்டுப் போய்விடு… போய் உனக்கு ஏற்ற ஒருத்தியாகத் தேடி மணந்துகொள்…” என்றவள் பின் தன் மார்பைத் தட்டி, “நான் அதிர்ஷ்டம் இல்லாதவள், என்னுடன் நீ வாழ்ந்தால், உன் வாழ்வு அழிந்து விடும்… என்னை விட்டு விடு… நான் இப்படியே இருந்துவிடுகிறேன்…” என்று அவள் குழறலாகவும், சைகையாலும் தன் முடிவைக் கூற, அதுவரை பொறுத்திருந்தவன், அதற்கு மேல் அதைக் கேட்க முடியாதவனாக, அவள் கன்னத்தில் தன் கரங்களைப் பதித்து, அவள் முகத்தை உலுப்பி,

 

“யு ஸ்டுபிட் வுமன்… நான் உன்மேல் என் உயிரையே வைத்திருக்கிறேன். அதை ஏன் நீ புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய். நான் சொல்வது புரியவில்லை… ஐ லவ் யு… உன்னை என் உள்ளங்கையில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று சபதமே எடுத்திருக்கிறேன். உன்னை விட்டால் எனக்கு வாழ்க்கையே இல்லை… இந்தப் பணம் பதவி எதுவும் எனக்கு வேண்டடாம்…” என்று சீறியவன், அவள் பாஷையிலே அவள் நெஞ்சில் தட்டி, “எனக்கு நீ… நீ மட்டும்தான் வேண்டும்… வேறு எதுவும் வேண்டாம்… புரிந்ததா?” என்று சீறிவிட்டு, மீண்டும் அவளுடைய கன்னத்தைப் பற்றி,

 

“ஏன்டி… ஏன் என்னைப் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாய்… உனக்கு முன்னால் இந்தப் பணம் எல்லாம் எதுவுமே இல்லை… என் உலகத்தில் எனக்கு வேண்டியது எல்லாமே இருக்கு… எல்லாமே… ஆனால் நீ இல்லையென்றால்… அவை இருந்தும் எனக்குப் பயனில்லை… அதெல்லாம் வெறும்… உயிரற்ற ஜடங்கள்… நீ இல்லையென்றால் நான் உயிருள்ள பிணம் டாமிட்.. உனக்குப் பேசத் தெரியாவிட்டாலும் மற்றவர்களைப் பைத்தியமாக்கமட்டும் தெரிந்திருக்கிறது.” என்றெண்ணியவனுக்கு திடீர் என்று அது உறைத்தது.

 

‘ஒரு வேளை அவளுக்கு ஜெயன் மீது காதல் இருந்திருக்குமோ? அதனால்தான் தன்னை ஏற்கத் தயங்குகிறாளோ’ என்கிற கேள்வி எழ சீற்றம் எழுந்தது.

 

சினத்துடன் அவள் கரங்களைப் பற்றி, தன்னை நோக்கி இழுத்தவன்,

 

“நீ… அவனை விரும்பினாயா?” என்றான் சினத்துடன்.

 

அவளோ குழப்பத்துடன் சர்வாகமனைப் பார்க்க அந்தக் குழப்பத்திலேயே சர்வாகமன் அவளுடைய பதிலை புரிந்துகொண்டான். ஓரளவு கோபம் மறைந்து அந்த இடத்தில் நிம்மதி பரவியது. இருந்தாலும், அவளுடைய பதிலை அவள் விழிகலாலேயே அறிய வேண்டும் என்கிற ஆவல் தோன்ற,

 

“நான்… ஜெயனபை பற்றிக் கேட்கிறேன்… டிட் யு லவ் ஹிம்?” என்று அவளுடைய விழிகளுடன் தன் விழிகளைக் கலந்தவாறு சர்வாகமன் கேட்க, அவனை வெறித்துப் பார்த்தாள் நிரந்தரி. யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்கிறான்? வேகமாக அவனைத் தள்ளிவிட்டு சீற்றத்துடன் பார்த்தவள்

 

‘என்னைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டாய்? அவனை மனதில் நினைத்திருந்தால், உன்னை… உன்னோடு…’ என்று தன்னை மறந்து கூற முயன்றவள் அப்போதுதான் தான் என்ன கூற வந்தோம் என்பது புரியத் தடுமாறி எப்படியோ சமாளித்து ‘எனக்கு அவனுடைய பெயர் ஜெயன் என்பதை அறிந்து கொள்ளவே இரண்டு கிழமைகள் எடுத்தன. திருமணத்தின் போது மட்டும்தான அவனை நேருக்கு நெர் பார்த்தேன்… அப்படி இருக்கையில் அவனை எப்படி நான் விரும்பியிருப்பேன்…’ என்று குழறலாகத் தன் கரத்தை அடித்து விசுக்கித் தன் மொழியில் கூற, அது வரையிருந்த சந்தேகம் முழுதாக மறைந்து போனது.

 

உற்சாகம் பொங்க, சீற்றத்துடன் நின்றிருந்தவளை நெருங்கி, அவள் முகத்தைப் பற்றித் தன்னை நோக்கி நிமிர்த்தி, எல்லையில்லா நிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் விழிகளால் துலாவி,

 

“சாரிடா… உன் இதயத்தில் நான் குடியிருக்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்று நினைத்தேன்…” என்றவனை வெறுப்புடன் பார்த்தவள்,

 

‘நீயல்ல… வேறு எவனையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது… தயவு செய்து என்னை விட்டுவிடு. உனக்கு ஏற்ற ஒருத்தியாகத் தேடி மணந்துகொள்… கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்கிறேன்… என்னை நிம்மதியாக இருக்க விடு…’ என்பது போலத் தன் கரத்தை அடித்துக் கும்பிட்டவாறு கூற, சர்வாகமனுக்கு மீண்டும் சினம் ஏறியது.

 

அவளை விட்டு விலகி எழுந்து நின்றவன், அவள் இருக்கையின் கைச்சட்டத்தில் தன் இரு கரங்களையும் பதித்து, மேலும் அவளை நோக்கிக் குனிந்து,

 

“நிரந்தரி… நான் எத்தனை பொறுமையாக இருக்கிறேனோ அது உனக்குத்தான் நல்லது. இனியும் நீ இப்படிப் பேசி என்னை மிருகமாக்காதே… நீ விரும்புகிறாயோ, இல்லையோ… நீதான் என் மனைவி… நீ இல்லையென்றால் நான் இல்லை… அதைப் புரிந்துகொண்டு, என்னை ஏற்கப் பழகிக்கொள்… அட்லீஸ்ட் முயற்சிசெய்து பார் நிரந்தரி… என்னுள் நிரந்தரமாய் நீக்கமற இருப்பவள் நீ… அதே போல, உன்னுள்ளும் சர்வமாய் ஒலிக்கும் ஒரே மந்திரமும் நான்தான்…” என்றவன் குனிந்து அவள் நெற்றியில் மீண்டும் மென்மையாக முத்தம் பதித்துப் பின், அவள் தலையை மெதுவாகத் தட்டிவிட்டு

 

“இப்போது நீ சொன்னதற்குக் கட்டுப்பட்டு வெளியே செல்கிறேன்…” என்று விட்டுக் கதவைத் திறந்து வெளியேறியவன், பின் அவளைத் திரும்பிப் பார்த்து,

 

“இந்த இடத்தை விட்டுத்தான் வெளியேறுகிறேன்… உன்னை விட்டல்ல…” என்று அழுத்தமாகக் கூறிவிட்டுச் சென்று விட்டான்.

 

அத்தனை நேரமும் கனவுலகிலிருந்தது போல் தோன்றியது நிரந்தரிக்கு. அவன் பதித்த முத்தத்தின் ஈரம் நெற்றியில் மிச்சமிருக்க, தன்னை மறந்து அந்த இடத்தை வருடிக் கொடுத்தாள். இன்னமும் அவன் முத்தம் கொடுப்பது போன்ற உணர்வில் சிலிர்த்தவள், தன் உணர்வு தவறான பாதையில் போவது தெரிந்தது. ஆனாலும் அவளால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

 

கற்பனையின் உணர்வுகளைக் கடிவாளம் போட யாருக்கு சக்தியிருக்கிறது. தன்னை மறந்து அவன் விட்டுச் சென்ற முத்தத்தின் தித்திப்பில் தன்னை மறந்து லயித்துப் போனாள் அந்த தேவதை

What’s your Reaction?
+1
23
+1
8
+1
4
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!