Mon. Sep 16th, 2024

நீ பேசும் மொழி நானாக – 22/23

(22)

 

மறுநாட் காலை அவனது அறைக் கதவை யாரோ மெதுவாகத் தட்ட, வாரிச் சுருட்டியவாறு எழுந்தமர்ந்தான் சர்வாகமன். முதல்நாள் வீட்டிற்கு வரவே பத்து மணியையும் கடந்திருந்தது. கட்டிலில் விழுந்தவன்தான், அடித்துப் போட்டதுபோலத் தூங்கிப்போனான்.

 

தன் கரத்தால் முகத்தை அழுத்தித் துடைத்தவாறு, தட்டியவரை உள்ளே வரும் படி அழைத்தான். அவனது அறைக்குள் முதலில் வந்தவள் தாமரை. அவள் பின்னால் தயங்கியபடி நிரந்தரி நின்றிருந்தாள். அவளைக் கண்டதும் அவன் சோர்வு பறந்துபோக, முகம் பிரகாசமடைய, நிரந்தரியைப் பார்த்தவாறே,

 

“என்னம்மா… என்ன விஷயம்? திடீர் என்று இந்த அறைக்குள் தென்றல் காற்று குளிர்மையுடன் வீசுகிறதே… என்ன சமாசாரம்?” எனப் பெரும் மகிழ்ச்சியுடன், தன்னவள் மீது வைத்த பார்வையை விலக்காமல் கேட்டான் சர்வாகமன்.

 

“அண்ணா.! உங்களுக்குத் தொலைப்பேசி வந்திருக்கிறது. சித்தப்பா பேசுகிறார்கள்” என ‘கோட்லஸ்’ தொலைப்பேசியை அவனிடம் தாமரை நீட்ட,

 

“ஓ… அப்பாவா…” எனச் சிறுவன் போலத் துள்ளி படுக்கையிலிருந்து இறங்கியவன், தாமரையிடமிருந்து தொலைப்பேசியைப் பெற்றுத் தன் காதில் பொருத்த, இருவரும் நாகரீகமாக அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.

 

“ஹலோ… அப்பா! எப்படி இருக்கிறீர்கள்? ஹெள இஸ் அம்மா?” என்றான் குரலில் துள்ளலுடன்.

 

“வீ ஆர் ஓக்கே கண்ணா. நீ எப்படி இருக்கிறாய்? என்னடா…. ஊருக்குப் போனவன் எங்களை எல்லாம் மறந்து விட்டாயா? போன உடன் ஒருமுறை எங்களுடன் பேசினாய். அதன் பிறகு உன் சத்தத்தையே காணவில்லை… நம்மை மறக்கடிக்கும் அளவிலா ஊர் இருக்கிறது…?” என்று பாதி ஆதங்கத்துடனும், பாதி மகிழ்ச்சியுடனும் கேட்க,

 

“ஓ…. சாரிப்பா… ஜெஸ்ட் வன் வீக் தானேப்பா ஆச்சு… இங்கே நேரம் போவதே தெரியவில்லை. ஒவ்வொரு தடவையும் எடுக்கவேண்டும், உங்களுடன் பேசவண்டும் என்று நினைப்பேன். ஏனோ தட்டிப்போய்விடுகிறது.” என மன்னிப்பு வேண்டும் குரலில் கூறியவன், பின்,

 

“லீவிட்பா…! நீங்கள் சொல்லுங்கள்… எப்படி இருக்கிறீர்கள்… வியர் இஸ் மை பியூட்டிஃபுள் அம்மா” எனப் பேச்சை மாற்றி வினாவினான் சர்வாகமன்.

 

“ஷி இஸ் ஓக்கேடா… உன்னைப் பற்றிய கவலை தவிர வேறு எதுவும் நமக்கில்லை..” என்றவர், அனைவரின் சுகநலத்தையும் கேட்டுவிட்டு, அவர் சற்றுத் தயங்க, தன் தந்தை தன்னிடம் எதையோ கேட்க முயல்கிறார் என்பதைப் புரிந்துகொண்டான் தனயன்.

 

“என்னப்பா… என்னிடம் எதையோ சொல்லத் தயங்குகிறீர்கள் என்று எனக்குப் புரிகிறது… வட் இஸ் இட்…” என்று  அவன் நேரடியகாக் கேட்க,

 

“அது வந்து கண்ணா… உன் பெரியம்மாவின் ஒன்று விட்ட சகோதரரின் மகள் ரஞ்சனியை உனக்குப் பேசி வந்திருக்கிறார்கள்… எங்கள் எல்லோருக்கும் பரம திருப்தி. நீயென்ன யோசிக்கிறாய்?” என்று நேரடியாகக் கேட்கத் தன் காதில் பொருத்தியிருந்த தொலைப்பேசியை முகம் இறுக விலக்கி, சற்று நேரம் அமைதி காத்தான் சர்வாகமன்.

 

‘நேற்றுத்தான் பார்த்தாள்.. அதற்குள் என்னைப் பிடித்துவிட்டதாமா?’ என்று எரிச்சலுடன் எண்ணியவனுக்கு, ஒரு விநாடியில் பார்த்தவளையே மனதில் மனைவியாகத் தான் வரிந்துகொண்டது ஏனோ மறந்துபோனது.

 

தன் மகன் அமைதியாக இருப்பது புரிய,

 

“என்னப்பா…… ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறாய்!! நான் சொல்வது கேட்கிறதல்லவா…! டோன்ட் திங்க் அஸ் ராங். அவர்கள் மிகவும் விரும்பிக் கேட்கிறார்கள். எனக்குத் தட்டவும் முடியவில்லை. அத்தோடு ரஞ்சனி உன்னைச் சந்தித்திருக்கிறாளாம். அவள் திருமணம் முடிப்பதென்றால் உன்னைத்தான் முடிப்பேன் என்கிறாளாம். நான் என்ன செய்யட்டும். முடிவு உன்கையில்தான் ஆகமன்” என்றார் குலசூரியர்.

 

தந்தை சொல்வதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த சர்வாகமனின் புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டன. ‘இதற்கு என்ன பதிலைச் சொல்லப் போகிறோம்’ என அவன் உள்ளம் சிந்தித்தது.

 

இந்த விடயத்தை மறைத்துவைத்தால் தன்னுடைய வாழ்க்கை மட்டுமல்ல, நிரந்தரியின் வாழ்க்கையும் சேர்ந்து அழிந்து போகும். தவிர, நிரந்தரியைத் தவிர வேறு பெண்ணிற்குத் தன் வாழ்வில் இடம் இல்லை என்பதையும் அவன் நன்கறிவான். எப்போதோ சொல்லவேண்டியது… அதை இப்போதே சொல்லிவிட்டால், தேவையற்ற கற்பனைகளைத் தந்தையும் தாயும் வளர்த்துக்கொள்ள மாட்டார்கள்… என்பது புரிய, தன் தொண்டையைக் கனைத்தான்.

 

தான் சொல்லும் விடயத்தை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதும், அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா  என்கிற சந்தேகமும் தயக்கமும் ஒரு கணம் எழுந்தது. இருந்தாலும் இதை மறைத்து வைத்துப் பயனில்லை என்பது புரியத் தன் தொண்டையைச் செருமி,

 

“அப்பா… ஐ ஆம் சாரிப்பா… என்னால், அந்த ரஞ்சனியை மணம் முடிக்க முடியாதுப்பா…” என்றான்.

 

மறு பக்கம், ஒரு கணம் அமைதி காத்தது. பின்,

 

“சரிப்பா… நல்ல சம்பந்தம் என்று நினைத்தோம்… எங்களுக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்…” என்று தந்தை வேதனையோடு கூற,

 

“அப்பா… ஐ நீட் டு டெல் யு சம்பதிங்…” என்றான் சர்வாகமன்.

 

“சொல்லுப்பா…” என்று குலசூரியர் சோர்வுடன் கூட,

 

“ஐ வோஸ் ஃபெல் இன் லவ் வித் சம்வன்…!” என்றான் பட் என்று. அது வரை சோர்ந்திருந்த குலசூரியருக்குக் காதில் தேன்வந்து பாய்ந்ததுபோhல இருந்தது.

 

“வட்… என்னப்பா சொல்கிறாய்?” என்று அவர், தன் காதுகளையே நம்பாதவராகக் கேட்க.

 

“அப்பா… நான் இங்கே ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன்… மனசாரக் காதலிக்கிறேன்… அவளில்லாத வாழ்வில் எனக்கெதுவும் இல்லை என்கிற முடிவு எடுக்கும் அளவிற்கு அவளைக் காதலிக்கிறேன்… போதுமா?” என்று தெட்டத் தெளிவாக அழுத்தமாக அவன் கூற, மறுபக்கம் அதிர்ச்சியில், பேச்சிழந்து அமைதியாக இருந்தது.

 

“ரியலி? நீ ஒன்றும் விளையாட்டுக்குச் சொல்லவில்லைத்தானே… இப்போதும் என்னால் நம்ப முடியவில்லையேடா…” என்று தவிப்புடன் கூறிய குலசூரியருக்குத் தன் மகிழ்ச்சியை அடக்கப் பெரும் பாடுபடவேண்டியிருந்தது. அதேநேரம் தன் மனைவி அருகேயிருந்து ஆவலாக “என்ன என்ன?” குடைந்தெடுக்க,

 

“இரு ஸ்பீக்கரில் போடுகிறேன்…” என்று கூறிவிட்டு,

 

“கண்ணா, அம்மா பக்கத்தில்தான் இருக்கிறார்கள்.. ஸ்பீக்கரில் போடுகிறேன்… அவளும் இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கட்டும்…” என்றுவிட்டு ஸ்பீக்கரில் போட,

 

“என்னப்பா… இது என்ன உலகமகா அதிசயமா காதலில் விழுவதற்கு? இப்படி பில்டப் கொடுக்கிறீர்களே…” என்று இவன் கேட்க,

 

“எங்களுக்கு அது கிட்னசில் போடுமளவு அதிசய செய்திதான்… இப்போது சொல்லு கண்ணா… பெண் யார்? உனது தேர்வு நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும். உன்னைப் போல நன்கு படித்திருக்கிறாளா? ஆட்கள் சொந்தமா? இல்லை பெரியப்பாவிற்குத் தெரிந்தவர்களா? பெண்ணுடைய பெயர் என்ன?” என்று திலகா ஆர்வமாகக் கேட்க, சற்று அமைதி காத்தவன்,

 

“அம்மா… ஏட்டுக் கல்வியில் அவள் உயரத்தைத் தொடவில்லை என்றாலும், அனுபவக் கல்வியில் என்னை விட நிறையவே கற்றிருக்கிறாள்… “ என்றான் அவன் சற்று அழுத்தமாக.

 

“படிப்பை விடு… பெண்ணின் குடும்பத்தைப் பற்றிச் சொல்லு. அவள் பணக்காரியா? என்ன வருமானம் அவர்களுக்கு?” என்றார் தந்தை. மெதுவாகச் சிரித்த மகன்,

 

“நம்மிடம் வந்துவிட்டால், அவளும் பணக்காரிதான்பா… அவளிடம் போதிய பணம் இல்லாமல் இருக்கலாம், பட்… அவளிடம் மற்றவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும் அளவிற்கு, அன்பு, கருனை, இரக்கம்… இப்படி எத்தனையோ நல்ல குணங்கள் நிறையவே இருக்குப்பா… நான் சொல்வேனே, பார்த்த உடனே மனதில் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று… இவளைப் பார்த்த மறு விநாடி, மனசிலே பதிந்துகொண்டாள்… இவள் என்னவள் என்கிற எண்ணம் பார்த்த கணத்திலேயே தோன்றிவிட்டது… ஐ லவ் ஹெர்… அவள் இல்லாத வாழ்வில் எனக்கு எதுவுமே இல்லைப்பா… எனக்கு அம்மா போல ஒருத்தி மனைவியாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்… அம்மாவைப் போலவே ரொம்ப ரொம்ப நல்லவள்பா…” என்று கூற,

 

“யாரு கண்ணா அந்தப் பெண்…” என்று கேட்டார் திலகா.

 

“நமக்கு உறவுதான்மா. அப்பாவின் தங்கை சிவக்கொழுந்தின் மகள் நிரந்தரியைத்தான் நான் விரும்புகிறேன்.” என்றதும் மறு பக்கம், ஊசி விழுந்தாலும் கேட்கும் அளவிற்கு அமைதி நிலவியது. தன் மகன் யாரை விரும்புகிறான் என்பதை அறிந்ததும், இருவரின் உடல்களும் இறுகிக் கல்லைப்போலக் கடினமாக மாறின.

 

(23)

 

மறுபக்கம், எந்தச் சத்தமும் இல்லாமல், அமைதியாகிப் போக,

 

“அப்பா… ஆர் யு தெயர்?” என்று மகன் கேட்க,

 

“ஆகமன்! உனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது…? இது காதலா? இல்லை பரிதாபமா? பரிதாபம் வாழ்க்கைக்கு உதவாது. நீ ஒன்றை யோசிக்க வேண்டும். அவள் திருமணம் முடித்தவள். விதவை. அத்தோடு ஊமை. பேச்சுக்கும் கற்பனைக்கும் நன்றாக இருப்பது, செயற்படுத்தும் போது, நிறைய விழைவுகளைச் சந்திக்கவேண்டியதாக இருக்கும்… உனது அழகுக்கும், படிப்பிற்கும் எத்தனையோ பெண்கள் உன்னைத் திருமணம் முடிக்கக் காத்திருக்கிறார்கள். அதைவிட்டுவிட்டு சீர்திருத்தக் கல்யாணம் செய்யப்போகிறாயா” என்று கோபக் குரலில் குலசூரியர் கேட்டார்.

 

“அப்பா நான் என்ன டீன் ஏஜ் போய் என்று நினைத்தீர்களா சரி பிழை தெரியாமல் போவதற்கு? எனக்கு இருபத்தெட்டு வயசாகிவிட்டது…” என்று சுள்ளென்று கூறியவன், பின் தன்னைச் சற்று அடக்கியவனாக,

 

“லிசின்பா… காதல் என்பது எல்லா நிறைவையும் பார்த்து வருவதல்ல. மனசுக்கு யாரைப் பிடிக்கிறதோ அவளையே மனைவியாக அடைய நினைப்பதுதான் காதல். அப்படிப் பார்த்து வந்தால்… அது வியாபாரம்… எனக்கு நிரந்தரியை மிகவும் பிடித்திருக்கிறதப்பா. அவளோடு வாழும் காலம் சிறப்பாக இருக்கும் என்பது நிச்சயம். ஷி இஸ் அன் ஏன்சல்பா… அவளைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் எனக்கு மனைவியாக இந்த ஜென்மத்தில் வரமுடியாது…” என்று திடமாகக் கூற,

 

“மை ஃபுட்… சர்வாகமன்! நீ உன் நிலையில் நின்று பார்க்கிறாயே தவிர கொஞ்சமும் நம்முடைய நிலையில் நின்று பார்க்கிறாயில்லை. எங்கள் மருமகள் ஒரு விதவை என்றோ, இல்லை ஊமையென்றோ எல்லோரிடமும் சொல்ல முடியுமா. எத்தனை பார்ட்டி, எத்தனை விழாக்களுக்கு நாம் போக வேண்டியிருக்கும்… அவர்களுக்கு முன்னால் எப்படி தலை நிமிர்ந்து நிற்பது… இந்த உலகமே நம்மைப் பார்த்துச் சிரிக்காதா? நமது தகுதிக்கேற்ப ஒரு பெண்ணைப் பார்ப்பாய் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஒரு விதவையைத் திருமணம் முடிக்கிறேன் என்கிறாயே! இதற்காகவா இத்தனை படிப்புப் படித்தாய்? “ என்று ஒரு தந்தையாக ஏறி விழுந்தார் குலசூரியர்.

 

“அப்பா… அவள் வேறு யாரோ இல்லை… உங்கள் தங்கையின் மகள்… பெரியப்பாக்குத் தன் தங்கைமீது இருந்த அன்பில் கொஞ்சம் கூடவா உங்களுக்கில்லை?” என்று கேட்க,

 

“ராஜா… நான் உன் எதிர்காலத்தைப் பற்றிய பயத்தில் பேசுகிறேன்… நாளை இந்த உலகம் உன்னைப் பற்றி தப்பாகப் பேசக்கூடாதே என்பதற்காகப் பேசுகிறேன்… உனக்கு முன்னாடி மற்றைய உறவுகள் எல்லாம் பின்னால்தான்…” என்று கடுமையாகக் கூறினார் குலசூரியர்.

 

“அப்பா… இட்ஸ் இனஃப்… நான் வாழ்வது எனக்காகவே தவிர உலகுக்காக இல்லைப்பா… இன்று நம்மைப் பற்றி பேசுபவர்கள், நாளை இன்னொருத்தரைப் பற்றிப் பேசிக்கொண்டு போவார்கள்… லிசின் டு மி அப்பா… தகுதி என்பது, நாம் பார்ப்பதில் இல்லை… அது ஒருவரின் நடத்தையில் இருக்கவேண்டும்… ஆயிரம் கோடி கொடுத்தாலும், அவளுடைய குணத்திற்கு நிகராக யாரும் வரமாட்டார்கள்பா.” என்றவன், சற்று நேரம் தன்னை அமைதிப் படுத்தி, இனி தந்தையோடு பேசி வேலைக்காகாது என்பதைப் புரிந்தவனாகத் தன் தாயைத் துணைக்கழைத்து,

 

“அம்மா… எப்போதும் நமக்கு எது சரியென்று படுகிறதோ, அதைத் தயங்காமல் செய்யவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தவர்கள் நீங்கள். உங்கள் மகன் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டீர்கள் என்றால், இந்தத் திருமணத்திற்கு நீங்கள் சம்மதிக்கவேண்டும்… இல்லையென்றால்… நான் எப்போதும் உங்கள் மகனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்… பட் வன் கன்டிஷன்… ஒரு போதும் என் திருமணம் பற்றி என் முன்னால் நீங்கள் பேசக் கூடாது… உங்கள் சம்மதம் இல்லாமல் நான் திருமணம் முடிக்க மாட்டேன்மா… ஆனால் என் வாழ்க்கையில் ஒரே ஒரு திருமணம்தான், அது நிரந்தரியுடன் மட்டும்தான்” என்றான் அவன் முடிவாக.

 

குலசூரியரிட்கும் திலகாவிற்கும் தங்கள் மகன் பற்றி நன்கு தெரியும். அவன் ஒன்றை நினைத்தால் அதுதான் இறுதிவரை. அதை மாற்றுவது என்பது அந்தக் கடவுளால் கூட முடியாத காரியம். இருவரும் என்ன செய்வது என்று புரியாமல் கலங்கி நிற்க,

 

“அப்பா! ப்ளீஸ் பா… டோன்ட் சே நோ… ஐ நீட் ஹேர் பா… அவள் இல்லாமல்… நான் ஒன்றுமே இல்லைப்பா… அவளில்லையென்றால்… உலகமே எனக்கானதாக இருந்தாலும் அது இல்லாததுபோலத்தான்…” என்று தவிப்புடன் கூற, எப்போதுமே எதுக்குமே கெஞ்சாத மகன், முதன் முதலாகத் தன் வாழ்க்கைக்காக கெஞ்சுவதைக் கண்ட குலசூரியரும், திலகாவும் மனதளவில் உடைந்து போனார்கள்.

 

ஆதற்கு மேல் தங்கள் மகன் கெஞ்சுவது பிடிக்காமல்,

 

“இட்ஸ் ஓக்கேடா… உன்னுடைய உணர்வுகளை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது… பட்… எங்களுக்கு, உன் வாழ்க்கைதான் முக்கியம். உன் மகிழ்ச்சியைத் தவிர வேறு என்னடா எங்களுக்குத் தேவை… ஆனால் வாழ்க்கை என்பது விளையாட்டில்லை. வெற்றிகளையும், தோல்விகளையும் சமமாக ஏற்றுக்கொள்வதற்கு. விளையாட்டில் சறுக்கினால், எழுந்துகொள்ளலாம்… ஆனால் வாழ்க்கையில்… சறுக்கினால்…? தொலைந்து போன வாழ்க்கையையும், தொலைந்து போன காலத்தையும் ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது ஆகமா… அது மட்டுமில்லை… வாழ்க்கை என்பது வேறு இரக்கம், பரிதாபம் என்பது வேறு… இரக்கப்பட்டுக் கால்வைத்து விட்டு, நாளைக்குச் சுடுகிறதே என்று கைவிட முடியாது…” என்றார் திலகா தன் பங்குக்கு.

 

“ஐ நோ மா… நான் உங்கள் மகன்… இதையெல்லாம் யோசித்திருக்கமாட்டேன் என்றா நினைக்கிறீர்கள்?” என்றான் அவன் வேதனையுடன்.

 

“இல்லைடா… எல்லாவற்றையும் குழப்பி, உன் வாழ்க்கையைச் சின்னாபின்னப் படுத்திவிடுவாயோ என்கிற அச்சத்தில்தான் இதை சொல்கிறேன்… எங்களுக்கு இருப்பது நீ ஒருவன்தான்டா… உனக்கு ஒன்றென்றால், அதைத் தாங்கும் சக்தி எங்களுக்கில்லை… ராஜா… நாம் சிறுவர்களாக இருந்தபோது, பிச்சைக்காரர்களைக் கண்டால், நெஞ்சமெல்லாம் பதறும்… நம்மிடமுள்ள அரிசி எல்லாவற்றையும் அவனிடம் கொடுத்துவிடவேண்டும் என்று மனம் பரபரக்கும்… ஆனால், அதே விபரம் தெரிந்த பிறகு நம்மால் ஒரு சுண்டுக்கு மேல் பிச்சை போட மனம் வராது… வாழ்க்கையும் அப்படித்தான்… ஆரம்பத்தில் இருக்கும் எதார்த்தம் வேறு… விபரம் தெரிந்தபின்பு இருக்கிற எதார்த்தம் வேறு…” என்றவர், பின் கலங்கிய குரலில்,

 

“காதல் வேறு இரக்கம் வேறுகண்ணா. நீ ஆயிரம் விழாக்களுக்குப் போவாய்… போகும் போது உன் மனைவியாக அந்தப் பெண்ணை அழைத்துச் செல்வாய்… அப்போது உனக்கு ஈடாக அவளால் பேச முடியாது… நடந்துகொள்ள முடியாத… அப்போது அதிக அவமானங்களைச் சந்திக்கவேண்டும்… அந்த ஒரு விநாடி நீ அவளை வெறுத்தாலும், நீ அவள் மீது வைத்த காதல் பொய்யாகிவிடும்… அதை நீ நன்கு யோசிக்கவேண்டும்” என்றாள் அன்னை.

 

“அம்மா…. என்னைப் பற்றித் தெரிந்தே இப்படி பேசுகிறீர்களே… நான் எத்தனை பெண்களைச் சந்தித்திருக்கிறேன். எத்தனை பேருடன், தனித்திருந்திருக்கிறேன். எத்தனைபேர் என்னை விரும்பிக் கேட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் சலனப்படாத என்னுள்ளம், நிரந்தரியைக் கண்ட நொடியில் ஏன் தடுமாற வேண்டும்? அவளுடைய ஒற்றை விழிப் பார்வைக்காக நான் ஏன் ஏங்க வேண்டும்.? அவளைத் தூரத்தில் பார்த்ததுமே என் மனம் படபடக்கிறதே. அவளின் விரல் நுனி என் மேல் பட்டாலே என் உடல் சிலிர்க்கிறதே. அவளைத் தீண்டிய தென்றல் என்னைத் தீண்டினாலே என் உள்ளம் பரவசமாகிறதே அது ஏன்மா? இதற்குப் பெயர்தான் காதல் என்றால், ஆமாம் நான் அவளைக் காதலிக்கிறேன். என் உயிருக்கும் மேலாக! அவள் இல்லாத வாழ்வை என்னால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. இதற்குமேல் என் காதலை எப்படி உங்களுக்குப் புரியவைப்பது என்று எனக்குப் புரியவில்லையம்மா…” என்றவனின் குரல் சற்றுக் கனத்தொலித்தது.

 

“அந்த ரஞ்சனியைப் பற்றி உங்களுக்குத் தெரியாதம்மா… பணம், கல்வி, பதவி, அந்தஸ்து எல்லாமே இருக்கும்மா… ஆனால் குணம்? அன்று கோவிலில் இரக்கம் இல்லாது தன் வண்டியால் ஒரு சிறு குழந்தையை இடிக்கப் பார்த்தாள்… தன் மீது தவறிருந்தும், அந்தத் தாயின் மீது சர்வசாதாரணமாகப் பிழையைப் போட்டுத் தப்பித்தவள். அப்படிப் பட்டவளுடன் நிம்மதியாக வாழமுடியும் என்று நினைக்கிறீர்களா? தவிர, தெரியாத ஒருத்தியை மணப்பதை விட, தெரிந்த ஒருத்தியை மணந்து ஒரு நாள் என்றாலும் மகிழ்ச்சியாக வாழ்ந்திடலாமே” என்றான் தனயன் அழுத்தமாக.

 

“அது புரிகிறது கண்ணா… ஆனால், நிரந்தரியின் மீது நீ பரிதாபப்பட்டு…”

 

“பரிதாபப்பட்டா… நானா… நிரந்தரியைப் போல நான் எத்தனை பேரை சந்தித்திருப்பேன்… அத்தனை பேரையும் நான் கட்டிக்கொள்ளவேண்டும் என்று எனக்கு ஒரு போதும் தோன்றியதில்லையேம்மா… அவளைப் பார்க்கும்போதெல்லாம் இவள் என்னவள். எனக்குமட்டுமே உரிமையானவள் என்கிற எண்ணம் மட்டும்தான் தோன்றுகிறது. யாராவது அவளைத் தப்பாகப் பார்த்தாலே, அவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்கிற வெறியே தோன்றுகிறது… அவளைப் பிரிந்து வாழமுடியுமா என்று கூடத் தெரியவில்லையே.. நான் என்ன செய்யட்டும்.?” என்றான் குரலில் பெரும் வேதனை இழையோட.

 

அவன் குரலில் தாய்கூடத் தன் வேதனையைப் புரிந்து கொள்ள மாட்டாளா என்கிற ஏக்கம் நிறையவே இருந்தது. அவன் குரலை அவன் அன்னை புரியாமல் இல்லை. தாயறியாத சூழா? இருந்தாலும் எதார்த்தம் என்று ஒன்றிருக்கிறதல்லவா?

 

“இதோ பார் ஆகமா… உனக்கு அன்றே சொன்னேன். உனக்குப் பிடித்தவள், யாராக இருந்தாலும் அது எனக்கு மருமகளே. ஆனால் ஆகமா… ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறிவிடுகிறென்… அந்தப் பெண்ணைத் திருமணம் முடித்த பிற்பாடு, உங்கள் இருவருக்கும் இடையில் ஏதாவது ஒரு சின்னப் பிரச்சனை ஏற்பட்டால் கூட, இந்த அம்மாவின் முகத்தில் நீ விழிக்கக் கூடாது… எந்த சந்தர்ப்பத்திலும் நீ என்னிடம் வந்து நிரந்தரியைப் பற்றி முறையிடக்கூடாது. புரிந்ததா…” என இறுகிய குரலில் கூற அந்தக் குரலில் தாயின் அனுமதியைக் கண்ட சர்வாகமனுக்கு இறக்கையில்லாமல் வானில் பறப்பது போன்ற மகிழ்ச்சி தோன்றியது.

 

அன்னை சம்மதித்துவிட்டாரே… அது போதும் அவனுக்கு… தந்தையை அன்னை சரிக்கட்டிவிடுவார். மகிழ்ச்சியில் உள்ளம் பொங்க,

 

“தாங்க்ஸ் மா… தங்க் யூ சோ மச்… நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் தெரியுமா? அப்படியே வானத்தில் பறப்பதுபோல, ஓ மை காட்… தாங்க் யூ மா… தாங்க் யூ சோ மச்… அம்மா…..! ஐ ப்ராமிஸ் யு… நான் உங்கள் மகன். எந்த சந்தர்ப்பத்திலும் நிரந்தரியை நான் விட்டு விலகமாட்டேன். இது உங்கள் மீது ஆணை” என்றான் உறுதியாக. அவன் உறுதியைப் புரிந்துகொண்ட திலகா,

 

“குட்… எனக்கு இந்தத் திருமணத்தில் சம்மதம். நீ வரும் போது என் மருமகளையும் அழைத்துவா” என்று கூற, தான் ஒரு வைத்தியன் என்பதையும் மறந்து கட்டிலில் துள்ளிக் குதித்தவன்,

 

“ஐ… லவ் யு மா…” என்றவாறு தொலைப்பேசியிலேயே தன் முத்தங்களை வாரி இறைத்துவிட்டு, கட்டிலின் மீது விழுந்து உருண்டு புரண்டான்.

 

அவன் தாயின் சம்மதம் கிடைத்ததே அவனுக்கு இந்த உலகை வென்ற திருப்தி. திலகா எதற்கும் சட்டென்று முடிவு சொல்லமாட்டார். ஆர அமர யோசித்து, சரியான முடிவைத்தான் எடுப்பாள். அதனால் எப்போதுமே அவள் முடிவு தவறாகப்போனதே இல்லை. அதனால் அன்னையின் சம்மதமே, தன்னை வாழவைத்துவிடும் என்கிற உறுதியான நம்பிக்கையை அவனுக்குக் கொடுத்தது.

 

அங்கே கனடாவில்,

 

தொலைப்பேசியைத் தாங்கியில் வைத்த மனைவியை குலசூரியர் உற்றுப் பார்த்தார்.

 

“எப்படி திலகா, உன்னால் மட்டும் இதைச் சாதாரணமாக எடுக்க முடிந்தது. உன்னால் ஒரு விதவையை, ஒரு ஊமையை எப்படி மருமகளாக ஏற்க முடிகிறது” என்றார் நம்பமுடியாத தன்மையுடன்.

 

“இதில் மறுப்பதற்கு என்ன இருக்கிறது. நமக்கும் ஒரு பெண் இருந்து அவளுக்கு இந்த நிலை வந்திருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். நமக்குப் பணம் இருக்கிறது. அதனால் அவளுக்கு மறுமணம் செய்து வைப்பது சுலபமாக இருந்திருக்கும். பாவம் அந்தப் பெண் நிரந்தரி. துச்சமாக நினைக்கும் மாமியார், சுதந்திரம் இல்லாத வாழ்க்கை… பதினேழு வயதுப்பா… அவளுக்கு… வாழ்க்கையே தொலைந்து போய்விட்டதே… யார் மீட்டுக் கொடுப்பார்கள்… அது மட்டுமில்லாமல், எத்தனை காலத்திற்கு அந்தப் பெண் இந்தச் சிலுவையை சுமக்கப் போகிறாள்.” என்றவர், பின் திரும்பித் தன் கணவனைப் பார்த்து,

 

“இது கூட ஒரு விதத்தில் பிராயச்சித்தம் என்று கூட வைத்துக்கொள்ளுங்கள். நாட்டுச் சூழ்நிலையால் தொடர்பு விட்டுப் போயிருந்தாலும் கூட, உங்கள் சொந்தத் தங்கையின் மகளை அம்போ என்று விட்டுவிட்டு, இங்கே நாம் நிம்மதியாக இருந்தோம் அல்லவா? நாம் கொஞ்சமே கொஞ்சமாக முயன்றிருந்தால் கூட, அந்தப் பெண்ணிற்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருந்திருக்கலாம்… ஆனால் நாங்கள்… அப்படிச் செய்யவில்லையே… தொல்லை விட்டது என்று இருந்து விட்டோம்…” என்று பெருமூச்சுடன் சொன்னவர், பின் எதையோ யோசித்தவராகத் தலையை ஆட்டி,

 

“கடவுள் ரொம்க கறார் பேர்வழிப்பா… நாம் செய்யத் தவறிய கடமையை, நம்முடைய மகனை வைத்துச் செய்திருக்கிறார்… கடவுளால் போட்ட முடிச்சுப்பா… அதை ஏற்றுக்கொள்வதுதான், உங்கள் தங்கைக்கு நாம் செய்யும் பிராயச்சித்தம்… நம்மால் அந்தப் பெண்ணிற்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முடியுமானால், அதில் செய்வதில் தவறென்ன… அது மட்டுமா… நாமே வாய் கிழிய மறுமணம் அவசியம் என்று சொல்கிறோம்… நம்முடைய குடும்பத்திலேயே அப்படி ஒரு சந்தர்ப்பம் வரும் போது, தெரியாதது போல போக முடியுமா? என் மகனே அப்படியொரு நல்ல காரியத்தைச் செய்கிறான் என்றால், அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வோமே. எல்லாம் இருந்தும் இரக்கம் இல்லாத அந்த ரஞ்சனியை விட நிரந்தரி எத்தனையோ மடங்கு மேல். எனக்கென்னமோ சர்வாகமன் நிரந்தரியுடன் வாழும் காலம் மகிழ்ச்சியானதாகவே இருக்கும் என்று என் உள்மனம் சொல்கிறது.” என்று கூற, சற்று யோசித்த குலசூரியர்,

 

“எதை வைத்து அப்படிச் சொல்கிறாய் திலகு…” என்றார்.

 

தன் கணவனைப் பார்த்து மெல்லியதாகச் சிரித்த திலகா, “அவன் என் மகன்…” என்று விட்டு,  உள்நோக்கிச் செல்ல அது வரை, மனதில் அழுத்திய பாரம் சூரியனைக் கண்ட பனியாக விலகிப் போக, தன் மனைவியையே பெருமையாகப் பார்த்துக்கொண்டிருந்தார் குலசூரியர்.

 

‘இவளை என் மனைவியாக அடைய நான் எத்தனை புண்ணியம் செய்துவைத்திருக்கவேண்டும்’ என எண்ணியவர் சர்வாகமன்கமனை மனதில் நினைத்து “அனுபவி கண்ணா…. நன்றாக அனுபவி. என் வாழ்த்துக்கள் என்றும் உனக்குண்டு’ என்று மனதார ஆசீர்வதித்தார்.

What’s your Reaction?
+1
30
+1
7
+1
3
+1
1
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!