Mon. Sep 16th, 2024

நீ பேசும் மொழி நானாக – 2/3

(2)

 

தூக்கம் மீண்டும் வருவதாக இல்லை. கைப்பேசியைக் கட்டிலில் சுழற்றி எறிந்தவாறு படுக்கையை விட்டுத் துள்ளி எழுந்தான்.

 

வெறுங்காலுடன் ஜன்னலருகே வந்து அதன் திரையை விலக்க, அப்போதுதான் உதித்த அமரிக்கா நாட்டு மசசூசட்ஸ் மாநிலத்தின் சூரியனின் கரங்கள் அவன் முகத்தில் வேகமாகப் படர, சடார் என்று பட்ட ஒளியில் கண்கள் கூசத் தன் பலம் பொருந்திய கரத்தைத் தூக்கிச் சூரியனுக்கும், தன் விழிகளுக்குமாகத் திரையைப் போட்டுச் சற்று நேரம் அப்படியே நின்றான்.

 

விழிகள் அந்த வெளிச்சத்திற்குப் பழக்கப்பட, தன் கரங்களை மெதுவாக விலக்கினான் சர்வாகமன். திரை விலகியதும் தெரியும் சிற்பம் போல, அந்தச் சூரிய வெளிச்சத்தில் அவனுடைய கண்கள் மெதுவாக வெளியே தெரியத் தொடங்கின.

 

அடேங்கப்பா… கண்களா அவை…? தெளிந்த இளந்தேனின் நிறத்தில் இளம் பச்சையும், மஞ்சளுமெனக் கலந்த கண்மணிகள் அவன் பிடிவாதத்தையும் மன அழுத்தத்தையும் காட்டியது. கண்மணிகளின் நிறத்தை மேலும் மெல்லியதாகக் காட்டிய அதைச் சுற்றியிருந்த கடும் கரிய மண்ணிற வளையம் அவனுடைய கனிவை எடுத்துக் காட்டப் போதுமானதாக  இருக்க, அதற்குள் தெளிவாகத் தெரிந்த கரிய நிற சிறிய விழித்திரை அவனுடைய அறிவுக் கூர்மையையும், ஆழமான சிந்தனையையும் எடுத்துக்காட்டியது. அதைத் தாங்கியிருந்த விழி வெண்படலத்தில் இழையாய் ஓடிய சிவந்த நரம்புகள், அவன் கோபம் கொண்டால், இலகுவில் அடக்க முடியாது என்பதையும் சொல்லாமல் சொல்லின.

 

அவனுடைய அந்த ஒற்றைப் பார்வையை நிச்சயமாக எதிராளிகளால் அரை விநாடிகளுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது. அகலமில்லாத, சற்று நீண்ட அந்த வீரியம் நிறைந்த விழிகளை நேருக்கு நேர் பார்க்காமல், கடைக்கண்ணால் பார்க்கும் பெண்களே அதிகம். ஒரு நாள் இரவு தம்முடன் தங்குமாறு கேட்க வரும் வெள்ளையினப் பெண்கள், அந்த விழிகளைக் கண்டதும், தம் எண்ணங்களை மாற்றிச் சென்றுவிடுவார்கள். அத்தனை அழுத்தமும், ஆதிக்கமும் இருக்கும் அவற்றில். அவன் சும்மா பார்த்தாலே, தவறு செய்யாவிட்டாலும், தவறு செய்ததுபோலக் குன்றிப்போய்விடுவார்கள். அவனுடைய நோயாளிகள், குறிப்பாக வலியில் திண்டாடுபவர்கள், சர்வாகமனிடம் செல்லவே விரும்புவார்கள். அவனுடைய விழிகளைக் கண்டால், வலி கொஞ்சநேரமாவது மறந்து போகும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

 

கரிய சுருண்ட குழலும், அறிவைப் பறைசாற்றும் அகன்ற நெற்றியும், தடித்த கனத்த புருவங்களும், கோபத்தை எப்போதம் தத்தெடுத்து வைத்திருக்கும் கூரிய செதுக்கிய நாசியும், அழுத்தமான ஆனால் எப்போதும் மெல்லிய புன்னகையைச் சிந்தும் உதடுகளும், இறுகிய சற்றுச் சதுர முகமும் மன்மதனே பொறாமை கொள்ளும் கம்பீரத்துடன் நின்றிருந்தான் அந்த ஆண்மகன்.

 

கடும் உடற்பயிற்சிகளால் இறுகியிருந்த அவனுடைய உடலைக் காண்பதற்கே பெண்கள் கூட்டம் அலை மோதும். சற்று அகன்ற தோள்கள். அதிலே இரண்டு சிங்கங்கள் குறுகிப் படுத்ததுபோல உருண்டுதிரண்ட நரம்போடிய, தசைகள். அடர்ந்த முடிகளுக்கு மத்தியில் மறைந்திருந்தாலும், சிக்ஸ் பாக் தெளிவாகத் தெரிந்த ஒட்டிய இறுகிய வயிறு. இரண்டு தூண்களைப் பக்கம் பக்கமாக வைத்த, தடித்த தசைகளைக் கொண்ட தொடைகள். பலம் பொருந்திய பொது நிறம் கொண்ட கால்கள். நகக் கண்ணில் கூட மாசில்லாத பாதங்கள்… சுருங்கச் சொல்வதாக இருந்தால், தலை உச்சி முதல், கால் நக இடுக்கு வரையும் செதுக்கி வைத்த, கிரேக்கச் சிலை  போல இருந்தான் அந்த வேந்தன்.

 

சர்வாகமன் குலசூரியர். கனடாவில் எண்ணுக்கணக்கற்ற சொத்துக்கு ஒரே வாரிசு. ஆறடி மூன்றங்குல உயரம். நாள் தவறாமல், இரண்டு மணி நேரங்கள் உடற்பயிற்சியில் செலவிடுவதாலும், கால் பந்தில் அதீத வெறி இருந்ததாலும், தற்காப்புக் கலையில் பிளாக் பெல்ட் எடுத்தது மட்டுமல்லாமல், பல போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவன் என்பதாலும், பணத்தில் குளிப்பவன் என்பதாலும், அத்தனை பெண்களினதும் கனவு நாயகன். ஒரு இரவை அவனுடைய கைவளைவுக்குள் கழித்துவிட வேண்டும் என்று ஏங்காத பெண்களே இல்லை.

 

ஆனாலும் தாயின் வளர்ப்புக்கு இன்றுவரை பங்கம் ஏற்படுத்தாதவன். அது அவனைப் பெற்றவளுக்கு கொடுக்கும் நன்றிக்கடனாக நினைப்பவன். என்னதான் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தாலும், சிறு வயதில் தாய் போதித்த கலாச்சாரம் என்னும் கட்டுக்கோப்பில் மூழ்கி முத்தெடுத்தவன். எந்தப் பெண்களின் வலையிலும் சிக்காதவன். உடலைப் போலவே உள்ளத்தையும் இறுக்கத்துடனும், தெளிவுடனும் தூய்மையாகவும் வைத்திருப்பவன். எதற்கும் தலைவணங்காதவன். பயம் கூட அவனிடத்தே பயப்படும். படிப்பதில் அலாதி காதல் கொண்டவன். அதனாலேயே கல்வியிலும் சிகரத்தைத் தொட்டவன்.

 

அறிவில் கடல். அவன் மருத்துவன் என்பதாலோ என்னவோ, இலகுவில் கோபம் அவனை அண்டாது. மிக மிகப் பொறுமைசாலி. எதார்த்தம் நிறைந்தவன். ஆனால் தானாக வரும் வம்புச் சண்டையை விடவும் மாட்டான். சாது மிரண்டால் காடு கொள்ளாதே.

 

நான்கு வருடத்தில் முடிக்கவேண்டிய உயிர் அறிவியலை மூன்றே வருடத்தில் முடித்து அதே பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் இதய நிபுணனாக, அதுவும் தங்கப்பதக்கத்துடன் வெளியேறிய ஒரே தமிழன்.

 

அதே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவில் பகுதிநேர பேராசிரியராகவும், முழு நேர மருத்துவனாகவும், அவனுடைய இருபத்தெட்டாவது வயதிலேயே பணியாற்றுபவன். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் என்று கேட்ட தாய் என்பதையும், மகன் தந்தைக்காற்றும் உதவி அவையத்து முந்தியிருப்பச் செயல் என்னும் பொன்மொழிகளை மெய்ப்பித்தவன்.

 

இத்தகைய ஆண்மகனை மணக்க யாருக்குத்தான் பிடிக்காது? ஆனால் இவனுக்குப் பிடிக்கவேண்டுமே. இவனுக்குரிய ரதி எங்கே எப்படியிருக்கிறாளோ யாரறிவர்.

 

தன்னை மறந்து, தன் காந்த விழிகளால் அதிகாலையை ஆர்வத்தோடு பார்க்க, எப்போதும் போல, குழம்பிய மனம் தெளிந்து கொண்டது. சூரியனின் ஒளி முகத்தில் பட்டபோது அளவில்லா மகிழ்ச்சி அவனையும் மீறி ஏற்பட்டது.

 

பின் தன் விழிகளை மூடிக் கரங்களைக் குவித்து வணங்கியவன், முதலில் சூரிய நமஸ்காரத்தைத் தொடர்ந்தான்.

 

இது அவன் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டது. காலை எழுந்ததும், என்ன அவசர காரியம் இருந்தாலும், குறைந்தது இந்த சூரிய நமஸ்காரத்தைச் செய்துவிடவேண்டும். இது எழுதப்படாத சட்டம்.

 

அவன் ஒவ்வொரு முறையும் வளைந்து எழுந்தபோது, அவனுடைய உடல் தசைகள் மேலும் முறுக்கிக்கொண்டு, நரம்புகளைப் புடைக்கச் செய்ய, இதர உடல் பயிற்சிகளையும் முடித்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான் அந்தக் கலியுக அர்ச்சுனன்.

 

(3)

 

அதிகாலை ஆறு மணிக்கே வீடு முழுவதும் பரபரப்பாக இருந்தது. இன்று சர்வாகமன் கனடாவிலிருந்து வருகிறானாம். அமரிக்கா ஜனாதிபதி வந்தால் கூட இத்தனை வரவேற்பு இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். எப்போதுமே தாமதமாக எழும் வள்ளியம்மை கூட இன்று அதிகாலையில் எழுந்து அசையமாட்டேன் என்று அடம்பிடித்த உடலை அசைத்து அசைத்து வேலையாட்களைத் தன் வாயால், உண்டு இல்லையென்று ஆக்கிக்கொண்டிருந்தாள்.

 

இருக்காதா…! வருவது சாதாரண ஆளா என்ன? கனடாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் ஒருவரான குலசூரியரின், ஒரே வாரிசு, பிரசித்தி பெற்ற இதய அறுவைசிகிச்சை நிபுணன், டாக்டர் சர்வாகமன் அல்லவா வருகிறான். அவனை நன்கு உபசரிக்காவிட்டால், வள்ளியம்மையை அந்தக் கடவுள் மன்னிப்பாரா என்ன?

 

“ஏய் வேலா எங்கே போய்விட்டாய்? அறிவு கெட்டவனே… இந்த மேஜையை அங்கே வைக்கும்படி சொல்லியிருந்தேனே… செய்தாயா? உனக்கு மூளைக்குப் பதில் களிமண்ணையா கடவுள் வைத்திருக்கிறான். அப்படி என்ன உனக்குத் தலைபோகும் அவசர வேலை. ஐயோ இதுகளை நான் வைத்துக்கொண்டு படும் பாடு…. கடவுளே” என்றவாறு பரபரப்புடன், ஒரு துரும்பைக் கூட அசைக்காமல் உள்ளே வருவதும், வெளியே போவதுமாக  இருந்தாள் வள்ளியம்மை.

 

அந்த நேரம் பார்த்து, ஒரு பக்கத்தில் கொஞ்ச ஆடைக் குவியல் போடப்பட்டிருக்க, அது போதாதா வள்ளியம்மைக்கு, சினத்துடன், எட்டு ஊருக்குக் கேட்கும் குரலில்

 

“நிரந்தரி…” என்று அலற, அப்போதுதான், கிணற்றடியில், துவைப்பதற்காகப் போட்டிருந்த ஆடைகளை அலம்புவதற்காக வாளியில் தண்ணீர் அள்ளிக்கொண்டிருந்தவளுக்குத், தன்னுடைய பெயர் ஏலமிடுவது கேட்டது. அந்தக் குரலில் தெரிந்த ஆங்காரத்தில், பதறித் துடித்துத் தன் கரங்களிலிருந்த, கயிற்றைக் கை விட, வாளி சரசர என்ற கிணற்றிட்குள் விழத் தொடங்கியது.

 

‘ஹா…’ என்கிற சிறு அலறலுடன், பாய்ந்தவள், முழுக் கயிறும் கிணற்றிற்குள் விழுவதற்குள் பற்றி, அவசர அவசரமாகக் கயிற்றை மேலே இழுத்து, வந்த வாளியைத் தூக்கி, ஓரமாக வைத்துவிட்டு, நிமிர்ந்தாள் அவள்.

 

சுருண்டு இடைக்கும் கீழ் தழுவிய அடர்ந்த கார்மேகக் கூந்தல். பிறை நெற்றியில் மெல்லிய திருநீற்றுக் குறியுடன், மாறன் இழுத்த வில்லென, வளைந்து நின்ற அடர்ந்த புருவங்கள். உயிர்ப்பைத் தொலைத்தாலும், கவர்ச்சி குறையாத, காதுவரை நீண்ட பெரிய கரிய மணிகளைக் கொண்ட கருவிழிகள் கனிவை மட்டும் கசியவிட்டுக்கொண்டிருந்தன… மெல்லிய கூர் நாசியில் எப்போதோ மூக்குத்தி குத்திய அடையாளம். காமன் கண்டால், இழுத்துச் சுவைக்கத் துடிக்கும், சிவந்த ஈரப்பற்றுக்கொண்ட அதரங்கள். சங்குக் கழுத்தில், எழுந்தோடிய நரம்பொன்று வலதுபக்கமாக மெல்லிய கோடாகத் தெரிய, அதன் கீழ் தாராளமாகவே பிரமன் ரசித்து ரசித்துப் படைத்த பெண்மையின் எழிலைத் தாங்கி நின்ற மெல்லிடை. சேலை உயர்த்திச் செருகியிருந்ததால், பளீர் என்று மின்னிய, வாளைத்தண்டுக் கால்கள். இவள் படைக்கப்பட்டாளா வடிக்கப்பட்டாளா என்று ஐயுறும் அந்த அழகை ஆராதிக்கக் காலத்திற்குக் கொடுத்துவைக்கவில்லையோ?

 

அவசரமாக வள்ளியம்மையின் அழைப்பில், செருகியிருந்த சேலையை இழுத்துவிட்டவாறு, ஈரமாகிவிட்டிருந்த கரங்களை, ஏற்கெனவே ஈரமாகவிட்டிருந்த சேலையில் துடைத்து, மேலும் கரத்தை ஈரமாக்கியவாறு, வள்ளியம்மையை நோக்கி ஓடினாள் நிரந்தரி.

 

“ஏய் நிரந்தரி…… எங்கே போய்த் தொலைந்தாய்? சொல்லும் வேலையைச் செய்ய முடியாமல் அப்படி என்ன வெட்டி முறிக்கும் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்… பாத்திரம் கழுவச்சொன்னேனே… கழுவியாகிவிட்டதா?” என்று சீறியவருக்கு, தலை கலைந்து, அதீத வேலையால் சோர்ந்துபோயிருந்த முகத்தில் பரிதவித்துத் துடித்த விழிகளைக் கண்டும் சிறிதும் மனம் கனியவில்லை.

 

அவளுக்கு முன்னால் நின்றவளைக் காணும்போது, சீற்றம் அதிகரித்ததேயன்றி சற்றும் குறையவில்லை.

 

வள்ளியம்மையின் கேள்விக்கு அவசரமாகத் தலையை ஆட்டி ஆம் என்றவளை அலட்சியமாகப் பார்த்து, அங்கு குவித்திருந்த ஆடைகளைச் சுட்டிக் காட்டி,

 

“என்ன இது?” என்றார் சற்றும் அடங்கா சினத்துடன்.

 

“இது எப்படி இங்கே வந்தது? கொஞ்சத்துக்கு முன்புதானே அனைத்தையும் எடுத்துச் சென்றாள்… இதை யார் போட்டிருப்பார்கள்? ” குழப்பத்துடன் அவள் தவிக்க,

 

“ஏன்டி உனக்கு அறிவில்லை? இத்தனை ஆடைகளும் இங்கே போட்டிருக்கிறதே. இது விருந்தினரின் கண்ணில் பட்டால் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்கிற அறிவு வேண்டாம். எனக்கும் வந்து சேருகிறது…. பார் சே… எல்லாம் அந்த மனுஷனைச் சொல்லவேண்டும். இதோ பார்… உனக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள்தான் கொடுப்பேன்.  அதற்கிடையில் இந்த இடம் சுத்தமாக இருக்கவேண்டும்… புரிந்ததா?” எனக் காளியவதாரம் எடுத்து உள்ளே சென்றவளை வேதனை நிறைந்த விழிகளுடன் பார்த்தாள் அந்தப் பேதை.

 

பேசுவதற்கு வாயைத் திறந்தவள், முடியாமல் மூடிக்கொண்டாள். அவளால் பேச முடியாது… பேசவும் கூடாது… ஒரு பெருமூச்சுடன் திரும்பிக் குவிக்கப்பட்டிருந்த ஆடைகளைப் பார்த்தாள் .

 

அவளுக்கு இங்கே அவை துவைக்கப் போடப்பட்டதே தெரியாது.

 

விரைந்து சென்று யாருடையது என்று எடுத்துப் பார்த்தாள்.

 

“அட தாமரையுடையது…” இந்த வீட்டின் கடைக்குட்டி, இளவரசியுடையது… இங்கே போட்டுவிட்டு, இவளிடம் கூற மறந்துவிட்டாள் போலும். வேகமாக அவற்றை வாரித் தன் கரங்களில் எடுத்துக்கொண்டு, கிணற்றடிப் பக்கம் போக முயலுகையில், திடீர் என்று பின்புறமாக ஒரு வெண்ணிறக் கரங்கள் அவளை இறுக அணைத்துக் கொண்டன.

 

அக் கரங்களைக் கண்டே அணைத்தது யார் என்பது புரிந்தது. உதடுகளில் மென்னகை சிந்த, முகத்தை மறைத்த ஆடைகளை முகம் கொண்டே பதியவைத்தவாறு திரும்பிப் பார்க்க, மாயக் கள்வன் கண்ணனின், குறும்புப் புன்னகையுடன், சிரித்துக்கொண்டிருந்தாள். பதினாறே வயது நிரம்பிய தாமரை.

 

“இப்படிச் செய்யாதே…” என்று ஆடைகளுக்குள் மறைந்திருந்த விரல்கள் அசைத்துக் கூறியவளை அதிகாரமாக ஏறிட்ட தாமரை,

 

“ஏன் அண்ணி… ஏன் செய்யக் கூடாது. என் அண்ணி, என் உரிமை என் விருப்பம்… கட்டிப்பிடிப்பேன், முத்தம் கொடுப்பேன்…” என்று உரிமையோடு கூறியவள், நிரந்தரி எதிர்பார்ப்பதற்கு முன்பாகவே அவள் கன்னத்தில் ‘ப்ச்’ என்று ஒரு முத்தம் வைக்க, குளிர்ந்துபோனாள் நிரந்தரி. ஆனாலும் முகத்தில் கடுமையைக் காட்டி,

 

“நீ இப்போது பெரியவள். பக்குவம் தெரிந்து நடக்க வேண்டும். உன் அம்மா கண்டால் உன்னையும் என்னையும் ஒரு கை பார்த்துவிடுவாள்” என்று தனக்குரிய வகையில் கூற,

 

“ஒ… அம்மாவா… அவர்களை விடுங்கள்… அவர்கள் பேச்சை யார் கேட்பார்கள்…  ஏன் அண்ணி, அம்மா படிக்கும் காலத்தில், பாடம் படிப்பதற்குப் பதிலாக, எப்படித் திட்டுவது என்று படித்திருப்பார்களோ… என்னமா திட்டுகிறார்கள்… பேசாமல் திட்டுவதில் பிஎச்டி எடுத்திருக்கலாம்” என்று அங்கிருந்த மேசையில் பாய்ந்தேறி அமர்ந்து, காலையாட்டியவாறு கிண்டலுடன் கூற, தன்னையும் மீறி மெல்லிய நகைப்பைச் சிந்திய நிரந்தரி,

 

“அம்மாவை அப்படித் திட்டாதே… அது தவறு.” என்று மறுப்பாகத் தலையை ஆட்ட,

 

“இது நாள் வரைக்கும், நம்மைத் திரும்பிக் கூடப் பார்க்காத ஒருத்தனுக்காக, அம்மா செய்யும் அலப்பறை தாங்க முடியவில்லை அண்ணி… இருந்து பாருங்கள்… பொத்தான் கூட போட முடியாது சைசில், குனியக் கூட முடியாத நிலையில், சதைகள் பிதுங்கப் பிதுங்க, சோ ஹாட்… சோ டேர்ட்டி அப்படி என்று ஏதோ தேவலோகத்திலிருந்து வந்தவன் போல பில்டப் பண்ணவில்லை… என்னோட பெயரை லோட்டஸ் என்று மாற்றிவிடுகிறேன்… அவனுக்குப் போய், இத்தனை வரவேற்பு… முடியவில்லை…” என்று பின்னால் கரங்களை வைத்து சாய்ந்தவாறு தலையை ஆட்டி ஆட்டித் தாமரை கூற,

 

“தெரியாதவர்களைப் பற்றித் தப்பாக பேசக்கூடாது தாமரை… இப்படித்தானே நம்மையும் மற்றவர்கள் சொல்வார்கள்…” என்று தன் பாணியில் கூறிவிட்டுக் கீழே விழுந்திருந்த ஓரிரண்டு ஆடைகளைச் சிரமப்பட்டுக் குனிந்து, சேகரித்து எழும் போது, உடனே அவள் கைகளிலிருந்த அத்தனை உடைகளையும் தட்டிவிட்டு நிமிர்ந்து நின்று முறைத்தாள் தாமரை.

 

“இதோ பாருங்கள் அண்ணி…! நீங்கள் தானே சொன்னீர்கள் நான் வளர்ந்து விட்டேன் என்று. என் உடைகளை நானே துவைக்கிறேன். ஏற்கெனவே ஏகப்பட்ட வேலைகள் செய்துவிட்டீர்கள். இப்போது இதைத் துவைத்து, ‘உடுப்பு துவைத்து இடுப்பு உடைத்தாள் நிரந்தரி’ என்கிற செய்தியைப் பேப்பரில் வரவழைக்கப்போகிறீர்கள்?” என்று கூறியவாறு, தொப்பென்று மேசையிலிருந்து இறங்கித் தன் ஆடைகளைத்  சேகரிக்கத் தொடங்கினாள்.

 

தன் முன்னே நின்றிருந்த அந்தப் பதினாறு வயது சிட்டைக் கனிவுடன் பார்த்த நிரந்தரி, தன்னை மறந்து அவள் கன்னத்தை வருடிக் கொடுத்தவாறு,

 

“கொடு… ஐந்து நிமிடங்களில், நான் துவைத்துக் காயப்போட்டு விடுவேன்…” என்பதுபோலத் தன் கரத்தை நீட்ட,

 

“மூச்… நானே துவைக்கிறேன்…” என்றவள் பின் தன் அண்ணியின் காதருகே குனிந்து, “தண்டத்திற்குச் சலவை செய்யும் இயந்திரத்தை அம்மா வைத்திருக்கிறார்களே… எதற்கு சும்மா இருக்கிறது… இன்று அதில்தான் துவைக்கப் போகிறேன்…” என்றவளைப் பயத்துடன் பார்த்து, மறுப்பாகத் தலையை ஆட்டி, ஏதோ சொல்ல வர,

 

“அம்மாக்கு ஏன்தான் இப்படிப் பயப்படுகிறீர்களோ… கவலையை விடுங்கள்… நானாச்சு அம்மாவாச்சு…” என்று கூறிவிட்டுத் திரும்பியவள், பின் நின்று திரும்பி, தன் அண்ணியைப் பார்த்து,

 

“ஏன் அண்ணி….! உங்களுக்குக் கோபமே வராதா? உங்களை அம்மா எவ்வளவு திட்டினாலும் நீங்கள் மௌனமாக இருக்கிறீர்களே. திருப்பி இரண்டு வார்த்தைகள் திட்டினால் குறைந்தா போய்விடுவீர்கள்?” என்ற சலிப்புடன் கேட்க, அவளை அதிர்ச்சியுடன் பார்த்தாள் நிரந்தரி.

 

‘உன் அம்மாவையா? நானா? உலகம் தலைகீழாக மாறிவிடாது? நடக்கும் காரியமா. என்று தனக்குள் எண்ணிக்கொண்டவள் உதட்டிலே சிறு புன்னகையை மலரவிட்டு, எதுவுமே பேசாது திரும்பிச் செல்ல முயல, ‘எப்போது கேட்டாலும் இதையே பதிலாகச் சொல்லுங்கள்’ என்று சலித்தவாறு முணுமுணுத்த தாமரை

 

“அண்ணி, எப்போதும் காலம் ஒரே போல் இருப்பதில்லை… இருந்து பாருங்கள்… உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி வரத்தான் போகிறது…” என்று அவள் கூற, நிமிர்ந்து பார்த்த நிரந்தரியின் விழிகளில் கண்ணீர் தேங்கியிருந்தது.

 

தன் நாத்தனாரை நெருங்கியவள், அவள் தலையை வருடிக் கொடுத்து, “என்னையிட்டு எனக்குக் கவலையில்லை தாமரை… நீ… நீ மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்… அதுதான் என் வேண்டுதல் பிரார்த்தனை எல்லாமே…” என்று அசைவில் கூறிவிட்டு உள்ளே சென்றவளுக்குத் தன் வேதனையை அடக்க சற்று நேரம் தேவைப்பட்டது.

What’s your Reaction?
+1
23
+1
10
+1
1
+1
0
+1
0
+1
1

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!