Mon. Sep 16th, 2024

நீ பேசும் மொழி நானாக – 11

(11)

 

சூரியபிரகாஷ் நடந்த கதையைக் கூறிக் கூறியே, சர்வாகமனைத் தோட்டத்திற்கு அழைத்து வந்திருந்தான். அங்கிருந்த கல்லிருக்கையில் அமர்ந்தவன், அருகேயிருந்த மரத்தில் சாய்ந்தவாறு,

 

“இப்படித்தான் அண்ணியின் பேச்சு போனது அண்ணா…” என்றான் பெரும் வலியுடன்.

 

அது வரை சூரியபிரகாஷ் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த சர்வாகமன் எதுவும் பேசாது அப்படியே அமைதியாகக் கொஞ்ச நேரம் எங்கோ வெறித்தவாறு நின்றிருந்தான். அவனால் எதையும் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை. ஏன் எதையுமே அவனால் நம்ப முடியவில்லை.

 

‘பதினேழு வயதிற்குள் எத்தனை இழப்புக்கள்… சே… தந்தையை இழந்து தாயை இழந்து… தன் ஊரையிழந்து வீட்டை இழந்து உற்றம், சுற்றம் இழந்து… கடைசியாகத் தன் பேச்சையும் இழந்து, யாருடைய ஆதரவும் இல்லாமல், தன் வேதனையைச் சொல்லமுடியாமல், மெல்லவும் முடியாமல், எப்படிப் பரிதவித்திருப்பாள். தனி ஒருத்தியாக இந்த வேதனைகளை எப்படித் தாங்கினாள். கடவுள் என்றொருத்தன் இருக்கிறானா இல்லையா?’ நினைக்கும் போதே சர்வாகமனால் தாங்கவே முடியவில்லை.

 

அவனையும் மீறி அவனுடைய கரங்களில் மெல்லிய நடுக்கம். தன் முடியை வலது கரத்தால் வாரிக் கொடுத்தவன், தாங்க முடியாத பதற்றம் ஏற்படும் போது, வழமையாகச் செய்வது போலத் தன் விழிகளை இறுக்கி அதனால் ஏற்பட்ட புருவச் சுழிப்புக்கு மத்தியில் தன் சுட்டு விரலை வைத்து அழுத்திக் கொடுத்து,

 

“அவள் தம்பிக்கு என்ன நடந்தது என்று இன்னும் தெரியாதா பிரகாஷ்…” என்று வலியுடன் கேட்டான். தன் உதட்டைப் பிதுக்கிய சூரியபிரகாஷ்,

 

“ப்ச்.. இல்லையண்ணா… இன்று வரை அவளுடைய தம்பிக்கு என்ன நடந்தது, அவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா எதுவுமே தெரியாது, தன் தம்பி வருவான் வருவான் என்று நம்பியிருந்தவளுக்கு இந்த நிமிடம் வரை ஏமாற்றம்தான் கிடைத்திருக்கிறது.” என்றதும், அவளுடைய ஏமாற்றத்தைத் தன் ஏமாற்றம் போல உணர்ந்தவன், மெல்லியதாக நடுங்கிய தன் வலக்கரத்தைத் தூக்கி, சுண்டு விரலால், தன் கீழ் உதட்டை, மேல் பற்களுக்குள் தள்ளி அவ் உதட்டைக் கடிக்க, அவனுடைய பதற்றத்தைக் கண்ட சூரியபிரகாஷ்,

 

“என்னண்ணா… ஆர் யு ஓக்கே…” என்று நடுங்கிக்கொண்டிருந்த அவன் கரத்தைப் பர்த்துக் கேட்டான். அப்போதுதான் அவன் நடுங்கும் தன் கரங்களையும், வேகமாகத் துடிக்கும் தன் இதயத்தையும் உணர்ந்தான்.

 

அவனுக்குத் தன்னை எண்ணியே பெரும் வியப்புத் தோன்றியது. எனக்கு என்னவாகிவிட்டது ? நானா பதற்றப்படுகிறேன்… ஹெள? எப்போதும், யாருக்காகவும் எதற்காகவும் கலங்காத நான், நேற்றுக் கண்ட ஒருத்திக்காகப் பதறுகிறேனே ஆம் ஐ க்ரேசி?’ என்று தன்னைத் தானே கேள்விகேட்டவன், வேகமாகத் தன் கரத்தை மடக்கியவாறு,

 

“யா… வை நாட்… ஐ ஆம் ஓக்கே…” என்று கூறி சமாளித்தவன்,

 

‘ஆனாலும் உன் அண்ணா கிரேட்… வாய்பேசாதவள் என்று தெரிந்தும், நிரந்தரியை மணம் முடித்தான் அல்லவா…” என்றபோது, இப்போது, அவன் அண்ணன் ஜெயந்தன் மீது தனி மரியாதையே வந்திருந்தது.

 

அவன் கூறி முடிக்க, சூரியபிரகாஷின் முகத்தில் பெரும் வலி எழுந்தது. அதனால் மெல்லியதாக நகைத்தவன்,

 

“நல்லவனாகவே இருந்திருக்கலாம் அண்ணா…” என்றான் எங்கோ பார்த்தவாறு. அவனைப் புரியாமல் ஏறிட்ட சர்வாகமன்,

 

“வட் ஆர் யு டாக்கிங் எபவுட்?” என்றான் புரியாமல்.

 

“நீங்கள் தான் மெச்சிக்கொள்ளவேண்டும்…” என்று கூறியவன், பின்,

 

“அண்ணா அண்ணியை மணக்கச் சம்மதித்ததே அப்பாவினால்தான் அண்ணா. அண்ணியை மணக்காவிட்டால், சொத்தில் பாதி கூடத் தரமாட்டேன் என்று கூறியதால்தான் திருமணத்திற்கே சம்மதித்தான்… திருமணம் முடித்த பின் அண்ணியை அவன் கண்டுகொள்ளவேயில்லை…” என்று விரக்தியாகக் கூறியவன், பின் திரும்பி தன் அண்ணனைப் பார்த்து,

 

அண்ணா அண்ணியோடு வாழ்ந்த அந்த ஒரு மாதத்தில் அவளை ஒரு மனுஷியாகக் கூட மதித்ததேயில்லை தெரியுமா? அவனுக்கு அண்ணியும் ஒன்றுதான், அங்கிருந்த ஜடப்பொருளும் ஒன்றுதான். அப்பா எவ்வளவோ பேசிப்பார்த்தார், அண்ணா காது கொடுத்துக் கேட்கவேயில்லை. நீங்கள் கேட்டதற்காக மணந்துவிட்டேன். தரவேண்டிய சொத்தைத் தந்துவிட்டால் மரியாதையாவது மிஞ்சும் என்று அப்பாவின் வாயை அடைத்து விட்டான்… அண்ணியைக் கண்டாலே அவனுக்குப் பிடிக்காது… அதனால், அண்ணாவின் முன்பு அண்ணி வருவதேயில்லை… அண்ணிக்கு அண்ணாவின் முகம் நினைவிருக்கிறதோ இல்லையோ…” என்று விரக்திப் புன்னகையுடன் கூறியவன் அருகேயிருந்த செடியொன்றின் மெல்லிய கிளை ஒன்றை ஒடித்து, அதிலிருந்து ஒவ்வொரு இலைகளாகப் பிய்த்து எறிந்தவாறு,

 

“அவனும் என்ன செய்வான், அவனுக்கு ஏற்கெனவே ராகினி என்கிற பெண்ணை அம்மா பேசியிருந்தார்கள். நம்முடைய அந்தஸ்துக்கு ஏற்ற இடம் என்று மட்டும்தான் அம்மா பார்த்தார்களேயன்றி அவள் நல்லவளா, கெட்டவளா என்கிற யோசனையே அம்மாக்கு வரவில்லை. அண்ணாவும் அவர்களின் சொத்தைக் கண்டு மயங்கிவிட்டான். தன்னுடைய நிலைக்குத் தகுந்தவள் கிடைத்துவிட்டாள் என்று மகிழ்ந்திருந்த நேரத்தில், எந்த வசதியும் இல்லாத ஒருத்தியைக் கட்டிவைத்தால், அவனால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்?” என்று விரக்தியாகக் கூறிய பிரகாஷ்,

 

“அன்று ஒருநாள் தன் நண்பர்களைப் பார்த்து விட்டு வருவதாகக் கூறிச்சென்ற அண்ணா, பிணமாகத்தான் வந்தான். நண்பர்களுடன் கடலில் குளிக்கும்போது, சுழியில் சிக்கி, அவனால் வெளியே வரமுடியவில்லை. அண்ணா இறந்ததும், அது வரை சும்மா இருந்த உறவுகள், நாக்கில்லா நரம்பினால் பலவாறு பேசத்தொடங்கிவிட்டனர்.

 

அண்ணியின்  துரதிர்ஷ்டத்தால்தான், தாய் தந்தை தம்பி இறந்தார்கள் என்றும், இப்போது, ஜெயசூரியனும், அண்ணியின் கூடாத அதிர்ஷ்டத்தால்தான் இறந்தார்கள் என்றும், அம்மாவிற்கு உரு ஏற்றத் தொடங்கினர். அம்மா சும்மாவே ஆடுவார்கள்… இப்போது கேட்கவும் வேண்டுமா?” என்றதும் இதைக் கேட்ட சர்வாகமனின் முகம், பெரும் சினத்தால் சிவக்கத் தொடங்கியது.

 

“புல் ஷிட்… வட் த ஹெல் யு ஆர் டாக்கிங்… அவளுடைய தாய் தந்தை இறந்ததுக்கும், உன் அண்ணன் இறந்ததற்கும், அதிர்ஷ்டத்திற்கும் என்ன சம்பந்தம்? எந்தக் காலத்தில் வாழ்கிறீர்கள்… உன் அண்ணியா அத்தனை பேரையும் கொன்றாள்? அறிவில்லை?” என்று அவன் சினத்துடன் சீற,

 

“உங்களுக்குப் புரிகிறது… எனக்கும் புரிகிறது… ஆனால் நம்முடைய மடச் சமூகத்திற்குப் புரியவில்லையே… எங்கே யார் வீட்டில் என்ன நடக்கும், எவரைப் பற்றிப் பல்லைப்போட்டுப் பேசலாம் என்று காத்திருக்கிற சமூகத்திற்கு அண்ணி, வெறும் அவல்தான் அண்ணா… போதாததற்கு, அம்மாக்கு அண்ணியைக் கண்டால் ஆகாது. அதுவும் அண்ணா இறந்ததும், அண்ணியை மணம் முடித்ததால்தான், அவன் இறந்தான் என்று முடிவே செய்துவிட்டார்கள். வீட்டை விட்டுக் கூடத் துரத்தினார்கள்.

 

அப்பாதான், பிடிவாதமாக நின்று அண்ணியைப் போகவிடாமல் செய்தார்கள். கூடவே, தன்னை மீறி அண்ணியை வெளியேற்றினால், தானும் சேர்ந்து போய்விடுவதாக மிரட்ட, வேறு வழியில்லாமல், அம்மா அண்ணியை இந்த வீட்டில் விட்டு வைத்தார்கள். ஆனால் அது கூட அவர்களுக்கு வசதியாகத்தான் போய்விட்டது.  தன்னுடைய கோபத்திற்கும், ஆத்திரத்திற்கும், வேதனைக்கும் அண்ணிதான் வடிகாலாகிப்போனாள்.” என்றவன் தன் கரத்தில் இலையில்லாதிருந்த, குச்சியைத் தூக்கிப் பார்த்து,

 

“அண்ணியுடைய வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது அண்ணா… அவளுடைய மகிழ்ச்சி, நிம்மதி, எதிர்காலம், கனவு, எல்லாமே, இதோ எல்லோருமாகச் சேர்ந்து பிய்த்துப் போட்டுவிட்டோம்… இப்போது இந்தக் குச்சி போல அவர்களுடைய வாழ்க்கையில் எதுவுமே இல்லாமல் போய்விட்டது.” என்று வேதனையுடன் கூடிய பெருமூச்சுடன் சொன்னவன், பின் நிமிர்ந்து  சர்வாகமனைப் பார்த்து,

 

“பாவம் அண்ணி… அவளைக் கண்டதும், எல்லோரும் ஒதுங்கத் தொடங்க, உள்ளுக்குள்ளேயே உடைந்து போனாள். போதாதற்குக் காதுபடவே தப்புத் தப்பாகப் பேசத் தொடங்க நொறுங்கிப் போனாள். யாரிடமும் சொல்ல முடியாமல், ஆறுதல் கூட தேட முடியாமல், எந்தக் கனவும் இல்லாமல், நத்தையாகத் தன் கூட்டுக்குள் சுருண்டு கொண்டாள் அண்ணா…” என்று கலக்கத்துடன் கூறியவன் பின்,

 

“ஏதோ, நானும் தாமரையும் இருப்பதால், அண்ணி கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறார்கள். நாங்கள் இருவரும், முடிந்த வரை அண்ணியைச் சிரிக்க வைப்போம். நம்மால் அதை மட்டும்தானே செய்ய முடியும்…” என்றவன் பின் தன் தெலை தூரத்தை வெறித்தவாறு,

 

“முதன் முதலாக அவர்கள் இந்த வீட்டிற்கு வந்தது நினைவிருக்கிறது அண்ணா… மருள மருள விழித்தவாறு, தனக்கு என்ன நடந்தது என்று கூட உணராத ஒரு நிலையில்… அம்மாவுடைய கர்ஜனைக்குப் பயந்து ஒடுங்கி… இப்போது நினைத்தாலும் ஈரக்குலையே கசங்குகிறது அண்ணா…” என்றான் ஒருவித வலியுடன்.

 

“ஏன் பிரகாஷ்….. உன் அண்ணிக்கு வேறு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருந்தால் அவர்களுக்கு இந்த நரக வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைத்திருக்கும் அல்லவா” என்றவனைச்  சிரிப்புடன் பார்த்தான் சூரியபிரகாஷ்.

 

“எப்படியண்ணா முடியும். அது நடக்கும் காரியமா? இது என்ன வெளிநாடா? நீங்கள் வெளிநாட்டில் வசித்ததால் இது சாதாரணமாகத் தெரிகிறது. நம்முடைய ஊரில் அதைக் கனவில் கூட யோசிக்க முடியாது. அதுவும் நம் குடும்பத்தில் வாய்ப்பேயில்லை. அண்ணி ஒரு விதவை. அதுமட்டுமல்ல அவர்களால் கேட்க முடியுமே தவிரப் பேச முடியாது. பேச முடியாத ஒருத்திக்குத் திருமணம் செய்து வைப்பதே இயலாத காரியம்… இதில் விதவை என்றால், சொல்லவும் வேண்டுமா? போதாததற்கு அதிர்ஷ்டம் கெட்டவள் என்கிற பெயர் வேறு. ப்ச்… அவளை மணக்க யார் வரப்போகிறார்கள்… வாய்ப்பே இல்லை… தன் இறுதிக் காலம் வரைக்கும் அண்ணி இப்படியேதான் இருக்கவேண்டும். அண்ணியின் மறுமணம் நூலைக்கட்டி மலையில் ஏறுவது போலத்தான்” என்று கூற, தனக்குள் நகைத்தான் சர்வாகமன்.

 

‘ஏன் இல்லை… நான் இருக்கிறேன்… உன் அண்ணியை மறுமணம் செய்ய நான் இருக்கிறேன். உன் அண்ணி எனக்குத்தான். எனக்கு மட்டும்தான். அவள் எனக்காகப் படைக்கப்பட்டவள், அதனால்தான், உன் அண்ணனுக்கு அவளுடன் வாழக் கொடுத்து வைக்கவில்லை.’ என்று எண்ணியவனுக்கு, அது வரை இருந்த இறுக்கம் மெதுவாக விடைபெற்று இப்போது அந்த இடத்தில் மெல்லிய மலர்ச்சி உற்பத்தியானது.

 

‘எந்தத் தடங்கலும் இன்றி, அவளை எண்ணுடையவளாக்க வேண்டும். ஆக்குவேன்… இது என்னுடைய சபதம்’ என்று மனதிற்குள் கூறியவன், திரும்பி சூரியபிரகாஷைப் பார்த்து,

 

“வருவான்… நிச்சயம் ஒருவன் வருவான்… உன் அண்ணிக்கு வாழ்க்கை கொடுப்பான்… இந்த உலகமே அவளை வியந்து பார்க்கும் அளவுக்கு அவளைக் கோபுரத்தின் உச்சியில் வைப்பான்… யார் அவளைத் தப்பும் தவறுமாகப் பேசினார்களோ, அவர்கள் எல்லோரும், தலை குனிந்து அவளுக்குச் சேவகம் செய்யக் காத்திருப்பார்கள்… இது வெறும் பேச்சல்ல… நடக்கப் போகும் நிஜம்…” என்று கண்கள் மின்னக் கூறிவிட்டு எழுந்தவன், பிரகாஷின் கரத்திலிருந்த குச்சியைப் பறித்து உற்றுப் பார்த்தான்.

 

என்ன நினைத்தானோ, எடுத்துச் சென்று, ஒரு இடத்தில் கால் மடித்தமர்ந்து, அங்கிருந்த மண்ணைக் கிண்டி, அதில் நட்டுவிட்டுத் தலையைத் திருப்பி, சூரியப்பிரகாஷைப் பார்த்து,

 

“இதில் உள்ள இலைகள்தானே உதிர்ந்துவிட்டன… தண்டு இன்னும் காயாமல் உயிருடன்தானே இருக்கிறது? இதோ புதிதாக நட்டிருக்கிறேன்… இதிலிருந்து தளிர் துளிர்விடும்போது, புரியும் பார்…” என்றவாறு தன் கரத்தைத் தட்டிவிட்டு எழுந்து நிற்க, சூரியபிரகாஷோ,

 

“அண்ணா…” என்றான் குழப்பமாக. அவனைப் பார்த்துத் தன் கவர்ச்சிப் புன்னகையைச் செலுத்தியவன்,

 

“வா… உள்ளே போகலாம்…” என்றவாறு வீட்டிற்குள் கம்பீரமாக நுழைய, இவனும், புரியாத குழப்பத்துடனேயே அவனைப் பின் தொடர்ந்தான்.

What’s your Reaction?
+1
25
+1
5
+1
5
+1
2
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!