Mon. Sep 16th, 2024

நீ பேசும் மொழி நானாக – 1

1)

 

டீடி டீடி டீடி என்று இப்போது ஐந்து மணி என்று அவனுடைய ஐ ஃபோன் 10 அறிவுறுத்த அதுவரை கட்டிலிலே மெல்லிய போர்வையால், முகத்தை மூடியவாறு, ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவன், மெதுவாக அசைந்து தன் நீளக் கரத்தை நீட்டிக் கைப்பேசியைத் தடவித் தடவித் தேட, அது படுக்கையின் ஓரத்தில் தட்டுப் பட்டது.

 

போர்வையை இறக்காமலே, அதை எடுத்து, விரல்களால் எங்கெங்கோ தட்டி எப்படியோ, அதன் சத்தத்தை நிறுத்திவிட்டு மீண்டும் போர்வைக்குள் ஒளிந்து உறங்கத் தொடங்க, அவனை விட்டுப் பிரிய மனமே இல்லாதவளாக, அவன் கம்பீரத்திலும், ஆளுமையிலும் தன்னைத் தொலைத்தவளாக மேலும் அவனுக்குள் ஒடுங்கி, அவனை அணைத்தவாறு, தன் விழிகளை மூடினாள் அந்த நித்திராதேவி.

 

தன்னை அணைத்திருப்பவளை, மேலும் அணைப்பவன் போன்று சற்றுத் தள்ளியிருந்த தலையணையை இழுத்துத் தன் அகன்ற பெரிய கரங்களுக்குள் சிறை செய்துகொண்டே, மீண்டும் விழிகளை மூடி நித்திராதேவியை முத்தமிட அவளும் ஆசையுடனே அவனைத் தழுவிக்கொண்ட நேரம், மீண்டும் கைப்பேசி அவனை அழைத்தது.

 

மறுபடியும் தூக்கம் குலைய, இப்போது, அந்த நித்திராதேவிக்கும் கோபம் வந்ததோ? அவன்மீது ஊடல் கொண்டு, அவனைவிட்டு விலகிச் செல்ல முயல, தன்னுடைய வலிய கரங்களால், அவளுடைய மென் கரத்தைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தவாறு, மறு கரத்தால், முகத்தை மூடியிருந்த, போர்வையை சற்று விலக்கித் தன் உடலை நெளித்துச் சோம்பலை முறித்துக்கொண்டான் அந்த வன்மகன்.

 

அப்படிச் செய்யும்போது அவன் கரங்களின் நரம்போடிய தசைக்கோளங்கள் ஒவ்வொன்றும் எம்பி நின்று என்னைப் பார் என்னைப் பார் என்று, தாம் கடும் உடற் பயிற்சிகளால் பிறந்தவர்கள் என்பதைப் பறைசாற்றிக்கொண்டிருக்க, அந்த அழகில் மெய்மறந்த நித்திராதேவி மீண்டும் அவனுக்குச் சாமரம் வீசத்தொடங்கினாள்.

 

தூக்கம் முற்றிலும் விலகாமல், சோர்வுடன் எழுந்து, விழிக்க முடியாது கண்களைத் திறந்து திறந்து மூடித் தன் இடது கரத்தைத் தூக்கி அதிலிருந்த ரொலக்ஸ் கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்க, அதிகாலை ஐந்து மணி என்றது கடிகாரம்.

 

‘ஐந்து மணிக்கு யார் அழைக்கிறார்கள்?’ என்று சலித்தவாறு அவன் போட்ட இடத்தில் தொலைப்பேசியை கை நீட்டி, எட்டி எடுத்தபோது அவனின் கைகளின் நீளமே அவன் அசாத்திய உயரம் என்பதையும், எடுத்துக் காட்ட, காதுக்குள் நுழைந்து ரீங்காரித்த கைப்பேசியின் திரையில் விழுந்த இலக்கங்களைக் கவனிக்காமலே, தன் காதில் பொருத்தி,

 

“ஹலோ… சர்வாகமன் குலசூரியர் ஹியர்’’ என்றான் சிறு எரிச்சல் கலந்த சோம்பல் குரலில். குரலா அது… அடேங்கப்பா… அவனைப் பார்க்காதவர்கள் கூட அந்தக் குரலைக் கேட்டால் காதலில் விழுந்துவிடுவர் என்பதில் ஐயமில்லை. அந்தக் குரலிலிருந்த ஆளுமையும் அழுத்தமும் தூக்கக் கலக்கத்தில் கூட எள்ளளவும் குறைந்திருக்கவில்லை.

 

ஆனால் மறு முனையில் கேட்ட குரலில் தொங்கிக்கொண்டிருந்த தூக்கம், முற்று முழுதாகப் பறந்து போகத், துள்ளி எழுந்தவன்,

 

“ஹலோ… அப்பா. நீங்களா?” என அதிர்ந்து, “என்னப்பா இந்த நேரம் எடுத்திருக்கிறீர்கள்? இஸ் எவ்ரிதிங் ஓக்கே? அம்மா எப்படி இருக்கிறார்கள்? இஸ் ஷி ஓக்கே…?” எனச் சிறிது பதட்டம் இழையோட வினாவினான் தனையன்.

 

இருக்காதா பின்னே… அவன் தந்தை இங்கிதம் அறிந்தவர். அவன் அதிகாலைத் தூக்கத்தை ரசித்து உறங்குவான் என்பதை நன்கு அறிந்ரிருந்ததால், ஒரு போதும் அவனுடைய தூக்கம், கலையுமாறு அழைத்தது கிடையாது. இப்போது திடீர் என்று அழைக்கவும், அந்தத் தனையனுக்கு மெல்லிய பதட்டம் ஒட்டிக்கொண்டது.

 

அதுமட்டுமல்ல ஒரு வருடத்திற்கு முன்புதான், அவன் அன்னை திலகாக்கு இதயத்தில் அடைப்பிருப்பது தெரியவந்தது. உடனடியாக பைபாஸ் செய்யவேண்டும் என்று வைத்தியர்கள் வலியுறுத்த, இயற்கை முறையில் தான் கொழுப்பைக் கரைப்பேன் என்கின்ற பிடிவாதத்துடன் சத்திர சிகிச்சைக்கு மறுத்துவிட்டார்.

 

அதனால் எப்போதும் அவனுக்குத் தன் தாயை நினைத்து மெல்லிய பயம் இழையோடும். என்னதான் தந்தை அவனுடன் அன்னியோன்னியமாக இருந்தாலும் சர்வாகமனுக்குத் தன் தாயென்றால் அலாதிப் பிரியம். வீட்டில் இருக்கும் நாளெல்லாம் அன்னையின் சேலையைப் பற்றிக்கொண்டு அலைவான்.

 

குலசூரியர்கூட “என்னம்மா… உன் பையன் உன் சேலையையே இன்னும் சுற்றிக்கொண்டிருக்கிறானே…, எனக்கென்னவோ வரப்போகிற பெண்டாட்டி விளக்குமாற்றைத் தூக்கப்போகிறாள் என்று தோன்றுகிறது.” என்பார் கிண்டலாக.

 

“அதைப்பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள். மருமகள் வந்தால் அவன் என்சேலையை விட்டுவிட்டு அவள் சேலையைப் பிடிக்கப்போகிறான். எப்போதும் அம்மாப் பிள்ளைகளாக இருப்பவர்கள்தான் மனைவியைக் கண்டதும் அவள் பின்னால் ஓடிவிடுவார்கள்” என்று சிரிப்புடன் சொல்லும் திலகாவிடம்,

 

“நோ… வே… மா… என்னுடைய வாழ்க்கையில் திருமணம் என்கிற பேச்சிற்கே இடமில்லை. நான் எப்போதும் இப்படியேதான் இருப்பேன். வேண்டுமானால் இருந்து பாருங்கள்… ஒருத்திக்குப் பின்னால், என் உணர்வுகளைத் தொலைத்து… ஓ நோ… ஐ கான்ட்” என அலட்சியமாகச் சொன்னான் பதினெட்டு வயதேயான சர்வாகமன்.

 

அப்போது அவனுடைய வீராப்பைப் பார்த்து இருவருக்குமே சிரிப்புத்தான வந்தது. ஆனால் காலப்போக்கில் அவனுடைய எண்ணங்கள் சிந்தனைகள் அனைத்தும் பெண்களைத் தவிர்த்து, விளையாட்டுத் துறைகளிலும், ஏட்டுக் கல்விகளிலும் தன் காலத்தைப் போக்க, ஒற்றைப் பிள்ளையாகப் பெற்று வைத்த அந்தத் தம்பதிகள் கலங்கித்தான் போனார்கள்.

 

விரைவிலேயே அவன் தன் காலில் நிற்க, அவனைத் திருமணம் முடிக்குமாறு கேட்க, அது செவிடன் காதில் ஊதிய சங்கானது. அவன் முடிவெடுத்தால், அந்த முடிவை மாற்றப் பரம்பொருள் வந்தாலும் முடியாதே.

 

காலப்போக்கில் அவனிடத்தே திருமணம் என்கிற பேச்சுக்கே இடமில்லாது போனது.  திருமணம் என்றதும் அவன் காததூரம் ஓடி, அவர்கள் இருவரின் வயிற்றிலும் புளியைக் கரைத்து ஊற்றினான்.

 

இப்போதுதான் என்னென்னவோ சொல்கிறார்களே. அது போல அவனும் சமூகத்திற்கு ஒவ்வாத காரியத்தைச் செய்யத் துணிகிறானோ? திலகா உடைந்து போய் கணவரிடம் ஜாடை மாடையாகக் கேட்க, அவரும் துணிந்து தன் மகனிடம் அதைப் பற்றிக் கேட்டே விட்டார்.

 

ஆனால் மகனின் முகம் போன போக்கில் கப் என்று தன் வாயை மூடிக்கொண்டார் குலசூரியர்.

 

“அப்பா… வட் ஆர் யு திங்கிங் எபவுட் மீ… திருமணம் முடிக்கவில்லை என்றால், உடனே வேறுமாதிரி யோசிக்கவேண்டுமா? கமோன் பா… எனக்கு எந்தப் பெண்ணையும் பிடிக்கவில்லை. அவர்களுடைய நடவடிக்கை… ஓ காட்… எனக்கு என் அம்மாவைப் போல ஒரு பெண் வேண்டும்பா… உன்மையான அன்போடு என்னை அரவணைக்க, எப்போதும் என்னைத் தன் குழந்தையாகப் பராமரிக்க, என் தேவைகளைத் தானாகப் புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்ள, என் விருப்பத்தை உணர்ந்து மதிப்புக் கொடுக்க… எனக்கே எனக்காக, முக்கியமாகப் பெண்ணியம் பேசாதவளாக… தன்னையும் புரிந்துகொண்டு, என்னையும் புரிந்துகொண்ட ஒருத்தியாக எனக்கு வேண்டும்பா… அப்படி ஒருத்தி இனி இந்தப் பூலோகத்தில் பிறப்பாளா எனக்குத் தெரியாது… இருந்தால் பார்க்கலாம்…” என்று முடிவாகக் கூறிவிட, குலசூரியர்தான் தன் வாயை மூடவேண்டியிருந்தது.

 

அவன் சொல்லிவிட்டான்தான்… ஆனால் அவன் எதிர்பார்ப்பிற்குப் பெண் கிடைக்கவேண்டுமே… இந்த ஜென்மத்தில் அப்படி ஒரு பெண்ணை எங்கே என்று தேடுவார்… அவன் விருப்பத்தைக் கூறினால், பெண்வீட்டார்கள் அவரை அடிக்கவர மாட்டார்கள்…? ஆனாலும் பெற்றவர்களால் அப்படி விட்டுவிடமுடியாதே.

 

குலசூரியர் இப்போது தொலைப்பேசியை எடுத்ததுகூட அவன் திருமணம் பற்றிப் பேசுவதற்காகத்தான். ஆனால் அவர் அதிகாலையில் எடுத்ததும் அவன் பயந்துவிட்டான் என்பதை அறிந்து கொண்டவர் அவனைச் சமாதானப் படுத்தும் முகமாக,

 

“என்னப்பா? அதிகாலையில் எடுத்ததும் பயந்துவிட்டாயா? உன் குரலைக் கேட்கவேண்டும் போல இருந்ததா… உன் அம்மா வேறு காதுக்குள் தேனீபோல் ரீங்கரித்துக்கொண்டே இருக்கிறாள். நீ வேறு நாளை பயணப்படுகிறாய்… உன்னைப் பிடிப்பதாக இருந்தால், இந்த நேரம்தான் வசதியாக இருக்கும்… அதுதான்… எடுத்தேன்… நேத்து ரொம்ப வேலையாப்பா?” என்றார் கனிவாக.

 

“ப்ச்… நேற்று என் நண்பனின் பிறந்தநாள். வீட்டிற்கு வரும்போதே தாமதமாகிவிட்டது… அதை விடுங்கள்… இப்போது எதற்காகத் தொலைப்பேசியை எடுத்தீர்கள்? அதைச் சொல்லுங்கள்… “ என்றான் சர்வாகமன் தன் முகத்தை அழுந்தத் துடைத்தவாறு.

 

சர்வாகமன் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவது மட்டுமல்ல வாழும் ரகம். எதுவாக இருந்தாலும், தெளிவாகத் திருக்குறள் போலச் சுருங்கச் சொல்லிவிடவேண்டும். இந்த’வளவள’ ‘கொழ கொழ’ எல்லாம் அவனுக்கு ஒத்துவராத விஷயம்.

 

தன் மகனின் குணம் நன்கு தெரிந்தவர் என்பதால்,

 

“அது வந்து… நான் உன்னிடம் ஒன்று சொல்லி இருந்தேனே? யோசித்தாயா? என்ன முடிவெடுத்திருக்கிறாய்? பெண் வீடு… அதிக நாட்கள் காத்திருக்குமாறு நாம் கேட்க முடியாதே”

 

“எகெய்ன்… ஏன்பா… என்னைப் பற்றித் தெரிந்தும்…” என்றபோது அவன் குரலிலிருந்த பொறுமை வடிந்துபோவதை உணர்ந்து கொண்ட தந்தை,

 

“அது வந்து… ஆகமன்… நான் சொல்வதை…”

 

“அப்பா… ஹெள இஸ் அம்மா…” என்று அவன் கேட்க வேறு எதுவும் பேச முடியாது அமைதி காத்தார் குலசூரியர். மகன் பேச்சை மாற்றிவிட்டான். இதற்கு மேல் அவரால் எதையும் பேச முடியாது… மரியாதையாக ஒதுங்குவதே மேல்.

 

“இங்கே பக்கத்தில்தான் இருக்கிறாள்… கொடுக்கிறேன்…” என்றபோது அவருடைய குரல் பெரிதும் சோர்ந்தொலித்தது.

 

இருக்காதா… ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்பது போல கருவப்பிள்ளை இலைபோலப் பெற்றுப் போட்டுவிட்டு, அவனுடைய குலம் தழைக்கவில்லை என்றால்… அதை எப்படித் தாங்கிக்கொள்வது.

 

தந்தையின் குரலிலிருந்த வருத்தத்தை அவன் அறியாமல் இல்லை. அதற்காக அவன் தன் வாழ்வைப் பணயம் வைப்பதா? மகன் அமைதியாக இருக்கக் கைப்பேசி, உடனேயே கைமாறியது.

 

மறு கணம் அன்பான கருனை நிரம்பிய குரல் அவன் காதைத் தீண்ட, அது வரை அழுத்தியிருந்த அவனுடைய உதடுகள் மெதுவாகப் பிரிந்து மெல்லிய புன்னகையைத் தத்தெடுத்துக்கொண்டன.

 

“மா… ஹெள ஆர் யு…” என்றான் மகன் கனிவாக. யாரிடமும் கனியாதவன். அன்னையிடம் மட்டும் தன்னை மறந்து கனிந்து குழைவான்.

 

“எனக்கென்னடா கண்ணா… கண்ணுக்கு நிறைந்த பிள்ளை… வெற்றியின் சிகரத்தில் இருக்கிறான்… இதை விட ஒரு தாய்க்கு என்ன வேண்டும்… எப்போது கனடா வருகிறாய்” என்று தன் மகனைப் பார்க்கும் ஆவலுடன் அன்னை கேட்க,

 

“சூன் மா… என்னுடைய வேர்ள்ட் டூர் நாளை தொடங்குகிறது… முடிந்தால் கனடா வர முயல்கிறேன் மா…”

 

“அதிக நாட்கள் எடுக்குமாடா?” என்று அன்னை வருந்த,

 

“ஜெஸ்ட் டூ மந்த்ஸ் தாம்மா… ஏற்கெனவே தீர்மானித்த சுற்றுலா… இடையில் நிறுத்த முடியாதே… நாளை இந்தியா கிளம்புகிறேன்… அங்கே ஒரு கிழமை நிற்பேன். பிறகு இலங்கைக்குப்… போகவேண்டும்…” என்று அவன் கூற, இங்கே அன்னை திலகா பதறினார்.

 

“இலங்கைக்குப் போகப்போகிறாயா? உனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது. அங்கே யுத்தம் நடக்கிறது கண்ணா… உயிருக்கு உத்தரவாதமில்லாத நாடு… அங்கே போய்… நோ… அதற்கு நான் சம்மதிக்கமாட்டேன்… “ என்று அன்னை உறுதியாக மறுக்க, இவன் சற்று நேரம் அமைதி காத்தான்.

 

இலங்கைப் பிரச்சனை இன்று நேற்றுத் தொடங்கிய பிரச்சனையா என்ன? அவன் பிறப்பதற்கு முன்பாக வந்த பிரச்சனை. ஒரு போதும் தீர்வைக்காணப் போவதில்லை. அதற்காக அங்கே போகாமல் இருக்க முடியுமா. அதுவும் எத்தனை முக்கியமான பணிக்காக அவன் இலங்கைபோகிறான்… அதைத் தடுக்கப் பார்க்கிறார்களே இந்த அம்மா. ஆனாலும் அவனால் தன் தாய் மீது கோபப்பட முடியவில்லை.

 

தன் மகனின் பாதுகாப்பு அவருக்கு முக்கியமாயிற்றே. அதனால் தன் தாயைச் சமாதானப் படுத்தவேண்டி,

 

“ப்ளீஸ் மா… ப்ளீஸ் புரிந்துகொள்ளுங்கள்… இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்… டோன்ட் ஸ்டாப் மி… உங்கள் நாடுமா… அங்கே இருக்கும் மக்களுக்கு உதவிசெய்வது நம் கடமையல்லவா? இதுதான் நல்ல வாய்ப்பு… ஐ டோன்ட் வான்ட் டு மிஸ் இட்” என்று அவன் கூற, எதுவும் செய்ய முடியாமல் கண் கலங்கினார் அன்னை திலகா.

 

மகனின் பிடிவாதம் நன்கு தெரிந்தவர் அவர். ஒன்றை நினைத்தால், அதை அடையாமல் விடமாட்டானே. குரல் கம்ம,

 

“ஆனால் அது யுத்தம் விளைந்த பூமிடா… ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான அப்பாவிகள் இறந்துபோகிறார்களே கண்ணா… அங்கே போய் உன்னால் எப்படிச் சமாளிக்கமுடியும்?” என்றார் அவர் பெரும் தவிப்புடன்.

 

“ஐ நோம்மா… அங்கே காயமுற்ற நோயாளிகளுக்கு, உதவிசெய்யத்தான் நான் போகிறேன்… ப்ளீஸ் டோன்ட் ஸ்டாப் மீ…” என்றவனின் குரலுக்கு அன்னையால் எதிர்ப்புக் கூற முடியவில்லை. அமைதியாகக் கொஞ்ச நேரம் நின்றவர்,

 

“சரி உன் ஆசைக்கு நான் சம்மதிக்கவேண்டுமானால், நீ திருமணத்திற்குச் சம்மதிக்கவேண்டும்…” என்று அவர் பேரம் பேச, அது வரை தன் காதில் பதித்திருந்த கைப்பேசியை விலக்கி, முகத்துக்கு நேராகப் பிடித்துச் சலிப்புடன் அதைப் பார்த்தான் சர்வாகமன். என்ன சொன்னாலும் அதிலேயே நிற்கும் அன்னையை என்ன செய்வது? மீண்டும் கைப்பேசியைக் காதில் பொருத்தி,

 

“அம்மா… என்னம்மா இது… உங்களிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன் எனக்குத் திருமணத்தில் அத்தனை பிடித்தம் இல்லையென்று. மீண்டும் மீண்டும் அதிலேயே நின்றால் நான் என்னசெய்யட்டும்” என்றான் சர்வாகமன், தன் குரலில் சிறு கோபம் உதிக்க.

 

“உன் கோபம் புரிகிறதப்பா… நீ எங்களுக்கு ஒரே பிள்ளைடா…. நீதான் எங்கள் குடும்பத்தின் வம்சத்தை வளர்க்கவேண்டியவன். நீ மறுத்தால், நம் வம்சமே போய்விடும் கண்ணா…. இந்த அம்மாவிற்காகவாவது நீ யோசிக்கக்கூடாதா….? என சிறு ஏக்கத்துடன் அன்னை வினவ,

 

“அது சரி. உலகையாண்ட ராஜ ராஜ சோழனின் வம்சமே போன இடம் தெரியவில்லை. இந்த நிலையில் உங்கள் வம்சத்திற்காக வருந்துகிறீர்களா? இதோ பாருங்கள் அம்மா….  நான் திருமணத்திற்கு மறுக்கவில்லை. ஆனால் எனக்கு எந்தப் பெண்ணையும் பிடிக்கவில்லையே… நான் என்ன செய்யட்டும்…?” என்றான் அவன் அளவில்லா சலிப்புடன்.

 

பின், தன் தலையைக் கட்டில் சட்டத்தில் சாய்த்து வைத்தவன், இடது கரத்திலிருந்த கைப்பேசியை வலது கரத்திற்கு மாற்றி, இடது கரத்தால் தன் நெற்றியில் விழுந்த அடர்ந்த கரிய சுருள் கேசத்தை, மேவி இழுத்து விட்டுக்கொண்டவாறு,

 

“பிடிக்காத ஒருத்தியை திருமணம் முடித்து வாழ்க்கை முழுதும் வேதனைப்படுவதை விடத் தனிமையின் துனையோடு வாழ்ந்துவிடுவேன்மா… அம்மா… எனக் வருபவள், மனதுக்குப் பிடித்தவளாக, உங்களைப் போல அப்பழுக்கில்லா அன்பை அள்ளி அள்ளிக் கொட்டுபவளாக, சுயநலமில்லாதவளாக, என்னுடைய வேதனையைத் தனதாக எண்ணக் கூடியவளாக, முக்கியமாக என் முக பாவனையை வைத்தே, நான் என்ன நினைக்கிறேன் எனப்தை நொடிப்பொழுதில் புரிந்துகொள்ளக் கூடியவளாக ஒருத்தி வேண்டும்மா… அப்படிக் கிடைத்தால்… பார்த்த இடத்திலேயே திருமணம்தான்… போதுமா” என்று எப்போதும் பாடும் பாட்டையே மகன் அப்போதும் பாட, வேறு வழியில்லாமல், விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று.

 

அதிக அழுத்தம் கொடுப்பதும் நல்லதல்லவே.

 

“என்னவோ… உனக்கு எது சரியென்று படுகிறதோ அதைச் செய்துகொள். ஆனால் இந்த அம்மாவையும் அப்பாவையும் அதிக நாட்கள் காத்திருக்க வைக்காதே. எங்கள் குடும்பத்தின் ஒரே குலக்கொழுந்து நீதான். நீ பட்டமரமாகக் கூடாது என்பதுதான் எங்கள் ஏக்கம் சரியா…” என்றவள் ஏதோ நினைவு வந்தவராக

 

“சரிப்பா… நீ உன் விருப்பப் படியே போய் வா… ஆனால், உன் பாதுகாப்பு எங்களுக்கு மிக மிக முக்கியம். அதனால், உன் அப்பாவின் மூத்த சகோதரன் குலவேந்தன் அங்கேதான் இருக்கிறார். அவர் இருப்பது வவுனியா. அவருக்குச் செய்தி அனுப்புகிறேன். அவர்கூடவே தங்கிக்கொள்… அங்கிருந்து முல்லைத்தீவு அதிக தூரமில்லை என்ன புரிந்ததா?” என்று அன்னை கூற,

 

“நான் என்ன விரல்சூப்பும் குழந்தையா, பாதுகாப்பிற்காக அங்கே செல்வதற்கு… ஐ ஆம் எ டாக்டர்மா… அதுவும் கார்டியோலஜிஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்… எனக்குப் போய்…” என்று இவன் சிரிக்க,

 

“டில்லிக்கு ராஜா ஆனாலும் நீ எனக்குப் பிள்ளைடா… நீ எந்த ஸ்பெஷலிஸ்டாக இருந்தாலும், இன்னும் எனக்குக் குழந்தைதான்டா… அந்த நாட்டுக்கு நீ போவதே எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் உன் ஆசையிலும் நியாயம் இருப்பதால் சம்மதிக்கிறேன். அதை மீறி, நீ தனியாக அங்கே இருப்பதற்கு நான் ஒரு போதும் ஒத்துக்கொள்ளமாட்டேன்…” என்று அன்னை பிடிவாதமாகக் கூற, வேறு வழியில்லாமல், தன்னை இந்தளவுக்குப் போகவிட்டதே பெரிய காரியம் என்பது போல,

 

“ஓக்கே டன்…” என்று மகன் பிடித்தமில்லாமலே கூற, அதைப் புரிந்துகொண்டவராக,

 

“அங்கே போய் இரு என்று நான் சொல்வதற்கும் காரணம் உண்டு கண்ணா… அங்கே நம் நெருங்கிய உறவுகள் அதிகம் பேர் வசித்து வருகிறார்கள். உன்னை அவர்கள் எவருக்கும் தெரியாது. நீ பெரியப்பா வீட்டில் இருந்தாயானால் உனக்கு அவர்களைப் பார்க்கவும் வசதி, அவர்களுக்கு வந்து போவதும் சுலபம். தவிர தொலைந்த உறவுகளைப் புதுப்பித்ததுபோலவும் இருக்கும். சரியா?” என்றவர், பின் “முடிந்த வரைக்கும் எல்லோர் வீட்டிற்கும் ஒரு சுற்றுப் போய்விட்டு வா…” என்று அடுத்த கட்டளையைப் பிறப்பிக்க இவன் தன்னை மறந்து சிரித்தான்.

 

“இடம் கொடுத்தால் மடம் பிடிக்கிறீர்களே…” என்று இவன் கூற,

 

“ப்ளீஸ் டா…” என்று அன்னை திலகா இறங்கிக் கேட்கவும்,

 

“ஓக்கே! ஓக்கே…! நீங்கள் சொன்னதுபோல் இலங்கையில் உள்ள எல்லா உறவுகளையும், அவர்கள் எந்த மூலையிலிருந்தாலும் கண்டு பார்த்துவிட்டே வருகிறேன். இப்போது உங்களுக்கு மகிழ்ச்சிதானே” என வினவிய தனயனை மனதார ஆசீர்வதித்தாள் அந்த அன்னை.

What’s your Reaction?
+1
43
+1
14
+1
7
+1
3
+1
0
+1
0

Related Post

5 thoughts on “நீ பேசும் மொழி நானாக – 1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!