Thu. Nov 21st, 2024

நிலவே என்னிடம் நெருங்காதே – 36/40

நிலவு 36

உடனேயே அநேகாத்மன் செயற்பட்டான். தாமதித்தால், மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறிவிடுமோ என்கிற பயத்தால், திருமணத்தை மிக எளிமையாக அதுவும் மிக விரைவாகத் திருமண நாளைக் குறித்தான். அவனை விட்டால், அவள் சம்மதித்த மறு நிமிடமே அவளை சட்டப்பூர்வமாக மனைவியாக்கியிருப்பான். ஆனால், சர்வமகிக்கு கடவுள் மீது ஏக நம்பிக்கை என்பது அவன் நன்கு அறிந்ததே. அதனால், தன் நம்பிக்கையை ஓரம்கட்டிவிட்டு, அவளுக்காக நல்ல நாளில், கோவிலில் வைத்துத் தாலி கட்ட முடிவு செய்தான்.

அழகிய இளஞ்சிவப்பு சேலையில், பொன் நிறத்தால், கொடி வேலை செய்த காஞ்சிபுரப் பட்டும், அதற்குப் பொருத்தமாக மிதமான ஒப்பனையுடனும், எளிமையான நகைகள் அணிந்து வந்தவளின் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். அநேகாத்மனால் அவன் விழிகளையே மூடமுடியவில்லை. பன்மடங்காக அதிகரித்திருந்த அவள் அழகைக் காணக் காண அவனுக்குத் தெவிட்டவில்லை.

கோவிலில் வைத்து மாங்கல்யத்தை அணிவிக்குமாறு ஐயர் வாழ்த்திக் கொடுக்க, மனம் நிறைய மகிழ்வுடனும், நம்பிக்கையுடனும், இவள் என்னவள் என்கிற பெருமையுடனும் அவள் சங்குக் கழுத்தில் மங்கலநாணை அணிவித்தான் அநேகாத்மன். அவனையும் அறியாமல், அவன் விரல்கள், அவளுடைய கழுத்தை வருச் செல்ல, செங்கொழுந்தாகிப்போனாள் ஆத்மனின் மனையாள்.

அந்த நாணச் சிவப்பில் மீண்டும் குப்புற விழுந்தான் அந்த கம்பீர ஆண்மகன். மீண்டும் அந்த சிவந்த முகத்தைப் பார்க்கவேண்டும் என்கிற வெறி தோன்றியது. அவளின் அந்த முகச் சிவப்பே, இவனின் கம்பீரத்தை அதிகரிக்க, அவளை அணைக்கும் வேகத்துடன் நெருங்கியவன், சூழ்நிலை புரிந்து, சட் என்று நின்றான்.

‘என்ன காரியம் செய்ய நினைத்தான்… அதுவும் இடம் பொருள் ஏவல் புரியாமல்.. ஓ காட்… இதுவே என்னால் தாங்கமுடியவில்லையே… உன்னுடன் தனிமையில் எப்படி இருக்கப்போகிறேன்…’ என்று புலம்பியவன், சர்வமகியின் கரத்தைப் பிடித்தவாறு, அவளுக்குப் பின்னால் நின்றிருந்த அவளுடைய சகோதரர்களைப் பார்த்து,

“லெட்ஸ் கோ…” என்று தலையசைத்துக் கூறிக்கொண்டு வெளியேற, அவனைப் பின்தொடர்ந்தனர் மற்றைய நால்வரும்.

கையோடு, திருமணத்தைப் பதிவும் செய்தவன், ஆடை மாற்றக்கூட அனுமதி கொடுக்காது, அன்றே அவளையும் அவளுடைய சகோதரர்களையும் அழைத்துக்கொண்டு மீண்டும் டொரன்டோ வந்தான்.

விமானத்திலிருந்து இறங்கியதுமே, அவர்களை அழைத்துச் செல்ல லெமோ வந்திருந்தது. எந்தக் குலுக்கமும் இல்லாது, விமானத்தில் பறக்கும் உணர்வுடன் அநேகாத்மனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

அநேகாத்மனின் வீட்டைக் கண்டதும், அவர்களால் அவர்களின் கண்களையே நம்ப முடியவில்லை. திரைப்படங்களில் மட்டுமே கண்டு வியந்த காட்சிகள். வீpட்டின் முன் பக்கமாகப் பெரிய கதவு. சுற்றிவர அமைக்கப்பட்ட சிசிடி கமரா. தொடர்ந்து  அரை கிலோமீட்டர் வரை ஓடி நின்றது வாகனம். ஒரு பக்கமாக பத்திற்கும் மேற்பட்ட கார்கள் ஒவ்வொன்றும் குறைந்தது ஒரு லட்சம் டாலர்களை விழுங்கியிருக்கும் என்பது தெரிந்தது.

“அடேங்கப்பா… எவ்வளவு பெரிய வீடு… அதுவும் டொரன்டோவில்…” என்று அபிதன் வியக்க, சர்வமகி அனேகாத்மனை வியப்புடன் பார்த்தாள். அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

இந்த வீடு அவளுக்குச் சற்றுப் பழக்கப்பட்டதே. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்பு, அநேகாத்மனால் அழைத்துவரப்பட்டாள்… இல்லை இல்லை தூக்கிவரப்பட்டாள். அவள் இந்த வீட்டிற்குள் வந்தபோது, அவளுக்கு சுயநினைவு இருக்கவில்லை. வீட்டை விட்டு வெளியேறியபோதும், அந்த வீட்டை ரசிக்கவேண்டும் என்கிற மனநிலை அவளுக்கு இருக்கவில்லை.

“ஏன்டா பிரதீபா… இத்தனை செக்கியூரிட்டி, இத்தனை கமரா… இதையெல்லாம் மீறி எப்படிடா திருடவந்தாய்?” என்று பெரும் வியப்புடன், மாதவி பிரதீபனின் காதில் கிசுகிசுக்க, பிரதீபனின் முகம் கறுத்து விழுந்தது.

தம்பியின் மனநிலையைப் புரிந்தவள், “சாரிடா… உன்னுடைய மனதைப் காயப்படுத்தவேண்டும் என்று கேட்கவில்லை… ஒரு கியூரியோசிட்டி அவ்வளவுதான்…” என்றாள் உண்iமாயாக அறியும் ஆவலுடன்.

“நான் வந்தது இந்த வீடில்லை மாதவி… இது அத்தானின் சொந்த வீடு… அவர் உழைப்பில் கட்டியது. நான் போனது அவருடைய அப்பாவின் வீட்டிற்கு. அத்தானுடைய அப்பா இறந்த பின், அங்கே பெரியளவில் பாதுகாப்பு இருக்கவில்லை. அதனால்தான் சுலபமாக உள்ளே நுழைய முடிந்தது. என் போதாத காலம், அன்று அத்தான் அங்கேதான் தங்கியிருந்தார். இல்லை என்றால், நான் பிடிபட்டிருக்கமாட்டேன்…” என்றான் பெரிய வீரமாக.

“கிழித்தாய்… எப்படியும் அத்தான் உன்னைக் கண்டுபிடித்திருப்பார்…” என்றாள் மாதவி, தன் அத்தானின் மீதிருந்த நம்பிக்கையால்.

பிரதீபனும் அதனை மௌனமாகவே ஏற்றுக்கொண்டான். அன்று அவன் நேராக அநேகாத்மனின் திறமையைப் பார்த்தானே. நேரம் தாமதிக்காமல், இரண்டே இரண்டு கராத்தே ஸ்டெப் தான். அவனுடன் வந்த நான்கு நண்பர்களும் ஃப்ளாட். இவன் ஏதோ தெய்வாதீனமாக பின்னால் நின்றிருந்ததால், தப்பமுடிந்தது. இல்லையென்றால், அவன் எல்லாம் அநேகாத்மனுக்கு ஒன்றுமேயில்லை.

“என்ன பிரதீபா… கடுமையாக யோசிக்கிறாய்?” என்றான் அநேகாத்மன். அவன் பிரதீபனுடன் பேசியிருந்தாலும், அவனுடைய பார்வையென்னவோ, சர்மகியிடம்தான்.

பிரதீபனின் ஒன்றுமில்லை என்கிற சமாளிப்பைக் கூட, அவன் கேட்கவில்லை. அவனுடைய நினைவுகள் பின்னோக்கிச் சென்றிருந்தன.

அன்று அவளை முதன் முதலாகத் தன் கரத்தில் ஏந்தியவாறு அந்த வீட்டிற்குள் நுழைந்த நினைவு வந்தது. அவன் சொந்த வீட்டில், முதன் முதலாக நுழைந்த பெண், சர்வமகியே. இதுவரை காலமும், அந்த வீட்டிற்குள் அவன் எந்தப் பெண்ணையும் அழைத்து வந்ததில்லை.

அன்று அந்த நிலையிலும் வழமையாகப் பெண்களை அழைத்துச் செல்லும், கெஸ்ட் ஹவுசிற், அவளைத் கூட்டிச்செல்லவேண்டும் என்று அவனுக்குத் தோன்றவேயில்லை. தன் சொந்த வீட்டில், தன் சொந்தப் படுக்கையில் அவளைக் கிடத்தி, அவளைக் கவனித்துக்கொண்டான். எக்காரணம் கொண்டும். தப்பான முறையில், பிறர் தப்பாக எண்ணும் நிலையில் அவள் இருக்கக் கூடாது என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் அவன் வைத்தியரைக் கூட அழைத்திருக்கவில்லை. தனக்குத் தெரிந்த முறையில் அவளைக் கவனித்தான். இப்போது நினைக்கும்போதுதான் புரிந்தது. அப்போதே, சர்வமகி அவன் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டிரந்தாள் என்று. அவன்தான் அப்போது அவள் தந்தை மீதிருந்த கோபத்தில் அதனை உணரவில்லை என்று.

அனைவரும் லிமோவை விட்டு இறங்கினர். பிரதீபனின் விழிகளோ, எதையும் நம்ப முடியாது அந்த கார்களையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“அக்கா… அங்கே பார்… ஃபெராரி…” என்று ஏதோ காணாததைக் கண்டதுபோலக் குதித்தான் பிரதீபன்.

“டேய் அண்ணா… அங்கே பார் புது மாடல் லைட்னிங் ஜிடி… முழுக்க முழுக்க மின்சக்தி கொண்டு இயங்கும் வாகனம்… அம்மாடியோ… இது த்ரீ ஹன்டரட் தௌசன்ட் டாலராவது இருக்கும்…” என்று கிட்டத்தட்டக் கூவினான் அபிதன்.

“அபி… ஷ்… மெதுவாக…” என்று சர்வமகி கண்டிக்க,

“இட்ஸ் ஓக்கேமா…” என்று அவளை அடக்கிய அநேகாத்மன்,

“பிரதீபன் அபிதன்… உன் அக்காவுக்கு ரெஸ்ட் வேண்டும்… நாம் ஃப்ரஷப் பண்ணியபிறகு உங்களை வெளியே அழைத்துச் செல்கிறேன்…” என்றான் இளநகையுடன்.

“ஃபெராரியிலா?” என்று நம்ப முடியாமல் கேட்க, அபிதனோ, “லைட்னிங்ல போகலாம்…” என்றான் குறுக்கே விழுந்து.

“இல்லை அபி… ஃபெராரிதான் சூப்பரா இருக்கும்…” என்றான் பிரதீபன் கோபமாக.

“உனக்கென்ன தெரியும்… லைட்னிங்தான் சூப்பரா இருக்கும் அதன் வேகம் தெரியுமா உனக்கு…?” என்றான் அபிதன் கோபமாக.

“நோ.. அபி… ஃபெராரிதான் உள்ளே சுப்பராக இருக்கும்…” என்றான் பிரதீபன் ஆவலாக.

“உனக்கொன்றும் தெரியாது… லைட்னிங்ல இருந்தாலே கெத்துத்தான்…” என்றான் அபிதன் வேகமாக.

“ஷ்… என்ன பிரதீபன்… அவன்தான் சின்னப்பிள்ளை… அவனோடு சண்டை பிடிக்கிறாயே…” என்றாள் சர்வமகி சற்றுக் குரலை உயர்த்தி.

“போக்கா.. எப்பவும் அவனுக்குத்தான் சப்போர்ட் பண்ணு…” என்று அபிதனைப் பார்த்துப் பிரதீபன் முறைக்க,

“போடா… நீ…” என்று சகோதரியை உரசியவாறு அபிதன் பெருமையுடன் கூற,

“அடிங்…” என்று தன் நிலை மறந்து, அபிதனை அடிப்பதற்காக இரண்டடி வைத்த பிரதீபன் அப்போதுதான் தமது நிலை புரிந்தவனாக,

“ஐ ஆம் சாரி அத்தான்… இவன்தான் என்னை… எப்போதும் சீண்டிக்கொண்டிருப்பான்…” என்று அபிதனைப் பார்த்து முறைத்தவாறு கூற,

“ஓக்கே காய்ஸ்… எதற்கு இப்போது சண்டை… உங்களுக்கென்ன, இந்த காரில் போகவேண்டும் அவ்வளவு தானே… நோ ப்ராப்ளம்… நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரில் அழைத்துச் செல்கிறேன்… ஓக்கேவா?” என்று சமாதானம் கூற, இவர்களின் முகம் மலர்ந்தது.

“உண்மையாகவா அத்தான்…” என்று ஆவலாக அபிதன் கேட்க,

“நான் செய்யாததைச் சொல்வதில்லை அபிதன்…” என்று இவன் கூற, சர்வமகி அது எத்தனை பெரிய உண்மை என்பதை உணர்ந்து கொண்டாள். அதே நேரம்,

“அத்தான்… இத்தனை கார்களும் வைத்திருக்கிறீர்களே… ஏன்?” என்று ஆவலாகக் கேட்க,

“இது என்னோட கலக்ஷன்… ஒவ்வொருதருக்கு ஒவ்வொரு ஹொபி இருப்பதுபோல என்னுடைய பொழுதுபோக்கு புதிய கார்களை வாங்கி சேர்ப்பது. அதில் நீண்ட பயணம் போய்விட்டு வருவது. எப்போதும், எப்போதும், ஆளில்லா தெருவில் நீண்ட பயணம் செய்வது எனக்குப் பிடிக்கும்…” என்றான் அநேகாத்மன்.

ஏனோ அநேகாத்மனுக்கு, தானும் சின்னவனாகிப்போன ஒரு உணர்வில் இளகிப்போனான். இளவயதில் தொலைத்த சொர்க்கமல்லவா, இது. யாரோடும், இப்படி அபிதன் பிரதீபன் சண்டை பிடித்ததுபோல அவன் பிடித்ததில்லை. அவனுடைய நண்பர்கள் எல்லோரும், மேல்த்தட்டத்து மக்களே. அவர்களிடம் நாகரீகம் இருந்த அளவிற்கு இத்தகைய இயல்பான வாழ்க்கை முறை இருந்ததில்லை. ஒரு இயந்திர கதி வாழ்க்கைதான். விரல் சுண்டியதும், தங்குதடையின்றிக் கிடைக்கும் பொருட்கள். நட்பு வட்டமும் அப்படியே. தோழில் வட்டமும் அப்படியே. அவன் சொன்னதை மற்றவர்கள் கேட்கவேண்டுமே அன்றி, பிறர் சொல்வதை இவன் கேட்டதில்லை. ஆனால் இப்போதுதான் அந்த இரு சிறுவர்களுக்காகவும், அவன் மனம் இளகத் தொடங்கியது.

“வாவ்… சுப்பர் அத்தான்… உங்களிடம் வேறு கார் இருக்கிறதா?” என்று ஆவலாகக் கேட்டான் பிரதீபன்.

“கராஜில் லம்போகினியும், கொனிசெக்கும் இருக்கு பிறகு காட்டுகிறேன்…” என்றவனின் குரலில் நிச்சயமாக எந்தப் பெருமையும் இருக்கவில்லை. ஏதோ டோய் கார் என்பது போலத்தான் கூறினான். ஆனால், பிரதீபனுடையதும், அபிதனுடையதுமான முகம் வியந்து மலர்ந்து போனது.

“கெனிசெக் வைத்திருக்கிறீர்களா? லம்போகீனி எந்த மாடல்…” தன்னை மறந்து ஆண்பிள்ளைக்கே உரித்தான ஆர்வத்துடன் அபிதன் கேட்க, மெல்லியதாக நகைத்தவன்,

“பிறகு நீயே பார்த்துப் புரிந்துகொள்… பட்… இப்போ உள்ளே போகலாம்… உன் அக்காவைப் பார்… எப்படிக் களைத்துவிட்டாள் என்று… நமக்குத் தேவையில்லை என்றாலும், உன் அக்காவிற்கு ஓய்வு தேவை…” என்று அவன் கூறி வீட்டின் வாசலை வலது கரத்தால் காட்டினான்.

அவன் என்னதான் ஆடம்பரம் இல்லாமல் அலட்சியமாகக் கூறியிருந்தாலும், அனைவரும், அவனையே திகைப்புடன் பார்த்தனர். அவன் உயரம் என்ன என்பது தெரிந்தது… ஏணி வைத்தாலும் எட்ட முடியாத உயரத்தில் இருப்பவன் அவன். குனிந்து பார்த்தாலும், தெரியாத பள்ளத்தில் இருப்பவர்கள் அவர்கள். அவன் போய் எப்படி அவளை மணந்தான்?

தன் மனையாளின் முகத்தில் தெரிந்த வாட்டத்தைக் கண்டவனுக்கு, அவள் என்ன எண்ணுகிறாள் என்பதை உடனேயே புரிந்துகொண்டான் அநேகாத்மன்.

“இல்லைம்மா… நீ எனக்குக் கிடைத்ததுதான் நான் செய்த மிகப் பெரும் பாக்கியம்… இதோ, இந்த வீடு, இந்த கார் உனக்கு முன்னால் வெறும் தூசு…” என்றான் விழிகள் மின்ன.

அவள் நம்ப மாட்டாமல் அவனை ஏறிட, தன் வலது கரத்தை இடது மார்பில் பதித்தவன்,

“ஐ பிராமிஸ்டா… நான் இங்கே யோசிக்காததை, இங்கே உணராததை ஒரு போதும் கூறியதில்லை… இப்போது நான் கூறியது, பால் வெண்மை என்பது போன்ற மாற்றமுடியாத உண்மை… இதை இந்த சொத்துக்களை, நான் விரல் சுண்டும் விரைவில் சம்பாதித்துவிடுவேன்… ஆனால் உன்னை… எத்தனை கோடி ஆண்டுகள் தவமிருந்தாலும், பெறமுடியாத அதிசயம் நீ… உன்னோடு, இந்த ஜடப்பொருட்களை ஒப்பிடுவதே தப்புடா…” என்றான் அவள் கரத்தைப் பற்றியவாறு.

அந்தக் கரம் கொடுத்த அழுத்தம், அவன் உண்மையைப் பிரதிபலிக்க, அது வரை மனதில் அழுத்தியிருந்த பாரம், சிறிதாக விடுபட, மகிழ்ச்சியாகவே அவன் வீட்டை நோட்டமிடத் தொடங்கினாள்.

“அடேங்கப்பா… இது வீடா இல்லை அரண்மனையா?” என்று அதிர்ந்தாள் மாதவி. அதையே தேவகியும் பிரதிபலிக்க, இவள் உதட்டில் மெல்லிய புன்னகை வந்து தவழ்ந்தது.

அந்தப் புன்னகையைக் கண்ட அநேகாத்மன், மீண்டும் ஒருமுறை தலைக்குப்பிற விழுந்தான். அந்தப் புன்னகை அவன் உயிர் வரை தீண்டிச் சென்று ஒரு சிலிர்ப்பைக் கொடுத்தது. காலம் காலமாக அந்தப் புன்னகையைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்கிற வெறி வந்தது.

‘இவள் என்காகனவள், எனக்கு மட்டுமே உரித்தானவள், இவள் முகத்தில் எப்போதும் இந்தப் புன்னகை நிலைத்திருக்க வேண்டும். நிலைத்திருக்கும்… நிலைத்திருக்கவைப்பேன்…’ என்று தனக்குள்ளேயே சபதம் செய்தவன், சர்வமகியை பின்புறமாக நெருங்கினான்.

“இந்த வீடு பிடித்திருக்கிறதா?” என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.

அவன் உதடுகள், அவள் காதினை வருடிச் செல்ல, சிலிர்த்தாள் சர்வ மகி. அதிர்வுடன் திரும்பிப் பார்க்க, இவன் ‘என்ன’ என்பதுபோலப் புருவத்தை உயர்த்தி தலையை ஆட்டிக் கேட்டான்.

அவள் ஒன்றுமில்லை என்பதுபோலத் தலையை ஆட்டினாலும், முகம் செங்கொழுந்தாகிப்போனது.

அதைக் கண்டவன், தன் விழிகளையே நம்ப முடியாதவனாக, அவள் முகத்தையே வெறித்துப் பார்த்தான்.

அவன் இது வரை இப்படி நாணிய பெண்ணைக் கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை. வெட்கத்தால் முகம் சிவக்க, அதனால் கூசிய விழிகள் தரை பார்க்க, கூடவே உதட்டில் மலர்ந்த அந்த மெல்லிய சிரிப்பு, அப்பப்பா… அந்த அழகை எப்படி வர்ணிப்பது? அந்த அழகிற்கு உவமையாக எதைக் கூறுவது?

இவள் என் தேவதை… எனக்கே எனக்கான தேவதை என்கிற கர்வம் மீண்டும் அந்த ஆண்மகனைச் சூழ, அவனையும் அறியாமல், அவனுடைய மார்பு நிமிர்ந்து, அந்த ஆறடி நான்கங்குல உயரம், இன்னும் சற்று உயர்ந்து நின்றது. அது நல்ல மனைவியைப் பெற்ற ஒரு கணவனுக்கு வரும் கர்வம். அதற்கு நிகராக எதுவுமே அண்டமுடியாது. இன்னும் தரையையே தன் மனைவி பார்த்துக்கொண்டிருக்க, இவன் இன்னும் மயங்கிப்போனான்.

அந்த அழகை, உடனேயே ஆராதிக்க முடியாத நிலையால், அவன் முகம் இறுகிப்போனது. கைக்கு எட்டிய தூரத்தில் சுவைமிக்க கனி இருக்கிறது. அதை உண்ண வேண்டும் என்கிற பசியும், ஆவலும் கொழுந்து விட்டு எரிகிறது. ஆனால் அதை உண்ணக்கூடாது என்றால்?? யாருக்குத்தான் கோபம் வராது…?

“சூப்பரா இருக்கிறது அத்தான் உங்கள் வீடு…” என்று ஆர்ப்பணித்தவாறு மாதவி வர, அநேகாத்மன் தன் நிலை பெற்றவனாகச் சற்றுத் தள்ளி நின்றுகொண்டான். அவன் முகத்துடன் சேர்ந்து உடலும் இறுகிப்போனது.

நிலவு 37

எதையும் நினைத்த உடன் சாதித்துப் பழகிய அநேகாத்மன், முதன் முதலாக, தன் மனதைக் கொள்ளைகொண்டவளுக்காக, தன்னைக் கட்டுப்படுத்தித் தள்ளி நிற்கிறான்.

என்னதான் உடலால் தள்ளி நிற்க முயன்றாலும், அவனால் உணர்வாலும், மனதாலும் அவளை எள் அளவும் தள்ளி நிற்க முடியவில்லை. அதுவும், முன்பே அவளை விட்டு அவனால் தள்ளி நிற்கமுடியவில்லை. இப்போது மனைவி என்கிற உரிமையோடு, அவன் அருகே அவனுடைய வீட்டில் நினைக்கும்போதே, அங்கமெல்லாம் சிலிர்த்துக்கொண்டது.

அங்கிருக்கும் ஒவ்வொரு கணமும், அவள் சுவாசத்தை உணர்ந்து ரசிக்கவேண்டும் என்று மனம் கிடந்து தவித்தது. ஆனால் நெருங்க முடியாமல் விதி அவனைத் தடுத்தது. சிரமப் பட்டு அவளருகே செல்ல விளைந்த தன் கால்களை, நிறுத்தி, இரண்டடி தள்ளிவைத்தவன்,

“கம் இன்…” என்று அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைய முயன்றான்.

“ஸ்டாப்…” என்று கத்தினாள் தேவகி. அவள் ஏன் திடீர் என்று கத்துகிறாள் என்பதைப் புரியாமல், திகைத்தவாறு அனைவரும் அவளை ஏறிட, இப்போது தேவகியின் முகத்தில் குறும்பு மலர்ந்தது.

“ஏனத்தான் எத்தனை திரைப் படம் பார்த்திருக்கிறீர்கள்?|” என்றாள் கேள்வியாக. அநேகாத்மனோ, தலையும் புரியாமல், வாலும் புரியாமல், தேவகியை ஏறிட,

“ப்ளீஸ் சொல்லுங்கள்…” என்று கெஞ்சினாள் தேவகி. சர்வமகியும், மற்றவர்களும், குழப்பத்துடன், தேவகியையும், அநேகாத்மனையும் திரும்பித் திரும்பிப் பார்த்தனர்.

“நான் திரைப் படங்கள் பார்த்தது கிடையாது?” என்றான் அவன் குழப்பத்துடன்.

“வட்… ஒரு திரைப்படம் கூடப் பார்த்ததில்லையா?” என்று திகைத்தாள் தேவகி. கூடவே சர்வமகியும் திகைப்புடன் பார்க்க,

“இல்லைம்மா… எனக்கு இன்ட்ரஸ்ட் இருந்ததில்லை… என்னுடைய பொழுது படிப்பதிலும், விளையாட்டிலும் வாசிப்பதிலுமே கழிந்துவிட்டது. டீவி பார்ப்பதென்றால் டொக்யுமன்ட்ரி. அதற்கும் நேரம் கிடைத்ததில்லை…” என்றான் தயக்கமாக.

“அது சரி… அக்கா… அத்தானுக்குக் காதல் பாடம் நீ தான் சொல்லிக்கொடுக்க வேண்டும் போல…” என்று தேவகி சோகமாகக் கூற, மற்றவர்களுக்கு என்னவோ, சர்வமகி உடல் முழுவதும் சிவந்து போனாள். தன்னவனைக் காணக் கண்கள் கூசித் தரையில் பார்த்து இதழ் கடித்து நின்றவளைக் கண்டதும், மீண்டும் தலைகுப்புற விழுந்துபோய்ப் பார்த்தான் அநேகாத்மன்.

அவளை அப்படியே அணைத்துத் தன்னுள்ளே புதைத்துவிடவேண்டும் என்கிற வெறி அவனுள்ளே கொழுந்துவிட்டெரிந்தது.

அவள் நாணத்தை ஒவ்வொரு கணமும், ரசித்து ருசிக்கவேண்டும் என்று அவன் துடித்தான். வெறும் பேச்சுக்கே, இப்படி நாணுகிறாளே… என் விரல் பட்டால்… நினைக்கும்போதே, கற்பனைகள் எங்கெங்கோ சிதறிச் சென்றன. அதை உடனேயே செயற்படுத்தவேண்டும் என்கிற ஆவேசமும் எழ, அவளை நெருங்க ஓரடி வைக்க முயன்றான்.

“தேவகி… என்னம்மா இது…” என்று சங்கடத்துடன் சர்வமகி கேட்க,

“அது இல்லையக்கா… திருமணம் முடித்து முதன் முதலாக, அத்தானின் வீட்டிற்கு வருகிறாய்… முதன் முதல் வரும் மனைவியை வெள்ளைக்காரர்கள் பாணியில், கைகளில் ஏந்திச் சென்றால்தானே, நன்றாக இருக்கும். அது மட்டுமில்லையக்கா… இந்த நினைவுகள்தானே எப்போதும் பசுமையாக இருக்கக்கூடியது?” என்றாள் அவள். மனதிலே, தன் சகோதரியை அநேகாத்மன், ஏந்தியிருக்கும் காட்சியைக் கண்டு கழித்தவளின் முகம் மலர்ந்தது.

அநேகாத்மனோ, நகைப்புடன் ஒற்றைப் புருவத்தைத் தூக்கி, சர்வமகியைப் பார்த்து என்ன? தூக்கவா? என்பதுபோலக் கேட்க, அவள் மறுப்பாக, யாரும் கவனிக்காத வகையில் தலையை ஆட்ட, அவள் விழி அசைவைப் புரிந்துகொண்டவனாக,

“ஹேய்… மச்சினிச்சி… நம்முடைய காதலின் ரேஞ்சே வேறும்மா… அதைப் போகப் போகப் புரிந்துகொள்வீர்கள்… இப்போது உள்ளே வாருங்கள்…” என்று தன் மறுப்பை வேறுவிதமாகக் கூறியவன், அனைவரையும் உள்ளே அழைத்துச் சென்றான்.

ஆனால் கவனமாக சர்வமகியை விட்டுத் தள்ளியே நின்றுகொண்டான். அவனுக்கு அவனை எண்ணியே பயமாக இருந்தது. நிச்சயமாக அவள் அருகாமை அவனைச் சலனப்படுத்தும் என்பது அவனுக்கு நன்றாகப் புரிந்தது. ஏதாவது ஏடாகூடமாகச் செய்யப்போய், சர்வமகியின் மனதைக் காயப்படுத்த அவன் தயாரில்லை. அதை விட, இப்படித் தள்ளி இருப்பதே மேல் என்று இடைவெளி விட்டே வந்தான்.

அவர்கள் உள்ளே நுழைந்ததும், வரிசையாக பத்திற்கும் மேற்பட்ட சீருடை அணிந்த வேலையாட்கள் நின்றிருந்தனர். அதில் ஒருவர் அவ்வேலையாட்களை மேற்பார்வை பார்ப்பவர் போலும். அவர் கோட் சூட் அணிந்திருந்தார்.

அவரை “க்ரெய்ன்” என்று ஒரு தலையசைப்பால் அவரை அருகே அழைத்தான் அநேகாத்மன். டேவிட்சனின் விழிகள், சர்வமகியை வியப்புடனும், சற்று ஆர்வத்துடனும் பார்க்க, இவனுக்குப் புகைந்தது.

அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல், உயிரானவளை நெருங்கியவன், அவளைத் தன் அருகே இழுத்து, அவள் இடையில் தன் கரத்தைப் போட்டு தன்னோடு நெருக்கினான். அவனுடைய போதாத காலம், அவன் இழுத்த வேகத்தில், அவனுடைய கரம், அவள் மென்னிடையில் தாராளமாகப் பட்டது.

சர்வமகிகூட அதை உணரவில்லை. ஆனால், அநேகாத்மனுக்கு அந்த தீண்டலே ஏதோ பெரும் தவப்பயன் பெற்றதுபோலத் தோன்றியது. அவனையும் மறந்து, அவனுடைய விரல்கள் வீணையென, அவளுடைய இடையை மெதுவாக மீட்டத் தொடங்கின. விரல்கள் என்னவோ, வேறு கதை பேசினாலும், க்ரெய்னை அழுத்தமாகப் பார்த்த அநேகாத்மன்

“க்ரெய்ன்… ஷீ இஸ் மை வைஃப்… அத்தோடு, எனக்கும், இந்த வீட்டிற்கும் இவர்கள்தான் இனி பாஸ்… இவர்கள் சொல்வதைக் கேட்பதுதான் உங்கள் வேலை… இதோ இவர்கள் என் மனைவியின் சகோதரர்கள், என்னுடையதும்தான்” என்று அறிமுகப் படுத்த, சர்வமகி ஒருவிதமாக அதிர்ந்தாள் என்றால், க்ரெய்ன் இன்னொரு விதமாக அதிர்ந்தான்.

ஏன் என்றால், அநேகாத்மன் திருமணம் முடித்த செய்தி இன்னும் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. அவன் திடீர் என்று இப்படி மனைவியென்று ஒருத்தியை அழைத்துவருவான் என்று அவர்கள் என்ன கனவா கண்டார்கள். அது தெரியாமல், அவன் மனைவியை வேறு சுவாரசியமாகப் பார்த்துவிட்டோமே என்று அவன் சங்கடப் பட,

சர்வமகியோ. இடையில் படர்ந்திருந்த அவன் கரத்தை எண்ணி அதிர்ந்தாள். அனைவருக்கும் முன்னால், அதை விலக்கமுடியாத நிலை. அவள் தவிப்புடன் அநேகாத்மனைப் பார்க்க, அவன் உதட்டிலோ குறும்புப் புன்னகை.

“என்ன?” என்பதுபோல, வழமையாகச் செய்வது போல, இமையை உயர்த்தி தலையை ஆட்டிக் கேட்க, இவள் ஒன்றுமில்லை என்றுவிட்டு மீண்டும் ஒரு முறை செங்கொழுந்தானாள்.

அவள் இடையில் திடீர் என்று மலர்ந்த சூட்டை உணர்ந்து, சர்வமகியை ஏறிட்டவன், மிண்டும் அதாளபாதாளத்திற்குள் விழுந்தான். இனியும் பொறுக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டவனாக, அவளைப் பார்த்தவாறே, க்ரெயினிடம்,

“இவர்கள் ஓய்வெடுக்கவேண்டும், அதனால் அவர்களுக்குரிய அறையைக் காட்டுங்கள்… நான்… என் மனைவிக்கு எங்கள் அறையைக் காட்டுகிறேன்…” என்று கூறிவிட்டு, இடையிலிருந்த கரத்தை விலக்காமலே, அவள் முகத்தில் பதிந்த பார்வையையும் இறக்காமல், அவளை இழுத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றான் அநேகாத்மன்.

அறைக்குள் நுழைந்ததும், அறைக் கதவைச் சாத்தவும் பொறுமையற்றவனாகத் தன் கரத்திலிருந்த பிரீஃப் கேசை கட்டிலில் எறிந்தவன், சர்வமகியைத் தன் முன்னால் இழுத்து நிறுத்தினான்.

இப்போது அவள் முகத்தில் சிறு அச்சமும், தயக்கமும் தெரிந்தது. அவனோ

“சாரி மகிம்மா… ஐ கான்ட் டொலரேட் திஸ் எனி மோர்…” என்றவன், அவள் என்ன என்பதை உணர்வதற்குள்ளாகவே, அவள் இதழ்களை அழுந்த கவர்ந்துகொண்டான்.

முதலில் அதிர்ந்தவள், பின்பு சற்றுத் தயங்கி, தவித்து, இளகிக் கரையும் நேரம், மெதுவாக அவளை விடுவித்தான் அநேகாத்மன்.

மீண்டும் அவள் முகம் வெட்கத்தால், சிவக்க,

“ஓ காட்… நான் எப்படி உன்னிடமிருந்து விலகியிருக்கப்போகிறேன்…” என்றவன் மீண்டும் அவள் இதழ்களை நாடினான். மீண்டும், மீண்டும்… பின் மெதுவாக அவளை விடுவித்தவன்,

“ப்ளீஸ் மகிம்மா… இனி ஒரு தரம் என் கண் முன்னாக சிரிக்காதே… என்னால்… என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை… அதுவும் நீ வெட்கப்பட்டால்… ஓ காட்…” என்றவன், அவள் முகத்தைத் தன் கரங்களில் ஏந்தியவன், அவள் விழிகளுடன் தன் விழிகளைக் கலக்கவிட்டான்.

“மகிம்மா… உன் சிகிச்சை முடிந்து, நீ முற்றும் முழுதான ஆரோக்கியத்துடன் என்னிடம் வரும் வரைக்கும் நான் உனக்காகக் காத்திருக்க முடிவு செய்திருக்கிறேன். ஆனால்… நீ இப்படி புன்னகைக்கும் போதும், நாணப்படும் போதும், அந்த சத்தியத்தை என்னால் காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்று அச்சமாக இருக்கிறதும்மா…” என்றவனுடைய பெருவிரல், அவனுடைய உதட்டை மெதுவாக வருடிக்கொடுக்க,

அவளையும் மீறி, அவள் முகம் மீண்டும் சிவந்தது. அவள் முகச் சூட்டை உணர்ந்தவன், வியப்புடன், அவள் கழுத்தில் தன் கரத்தை வைத்துப் பார்த்தான்.

“ஏய்… நீ வெட்கப்படும்போது, உன் உடல் சுடுகிறது…” என்றான் கிசுகிசுப்புடன்.

சர்வமகியால் அதற்கு மேல் அவன் பிடியில் இருக்க முடியவில்லை. வேகமாக விலக முயல, உடனே விலகியவளின் கரத்தைப் பற்றித் தடுத்துத் தன்னை நோக்கி இழுத்தான் அவன். இழுத்த வேகத்தில் சுழன்று, அவள் பின்புறம், அவன் முன்புறத்தோடு, மோதி வாகாகப் பொருந்திக் கொள்ள, அவனுடைய இரண்டு கரங்களும், அவள் கரங்களைப் பற்றியவாறு, வயிற்றோடு அழுத்தி நிற்க,

“ஏய்… மகி… அப்போது நம்முடைய வீட்டைப் பற்றிக் கேட்டேன்… நீ ஒன்றுமே கூறவில்லையே… இந்த வீடு, என் உழைப்பில் கட்டிய வீடு… இங்கே உன்னைத் தவிர வேறு யாரும் இது வரை வந்ததில்லை… உனக்கு இந்த வீடு பிடித்திருக்கிறதா?” என்றான் ஆர்வமாக.

அவள் அமைதியாகத் தலை குனிந்திருக்க, அவளை விடுவித்துத் தன் புறம் திருப்பியவன், அவள் முகத்தைப் பற்றியவாறு,

“ஏய்… சொல்லு,… இந்த வீடு உனக்குப் பிடித்திருக்கிறதா?” என்றான் ஆவலுடன். அவனுடைய கரங்கள், அவளுடைய கூந்தலை ஒதுக்கித் தள்ளிவிட்டுக்கொண்டிருந்தாலும், விழிகளின் பயணம் என்னவோ, அவள் முகத்திலும், இதழ்களிலுமேதான் சென்றுகொண்டிருந்தன.

“ஹேய்… சொல்லு… உனக்குப் பிடித்திருக்கிறதா?” என்றான் தன் தன் விழிகளை அவள் விழிகளுடன் கலந்தவாறு. ஒரு கணம் அவன் விழிகளைப் பார்த்தவளின் முகம் அழகாக மலர்ந்தது. பின் அவன் மார்பைப் பார்த்தவாறு,

“ஆத்மன்…”

“ம்…”

“கட்டாயம் சொல்லவேண்டுமா?”

“இல்லை என்றால், நீ இந்த அறையை விட்டு போகமுடியாது…” என்றான் அந்தக் கள்வன் பிடிவாதமாக.

மெல்லியதாக நகைத்தவள், பின் அவன் முகத்தைப் பார்த்தாள். அப்பழுக்கில்லா அன்பைத் தேக்கி நின்ற அவன் விழிகளை ஆவலுடன் பார்த்தவள்,

“நீங்கள்… எங்கு இருந்தாலும், அந்த வீடு எனக்குப் பிடிக்கும்…” என்று மனம் உணர்ந்து சொன்னவள், தன் நாயகனைப் பார்க்க வெட்கம் கொண்டவளாக,

“நா… நான் கீழே போகிறேன்…” என்று கூறிவிட்டு, வேகமாக அவன் பிடியிலிருந்து விலகி, மான் எனத் துள்ளி ஓடியவளை

“ஹேய்… என்ன சொன்னாய் நீ…” என்று நம்ப மாட்டாதவனாகக் கேட்க,

“ம்… சொன்னேன் சுரைக்காய்க்கு உப்பில்லை என்று…” என்று கூறியவள், அதற்கு மேல் நிற்க முடியாதவளாக, கிளுகிளுத்துச் சிரித்தபடி, ஓட, மனம் நிறைந்த மகிழ்வுடனும், சிரிப்புடனும், குதூகலத்துடனும், நம்ப மாட்டா தன்மையுடனும், அவள் கிளுகிளுத்துச் சிரித்ததைப் பார்க்கவேண்டும் என்கிற வெறியுடன், அவளைப் பின் தொடர்ந்து ஓட முயன்றவன்,

“ஏய்… நில்லு… பார்த்துமா…” என்று கத்தி அவளை நிறுத்த முயன்றான். ஆனால் அவனுடைய சத்தம் காற்றோடு கலைந்ததுதான் மிச்சம்.

ஒரு கணம், தன் விழிகளை அழுந்த மூடியவனின் மனக்கண்ணில், நாணம் கொண்ட சர்வமகியே வலம் வந்தான்.

“ஓ மகிம்மா… நான் எப்படி உன்னை விட்டுத் தள்ளி இருக்கப்போகிறேனோ தெரியாது…” என்று முணுமுணுத்தவன், குளிர் நீரில் குளிக்கக் குளியலறைக்குள் நுழைந்தான்.

நிலவு 38

எல்லோரும் சற்று ஓய்வெடுத்த பின், பிரதீபனுக்கு கூறியதை நிறைவேற்றுபவனாக, அனைவரையும் அழைத்துக்கொண்டு, லம்போவில் வெளியே சென்றான்.

சர்வமகியோ, களைப்பாக இருப்பதாகக் கூறி மறுத்துவிட, சகோதரிக்கு உதவியாக இருப்பதாகக் கூறி, தேவகியும் மறுத்து விட்டாள். அதனால், மற்றைய மூவரையும் அழைத்துக்கொண்டு,   ஊர் சுற்ற அழைத்துச் சென்றான் அநேகாத்மன்.

திரும்பி வரும்போது, ஒவ்வொருவரும், பல பாசல்களுடன் உள்ளே நுழைந்தனர்.

சர்வமகி திகைப்புடன், அநேகாத்மனைப் பார்க்க, அவனோ அவளை நெருங்கினான்.

தன் சட்டைப்பையிலிருந்து, ஒரு சிறிய நகைப்பெட்டியை வெளியே எடுத்தவன், அதைத் திறந்தான். அதில் பிளாட்டினத்தில், வைரம் பதித்த ஒரு மோதிரம் விழிகளைச் சிமிட்டிச் சிமிட்டி அவளைப் பார்க்க, திகைத்தாள் சர்வமகி.

“மகிம்மா… திசிஸ் ஃபோர் யு…” என்றவாறு அந்த மோதிரத்தைக் கரத்தில் எடுத்தவன், அதனை, அவள் இடது கர மோதிர விரலில் அணிவித்தான். அந்த விரல்களைப் பற்றித் தன் உதட்டில் பொருத்தியவன்,

“வெல் கம் டு மை லைஃப்…” என்றான். சர்வமகிக்கு மூச்சை அடைத்தது.

எதுவும் கூறத் தெரியாமல் திகைத்துப்போய் அவள் நிற்க, அவள் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தவன்,

“ஹேய் பிடித்திருக்கிறதா?” என்று பெரும் ஆவலாகக் கேட்டான் அநேகாத்மன். அவளோ, அந்த மோதிரத்தின் அழகில் ஒரு கணம் மயங்கினாலும்,

“இது… இது அதிக விலையாக இருக்குமே… எதற்கு இந்த தேவையற்ற செலவு” என்றாள் அவனைக் கண்டிப்பது போல.

அதைக் கேட்டதும், அநேகாத்மனுக்கு சிரிப்பதா அழுவதா என்றுதான் தெரியவில்லை. வெறும் ஐம்பதாயிரம் டாலர் வைரம் இதைத் தேவையற்ற செலவு என்கிறாளே, என்று சற்றுப் புரியாமல்தான் பார்த்தான்.

சர்வமகி எப்போதும் தேவையற்ற செலவுக்கு ஆதரவு கொடுத்ததில்லை. பிரதீபன் தேவையில்லாமல் பணத்தை விரயமாக்கினால், கண்டிப்பாள்.

“இப்போது எதற்கு இந்த செலவு” என்பாள். அதே நினைவில், தன் கணவனையும் கண்டித்தாள்.

ஆனால் அநேகாத்மனுக்கு இது புதிது. அவன் பிறந்து வளர்ந்ததிலிருந்து, தாயைத் தவிர யாரும் அவனைக் கண்டித்ததில்லை. அவனுக்கு எது பிடிக்கிறதோ, அதையே செய்து பழக்கப்பட்டவன். அதுவும் அவன் அன்னை பானுமதி அவனுடைய இளவயதில் இறந்த பின், அவன் வைத்ததே சட்டம்.

அப்படிப் பட்டவனுக்குக் கண்டிப்புக் குரலில் சர்வமகி கூற, முதலில் திகைத்தவன், பின் மலர்ந்தான். அவனை அவள் கண்டிக்கிறாள் என்றால், அவனை அவள் ஏற்றுக்கொண்டாள் என்றுதானே அர்த்தம்.

ஆனால், அவனுடைய நிலையில், பணத்தைப் பற்றி இன்னும் பத்து ஜென்மத்திற்கு யாரும் கவலைப்படத்தேவையில்லையே…

“இல்லைம்மா… உனக்கு முதன் முதலாக வாங்கிய பொருள், பெறுமதி மிக்கதாக இருக்கவேண்டாமா?” என்று தன் நிலை மறந்து சமாதானப் படுத்தினான் கணவன்.

“அதற்காக… இப்படியா காசைக் கரியாக்குவார்கள்…” என்றாள் அவள் வேதனையுடன்.

“சர்வமகி… வட் இஸ் திஸ்… டோன்ட் வொரி எபவுட் த டாம் மணி… இன்றிலிருந்து நீயோ, இல்லை உன் சகோதரர்களோ, இந்தப் பணம் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை… என்ன நான் சொல்வது புரிந்ததா?” என்று அவன் கண்டிப்போடு கூற,

“அது… எப்படி…” என்று அவள் ஏதோ கூற வரை,

“தட்ஸ் இட்… நொ மோர் ஆர்கியூமன்ட்…” என்று அவன் கறாராகக் கூற, கப் என்று வாயை மூடிக்கொண்டாள் சர்வமகி. இருந்தாலும், அவள் முகம், விழுந்துவிட்டது.

“ஹேய்… மகிம்மா… வேண்டுமானால், நம் ரூமிற்குப் போய் பேசலாமா?” என்றான் அவன் கள்ளச் சிரிப்புடன்.

அவன் எதைக் குறிப்பிடுகிறான் என்பதைப் புரிந்ததும், அவள் தயக்கமும், கவலையும் காற்றோடு கரைய. அங்கே அவள் முகம் அந்தி வானமாகச் சிவந்து போனது. தன் சிவந்த முகத்தை, அவன் பார்வையிலிருந்து மறைக்க முயன்று தரையைப் பார்க்க,

அதைக் கண்டதும், பெரு மகிழ்வுடன், ஒரடி அவளை நோக்கி வைத்தவன், சூழ்நிலை உரைக்க,

“ஐ ஹாவ் டு கோ…” என்றவாறு விரைந்து தன் அறையை நோக்கிச் சென்றான். இல்லை, இல்லை ஓடினான்.

அதன் பின் அநேகாத்மனுக்கும் அதிக நேரம் கிடைக்கவில்லை. அன்றே தன் நண்பர்கள் மூலம் சிறந்த வைத்தியர்களின் பட்டியலை எடுத்தான்

சர்வமகியை அதிக தூரம் அழைத்துச் செல்ல அவன் விரும்பாததால் வைத்தியர்களைக் கனடாவிற்கே வரவழைக்க ஏற்பாடு செய்தான். பணத்திற்கா பஞ்சம்? அவன் எதைப்பற்றியுமே கவலைப்படவில்லை. சர்வமகி பிழைப்பதற்காக என்ன என்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்ய அவன் தயாராக இருந்தான்.

அன்று அவர்களுக்கு முதல் இரவு. அந்த உணர்வே இல்லாமல் இருவரும் ஏதோ ஒரு யோசனையில் மூழ்கிப்போயிருந்தனர்.

முன்னறை சோஃபாவில் சாய்ந்து அமர்ந்திருந்த சர்வமகியின் அருகே யாரோ வந்தமரத் திரும்பிப் பார்த்தாள். பிரதீபன்.

“என்னடா?” என்றாள் சர்வமகி கனிவாக.

“சாரிக்கா…” என்றான் குரல் கம்ம.

“சாரியா? ஏதற்கு?” என்றாள் சர்வமகி புரியாமல்.

“உன்னை அன்று நான் மன்னிக்க முடியாத வார்த்தைகளால் திட்டினேன்… எத்தனையோ முறை அதற்கு மன்னிப்புக் கேட்க முயன்றும், ஏனோ உன் முகத்தைப் பார்த்துப் பேச முடியவில்லை. எங்கே நான் அழுதுவிடுவேனோ என்று பயமாக இருந்தது…” என்றான் தலையைக் குனிந்தவாறு.

“இப்போது மட்டும் என்னவாம்? சிரித்துக்கொண்டிருப்பதாக எண்ணமோ?” என்றாள் அவன் தலை முடியைச் செல்லமாகக் கலைத்துவிட்டவாறு.

சர்வமகியின் கிண்டலைக் கேட்டபோது, பிரதீபனின் விழிகளில் மின்னல் தோன்றி மறைந்தாலும், அவ் இடத்தில் மீண்டும் சோகம் வந்து உட்கார்ந்து கொண்டது.

கன்னத்தில் வழிந்த கண்ணீரை அழுந்தத் துடைத்தவன், சகோதரியின் கரத்தைத் தன் கரத்தில் எடுத்துக்கொண்டான்.

“அக்கா… எங்களுக்கு நீ வேண்டுமக்கா… உனக்கு ஒன்றுமே ஆகக் கூடாது… உனக்கு ஏதாவது என்றால்… அதை எங்களால்…” என்றவனை இழுத்து அணைத்தாள் சகோதரி.

“அடடே… பாசமலர் திரைப்படம் ஓடுகிறதே… டிக்கட் இல்லாமலே, படம் பார்க்கலாம் போல இருக்கிறதே…” என்றவாறு வந்த மாதவி, சகோதரியின் காலடியில் அமர்ந்தாள்.

அதே நேரம் மாதவியின் பின்னால், வந்த தேவகியோ, வராத கண்ணீரைத் துடைத்தவாறு,

“அக்கா… நம்முடைய தம்பி சிவாஜியையே மிஞ்சிவிட்டான்…” என்று கிண்டலாகக் கூறியவள், தமக்கையின் அருகே தொப் என்று அமர்ந்தாள். வழமையாகச் செய்வது பேல, இரு கல்களையும் சோபாவில் நீட்டி வைத்தவாறு தன் தலையைச் சகோதரியின் தோளில் பதித்து, சர்வமகியின் நீண்ட கூந்தலைப் பற்றி விளையாடத் தொடங்கினாள்.

கடைக்குட்டி அபிதனோ, தூக்கக் கலக்கத்திலேயே வந்தவன், பிரதீபன் தன் சகோதரியின் அருகே நெருங்கி உட்கார்ந்ததால், ஏற்பட்ட பொறாமையில் முகம் சிவக்க, சகோதரியின் அருகே வந்து, பிரதீபனைப் பார்த்து முறைத்தான்.

பிரதீபனா கொக்கா? அவன் அபிதனைக் கண்டுகொள்ளவேயில்லை. தமையன் இன்னும் விலகி அமராததால், கோபம் கொண்டவன், ஒரு பாய்தலில், இருவருக்கும் இடையே விழுந்தான்.

அவன் வேகமாக விழுந்ததால், அபிதனின் முழங்கை, பிரதீபனின் தொடையில் பலமாக இடித்துவிட,

“அக்கா…” என்று வலியில் முனங்கியவாறு, தேய்த்து விட்டவன்,

“எருமை மாடு… குரங்கு… வானரம்…” என்று பலமாகத் திட்டத் தொடங்க, சர்வமகி ஒரு பார்வை பார்க்க, திட்டுவதை நிறுத்தியவன், அபிதனைப் பார்த்து முறைத்தான்.

அபிதனோ, பிரதீபனைக் கண்டுகொள்ளவேயில்லை. தமக்கையின் மடியில் தலைவைத்து தன் கால்களை வசதியாக பிரதீபனின் மடியில் போட்டவாறு படுத்துக்கொள்ள.

“தடி மாடு… இத்தனை இடம் இருக்கிறதல்லவா… அங்கே போய் படுக்கவேண்டியதுதானே…” என்று அவனுடைய கால்களைத் தட்டிவிட்டவாறு சினந்தான் பிரதீபன்.

“அதை நீ செய்யவேண்டியதுதானே… நீ ஏன் என் அக்காவின் அருகே உட்கார்ந்திருக்கிறாய்… போடா… போய் அந்த சோஃபாவில் உட்கார்…” என்றவாறு, தன் காலால், தன் தமையனைத் தள்ளி விட முயல, அவனோ, எழும்புவேனா பார் என்பது போலக் குத்துக்கல்லாட்டம் அதே இடத்தில் அமர்ந்திருந்தான்.

“அக்கா… இவனை எழுந்து போகச் சொல்லு, ஏன்டா அண்ணா என்னை டாச்சர் பண்ணுகிறாய் எழுந்திருடா மடையா…” என்று பிரதீபனை எழுப்ப முயன்றவாறு கத்தினான் அபிதன்.

“என்ன… நான் உன்னை டாச்சர் பண்ணுகிறேனா… இத்தனை நேரமும் அக்காவோடு பேசிக்கொண்டிருந்தது நான்… இடையில் குரங்குமாதிரி புகுந்துவிட்டுப் பேசுவதைப் பார்…” என்று பிரதீபன் கொதிக்க,

“ஷ்… பிரதீபா… அவன்தான் சின்னப்பிள்ளை… நீயாவது விட்டுக்கொடுக்கக் கூடாதா?” என்று வழமையாக, அபிதனுக்கே பரிந்து வந்தாள் அன்னையான சகோதரி.

“நீ எப்போதுதான் எங்களுக்காகப் பேசியிருக்கிறாய்… டேய் எழும்படா… நான் அக்காவுடன் நிறையப் பேசவேண்டி இருக்கிறது…” என்று சிறியவனை எழுப்ப முயல, அது தோல்வியிலேயே அவனுக்கு முடிந்தது.

“டேய்… அபிதன்… எழுந்திரு… இத்தனை நேரம், பிரதீபன்தானே இங்கே இருந்தான்… நீதானே இடையில் நுழைந்தாய்?” என்று தன் இளைய சகோதரனுக்கு ஆதரவாக மாதவி பேச,

“சீ பே… உன்னிடம் யாராவது பஞ்சாயத்திற்கு வந்தார்களா…” என்றவாறு, தூங்குவது போலத் தன் விழிகளை மூட,

“இட்ஸ் ஓக்கே… அவன் படுக்கட்டும்…” என்ற சர்வமகி, அவன் தலையை வருடிக் கொடுக்க, அந்த வருடல் கொடுத்த சுகத்தில், மெதுவாகத் தன் விழிகளை மூடினான் அபிதன். அதை எரிச்சலோடு, முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான், பிரதீபன்.

இந்த எல்லாக் கலவரத்தையும், தன் சகோதரியின் தோளில் சாய்ந்தவாறு கேட்டுக்கொண்டிருந்த, தேவகிக்கு விழிகளில் குளம் கட்டியது. மெதுவாக எழுந்து சகோதரியை ஏறிட்டவள்,.

“அக்கா… எங்கள் அம்மா உயிரோடு இருந்திருந்தால்கூட, உன்னைப் போல எங்களை இத்தனை அக்கறையுடன், பார்த்திருப்பாரா என்று எனக்குத் தெரியாது. எங்களைப் பொறுத்தவரைக்கும் நீதான் எங்கள் அம்மா… உனக்கு எதுவுமே ஆகக் கூடாது…” என்றாள் குரல் கம்ம.

கொஞ்ச நேரம் சர்வமகியால் பேசமுடியவில்லை. பாசம் என்பதுதான் எத்தனை புனிதமானது இத்தனை அருமையான சகோதரர்களைப் பெற அவள் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும்? தன் வேதனை ஒதுக்கி, சகோதரர்களைத் தேற்றுவது முக்கியமானதாகப் பட,

“இப்போது எதற்காக எல்லோரும் வருந்துகிறீர்கள். நான் அத்தனை சுலபத்தில் உங்கள் எல்லோரையும் விட்டுவிட்டுப் போய்விடுவேன் என்று நினைத்தீர்களா? அதுதான் இல்லை… நம்முடைய அபிக்குட்டியின் திருமணத்தைப் பார்த்த பின்புதான் போய்ச்சேர்வானாக்கும்…” என்ற சர்வமகி இளையவனின் தலைமுடியைக் கலைத்துவிட்டாள்.

இதைச் சற்றுத் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அநேகாத்மன்,

“என்ன… எல்லோரும் அக்காவைச் சூழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்? நமக்கும் அருகேவர இடம் கிடைக்குமா?” என்றவாறு உள்ளே வந்தான்.

அவனுடைய விழிகள் கூர்மையுடன் அங்கிருந்தவர்களை அளவிட்டது. தன் புத்தம் புது மனைவியை ஆளுக்கு ஒருவராக உரிமை கொண்டாடியது, அவன் பொறாமையைத் தூண்டியதோ. குறிப்பாக, அபிதன் மீதும், தேவகியின் மீதும் ஒரு படி மேலாகப் பொறாமை தோன்றியது.

ஏன் எனில் அவர்கள்தானே, அவனுக்குரிய மடியிலும் தோளிலும் தலைவைத்துப் படுத்திருக்கின்றனர்.

அவனைக் கண்டதும் உதட்டில் தொத்தியிருந்த புன்னகை மாயமாக மறைய, நிமிர்ந்தமர்ந்தாள் சர்வமகி.

அநேகாத்மன் உள்ளே நுழைந்ததும், தேவகியும் எழுந்தமர்ந்து கொண்டாள். ஒரே ஒரு கணம், அநேகாத்மனின் முகத்தில் தெரிந்து மறைந்த அந்தப் பொறாமையைக் கண்டவளுக்கு நகைப்புதான் வந்தது.

“யார் வேண்டாம் என்றா? நீங்களும் வேண்டுமானால் இங்கே ஒரு ஓரமாக உட்காரலாமே…” என்ற தேவகி அநேகாத்மனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

நிலவு 39

அவளுக்கு அநேகாத்மனைக் கண்டதும் நன்றிப்பெருக்கால் உள்ளம் சிலிர்த்தது. இன்று இப்படி மகிழ்ச்சியாகக் கூடி இருக்கிறார்கள் என்றால், அதற்கு அவன்தானே காரணம்.

பணக்காரர்களில் நல்லவர்களைக் கண்டுபிடிப்பது என்பது மிக மிகச் சிரமம். அப்படி இருக்கிறபோது, சர்வமகிக்கு உள்ள பிரச்சனையை அறிந்து, அவளை மணமுடிக்க வந்தவனை வெறும் மனிதனாக எண்ணிப் பேசிவிடமுடியுமா? மெய்யோ பொய்யோ, அவனுடைய தந்தையின் மரணத்திற்குக் காரணம் அவர்கள் தந்தை என்றுதானே உலகம் சொல்கிறது. அப்படியிருந்தும், அந்தக் குடும்பத்தில் ஒருத்தியை மணமுடித்தானே. அதுவும் பிடிவாதமாக… அவனை எப்படிப் போற்றினால் தகும்?

அது மட்டுமா? அக்காவுக்குத்தான் உடன்பிறந்தவள் என்கிற பாசம். இவனுக்கென்ன வந்தது? எம்மையும் தன் சகோதரராக ஏற்றுக்கொண்டானே… இவ்வளவு ஏன் அவன் வீட்டில் திருடிய பிரதீபனையே மன்னித்து விட்டுவிட்டானே… இது யாரால் முடியும்? விழி மூட மறந்தவளாக அநேகாத்மனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் தேவகி.

“என்ன தேவகி அப்படிப் பார்க்கிறாய்?” என்றான் அநேகாத்மன் சிறு புன்னகையுடன்.

“இல்லை அத்தான்… உங்களை நினைக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது…” என்றவள், சர்வமகிக்கருகே அவனுக்கு இடம் விட்டுத் தள்ளி அமர்ந்தாள்.

ஒரு தலையசைப்பின் மூலம் நன்றி தெரிவித்துவிட்டு,

“என்னைக் கண்டு பிரமிக்க அப்படி என்ன இருக்கிறது?” என்றவாறு, உரிமையுடன் சர்வமகியின் அருகே வந்தமர்ந்தான்.

ஏனோ அவளுக்கு அவன் அருகாமை பெரும் சங்கடத்தைக் கொடுத்தது. அன்று காலை, அவர்கள் அறையில் அவன் பதித்த முத்திரை நினைவில் வந்து இம்சித்தது. போதாததற்கு, அவன் விழிகள் வேறு, அவள் உதடுகளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க, இவள் நெளிந்தாள். அதைப் புரிந்து நகைத்தவன், அவள் தோளின் மீது தன் கரத்தைப் போட்டான்.

பெரும் சங்கடத்துடன் அவனைப் பார்த்தவள்,

“இது என்ன… கையை எடுங்கள்…” என்றாள் மெல்லிய குரலில்.

“என்ன தேவகி… உன் அக்கா இப்படிக் கூச்சப்படுகிறாள்? கையைப் போட்டால் கையை எடுக்கச் சொல்லி முறைக்கிறாளே…” என்றான் அநேகாத்மன் அப்பாவியாக.

“அதுதானே… என்னக்கா நீ… அத்தான் தானே… இதற்குப் போய் முறைக்கிறாயே…” என்ற தேவகி குறிப்பு உணர்ந்தவளாகப் புன்னகையுடன் எழுந்தாள்.

“எல்லோரும் உள்ளே வாருங்கள்… உறங்கும் நேரமாகிவிட்டது” என்றவள், தூங்கிப்போயிருந்த அபிதனின் அருகே வர,

“நான் வேண்டுமானால் அவனைத் தூக்கிவரவா?” என்று கேட்டான் அநேகாதமன்.

“ஓ… நோ அத்தான்… இது எங்களுக்குப் பழக்கம்தான். நீங்கள் பேசிக்கொண்டிருங்கள்…” என்றவாறு தூங்கிவிட்ட தம்பியைத் தன் கரங்களில், தூக்க முயல,

“தள்ளு தேவகி… நான் கொண்டு வருகிறேன்…” என்று தேவகியைத் தள்ளிவிட்டுத் தம்பியைத் தான் கரங்களில் ஏந்தினான் பிரதீபன்.

“எருமை… மாடு… ஒன்பது வயது ஆகப்போகிறது… இன்னும் குழந்தை என்கிற நினைப்பு வேறு… தூங்குவதைத் தன் அறையில் போய்த் தூங்குவதற்கு என்ன?” என்று சிடுசிடுத்தவன், தம்பியின் தலை தோளிலிருந்து விழா வண்ணம், கவனமாகத் தாங்கியவன், தன் அறைக்கு எடுத்துச் சென்றான்.

“என்ஜோய் அத்தான்…” என்றவள் சகோதரியின் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு, மற்றவர்களுடன் அந்த இடத்தைவிட்டு விலகிச் சென்றாள்.

அனைவரும் விலகிச் சென்றதும், வேகமாக அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்த சர்வமகி,

“என்ன இது… அவர்களுக்கு முன்பாக…” என்றாள் சற்றுக் கோபமாக.

“நான் என்னம்மா செய்யட்டும்…” என்றவன், மீண்டும் அவள் தோளைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டவாறு, அவள் கரங்களைத் தன் கரங்களுக்குள் எடுத்தவன்,

“ஐ திங்க் ஐ ஆம் இன் ஜெலஸ் வித் தெம்… ஒவ்வொருவரும் உன் மேல் தொத்திக்கொண்டிருக்கிறார்கள். நமக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்றதும் ஒரு வித பொறாமை வந்துவிட்டதுபோல் இருக்கிறது…” என்றவன் அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.

சர்வமகி முகம் சிவந்தாள். அவள் முகச் சிவப்பையே பார்த்தவன் ஒற்றை விரலால் அவள் கன்னத்தை மென்மையாக வருடிக்கொடுத்தான்.

“எப்பவும், இப்படியே உன் சிவந்த முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்போல் வெறியே வருகிறது மகிம்மா…” என்றவனின் தீண்டல், அவள் உதட்டில் வந்து மையம் கொண்டது.

அவன் தீண்டலால் தன் கீழ் உதட்டைப் பல்லால் கடித்தாள் சர்வமகி. அவள் முகத்தையே தாபத்துடன் பார்த்தவன், அவளை இன்னும் நெருங்கி அமர்ந்தான்.

முத்துப் பற்களுக்கிடையில் சிறைப்பட்ட, கீழ் உதட்டைப் பெருவிரல் கொண்டு விடுவித்தவன்,

“அது என்ன தப்பு செய்தது, உன் பற்களுக்குள் சிறைப்பட… ம்…” என்றான் விழிகள் மின்ன.

சர்வமகியின் முகமோ, மேலும் இரத்த நிறம் கொள்ள, தன் முகத்தை அவன் முன் மறைப்பதற்காகத் திருப்பிக்கொண்டாள். அவனோ, தன் கரங்களுக்குள் சிறைப்பட்ட, அவளுடைய கரங்களில் தெரிந்த சூட்டை உணர்ந்து, அவளுடைய நாணத்தைத் தெரிந்துகொண்டான்.

“ஹே… மகிமா… என் முன்னால் வெட்கப்படாதே என்று சொன்னேனே…” என்றவன் திரும்பியிருந்த அவள் முகத்தைத் தன் நோக்கித் திருப்ப, அவள் அழகில் அவன் சொக்கித்தான் போனான்.

அவனுடைய பார்வையின் மாறுபாட்டை உணர்ந்துகொண்டவளாக, அவன் பிடியிலிருந்து விலகி எழ முயல, அவளுடைய முயற்சியை, இலகுவாகத் தடுத்தவன், அவள் கன்னம் நோக்கிக் குனிந்தான்.

ஒரு கணம் திகைத்தவள், அவன் மீசையின் குறுகுறுப்பில் தவித்தவளாக,

“ஆத்மன்… ப்ளீஸ்…” என்றாள் குரல் கிசுகிசுக்க.

அவளுடைய சங்கடத்தை உடனேயே புரிந்துகொண்டவனாக,

“இப்படி உன்னைத் தள்ளிவைத்திருக்க, மிகவும் சிரமமாக இருக்கிறதுடா…” என்று பெரும் ஏக்கத்துடன் கூறியவன், தன் விழிகளை மூடி ஓரளவு சமப்படுத்தியவனாக, தன் கரங்களுக்குள் சிக்கியிருந்த அவள் கரங்களை விரித்து, அதில் சிவந்திருந்த அந்த உள்ளங்கைகளில் தன் பெருவிரலால் கோலம்போட்டான்.

“மகிம்மா… உன் உள்ளங்கை… பிறந்த குழந்தையின் கரங்கள் போல, மென்மையாக இருக்கிறது…” என்றான் வியப்புடன்.

ஏனோ சர்வமகிக்கு அவன் அணைப்பிலிருந்து தன்னை விடுவிக்கப் பிடிக்காதவளாக அப்படியே இருந்தாள்.

காலம் காலமாகத் தேடிவந்த மன அமைதி அப்போது கிடைத்ததுபோலத் தன் விழிகளை மூடினாள் சர்வமகி.

அநேகாத்மன் அவள் கரங்களையே நீண்ட நேரம் பார்த்தவாறு, வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தான். எத்தனை மெல்லிய கரங்கள். தொட்டாலே உடைந்துபோய்விடும் போல… நீண்ட நேரத்திற்குப் பின் அவள் முகத்தைப் பார்த்தான்.

விழிகள் மூடியிருந்தன. தோளை வளைத்திருந்த கரத்தால் அவளுடைய வலது புறக் கன்னத்தை வருடிக்கொடுத்தான்.

அப்படியே சுருண்டு அவன் கழுத்து வளைவில் முகம் புதைக்க நினைத்தவளுக்கு, அவனுடைய அசாதாரண உயரம் இடைஞ்சலைக் கொடுத்தது. ஒன்று அவன் சரிந்து கொடுக்கவேண்டும், இல்லை, அவள் முளந்தாளிட்டு அமர்ந்து அவன் கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைக்கவேண்டும். இரண்டும் சாத்தியமல்ல, என்பதால், அவனுடைய தோள் வளைவில் தன்னுடைய முகத்தைப் புதைக்க முனைய, அவனோ இருந்த வாக்கிலேயே, அவளுடைய முழங்கால்களுக்கு இடையில் தன் கரத்தைச் செலுத்தி, சுலபமாக அவளைத் தூக்கித் தன் மடியில் ஏந்திக்கொண்டான்.

அவள் அதிர்ச்சியுடன் தன் விழிகளைத் திறக்க, அவளைப் பார்த்துக் கண்ணடித்தவன், தன் வலது உள்ளங்கையை, அவளுடைய வலது கன்னத்தில் வைத்துத் தன் மார்போடு, அவள் முகத்தை அழுத்திப் பதித்துப் பதாகையாகத் தன்மீது தாங்கிக்கொண்டான்.

அந்தக் கணம், இருவருக்குமே பேசவேண்டும்போல இருக்கவில்லை. அந்த மௌனமே ஆயிரம் கதைகளைப் பேசின. தன் வலது கரத்தை, அவனுடைய அகன்ற பரந்த மார்பில் பதிக்க, அவனுடைய இதயத்தின் துடிப்பு முரசென, அவள் கரங்களுக்குள்ளாகச் சென்று, அவள் இதயத்தைச் சென்றடைந்தது.

அவளுக்கு ஏனோ அவனை விட்டு விலக மனமிருக்கவில்லை. அவள் இன்னும் எத்தனை காலங்கள் இந்த உலகத்தில் இருக்கப்போகிறாள்? மிஞ்ச மிஞ்சி மூன்று மாதம்? ஆறு மாதம்? ஒரு வருடம்? அவள் இருக்கப் போகிற இந்தச் சொற்ப காலத்தில் ஏன் அவனுடைய அருகாமையின் சுகத்தை அனுபவிக்கக் கூடாது?

அநேகாத்மன் தன் காதலைக் கூறியிருந்தாலும், இது வரை அவள், அவன் மீது தான் வைத்திருந்த காதலைக் கூறவில்லை. காரணம், தன் காதல், அவன் வாழ்வை அழித்துவிடுமோ என்கிற அச்சம். அதனால்தான் அவளை மணமுடிக்கக் கேட்டபோது, அவள் ஆரம்பத்திலேயே மறுத்தாள். அவனுக்குத் தன்னால் மகிழ்வான வாழ்வைக் கொடுக்க முடியாது என்று அவள் முழுதாக நம்பினாள். ஆனால் இப்போது அவள் அவனுடைய மனைவி. உரிமையுள்ளவள், இருக்கும் வரைக்கும் அவனுடைய அருகாமையில் சந்தோஷமாக இருந்துவிட்டுப் போவதில் என்ன தவறு? அவள் முடிவு செய்துவிட்டாள்.

ஆழமாக அவனுடைய உடல் வாசனையை மூச்சாக இழுத்துத் தன்னுள் நிரப்பிக்கொண்டாள். எத்தனை நேரம், அப்படியே இருந்தாளோ, அப்படியே அவன் கதகதப்பில் உறங்கியும் போனாள்.

“மகிம்மா…” என்று மென்மையாக அழைத்துப் பார்த்தான் அநேகாத்மன்.

அவளிடம் அசைவிருக்கவில்லை. நெற்றியில் விழுந்த கூந்தலை விலக்கிவிட்டவன், மீண்டும் “மகிம்மா…” என்றான். அவளிடமிருந்து மெல்லியதாக ‘ம்…’ என்ற ஓசை மட்டும் கேட்டது.

“மகிம்மா… ஐ லவ் யு…” என்றான். அவன் கூறுவது எங்கோ ஒரு தொலைவில் கேட்பதுபோல சர்வமகிக்கு இருந்தது. கனவு காண்கிறோம் என்று நிச்சயமாக நம்பியவள், அந்த இனிமை தந்த சுகத்தில் மெல்லிய புன்னகையைச் சிந்தினாள்.

மனதிற்குள்ளேயே “ஐ லவ் யு டூ” என்றாள். அதன் பின் ஆழ்ந்த உறக்கத்தின் வசமானாள். அவள் உறங்கிவிட்டாள் என்பது புரிந்ததும், அவளை இறுகத் தன்னோடு அணைத்துக்கொண்டான் அநேகாத்மன். அந்த அணைப்பு ஒரு போதும் இனி அவளை விட்டு விலகப்போவதில்லை என்பதைக் கூறாமல் கூறியது.

நீண்ட நேரம் தன் மனைவியின் முகத்தைத் தன் மார்பில் அழுத்தி வைத்துக்கொண்டு, அவள் முழுதாகத் தனக்கு வேண்டும் என்று தவித்துக்கொண்டிருந்தவன், மெதுவாகத் தன் கரத்தை இளக்க, அவளுடைய முகம், தூக்கத்தில் அவன் உள்ளங்கையோடு சேர்ந்து சரிய, வேகமாக அவள் வதனத்தைத் தன் கரங்களில் தாங்கிக்கொண்டான் அந்தக் காதலன்.

தூக்கத்தில் மூடியிருந்தது விழிகள். கூடவே அவள் கூந்தல் கலைந்து அவள் முகத்தோடு உரசி விளையாட, அக் கூந்தலை தன் மறுகரம் கொண்டு ஒதுக்கிவிட்டான் அநேகாத்மன். சிவந்த இதழ்கள் கொஞ்சமே கொஞ்சமாய் பிளந்திருக்க, அதனிடையே அவளுடைய  வெண்ணிற பற்கள் சிறிதாக எட்டிப் பார்த்து அவனை அழைப்பது போலத் தோன்ற, அநேகாத்மன் திணறிப்போனான்.

அவன் கையணைப்பில் பாதுகாப்பை உணர்ந்து தன்னை எந்தத் தீங்கும் அண்டாது என்கிற முழு நம்பிக்கையில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் தன் மனையாளின் நம்பிக்கையைத் தன்னால் காப்பாற்ற முடியுமா என்று உள்ளம் தவித்தது. தன் கீழ் உதட்டை மெதுவாகக் கடித்தவாறு, அந்த அழகிய முகத்தைத் தன் சுண்டுவிரல் கொண்டு வரியாகக் கீறினான். அந்த மென்மையில் திணறியவன்,

“மகி… ஐ நீட் யு… என் காலம் பூராவும் உன் மடி எனக்கு மட்டுமே உரியதாக இருக்கவேண்டும்… என் முதுமைக்கும் என்னை அணைத்துத் தாங்க உன் கரங்கள் வேண்டும்… கோபப் படும்போது சாந்தமாக என் கோபத்தைத் தீர்க்க, மகிழ்ந்து சிரிக்கும்போது, அருகேயிருந்து என்னை அரவணைக்க, வேதனைப்படும்போது தோள் கொடுக்க, எப்போதும் நீ… நீ மட்டும் எனக்கு வேண்டும் மகி… எனக்கு சர்வமுமாய் நீ வேண்டும்… அநேகனாய் நின்று, நம் வாழ்வில் நீ எடுத்து வைக்கும் அனைத்து அடிகளுக்கும் துணையாக, உன் ஆத்மாவாய் எப்போதும் உன் கூடவே இருப்பேன்மா… ஐ ப்ராமிஸ் யு… உன்னைக் காத்துக்கொள்ள, உன்னைப் பாதுகாக்க, உன்னைத் தாங்கிக்கொள்ளவேனும் நீ எனக்கு முழுதாக வேண்டும்… கண்ணம்மா…” என்று மனதார எண்ணியவன் குனிந்து அவள் நெற்றியில் தன் உதட்டைப் பொருத்தி எடுத்தான். அப்படியே அவள் மூக்கிலும் மெல்லிய முத்தத்தைப் பதித்தான். அது போதாது என்பது போல, அவள் உதட்டிலும் நாடியிலும், மென்மையாக முத்தமிட்டு விலகியவன் மீண்டும் அவள் முகத்தை ஏக்கத்துடன் பார்த்தான்.

சர்வமகி ஆழ்ந்து உறங்கிவிட்டது புரிந்தது. அப்படியே அவளைத் தன் கரத்தில் ஏந்தியவன் கனத்த மனதுடன் அவர்களுக்குரிய படுக்கையறைக்குத் தூக்கிச் சென்று அவளைக் கிடத்தினான். அவனும் உடைமாற்றிவிட்டு வந்து அவளருகே படுத்துக்கொண்டான்.

அவளைப் பார்த்தவாறே படுத்தவனுக்கு முதன் முறையாகப் பயம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொண்டான்.

சர்வமகி இல்லாத வாழ்வை நினைக்கும் போதே அவனுக்கு சர்வமும் அடங்கிவிடும் என்பதுபோல அச்சமாக இருந்தது. யாருக்கும் கிடைக்காத அந்த அற்புத மலரை, இழந்துவிடுவோமோ என்று பெரும் தவிப்பாக இருந்தது.

அவன் விசாரித்த வைத்தியர்கள் யாருமே அவனுக்குப் பிடித்தமான செய்தி எதையும் கூறவில்லை. அது கான்சராக இல்லாவிட்டாலும், அந்த கட்டி இருக்கும் இடம் மிகவும் ஆபத்தானதாக இருப்பதால், அதை அறுவைச் சிகிச்சை மூலம் வெளியே எடுக்கமுடியாது என்றார்கள். அப்படியே எடுத்தாலும், கைகால் விளங்காமல் போக வாய்ப்பிருக்கிறது. அல்லது கோமாவிற்குப் போய்விடுவார்கள் என்றார்கள்.

இதை எதையுமே அவன் யாருக்கும் சொல்லவில்லை. அவனுடன் சேர்ந்து மற்றவர்களும் வருந்துவதை அவன் விரும்பவில்லை.

“மகிம்மா… உன்னை நான் எப்படிக் காப்பாற்றப்போகிறேன்…” என்று தவிப்போடு முனங்கியவனுக்குத் தூக்கம் வருவதாக இல்லை.

வெளியே வந்தவன் ஒரு சிகரட்டை எடுத்து உதட்டில் பொருத்தினான். மனம் அமைதியில்லாமல் தவித்தது.

எத்தனை நேரமாக அவன் அங்கேயே நின்றானோ அவனுக்குத் தெரியாது, திரும்பி வந்து, படுக்கையில் விழப்போகும்போது, சர்வமகி கொடுத்த வாசுதேவனின் குறிப்பேடு அவன் கண்களில் பட்டது. அதை எட்டி எடுத்தவன், மீண்டும் முன்னறைக்கு வந்தான். ஒவ்வொரு தாழ்களாகப் புரட்டினான்.

ஒவ்வொரு தாள்களிலும் அவன் ஒவ்வொன்றை உணர்ந்து கொண்டான். அவனுடைய புருவங்கள் முடிச்சிட்டன. புரியாதவை பல புரிந்தன. நேரத்தைப் பார்த்தான். இரவு மூன்று மணி. தன் கைப்பேசியை எடுத்து, டேவிட்டிற்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பினான். “ஹாய் டேவிட்… ஒருத்தரைப் பற்றிய பத்து வருடங்களுக்குண்டான முழுத் தகவல்களும் எனக்கு வேண்டும்… அவருடைய பெயர் நடராஜன்… கவிதா இன்டர்ஸ்ட்ரியல் செயர்மன்…” கொஞ்ச நேரம் ஏதேதோ எண்ணிக்கொண்டிருந்தவன், படுக்கையில் விழுந்தபோது நேரம் காலை நான்குமணியையும் தாண்டியிருந்தது.

நிலவு 40

மறுநாள் ஞாயிற்றுக் கிழமை… அநேகாத்மன் எழுந்தபோது மணி பகல் பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. ஒருவாறு தூக்கம் விடைபெறும் சமயம், எங்கோ, பலத்த சப்தம் கேட்க, விருக்கென்று எழுந்தமர்ந்தான்.

ஒரு கணம் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் வீட்டில் இத்தகைய பெரிய சத்தம் கேட்க வாய்ப்பே இல்லையே… மெது மெதுவாக சுயத்திற்கு வந்தவன், தன் படுக்கையின் மறுபக்கம் பார்த்தான். வெறுமையாக இருந்தது. நடை தள்ளாட எழுந்தான்.

“இது என்ன வீடா… இல்லை… சந்தைக்கடையா?” என்கிற கொதிப்புடன் குளியலறைக்குள் நுழைந்தவன், தேவையை முடித்து முகம் கழுவிவிட்டுக் கையில் கிடைத்த டீ சேர்ட்டை அணிந்துகொண்டு, அறையை விட்டு வெளியே வந்து சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றான்.

“அக்கா… பாரக்கா இந்தத் தடியனை… குளியலறையை விட்டு வெளியே வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறான்… வெளியே வரச் சொல்லுக்கா…” என்று பெரும் சத்தமாக முறையிட்டாள் மாதவி.

“ஷ்… எதுக்கு மாதவி இப்படி சத்தம் போடுகிறாய்? அத்தான் எழுந்துவிடப் போகிறார்… குரலை அடக்கிப் பேசு…” என்று அவளைக் கண்டித்துக்கொண்டிருந்தாள் சர்வமகி.

“என்னை மட்டும் திட்டு… அந்த பிரதீபன் குரங்கை மட்டும் ஒன்றும் சொல்லாதே…” என்றாள் இவள் கொதிப்புடன்.

“ஏன் மாதவி, அங்கே ஒரு குளியலறைதான் இருக்கிறதா… பக்கத்து அறைக் குளியலறையை உபயோகிக்கலாமே…” என்றாள் மென்மையாக சர்வமகி.

“அதற்குள் தேவகி நிற்கிறாள்…” என்றாள் இவள் எரிச்சலுடன்.

“அது இரண்டும்தானா குளியலறை, இந்த வீட்டில் பத்துக்கும் மேல் அறைகள் இருக்கின்றன. ஓவ்வொரு அறைக்கும் குளியலறை இருக்கிறது. அதில் ஒன்றை பயன்படுத்துவதுதானேம்மா…”

“இல்லைக்கா… நமக்குத் தந்த அறையை விட்டு, வேறு அறைக்குள் நுழையச் சங்கடமாக இருக்கிறதே…” என்றவாறு மாதவி, அருகேயிருந்த காரட் ஒன்றை எடுத்து வாயில் திணித்தாள்.

“பல்லுத் தீட்டாமல் இது என்ன பழக்கம் மாதவி…” என்று கண்டிக்க,

“அதை விடக்கா… இப்போது நன் எப்படிக் குளிக்கிறது…” என்று சிணுங்கியவளைக் கண்டுகொள்ளாது,

“உன்னை யார் நேரம் தாமதித்து எழச் சொன்னது?” தாளிதத்திற்கு வெங்காயத்தைப் போட்டவாறு.

“இன்று ஞாயிற்றுக்கிழமை… கொஞ்சம் அசந்து தூங்கிவிட்டேன்… அது மட்டுமில்லைக்கா… எங்கள் படுக்கை இருக்கிறதே… பஞ்சு போல மென்மையா இருக்கக்கா… எழுந்துகொள்ளவே மனமில்லை. இந்த தேவகிதான் என்னை எழுப்பிவிட்டாள்…” என்றாள் அந்த படுக்கையின் சுகத்தை அனுபவித்தவாறு.

“நன்றாகத்தான் சமாளிக்கிறாய் மாதவி… சோம்பேறி போலத் தூங்கிவிட்டுப் பேச்சைப் பார்… சரி… கொஞ்சம் பொறுத்துக்கொள்… பிரதீபன் இப்போது வந்துவிடுவான்…” என்றவாறு தக்காளியை வெட்டத்தொடங்கினாள் சர்வமகி.

எரிச்சலுடன் வெளியே வந்த அநேகாத்மனுக்கு, சர்வமகியின் மென் குரல் காதில் விழ, அவனுடைய எரிச்சல் மெதுவாக அவனை விட்டு விலகத்தொடங்கியது.

உதட்டில் சிறு புன்னகையுடன் வந்துகொண்டிருந்தவனுக்கு முதன் முறையாக அவனுடைய வீட்டில் இத்தனை பெரிய சத்தம் கேட்பது வியப்பாக இருந்தது. இது அவனுக்குப் புதிது. ஒருவனாகவே வளர்ந்த அவனுக்கு இப்படி கலகல எல்லாம் ஆச்சரியமான விடயமே.

சமையலறை நோக்கி வந்தவனுக்கு, சமையலறைக்கு வெளியே வேலையாட்கள் வரிசையாக நின்றவாறு, அடுத்து என்ன செய்வது என்று புரியாமல், திரு திரு என்று விழித்துக்கொண்டு இருப்பதைக் கண்டதும், திகைத்தான்.  அருகே நின்றிருந்த டேவிட்சனை அழைத்து,

“வட் ஹாப்பன்ட்?” என்hறன்.

“இல்லை… மாம் சமையல் ஏதோ செய்கிறார்கள், அதனால் இவர்களை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டார்கள். இவர்களுக்கு வேலை நேரம் ஓய்வெடுக்க முடியாது என்பதால் என்ன செய்வது என்று புரியாமல்…” என்று இழுக்க, இவனுக்குக் கோபம் வந்தது.

“சர்வமகி… வட் த ஹெல் இஸ் கோயிங் ஆன் ஹியர்…” என்றவாறு சமையறையின் உள்ளே நுழைய, ஆத்மனின் குரலைக் கேட்டதும், முகம் எல்லாம் பூரிக்க மலர்ச்சியுடன் திரும்பியவளைக் கண்டதும் தன் நிலை மறந்து திகைத்தான் அநேகாத்மன்.

கணுக்கால் வரை நீண்ட பாவாடையுடனும், நீண்ட கைகொண்ட சட்டையுடனும், நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமமும் துலங்க, குங்குமத்திற்கு மேலே மெல்லிய கோடாகத் திருநீறும் பளிச்சிட, மார்பிலே முன்தினம் அவன் கட்டிய புத்தம் புதுத் தாலி தொங்க, இவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் அவன் தேவதை. அவளைக் கண்டதும், அவன் கோபம் அனைத்தும், மறு கணம் காணாமல் கரைந்து ஓட, இவள் என்னவள் என்கிற பெருமையில், அவளையே ஆர்வத்துடன் பார்த்தான்.

அவன் வீட்டில் சாமியறையே இல்லை. அவள் தான் இந்தத் திருநீற்றைக் கொண்டு வந்திருக்கவேண்டும். என்னவோ அவனுக்கு இது வரை சாமி நம்பிக்கை வந்ததில்லை.

திகைத்து விழித்த அநேகாத்மனைக் கண்டதும், நாகரீகம் கருதி, வாயிலே வைத்திருந்த கரட்டைக் கூடக் கையில் எடுக்காது, அப்படியே நெளிந்து வளைத்து வெளியேறிய மாதவிக்குப் புன்னகையை அடக்க முடியவில்லை.

“அடேங்கப்பா… இவரையெல்லாம் டெரர் பீசென்று எவன் சொன்னான்… சரியான அக்கா வாலு…” என்று நினைத்தவள், வெளியே வராத சகோதரியைத் திட்டிக்கொண்டே தன் அறைக்குள் நுழைந்தாள்.

இங்கே தன்னை வியப்புடன் பாதம் முதல் தலை வரை விழிகளால் நனைத்துக்கொண்டிருந்த ஆத்மனைக் கண்டதும், உடல் சிவந்து போக,

“நீங்கள் என்ன குடிப்பீர்கள்… தேநீரா காப்பியா?” என்றாள் நிலைமையைச் சமாளிக்க முயன்றவளாக.

என்னவோ நேற்றைய அவன் அருகாமைக்குப் பின்பு அவளால் அவனை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியவில்லை. இன்னும் அந்த பரந்த மார்பும், அது கொடுத்த கதகதப்பும், அவன் இதயம் சொன்ன செய்தியும் நினைவில் வர, மேலும் சிவந்து போனாள் சர்வமகி.

சும்மாவே, அவள் சிரித்தால், இவனால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது, இப்போது முகம் சிவந்திருந்தவளைக் கைக்கெட்டும் தொலைவில் வைத்துக்கொண்டு எப்படி சும்மா இருப்பான். வேகமாகத் தன்னவளை நெருங்க, நெருங்கிய கணவனிடம் தப்புவதற்காக இரண்டடி பின் வைத்தவள், சமையலறை மேசையில் மோதி நின்றாள்.

அவனும் அவள் வேகத்திற்கு ஈடு கொடுத்தவனாக, சமையல் மேசையில் அவளுக்கு இரு பக்கமும் சிறை வைப்பது போலத் தன் கரத்தைப் பதித்தவன், அவள் முகம் நோக்கிக் குனிந்தான்.

அவளோ, தன் தலையைப் பின்னுக்கு இழுக்க, இவன் இன்னும் நெருங்கினான். தலையைப் பின்னுக்கு இழுத்தவாறு, தன் கணவனை அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருக்க, தன் உதட்டைக் குவித்து, தான் எடுத்த மூச்சுக் காற்றை, அவள் முகம் நோக்கி ஊத, அந்தக் காற்றில் மயங்கியவளாகத் தன் வழிகளை மூடினாள் சர்வமகி. அவன் ஊதிய காற்று நின்றதும் மெதுவாகத் தன் விழிகளைத் திறந்தாள் அந்தக் கோதை.

அவனுடைய விழிகள், திறந்த அவளுடைய நயனங்களுடன் இணைந்து இரகசியம் பேசின. அவ் இரு விழிகளின் மொழியையும் புரிந்துகொண்டவளின் உதடுகள் மேலும் நாணத்தால் துடிக்க, அந்தத் துடிப்பை அடக்க முடியாதவளாகத் தவிப்புடன் தன் கீழ் உதட்டைப் பற்களால் கடித்து அடக்க முயல, இப்போது அவனுடைய விழிகள் சற்றுக் கீழிறங்கி அந்த உதடுகளில் சரணடைந்தன.

இனியும் முடியாது என்பது போல, அவளுடைய உதடுகளை நோக்கி அவன் குனிய, அவனது நோக்கம் புரிந்தவளாகத் தன் கரத்தினை அவன் மார்பில் படித்துத் தடுக்க முயன்றாள் அக் காவியம். அவனுடைய பலத்திற்கு அணைபோட அவளால் எப்படி முடியும்.

அவளுடைய கரங்கள் மடிய, அவன் உதடுகள் அவள் உதடுகளைச் சங்கமிக்கும் தருணம்,

“ஆத்மன்… ப்ளீஸ்… வெளியே வேலையாட்கள் இருக்கிறார்கள்…” என்றாள் அவள் கிசுகிசுப்புடன். சற்று நிதானித்தவன், அவள் மூக்கில் மெல்லிய முத்தத்தைப் பதித்துவிட்டு விலகி நின்றவன், தன் கரத்தை மார்புக்குக் குறுக்காகக் கட்டியவாறு, இன்னும் தன்னை ஏறிடத் தயங்கிக்கொண்டிருந்த தன் மனையாளைப் பார்த்து,

“ஏனம்மா அவர்களை வெளியே அனுப்பினாய்?” என்றான். ஒரு கணம் அவன் யாரைப் பற்றிக் கூறுகிறான் என்று புரியாமல் திகைக்க,

“நம் வேலையாட்களைத்தான் கேட்கிறேன், அவர்களை வெளியே அனுப்ப என்ன அவசியம் வந்தது. அவர்கள் செய்வது உனக்குப் பிடிக்கவில்லையா… வேண்டுமானால், வேறு வேலையாட்களை வருவிக்கவா?” என்றான் சற்று அழுத்தமாக.

ஒருவாறு சுய நினைவு பெற்றவள்,

“ஐயையோ… அப்படியெதுவும் இல்லை ஆத்மன்… அவர்கள் பாவம். இத்தனை காலமாக உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். காலையிலிருந்து வேலை செய்கிறார்கள். அதுதான் ஓய்வெடுக்கச் சொன்னேன்… நம் ஆறு பேருக்கு எதற்கு வேலையாட்கள்? தவிர, நாமே நமக்காகச் சமைத்துச் சாப்பிடுவதில் உள்ள மகிழ்ச்சி எதில் இருக்கிறது சொல்லுங்கள்? அதுவும் நாம் எல்லோருக்கும் நானே சமைக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது… ப்ளீஸ்… நானே சமைக்கிறேனே…” என்றாள் கெஞ்சுதலாக.

அந்தக் குரலுக்கு மறுப்பாக அவன் எப்படிப் பேசுவான்.

“ஷ்.. மகிம்மா… நீ இந்த வீட்டுக்கு எஜமானி… நீ சொல்வதைக் கேட்கத்தானே நாங்கள்  இருக்கிறோம். அதற்கு எதற்காகக் கெஞ்சுகிறாய்… இப்போது உனக்கு என்ன செய்யவேண்டும்…? சமைக்கவேண்டும்… அவ்வளவுதானே…” என்றான் அவன்.

“இல்லையாத்மன்… நாமே நம்முடைய வேலைகளைச் செய்யவேண்டும்… அதற்கு எதற்கு வேலையாட்கள்…” என்றாள் சர்வமகி அவசரமாக.

“ஓக்கே… உனக்கு என்ன என்ன செய்யப் பிடிக்கிறதோ, அதை செய்துகொள். பட் ஒன் கண்டிஷன்…” என்றதும், முகம் மலர

“என்ன?” என்றாள் அவள் ஆர்வமாக.

“எந்தக் கடுமையான வேலையும் நீ செய்யக் கூடாது… ப்ராமிஸ் மி….” என்றான் அவன் அழுத்தமாக.

“ஓக்கே… நான் எந்தக் கடுமையான வேலைகளும் செய்யமாட்டேன்…” என்று அவள் சத்தியம் செய்ய,

“அது மட்டுமல்ல… குறைந்தது வீட்டு வேலைகளைச் செய்ய இருவர் இங்கே இருக்கவேண்டும்… இல்லையென்றால், இந்த வீட்டைத் துப்பரவாக்கும் வேலையையும் நீ செய்யத் தொடங்கிவிடுவாய்… அதற்கு நான் சம்மதிக்கமாட்டேன்…” என்றதும். அதற்கும் அவள் சம்மதம் சொன்ன பிறகே டேவிட்சனிடம் சென்றான். சர்வமகியும் அவனைப் பின்தொடர்ந்தாள்.

“டேவிட்சன்… கொஞ்ச நாட்களுக்கு இவர்களுக்குப் பேய்ட் லீவ் கொடுத்து விடுங்கள்… எப்போ என் மனைவி, சமையலுக்கு வேலையாட்கள் வேண்டும் என்கிறாளோ, அப்போது இவர்கள் வரட்டும்… இருவர் மட்டும் இந்த வீட்டு வேலைகள் செய்வதற்காக இருக்கட்டும்…” என்று கூற, டேவிட்சன் சிறு தலையசைப்புடன் வெளியே விடைபெற்றுச் சென்றான்.

“ஆர் யு ஹப்பி நவ்?” என்றான் அநேகாத்மன்.

அவள் முகம் முழுவதும் பூரிப்புடன், தலையை ஆட்டிவிட்டு, “நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லையே…” என்றாள் சர்வமகி ஆர்வத்துடன்.

“எதுக்கும்மா…?” என்று புரியாமல் கேட்டான் அநேகாத்மன்.

“டீயா காஃபியா?” என்றாள் அதே புன்னகை மாறாமல்.

“பிளக் காஃபி…” என்று அவன் கூற, அதை எடுத்துவருவதற்காக உள்ளே சென்றாள்.  அவள் நடக்கும் அழகையே ரசித்தவன், இரும்பு இழுத்த காந்தமாக, அவள் பின்னாலேயே சென்றான்.

கதவில் கைக்கட்டி, சாய்ந்திருந்தவாறு அவள் காப்பி வார்க்கும் அழகையே இரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தவன்,

“ஏன் சர்வமகி… நீ சேலை உடுப்பதில்லையா?” என்றான் திடீர் என்று.

“உடுப்பேன்… கோவிலுக்கும், எங்காவது ஃபங்ஷன் என்றாலும் உடுப்பேன்… ஏன் கேட்கிறீர்கள்?” என்றாள் வியப்புடன்.

“நத்திங்… நீ சேலை உடுத்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்தேன். நேற்று நம் திருமணத்திற்கு நீ சேலை உடுத்திருந்தபோது, என்னால் என் வழிகளையே விலக்கமுடியவில்லை… அத்தனை அழகாக இருந்தாய் நீ…” என்றவன், சமையலறைக்குள் நுழைந்தான். அவள் அருகே நெருங்கி நின்றவாறு சமையலறை மேடையில், இரண்டு கரங்களையும், பின்புறமாக முட்டுக்கொடுத்து, சாய்ந்து நின்றவன் “டு யு நோ வட்… என்னுடைய அம்மா… பானுமதி உயிரோடு இருக்கும் வரை சேலைதான் அணிவார்கள். இங்கே கனடா வந்த பிறகும் அவர்கள் தன் ஆடையில் மாற்றம் செய்யவில்லை. எந்தக் குளிர் காலத்திற்கும் சேலைதான்…” என்றான் அவன்.

அவனுடைய தொனியிலிருந்து அவனுக்குச் சேலை பிடிக்கும் என்பது தெரிந்தது.

“உங்கள்…அம்மா… வந்து… உங்கள் அம்மா… இப்போது…” என்று முடிக்காமல் அவனைப் பார்த்தாள்.

“ம்… எனக்கு பதினொரு வயதில் இறந்துவிட்டார்கள். கார் அக்சிடன்ட்… அதற்குப் பிறகு என்னை வளர்த்தது எல்லாமே நனிதான். வளர்ந்த பிறகு பல்கலைக்கழகம் ஹஸ்டலில் இருந்துதான் படித்தேன். பட் அப்பாவின் கண்காணிப்பிலிருந்து என்னால் விலகமுடியவில்லை. வளர்ந்ததும் அப்பா தொழிலைப் பற்றிய நெளிவு சுழிவுகளைக் கற்றறி என்றார். எனக்கு லோதான் பிடிக்கும். அதனால் என்னைத் தடுக்காமல் உன் இஷ்டம் என்று விட்டுவிட்டார். கிரிமினல் லோ படித்தேன்… இப்போது அப்பாவின் தொழிலையும் பார்க்கிறேன்…” என்று அவன் கூற சர்வமகியின் முகம் இருண்டது.

‘அவனுடைய தந்தையின் இறப்பிற்குக் காரணம் அவள் தந்தை என்றுதான் அவன் இன்னும் நினைக்கிறானோ?’ அவள் முக வாட்டத்தை உடனேயே கண்டுகொண்டவன்,

“ஹே வட் ஹாப்பன்? திடீர் என்று அமைதியாகிவிட்டாய்?” என்றான் சற்று யோசனையாக.

“நத்திங்…” என்று அவசரமாகத் தன் பார்வையை மாற்றியவள், காப்பி வார்ப்பதில் கவனம் செலுத்தினாள். இல்லையென்றால், அவள் கண்களை வைத்தே அவள் உள் மனதில் உதிப்பதைப் புரிந்து கொள்வான்.

ஆனால் அவனோ, அவளின் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்டவனாக அவளை நெருங்கினான். அவள் தோளில் தன் கரத்தைப் பதித்தவன்,

“பாஸ்ட் இஸ் பாஸ்ட்… நீ இதையெல்லாம் நினைத்து வருந்தக் கூடாது மகி… நீ மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அதுதான் நமக்கு முக்கியம்…” என்றவன் அவளுடைய தோளிலிருந்து தன் கரத்தை எடுக்கப் பிடிக்காதவனாக மெதுவாக அழுத்திக் கொடுத்தான்.

முகம் சிவக்க அவனிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்டவள், அவனிடம் காப்பியை நீட்டினாள்.

வாங்கியவன், உதட்டில் புன்னகை மலர முன்னறைக்கு வந்தான். அவனிடம் ஏதோ கேட்க சர்வமகி நினைத்தவள், திரும்பிச் சென்றுகொண்டிருக்கும் அவன் முதுகைப் பார்த்து, கேட்காமல் திரும்ப, இவனோ திரும்பி,

“என்னம்மா…” என்றான். மனதில் எழுந்த திகைப்பை முகத்தில் காட்டி,

“ஒன்றுமில்லை என்று தலையை மறுப்பாக ஆட்ட,”

“ப்ச்… ஏதோ கேட்கவந்துவிட்டு, மறுப்பாகத் தலையாட்டுகிறாயே… எதுவாக இருந்தாலும் கேள்…” என்றான்.

“இ… இல்லை… சாமியறை எங்கே இருக்கிறது?” என்றாள் அவள் தயக்கமாக.

ஒரு வாய் கொஃபியைக் குடித்தவன், முகம் இறுக சர்வமகியைப் பார்த்தான்.

“சர்வமகி… எனக்கு… இந்த கடவுள் நம்பிக்கையெல்லாம் கிடையாது… உனக்குப் பிடித்தால், ஏதாவது ஒரு அறையை சாமியறையாகப் பாவித்துக்கொள்…” என்றான்.

அவனுடைய முகத்தில் தெரிந்த இறுக்கமும், அவன் அழைத்த சர்வமகியிலும், அவன் கோபம் புரிய, இவள் முகம் சோர்ந்தது.

அவள் முகத்தில் தெரிந்த சோகத்தைக் கண்டுகொண்டவன்,

“மகிம்மா… இப்போது எதற்கு இந்த சோர்வு… சாரி… அம்மா இறந்த பின், எனக்கு இந்தக் கடவுள் நம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது. அதற்காக நீ சாமி கும்பிடுவதை நான் தடுக்கமாட்டேன்… என்ன… என்னை இதில் திணிக்காமல் விட்டால் போதும்…” என்று கூற, இவள் சம்மதம் என்று தலையாட்டினாள்.

“என்ன… என் மீது கோபமா?” என்றான் இவன் கனிவுடன். இவள் இல்லை என்று வேகமாகத் தலையை ஆட்ட,

“அப்போ வாயில் கொழுக்கட்டை நன்றாக இருக்கிறதா?” என்றான் தீவிரமாக.

“வாயில் கொழுக்கட்டையா… இல்லையே… ஏன்?” என்று இவள் புரியாமல் திகைத்து விழி விரியக் கேட்க, அந்த அழகை ரசித்தவனாக,

“இல்லை சற்றைக்கு முன் நான் கேட்ட கேள்விகள் எல்லாவற்றிற்கும், தலையை மட்டும் ஆட்டினாயே… வாய் திறந்து பதில் கூறவில்லையே ஒரு வேளை கொழுக்கட்டை ஏதாவது தின்கிறாயோ என்று நினைத்துக் கேட்டேன்…” என்றான் இவன் கிண்டலாக.

‘அட… இவன் கூட, கிண்டலடிப்பானா?’ என்கிற திகைப்பு மாறாமலே, வாய் திறந்தவாறு அவனைப் பார்க்க, திறந்த வாயைக் கண்டவன், அதை அப்படியே விட்டுவிட முடியாது, தன் இதழ்களாலேயே அவள் வாயை மூடிவிட்டு நிமிர, இவள் விழிகள் தெறித்து விழுந்துவிடும் போல விரிந்து நின்றன.

திடீர் என்று பதித்த முத்தத்தால், அதிர்ந்துபோய் நின்றவளைக் கண்டு நகைத்தவாறே, முன்னறைக்கு வந்தவன், ஒரு சோஃபாவில் சாய்ந்தமர்ந்தவாறு, அங்கிருந்த செய்தித்தாளைப் படிக்கத் தொடங்கினான்.

அங்கே அப்போதுதான் பிரதீபனும் குளித்துவிட்டு புதிதாக ஆடை அணிந்துகொண்டு வந்திருந்தான்.

அநேகாத்மனைக் கண்டதும், அவன் முன்பாக வந்தமர்ந்தான்.

“அத்தான்… நான் உங்களிடம் சற்றுப் பேச… முடியுமா?” என்றான் தயக்கமாக. உடனே தன் கரத்திலிருந்த செய்தித்தாளை மடித்து ஓரமாக வைத்தவன், சாய்ந்து அமர்ந்தவாறு,

“சொல்லு பிரதீபன்…” என்றான்.

“இல்லை… வந்து… நான்… ஏதாவது கோர்ஸில் சேரலாம் என்று நினைக்கிறேன்… அது எந்தக் கோர்சில் சேருவது என்றுதான்…” என்று அவன் தயங்க,

“உனக்கு இப்போது பதினாறு வயதுதானே… பார்க்கப் போனால் பதினோராம் வகுப்புப் படிக்கவேண்டுமே… ஏதாவது நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படி பிரதீபன்…”

“இல்லை அத்தான்… பள்ளிக் கூடத்தில் சேர்ந்து படிப்பதாக இருந்தால் நீண்ட நாட்கள் வேலை செய்யக் காத்திருக்கவேண்டும். அதை விட ஏதாவது கோர்ஸில் சேர்ந்தால் விரைவாகவே சம்பாதிக்க முடியுமே…”

“அப்படி விரைவாகச் சம்பாதிக்க என்ன அவசரம் பிரதீபன்…” என்றவனின் குரலில் சற்று அழுத்தம் அதிகமாகத் தெரிய,

“அவசரம் என்றில்லை அத்தான்… உங்களுக்குப் பாரமாக எவ்வளவு நாட்கள்தான் நான் இருப்பது…” என்றான் அவன் தலையைக் குனிந்தவாறு.

அவனுடைய பேச்சால் கோபம் கொண்டவனாகக் கொஞ்ச நேரம் உதட்டை அழுந்த மூடி அமைதி காத்தான் அநேகாத்மன்.

“உன்னுடைய தன்மாணத்தை நான் பாராட்டுகிறேன் பிரதீபன். உன் அக்காவை மணந்த போது நீங்கள் என் பொறுப்பு என்று உறுதி கூறித்தான் அவளை மணந்தேன். தவிர உன் தந்தையின் மரணத்தின் இறுதி நிமிடத்தில் உங்களைப் பார்த்துக்கொள்வதாக நான் வாக்கும் கொடுத்திருக்கிறேன்… எப்போது உன் அக்காவை நான் மணந்தேனோ அந்த நிமிடத்திலிருந்து உங்கள் பொறுப்பு முழுவதும் எனதாகிவிட்டது. உங்கள் நால்வருக்கும் எது நல்லது, எது கெட்டது என்பதை நானும் உன் அக்காவுமாக முடிவுசெய்கிறோம். நீயாக முடிவெடுத்து ஒன்றைச் செய்வதற்கு இன்னும் காலம் இருக்கிறது. அதற்குரிய வயதும் பக்குவமும் உனக்கில்லை… அதனால் தேவையில்லாத சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் மனத்தைப் போட்டுக் குழப்பாமல் சின்னப் பிள்ளைக்குரிய லட்சணத்துடன் நடக்க முயற்சிசெய்… என்ன புரிந்ததா?” என்று அவன் அழுத்தமாகச் சொல்லப்போனால் சற்றுக் கோபமாகவே, கூற பிரதீபன் விழிகளில் நீர் மல்க அவனைப் பார்த்தான்.

“அத்தான்… நான் உங்களுக்கு எப்படி…” என்று அவன் தவிக்க,

“ஷ்… அதுதான் கூறிவிட்டேனே… இப்போது எதற்கு அந்தத் தவிப்பு… தவிர உங்கள் நால்வருக்கும் வேண்டிய ஏற்பாடுகளை நான் ஏற்கெனவே செய்துவிட்டேன். அபிதன் நீ இருவரும் ஒரே பாடசாலையில்தான் படிக்கப்போகிறீர்கள். கனடாவிலேயே பெஸ்ட் பிரைவட் ஸ்கூல். அதற்குரிய ஏற்பாடுகள் எல்லாம் ஏற்கெனவே செய்தாகிவிட்டது. இந்தத் திங்கள் நீங்கள் பள்ளியில் சேருகிறீர்கள்… மாதவிக்கும் தேவகிக்கும் பல்கலைக்கழகத்துக்கு அப்லை பண்ண வேண்டும். அவர்களுக்கு என்ன என்ன சப்ஜக்ட் என்று பார்த்துத்தான் அதைத் தொடங்கலாம். அதை நானும் உன் அக்காவும் பார்த்துக்கொள்வோம்… அதனால் அதைப் பற்றி பிரச்சனை உனக்குத் தேவையில்லை. எனக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நீ ஆசைப்பட்டால், நன்றாகப் படி. அது போதும் எனக்கு…” என்றதும் பிரதீபன் எழுந்தான்.

“அத்தான்… உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. நிச்சயமாக நான் நன்றாகப் படிப்பேன். உங்கள் பெயரை நான் காப்பாற்றுவேன். ஐ பிராமிஸ் யு…” என்றான் உறுதியுடன்.

இருக்கையை விட்டு எழுத்து, பிரதீபனின் தோளிலே தட்டிக் கொடுத்தவன்,

“தட்ஸ் மை பாய்…” என்றான் பெருமையுடன்.

அது வரை சமையலறையிலிருந்து அவன் பேசுவதையே கேட்டுக்கொண்டிருந்த சர்வமகி, சிலிர்த்துப் போனாள்.

இவனை மணக்க அவள் எத்தனை ஜென்மமாகப் புண்ணியம் செய்தாளோ தெரியவில்லை? அவனுடன் இணைந்து வாழக் கடவுள் அவளுக்கு ஏன் ஆயுளை மட்டும் கொடுக்கவில்லை?

முதன் முதலாக தான் உயிருடன் வாழவேண்டும் என்கிற ஆசை எழுந்தது.

சுவர் ஓரமாகச் சாய்ந்து அமர்ந்திருந்த சர்வமகியின் விழிகளில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

குடித்த கோப்பையை உள்ளே வைக்க வந்த அநேகாத்மன் சர்வமகியைக் கண்டதும் பதறிப்போனான்.

“சர்வமகி… ஆர் யு ஓக்கே… தலை வலிக்கிறதா? டாக்டரிடம் போகலாமா?” என்று தவித்தான்.

இல்லை என்று தலையாட்டியவள், அவனை நெருங்கினாள். அவன் மார்பில் தன் தலையைப் வைத்தவள், எக்கி அவன் கழுத்தைச் சுற்றித் தன் கரங்களை மாலையாகப் போட்டவாறு அழுதாள். அவள் ஏன் அழுகிறாள் என்பது தெரியாமல் மலைத்தவன், அவளைத் தன்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“என்னடா? என்ன பிரச்சனை… எதற்காக அழுகிறாய்?” என்றான் தவிப்புடன்.

கொஞ்ச நேரம் அப்படியே இருந்தவள், “உங்… உங்களுக்கு எப்படித் தாங்ஸ் சொல்வது என்னு… என்று…” என்றவள் மீண்டும் அழுகை வர உடல் குலுங்கினாள்.

“பைத்தியம்… தாங்ஸ் எதற்காக நீ சொல்ல வேண்டும்…” என்றான் எதுவும் புரியாமல்.

மெதுவாக அவனிடமிருந்து விலகியவள் சிரமப் பட்டுப் புன்னகைத்தாள்.

“எல்லாவற்றிற்கும்தான்…” என்றவள் தன் கண்ணீரைப் புறங்கையால் துடைத்தாள்.

“ஐ ஆம் சோ ஹப்பி ஆத்மன்… ரியலி ஐ ஆம் சோ ஹாப்பி… இப்போது… இந்தத் தருணத்தில் நான் சாகப்போகிறேன் என்றாலும்… நான் பயப்படப்போவதில்லை…” என்று பெரும் மகிழ்ச்சியுடன் சொன்னவளை இழுத்து அணைத்தான் அநேகாத்மன்.

“ப்ளீஸ்… மீண்டும் ஒரு முறை சாவைப் பற்றிப் பேசாதே… என்னால்… என்னால் அதைக் கேட்க முடியவில்லை… எங்களுக்கு நீ வேண்டும்… நீ இல்லாத உலகம் வெறும் வெறும்… பாலை வனம்… சுடுகாடு… நிழல் இல்லாத நிலம்… நீர் இல்லாத ஊர்…” என்றவன் அவளை மூச்சு முட்டும் அளவுக்கு இறுக அணைத்து விடுவித்தவன், அவள் முகத்தைப் பார்க்க முடியாதவனாக, வேகமாக விலகிச் சென்றான்.

சர்வமகி அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள். .

What’s your Reaction?
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!