நிலவு 16
அநோகத்மனின் அழைப்பைத் தொடர்ந்து உள்ளே ஒரு தாதி வந்தார். தொடர்ந்து வைத்தியர் நுழைந்தார். ஒரு வைத்தியர் மூவைத்தியராயினர். ஓரு தாதி, பல தாதியாயினர். கொஞ்ச நேரத்தில் அந்த இடமே இரண்டு பட்டது.
சர்வமகி தன் உயிரைக் கையில் பிடிப்பவள் போலத், தன் மார்பின் மேற்புறச் சட்டையை இரு கரங்களாலும் இறுகப் பிடித்துக்கொண்டு, விழி நிறைந்த அச்சத்துடன், அங்கே நடப்பதையே பார்த்துக்கொண்டிருக்க, சர்வமகியின் நிலையை உணர்ந்த அநேகாத்மன், உடனே அந்தக் காட்சியை மறைத்தாற் போல நின்றுகொண்டு,
“மகி… வெளியே போகலாம் வா…?” என்றான்.
அவளோ பதில் கூற முடியாது, தலையை மறுப்பாக அங்கும் இங்கும் ஆட்ட, பதறியவளின், தோற்றத்தைக் காண இயலாதவனாக, அவள் தோள்களைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டு அவள் அனுமதியையும் கேட்காது, வெளியே அழைத்து வந்தான். இல்லை இல்லை இழுத்து வந்தான்.
அங்கேயிருந்த இருக்கையில் அவளை அமர்த்தியவன், தானும் அருகே அமர்ந்துகொண்டான்.
சர்வமகியோ, தன் தந்தையின் நினைவிலேயே உழன்றுகொண்டிருந்தாள். விழிகளோ மூடியிருந்தன. உதடுகளோ தன் தந்தை மீண்டுவரவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தித்தவாறு, எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன.
தன் மேலாடையைப் பற்றிக்கொண்டிருந்த சர்வமகியின் கரங்களையே கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருந்தவன், பின் அவள் முகத்தைப் பார்த்தான்.
இன்னும் அவள் விழித்தாளில்லை.
இந்த சூழ்நிலையை இவள் எப்படிக் கையாளப்போகிறாள்? நினைக்கும்போதே, அநேகாத்மனுக்கு, மெல்லிய பதற்றம் தொற்றிக்கொண்டது.
“மகி…” என்றான் பட்டெனத்தழுவிய மென் குரலில். அவளோ, தன் விழிகளைத் திறக்காமலே,
“எ… என் அப்பாக்கு ஒன்றுமாகாதல்லவா?” என்று கேட்டாள் கேட்பவர் உயிரைக் கரைக்கும் குரலில்.
அவளுடைய குரலில் ஆவி கரைந்தவனாக, அவளுடைய முகத்தைப் பார்த்தவனால், உண்மையும் கூறமுடியவில்லை, பொய்யும் பகரமுடியவில்லை. இருதலைக் கொல்லியெறும்பாகத் தவித்தவன்,
மெதுவாக அவள் மார்பில் பதிந்திருந்த மெல்லிய மென் கரங்களுக்குமேல் தன் பெரிய கரத்தைப் பதித்து, அழுத்திக் கொடுத்தவன்,
“மகி… ஹோப் ஃபோர் த பெஸ்ட்… அன்ட் கன்ரோல் யுவர் செல்ஃப்… யு கான் ஹான்டில் திஸ்…” என்றான் மென்மையாக. அப்போதும் அவள் விழிகளைத் திறந்தாள் இல்லை.
இறுதியாக, வாசுதேவனின் அறையிலிருந்து வைத்தியர் ஒருவர் சோர்வுடன் வெளியே வந்தார். அவருடைய முகத்தைப் பார்த்ததுமே, அநேகாத்மனுக்கு விபரம் புரிந்தது.
சர்வமகியின் வலது தோளில், தன் இடது கரத்தைப் பதித்து அழுத்திக் கொடுக்க, சர்வமகி மெதுவாக விழிகளைத் திறந்தாள். அவளுடைய விழிகள் முதலில் யாசகமாக ஏறிட்டது, அநேகாத்மனைத்தான்.
அவன் விழிகள் கூறிய செய்தியை உணர்ந்தவள், “நோ… நோ… இ… இருக்காது…” என்று பதற்றத்துடன் திரும்பி வைத்தியரைப் பார்த்தாள். அங்கே அவர்,
“ஐ ஆம் சாரி… மிஸ் வாசுதேவன்… நாங்கள் முடிந்த வரை முயன்றோம்… ஆனால்…” என்று அவர் தயக்கமாக இழுக்க,
இறுதியில் வாசுதேவன் இயற்கை எய்தினார் என்கிற செய்தியைக் கேட்ட அந்தக் கணம், அவள் நொறுங்கிப்போனாள்.
வேகமாக அநேகாத்மனின் கரத்தை உதறிவிட்டு இருக்கையை விட்டு எழுந்தவள்,
“இல்லை… இல்லை… என் அப்பாவுக்கு ஒன்றுமில்லை… ஹி வில் பி ஆல்ரைட்… ஹி வில் பி ஆல் ரைட்… எங்களை விட்டு அவரால் போக முடியாது… போகவும் கூடாது… ஹி வில் பி ஆல் ரைட்…” என்று பிதற்றியவள், என்ன செய்கிறோம் என்பது புரியாமலே, அந்த வைத்தியசாலையை விட்டு வேகமாக ஓடத்தொடங்கினாள்.
எங்கே போகிறோம், என்ன செய்கிறோம் என்பதை உணராமலே, கால் போன போக்கிற்கு வேகமாகச் சென்றவள், தன் முன்னால் வந்த பாதசாரிகளையோ, வைத்தியர்களையோ, தாதிகளையோ, யாரையும் அவள் கண்டுகொள்ளவில்லை. அவளருகே வந்த தாதி ஒருவரை அவள் இடித்ததைக் கூட அவள் உணரவில்லை.
எதையோ கண்டு அஞ்சிப் பயந்து ஓடுபவளாக, எதிலிருந்தோ தப்புபவளாக, எதிலிருந்தோ தன்னைக் காப்பாற்ற முயல்பவளாக, அந்த இடத்தை விட்டே வெறிகொண்டவள் போல ஓடத்தொடங்கினாள்.
இதை அநேகாத்மன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கலங்குவாள், தவிப்பாள், கதறுவாள் என்று எண்ணியிருந்தவன், அவள் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடத் தொடங்கியதும் ஒரு கணம், ஒன்றும் புரியாமல் சிலையென மலைத்து நின்றான்.
“மிஸ்டர் அநேகாத்மன்…” என்று வைத்தியர் அவனை அழைக்க, அப்போதுதான் சுயநினைவு பெற்றவனாக, “மகி… ஸ்டாப்…” என்று தன்னை மறந்து கத்தி அழைத்தவாறு, நூறுமீற்றர் ஓடும் வீரனைப்போல, அவளைப் பின்தொடர்ந்து ஓடத்தொடங்கினான்.
அங்கே நிற்பவர்கள் தன்னை ஒருமாதிரி வியப்புடன் வெறித்துப் பார்ப்பதையோ, அவர்கள் தன்னை, ஒரு பைத்தியக்காரன் போல நினைத்துக்கொள்வதையோ அவன் சிறிதும் கண்டுகொள்ளவில்லை.
சர்வமகியோ அவன் அழைப்புக்குச் சிறிதும் செவிசாய்த்தாளில்லை. கூடவே தன் ஓட்டத்தையும் நிறுத்தவில்லை. என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று எதுவும் புரியாதவளாக, பிரதான வீதியில், வந்துகொண்டிருக்கும் வாகனங்களைக் கூட கருத்தில் கொள்ளாது, வேகமாக வீதியைத் தாண்டத் தொடங்கினாள்.
வேகமாக சர்வமகியை நோக்கி ஓடிப்போனவனுக்கு, அவள் பிரதான வீதியை வேகம் குறையாமலே, கடக்க முயல்வதைக் கண்டதும், இவன் உயிர் ஒரு முறை ஊசலாடி நின்றது.
“சர்வமகி… டோன்ட் டூ தட்… ஸ்டாப்…” என்று அலறியவாறு அவளை நெருங்குவதற்குள் அவனுடைய உயிர் எங்கோ போய் வந்தது. இதயம், இடம்மாறி தொண்டைக்குழிக்குள் நின்று துடித்தது. உடலிலிருந்து இரத்தம் முழுவதும் வடிவதுபோல உடல் வெளிறிப்போனது.
அதற்கிடையில் பெரிய ட்ரக் ஒன்று வேகமாக சர்வமகியை நோக்கி வர அதைப் பொருட்படுத்தாமல் வெறிகொண்டவள் போல சர்வமகி ஓட, அதைக் கண்டவனுக்கு சர்வமும் அடங்கிப்போனது..
“சர்வ…மகி… மூவ்… டாமிட்… மூவ்…” என்று இவன் கத்த, அவளோ எதையுமே உணராமல், தன் போக்கில் போய்க்கொண்டிருந்தாள்.
“மகி… நில்…” என்கிற அவனுடைய குரலை அவள் கேட்பதாகவே இல்லை. கடைசித் தருணத்தில், ஆபத்து என்னும்போது, தன்னைக் காக்க ஒரு வேகம் கூடுமே, அந்த அசுர வேகத்துடன் அவளை நெருங்கத் தொடங்கினான் அநேகாத்மன்.
ஒன்று… இரண்டு… மூன்று… க்ரா….ஷ்…. கரீச்… பாங்க்….. என்கிற பெரும் சத்தம் எழுந்தது.
அந்தப் பெரிய வாகனத்தை ஓட்டிவந்தவனால், இப்படித் தன் முன்னால், ஒரு உருவம் திடீர் என்று ஓடிவரும் என்பதை எதிர்பார்க்காததால், உடனேயே பிரேக்கை அழுத்த முடியவில்லை. எப்படியோ சமாளித்து பிரேக்கை அழுத்தியும், எச்சரிக்கை மணியை அடித்தும், அந்த வாகனம், தன் கட்டுப்பாட்டையும் மீறி, சர்வமகி நின்றிருந்த இடத்தையும் தாண்டிச் சென்று ஒரு இடத்தில் நின்றிருந்தது.
அதேநேரம், அந்த வாகனம், சர்வமகியை நெருங்கிய அந்தக் கணத்தில், கண்ணிமைக்கும் நொடியில், கதிர்முனை இடைவெளியில் அந்தப் பெரிய வாகனத்திடம் இருந்து சர்வமகியைக் காத்து, இழுத்தவாறு மறு பக்கமாகச் சென்று நின்றிருந்தான் அநேகாத்மன்.
அநேகாத்மனுக்கு ஒரு கணம், தான் சர்வமகியைக் காப்பாற்றி விட்டோம் என்பதையும், அத்தனை தொலைவிலிருந்து எப்படி இத்தனை வேகமாக ஓடிவந்தோம் என்பதையும் நம்ப முடியவில்லை. முக்கியமாக சர்வமகி எப்படி அந்த பெரிய வாகனத்தின் சில்லில் நசுங்காமல் தப்பினாள் என்பதை இவனால் சிறிதும் யூகிக்கவே முடியவில்லை.
உடல் முழுவதும் கோபம் கொப்பளிக்க, நீண்ட பெரிய மூச்சை எடுத்துத் தன்னைச் சமாதானப் படுத்த முயன்றவனுக்கு அது முடியாமல் போகத் தன் காலைப் பலம் கொண்ட மட்டும் தரையில் உதைத்தான். தன் இரு கரங்களாலும், தன் தலைமுடியை இறுகப் பற்றியவாறு கொஞ்சநேரம் குனிந்து நின்றான். கோபம் சற்றும் மட்டுப்படுவதாயில்லை. மீண்டும் மீண்டும் தன் காலைத் தரையில் உதைத்தவன், கோபம் அடங்காமலே அவளைத் திரும்பிப் பார்த்தான். முகத்தில் கொன்றுவிடும் வெறி தாண்டவமாடியது.
வேகமாக அவள் பக்கமாகத் திரும்பியவன், ஓங்கி அவள் கன்னத்தில் ஒன்று போடத் தன் வலக் கரத்தைத் தூக்கினான். ஆனால் அதற்கு மேல் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அன்று அவள் கனவில் பிதற்றியபோது, அவளை அறைந்ததன் வலி, இன்றுவரை அவனை விட்டு விலகவில்லை.
ஆனாலும் கோபம் மட்டுப்பட மறுத்தது. மீண்டும் அவள் சிக்க இருந்த ஆபத்தே, அவன் மனதில் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டிருந்தது.
“யு க்ரேசி டாம்… ஸ்டுபின் வுமன்… உனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? பைத்தியக்காரி… கொஞ்சம் தாமதித்திருந்தாலும்… கொஞ்சம் தாமதித்திருந்தாலும் என்னவாகியிருப்பாய்? அறிவு கெட்டவளே… புத்தி வேண்டாம்…” என்று சீறியவன், “நான் வராமல் இருந்திருந்தால்… நீ இப்போது… நீ இப்போது… அந்த சில்லின்…” அதற்கு மேல் அதைக் கற்பனைகூட செய்ய முடியாதவனாகத் தன் விழிகளை இறுக மூடி அந்த நினைவிலிருந்து வெளியேற முயன்றான்.
“ஐ… ஐ தோட்… ஐ தோட்… ஐ லொஸ்ட் யு… ஐ தோட்… ஐ ஆம் நாட் கோய்ங் டு சீ யு எகெய்ன்.… என் உயிரே… என்னை விட்டுப் போவதுபோல்… நான்…” என்றவன், அதற்கு மேல் பேச இயலாதவனாக, குரல் கம்ம “டாமிட்…” என்றவாறு, வேகமாகத் தன் விழிகளைத் திறந்து அவளை வெறித்துப் பார்த்தான்.
“ஏன்டி… ஏன் என்னை இப்படிச் சித்திரவதைப் படுத்துகிறாய்… உன்னைக் காணும் முன் நான் எந்த வலியும் நுகராமல், சுதந்திரமாக… சொல்லப் போனால் மிக்க மகிழ்ச்சியாக இருந்தேன்… இப்போ… ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு விநாடியும் உனக்காக நான் துடித்துக் கொண்டிருக்கிறேன்… ஏன்… ஏன்டி… உனக்காக நான் ஏன் துடிக்கவேண்டும்… எனக்கென்ன வில்லங்கம்… சொல்… வாயைத் திறந்து சொல்…” என்று என்ன சொல்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதைச் சற்றும் உணராமல், சீற்றத்துடன் கர்ஜிக்க, அவளோ அவன் வேறு யாருடனோ பேசுவதுபோல எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் எதுவும் பதில் கூறாது, அமைதியாக இருக்க, வெறிகொண்டவனாக, அவள் தோள்களைப் பற்றி இழுத்து உலுக்கி,
“உன்னிடம்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்… பதில் சொல்…” என்றான் அவன். மிதமிஞ்சிய சினத்தில் பற்கள் கடிபட, வார்த்தைகள் கரடு முரடாக, தெறித்து, வந்து விழுந்தன.
அவளோ, இன்னும் எதுவும் புரியாமல், தன்னிலையில் இல்லாமல் எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க, அப்போதுதான் அவள் நிலையை உணர்ந்தான் அநேகாத்மன்.
உடனே தன் கோபத்தை ஒதுக்கியவன், அவளுடைய முகத்தைத் தன் கரங்களில் பற்றித் தூக்கி “மகி…” என்றான்.
அவளுடைய முகமோ எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. காலம் கொடுத்த அனுபவப் பாடம் அவளை மரத்துப்போகச் செய்ததோ?
முகத்தில் விழுந்திருந்த கூந்தலை, நடுங்கிய விரல்களால், விலக்கி,
“மகி… லுக் அட் மி… இங்கே… என்னைப் பார்…” என்று அவளுடைய முகத்தைக் குலுக்கி, அவளை சுயநினைவுக்கு வரவழைக்க முயன்றான்.
அவன் பல முறை அழைத்தும் அவளுடைய விழி எங்கோ கண்களுக்கெட்டா தொலைவை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க, அவள் பார்வையும், அவள் செயலும், அவனுக்கு அச்சத்தை ஊட்ட,
“ஹெய் மகி… இட்ஸ் ஓக்கே… உனக்கொன்றுமில்லை, என்று அவளைப் பல முறை உலுக்கியும் அவள் நிகழ்காலத்திற்கு வந்தாள் இல்லை.
“மகிம்மா… இட்ஸ் ஓக்கே… இட்ஸ் ஓக்கே… யு வில் பி ஆல்ரைட்… இதோ என்னைப் பார்… உனக்கொன்றுமில்லை… மகி… கமோன்… கம் பக் டு யுவர் சென்ஸ்… விழித்துக்கொள்… மகிம்மா…” என்று பல முறை அவளுடைய உணர்வைத் திருப்பிக்கொண்டுவர முயன்று அவன் தோற்றான். அவள் விழிகளில் தன் விழிகளைக் கலக்க முயன்று தோற்றான்.
எப்போதும் நம்பிக்கையைத் தேக்கியிருந்த அந்தக் கடல்போன்ற நீண்ட விழிகளில், வெறுமை மட்டுமே சூழ்ந்திருக்க, அதை மேலும் காண முடியாதவனாக, அதில் எப்படியாவது உயிர்ப்பைக் கொண்டுவரவேண்டும் என்கிற வெறி எழ, என்ன செய்கிறோம் என்பதை உணர்வதற்குள்ளாகவே, அவன் இதழ்கள், அவள் இதழ்களை மூடிக்கொண்டன.
தன் மூச்சுக் காற்றை, தன் உணர்வை, அந்த இதழ்களினூடாக அவளுக்குக் கடத்தி அவளை உயிர்ப்பிக்க முயன்றுகொண்டிருந்தான் அந்தக் காவலன்.
அந்த நான்கு இதழ்களின் சங்கமத்தில், அண்ட சராசரமும், அப்படியே நின்றுபோனதோ, ஈரேழு பதினான்கு உலகமும் தம் செயற்பாட்டை அப்படியே நிறுத்தினவோ, இல்லை… அந்தப் புவிதனில், அவனும் அவளும் மட்டும்தான் தனித்திருந்தனரோ… அப்படித்தான் அநேகாத்மனுக்குத் தோன்றியது. அந்த ஒற்றை இதழ் அணைப்பில், அவனுடைய உயிர் பொருள் ஆவி அனைத்தும் கரைந்து அவள் உயிருடன் கலப்பதுபோலத் தன்னை மறந்து. தன் சூழ்நிலை மறந்து, அவனுடையவளானவளின், நிலை மறந்து அப்படியே நின்றுகொண்டிருந்தவனுக்கு, அவளை விட்டு விலகும் எண்ணம் அணு அளவும் இருக்கவில்லை.
காய்ந்த நிலத்தில், மழை நீர் கலந்தால் அப்படியே அந்த நீரை உறிஞ்சிக்கொள்ளுமே, அது போல, பலநாள் பட்டினி கிடந்தவனுக்கு, அறுசுவை உணவு கிடைத்தால், கிடைக்குமே இன்பம் அது போல, அவளுடைய உதடுகளை விட்டுப் பிரிய முடியாமல், அதுவே தனக்குரிய இடம் என்பதுபோல, அதுவே அவன் இம்மைக்கும், மறுமைக்கும் இன்பம் கொடுக்கும் உலகம் போல, அவள் இதழ்களை விட்டுப் பிரியாத அநேகாமன் நின்றிருந்த கணங்கள் பலவோ, கொஞ்சமோ,
மெதுவாக, அவளிடமிருந்து அசைவு வர, அவன் தன்னை சுதாரிக்க முயன்றான்.
ஆனாலும், அந்த இதழ்களின் ஒற்றலிலிருந்து அவனால் இலகுவில் விலகமுடியவில்லை. அப்படியே இன்னும் அவளுக்குள் புதைந்து புதைந்து தொலைந்துவிடவேண்டும் என்று மனம் கரைந்தது.
ஆனாலும், சர்வமகியின் நிலையினைத் தன் புத்திக்குள் வலிந்து புகட்டியவன், பிரிய மனமில்லாதவன் போன்று, அவளை மென்மையாக விலக்கினான். இப்போது அவனுடைய விழிகள், அவள் விழிகளுடன் கலந்து அவளுடைய உள்ளத்தை ஆராய முயன்றது.
சர்வமகியிடம், இப்போது, வெறித்த பார்வை போய், அந்த இடத்தில் புரியாமையும், திகைப்பும் குடிகொண்டிருந்தது. சற்று முன் என்ன நடந்தது என்பதைக் கூட, அவளால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. இமைகள் சுருங்க அவனையே ஏறிட்டுப் பார்க்க, அந்தப் பார்வையின் பொருள் உணர்ந்தவனாக, அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டான் அநேகாத்மன்.
அவனுக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அப்படியே பேசினாலும் அவள் வேதனை ஆறுமா என்ன? ஆறக் கூடிய வலியையா அவள் அனுபவித்திருக்கிறாள். அதை விட மௌன மொழியே போதுமானது என்பது போல அப்படியே கொஞ்ச நேரம் அவளைத் தன்னோடு இறுக்கியவாறு நின்றான்.
எங்கோ தூரத்தில் ஏதோ ஒரு வாகனத்தின் எச்சரிக்கை மணிச் சத்தம் காதைக் கிழிக்கத் திடுக்கிட்டுச் சுயநினைவுக்கு வந்தாள் சர்வமகி.
சிறிது நேரம் அவளுக்கு எதுவுமே புரியவில்லை. மலங்க மலங்க விழித்தவள், சூழ்நிலை புரிய, அவன் பிடியிலிருந்து விலக முயன்றாள். .
அவனோ அவளைத் தன் அணைப்பிலிருந்து விடுவித்தான் அன்றி, அவள் கரத்தை விட்டானில்லை. எங்கே தான் கரத்தை விட்டால், அவள் மறுபடி தெருவைக் கடந்து சென்றுவிடுவாளோ என்று அஞ்சியவனாக,
“வா சர்வமகி… வீட்டுக்குப் போகலாம்…” என்றான் மென்மையாக.
வீடு என்றதும், சர்வமகிக்கு மீண்டும் தந்தையின் நினைவு பூதாகரமாகத் தாக்கியது.
வீட்டுக்கா? எப்படி? எப்படி அவளால் அங்கே போகமுடியும். அப்படியே போனாலும், அவள் சகோதரர்களுக்கு என்ன பதில் சொல்வாள்? நம்முடைய அப்பா நம் எல்லோரையும் விட்டுவிட்டுப் போய் விட்டார் என்றா? அதைக் கேட்டால், அவர்கள் என்ன பாடுபடுவார்கள்? வேதனையில் முகம் கசங்க, அநேகாத்மனை ஏறிட்டாள் சர்வமகி.
“எ… எப்படிப் போவேன்… அவர்களிடம் என்னவென்று சொல்வேன்… அவர்களுக்கு எப்படிப் புரியவைப்பேன்… ஒ… ஒன்றுமே விளங்கவில்லையே…” என்று கூறியவளுக்கு உண்மையிலேயே எல்லாம் மரத்துவிட்டதுபோலத் தோன்றியது.
ஐயோ…! இனி அவள் என்ன செய்யப் போகிறாள்? தந்தையிடம் சகோதரர்களைப் பார்த்துக்கொள்வேன் என்று வாக்குக்கொடுத்திருந்தாலும், அவள் ஒருத்தியாக எப்படி அவர்களைக் காப்பாற்றுவாள்? அது அவளால் முடியுமா? தனி ஒருத்தியாக இருந்து அவளால் சகோதரர்களின் தேவைகளைக் குறையின்றி பூர்த்தி செய்ய முடியுமா? எப்படி முடியும்?
அச்சமும், கலக்கமும் போட்டி போட, அடுத்த அடி எப்படி எங்கே என்னவென்று வைப்பது என்பது புரியாமல் மலங்க மலங்க விழித்தவளைக் கண்டதும், இவன் இதயம் கசங்கியது.
அவளை நெருங்கி நின்றவன், அவளுடைய இடக் கரத்தை விடாமலே, தன்னுடைய வலது கரத்தைத் தூக்கி, அவளது சங்குக் கழுத்தில் வைத்து, அதன் மென்மையை உணர்ந்தவாறே,
“அவர்களுக்குப் புரியவைப்பது என் பொறுப்பு மகி… நீ அதையெல்லாம் எண்ணி வருந்தாதே… இப்போது வா… போகலாம்…” என்றவன் அவள் கரத்தைப் பற்றி இழுக்க,
“ப… பயமாக இருக்கிறது ஆத்மன்…” என்றாள் நடுங்கும் குரலில். அந்தக் குரலில் அநேகாத்மன், துடித்துத்தான் போனான். எல்லாவற்றையும் இழந்த கையறு நிலையில், நிற்பவர்களின் குரல் அது.
“ஷ்… மகி… நான்தான் இருக்கிறேன் என்று சொன்னேனே… பிறகு எதற்குக் கலக்கம்…. வா…” என்றவாறு அவளை இழுத்துக்கொண்டு அவன் முன்னோக்கிச் செல்ல, இழுவிசையால், அவனைப் பின்தொடர்ந்தாள் சர்வமகி.
நிலவு 17
அநேகாத்மன் அவளைத் தன் காரில் இருத்தி, அவளுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வரைக்கும் அவள் கரத்தை விட்டானில்லை. அவனுடைய இறுகிய அழுத்தமான பிடியில், அவளுடைய இடது கரம் கண்டிச் சிவந்து போனது.
இருந்தும் அவன் தன் பிடியை இளக்கவில்லை. அவனுடைய மனக்கண்ணில், சர்வமகியை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த அந்த பெரிய வண்டியே நினைவில் நின்று பதற வைத்துக்கொண்டிருந்தது. கொஞ்சம் தாமதித்திருந்தாலும், அவன் சர்வமகியை இழந்திருப்பான். முழுவதுமாக இழந்திருப்பான்.
இனியும் சர்வமகியை விட்டு விலகியிருக்க முடியுமா என்று அவனுக்குத் தெரியவில்லை. சூடு கண்ட பூனையாக, அவள் மேலும் ஏதாவது ஆபத்தில் சிக்கிவிடுவாளோ என்று மனம் அல்லல் பட்டது. இந்த பதற்றம் எதற்காக என்று அவனால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், நிச்சயமாக சர்வமகியை அப்படியே விட்டுவிட முடியாது என்பதைத் தௌளத் தெளிவாகப் புரிந்துகொண்டான் அநேகாத்மன்.
வாசலிலேயே அனைவரும் அவர்களுக்காகக் காத்திருக்க, அநேகாத்மன் தன் பிடியிலிருந்த சர்வமகியின் கரத்தை அழுத்திக்கொடுத்துவிட்டு, முதலில் காரைவிட்டு இறங்கினான்.
சூழ நின்றவர்களை ஒரு கணம் விழிகளால் அலசியவன், மறுபக்கம் சென்று கார்க்கதவைத் திறந்துவிட, இறங்கும் எண்ணம் இல்லாதவளாக சர்வமகி எங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள். விழிகளோ, எந்த நேரமும் நீரைச் சிந்திவிடுவோம் என்று கண்களில் கண்ணீர் குளம்கட்டி நின்றிருந்தன.
அவள் நிலை புரிந்தவனாக, “மகி…” என்றான். கலக்கம் மாறாமலே, அச்சத்துடன் அநேகாத்மனை ஏறிட, அந்த விழிகளின் வலிகளைத் தன்னதாக உணர்ந்தான் அவன். அவளை இழுத்து அணைக்க உள்ளம் பரபரத்தது. ஆனால் அது சரியான சூழ்நிலை அல்லவே.
ஒருவாறு தன் தொண்டையைச் செருமித் தன் தவிப்பை மறைக்க முயன்றவன்,
“நான் இருக்கிறேன்… இறங்கு….” என்றான் அதிகம் பேசாமல்.
சர்வமகி மீண்டும் தயங்க, அவளை நோக்கி நன்கு குனிந்து நின்று,
“ஹேய்… என் மீது நம்பிக்கையில்லையா? ம்…? என்றான் மென் குரலில், கூடவே சற்று அழுத்தத்தையும் கூட்டி.
விரல்கள் நடுங்க, உடல் தள்ளாட, காரிலிருந்து இறங்கியவளுக்கு, அநேகாத்மனின் அருகாமை பெரும் தைரியத்தைக் கொடுத்தது என்றுதான் சொல்லவேண்டும். அவன் இல்லாமல் இருந்திருந்தால், நிச்சயமாக அவளால், அவர்களை எதிர்கொண்டிருக்க முடியாது.
தமது சகோதரியைக் கண்டதும்,
“அக்கா… அப்பா எப்படியிருக்கிறார்…” என்றவாறு, அவளை எல்லோரும் சூழ்ந்து கொண்டனர்.
“அக்கா… அப்பாக்கு என்ன? இப்போது எப்படி இருக்கிறார்? அவரை இனி வீட்டிற்கு வர விடுவார்களா?” என்று அடுக்கடுக்காகக் கேட்ட கேள்விக்கு அவள் எங்கிருந்து பதில் சொல்வாள்?
“அ… அப்பா… அவர்… வந்து…” என்று தடுமாறியவளுக்கு தன் தந்தையின் இழப்பு பெரும் புயலெனத் தாக்கியது.
சகோதரர்களை வேதனை விழி கொண்டு நோக்கியவள், அதற்கு மேல் தாங்க முடியாதவளாக வீட்டிற்குள் ஓடினாள். தன் அறைக்குள் நுழைந்து கதவை அறைந்து சாத்தியவள், அதற்கு மேல் முடியாதவளாகக் கதறத் தொடங்கினாள்.
திடீர் என்று வெறிகொண்டவள் போல அறைக்குள் ஓடிய சகோதரியைப் புரியாமல் பார்த்த தேவகி, அவளுடன் வந்த அந்தப் புதிய உயரமான மனிதனை அச்சத்துடன் பார்த்தாள்.
“எ… என்னவாகிவிட்டது… அக்கா ஏன் இப்படி… அ… அப்பாக்கு இப்போது எப்படி?” என்று நடுக்கத்துடன் கேட்டாள்.
“சொல்கிறேன்… எல்லோரும் உள்ளே போய் பேசலாமா?” என்று தன் தொண்டையைச் செருமிக் கொண்டு கேட்டான் அநேகாத்மன்.
மறுக்காமல் அனைவரும், உள்ளே சென்றனர். அநேகாத்மன் பக்குவமாக விஷயத்தைச் சொன்னான். சொன்னதும் அங்கே ஊசி விழுந்தால்கூட ஓசை கேட்கும் அளவுக்கு அமைதி நிலவியது.
முதலில் விசும்பத் தொடங்கியவள் தேவகிதான். அதைத் தொடர்ந்து மற்றவர்களும் தொடங்கினர். சற்று நேரத்தில் செய்தி பரவ, மெது மெதுவாக ஆட்கள் வரத் தொடங்கினார்கள். சர்வமகி, யார் வந்தார்கள், யார் போனார்கள் என்கிற எந்த உணர்வும் இல்லாமல் வெறித்தவாறு அமர்ந்திருந்தாள். வந்தவர்கள், ஆள் ஆளுக்கு அவளைச் சமாதானப் படுத்துகிறோம் என்கிற பெயரில், இருக்கிற வேதனையை அதிகப்படுத்திவிட்டுச் சென்றதுதான் மிச்சம்.
“ஏதோ… உன்னுடைய அப்பன் தண்டனை அனுபவிக்காமல் இப்படிப் போய்ச் சேர்ந்ததே பெரிய காரியம்… அதை நினைத்து வருந்தாமல் உன்னைச் சமாதானப் படுத்திக் கொள்ளம்மா…”
“உன்னுடைய தந்தை மானஸ்தன். தவறுசெய்யாமலே தண்டனை அனுபவிக்கப்போகிறோம் என்பதை அறிந்ததுமே பொசுக்கென்று போய் விட்டானே…”
“பாவி மனுஷன்… சங்கிலித் தொடராக ஐந்து பிள்ளைகளைப் பெற்றுப் போட்டுவிட்டு நிம்மதியாகப் போய்ச் சேர்ந்துவிட்டான்… இனி அவர்களை யார் பொறுப்பேற்றுப் பார்ப்பார்கள்… எல்லாம் தலைவிதி…”
“விதை விதைத்தவன் தண்ணீர் ஊற்றத்தானே வேண்டும்… படைத்த கடவுள் வேண்டியதைச் செய்யமாட்டானா?”
“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்… செய்த பாவம் சும்மா விடுமா… அதுதான் மனுஷன் பொசுக்கென்று போய்விட்டான்…”
இப்படிப் பல குரல் பல விதமாக வந்தன. இருந்தாலும் எவருமே நிர்க்கதியற்று நிற்பவர்களைத் தாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம் என்று என்று இதுவரை கூறவில்லை.
அவர்களையும் குற்றம் சொல்ல முடியாதே… அவர் அவர்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள். அந்தப் பிரச்சனைகளுக்குள் இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக்கொள்ளச் சொல்லிக் கேட்க முடியுமா?
நல்லவேளை அநேகாத்மனே முன்னின்று அனைத்துக் காரியங்களையும் குறையின்றி நிறைவுசெய்ததால், யாருமே, செலவைப் பற்றி வருந்தவில்லை. பணத் தேவையென்று சர்வமகியிடம் யாரும் யாசித்து நிற்கவில்லை. ஏன் யாருமே சர்வமகியை நெருங்கவில்லை… நெருங்கவில்லை என்பதைவிட, நெருங்கவிடவில்லை என்பதே சரியானதாக இருக்கும். அதற்குக் காரணம் அநேகாத்மன்.
ஆரியக் கூத்தாடினாலும், காரியத்தில் கண்ணாக இருப்பதுபோல, அநேகாத்மன், மரணச்சடங்கிற்குரிய உதவியைச் செய்துகொண்டிருந்தாலும், அவனுடைய கவனம் முழுவதும், சர்வமகியிடமேயிருந்தது.
அந்த அவசரத்திலும், இடையிடையே, தேவகியைக் கொண்டோ, இல்லை மாதவியைக் கொண்டோ, சர்வமகிக்கு குடிப்பதற்கு ஏதாவது கொடுத்து அனுப்பிக்கொண்டிருந்தான். கொடுத்தவை அனைத்தும். குடிக்கப்படாமல், அப்படியே வைக்கப்பட்டிருந்தது என்பது வேறு கதை.
காலம் என்பது யாருக்காகவும் காத்திருப்பதில்லையே… பகல் போய் இரவு வருவதை யாரால்தான் தடுக்க முடியும்?
வாசுதேவனை எரித்து சாம்பலாக்கிய கையோடு உறவினர் கூட்டம் கல்லெறிந்த காக்காய்களாகக் கலைந்து போயினர். ஒரு வேளை வாசுதேவன் கோடிக்கணக்கில் பணம் சேர்த்து வைத்திருந்தால், உறவினர்கள் கொஞ்சமாவது யோசித்திருப்பார்களோ என்னவோ. எதுவுமில்லாத வெற்று மகனின் பிள்ளைகளைப் பொறுப்பேற்க அவர்களுக்குப் பைத்தியமா என்ன?
கடைசியாக ஐவரும் தனித்து விடப்பட்டனர். உள்ளத்தால் நொறுங்கிப்போயிருந்த சர்வமகி தன் சகோதரர்களுக்காகத் தன்னைத் திடப்படுத்த முயன்றாலும், முடியாமல் பெரிதும் தவித்துப்போனாள். இருந்தும், அவர்களை அவளின்றி யார் தேற்றப்போகிறார்கள். குறைந்தது, அவர்கள் முன்னிலையிலாவது தைரியமாக இருப்பதுபோலக் காட்டிக்கொள்ளவேண்டுமே.
தந்தையில்லாத உலகம், வெறும் சுடுகாடுபோலத் தோன்ற, அவர் நினைப்பிலேயே உழன்றவாறு, முன்னறையில், சுவரோரமாகத் தரையில் அமர்ந்து, சிறுவயதில் எடுத்த படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள் சர்வமகி.
அவளுடைய கரங்கள், ஆவலுடன் அவள் தந்தையின் படத்தை வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தன. படத்திலே தன் கவனம் முழுவதையும் செலுத்திக்கொண்டிருந்தவளுக்கு, திடீர் என்று அருகே நிழல் ஆட, தன் உணர்வு மாறாமலே திரும்பிப் பார்த்தாள்.
அநேகாத்மன்தான் கரங்களை மார்புக்குக் குறுக்காகக் கட்டியவாறு கதவிலே சாய்ந்து நின்றவாறு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன்தானே முன்னின்று அனைத்து இறுதிக்காரியங்களைச் செய்திருந்தான். அவன் இல்லாமல் இருந்திருந்தால், அவள் தனியாக என்ன செய்திருப்பாள்? நினைக்கும் போதே மலைப்பாக இருந்தது.
அவனும் விடைபெறத்தான் வந்திருக்கிறான் என்று எண்ணியவள் நிலத்திலிருந்து எழும்ப முற்பட்டாள். உடல் தள்ளாடியது. ஏனோ சோர்வு பெரிதும் அவளை ஆட்கொண்டது. அவள் ஒழுங்காகச் சாப்பிட்டே மாதக் கணக்கு. இதில் வாசுதேவன் இறந்த இந்த நான்கு நாட்களில் அவள் பச்சைத்தண்ணீர் கூட வாய்க்குள் வைக்கவில்லை. தேவகியும், மாதவியும் அடிக்கடி தேநீர் கோப்பி என்று கொண்டுவந்து தந்தது நினைவிருக்கிறது.
ஆனால் அவற்றை அவள் குடிக்கவில்லை. அதை என்ன செய்தாள் என்றே அவளுக்கு ஞாபகமில்லை. இப்போது அவளுடைய வேதனையையும் மீறி பலமில்லாத உடம்பு தள்ளாடியது. சிரமப்பட்டுத் தன்னைத் திடப்படுத்தியவள்,
“நீங்களும் போய்வரப் போகிறீர்களா…” என்றவளுக்கு அவளையும் மீறிக் குரல் நடுங்கத் தொடங்கியது.
தற்போது இருந்த துணை அவன் மட்டுமே. அவனும் போனால் அவள் தனியாக அல்லவா அந்த உலகத்தைச் சந்திக்கவேண்டும். நினைத்தபோதே கொஞ்சம் இருந்த பலம் கூட மங்கிப்போனது.
மறுப்பாகத் தலையை ஆட்டியவன், “உன்னுடன் நான் சற்றுப் பேசவேண்டும்…” என்றான் அவன் அழுத்தமாக.
அந்தக் குரலுக்குப் பணிந்து இரண்டடி வைத்தவளுக்குக் கால் தரையில் நிரந்தரமாக நிற்கமாட்டேன் என்பது போல நடுங்கத் தொடங்கின.
உடனே தான் யாசிக்கவந்ததை ஒதுக்கிவைத்தவனாக, இரண்டெட்டில் அவளை அணுகித் தளர்ந்த அவள் உடலை, பூ மாலையெனத் தன் கரங்களில் ஏந்திக்கொண்டான்.
ஏற்கெனவே அநேகாத்மனுக்குப் பின்னால் நின்றிருந்த தேவகி பதறிக்கொண்டு முன் வந்தாள்.
“அ… அக்காக்கு என்ன?” என்றாள் பயத்துடன்.
“ஒன்றுமில்லை… சாப்பிடாததால் வந்த பலவீனம் போலிருக்கிறது…” என்றவன் முதலில் தெரிந்த படுக்கையறைக்கு அவளை ஏந்திச் சென்று அங்கிருந்த ஒற்றைக் கட்டிலில் கிடத்தினான்.
“தேவகி… ஓடிப்போய் ஏதாவது குடி பாணம் இருந்தால் எடுத்துவா…” என்று அவன் உத்தரவிட, தேவகி பறந்தாள்.
அருகேயிருந்த தண்ணீர் போத்தலிலிருந்த தண்ணீரை எடுத்துத் தன் கரங்களில் ஊற்றியவன், அந்த ஈரத்தைக் கொண்டு அவள் முகத்தைத் துடைத்துவிட்டான். அவனுடைய ஈரக்கரம் பட்டதும், மெதுவாக விழிகளைத் திறந்தாள் சர்வமகி.
அவள் விழிகளைத் திறந்த பின்புதான் அநேகாத்மனுக்கு பெரும் நிம்மதியாக இருந்தது.
“ஆர் யு ஓக்கே…” என்று கனிவுடன் கேட்க, “ஆம்…” என்றவாறு எழுந்தமர முயன்றாள்.
உடனே அவள் தோளில் தன் கரங்களை வைத்து அழுத்தியவன், மீண்டும் படுக்கவைத்தான்.
“ரிலாக்ஸ்… படுத்துக்கொள்…” என்று உத்தரவிடத் தேவகி கையில் குளிர் பாணத்துடனும் கூடவே ஒரு தட்டில் உணவும் எடுத்து வந்தாள்.
“உன் அக்காவுக்குக் கொடு தேவகி…” என்று உத்தரவிட்டுவிட்டுப் படுக்கையிலிருந்து எழுந்தான் அநேகாத்மன். தேவகி உணவுத்தட்டை மேசையில் வைத்துவிட்டு, சர்வமகியின் அருகே அமர்ந்து, பாணத்தை நீட்ட முகத்தைத் திருப்பினாள் சர்வமகி.
“எ… எனக்கு ஒன்றும் வேண்டாம்…” என்றாள் கம்மிய குரலில்.
“வட்… ஒன்றும் வேண்டாமா? நீ என்னதான் யோசித்துக்கொண்டிருக்கிறாய்? இந்த நான்கு நாட்களாக நீ எதுவுமே சாப்பிடவில்லை… குடிக்கவில்லை… இப்படியே இருந்தால் இந்த உடம்பு என்னத்திற்காகும்…” என்று அநேகாத்மன் பொறுமையிழந்து சீறினான்.
“ஐ ஆம் ஓக்கே… எ… எனக்கு எதுவுமே குடிக்க… குடிக்க வேண்டும் போல… இ… இல்லை…” என்றவளுக்குப் பேசுவதற்கே சக்தியிருக்கவில்லை.
“பேசுவதற்கே இத்தனை சிரமப்படுகிறாயே… உன்னால் எப்படி ஒழுங்காக எழுந்து நடமாட முடியும்…” என்ற அநேகாத்மன் தேவகியின் அருகே வந்து, விரலையும், தலையையும் அசைத்து அவளை எழும்புமாறு உத்தரவிட, தேவகி மறுக்காமல் படுக்கையை விட்டு எழுந்தாள்.
அவள் எழுந்ததும், இவன் சர்வமகியின் தலைப்பக்கமாக அமர்ந்தான். அடுத்து, என்ன என்பதை உணர்வதற்குள்ளாகவே, அவளைப் பலவந்தமாக எழுப்பித் தன் மார்போடு அழுத்திச் சாய்த்தவன், தேவகியை நோக்கித் தன் கரத்தை நீட்ட, அவன் என்ன கேட்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட தேவகி, அந்தப் பழச்சாற்றை, அநேகாத்மனின் நீட்டிய கரத்தில் வைத்தாள்.
“ம்… குடி…” என்றவாறு பழச்சாற்றை அவள் வாயில் வைக்க, கலங்கிய விழிகளுடன், நிமிர்ந்து, அவன் முகம் பார்த்தவள்,
“ப்ளீஸ் வேண்டாமே…” என்றாள் கம்மிய குரலில்.
“கமோன்… சர்வமகி… உன்னை நம்பித்தான் உன் சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துக்கொள்வதற்காகவேனும் நீ திடமாக இருக்கவேண்டும்… இப்படிப் பிடிவாதம் பிடித்து உனக்கு ஒன்றென்றால் அவர்களின் நிலை என்ன… தயவு செய்து உன் வேதனையை ஒதுக்கிவிட்டு… அவர்களுக்காகத்தன்னும் இதைக் குடி சர்வமகி…” என்று அழுத்தமாகக் கூறியவன் மீண்டும் அவள் வாயருகே சாற்றைக் கொண்டு சென்றான்.
அவன் கரத்தைப் பற்றி மறுப்பாகத் தலையாட்டியவள்,
“வே… வேண்டாம் ஆத்மன்… என்னை விட்டுவிடுங்கள்… எனக்கு இப்படி… இப்படி இருக்கத்தான் பிடித்திருக்கிறது…” என்றாள் விரக்தியாக.
“எப்படி இருக்கப் பிடித்திருக்கிறது என்கிறாய்?” என்றவனின் குரலில் எதையோ உணர்ந்தவள் அவனை நிமிர்ந்து அண்ணாந்து பார்த்தாள். அப்போதுதான் அவர்கள் இருக்கும் நிலையைக் கண்டாள்.
அவனுடைய முன்புற உடலில் அவளுடைய பின்புற உடல் முழுவதும் பதிந்திருக்க, அவனுடைய இடது கரம் அவள் எழுந்துவிடாதிருக்க அவள் வயிற்றைச் சுற்றி வளைந்திருந்தது. வலது கரம் பாணத்தை ஏந்தியிருக்க, அவளை அணைத்தவாறு அமர்ந்திருந்தான்.
அந்த நிலை சர்வமகிக்கு எதையோ உணர்த்தியது. இப்படியே முதுமையிலும் இருந்துவிட்டால் வேதனையே அண்டாது என்று மனம் தவித்தது. அவன் மார்பிலிருந்து வரும் இதயத்தின் தாலாட்டு ஓசையைக் கேட்டவாறே, தன்னை மறந்து காலம் முழுவதும் தூங்கிவிடவேண்டும் என்று உள்ளம் பரபரத்தது. அப்படியே சிறுமியாக மாறி, அநேகாத்மனின் கரங்களுக்குள் தஞ்சம் புகுந்துவிடவேண்டும் என்று மனம் தவித்தது. கூடவே, குழந்தையாகி, அவனுக்குக் கருவறை இருக்குமானால், அந்தக் கருவறையின் இருட்டில் நுழைந்து சுறுண்டு, ஒடுங்கி, இந்த உலகையே பார்க்காது பாதுகாப்பாக, அவன் கதகதப்பில் கிடந்துவிடவேண்டும் என்று உடல் பொருள் ஆவி அனைத்தும் ஏங்கியது.
ஆனால்… அது நடக்குமா? நடக்க முடியுமா? இல்லையே… இவை அனைத்தும் வெறும் கற்பனையில் மட்டும்தானே நடக்கும்…
சுய நினைவு பெற்றவளாக, அவசரமாக அவனிடமிருந்து தன்னை விடுவிக்க முயன்று தோற்றவள்,
“வி… விடுங்கள் என்னை…” என்றாள் திக்கித் திணறி.
“எதற்காக உன்னை விடவேண்டும், என்றவனின் வலிய அழுத்தமான இடக்கரம், அவள் வயிற்றை அழுத்தி, மேலும் தன்னோடு இறுக்க முயன்றது.
“ப்ளீஸ்… விடுங்கள்…” என்று முணுமுணுத்தவள், சங்கடத்துடன் தேவகியைப் பார்க்க, அவளோ, சகோதரி அந்தப் பாணத்தைக் குடிக்கமாட்டாளா என்கிற ஏக்கத்துடன், தமக்கையையே ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஆத்மன்… ப்ளீஸ்…” என்றாள் அவன் கரத்தின் மீது தன் கரத்தை வைத்தவாறு.
“ஓக்கே… விடுகிறேன். அதற்கு முன்பு இந்தா… இந்தப் பாணத்தைக் குடி… விடுகிறேன்…” என்றான் அவன் பிடிவாதமாக.
“ஏன்… ஏன் இப்படி என்னைச் சித்திரவதைப் படுத்துகிறீர்கள்…” என்று தவிப்புடன் கேட்டவள், பாணத்தைப் பெறக் கையை நீட்டினாள்.
அவளின் திடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவன், பாணத்தைக் கைவிடாது அவளுடைய வாயருகே கையைக் கொண்டு சென்றான்.
இரண்டு வாய் பருகியவளுக்கு ஏனோ அழுகை வந்தது.
இது… இது… அன்னாசிச் சாறு. அவளுடைய தந்தைக்கு மிகவும் பிடித்த சாறு. மீண்டும் கண் கலங்க,
“இந்தச் சாறு என் தந்தைக்கு மிகவும் பிடித்தமானது…” என்றவள் அது வரை அடக்கிவைத்திருந்த அழுகை மீண்டும் பீரிட்டு வர, அழத் தொடங்கினாள்.
வேகமாக அருகேயிருந்த மேசையில் சாற்றை வைத்தவன்,
“ஷ்… மகி… இட்ஸ் ஓக்கே… ப்ளீஸ்… உன்னைத் திடப்படுத்திக்கொள்…” என்றவன் அப்படியே தன்னுடன் அவளை இறுக அணைத்துக்கொண்டான். அவளுடைய முகம், அவனுடைய பரந்த மார்பில் அழுந்தப் படிந்திருந்தது. விழிகளிலிருந்த வழிந்த கண்ணீரோ, அவனுடைய வெண்ணிற சேர்ட்டை நனைத்தது.
“அழாNத… ப்ளீஸ் அழாதே மகிம்மா…” என்று அவளை இறுக அணைத்து, தலையை வருடிக்கொடுத்தான். தன்னையும் மறந்து அவள் தலையில் தன் உதட்டைப் பொருத்தியவன்,
“எவ்ரிதிங் வில் பி ஓக்கே…மகிம்மா… ஐ பிராமிஸ் யு…” என்றான் மென்மையான குரலில்.
அந்த மகிமாவில் ஒரு கணம் தடுமாறியவள், பின்பு சூழ்நிலை பூதாகரமாகத் தாக்க,
“இல்லை… எதுவுமே சரியில்லை… நான் எப்படி… நான் எப்படி இவர்களைத் தனியாக வளர்க்கப்போகிறேன்… என்னால் அது முடியாது… அப்பா… அப்பா இருக்கும்போது, சிறியதாகத் தெரிந்த புள்ளி… இப்போது பூதாகரமாக…” என்று கூறியவள் அவனுடைய மார்புப் பகுதியில் உள்ள சேர்ட்டைத் தன் வலக்கரத்தால், அழுந்தக் கசக்கிப் பிடித்தாள்.
“என்னால் முடியவில்லை ஆத்மன்… தூங்கும்போதெல்லாம் அப்பாவின் நினைவாகவே இருக்கிறது… நான் என்ன செய்யட்டும்….? அபிதன் அப்பா எங்கே என்று கேட்டால் நான் என்ன சொல்லட்டும்… எனக்கு பயமாக இரக்கிறது ஆத்மன்… மிக மிகப் பயமாக இருக்கிறது… இந்த உலகத்தில் நான் மட்டும் தனித்துவிட்டதுபோல எனக்குத் தோன்றுகிறது… நான் என்ன செய்யட்டும்…” என்று கதறியவளைத் தேற்றும் வழி தெரியாது, அநேகாத்மனும் ஓய்ந்துபோய் அவளை வருடியவாறே அமர்ந்திருந்தான்.
அவனுடைய ஒரு கரம் அவளை அணைத்தவாறிருக்க, மறுகரம் அவள் உடல் முழுவதும் பயணித்து, வருடிக் கொடுத்து சமாதானப் படுத்த முயன்றது. என்னதான் முயன்றும், அவள் தன் நிலையிலிருந்து மாறினாளில்லை.
நீண்ட நேரம், அவனை அணைத்தவாறே அழுது தீர்த்தவள், இனிக் கண்ணீர் இல்லை என்கிற நிலை வந்ததும் ஓய்ந்துபோய் அப்படியே அமர்ந்திருந்தாள். இடைக்கிடையே வந்த கேவலுடன் சேர்ந்த விக்கல் ஒலி மட்டும் இல்லையென்றால், அவள் தூங்கிவிட்டாள் என்றே எண்ணியிருப்பான்.
கொஞ்ச நேரம் அப்படியே இருந்தவன், பின் மெதுவாக அவளைப் படுக்கையில் கிடத்தினான். அவள் விழிகளுடன் தன் விழிகளைக் கலக்கவிட்டவன், பின் அவளுக்கு இரு பக்கமும் தன் கரங்களைப் போட்டவாறு அவளை நோக்கிக் குனிந்தான். கொஞ்ச நேரம் அவள் முகத்தை உற்றுப் பார்த்தவன், கண்ணீர் வழிந்து வீங்கிப்போயிருந்த இரு விழிகளையும் மாறி மாறிப் பார்த்தான். பின் வழிந்த கண்ணீரைத் தன் பிறங்கைக் கொண்டு துடைத்துவிட்டவாறு,
“மகிம்மா… உன்னால் முடியும்… உன்னால் மட்டும்தான் முடியும்… சிறிய வயதிலேயே பெரிய பொறுப்புக்களையெல்லாம், சர்வசாதாரணமாக எடுத்து நடக்கப் பழகியவள் நீ… அப்படிப் பட்ட உனக்கு இது எல்லாம் சிரமமா என்ன? உன்னால் முடியாது என்றால், எவராலும் முடியாது மகி… யு வில் டு இட்… அந்த நம்பிக்கை எனக்கிருக்கிறது… தவிர… உனக்கு பக்கபலமாக உன் துணை… உன் நண்பனாக… நான் எப்போதும்… எப்போதும்… உன் அருகே இருப்பேன்…” என்று எப்போதும் என்பதில் அழுத்திச் சொன்னவன், பின் அவளுடைய முகத்தைத் தன் கரங்களால் ஏந்திக்கொண்டான்.
கண்களில் வழிந்த கண்ணீரை, பெருவிரல்களால் வருடித் துடைத்து விட்டவனுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு பெண்ணின் முகம் இத்தனை மாசு மருவற்று இருக்குமா? இவன் பழகிப் பார்த்த பெண்களை நினைவுக்குக் கொண்டு வந்து யோசித்துப் பார்த்தான். அந்த மென்மை பற்றிய அத்தியாயமே, அவன் நினைவுக்கு வரவில்லை. அதைப் பற்றி அவன் ஒரு போதும் கவலைப்பட்டதும் இல்லை.
மீண்டும் மீண்டும் தன்னை மறந்து அவள் கன்னத்தை அவன் வருடிக்கொடுக்க,
“யோசிக்கும்போதே பயமாக இரக்கிறது ஆத்மன்…” என்றாள் மெலிந்துபோன குரலில்.
அவள் கன்னத்திலிருந்து கரத்தை விலக்கியவன், அவன் சட்டையைப் பற்றியிருந்த அவளுடைய கரத்தின் மீது தன் இடக் கரத்தை வைத்து, அழுத்திக் கொடுத்து, வலக் கரத்தை அவளுடைய தலையில் வைத்து வருடிக்கொடுத்தவாறு,
“இதோ பார்… மகிம்மா… சாப்பிடாத மனம் போர்க்களம் மாதிரி. எதையும் திடமாக யோசிக்காது. சின்னப் பிரச்சனை கூடப் பெரிய பிரச்சனையாகத்தான் இருக்கும்… ஏதாவது சாப்பிடு. அதற்குப் பிறகு நீ யோசித்தால் உனக்கே உனது பயம் வெட்கமாக இருக்கும்…” என்றான் அவள் கரத்தை மேலும் அழுத்திக்கொடுத்தவாறு.
அந்த அழுத்தம் ஏனோ சர்வமகியின் பலவீனத்தை ஓரளவு விரட்டியடிப்பது போலிருக்க விழிகளை மூடினாள்.
ஆழ்ந்து சிந்தித்தபோது, அநேகாத்மன் சொல்வதில் உள்ள நியாயம் புரிந்தது. அவளை நம்பித்தானே அவள் சகோதரர்கள் இருக்கிறார்கள். அவளுக்கு ஒன்று என்றால் அவர்களின் நிலை என்ன? ஏற்கெனவே அவள் நிலை எத்தகையது என்பது அவளுக்குத் தெரியாதா என்ன? இருக்கும் காலம் வரை அவள் சகோதரர்களுக்காகவாவது அவள் திடமாக இருக்கவேண்டுமே. திடமாக இல்லாவிட்டாலும், திடம்போல நடிக்கவாவது வேண்டும்..
மீண்டும் விழிகளைத் திறந்தபோது நம்பிக்கை கூடியிருந்தது.
“குட்… தட்ஸ் மை கேர்ள்..” என்றவன் எழுந்து மேசையில் வைத்திருந்த உணவுத் தட்டத்தை எடுத்து, அவளிடம் நீட்டினான்.
அவள் எழ முயல, அவள் எழுவதற்கு உதவிசெய்தவன், அவளைச் சாய்ந்த வாக்காக அமர வைத்தான். பின் சாப்பாட்டுத் தட்டுடன் அவளை நெருங்கினான்.
அவளோ சாப்பாட்டுத் தட்டத்தை வாங்கத் தன் கரத்தை நீட்ட,
“நோ… அங்கேயே உட்கார்ந்து கொள்… நான் ஊட்டி விடுகிறேன்…” என்றவன், அவள் மறுப்பையும் பொருட்படுத்தாது, சாதத்தைப் பிசைந்து, ஒவ்வொரு கவளமாக அவளுக்கு ஊட்டத் தொடங்க, அவளுக்கு, மீண்டும் கரித்துக்கொண்டு வந்தது.
“இட்ஸ் இனஃப் சர்வமகி… நீ அழும் வரை அழுதாயிற்று… இனி நீ அழுவதற்கு அனுமதியில்லை.” என்று சற்றுக் கண்டிப்புடன் கூறியவன், உணவுக் கவளத்தை அவள் வாயருகே கொண்டு செல்ல, மெல்லிய விசும்பலுடனே, அந்த உணவைப் பெற்றுக்கொண்டாள்.
பெற்றபோது, அவள் உதடுகள் கரங்களில் மெல்லியதாய் தீண்ட, பட்டின் மென்மையுடன், தொட்டுச் சென்ற அந்த உதடுகள் கொடுத்த உணர்வில் இவன் மீண்டும் சிலிர்த்துக்கொண்டான்.
மீண்டும், அவள் இதழ்களோடு கவிபாடியது நினைவுக்கு வந்தது. மீண்டும், அவ் இதழ்களில் தன் இதழ் கொண்டு சித்திரம் தீட்ட உள்ளம் பரபரத்தது. இதழ் தீண்டல்மட்டும் இல்லாமல், அதற்கு மேலும் போய், அவள் உடல் முழுவதும் இதழ் கொண்டு சிற்பம் செதுக்க வேண்டும் என்கிற, வெறியும் வந்தது.
அந்த இடத்தில், அவள் தன் தந்தையைக் கொன்றவரின் மகள் என்றோ, இல்லை, அவள் தன் தகுதிக்குச் சற்றும் பொருத்தமானவள் அல்ல என்கிற எண்ணமோ, இல்லை, இதற்குரிய சூழ்நிலை இதுவல்ல என்கிற சிந்தனையோ அவனைச் சிறிதும் அண்டவில்லை.
ஒவ்வொரு முறையும், கரம், அவள் இதழ்களில் படும்போதெல்லாம், அவன் புதிய ஒரு உலகத்திற்குள் பயணப்பட்டுக்கொண்டிருந்தான்.
நிலவு 18
அன்று வானுக்கென்ன கோபமோ, சோ… என்று மழையைப் பொழிந்துகொண்டிருந்தது. கால் சற்று அகன்றிருக்க, இடக்கை, பான்ட் பாக்கட்டில் நுழைந்திருக்க, வலது கரத்தில் சிகரட்டை ஏந்தியவாறு, ஜன்னலருகே நின்று கறுத்திருந்த அடர்ந்த மேகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அநேகாத்மன்.
அவனுடைய மனமும், அந்த கரிய மேகத்தைப்போலவே அடர்ந்து முட்டி மோதிப்போய் நின்றிருந்தது. எவ்வளவு முயன்றும் மனதிலிருந்த சர்வமகியை அவனால் விலக்கமுடியவில்லை.
அதுவும் கடந்த நான்கு நாட்களாக, சொல்லப்போனால், வாசுதேவன் இறந்த அன்றிலிருந்து அவனால் நிம்மதியாக எதையுமே செயற்படுத்தமுடியவில்லை. அதற்குக் காரணம் பலவாக இருந்தாலும், முக்கிய காரணம் ஜெஸ்டின்.
அன்று மருத்துவமனையில் வாசுதேவன் அனுமதிக்கப்பட்டபோது, சர்வமகியின் கரத்திலிருந்த கைப்பேசியை அவன் எதேச்சையாக தன் பான்ட் பாக்கட்டில் போட்டிருந்தான். அதைப் பின்பு அவன் மறந்தும் விட்டிருந்தான்.
வாசுதேவன் இறந்த அன்று, சர்வமகியை அவள் வீட்டில் விட்டுவிட்டு, அவன் திரும்பி வீட்டிற்கு வந்துகொண்டிருந்தபோது, பான்ட் பாக்கட்டில், சர்வமகியின் கைப்பேசி மணி அடிக்க, அப்போதுதான் அவனுக்கு சர்வமகியின் கைப்பேசி தன்னிடம் சிக்கிக்கொண்டது நினைவுக்கு வந்தது.
இனித் திரும்பிச் சென்று அவளிடம் கொடுக்க மனமில்லாமல் வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது, மீண்டும் அக் கைப்பேசி சிணுங்கியது.
யாராக இருக்கும் என்று எடுத்துப் பார்த்தால், ஜஸ்டின் என்கிற பெயரில் பல முறை அழைப்புக்கள் வந்திருந்தன. இந்த ஜஸ்டின் யாராக இருக்கும் என்கிற யோசனையில், அலட்சியமாக விட்டவன், பின்பு, என்ன அவசரமோ என்றுதான் அந்தத் தொலைப்பேசியை எடுத்துப் பேசினான். ஆனால் மறுபக்கமிருந்து வந்த அதிகாரக் குரலாக, “ஹலோ… சர்வா…” என்கிற ஆண் குரல் கேட்க. இவன் திகைத்துப்போனான்.
முதலில் யார் அந்த சர்வா என்று குழம்பியவன், பின்பு அது சர்வமகியின் சுருக்கமான அழைப்பு என்பதைப் புரிந்துகொள்ள, இவனுக்குள் காந்தியது.
முதலில், சர்வமகி இங்கில்லை என்று கூறிவிட்டு வைக்கத்தான் முயன்றான். ஆனால் அந்த ஜஸ்டினோ,
“நீங்கள் யார் சார்… சர்வாவின் கைப்பேசி உங்களுக்கு எப்படி வந்தது?” என்று கேள்வி மேல் கேள்விகேட்க, அவனுடைய கேள்விக்கு என்ன பதில் கொடுப்பது என்று புரியாமல் கடுப்பாகிப்போனான் அநேகாத்மன்.
“சாரி… சர்வமகி இப்போ இல்லை… பிறகு கூப்பிடுங்கள்…”என்று மூஞ்சையில் அடிப்பதுபோலக் கூறிவிட்டுத் தொலைப்பேசியை வைத்துவிட்டான்.
பின்பு பல முறை அவனிடமிருந்து அழைப்பு வர, இவன் எரிச்சலில் கைப்பேசியை அணைத்து வைத்துவிட்டான். பின் மறு நாள், சர்வமகியிடம் தொலைப்பேசியை ஒப்படைக்கலாம் என்று நினைத்தவன், பின்பு அந்த எண்ணத்தையும் மாற்றிக்கொண்டான்.
ஏற்கெனவே உடைந்துபோயிருக்கும் சர்வமகியை, மேலும் மேலும் தொந்தரவு செய்வதை இவன் சிறிதும் விரும்பவில்லை. தவிர, முக்கியமாக அந்த ஜஸ்டின் அவளுடன் தொடர்புகொள்வதை அறவே வெறுத்தான். அதை விட, அந்த கைப்பேசி அவனிடம் இருப்பதே மேல், என்கிற எண்ணத்தில் தன்கூடவே வைத்துக்கொண்டான்.
ஆனால், அடிக்கடி அந்த ஜஸ்டின் தொடர்புகொள்ளவும், சினத்தில் கைப்பேசியை அணைத்து வைத்துவிட்டான். ஆனாலும் மனதிற்குள் குடைந்துகொண்டேயிருந்தது. ஒரு வேளை சர்வமகியின் நண்பனாக இருந்து, அவளிடம் துக்கம் விசாரிக்கக் கூட, அவன் எடுத்திருக்கலாம் அல்லவா… ஆனால், உள்ளுணர்வு அதற்கு மறுப்புத் தெரிவித்தது.
அந்த ஜஸ்டினின் குரலில் தெரிந்த ஏதோ ஒன்று, அவனுக்கு அடித்த எச்சரிக்கை மணிபோலவே அநேகாத்மனுக்குத் தோன்றியது.
அடுத்த நாள், அவளுடைய கைப்பேசி தன்னுடைய இயக்கத்தை முழுதாக நிறுத்தியிருக்க, அதனைச் சார்ஜில் போட்டு உயிர்ப்பிக்க, அவன் கண்களில் முதலில் தெரிந்தது இருபத்தேழு விடுபட்ட அழைப்புக்களே…
வியப்புடன் யார் என்று பார்த்தால், அனைத்தும் ஜஸ்டின் என்றிருந்தது. இவளுக்கு இவனைத் தவிர வேறு நண்பர்கள் கிடையாதா? என்று எரிச்சலுடன் எண்ணிக்கொண்டிருக்கும் போதே, மீண்டும் அந்த ஜஸ்டினிடமிருந்து அழைப்பு வந்தது. சினத்துடனே எடுத்துக் காதில் பொருத்தினான் அநேகாத்மன்.
“வட்ஸ் அப் மான்… எதற்கு திரும்பத் திரும்ப அழைக்கிறாய்? டோன்ட் யு ஹாவ் நோ சென்ஸ்…” என்று இவன் கர்ஜிக்க,
“எக்ஸ்கியூஸ்மி… ஹூ த ஹெல் ஆர்யு…. நான் பேச வேண்டியது சர்வாவுடன்… உங்களுடன் இல்லை… தயவுசெய்து என் சர்வாவிடம் அழைபேசியைக் கொடுங்கள்…” என்றான் ஜஸ்டினும் கறாராக.
“வட்… டிட் யு சே… சே இட் எகெய்ன்… ‘என் சர்வா…’ இட்ஸ் இன் யுவர் ட்ரீம்ஸ்…” என்றான் மிதமிஞ்சிய சினத்தில். இல்லை இல்லை மிதமிஞ்சிய பொறாமையில்.
“லிசின் டு மி மிஸ்டர்… உங்களுடன் விவாதிக்க எனக்கு நேரமில்லை… ஐ வான்ட் டு டாக் டு சர்வா… நான் சர்வாவுடன் வேலைசெய்தவன். ப்ளீஸ்… கொஞ்சம் தொலைப்பேசியை அவளிடம் கொடுக்கிறீர்களா?” என்று கேட்டபோதே, இவனுக்குப் பொறிதட்டியது. அந்தக் குரலும், அவனுடைய அவசரமும், தனக்குப் பிடிக்காத செய்தியையே மகியிடம் கூறப்போகிறான் என்பதைப் புரிந்துகொண்டான் அநேகாத்மன்.
“சாரி மிஸ்டர்… மிஸ்டர் வட் எவர்… மகி இப்போது உங்களுடன் பேசும் நிலையில் இல்லை. எதுவாக இருந்தாலும் என்னிடம் கூறுங்கள், நான் அவளுக்குச் சொல்லிவிடுகிறேன்…” என்றான் அந்த வட் எவர்pல் அதிக அழுத்தம் கொடுத்து.
“மிஸ்டர் உங்களிடம் எதற்கு நான் சொல்லவேண்டும்… இது சர்வாவின் கைப்பேசிதானே… இது அவளிடமில்லாமல் உங்களிடம் எதற்கு இருக்கிறது… இஸ்… இஸ் ஷி ஓக்கே… என் சர்வாவிற்கு ஒன்றுமில்லையல்லவா? நான் அனுப்பிய குறுஞ்செய்திக்குக் கூட அவள் பதில் போடவில்லை… தயவு செய்து சொல்லுங்கள். இஸ் ஷி ஓக்கே…?” என்று பதட்டத்துடன் அந்த ஜஸ்டின் கேட்க, இவன் மீண்டும் ‘என்’ என்பதில் உடல் முழுவதும் எரிந்தான்.
“சாரி மிஸ்டர் ஜஸ்டின்… இப்போது நீங்கள் அவளுடன் பேசமுடியாது…” என்றவன், மனதிற்குள், ‘எப்போதுமே பேசமுடியாது’ என்று கூறிவிட்டு, கைப்பேசியை அணைத்தான்.
மனதில், ‘ஏதோ குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறினானே… அப்படி என்ன குறுஞ்செய்தியை சர்வமகிக்கு அனுப்பியிருப்பான் என்று அறியும் வேகமும், கட்டுக்கடங்காமல் வந்தது. கொஞ்சநேரம் சர்வமகியின் கைப்பேசியை வெறித்துப் பார்த்தவன், நாகரீகம் பார்த்தால், ஜெயிக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டவனாகத் தன் மடிக்கணினி நோக்கிச் சென்றான்.
கைப்பேசியை ஊடுருவி உள்ளே நுழைவதுதான் அவனுக்குக் கைவந்த கலையாயிற்றே. தன் லப்டாப்பில் கைப்பேசியை இணைத்தவன், அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் சர்வமகியின் கைப்பேசியின் கடவுச்சொல்லை உடைத்து உள்ளே ஊடுருவிச் சென்றான்.
அவளுடைய குறுஞ்செய்தியின் பக்கம் சென்று பார்த்தான். அனைத்தையும் மேலோட்டமாகப் பார்த்தவன், ஜெஸ்டினின் குறுஞ்செய்தியை மட்டும் உயிர்ப்பித்துப் படித்தான். படித்தவனுக்கு, அவன் நினைப்புச் சரியானதுடன், அச் செய்திகள் ஒவ்வொன்றும் அவனுடைய கொலைவெறியை அதிகரித்திருந்தது.
சிலது அவளுடைய தந்தை சிறையிலிருந்த போது அனுப்பப்பட்டிருந்தது. முதலில் அவளுடைய சுகநலத்தைப் பற்றியே விசாரிக்கப்பட்டிருந்தது. சர்வமகியும் பதில் போட்டிருந்தாள். ஆனால் அதற்குக் கீழேயிருந்த செய்திதான் அவனை நிலைகுலைய வைத்தது.
“சர்வா… நான் உன்னைக் காதலிக்கிறேன்… வில் யு மரி மி…” என்றிருந்தது குறுஞ்செய்தி.
“பாஸ்டட்… ஓவர் மை டெட் பாடி” என்று முனங்கியவன், சர்வமகியின் பதிலை ஒரு விதப் பதட்டத்துடன் படித்தான்.
“மன்னிக்கவேண்டும் ஜஸ்டின் தற்போதிருக்கும் நிலையில், என்னால் திருமணம் பற்றி எண்ண முடியாது… எதுவாக இருந்தாலும், பிறகு பேசிக்கொள்ளலாம்…” என்று பதில் போட்டிருந்தாள் சர்வமகி.
அவள், ஜஸ்டினின் வேண்டுதலுக்குச் சம்மதம் சொல்லவில்லைதான். அதே வேளை மறுக்கவும் இல்லை.
“இல்லை முடியாது… என்று சொல்வதற்கு என்ன?” என்று முணுமுணுத்தவன் மேலும் குறுஞ்செய்தியைப் படிக்கலானான்.
இப்படித்தான் ஒவ்வொரு குறுஞ்செய்தியிலும், அவனுடைய விருப்பத்தைப் பல விதமாகத் தாங்கி வந்திருந்தது.
‘எதைப் பற்றியும் யோசிக்காதே… நான் இருக்கிறேன்…’ என்ற செய்தியைப் பார்த்ததும், இவன் இதழ்கள் ஏளனத்துடன் வளைந்தன.
‘அப்போ நான் எதற்கு இருக்கிறேன்… பூப்பறிக்கவா…’ என்று மனதிற்குள் கடுப்பானான் இவன்.
‘சர்வா… ப்ளீஸ்.. லெட் மி ஹெல்ப் யூ… எப்போதும் உன் கூடவே இருப்பேன்… ஜெஸ்ட் சே யெஸ்…’ என்கிற குறுஞ்செய்திக்கு, சர்வமகி,
‘ஜஸ்டின் ஏற்கெனவே உங்களுக்குக் கூறிவிட்டேன்… இந்த சூழ்நிலை ஏற்புடையதல்ல, என் தந்தை சிறையிலிருந்து வெளியே வரும்வரைக்கும் என்னால் எதையும் யோசிக்கமுடியாது… இப்போதுதான் அநேகாத்மன் என்கிற சட்டத்தரணியோடு பேசுவதற்கு அனுமதி கிடைத்திருக்கிறது. அவரைப் பற்றி அனைவரும் நன்றாகக் கூறுவதால், எப்படியும், அவர் என் தந்தையை விடுவித்துவிடுவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்படி விடுவித்தால், நிச்சயமாக உன்னுடன் இதுபற்றி பேசுகிறேன்’ என்று இருக்க, ஏனோ அன்று சர்வமகி தன்னிடம் வந்தது நினைவுக்கு வந்தது. அவள் எத்தனை நம்பிக்கையோடு வந்தாள்… ஆனால்…
இதயம் வலிக்க, மீண்டும், அந்த குறுஞ்செய்திகளைப் படித்தான்.
‘எனக்குப் புரிகிறது… நீ தனியாகச் சமாளிப்பதை விட, நானும் கூட இருந்தால் உனக்கு உதவியாக இருக்கும்… லெட் மி ஹெல்ப் யு…’ அதற்கு மேல் சர்வமகியிடமிருந்து எந்த பதிலும் அனுப்பப்படவில்லை.
“டாமிட்… அவள்தான் சம்மதிக்கவில்லையே. பிறகு எதற்கு அடிக்கடி தொந்தரவு செய்கிறாய்” என்று முனங்கியவன், சர்வமகியின் கைப்பேசியைக் கோபத்துடன் தூர எறியக் கையைத் தூக்கியவன், அது முடியாமல், மேசையில் போட்டான்.
எரிச்சலும், கோபமும் போட்டிபோடத் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். ஏதோ புரியாத அச்சம் அவனை ஆட்கொண்டது.
எங்கே சர்வமகி தன் கைநழுவிச் சென்றுவிடுவாளோ என்கிற பயம் அவனை நிம்மதியிழக்கச் செய்தது.
“நோ… நோ… மகி எனக்குத்தான். எனக்கு மட்டும்தான்… யாருக்காகவும் அவளை விட்டுக்கொடுக்கமாட்டேன்…” என்று அவன் பெரும் சினத்துடன் எண்ணிக்கொண்டவன், சர்வமகியின் சிம்கார்டை எடுத்து, உடைத்து எறிந்தான். மனம் ஓரளவு நிம்மதியடைந்தாலும், அதற்குரிய தீர்வை உடனேயே கண்டுபிடிக்கவேண்டும் என்றும் முடிவுசெய்தான்.
அதை நிறைவேற்ற இரண்டாம் நாளே சர்வமகியைக் காணச் சென்றான். தந்தை இறந்த இரு நாளில் இப்படிச் சென்று கேட்பது சரியா என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை.
அப்படி யோசித்தால், இலவு காத்த கிளியின் கதைதான் நமக்கும் என்று எண்ணியவன், தாமதிக்காமல் அதனைச் செயற்படுத்தத் தொடங்கினான்.
ஆனால், அவனுடைய போதாத காலம், நினைத்த உடன் அவளிடம் தன் விருப்பத்தைக் கூற முடியவில்லை. சர்வமகியின் சூழ்நிலை அதற்கு இடங்கொடுக்காததால், தான் எண்ணியதைச் செயற்படுத்தாமலே, இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்துக்கொள்ளலாம் என்று எண்ணி வந்துவிட்டிருந்தான்.
ஆனால் இப்போது, அது நெஞ்சை முட்டிக்கொண்டு நின்றிருந்தது. அவளிடம் எப்படிச் சென்று தன்னை மணந்துகொள்ளுமாறு கேட்பது என்பது புரியாமல் தவித்தான் அநேகாத்மன். ஒருவேளை அவனை மணக்க அவள் மறுத்துவிட்டால், ஒரு வேளை அவள் மனதில் வேறு யாரும்… அந்த ஜஸ்டின்…”
நோ… நெவர்… அவனைத் தவிர, அவளை யாராலும் நெருங்க முடியாது… நெருங்கவும் கூடாது. அவள் எனக்கு மட்டுமே…” என்று தன்னை மறந்து கூறியவனுக்கு, சர்வமகியை நினைக்கும்போதே பதட்டம் அதிகரித்தது.
மீண்டும் கையிலிருந்த சிகரட்டை வாயில் வைத்து, நன்றாக உள்ளே இழுத்துத் தன் நுரையீரலை நிரப்ப முயன்றான். எப்போதாவது மனம் சலனப்படும்பொது, சிகரட்டை இழுப்பான். அது கொஞ்சம் கொஞ்சமாக சாம்பலாவதைப் பார்க்கும்போது, அவனுடைய சலனம் காணாமல் போய்விடும். ஆனால் இன்று, அது கூட முடியாமல் இருந்தது. என்னதான் இழுத்தும், மனதிலிருந்த பதட்டம் குறைவதாகவே இல்லை.
வாழ்வில் முதன் முறையாகப் பதட்டம் என்றால் என்ன என்பதை உணர்ந்தான் அவன். அடிக்கடி மனதில் சர்வமகி வாசுதேவனின் மகள் என்கிற எண்ணம் வராமலில்லை. அதே நேரம் அந்த ஒரு காரணத்திற்காக அவளை மறக்கவும் அவனால் முடியவில்லை.
எது எப்படியோ, தனக்கு மனைவியாக ஒருத்தி வருவதாக இருந்தால், அது நிச்சயமாக சர்வமகி மட்டுமே என்பதில் உறுதியாக இருந்தான்.
உறுதியாக இருந்து என்ன பயன், அவளிடம் சென்று கேட்கவேண்டுமே… எப்படிக் கேட்பது? என்னவென்று கேட்பது? சொல்லப்போனால் பூனைக்கு மணிகட்டுவது யார்?
எத்தனையோ தீர்க்க முடியாத பல வழக்குகளைக் கண்ணிமைக்கும் நேரத்தில் உடைத்தெறிந்தவனுக்கு, அவளிடம் சென்று யாசகம் கேட்பது இயலாத காரியமாகவே தோன்றியது. இயலாத காரியமன்று… எப்படிக் கேட்பது என்றுதான் அவனுக்குப் புரியவில்லை. அப்படியே கேட்டாலும், அவள் மறுத்துவிட்டால்? நிச்சயமாக அவனால் அதைத் தாங்கிக்கொள்ளவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
சிந்தனையில் உழன்றுகொண்டிருந்தவனின் பின்புறமாக இருந்து முன்புறமாக இரு வெண்ணிறக் கரங்கள், அவன் தோள்வரை படர்ந்து உயர,
“டார்லிங்…” என்று மிழற்றியவாறு, எக்கி அவன் கழுத்து வளைவில் உதட்டைப் பொருத்தினாள் அவள். அநேகாதமன் விறைத்து நின்றது நொடிக்கும் குறைவான நேரமே.
தீ சுட்டதுபோல, ஒரு உதறலில் தன்னை அணைத்திருந்தவளைத் தள்ளி விழுத்தியிருந்தான் அநேகாத்மன். அதே வேளை, கையைச் சுட்டிருந்த சிகரட்டையும் உதறி எறிந்தான்.
கண்களில் தீ பறக்க, மூக்கு நுனி, சினத்தில் சிவந்து துடிக்க, கீழே விழுந்து கிடந்தவளை வெறித்துப் பார்த்தான் அநேகாத்மன்.
“ஹெளவ டெயர் யு டச் மி…” என்று கர்ஜிக்க, நிலத்தில் விழுந்திருந்த ரோசலின் திகைப்புடனும், அச்சத்துடனும் அநேகாத்மனை, வெறித்துப் பார்த்தாள்.
“ஹே… டார்லிங்… இட்ஸ் மீ…” என்றாள் ரோசலின் அவமானமும், அழுகையும் சேர்ந்த குரலில்
“ஐ நோ ஹூ த ஹெல் ஆர் யு…” என்று சினந்தவன், விரைந்து சென்று தன் மேசையிலிருந்த தொலைப்பேசியில் இரண்டு இலக்கத்தை அழுத்த மறுபக்கம் எடுத்துக்கொண்டது.
“வட் த xxx ஆர் யு டூயிங்… என் அறைக்கு என் அனுமதியில்லாமல் யாரும் உள்ளே வரக்கூடாது என்று தெரியாது உனக்கு? டாமிட்…” என்று எரிந்து விழ, மறு பக்கம் என்ன கூறியதோ,
“ஐ டோன்ட் நீட் எனி பிளடி எக்ஸ்பிளநேஷன்… கம் அன்ட் த்ரோ ஹர் அவே… இன்னும் ஒரு நிமிடத்தில் இது நடந்தாகவேண்டும்…|” என்று அநேகாதமன் கர்ஜித்துவிட்டு தொலைப்பேசியைப் பட் என்று அதன் இடத்தில் வைத்தான். கூடவே பெரும் சினத்துடன் ரோசலினை நோக்கித் திரும்பினான்.
“மரியாதையாக இங்கிருந்து போய்விடு… இல்லை… நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது… கெட் லாஸ்ட்…” என்றான் தீப்பொறி பறக்க.
“அநேகாத்மன்… வட் ஹாப்பன்ட்… நீ இப்போது மாறிவிட்டாய்… நாம் சந்தித்துப் பல நாட்களாகிவிட்டன… ஐ வோன்ட் டு சீ யு… அன்ட் ஐ வோன்ட் டு ஸ்பென்ட் ஸம் டைம்ஸ் வித்யு… ப்ளீஸ் அநேகாத்மன்… கம் வித் மி…” என்று தரையிலிருந்து எழுந்தவாறு, கெஞ்சினாள் இல்லை கொஞ்சினாள் அவள்.
“கோ… டு… ஹெல்… ரோசலின்…” என்றவன், தன் பொறுமை முழுவதுமாகப் பறந்துகொண்டிருப்பதைப் புரிந்துகொண்டவனாகத் தன் தலையின் பின்புறத்தை அழுந்த வருடிக் கொடுத்தான்.
“இதோ பார்… நான் சொல்வதைக் கவனமாகக் கேள்… எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. உன் கூட இருக்கப் பிடிக்கவில்லை. சொல்லப்போனால், உன்னைப் பார்க்கக் கூட எனக்குப் பிடிக்கவில்லை… அதனால், இனி என் முன்னால், எக் காரணம் கொண்டும் வராதே… வந்தால்…” என்றவனின் குரல், உயரவில்லை, கத்தவில்லை, சீறவில்லை… ஆனால் அனைத்தையும், அவனுடைய அந்தக் குரல் அதிக காரத்துடன் கொடுத்தது.
“வை அநேகாத்மன்… வை… அப்படி நான் என்ன தப்பு செய்தேன்… சொல்லுங்கள்…” என்று அழுத ரோசலினை வெறுப்புடன் பார்த்தான் அநேகாத்மன்.
அவன் கண் முன்னால், கலங்கி நின்ற சர்வமகி வந்து போனாள். அவள் அழுதால், இவன் இதயம் கசங்கியதே. அதே நேரம், இவள் அழுகையைப் பார்க்கும்போது, இவனுக்கு எரிச்சல் அல்லவா வருகிறது.
“ஏனா… ஏன் என்றால், இப்போதுதான் வைரத்திற்கும், கூலாங்கற்களுக்குமுள்ள வித்தியாசத்தைக் கண்டுகொண்டேன்… போதுமா…” என்று முடிக்கவில்லை, அவனுடைய பிஏ, இரண்டு வாட்டசாட்டமான ஆட்களுடன் உள்ளே நுழைந்தாள்.
“டேக் ஹர் எவே….” என்று இரக்கமற்றுக் கூறியவன், மீண்டும் ஜன்னலருகே நின்று வெளியே வெறித்துப் பார்த்தான். ரோசலின் கத்தியதோ, திமிறியதையோ, அவன் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
ஏனோ அந்த ரோசலின் தொட்ட இடம் முழுவதும் கம்பளிப்பூச்சி ஊர்வதுபோல இருந்தது.
இதே கரங்கள் கிட்டத்தட்டப் பல மாதங்களுக்கு முன்பு இவனைத் தழுவியிருக்கிறது. அணைத்திருக்கிறது. அப்போதெல்லாம் அவனுக்கு இத்தனை அருவெறுப்புத் தோன்றவில்லை. ஆனால், எப்போது, சர்வமகியை அவன் கண்களால் கண்டானோ, அன்றிலிருந்து வேறு எந்தப் பெண்களின் கடைக்கண் பார்வையையும், அவனால் ரசிக்க முடியவில்லை. ரசிக்க முடியவில்லை என்பதை விட, அவனுக்கு அருவெறுத்தது என்றுதான் கூறவேண்டும்.
விரைந்து சென்று, தன் வேலைத்தளத்தோடு ஒட்டிய தன் படுக்கையறைக்குள் நுழைந்தவன், தான் அணிந்திருந்த, அதிவிலை கூடிய ஆடைகளைக் களைந்து, குப்பைத்தொட்டியில் போட்டான். அப்படியே குளியலறைக்குள் நுழைந்து சோப் போட்டுத் தேய்த்துக் குளித்து, வேறு புதிய ஆடையை அணிந்த பின்தான், அவனால் ஓரளவு சமாதானமாக முடிந்தது.
இன்னும் அரை மணி நேரத்தில் ஒரு முக்கிய கூட்டத்திற்குப் போக வேண்டும். மனமோ, சோர்ந்துபோய் இருந்தது. கரத்தில், கைக்கடிகாரத்தைக் கட்டிக்கொண்டிருக்க, அவனுடைய அறை தட்டுப்பட்டது.
இவன் எரிச்சலுடன் கதவைத் திறந்தான். அங்கே அவன் பிஏ பயத்துடன் நின்றிருந்தாள்.
“வட்..” என்றான் அப்பட்டமான எரிச்சலுடன்.
“உங்களைப் பார்க்க… ஒரு பெண்…”
“லிசின்… நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை. அமரிக்கன் பிரசிடன்ட் என்றால் கூட, ஐ டோன்ட் கெயர்… அவர்களை இன்னொரு நாள் வந்து பார்க்கச் சொல்…” என்று கூறிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கமாக வந்தான். அப்போதுதான் தொலைவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு கார் கண்ணை உறுத்தியது.
“இந்தக் கார்… மகியுடையதாயிற்றே…” என்று குழம்பியவன். வெளியே சென்றுகொண்டிருந்த பிஏவை அழைத்து,
“யர் வந்திருக்கிறார்கள் என்று சொன்னாய்?” என்றான் அவசரமாக.
“நா… நான் இன்னும் சொல்லவில்லையே சார்…” என்றாள் அவள் விழித்தவாறு.
“டாமிட்… யார் வந்திருக்கிறார்கள்… அவர்களுடைய பெயர் என்ன?” என்றான் அவன் அவசரமாக.
“அவர்கள்… சர்வமகி… “ அவள் முடிக்கவில்லை,
“வட் சர்வமகியா? அவளை எதற்காகக் காத்திருக்க வைத்தாய்… டோன்ட் யு ஹாவ் எனி சென்ஸ்… அவளை உள்ளே அனுப்புவதற்கு என்ன? உன் புத்தியை எங்கே கடன் கொடுத்ததாய்?” என்று சீறிப்பாய்ந்தவன், அதே வேகத்துடன் தன் அறையை விட்டு வெளியேறினான்.
அதே நேரம், அவனுடைய பிஏ நிர்மலா குழம்பிப்போய் திகைத்து நின்றாள்.
‘இந்த பாசுக்கு என்னவாயிற்று. சற்றைக்கு முன்பு ஒருவரையும் உள்ளே விடாதே என்றார். இப்போது என்னவென்றால், ஏன் விடவில்லை என்கிறார்… இவருடைய காரக்டரையே புரிந்துகொள்ள முடியவில்லையே…” என்று குழம்பியவாறு தன் இடத்திற்குச் சென்றாள்.
நிலவு 19
தன் பிஏ வுடன் ஏறி விழுந்துவிட்டு, எதற்காக சர்வமகி தன்னைத் தேடிவந்திருப்பாள் என்கிற சிற பதற்றத்துடன், அநேகாத்மன், அவளைத் தேடிக்கொண்டு வரவேற்பறைக்கு வந்தான்.
ஏதாவது ஆபத்தாக இருக்கும் என்று எண்ணிய மாத்திரத்திலேயே அநேகாத்மனின் பதட்டம் பயமாக உருப்பெற்றிருந்தது.
இந்த அடைமழையில்… அவளுடைய கார் ஏதாவது துன்பத்தை இழுத்துவைத்திருக்குமோ.. முதலில்… அவளை மணந்த பின்பு, இந்த டப்பா காரை தூக்கி எறிந்துவிட்டுப் புதிதாக ஒரு காரைப் பரிசளிக்கவேண்டும்… என்று எண்ணியவாறு, அவளை நோக்கி வந்தான்.
அவனுடைய விழிகள், அவளுடைய உச்சந்தலை முதல், உள்ளங்கால் வரை, கவனமாக ஆராய்ந்தது. எங்கும் அடிபட்டதற்கான அடையாளமோ, காயமோ இல்லை என்ற பின்தான் இவன் நிம்மதியானான். நிம்மதியுடன், மீண்டும் ஒரு முறை அவளை ஆவலுடன் தன் விழிகளால் தரிசித்தான் அநேகாத்மன்.
அடங்காது பெய்த மழையில் நனைந்திருந்ததால், அவளுடைய ஆடை உடலோடு நன்கு ஒட்டி, அவளுடைய எழிலை அழகாகப் பறைசாற்றிக்கொண்டிருந்தது. கூடவே, அவளுடைய முடியிலிருந்தும் நீர் கொட்டிக்கொண்டிருக்க, ரவிவர்மனின் ஓவியம்போல இருந்தாள், அவனுடையவள்.
அவளுடைய சொல்லமுடியா பேரழகை அவன் மட்டும் ரசித்திருந்தால் பரவாயில்லை. அங்கிருந்த ஒரு சில ஆண்களின் பார்வைகள், அவள் மேனியை ஆவலுடன் தழுவுவதைக் கண்டவன், சினம் மேலிடத் தன் விழிகளாலேயே அவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு விட, அவன் பார்வையின் பொருளை உணர்ந்துகொண்டவர்கள், உடனேயே, தங்கள் பார்வையை விலக்கிக்கொண்டனர். இருந்தும், ஒரு சிலரின் பார்வை, தம் கட்டுப்பாட்டையும் மீறி அவள் பக்கம் போகத்தான் பார்த்தது. அதை உணர்ந்துகொண்டவனாக,
“ஹேய்… மகி… வட் எ ப்ளசன்ட் சேர்ப்ரைஸ்… கம் வித் மி…” என்றவாறு அவள் கரத்தைப் பற்றித் தர தர என்று இழுத்துக்கொண்டு தன் அறைக்கு வந்தான்.
“என்ன மகி… இந்த மழையில் நனைந்துகொண்டு வரவேண்டும் என்று அப்படி என்ன அவசரம்… அலைபேசியில் அழைத்திருந்தால் நானே வந்திருப்பேனே” என்று கேட்டவன், உள்ளெ சென்று ஒரு துவாயை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.
“துடைத்துக்கொள்… தலையெல்லாம் ஈரமாக இருக்கிறது… ஆடை வேறு நனைந்திருக்கிறது… குளிக்கப்போகிறாயா…” என்று கேட்டான் அவன்.
“இ… இல்லை பரவாயில்லை… ஐ ஆம் ஓக்கே…” என்றவாறு அவன் துவாயால் தன் தலை, கை, கழுத்து என்று நன்றாகத் துடைத்துவிட்டாள். ஆனால் ஈரமான ஆடையை என்ன செய்வது? அந்த அறையில் ஏசி வேலை செய்ததால், ஈர உடையுடன் சேர்ந்து குளிரத் தொடங்க, அவள் உடல் நடுங்கியது. அதனைப் புரிந்துகொண்டவன், உடனே ஏசியை நிறுத்திவிட, சர்வமகி நன்றியுடன் அவனைப் பார்த்தாள்.
அவள் ஈர உடையைக் கண்டவன், தன் கைப்பேசியை எடுத்து, சற்றுத் தள்ளிப்போய், யாருக்கோ எதையோ கட்டளையிட்டான். பின் அவள் பக்கமாகத் திரும்பி அவள் துடைப்பதையே கண்வெட்டாது பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய விழிகளோ, சர்வமகியின் உடலைப் பெரும் ஏக்கத்துடன் வருடியது.
அந்தக் துடியிடையும், செழித்த மார்பும், மூங்கில் கரங்களும், சங்குக் கழுத்தும், அவனைப் பித்தம் கொள்ளச் செய்தன. அப்படியே அவளை அணைத்துத் தன் நீண்டநாள் தாபத்தைத் தீர்க்கவேண்டும் என்று உடலும், உள்ளமும் பரபரத்தது. ஆனால் சிரமப்பட்டுத் தன்னை அடக்கிக்கொண்டான் அநேகாத்மன். செயற்படுத்துவது சுலபம். ஆனால், அதற்குப் பின்… சர்வமகியின் முகத்தில் எப்படி விழிப்பான். அவள் தன்னைத் துடைக்கும் அழகையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க, எதேச்சையா திரும்பியவள், வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அநேகாத்மனைக் கண்டதும், புருவம் சுருங்க, என்ன என்பதுபோல் தலையை ஆட்டிக் கேட்க, பிடிபட்ட மாயக்கண்ணனாகத் திரு திரு என்று விழித்தவன்,
“அது… நீ என்ன குடிக்கப்போகிறாய்? கொஃபி… ஆர் டீ…?” என்று சமாளித்தவாறு கேட்டான் அநேகாத்மன்.
“இல்லை… பரவாயில்லை…. எனக்கென்றும் வேண்டாம்…” என்றவளிடம்,
“நோ இந்தக் குளிருக்கு, சூடாக ஏதாவது குடித்தால் நன்றாக இருக்கும். நான் தேநீர் விரும்பிக் குடிப்பேன்… நீ எப்படி?” என்றவாறு தொலைப்பேசி இலக்கத்தை அழுத்த,
“ஏதுவென்றாலும் பரவாயில்லை…” என்றாள் சர்வமகி.
உடனே இரு தேநீருக்கு உத்தரவிட்டுவிட்டு நிமிர, இவனுடைய அறைக் கதவை யாரோ தட்டினர்.
“வன் செக்…” என்றவாறு கதவை நோக்கிச் சென்றான் அநேகாத்மன்.
அதே நேரம், தலையைத் துவட்டியவாறே அறையைப் பார்த்தவளுக்கு, அன்று முதன் முறையாக அந்த அலுவலகத்திற்கு நுழைந்ததும், அநேகாத்மனின் கடுமையும் நினைவிற்கு வந்து கண்களைக் கலங்கச் செய்தது.
அதே நேரம் சர்வமகியை அநேகாத்மன் நெருங்க, திகைப்புடன் திரும்பிப் பார்த்தாள் சர்வமகி.
விழிகளில் நிறைந்திருந்த நீரும், சற்றுச் சிவந்திருந்த அவள் முகமும், அவளுடைய எண்ணப்போக்கைத் தெளிவாக எடுத்துரைக்க, அந்த சூழ்நிலையை விரும்பாதவனாகத் தன் கரத்திலிருந்த பரிசுப் பொதியை அவள் முன்பாக நீட்டினான்.
அவள் புரியாமல் அவனைப் பார்க்க,
“உன்னுடைய ஆடை ஈரமாக இருக்கிறது… சோ… இதை வரவழைத்தேன்… உள்ளே சென்று அணிந்துவிட்டு வா…” என்று தன் உள் அறையைக் காட்ட,
“இ… இல்லை.. வேண்டாம்… ஐ ஆம் ஓக்கே…” என்று வேகமாக மறுத்தாள் சர்வமகி.
“மகி… நான் சொல்வதைக் கேட்கக் கூடாது என்று ஏதாவது விரதமா… உன் உடை நனைந்திருக்கிறது…. இப்படியே நீ வெளியே போகமுடியாது… சோ… உள்ளே சென்ற மாற்றிக்கொண்டு வா…” என்று அவன் கூற, அப்போதுதான் குனிந்து பார்த்தாள்.
அவன் கூறியதின் பொருள் விளங்க, சங்கடத்தில் முகம் சிவக்க, தன் கரத்திலிருந்த துவாயால், தன் உடலை மறைத்தவாறு தலைகுனிந்து நின்றிருந்தாள்.
அவளுடைய முகச்சிவப்பையே பார்த்தவன், “போ… போய் மாற்றிக்கொண்டுவா…” என்றவாறு, தன் கரத்திலிருந்த பொட்டலத்தை அவளிடம் கொடுக்க, மறுக்கமுடியாது, அவன் காட்டிய அறைக்குள் நுழைந்தாள்.
அநேகாத்மன் கொடுத்த ஆடையைக் கரங்களில் எடுத்த சர்வமகி திகைத்துப்போனாள். அந்த டிசைனர் ஆடையின் மென்மையே, அதன் விலையைப் பறைசாற்றியது. டஸ்ட் பிங்கில் லூஸ் ஹை வேஸ்ட் லாங் ட்ரவுசரும் (Dust pink loose high waist long trouser) அதற்குப் பொருத்தமாக, அதே டஸ்ட் பிங் பூக்கள் தெறித்த வெண்ணிற நீண்ட கை டாப்பும் பார்க்கும்போதே, அதன் அழகு கண்களைப் பறித்தன.
இத்தனை விலை உயர்ந்த ஆடையை அவள் எப்படி அணிவது? அதுவும் அநேகாத்மனிடமிருந்து பெற்று. அது ஏதோ தப்பு போலத் தோன்ற, அதை மீண்டும் கட்டிலில் வைத்துவிட்டுத், தன் ஈர ஆடையைக் களைந்தவள், முடிந்த வரை, துவாய் கொண்டு ஈரத்தை உரிஞ்சி எடுத்தாள். ஓரளவு ஈரம் காய்ந்துபோயிருந்தது.
மீண்டும் அணிந்தபோது, பரவாயில்லாமல் இருந்தது. முன்னதற்கு எவ்வளவோ மேல்.
ஆடையை மாற்றாமல் வெளியே வந்த சர்வமகியைப் புருவம் சுழிக்க, கோபமாக ஏறிட்டான் அநேகாத்மன்.
“ஏன் ஆடை மாற்றவில்லை சர்வமகி…” என்றான் அவன் அழுத்தமாக.
“இ… இல்லை… அது… அதிக விலை…” அவள் முடிக்கவில்லை,
“சோ வாட்…” என்றான் அவன் கோபம் குiறாயாமலே.
“எ… என்னால் முடியாது ஆத்மன்… அதுவும் உங்களிடமிருந்து நான் எத்தனையோ உதவிகளை ஏற்கெனவே பெற்றுவிட்டேன்… இனியும் என்னால் முடியாது…” என்றாள் சர்வமகி உறுதியாக.
“ஸ்டாப் சர்வமகி… உனக்கு உதவி செய்வதற்கு நான் ஒன்றும் கணக்கு வைத்திருக்கவில்லை… தயவு செய்து போய் ஆடையை மாற்றிவா…” என்றான் இவன் பிடிவாதமாக. சர்வமகியோ ஒரு அடி அசைந்தாள் இல்லை.
என்னதான் அநேகாத்மன், அவள்பால் இரங்கி, உதவிசெய்தாலும், தன் தந்தை மீது தீராப் பகைகொண்டிருப்பவன். அந்தப் பகை அர்த்தமற்றது என்பதை நிரூபிக்கும் வரை, அநேகாத்மனிடமிருந்து இத்தகைய உதவிகளை அவளால் பெற்றுக்கொள்ளவே முடியாது. ஏற்கெனவே, தந்தையின் இறுதிக் காரியங்களை அவன்தான் செய்திருந்தான். அந்தக் கடனை எப்படித் தீர்த்துக்கொள்ளப் போகிறாள் என்பது புரியாமல் கலங்கிக்கொண்டிருக்கிறாள். இந்த நிலையில் மீண்டும் மீண்டும் அவனிடம் கடமைப்பட அவளால் இயலவில்லை.
“சாரி ஆத்மன்… என்னால் முடியாது…” என்றவள் அவனை இறைஞ்சுவது போலப் பார்த்தாள். அந்த விழிகளில் எதைக் கண்டானோ, அநேகாத்மன் சிரமப்பட்டுத் தன் கோபத்தை அடக்கியவனாக,
“ஓக்கே… ஆஸ் யு… விஷ்… பட்… ஐ ஆம் நாட் ஹாப்பி சர்வமகி…” என்றவன், வேறு பேசாமல் தன் இருக்கையில் வந்தமர்ந்தான்.
முன்புறமிருந்த இருக்கையைக் காட்டியவன்.
“சிட்…” என்றான் அழுத்தமாக. அவன் முகத்திலிருந்த மலர்ச்சி துணிகொண்டு துடைத்தாற்போல் மாயமாக மறைந்திருந்தது. அழுந்த மூடியிருந்த உதடுகள் அவன் கோபத்தை வெட்டவெளிச்சமாகக் காட்ட, மறுப்புக் கூறாமல் சட் என்று அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்தாள் சர்வமகி.
“சரி… சொல்… எதற்காக என்னைத் தேடிவந்தாய்? என்றவனின் குரலில் மருந்திற்கும் சிநேகம் இருக்வில்லை. மாறாக ஒரு அன்னிய பாவனையே இருந்தது. ஏனோ சர்வமகியால், அவனுடைய இந்தப் பாரா முகத்தைத் தாங்கமுடியவில்லை.
“ப்ளீஸ் ஆத்மன் நான் சொல்லவருவதை…”
“அதுக்குத்தான் காத்திருக்கிறேன்… எதற்கு வந்தாய் சொல்…” என்றான் மேலே தொடர விரும்பாதவன் போன்று.
அதற்கு மேல், அவனைச் சமாதானப் படுத்திப் பயனில்லை என்பதைப் புரிந்துகொண்ட சர்வமகி, அதிகம் பேசாமல், தன் கைப்பையிலிருந்த ஒரு சிறிய மண்ணிற நாட்குறிப்பேட்டை வெளியே எடுத்தாள். அதை அநேகாத்மனிடம் நீட்ட,
முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், அதைப் பெற்றுக்கொண்டவன்,
“வட் இஸ் திஸ்…” என்றவாறு அதனைத் திறந்தான்.
“இது… என் தந்தையுடைய குறிப்பேடு…” என்றதுதான் தாமதம், அவனுடைய கையசைவு அப்படியே நின்றது. விழிகள் மட்டும் உயர்ந்து, சர்வமகியை வெறித்துப் பார்த்தது.
“இதை நேற்றுதான் கண்டெடுத்தேன்… அதில்…” அவள் முடிக்கவில்லை, அந்த நாட்குறிப்பை வேகமாக மூடியவன், அவளை நோக்கி விட்டெறிந்தான். அவன் எறிந்த வேகத்தில், அந்த குறிப்பேடு, பறந்துபோய் சர்வமகியையும் தாண்டித் தரையில் விழுந்தது.
“ஆ… ஆத்மன்…” என்றாள் சர்வமகி அதிர்ச்சியுடன்.
“ஸ்டாப்… ஸ்ட்டாப்பிட் சர்வமகி… எத்தனை… தைரியமிருந்தால், அந்தாளுடைய பொருளை என் இடத்திற்கு எடுத்துவருவாய்…” என்று இவன் கர்ஜிக்க, சர்வமகிக்கு அவன் கோபத்தைக் கண்டதும், வியர்த்துக் கொட்டியது.
அவள் பயத்தையும், அவள் அதிர்ச்சியையும் கண்டவன், சிரமப்பட்டுத் தன் கோபத்தை அடக்க முயன்று தோற்றவனாக,
“சர்வமகி… நமக்கிடையில்… அந்தாளுடைய நினைவுகளோ, இல்லை அந்தாளுடைய பெயரோ நுழைவதை நான் விரும்பவில்லை…” என்றான் கடித்தபற்களுக்கிடயாக. அவனுடைய வெறுப்பைக் கண்டவளுக்கு, ஏனோ அதற்கு மேல் தாங்கமுடியவில்லை.
“ஆத்மன்… அந்தாள்… என் தந்தை ஆத்மன்… அவரை அப்படியே என்னால் விட முடியாது… அவர் செய்யாத தப்புக்குத் தண்டனை அனுபவித்திருக்கிறார்… ஒரு மகளாக அதை நிரூபிக்க வேண்டிய கடமை எனக்கிருக்கிறது… தயவு செய்து புரிந்துகொள்ள முயலுங்கள்…” என்றாள் அவள் வேதனையுடன்.
“நோ… ஹி வோஸ் எ ஃப்ரோட்… ஹி வொஸ் எ கிரிமினல்… அன்ட் ஹி வோஸ் எ பிளடி ஃப்ரீக்கிங் மேர்டரர்……” என்றான் விழிகளில் தீப்பொறி பறக்க. அவனால் தன் கோபத்தைச் சிறிதும் அடக்கமுடியவில்லை.
ஆனால் அநேகாத்மனின் கடுமையான வார்த்தைகளை அதற்கு மேல் சர்வமகியால் கேட்கமுடியவில்லை.
“இல்லை இல்லை இல்லை… என் தந்தை அப்படிப் பட்டவரல்ல… என் தந்தை உங்கள் தந்தையைக் கொல்லவில்லை, அவர் கெட்டவரில்லை… அவர் எந்தத் தப்பும் செய்யவில்லை” என்று தன் இரு காதுகளையும் பொத்திக்கொண்டு தன்னை மறந்து கத்தினாள் சர்வமகி.
ஒரு கணம், அங்கே மயான அமைதி நிலவியது.
அநேகாத்மன், கொன்றுவிடும் வேகத்துடனும், சர்வமகயை முறைக்க, சர்வமகியோதன் தந்தையைக் காப்பாற்றும் மகளாக அவனை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் சிறிது நேரம் இமைக்காது ஒவ்வாத உணர்வுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஓரளவு சுயநினைவு பெற்றவள் சர்வமகிதான். அதற்கு மேல், அவனுடன் வாதாட முடியாதவளாக, வாதாடியும் பயனில்லை என்பதைப் புரிந்துகொண்டவளாக இருக்கையை விட்டு மெதுவாக எழுந்தாள்.
இரண்டு பெரிய மூச்சுக்களை எடுத்துத் தன்னை சமப்படுத்த முயன்றவள்,
“சாரி மிஸ்டர் அநேகாத்மன்… கொஞ்ச நாட்களாக, நீங்கள் நடந்துகொண்ட முறையை வைத்து, எங்களைப் புரிந்துகொண்டீர்கள் என்று தவறாக எண்ணிவிட்டேன்… உங்கள் பகை மாறாமல் இன்னும் அப்படியே இருக்கிறது என்று தெரிந்திருந்தால், நிச்சயமாக, உங்களைத் தேடி இங்கே வந்திருக்கமாட்டேன்…” என்று வேதனையுடன் கூறியவள், பின்,
“இத்தனை நாளும், எதிரியின் மகள் என்று தெரிந்தும் உதவி செய்திருக்கிறீர்கள்… நீங்கள் செய்த உதவிக்குக் கைமாறாக எதைக் கொடுப்பது என்று தெரியவில்லை. அதற்கு விலையும் கிடையாது. இருந்தாலும், உங்கள் எதிரிக்கு நீங்கள் செலவு செய்யவேண்டிய அவசியம் இல்லையே… அதனால், நீங்கள் செலவழித்த விபரம் பற்றி கூறினீர்களானால், முடிந்த வரை அந்தக் கடனை அடைக்க முயல்கிறேன்…” என்று கூறியவள், வெளியே செல்வதற்காகத் திரும்பினாள்.
அவளுடைய ‘மிஸ்டர் அநேகாத்மனில்’ அவனுடைய கோபம் பன்மடங்காக அதிகரித்திருந்தாலும், சர்வமகியின் கோபத்தையும், அவள் விரக்தியையும் ஏனோ அவனால் பார்க்க முடியவில்லை. தன் மீதே கோபம் கொண்டவனாக,
“சர்வமகி… நான் சொல்வதை…” அவன் முடிக்கவில்லை, அவனை வேதனையுடன் திரும்பிப் பார்த்தாள் சர்வமகி. அவளுடைய பார்வையில், ‘நான் சொல்வதை நீ கேட்கத் தாயாராக இருந்தாயா?’ என்கிற கேள்வி தொக்கி நிற்க,
“டாமிட்… மகி… லிசின் டு மி…” என்றான் தன் பக்க நியாயத்தைக் கூற முயன்றவனாக.
சர்வமகியோ, அவனைக் கணக்கில் எடுக்காது, விரைந்து சென்று தரையில் கிடந்த அந்த குறிப்பேட்டை நடுங்கும் கரங்களால் எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டாள்.
“கவலைப் படாதீர்கள் அப்பா… நீங்கள் தப்பு செய்யவில்லை என்பதை இந்த உலகுக்கு வெளிக்கொண்டுவருவேன்… நிச்சயமாக வெளிக்கொண்டுவருவேன்…” என்று மனதிற்குள் கூறியவள் அதைத் தன் கைப்பையில் வைத்துவிட்டு, அவனுடைய அறைக்கதவைத் திறக்க முயன்றாள்.
”மகி ஸ்டாப்… யு கான்ட் கோ லைக் தட்…” என்று அவளை நிறுத்த முயல, சர்வமகி திரும்பி அவனைப் பார்த்து விரக்தியாகச் சிரித்தாள். அந்த சிரிப்பில், ‘உன்னால் என்னை என்ன செய்துவிடமுடியும்…’ என்கிற வாசகம் ஒட்டிக்கிடந்ததோ, அவள் கதவைத் திறக்க முயல,
“நோ மகி… நீ போக முடியாது…” என்றவாறு அவள் திறந்த கதவை அடித்துச் சாற்றிவிட்டு, அவளைப் பார்த்தவாறு நின்றான் அவன்.
சர்வமகியோ, மீண்டும் கதவைத் திறப்பதற்காகத் தன் கரத்தைக் கொண்டுபோக, அந்தக் கரத்தின் மீது தன் கரத்தைப் பதித்துத் தடுத்தான்.
“நான் கூறுவதை முழுதாகக் கேட்காமல் நீ வெளியே போகமுடியாது சர்வமகி…” என்றான் அநேகாத்மன் அழுத்தமாக.
“என்ன கூறப்போகிறீர்கள் அநேகாத்மன்…” என்று கோபமாகக் கேட்ட சர்வமகி மீண்டும் கதவைத் திறக்கப்போக, அவளை இழுத்துச் சுவரோரமாக அழுத்தியவன், இருபக்கமும் தன் கரத்தைப் போட்டு, அவளுக்கு அணை கட்டினான்.
அவள் திமிர முயல, அவள் நடு மார்பில் தனது வலது கரத்தை வைத்து சுவரோடு அழுத்தியவன்,
“ஃபெர்ஸ்ட் லிசின் டு மி…” என்றான் பிடிவாதமாக.
சர்வமகிக்கு ஒரு கணம் மூச்சை அடைத்தது. ஒரு ஆணின் கரம், அவளுடைய நடு மார்பில் அழுத்தியவாறு இருப்பதை அவளால் நம்பமுடியவில்லை. அச்சமும், பயமும் போட்டிபோட,
“இது என்ன விளையாட்டு அநேகாத்மன்… கையை எடுங்கள்…” என்று நடு மார்பில் பதிந்திருந்த அவன் கரத்தைப் பற்றி இழுக்க முயல, அப்போதுதான் தான் செய்த காரியம் புரிந்தது அனேகாத்மனுக்கு.
வேகமாகத் தன் கரத்தை விலக்கியவன், “சாரி…” என்று வாய் முணுமுணுத்தாலும், அவன் விழிகள் மாறிய விதமும், அவன் பார்வை பதிந்திருந்த இடத்தையும் கண்டவளுக்கு, அதற்கு மேல் அவன் முன்னால் அப்படியே நின்றிருக்க முடியவில்லை.
தன் கைப்பையைச் சரிசெய்வதுபோல, மார்புக்குக் குறுக்காத் தன் கரத்தைப் பதித்தவள், “விடுங்கள் அநேகாத்மன்… நான் போகவேண்டும்…” என்றாள் பெரும் சங்கடத்துடன். சிரமப்பட்டுத் தன் பார்வையை விலக்கிய அநேகாத்மன், சர்வமகியை முறைத்தான்.
‘டோன்ட் கால் மி அநேகாத்மன்… டாமிட்…’ என்று கத்தவேண்டும் போலிருந்த வேகத்தைச் சிரமப்பட்டு அடக்கியவன்,
“நோ…” என்றான் ஒற்றைச் சொல்லாக. நான் கூறுவதை நீ காது கொடுத்துக் கேட்கும் வரை, நீ இங்கிருந்து போகமுடியாது மகி…” என்றான் அவன் பிடிவாதமாக.
தன் மார்புக்குக் குறுக்காக் கரத்தைக் கட்டியவள், ஒன்றும் சொல்லாமல், அவன் முகத்தையே வெறித்துப் பார்க்க, அதையே சம்மதமாக எடுத்துக்கொண்ட அநேகாத்மன்,
“மகி… உன் தந்தை நீ நினைப்பது போல நல்லவரில்லை… அவர்… அவர்தான் என் தந்தையைக் கொன்றார்… எனக்கு உன் தந்தையை வெறுக்கவேண்டும் என்று ஏதாவது வரமா சொல்… அவருக்கும் எனக்கும் ஏதாவது முன் விரோதம் இருக்கா? இல்லையே… பிறகு எதற்காக நான் அவரை வெறுக்கவேண்டும்? காரணமில்லாமல் உன் தந்தையை நான் வெறுப்பேனா…” என்றவன் அவள் முகத்தில் விழுந்த கூந்தலைக் காதோரமாக ஒதுக்கிவிட்டவாறே,
“நான் ஒரு லாயர் மகி… நான் சாட்சியங்களை மட்டும் நம்புபவன்… என் தந்தையைக் கொண்டதற்கான அத்தனை சாட்சியங்களும் உன் தந்தைக்கு எதிராக இருக்கிறது. இதில் ஒரு சாட்சி… ஒரு சாட்சியேனும், உன் தந்தைக்கு ஆதரவாக இருந்திருந்தால், நான் உன் தந்தை நல்லவர் என்று உனக்காகவாவது நம்ப முயன்றிருப்பேன்… பட்… மருந்துக்குத் தன்னும் உன் தந்தை நல்லவர் என்பதற்கான ஆதாரம் இது வரை எனக்குக் கிடைக்கவில்லை… அப்படியிருக்கையில், அவரை எப்படி நம்புவேன் சொல்…” என்றவன் பெருமூச்சொன்றை விட்டான்.
“மகி… எனக்கிருந்த ஒரே ஒரு உறவு என் தந்தை மட்டுமே… உனக்காவது நான்கு சகோதரர்கள், பக்கபலமாக இருக்கிறார்கள்… எனக்கு… யாருமே இல்லை மகி… என் மகிழ்ச்சியை, என் துக்கத்தை, என் வெற்றியைப் பகிர்ந்துகொள்ள இப்போது யாருமேயில்லை… அதற்குக் காரணம் உன் தந்தை… அவரை என்னால் எப்படி மன்னிக்க முடியும் சொல்… என் தாய்க்குப் பிறகு, என் அப்பாதான் எல்லாமாக இருந்தார்… இப்போது அவர் இல்லை… வெற்றி கிடைக்கும் போதெல்லாம், “தட்ஸ் மை பாய்…” என்பார்… இனி நினைத்தாலும் அதைக் கேட்கமுடியாதே…. இதற்குக் காரணம் யார்… உன் அப்பா… அவரை எப்போதும் என்னால் மன்னிக்க முடியாது மகி… ப்ளீஸ் அன்டர்ஸ்டான்ட் மி…” என்றான் தன்நிலை விளக்கமாக.
“அநேகாத்மன், உங்கள் நிலை எனக்குப் புரியவில்லை என்றா நினைக்கிறீர்கள்… ஒரு பொய்யை, திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிட முடியாது அநேகாத்மன்… பால் வெண்மை என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு என் தந்தை குற்றமற்றவர் என்பது… அதை உங்களுக்குப் புரியவைக்கத்தான் என் தந்தையின் குறிப்பேட்டை எடுத்து வந்தேன்… ஆனால் நீங்கள்…உங்கள் நிலையிலேயே நிற்கிறீர்கள்… என் தந்தை நிரபராதி என்பதற்கான ஆவணங்கள் இருந்தும், அதைக் காண மறுக்கிறீர்கள்…”
“ஸ்டாப் இட் மகி… ஹி இஸ் நாட்…” என்றான் அவன் வெறிகொண்டவன் போல.
கொஞ்ச நேரம் அமைதி காத்தாள் சர்வமகி. அவனுடைய நியாயம் புரிந்தது. கூடவே, தன் பக்க நியாயத்தைப் புரிய மறுக்கும் அவனிடம் விவாதிக்கவும் அவள் விரும்பவில்லை. இருவரும் சண்டை பிடிப்பதால், கசப்புகள்தான் மிஞ்சுமே தவிர, அதற்குத் தீர்வு கிடைக்கப்போவதில்லை.
“ஆத்மன்… உங்கள் பாதை வேறு… என் பாதை வேறு… இரு பாதைகளும் ஒரு போதும் இணையப்போவதில்லை… என்றோ ஒரு நாள் என் தந்தை குற்றமற்றவர் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்… அப்போது நான் சொல்வதை நீங்கள் நிச்சமாகக் காது கொடுத்துக் கேட்பீர்கள்…” என்றவள், அவனுடைய கரத்தை தள்ளிவிட்டுக் கதவைத் திறந்தாள்.
“வெய்ட்… மழை பெய்கிறது மகி… எப்படிப் போவாய்?” என்றான் இவன் பதட்டமாக.
“நான் வரும் போது தனியாகத்தான் வந்தேன்… போகும் போதும் தனியாகப் போவேன்…” என்றவள், அதற்கு மேல் அவனுடைய பேச்சைக் கேட்காமல் விரைந்து வெளியேறினாள்.
ஆனால், அந்த அடை மழையில் அவளைத் தனியே அனுப்ப முடியாமல், இவன் பின்னால் சென்றதோ, வீடு வரை தன் காரில் பின் தொடர்ந்து வந்ததோ, சர்வமகிக்குத் தெரியாமலே போனது.
நிலவு 20
பழையபடி வாழ்க்கை மெல்ல நகரத் தொடங்கியது. வாசுதேவன் இறந்து நான்கு மாதங்கள் கடந்துவிட்டிருந்தன.
சர்வமகி வேலைக்கு மனுப்போடுவதும், கிடைக்காமல் சோர்ந்துபோய் திரும்புவதுமாக இருந்தாள். கையிருப்பும் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியது. இந்த நிலையில் எப்படி அவள் சகோதரர்களின் எதிர்காலத்தை நன்கு சீராக்க முடியும்? எதுவுமே புரியாமல் மேலும் உருக்குலைந்து போனாள்.
அவள் விண்ணப்பித்து, நேர்காணலுக்குப் போவதற்கு முன்பு அவளுடைய தந்தையின் வரலாறு தங்குதடையின்றி முன்னரே போய் விடுவதால் வேலை என்பதற்கு வாய்ப்பே இல்லாதிருந்தது.
நேர்முகம் கண்டவர்கள் எல்லோரும், அவளைக் கேவலமாகப் பார்த்தார்களே தவிர, வேலைக்குச் சேர்க்கும் நோக்கம் யாருக்குமே இருக்கவில்லை.
நாட்கள் செல்லச் செல்ல சர்வமகியின் உள்ளம் மேலும் சோரத் தொடங்கியது. கையிருப்பும் நன்றாகக் குறையத் தொடங்கியது. இனியும் முடியாது என்கிற நிலையில் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தவித்தாள் சர்வமகி.
இப்படியே போனால், அநேகாத்மனிடம் அவள் பட்ட கடனையும் அடைக்க முடியாது, வங்கியில் அவர்கள் பெற்ற கடனுக்கும் வட்டி கட்ட முடியாது.
என்ன செய்வது என்று புரியாமல் கலங்கியவள், கடந்த நான்கு மாதங்களாக, தீர்வு காண முடியாமல் உடலும் மனமும் சோரும் போதெல்லாம், அநேகாத்மனிடமிருந்து எடுத்து வந்த அவனுடைய ஜாக்கட்டைப் போட்டுக்கொள்வது போல, அன்றும் அதை அணிந்துகொண்டாள்.
அந்த ஜாக்கெட்டை உடலுடன் இறுக்கிப் பிடித்து அணைத்தவாறு படுக்கையில் அமர்ந்தவளுக்கு, அடுத்து என்ன செய்வது என்று மெல்ல மெல்ல புரியலாயிற்று. அடுத்து என்ன செய்வது என்பதும் தெளிவானது. அநேகாத்மன் கூடவேயிருந்து ஆறுதல் படுத்துவதுபோல ஒரு பிரமை எழ, அதை விழிகளை மூடி ரசித்தாள் சர்வமகி. தைரியப்பட்ட மனம், இன்னும் எத்தனை துன்பம் வந்தாலும், தாங்கிக்கொள்வேன் என்று எழுந்து நின்றது.
தன் முடிவைத் தேவகியிடம் கூறியபோது, அவளும் அதற்கு மறுக்காமல் சம்மதிக்க, அடுத்து அதற்குரிய ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினாள் சர்வமகி.
அதற்கு தற்போது உதவி செய்யக்கூடிய ஒரே நபர் நடராஜர் மட்டுமே.
அவரும் அவளுக்கு உதவ முன்வந்தார். தெரிந்த ரியல் எஸ்டேட்டின் முலம் வீடு விற்பனைக்கென்று போடப்பட்டது.
இது பற்றி அநேகாத்மனிடம் ஆலோசனை பெறலாம்தான். ஆனால் தன் தந்தையை எதிரியாக நினைப்பவனிடம் போய் உதவி கேட்க, அவள் தன்மாணம் இடங்கொடுக்கவில்லை. அதுவும், அன்று அவன் அலுவலகத்தில் சந்தித்தபிறகு, அந்த எண்ணத்தை முற்று முழுதாக அழித்தாள் சர்வமகி.
அவள் உதவி என்று கேட்டால், அவன் மறுக்கமாட்டான் என்பது கூட அவளுக்குத் தெரியும். பரிதாபத்திற்காக எதிரியின் மகள் என்றும் பாராமல், அவளுக்காகவே அவன் உதவிசெய்வான்தான். ஆனால், அப்படி அவனிடம் உதவி கேட்டால், அது அவள் தந்தைக்குத் தேடிக்கொடுக்கும் அவமானமாகும். அதை விடத் தனித்து நின்று தன் பிரச்சனையை எதிர்கொள்வதே சாலச்சிறந்தது என்று உறுதியாக எண்ணினாள்.
அது மட்டுமன்றி, அன்று அவனுடைய அலுவலகத்தில், இருவரும் இடையில் நடந்த வாக்குவாதத்திற்குப் பின், இருவரும் எந்த வகையிலும் தொடர்புகொள்ளவில்லை. அவளைத் தேடி அவன் வரவுமில்லை. அவனைக் கேட்டு அவள் விசாரிக்கவும் இல்லை. அவள் தந்தைக்கு அவன் கொடுத்த வாக்கு, அப்படியே புஸ்வானமானதுதான் மிச்சம்.
அவன் எப்படி வருவான் தந்தையைச் சமாதானப் படுத்துவதற்காக, அவர் இறுதி மூச்சை நிம்மதியாக விடுவதற்காக, ஏதேதோ கூறினான்தான். அதற்காக அதை அவன் நடைமுறைப் படுத்தவேண்டும் என்று எதிர்பார்ப்பதே தவறல்லவா. வந்தவன் எதார்த்தம் புரிந்தும் விலகிவிட்டான். ‘உன் இடம் இதுதான்… இதைத் தாண்டி நீயும் வராதே… நானும் வரமாட்டேன்” என்று கூறாமல் அல்லவா கூறிவிட்டான்.
என்னதான் அவள் தந்தை குற்றமற்றவராக இருந்தாலும், அவனைப் பொறுத்தவரை, அவர் குற்றமுள்ளவரே. அதனால் அநேகாத்மன் அவளை ஒரு கொலைகாரனின் மகள் என்று வெறுத்து ஒதுக்குவதை அவளால் சிறிதும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதேநேரம் அவனுடைய பராமுகத்தையும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை.
இப்போதெல்லாம் சர்வமகிக்கு அந்த இடத்தைவிட்டு எங்காவது கண்காணாத இடத்திற்குத் தொலைதூரத்திற்குப் போனால் என்ன என்றுகூடத் தோன்றத் தொடங்கிவிட்டது. அதே இடத்தில் பல காலங்களிற்கு நீடித்து நிற்கமுடியுமா என்கிற கேள்வி அடிக்கடி எழத் தொடங்கியது.
அங்கே இருக்க, இருக்கத் தந்தையின் நினைவும், அநேகாத்மனின் நினைவும், அவளைப் பாடாகப் படுத்திக்கொண்டிருந்தது.
போவோர் வருவோரின் அலட்சியப் பார்வையையும், கிண்டல் பேச்சையும் அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவளை மட்டும் அவர்கள் அலட்சியப்படுத்தினால் அவள் தாங்கிக்கொள்வாள். ஆனால் அவளுடைய உடன் பிறந்த சகோதரர்களையுமல்லவா கேலி செய்து கிண்டலடிக்கிறார்கள். அதைத்தான் அவளால் சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மெல்ல மெல்ல அந்த இடத்தை விட்டுச் சென்றுவிடவேண்டும் என்கிற உறுதி வலுத்தது.
இதற்கிடையில் தெலைபேசிக் கட்டணம் மேலதிகச் செலவை இழுத்துவிட, அதைக் நிறுத்தினாள். தொலைக்காட்சியையும் நிறுத்திவிட்டாள். அவசரத் தேவைக்கென்று ஒவ்வொரு பொருட்களாக விற்கப்பட்டன. பெரியவர்கள் ஓரளவு சமாளித்தாலும், கடைக்குட்டி அபிதன்தான் பெரிதும் சிரமப்பட்டான்.
தரையில் இருக்க மறுத்தான். அவனைச் சமாதானப் படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.
தந்தையின் படுக்கையைமட்டும் தம்பிக்காக விற்காமல் வைத்துவிட்டு மற்றைய அனைத்து உபகரணங்களையும் வந்த விலைக்கு விற்று அவசர தேவைக்குப் பணம் சேகரித்தாள்.
அவளின் வேண்டுகோளின்படி நடராஜன் வீட்டை விற்பதற்கென்று இருவரை அழைத்துவந்தார். வந்தவர்கள் தந்தையும் மகனும் என்றார்கள்.
அவர்கள் உண்மையாகவே தந்தையும் மகனும்தானா என்பது கேள்விக்குறியாக இருந்தது.
இளம் வயதினனாக இருந்தவன் தோள்களிலும், கரங்களிலும் பச்சைகுத்தியிருந்தான். போதாதற்கு அவனுடைய பார்வை வீட்டைச் சுற்றிப்பார்ப்பதை விட, அடிக்கடி சர்வமகியைத் துகிலுரிப்பதுபோலப் பார்த்ததுதான் அதிகம்.
ஏனோ அவர்கள் உள்ளே வந்தபோது சர்வமகிக்கு சற்று அச்சமாகத்தான் இருந்தது. அதுவும் அந்த இளம் வயதினனின் பார்வையைக் கண்டதும், துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்கிற பழம் பெரும் வாக்கியம்தான் நினைவுக்கு வந்தது.
இருந்தாலும் அவர்களுடன் நடராஜரும் வந்ததால் சற்றுத் தைரியமாக இருக்கமுடிந்தது.
நல்லவேளை சகோதரர்கள் அனைவரும் பாடசாலை போயிருந்ததால், அந்தக் கயவனின் பார்வை அவர்களின் மீது விழாமல் தப்பியது.
பெரும் முயற்சி செய்து தன் முகம் மாறாமல் காத்தவள் கையைக் கட்டியவாறு அவர்கள் உள்ளே வந்து பார்த்துவிட்டு வெளியே செல்லும்வரை அமைதியாகப் பொறுமையுடன் நின்றாள்.
அதே நேரம் நடராஜன் ஏதோ எடுத்துவருவதற்காக வெளியே சென்றார். அவரைத் தடுக்கவும் முடியாமல் சர்வமகி அவரைப் பின் தொடர்ந்து போக முயன்றாள்.
“நான் இப்போது வந்துவிடுவேன் சர்வமகி… நீ பேசிக்கொண்டிரு…” என்ற நடராஜர், அவள் பதிலையும் கேட்காமல் விரைந்து சென்றுவிட்டார்.
அவரைத் தடுக்க முடியாது, இவள் தயங்க, அதே வேளை அவளை நெருங்கிய அந்த இளைஞன்,
“ஹாய்” என்றான்.
அவனிடம் முகத்தைத் திருப்ப முடியாமல் இவளும் இழித்துவைக்க, அவள் இழிப்பைச் சாதகமாக நினைத்த அவன், அவள் புறமாகத் தன் கரத்தை நீட்டினான்.
இப்போது அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கை கொடுப்பதா, இல்லை முறைப்பதா என்று புரியவில்லை.
அதே நேரம் அந்த இளைஞனின் தந்தை அவளருகே வர, சற்று நிம்மதியுடன் தன் கரத்தை நீட்டினாள். அவளுடைய கரத்தைப் பற்றியவன், விட மனமில்லாதவனாக அதை அழுந்தப் பற்றினான்.
பற்றியதோடு மட்டும் நின்றுவிடவில்லை. உள்ளங்கையில் தன் மற்ற விரல்களால் மெதுவாக வருடித் தன் விருப்பத்தைத் தெரிவித்தான். அவளது கை சில்மிஷம் செய்ய, உதடுகள் “ஐ ஆம் கிஷோர்…” என்றது.
வேகமாக அவன் பிடியிலிருந்து தன் கரத்தை விடுவிக்க முயன்றவள் முடியாமல் போகத் தவித்துப்போனாள்.
எப்போது இந்த நடராஜர் அங்கிள் வருவார் என்று அவஸ்தையுடன் வாசலைப் பார்த்தவள், தொடர்ந்து அந்த இளைஞனின் தந்தை அவள் பின்புறமாக வந்து நின்றார்.
எதேச்சையாக அவள் மீது முட்டுவதுபோல வந்து நிற்க, சர்வமகி பெரிதும் திணறிப்போனாள்.
பற்றிய கரத்தை உதறவும் முடியாமல், வேகமாகப் பின்புறம் செல்லவும் முடியாமல் கலங்கியிருந்த நிமிடங்கள் கொஞ்சமாகவே இருக்கலாம்,
“வட்த ஹெல் ஹப்பினிங் ஹியர்?” என்கிற அழுத்தமான சீற்றமான குரல் அந்த மூவரையும் திடுக்கிட வைக்க, அவசரமாக அவளை விட்டு விலகி நின்றனர் அந்த இருவரும்.
பயத்துடன் திரும்பிப் பார்த்த சர்வமகி, அங்கே திருமால் போல நெடுநெடுவென்று நின்ற அநேகாத்மனைக் கண்டதும், பெரும் நிம்மதியுடன் “ஆத்மன்…” என்று அழைத்தவாறு, வேகமாக அவனை நெருங்கி நின்று கொண்டாள். அச்சத்தில் உடல் நடுங்கத் தன்னையும் அறியாமல் அவனது வலக்கரத்தைத் தன் கரங்களுக்குள் பற்றி அணைத்துக்கொண்டாள்.
அநேகாத்மனுக்கு அன்று சர்வமகி வந்துவிட்டுச் சென்ற பிற்பாடு, அவன் ஒரு நிலையில் இருக்கவில்லை.
கிட்டத்தட்ட ஒரு கிழமை இழுத்துப்பிடித்த கோபம் மெது மெதுவாக இளகத் தொடங்கியது. ஆனாலும், அந்த வாசுதேவனை அவனால் சிறிதும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
ஆனாலும், சர்வமகியைப் பார்க்காமல், பேசாமல் அவனால் இருக்கவே முடியவில்லை. எப்படியாவது சர்வமகியை சமாதானப் படுத்தி, தன் நிலையைப் புரியவைக்கவேண்டும் என்று முடிவுசெய்திருந்தவனின் எண்ணத்தைச் செயற்படுத்த முடியாமல், முக்கிய வேலைகள் அவனை மூழ்கடித்தன.
முக்கியமாக அவன் தந்தை விட்டுச் சென்ற பொறுப்புக்களை எடுத்து நிறைவுசெய்யவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டான். அதனால் உடனேயே சென்று அவளைப் போய்ப் பார்த்துப் பேசமுடியவில்லை.
இதில் அவன் முடிக்கவேண்டிய முக்கிய நீதிமன்றம் சார்ந்த வேலைகள், வாதாட்டங்கள் என்று மூச்சுவிடுவதற்கே நேரமில்லாது போனது. இதற்கிடையில் தந்தையின் ஒரு முக்கிய ப்ராஜக்டை முடிப்பதற்காக அவன் ஜேர்மன் செல்ல வேண்டியிருந்தது.
சர்வமகியிடம் சென்று கூறிவிட்டுப் போகக் கூட அவனால் முடியவில்லை. அவளிடம் சென்று மன்னிப்புக் கேட்கக் கூட அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை. சரி எங்கே போய்விடப்போகிறாள், வந்ததும் பேசிக்கொள்ளலாம், என்று சென்றவனுக்கு, உடனேயே வேலையை முடித்துவிட்டு வரமுடியவில்லை. அது வேறு ஒரு மாதம் இழுத்துக் கொண்டது.
மரம் ஏறி விழுந்தவனை மாடு மிதித்த கதையாக, லன்டனில் உள்ள அவர்களின் கிளை ஒன்றில், ஏதோ பிரச்சனை உருவாக, அதை விசாரிக்க அங்கே சென்றவன், மீண்டும் கனடா வந்து சேர இரண்டு மாதங்கள் எடுத்தன. இதற்கிடையில், அவனை நம்பி வந்த வாடிக்கையாளர்களின் வழக்குகளை உடனே முடித்துவைக்கவேண்டிய நிலை. அதற்காகக் கனடா வந்து, அந்த வேலையை முடித்துக்கொண்டு மிண்டும் லன்டன் போனான். இப்படியே அவனுடைய நேரம், நான்கு மாதங்களைச் சத்தமின்றியே விழுங்கியது.
இந்நிலையில் லண்டனிலிருந்தபோது,அவளுடைய குரலையாவது கேட்கவேண்டும் என்கிற வேகத்தில், அவளுடைய கைப்பேசிய எடுத்தபோது, அது பாவனையில் இல்லை என்று வந்தது. அப்போதுதான், அவள் கைப்பேசி தன்னிடம் சிக்கிக்கொண்டதும், அதை அவளிடம் கொடுக்காமல் தான் வைத்திருந்ததும் நினைவுக்கு வந்தது. சரி வீட்டுக்கு அழைக்கலாம் என்று வீட்டுக்கு அழைத்தால், அதுவும் பாவனையில் இல்லை என்றே வந்தது. எரிச்சலுடன், தேவகியின் கைப்பேசிக்குக் கூட முயன்றான். அதுவும் அதே கதை.
அநேகாத்மனுக்கு வியர்த்துக் கொட்டியது. எங்கோ போய்த் தொலைந்தார்கள் அனைவரும். என்று கலங்கியவன், உடனே டேவிட்டுக்கு அழைத்து, சர்வமகி எப்படி இருக்கிறாள் என்கிற விபரங்களைத் தெரிவிக்குமாறு கூற, உடனே அது பற்றி விசாரித்து அறிவித்தான் டேவிட்.
அவள் நலமாக இருக்கிறாள் என்கிற செய்தியை அறிந்த பின்தான் அநேகாத்மன் தன் மூச்சையே ஒழுங்காக விட்டான்.
இனியும் அவளை விட்டுத் தள்ளி இருக்க முடியாது என்கிற உண்மை புரிய, எப்படியாவது தன் விருப்பத்தை இந்த முறை கூறிவிடவேண்டும் என்கிற உறுதி கொண்டவனுக்கு, தான் ஏன், அவளுக்காகத் துடிக்கிறோம் என்பதையும், அவளுக்கொன்று என்றால், தான் ஏன் பதறவேண்டும் என்பதையும், அவளை இன்னொரு ஆண் தவறாகப் பார்த்தால், தான் ஏன் பொறாமை கொள்ளவேண்டும் என்பதற்கான காரணத்தையும் அவன் ஆராய்ந்து பார்க்கவேயில்லை. ஒரு வேளை ஆராய்ந்திருந்தால், பின்னால் வந்த துன்பங்களை ஓரளவு தடுத்திருக்கலாமோ என்னவோ.
ஒருவாறு வேலைகள் முடிந்து நிமிர்ந்த போது, இன்னும் அவள் தன் மீது கோபமாக இருப்பாளோ என்கிற கவலையும் கூட சேர்ந்தே வந்தது. இருந்தாலும் தன்னவளுக்குக் கோபம் கொள்ளத் தெரியாது என்கிற உறுதியும் இருந்ததால், அவள் தன்னைப் புரிந்துகொள்வாள் என்கிற நம்பிக்கையில் கனடா வந்தவன், உடனேயே அவளைச் சந்திக்கப் புறப்பட்டான்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளைச் சந்திக்கப்போகிறோம் என்கிற படபடப்பும், ஏதோ இனம்புரியாத ஒரு உணர்வும், அவன் காரின் வேகத்தை அதிகப்படுத்த, அரை மணி நேரத்தில் வரவேண்டியவன், இருபது நிமிடங்களில் சர்வமகியின் வீட்டின் முன்னால் வந்து நின்றான்.
நடையில் வேகத்தைக் கூட்டியவன், திறந்திருந்த கதவைக் கண்டதும், ஏதோ உள்ளுணர்வு எச்சரிக்க,
“என்ன இது… கதவைப் பொறுப்பில்லாமல் திறந்து வைத்திருக்கிறாள்… காலம் கெட்டுக்கிடக்கிறது என்கிற கவனம் வேண்டாம்…” என்று எரிச்சலுடன் எண்ணியவாறே கதவைத் திறந்தவனுக்கு, அங்கே கண்ட காட்சி, அத்துவரையிருந்த இன்ப உணர்வு மாயமாக மறைத்து அந்த இடத்தில் கொலைவெறி தாண்டவமாடவைத்தது.
யாருமில்லா வீட்டில் யாரோ ஒருவன் அவளுக்குக் கைகொடுத்துக்கொண்டிருந்தான். அது உறுத்தவில்லை. ஆனால், சர்வமகிக்குப் பின்னால் நின்றிருந்தவன், தன் உடல் முழுவதும் அவள்மீது படுமாறு உரசிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோதுதான் அநேகாத்மனுக்கு, அமிலத்தைக் கரைத்து ஊற்றியதுபோல காந்தியது.
அவன் அவர்களைப் பார்த்து முறைத்ததை விட சர்வமகியைப் பார்த்தே விழிகளால் எரித்தான்.
ஒரு முறை பட்டும் அவளுக்குப் புத்தி வரவில்லையா… இல்லை… இதுதான் நிஜமா… நினைத்தபோதே, அவனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அந்த இருவரையும் அடித்து கழுவில் ஏற்ற உடலும், உள்ளமும் பரபரத்தது.
அவனைக் கண்டதும், “ஆத்மன்…” என்று அழைத்தவாறு அவனிடம் விரைந்து வந்தபோது, நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்ட அந்த ஆத்மனில், கொஞ்சம் கோபம் தணியப்பெற்றான். இருந்தாலும், அங்கே நின்றிருந்தவர்களின் மீது, அவனுடைய சீற்றம் சிறிதும் குறைந்திருக்கவில்லை.
அவனுடைய பார்வையில் அவ் இருவரும், பஸ்பமாகாது விட்டது கடவுள் புண்ணியமே. அவனுடைய மூடிய முஷ்டியும், சிவந்த விழிகளும், அவன் நிமிர்ந்து நின்ற தோற்றமும், அவனுடைய பலத்தைக் காட்ட, அதற்கு மேல் அங்கே நின்றால் ஆபத்து என்பதைப் புரிந்துகொண்டவர்கள் வேகமாக அந்த வீட்டைவிட்டு வெளியேறினர்.
உடனே தன் பான்ட் பாக்கட்டிலிருந்த கைப்பேசியை வெளியே எடுத்தவன், ஏதோ இலக்கத்தை அழுத்த, மறு பக்கம் எடுக்கப்பட்டதும்,
“காச் தெம்…” என்றான் அவன் அடக்கப்பட்ட ஆத்திரத்தில். இவன் பேசி முடிக்கவும், நடராஜர் உள்ளே வரவும் நேரம் சரியாக இருந்தது.
“என்னம்மா… ஏன் அவர்கள் இப்படி… ஓடுகிறார்கள்…” என்று வியப்புடன் கேட்டவர் அங்கே நின்றிருந்த அநேகாத்மனைக் கண்டதும் ஒன்றும் புரியாமல் சர்வமகியைப் பார்த்தாள்.
அவள் கலங்கியிருந்த முகத்தைப் புரியாமல் ஏறிட்டவர்,
“என்னம்மா? ஏதாவது பிரச்சனையா?” என்றார் யோசனையாக.
“என்ன பிரச்சனையா? இவளை அவர்களுடன் தனியாக விட்டுவிட்டு நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்?” என்று சீற்றம் குறையாமல் கேட்டான் இல்லை இல்லை கத்தினான் அநேகாத்மன்.
அநேகாத்மன் யார் என்பது நடராஜருக்குத் தெரியும். பார்க்கப்போனால் அந்தக் குடும்பத்தின் எதிரி அவன்தான். அவன் அவரிடம் அதிகாரமாகப் பேசுவதா? கோபம் எழுந்தது. இருந்தாலும் அவனுடைய பணமும், பதவியும் அவருடைய வாயைக் கட்டிப்போட,
“அவர்களுக்கு கொஃபி வாங்கச் சென்றிருந்தேன்…” என்று முணுமுணுத்தார்.
அவருடைய கையில் கொஃபி இல்லாததையும் அவருடைய வலது கரத்தின் சுண்டு விரலும், நடு விரலும் மடியாது நீண்டிருப்பதைக் கண்டவனுக்கு ஏதோ உறுத்தியது. இப்படி விரல் யாருக்கோ இருந்திருக்கிறது… யாருக்கு? என்று எண்ணியவனுக்கு அப்போது அது நினைவில் வரவில்லை. அதை அலட்சியமாக ஒதுக்கியவனுக்கு, அவரை ஒரு பார்வையிலேயே பிடிக்காமல் போனது. அந்தாள் நம்பத் தகுந்த மனிதனல்ல என்று உள்ளுணர்வு சொன்னது.
அவனுடைய பார்வையைப் புரிந்துகொண்டவராக, “அங்கே நிறைய வாடிக்கையாளர்கள் நின்றதனால் வாங்க முடியவில்லை. நம் பெண் தனியாக இருக்கிறாளே என்று தாமதிக்காமல் வந்துவிட்டேன்…” என்றார் நடராஜர் மொட்டையாக. அவருடைய விளக்கத்தை நம்பாதவன் போல ஏறிட்ட அநேகாத்மன்,
“நல்லது… இனி நீங்கள் போகலாம்… நான் இவளுடன் சற்றுத் தனியே பேசவேண்டும்…” என்றான் அநேகாத்மன் அழுத்தமாக. அவனுடைய அலட்சியம், அவருக்குக் கோபத்தை வரவழைக்க, இவன் என்ன என்னை வெளியே போகச் சொல்வது, என்கிற ஆத்திரத்துடன்,
“அவளுடன் தனியே பேச உங்களுக்கு என்ன இருக்கிறது? எனக்குத் தெரியாமல் சர்வமகி எதுவும் செய்யப்போவதில்லை…” என்றார் அவர் மிடுக்காக.
“இவள் உங்களுக்குச் சொல்லிவிட்டுச் செய்கிறாளா? சொல்லாமல் செய்கிறாளா என்பது என் பிரச்சனையில்லை. நான் அவளுடன் சற்றுப் பேசவேண்டும். அதனால்…” என்று அவன் அழுத்தமாகக் கூறி வாசல் கதவைப் பார்க்க,
“நான்…” என்று நடராஜர், ஏதோ கூற முற்பட,
அநேகாத்மனின் கோபத்தைப் புரிந்துகொண்டவளாக, முன் வந்தவள்,
“சாரி அங்கிள்… நான்… உங்களுடன் பிறகு பேசுகிறேனே…” என்றாள் அழுத்தமாக.
“இல்லைம்மா… அது…”
“ப்ளீஸ் அங்கிள்…” என்றாள் எதையோ உணர்த்துபவளாக. அவளுக்கும் நடராஜன் மீது சற்றுக் கோபம் எழுந்திருந்தது. இப்படி யாரென்றே தெரியாத இருவருடன் தன்னைத் தனித்திருக்க விட்டு விட்டுச் சென்றவிட்டாரே…’ என்கின்ற மனக்கசப்பு எழுந்ததால்தான் அவரைப் போகுமாறு பணிந்தாள்.
அந்தக் குரலுக்கு மறுக்க முடியாதவராக அநேகாத்மனைப் பார்த்து முறைத்தவாறு விடைபெற்றார் நடராஜர்.
அவர் போகும் வரை அமைதி காத்தவன், அவர் வெளியே சென்றதும், அவளை இழுத்துத் தன் முன்னால் நிறுத்தினான்.
“வட் ஹப்பினிங் ஹியர் சர்வமகி? இங்கே என்ன நடக்கிறது? ஹூ த ஹெல் ஆர் தே… டோன்ட் யு ஹாவ் எனி சென்ஸ்… அவன்… அவன் உன் கையைப் பிடித்து… இன்னொருத்தன் என்னவென்றால்… சே… நினைக்கவே கூசுகிறது…” என்று அவன் கொந்தளிக்க,
“அது அவர்கள்…” அவள் முடிக்கவில்லை,
“உன் தொலைப்பேசிக்கு என்ன நடந்தது. எத்தனை முறை எடுத்தாலும் தற்போது பாவனையில் இல்லை என்று வருகிறது…” என்றவன் சுற்றும் முற்றம் பார்த்தான். வெறுமையான வீடு அவனைப் பார்த்து நகைக்க,
புருவத்தைச் சுருக்கி அவளை ஏறிட்டவன், “இங்கே என்ன நடக்கிறது மகி… எங்கே வீட்டுப் பொருட்கள் எல்லாம்…?“ என்று புரியாமல் அவளுடைய முகத்தைப் பார்த்தவாறு கேட்டவன், வீட்டின் உள்ளே நுழைந்தான்.
வரவேற்பறை துடைத்து வைத்ததுபோல எந்தப் பொருட்களும் இல்லாமல் இருந்தது.
ஒன்றும் புரியாமல், சர்வமகியை ஏறிட்டவன்,
“என்னாச்சும்மா…” என்றான் கனிவுடன்.
வேதனை முகத்தில் அப்ப, நீண்ட பெரிய விழிகளால் அவனுடைய ஏறிட்டவளின் நீண்ட நயனங்களில், இரண்டு பனித்துளிகளாகக் கண்ணீர் திரண்டு வர, அதைக் கண்டவன், தன் கோபம் மறந்தவனாக, அவள் முகத்தைத் தன் கரங்களால் ஏந்தியவன், தன் விழிகளை அவள் விழிகளுக்குள் கலக்கவிட்டவாறு,
“ஷ்…. என்னாச்சு மகி…” என்றான் பட்டின் மென்மையுடன்.
அவனுடைய மென்மை ஏனோ அவளைப் பாதிக்க, தாங்கமுடியாத அழுகை வந்தது. விழிகள் கலங்க, உதடுகள் நடுங்க நின்றவளைப் பார்க்க முடியாதவனாக அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக்கொண்டான் அநேகாத்மன்.
“ஷ்…” என்று அவளைத் தேற்ற முயன்றவன் முடியாமல் அவளைச் சற்று நேரம் அழவிட்டான். அவனுடைய வலது கரம், அவளுடைய கூந்தலுக்குள் நுழைந்து வருடியும் அழுத்தியும், கொடுக்க, இடது கரம், அவள் இடையினூடாக ஓடிப் பின்புற முதுகை அழுத்தித் தன்னோடு இணைத்துக்கொள்ள முயன்றது. அவனுடைய அழுத்தமான, பாதுகாப்பான அணைப்பில், அவளுடைய அழுகை மெதுவாகக் குறைந்து மெல்லிய விசும்பலில் நின்றது.
அவளுடைய நாடியைப் பற்றித் தூக்கியவன்.
“என்ன மகி… நீ இப்படி அழும் அளவிற்கு என்னவாகிவிட்டது?” என்றான் மென்மையாக.
மீண்டும் அழுகை வர உதடுகள் துடித்தன. ஒற்றை விரலால் அவளுடைய உதட்டின் மீது தன் கரத்தைப் பதித்துத் தடுத்தவன், அவளுடைய நீண்ட விழிகளுக்குள் எதையோ தேடினான். அந்தத் தேடலில் எதைக் கண்டாளோ சர்வமகியின் அழுகை நின்றது.
“குட்…” என்றவன் அவளை தன்னிடமிருந்து விலக்கினான்.
“என்னாச்சு… எங்கே வீட்டுப் பொருட்கள் எல்லாம்?” என்றான் ஒன்றும் புரியாதவனாக.
“அனைத்தையும் விற்றுவிட்டேன்…” என்றாள் சர்வமகி சோர்வுடன்.
“விற்று விட்டாயா? ஏன்?” என்றான் ஒன்றும் புரியாமல்.
“வேறு வழி?” என்று அவனையே பார்த்துக் கேட்டவள், சுவரோரமாகச் சென்று அப்படியே சாய்ந்தவாறு தரையில் அமர்ந்தாள்.
“உட்காருங்கள்… மன்னிக்கவேண்டும். இருப்பதற்குக் கதிரைகள் கிடையாது… தரைதான்…” என்றாள் பலவீனமான புன்னகையுடன்.
மார்புக்குக் குறுக்கே தன் கரத்தைக் கட்டி இரண்டு கால்களையும் சற்று அகட்டி வைத்தவாறு அவளை உற்றுப் பார்த்தான் அநேகாத்மன்.
“இன்னும் என் கேள்விக்குப் பதில் வரவில்லை சர்வமகி… இவற்றை விற்க அப்படியென்ன அவசியம் வந்தது?” என்றான் வேகமாக.
“அவசியம்தான்… நான் தனி ஒருத்தி என்றால் எப்படியாவது சமாளித்துவிடுவேன்… என்னை நம்பி இன்னும் நான்கு ஜீவன்கள் இருக்கிறார்களே. அவர்களுக்குச் சாப்பாடு, இதரத் தேவைகள் என்று பல செலவுகள். இதை எப்படி என்னால் தீர்க்க முடியும்? அதுதான் ஒவ்வொரு பொருட்களாக விற்றுவிட்டேன். இந்த வீட்டையும் விற்கத்தான் முயல்கிறேன். ப்ச்… இன்னும் சரிவரவில்லை…” என்றாள் இயலாமையுடன்.
“வீட்டை எதற்காக விற்கவேண்டும்… ஏதாவது வேலைக்கு அமர்ந்திருக்கலாமே…” என்றவனை விரக்தியாகப் பார்த்தாள் சர்வமகி.
“ஒரு கொலைகாரனின் மகளுக்கு யார் வேலை வைத்திருக்கிறார்கள்? எத்தனையோ நேர்முகத்திற்குப் போனதுதான் மிச்சம்… பலன்தான் பூஜ்யம்…” என்றாள் விரக்தியுடன்.
“வேலையை விடு… ஏன் உன் தந்தை ஆயுட் காப்புறுதி ஒன்றும் செய்துவைக்கவில்லையா?” என்று எரிச்சலுடன் கேட்டான் அநேகாத்மன். இன்னும் அவனால் வாசுதேவனை ஒரு நல்ல மனிதனாக எண்ணமுடியவில்லை.
சர்வமகியின் உதட்டில் ஒரு விரக்திப் புன்னகைதான் தவழ்ந்தது.
“இப்படி ஆகும் என்று அவருக்கு முன்னமே தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் ஏதாவது ஆயுட் காப்புறுதி செய்திருப்பார்…” என்றவளுக்கு மீண்டும் மளுக் என்று கண்ணீர் வந்தது.
“இத்தனை நடந்திருக்கிறது… அப்போது உனக்கு என் நினைவு வரவில்லையா? என்ன செய்யலாம் என்று என்னிடம் கேட்கவேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா? இப்படி எல்லாவற்றையும் விற்றுக் கொட்டிவிட்டு, அமர்வதற்குக் கூட வழியில்லாமல்…” என்றவனின் குரலில் என்ன இருந்தது? கோபம்? எரிச்சல்? ஆதங்கம்? வேதனை? ஏதோ ஒன்று. ஆனால் அந்தக் குரலில் அவனுடைய உதவியை அவள் நாடி நிற்கவில்லை என்பதை அவன் விரும்பவில்லை என்பது மட்டும் புரிந்தது.
“எப்படி… எப்படி உங்களிடம் உதவி கேட்பேன் என்று நினைத்தீர்கள்… உங்கள் தந்தையின் மரணத்திற்குக் காரணமான குடும்பத்திற்கு நீங்கள் உதவி செய்யவேண்டும் என்று நான் எதிர்பார்ப்பது தவறு அல்லவா?” என்றவளுடைய குரல் மெலிந்து ஒலித்தது.
“டாமிட்… உன் தந்தை செய்த தவறுக்கு உன் குடும்பத்தைப் பழிவாங்கும் அளவு கேவலமானவன் நான் என்றா நீ நினைத்தாய்?” என்றவனுடைய குரலில் அதிக சீற்றம் இருந்தது.
ஏனோ அவனுடைய கோபம் அவளைப் பெரிதும் பாதிக்க, மீண்டும் கண்ணீர் எட்டிப் பார்த்தது. ஏற்கெனவே வருத்தத்திலிருந்தவளை மீண்டும் வருந்த வைத்துவிட்டோம் என்கிற கழிவிரக்கம் தோன்றினாலும், அவள் எப்படித் தன்னிடம் உதவி கேட்காமல் இருக்கலாம் என்கிற ஆதங்கமும் அதிகமாகத் தோன்றியது.
கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாக இருந்தான். மென் மேலும் அவள் வருந்துவதை ஏனோ அவன் விரும்பவில்லை. அவளுடைய கண்களில் விழுகின்ற ஒவ்வொரு துளி கண்ணீரும் அவனுடைய இதயத்தில் வழிவதுபோன்ற ஒருவித உணர்வில் அவன் தவித்துப்போனான். எதற்காக அப்படித் தோன்றவேண்டும்? அவள் அழுதால் அவனுக்கென்ன… ஆனால் அந்த ஆராய்ச்சியில் அவன் இறங்க விரும்பாதவனாக,
“சர்வமகி… கண்ட கண்டவன் எல்லாம் வீட்டிற்குள் நுழைகிறான்… உன் கரத்தைப் பற்றுகிறான், வயசு அறுபதாகியும்… சே… நினைக்கவே அருவெறுப்பாக இருக்கிறது… இந்த நிலைமை உனக்குத் தேவையா?” என்றான் இறுகிய குரலில்.
“என்னை வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்…? என் சகோதரர்களுக்கு எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டுமே ஆத்மன்…” என்றால் குரலில் வலியைத் தேக்கி.
“சகோதரர்கள்… சர்வமகி… கொஞ்சமாவது உன்னைப் பற்றி யோசிக்கமாட்டாயா?” என்றான் அநேகாத்மன் பெரும் சலிப்புடன்.
“அவர்கள்தானே இனி என் உலகம்… அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலே எனக்குப் போதுமானது… அதுதான்… இந்த வீட்டை விற்றுவிட்டு எங்காவது போகலாம் என்று…” அதற்கு மேல் முடிக்கமுடியாதவளாகச் சோர்வுடன் சொன்னவளுக்கு முன்பு முழந்தாளிட்டு அமர்ந்தான் அநேகாத்மன்.
“எங்கே… எங்கே போவதாக உத்தேசம்…” என்றான் இறுகிய குரலில்.
“தெரியவில்லை… எங்காவது… என் தந்தையைப் பற்றிய தவறான செய்திகள் கேட்காத தூரத்திற்கு…” என்றவள் விழிகளை மூடித் தன் தலையைச் சுவர் புறமாகச் சாய்த்தாள்.
அவளுடைய அதீத சோர்வு, இயலாமை அனைத்தும், அவளுடைய நிலையை அநேகாத்மனுக்கு தெளிவாக எடுத்துக் காட்டியது. என்ன வேலை இருந்திருந்தாலும், அவளை ஒரு எட்டு வந்து பார்த்திருக்கவேண்டும்… என்று அவன் மனம் அவனையே சுட,
“நீ சாப்பிட்டாயா?” என்றான் திடீர் என்று.
“ம்… சாரி… என்ன கேட்டீர்கள்…” என்று தலையைத் திருப்பிக் கேட்டவள் இப்போது நிச்சயமாக அந்த உலகத்தில் இருக்கவில்லை. விழி முழுவதும் கலக்கத்துடன், அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலையில் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தவளை வெறித்துப் பார்த்தான் அநேகாத்மன்.
“நீ சாப்பிட்டாயா என்று கேட்டேன்…” என்றான் அழுத்தமாக.
“ம்…” என்று தலையாட்டினாள் சர்வமகி.
“எப்போது சாப்பிட்டாய்?” என்று அடுத்த கேள்வியைத் தொடுத்தான்.
எப்போது சாப்பிட்டாள்? நேற்று காலையா? இல்லை மதியம் கூட தேவகி எதையோ கொண்டுவந்து கொடுத்தாளே… தந்தை இறந்த இந்த நான்கு மாதங்களில் அவள் ஒழுங்காகச் சாப்பிட்ட நினைவே இல்லை. அதுவும் வீட்டை விற்றுவிட்டு எங்கேயாவது போகலாம் என்று முடிவெடுத்தபிறகு அவள் தன்னையே மறந்துவிட்டாள். தேவகியும், மாதவியும்தான் அவளை வற்புறுத்திக் கிடைக்கிற உணவை அவளுக்கும் பகிர்ந்துகொடுத்து, அவளை உண்ண வைத்துக்கொண்டிருந்தார்கள்.
அது கூட அவளுக்கு நினைவில் இல்லை.
“தெரியவில்லையே…” என்று விழித்தவளைக் கோபத்துடன் பார்த்தான் அநேகாத்மன்.
“சர்வமகி… சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்டமுடியும். நீ என்னவென்றால்…” என்றவன் வேகமாக எழுந்தான்.
“நான் வெளியே போய் வருகிறேன். கதவைப் பூட்டு…” என்றவன் அவள் சோர்வுடன் எழும்ப எத்தனிக்க அவளைத் தடுத்தான்.
“இல்லை… நீ இப்படியே இரு… நானே பூட்டிவிட்டுச் செல்கிறேன்… திறப்பெங்கே…” என்று கேட்டான்.
“திறப்பு…” எங்கே வைத்தாள்? அது கூட அவளுக்கு நினைவில்லை. நினைக்க முடியாமல் தலை கனத்தது. சோர்வுடன் விழிகளை அழுந்த மூடி யோசித்தவள் பதில் தெரியாமல் அநேகாத்மனைப் பார்த்தாள்.
“என்னுடைய கைப்பையில்…” அவள் முடிக்கவில்லை, சுற்றும் முற்றும் பார்த்தவன், ஒரு ஓரமாக இருந்த கைப்பையைக் கண்டு எடுத்து வந்து அவளிடம் நீட்டினான். கைப்பையை வாங்கியவள், கையைவிட்டுத் துழாவினாள். திறப்பு தட்டுப்படவில்லை. சமையலறை ஆணியில்… இருக்குமோ? அவள் எழமுயல,
“எங்கே இருக்கிறது என்று மட்டும் சொல்லு … நான் பார்க்கிறேன்…”
“சமையலறையில்… ஆணியில்…” அவள் முடிப்பதற்குள்ளாக அவன் அங்கே சென்று பார்த்தான். நல்ல வேளை திறப்பு தொங்கிக்கொண்டிருந்தது.
அதை எடுத்தவன், அவளிடமிருந்து விடைபெற்று கதவைச் சாத்திவிட்டு வெளியே போனான்.
சரியாக பத்து நிமிடத்தில் திரும்ப வந்தான். அவன் கையில் இரண்டு பாசல்கள் வீற்றிருந்தன.
அவன் கதவைத் திறந்து உள்ளே வந்தபோது, அவள் தரையில் சரிந்து தலைக்கு இடது கையை முட்டுக்கொடுத்துப் படுத்திருந்தாள்.
மீண்டும் கதவைச் சாத்திவிட்டு, உள்ளே வந்தவன் அவளை எழுப்பினான். விழிகளை மூடியிருந்தவள் மெதுவாகத் திறந்தாள்.
“எழுந்திரு சர்வமகி…” என்றவன் அவளை எழுப்பிவிட்டான். சோர்வுடன் அவனை என்ன என்பது போலப் பார்த்தான்.
“உணவு வாங்கி வந்திருக்கிறேன்… சாப்பிடு…” என்றவாறு அவளிடம் ஒரு பார்சலை நீட்டினான்.
நடுங்கும் கரங்களால் அதை வாங்கியவள், எதையோ யோசித்தவளாக,
“இது… இதை வைத்தால்… பிரதீபனும், அபிதனும் சாப்பிடுவார்களே…” என்றாள் ஆவலுடன்.
“ஏய்… உன் மனசில் நீ என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய்? இப்படியே சாப்பிடாமல் கிடந்து காற்றோடு கரைந்துபோகப்போகிறாயா? முன்னைக்கு விடவும் நீ இப்போது எப்படி மெலிந்துவிட்டாய் என்பதைக் கண்ணாடியில் பார்…” என்று கடிந்தவன், பார்சலைப் பிரித்து உண்பதற்கு வசதியாக சிறு கரண்டியையும் வைத்து அவள் முன்பு நீட்டினான்.
நடுங்கும் கரங்களால் உணவைச் சாப்பிட்டாள். ஏனோ அவனுடைய கடுமை நிறைந்த கனிவு அவளை இளக வைத்தது.
அமைதியாக அவள் சாப்பிடுவதைப் பார்த்தவன், அவள் சாப்பிடட்டும் என்று எண்ணியவனாக வீட்டைச் சுற்றிப்பார்த்தான். எங்குமே தளபாடங்கள் இருக்கவில்லை. ஒரு அறையில் மட்டும் மெத்தை தரையில் போடப்பட்டிருந்தது. மற்றைய அறைகளில் பாய்தான் விரிக்கப்பட்டிருந்தது. மூன்று அறைகள். ஒரு குளியலறை, பேஸ்மன்டில் ஒரு அறையும் சிறிய ஹாலுமாக அமைக்கப்பட்டிருந்த சிறிய வீடு.
பார்க்கப்போனால் ஐந்து பேருக்கும் அந்த வீடு போதாதுதான். பெண்கள் மூவரும் ஒரே அறையில் படுப்பார்கள் போலும், ஒரு அறை முழுவதும் பெண்களுக்குரிய பொருட்களும், ஆடைகளும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மறு அறையில் ஆண்களுக்குரிய உடைகள் அங்கும் இங்கும் சிதறிக் கிடந்தன. ஒரு அறையைத் திறந்த போது, சாமிப் படங்களும், ஒற்றைக் கட்டிலும் இருந்தது.
பார்த்தபோதே அது வாசுதேவனின் அறை என்பது புரிந்தது. எளிமையாகச் சுத்தமாக இருந்தது அந்த அறை. தினமும் அந்த அறை ஒழுங்காகப் பராமரிக்கப் படுகிறது என்பது அதன் சுத்தத்திலேயே தெரிந்தது.
அவன் வெளியே வந்தபோது, சர்வமகி இன்னும் உணவை வைத்து அளைந்துகொண்டிருந்தாள்.
கோபம் வந்தது. ஆனாலும் அதை அவளிடம் காட்ட முடியாதவனாகச் சுவரில் சாய்ந்தவாறு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவளைக் கடைசியாகப் பார்த்ததற்கும், இப்போது பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.
முதலில் உடலில் காணப் பட்ட மெலிவு அவனை யோசிக்க வைத்தது. எங்கே தொட்டாலே உடைந்துவிடுவாள் போல மெலிந்திருந்தாள். ஏற்கெனவே அவள் உடலமைப்பு சற்று சிறியது. ஐந்தடி மூன்றங்குலம் இருப்பாளா… அவளோடு ஒப்பிடும் போது, அவள் சிறுமி போலத்தான் தெரிவாள். இப்போது, இந்த மெலிவுக்குப் பிறகு இன்னும் சிறியவளாகத் தெரிந்தாள். முன்பு கண்களில் தெரிந்த கவர்ச்சி இப்போது அடியோடு இல்லை. அதில் சோகம் மட்டுமே தழும்பியிருந்தது. மற்றும் படி அதே அமைதி.
சர்வமகி நீண்ட நேரமாக யோசித்துக்கொண்டிருப்பதைக் கண்டவன், மீண்டும் அவளருகே சென்று அமர்ந்தான்.
அவள் கரத்திலிருந்த உணவை வாங்கி ஒரு ஓரமாக வைத்தவன்,
“மகி… உனக்கு இப்போது என்ன பிரச்சனை? எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லு. தீர்த்துவைக்க முயல்கிறேன். அதை விட்டுவிட்டு இப்படியோ அழுது கரைந்துகொண்டிருந்தால் என்ன அர்த்தம்? சொல் வட் கான் ஐ டூ ஃபோர் யு…” என்றான் கனிவான ஆனால் ஆழமான குரலில்.
“நான்… எனக்கு…” என்றவள் சற்றுத் திணறினாள். அவனிடம் என்ன உதவியைக் கேட்பது? இப்போது அவளுக்கு வேண்டிய உதவியைப் பட்டியலிட்டுக் கூறினால் அவன் பிடரியில் கால் முட்ட ஓடிவிடுவான்.
அவளுடைய கரத்தை அழுந்தப் பற்றி விடுவித்தவன்,
“சொல்லு மகி… உனக்கு என்ன உதவி வேண்டும்… உனக்காக எதையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்… எதுவும்…” என்றான் கனிவு மாறாமல் கூடவே, அந்த எதுவும் என்பதில் அதிக அழுத்தம் கொடுத்து.
அவள் தந்தைக்கு அவன் கொடுத்த வாக்கை நிச்சயமாக மறந்திருக்கமாட்டாள். அந்த வகையில் எப்படியும், தன்னை ஏற்றுக்கொண்டு, தன் சகோதரர்களுக்குப் பக்க பலமாக இருப்பாயா என்று அவள் கேட்பாள் என்று அவன் நிச்சயமாக முழுதாக நம்பினான். அவன் வந்ததும் அதற்குத்தான். அவனாகக் கேட்பதை விட, அவளாகக் கேட்டால், அது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணினான். அதனாலேயே, சர்வமகியை அவள் ஆசையைக் கூறுமாறு ஊக்கினான்.
ஏன் என்றால், தன் சகோதரர்களுக்காக அவள் எந்த எல்லையையும் கடப்பாள் என்று அவனுக்கு நன்கு தெரியும். கூடவே இப்போதிருக்கும் நிலையில், அவளால் தன்னை ஏற்றுக் கொள்வதைத் தவிர, வேறு எதையும் தேர்வுசெய்ய முடியாது என்பதும் அவனுக்குத் தெரியும். அந்த தைரியத்தில், அவள் வாயாலேயே அவள் விருப்பத்தை அறிய விரும்பிக் காத்திருந்தான் அநேகாத்மன்.
“கமான்… சொல்… நான் என்ன செய்யவேண்டும்… உனக்காக எந்த எல்லையையும் தாண்டுவேன்… சொல் மகி… வட் கான் ஐ டூ ஃபோர் யு…” என்றான் ஆவலாக.
அவள் எதைக் கேட்டாலும் அவன் செய்வான் என்பது உறுதி… அந்த நம்பிக்கையில் கேட்கலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்த சர்வமகி இறுதியாகக் கேட்டே விட்டாள்.
“அநேகாத்மன் நீங்கள்…”
What’s your Reaction?
+1
4
+1
+1
+1
+1
+1