Thu. Sep 19th, 2024

நிலவே என்னிடம் நெருங்காதே – 6/10

நிலவு 6

சற்றைக்கு முன், அவனிடம் வந்து, தன் தந்தையைக் காக்குமாறு வேண்டிநின்ற அந்தப் பெண்ணை ஏனோ அநேகாத்மனால் சட்டென்று மறக்க முடியவில்லை. அவள் நல்லவள் அல்ல என்பது தெரியும். அவள் ஒரு கொலைகாரனின் மகள் என்பதும் தெரியும். ஆனால் அதையும் மீறி எதுவோ அவனை அவள் பக்கமாக இழுத்தது. அது எது? புரியாமல் தன் மீதே கோபம் கொண்டவனாகத் தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடக்கத் தொடங்கினான்.

அவனையும் அறியாமல், அவனுடைய கைப்பேசியை அடிக்கடி அவன் பார்த்தான்.

“டாமிட்… கேர்வின்… கால் மி…” என்று அவனையும் அறியாமல் முணுமுணுத்தவன், சென்று தன் இருக்கையில் அமர்ந்தான். அவசரமாகப் பார்க்கவேண்டிய பல கோப்புக்கள் அவனைப் பார்த்துச் சிரிக்க, சலிப்புடன் ஒரு கோப்பத் திறந்தான்.

திறந்தவனின் கண்முன்னால், கலங்கி நின்ற அந்தப் பெண்ணே நின்றாள். அதற்கு மேல், கோப்பிலிருந்த செய்திகள் எதுவும் அவனுடைய கருத்தில் பதியவில்லை.

தன்மீதே சினம் கொண்டவனாக,

“ஆஹ்… எனக்கென்ன ஆகிவிட்டது?” என்று தன்னையே கடிந்தவாறு, தன் தலைமுடியைக் கோதிவிட்டான். கரங்களை மார்புக்குக் குறுக்காக் கட்டித், தன் மேசையின் மீது கால் போட்டவாறு சாய்ந்து அமர்ந்தவனால், ஏனோ சர்வமகியை மறக்க முடியவில்லை. மீண்டும் தன் கைப்பேசியை பார்த்தான்.

இனியும் முடியாது என்பதுபோல, கேர்வினின் கைப்பேசி இலக்கத்தை அழுத்தத் தொடங்க, அந்த நேரம், அவனுடைய கைப்பேசி அலறியது.

எரிச்சலுடன் இலக்கத்தைப் பார்த்தான். கேர்வின்தான் அழைத்திருந்தான்.

அவசரமாக அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டவன்,

“வை யு டேக் சோ லாங்…” என்றான் அடக்கிய கோபத்துடன்.

“சாரி சார்… ட்ரஃபிக்…”என்றான் அவன் சிறு அச்சத்துடன்.

“ஹெள இஸ் ஷி… இஸ் ஷி சேஃப்…” என்றான். அவன் குரலில் மெல்லிய பதட்டம் தெரிந்ததோ,

“யெஸ் சார்… வீட்டிற்குள் போய்விட்டார்கள்…” என்று கேர்வின் கூற, அவனையும் அறியாமல், அவன் உள்ளம் அமைதியடைந்தது.

“குட்… நவ் கம் பக்…” என்றவன், தன் கைப்பேசியை அணைத்துவிட்டு, நிம்மதியாகப் பெரும் மூச்சொன்றையும் வெளியிட்டான்.

என்ன முயன்றும், அவன் மனதில், பதாகையாகப் பதிந்துபோன, அவள் முகத்தை ஒதுக்கித் தள்ளிவிட முடியவில்லை.

அந்த நீண்ட விழிகள் கொஞ்ச நேரத்தில் எத்தனை கதைகள் பேசின. ஏனோ அவளைப் பற்றி அறியவேண்டும் என்கிற உந்துதல், அவனை மிகவும் அலைக்கழிக்க, அடுத்து டேவிட்டின் பதிலுக்காகக் காத்திருக்கத் தொடங்கினான் அநேகாத்மன்.

அதே நேரம்,  ஒரு அழகிய வெள்ளை இனப் பெண் அவன் அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள். எண்ணங்கள் தடைப்பட, சற்று எரிச்சலுடன் திரும்பிப் பார்த்தான் அநேகாத்மன்.

அங்கே நின்றிருந்தவளைக் கண்டதும், முகத்தில் எந்த சலனமும் இல்லாமல்,

“ஹாய்… ரோசலின்… வட்ஸ் அப்…” என்றான் அலட்சியமாக.

“என்ன… சார் அதிக பிஸியோ… பார்க்கவே முடியவில்லை…” என்று குரலில் தாபத்தைத் தேக்கிக் கேட்டவள், அவன் அருகே வந்தாள்.

அவனுடைய உணர்ச்சியற்ற பார்வை, அவளைச் சற்று இம்சிக்க,

“என்ன நேகன்… அதிகம் டல்லாக இருக்கிறீர்கள்… இஸ் எவ்ரிதிங் ஓக்கே…” என்றவாறு இன்னும் அவனை நெருங்கி நிற்க,

அநேகாத்மனோ, அவள் அருகாமைக்குத் தடை கூறாது, கீழ்க்கண்ணால் அவளை ஏறிட்டான்.

அவர் கூர் பார்வையைத் தைரியமாக ஏறிட்டவளின் உதட்டில் மெல்லிய நகைப்புத் தோன்ற,

“ஏதோ டென்ஷனாக இருக்கிறீர்கள் என்று தெரிகிறது… வட் இஸ் இட்” என்றவாறு, அவனுடைய மார்பிலே, தன் கரத்தைப் படரவிட்டு, மேலே கொண்டு சென்றாள், அவன் டையைப் பற்றித், தன்னை நோக்கி இழுக்க, அவன் முகம், அவள் முகத்திற்கு அருகே வந்தது. தன் முகத்தை, அவன் கழுத்து வளைவிற்குள் கொண்டுசென்றவள், ஆழ மூச்செடுத்தாள்.

“யு ஸ்மெல் குட்… நேகன்… ஐ லவ் இட்…” என்றவாறு அவன் கன்னத்தில் தன் இதழைப் பதித்தாள். எந்த மறுப்பும் கூறாமல், அந்த முத்தத்தைப் பெற்றுக்கொண்டவன், சற்றுத் திரும்பி, அவள் முகத்தைப் பார்த்தான். அழகிதான்… ஆனால், அந்த அழகை எடுத்துக்காட்ட அதிக மேக்கப் வேண்டியிருந்தது.

அநேகாத்மன் தன்னையும் மறந்து சர்வமகியையும் ரோசலினையும் ஒப்பிட்டுப் பார்த்தான். அவளின் இயற்கை அழகிற்கு முன்னால், இவள் கால்தூசி பெறமாட்டாள் என்று எண்ணியவன் அதிர்ந்தான்.

அவனுக்கு என்னவாகிவிட்டது? போயும் போயும் அந்தக் கொலைகாரனின் மகளைப் போய், இவளுடன் ஒப்பிடுகிறானே…’ என்று எரிச்சலுடன் நினைத்தவன், அந்தத் தவற்றைச் சரிசெய்யும் முகமாக, ரோசலினின் இடையில் கரத்தைப் போட்டுத் தன்னை நோக்கி இழுத்தான்.

பாழாய்ப் போன நினைவு, சற்றைக்கு முன்பு, சர்வமகி விழப்போனபோது, வருடிய இடையை நினைவு படுத்தி இம்சையைக் கொடுத்தது.

எத்தனை மெல்லிய இடை… அவள் அணிந்திருந்த சுரிதாரையும் மீறி, மென்மையாக இருந்ததே அந்த இடை…” அவன் சற்றுத் தடுமாறியவாறு, தன் கரத்தை விலக்கப் போக, அதை அழுந்தப் பற்றித் தடுத்தவள்,

“ஹேய்… வட்ஸ் ஹப்பன்… உன் நினைவு இப்போது உன்னிடமில்லை…” என்றாள் தன் உடல் முழுவதும் அவன் உடலோடு நன்கு உரச. ஓரளவு தன் சுயத்திற்கு வந்தவன், அந்தப் பெண்மையின் மேடு பள்ளங்கள், அவன் யோசனையைத் தற்காலிகமாக, மறக்கடிக்கச் செய்ய, அங்கே புதிய உணர்வு பிரவாகமெடுத்தது.

அவனுடைய விழிகளில் யோசனைக்குப் பதில், காமம் வழிய, உதட்டிலே, கவர்ச்சியான புன்னகை மலர,

“நத்திங் பேபி…” என்றவாறு அவள் உதடுகள் நோக்கிக் குனிந்தான்.

“ம்….” என்று முத்தம் கொடுத்து சற்று விலகியவள்,

“டார்லிங்… ஹூ  இஸ் த கேர்ள்…” என்று கிளியின் கொஞ்சும் குரலில் கேட்டாள்.

“யாரைக் கேட்கிறாய்…” என்றான் அவன் தன் காரியமே கண்ணாக.

“கொஞ்சத்துக்கு முன்பு வெளியே போனாளே… லாங் ஹெயர்…” என்றதும், அவள் சர்வமகியைப் பற்றிக் கூறுகிறாள் என்பது புரிய, ரோசலின், வந்து அதிக நேரமாகிவிட்டது என்று புரிந்தது.

“தெரிந்துகொள்ளும் அளவுக்கு அவள் ஒன்றும் முக்கியமானவள் அல்ல பெண்ணே…” என்றவன் அவளை மீண்டும் தன்னை நோக்கி இழுத்து, அவள் உதடுகள் நோக்கிக் குனிந்தான். இரு உதடுகளுக்கிடையிலும், தன் சுண்டுவிரலைப் பதித்தவள்,

“ஹனி… உங்கள் தந்தையின் உயிலை என்ன செய்யப்போகிறீர்கள்?” என்றாள் இனிமையாக.

“ம்… ஐ டோன்ட் நோ பேபி…” என்றான் அவள் விரல்களை விலக்க முயன்றவாறு.

“அவருடைய விருப்பத்திற்கு நான் தயாராக இருக்கிறேன்… நீதான் பிடிகொடுக்க மாட்டேன் என்கிறாய்…” என்று சிணுங்கினாள் அந்த ரோஸலின்.

“நோ பேபி… உனக்குத்தான் தெரியுமே… எனக்கு இந்தத் திருமணம், அதனால் வருகிற கமிட்மன்ட் எதிலுமே பிடிப்பு இல்லை என்று…” என்றான் அவளுடைய உதட்டைத் தன் சுட்டுவிரலால் அளந்தவாறே.

“பட்… நீங்கள் யாராவது ஒருத்தியை மணக்கவில்லை என்றால், அத்தனை சொத்துக்களும் அநாதை மடங்களுக்குப் போய்விடுமே…” என்றாள் அவள் வருத்தமாக.

“எனக்கு அதைப்பற்றிய கவலை இல்லையே ரோசலின்… என்னால் உழைக்க முடியும்… என்னிடமும் பணமிருக்கிக்றது. என் தந்தையின் சொத்தில்தான் நான் வாழவேண்டும் என்கிற கட்டாயம் எனக்கில்லை. பிறகென்ன?” என்றான் அவன் அலட்சியமாக.

“ஆனாலும்… எத்தனையோ பல்லாயிரம் பில்லியன் டாலர்கள் பெறுமானமுள்ள அத்தனை சொத்துக்களையும் அப்படியே போகட்டும் என்று விட்டுவிட முடியுமா?.” என்று இவள் இழுக்க, அவளை மேலும் தன்னோடு இறுக்கியவன்,

“பார்க்கலாம்… யாராவது ஒருத்தி, திருமணம் முடித்ததும் பட் என்று இறந்து போபவளாக ஒருத்தி கிடைத்தால் பார்க்கலாம்… கட்டாயம் அவளை மணந்து அப்பாவின் சொத்துக்களை என் வசமாக்குகிறேன்…” என்றான் அவன் தன் காரியம் முடியவேண்டுமே என்கிற அவசரத்தில்.

“எப்போது…? இன்னும் மூன்று வருடங்களுக்குள் நீங்கள் ஒருத்தியை மணக்க வேண்டும்…” என்றவளை அதற்கு மேல் அவன் பேச விடவில்லை. தன் அலுவலக அறையை ஒட்டியுள்ள அவன் தனிப் படுக்கையறைக்குள் அவளை இழுத்துச் சென்றான்.

நிலவு 7

சர்வமகிக்கு உடலோடு சேர்ந்து மனதும் சோர்ந்துபோனது. அந்த அநேகாத்மனை சந்திக்கும் வரையிருந்த அந்தத் தைரியம், இப்போது சுத்தமாகத் தொலைந்து போயிருந்தது. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் கார் ஓட்டிக்கொண்டு வந்தவளுக்குத் தன் பின்னால், ஒருவன் பின் தொடர்ந்து வந்தது தெரியாமலே போனது.

வீட்டில் காரைப் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு காரைவிட்டு வெளியேறவும், கடைசித் தம்பி அபிதன் ஓடிவந்து அவளை இடையோடு அணைக்கவும் நேரம் சரியாக இருந்தது.

அது வரை ஏதோ நினைப்பிலிருந்த சர்வமகி தம்பியின் அணைப்பிலும், அவன் மெல்லிய விசும்பல் ஒலியிலும் சுயநினைவுக்கு வந்தாள்.

“அக்கா… என்னை தேவகியக்கா அடித்துவிட்டாள்…” என்றான் தம்பி வாய் பிதுங்க. தம்பியை அணைத்துப் பிடித்தவள், தேவகியை என்ன என்பதுபோல ஏறிட்டாள்.

“நான் சொல்வது ஒன்றையுமே கேட்கமாட்டேன் என்கிறான்… மணிக்கணக்காக கம்பியூட்டரிலேயே இருக்கிறான். கண் கெட்டுவிடும் என்றால் என்னையே எதிர்த்துப் பேசுகிறான். சாப்பாடு எடுத்து வைத்து நீண்ட நேரமாகிவிட்டது. இன்னும் சாப்பிடவில்லை… என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?” என்று கோபமாக முறைக்க, சர்வமகி தம்பியை ஏறிட்டாள்.

“தேவகி அக்கா சொல்வதும் சரிதானே கண்ணா… உன் நல்லதுக்குத்தானே அவள் கண்டிக்கிறாள்…” என்றாள் கனிவுடன்.

“அது சரி… சும்மாவே அவன் தலைக்கு மேலே ஏறி ஆடுகிறான்… நீயும் அதற்கேற்றாற்போல் கனிவுடன் பேசு. கொஞ்சம் அதட்டித்தான் வையேன்…” என்று சலிப்புடன் சொன்ன சகோதரியைப் புன்னகையுடன் பார்த்தாள் சர்வமகி.

“பாவம்மா… சின்னப்பிள்ளை… அவனாவது சந்தோஷமாக இருக்கட்டும்…” என்று வலியோடு கூற,

“அக்கா?” என்றாள் தேவகி யோசனையோடு. தான் கலங்குவது மட்டுமல்லாது, தேவகியையும் கலங்கவைக்க விரும்பாதவளாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு,

கோபப் படுவதால் யாருக்கு என்ன பயன் இருக்கமுடியும் சொல்லு…?” என்று அவள் கேட்க,

“என்னக்கா பிரச்சனை?” என்றாள் தேவகி நேரடியாக. இத்தனை வருடங்கள், சகோதரியைப் பார்த்து வருபவளுக்கு, அவள் முகத்தில் தெரிந்த மாற்றங்களைக் கண்டுகொள்ள முடியாதா என்ன?

“ஒ… ஒன்றுமில்லையம்மா…” என்று அவள் சமாளித்துக்கொண்டிருக்கும் பொழுதே தொலைப்பேசி வீறிட்டது.

விரைந்து சென்று எடுத்தாள் சர்வமகி.

நடராஜன் அங்கிள்தான். அவர் யாருடனோ பேசியபோது, “இன்னொரு சட்டத்தரணியின்  தொலைப்பேசி இலக்கம் தந்தார்களாம், பேசிப்பார்…” என்று ஒரு இலக்கத்தைக் கொடுக்க, நேரம் தாமதிக்காமல் உடனேயே,அந்த இலக்கத்துடன் தொடர்புகொண்டாள். அந்த சட்டத்தரணியின்  பெயர் ரட்ணபாலன்.

மறு கிழமையே வருமாறு அவளுக்கு அனுமதி கொடுக்கப் பட்டது.

அதற்குப் பிறகு சர்வமகிக்கு யோசிக்க நேரமே கிடைக்கவில்லை. இதர வேலைகளைச் செய்யவும், சமைப்பதற்குமே நேரம் சரியானது. ஒருமுறை தந்தையையும் பார்த்துவிட்டு வந்தாள். இடைக்கிடையே அவளுக்கு அந்த அநேகாத்மனின் நினைவு வந்து அடிக்கடி அவள் நினைவை மறக்கடிக்கச் செய்தன. அவனுடைய புருவச் சுழிப்பு, உதட்டு வளைவு, கோபத்தில் மின்னும் விழிகள். எதற்காக அவன் நினைவு வரவேண்டும் என்றுதான் அவளுக்குப் புரியவில்லை. ஒரு வேளை அவன் தந்தையும் கிட்டடியில்தான் மரணம் எய்தினார் என்பதால் வந்த பரிதாபமோ? அல்லது, அந்த மரணத்தில், தன் தந்தையும் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்கிற வேதனையா? எது எப்படியோ அவன் அடிக்கடி நினைவில் தோன்றி அவளைச் சலனப்பட வைத்தான் என்பதுமட்டும் உண்மை.

மறு கிழமை, சர்வமகி அந்த ரட்ணபாலனைச் சந்திக்க, அவர்கள் குறிப்பிட்ட கட்டடத்தை வந்தடைந்தாள். இலக்கத்தைச் சரிபார்த்து, உள்ளே நுழைந்தாள்.

அவர்களின் செக்ரட்டரி வெள்ளைக்காரப் பெண்மணி. ஆடை குறைப்புக்கும் குறைவில்லை, அணிந்திருந்த மேக்கப்புக்கும் குறைவில்லை.

அவள் விபரத்தைச் சொல்ல, ஒரு இருக்கையில் அமருமாறு பணிந்துவிட்டு, உள்ளே சென்றாள்.

உள்ளே சென்றுவிட்டு வெளியே வந்தவள் சர்வமகியை உள்ளே அனுப்பினாள்.

நன்றி பகர்ந்துவிட்டு, உள்ளே சென்றாள் சர்வமகி.

கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க மனிதர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

உள்ளே வந்த சர்வமகியைக் கண்டதும், ஒரு கணம் விழிகளை இமைக்க மறந்துபோய் அவளையே வெறித்துப் பார்த்தார் அந்த ரட்ணபாலன்.

“வா… வாம்மா… வந்து உட்கார்…” என்றபோது அவருடைய விழிகள் அவள் உடலைத் தாராளமாக வருடிக்கொடுத்தன. இதை எதையுமே சர்வமகி கவனிக்கும் நிலையில் இருக்கவில்லை. அவளுக்குத் தேவை தந்தையின் விடுதலை. அவ்வளவுதான்.

அவளுடைய கதையைச் சோகமாகக் கேட்டார் ரட்ணபாலன். கேட்டுவிட்டு

“நீ கவலைப் படாதேம்மா… உன் தந்தையை வெளியே கொண்டுவருவது என் பொறுப்பு… அதற்கு.. நான் காரன்டி…” என்றதும் இவள் முகம் பளிச் என்று மலர்ந்தது.

“தாங்ஸ் சார்… மிக மிக நன்றி… எங்கே என் தந்தையை வெளியே கொண்டு வர முடியாதோ என்று நினைத்தேன்… பட்… தாங்க் காட்…” என்று தன் கரங்களைக் கூப்பிக் கும்பிட்டவளை அவர் கவனித்ததாகவே தெரியவில்லை. அவர் பார்வை முழுவதும், கழுத்துக்குக் கீழே பிரம்மாவின் படைப்பில் எழிலாய் காட்சியளித்த உடலிலேயே நிலைத்திருந்தது.

அவருக்கும் எச்சில் ஊறியதோ, விழுங்கியவர், பின் தன் தொண்டையைக் கனைத்தார்,

“உன் தந்தைக்காக நான் வாதாடுகிறேன்… ஆனால் இப்போது அவசரமாக நான் போகவேண்டி இருக்கிறது. அதனால்… ம்… ஒன்று செய்… இன்று மாலை ஆறு மணிக்குப் பிறகு, நான் தருகிற விலாசத்திற்கு வருகிறாயா? அங்கே அமைதியாக இந்த கேஸ் பற்றிப் பேசலாம்…” என்றவரை வெள்ளை மனதுடன் பார்த்துத் தலையாட்டினாள் சர்வமகி.

“ஓக்கே சார்… கட்டாயமாக வருகிறேன்…” என்று எழுந்தவளிடம் அந்த விலாசத்தை நீட்டினார். அதைப் பெற்றபோது, அவருடைய கரம் அவள் வலக்கரத்தை பட்டும் படாமலும் வருடிக்கொடுத்தது. பேதைமையை உணராமல் அந்த விலாசத்தைப் பெற்று முகம் முழுவதும் மகிழ்ச்சியில் மலர, மீண்டும் நன்றி கூறிவிட்டு விடைபெற்றாள் சர்வமகி.

அன்று மாலையே சற்றும் தாமதிக்காது, அந்த ரட்ணபாலனைக் காணச் சென்றாள். சிறிய நகர வீடு. கதவின் அழைப்பு மணியை அழுத்த, திறந்தது. கதவுக்கப் பின்னே அந்த ரட்ணபாலன்தான் நின்றிருந்தார்.

மேலே கையில்லாத பெனியனும், கீழே ஷோர்ட்சும் அணிந்து தன்னை இளமையாகக் காட்ட முயன்று தோற்றுக்கொண்டிருந்தார். அளவுக்கு மீறி அடித்த சென்ட் வாசனை அவள் நாசியைத் துளைத்து, தும்மல் வர வைப்பதுபோல இருந்தது. ஏனோ அந்த உடையில் அவரைப் பார்க்கும்போது, சர்வமகிக்கு கூசி அவரின் கோலம் அருவெறுப்பைக் கொடுத்தது.

“சார்… என்னை வரச் சொல்லிச் சொன்னீர்களே…” என்றாள் அந்த மனிதனின் மீது தன் பார்வையைப் பதிக்காது.

“யா… ஐ நோ… உள்ளே வா…” என்று அவளை அழைத்துக் கதவைச் சாத்தினார்.

சாத்தியவர் அவளை இருக்கையில் அமருமாறு பணிந்துவிட்டு உள்ளே சென்றார். வரும் போது அவர் கையில் வெள்ளித் தட்டு வீற்றிருந்தது. அதில் இரண்டு கண்ணாடி கிளாசில் இரண்டு கூல் ட்ரிங் வீற்றிருந்தது.

“இந்தா… முதலில் இதைக் குடி…” என்று ஒன்றை நீட்ட மறுக்க முடியாமல் வாங்கிக் கொண்டவள், குடிக்காமலே, அதை மேசையில் வைக்க, மறுப்பாகத் தலையாட்டியவர்,

“முதலில் குடியம்மா… பிறகு பேசலாம்…” என்று துரிதப் படுத்த, அதற்கு மறுப்புக் கூற முடியாது, வாய் வைத்து கொஞ்சமாக வாயில் எடுத்துக் குடித்தவள், மீண்டும் அதை மேசையில் வைத்துவிட்டு,

“சார்… அப்பாவைப் பற்றிப் பேசலாம் என்று சொன்னீர்களே…” என்றாள் சர்வமகி தவிப்புடன்.

“ஓ… பேசலாம்… அங்கே பார் உன் அப்பாவின் வழக்கப் பற்றித்தான் வாசித்துக் கொண்டிருந்தேன்… கொஞ்சம் சிக்கல்தான்…” என்று அவர் தூண்டில் போட,

இவள் சிறு அச்சத்துடன் அந்த ரட்ணபாலனைப் பார்த்தாள். அவள் முகத்தில் தெரிந்த கவலையை அறிந்தவராக,

“ப்ச்… எதற்கம்மா வருந்துகிறாய்…” என்றவர் மெதுவாக அவள் தோளில் கரத்தைப் பதித்துத் தட்டிக்கொடுப்பதுபோலத் தட்டிக் கொடுத்து,

“அந்த அநேகாத்மன் இருக்கிறானே… அவன் மிகவும் பயங்கரமானவன்… அவனுடன் மோதி ஜெயிப்பது என்பது மலையை உளியால் தட்டுவதுபோல. அவன் கோபத்திற்கு ஆளாவதும் ஒன்றுதான். சிங்கத்தின் வாய்க்குள் தலையை வைப்பதும் ஒன்றுதான். அவன் நீருக்குள் இருக்கிற முதலை மாதிரி. பார்த்தால் புரியாது. ஆனால், அவன் வாயில் அகப்பட்டால், அதற்குப் பிறகு தப்ப முடியாது. பதுங்கும் புலியைப் பார்த்திருக்கிறாயா? அதை இந்த அநேகாத்மனில் பார்க்கலாம். பயல் அமைதியாக இருந்தால், எங்கோ பாயப்போகிறான் என்று அர்த்தம். அவனுடைய புத்திசாலித்தனத்திற்கு சாணக்கியரே அவனிடம் பிச்சை எடுக்கவேண்டும். ஒரு சிறு துருப்புக் கிடைத்தால் போதும், அந்த வழக்கையே ஒன்றுமில்லாததாக்கிவிடுவான். அப்படிப்பட்டவனோடு, எதிர்த்து வாதாட யாருமே முன்வரமாட்டார்கள். அநேகாத்மன் வழக்கை எடுத்து நடத்தப் போகிறான் என்றால், எதிர்க்கட்சி சட்டத்தரணிகள் எந்தக் வழக்கையும் எடுக்கமாட்டார்கள். ஏன் தெரியுமா, எப்படியும் அவன்தான் வெல்லுவான் என்பது அவர்களுக்கு சர்வ நிச்சயமாகத் தெரியும். தெரிந்தும் மூக்குடைபட யார்தான் முன்வருவார்கள் சொல்லு…” என்று அவர் கூற, அதிர்ச்சியுடன் ரட்ணபாலனைப் பார்த்தாள் சர்வமகி.

“சார்…” என்றாள் அவள் பதட்டத்துடன்.

“பயமெல்லாம் வேண்டாம் பெண்ணே… அது மற்றைய சட்டத்தரணிகளுக்குத்தான். எனக்கெல்லாம் அந்த அநேகாத்மன் வெறும் கொசுறு. எல்லோருக்கும் அந்த அநேகாத்மன் மீது பயம், அவனுக்கு என்மீது பயம் என்றால் பார்த்துக்கொள்ளேன்….” என்றவர் தேவையற்று “ஹா ஹா” என்று நகைத்துவிட்டு, “ இதோ பார் சர்வமகி… நீ யோசிக்காதே… நான் உனக்காக வாதாடுவதாகத் தீர்மாணித்துவிட்டேனே…” என்றார் அவர் தன் மாரை நிமிர்த்தி.

பெரும் நிம்மதி கொண்டவளாக, முகம் மலர்ந்தவள். பின், “ஆனால் என் அப்பாவை சிறையில் இருந்து வெளி வர மிஸ்டர் அநேகாத்மன் விடமாட்டாரே… அப்போ நான் என்ன செய்வது?” என்றாள் குரல் கம்ம.

“அதற்குத்தான் நான் இருக்கிறேனே… உன் அப்பாவைக் கண்டிப்பாக வெளியே கொண்டுவரலாம். கவலைப்படாதே… நாங்கள் விலாவரியாகப் பேசலாம். அதற்கு முதல் இதைக் குடித்து முடித்துவிடு. களைப்பாக இருக்கிறாய்… குடித்து விட்டாயானால் நாம் மேற்கொண்டு பேசலாம்.” என்று கூற,

“இல்லை சார்… எனக்கு வேண்டாம்… நீங்கள் விஷயத்தைக் கூறுங்கள்…” என்றாள் சர்வமகி தடுமாற்றமாக.

“நீ அப்படியெல்லாம் சொல்லக் கூடாது… உனக்காகச் செய்து கொண்டு வந்திருக்கிறேன்… குடிம்மா… நீ மிகவும் சோர்ந்து போய் இருக்கிறாய். இந்த சோர்வுடன் உன்னால் எதையும் தெளிவாகப் பேசவும் கேட்கவும் சிந்திக்கவும் முடியாது. முதலில் குடி…” என்று அவர் அவளைக் கட்டாயப்படுத்த, வேறு வழியில்லாமல் அந்த குளிர்பானத்தை கடகடவென்று குடித்து முடித்தாள் சர்வமகி.

“இப்போதாவது…” என்றவளுக்கு திடீர் என்று எங்கோ பறப்பது போலிருந்தது. தன் விழியைச் சுருக்கி, தன் முன்னால் இருந்த மனிதரைப் பார்க்க முயன்றாள். முடியாமல் பார்வை மெது மெதுவாக மங்கத் தொடங்கியது.

“சா… சார்… எனக்கு… என்னவோ… செய்கிறது…” என்று அவள் திக்கித் திக்கிக் கூற,

வெற்றிப் பெருமிதத்துடன் அவளை நெருங்கியவர், அவள் தோளிலே தன் கரங்களைப் போட்டவாறு,

“எனக்கும்தான் பெண்ணே… உன்னைப் பார்த்த நிமிடம் முதல் என்ன என்னவோ செய்கிறது…”  என்று தன் முப்பத்திரண்டு… இல்லை இல்லை முப்பது பற்களையும் வெளியே காட்டி இளித்தவாறு கூற, சர்வமகியின் உடல் விறைத்தது.

வேகமாக அவர் பிடியிலிருந்து தன்னை விடுவித்தவள், எழுந்து நின்றாள்.

அவளால் அவனைப் பார்த்து முறைக்கக் கூட முடியவில்லை. வேகமாக வெளிக்கதவை நோக்கி நடக்கத் தொடங்க, அவளைப் பிடித்து இழுத்தார் அந்தப் பெரிய மனிதன்.

“த…த ய… வு செய்து என்னை விடுங்கள்…” என்று திமிற முயன்றாள். விடுவதற்கா இத்தனை சிரமப்பட்டேன்…” என்றவாறு அவளை வருடத் தொடங்கினான் அந்தக் கயவன். அந்த மனிதனின் கரங்கள் எல்லை மீறத் தொடங்கின. அவளை இழுத்துச் சென்று சோபாவில் தள்ளியவர், அவள் மேலாடையில் கை வைத்தார்.

முடிந்த வரை அவரிடமிருந்து போராடினாள் சர்வமகி. போராடியதன் விளைவு ஆடைகள் கிழிக்கப்பட்டன. அந்த மனிதனின் ஐந்து விரல்களும் அவளுடைய மறுப்பால் கன்னத்தில் மாறி மாறிப் பதிந்தன. உதடுகளில் அந்த மிருகத்தின் பற்கள் பட்டு இரத்தம் வழிந்தது.

இறுதி வரைக்கும் சர்வமகி கடவுளின் மீதிருந்த நம்பிக்கையைக் கைவிடவில்லை. கடவுள் எப்படியும் காப்பாற்றுவான் என்கிற இறுமாப்புடன் இருந்தவளை நோக்கி அந்த மனிதனின் முகம் மெது மெதுவாக நெருங்கியது. தீண்டக் கூடாத இடங்களில் அந்தக் கயவனின் கரங்கள் சுதந்திரமாகச் சுழன்றன. மெது மெதுவாக சர்வமகி தன் சுயநினைவை இழக்கத் தொடங்கினாள்.

நிலவு – 8

சர்வமகி எதையும் உணரும் நிலையில் இருக்கவில்லை. எங்கோ, திரிசங்கில், அந்தரத்தில் பறந்துகொண்டிருந்தவளின் இறகை யாரோ வலிந்து முறிப்பதுபோல, அந்த மயக்கத்திலும், துடித்துக்கொண்டிருந்தாள்.

அந்த உயிர்போகும் நிலையில் தவித்துக்கொண்டிருந்தவளைக் காக்க யார் வரப்போகிறார்கள்? ஆழ் மனம் கதறிக்கொண்டிருக்க, திடீர் என்று எங்கோ… தொலை தூரத்தில் இசையொன்று கேட்டது. பின்பு பட படவென்று எதையோ, எதுவோ தட்டும் சத்தம் அந்த நிலையிலும் அவள் செவிப்பறைக்குக் கேட்பதுபோலத் தோன்றியது.

‘யார் அது… அவளைக் காப்பாற்ற வந்த கடவுளா? இல்லை, இன்னும் வலிக்கும் அளவுக்குப் புறட்டிப்போட வந்த ராட்ஷசனா? புரியவில்லை.

கிடைத்த நம்பிக்கையையும் விடத் தயாரில்லை என்பதுபோல, முடிந்தவரை, தன் சக்தியைக் கூட்டிக் கத்துவதற்கு வாய் திறந்தாள்… இல்லை இல்லை திறப்பதாக நினைத்தாள்…

வாயிலிருந்து வெறும் காற்று மட்டுமே வெளிவந்தது. இனியும் முடியாது என்கிற இறுதித் தருவாயில், மீண்டும், எங்கோ எதுவோ எதையோ படபட என்று தட்டியது. பின்பு, ஏதோ இசை வந்தது… என்ன அது?

அந்த சத்தம் அவளுக்கு மட்டும்தானா கேட்டது? இல்லை என்பதுபோல, அவள் ஆடைகளைக் கிழிப்பதில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த அந்த அரக்கனின் காதிலும் விழுந்ததுபோல, அவனுடைய அசைவு சற்றுத் தடைப்பட்டது.

இப்போது அந்தப் படபடவென்ற சத்தம் அதிகமாக, அழுத்தமாக, ஆக்ரோஷமாகப் பலமாகக் கேட்டது.

அது எதையும் அந்த வஞ்சகன் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. அவன் பாட்டிற்குத் தன் வேலை முக்கியம் என்பது போல, சர்வமகியைச் சீரழிப்பதிலேயே கவனமாக இருந்தான். சர்வமகி மெது மெதுவாகத் தன் புலன்களை முற்று முழுதாக இழக்கத் தொடங்கினாள்.

சர்வமகி மெதுவாக அசைந்தாள். யாரோ மண்டையில் சம்மட்டியால் அடித்ததுபோல தலை வலித்தது. இருந்தாலும் அவளை உள்ளுக்குள் அழுத்திய மென்மையான மெத்தையின் சுகத்தில் ஒரு முறை ஆழ்ந்துவிட்டுத் தன் விழிகளைத் திறக்க முயன்று தோற்றாள்.

உடல் முழுவதும் வலித்தது. அப்படியே படுத்துக்கிடந்தால் என்ன என்கிற எண்ணத்தில் கொஞ்ச நேரம் அப்படியே இருந்தாள். எத்தனை நேரம்தான் அப்படியே கிடக்கமுடியும். மெது மெதுவாக நடந்த சம்பவம் அவள் நினைவில் படம்விரிக்கத் தொடங்கியது.

‘அந்த… அந்த சட்டத்தரணி அவளிடம் எதையோ குடிக்கத் தந்தாரே… அந்த… அந்தாள்… அவளை… அவளை…’ விறுக் என்று எழுந்தமர்ந்தாள் சர்வமகி.

அச்சத்துடன் தன்னைக் குனிந்து பார்த்தாள். ஆடை மாற்றப்பட்டிருந்தது. அதுவும் அவளை விட இரண்டு மூன்று மடங்கு பெரிய ஆணினுடைய டீஷேர்ட். அது தோளிலிருந்து விழுந்துகொண்டிருந்தது. யாருடையதாக இருக்கும்? யார் மாற்றியிருப்பார்கள்…? பயத்தில் உடல் நடுங்கியது. சுற்றும் முற்றும் விழிகளைச் சுழற்றியவள் திகைத்துப் போனாள்.

‘இது… அந்த சட்டத்தரணியின் வீடில்லை. அவள் தங்கியிருக்கும் அறையே அந்த சட்டத்தரணியின் வீட்டின் அளவை விடப் பெரியதாக இருந்தது.’ குழப்பத்துடன் எழுந்தாள். உடல் எங்கோ போனது. கால்கள் தள்ளாடின. தலை பின்னுக்குச் சரிந்தது. சிரமப்பட்டுத் தன்னைத் திடப்படுத்தியவள், அங்கேயிருந்த கதவை நோக்கிச் சென்றாள்.

அதே நேரம் அந்த அறையின் கதவு திறந்தது. அவன் உள்ளே வந்தான்.

உள்ளே வந்தவனைக் கண்டதும், சர்வமகி அதிர்ந்துபோனாள். தன் கண்களை இமைக்காது அவனையே வெறித்துப்பார்த்தவள், அதற்கு மேல் எதையும் சிந்திக்க முடியாதவளாக உடல் தளர, கீழே சரியப் போனாள்.

உள்ளே வந்தவன், சர்வமகியின் நிலையினைச் சடுதியில் புரிந்துகொண்டவனாக, ஒரெட்டில் அவளை நெருங்கினான். அவள் தோள்களை அழுந்தப் பற்றித் தரையில் சரியாது காத்துக்கொண்டவன், பின் அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக்கொண்டான்.

அவளுடைய கால்களோ, இனியும் பாரத்தைத் தாங்க மாட்டாதவையாக, மடங்கிச் சரிய,  உடனே, அவளைத் தன் கரங்களில் பூமாலையென ஏந்திக்கொண்டான் அவன்.

மயக்கத்தில், விழிகள், மூடி முடித் திறக்க, விழிகளை மூடாதிருக்கப் பெரும் முயற்சி செய்தவாறு தன்னைத் தாங்கியிருந்தவனையே வெறித்துப் பார்த்தாள். அவளால் தன் விழிகளையே நம்பமுடியவில்லை. ஒரு வேளை தான் காண்பது கனவோ என்றுகூட ஐயுற்றாள்.

அவனோ தன் கரங்களில் கிடந்தவளையே இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனுடைய முகமோ, கல்லில் வடித்த சிலையென இறுகிப்போயிருக்க, தன்னையும் மீறி அந்த இறுக்கத்தைத் தளர்த்தவேண்டும் என்கிற உத்வேகம் எழுந்தது. ‘இவனுக்கு என்னவாயிற்று…’ என்று எண்ணியவளாகத் தன்னையும், அறியாது, அந்த முகத்தைத் தொட்டுப்பார்க்க ஆவல் கொண்டவளாக வலது கையை அவன் முகம் நோக்கி உயர்த்த முயன்றாள். பாழாய்ப் போன, பலவீனம், அவள் கரங்களைச் சற்றும் அசைக்க விடவில்லை.

அவனோ, அவளுடைய அதிர்வைச் சிறிதும் கருத்தில் கொள்ளாது, இரண்டெட்டில் அவளை மெதுவாகப் படுக்கையில் கிடத்தினான். கிடத்தியபோது, அவள் முழங்கால்களுக்கு மேலேறியிருந்த, ஆடையை இழுத்து விட்டவன், அருகேயிருந்த போர்வையால், அவள் கால்கள் மறையுமாறு போர்த்திவிட்டான்.

கூடவே, தலையணியை, ஒழுங்காக, இதமாக அவள் தலைக்கு வாகாக வைப்பதற்காக அவன் குனிய, அவனுடைய பரந்து, விரிந்த மார்பு, அவளை சிறை செய்வதுபோல அந்த அறையையே மறைத்து நின்றது. கூடவே, அவனுக்கே அவனுக்குரியதான அந்தப் பிரத்தியேக வாசனை, அவள் நாசியை அடைந்து, மூளைக்குச் செல்ல, அதுவரை, அழுத்தியிருந்த, அச்சம், மெது மெதுவாக அவளை விட்டு விலகத் தொடங்கியது.

‘இந்த வாசனையை முன்பே நுகர்ந்திருக்கிறோமே… எப்போது?’ என்று புரியாமல் தவித்தவள், மீண்டும் தன் கவனத்தை அவன்மீது செலுத்தினாள்.

அவனுடைய தலை கலைந்திருந்தது, கண்கள் சிவந்திருந்தன. அல்லது இயற்கையிலேயே இவன் கண்கள் இப்படித்தான் சிவந்திருக்குமோ? கூரான நாசியில் கோபம் கொதித்துக்கொண்டிருந்தது. உதடுகள் அழுந்தி நின்றன. முஷ்டிகள் இறுகியிருந்தன. அவனுடைய அழுந்த மூடிய இதழ்களில் ஏதோ பெரும் தவிப்பு துடித்துக்கொண்டிருந்தது.

சர்வமகிக்கு எதையுமே நம்பமுடியவில்லை. ஒன்றுமே புரியாமல் ‘இவன் எங்கே இங்கே…’ என்று குழம்பியவளுக்கு, இருந்த தலையிடி அதிகரித்ததே தவிரப் பதில் கிடைத்தபாடில்லை. சோர்வுடன்

 “நீ… நீங்கள் எப்படி இங்கே… நான் எங்கே இருக்கிறேன்…” என்றாள் சற்றுத் தெம்பைக் கூட்டி.

பதிலெதுவும் கூறாமல், அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் அநேகாத்மன்.

அவன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தப் பெரிதும் சிரமப்படுவது சீறிப்பாய்ந்த மூச்சிலிருந்தும், அழுந்த மூடியிருந்த கை முஷ்டியிலும் தெரிந்தது,

“டேக் எ ரெஸ்ட்… பிறகு பேசிக்கொள்ளலாம்…” என்று அழுத்தமாகக் கூறிவிட்டுத் திரும்ப முயன்றவனின் கரத்தைச் சட் என்று பற்றினாள் சர்வமகி.

“ப்ளீஸ்… போ… போகாதீர்கள்… எனக்குப் பயமாக… இருக்கிறது… என்னை… என்னை… அந்த… லாயர்… வந்து…” என்று அதற்கு மேல் பேச முடியாமல், தொண்டை அடைக்க,  அவளுடைய உதடுகள் நடுங்கத் தொடங்கின. விழிகளின் கரையோரமாகக் கண்ணீர் பொங்கி வழிந்தது.

ஏனோ அவளுடைய கண்ணீரைக் காணும்போது, அநேகாத்மனுக்கு அந்த ரட்ணபாலனின் வம்சத்தையே அழித்துவிடவேண்டும் போலக் கொலைவெறி எழுந்தது.

கிட்டத்தட்ட இருபத்துமூன்று மணித்தியாலங்கள் அவன் பட்ட வேதனை அவனுக்கல்லவா தெரியும்.

இத்தனை நேரத்தில் அவன் தன் தொழிலை மறந்தான், தன் எதிரியை மறந்தான், ஏன் அந்த ரோஸலினைக் கூட மறந்துவிட்டான். .

கடைசியாக அவளைப் பார்த்தது, சர்வமகி வந்து போன அன்றுதான். அன்றைக்கிருந்த கோபத்திற்கு வடிகாலாக ரோசலின் தேவைப்பட்டாள். அன்று எல்லாம் முடிந்து அவளிடம் கத்தையாகப் பணத்தைக் கொடுத்துவிட்டு நிமிர்ந்தபோது ஏனோ முதன் முதலாகச் செய்யக்கூடாத ஒரு குற்றத்தைச் செய்தது போன்ற இனம்புரியா உணர்வில் தவித்துப்போனான். அது ஏன் என்பதற்குப் பதில் அவனிடம் இல்லை. அதற்கான விளக்கமும் அவனிடமில்லை. அன்றைக்குப் பின், அவளோடு அவன் தொடர்புகொள்ளவில்லை.

ரோசலின் கூடப் பல முறை அவனோடு தொலைப்பேசியில் தொடர்புகொள்ள முயன்று தோற்றுப்போனாள். இவனோ ரோசலினின் அழைப்பு என்றதும், அதனைத் துண்டித்தான். ஏன், தன்னுடைய தனிப்பட்ட கைப்பேசியிலிருந்த அவளுடைய தொலைப்பேசி இலக்கத்தைக் கூட அழித்துவிட்டிருந்தான். மீறி அவனுடைய அலுவலகத்திற்கு எடுத்தபோது, வேலை பிறகு பேசுவதாகக்  கூறி, தொலைப்பேசியை வைத்தது மட்டுமல்லாது, ரோசலினிடமிருந்து அழைப்பு வந்தால், உடனே அதனைத் துண்டித்துவிடுமாறு கடுமையான உத்தரவு பிறப்பித்தான்.

அதன் பின் அவனுடைய முழுக் கவனமும் சர்வமகியை அறிவதிலேயே இருந்தது.

சர்வமகியைப் பற்றிய அடிப்படை விபரங்களை அறிந்துகொண்டவனுக்கு, அவளைப் பற்றி மேன்மேலும் அறிய வேண்டும் என்கிற உத்வேகம் பிறந்தது. அவள் என்ன செய்கிறாள், தனக்கு எதிராக ஏதாவது சதி செய்கிறாளா, யார் யாரோடு அவள் தொடர்பு வைத்திருக்கிறாள், தன் தந்தையைக் கொல்வதற்கு, யார் யார் உந்துதலாக இருந்தார்கள். போன்ற செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கு அவள் பின்னாலேயே டேவிட்டை ஒற்றனாக நியமித்தான்.

அவனும் கடமை தவறாது, சர்வமகியைப் பற்றிய அனைத்து செய்திகளையும், உடனுக்குடன் அநேகாத்மனுக்குத் தெரிவித்துக்கொண்டிருந்தான். இந்த செய்தி, சர்வமகிக்குத் தெரியாது.

தன்னை எப்போதும் ஒருவன் பின்தொடர்வதோ, தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தைப் பற்றியதுமான செய்திகளை, உடனுக்குடன், அநேகாத்மனுக்குத் தெரிவிக்கப்படுகிறது என்பதுபற்றியோ, சிறிதும் அறியாது, தன் வேலையில் கவனமாக இருந்தாள்.

அவள் சகோதரர்களை ஒவ்வொரு நாளும் எத்தனை மணிக்கு பூங்காவிற்கு அழைத்துச் செல்வாள் என்பதிலிருந்து, எத்தனை மணி வரைக்கும் அவள் தூங்காது விழித்திருப்பாள் என்பது வரை அவனுக்கு அத்துப்படி. அதுவும் கடைசி இரண்டு நாட்களும் அவள் தூங்காமல் அறையிலே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தது கூட அவனுக்குத் தெரியும்.

அவளுடைய ஒவ்வொரு அங்க அசைவையும் தெரிந்துகொண்டிருந்தவனுக்கு, அவள் ரட்ணபாலனிடம் சென்றது தெரியாமல் போகுமா என்ன?

ஆனால், அவள் அந்த ரட்ணபாலனிடம் சென்றது இவனுக்குப் பெரும் கோபத்தை விளைவித்தது.

“ஸ்டுபின் வுமன்… வேறு வழக்கறிஞரே கிடைக்கவில்லையா இவளுக்கு?” என்று இவன் சினந்தான்.

ஏன் என்றால் அவனுக்கு அந்த ரட்ணபாலனைப் பற்றி நன்கு தெரியும். அவனால் பாதிக்கப்பட்ட பெண்களின் தொகை பல. இன்றுவரை சட்டத்தின் பிடியில் அவன் சிக்கியதில்லை. காரணம், அவன் பெண்களைச் சீரழித்தான் என்பதற்கான ஆதாரம், இதுவரை யாருக்கும் கிடைக்கவில்லை.  சாட்சியமில்லாத தவற்றுக்கு, எப்படி தண்டனை  பெற்றுக்கொடுக்கமுடியும்.

இது நாள் வரை எந்தப் பெண்ணையும் மனதால் நெருங்காமலிருந்த அநேகாத்மனுக்கே சர்வமகியின் வரவு பெரும் சலனத்தை ஏற்படுத்தியது என்றால், சும்மாவே தூணுக்குச் சேலை கட்டியிருந்தால் விலக்கிப் பார்க்கும் ரட்ணபாலனுக்கு சர்வமகியை விட்டுவைக்க மனமிருக்குமா?

உடனேயே உசாரானான் அநேகாத்மன். யார் யார் எப்படிப் போனால் அவனுக்கென்ன? அதுவும் சர்வமகி… சொல்லப்போனால், அவள், அவனுடைய எதிரியின் மகள். தன் தந்தையைக் கொன்றவனின் மகள். அவளுக்கு அநியாயம் நடந்தால், அது அவனை மகிழ்விக்கவல்லவா வேண்டும்.

பொதுவாக எதிரிகளைப் பந்தாடிப் பழகியவனுக்கு ஏனோ அதே வழிமுறைகளை அவளிடம் கையாள முடியவில்லை.

அவள் ரட்ணபாலனிடம் சென்ற கணத்திலிருந்து, அவளுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்கிற பதட்டம் அநேகாத்மனை நிலைகொள்ள விடாது வருத்தியது. தன் பதட்டத்தை வெளிக்காட்டாமல் இருக்க அவன் பெரிதும் பாடுபடவேண்டியிருந்தது.

“இந்தக் கனடாவில் இவன் ஒருத்தனா வழக்கறிஞர்… போயும் போயும் இவனிடமா அவள் போகவேண்டும்?’ என்று நிலையில்லாமல் தவித்தான் அவன்.

எப்படியாவது, அவளை ரட்ணபாலனிடம் செல்லாமல், தடுக்கவேண்டும் என்கிற வேகம் பிறந்தது. ஆனால் எப்படியென்றுதான் அவனுக்குத் தெரியவில்லை.

இனி அந்த ரட்ணபாலன் பற்றிய செய்திகளை அவளுக்குத் தெரியப்படுத்திவிடவேண்டியதுதான் என்று எண்ணியவன், அதற்குரிய செயலில் இறங்கும்போதுதான், சர்வமகியைக் கண்காணித்துக்கொண்டிருந்த டேவிட்டிடமிருந்து அழைப்பு வந்தது.

எத்தகைய அழைப்பு அது…, நினைக்கும்போதே, இவன் உடல் பொருள் ஆவி அனைத்தும் பதறிப்போனது. கூடவே உடல் கோபத்தில் திகு திகு என்று எரிந்தது.

சர்வமகி அந்த ரடணபாலனின் நகரவீட்டில் நிற்கிறாள் என்கிற செய்தியைக் கேட்டதும் இவன் நிலைகுலைந்து போனான். ஏன் இத்தனை பதட்டம் என்பது இன்று வரை தெரியாத புதிர்தான்.

சர்வமகியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று புயலாய் புறப்பட்டவனை அந்த நேரம் வந்த ஒரு முக்கிய கிளையன்ட் தடுத்து நிறுத்தினார். கனடாவின் முக்கிய பதவியிலிருக்கும் ஒரு அரசியல்வாதி. முகம் திருப்பமுடியாத அதி முக்கிய மனிதர். தலை விதியே என்று அவர் பேச்சைக் கேட்க வேண்டிய கட்டாயம்.

வேறு வழியில்லாமல், அவருடைய அறுவையைக் கொஞ்சம் பொறுத்துப்போனவன் இனியும் முடியாது என்று எண்ணியவனாக, தன்னுடைய அசிஸ்டனை அவருடன் பேச வைத்துவிட்டு, முக்கிய வேலையிருப்பதாக மன்னிப்பு கோரிவிட்டு, இவன் முடிந்த அளவு வேமகாகக் காரை ஓட்டி வந்தான்.

வந்தபோதே, செய்தி கேட்டு முக்கால் மணி நேரத்திற்கும்மேல் கடந்துவிட்டிருந்தது.

இந்த முக்கால் மணி நேரத்தில் என்ன என்ன நடந்திருக்குமோ? அதற்கு மேல் கற்பனை செய்யக்கூட அவனால் முடியவில்லை.

காலிங் பெல்லை அழுத்த நினைத்தவன், சற்று நிதானித்தான். தன் பக்கட்டிலிருந்த கிளவுசை எடுத்து அணிந்தவன், தன் கார் திறப்பின் பின் பகுதியால் காலிங் பெல்லை அழுத்தினான். எந்த பதிலும் கிடைக்கவில்லை. பலமாகக் கதவைத் தட்டினான். அப்போதும், உள்ளே ஆள் இருப்பதற்கான அறிகுறியே இருக்கவில்லை.

பலமுறை அழைப்பு மணியை அடித்தும், கதவைத் தட்டியும், பலன் இருக்கவில்லை. அந்த ரண்டபாலன் இருந்தது, நகரவீடு என்றதால் வீட்டைச் சுற்றிப் பின்னால் போக முடியாத நிலை.

இனியும் தட்டுவதால் பயலயணில்லை என்பதை அறிந்த அநேகாத்மன், ஒன்றாகக் கட்டியிருந்த, எட்டு வீடுகளையும் சுற்றிப் போனான். நல்லவேளை அவர்களுடைய வீடுகளின் பின்புறம் வேறு வீடுகள் இல்லாததால், அந்த ஆறடி வேலியை ஓடிவந்து அனாயாசமாகப் பிறரின் கவனத்தைக் கவராது தாண்ட முடிந்தது.

அந்த வீட்டின் புழக்கடையின் புறமாக வந்து பின்புற ஸ்லைடிங் டோரைத் திறக்க முயன்றான். அவனுடைய நல்லகாலம், அது சத்தமில்லாது திறந்துகொண்டது.

யார் வரப்போகிறார்கள் என்கிற அலட்சியத்தில் பூட்டாமல் விட்டிருந்தான் போலும். அது அநேகாத்மனுக்குப் பெரும் சாதகமாகவே இருந்தது. இல்லையென்றால், அதை உடைத்து, உள்ளே வருவதற்கு அதிகநேரம் எடுப்பதுமட்டுமன்றி, அந்த சத்தம், அயலவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கும். அது தேவையற்ற சிக்கலைக் கொடுத்திருக்கும்.

வேகமாக உள்ளே நுழைந்தவன், அந்த வீட்டின் சமையலறையையும் தாண்டி, வரவேற்பறைக்கு வந்தான். அங்கே அவன் கண்ட காட்சி… இப்போது நினைத்தாலும், சினத்தில் உடல் நடுங்கியது.

அந்த ரட்ணபாலன் சர்வமகியின் மீது குனிந்திருந்தான். அதைப் பார்த்ததும், கட்டுப்பாட்டை உடைத்தது கொலைவெறி.

“யு… ஒஒஒ ஒஒஒ” என்று காதால் கேட்கமுடியாத அத்தனை கெட்ட வார்த்தைகளாலும் கர்ச்சித்தவன், ஆவேசமாக ரட்ணபாலனை நெருங்கினான்.

திடீர் என்று அங்கே அநேகாத்மனைக் கண்டதும், ரட்ணபாலனுக்கு முதலில் எதுவுமே புரியவில்லை. அவனை அங்கே எதிர்பார்க்கவில்லை என்பதை, அவனுடைய அதிர்ந்து நடுங்கிய உடல் எடுத்துக் காட்டியது.

“நீ… நீ எப்படி இங்கே…” என்றான் நம்பமாட்டா அதிர்ச்சியுடன்.

“ஹெள டெயர் யு… ஹெள டெயர் யு டச் ஹர்… அவள் மேல் கைவைக்க உனக்கு என்ன தகுதியிருக்கிறது?” என்று வெறியுடன் சீறியவன், அந்த ரட்ணபாலனின் முடியைக் கொத்தாகப் பற்றி எழுப்பினான்.

“எப்படி வந்தேனா? சொல்கிறேன்… அதற்கு முதல்…” என்றவன் காட்டாற்று வெள்ளமானான். முடிந்த வரைக்கும் அந்த ரட்ணபாலனை அடித்துத் துவைத்துவிட்டான்.

அவன் அடித்த வேகத்தில் முதலில் மூக்கு உடைபட்டவன், அதன் பிறகு பற்கள் இரண்டையும் இழந்தான். அப்படியிருந்தும் அநேகாத்மனின் கோபம் தணியவில்லை.

“யார் மீது கைவைத்தாய்… உனக்கு என்ன தைரியம்? அவள் மீது கைவைத்த உன் கரங்களை,” என்றவாறு, அந்த ரட்ணபாலனின் கரத்தை முறிக்க நினைத்தவன், அவன் கத்தும் சத்தம், பக்கத்து வீட்டுக்காரரின் கவனத்தைத் திசை திருப்பிவிடுமோ என்று எண்ணியவனாகச் சுற்றும் முற்றும் பார்த்தான்.

சர்வமகியின் அருகே, ரட்ணபாலன் கழற்றிப்போட்ட அவனுடைய ஷேர்ட் இவனைப் பார்த்துச் சிரித்தது.

அவனுடைய தலைமுடியை விடாமலே, இழுத்துச் சென்று அந்த சேர்ட்டை எடுத்தவன், அதை உருட்டி, ரட்ணபாலன் மறுக்க மறுக்க அவன் வாயில் வைத்துத் திணித்தான் அநேகாத்மன்.

ரட்ணபாலனின் விழிகள் இரண்டும், வெளியே தெறித்துவிடும் போல, கலங்கிச் சிவந்திருக்க, அதைக் கண்டதும், குரூர திருப்தியில், முன்பு செய்ய விளைந்ததை இப்போது செய்தான். சர்வமகியைத் தொட்ட கரங்கள் இரண்டையும், கண்ணிமைக்கும் நொடியில் பின்புறம் வளைத்து முறித்திருந்தான்.

வலியில் துடித்துக் கதற, முடியாமல், வாயில் அடைத்திருந்த துணி, அந்த சத்தத்தை நன்றாக வடிகட்டி வெளியே விட்டது.

“இந்தக் கண்தானே, அவளைத் தப்புத் தப்பாகப் பார்த்தது?” என்று ஆக்ரோஷமாகக் கேட்டவன், பின்புறமாக நின்றவாறே, அவன் தலையைத் தன்னை நோக்கி மடித்துச் சரித்தவன், இரு பெருவிரல் கொண்டு, அந்தக் கண்களைக் குத்தி அவன் பார்வையைப் பலிகொடுத்தான்.

“இப்படி எத்தனை பெண்களுடன் விளையாடியிருப்பாய்… உன்னை சும்மா விடக்கூடாது… நீ… ஆண் என்று சொல்வதால்தானே இப்படியெல்லாம் பெண்களின் வாழ்க்கையில் விளையாடுகிறாய்? இனி நீ ஆண் என்றே சொல்லக் கூடாது…” என்றவாறு ரண்டபாலனைத் தன்னை நோக்கித் திருப்பினான். விழிகள் இரண்டும் இரத்தத்தால் நனைந்திருக்க, கரங்கள் இரண்டும் முறிந்த நிலையில், கத்தக்கூடச் சக்தியற்று, திரும்பியவனின், உயிர்நாடியில் ஓங்கி அதுவும் பலமாக உதைத்தான். உதைத்த வேகத்தில் ரட்ணபாலனின் உயிர் நிலையில் எங்கோ எதுவோ வெடித்ததுபோல இருக்க, வலிக்கு முணங்கக் கூட முடியாமல் அப்படியே மயங்கிச் சரிந்தான்.

அவனுடைய உடலில் உயிர் இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்துகொள்ளும் எண்ணமே இல்லாது அவசரமாக சர்வமகியை நெருங்கினான்.

தன் கரத்திலிருந்த கையுறையைக் கழற்றி அருகேயிருந்த மேசையில் எறிந்துவிட்டுச் சர்வமகியின், முகத்தை மறைத்திருந்த கூந்தலை நடுங்கும் கரம்கொண்டு மெதுவாக விலக்கினான்.

கன்னம் இரண்டிலும் அடித்ததற்கான கையடையாளங்களைக் கண்டதும் ஏனோ சம்பந்தமே இல்லாமல் உள்ளம் துடித்துப் போனான். மெதுவாகப் பெரும் விரலால் அவளுடைய கன்னத்தை வருடிக் கொடுத்தவன், அறையும் போது அவளுடைய பல் உதட்டில் பட்டதால் ஏற்பட்ட காயத்தில் வழிந்த இரத்தத்தை மென்மையாகத் துடைத்து விட்டான்.

“விடுங்கள் சார்… நான் போகவேண்டும்… ப்ளீஸ்… என்னை விடுங்கள்… வலிக்கிறது சார்… அம்மா… என்னால் முடியவில்லையே…” என்று அந்த மயக்கத்திலும் அவள் திக்கித் திணறி முனக, அவள் வலியை உணர்ந்தவனாக, அதற்கு மேலும் பொறுக்கமுடியாதவனாக, அவளை அள்ளி எடுத்துத் தன் மார்போடு அணைத்துக்கொண்டான்.

அவனுடைய வலது கரம் அவள் தலைமுடிக்குள்ளும், இடது கரம் அவளுடைய தோளையும் அழுந்தப் பற்றித் தன் உடலோடு புதைக்க முயன்றன. அவனையும் அறியாமல், அவனுடைய உதடுகள் அவளுடைய தலையின் உச்சியில் புதைந்தன.

இது அவனுக்குப் புதிது. இது வரை எந்தப் பெண்களையும், அவன் இத்தகைய வலியோடு அணைத்ததில்லை. யாருக்காகவும் அவன் இது வரை கலங்கியது இல்லை. பல பெண்களின் உடலை ரசித்தவனால், எந்தப் பெண்ணின் உள்ளத்தையும் ரசிக்க முடிந்ததில்லை. வருபவர்கள் அவனிடம் உள்ள பணத்திற்காக மட்டுமே வந்தார்கள் அன்றி, அவனுடைய உள்ளத்தை நேசித்து யாரும் அவனைத் தேடி வந்ததில்லை.

அப்படியே அவனை நேசித்து வந்தாலும், அந்த நேசத்தை, அவன் விட்டெறிந்த பணம் ஒன்றுமில்லாது ஆக்கியிருக்கிறது. அவன் ஒரு பெண்ணைத் தொட்டான் என்றால், அது உடல் சார்ந்ததாக, இல்லை பணம் சார்ந்ததாக மட்டுமே இருக்கும். ஒரு நாளும் உணர்வுப் பூர்வமாக எந்தப் பெண்ணையும் அவன் தொட்டதுமில்லை, விழியால் பார்த்ததும் இல்லை.

அவன் வாழ்வில் முதன் முதலாக, ஒரு பெண்ணை, எந்த சுயநலமும் இன்றி, புதிதாக முளைத்த தவிப்புடனும், பதட்டத்துடனும், அச்சத்துடனும் அணைத்திருந்தான்…

“யு ஆர் ஓக்கே… மகி… யு ஆர் ஓக்கே…” என்று திரும்பத் திரும்ப அவளுக்கு ஓதியவன், தன் இடக் கரத்தால், அவள் வேதனையைப் போக்கும் பொருட்டு அவள் முதுகை வருடிக் கொடுத்தான்.

இது அவன் உணராமலே செய்த காரியம். அவனுடைய வருடலோ, இல்லை, உண்மையான உள்ளுணர்வின் தவிப்போ, இல்லை, அவனுக்குரிய அந்தப் பிரத்தியேக மணமோ, எதுவோ ஒன்று, மெதுவாக சர்வமகியின் உணர்வுடன் கலக்க, தான் இருக்கும் நிலை புரியாது, மெதுவாக அசைய முயன்றாள்.

ஆனால் சிறிதும் அசையமுடியாது அவனுடைய இறுகிய அணைப்பில் புதையுண்டு போயிருந்தாள்.

தன்னை அணைத்திருப்பது யார் என்று புரியாமலே, அவள் உடல் தன் கட்டுப்பாட்டையும் மீறி உதறத் தொடங்கியது. அவளுடைய நடுக்கத்தை உணர்ந்தவன், அவளை மெதுவாகத் தன் அணைப்பிலிருந்து விலக்கி, குழந்தை பொல, அவளுடைய தலையைத் தன் இடக்கரத்தால் தாங்கி,

“ஷ்… ஷ்… மகி… இட்ஸ் ஓக்கே… இட்ஸ் ஓக்கே… இட்ஸ் மீ… யு ஆர் சேஃப் நவ்… டூ யு ஹியர் மி… யு ஆர் சேஃப் நவ்” என்று அவளுடைய புத்திக்குள் ஏற்ற முயன்றான். அவனுடைய குரலோ, இல்லை அவனுடைய பாதுகாப்பான அணைப்பிலோ, அவளுடைய உதறல் சிறிது அடங்கியது. கூடவே அவளுடைய தலையும் தோய்ந்தது.

அச்சத்துடன் அவள் முகத்தைப் பார்த்தவன்,

“மகி… மகி… நான்… நான் அழைப்பது கேட்கிறதா? லுக் அட் மி… மகி… வேக்கப்…” என்று பலமுறை அவளுடைய கன்னத்தைத் தட்டிப் பார்த்தான். அவளுடைய தோள்களைப் பற்றிக் குலுக்கிப் பார்த்தான். அவளிடமிருந்து எந்த அசைவும் இல்லை என்றதும், அவளுடைய கழுத்தில் கரம் வைத்து நாடித்துடிப்பை உணர முயன்றான். எங்கோ மெல்லியதாகத் துடிப்பதுபோல இவனுக்குத் தோன்ற, அவனையும் அறியாமல், பெரும் நிம்மதி அவனைச் சூழ்ந்துகொண்டது.

எங்கே அவளுக்கு வலித்துவிடுமோ என்று அஞ்சியவனாக அவளை மெதுவாக அந்த சோஃபாவில் கிடத்தினான். அப்போதுதான் அவளை முழுதாகப் பார்த்தான்.

கிழிந்திருந்த ஆடைகளுக்கூடாகத் தெரிந்த உடல் அங்கங்களில் தெரிந்த பெரிய கண்டல்களும், பலத்த காயங்களும், இரத்தக் கறைகளும், கலைந்திருந்த அவள் ஆடைகளும் ரட்னபாலன் மீதான கொலை வெறியை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்ய, மேலும் தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவனாக,

“யூ பாஸ்டட்… ஐ வில் கில் யூ….” என்றவாறு எழுந்தவன், ஏற்கெனவே மயங்கிக்கிடந்தவனை தன் ஆத்திரம் தீரும் வரை பல முறை ஓங்கி உதைந்தான். அவனுடைய அசூர வேகத்திற்கும், பலத்திற்கும் அந்த ரட்ணபாலன் உதைபந்துபோல அங்கும் இங்கும் எம்பி விழுந்தான். வெறிகொண்ட சிறுத்தையின் வாயில் அகப்பட்ட நரியானான் ரட்ணபாலன்.

நிச்சயமாக அவனுடைய கடும் வேகத்திற்கு, ரட்ணபாலனின் உடலில் பல எலும்பு முறிவுகள், ஏற்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்கு முதல் அவனுடைய உடலில் உயிர் இருந்ததா, இல்லையா என்பதுதான் ஐயமே…

மெதுவாக சர்வமகியின் நிலை நினைவுக்கு வர, உதைத்துக்கொண்டிருந்த ரட்ணபாலனை விட்டு விட்டு அவளருகே வந்தான். அவளுடைய நிலை மேலும் அந்த வஞ்சகன் மீது பேராத்திரத்தை விளைவித்தாலும், நிலைமையுணர்ந்து, தான் அணிந்திருந்த கோர்ட்டைக் கழற்றி அவள் மீது போர்த்திவிட்டான்.

சிறிதும் அசைவில்லாமல் கிடந்தவளைப் பதற்றத்துடன் நெருங்கியவன், மெதுவாக அவளுடைய கன்னத்தைத் தட்டினான்.

“மகி…” என்றான் மென்மையாக. அவளிடம் அசைவில்லை.

அச்சத்துடன் அவளுடைய கையைப் பற்றி நாடித்துடிப்பைக் கண்டறிய முயன்றான். அவனுடைய பதற்றமோ, இல்லை அவன் தன்னிலையில் இல்லையோ, அவனால் அவளுடைய நாடித் துடிப்பை உணர  முடியவில்லை.

முதன் முதலாக, அவன் வாழ்வில் அச்சம் என்றால் என்ன என்பதை உணர்ந்தான் அநேகாத்மன். கரம் நடுங்க, அவளுடைய கழுத்தில் கைவைத்துப் பார்த்தான்… பதட்டத்தில் முதலில் எதுவும் தெரியவில்லை.

“நோ.., நோ… நோ… யு ஆர் ஓக்கே… உனக்கு ஒன்றுமாகாது… மகி… வேக்கப்…” என்று தன்னிலை மறந்து பதறியவன், மீண்டும் அவள் கழுத்தில் கரம் வைத்துப் பார்த்தான். இப்போது அவனால் அவளுடைய நாடித்துடிப்பை மெல்லியதாக உணரமுடிந்தது.  அவளுக்கு ஒன்றுமில்லை என்கிற நிம்மதியுடன் தளர்ந்து அவளுக்கருகேயே தரையில் அமர்ந்தான்.

அவன் இருக்கும் நிலையில் அவனால் எழுந்து செல்லமுடியும் போலத் தெரியவில்லை. தன் அருகே சுயநினைவின்றி இருந்தவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“யார்டி நீ… ஏன் என் வாழ்வில் நுழைந்தாய்? நீ வரும் முன் என் வாழ்வு தெளிந்த நீரோட்டமாக என் இஷ்டப்படி இருந்ததே… எப்போது என் முன்னே வந்தாயோ, அன்றிலிருந்து என் இயல்பை நீ பறித்துக்கொண்டாயே… ஏன்… ஏன்டி…” என்று மனதிற்குள் அவளுடன் கொந்தளித்தவன், அயர்ந்த அவள் தோற்றத்தைப் பார்க்கமுடியாதவனாகத் தன் தலையைத் திருப்பினான்.

அப்போதுதான் அருகேயிருந்த டீ டேபிலில் இருந்த கண்ணாடிக் கோப்பை கண்ணில் பட்டது. எடுத்து முகர்ந்து பார்த்தான்.

போதை மருந்து போடப்பட்டிருக்கிறது. அதைக் குடித்ததால்தான் சர்வமகி மயங்கியிருக்கிறாள் என்பதும்,  இனி அதிகநேரம் அந்த வீட்டில் இருக்கமுடியாது என்பதும் புரிந்தது. விரைவாக சர்வமகியை அங்கிருந்து அப்புறப்படுத்தவேண்டும்.

தன் சோர்வைத் தலை குலுக்கி விலக்கியவன், தன் கையுறையை எடுத்து மீண்டும் மாட்டினான். தன் சட்டையில் மடித்து வைத்திருந்த கைக்குட்டையால் சர்வமகி பற்றியிருந்த கிளாசை நன்றாகத் துடைத்துவிட்டான். கூடவே அந்த டீ டேபிலையும் அழுந்தத் துடைத்தான். விரைந்து வெளியே சென்றவன், தன் காரை அந்த வீட்டிற்கு முன்பாக கொண்டுவந்து நிறுத்தினான்.

உள்ளே வந்தவன், மயங்கிக் கிடந்தவளைப் பூமாலையெனத் தன் கரங்களில் ஏந்தியவாறு, வெளியேறிக் காரின் பின் இருக்கையில் மெதுவாகக் கிடத்தினான்.

மீண்டும் அந்த வீட்டிற்குள் நுழைந்தவன், அவள் படுத்திருந்தது லதர் சோபா, கதவுக் கைப்பிடி, மற்றும் அவளுடைய கரங்கள் படக்கூடிய இடம் அனைத்தையும் அழுந்தத் துடைத்து விட்டான். அந்த வீட்டில் ஏதாவது சாட்சியங்கள் இருக்கின்றனவா என அலசிப் பார்த்தான்.

நல்லவேளை, செய்யும் தவறுக்கு எந்த சாட்சியமும் இருக்கக்கூடாது என்பதாலோ என்னவோ, வீட்டில் சிசிடி கமரா எதுவும் பூட்டப்படவில்லை.

ஆனால் அவன் கண்களுக்கு ஓரமாக நிமிர்த்தி வைக்கப்பட்டிருந்த சாம்சங் கலக்சி கண்ணில் பட, அதை எடுத்துத் தன் சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டான்.

சோஃபாவுக்கு அருகே விழுந்திருந்த சர்வமகியின் கைப்பை கண்ணில் தெரிய, விரைந்து சென்ற அதை எடுத்தான். மீண்டும் அந்த இடத்தை நன்றாக அலசினான். திருப்தியுற்றவனாக வேகமாக வெளியே வந்தான். யாராவது தன்னைக் கவனிக்கிறார்களா என்று பார்த்தான்.

தெரு வெறிச்சோடியிருந்தது.

நல்ல வேளை அந்த வீடு சற்று ஒதுக்குப்புறமாக இருந்ததால், ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கவில்லை. இனி யாராலும் சர்வமகி அங்கே வந்ததற்கான ஆதாரங்களை எச் சந்தர்ப்பத்திலும் திரட்ட முடியாது என்கிற உறுதியுடன் தன் காரில் ஏறினான்.

ஏறியவன், திரும்பி சர்வமகியைப் பார்த்தான். அவள் ஆழ்ந்த மயக்கத்திலிருந்தாள். அவளுடைய நிலையைப் பார்க்கப் பார்க்க அவனால் தாங்க முடியவில்லை. ரட்ணபாலன் நீ இதற்குப் பதில்சொல்லியே ஆகவேண்டும். உன்னை நான் சும்மா விடமாட்டேன்…’ என்று கருவியவன், தன் காரைக் கிளப்ப அது சீறிப் பாய்ந்தது.

நிலவு 9

சர்வமகியைக் காத்துத் தன் வீட்டிற்கு அழைத்துவரும் வழியில், எதையோ யோசித்தவனாகத் தன் தொலைப்பேசியை எடுத்து சில இலக்கங்களை அழுத்தினான்.

மறு முனையில் ஒரு இனிய பெண் குரல் தமிழில் கேட்க,

“வசந்தா… இது அநேகாத்மன்… ஐ நீட் யுவர் ஹெல்ப்…”

“சொல்லுங்கள் சார்… உங்களுக்காக நான் எதுவும் செய்யத் தயார்…” என்றது மறு புறம் பரபரப்புடன்.

உடனேயே சர்வமகியின் விலாசத்தைக் கொடுத்தவன், இந்த விலாசத்தில் நீங்கள் போய் தங்கி இருக்க வேண்டும். வன் ஓர் டூ டேஸ்தான். கேட்டால் சர்வமகி அனுப்பியதாகக் கூறுங்கள். அவர்களுக்கு என்ன வேண்டுமோ, அனைத்தையும் எந்தக் குறையும் இன்றி, செய்து கொடுங்கள்.” என்றதும், உடனேயே சம்மதித்தாள் அந்த வசந்தா.

பெரும் நிம்மதியுடன் காரைத் தன் பிரத்தியேக வீட்டிற்குக் கொண்டுவந்தான். மயக்கத்தில் வாடிய கொடிபோல மயங்கிக் கிடந்தவளை அப்படியே அலுங்காமல் தூக்கியவன், அவளைத் தன் அறைக்கு எடுத்துவந்து கிடத்தினான்.

கிழிந்த அவளுடைய ஆடையைப் பார்க்கும்போது, அதே போல அந்த ரட்ணபாலனையும் கிழித்துத் தொங்கப்போடவேண்டும் என்கிற வெறி எழுந்தது. அதற்கு முன், கிழிந்த நாராக இருக்கும் சர்வமகியைக் கவனிக்கவேண்டும் என்று எண்ணியவன், தன் கபேர்டைத் திறந்தான்.

கைக்குக் கிடைத்த டீ சேரட் ஒன்றையும், குளியலறைக்குச் சென்று முதலுதவிப் பெட்டியையும் எடுத்துக்கொண்டு, அவளருகே வந்தான்.

இந்த இடத்தில், அவள் தன் தந்தையைக் கொன்றவனின் மகள் என்பதை முற்று முழுதாக மறந்து போனான்.

முழங்காலிட்டு அவளுக்கு அருகே தரையில் அமர்ந்தவன், அவளுடைய ஆடைகளைக் களைய முயன்றான். வலியில் சர்வமகியின் முகம் மெல்லியதாகச் சுனங்க, அவளுக்கு வலிக்கிறது என்பதைப் புரிந்துகொண்டான் அநேகாத்மன்.

“ஐம் சாரி…” என்று முணுமுணுத்தவன், அவளுக்கு வலிக்காதவாறு மெதுவாகக் கிழிந்த ஆடைகளைக் கத்தரிக்கோல் கொண்டு வெட்டித் தூர எறிந்தான்.

அவள் உடலில் தெரிந்த காயங்களைக் கண்டதும் இவன் இதயம் வலிக்க, முதலுதவிப் பெட்டியைத் திறந்தான். அதிலிருந்து மருந்தை எடுத்தவன், எழுந்து சர்வமகிக்கு நெருக்கமாகப் படுக்கையில் அமர்ந்து, அவளுடைய காயங்களுக்கு மெதுவாகப் பூசத்தொடங்கினான்.

அவன் விரல் பட்டதும், அவள் காயம் வலித்ததோ, இல்லை உடல் கூசியதோ, அவளிடம் மெல்லிய அசைவு எழ, தன் விரலை இழுத்துக்கொண்டான். மீண்டும் அவளிடத்தே அமைதி நிலவ, விட்ட பணியைத் தொடர்ந்தான்.

ஒருவாறு அவளுக்கு மருந்து பூசி முடித்தவன், மெதுவாக அவள் முதுகுபுறமாக தன் இடதுகரத்தைச் செலுத்தி, எழுப்பித் தன்னோடு சாய்த்துக்கொண்டான்.

தன்னுடைய டீசேர்ட்டை அவளுக்கு அணிவித்து விட்டு, மீண்டும் அவளைப் படுக்கையில் கிடத்தினான். அவனுடைய டீசேரட் அவளுடைய, தொடையின் நடுப்பகுதி வரையுமே நீண்டிருந்தது. வாழைத்தண்டென, வழுவழுத்த அந்தக் கால்களை, போர்வை கொண்டு மறைத்தான்.

திரும்பி விழி மூடி மயக்கநிலையிலிருந்தவளை இமைக்காது பார்த்தான் அநேகாத்மன்.

முகத்தை மறைத்திருந்த கூந்தலைத் தன் நடுவிரலால் விலக்கியவன், அவள் முகத்தையே உற்றுப் பார்த்தான். அந்தப் பளிங்கு முகத்தில் வெறும் அப்பாவித்தனம் மட்டுமே தெரிந்தது? இவள் தப்பு செய்திருப்பாளா? இவளால் தவறு செய்யமுடியுமா? இவள் முகத்தைப் பார்க்கும்போது, குற்றம் செய்பவள் போலவே இல்லையே… இதுதான் இவளுடைய உண்மையான முகமா… இவள் நல்லவளாக இருக்கவேண்டும் என்று ஏன் என் உள்ளம் ஏங்குகிறது? ஆனால் இவள் தந்தை ஒரு கொலைகாரனாயிற்றே… அவனையே காக்கச் சொல்லி என்னிடம் வந்தாளே… உண்மையாகவே, இவள் தந்தை குற்றம் செய்தவர் என்பது இவளுக்குத் தெரியாதா? இல்லை தெரியாதவள் போல நடிக்கிறாளா… இவள் முகத்தைப் பார்த்தால், நடிப்பவள் போலத் தெரியவில்லையே… ஆனால் அந்த வாசுதேவனின் மகள் எப்படி நல்லவளாக இருக்கமுடியும். பெரிதும் குழம்பிப்போனான் அநேகாத்மன்.

பெருமூச்சுடன் எழுந்தவன், குளிப்பதற்குத் தயாராகக் குளியலறைக்குள் நுழைந்தான்.

இரத்தக்கறை படிந்த மேலாடையை அருவெறுப்போடு கழற்றித் தூரப்போட்டவன், பான்ட் பாக்கட்டிலிருந் பொருட்களை எடுத்து, அங்கிருந்த மேசையில் போட்டான். அப்போதுதான் ரட்ணபாலனின் கைப்பேசி இவன் கவனத்தைக் கவர்ந்தது.

பான்டைக் கழற்றிவிட்டுக் குளிர் நீரில் நின்றவனுக்கு, அந்தக் குளிர் நீர் சிறிதும் அவன் உள்ளக் கொதிப்பைத் தணிப்பதாயில்லை.

ஐந்து நிமிடத்தில் ஷவரை விட்டு வெளியே வந்தான், பிஜாமாவை மட்டும் அணிந்தவாறு, ரட்ணபாலனின் கைப்பேசியை கரத்தில் எடுத்துக்கொண்டு, தன் மடிக்கணணிக்கு அருகே வந்தான்.

யோசனையுடன் ரட்ணபாலனின் தொலைப்பேசியை தன் மடிக்கணணியோடு இணைத்தான் அநேகாத்மன். அரைமணி நேரத்தில், எதை எதையோ குடைந்து, அதன் கடவுச்சொல்லை, ஊடுருவி உடைத்தான்.

உள்ளே அவன் எடுத்த காணொளிகளைப் பரிசீலித்தான். கிட்டத்தட்ட பன்னிரண்டு பெண்களின் வாழ்க்கையை அழித்த காணொளிகள் அதில் இருக்க, நடுங்கும் கரங்களால், சர்வமகியின் காணொளியை ஓடவிட்டான்.

அதைப் பார்க்கப் பார்க்க அவன் உடல் இறுகிப்போனது. அந்த மிருகம் சர்வமகியுடன் நடந்துகொண்ட முறையைக் காணக் காண இவன் இரத்த அழுத்தம் எகிறியது. நல்ல வேளை, பாரதூரமாகும் முன் அவள் காப்பாற்றப்பட்டாள். கொஞ்சம் தாமதமாக வந்திருந்தால், அவள் நிலை… நினைக்கும்போதே, இதயம் கோபத்தில் தாறுமாறாகத் துடித்தது.

இந்த காணொளியை சர்வமகி பார்த்தால், நிச்சயமாகத் துடித்துப்போவாள். அதை விட, வேகமாக அவளுடைய பகுதியை மட்டும், முழுதாக அழித்தான்.

“யு பாஸ்டட்… நீ இதற்குப் பதில்சொல்லியே ஆகவேண்டும்… இந்தப் பிறப்பை ஏன்டா எடுத்தோம் என்று ஒவ்வொரு கணமும் நீ துடிக்கவேண்டும்… துடிக்கவைப்பேன். ஐ வில் டு தட்… அன்ட் வெய்ட் ஃபோர் தட்…” என்று தன்னை மறந்து கர்ஜித்தவன், தன் தொலைப்பேசியை எடுத்துத் தன் நண்பனான, காவல்துறை அதிகாரி விக்டரைத் தொடர்புகொண்டான்.

கவனமாகச் சர்வமகியின் செய்தியை மறைத்தவன், தான் ரட்ணபாலன் மீது கொண்ட சந்தேகத்தின் பெயரில், அவருடைய கைப்பேசியை எடுத்து ஹக் செய்ததாகவும், அதில் கிடைத்த காணொளிகள் பெரும் அதிர்ச்சியைக் கொடுப்பதாகவும் கூறி, அவற்றை உடனேயே அவருக்கும் அனுப்பி வைத்தான். அதைப் பார்த்தவரும், கொதித்துப் போனார்.

எத்தனை பெண்களின் வாழ்க்கையில் புகுந்து விளையாடிவிட்டான் அந்த பாஸ்டட்…” என்று கர்ஜித்தவர், “தாங்க்யு சோ மச் அநேகாத்மன். இனி இந்த கேஸ் உன்னுடையதல்ல, என்னுடையது. வாழ்நாள் முழுவதும் வெளியே வராதது போல் செய்துவிடுகிறேன்…டோன்ட் வொரி என தைரியம் ஊட்ட,

“தாங்க் யூ மை ஃப்ரன்ட். பட் ஒரே ஒரு வேண்டுகோள்தான்… இவனுக்கு எதிராக நான்தான் வாதாடவேண்டும்…” என்றான் அடக்கிய கோபத்தில். பாவம், அதற்கு வாய்ப்பே வரப்போவதில்லை என்பதை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.

“நோ ப்ராப்ளம்… ஐ வில் ஹெல்ப் யு அநேகாத்மன். இப்போதே அவனை கைது பண்ணுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்குகிறேன்…” என்று வாக்குக் கொடுக்க, இவன் பெரும் நிம்மதியடைந்தவனாக, சர்வமகி விழிக்கும் வரை அவள் அருகேயே காத்திருந்தான்.

நிலவு 10

நடந்தது எதுவும் தெரியாது, மயங்கிக்கிடந்தவள், சுயநினைவு பெற்று அச்சத்துடன் அவன் கரம்பற்றி, விசாரித்தவளிடம் எல்லாவற்றையும் கூற முடியாதவனாக,

“வேலை விஷயமாக மிஸ்டர் ரட்ணபாலனைப் பார்க்க வந்தேன். அங்கே அவர் உன்னிடம்…” என்று கூறவந்தவன், அதற்கு மேல் கூறமுடியாதவனாகச் சற்றுத் தடுமாறினான்.

மீண்டும் கண்முன்னே அந்த நிகழ்வு படம்விரித்துக் காட்ட, தன் கீழ் உதட்டின் மேற்புறத்தை மேல் பற்களால் கடித்தவாறு விழிகளை அழுந்த மூடித் தன் பின்புறத் தலையை அழுந்தத் தடவி தன்னை ஒருவாறு நிலைப்படுத்த முயன்றான்.

அந்த ஒருகண அமைதியில், உலகம் முழுவதையும் சுற்றிவந்த சர்வமகி, அச்சத்தில் விழி விரிய “அவன்… என்னை… என்னை…” என்று அதற்கு மேல் கூறமுடியாது தவிக்க, அவள் வலியைத் தன்னது போன்று உணர்ந்தவன், அதை எப்படி போக்குவது என்று புரியாமல் சிறிது தடுமாறினான். எங்கே தன் தடுமாற்றத்தை அவள் கண்டுகொள்வாளோ என்று நினைத்தவன், தன் கரங்களை பான்ட் பாக்கட்டில் திணித்தவாறு,

“இல்லை மகி… நான் வந்தபோது, அவன் உன்னிடம் பலவந்தமாக நடக்க முயன்றிருந்தான். சோ… உன்னை அவனிடமிருந்து காப்பாற்றி, இங்கே அழைத்து வந்துவிட்டேன்…” என்றான் அவசரமாக.

 ‘இவன் எந்த நிலைமையில் என்னைப் பார்த்தான்? அந்த… அந்த… ரட்ணபாலன்… அவளை எந்த அளவுக்குச் சீரழித்திருந்தான்?’ எதுவுமே புரியாமல் அவனை அச்சம் குறையாமலே  பார்த்தவள், அதை எப்படிக் கேட்பது என்று புரியாமல் மலங்க மலங்க விழித்தாள். அவள் உடல் பயத்தில் வேகமாக உதறத் தொடங்கியது.

அவள் எதைக் கேட்க வருகிறாள் என்பதையும், எதை எண்ணி இப்படி நடுங்குகிறாள் என்பதையும் உடனேயே புரிந்து கொண்டவன் அதற்கு மேல் இயலாதவனாக, வேகமாக அவள் அருகே வந்து படுக்கையில் அமர்ந்தான்.

அவள் கரங்களைத் தன் கரங்களால் ஏந்தி அழுத்திக் கொடுத்தவன், அவள் விழிகளில் ஆறாகப் பெருகிய கண்ணீரைக் கண்டதும், அதை மேலும் காண முடியாதவனாக,

“ஷ்…ஷ்… நீ நினைப்பது போல் எதுவும் இல்லை மகி… ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் செல்ஃப்…” என்று அவன் சமாதானப் படுத்தியும், அவளால் அதை நம்பமுடியவில்லை. அதைக் குறையாத அந்த நடுக்கத்திலிருந்து புரிந்துகொண்டவனாக,

“யு ஹாவ் டு பிலீவ் மீ… அவன் தன் எல்லையைத் தாண்டுவதற்குள்ளாக நீ காப்பாற்றப்பட்டுவிட்டாய்… யு ஆர் பேர்ஃபக்ட்லி ஆல் ரைட்…” என்றான் அவசரமாக.

அவன் கூறியது அவளுக்குக் கேட்கவில்லை என்பது போல அவளுடைய நடுக்கத்தில் சிறிதும் மாற்றம் இருக்கவில்லை. கூடவே, அவளுடைய கண்ணீரும் அதிகரிக்க, அழுந்தப் பற்றியிருந்த கரத்தையே வருடிக் கொடுத்து, ஆசுவாசப் படுத்த முயன்றான். அதுவும் பலனின்றிப் போக, இனியும் அவள் கலங்குவதைக் காணமுடியாதவனாக,

“மகி… எப்படி சொன்னால் நீ நம்புவாய்?” என்று தன்னை மறந்து கேட்டவன், அவளை இழுத்துத் தன் மார்பிலே போட்டுக்கொண்டான். உதறிய அவள் முதுகை அழுத்தமாக வருடிக்கொடுத்தான். அந்த அணைப்பு, அவளுக்கு வேண்டியதாக இருந்ததோ, இல்லை இத்தனை காலம் கண்டுவந்த துன்பத்தின் எல்லையைத் தாண்டிய வேதனையோ, அவள் விசும்பத் தொடங்கினாள்.

அவள் விசும்பலை உணர்ந்தவனின் உடல் இறுகியது.

அவளைச் சற்று விலக்கி, அவள் முகத்தைத் தன் இரு கரங்களாலும் அழுந்தப் பற்றித் தன்னை நோக்கி நிமிர்த்தியவன், அவள் முகத்துக்கு நேராகத் தன் முகத்தைக் கொண்டு சென்று அவளை உற்றுப் பார்த்தான். அவளோ, அவனுடைய முகத்தைப் பார்க்கக் கூசியவளாகத் தன் விழிகளை இறுக மூடிக்கொண்டாள்.

“சர்வமகி…” என்றான். ஆனால் அவளோ அதைக் கவனிக்கும் நிலையில் இருக்கவில்லை.

“சர்வமகி…” என்றான் தன் குரலில் சற்று அழுத்தத்தைக் கூட்டி.

“ஓப்பன் யுவர் ஐஸ்…” என்றான் அதே குரலில். அவளோ விழிகளைத் திறக்கும் எண்ணம் இல்லாதவளாக இன்னும் மூடியிருக்க,

“மகிம்மா…” என்றான் பட்டினும் மெல்லிய கிசுகிசுத்த குரலில்.

அவன் குரலில் என்ன இருந்ததோ, மெதுவாகத் தன் விழிகளைத் திறக்க. அந்த நீண்ட நயனங்களுடன் தன் விழிகளைக் கலக்கவிட்டான். அந்தக் கலங்கிய விழிகளில் எதைக்கண்டானோ, அவன் தன்னை மறந்தான். மறு கணம் அந்த நீண்ட பெரிய விழிகளின் வீச்சில் இழுக்கப்பட்டவனாக, நிகழ்கால உலகில் இல்லாது கனா உலகிற்குக் கடத்தப்பட்டு, மெல்ல மெல்ல அதில் கரையத் தொடங்கினான். அந்தக் கயல் விழிகளின் காந்த விசை இழுப்பில் தன் விழிகளைப் பிரிக்க முடியாதவனாகத் தடுமாறி நின்றிருந்தது, சில கணங்களோ, இல்லை நீண்ட நெடிய மணித்துளிகளோ, அவன் அறியான், அவளிடமிருந்து மெல்லிய கேவல் ஒலி, எங்கோ ஒரு தெலைவில தொலைந்துபோயிருந்தவனை, சுய நினைவுக்கு இழுத்து வந்தது.

ஒரு கணம் ஒன்றும் புரியாமல் விழித்தவனுக்கு, கனவுலகம் மறைந்து, நனவுலகம் அவனைப் பார்த்து நகைத்தது.

அவனா? அவனா அவள் விழியின் வீச்சில் மயங்கிப்போய்க் கிடந்தான். அதுவும் அவன் தந்தையைக் கொன்றவனின் மகளின் ஒரு விழியசைவில் அவன் தன்நிலை மறப்பதா? இது எப்படி சாத்தியம்? எந்த சந்தர்ப்பத்திலும், நிலைகுலையாதவன். இரும்பு மனிதன் என்று எல்லோராலும் பெயர் பெற்றவன். எப்படித் தடுமாறினான். அவனாலே, அவனை நம்பமுடியவில்லை. தன் கரங்களில் தாங்கியிருந்த அவள் முகத்திலிருந்து தீ சுட்டதுபோலத் தன் கரங்களை வேகமாக விலக்கிக்கொண்டான்.

“ஐ ஆம்… சாரி…” என்று முணுமுணுத்தான். அந்த முணுமுணுப்பு, அவளுக்குச் சொன்னதா, இல்லை தனக்கே சொன்னானா என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

அவளோ இது எதையும் புரியும் நிலையில் இருக்கவில்லை. அவள் கசங்கிய முகத்தையும் காணப் பிடிக்காதவனாக, வேகமாகப் படுக்கையை விட்டு விலகிச் சென்று நின்றவன், தன் பான்ட் பாக்கட்டில் கரத்தை வைத்தவாறு தலையைச் சற்றுச் சரித்து, அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“சர்வமகி… நீ அச்சப்படுவது போல எதுவும் பாரதூரமாக நடக்கவில்லை… யு ஆர் சேஃப்.?” என்றான் அழுத்தமாக.

அவனுடைய அழுத்தமான குரல் அவளுடைய புத்திக்குள் மெதுவாக எட்ட அவனை உற்றுப் பார்த்தாள்.

“ஆனால் அந்த ரட்ணபாலன்… என்னை… எனக்கு…” அதற்கு மேல் கூறமுடியாமல் உதடுகள் நடுங்க, தன் பற்களால் நடுங்கும் உதடுகளைக் கடிக்க, அநேகாத்மனின் விழிகள் கூர்மையுடன், பற்களில் சிறைப்பட்ட அந்தப் பலாச்சுளை உதடுகளில் ஒரு கணம் கூடுதலாக நின்று அளவிட்டது. விரைந்து சென்று அந்த உதடுகளை விடுவிக்கவேண்டும் என்று ஏனோ உள்ளம் பரபரக்க, தன்னையே கடிந்தவனாக,

“யெஸ் ஹி ட்ரை டு மெஸ் வித் யு… பட்… அதற்குள் நான் அங்கே வந்துவிட்டேன்… நீ எதற்கும் அச்சப்படவேண்டியதில்லை…” என்று அவன் அவசரமாகக் கூற, உடல் கூறிய வலியை உணர்ந்தவளாகத் தன் கரங்களைத் தூக்கிப் பார்த்தாள்.

அவளுடைய மணிக்கட்டு, அந்த ரட்ணபாலனின் இறுகிய பிடியால், கண்டிச் சிவந்திருந்தது.  அதை வலியுடன் பார்த்தவள்,

“இந்தக் காயம் எப்படி வலிக்கிறது தெரியுமா? கையில் மட்டுமல்ல… என் உடல் முழுவதும், தீயாhல் சுட்டதுபோல வலிக்கிறது ஆத்மன்…” என்றாள் அவள் இயலாமையில்.

ஒரு கணம், அவளுடைய ஆத்மன் என்கிற அழைப்பில் அதிர்ந்துபோய் நின்றான் அநேகாத்மன். ஆத்மன் என்கிற அழைப்பு, அவன் அன்னையின் அழைப்பு. இது வரை யாரும் அவனுடைய பெயரைச் சுருக்கி இப்படி அழைத்ததில்லை. வெளியாட்கள் மரியாதையாக மிஸ்டர் அனேகாத்மன்  என்பார்கள். ஒஃபிஷலாக அழைக்கும்போது, மிஸ்டர் வெங்கடேஷ் அல்லது மிஸ்டர் அநேகாத்மன். நட்பு வட்டாரத்திற்கு மட்டும், அநேகன். ஆனால் இந்த ஆத்மன் என்கிற அழைப்பு, அவனுடைய தாயினுடையது. இதுவரை யாரும் அவனை அப்படி அழைத்ததில்லை. நீண்ட நெடிய ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பெயரைக் கேட்கிறான். அதுவும் அவன் எதிரியின் மகளின் வாயிலிருந்து.

ஏனோ அந்த அழைப்பைத் திருத்தவேண்டும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. சொல்லப்போனால், அந்த அழைப்பு, அலைப்புறும் அவன் உள்ளத்தைச் சற்று அமைதிப்படுத்தியது என்றே கூறவேண்டும். மீண்டும் அந்த அழைப்புக்காக அவனையும் அறியாது ஏங்கத் தொடங்கினான் அநேகாத்மன்.

தன் நினைவில் தடுமாறியவனை, சர்வமகியின் குரல், மீட்டு வந்தது.

“நான்… நான் இப்படி… இப்படி நடக்கும் என்று…” என்றவள் ரண்டபாலன் அவளுடன் நடந்துகொண்ட முறையை நினைத்ததும் வேதனையைக் குறைக்க முடியாமல் தன் விழிகளை அழுந்த மூடினாள்.

அவள் முகத்தில் ஓடிய கலவையான உணர்வைக் கண்டவனுக்கு, அவள் உடலில் இருக்கும் அத்தனை காயங்களும், நினைவுக்கு வந்தது. அது எந்தளவு வலியைக் கொடுக்கும் என்பதையும் அவன் உணர்ந்தான். அந்த வலியை மனதார உணர்ந்தவனாக, அதற்கு மேலும் அவளைப் பார்க்க இயலாதவனாக அறையை விட்டு வெளியேறினான்.

வெளியேறியவன், தன் கோபம் முழுவதையும் ஒன்று திரட்டி அறைக் கதவை அறைந்து சாத்தினான். தன் தலை முடியை அழுத்தமாக வருடியவனுக்கு, இதயம் வேகமாகப் படபடத்தது. அந்த படபடப்பில் ஏதோ ஒரு வலியை உணர்ந்தவன், தன் இடது மார்வை வருடிக்கொடுத்தான். அந்த வலியையும் மீறி கோபம் கொதித்துக்கொண்டு வந்தது.

தன்னுடைய பிரத்தியேக ஜிம்மிற்குள் நுழைந்தவன், ஒடுபொரியில் (வுசுநுயுனுஆஐடுடு) ஓடத் தொடங்கினான். வேகம்… வேகம்… வேகம். ஓடிய அவனுடைய வேகம் எல்லையைக் கடந்தது.  கிட்டத்தட்ட 20அph ஐயும் நெருங்கத் தொடங்கியது. இரண்டு கால்களும் வேகமாக முன்னோக்கி ஓடிக்கொண்டிருந்தது. வியர்வை ஆறாக ஓடி, அவன் அணிந்திருந்த டீசேர்ட்டை நனைத்தது. ஓடியவாறே வியர்வையால் நனைந்த டிஷேர்ட்டைக் கழற்றி ஒருபக்கமாக வீசி எறிந்துவிட்டுத் தடையின்றி ஓடினான்.

அந்த ஓட்டத்திற்கு இப்போது வேறுயாராவது இருந்திருந்தால், நிச்சயமாக இதயம் நின்றிருக்கும்.

கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாக ஓடியவன், ஓரளவு உடல் சோர்வுற, வேகத்தைக் குறைத்து நிறுத்தினான். இரண்டு கைப்பிடியிலும் கரத்தைப் பதித்துக் குனிந்து நின்றவனின் வாயிலிருந்து “ஹா.. ஹா…” என்கின்ற களைப்பின் ஒலி அந்த அறையையே நிரப்பியது.

அந்த ஆறடி மூன்றங்குல உயர உடல் வேர்வையில் குளித்திருக்க, ஈரமான தலையிலிருந்து கணுக்கால் வரை வியர்வை வழிந்து ஓடியது. மெதுவாக இடுப்பைப் பற்றியவாறு நிமிர்ந்தவனது, தலையிலிருந்து வியர்வை, அவன் கூரிய நாசியினூடாக வழிந்து நிலத்தில் விழுந்தது. அந்த வியர்வை, அவன் உடலில் ஒரு வித பளபளப்பை ஏற்படுத்த, அவனுடைய உடலின் திடமும், இறுகிய தசைக்கோலங்களும், சற்று எடுப்பாகவே வெளியே தெரிந்தது.

அதுவும் மார்பிலே அடர்ந்திருந்த முடியையும் மீறி நிமிர்ந்திருந்த அகன்ற சற்றுப் பரந்த மார்பும், அதிக நேரம், உடற்பயிற்சி செய்வதால், நிரந்தரமாகப் பதிந்துபோன சிக்ஸ்பாக் வயிறும், நரம்புகள் புடைத்திருந்த இருதலைப்புயத்தசைகளும்(டிiஉநிள யனெ வசiஉநிள), முறுக்கேறிய தோள்களும், திண்ணென்றிருந்த முதுகும், சற்று மெல்லிய இறுகிய இடையும், அடேங்கப்பா… உலக ஆணழகன் போட்டிக்கு வேண்டிய அத்தனை அம்சங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தான் அந்த ஆணழகன். அவனைப் பார்த்தால், நிச்சயமாக இந்த நிலையில்கூட அவனைப் பார்க்கும் பெண்கள், தமது தூக்கத்தைத் தொலைப்பார்கள் என்பதுமட்டும் நிச்சயம்.

ஒருவாறு தன்னை நிதானப்படுத்தியவன், ஓடுபொரியைவிட்டு இறங்கினான்.

அருகேயிருந்த துவாயை அலட்சியமாக எடுத்துத் தன் வியர்வையைத் துடைத்தான். அவனுடைய கரங்கள், தம் பாட்டிற்கு வியர்வையைத் துடைத்தாலும், சிந்தனை என்னவோ, சர்வமகியிடமே நிலைத்திருந்தது.

அநேகாத்மனுக்குத் தன்னை நினைத்தே கோபம் வந்தது. புத்திக்கு, அவள் ஏற்புடையவள் அல்ல என்று தெரிந்திருந்தாலும், மனம் என்னவோ, அவளை நோக்கியே ஓடிக்கொண்டிருந்தது.

“டாமிட்… ஆத்மன்… வேக்கப் மான்…” என்று தன்னைத் தானே சினந்தவன், தன் கரத்திலிருந்த துவாயை தூர எறித்துவிட்டு, ஹாலுக்கு வந்தான். கசகசப்பை நீக்கக் குளியலறைக்குள் நுழைந்தான். மீண்டும் ஒரு குளியலைப் போட்டுவிட்டு முன்னறைக்கு வந்தான்.

மீண்டும் மனம் சர்வமகியிடமே நின்றது. அவனுடைய அறைக்குச் சென்றவன், கதவைத் திறந்து பார்த்தான். சர்வமகி ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். சத்தம் எழுப்பாது, அவளை நெருங்கினான்.

உறக்கத்தில் அவளணிந்திருந்த ஆடையும், போர்வையும் சற்று விலகியிருந்தது. மீண்டும் போர்வையைச் சரிப்படுத்தியவன், அவள் முகத்தில் விழுந்திருந்த ஒற்றை முடியை மெதுவாக விலக்கிவிட்டான். அவனையும் அறியாது, அவள் நெற்றியில் அவனுடைய கரம் பட, அந்த மெல்லிய தொடுகை கொடுத்த உணர்வில், எங்கோ இழுத்துச் செல்லப்பட்டவனாக, மீண்டும் அவள் நெற்றியைத் தன் ஒற்றை விரலால் வருடிக் கொடுத்தான்.

இத்தனை மென்மையாகவா ஒரு பெண்ணின் நெற்றி இருக்கும். அவனுக்குத் தெரிந்து எந்தப் பெண்ணின் நெற்றியும் இத்தனை மென்மையாக இருந்தது போன்ற நினைவு இல்லை. அது சரி, அவன் எப்போதுதான் ஒரு பெண்களின் நெற்றியைத்தான் கவனித்தான்.? அவனுடைய கவனம் எல்லாம் வேறு எங்கோவல்லவா இருக்கும்.

மெதுவாகத் தன் கரத்தை விலக்கியவன், ஏதோ சந்தேகம் கொண்டவனாக, இப்போது தன் கரத்தை அவள் கன்னத்தில் பதித்தான். அவள் கன்னம் கூடப் பஞ்சு போல மென்மையாகத்தான் இருந்தது. குழந்தைக்குக் கூட இத்தனை மென்மையிருக்குமா என்பது சந்தேகம்தான்.

முகமே இத்தனை மென்மையாக இருக்கிறதே, அவளுடைய உடல், விழிகளை மூடி, அவளுக்கு மருந்திட்டதை நினைத்துப் பார்த்தான்.

அவளுடைய காயங்களும், கண்டல்களும் அதனால் அவள் பட்ட வலியுமே நினைவில் வந்து அவனைக் கொல்லாமல் கொன்றது.

“முன்னமே உனக்கு நான் அறிவித்திருக்கவேண்டும் மகிம்மா… அறிவித்திருந்தால், நீ இப்படி ஒரு றோக்கிடம் சிக்கியிருக்கமாட்டாயல்லவா…” என்று வேதனையுடன் முணுமுணுத்தவன் பெருமூச்சுடன் எழுந்து அறையை விட்டு வெளியே வந்தான்.

ஏனோ மனக் கண்ணின் முன்னால், காயப்பட்டிருந்த அவள் உடல் அங்கங்களே நினைவுக்கு வந்து அநேகாத்மனைத் தன்நிலை இழக்கவைத்தது.

மீண்டும் அவனுடைய கோபம், எகிறத் தொடங்கியது. தன் தலையைக் குலுக்கி, அவள் மேலிருந்த பிரத்தியேக உணர்வைக் கலைய முயன்றவன், முடியாமல் தோற்றுப் போனான். ஆம் அநேகாதமன் தோற்றுப்போனான். முதன் முதலாக, அதுவும் ஒரு பெண்ணுக்காய் தன் உணர்வுகளைக் கட்டுக்குக் கொண்டுவரமுடியாமல் தோற்றுப்போனான். அவளையே சுற்றிவந்த சிந்தனைகளை முறியடிக்கமுடியாமல் தோற்றுப்போனான்.

இது அவனுக்குப் புதிது. யாருக்காகவும் அவன் இத்தனை கலங்கியதில்லை. யோசித்ததில்லை. பதறியதில்லை. ஏன் வருந்தியதுகூட இல்லை. முதன் முதலாக ஒரு பெண் அவள் நினைவையும், கனவையும் மறக்கடித்துக்கொண்டிருக்கிறாள். முதன் முதலாக அவளைத் தன் நினைவிலிருந்து வெளியேற்றமுடியாமல் இவன் தவித்துக்கொண்டிருந்தான்.

“ஆத்மன்… யு ஹாவ் டு பி யுவர் ஓன் செல்ஃப்… யு ஹாவ் டு ரிடேர்ன் டு யுவர் ஓன் வேய்ஸ் சர்வமகி நாட் யுவர் டைப்… அவள் ஒரு கொலைகாரனின் மகள்… உன்னை வேவுபார்க்க வந்தவள்… ப்ளீஸ் டோன்ட் ஃபெல் ஒன் ஹர் ட்ராப்….” என்று தனக்குத்தானே அறிவுறுத்தியவாறு தன் மனதைத் தெளிவுறப் படாத பாடு பட்டான். பாழாய்ப்போன மனது, மீண்டும் சர்வமகியிடமே நிலைத்திருந்தது.

தன் மீதே கோபம் கொண்டவனாக, சென்று ஒரு சிறிய அலமாரியைத் திறந்தவன், அதிலிருந்த விஸ்கியை எடுத்துக் கடகடவென்று தொண்டைக்குள் கொட்டினான்.

அப்படியிருந்தும் கோபம் கட்டுப்பட மறுத்தது. மீண்டும் ஊற்றினான். தொண்டை எரிந்ததுதான் மிச்சம். சினம் தணியவில்லை.

போதாததற்கு, சற்றுப் போதை தலைக்கு ஏற, தன்னையும் மீறி மீண்டும் மனம், சர்வமகியையும், அந்த ரட்ணபாலனையுமே சுற்றிவந்தது. அதற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவனாகத் தன் நினைவை அதன் போக்கிற்கே விட்டான். ‘ஆத்மன்… யு ஆர் வேஸ்ட்… ஒஒஒ வேஸ்ட்… உன்னையே உன்னால் கட்டுப்படுத்த முடியவில்லையே… நீ எல்லாம் பெரிய லாயர்… கோ டு ஹெல்…’ என்று தன்னையே வசைபாடியவன், முன்னறைக்கு வந்து தொப் என்று சோஃபாவில் விழுந்தான்.

அவனுடைய மனக் கண்ணில் முதன் முதலாக அவனுடைய அறைக்குள் நுழைந்த சர்வமகி நிழலாக வந்து போனாள். அன்றைய அவளுடைய ஒவ்வொரு அசைவுகளும், இன்றுவரை அவன் நினைவை விட்டு அழியவில்லை என்பதுதான், ஆச்சரியம்.

தன் கரத்திலிருந்த விஸ்கியை வாயில் ஊற்றியவாறே தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான். தொலைக்காட்சியில் தெரிந்த செய்தியைக் கண்டதும், வாயில் ஊற்றிய விஸ்கியைக் குடிக்க மறந்தானோ, பிரக்கேற, இருமியவாறே தன் வாயைத் துடைத்தவாறு அந்த செய்தியை வெறித்துப் பார்த்தான். தலைக்கு ஏறிய போதை முழுதாக விடைபெற, அவன் உதடுகள், கோபத்துடனும், எரிச்சலுடனும் அழுந்த மூடியது.

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!