Fri. Oct 18th, 2024

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 4

(4)

அவன் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறான்தான். ஆனால் இதுவரை எந்தப் பெண்ணும் இவன் வியக்கும் அளவுக்குக் கவர்ந்ததில்லை. எல்லாப் பெண்களும் ஒன்றுதான் என்பது அவனுடைய அபிப்பிராயம்.

இதுவரை எந்தப் பெண்ணைப் பார்த்தும் புத்தி தடுமாறியதில்லை. இதயம் தாளம் தப்பியதில்லை… இவை எல்லாவற்றையும் மீறி, அவளுடைய கண்ணீர் நிறைந்த விழிகளைக் கண்டவனுக்கு ஏனோ அவனுடைய கண்களும் கலங்குவன போலச் சிவந்து போயின. வலியில் வெளிறிப்போன முகத்தைக் கண்டவனுக்கும், அந்த வலி தன்னுள் பிறப்பது போன்ற அவஸ்தையில் தவித்தவனாய், அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

விதற்பரையோ, விழிகளில் கண்ணீர் வடிவது கூட உணராமல் தன் முன்னால் நின்றிருந்தவனை நம்பாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்தக் கணம் வலி கூட மறந்து போயிற்று. ஒரு வேளை அவள் விழிகள் பொய் சொல்கின்றனவோ? குழப்பத்துடன் விழிகளை மூடி மூடித் திறந்தவள், நன்கு உற்றுப் பார்த்தாள். அவள் விழிகள் பொய் சொல்லவில்லை. சந்தேகமேயில்லை… அது அவளுடைய மாமன்தான். சின்ன வித்தியாசம். முன்பு தலை முடியை ஒட்ட வெட்டியிருப்பான். தாடி மீசை கூட அளவாகக் கத்தரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இப்போது தாடி மீசையோடு தலை முடியையும் நன்றாக வளர்த்திருந்தான். அதுவும் முடியைக் குடுமியாகக் கட்டியிருந்தான். இவர் எப்போது ஒட்டாவா வந்தார்? மீண்டும் ஏதாவது விருது கிடைத்திருக்கிறதா என்ன?

“மாமா…! நீங்களா…! நீங்கள் எங்கே இங்கே…?” என்றாள். அவனோ இவளை யோசனையுடன் பார்த்தவாறு,

“மாமா?” என்றான் புரியாமல். பின்புதான் அவளை எங்கோ பார்த்திருக்கிறோம் என்பதே அவனுக்கும் தோன்றியது போலும். தன் புருவங்களைச் சுருக்கி, எங்கே பார்த்தோம் என்று நினைவலைகளுக்குள் தேடிப் பார்த்தான். அந்த நீண்ட விழிகள், குழந்தை முகம்… அத்தனை சுலபத்தில் மறந்துவிடக் கூடிய முகமல்ல. இதை எங்கோ பார்த்திருக்கிறோம், எங்கே எங்கே…” என்று தடுமாறியவனுக்குப் பளிச்சென்று மின்னலாய் அது நினைவுக்கு வந்தது.

“நீ… நீ… சமர்த்தியின் உறவினர்தானே…” என்று கண்டுவிட்ட மலர்ச்சியில் கேட்க உடனே விதற்பரையின் முகம் வாடிப்போயிற்று.

சொந்த அத்தையின் கணவர் உத்தியுக்தனுக்கு, தன் மனைவியின் மருமகளை இத்தனை சிரமப்பட்டா நினைவுக்குக் கொண்டுவர வேண்டும்? அது சரி… நெருங்கிப் பழகும் அளவிலா இரு குடும்பங்களுக்கும் இடையே நெருக்கம் இருந்தது. உத்தியக்தன் ஒரு போதும் இவர்களோடு ஒட்டி உறவாட முயன்றதுமில்லை நெருங்கிப் பழக அனுமதித்ததும் இல்லை. அப்படியிருக்கையில் இவளை நினைவில் வைத்திருப்பான் என்று நினைப்பதே முட்டாள்தனம். அதுவும், சமர்த்தித் திருமணம் முடித்த போதும் சரி, அவனை விட்டுப் பிரிந்த பின்னாலும் சரி அவனைப் பார்க்கும் வாய்ப்பு இவளுக்கு இருந்ததில்லை. ஒரு முறை அத்தையை அழைத்துச் செல்ல வீட்டிற்கு வந்திருந்தான். அப்போதும் இவளை அவன் சரியாகப் பார்த்தானா என்பது கேள்விதான்… பார்க்கப் போனால் இந்தளவுக்கு அவளை அடையாளம் கண்டதே பெரிய விடயம்தான்?” வருத்தத்துடன் எண்ணியவளாய்த் தன் தலையை அசைத்தவள்,

“ஆமாம்… சமர்த்தியின் மருமகள்…” என்றாள் முகம் வாட. உறவுகள் என்பது கூடி மகிழ்வதுதானே… அந்த உறவுகளே தூர நிற்கும்போது, மனிதனாய் பிறந்ததற்குப் பலன் எதுவுமில்லை என்றாகிவிடுகிறது அல்லவா… அது அப்பட்டமாக மனதை வருத்தினாலும், அதைச் சமாளிப்பவள் போல, மன்னிப்புக் கேட்கும் குரலில் உதடுகளில் புன்னகையைத் தழுவ விட்டாள்.

“சா… சாரி மாமா… ஏதோ யோசனையில்… தெருவைக் கடக்கும் பொது, உங்கள் வாகனத்தைக் கவனிக்கவில்லை… ரியலி சாரி…”

“இட்ஸ் ஓக்கே… திடீர் என்று நீ குறுக்கே வந்ததும் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தடையை இறுக்கி அழுத்தியதால், பனித்தரை இழுத்துவிட்டது….”

அவன் சொல்லும் போதே, வலிக்காத காலை ஊண்டி ஓரளவு எழுந்தவள், நிமிர்ந்து நிற்பதற்காக, மறு காலையும் தரையில் வைக்க முயல, அது கொடுத்த கனமான வலியில் தன்னைச் சமாளிக்க முடியாது, “அவுச்…” என்கிற மெல்லிய அலறலுடன், மடங்கித் தரையில் விழப்போனாள்.

அதைக் கண்டு மின்னல் வேகத்துடன் எழுந்தவன், அவள் விழா வண்ணம், அவளுடைய தோள்களைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டுத் தன்னை நோக்கி இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் அவன் தடித்த அகன்ற பலம்கொண்ட தேகத்தில் மோதி நின்றாள் விதற்பரை. மோதி நின்றவளை மேலும் விழுந்துவிடா வண்ணம் தன்னோடு இறுக அணைத்தும் கொண்டான். அதன் விளைவு, அவனுடைய வலக்கரம் அவளுடைய மேல் முதுகை அணைத்துப் பிடித்திருக்க, இடது கரமோ இடையோடு ஓடி அழுந்த பிடித்துக் கொண்டது.

விதற்பரைக்கு அது கூட உறைக்க வில்லை. விழப்போகிறோமோ என்கிற அச்சத்தில் அவனுடைய தடித்த குளிர்கால ஜாக்கட்டை இறுக பற்றித் தன்னை நிலை நிறுத்தியவள், சொல்ல முடியா பேரலையாக எழுந்த வலியைத் தாக்குப் பிடிக்க முடியாதவளாய்த் தன் நெற்றியை அவன் மார்பில் பதித்து ஆழ மூச்செடுத்துத் தன்னைச் சமாளிக்க முயன்றாள்.

அவளுடைய தவிப்பு, உள்ளே ஏதோ செய்யக் குனிந்து பார்த்தான். அவனுடைய மார்பளவுதான் இருந்தாள் அவள். சிறிய மணிப்புறா ஒன்று பாதுகாப்பிற்காய் அவன் கரங்களில் தஞ்சம் புகுந்தது போன்ற உணர்வில் உள்ளம் நெகிழ்ந்து போனது. முதன் முறையாகத் தன் கரங்களுக்குள் அடங்கிக் கிடந்தவளைப் பாதுகாக்கவேண்டும் என்கிற இனம்புரியாத புதிய உணர்வொன்று பேரலையாய் அடித்துச் செல்ல, அந்த உணர்வு கொடுத்த தாக்கத்தில் வெலவெலத்துப் போனான் அந்த ஆண்மகன்.

அவனா ஒரு பெண்ணைப் பாதுகாக்கவேண்டும் என்று சிந்திக்கிறான்? அதுவும் முதன் முறையாகப் பார்க்கும் ஒருத்தியை… குழம்பியவனுக்கு இன்னொன்றும் பெரும் வியப்பைக் கொடுத்தது. இதுவரை எந்தப் பெண்ணிடமும் அவன் உணர்ந்திராத ஒன்றே ஒன்று பாதுகாப்பு மட்டுமே. அதுவும் ஜான்சியைத் தவிர வேறு எந்தப் பெண்ணை நெருங்கினாலும் மனத்தின் ஓரத்தில் ஒரு வித ஒவ்வாமை எழும். அது பயமா, இல்லை அருவெறுப்பா என்று அவனுக்கே தெரியாது. ஆனால் இவளிடம் மட்டும் அத்தகைய உணர்வு இம்மியும் தோன்றவில்லை. மனம் அமைதிப்பட்டிருந்தது. கூடவே அவளைப் பாதுகாக்கவேண்டும் என்று ஏதோ ஒன்று அவனுக்குக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தது. இத்தகைய உணர்வை இதுவரை அவன் அனுபவித்ததில்லை. தன்னை மறந்து அவளுடைய அருகாமையை ரசித்தவனாக அப்படியே நின்றிருக்க, விதற்பரைதான் ஓரளவு தெளிவுக்கு வந்தாள்.

அப்போதுதான் உத்தியுக்தனின் அணைப்பில் கிடப்பது அவளுக்கு உறுத்த, பதறியவளாக,

“சா… சாரி மாமா…” என்றவாறு கெந்தி, அவனை விட்டு விலக முயன்றாள். அவள் விலகலே இவனுக்குள் இருந்த அமைதியை மெல்லக் குலைக்க, அந்த அமைதியை விட்டு விலகப் பிடிக்காதவன் போல, அவளுடைய மேல் கரங்களை இறுகப் பற்றியவாறு, அவள் முகத்தை உற்றுப் பார்த்தான்.

வலியில் சிவந்திருந்த அந்த முகத்தைப் பார்த்ததும், மேலும் இவளுக்குள் பெரும் தவிப்பு எழுந்தது. அவளுடைய தலையின் மீது தன் வலது கரத்தைப் பதித்து,

“யு ஓக்கே…?” என்றான் அக்கறையாய். சிரமப்பட்டுப் புன்னகையை உதடுகளில் தேக்கியவள், அண்ணாந்து அவனைப் பார்த்து ஆம் என்பது போலத் தலையை ஆட்டி,

“ஆமாம்… எனக்கொன்றுமில்லை… இந்த விபத்தில் கொஞ்சம் பயந்துவிட்டேன் போல… தவிரக் கால் உலுக்கிவிட்டது… போலும்… கொஞ்சம் வலிக்கிறது. அதைத் தவிர எனக்கொன்றுமில்லை… சீக்கிரம் சரியாகிவிடுவேன்…” என்றவள் அப்போதுதான் சூழ்நிலை உறைக்கச் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அடர்ந்த பனி விழுந்ததால் மருந்துக்கும் போக்கு வரத்துக்கள் இருக்கவில்லை. நல்ல வேளை அவன் மோதியதையோ, இவள் விழுந்ததையோ யாரும் பார்க்கவில்லை. நிம்மதி கொண்டவளாய், நிமிர்ந்து தன் முன்னால் நின்றிருந்தவனைப் பார்த்து,

என்னைப் பற்றி வருந்தாதீர்கள் மாமா… உங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும். நீங்கள் புறப்படுங்கள்…” என்றபோதும் அவனை விட்டு விலகி நிற்க அவளால் முடிந்திருக்கவில்லை.

நிச்சயமாக அந்தக் காலை ஊன்றி எதுவும் செய்ய முடியாது என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்து போயிற்று. ஆனாலும் அத்தையை விட்டுப் பிரிந்து வாழும் உத்தியுக்தனின் பரிதாபத்தைச் சம்பாதிக்கவும் உள் மனம் விளையவில்லை. அதுவும் அவர்களோடு ஒட்ட முடியாது தள்ளியே இருக்கும் அவனுடைய அக்கறை அவளுக்கு வேண்டியதுமில்லை. அதனால் அவன் பிடியிலிருந்து விலகத் தொடங்க, விட்டானா அவன். அவளுடைய தோள்களை அழுந்த பற்றித் தன்னிடமிருந்து விலகாதிருக்கச் செய்தவன்,

“ஈசி… ஹனி… சரி வா… நான் உன்னைக் கூட்டிச் செல்கிறேன்…” என்றவாறு அவளைத் தன் வாகனத்தை நோக்கி அழைத்துச் செல்ல முயல, இவளோ மறுத்தவாறு,

“ஐயையோ…! அதெல்லாம் வேண்டாம்… மாமா…! நான் பேருந்தில் போய்விடுவேன்… நீங்கள் எனக்காகப் பார்க்காதீர்கள்… எனக்கு ஒன்றுமில்லை…” என்று விடாப்பிடியாக மறுத்தாள்.

அவனோ, குனிந்து அவளுடைய முகத்தைப் பார்த்தான். கசங்கிச் சிவந்திருந்த முகம் அவனுக்கு எதையோ சொன்னது. உடனே புரிந்து போனது, ஏதோ சரியில்லை என்று.

அடுத்த கணம் விதற்பரை அவனுடைய கரங்களில் மாலையாக வீற்றிருந்தாள். அதிர்ந்து போனாள் விதற்பரை. பதறியவளாக அவனிடமிருந்து திமிறியவாறு,

“எ… என்ன செய்கிறீர்கள்…” என்றாள் நெஞ்சம் பதற. இவனோ, வேக நடையுடன்,

“யு ஹேர்ட்…” என்றான் அழுத்தமாக. இவளோ சங்கடத்துடன் நெளிந்து,

“இ… இல்லை… வெறும் சுளுக்குதான்… இரண்டு நாட்களில் சரியாகிவிடும்… தயவுசெய்து என்னை இறக்கிவிடுங்கள்…” என்று அணிந்திருந்த தடித்த மேற்சட்டையையும் மீறி உணர்ந்த அவன் கரத்தின் சூடும், அது கொடுத்த அவஸ்தையிலும் நெஞ்சம் தடுமாறியது.

அவனோ அதைப் பற்றி அக்கறை கொள்ளாது, தன் வாகனம் வரைக்கும் அவளை ஏந்தி வந்து மெதுவாகத் தரையிறக்கி, கதவைத் திறந்து,

“வண்டிக்குள் ஏறு…” என்றான்.

பாத வலியோ அவனோடு போகச் சொன்னது. புத்தியோ, இவனுடைய உதவியை ஏற்பது நியாயமில்லை என்றது. இந்த இரண்டுக்கும் நடுவில் தள்ளாடியவளாகத் தயங்க,

“கமான்… கெட் இன் த கார்…” என்று சற்றும் இளகாத குரலில் கூறிவிட்டு அவளுடைய தோளில் தொங்கியிருந்த பையைக் கழற்றி எடுக்க, அதற்கு மேல் மல்லுக்கட்ட முடியாமல், நொண்டியவாறு, அவன் திறந்த கதவினூடாக நுழைந்து முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள் விதற்பரை.

கூடவே வலித்த காலை உள்ளே இழுக்க முடியாமல் தடுமாறியவளைப் புரிந்து கொண்டவனாக, அவளுடைய பாதத்தைப் பற்றி மென்மையாக உள்ளே வைத்தவன், கதவை மூடிவிட்டுப் பின் கதவைத் திறந்து அவளுடைய புத்தகப் பையை அதற்குள் எறிந்து விட்டு, ஓட்டுநர் இருக்கையில் வந்தமர்ந்தான். விதற்பரை வேறுவழியில்லாமல், இருக்கைப்பட்டியைப் போட்டுவிட்டு வெளியே வெறிக்க, இவனோ வண்டியைக் கிளப்பியவாறு, இவளைத் திரும்பிப் பார்த்து,

“ஆமாம் நீ எங்கே இங்கே…?” என்றான். இது கூடவா இவனுக்குத் தெரியாது. அத்தை கூட இவளைப் பற்றி அவனிடம் கூறவில்லையா என்ன? மீண்டும் முகம் வாடிப்போக,

“இங்கேதான் படிக்கிறேன்…” என்றாள் சற்றுத் தொலைவிலிருந்த பல்கலைக் கழகத்தின் பக்கமாகச் சுட்டிக்காட்டி.

“ஓ… எங்கே தங்கியிருக்கிறாய்?”

“பக்கத்தில்தான்…” என்றவாறு வீட்டிற்குப் போகும் பாதையைக் கூற, அவள் கூறியது போலவே வண்டியை ஓட்டியவாறு, அவளிடம் என்ன படிக்கிறாய், என்ன பாடம் பிடிக்கும் என்று ஓரளவு அவளைப் பற்றிய செய்திகளைக் கேட்டு அறிந்துகொண்டான்.

ஒரு பத்து நிமிட ஓட்டத்தில், விதற்பரையின் வீட்டிற்குப் போகவேண்டிய தெரு வர, இவனோ அந்தத் தெருவை விடுத்து வேறு திசையில் வண்டியை ஓட்டத் தொடங்கினான்.

“ஊப்ஸ்… மாமா… என் வீட்டிற்குப் போகும் தெருவைக் கடந்து விட்டீர்கள்… வண்டியைத் திருப்புங்கள்…” என்றாள்.

“ஷ்… ஐ நோ… இப்போது நாம் வைத்தியசாலைக்குப் போகிறோம்…” என்றான் பாதையில் கவனமாய்.

வைத்திய சாலை என்றதுமே இவளுக்கு ஐயோ என்றானது. வேறு ஒன்றுக்குமில்லை, அங்கே போனதும் காத்திருப்புப் படலம் இருக்கிறதே… அதை நினைத்தால் அந்தப் பக்கம் தலைவைத்தும் படுக்கக் கூட மனம் வராது. இப்போதே நான்கு முப்பது. இனி அங்கே சென்று அவர்கள் பரிசோதித்து இவர்களை வெளியே விடும்போது குறைந்தது எட்டு மணியாவது ஆகிவிடும். அதற்குப் பிறகு வீட்டிற்கு வந்து ஒப்படையில் கவனம் செலுத்தி… நடக்கும் காரியமா… அதுவும் அந்த ஒப்படைதான் அவளுக்கான மதிப்பெண்களை அதிகரிக்கச் செய்வது. நேரத்திற்குக் கொடுக்கவில்லை என்றால், அதற்கான புள்ளிகள் கிடைக்காது… அந்த அச்சத்தில்,

“அங்கேயெல்லாம் எதற்கு… தேவையில்லை மாமா… சின்னதாகத்தான் அடிபட்டிருக்கிறது… நாளைக்கு எல்லாம் சரியாகிவிடும்…” என்று மறுக்க, இவனோ, அவளை நிதானமாகப் பார்த்துவிட்டு,

உன் முகத்தில் இரத்தப் பசையைக் காணவில்லை. தேகம் நடுங்குகிறது. வியர்த்துக் கொட்டுகிறது. உள்ளங்கை சில்லிட்டிருக்கிறது…. இதிலிருந்து தெரிகிறது உன் வலியின் அளவு. எதுவாக இருந்தாலும் வைத்தியர்கள் சொல்லட்டும்…” என்று மேலும் வேகமெடுக்க,

“மருத்துவமனை போனால் பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும்… எனக்கு விரைவாகச் செய்து முடிக்கவேண்டிய ஒப்படை வேறு இருக்கிறது… அங்கே மினக்கட்டால் அவ்வளவும்தான்…” என்று சோர்வுடன் கூற, அவள் பக்கமாகத் திரும்பி மெல்லியதாகச் சிரித்தவன்,

“படிப்பில் அதி நேர்மையானவள் போல…” என்றான் மெல்லிய கிண்டலுடன். இவளோ உதடுகளைச் சுழித்தவாறு,

“நீங்கள் வேறு… அதெல்லாம் இல்லை… இந்த ஒப்படைக்கு நாற்பது புள்ளிகள் கொடுப்பார்கள். மற்றைய பரிச்சையில் அப்படி இப்படி என்று புள்ளிகள் எடுத்தாலும், இதில் எடுக்கும் புள்ளி விட்ட மதிப்பெண்களை ஓரளவு நிவர்த்திச் செய்துவிடும்…” என்றாள் சலிப்புடன்.

“மற்றைய பரீட்சைகளில் எப்படி… நேர்மையாகப் படித்து மதிப்பெண்கள் எடுப்பீர்களா, இல்லை…” என அவன் கேட்டவாறு வண்டியை வலது பக்கம் ஒடித்துத் திருப்ப, இவளோ மெல்லியதாக அசடு வழிந்து விட்டு,

“நேர்மையாப் படித்துப் பாடங்களுக்குப் புள்ளி எடுக்க நான் என்ன அன்னை தெரேசாவா? அடப் போங்கள்… எப்படியும் நான் படிக்கும் படிப்பை எங்கேயும் பயன்படுத்தப் போவதில்லை. பயன்படுத்தப் போவதில்லை என்பதை விடப் படிக்கும் படிப்புக்குரிய வேலை செய்வேனோ என்பதும் தெரியாது. அதனால் முக்கியபாடங்கள் தவிர, மற்றைய பாடப் பரீட்சைகளை பேக்காட்டி செய்வதும் உண்டுதான்…” என்று காலில் எழுந்த வலியை ஓரங்கட்டிவிட்டுக் கூற, இவனோ அதைக் கேட்டு மெல்லியதாகச் சிரித்தான். அதைக் கண்டு,

“ஹே… மாமா… அப்போ நீங்களும் எங்கள் ரகம்தானா…” என்று ஆர்ப்பாட்டமாகக் கேட்க, இப்போது வாய்விட்டு சிரித்தவன்,

“ஆல்வேஸ்… ஒரு முறை சுத்தமாகப் படிக்காமலே தொன்னூற்றெட்டுப் புள்ளிகள் எடுத்திருக்கிறேன். உனக்கொன்று தெரியுமா, புத்திசாலிகளால் மட்டும்தான் இப்படிக் குறுக்கு வழியை யோசிக்க முடியும்… அதுவும் அதி புத்திசாலிகளால் மட்டும்தான் ஆசிரியர்களிடம் பிடிபடாமல் பரீட்சை எழுத முடியும்.” என்று கூறத் தன்னை மறந்து சிரித்தவள்,

“ஏமாற்று வேலையையே நியாயமாகப் பேச உங்களால் மட்டும்தான் முடியும் போல… ஆனாலும் இதை உங்களிடம் நான் எதிர்பார்க்கவில்லை தெரியுமா… நீங்கள் நேர்வழி போகும் நபர் என்று நினைத்தேன்… என் நம்பிக்கையைப் பொய்யாக்கிவிட்டீர்கள்…” என்று இவள் நகைப்புடன் கூற, இவனோ ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான்.

“நான் நேர்வழி என்று நினைத்தாயா… சரி தான்… நீ என்னை…” என்று கூறிக்கொண்டு வந்தவனின் பின்னால் மருத்துவ ஊர்தி ஒன்று பெரும் ஓசையுடன் வரத் தன் பேச்சை இடை நிறுத்தியவன், உடனே அந்த வாகனத்திற்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றான். அடுத்து அது கடந்து சென்றதும், மீண்டும் வண்டியைத் தெருவுக்கு எடுத்து மருத்துவமனையின் பக்கமாகத் திருப்ப, பேச்சின் திசை மாறிப்போனது.

மருத்துவமனை வந்ததும், வாகனத்தைத் தரிப்பிடத்தில் விட்டுவிட்டு,

“இங்கேயே இரு… இப்போது வருகிறேன்…” என்றவாறு, வாகனத்தை விட்டு வெளியேறி மருத்துவமனைக்குள் செல்ல, இவளோ உத்தியுக்தன் சொன்னதையே நம்ப முடியாமல் நின்றிருந்தாள்.

இத்தனை கட்டுக்கோப்பாக இருக்கும் உத்தியுக்தனுக்குள் இத்தனை குறும்பா… யாராவது உத்தியுக்தன் இப்படிப் பரீட்சையை ஏமாற்றிச் செய்தான் என்று சொன்னால் நம்புவார்களா…? வியந்து நிற்க, உள்ளே சென்றவன் திரும்பி வந்தபோது கையில் ஒரு சக்கர நாற்காலி இருந்தது.

இவள் பக்கத்துக் கதவைத் திறந்து,

“உன்னால் இறங்க முடியுமா?” என்று கேட்க, உடனே வாகனத்தின் கைப்பிடியைப் பற்றியவாறு சிரமப்பட்டு வெளியே வந்தவளின் கைத்தலத்தைப் பற்ற, ஏனோ விதற்வரையின் உடலில் என்றுமில்லாததாக ஒருவித புது மாற்றம். அதுவும் அவனுடைய கரம் கொடுத்த வெம்மையில் ஒரு விதப் பாதுகாப்புணர்வு உள்ளே தோன்ற, அந்தப் புதிய உணர்வுக்கான காரணம் புரியாமல், திகைத்தவள், அவன் வழிகாட்டலில் தள்ளு வண்டியில் அமர, அவள் சரியாக அமர்ந்துவிட்டாளா என்பதைக் கவனித்துவிட்டு,

“உன்னுடைய சுகாதார அட்டை எங்கே?” என்றான்.

“என்னுடைய புத்தகப் பையில் இருக்கிறது…” என்றதும், உடனே பையை எடுத்து அவளிடம் நீட்டினான். அதிலிருந்து தன் பணப்பையை எடுத்துக் கொண்டதும், புத்தகப்பையை வாங்கி மீண்டும் பின்னிருக்கையில் வைத்துவிட்டு, வைத்தியசாலையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு நோக்கி வண்டியைத் தள்ளத் தொடங்கினான்.

உள்ளே நுழைந்ததும், இவளுடைய தகவல்கள் கொடுக்கவேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்ல, ஏற்கெனவே தகவல் கொடுக்கும் இடத்தில் ஒருத்தர் அமர்ந்திருந்தார். அவர் விடைபெறும் வரைக்கும் காத்திருந்துவிட்டு, அவர் சென்றதும், தன் சுகாதார அட்டையை நீட்டினாள் விதற்பரை.

நீட்டிய அட்டையை வாங்கி, அதிலிருந்த படத்தையும் அவளையும் ஒரு முறை சரிபார்த்துவிட்டு,

“யுவர் ஃபெர்ஸ்ட் நேம் லாஸ்ட் நேம் அன்ட் டேட் ஆஃ பேர்த் ப்ளீஸ்…” என்றார் அவர்.

“ஃபெர்ஸ்ட் நேம் விதற்பரை… லாஸ்ட் நேம் தயாளன்… டேட் ஆஃ பேர்த்…” என்று விபரங்கள் கொடுக்க, அவள் பின்னே நின்றிருந்தவனுக்கு அவள் கொடுத்த பதிலை விட்டுப் புத்தி வேறு திசைக்குச் செல்ல மறுத்தது.

தன்னை மறந்து ‘விதற்பரை’ என்று அவளுடைய பெயரை, உதடுகளை அசைத்துச் சொல்லிப் பார்த்தான். இதயம் முதல் புத்தி வரை தடுமாறியது. என்றுமில்லாததாக அடிவயிற்றில் இனம் புரியாத தவிப்பு. நெஞ்சில் சிலிர்ப்பு… வெறும் பெயரைச் சொன்னதும் ஏன் உள்ளே எதுவோ குறுகுறுக்கிறது? புரியாமல் குழம்பி நின்றான் அவன்.

வேண்டிய அத்தனை தகவல்களையும் எடுத்தபின், அவர்களைச் சற்றுத் தள்ளியிருந்த இருக்கையில் அமருமாறு பணித்துவிட்டு, அடுத்த நோயாளரை நோக்கி தன் கவனத்தைத் திசை திருப்ப, அவருக்கு நன்றியுரைத்துவிட்டு, விதற்பரையின் தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டு நோயாளர்கள் இருக்கும் இடத்தின் அருகே வந்தான் அவன்.

அவர்களுடைய போதாத நேரம், வைத்தியசாலை நிரம்பி வழிந்திருந்தது. அதைக் கண்டதுமே, இப்போதைக்கு வைத்தியரைப் பார்க்க வாய்ப்பில்லை என்பது புரிந்து போக, சலிப்புடன் தன் நெற்றியை வருடிக் கொடுத்த விதற்பரை

“சுத்தம்….” என்றாள் உதடுகளைச் சுழித்தவாறு. பின் நிமிர்ந்து தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவனை ஏறிட்டு,

“மாமா… இன்று வீட்டிற்குப் பேனபாடில்லை… இங்கேதான் முழு நாளும் தங்கப்போகிறோம் போல…” என்று கூறிவிட்டு, அவனுடைய நேரத்தைத் தான் விரயமாக்கிறோமோ என்கிற குற்ற உணர்ச்சியுடன்,

“இனி நான் பார்த்துக்கொள்கிறேன் மாமா… நீங்கள் புறப்படுங்கள்…” என்றாள்.

அவனோ, பதில் கூறாது, புன்னகைத்துவிட்டு,

“ஏதாவது குடிக்க வாங்கி வரவா?” என்றான் மென்மையாய். அந்த நேரத்திற்குச் சூடாய் ஏதாவது குடித்தால் நன்றாக இருக்கம்போலத்தான் இருந்தது. ஆனாலும் கேட்க மெல்லிய தயக்கம் தோன்ற, அவனை நிமிர்ந்து பார்த்தாள். அந்தப் பார்வையைப் புரிந்துகொண்டவனாக,

“இங்கேயே இரு… இதோ வருகிறேன்…” என்றுவிட்டு எங்கோ சென்றவன் அடுத்த இருபதாவது நிமிடங்களில் கரத்தில் ஒரு தட்டை ஏந்தியவாறு வந்துகொண்டிருந்தான்.

“வரிசையில் நீண்ட நேரமாக நிற்கவேண்டியதாயிற்று…” என்று தாமதமாக வந்ததற்கான காரணத்தைக் கூறிவிட்டு அவளுக்கு முன்பாக இருந்த இருக்கையில் அந்தத் தட்டை வைத்தவன், அணிந்திருந்த கோட்டைக் கழற்றி, விதற்பரையின் தள்ளுவண்டியில் கொலுவிவிட்டு, கழுத்துவரை மூடியிருந்த பொத்தான் இரண்டைக் கழற்றிவிட்டு,

“உனக்கு எப்படிப் பிடிக்கும் என்று தெரியாது. அதுதான் பால், க்ரீம், சீனி அத்தனையையும் ஒன்றாக எடுத்து வந்தேன்… சொல்… பால் பிடிக்குமா? க்ரீம் பிடிக்குமா? எத்தனை சீனி போடட்டும்? என்று கேட்க, விதற்பரை தன் விருப்பத்தைக் கூற, அதற்கேற்பக் காப்பியைத் தயாரித்து அவளிடம் நீட்டினான்.

நன்றியோடு, அதை வாங்கிக் கொண்டதும், எழுந்தவன், தன் பான்ட் பாக்கட்டிற்குள் கை விட்டு, ஒரு மருந்துக் குப்பியை வெளியே எடுத்து, அதில் இரண்டை உள்ளங்கைகளில் கொட்டி, அவளிடம் நீட்டினான்.

“வரும்போதே மருந்துக்கடை ஒன்றைக் கண்டேன்… உனக்கு வலியை ஓரளவு கட்டுப்படுத்த இந்த டைலனோலை வாங்கி வந்தேன். குடி, கொஞ்சம் வலி குறையும்…” என்று கூற, ஏனோ அவனுடைய கரிசனையில் கண்கள் பணித்தன விதற்பரைக்கு.

அப்போதைய நிலைமையில் அந்த வலியிடமிருந்து விடுதலை கிடைத்தால் போதும் என்கிற நிலையில் மறுக்காது கிட்டத்தட்ட பாய்ந்தே அவன் உள்ளங்கையிலிருந்த மருந்தை எடுத்தவள், உடனே வாயில் போட்டுக் காப்பியைக் குடித்து அது தொண்டையை நனைத்துச் செல்வதை ஒரு சுகத்தோடு விழிகளை மூடி அனுபவித்தாள்.

அதைத் திருப்தியுடன் பார்த்தவன், அந்தக் குப்பியை, பான்ட் பாக்கட்டிற்குள் போட்டுவிட்டு, அவளுக்கு அருகாமையிலிருந்த இருக்கையில் அமர்ந்து தனக்கான காப்பியைக் கலக்கத் தொடங்க, விதற்பரை, அவனை யோசனையுடன் பார்த்தாள்.

அவளுக்குத் தெரிந்து உத்தியுக்தன் தன் அக்கறையை இத்தனை வெளிப்படையாகக் காட்டுவது கிடையாது. எதிலும் ஒரு அழுத்தம் இருக்கும். இத்தனை இலகுத்தன்மை இருந்ததில்லை. ஆனால் இவளிடம் மட்டும் ஏன் இத்தனை அக்கறையோடு நடந்து கொள்கிறான். ஒரு வேளை தன் மனைவியின் உறவினள் என்பதால் இருக்குமோ? அதுவும் விட்டுச் சென்ற மனைவியின் உறவினளுக்கு யாராவது இப்படி அக்கறை காட்டுவார்களா என்ன? அதுவும் எப்போதும் வேலைப்பழுவோடு இருப்பவன் அவளுக்காய் காத்திருக்கிறானே.

அதை நினைக்கும்போதே இவளுக்கு மெல்லிய குற்ற உணர்ச்சி எழுந்தது. ஏனோ தானே அவனை இழுத்து வைத்திருப்பது போல ஒரு வித சங்கடம் தோன்ற,

“மாமா…” என்றாள். அவனோ கைப்பேசியிலேயே கவனமாக இருக்க,

“மாமா…” என்றாள் மீண்டும். அப்போதும் அவன் திரும்பிப் பார்த்தானில்லை. சற்றுப் பொறுமை இழந்தவளாக, எக்கி, அவன் தோளில் தட்டுவதற்குக் கரத்தைக் கொண்டு போனவளுக்கு எதுவோ தடுத்தது.

சற்று முன் அவன் கரத்தைப் பற்றியபோது ஏற்பட்ட குறுகுறுப்பு இன்னும் இறங்கவில்லை. அதுவும் உள்ளங்கையில் அவனின் கரச் சூடு மிச்சமிருப்பது போல இப்போதும் தோன்றுகிறது. அப்படியிருக்கையில், அவனைத் தொட்டு அழைக்க ஒரு வித தயக்கம் எழ, நீட்டிய கரத்தை உடனே சுருட்டி இழுத்துக்கொள்ள. இவளிடம் அசைவு புரிந்து, நிமிர்ந்து பார்த்து,

“என்னை அழைத்தாயா?” என்றான். இவள் ஆம் என்று தலையை ஆட்டிவிட்டு,

“எப்படியும் நிறைய நேரமாகும்… அதுவரை சும்மா இங்கேயே இருக்கப் போகிறீர்களா…” என்றாள். அதைக் கேட்டதும், மெல்லியதாகச் சிரித்தான் அவன்.

அப்போது பட்டும் படாமலும் மின்னலாய்த் தெரிந்த அவன் பற்களின் அழகைக் கண்டு ஒரு கணம் திணறித்தான் போனாள் விதற்பரை. மாமாவிற்கு இத்தனை அழகாய் சிரிக்கத் தெரியுமா என்ன? அவளுக்குத் தெரிந்து இறுகிய முகத்துடன் இருந்த உத்தியுக்தன்தான் நினைவுக்கு வந்தானே தவிர, மருந்திற்கும் புன்னகையைச் சுமந்திருந்த உத்தியுக்தனின் நினைவு வரவேயில்லை.

புரியாத புதிருடன், குழம்பி நிற்கையில், அவனோ, தன் கைப்பேசியை அவளுக்கு உயர்த்திக் காட்டிவிட்டு,

“உலகமே நம்முடைய கைப்பிடியில் இருக்கும் போது, என்னுடைய முக்கிய வேலைகள் மட்டும் தொலைவிலா இருக்கப் போகிறது… தவிர, இப்போதைக்கு என் வேலையை விட, உன்னுடைய உடல் நிலைதான் முக்கியம்…” என்றான் அதே புன்னகை மாறாமல்.

“இல்லை மாமா…” என்று அவள் எதையோ கூற வர,

“ஷ்… என்னால்தானே உனக்கு அடிபட்டது. அதனால் அதைச் சரிப்படுத்தும் கடமையும் எனக்கிருக்கிறது தானே. தவிர, உன்னைத் தனியாக இங்கே விட்டுவிட்டுச் செல்லவும் என்னால் முடியாது…” என்றவன் மீண்டும் கைப்பேசியில் எதையோ கடகடவென்று தட்டத் தொடங்க, இனி அவனோடு விவாதித்துப் பயனில்லை என்பதைப் புரிந்துகொண்டவள் போல, தன் காப்பியில் கவனம் செலுத்தத் தொடங்கினாள் விதற்பரை.

கூடவே கால் வேறு விண் விண் என்று தெறித்தது. சப்பாத்து அணிந்திருந்ததால், வீங்கியிருக்கிறதா என்று கூடத் தெரியவில்லை. ஆழ மூச்செடுத்தவாறு தலையைப் பின்னால் சரிக்க, அவள் அசைவைக் கண்டு அவள் பக்கமாகத் திரும்பியவன்,

“வலிக்கிறதா?” என்றான் அக்கறையாக.

அவனுடைய கவனம் கைப்பேசியில் அல்லவா இருந்தது… இவள் வலி இவனுக்கு எப்படித் தெரிந்தது?” என்று குழம்பியவளாக மறுப்பாகத் தலை அசைத்தவள்,

“இ… இல்லை பெரிதாக வலிக்கவில்லை…” என்றாள் மெல்லிய சங்கடத்துடன். இவனோ அவளை உற்றுப் பார்த்து,

“வலியை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை… தற்பரை…” என்று தன் அழுத்தமான ஆழமான குரலில் கூற, முதன் முறையாக அவளுடைய பெயரை அவன் உச்சரித்ததில், மீண்டும் இதயத்தில் ஒரு வித தடுமாற்றம். ஒரு வித கிளர்ச்சி. அதை நம்ப முடியாதவள் போல அவனையே வெறித்தாள் விதற்பரை.

இது என்ன? அவன் என்ன செய்தாலும் உள்ளே என்னவோ செய்கிறதே… இதயம் தடுமாறுகிறதே… எதற்காக அப்படியிருக்கிறது? தவிக்கும்போதே, அவள் பக்கமாக நன்கு திரும்பியவன்,

“தற்பரை… நான் சொல்வது போல முயற்சி செய்து பார்க்கப் போகிறாயா, உன் வலி ஓரளவு குறைவது போலத் தோன்றும்…” என்றதும் ஆவலாக அவனைப் பார்த்தாள்.

“இந்த வலி போகவேண்டும் என்றால் என்னவும் செய்வேன் சொல்லுங்கள்…”

“சுலபம்… எங்கே வலிக்கிறதோ அங்கே உன்னுடைய கவனத்தைக் குவி… வலியை உணர்ந்து கொள். நீ வலியில் கவனத்தைச் செலுத்துகிறாய் என்பதை உன் மூளை புரிந்து கொண்டால், வலி மட்டுப்படும். நம்பு. முயன்று பார்…” என்று கூற, அவன் சொன்னது போலவே முயன்றவள் ஆச்சரியப்பட்டுத்தான் போனாள். வலித்ததுதான், ஆனால் முன்போலச் சுள்ளெனத் தெறிக்கும் வலி மட்டுப்பட்டுத்தான் போனது.

எப்படியோ ஒரு மணி நேரம் காக்க வைத்த பின்,

“மிஸ் வித… விதர்.. விதட்பறை டயாளன்… விதட்பறை டயாளன்…” என்று தாதி ஒருவர் இவளுடைய பெயரை முடிந்த வரை தவறாக ஏலம் விட, உடனே எழுந்தான் அவ்வியக்தன்.

அவள் கரத்திலிருந்த காப்பிக் குவலையை வாங்கி அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுக் கூடவே தட்டை அதற்கு மேல் வைத்துவிட்டு இவளுடைய சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு செல்ல, முதலில் அவளுடைய இரத்த அழுத்தம் பரிசோதிக்க பட்டது. அவளுடைய பாதத்தை பரிசோதித்த தாதி, உடனே ஊடுகதிர் செய்யும் இடத்திற்கு அனுப்பி வைத்தார். அவரின் வழிகாட்டலில் குறிப்பிட்ட அறைக்குள் இருவரும் நுழைந்தனர்.

அது ஊடுகதிர் கருவிகள் உள்ள அறை. அங்கே நின்றிருந்த தொழில் நுட்பவியலாளர், ஒரு கறுப்பினப் பெண்மணி. அவருடைய உருவத்திற்கும் கனிவுக்கும் சம்பந்தமே இல்லாதது போல, திரும்பி சமர்த்தியைப் பார்த்துப் புன்னகைத்தவர்,

“வட் ஹப்பன் டார்லிங்…” என்றார். அருகே நின்றிருந்தவன் எதையோ கூற வர,

“கால் தடுக்கி விழுந்துவிட்டேன்…” என்றாள், தன் வலது காலைச் சிரமப்பட்டுத் தூக்கிக் காட்டியவாறு.

“ஓ… மை… மை…” என்று பரிதாபப்பட்டவராக, “உன்னால் சப்பாத்தைக் கழற்ற முடியுமா?” என்றார்.

உடனே தலையாட்டியவள் சப்பாத்தைக் கழற்றுவதற்காகக் குனிய முதலே அவள் முன்பாக மண்டியிட்டு அமர்ந்தான் அவன்.

“என்னிடம் விடு… நான் கழற்றி விடுகிறேன்…” என்றவாறு சப்பாத்தின் முடிச்சை அவிழ்க்க, இவள்தான் தன் மூச்சை உள்ளிழுத்து நிற்கவேண்டியதாயிற்று. சத்தியமாக இவனே முன்வந்து கழற்றுவான் என்று  நினைக்கவேயில்லை.

பதறியவளாகக் காலை இழுக்க முயல, அவனோ அவளுடைய கெண்டைக் காலை அழுந்த பற்றி, சற்று எரிச்சலுடன் நிமிர்ந்து பார்த்து,

“டோன்ட் மூவ்…” என்று விட்டு, குதிக்காலைப் பற்றித் தூக்கி, கிட்டத்தட்டத் தன் மார்பு வரை உயர்த்தியவன், மிக மிக மெதுவாக சப்பாத்தைக் கழற்றத் தொடங்க, அவன் கழற்றியதாலோ என்னவோ இவளுக்கு வலி சுத்தமாக மறந்து போனது.

முடிந்தளவு அவளுக்கு வலிக்காமல் சப்பாத்தைக் கழற்றி ஓரமாக வைத்தவன், அவளுடைய காலுறையைக் கழற்றுவதற்காகப் பான்டை சற்று மேலே தூக்கிச் சதைப்பற்றுக் கொண்ட கெண்டைக் காலில் தன் வெம்மை நிறைந்த உள்ளங்கையை வைத்தபோது, விதற்பரைக்கு இதயம் மிகப் பலமாக அடிக்கத் தொடங்கியது.

வெறும் ஒற்றை வருடல்தான்… ஆனால் உள்ளே எத்தனை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்த நிலையிலும் ஏனோ போதை உட்கொண்டதுபோல உடல் மிதக்கத் தொடங்கியது. உடலுக்குள் இனம்புரியாத அவஸ்தை. அடிவயிற்றில் ஒரு வித முடிச்சு. மார்பில் ஒரு வித இளக்கம். தொண்டையில் பெரும் அவஸ்தை. அவனோ அதைப் பற்றிச் சற்றும் அக்கறை கொள்ளாது, காலுறையை மெல்ல மெல்லக் கழற்ற, அப்போதுதான் அவனும் பார்த்தான், கால் மூட்டு சிவந்து பயங்கரமாக வீங்கியிருந்ததை.

தன்னை மறந்து “மை காட்…” என்றவன் அந்தப் பாதங்களைத் தன் உள்ளங்கையினால் பற்றி மெதுவாகக் கீழே வைக்க, அந்தத் தொழில்நுட்பவியலாளரும் அதைக் கண்டு,

“ஓ புவர் பேபி… கம் சிட் இன் த பெட்…” என்றதும் இடது காலின் துணையுடன் எழுந்தவளின் தோள்களை ஆதரவாகப் பற்றிக்கொண்டான் அவன்.

எழுந்ததால் இரத்தம் வேகமாகப் பாதத்திற்குப் போனதோ? மீண்டும் வலியில் சுள்ளிட, முகத்தைக் கசக்கியவள், வலியில் தன்னை மறந்து முனங்க, அவனோ, அவளுடைய தோள்களை அழுந்த பற்றி அழைத்துச் சென்று அமர வைக்க, அந்தத் தாதியோ, அவளுக்குச் சிரமம் கொடுக்காமல், சிவந்து வீங்கியிருந்த காலைத் தூக்கிப் படுக்கையில் வைத்துவிட்டு,

“யு ஓக்கே…?” என்றார் வருந்தும் குரலில். இவள் ஆம் என்பது போலத் தலையை ஆட்டினாலும், அவள் முகத்தில் தெரிந்த வலியைக் கண்டுகொண்டவனாக, அவளுடைய முதுகைத் தட்டிக் கொடுத்துவிட்டுச் சற்றுத் தள்ளி நின்று கொள்ள, அந்தத் தாதி ஏதேதோ செய்தார். அடுத்த பத்தாவது நிமிடத்தில்,

“எல்லாம் முடிந்து விட்டது, இப்படியே நேராகச் சென்று இடது பக்கம் திரும்புங்கள். உங்களை வைத்தியரிடம் அழைத்துச் செல்வார்கள்..” என்று கூறிவிட்டுத் தன் பணியைத் தொடங்க, மீண்டும் அவளைத் தள்ளுவண்டியில் அமர்த்திவிட்டு, தாதி சொன்ன குறிப்பிட்ட இடத்திற்கு வர, அடுத்த அரை மணி நேரத்தில் இவளுடைய பெயர் அழைக்க பட்டது. மீண்டும் இன்னொரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் பத்து நிமிட காத்திருப்பு.

விதற்பரைக்குப் பொறுமை மெல்ல மெல்லக் குறையலாயிற்று.

“ப்ச்… என்ன இது… எவ்வளவு நேரமாகத்தான் காத்திருப்பது… பேசாமல் வீட்டிற்குப் போயிருக்கலாம் மாமா…” என்று எரிச்சலுடன் கூறிக்கொண்டிருக்கும் போதே வைத்தியர் உள்ளே வந்தார்.

“ஹாய்… ஐ ஆம் டாக்டர் கிரெய்க்…” என்றவர் சக்கர வண்டியில் அமர்ந்திருந்த விதற்பரையின் கரத்தைப் பற்றிக் குலுக்கிவிட்டு, அவளுக்கு அருகே நின்றிருந்தவனின் கரத்தையும் பற்றிக் குலுக்கிவிட்டு,  அவளுக்கு முன்பாக மண்டியிட்டு அமர்ந்து அவள் பாதத்தைத் தூக்கிக் கவனமாகப் பரிசீலித்துவிட்டு, எழுந்தார்.

“உங்கள் அறிக்கையைப் பார்த்தேன். விழுந்த வேகத்தில் கால் மூட்டு எலும்பில் வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு அதிகம் பயப்படவேண்டியதில்லை. இன்னும் ஆறு கிழமைகளுக்கு அந்தக் காலுக்கு அதிகம் அழுத்தம் கொடுக்காமல் இருக்கப் பாருங்கள்… இன்னும் கொஞ்ச நேரத்தில் தாதி வந்து கட்டுப்போடும் இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள்…” என்றவர், என்ன என்ன செய்யவேண்டும் என்று அறிவுறுத்திவிட்டு வலி தெரியாமல் இருக்க டைலனோல், இல்லையென்றால் அட்வில் எடுக்குமாறு கூறிவிட்டு விடை பெற, விதற்பரையோ

“யா குட்…” என்றவாறு சலிப்புடன் சுவரோடு சாய்ந்தாள்.

“இதைக் கேட்கவா மூன்று மணி நேரமாக இங்கே காத்திருந்தோம்…?” என்றவள் திரும்பி தன்னருகே நின்றிருந்தவனைப் பார்த்து,

“நீங்கள் அப்போதே போயிருக்கலாம் மாமா…” என்றாள் சலிப்புடன். அவனோ இப்போதும் பதில் கூறாது மெல்லியதாகச் சிரிக்க, ஒரு தாதி உள்ளே வந்தார்.

“ஹாய் ஹெள ஆர் யு…?” என்று கேட்டவர், இவர்களின் பதிலையும் எதிர்பார்க்காமல், அவள் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு இன்னொரு திசைக்கு அழைத்துச் செல்ல, அடுத்து அவ்வியக்தனின் உதவியோடு இன்னொரு படுக்கையில் அமர்ந்தாள் விதற்பரை.

தொடர்ந்து அவளுடைய கால்கள் அசையாதிருக்கும் வகையில் மாவுக்கட்டுப் போடப்பட்டது. வெறும் பாதத்தில் ஏற்பட்ட வெடிப்புக்குக் கால் முழுவதும் பெரிய கட்டுப் போடவேண்டுமா என்ன? பார்க்கும்போது காலே தனித்து வந்தது போல அல்லவா தெரிகிறது. ஒருபக்கம் சிரிப்பாகவும் மறு பக்கம் எரிச்சலாகவும் வந்தது. காயம் பாதத்திலா, இல்லை கால் முழுவதுமா? என்று தனக்குள் எண்ணும்போதே கட்டுப் போட்டு முடித்தவர்,

“இனி நீங்கள் புறப்படலாம். அதிகம் காலுக்குக் கனம் கொடுக்காதீர்கள். ஆறு கிழமைகளுக்குப் பிறகு மீண்டும் வர வேண்டும் கட்டவிழ்க்க… மிச்ச விபரங்களை முன் மேசையில் விசாரியுங்கள்…” என்று அனுப்பிவிட, அவர் சொன்னது போலவே. இனி எப்போது அழைத்து வருவது என்கிற விபரங்களையும் எடுத்துக்கொண்டு அவளைத் தன் வாகனம் நோக்கி அழைத்து வந்தபோது நேரம் ஆறு மணியையும் கடந்திருந்தது.

What’s your Reaction?
+1
18
+1
5
+1
4
+1
1
+1
0
+1
1

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!