(9)
எப்படியோ வளைகாப்பு எந்தச் சிக்கலுமில்லாமல் நிறைவாகவே நடந்து முடிந்திருக்க அத்தனை பேரின் முகத்திலும் நிறைவான விழாவைக் கண்டுவிட்ட மகிழ்ச்சி. முக்கியமாக அவ்வியக்தனுக்கு. அவனுடைய விழிகள் விதற்பரையை விட்டு ஒரு அங்குலம் கூட அசைவதாயில்லை. அங்கே என்ன நடந்தது, யார் யார் என்ன செய்தார்கள் என்பது பற்றிய காட்சிகளே அவன் கண்களுக்குள் புகுவதாயில்லை. முழுக்க முழுக்க அவன் சிந்தையை நிறைத்திருந்தது விதற்பரை மட்டுமே.
தாய் புஷ்பா சொன்ன கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக உள்ளே செல்லும் போது, ஏதோ வேலை இருப்பது போல இரும்பிழுத்தக் காந்தமாகப் பின்னால் சென்றான். திரும்பி வரும் போது வேறு எங்கோ போவது போல அவள் பின்னால் வந்தான்.
அவ்வியக்தன் தன் பின்னால் சுற்றுவது விதற்பரைக்குப் புரியாமலில்லை. ஆனாலும் அவள் அதைக் கண்டுகொள்வதாகவேயில்லை. அந்த இடத்தில் அதைத் தவிர்க்கவும் முடியாதே.
அதே நேரம் தன் மருமகளின் பூரிப்பையும் மூத்தமகனின் மகிழ்ச்சியையும் கண்கூடாகக் கண்டுகொண்ட ரதிக்குப் பெரும் ஏக்கம் பூதாகரமாகத் தாக்கியது. எதற்கெடுத்தாலும் புஷ்பாவைத்தான் உத்தியுக்தன் நாடினான் அன்றி அவரை ஏறெடுத்துக் கூடப் பார்க்கவில்லை. கடமைக்காக ஒரு தலையசைப்பு மட்டுமே.
பெரும் வலியுடன் தன் இளைய மகனைத் தேட, அப்போதுதான் அவர் கவனித்தார், தன் இளைய மகனின் கண்கள் விதற்பரையையே சுற்றிவருவதை. அவள் எங்கே சென்றாலும் அந்த இடத்திற்கு அவன் செல்வதைக் கண்டு முகம் சற்று மலர்ந்து போனார். நிச்சயமாக அவ்வியக்தனுக்கு வேண்டிய அன்பையும் பாதுகாப்பையும் விதற்பரை கொடுப்பாள் என்கிற நம்பிக்கை அவருக்கு உருப்பெற்றது.
இதுவரை அவர் தன் பிள்ளைகளுக்கு எதுவும் செய்ததில்லை. அதனால்தான் அவர்கள் எப்போதும் அவரை அன்னியர் போலப் பார்க்கிறார்கள். சிறுவர்களாக இருந்தபோது கூடப் பாசமாக எதுவும் செய்ததில்லை. ஆனால் முதன் முறையாகப் புஷ்பாவின் குடும்பத்தையும், அவர்களின் அன்னியோன்யத்தையும் கண்ட ரதிக்குப் பெரும் ஏக்கம் நெஞ்சில் பிரளயமாய் எழத் தொடங்கியது.
அந்தக் குடும்பத்தில் தானும் ஒருவராய் இணையமாட்டோமா என்கிற ஆசை பேரலையாகத் தாக்க, ஒரு பொழுதாவது தன் மகன்களோடு அன்பாய் நேரத்தைச் செலவிடவேண்டும் என்கிற ஆவல் பல்கிப் பெருகத் தன் மகனின் விருப்பைக் கண்டுகொண்டவராகப் புஷ்பாவிடம் தன் மகனுக்குப் பெண் கேட்டுவிடுவது என்று முடிவுசெய்ய அவருடைய உதடுகளில் மெல்லிய புன்னகை ஒன்று தவழ்ந்தது.
தான் பெண் கேட்டதும் தன் மகன் தன்னை அணைத்து நன்றி சொல்வான் என்கிற கற்பனைக் குதிரை விரிய, அந்த விநாடிக்காகக் காத்திருந்தார் ரதி.
இந்த நேரத்தில் விருந்தினர்கள் உணவு உண்பதற்காகச் சமைத்த பதார்த்தங்களை மேசையில் வைப்பதற்காக இரண்டு கரங்களிலும் எடுத்து வந்தாள் விதற்பரை.
உத்தியுக்தனின் வீடு மிகப் பெரியது என்பதால், சமையலறைக்கும் விருந்தினர்கள் உண்ணும் உணவு மேசைக்கும் இடையிலே சற்றுத் தூரம் இருந்தது. விதற்பரை இரண்டு கரங்களிலும் உணவுப் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு விருந்தினர் அறை நோக்கி நடக்கத் தொடங்க பின்னால் வரிசையாக வசந்தன் ரகுநந்தன், பிரபஞ்சன், ரஞ்சனி என்று அத்தனை பேரும் ஆளுக்கு இரண்டு பாத்திரங்களுடன் விருந்தினர் அறை நோக்கி நடக்கத் தொடங்கினர். அதைக் கண்ட அவ்வியக்தன், ஆறாம் ஆளாகச் செல்வதற்குச் சமையலறைக்குள் நுழைய முயன்றான்.
எப்போதும் சமையல் அறைக்குள் யார் இருந்தாலும் இவன் உள்ளே செல்ல மாட்டான். இவனால் செல்லவும் முடியாது. அவனையும் மீறி உடல் வெடவெடக்கும். கால்கள் நடுங்கும். இதயம் பயங்கரமாய்த் துடிக்கும். ஆனால் விதற்பரை உள்ளே இருக்கும் போது மட்டும் அவனுக்கு எந்த வித உணர்வும் தோன்றுவதில்லை.
அப்போதும் அவள் பின்னால் சென்றவன், விதற்பரை இரண்டு பாத்திரங்களை எடுத்துச் செல்ல, இன்னொரு பாத்திரத்தில் கறிகளைப் போட்டுக்கொண்டிருந்த புஷ்பாவிடம்,
“ஹாய்… நானும் ஏதாவது உதவட்டுமா?” என்றான் ஆர்வமாய். அவன் குரலைக் கேட்டதும் பதட்டத்தோடு நிமிர்ந்து பார்த்த புஷ்பாவிற்கு முகம் கறுத்துப் போனது. அதுவும் மிக நெருக்கத்தில் அவ்வியக்தனைக் கண்டதும் பதறியவராய், கரங்கள் நடுங்க, அவனை வெறித்தவர், சுயம் பெற்றவராய், இரண்டடி தள்ளி நின்றவாறு அவனைக் கொலைக் குற்றவாளி போலப் பார்த்தார். அவன் புன்னகையுடன்தான் நின்றிருந்தான். விழிகளில் கூட எந்த வக்கிரமும் தெரியவில்லை, ஆனாலும் அவனோடு சகஜமாகப் பேசமுடியும் போலத் தோன்றவில்லை. அவன் முகத்திலிருந்து பார்வையை விலக்கியவர்,
“தேவையில்லை…” என்றார் முகத்தில் அறைவது போல.
அவருடைய முகத்திருப்பலும், பட்டென்று பதில் சொன்ன விதமும் அவ்வியக்தனுக்குப் பெரும் அவஸ்தையைக் கொடுக்க என்ன செய்வது என்று தெரியாது விழித்தான். மீண்டும் கேட்பதா, இல்லை வெளியே செல்வதா என்று தடுமாறியவனுக்கு இதயத்தின் உள்ளே மிகப் பெரும் வலி எழுந்தது.
அதைச் சற்றுத் தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்த விதற்பரைக்கும் சட்டென்று விழிகள் கலங்கிப் போயின.
ஏனோ அவனை அவமதித்தது தன்னை அவமதித்தது போல விதற்பரைக்குத் தோன்றினாலும், அன்னையை எங்கனம் சமாதானப்படுத்துவாள்? அவனுக்கு ஆதரவாகப் பேசிய மறு கணம், அவருடைய சந்தேகப் பார்வை இவளை நோக்கிப் பாயுமே… நெஞ்சம் தவிக்க, அன்னை எடுத்து வைத்த பொருட்களைக் கரங்களில் ஏடுத்தவாறு, அவனைத் திரும்பிப் பார்த்து, முகத்தைக் கடுமையாக்கி,
“உங்களுக்குச் செய்வதற்கு வேறு வேலையே இல்லையா… போய் முன்னறையில் யாருக்காவது ஏதாவது தேவைப்படும் போய்ச் செய்யுங்கள்…” என்று எரிந்து விழுந்துவிட்டுக் கனத்த இதயத்தை அவனுக்குக் காட்டப் பிடிக்காமல் வெளியே செல்ல, அவ்வியக்தனுக்கோ அவள் திட்டியது கூட உறைக்கவேயில்லை. மாறாகப் புஷ்பாவிடம் பேசவேண்டும் என்று எதுவோ அவனை உந்தித் தள்ள, தயக்கத்தோடு அவரைப் பார்த்தான்.
ஏனோ தெரியவில்லை புஷ்பாவைக் கண்டதிலிருந்து அவனுக்குள் இனம் புரியாத ஒரு பாசம். மிஸஸ் ஜான்சியைப் பார்ப்பது போல இருப்பதால் இருக்கலாம். இல்லை அவர் விதற்பரையின் அன்னை என்கிற ஒரு காரணமாக இருக்கலாம். அதுவுமில்லை என்றால், தன் பிள்ளைகளை அவர் வளர்த்த முறையாகக் கூட இருக்கலாம். அல்லது இப்படி ஒரு தாய் தனக்குக் கிடைத்திருக்கலாமோ என்கிற ஏக்கமாக இருக்கலாம். அதுவுமில்லையென்றால், தன் குழந்தைகளிடம் அவர் காட்டும் அதே பாசம் தனக்கும் கிடைக்கவேண்டும் என்கிற ஆவலாகக் கூட இருக்கலாம்.
ஆனால் அவனைக் கண்டதும் ஒதுங்கிப்போகும் அவரிடம் எப்படி நெருங்குவது என்றுதான் அவனுக்குப் புரியவில்லை. ஏனோ விதற்பரையைச் சார்ந்தவர்கள், அவளைச் சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் தனக்குரியவர்கள் என்கிற ஒரு உணர்வு அவனை ஆட்டிப் படைத்தது. அதன் விளைவு சமர்த்தியின் உறவினர்கள் ஏதாவது வேலை செய்தால், இவனாக அவர்களுக்கு உதவச் சென்றான். ஆனால் அவர்கள்தான் இவன் உதவியை ஏற்கத் தயாராக இல்லையே.
இதோ இப்போதும், புஷ்பாவிற்கு உதவத்தான் நினைக்கிறான். அவர்தான் வேண்டாம் என்று முகத்தைத் திருப்புகிறாரே… இன்னும் ஒரு வாட்டி கேட்பதா மறுப்பதா என்று தயங்கி நின்றவனுக்கு எப்படிப் புஷ்பாவை நெருங்குவது என்றும் தெரியவில்லை. அவர் எதற்காகத் தன்னைக் கண்டதும் ஒதுங்கிப் போகிறார் என்றும் தெரியவில்லை. அவனுக்குத் தெரிந்து எந்தத் தப்பும் செய்ததில்லையே.
தயக்கத்தோடு வெளியே வர, அவனுடைய வழியை மறைத்து நின்றிருந்தார் ரதி. தன் தாய் குறுக்கே நின்றதும், புருவங்கள் சுருங்க அவரைப் பார்த்தவன்,
“ஹாய் மாம்…” என்றுவிட்டு நடக்கத் தொடங்க, அவனுடைய கரத்தைப் பற்றித் தடுத்தார் இவனோ ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்க்க,
“நீ விதற்பரையை விரும்புகிறாயா?” என்றார் கனிவாக. இது எப்படி இவருக்குத் தெரியும்? என்று வியந்தவனாக அவரை ஏறிட்டவன், பின்,
“இது உங்களுக்குத் தேவையில்லாதது…” என்றுவிட்டு விலகியவனை வலியோடு பார்த்த ரதி,
“அவ்வி நான் உனக்கு உதவ முயல்கிறேன்…” என்றவரிடம் ஆவேசத்துடன் திரும்பியவன்,
“வேண்டாம்… உங்கள் உதவி எனக்குத் தேவையே கிடையாது… வேண்டிய நேரத்தில் உங்கள் உதவி எங்களுக்குக் கிடைக்கவில்லை மாம்… இப்போது எங்களால் இயங்க முடியும் என்கிற நேரத்தில் உங்கள் உதவி எதற்கு…” என்று ஆத்திரத்துடன் கூறியவன், பழைய கசப்பான நினைவில் முகம் கறுக்க அங்கே நின்றால் வேறு எதையாவது கூறி அவர் மனதைக் காயப்படுத்திவிடுவோமோ என்று அஞ்சியவன் போல வெளியேற, முதன் முறையாக ரதி விழிகளில் கண்ணீர் தேங்கி இருக்கத் தன் மகனின் முதுகை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.
இதற்குள் களைத்துப்போன சமர்த்தியை உத்தியுக்தன் உள்ளே அழைத்துச் சென்றுவிட்டிருக்க, வந்திருந்த விருந்தாளர்களுடன் பேசி அனுப்பிவைக்கும் பொறுப்பைப் புஷ்பா எடுத்துக் கொண்டார்.
வந்திருந்தவர்கள் சமர்த்தி உள்ளே சென்றுவிட்டாள் என்று குறை நினைக்கக் கூடாதே என்று புஷ்பா பார்த்துப் பார்த்துச் செய்ய, நிறைவாக விருந்து உண்டுவிட்டு அனைவரும் விடைபெறத் தொடங்கினர். அனைவரையும் அனுப்பிவைத்தபின் எல்லோருக்குமே பெரிய மலையைப் புரட்டிப்போட்ட உணர்வுதான்.
இறுதியாக நின்றிருந்தவர்களையும் இன்முகத்துடன் அனுப்பிவிட்டு அக்காடா என்று ஒரு இருக்கையில் புஷ்பா அமர்ந்துகொள்ள. அவரை நெருங்கினார் ரதி.
ரதியைக் கண்டதும், புன்னகையுடன் எழுந்த புஷ்பா,
“ஏதாவது வேண்டுமா?” என்றார் கனிவாய். உடனே புஷ்பாவின் கரத்தைப் பற்றிக்கொண்டார் ரதி. ஏதேதோ சொல்ல ஆசைப்பட்டவர் போலத் தன் வாயைத் திறப்பதும், பின் மூடுவதும், பின் விழிகள் கலங்குவதுமாக இருந்தவர், பின் எதையோ மென்று கூட்டி விழுங்கிவிட்டு,
“உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. நீங்கள் இல்லையென்றால், நிச்சயமாக இந்த விழா நிறைவாக நடந்திருக்க வாய்ப்பில்லை..” என்று மெய்யான அன்போடு கூற, மெல்லியதாக வெட்கப்பட்ட புஷ்பா,
“இதற்கெல்லாம் எதற்கு நன்றி… இது எனக்கும் மகிழ்ச்சிதான்…” என்று தன்மையாகவே அவர் நன்றியைப் பெற்றுக் கொள்ள, புன்னகையுடன் தலையசைத்துவிட்டுக் கரங்களை விடுவித்தவர், சற்றுத் தள்ளி நின்றிருந்த தன் இளைய மகனை முகம் மலரப் பார்த்தார்.
கரங்கள் ஏதோ வேலை செய்வது போல இருந்தாலும் புலன் முழுவதும் விதற்பரையிடம் என்பதை உணர்ந்தவராக, மெல்லியதாகச் சிரித்தவர்,
“உங்கள் மகள் இப்போது பல்கலைக் கழகம்தானே படிக்கிறாள்…?” என்று கேட்க, புஷ்பா மலர்ச்சியுடன் ஆம் என்றார்.
“திருமணம் முடித்து வைக்கும் திட்டம் இருக்கிறதா உங்களுக்கு…?” என்ற போது சற்றுத் தள்ளியிருந்த அவ்வியக்தனின் உடலில் மெல்லிய இறுக்கம். புஷ்பாவோ,
“இப்போதுதான் ஒரு சம்பந்தம் பேசி வந்திருக்கிறது. என் உறவினர்கள்தான்… பையனுக்கு விதற்பரையை மிகவும் பிடித்துவிட்டதாம். தவிரப் படிப்புக்கும் தடையில்லை என்றார்கள். எல்லாம் கூடிவந்தால், செய்து வைக்கத்தான் யோசிக்கிறோம்…” என்றதும் ரதியின் முகம் வாடிப்போயிற்று. அத்தனை உரையாடல்களும் ஆங்கிலத்திலிருந்ததால், அவ்வியக்தனுக்கு அட்சரம் பிசகாமல் அத்தனையும் காதில் விழ, அதைக் கேட்டு, அசைவற்று அப்படியே நின்றிருந்தான்.
விதற்பரையின் வாயால் இதைக் கேட்டுத் தவித்தவன்தான். அதையே புஷ்பாவும் உறுதி செய்ய. இவன் உடலுக்குள் எதுவோ பற்றியெரிந்தது. விதற்பரையைக் கவர்ந்து, எங்காவது கண்காணாத தேசம் சென்றுவிடவேண்டும் என்கிற வேகம் பிறந்தது. ஆனால் அப்படிச் செய்தால் அது விதற்பரையின் விருப்புக்கு மாறாகச் செய்ததாகிவிடுமே… அது அவனால் முடியாதே…
பெரும் வலியுடன் திரும்பி விதற்பரையைப் பார்க்க, அவளோ உண்டு முடித்த பாத்திரங்களைச் சமையலறைக்குள் எடுத்துச் சென்று வைத்துவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தாள். எங்காவது அந்த முகத்தில் தவிப்பு, வலி, கலக்கம் என்று தெரிகிறதா என்று பார்த்த அவ்வியக்தனுக்கு, எந்த உணர்ச்சியுமில்லாது வெறுமையாக இருக்க மேலும் நொந்து போனான் அவ்வியக்தன்.
ரதியும் பெரும் ஏமாற்றம் கொண்டவராகத் திரும்பித் தன் மகனைப் பார்க்க, அங்கே அவ்வியக்தனின் கலங்கிய முகத்தைக் கண்டு மேலும் தவித்துப் போனார். இந்த வகையிலும் தன் மகனை நெருங்க முடியாமல் போய்விட்டதே என்கிற ஏமாற்றம் அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
அதே நேரம் அங்கே நின்றால் ஏதாவது பைத்தியக்காரத்தம் செய்துவிடுவோமோ என்று எண்ணிய அவ்வியக்தன், அவசரமாக வெறியேற, அதை தவிப்போடு பார்த்தார் ரதி.
இது எது பற்றியும் தெரியாமல், இறுதியாக ஆளும் பேருமாக எஞ்சிய வேலைகளை முடித்துக்கொண்டு விதற்பரையின் குடும்பம் தம் வீடு நோக்கிச் சென்றது.