Tue. Nov 12th, 2024

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 21

(21)

அன்று நான்கு முப்பதிற்கெல்லாம் விதற்பரை தயாராகிவிட்டாள். உள்ளே எழுந்த கற்பனை அவளை உறங்கவே விடவில்லை.

அவன் சொல்லப் போகும் காதலுக்காகத் தவமிருக்கத் தொடங்கியவள், வேளைக்கே தயாராகிக் காத்திருந்தாள். .

சரியாக ஐந்து மணிக்குக் கீழே வருமாறு அவ்வியக்தனிடமிருந்து அழைப்பு வந்தது. உடனே தடித்த ஜக்கட்டும்” முழங்கால்வரை உயர்ந்த பனிக்காலப் பாதணியும் கழுத்துக்கு மஃப்ளர், கைகளுக்கு உறை, தலைக்குக் குல்லாய் என்று முகம் தெரியாத அளவுக்குத் தயாராகி வெளியே வந்தாள்.

இன்னும் இருட்டு இறக்கவில்லை. ஆனாலும் இருட்டுக்கும் பனிக்கும் இடையில் நடந்த யுத்தத்தில் பகல்போலக் காட்சிகொடுத்தது அன்றைய காலை. அந்தப் பகல் பொழுதை ரசித்தவாறு வழுக்கிவிடாமல் நடக்கத் தொடங்கியவளைக் கண்டு அங்கே நின்றிருந்த ஹமர் ஹெச்3 யின் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான் அவ்வியக்தன்.

எப்போதும் போல அவளைக் கண்டதும் அடிவயிற்றிலிருந்து ஏதோ ஒரு வித உணர்வுகள் உருளையாகப் பிறந்து நெஞ்சாங் கூட்டில் நின்று தீயைப் பரப்பத் தொடங்கியது. அதை அணைப்பதற்கான வழியும் அவனுக்குப் புரியத்தான் செய்தது. ஆனால்… எப்படி என்றுதான் தெரியவில்லை. மற்றைய பெண்களிடம் ஏனோ தானோ என்று நெருங்குவது போல இவளிடம் நெருங்க முடியவில்லை. ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது. அதற்கான காரணமும் புரியவில்லை.

இதோ இப்போது கூட இந்தக் குளிரிலும் போதையில்லாமல் அவளை அணைத்துக் குளிரை அடக்கிவிடமாட்டோமா என்றுதான் தோன்றுகிறது. அந்தக் கணமே அவளை இழுத்த சென்று தீயாய் தகிக்கும் நெருப்பை அணைத்துக் குளிர் காயமாட்டோமா என்கிற ஏக்கம் எழுந்தது. மொத்தமாய் அவளுக்குள் புதைந்து இரண்டறக் கலந்துவிடுவோமா என்று புத்தி பேரம் பேசுகிறது. அதையும் தாண்டி ஏதோ ஒன்று காத்திருக்கச் சொல்கிறது. காத்திருப்பு. எத்தனை கொடுமையான வார்த்தை??

தகிக்கும் தவிப்புடன் அவளையே வெறிக்க, அந்தத் தேவதையோ, வழுக்கிவிடாதிருக்க மிக மிகக் கவனமாய் அடியெடுத்து வந்துகொண்டிருக்க, அதை, பான்ட் பாக்கட்டிற்குள் கரங்களை விட்டு, வாகனத்தில் சாய்ந்து நின்றவாறு ரசிக்கத் தொடங்கினான் அவ்வியக்தன்.

அவனை இவள் நெருங்கியதும்,

“ஹாய்… ஏஞ்சல் ஹவ் ஆர் யு…” என்றான் ரசனையுடன். இவளோ குதுகலத்தோடு,

“ஐ ஆம் ஹப்பிக் குட்டிமாமா… ஐ ஆம் சோ… ஹப்பி…” என்று குதுகலமாகச் சொன்னவளை நெருங்கியவன், சற்றுச் சரியத் தொடங்கியிருந்த குல்லாயைச் சரியாக்கியவாறு,

“இந்தக் குட்டிமாமாவை விடமாட்டாயா?” கடுப்புடன் கேட்க, நகைத்தவள்,

“ம்கூம்…” என்று தலையை ஆட்டிச் சிரித்தாள்.

அவளுடைய தலையில் மெல்லியதாக ஒரு தட்டுத் தட்டிவிட்டுத் தலையை ஆட்டி,

“சரி வா… போகலாம்…” என்றான். இவளோ ஆர்வத்தோடு,

“இப்போது எங்கே போகப் போகிறோம்?” என்றாள்.

“போனதும் தெரிந்துவிடப் போகிறது. இடையில் இது என்ன கேள்வி…?”

“இல்லை எங்கே போகிறோம் என்று தெரிந்தால்…” என்று அவள் கூற வர, சட்டென்று அவளை நெருங்கித் தன் மாநிறச் சுட்டுவிரலை, குளிரில் சற்று வறண்டுபோன அவளுடைய செழித்த இதழ்களின் மீது வைத்து அழுத்தினான்.

அவனுடைய விரல் பட்டதும், மொத்தமாய்க் குழைந்து போனாள். வெறும் சுட்டுவிரலின் தொடுகைதான். அந்த ஒற்றைத் தொடுகையில் இதயம் குட்டிக் கரணம் போட, தேகம் சிலிர்க்க அதுவரை குளிரெடுத்த உடல், அவ்விரல் கொடுத்த வெம்மையில் தீயாய் தகிக்க, அதைத் தாங்கும் சக்தியற்றவளாக விழிகளைச் சட்டென்று மூடிக்கொண்டாள்.

இவனுக்கும் அவளுடைய உதடுகளிலிருந்து தன் விரலை அத்தனை சுலபத்தில் மீட்டெடுக்க முடிந்திருக்கவில்லை.

அவனையும் மீறி அந்த உதடுகளை வருட எழுந்த விரல்களை அடக்கப் பெரிதும் தடுமாறித்தான் போனான்.

எப்படியோ சுய நினைவுக்கு வந்தவனாகத் தன் விரல்களை விலக்கியவனுக்கு, அந்தச் செழித்த இதழ்களின் வடிவம் அவனைப் போதை கொள்ள செய்தது. அந்தக் கணமே அந்த இதழ்களைப் பற்றி, அங்கே அரசாங்கம் நடத்திவிடவேண்டும் என்கிற வேகம் எழுந்தது. சூழ்நிலை உணர்ந்து தன்னை அடக்கியவனாய், சுட்டு விரலின் புறப் பக்கத்தால், குளிரில் சிவந்து கண்டிப்போன அவளுடைய கன்னத்தை மெதுவாக வருடிக் கொடுத்து,

“என்ன அவசரம்? போனதும் தெரிந்துபோகும்…” என்றுவிட்டு, மறு பக்கம் சென்று கதவைத் திறந்தான்.

“ம்… ஏறு…”

கிட்டத்தட்டத் தரையிலிருந்து மூன்றடி உயரமான ரொக்கர் பனலில் கால் வைத்து ஏற முயல, அவளுடைய உயரத்திற்கு அது பெரும் சிரமமாகவே இருந்தது.

சற்றும் யோசிக்காமல், அவள் துடியிடையில் தன் கரங்களைப் பதித்து அவள் ஏற உதவி செய்தவன், இருக்கையில் அமர்ந்ததும், சரியாக அமர்ந்துவிட்டாளா என்று பார்த்துவிட்டுக் கதவை அடித்துச் சாற்றி, தன் இருக்கையில் ஏறி அமர்ந்தான்.

அவளுடைய உயரத்திற்கு அந்த வாகனம் பெரிய புள்டோசர் போலத் தோன்றியது. அந்த வாகனத்தின் உள்ளமைப்பை ஆர்வத்துடன் பார்த்தவாறு, இருக்கைப் பட்டியை இழுத்து அணிந்துகொண்டு,

“இந்த ஹமர் எதற்கு? எங்கே உங்கள் மற்றைய வாகனம்?” கேள்வி கேட்டவளைப் பார்த்தவாறே வாகனத்தை உசுப்பியவன்,

“நாம் போகும் இடத்திற்கு இதுதான் வசதி தற்பரை…” என்றவாறு வாகனத்தைத் தெருவில் விட்டான்.

சற்று நேரம் அவன் கூடப் பேசியவாறே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தவள், சற்று நேரத்தில், அந்தச் சுகமான பயத்தில் கண் சொக்கத் தன்னையும் மீறி உறக்கத்தின் வசமானாள்.

கிட்டதட்தட்ட இரண்டு மணி நேரப் பயணத்தில் வாகனம் ஒரு குடிலை வந்தடைந்தது.

தஅவ்வியக்தன் வாகனத்தை நிறுத்திவிட்டுத் திரும்பி இவளைப் பார்த்தான். இருக்கையைச் சற்றுப் பின்னால் சரித்து தலைக்கு அணிந்திருந்த குல்லாய் ஒரு பக்கமாக விழுந்திருக்க, கழுத்தில் போட்டிருந்த மஃப்ளர் சற்று அவிழ்ந்திருக்க, ஒரு காலை மடித்து இருக்கையில் வைத்தவாறு நன்கு உறக்கத்திலிருந்தாள்.

அதைக் கண்டதும் மெதுவாக சிரித்தான். மெதுவாக அவளுடைய தோளில் தட்டி,

“தற்பரை… வேக்கப்…’ என்றான் மென்மையாய். அவளோ அவன் தட்டியதைக் கொசு தட்டுவதுபோலக் கரத்தால் விலக்கிவிட்டு மறு பக்கம் திரும்பிப் படுக்க, இப்போது நகைப்பில் இவனுடைய பற்களே வெளியே தெரிந்தன. பின் கதவைத் திறந்து வெளியே குதிக்க முழங்கால் அளவு பனி அவனைத் தாங்கிக் கொண்டது.

கரங்களை மடித்துச் சோம்பலை விலக்கியவன், அவளுடைய பக்கமாக வந்து கதவைத் திறந்தான்.

திடீர் என்று முகத்தில், அடித்த குளிரில் உடலைச் சுருக்கியவாறு விழித்தாள் தற்பரை.

அங்கே, புன்னகையுடன் தன்னை நோக்கிக் குனிந்திருந்த அவ்வியக்தனின் முகத்தைக் கண்டு தூக்கம் தொலைந்து பளிச்சென்று சிரித்தவள்,

“வந்துவிட்டோமா?” என்றாள் எழுந்த கொட்டாவியை அடக்க முயன்றவாறு.

“ஆமாம்… வந்துவிட்டோம்… இறங்கு…” என்றதும், இருக்கைப் பட்டியை அவிழ்த்துவிட்டுத் தொப்பென்று இறங்கிய விதற்பரைக்கு, அங்கே விரிந்த அந்தப் புதிய உலகத்தைக் கண்டு வியந்தே போனாள்.

அம்மாடி… வெண்மை… வெண்மை… வெண்மை… எங்குப் பார்த்தாலும் வெண்மையின் ஆட்சி. அப்பப்பா எத்தனை அழகு.

சற்றுத் தொலைவில் மாசற்றத் தூய வெண் கம்பளத்தைக் குளிருக்கு இதமாய்த் தன் மேனியில் போட்டு உறங்கிக்கொண்டிருந்தாள் மலைமகள். வெளிநாடென்றால் ஆடை குறைப்பு முக்கியமோ? ஆங்காங்கே ஆடைகளைத் துறந்துவிட்டு நிர்வாணமாக நின்றிருந்தன மரங்கள். அதைக் கண்டு நாணம் கொண்டு தலை கவிழ்ந்திருந்தன ஊசியிலை மரங்கள். அடடே, இப்படி ஆடையில்லாமல் புவியின் மாணத்தை வாங்குகின்றனவே என்று சங்கடப்பட்டோ, இல்லை குளிரில் நடுங்கித் தொலைக்கின்றனவே என்று பரிதாபப்பட்டோ, வான்மகள் தன்னுடைய பனித்துகிலைக் கடனாய் கொடுத்து நிர்வாண மர மங்கைகளை மூடிவிட முயன்றது. ஆனால் பாழாய்ப் போன காமம் கொண்ட காற்று, நிர்வாண மரங்களை மறைக்க முயலும் வான்மகளைத் திட்டியவாறு காற்றைச் சற்றுப் பலமாக வீசி அவற்றின் மேல் போர்த்த முயன்ற வெண்துகல்களை விலக்கிக்கொண்டிருக்க, அதுவரை குளிரில் மேகத்திற்கு மத்தியில் சுகமாய் உறங்கிக்கொண்டிருந்த பகலவன் கொஞ்சம் விழிகளைத் திறந்து, பனி மூட்டத்திற்கு மத்தியில் கிடைத்த இடைவெளிக்கு ஊடாக எட்டிப் பார்த்துப் புவியில் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்தது.

அது வரை குளிரில் எழப் பிடிக்காது உறங்கிக்கொண்டிருந்த மரங்கள், பகலவனைக் கண்டதும், விழித்தெழுந்து சிலிர்த்தவையாய், தம்மீது போர்த்தியிருந்த மிச்சச் சொச்ச ஆடைகளையும் உதறிவிட்டு, எவ்விதக் கிலேசமும் இன்றிப் பகலவனின் அரவணைப்புக்காய் காத்திருக்க, விழித்தவனோ, ஒரு விநாடி நிர்வாண மரங்களைப் பார்த்துவிட்டுப் பின் சலிப்புக் கொண்டதாய், அத்திக்கில் தன் கரங்களைப் பரப்பாது, இத்திக்கில் எட்டிப் பார்த்தது.

அங்கே நாணிக் குனிந்திருந்த ஊசியிலை மரங்களைக் கண்டதும் சுவாரசியம் எழ, முழுதாய் விழித்து அவற்றை அளவிடத் தொடங்கினான். அட, எத்தனை வம்பன் இந்தப் பகலவன். மூடி மறைத்திருக்கும் மரங்களைக் கண்டால் போதாதா? கரங்கள் கொண்டு தீண்டவும் வேண்டுமா… எத்தனை பொல்லாத பகலவன்… இலைகொண்டு மறைத்திருந்த அந்த மரங்களின் மேனி எப்படியிருக்கும் என்கிற கற்பனையில், அதை அறிந்துவிடும் ஆசையில் தன் கரங்களால் அவற்றை விலக்கிப் பார்க்க முயன்றது.

பகலவனின் கரம் பட்டதும், நானம் கொண்ட கன்னிப் பெண்களாய், வெண்ணிற மாராப்பைக் கைநழுவ விட்டுவிட்டு முகத்தை மூடிக் கொண்டன ஊசியிலை மரங்கள். மனதிற்கு இனியவன் கரம் பட்டாலே உலகம் மறந்து போகுமோ?

தன்னை மறந்து தன்னிலை மறந்து அந்த அழகில் விதற்பரை இலயித்திருக்க, இவனோ சற்றுத் தள்ளி நின்றவாறே அவளுடைய இரசனையைக் கண்டு மயங்கிக் கிடந்தான். சற்றுப் பொறுத்து என்ன நினைத்தானோ, உதடுகளில் குறும்புப் புன்னகை தவழ, அப்படியே குனிந்து வெண் பனியில் ஒரு பிடி அள்ளிக்கொண்டே இவள் பக்கமா வந்தவன், அவள் சுதாரிப்பதற்கு முன்பாகவே, பின் சட்டையை இழுத்து அதற்குள் பனியைப் போட, அதுவரை இயற்கை அழகில் மதிகெட்டிருந்தவள், திடீர் குளிரில் துடித்துப் பதைத்து, “ஆ…” என்கிற அலறலுடன் துள்ளிக் குதித்தவாறு தன் மேற்சட்டையை உதறியவாறு நிமிர்ந்து பார்க்க, அங்கே மாயக் கண்ணனின் குறும்புடன் நின்றிருந்தான் அவ்வியக்தன். அதைக் கண்டதும் ஆத்திரம் கொண்டவளாக,

“யு… குட்டிமாமா…” என்றவள், சட்டெனக் குனிந்து இரு கை முழுவதும் பனியை அள்ளி அவனை நோக்கி வீச, அவனோ இலாவகமாக அதிலிருந்து விலகி,

“ட்ரை எகைய்ன்…” என்றான் நகைப்புடன்.

இவளோ மேலும் அள்ளியவாறு அவனைத் துரத்த,

“உந்நாள் எந்நை தொத்த… முடியாது…” என்றவாறு அவளை விட்டு இரண்டடி பின்னால் வைத்தான்.

“நான் என்ன கொரோனாவா உங்களைத் தொத்த…” என்று கேலி செய்தவள், மேலும் அவனை நோக்கி ஓடப் பனியில் புதைந்த கால்கள் சிக்கிக் கொள்ள, அப்படியே குப்புற விழுந்தாள் விதற்ரை. அதைக் கண்டு பலமாக நகைத்த அவ்வியக்தன், உடனே அவளை நெருங்கி வந்தான்.

குப்புற விழுந்தவள், இப்போது திரும்பி மல்லாக்காகப் படுக்க அவளுடைய முகம் முழுவதும் பனி அப்பிக் கிடந்தது.

அதைக் கண்டதும் இன்னும் பலமாகச் சிரித்துவிட்டான் அவ்வியக்தன்.

தன் உதடுகளில் அடைந்திருந்த பனியை ஊதி வெளித் தள்ளியவள், மின்னல் விரைவுடன் எழுந்து அவனுடைய காலைத் தட்டிவிட, அவனும் பிடிமானமில்லாமல் பின்னால் தொப்பென்று விழ, இப்போது அவள் வாய்விட்டுச் சிரித்தாள்.

அவளுடைய சிரிப்பைக் கண்டதும் இவனும் பலமாகச் சிரித்தான்.

அவன் வாழ்வில் இப்படிச் சிரித்து அவனுக்குத் தெரியாதே. முதன் முறையாகப் பழைய அவ்வியக்தனாக மாறியவனாக, மேலும் பனியை அள்ளி அவள் மீது வீச, பதிலுக்கு அவளும் அள்ளி வீசினாள். ஆரம்பத்தில் கோபமாகத் தொடங்கிய விளையாட்டு பின் குதுகலமாக மாறிப்போக, சற்று நேரும் ஒருத்தரை ஒருத்தர் இழுப்பதும் தள்ளி விழுத்துவதும், பின், பனியை அள்ளித் தெறிப்பதுமாகச் சிறு குழந்தைகள் போலக் கும்மாளமிட்டு விளையாடினார்கள்.

கூடவே மல்லாக்காக அருகருகே படுத்தவாறு கால்களையும் கைகளையும் மேலும் கீழும் அசைத்துப் பனிப் பறவை வரைந்தனர். பின் ஒருவர் ஒருவருக்கு உதவி செய்யப் பனி மனிதன் செய்து குதுகலித்தனர். அங்கே அவ்வியக்தன் ஆறு வயது சிறுவனாக மாறிப்போக, விதற்பரையோ அவனுக்கு இணையான தோழியாக மாறிப்போனாள்.

சற்று நேரம் விளையாடிய பின், நெளிந்தவள், அவ்வியக்தனைப் பார்த்து,

“வோஷ் ரூம்…” என்றாள்.

“கம் வித் மீ…” என்றவன், முன்புறமிருந்த குடிலை நோக்கி நடந்தான்.

அந்தக் குடிலைக் கண்டதும் வியந்தவளாக,

“வாவ்… இது உங்களுடையதா?” என்றாள் ஆர்வத்துடன்.

“இல்லை… இன்றைய நாள் தங்குவதற்குத் தேவைப்படுமே என்று வாடகைக்கு எடுத்தேன்…” என்றதும், எந்தச் சந்தேகமும் இல்லாமல் உள்ளே நுழைந்தவள், தன் தேவையைப் பூர்த்திச் செய்துவிட்டு வெளியே வந்தபோது, அவளுக்குக் காலை ஆகாரத்தோடு சுடச் சுடக் காப்பித் தயாரித்திருந்தான் அவ்வியக்தன். இருவரும் ஏதேதோ பேசியவாறு காப்பியையும் குடித்துவிட்டு, அங்கிருந்த பிரட்டில் வெண்ணெய் மற்றும் ஜாம் பூசி உண்டு முடித்துப் பாத்திரத்தைக் கழுவி வைத்துவிட்டுத் திரும்ப,

“ஆர் யு ரெடி? ஷால் வி கோ…?” என்றவாறு வந்தான் அவ்வியக்தன்.

“இப்போது எங்கே போகப்போகிறோம்?” என்று ஆவலாகக் கேட்க, புன்னகையுடன் அவளைக் கண்டிப்பாகப் பார்த்தவன்,

“இன்று முழுவதும் நான் எங்கு அழைத்தாலும் நீ வரவேண்டும். கேள்வி கேட்கக் கூடாது… ஆனால் நிச்சயமாக நீ ரசிப்பாய்… அது உறுதி…” என்றான்.

அடுத்து அவளை அழைத்து சென்ற இடம், ஆர்வலர்கள் பனிச் சறுக்கலில் ஈடுபடும் இடம். அதைக் கண்டு விழிகள் விரித்தவள்,

“ஸ்கேட்டிங்…” என்று தன்னை மறந்து குதுகலிக்க. அந்தக் குதுகலத்தை ரசித்தவாறு அவளையும் அழைத்துக்கொண்டு பனிச்சறுக்கலுக்கு வேண்டிய உபகரணங்களை வாடகைக்குப் பெற்றுக்கொண்டு அவளுடைய வலது கரத்தைப் பற்றியவாறு நடத்திச் செல்ல, விதற்பரைக்கு உலகமே மறந்து போனது.

எத்தனை நாள் ஆசை அது… அன்று ஒரு முறை சொன்னதை நினைவில் வைத்துக் கொண்டு நிறைவேற்றுகிறானே. இத்தனை அன்பு யாருக்கு இருக்கும். உள்ளம் கனிந்து உருகிப் போயிற்று அவளுக்கு.

அவ்வியக்தனோ அவளுடைய கரத்தைப் பற்றியவாறு, பனிச்சறுக்கல் ஆரம்பிக்கும் குன்றின் கீழே நின்றவாறு ஸ்கீயிங் மின்தூக்கியின் வரவுக்காகக் காத்திருக்க, இரண்டு நிமிடங்களில் இவர்களை ஏற்றிச் செல்லும் மின் தூக்கி வந்திருந்தது.

முதலில் அவள் கரங்களைப் பற்றி ஏற்றிவிட்டவன், தொடர்ந்து தானும் ஏறிக் கதவை மூட, அந்த மின்தூக்கி, எந்த அவசரமில்லாது மெதுவாகவே குன்றின் உச்சியை நோக்கி நகரத் தொடங்கியது.

மெல்ல மெல்ல அந்த மின்தூக்கி மேலே ஏற ஏற இவர்களுக்கும் பூமிக்குமான தூரம் அதிகரித்துச் செல்ல ஒரு கட்டத்தில் இருவருக்குமான தூரம் முப்பது அடியையும் தாண்டத்தொடங்கத் தன்னையும் மறந்து அவ்வியக்தனின் கரத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள் விதற்பரை. ஆனாலும் கீழே ஆர்வமாகப் பார்ப்பதை மட்டும் நிறுத்தவில்லை.

மின்தூக்கி குன்றின் முகப்பை அடைந்ததும் இருவரும் வெளியே வந்து சறுக்கும் பகுதியை வந்து சேர்ந்தனர்.

அன்று பனிப்பொழிவு இருந்ததாலோ என்னவோ பெரிதாகக் கூட்டம் இருக்கவில்லை. முதலில் தன் கரங்களிலிருந்த பொருட்களைத் தரையில் போட்டுவிட்டு விதற்பரையைப் பார்த்தவன், வழுக்கும் சாதனத்தை எப்படி அணிவது என்று அவளுக்குக் கூறியவாறு தன்னதைப் போட, விதற்பரை அவன் சொல்லிக் கொடுத்ததுபோலவே அணிந்து கொண்டு முகத்தை மறைக்கும் கண்ணாடி, தலையணி என்று அணிந்தவாறு நிமிர்ந்து நின்றாள்.

ஆர்வமோ எல்லையைக் கடக்க ஆயத்தமாகியிருந்தது. இப்போதே விட்டாலும் வழுக்கிச் சென்றிருப்பாள். அடுத்து என்ன என்பது போலப் பரபரப்புடன் அவனைப் பார்க்க, அவ்வியக்தன் கம்பங்களை எப்படி ஊன்றுவது எப்படி உந்துவது என்று சொல்லிக் கொடுக்கத் தொடங்கினான். முயன்று பார்த்தவள் இரண்டடி செல்வதற்குள் தரையில் விழுந்திருந்தாள். விழுந்தவள் எப்படி எழுவது என்று தெரியாமல் திணறப் புன்னகையுடன் வந்தவன், அவளைப் பற்றித் தூக்கி எழுப்பி விட்டு மீண்டும் எப்படிச் சறுக்குவது என்று சொல்லிக் கொடுத்துவிட்டு,

“முயற்சி செய்துகொண்டிரு, ஒரு சுற்றை முடித்துக் கொண்டு வருகிறேன்” என்றவன், தன் கம்பங்களை ஊன்றி உந்தி முன்னேறியவன், மறு கணம் கண்ணிமைக்கும் நொடியில் மறைந்து போனான்.

இப்போதுதானே கம்பங்களைத் தரையில் ஊன்றினான். அதற்கிடையில் எங்கே போனான்? வியந்தவளாய், அவன் சொல்லிக் கொடுத்தது போல ஐந்து முறை முயற்சி செய்து முடிப்பதற்குள் அவ்வியக்தன் மின்தூக்கியிலிருந்து வெளியே வந்தான்.

வந்தவன் ஏமாற்றத்துடன் தரையில் கிடந்தவளைப் பார்த்து நகைத்து

“கம்… நான் அழைத்துச் செல்கிறேன் என்று அவளை எழ வைத்து, அவளைத் தனக்கு முன்பாக நிறுத்தியவன், ஒற்றைக் கம்பத்தை அவளிடமே கொடுத்துவிட்டு, வெற்றுக் கரத்தை அவளுடைய வயிற்றிட்கூடாகத் எடுத்துச் சென்று தன்னோடு இறுக்கினான்.

அடுத்து, தன்னுடைய கம்பத்தை ஊன்றி முன்னேறியவன், அவளை இறுக்கமாகத் தன்னோடு பிடித்தவாறு, வழுக்கத் தொங்கியதும் கம்பத்தைக் கையிடுக்கில் வைத்தவாறு வேகமாக முன்னேற, அவனோடு சேர்த்து இவளும் இழுபட்டுச் சென்றாள்.

அவன் இழுத்துச் சென்ற வேகத்தைக் கண்டு முதலில் அஞ்சி, குதுகலித்து, முகத்தைக் கிழித்துச் செல்லும் குளிரை ரசித்தவாறு, அவ்வியக்தனின் சூட்டில் தொலைந்தவளாய், வாய் விட்டு அலற, அடுத்தப் பத்தாவது நிமிடத்தில் சமதரையில் பத்திரமாகக் கொண்டுவந்து சேர்த்திருந்தான் அவ்வியக்தன்.

அந்தக் குன்றிலிருந்து எந்தச் சேதாரமும் இன்றி வழுக்கி வந்ததை அவளால் நம்பவே முடியவில்லை. எத்தனை சுலபமாக, லாவகமாக, அவளையும் இழுத்து அணைத்தவாறு வேகக் கட்டுப்பாடின்றி, கொண்டு வந்து சேர்த்தான்.

“அன் பிலீவபிள்..” என்றவளுக்குச் சுலபத்தில் இதயத்தின் படபடப்பு அடங்கவில்லை.

“திரும்ப முயலப் போகிறாயா?”

“பின்னே… ஆமாம்… ஆமாம்… ஆமாம்…” என்றாள் துள்ளலாக.

மீண்டும் மேலே வந்தவர்கள், அவ்வியக்தன் சொல்லிக் கொடுக்க ஓரளவு கற்றுக்கொண்டவளாகப் பல முறை விழுந்து எழுந்தாலும் எப்படியோ கீழே வந்து சேர்ந்தாள்.

அதன் பின் சுவாரசியம் பற்றிக் கொள்ள, மீண்டும் பல முறை முயன்று வெற்றியும் கண்டு குதுகலத்துடன்.

“ஐ டிட் இட்… ஐ டிட் இட்…” என்று குதுகலித்தவளுக்குப் பெருமை பிடிபடவில்லை. இதை வசந்தன் அறிந்தால் பொறாமையில் வெந்து போவான். ஐயோ இதைப் பார்க்க அவனில்லையே… நினைத்து மறுகியவள் மீண்டும் மீண்டும் சறுக்கினாள்.

மனித உந்தும் சக்தியால் சீறியவாறு முன்னேறுவது எதையோ சாதித்த உணர்வைக் கொடுக்க ஆனந்தமாக விளையாடினாள்.

ஐந்தாறு முறை வழுக்கியவள், பின் களைப்புடன் ஓரமாக அமர்ந்துவிட்டாள்.

“சரி வா… இனி கிளம்பலாம் என்று அவளை அழைத்துக் கொண்டு வாடகைக்கு எடுத்த பொருட்களை மீண்டும் ஒப்படைக்கச் சென்றான்.

அருகிலேயே ஒரு இடத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டு மீண்டும் புறப்பட்டனர். அடுத்த அரை மணி நேரத்தில் வாகனம் பூங்கா போன்ற ஒன்றிக்குள் நுழைந்தது.

வாகனத்தைத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு இருவரும் இறங்கியபோது, கொஞ்ச நேரம் விட்டிருந்த பனி மீண்டும் பொழியத் தொடங்கியிருந்தது.

விதற்பரை, தன் இருக்கையிலிருந்து கீழே குதிப்பதற்குள்ளாக, அவளை நெருங்கியவன், இப்போதும் தாராளமாக அவள் இடையில் கரத்தைப் பதித்து இறக்கிவிட்டுக் கதவைச் சாற்றியவன், அவள் பக்கம் திரும்பி, கழுத்திலிருந்து அவிழ்ந்திருந்த கம்பளித் துண்டைக் கழுத்திற்குக் குளிர் வராத வகையில் இறுகக் கட்டிவிட்டு, சற்று மேலேறியிருந்த குல்லாயைச் சரியாகப் போட்டுவிட்டு,

“வா…” என்றவாறு முன்னே நடக்க, பாய்ந்து அவன் கரங்களைப் பற்றியவள், அதைத் தன்னோடு அணைத்தவாறே பனிப்பொழிவை ரசித்துக்கொண்டு நடக்கத் தொடங்கினாள்.

சற்றுத் தூரம் சென்றதும், அந்தப் பூங்காவிற்குள் நிறையக் கூட்டம் இருப்பதைக் கண்டு வியந்தவள், அப்போதுதான் கவனித்தாள் அங்கும் இங்கும் தொங்கிக்கொண்டிருந்த அறிக்கையை. அன்று வின்டர்லூட் ஃபெஸ்டிவல். அதைக் கண்டதும் முகம் மலர,

“மை காட்… வின்டர்லூட் ஃபெஸ்டிவல்…” என்று தன்னை மறந்து வாய் பிளந்தவள், நம்ப முடியா ஆச்சரியத்துடன் விழிகள் விரிய, திரும்பி தன்னருக்கே வந்துகொண்டிருந்தவனை ஏறிட்டு, நிஜமாகவே இங்கே என்னை அழைத்து வந்திருக்கிறீர்களா?” என்றவள் தன் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாதவளாக அவனை இறுக அணைத்துக்கொண்டே துள்ளியவள், பின் அவனை விட்டு முன்னே ஓடத் தொடங்கினாள்.

அதைத் தன் பான்ட் பாக்கட்டிற்குள் கரங்களை விட்டு ரசித்தவாறு,

“ஹே பார்த்து…” என்கிற எச்சரிக்கையுடன் அவளைப் பின் தொடர்ந்தான்.

What’s your Reaction?
+1
23
+1
6
+1
2
+1
4
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!