Thu. Nov 14th, 2024

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 14

(14)

அன்று என்னவோ அவ்வியக்தனின் மனம் ஒரு நிலையில் இருக்கவில்லை. அதுவும் விதற்பரை அனுப்பிய செல்ஃபியை பார்த்த பின் எதுவோ திகுதிகு என்று எரிந்து கொண்டிருந்தது. கொள்ளை அழகாக இருந்து தொலைக்கிறாளே. ஆண்களின் பார்வை எத்தகையதாக இருக்கும் என்று அவனுக்குத் தெரியாதா என்ன? யார் யார் எப்படியெல்லாம் அவளைப் பார்த்துத் தொலைக்கிறார்களோ.

மீண்டும் மீண்டும் அந்த அழகுப் பதுமையின் உருவம்தான் அவனைத் துரத்திக் கொண்டே இருந்தது. ஏனோ அந்த முக்கிய இராப்போசன விருந்தில் அவனால் இம்மியும் கவனம் செலுத்த முடியவில்லை.

அது முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்ட விழா என்பதால் அவனால் அந்த விழாவை விட்டு விலகவும் முடியவில்லை. அதுவும் புதிதாகக் கனடாவில் தொழில் துவங்க இருக்கும் இந்த நேரத்தில் முகத்தை முறிப்பது போல வெளியேறுவது அத்தனை சாத்தியமல்ல. அதே வேளை அந்த விருந்தில் முழு மனதாகவும் கலந்து கொள்ள முடியாமல் இரு தோணியில் கால் வைத்தவன் கதையாகத் திக்குமுக்காடிப் போனான்.

ஏன் எதற்கான காரணத்தை அவன் தேடவும் வேண்டியதில்லை. விதற்பரை பல்கலைக் கழக விழாவிற்கு அவள் நண்பர்களோடு போகிறேன் என்று சொன்ன அந்த விநாடி மனதில் ஏற்பட்ட சஞ்சலம்தான் இந்த நொடிவரைக் குறைந்த பாடில்லை.

ஏதோ உந்த அவளுடைய கைப்பேசிக்குப் பல முறை அழைத்துப் பார்த்தான். அவள் எடுக்கவில்லை என்றதும் நெஞ்சைப் பிசைந்தது. ஏன் எடுக்கவில்லை…? விழா நடப்பதால் கைப்பேசியை அணைத்து வைத்திருக்கலாம்… இல்லையென்றால் அலறும் இசைக்குள் இவன் அழைப்பது கேட்காமல் இருக்கலாம். ஒருவாறு தன்னைச் சமாதானப் படுத்தியவனாக கைப்பேசியை அணைத்துக் கோட் பாக்கட்டிற்குள் போட்டுவிட்டு, அவனை நோக்கி வந்த ஒரு சிலரோடு பேச முயன்றான்.

புத்தியோ வேறு எங்கோ நிலைத்திருந்தது.

பல்கலைக் கழகத்தில் என்ன நடக்கும், என்ன செய்வார்கள் என்பது தெரியாதவனா அவன். அதற்குள் இறங்கிச் சுழியோடி விட்டு வெளியே வந்தவனாயிற்றே.

ஒரு வேளை விதற்பரை இத்தகைய விழாக்களுக்குச் சென்று ஓரளவு அனுபவம் உள்ளவள் என்றால், அது அவனை அந்தளவு பாதிக்காதோ என்னவோ. ஆனால் அத்தகைய விழாக்களைப் பற்றிய அரிவரிகூடத் தெரியாதவள் எப்படிச் சமாளிப்பாள். நினைக்க நினைக்க ஏதோ முள்ளில் நிற்பது போன்ற உணர்வில் தவித்துத்தான் போனான் அந்த ஆண்மகன்.

உடனே அவளிடம் சென்று பாதுகாப்பாக அழைத்து வந்துவிடவேண்டும் என்று ஏதோ ஒன்று அவனை நச்சரித்துக் கொண்டிருக்க, எப்படியோ எட்டு மணி வரை தாக்குப் பிடித்தவனுக்கு அதற்கு மேல் முடிந்திருக்கவில்லை. நிர்வாகியிடம் ஒரு அவசர அழைப்பாகப் போகிறேன் என்று சொல்லிவிட்டுத் தன் வாகனத்தை நெருங்கியவன், அது வரை இறுக்கிப் பிடிப்பது போலத் தோன்றிய கோட்டையும், டையையும் கழற்றிப் பின்னிருக்கையில் எறிந்துவிட்டு வாகனத்தை உயிர்ப்பித்து அதன் வேகத்தைக் கூட்டி, விழா நடக்கும் இடத்தை அண்மித்த போது அரை மணி நேரத்தை விழுங்கியிருந்தது காலம்.

வாகனத்தைத் தரிப்பிடத்தில் விட்டுவிட்டு நிமிர்ந்த போது முழுவியலமே தள்ளாட்டத்துடன் வந்த பெண்களும் அவர்களை அணைத்தவாறு வந்த ஆண்களும்தான். அதைக் கண்டதும் இவனுடைய வயிற்றில் புளியைக் கரைத்தது.

இதொன்றும் புதிய காட்சிகள் அல்ல அவனுக்கு. ஆனாலும் அந்த இடத்தில் விதற்பரையைப் பொருத்திப் பார்த்தவனுக்கு நெஞ்சம் காந்தியது. நிச்சயமாக இத்தகைய சூழ் நிலைக்குப் பொருந்தாதவள் அவள்.

வாகனத்தை விட்டு இறங்கிச் சுற்றும் முற்றும் அவளைத் தேடியவாறு விழா நடந்த இடத்திற்குள் நுழையவும், விதற்பரை தள்ளாட்டத்தோடு கூட்டத்தோடு கூட்டமாய் வெளியே வரவும் நேரம் சரியாக இருந்தது.

உள்ளே நுழைந்த அவ்வியக்தன் விதற்பரை எங்காவது தென்படுகிறாளா என்று தேடினான். அவன் மிக உயரமானவன் என்பதால், சுலபமாக அவளைத் தேடிக் கண்டு பிடித்து விடலாம்தான். ஆனால் ஆளாளுக்கு அவனுடைய நடையைத் தடை செய்வது போல முட்டி மோதிச் சென்றதால் அவனால் வேகமாக நடக்க முடியவில்லை. கூடவே இருட்டு இடத்தில் வர்ண விளக்குகள் மின்னும் இடத்தில் அவளைச் சுட்டிக்காட்டிக் கண்டுபிடிப்பது அத்தனை சுலபமல்லவே.

எக்கி எட்டிப் பார்த்தவாறு முன்னேறத் தொடங்க, இங்கே வெளியே வந்திருந்த விதற்பரை, அவ்வியக்தனை அழைக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தாள்.

அந்தக் கூட்டத்திற்குள் அவளைக் கண்டு பிடிக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டவனாக, உயரமான இடத்தில் நின்றிருந்த டிஜேயை நோக்கிப் பாய்ந்து ஏறியவன், கீழே விதற்பரை எங்காவது தெரிகிறாளா என்று பார்த்தான். இல்லை.

இங்கே இவன் பதட்டத்தோடு தேட, அவளோ அங்கே நால்வரிடம் சிக்கித் திணறிக்கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்தில் போராட முடியாமல், மயங்கி விழுந்தவளைத் தாங்கிக்கொண்ட கயவர்கள், அவளை இழுத்துக்கொண்டு தங்கள் வாகனத்தை நோக்கிச் சென்ற நேரம் அவள் உள்ளே என்பதைக் கண்டுகொண்டவன் வெளியே வந்தான்.

அவள் எங்கே போயிருப்பாள் என்கிற குழப்பம் எழுந்தது. தன் தலை முடியை அழுந்த வருடிக் கொடுத்து உமிழ் நீர் கூட்டி விழுங்கியவன்,

“எங்கேயிருக்கிறாய்த் தற்பரை…” என்று முனங்கியவாறு திரும்பியவனின் விழிகளில் தட்டுப்பட்டது அந்தக் கைப்பேசி.

விரைந்து சென்று அதை எடுத்துப் பார்த்தான். அதிலிருந்த பூனைக் குட்டி இவனைப் பார்த்துச் சிரித்தது. பார்த்த உடனே தெரிந்தது அது விதற்பரையின் கைப்பேசி என்று. நெஞ்சம் கலங்க, புத்தி மந்தமாக, என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாதவனாகக் கலக்கத்துடன் சுற்று முற்றும் பார்த்தான்.

எங்கே போயிருப்பாள். கைப்பேசி விழும் அளவுக்குத் தெரியாமலா கிளம்பியிருப்பாள். அப்போதுதான் அது அவனுடைய கண்களுக்குப் பட்டது. நால்வராகச் சேர்த்து ஒரு பெண்ணை வண்டிக்குள் தள்ளிக்கொண்டிருந்தார்கள். மூன்றங்குலக் குதிக்கால் செருப்பும் அந்த ஸ்ட்ராபரி ஆடையின் கீழ்ப்புறமும்தான் அவனுக்குத் தெரிந்தது. இந்த நிறத்தில்தானே ஆடை அணிந்திருந்தாள்.

ஏதோ உந்த வேகமாக அந்த வாகனத்தை நோக்கி ஓடினான் அவ்வியக்தன். அதற்கிடையில் வாகனம் கிளம்பிவிட்டிருந்தது. சற்றும் யோசிக்காமல், வாகனத்திற்கு முன்பாகப் போய் நிற்க, அதை எதிர்பார்க்காத வண்டி ஓட்டுநர், தடையைப் பலமாக அழுத்த, அவனுடைய, வண்டியோடு சேர்ந்து சற்றுத் தூரம் இழுபட்டுச் சென்றான்.

இப்படி நல்ல நேரத்தில் தடையாக ஒருவன் வந்தது, அவர்களுக்கு ஆத்திரத்தை வரவழைக்க, அந்த வண்டியோட்டி ஜன்னலுக்கு வெளியாகத் தலையை நீட்டி நடுவிரலைக் காட்டி,

“xxxx xxxxx ” என்று தாறுமாறாகத் திட்ட, இவனோ அவன் திட்டியதைக் காதில் வாங்காமல் பாய்ந்து பின் கதவைப் பலவந்தமாகத் திறந்து பார்த்தான். பழைய வாகனம் என்பதால் சுலபமாகத் திறக்க முடிந்தது.

அங்கே இரண்டு ஆண்களுக்கு மத்தியில் சுயநினைவின்றிச் சரிந்திருந்தாள் விதற்பரை. அதில் ஒருவனின் கரங்கள் அவளுடைய மார்பகங்களில் படிந்திருக்க, இன்னொருவனின் கரங்கள் வெளியே தெரிந்த அவள் தொடையில் அழுத்தமாக பற்றி இருந்தது. மறு கரத்தில் கைப்பேசி. அது ஒளிப்பதிவு செய்யப்படுகிறது என்பதை எடுத்துக் காட்ட, அந்தக் காட்சியைக் கண்டவனுக்குக் காதுகள் அடைத்துக் கொண்டு வந்தன. வியர்த்துக் கொட்டியது. உடல் தள்ளாடியது. காதில் இனம்புரியாத ஓசை அவனைச் செயலிழக்க வைத்தது. இரத்தம் வடிந்து சென்றது போல மேனி பலவீனமானது. கூடவே குமட்டிக்கொண்டு வந்தது. இதோ மடங்கி விழப்போகிறோம் என்பதை உணர்ந்தவனாக, எதையோ சொல்ல வாயெடுத்தான். வார்த்தைகள் வரவில்லை. எல்லாம் மங்கிக்கொண்டு வந்த தருணம், உள்ளே இருந்த ஒருவன் அந்தக் கதவை இழுத்துச் சாற்ற முயல, இடையில் சிக்குப்பட்டது அவ்வியக்தனின் வலக் கரம். அது கொடுத்த வலியில், சுயநினைவு பெற்றவனாகத் திடுக்கிட்டு விழித்தவனுக்கு, அந்தச் சூழ்நிலையின் தாற்பரியம் புரியத் தன் தலையை உலுப்பி, உள்ளே எழுந்த வதைக்கும் நினைவுகளைத் துகள் துகளாக்கி எறிய முயன்று ஓரளவு வெற்றி பெற்றவனாய்த் தன் பலம் முழுவதையும் சேர்த்து அந்தக் கதவைத் திறந்தான்.

அதைக் கண்ட நகுலன்,

“வட்ஸ் அப் மான்…” என்று அதுவரை விதற்பரையின் மார்பிலிருந்த தன் கரத்தை எடுத்து, ஏதோ இவன்தான் தவறு செய்தது போல முகத்தை வைத்தவாறு சினக்க, மறு கணம் அவளைத் தொட்டிருந்த அந்தக் கரத்தைப் பற்றி, வெளியே இழுக்க, தரையில் வந்து விழுந்தான் நகுலன். மறு கணம் விதற்பரையைத் தொட்ட கரத்தை பின் பக்கமாக அழுத்தி ஒரு மடக்கு மடக்க முட்டுப் பிசகி கரம் பின்னால் மடிந்தது.

அது கொடுத்த வலியில் அலறத் தொடங்க, அந்த அலறல் வெளியே வர முதலே ஓங்கி அவன் மூக்கில் இரண்டு முறை குத்த, கத்தக் கூடச் சக்தியற்று பொறி கலங்கி முன்புறமாகக் குனிந்த நகுலனின் மூக்கிலிருந்து கொடகொட என்று இரத்தம் கொட்டியது. கூடவே இரண்டு பற்களும் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்தன. அப்போதும் விட்டானா அவ்வியக்தன், மீண்டும் ஓங்கி அவன் விலாவில் பல முறை மாறி மாறி ஒரே இடத்தில் அத்தனை ஆத்திரத்தையும் திரட்டிக் குத்த, அவனுடைய விலா எலும்புகள் உடையும் ஓசை அவ்வியக்தனுக்கே கேட்டது.

இப்போது அப் பயங்கர காட்சியைக் கண்ட மற்றவன், ஆத்திரத்துடன் அவ்வியக்தன் மீது பாய முயல, நகுலனைக் கைவிட்டு, வந்தவனின் கழுத்தைப் பற்றி அரையடிக்கு மேலாக தூக்கி ஓங்கி வண்டியில் மோதினான். மோதிய வேகத்தில் பலமாகப் பின்னந்தலை அடிபட வலியில் முனங்கியவாறு கீழு விழுந்தவனின் கரத்திலிருந்து கைபேசி நழுவி விழுந்தது.

அது தரையைத் தொட முதல் கைப்பற்றிக் கோண்டவன் அதைப் பான்ட் பாக்கட்டில் செருகிவிட்டு மீண்டும் அவனுடைய சட்டையைப் பற்றித் தூக்கினான்.

அவன் விதற்பரையின் தொடையை வருடியது நினைவுக்கு வரச் அவனுடைய வாயை ஒரு கரத்தால் அழுந்த மூடி, அவளைத் தொட்ட கரத்தைப் பற்றி அந்த வாகனத்தின் மீதே பல முறை ஓங்கி அடித்தான். அதே வேகத்தோடு எதிரியின் வயிற்றில் பல முறை கடகடவென்று குத்த அவன் குத்திய குத்தில் வாயில் இரத்தம் வர மயங்கிப் போனான் அவன்.

அவனைக் கைவிட்டுவிட்டு நிமிர்ந்த போதும் அவ்வியக்தனின் ஆத்திரம் மட்டுப்படவில்லை.

அதே நேரம் தன் தோழர்களுக்கு நடந்த கதியைக் கண்டு பதறிய காரோட்டியும், முன்னிருக்கையில் அமர்ந்திருந்த மற்றவனும், அடுத்துத் தங்களுக்குத்தான் அந்த நிலை என்பதை உணர்ந்தவர்களாகத் தப்பித்தால் போதும் என்கிற நிலையில் வாகனத்தை உசுப்ப முயன்றனர்.

விட்டானா அவ்வியக்தன்? முன் கதவைச் சடார் என்று திறந்தவன், காரோட்டியை இழுத்துத் தரையில் விழுத்தி, அவன் மார்பில் முழங்காலிட்டு விழுந்து அவனுடைய மூக்கில் ஒரு குத்தும் மார்பில் கடகடகவென்று இரண்டு குத்தும் கொடுக்க, எஞ்சியிருந்தவன், அதிகம் சிந்திக்கவில்லை. அந்த இடத்தை விட்டு ஓடினால் போதும் என்பது போலக் கதவைத் திறந்து வெளியேறி நாலுகால் பாய்ச்சலில் அங்கிருந்து மறைந்து போக அவனைப் பின் தொடர்ந்து செல்வதற்கு அவ்வியக்தனுக்கு நேரமிருக்கவில்லை.

இன்னும் கொஞ்ச நேரத்தில் மற்றவர்களின் கவனம் இவர்கள் பக்கம் திரும்பும். அதற்கிடையில் இங்கிருந்து சென்றுவிடவேண்டும். நல்லவேளை சற்று ஒதுக்குப் புறமான இடத்தில் இந்தச் சம்பவம் நடந்ததால் யாருடைய கவனத்தையும் திசை திருப்பவில்லை. தரையில் கிடந்தவர்களை ஆத்திரத்துடன் பார்த்தவன் வேகமாக விதற்பரையை நோக்கிச் சென்றான்.

சுயநினைவற்றுக் கிடந்தவளைப் பார்க்க இனம் புரியாத வலி அவனுக்குள். விலகிய ஆடையைக் கூடச் சரிப்படுத்த விளையாமல், அவளைக் கூட்டித் தன் கரங்களில் ஏந்தியவனுக்குக் கண்ணீர் கோர்த்துக்கொண்டு வந்தது. மூக்கு விடைத்தது. அடிவயிற்றில் ஏற்பட்ட கலக்கம் தொண்டை வரை வந்து வலிக்கச் செய்தது.

தன் வாகனத்தின் அருகே வந்தவன், அவளைப் பின்னால் கிடத்திவிட்டு ஏற்கெனவே பின்னால் எறிந்திருந்த தன் கோட்டைத் தூக்கி அவள் மீது போர்த்திவிட்டு, வாகனத்தை எடுத்தவனுக்கு, நெஞ்சம் நிலையில்லாமல் தவித்தது.

கொஞ்சம் அவன் தாமதித்திருந்தாலும், அவளுடைய நிலை என்னவாகியிருக்கும்? நினைக்கும்போதே பதறியது யார் தன்னை நாசமாக்கினார்கள் என்றும் தெரியாமல், என்ன நடந்ததும் என்றும் புரியாமல் துடித்திருப்பாள். அந்தத் துடிப்பைத் தான் உணர்ந்தவன் போல, வாகனத்தின் வேகத்தை அழுத்தியவன், அவளுடைய இடத்திற்குப் போவதை விடத் தன் விடுதி அருகே என்பதால், அடுத்த பத்தாவது நிமிடத்தில் தன் விடுதிக்கு வந்து சேர்ந்தான்,

அவளைத் தூக்கியவாறு தன் அறைக்கு வந்தவன், கட்டிலில் கிடத்தியபோதும் அவளிடம் எந்த அசைவுமில்லை.

நெஞ்சம் கசங்க, அவளுடைய கன்னத்தைத் தன் வலது உள்ளங்கையால் பொத்திப் பிடித்தவனுக்கு, அவளைத் தப்பாகத் தொட முயன்ற கயவர்கள்தான் திரும்பத் திரும்ப நினைவில் வந்து வதைத்தார்கள். பற்களைக் கடித்துத் தன்னை நிலைப்படுத்தியவனாக, அவளுடைய முகம் நோக்கிக் குனிந்தான்.

நாசியால் எதையோ நுகர்ந்து பார்த்தான். சந்தேகிக்கும் படி எந்த வாடையும் வரவில்லை. மேலும் குனிந்து இரண்டு விரல்களால் அவளுடைய உதடுகளைப் பிளந்து நுகர்ந்து பார்த்தான். கொஞ்சமே கொஞ்சமாய்ப் பழரச வாடைதான் வந்தது. உடனே புரிந்து போனது அவனுக்கு. டேட் ரேப் ட்ரக் பழரசத்துடன் கலந்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று.

ஆத்திரத்தில் கை முஷ்டிகள் இறுகப் பற்களைக் கடித்தவாறு நின்றவனுக்கு அந்தக் கணமே, அத்தனை பேரின் எலும்புகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பிரித்து எடுக்கவேண்டும் என்கிற வெறி தோன்றியது.

இது அடிக்கடி பல்கலைக் கழக விழாக்களில் நடப்பதுதான். பெண்களைத் தவறான நோக்கத்தில் நெருங்குவதற்காக இத்தகைய நாச காரியங்களைச் செய்வதும் உண்டுதான். நிறையப் பேருக்குத் தங்களுக்கு இப்படி நடந்தது என்று தெரியாமலே போயிருக்கிறது. சிலர் தெரிந்து கொண்டாலும், யார் செய்திருப்பார்கள் என்று தெரியாத குழப்பத்தில் அப்படியே விட்டுவிடுவார்கள். இன்னும் சிலர் காவல்துறையிடம் முறையிடுவதும் உண்டு. எது எப்படியோ, முன்பு யாருக்கோ என்றபோது வெறும் செய்தியாக இருந்தது, இன்று இதயத்திற்கு மிக நெருக்கமானவளுக்கு நடக்க இருந்ததை நினைத்தபோது இரத்தம் கொதித்தது.

இந்த மயக்கம் தானாகத் தெளியும் என்பதால் வைத்தியரை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிற நிம்மதியில் அறையை விட்டு வெளியே வந்தவன், தன் கைப்பேசியை எடுப்பதற்காகப் பான்ட் பாக்கட்டில் கைவைத்து பார்த்தான். அப்போதுதான் அதைக் கோட்டிற்குள் போட்டது நினைவுக்கு வந்தது. மீண்டும் அறைக்குள் நுழைந்தவன், அலங்கோலமாகக் கிடந்தவளைக் கண்டதும் மேலும் நெஞ்சம் கசங்கியது.

வெளியே தெரிந்த உடலை மறைக்கும் பொருட்டுப் போர்வையை எடுத்து அவளுக்குப் போர்த்தியவன், உயரக் கட்டிய கொண்டையிலிருந்த கிளிப்புகளைக் கழற்றி, தலை முடியை இலகுவாக்கிப் படர விட்டான். கையிலிருந்த கிளிப்புகளை அங்கிருந்த மேசையில் போட்டுவிட்டு, அவளுக்கு அருகாமையிலிருந்த தடித்த மேல் சட்டையை இழுத்து எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

அதற்குள் கைவிட்டுத் தன் கைப்பேசியை எடுத்தவன் அப்போதுதான் கவனித்தான் விதற்பரை தன்னை அழைத்திருக்கிறாள் என்று. நெஞ்சம் கனக்க? அதில் ஒரு சில இலக்கத்தைத் தட்டிக் காதில் பொருத்திவிட்டுக் காத்திருக்க, அடுத்த விநாடி

“சொல்லு அவ்வி… “என்கிற சற்றுச் சோர்வு நிறைந்த கம்பீரக் குரல் அவனுடைய செவிப்பறையில் வந்து விழுந்தது.

“ஹாய் ப்ரோ… எப்படி இருக்கிறாய்…”

“இருக்கிறேன்… சொல்லு… இந்த நேரம் எதற்காக எடுத்தாய்…” என்று நேரடியாக விஷயத்திற்கு வர, அதிக நேரம் இழு படாமல், நடந்ததைக் கூறிய அவ்வியக்தன், பாதிக்கப்பட்டது விதற்பரை என்று சொல்லாமல் தன் நண்பனின் தங்கை என்று சொன்னான்.

அதைக் கேட்ட உத்தியுக்தன்,

“வட்… அவர்களைச் சும்மாவா விட்டாய்? இப்போது அந்தப் பெண் எப்படி இருக்கிறாள்…” என்று கேட்டான்.

இதுவரை அண்ணனிடம் பொய் சொல்லாதவன் கொஞ்சம் தடுமாறினான். ஆனால் தற்பரையின் நன்மைக்காகப் பொய் சொல்லித்தான் ஆகவேண்டும்.

“இதைச் செய்தது யார் என்று தெரியவில்லை ப்ரோ… அந்தப் பெண் இப்போது கொஞ்சம் பரவாயில்லை… ஆனால்… இவளைப் போல நிறையப் பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம்… என்னை விட உனக்குத்தான் ஆட்களை இங்கே தெரியும்…. அதனால்தான் உன்னை அழைத்தேன்.”

“இதை என் கையில் விடு… இப்போதே அதற்கான நடவடிக்கையில் இறங்குகிறேன்…” என்றவன் கைப்பேசியை வைக்க முயல,

“ப்ரோ…” என்றான் மீண்டும்.

“ம்…” என்று சுரத்தில்லாமல் கூற,

“அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்கள் வெளியே வருவதை நான் விரும்பவில்லை…” என்றான் மென்மையாக. மறுபக்கம் சற்று அமைதி காத்தது.

முதன் முறையாக ஒரு பெண்ணுக்காய், அவளுடைய நலனுக்காய் இவன் யோசிப்பது உத்தியுக்தனுக்குப் புதுமையாக இருந்ததோ?

“உனக்கு என்னைப் பற்றித் தெரியும்…” என்றவன், கைப்பேசியை அணைக்க, அவ்வியக்தன் பெரும் நிம்மதியுடன் ஆழ மூச்செடுத்து விட்டான்.

முதலில் பாதிக்கப்பட்டது விதற்பரை என்று சொல்லலாம் என்றுதான் நினைத்தான். ஆனால் அது சமர்த்தியின் உறவினள் என்பதற்காகவே கொதித்து எழுவான். அதன் பின் உத்தியுக்தனைக் கட்டுப்படுத்துவது சிரமமாகிப் போகும். தவிரத் தற்பரையைப் பெற்றவர்களுக்குத் தெரிய வரும். தாங்க மாட்டார்கள். இனி அவன் பார்த்து கொள்வான். அத்தனை பேரும் இருபத்து நான்கு மணி நேரத்தில் பிடிபட்டு விடுவார்கள், அது நிச்சயம். கைப்பேசியைத் தன் பான்ட் பாக்கட்டிற்குள் வைத்துவிட்டு, மீண்டும் விதற்பரையின் அறை நோக்கிச் சென்றான்.

மெதுவாக அவளை நெருங்கியவன் சற்று நேரம் இமைக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, அவளை நோக்கிக் குனிந்தவன், தன் உள்ளங்கையை அவளுடைய தலையில் வைத்து,

“சாரி பேபி… ஐ விஷ் ஐ கேம் ஏர்ளியர்… பட் யு ஆர் பேர்ஃபக்ட்லி ஓக்கே ஏஞ்சல்…” என்று முணுமுணுத்து விட்டு, விலகத் தொடங்க விதற்பரையின் கரம் அவனுடைய கரத்தை அழுந்த பற்றிக் கொண்டது.

ஏனோ அக் கரத்தை உதறிவிட்டுச் செல்லவேண்டும் என்று தோன்றவில்லை. மாறாக உள்ளம் கரைந்து உருக, அவளுக்கு அருகாமையில் படுக்கையில் அமர்ந்தவன், ஒரு கரத்தால் அவளுடைய கரத்தைப் பற்றி வருடிக் கொடுக்க, மறு கரத்தால் அவளுடைய தலையை வருடிக்கொண்டேயிருந்தான். எத்தனை நேரமாக அப்படியே இருந்தானோ, அவனுடைய விழிகளும் தூக்கத்தில் சொருகத் தொடங்க, சுய நினைவின்றியே தரையில் மடங்கி அமர்ந்தவனின் தலை அவளுடைய தலைக்கு அருகாமையில் சரிந்து கொள்ளப் பற்றிய கரத்தை விடாமலே ஆழ்ந்த உறக்கத்தின் வசமானான் அவ்வியக்தன்.

What’s your Reaction?
+1
16
+1
0
+1
5
+1
0
+1
4
+1
0

Related Post

4 thoughts on “தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 14”
  1. நயணிம்மாக்கு இதயம் கனிந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் 🎇🎆🎇🎆🧨🧨🧨🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

    1. என் தங்கத்துக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அனைத்து செல்வமும் நிறவாய் கிடைக்கட்டும் வைஷூ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!