Sat. Apr 26th, 2025

தொலைந்த எனை மீட்க வா…!- 9

(9)

அபராசிதன் கனடாவில் விரல்விட்டு எண்ணக் கூடிய புகழ் பூத்த இதயச் சத்திர சிகிச்சை நிபுணன். அவன் கை பட்டால் எந்தச் சத்திர சிகிச்சையும் தோற்றுப் போனதாகச் சரித்திரம் இல்லை. எந்தச் சிக்கலான பிரச்சனைகள் என்றாலும், அதைச் சுமுகமாகக் கையாண்டு நோயாளியை எழுந்து நிற்க வைத்துவிடுவான். இன்றைக்கு மிகப் பிரசித்திபெற்ற மருத்துவமனை ஒன்றில் அவன் இதய அறுவை சிகிச்சை நிபுணனாகக் கடமையாற்றி வருகிறான்.

ஒரு அண்ணன். ஒரு அக்கா. அவனுக்கும் அவனுடைய அக்கா ஈஷ்வரிக்குமே பதினாறு வயது வித்தியாசம். அவனுடைய அண்ணன் அமலனுக்கும் இவனுக்கும் பதினான்கு வயது வித்தியாசம். இவன் பிறந்ததும், இவனைப் பெற்றவர்கள் தூக்கிக் கொண்டாடினார்களோ இல்லையோ, அமலனும் ஈஷ்வரியும் தங்கள் உயிராய் அவனைக் கொண்டாடினார்கள்.

உயிரோடு பாவப்பிள்ளை கிடைத்த கணக்காக ஈஷ்வரி தன் மகனாகவே தம்பியைத் தாங்கிக் கொள்ள, அமலனோ அந்தப் பதிநான்கு வயதிலேயே அவனுக்கு ஒரு தந்தையாக மாறிப் போனான். குட்டித் தம்பிக்குப் பெயர் வைத்ததே ஈஷ்வரியும் அமலனும்தான்.

இந்த நிலையில், விதி சதி செய்ய, அபராசிதன் பிறந்த ஒரு வருடத்தில் அவனைப் பெற்றவர்கள் ஈழத்தில் நடந்த போரில் சிக்கி இறுதி மூச்சை விட, பதினேழாவது வயதில் குடும்பச் சுமையைத் தன் கரத்தில் எடுத்துக் கொண்டாள் ஈஷ்வரி.

அவனையும் அவனுடைய அண்ணனான அமலனையும் தன் இரண்டு கண்களாகப் பார்த்துக் கொண்டதால் அமலனுக்கும் அபராசிதனுக்கும் ஈஷ்வரி மீது பக்தி என்றே சொல்லலாம்.

ஈஷ்வரி திருமணம் முடித்ததே முப்பது வயதிற்குப் பிறகுதான். பின்பு ஈழத்தில் இருக்கப் பிடிக்காது கணவனின் விருப்புக்கு அமைய, தன் தம்பிகளையும் அழைத்துக்கொண்டு கனடா வந்து சேர்ந்தார். அதற்குப் பிறகுதான் அவருக்கு மகளே பிறந்தது.

கனடா வந்த கொஞ்ச நாட்களில், அமலன் சகோதரியோடு சேர்ந்து சின்னதாக ஒரு உணவு விடுதி ஒன்றை ஆரம்பிக்க, அவர்களின் நேரம் நல்லதாக இருந்ததால் அந்த வியாபாரம் ஒரு வருடத்திலேயே ஓரளவு பெயர் பெற்றது. இதில் தாய் கற்றுக் கொடுத்த ஊறுகாய், தொக்கு என்பனவற்றைக் கனடாவில் சிறு கைத்தொழிலாக ஆரம்பிக்க, அதுவும் சூடு பிடிக்கத் தொடங்கியது. ஐந்து வருடங்களில் அந்தச் சிறு கைத்தொழில் பெருந்தொழிலாக உருவெடுத்தது. கூடவே அமலனின் உணவகமும் கனடா முழுவதும் கிளைகளாகப் பரந்து விரிந்தன. அதைத் தொடர்ந்து பிற தொழில்களிலும் கால் பதித்தான் அமலன். கூடவே அபராசிதன் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டே அண்ணனுக்கு வியாபாரத்தில் உதவி செய்ய, தொட்டதெல்லாம் பொன்னானது.

இந்த நிலையில், அமலனுக்குப் பார்கவி என்கிற பெண்ணைப் பேசி திருமணம் முடித்து வைத்தார் ஈஷ்வரி. நல்ல வசதியான குடும்பம். நல்ல பெண்ணும் கூட. தன் தம்பியின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நம்பிக்கையில் சந்தோஷமாகவே பார்கவியைத் தன் தம்பிக்குக் கட்டி வைக்க, திருமணமாகி பதினைந்து வருடங்களாகியும் குழந்தை இல்லை என்கிற குறை தவிர, மகிழ்ச்சியாகத்தான் இருவரும் இருந்தார்கள்.

இருவருமே குழந்தைக்காக நிறையப் பரிசோதனை செய்து பார்த்தார்கள். சிகிச்சைகளும் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் குழந்தை வரம் மட்டும் எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. தங்களுக்குக் கொடுப்பினை அவ்வளவு தான் என்று இருவரும் தேற்றிக்கொண்டு அன்னியோன்னியமாகத்தான் இருந்தார்கள்.

இந்த நேரத்தில் அபராசிதன் மருத்துவம் எடுத்துப் படித்தான். அவனுக்கு மருத்துவத்தில் ஆர்வம் என்பதை விடப் பேரார்வம் என்றே சொல்லலாம். அவனுடைய ஞாபகசக்தியும், அந்தத் தொழிலில் அவன் வைத்த ஆசையும் அவனை உந்தித் தள்ள, நான்கு வருடத்தில் முடிக்கவேண்டிய இளங்கலைப் படிப்பை, மூன்று வருடங்களில் முடித்தான். அடுத்து மருத்துவப் படிப்பையும் நான்கு வருடங்களில் அதீத மதிப்புகளோடு அதுவும் தங்கப் பதக்கத்தோடு வெளியே வந்தான். அடுத்த வருடமே உரிமைத் தேர்வில் தேர்ச்சி பெற்றான். அவனுக்கு இதய அறுவைச் சிகிச்சை நிபுணனாகவேண்டும் என்பது ஆசை. அது சார்ந்து மருத்துவப் பயிற்சியை ஆரம்பித்தான்.

அவனுடைய திறமையையும், புத்திக்கூர்மையையும் கண்டு மருத்துவக் குழு வியந்து போக, சிகிச்சையைத் தனிப்படக் கையாள அவனுக்கு அனுமதி கொடுத்தது. அவனுடைய இருபத்தெட்டு வயதிலேயே கனடாவில் புகழ் பூத்த சத்திர சிகிச்சை நிபுணர்களில் ஒருவனாக வலம் வந்தது பெரும் சாதனையே.

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. திடீர் என்று ஒரு நாள், வந்தான் அமலன். தானும் பார்கவியும் பிரியப் போவதாக வந்து சொன்னான். அதைக் கேட்ட அனைவரும் ஆடிப்போய்விட்டார்கள். ஒரு வேளை அவர்களின் பிரிவுக்குக் குழந்தை இல்லாததுதான் காரணமாக இருக்குமோ என்று நினைத்த அபராசிதன், ‘அது ஒரு பிரச்சனையே இல்லை, செயற்கை முறையில் கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. முயன்று பார்க்கலாம் என்று சொல்லிப் பார்த்தான்.

ஆனால் அமலன் மறுத்துவிட்டான். தங்கள் பிரிவுக்குக் குழந்தை ஒரு காரணமில்லை என்றான். அப்படியென்றால் என்னதான் காரணம் என்று கேட்டால், ஒட்டவில்லை, பிடிக்கவில்லை என்று ஏதேதோ உளறினான். பார்கவியிடம் கேட்டால், அவளோ ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

அவளுக்கும் அவன் விவாகரத்துக் கேட்டது அதிர்ச்சியே. அவளும் குழந்தை இல்லாததுதான் காரணம் என்று நினைத்தாள். எவ்வளவோ அவனிடம் பேசியும் பார்த்தாள் ஆனால் அமலன், விவாகரத்து வேண்டும் என்று ஒரே பிடியாக இருந்துவிட்டான்.

அதற்கு மேல் அவனோடு போராடப் பிடிக்காமல் விவாகரத்துக்குச் சம்மதித்தாள் பார்கவி. வாழ மாட்டேன் என்பவனின் காலைப்பிடித்துக் கெஞ்சவா முடியும்.

இத்தனை சந்தோஷமாக இருந்தவர்கள் திடீர் என்று பிரியப் போகிறோம் என்றால் அதை என்னவென்று எடுப்பது? ஆனால் அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை ஆயிற்றே. அதில் தலையிடுவதற்கு உரிமையில்லை என்கிற காரணத்தால், ஈஷ்வரியும் அபராசிதனும் எதுவும் பேச முடியாத நிலையில் வலியோடு அவர்களின் பிரிவை ஏற்றுக் கொண்டார்கள்.

இந்த நிலையில்தான் அமலன் அமெரிக்கா போகிறேன் என்று சொல்லிவிட்டு, யாருடைய அனுமதியையும் வேண்டாமல் சென்றுவிட்டிருந்தான். ஒரு வேளை சகோதரிக்குப் பதில் சொல்ல முடியாது என்பதால்தான் அமெரிக்கா ஓடினானோ என்னவோ.

ஏதோ சின்ன மனஸ்தாபத்தால் பிரிந்து இருக்கிறார்கள். விரைவாகச் சேர்ந்து விடுவார்கள் என்று ஈஷ்வரி நம்பியிருக்கையில், அமெரிக்கா சென்றிருந்த அமலன் இன்னொரு பேரிடியை அவர்களின் தலையில் இறக்கினான்.

ஆம், ஏதோ மெக்சிகோவிற்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளச் சென்றிருந்தவனின் பேருந்து விபத்துக்குள்ளாகியதால் அவன் ஆபத்தான நிலையில் இருக்கிறான் என்கிற செய்தியை அறிந்து துடித்துப் போனார் ஈஷ்வரி. அன்புத் தம்பியின் நிலை அறிந்து பதறி அடித்து மெக்சிகோ போவதற்குள், அமலன் தன் உயிரை விட்டிருந்தான்.

கடைசியாக அவனுடைய உடைமைகளையும், அமலனின் உயிரற்ற உடலையும் இவர்களிடம் ஒப்படைத்து வழியனுப்பி வைத்தது மெக்சிகன் காவல்துறை. டொரன்டோ எடுத்து வந்து கடைசிக் காரியங்களை செய்தபோது அத்தனை பேருக்கும் மரண வலி.

அவனை சிதையில் ஏற்றியபின், அமலனின் உடைமைகள் என்று கொடுத்த பெட்டியைத் திறந்து பார்த்தான் அபராசிதன். அவனுடைய கைப்பேசி ஒரு குறிப்பேடு, மற்றும் அவனுடைய நாளாந்தம் பாவிக்கும் பொருட்கள் என்று அந்தப் பெட்டியில் இருக்க, நெஞ்சம் நிறைந்த வலியோடு அந்தக் குறிப்பேட்டை எடுத்துப் பார்த்தவனுக்கு, அதைப் படிக்கப் படிக்கத் தலையே சுற்றிக்கொண்டு வந்தது.

அவன் எதற்காகப் பார்கவியைப் பிரிந்தான் என்பதற்கான பதில் அந்த குறிப்பேட்டில் இருக்க, அதைப் படிக்கத் தொடங்கியவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

அமலனுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் தொடர்பு. அதுவும் அவனை விடக் கிட்டத்தட இருபத்தியிரண்டு வயது இளமையான பெண்ணோடு.

அதைப் படித்ததும் இவனுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. அதுவும் அந்தப் பெண்ணுக்கு வயது வெறும் பதினெட்டுதான். இவனால் எப்படி அந்தப் பெண்ணோடு…? அதை அபராசிதனால் ஜீரணிக்கவே முடியவில்லை. முன்னையது போல இருபது வயதுகளில் திருமணம் முடித்திருந்தால், இந்த வயதில் அவனுக்கு ஒரு மகளே இருந்திருக்கும். மகளை ஒத்த வயதுடைய ஒரு பெண்ணோடு… எப்படி? தலையே சுற்றிப்போனது அவனுக்கு.

அதுவும் அவன் எழுதியதை வைத்துப் பார்க்கும் போது, அந்தப் பெண்ணாகவேதான் அவனை நெருங்கியிருக்கிறாள். அவள் விரித்த வலையில் இவன் சுலபமாகவே விழுந்து விட்டது தெரிய அந்தப் பெண்ணின் மீது தாங்க முடியாத வெறுப்பும் அருவெறுப்பும் பிறந்தது. கூடவே அந்தக் குறிப்பேட்டில் எப்படித் தாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம் என்பதைக் கொஞ்சம் கூடக் கூச்சம் இல்லாமல் எழுதியிருந்தான் அமலன். இதில் அவள் என்ன எல்லாம் கேட்டாள், எதையெல்லாம் வாங்கிக் கொடுத்தோம் என்கிற பெருமை வேறு. அனைத்துக்கும் மேலாக அவள் திருமணம் ஆனவன் என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரிந்தே இருந்தது. அதை வாசித்தபோது, அந்தத் திகழ்வஞ்சி இவனுக்கு நரமாமிசம் உண்ணும் புழுவாகவே தெரிந்தாள்.

சே… திருமணமானவன் என்று தெரிந்தும், பணத்துக்காகத் தனக்குத் தந்தையின் வயதை ஒத்த ஒருவனோடு உறவு வைத்திருக்கிறாளே. இவள் எல்லாம் எப்படிப் பட்ட கழிசடையாக இருக்கவேண்டும். அவனுக்கு நினைக்க நினைக்க ஆத்திரம் அடங்க மறுத்தது. அப்போதே அந்தப் பெண்ணிடம் சென்று தன் கோபம் அனைத்தையும் காட்டிவிட உள்ளம் துடித்தது. ஆனாலும் தன்னை அடக்கிக்கொண்டான் அபராசிதன்.

அவள் ஒன்றும் குழந்தையில்லை. பதினெட்டு வயது கடந்தாலே, விபரம் தெரிந்தவர்கள் என்கிற கணக்கில் வந்துவிடுகிறார்கள். இதில் அவனுடைய அண்ணன் மீதும் பெரும் குற்றம் இருக்கிறது. இதில் அந்தப் பெண்ணை மட்டும் தவறு சொல்ல முடியாது. தவிர, அவன் ஒரு வைத்தியன். அதற்குரிய நாகரிகத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமே. பற்களைக் கடித்தவன், மேலும் அண்ணனின் குறிப்பேட்டை அருவெறுப்போடு படித்தான். அப்போதுதான், அவர்களின் ஒரு வருட உறவில், அந்தப் பெண் அமலனின் குழந்தையைச் சுமப்பது தெரிய வந்தது. அதைப் படித்ததும் அதிர்ந்து போனான்.

அவள் சுமப்பது நிஜமாகவே தன் அண்ணனின் குழந்தையைத்தானா? இல்லை வேறு யாருடையதும் குழந்தை¬யா? யாரை ஏமாற்றப் பார்க்கிறாள்? நிச்சயமாக இது அமலனுடைய குழந்தையாக இருக்க வாய்ப்பில்லை. பதினைந்து வருடங்களாகத் தரிக்காத குழந்தையா இன்னொருத்தியின் வயிற்றில் தரித்துவிடப் போகிறது? இவள் வேறு யாருடைய குழந்தையையோ சுமந்து, பணம் பறிப்பதற்காக அண்ணாவின் குழந்தை என்று பொய் சொல்கிறாள். ஏமாற்றுக்காரி. முடிவு செய்தவன், அதை அப்படியே மறந்துவிடத்தான் நினைத்தான். ஆனாலும் முடிய வில்லை.

ஒரு வேளை நூற்றில் ஒரு பங்காக அண்ணனின் குழந்தையாக இருந்தால்? நினைக்கும் போதே இதயத்திற்குள் ஒரு வித தவிப்பு. அப்படி அந்தக் குழந்தை அமலனுடையதாக இருந்தால், அந்தக் குழந்தை அவனுக்கு வேண்டும். அதையே ஈஷ்வரியும் சொன்னார்.

அமலனைத்தான் தொலைத்துவிட்டோம். ஒரு வேளை இந்தக் குழந்தை அமலனுடையதாக இருந்தால், அவனை நாமே வளர்க்கலாம்…” என்று கண்ணீர் மல்கச் சொன்னபோது, அவனாலும் அதை மறுக்க முடியவில்லை.

அது மட்டுமன்றி, அமலனின் அத்தனை பெரிய சாம்ராஜ்யத்திற்கும் உரிமையானவன் அவனுடைய குழந்தை மட்டும்தான். என்ன ஆனாலும் சரி, அந்தக் குழந்தைக்கு மரபணு சோதனை செய்து, அவன் அமலனின் குழந்தை என்று நிறுவப்பட்டால், அவள் கேட்கும் பணத்தைக் கொடுத்து அழைத்து வந்துவிட வேண்டும். நிச்சயமாக அவளிடம் மட்டும் குழந்தை வளர விடவே கூடாது… அந்த உறுதியோடு, அந்தப் பெண்ணைப் பற்றி அறியவேண்டி அமலனின் கைப்பேசியை நோண்டிப் பார்த்தான். அவனும் தான் என்ன செய்வது? அண்ணனின் தனிப்பட்ட விடயத்திற்குள் மூக்கை நுழைக்கக் கூடாது என்று யோசிக்கிற இடத்தில் அவன் இல்லையே.

அவனுடைய கைப்பேசியின் உள்ளே போக, திரையில் முதலில் விழுந்தது ஒரு பெண்ணின் உருவம். பளிச்சிடும் கண்களோடு, கன்னத்தில் குழி விழ, அழகான வரிசைப் பற்களைக் காட்டியவாறு, குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடியில் நீல நிறச் சாயம் பூசி, மூக்கின் மத்தியில் ஒரு வளையம் போட்டு, முழுத் தொடைகளையும் காட்டும் அந்த ஆடையின் ஊடாகத் தெரிந்த பெண்மையின் எழிலை வெட்கமின்றி வெளிக்காட்டியவாறு, பளிச்சிட்டுத் தெரிந்த பளிங்குத் தொடையில், அழகான வண்ண நிற மலர்கள் கொடிபோல பச்சையாகக் குத்தப் பட்டிருக்க, கீழ் நெஞ்சுக்கும் மேல் வயிற்றுக்கும் இடையே வெண்ணிறத்தில் மேலாடை அணிந்து, அப்பட்டமாகக் காட்டிய வயிற்றுத் தொப்புளில் பிளாட்டினத்தில் போடப்பட்ட வளையத்தோடு, அதற்கு இடப்புறமாகச் சற்றுக் கீழேயும் சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சியைப் பச்சையாகக் குத்தி அன்றைய ஹாலிவுட் நடிகைகளுக்குச் சவால் விடும் வகையில் ஒற்றை இருக்கையில் கவர்ச்சி கன்னியாக நெளிந்தவாறு அமர்ந்திருந்தாள் அவள்.

அதைப் பெண்ணைப் பார்த்த அபராசிதனின் புருவங்கள் ஒருகணம் சுருங்கவே செய்தன. காரணம் இன்றியே அந்தப் பெண்ணுருவம் அவனையும் சுண்டி இழுக்கத்தான் செய்தது. பின்னே இத்தனை இளமையாக, இப்படி அரைகுறை ஆடையோடு உடலைக் காட்டி நின்றால், எந்த ஆண்தான் மயங்க மாட்டான்?

ஏளனமாக உதடுகளை வளைத்தவன், அவளைப் பற்றி அறிய வேறு ஏதாவது கிடைக்குமா என்று கைபேசியை ஆராய்ந்தான். அமலனும் திகழ்வஞ்சியும் நிறைய செல்ஃபி எடுத்திருந்தார்கள். என்ன படுக்கையறைக் காட்சிகள் மட்டும்தான் இல்லை. மற்றும்படி முத்தமிட்டு, அணைத்து, தூக்கி வைத்து என்று ஏகப்பட்டது அங்கே குப்பையாகக் கிடந்தன.

அதைக் காணக் காணப் பற்றிக்கொண்டு வந்தது அபராசிதனுக்கு. அவனுக்குத் தன் அண்ணன் மீதும் தாள முடியாத கோபம் வந்தது.

எப்படி அவனால் முடிந்தது. அந்தப் பெண்ணுக்குத் தான் புத்தியில்லை. இவனுக்கு எங்கே போனது புத்தி? படித்தவன்தானே… சே… முதன் முறையாக அண்ணனின் மீது வெறுப்புப் பிறக்க, குறுஞ்செய்திகளின் பக்கம் போனான். பேபி என்று அவளுடைய பெயரைப் பதிவு செய்திருந்தான் அமலன்.

உள்ளே போனால், அதில் முக்கால்வாசியும் கொஞ்சலும் கெஞ்சலுமாக இருந்தன. அவற்றைப் படித்தவன் குன்றிப் போனான்.

பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, அவனுக்கும்தான் பெண் தோழி இருந்தாள். ஆனால் ஒரு போதும் இத்தகைய குறுஞ்செய்தியை அவனும் அனுப்பியதில்லை, அவனுடைய பெண் தோழியும் அனுப்பியதில்லை. அனுப்ப அவன் அனுமதித்ததும் இல்லை. ஆனால் இவளோ… சீ… கொஞ்சம் கூட இவளுக்குக் கூச்சமே இல்லையா? எரிச்சலோடு குறுஞ்செய்திகளைத் தட்டிக் கொண்டு செல்ல இடை இடையே பணம் கேட்டிருந்தாள். இவனும் முட்டாள் போலக் கொடுத்திருக்கிறான். எழுந்த கடுப்போடு மேலும் பார்த்துக் கொண்டு போனான்.

“நான் கர்ப்பமாக இருக்கிறேன்… உன்னுடைய மனைவியை விவாகரத்துச் செய்து விட்டு வா, சேர்ந்து மகிழ்ச்சியாக வாழலாம்… இல்லை என்றால் எனக்கு இரண்டு மில்லியன் டாலர்களைக் கொடு. என் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டு போய்விடுகிறேன். இல்லை என்றால் பின்விளைவுகளைச் சந்திப்பாய்.” என்கிற குறுஞ்செய்தியைப் பார்த்ததும் பற்றிக் கொண்டு வந்தது இவனுக்கு. பின்விளைவு என்று எதைச் சொல்கிறாள். ஒரு வேளை பார்கவியிடம் சொல்லிவிடுவேன் என்பதை அப்படி மிரட்டலாகச் சொல்கிறாளோ? கோபத்தில் பற்களைக் கடித்தவன், அந்தக் குறுஞ்செய்தி வந்த தினத்தினைப் பார்த்தான். அந்தக் குறுஞ்செய்தி வந்த இரண்டாம் நாள்தான் அமலன் பார்கவியை விட்டுப் பிரிந்தான். ஆக அவர்கள் பிரிந்ததிற்கு முழுக் காரணமும் அந்தத் திகழ்வஞ்சிதான். அதை நினைக்க நினைக்க இவனால் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

அவள் குறுஞ்செய்தியை அனுப்பிய நாளில் இருந்து கணக்கிட்டுப் பார்த்தால், இப்போது அவளுக்கு அந்தக் குழந்தை பிறந்திருக்க வேண்டும் என்று தெரிந்தது. அது ஆணா பெண்ணா என்று கூடத் தெரியவில்லை.

அது எதுவாக இருந்தாலும், அந்தக் குழந்தை அமலனுடையதா என்பதைக் கண்டறிய வேண்டும். அதுவே தலையாய கடமையாகப் பட, உடனே ஒட்டாவா புறப்பட்டான் அபராசிதன்.

அங்கே, அமலனின் உணவகத்தில் விசாரித்தான். பகுதி நேர வேலைக்காக அங்கே சேர்ந்ததாகச் சொன்னார்கள். கொஞ்ச நாட்கள் அங்கே வேலை செய்திருக்கிறாள். அதற்குப் பிறகு வேலைக்கு வருவதை விடுத்து அமலனோடு வருவதும் போவதுமாக இருந்திருக்கிறாள். கூடுதல் தகவலாக, அமலனை சந்திக்க முதல், ஏதேதோ போதைப் பொருட்கள் எடுத்துக் கொள்வாள் என்றும் தெரிய வந்தது. மேலும் விசாரித்த போதுதான், அமலனும் அந்தப் பெண்ணும் ஒன்றாக ஒரே வீட்டிலிருந்திருக்கிறார்கள் என்பதையும் கண்டு கொண்டான்.

உடனே அமெரிக்கா புறப்பட்டவன் அமலன் இருந்த இடத்தில் விசாரித்தான். மற்றவர்கள் சொன்னது போல அமலனும் அந்தப் பெண்ணும் ஒன்றாகத்தான் அந்த வீட்டிலிருந்திருக்கிறார்கள் என்று உறுதியானது. ஒரு வேளை மெக்சிகோவில் நடந்த விபத்தில் அவளும் சிக்கியிருப்பாளோ? சந்தேகம் வர மெக்சிகோ பயணமானான் அபராசிதன்.

அங்கே விசாரித்தபோது, திகழ்வஞ்சி என்கிற பெயரில் யாரும் விபத்திற்குள்ளாகவில்லை என்று சொன்னார்கள். அப்படியென்றால் அந்தப் பெண் எங்கே போயிருப்பாள்? இன்ஸ்டகிராம், டுவிட்டர், முகப்புத்தகம் என்று அத்தனை சமூக வலைத் தளங்களிலும் அவளுடைய பெயரைப் போட்டுத் தேடிக் களைத்து விட்டான் அபராசிதன்.

இதில் அவனுடைய தொழில் வேறு அவனுடைய முயற்சிக்கு முட்டுக்கட்டையானது. முடித்துக் கொடுக்க வேண்டிய முக்கியச் சத்திர சிகிச்சைகள், நோயாளர்களின் சந்திப்பு என்று நாட்கள் அவன் நேரத்தைத் மென்று தின்றன. கிடைத்த நேரத்தில் திகழ்வஞ்சியைப் பற்றி விசாரிப்பதையும் அவன் விடவில்லை.

ஒரு வருடம் எப்படி ஓடியது என்று கேட்டால் அவனுக்கே தெரியாது. கடைசியாக திகழ்வஞ்சி என்கிற பெயரில் ஒரு பெண் வினிப்பெக்கில் இருப்பது தெரிய வந்தது. உடனே ஒரு கிழமை விடுப்பு எடுத்துக் கொண்டு அவளுடைய முகவரியையும் கண்டு பிடித்து, இதோ வந்தும் விட்டான்.

அவன் அவளைப் பார்க்கும் வரைக்கும், அது திகழ்வஞ்சியாக இருக்கும் என்கிற நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தான். அதுவும் கடையில் பார்த்து வியந்த பெண்தான் அங்கே திகழ்வஞ்சி என்கிற பெயரில் இருப்பதைக் கண்டதும் ஒரு கணம் அதிர்ந்துதான் போனான்.

அவனையும் மீறி அவன் தேடிவந்த பெண் அவளாக இருக்கக் கூடாது என்கிற வேண்டுதலோடு தான் வீட்டிற்குள்ளேயே வந்தான். ஆனால் அங்கிருந்த குழந்தையின் புகைப் படத்தைக் கண்டதும் அவனுக்குப் பேச்சே எழவில்லை.

அப்படியே அமலனைக் கொண்டு பிறந்து இருந்தான் குழந்தை. தான் ஆடாவிட்டாலும், தன் சதை ஆடும் என்பார்களே. அது போல, குழந்தையைக் கண்ட நொடி, அவனைத் தொட்ட நொடி, அவனை அணைத்த நொடியெல்லாம் குழந்தை அவர்களுக்குச் சொந்தமானது என்பதையே அவனுடைய இதயம் உறுதிப் படுத்தி நின்றது. சொந்த இரத்தம் இல்லை என்றால், இதயம் இப்படித் துடிக்காது. சிலிர்க்காது. மயிர்க்கால்கள் எம்பி நிற்காது. கண்களில் கண்ணீர் தேங்காது. மரபணு சோதனை இன்றியே அவன் அமலனின் மகன் என்று நிரூபித்து நின்றான் குழந்தை.

அந்த நொடியே குழந்தையைத் தன்னோடு அழைத்துச் செல்ல முடிவு செய்துவிட்டான் அபராசிதன். அவனைப் பெற்றவளுக்கு வேண்டியது பணம் தானே. அதைக் கொடுத்து விட்டால் குழந்தையை இவனிடமே ஒப்படைத்து விடுவாள் என்றுதான் நினைத்தான். ஆனால் பணத்தை வாங்க மறுக்கிறாளே ஏன்? சொல்லப்போனால் அவளுடைய சந்தோஷமான வாழ்க்கைக்குக் குழந்தை குறுக்காக நிற்கும். பிடித்தது போல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாமல் தடையாக இருக்கும். அப்படி இருக்கிறபோது, ஏன் குழந்தையைக் கொடுக்க மறுக்கிறாள்? ஒரு வேளை அவளுடைய ஆசை இன்னும் அதிகமோ? இன்னும் எதிர்பார்க்கிறாளோ. ஆமாம் அப்படித்தான் இருக்க வேண்டும். என்று நினைத்தவனுக்கு அதுவும் சந்தேகமாகத்தான் இருந்தது.

அவளுடைய விழிகள், அவளுடைய நடத்தை எல்லாம் அவன் நினைத்ததற்குப் புறம்பானதாக இருக்கிறதே. அவளுடைய கண்கள் அவனை நேராகப் பார்க்கும் போது இந்த விழிகள் தவறு செய்யாது என்றல்லவா தோன்றுகிறது.

அவன் புகைப்படத்தில் பார்த்த பெண்ணுக்கும், இப்போதிருக்கும் இவளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. இல்லை என்றால் கடையில் அவளைப் பார்த்தபோதே இவள்தான் திகழ்வஞ்சி என்பதைக் கண்டுகொண்டிருப்பான். தோள்வரை, பல வர்ணங்களால் சாயம் பூசப்பட்டிருந்த முடி இப்போது கன்னங்கரேல் என்று இடைவரை தொங்கிக் கொண்டிருந்தது. அதீத முகப்பூச்சில் வேறு மாதிரியாக இருந்த முகம், இப்போது முகப்பூச்சுக்கள் எதுவும் இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. புகைப்படத்தில் மாடல் அழகியாகச் சீரோ சைஸ் என்னும் வகையில் ஒல்லியாக இருந்தவள், குழந்தை பெற்றதாலோ என்னவோ புஷ்டியாக இருக்கிறாள். ஆனால் இவள்தான் திகழ்வஞ்சி என்பதை உற்றுப் பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது. அந்த உதடுகள், விழிகள் அனைத்தும் அவள்தான் திகழ்வஞ்சி என்று சந்தேகத்திற்கு இடமின்றிப் பறைசாற்றிச் சொல்கிறன.

எது எப்படியோ, அவனுக்கு ஆராவமுதன் வேண்டும். ஆனால் அவனுடைய அன்னை சம்மதிக்காமல் அது சாத்தியமல்ல என்பது நிச்சயம்.

என்னதான் அவன் குழந்தையைத் தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுக்க முயன்றாலும், பெற்ற தாயின் அனுமதியின்றி அவனால் பிரித்து எடுத்துச் செல்ல முடியாது. பணத்தை விட்டெறிந்தாலும் கூட, சட்டத்தின் முன்பு அவன் மூன்றாம் மனிதன் தான். அவள் தப்பானவள் என்பதை நிரூபித்து குழந்தையை வாங்குவதற்குள், காலங்கள் ஓடிப் போகும். அந்த நேரத்தில் குழந்தை இருபக்கமும் இல்லாமல் எங்கோ ஒரு இடத்தில் அநாதையாக வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப் படலாம். அதை நினைக்கும் போதே அபராசிதனின் இதயம் குலுங்கியது.

“நோ… நோ… அப்படி எதுவும் நடக்கக் கூடாது. முள்ளில் சிக்கிக் கொண்ட சேலை. கிழியாமல் எடுக்க வேண்டும். அதற்கு முள்ளும் சம்மதிக்க வேண்டும். சேலையும் விட்டுக் கொடுக்க வேண்டும். ஆனால் எப்படி?

யோசனையோடு நெற்றியை நீவிக் கொடுக்க, இங்கே அறையில் விழிகள் மூடிக் கிடந்த திகழ்வஞ்சி மெதுவாகத் தன் கண்களைத் திறந்தாள்.

What’s your Reaction?
+1
33
+1
7
+1
1
+1
1
+1
0
+1
2

Related Post

10 thoughts on “தொலைந்த எனை மீட்க வா…!- 9”
  1. அருமையான பதிவு 😍😍😍😍.
    ஏன்டா ஈரோபயலே உன்ற நொண்ணங்காரனுக்கு நாப்பது வயசு தாண்டி புத்தி புல்லு மேய்க்க போயிருக்கு. ஆனா குழந்தையையும் தாயையும் பிரிக்க நெனைக்கிற உன்ற புத்தியை எங்கடா மேய்ச்சலுக்கு வுட்டிருக்கியாடா🫤🫤🫤🫤🫤🫤🫤🫤.
    டேய் நல்லா தெளிவா தீர்க்கமான முடிவா எடு. அதைய வுட்டுபோட்டு பிரிக்க நெனைச்சே கும்பீபாகம் ரெடி பண்ணிடுவேன் பாத்துக்கோ😎😎😎😎
    ஓ ஓஹ்ஹோ நான் நெனைச்ச மாதிரி இந்த ஈரோப்பய டாக்டர் தான் போல.

    1. அஸ்கு புஷ்கு அப்பளம் வடை. அது எப்படி, சும்மா இருந்தவனை வளைச்சு தன் கைக்குள்ள போட்டுக்கிட்டது அவா. அவனை மயக்கினது அவா. அவன் குழந்தையை பெத்துகிட்டது அவா. ஒரு குடும்பத்தை பிரிச்சது அவா. ஆனா கும்பிபாகம் இவனுக்கா. பிச்சுபோடுவேன் பிச்சு.

      1. 😁😁😁😁 நயணிம்மா கும்பீபாகம் தாயையும் புள்ளையையும் பிரிச்சா தான் ரெடி பண்ணுவேன்.
        இல்லைன்னா அதைய கமுக்கமா ஒரு ஓரஞ்சாரமா படுக்கப் போட்டு வச்சிடுவேன் 😉😉😉😉😉🤪🤪🤪🤪🤪

        1. ஹா ஹா ஹா பக்குன்னு சிரிச்சிட்டேன். நாமலாமட் வில்லங்க என்கிறதை அடிக்கடி மறந்துடுறீங்கபா. நான் என்ன பண்ணட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!