Tue. Apr 15th, 2025

தொலைந்த எனை மீட்க வா…!-3

(3)

அன்று வழமை போலக் குழந்தையை ஈவாவிடம் ஒப்படைத்து விட்டு, வேலைக்கு வந்திருந்தாள் திகழ்வஞ்சி.

இப்போது இலையுதிர் காலம் என்பதால், கால நிலையில் ஏற்பட்ட மாற்றத்தில் அவளுடைய உடலில் ஒரு சில சிக்கல். தொண்டை வலித்தது. முனுக்கென்று மெல்லிய தலைவலி. உடலில் சோர்வு. இது பொதுவாகக் குளிர்காலம் ஆரம்பிக்கிற காலப் பகுதிகளில் பல்லாயிரக் கணக்கான கனடியர்களுக்கு வரும் உடல் நோய்தான். என்ன இவளுக்குக் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அதற்காகவே காய்ச்சல் வராதிருக்க, ஒவ்வொரு வருடமும் இலையுதிர் காலம் பிறக்க முதலே தவறாமல் ஊசி போட்டுக் கொள்வாள். இந்த வருடம் குளிரும் வெப்பமும் என்று மாறி மாறி வந்ததால், உடல் நிலை கொஞ்சம் மந்தமாகவே இருந்தது.

இதைத் தவிர்ப்பதற்கு ஆரோக்கியமான சத்தான உணவு சாப்பிட்டாலே போதும். ஆனால் வரும் பணத்தில் மகனுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களை வாங்கவே கையும் கணக்கும் சரியாக இருக்கிறது. இதில் அவளுக்குச் சத்தாக வாங்குவது என்றால். நடைமுறையில் சாத்தியமில்லையே.

வண்டியைத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு, டாஷ்போடைத் திறந்து மாஸ்க் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டு வெளியே வந்தாள் திகழ்வஞ்சி.

இந்த நேரத்தில் மாஸ்க் போடுவது மிக அவசியம். வாடிக்கையாளர்கள் வரும் போது, இவள் மூக்கை உறிஞ்சினாலோ, இருமினாலோ இவளை ஒரு மாதிரிப் பார்ப்பார்கள். அதுவும் கோவிட் வந்த பிறகு, சும்மா மூக்கை உறிஞ்சினாலே, ஆறடி தள்ளி நிற்பார்கள். இதில் மாஸ்க் அணியவில்லை என்றால், தொலைந்தது.

சோர்வோடு கடைக்குள் நுழைந்தவள், பொருட்களை வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு நிமிர்ந்த போதே இருமல் அவளை அழைத்தது.

“கொக்கு… கொக்கு…” இருமியவள், மாஸ்க்கை கொஞ்சமாகக் கழற்றி, ஒரு பபிள்கம்மை எடுத்து வாயில் போட்டு மென்று உமிழ்நீரை விழுங்க, வறண்ட தொண்டை கொஞ்சம் ஆசுவாசப் பட்டது. திரும்பவும் மாஸ்கைப் போட்டுவிட்டு பட்ரீஷியாவைத் தேட, அவள் இன்னும் வேலைக்கு வந்திருக்கவில்லை.

என்ன இன்னும் வேலைக்கு வரவில்லை. எப்போதுமே இவளுக்கு முன்னதாக வந்து விடுவாளே…? யோசனையோடு, வெளியே வரும் போதே ஒரு வாடிக்கையாளர் பொருட்களை வாங்கத் தயாராக நின்றிருந்தார்.

“ஹாய்…” புன்னகைத்தவள், அவர் வாங்கியதற்கு இரசீது போட்டுக் கொடுத்து புன்னகையுடன் அனுப்பி வைக்க,

“ஆர் யு ஓகே கேர்ள்…” என்றார் அவர் பரிதாபமாக.

“யெஸ் ஐ ஆம்…?” என்றாள் ஙஞணநமன பேட்டவாறு.

“கெட் வெல் சூன் கேர்ள்..” என்றவர், அவளிடம் விடைபெற்றுக் கிளம்ப, இவளும் பொருட்களை எடுத்து வைக்கத் திரும்பிய நேரத்தில் மிக நெருக்கத்தில் நின்றிருந்தான் கிறிஸ்டீன்.

திடுக்கிட்டுப் போனாள் திகழ்வஞ்சி.

சட்டென்று வாய் உலர்ந்து போக, பின்னால் சென்றவள், அங்கிருந்த கவுன்டர் டாப்பில் முட்டி நிற்க, அந்த நயவஞ்சகனோ தன் முன்னுடல் அவளுடைய முன்னுடலோடு அழுந்த முட்டுமாறு அவள் விலகாதிருக்க, அவளுக்குப் பக்கமாகக் ‘கவுன்டர் டாப்போடு’ தன் கரங்களை வைத்து அவளை அணைத்துப் பிடித்தாற்போல நின்று இருந்தான்.

ஒரு கணம் அச்சத்தில் காதுகள் அடைக்க முகம் வெளிறிப் போனது அவளுக்கு. அந்தக் கடையில் யாருமில்லாத நிலையில், அவளும் கிறிஸ்டீனும் மட்டும் தனித்திருந்த வேளை அவனுடைய செயலில் என்ன செய்வது என்று தெரியாமல் மலங்க மலங்க விழித்திருந்தவள், மறு கணம் அவனைத் தள்ளுவதற்காகக் கரத்தை உயர்த்திய நேரம், சட்டென்று அவளுடைய கரத்தை அழுந்தப் பற்றிக்கொண்டான் கிறிஸ்டீன்.

“என்ன… எப்போதும் உன்னைக் காக்கும் பட்ரீஷியாவைக் காணவில்லையே என்று தேடுகிறாயா? இன்று கடவுள் என் பக்கம்… பாவம் அவளுடைய குழந்தைக்கு ஏதோ உடல் நிலை சரியில்லையாம். விடுப்பு எடுத்திருக்கிறாள். ஆக, இங்கே நானும் நீயும் மட்டும்தான்…” என்றவன் அவளை நோக்கித் தன் முகத்தை எடுத்து வரப் பதறிப் போனாள் அவள்.

கால்களோ நடுங்கின. தொண்டை வறண்டது. அவளையும் மீறி உடல் உதறியது.

“கி… கிறிஸ்டீன்…” எச்சரிப்பதற்காகக் குரலை உயர்த்தியவளுக்குப் பாழாய்ப் போன குரல் நடுங்கி தன் பலவீனத்தை அவனுக்குக் காட்டியது.

“ம்… கிறிஸ்… கால் மி கிறிஸ்…” என்றவன் இன்னும் குனிந்து அவளுடைய முடிக் கற்றைகளில் தன் நாசியைப் பொருத்தி, ஷாம்பூ மணத்தை ஆழச் சுவாசித்து,

“யு ஸ்மெல் குட் பேபி…” என்றான்.

அவனுடைய செயலில் வயிற்றைப் பிரட்டியது திகழ்வஞ்சிக்கு. தன்னுடைய பலவீனத்தின் மீது  கோபம் வர, அவனிடமிருந்து விடுபட முயன்றவளிடம்,

“ம்… இந்த நாளுக்காகத்தான் இத்தனை நாட்களாகக் காத்திருந்தேன் தெரியுமா? எப்போது உன்னை நெருங்கினாலும் ஏதாவது சிக்கல். ஒன்றில் அப்பா, இல்லையா அந்தப் பட்ரீஷியா, அவளும் இல்லை என்றால் வாடிக்கையாளர்கள். இன்று யாருமில்லை. நானும் நீயும் மட்டும்தான்…” என்றவன் இன்னும் அவளை நெருங்கி, அவளுடைய காதுகளுக்குள் உதடுகளை எடுத்து வந்து,

“இன்று நீ எனக்குத்தான்…” சொன்னவனிடம் மறுப்பாகத் தலையாட்டினாள் திகழ்வஞ்சி.

“நோ… கி..கிறிஸ்டீன்…! நீ… என்னைத் தவறாக நினைத்துவிட்டாய்… நான்… நீ நினைப்பது போல… எனக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை இருக்கிறது…” அவள் திக்கித் திணறிச் சொல்ல, அவனோ கஞ்சாவும், கொகேய்னும் எடுத்து மஞ்சளாகிப் போன தன் பற்களைக் காட்டி இளித்தான்.

“ம்… கேள்விப்பட்டேன்… ஆனால்… நீதான் உன் கணவன் கூட இல்லையே…? உனக்கும் ஆண் துணை தேவை தானே…? அந்தச் சுகத்தை நான் கொடுக்கிறேன்… நிறையக் கொடுக்கிறேன்… உன் ஆண் நண்பன் கொடுக்காத சுகத்தை இன்பத்தை நான் கொடுக்கிறேன்… கம் வித் மீ..” என்றவன் அவளை முத்தமிட நெருங்கப் பதறிப் போனாள் திகழ்வஞ்சி.

“நோ… கிறிஸ்டீன்… நோ… என்னால்…” சொன்னவளுக்கு அவனிடம் இருந்து வந்த வாசனையில் குமட்டிக்கொண்டு வந்தது.

சத்தியமாக இந்தளவு பயமற்று அவளை நெருங்குவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அதுவும் பொது வெளியில். இப்போது அவள் என்ன செய்வது?

“கிறிஸ்டீன்… லெட் மி கோ… சத்தியமாக நீ ஆசைப்படுவதற்கு என்னால் இணங்க முடியாது…” கடுமையாகச் சொன்னவள், தன் கரத்தை விடுவிக்க முயன்றாள்.

ஆனால் அவனோ, பற்றிய பிடியை விடாமல் இன்னும் அவளை நெருங்க, திகழ்வஞ்சியின் பொறுமை காற்றில் பறக்கத் தொடங்கியது.

“கிறிஸ்டீன்…! மரியாதையாக என்னை விடு… இல்லை என்றால்…”

“இல்லை என்றால்?”

“சத்தியமாக உன் அப்பாவிடம் சொல்லி விடுவேன்…” அதைக் கேட்டதும் கடகடவென்று சிரித்தான் கிறிஸ்டீன்.

“சொல்லு…! நீயாகத்தான் என்னை நெருங்க முயன்றாய் என்று அப்பாவிடம் சொல்வேன். நிச்சயமாக அப்பா நான் சொல்வதைத்தான் நம்புவார். நம்பவில்லை என்றாலும், என் பக்கமாகத் தான் நிற்பார்…” என்றவன் அவளுடைய இடையைப் பற்றத் துள்ளிவிட்டாள் திகழ்வஞ்சி.

ஆத்திரத்தோடு அவனைப் பார்க்க,

“லிசின் பியூட்டி… என்னிடமிருந்து நீ தப்ப முடியாது. உன்னைப் போன்று எத்தனையோ பெண்களைக் கண்டவன் நான். முதலில் முரண்டு பிடித்தவர்கள் எல்லோரும், இறுதியில் என்னிடம் மயங்கியிருக்கிறார்கள்…” என்றவனின் கரம் மேலே உயரப் பற்களைக் கடித்தாள் திகழ்வஞ்சி. அவன் கரம் பட்ட அருவெறுப்பில் முகம் சுருங்க,

“ம… மரியாதையாக என்… என்னை விடு கிறிஸ்டீன்…” அடக்கி வைத்த ஆத்திரத்துடன் அவள் கூற, அது அந்தக் கயவனுக்கு உறைத்ததாகத் தெரியவில்லை.

“இத்தனை அழகான உடலை எத்தனை நாட்களுக்குத்தான் பக்கத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருக்க முடியும்? இதை அனுபவிக்க வேண்டாமா…?” என்றவன் திமிறியவளை தன் உடலால் அழுத்தி அடக்கியவாறு தன் கரங்களை மேலும் மேலே எடுத்துச் செல்ல,

“கிறிஸ்டீன்… கையை எடு… எனக்கு உடல் நலம் சரியில்லை…” அவள் எச்சரிக்க, மாஸ்க் அணிந்திருந்த அவளுடைய முகத்தைக் காமத்துடன் பார்த்தவன்,

“அதனால் என்ன…? எனக்கு வேண்டியது… கழுத்துக்குக் கீழே தானே…?” என்றான் பார்வையைக் கீழு எடுத்துச் சென்று.

இந்தக் கலவரத்திற்கிடையில் ஒருவன் கடைக்குள் நுழைந்ததையோ, அவன் தனக்குத் தேவையான பொருட்களை எடுத்தவாறு கவுன்டரை நோக்கி வந்ததையோ இருவரும் கவனிக்கவில்லை.

கிறிஸ்டீனின் கரம், மெல்ல மெல்ல அபாயகரமான இடத்தை நோக்கி நகரத் தொடங்க, அவனுடைய பிடியிலிருந்து தப்ப முடியாத தன் நிலையை எண்ணி வெறுத்தவளுக்கு மெதுவாக அச்சம் கிளம்பத் தொடங்கியது. இந்த நேரம் பார்த்துக் கடைக்குள் யாரும் இல்லையே என்கிற கலக்கம் அவளைச் சூழ்ந்து கொள்ள, எப்படித் தப்புவது என்று புரியாமல் சுத்தவரப் பார்த்தாள்.

இத்தனைக்கும் முழங்காலை மடக்கி அவனுடைய ஆண்மையை அடிக்கக் கூட முடியாத வகையில் அவனுடைய பலமிக்கக் கால்கள் அவளுடைய கால்களை அழுத்தி நின்றிருக்க, அதை விடுவிக்க முயன்றுகொண்டிருந்த நேரம்.

“எக்ஸ்கியூஸ்மி…” என்கிற அழுத்தமான ஆழமான கரகரப்பு நிறைந்த குரல் மறுபக்கம் இருந்து வந்தது.

கடவுள்தான் அவளுக்குத் துணையாக அவனை அனுப்பினாரோ. அதுவரை இருந்த அச்சமும் பதட்டமும் அடங்கிப் போக, திரும்பிப் பார்த்தாள் திகழ்வஞ்சி.

அங்கே நெடு நெடு என்று குறைந்தது ஆறடி நான்கு அங்குல உயரத்தில், அதற்கேற்ற உடல் அமைப்போடு இராணுவ வீரன் போல ஒருவன் நின்றிருந்தான். பார்க்கும் போதே தெரிந்தது. நிச்சயமாக அவன் தென் ஆசியாவைச் சேர்ந்தவன் என்று. அவன் எந்த இனமாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். தற்போது அவளைக் காக்க வந்த கடவுள் அவன்தான்.

பெரும் நிம்மதியும், நன்றியுமாக அவனை ஏறிட, அவனோ, ஏளனத்துடன் உதடுகள் வளைய அவர்களைப் பார்த்தான்.

“மன்னிக்கவேண்டும். உங்கள் இன்ப நிலையைக் குலைத்ததற்காக வருந்துகிறேன்… ஆனாலும் எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. அதனால், என்னைக் கவனித்து அனுப்பிவிட்டு உங்கள் நாடகத்தைத் தொடர்ந்தால் பெரிதும் நன்றி உடையவனாக இருப்பேன்…” அந்தக் குரலில்தான் எத்தனை எகத்தாளம், ஏளனம்.

ஆனாலும் அவளுக்கு அவன் சொன்னது எதுவும் உறைக்கவில்லை. மாறாகப் பெரும் நிம்மதியுடன் கண்களை இறுக்க மூடி, அதுவரை உள்ளே இழுத்து வைத்திருந்த மூச்சை வெளியே தள்ள, கிறிஸ்டீனோ இடையில் வந்த தடங்கலில் ஏற்பட்ட எரிச்சலில் கோபம் கொண்டவனாகச் சட்டென்று அவளை விட்டு விலகி, மறுபக்கம் நின்றிருந்தவனை முறைத்தான். பின் பல்லி போல கவுன்டர் டாப்பின் மீது ஒட்டி நின்றவளை ஏறிட்டு,

“இவனை அனுப்பிவிட்டு அலுவலக அறைக்கு வா…!” என்கிற கட்டளையோடு விலகிச் சென்றுவிட, அதற்கு மேல் நிற்க முடியாமல் அப்படியே தரையில் சரிந்து அமர்ந்து விட்டாள் திகழ்வஞ்சி.

அதை, அந்த வாடிக்கையாளனும் எதிர்பார்த்து இருக்கவில்லை போல. அவள் சரிந்ததும் தன் கரத்திலிருந்த பொருட்களை அங்கிருந்த கவுன்டரில் வைத்துவிட்டு இரண்டெட்டில் அவளுக்கு அருகாமையில் வந்துவிட்டிருந்தான்.

வெளிறிய அவளுடைய முகத்தைக் கண்டவன், “யு ஓகே…?” என்றவாறு அவளுக்கு முன்பாக ஒற்றைக்கால் மடித்து அமர்ந்து கொள்ளத் திகழ்வஞ்சியோ பதில் சொல்லும் திராணியற்று உடல் நடுங்க ஆம் என்பது போலத் தலையாட்டினாள்.

திகழ்வஞ்சிக்கும் உதறும் உடலை எப்படிச் சமப்படுத்துவது என்று சுத்தமாகத் தெரியவில்லை. என்னதான் தான் திடமானவள், எதையும் சர்வ சாதாரணமாகக் கையாளும் தகமை கொண்டவள் என்று தனக்குள் இறுமாப்புடன் எண்ணியிருந்தாலும், இத்தகைய ஒரு சம்பவத்தில் அந்தத் திடமும், உறுதியும் அடிபட்டுப் போவதைக் கண்டு கலங்கிப் போனாள்.

தன்னை மறந்து கரத்தைத் தூக்கிப் பார்க்க, அது மின்சாரத்தைத் தொட்டது போல உதறிக் கொண்டிருந்தது. அதை அவனும் உணர்ந்து கொண்டான் போல, சட்டென்று எழுந்தவன் அங்கும் இங்கும் பார்த்தான். அவளுக்குப் பக்கத்தில் ஒரு தட்டில் கிடந்த பழச்சாறு அடங்கிய போத்தலைக் கண்டதும் அவளைத் தாண்டி எட்டி எடுக்க முயல, அவன் மேனியில் இருந்து வந்த வாசனையை நுகர்ந்த திகழ்வஞ்சிக்கு அதுவரையிருந்த பதட்டம் மெல்ல மெல்ல வடியத் தொடங்கியது.

காரணம் இன்றியே அவனுடைய உடலின் வாசனை அவளுடைய ஆழ்மனதிலிருந்த அச்சத்தைக் கரைக்க, அவனோ அந்தப் பழச்சாற்றின் மூடியைக் கழற்றிவிட்டு அவளிடம் நீட்டிய நேரம், அவளுடைய கரங்களோ நடுக்கத்துடன் அதை வாங்க முயன்றன.

அவள் நடுக்கத்தை உணர்ந்தவனாக, அவளுடைய முகத்தைப் பற்றியவன், அவளுடைய காதில் கொழுவியிருந்த மாஸ்க்கை மெதுவாகக் கழட்ட, அதுவரை அந்த கவசத்திற்குள் மறைந்து இருந்த அவளுடைய மதி முகம் சற்று வெளிப்பட, அம் முகத்தைக் கண்டு ஒரு கணம் புருவங்களைச் சுருக்கினான் அவன்.

கூடவே அவளுடைய வாயில் போத்தலைத் திணிக்க, மறுக்காமல் கொஞ்சம் குடித்தாள் திகழ்வஞ்சி.

இப்போது கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தது அவளுக்கு.

“யு… ஓகே…?” கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள், ஆம் என்று தலையை அசைத்துவிட்டு மீண்டும் அவளுடைய முகத்தை அவன் ஆராய்ச்சியாகப் பார்ப்பதற்குள் மாஸ்கைப் போட்டுவிட்டு,

“தா… தாங்ஸ்…” என்றாள்.

“மை பிளஷர்..” என்றவன் விலக, இவளும் எழ முயன்றாள். ஆனால் அதிர்ச்சியிலிருந்து இன்னும் விலகாத தேகம் ஒத்துழைக்க மறுத்தது. நடுங்கிய கால்கள் வலுவிழந்து சரிய, சட்டென்று அவளுடைய கரத்தைப் பற்றி நிலை நிறுத்த முயன்றான் அந்தப் புதியவன்.

“ஈசி… ஈசி…” என்று அவன் கூறும்போதே, திகழ்வஞ்சி அவனுடைய மார்பில் சாய்ந்து விட்டிருந்தாள்.

ஏன் சாய்ந்தாள், எதற்குச் சாய்ந்தாள் என்று கேட்டால், சத்தியமாக அவளுக்குப் பதில் தெரியாது. ஆனால் அந்த நேரத்தில் அவளுக்கு அவன் கடவுளாகவே தெரிய, அந்தக் கடவுளிடம் சரணாகதி அடையும் பக்தையாக அவன் மீதே விழுந்தவளின் கரங்களோ அவனுடைய மார்புச் சட்டையைக் கசக்கிப் பிடித்துக் கொண்டு தன்னை ஆசுவாசப் படுத்த முயன்றாள்.

அந்தக் கடிய மார்பும், அந்த ஆண் வாசனையும் அவளிடம் என்ன சேதி சொன்னதோ, மெல்ல மெல்ல அவளுடைய இதயம் தன் நிலை அடைந்தது.

ஆனால் அவனோ அவளை அணைத்தானில்லை. தொட்டானில்லை. குனிந்து தன் மார்பில் விழுந்து கிடந்தவளைப் பார்த்திருக்க, எத்தனை நேரமாக அப்படியே நின்றிருந்தாளோ, மெல்ல மெல்ல சுயத்திற்கு வந்தாள் திகழ்வஞ்சி.

அப்போதுதான் அந்த ஆண்மகனின் மார்பின் மீது தான் விழுந்திருப்பதே அவளுக்கு உறுத்தியது.

சட்டென்று அவனை விட்டு விலகியவள்,

“சா… சாரி…” என்றபோதே அவளுடைய கண்கள் கலங்கிவிட்டிருந்தன.

“இட்ஸ் ஓக்கே…” என்றவன் அவளுடைய விழிகளை அழுத்தமாகப் பார்த்தான். சற்று முன், அந்த மாஸ்கைக் கழற்றிய போது பார்த்த அந்த முகம், இந்த விழிகள்… அதை எங்கோ கண்டது போல அவனுக்குத் தோன்றியது. ஆனால் சட்டென்று நினைவு வர மறுத்தது.

அதையே அவளிடம் கேட்கவும் செய்தான் அந்தப் புதியவன்.

“நாங்கள் எப்போதாவது சந்தித்திருக்கிறோமா என்ன?” அவன் வியந்து கேட்க, திகழ்வஞ்சியும் குழப்பத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அழகாய் கன்ன உச்சி இழுத்து வாரப்பட்ட கரிய நிற சுருள் மயிர்க்கற்றைகள். எதிராளியின் உள்ளத்தைச் சுலபத்தில் கண்டு கொள்ளும் கூரிய விழிகள். செதுக்கிய நாசி. மெல்லிய குமிழ் சிரிப்போடு ஓரம் நெளிந்த உதடுகள். கொஞ்சம் நீள் சதுர முகம்… பெண்களைக் கவரும் இறுகிய திடகாத்திரமான தேகம். உடற்பயிற்சி அதிகம் செய்வான் என்பதைப் பறைசாற்றும் வகையில் ஷேர்ட்டையும் மீறித் திமிறிய தசைக் குன்றுகள். பரந்த மார்பு. மொத்தத்தில் உலக ஆண் அழகனாய்த் தேர்வு செய்யக் கூடிய வகையிலிருந்தான் அவன். நிச்சயமாக இத்தனை கம்பீரமான ஆண்மகனை அவள் கண்டதில்லை.

இல்லை என்று மறுப்பாகத் தலையை அசைத்தவள், “இ… இல்லையே…?” என்றாள் சற்று முன் நடந்த சம்பவத்திலிருந்து இன்னும் வெளியே வராதவளாக. அதைப் புரிந்து கொண்டவனாக, அவளைப் பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றைச் சிந்தியவன்,

“நான் சொல்கிறேன் என்று தப்பாக நினைக்காதீர்கள். நீங்கள் கலங்கி நிற்பதைப் பார்த்தால், அவன் உங்களுடைய சம்மதத்தோடு தொட்டது போலத் தெரியவில்லை…” என்று அவன் சொல்ல, இவளோ பதில் சொல்லாமல் உதடுகள் கடித்துத் தலை குனிந்து நின்றாள். தன் யூகம் சரி என்று புரிந்துபோக,

“பிடிக்காத ஒருத்தன் பக்கத்தில் வருவது தெரிந்தும், அவனை வரவிட்டது உங்களுடைய தவறு. இத்தகைய ஒருத்தன் உங்களோடு வேலை செய்கிறான் என்று தெரிந்தும் அதை அறிவிக்க வேண்டியவர்களுக்கு அறிவிக்காமல் அவனுக்கு மேலும் வாய்ப்புக் கொடுத்தது மிகப் பெரும் தவறு. இன்னும் அவனைக் காவல்துறையிடம் பிடித்துக் கொடுக்காமல் அமைதியாக இருப்பது உங்களுடைய முட்டாள்தனம்… இன்று உங்களுக்கு நடந்தது நாளைக்கு இன்னொரு பெண்ணுக்கும் நடக்கலாம்… அதற்கான ஆரம்பப் புள்ளியை நீங்கள் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்… இப்போதும் என்னால் காவல் துறையை அழைத்து இங்கே நடந்ததைக் கூறி விட முடியும். ஆனால்… பாதிக்கப்பட்ட நீங்கள் சொல்வதுதான் சரியாக இருக்கும்… இதோ பாருங்கள், எப்போதுமே உங்களைக் காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள். நீங்கள்தான் உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்.” என்றவன், அதற்கு மேல் அங்கிருக்காமல் விலகிச் செல்ல, அதுவரை அவன் சொன்னதைப் பிரமை பிடித்தவள் போலக் கேட்டுக்கொண்டிருந்தவள், அவன் சென்றதும், அதற்கு மேல் அந்தக் கடையில் ஒரு நொடி கூட நிற்க முடியாமல் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு ஒரே ஓட்டமாகக் காரில் ஏறி தன் வீடு வந்து சேர்ந்தாள் திகழ்வஞ்சி.

 

What’s your Reaction?
+1
33
+1
6
+1
2
+1
1
+1
1
+1
4

Related Post

10 thoughts on “தொலைந்த எனை மீட்க வா…!-3”
  1. அருமையான பதிவு 😍😍😍😍.
    அந்த கொரங்கு கிறிஸ்டிய சும்மா வுட்டுபோட்டு வந்துட்டாளே வஞ்சி. கைய காலை முறிச்சிருக்கனும் அவனைய 😤😤😤😤😤😤😤

    1. என்னத்தை உடைக்கிறது. அதுக்கு பலம் என்கிற வஸ்து இருக்கணும்ல

  2. அப்ப வானத்துக்கும் பூமிக்கும் வளந்தவன் தான் ஈரோபயலா🙄🧐🧐🧐🧐🧐
    வஞ்சி தப்பிக்கறது இவன் கொஞ்சூண்டு ஹெல்ப்பூ பண்ணுனதாலே நாம ஓகே பண்ணிக்கனுமா?
    என்ன பண்றது????🙄🙄🙄

  3. வஞ்சி அடுத்து என்ன முடிவு எடுப்பாள்
    அந்த கொங்கு கிறிஸ்டி பயல் என்ன செய்ய போகிறாள் பார்க்கலாம்

    1. என்னத்தை சொல்ல… அந்த கிறிஸ்டி பயல் தலை எழுத்தை என்னணு சொல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!