Fri. May 23rd, 2025

தொலைந்த எனை மீட்க வா…!- 26

(26)

நேரம் தன் பாட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தது.

அபராசிதன் அவளை அவனுடைய அறையில் விட்டுவிட்டுச் சென்று நான்கு மணி நேரம் கடந்திருந்தது. இன்னும் அவனைக் காணவில்லை.

நேரம் போகப் போகத் திகழ்வஞ்சிக்கு நடுக்கமே பிடித்துவிட்டது. இத்தனை நேரமாகவா சிகிச்சை செய்கிறார்கள்? ஒரு வேளை அவருக்கு ஏதாவது…? அதற்கு மேல் நினைக்கக் கூட முடியாமல் நடுங்கிவிட்டாள் அவள்

வாழ்க்கை முழுவதும் எதிர்மறையாகவே பார்த்து அனுபவித்தவளுக்கு நேர்மறையாக யோசிக்க முடிந்திருக்கவில்லை. ஒரு கட்டத்தில் இருக்கையில் அமர்ந்திருக்க முடியாமல், அவனுடைய அறையில் எழுந்து நடக்கத் தொடங்கினாள். பின் வெளியே வந்து தாழ்வாரத்தில் நடந்தாள். மீண்டும் அறையில் சென்று அமர்ந்தாள். எழுந்து நடந்தாள். இப்படி நேரத்தை நெட்டித் தள்ளியதுதான் மிச்சம்.

‘என்ன இன்னும் அவனைக் காணவில்லை…?” குழம்பி நின்ற நேரத்தில் அவனுடைய அறைக் கதவு திறக்கத் திரும்பிப் பார்த்தாள் திகழ்வஞ்சி.

வந்தது அபராசிதன்தான். அவனை நோக்கிப் பாய்ந்தவள், அவனுடைய அங்கியின் மேல் பக்கத்தை இறுகக் கசக்கிப் பற்றி,

“அ… அப்… உ… உங்கள் அத்தானுக்கு என்ன ஆயிற்று?” அவள் முடிக்கவில்லை, அவளை இழுத்து இறுக அணைத்துக்கொண்டான் அபராசிதன். சத்தியமாக அவனுடைய இந்த செயலை அவள் எதிர்பார்க்கவில்லை.

ஏன் அணைக்கிறான். அப்பாவுக்கு… ஏதாவது… நடந்திருக்குமா? திகில் கொண்டவளாக, தொங்கிய கரங்களை உயர்த்தி அவனுடைய தோள்களைப் பற்றி அழுத்தியவள்,

“அ.. அபராசிதன்… எ…என்னாச்சு… அவருக்கு?” அவள் முடிக்க முடியாமல் திணற, அவனுடைய முகமோ, இப்போது அவளுடைய தோள்வளையில் புதைந்துகொண்டது. அவனுடைய கரங்களோ, மலைப்பாம்பென அவளை இறுக அணைத்துத் தன்னுள் புதைத்துக் கொள்ள முயல, அவனுடைய அந்த அணைப்பில் எலும்புகள் முறியாது போனது அதிசயமே.

“அப… அபராசிதன்…?” தன்னை மறந்து அவனுடைய முதுகை வருடிக் கொடுத்து

“என்ன ஆச்சு…? தயவுசெய்து சொல்லுங்களேன்” என்று இவள் தவிப்புடன் கேட்க, இப்போது சற்று மெதுவாக அசைந்தான் அவன். அவளை விட்டு விலகியவனின் விழிகள் சிவந்திருக்கக் கண்ணீர் மெல்லிய படலமாகக் கோர்த்திருந்தது. அதுவரை அழுத்தமாக இருந்த உதடுகள் மெதுவாக விரிந்து மெல்லிய புன்னகையைச் சிந்தின.

“திகழ்… நாங்கள் அவரைக்… காப்பாற்றி விட்டோம். இப்போது அவர் நன்றாக இருக்கிறார். உடனேயே பைபாஸ் சிகிச்சை செய்யவேண்டிய அவசியம் அதனால்தான் இத்தனை நேரம் எடுத்தது. இனி பயப்பட எதுவும் இல்லை…” என்று அவன் சொல்ல, மறு கணம் அவனை இறுக அணைத்துக் கொண்டாள் திகழ்வஞ்சி.

கண்ணீரோ அவள் இஷ்டமின்றி வழிந்து அவனுடைய வெண்ணிற அங்கியை நனைக்க, அவனுக்கும் அவளுடைய அந்த அணைப்புத் தேவையாகத்தான் இருந்தது போல. அவளை இறுக அணைத்து அவள் உயரத்திற்கு ஏற்பக் குனிந்து அவளுடைய தலையில் முகத்தைப் புதைத்தவன்,

“எத்தனை நிம்மதியாக இருக்கிறது தெரியுமா? ஓ காட்… அவருக்கு மசிவ் அட்டாக்… இன்னும் சில நிமிடங்கள் தவறியிருந்தால், இப்போது.. இப்போது அவருக்குப் போர்ஸ்மோட்டம்தான் நடந்திருக்கும்… அவருக்கு சிகிச்சை செய்யும் போதே என் கரங்கள்.. முதன் முறையாக நடுங்கின தெரியுமா? அந்த நிலை… அந்த நிமிடம்… அந்த விநாடி. நான் நானாகவே இல்லை…” என்றவன், அவளை இன்னும் தன்னோடு இறுக்கி,

“அத்தான் இப்போது உயிரோடு இருப்பதற்குக் காரணமே நீதான் திகழ். நீ மட்டும் அங்கில்லாமல் இருந்திருந்தால்… அந்த நேரத்தில் நீ மட்டும் விரைவாகச் செயற்படாது போயிருந்தால்? யோசித்துப் பார்க்கவே முடியவில்லை.” என்றவன் திரும்ப அவளைத் தன்னிடமிருந்து பிரித்து அவளுடைய முகத்தைக் கரங்களில் ஏந்தி,

“நன்றி திகழ்… என் இதயத்திலிருந்து சொல்கிறேன். நன்றி. நீ அத்தானின் வாழ்க்கையை மட்டுமில்லை, என் அக்காவின் வாழ்க்கையையும் திரும்பக் கொடுத்திருக்கிறாய்…” அவன் சொல்ல, அடிபட்ட பாவனையோடு அவனை விட்டு விலகி நின்றுகொண்டாள் திகழ்வஞ்சி.

‘இல்லையே… அவருடைய இந்த நிலமைக்குக் காரணம் முழுக்க முழுக்க அவள் அல்லவா. இதுமட்டும் அவனுக்குத் தெரிந்தால்… இந்தச் சுமுகமான நிலை வேறுமாதிரியாகியிருக்குமே… இவ்வளவு ஏன், இவள்தான் அவருடைய மகள் என்று தெரிந்தால் என்ன செய்வான்?’ நினைக்கும் போதே உடல் உதறியது திகழ்வஞ்சிக்கு.

“நா… நான் ஒன்றும்… நான் ஒன்றும் பெரிதாகச் செய்யவில்லை அபராசிதன்… நீங்கள் என்ன சொன்னீர்களோ அதைத்தான் செய்தேன்” முனங்கியவளுக்கு ஏனோ அவனுடைய முகத்தைக் கூடப் பார்க்க முடியவில்லை. பெரும் குற்ற உணர்ச்சி அவளை வதைத்தது. தடுமாற்றத்தோடு அவனை விட்டு விலகியவள்,

“உங்கள் அத்தான் என்றால் மிகவும் பிடிக்குமோ?” என்றாள் மென்மையாக.

“நான் சிறுவனாக இருந்த போது நிறையக் கஷ்டப் பட்டோம் திகழ்… அதிலிருந்து எங்களை மீட்டது அத்தான்தான்… இன்று இந்தளவு வெற்றிகரமாக நாங்கள் இருக்கிறோம் என்றால், அதற்கு காரணம் அவர்தான்… அவர் எங்களுக்காக நிறையவே செய்திருக்கிறார்…” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவனுடைய அறைக் கதவு சடார் என்று திறந்தது.

திரும்பிப் பார்க்க ஈஷ்வரிதான்.

கண்கள் கலங்க, உடல் நடுங்க, நின்றிருந்தார் ஈஷ்வரி. அங்கே நின்றிருந்த தம்பியைக் கண்டதும், ஓடிப்போய் அவனுடைய கரத்தைப் பற்றியவர்,

“அபரா…! அவர்… அவருக்கு இப்போது எப்படியிருக்கிறது…? நேற்று உன் வீட்டிற்கு வந்து போனதிலிருந்து அவர் அத்தனை சரியில்லை. இரவு வேறு தூங்காமல் விழித்தே இருந்தார். நான் ஒருத்தி, அப்போதே கவனித்திருந்தால், இந்த நிலை வந்திருக்காது… கடவுளே…! அவருக்கு மட்டும் ஏதாவது நடந்திருந்தால்…? அதை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை…” என்று அழுகையினூடே அவர் சொல்ல, திகழ்வஞ்சியோ ஈஸ்வரியையே இமைக்காமல் பார்த்து நின்றாள்.

அவருடைய அழுகையிலும், துடிப்பிலும் இருந்த உண்மையும் காதலும் அவளை வாயடைக்கச் செய்தது. அவளுக்குத் தெரிந்து அவளுடைய தாய் ஒரு போதும் தந்தையைப் பற்றி நல்லதாக ஒரு வார்த்தைகூடச் சொன்னதில்லை. சொல்லப் போனால் அவர்களுக்கு விஜயராகவன் மாபெரும் வில்லன். ஆனால் ஈஷ்வரியோ இப்படித் தவிக்கிறாரே! துடிக்கிறாரே! இவரால் எப்படி முடிகிறது? சொல்லப்போனால் இரு பெண்களுக்கும் தந்தை செய்தது துரோகம்தான். ஈஷ்வரியைப் பொறுத்தவரை, காதலித்தவர் அவரை விட்டு ஒருத்தியை மணந்து கொண்டார் என்கிற வெறுப்பு இருந்திருக்கத்தானே வேண்டும். ஆனால் இவர்கள் உயிரையும் கொடுக்கும் அளவு அல்லவா விஜயராகவன் மீது காதலை வைத்திருக்கிறார்? இந்தக் காதலைத் துறக்க முடியாமல்தான் தந்தை இவர்களை விட்டுவிட்டு ஈஷ்வரியிடம் வந்தாரோ? காதலுக்கு அந்தளவு சக்தி இருக்கிறதா என்ன?’ வியந்து நிற்கையில், அபராசிதனோ, அழும் தன் சகோதரியை இழுத்து அணைத்துக்கொண்டான்.

“ஷ்… அக்கா… என்ன இது…? அத்தானுக்கு ஒன்றுமில்லை… அவர் இப்போது நன்றாக இருக்கிறார்…” என்று தேற்றியவனின் கண்ணிலும் வாட்டம் அப்பட்டமாகத் தெரிய, அதைக் கண்ட திகழ்வஞ்சியின் இதயமும் கசங்கிப் போனது.

அவன் வருந்தினால், இவள் ஏன் நொந்து போகிறாள். இதயம் ஏன் வலிக்கிறது? சொல்லப் போனால் அவளுடைய நிம்மதியான வாழ்க்கையைக் குலைக்க வந்தவன் என்று வெறுப்பல்லவா தோன்ற வேண்டும். கோபம் வரவேண்டும். ஆனால் இது எதுவும் வர மறுக்கிறதே? இதோ அவனுடைய தவிப்பு மாற்றுக் குறையாமல், அவளிடமும் தோன்றுகிறதே.. இது என்ன விந்தை?’ குழம்பித் திணறி நிற்கையில் அவளுடைய கரத்தை ஒரு கரம் பற்றியது.

நிமிர்ந்து பார்த்தாள் திகழ்வஞ்சி. ஈஷ்வரிதான், அவளுடைய கரங்களைப் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டிருந்தார். பதறிப் போனாள் திகழ்வஞ்சி. அவசரமாகத் தன் கரங்களை இழுக்க முயல, அவரோ அவளை நன்றியோடு பார்த்தார்.

“எனக்கு உன் மீது தீராத வெறுப்பு இருக்கிறது. கோபம் இருக்கிறது. என் தம்பியின் வாழ்க்கையை நாசமாக்கியவள் என்கிற ஆத்திரம் இருக்கிறது. ஆனால், என்னுடைய ராகவன் இப்போது உயிரோடு இருக்க நீதான் காரணம் என்று அபரன் சொன்னான்… உனக்கு… உனக்கு நான் எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. நீ நம்புகிறாயோ இல்லையோ… ராகவன் இல்லை என்றால்… நானும்… நானும் இல்லை… என் கோபத்தை வெறுப்பை விட்டுச் சொல்கிறேன்… நான் உனக்குக் கடமைப் பட்டிருக்கிறேன்… நன்றிமா..!” என்று கலங்கிய விழிகளோடு அவர் சொல்ல திகழ்வஞ்சிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

முன்தினம்தான் அவள் மீது அத்தனை வெறுப்பும் கோபமும் காட்டினார். ஆனால் அதை ஒத்துக்கொண்டு, அதை மறந்து நன்றி சொல்வது என்றால், மனித குணத்திற்கு அது சாத்தியமா என்ன? நம்பமுடியாத தன்மையோடு ஈஷ்வரியைப் பார்த்தவள் திரும்பி அபராசிதனையும் ஏறிட, அவனோ அவளை மெல்லிய புன்னகையுடன் பார்த்து விழிகளை மூடித் திறந்து தன் நன்றியையும் அவளுக்குச் சொல்ல, கூனிக் குறுகிப் போனாள் திகழ்வஞ்சி.

அத்தனை தப்பையும் செய்தவள் அவள். ஆனால் அவர்கள் மன்னிப்புடன் சேர்த்து நன்றியையும் அல்லவா சொல்கிறார். இதற்குத் தகுதியானவள்தானா இவள்? ஐயோ இவர் மீதிருந்த கோபம் அனைத்தும் காணாமல் போகிறதே. அம்மாவிடமிருந்து அப்பாவைப் பிரித்தவர் என்கிற ஆத்திரம் மறைந்து போகிறதே. தவித்தவள் அவசரமாகத் தன் கரங்களை அவர் பிடியிலிருந்து விலக்கி,

“நா… அது வந்து… என்னால்… நான் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை…” முனங்கியவள் அவசரமாக அங்கிருந்து விலகிச் செல்ல, ஈஷ்வரி முதன் முறையாகக் கோபம் இன்றி நன்றிப் பெருக்கோடு சென்று கொண்டிருந்த திகழ்வஞ்சியையே பார்த்திருந்தார்.

“என்னக்கா…?” அபராசிதன் அவரின் தோளில் கரம் பதித்துக் கேட்க,

“ஒன்றுமில்லைடா… நான் நினைத்ததை விட இந்தப் பெண் நல்ல பெண்ணாக இருக்கிறாள்…” என்றார் தன்னை மறந்து.

“அதனால்தான் இவளைத் திருமணம் முடிக்க நானும் சம்மதித்தேன்…” சொன்ன தம்பியை கலக்கத்தோடு பார்த்தார் ஈஷ்வரி.

என்னதான் தன் கணவன் காப்பாற்றுப்பட திகழ்வஞ்சியும் ஒரு காரணம் என்கிற நன்றியோடு நின்றிருந்தாலும், தன் தம்பியின் வாழ்க்கை, திகழ்வஞ்சியால் கேள்விக்குறியாகிவிடுமோ என்கிற பெரும் தவிப்பும் அவரிடம் எழவே செய்தது.

நாளை அவன் உடைந்து நின்றால், துடித்துப் போவதும் அவர்தானே.

“நீ அமலன் போல இல்லை. சொல்லப் போனால் என்னை விட எது சரி, எது தவறு என்று உன்னால் சரியாகக் கணிக்க முடியும். அந்த நம்பிக்கையில்தான் உன்னுடைய முடிவுக்கு நான் சம்மதம் சொன்னேன். ஆனால் இன்னும் என்னால் முழுமனதாகச் சம்மதிக்க முடியவில்லை அபரா… உள்ளே என்னவோ உறுத்துகிறது…” அவர் சொல்ல, தன் சகோதரியின் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்தவன்,

‘எல்லாம் நல்லதே நடக்கும்கா…’ பார்த்துக் கொள்ளலாம் என்றான் சமாதானமாக.

 

(27)

மூன்று நாட்கள் அதன் போக்கில் கடந்து சென்றன. அந்த மூன்று நாட்களும் அபராசிதன் மருத்துவமனையில்தான் கிடந்தான். வீட்டிற்கும் வரவில்லை. விட்டில் தங்கியிருந்த திகழ்வஞ்சிதான் நெருப்பில் நிற்பது போலத் தவித்துப் போனாள்.

ஏன் அவன் வீடு வரவில்லை? விஜயராகவனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ? அதனால்தான் அவன் வீடு வரவில்லையோ? யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது? நேரடியாக அவனை அழைத்துக் கேட்கலாமா? பலமுறை யோசித்து விட்டாள் ஆனால் செயற்படுத்த முடியாமல் எதுவோ அவளைத் தடுத்தது. இது சார்ந்து கமலாவிடம் கூடக் கேட்டுப் பார்த்தாள்.

அதற்குக் கமலா சொன்ன பதில்,

“டாக்டர் ஏதாவது அவசரம் என்றால் சில நாட்கள், ஏன் வாரக்கணக்கில் கூட வீட்டிற்கு வரமாட்டார். கொரோனா வந்த நேரம் ஆறு மாதம் மருத்துவமனையில்தான் இருந்தார்? ராகவன் ஐயாவுக்கும் உடல் நிலை சரியில்லை என்பதால், அங்கே தங்கிப் பார்த்துக் கொள்கிறார் போல…”

“ராகவன் ஐயாவுக்கு எப்படி இருக்கிறதாம் கமலா…”

“தெரியவில்லையேமா…?”

“அவரை அழைத்து விசாரிக்கலாம் தானே…”

“யாரை சொல்கிறீர்கள்?” கமலா வியந்து போய்க் கேட்க,

“அவரைத்தான்… டாக்டரை…” என்றாள் திகழ்வஞ்சி தயக்கமாக.

“ஐயோ… அப்படியெல்லாம் எதுவும் செய்து விடாதீர்கள். டாக்டருக்கு யாராவது தேவையில்லாமல் அழைத்தால் சுத்தமாகப் பிடிக்காது. ஏதாவது அவசரம் என்றால் மட்டும்தான் அவரை அழைக்க வேண்டும் என்று கட்டளை…” கமலா சொல்ல, முகம் வாடிப்போனாள் திகழ்வஞ்சி.

ஆக உடனே அவனைப் பார்ப்பது சாத்தியம் இல்லை… அதை நினைக்கும் போதே உள்ளம் சோர்ந்து போனது. கூடவே திரும்பத் திரும்பத் தந்தைக்கு என்னானது என்று கேட்கவும் பயமாக இருந்தது. அதை வைத்தே அவன் சந்தேகப்பட்டு விட்டால்? எதுவாக இருந்தாலும் ஒரு முறையாவது வீட்டிற்கு வந்து போகலாமே. அவனையாவது பார்த்து நிம்மதியடைவாளே…’ நினைத்தவள் திடுக்கிட்டுப் போனாள்.

இப்போது என்ன நினைத்தாள்? அவனைப் பார்த்து நிம்மதி அடைவாளா… இப்போது ஏன் இப்படி நினைத்தேன். குழம்பியவளுக்கு அப்போது தான் ஒன்று உறைத்தது.

சொல்லப்போனால் இந்த மூன்று நாட்களுமே அவள் வாடித்தான் இருக்கிறாள். அது இராகவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் இல்லை. அது அபராசிதனைப் பாராமல் இருப்பது… அந்த உண்மை புரிய அதிர்ந்து போனாள் திகழ்வஞ்சி.

‘இது என்ன? கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கணக்காகப் பைத்தியம் போல எதை எதையோ யோசிக்கிறேன்?’ தலையை உலுப்பி அந்த நினைவை புறந்தள்ள முயன்றவள், ‘அப்படி எதுவுமில்லை. அங்கே விஜயராகவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதால்தான் என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.’ என்று அதையே திரும்பத் திரும்பச் சொல்லி அதையே மனதில் இருத்த முயன்றாள்.

ஆனால் குரங்கை நினைக்காமல் மருந்து குடித்தவன் கதைதான் அவள் நிலையானது.

சதா அவன் நினைவு மனதை அரித்துக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் அவனை அழைத்தும் விட்டாள்.

ஒரே ஒரு முறைதான் அவனுடைய கைப்பேசி இலக்கத்தை விஜயராகவனின் கைப்பேசியில் பார்த்திருந்தாள். அப்படியே பசுமரத்தாணி போல மனதில் பதிந்து விட்டது அவனுடைய கைப்பேசி இலக்கம்.

ஆனால் அவளுடைய அழைப்பை அவன் எடுத்தானில்லை. பொறுமை இழந்து மீண்டும் அழைத்துப் பார்த்தாள். அவன் எடுக்கவில்லை. இவளுக்குத்தான் அவன் மீது கோபம் வந்தது. ஒரு முறையாவது அங்கே என்ன நடக்கிறது என்பதையாவது சொல்லலாமே. இல்லை வீட்டிற்கு ஏன் வரவில்லை என்பதற்கான காரணத்தையாவது சொல்லலாம். இது எதுவும் இல்லாமல் கிணற்றில் விழுந்த கல்லாக இருந்தால் என்னவென்று நினைப்பது? எரிச்சல்தான் வந்தது அவளுக்கு.

அன்று இரவு எட்டு மணியளவில், ஆராவை உறங்க வைத்துவிட்டு, கைக்குக் கிடைத்த ஒரு புத்தகத்தைப் புரட்டிப் படிக்க ஆரம்பிக்க மனதோ அதில் இலயிக்க மறுத்தது. பக்கங்களைக் கரங்கள் புரட்டியதேயன்றி, மனதோ அபராசிதனைத் தான் நினைத்துக் கொண்டிருந்தது.

ஒரு கட்டத்திற்கு மேல் அது கூடப் பிடிக்காமல் போக, புத்தகத்தை ஓரமாக வைத்துவிட்டு உறங்க முயன்றாள். விழிகள் இரண்டும் மூடுவேனா பார் என்று சவால் விட்டன.

புரண்டு புரண்டு படுத்தவளுக்கு அதுவும் முடியவில்லை.

பொறுமையைத் தொலைத்து எழுந்தவள், அறையை விட்டு வெளியே வந்து தாழ்வாரத்தில் அங்கும் இங்கும் நடக்கத் தொடங்க, இருந்தாற் போல், வாசலில் வண்டி வந்து நிற்கும் ஓசை கேட்டது. அதுவரை நடந்துகொண்டிருந்தவள், வண்டியின் சத்தத்தில் தன் நடையை நிறுத்திக் கொண்டு காதுகளைக் கூர்மையாக்க, காரின் கதவு திறந்து மூடும் சத்தமும் கேட்டது.

அந்த சத்தத்தில் அதுவரையிருந்த இறுக்கம் தளர்ந்தவளாக, முகம் மலர, உதடுகளில் சிறிதாய் ஒரு புன்னகை மலர, மின்னல் விரைவுடன் படிகளில் இறங்கிவர, அந்த நேரம் வாசற்கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான் அபராசிதன்.

அங்கே படிகளில் கடகடவென்று இறங்கிவரும் திகழ்வஞ்சியின் வேகம் கண்டு அதிர்ந்தவனாக,

“ஏய்… பார்த்து…” என்று அவன் எச்சரிப்பதற்குள் அவனை நெருங்கியிருந்தாள் திகழ்வஞ்சி.

மூன்று நாட்கள் அவன் முகம் பாராமல் என்னவோ மாதிரி இருந்தது. இப்போது அவனை விழிகள் கொண்டு ‘ஈ’ என மொய்த்துப் பார்க்க, அவனோ,

“நீ இன்னும் தூங்காமல் என்ன செய்கிறாய்?” நேரம் என்னவென்று தெரியுமா?” அவனுடைய பேச்சில் அக்கறையிருந்தாலும், அதையும் மீறிக் களைப்புத் தெரிய,

“அது… நான்… தூங்கிக்கொண்டுதான் இருந்தேன். திடீர் என்று வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டதா… அதுதான்” அவள் சொல்ல, கிண்டலாகச் சிரித்தான் அபராசிதன்.

“எது நீ தூங்கிக்கொண்டிருந்தாய், என் வண்டி வந்து நின்ற சத்தம் கேட்டதும் எழுந்துவிட்டாய்… இதை நான் நம்பவேண்டும்…” கிண்டலாகச் சொன்னவன்,

“ஆரா எங்கே? உறங்கிவிட்டானா” அக்கறையாகக் கேட்டான்.

“ம்… தூங்கிவிட்டான்…”

“ஓ…” என்றவன், படிகளை நோக்கி நடந்தவாறே, “காலை ஏழு மணிக்கெல்லாம் மருத்துவமனையில் இருக்க வேண்டும். அதற்கிடையில் கொஞ்சம் உறங்கவேண்டும்…” என்றவன், ஷேர்ட்டைக் கழற்றித் தோளில் போட்டவாறு படிகளில் ஏறிச் செல்ல, ஏனோ அவனுடைய நிலை கண்டு மனம் வருந்தினாள் திகழ்வஞ்சி.

மூன்று நாட்கள் சரியான தூக்கம் இல்லாமல் இருந்திருக்கிறான் என்பது அவனுடைய முகத்தைப் பார்க்கும்போதே தெரிந்தது. மூன்றுநாட்களாக மழிக்காத தாடியும், வாடிய முகமும், சிவந்த விழிகளும், அவன் நிலையைச் சொல்ல, ஏனோ இதயம் கசிந்தாள் அவள்.

வைத்திய தொழில் என்பதே இதுதானே. நேரம் காலம் பார்க்க முடியாது. நோயாளருக்காக, அத்தனை சுகதுக்கங்களையும் மறந்துவிட வேண்டும். நல்லநாள் பெருநாள் எல்லாம் பார்க்க முடியாது. நினைக்கும் போதே மருத்துவத் தொழில் மீது பக்தியே வந்துவிட்டது அவளுக்கு.

சோர்வோடு சென்று கொண்டிருந்தவனைப் பார்த்ததும், அவன் சாப்பிட்டானா இல்லையா என்கிற கேள்வி எழ,

“அபராசிதன்…” என்றாள் மென் குரலில். அவன் நின்று திரும்பிப் பார்க்க,

“சாப்பாடு எடுத்து வைக்கவா?” என்றாள் கரிசனையாக.

“ம்கூம்… வேண்டாம்… இந்த நேரத்தில் சாப்பிட்டுப் பழக்கமில்லை… முடிந்தால் எனக்கு ஒரு கப் பால் சூடாக எடுத்து வர முடியுமா?” என்று அவன் கேட்டதுதான் தாமதம்,

“இதோ…” என்றவள் சிட்டாகச் சமையலறைக்குள் ஓடிச் சென்றாள்.

இப்படி அவன் உரிமையாக அவளிடம் கேட்பது மனதுக்குப் பிடித்திருந்தது. இதுவரை ஒட்டாத தன்மையோடுதான் இருவருமே இருந்தார்கள். ஆனால் இப்படி உரிமையாக அவன் கேட்கும் போது, அந்த ஒட்டாமை காணாமல் போகிற உணர்வு அவளுக்கு.

நல்லவேளை கமலா ஆறுமணிக்கெல்லாம் தன் வீட்டுக்குச் சென்றுவிடுவாள். இல்லை என்றால் இவள் நிச்சயமாக அவனுடைய கண்களுக்குத் தெரிந்திருக்க மாட்டாள்.

அவன் சொன்னது போலவே, பாலைக் காய்ச்சி, கண்ணாடிக் குவளையில் கவனமாக ஊற்றி அதை ஒரு தட்டில் எடுத்து வைத்தவள், எதற்கும் இருக்கட்டும் என்று, இரண்டு பான் துண்டுகளுக்கு வெண்ணெய், ஆர்மன் பட்டர் பூசி துண்டாக வெட்டித் தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு அபராசிதனின் அறை நோக்கிச் சென்றாள்.

இதில் விந்தை என்னவென்றால், அவளுடைய காயங்கள் எதுவும் சுத்தமாக வலிக்கவில்லை. சொல்லப்போனால் காயம் இருப்பதே அவளுக்கு மறந்து போயிற்று.

கதவைத் தட்டிப் பார்த்தவள் சத்தம் வராது போக, மெதுவாக்கத் திறந்து பார்த்தாள்.

அங்கே கழற்றிய ஷேர்ட் தரையில் கிடக்க, மிச்ச ஆடைகளை மாற்றாமல் படுக்கையில் குப்புற விழுந்து நல்ல உறக்கத்திலிருந்தான் அபராசிதன்.

அவன் படுத்துக் கிடந்த நிலையே அவனுடைய களைப்பை அப்பட்டமாகப் பறைசாற்ற, நெஞ்சுருகிப் போனாள் திகழ்வஞ்சி.

கையிலிருந்த தட்டை அவனுடைய படுக்கைக்கு அருகே இருந்த மேசையில் வைத்து விட்டுத் தரையில் எறிந்திருந்த ஷேர்ட்டை எடுத்து அங்கிருந்த கதிரையின் மீது வைத்துவிட்டு அவனை நோக்கி வந்தாள். அவன் அணிந்திருந்த சப்பாத்தையும், காலுறைகளையும் கழற்றி ஒரு ஓரமாக வைத்து விட்டு அங்கிருந்த போர்வையை எடுத்து அவன் மீது போர்த்திவிட்டு விலக, சட்டென்று அவளுடைய கரத்தைப் பற்றினான் அபராசிதன்.

இவள் திரும்பிப் பார்க்க அவனோ தன்னுடைய விழிகளை மெதுவாகத் திறந்து மூடி,

“தாங்ஸ்…” என்றுவிட்டு மீண்டும் விழிகளை மூடத் தன்னை மறந்து அவனையே பார்த்திருந்தாள் திகழ்வஞ்சி. ஏனோ அவனை மடியில் ஏந்தித் தலை கோதி, நன்றாக உறங்குங்கள் என்று சொல்லவேண்டும் என்று மனது அடித்துக்கொள்ள, அவளையும் மீறி அவனை நோக்கி ஓரடி எடுத்து வைத்தும் இருந்தாள் திகழ்வஞ்சி.

அப்போதுதான், தனக்குள் எழுந்த உணர்வைப் புரிந்து கொண்டவளாக விதிர்த்துப் போய் நின்றாள்.

இப்போது இவள் என்ன யோசித்தாள்? அவனை மடியில் ஏந்தித் தலை கோத வேண்டும் என்றா? இது என்ன மடத்தனமான சிந்தனை? குழம்பியவள் கரம் குறுகுறுக்கக் குனிந்து பார்த்தாள். அவனுடைய மாநிறக் கரம், இன்னும் அவளுடைய வெண் பட்டு மென் கரத்தை விடாது அழுந்தப் பற்றியிருந்தது. அவனுடைய கரம் பட்ட இடத்திலிருந்து அவசரமாக வண்ண நிறப் பூக்கள் சட்டென்று பூத்துக் குலுங்கி, படர்ந்து சென்று அவள் தேகம் முழுவதும் பரவி இதயத்தில் அழகாய் மலர்ந்து குலுங்க, உடல் சிலிர்த்துப் போனாள் அப்பாவை.

அந்த உணர்வு, அது… இதுவரை அவள் கண்டிராத ஒன்று. யாரிடமும் உணராத மங்கள உணர்ச்சி. அந்தக் கரம் பட்டதும் அவளையும் மீறித் தேகம் குழைந்து உருகிப் போகப் பற்றிய கரத்தை விலக்கும் திராணியற்று அப்படியே நின்றிருந்தவளின் இதயமோ படு வேகமாகத் துடித்தது. கடும் குளிரில் கம்பளிப் போர்வை போர்த்தியது போல அத்தனை இதமான சூடு தேகம் எங்கும் பரவி அவளைச் சிலிர்க்க வைத்தது. இது என்ன விந்தை. அவன் வெறும் கரத்தைத்தானே பற்றியிருக்கிறான். அதற்கு எதற்கு இந்த உடல் இப்படிக் குழைந்து உருகிப் போகிறது? இவளுக்கு என்னதான் ஆயிற்று? ஏன் இப்படிச் செயலற்று நிற்கிறாள்?

திகைத்தவள், அதற்கு மேலும் அவனுடைய கரத்தின் தொடுகையை உணரும் சக்தியற்றவளாகத் தன் கரத்தை விடுவித்து விட்டு ஓரே ஓட்டமாகத் தன் அறைக்குள் வந்து சோர்ந்தாள். படபடத்த இதயமோ என்னைக் கொஞ்சம் கவனியேன் என்றது.

சிவந்த முகமும், உடல் சூடும் சற்று முன் அவள் உணர்ந்த கிளர்ச்சிக்கு எடுத்துக் காட்டாக எஞ்சியிருக்க, தன்னை மறந்து முகத்தைத் தொட்டுப் பார்த்தாள். சுட்டது.

முடுக்கப்பட்ட இயந்திர மனிதன் போலப் படுக்கையில் தொப்பென்று அமர, அவள் அமர்ந்த வேகத்தில் ஆராவமுதன் அசைந்தான்.

பதறிப்போனாள் திகழ்வஞ்சி. ஆராவமுதனின் தூக்கம் இடையில் குழம்பினால், ஊரையே கூட்டி விடுவான். பாவம் மூன்று நாட்களாகச் சரியான தூக்கமில்லாது வந்திருக்கும் அபராசிதனின் உறக்கத்தையும் குலைத்து விடுவான்.

அவசரமாக மகன் பக்கம் சரிந்தவள், அவனைத் தட்டிக் கொடுக்க, குழந்தையோ மீண்டும் உறக்கத்தின் வசமாக, இவளுக்குத்தான் அவனுடைய நினைவில் தூக்கம் சுத்தமாக வர மறுத்தது.

 

What’s your Reaction?
+1
42
+1
15
+1
4
+1
0
+1
0
+1
0

Related Post

6 thoughts on “தொலைந்த எனை மீட்க வா…!- 26”
  1. அருமையான பதிவு 😍😍😍😍.
    ராகவ் பொழச்சிட்டாப்புல.
    ஈஸ்வரி என்னாது இஃது வரிஞ்சுகட்டி என்றாளை வஞ்சுகொட்டுனீங்க. இப்ப பாத்தாக்கா உங்க பார்வையே மாறிப்போச்சே. நல்லவதான்னு என்றாளை சொல்லிட்டீங்க🥲🥲🥲🥲🥹🥹🥹🥹
    என்னைக்கு திகழ் ராகவ்வோட உறவு குட்டு வுடையுமோன்னு பக்குபக்கு ன்னு இருக்கு

    1. ரொம்ப நன்றிபா. அதுதான்யா எனக்கும் பக்கு பக்குன்னு இருக்கு. தெரிஞ்சுது சங்குதான்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!