Thu. May 22nd, 2025

தொலைந்த எனை மீட்க வா…!- 23/24

(23)

அதிர்ச்சியிலும் ஆவேசத்திலும் எழுந்து நின்று தன் கணவனை ஏறிட்ட ஈஷ்வரிக்குக் கோபத்தில் உடல் நடுங்கியது. ஆனால் விஜயராகவனுக்கு அது எதுவும் உறுத்தவில்லை.

“ஈஷ்… இது கோபப்படும் விஷயமில்லை. சிந்திக்கவேண்டிய விஷயம். நமக்கு இப்போது முக்கியம் ஆராவமுதன். அவனை நம்முடைய கையில் கொண்டு வரவேண்டும். அதற்கு இருக்கும் ஒரே வழி நான் சொல்வதுதான்…” என்று அவர் முடிக்க மறுப்பாகத் தலையை அசைத்து,

“நோ… இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன். என் தம்பி போய், அந்தக் கழிசடையை… சீ… நினைக்கும் போதே அருவெறுக்கிறது…” ஆத்திரத்துடன் சொல்ல, ஏனோ திகழ்வஞ்சியைக் கழிசடை என்றது சுருக் என்று தைப்பது போலத் தோன்றியது விஜயராகவனுக்கு.

“ஈஷ்… கொஞ்சம் கோபத்தை ஒதுக்கி வைத்து விட்டு நான் சொல்வதைச் சிந்தித்துப் பார். என்னதான் ஆராவமுதனை நம்மோடு வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், அதற்கு அந்தப் பெண் சம்மதித்தால் மட்டுமே சாத்தியம். இதுவே நம்முடைய அபராசிதன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்தால், ஆராவமுதன் தானாகவே அபராசிதனின் பிள்ளையாவான். கூடவே அவனைச் சொந்த பிள்ளையாக அபராசிதன் தத்தெடுத்துக் கொள்வதும் சுலபம். அதற்குப் பிறகு நம்மிடமிருந்து குழந்தையைப் பிரித்துச் செல்வதும் சாத்தியமில்லை…” அவர் சொல்ல ஈஷ்வரியோ பலமாகத் தன் தலையை ஆட்டி மறுத்தார்.

“அதற்காக… அவளைப் போய் என் தம்பி… நினைக்கும் போதே…” அவர் முடிக்க முதல் குறுக்காக வந்தான் அபராசிதன்.

ஆரம்பத்தில் விஜயராகவன், திகழ்வஞ்சியை அபராசிதன் திருமணம் முடிக்க வேண்டும் என்று சொன்னபோது முதலில் அதிரத்தான் செய்தான். ஆனால் யோசிக்கிற போது, அது கூட நல்ல திட்டமாகத்தான் அவனுக்குத் தோன்றியது.,

என்னதான் அவர்கள் குழந்தைக்காக நின்றாலும், குழந்தை முழுக்க முழுக்கத் திகழ்வஞ்சிக்கு உரிமையானவன். எத்தனை நீதிமன்றங்களை நாடினாலும், குழந்தையை அவர்கள் பக்கம் இழுப்பது அத்தனை சுலபமில்லை. ஆகக் குழந்தையைச் சுலபமாகச் சொந்தமாக்க வேண்டும் என்றால், குழந்தையின் தாய் இவனுக்குச் சட்டப்படி சொந்தமாகவேண்டும். அடுத்து தன் குழந்தை என்று ஆராவைச் சட்டப்படி தத்தெடுக்க வேண்டும். அதற்குப் பிறகு திகழ்வஞ்சியால் நினைத்தால் கூட, ஆராவமுதனை இவனிடமிருந்து பிரிக்க முடியாது.

உடனே அதன் சாதகப் பாதகங்களை மனதில் கணக்கிட்டவனுக்கு விஜயராகவன் சொல்வதுதான் சரியான வழி என்றே தோன்றியது.

உடனே தன் சகோதரியை ஏறிட்டவன்,

“அக்கா… அத்தான் சொல்வதுதான் எனக்கும் சரி என்றுதான் படுகிறது…” என்றான்.

“நீயும் ஏன்டா அவரைப் போலவே உளறுகிறாய். அது ஒரு பெண்ணே இல்லைபா… பணத்துக்காக… சே…! என் வாயால் கூட அதைச் சொல்ல முடிய வில்லை! வேண்டாம்டா. அமலனின் வாழ்க்கை தான் சரியில்லை. நீயாவது சந்தோஷமாக வாழ வேண்டும்பா…” கண்கள் கலங்கச் சொல்ல, எழுந்து சகோதரியின் கரத்தைப் பற்றிக்கொண்டான் அபராசிதன். அவருக்கு முன்பாக மண்டியிட்டு அமர்ந்தவன்,

“அக்கா…!. எனக்கு என் வாழ்க்கையின் மீது அக்கறை இருக்காது என்று நினைக்கிறீர்களா? ஆனால் என் வாழ்க்கையை விட ஆராவமுதனின் வாழ்க்கை முக்கியமாகப் படுகிறது. யோசித்துப் பாருங்கள். சட்டரீதியாகக் குழந்தையை என் குழந்தையாகத் தத்தெடுக்கப் போகிறேன் என்றால் அதற்கு அவள் ஒத்துக் கொள்வாளா? நிச்சயமாக மாட்டாள். இதுவே நான் அவளைத் திருமணம் முடித்தால்? ஆராவமுதனை என் குழந்தையாகத் தத்தெடுக்க முடியும் தானே…” என்ற தம்பியை அழுத்தமாக ஏறிட்டார் ஈஷ்வரி.

“சரி நீ சொல்வது போலவே அந்தத் திகழ் வஞ்சியை நீ திருமணம் செய்து, குழந்தையை உன் குழந்தையாகத் தத்தெடுக்கிறாய் என்றே வைத்துக் கொள்வோம். அதற்குப் பிறகு?”

“அதற்குப் பிறகு என்னக்கா…? புரியவில்லை…?”

“அதற்குப் பிறகு உனக்கும் அவளுக்குமான வாழ்க்கை எப்படிப் போகும்? அவளோடு சேர்ந்து வாழ்வாயா இல்லை…?” ஈஷ்வரி முடிக்க முதல் குறுக்கு வந்தார் விஜயராகவன்.

“ஈஷ். இப்போது எதற்கு அதெல்லாம். முதலில் ஆராவமுதனை நம்முடைய முழுப் பொறுப்பில் எடுப்பதற்கான ஆவணங்கள் செய்ய வேண்டும்…”

“அத்தான் சொல்வதுதான் சரி. முதலில் ஆராவமுதனை நம்முடைய கட்டுப்பாட்டில் எடுப்பதற்கு என்ன வழியோ அதைச் செய்வோம்…”

“அபராசிதனுக்கும் நான் சொல்வதுதான் சரி என்று படுகிறது…” என்று முகம் மலர விஜயராகவன் சொல்ல, அவரை முறைத்தார் ஈஷ்வரி.

“சீ… சும்மா இருங்கள். நீங்கள் வேறு அவனை உசுப்பேற்றிக்கொண்டு… அபராசிதா…” அவள் ஏதோ சொல்வதற்குள்ளாக, அவரைப் புன்னகையுடன் பார்த்தான் அபராசிதன்.

“அக்கா…! ஆராவுக்குத் தந்தை மட்டுமில்லை தாயும் தேவை. நான் பார்த்த வரைக்கும், திகழ்வஞ்சி தன் சக்திக்கு மீறித் தன் மகனைப் பார்த்துக் கொள்கிறாள். நாங்கள் நினைத்த திகழ்வஞ்சி வேறு, இப்போது இருக்கும் திகழ்வஞ்சி வேறு. வாழ்க்கையில் நிறைய அடிபட்டுவிட்டாள் போல. காலம் அவளைக் கொஞ்சம் மாற்றி இருக்கிறது. எது எப்படியாக இருந்தாலும், ஆராவமுதனின் சம்மதமில்லாமல் அவன் தாயைப் பிரிப்பது சரியில்லை. அது உளரீதியாகக் குழந்தையைப் பாதிக்கும். ஒரு வைத்தியனாக அது தவறு என்று தெரிந்தும் என்னால் செய்ய முடியாது. அதே நேரம் அவனுக்குத் தந்தையும் வேண்டும். நிச்சயமாக ஒரு தந்தையின் இடத்தை என்னால் நிரப்ப முடியும்… நான் முடிவு செய்துவிட்டேன். அவளை மணப்பதுதான் ஆராவமுதனின் எதிர்காலத்திற்கு நல்லது…” அவன் சொல்ல மறுத்தார் ஈஷ்வரி.

“இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன் அபராசிதா. என்னால் இதைக் கற்பனையில் கூட நினைக்க முடியவில்லை…” என்று கண்கள் கலங்க, அவர் சொல்ல ஒரு தம்பியாக, சகோதரியின் கண்ணீர் கண்டு பதறிப் போனான் அபராசிதன்.

“அக்கா பிளீஸ்… இதோ பாருங்கள் அக்கா. நாம் ஆராவமுதனுக்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யலாம். அது என் வாழ்க்கையாக இருந்தால் கூட. இப்போது அமலன் நம்மிடம் இல்லை. ஆனால் அவன் மகன் கண் முன்னால் இருக்கிறான். அவனை எப்படி இழக்க முடியும் சொல்லுங்கள். என்னதான் நாங்கள் அன்பையும் பாசத்தையும் அள்ளிக் கொட்டினாலும் கூட, அவனுக்கு நாங்கள் அன்னியர்தான். அவன் தாய்தான் அவனுக்கு உரித்தானவள். இந்த நிலை மாறினால் தவிர, ஆராவமுதன் எங்களுக்குச் சொந்தமாக மாட்டான்…” என்ற தம்பியின் தலையை வருடிக் கொடுத்த ஈஷ்வரிக்கு விம்மல் வெடித்தது.

“ஆனால் உன் வாழ்க்கை… அது புதைகுழியில் விழுந்து விடுமேடா…”

“யார் சொன்னா…? என் வாழ்க்கை எனக்கு மிக முக்கியம். அப்படியிருக்கிற போது என் வாழ்க்கையை நானே கெடுப்பேனா? இப்போதைக்கு அவளைத் திருமணம் செய்கிறேன். ஆராவமுதனை என் மகனாகத் தத்து எடுத்துக் கொள்கிறேன். மிச்சத்தைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்…” சொன்னவனுக்குள் பெரும் வியப்பு.

அத்தான் அவளைத் திருமணம் செய் என்று சொன்ன போது திகைத்தானே தவிர ஏன் மறுக்கத் தோன்றவில்லை. மனது பிடிவாதமாக அவளை மணப்பதுதான் சரி என்று ஏன் சொல்கிறது? இத்தனைக்கும் அண்ணாவின் வாழ்க்கையைப் பாழாக்கியவள் என்று முழுதாக வெறுக்கிறேன். ஆனால் அவளை நினைக்கையில் இதயத்தில் ஒருவித அமைதி பிறக்கிறதே. தித்திக்கிறதே. இதம் பரவுகிறதே. வெறுப்பதாக நினைக்கும் ஒருத்தியை மனது ஏற்றுக் கொள்ளுமா? இது என்ன விந்தை? அவளுடைய கடந்தகாலம் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், இனிவருகிற காலமாவது என் மனைவியாக, ஆராவமுதனுக்கு எடுத்துக்காட்டான தாயாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்று ஏன் எனது ஆழ் மனது யோசிக்கிறது? அப்படியொன்றும் அவளைத் திருமணம் செய்துதான் ஆராவமுதனின் முழுப் பொறுப்பையும் நான் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. அவனை விட்டு அவளைத் தூர நிறுத்துவது ஒன்றும் அவனுக்குச் சிரமமில்லைதான். அவளால் ஒன்றும் சட்டத்தின் முன்பாகச் சென்று நிற்க முடியாது. அதற்குப் பணம் வேண்டும். கூடவே தைரியமும் வேண்டும். அவனுக்குத் தெரிந்த வரைக்கும், திகழ்வஞ்சிக்கு அந்தளவு தைரியம் இருப்பது போலத் தெரிய வில்லை. ஆனாலும் ஏன் அந்த எண்ணம் பிடிக்க மாட்டேன் என்கிறது? அவள் பக்கத்தில் மிக அருகில் இருக்க வேண்டும் என்று ஏன் தோன்றுகிறது. அதுவும் அவள் வேறு ஒருத்தனைத் திருமணம் செய்வது பற்றிப் பேசினால் எரிச்சல் தோன்றுகிறதே. இதற்குக் காரணம் என்ன? இது என்னவிதமான மனநிலை?’ தனக்குள் சிந்தித்துக் குழம்பிக் கொண்டிருக்கையில், ஈஷ்வரி இன்னும் அவர்களின் திட்டத்திற்கு ஒப்பவில்லை.

“என்னால் முடியவில்லையேடா… உன் வாழ்க்கையை நான் எப்படிப் புதை குழியில் தள்ளுவேன்…?” விம்ம அவரை அணைத்துக் கொண்டான் அபராசிதன்.

“அக்கா… கொஞ்சம் மனதால் யோசிக்காமல் புத்தியால் யோசித்துப் பாருங்கள். ஆராவுக்காக யோசியுங்கள். அவன் நம்முடைய இரத்தம். அவனை இழப்பது அமலனை இழந்ததற்கு நிகர்… அராமுதனைப் பாருங்கள். அப்படியே நம் அமலனே நம்மிடம் திரும்பி வந்தது போலத் தோன்றுகிறது… யோசியுங்கள் அக்கா… நாம் அமலனை இழந்துவிட்டுத் துடித்த துடிப்பு…! எண்ணிப்பாருங்கள்…! அவன் மகன் ஆராவமுதனையும் இழக்கப் போகிறீர்களா? அப்படி என்றால்… ஓக்கே… உங்கள் விருப்பம்…” என்று அவன் முடிவாகச் சொல்ல, இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தாள் ஈஷ்வரி.

அந்த நேரம் மதிவதனாவோடு விளையாடிக் கொண்டிருந்த ஆராவமுதன், கொஞ்சத் தூரம் நடந்தும் பின் ஓடியும் பின் தெப் என்று விழுந்து தவழ்ந்தும் என்று இருந்தவன் இப்போது இவர்களின் அருகே ஓடிவந்தான்.

என்ன நினைத்தானோ, ஈஷ்வரிக்கு முன்பாக மண்டியிட்டு அமர்ந்திருந்த சித்தப்பாக்காரனிடம் பாய, குழந்தையை அள்ளி எடுத்துக் கொண்டவன், தூக்கி ஈஷ்வரியின் மடியில் வைக்க, ஈஷ்வரியின் கரங்கள் தாமாகக் குழந்தையை அரவணைத்துக் கொண்டன. கலக்கத்தோடு குழந்தையைக் குனிந்து பார்த்தவருக்கு, அந்தக் குழந்தையை இனி இழக்க முடியுமா என்கிற கேள்வி வந்தது. நிச்சயமாக முடியாது… அப்படியானால்… இராகவன் சொல்வது போல் அபராசிதன் அந்தப் பெண்ணை மணப்பது தான் ஒரே வழியா. வேறு வழியிருக்காதா? கடவுளே… அவர் என்ன முடிவெடுப்பது. ஒரு உறவுக்காக இன்னொரு உறவை பலி கொடுப்பதா…’ புரியாமல் திணறினார் ஈஷ்வரி.

அந்த நேரம் அவருடைய தோளில் கரம் பதிய நிமிர்ந்து பார்த்தார். விஜயராகவன்தான் நின்றிருந்தார். அவரைக் கண்டதும் கண்ணீர் மீண்டும் உடைப்பெடுக்க, அவருடைய தோளில் தட்டிக் கொடுத்தவர், அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.

தன் சகோதரியின் கலங்கிய முகத்தைப் பார்க்கும் சக்தியின்றிக் கிடந்த அபராசிதனை விழிகளால் ‘நீ போ நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்ல, நன்றியோடு எழுந்தவன், ஈஷ்வரியின் மடியிலிருந்த குழந்தையை அள்ளி எடுத்துக் கொண்டு,

“பேசிக் கொண்டிருங்கள். இவனை இவன் அம்மாவிடம் விட்டுவிட்டு வருகிறேன்…” என்று விட்டு விலகிச் செல்ல, தன் தம்பி சென்று மறையும் வரைக்கும் அப்படியே பார்த்து நின்றிருந்தார் ஈஷ்வரி. பின் நிமிர்ந்து கலக்கத்தோடு தன் கணவனைப் பார்த்து,

“என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடிய வில்லை ராகவன்… ஆராவமுதனுக்காக என் தம்பியுடைய வாழ்க்கையை எப்படிப் பணயம் வைப்பது…” என்றார் கலக்கமாக. உடனே தன் மனைவியின் தோளை அழுத்திக் கொடுத்தவர்,

“அபராசிதனின் வாழ்க்கையைப் பணயம் வைப்பதாக ஏன் நீ நினைக்கிறாய்? நம்முடைய குடும்பத்திற்கு ஆராவமுதன் வந்திருக்கிறான் என்று யோசியேன்மா…! அபராசிதன் ஒன்றும் குழந்தையில்லை. சொல்லப்போனால் நம்மை விட அவன் மிகப் பெரிய புத்திசாலி. அவனுக்குச் சரி எது தவறு எது என்று நன்காகத் தெரியும். அவனே அந்தப் பெண்ணைத் திருமணம் முடிக்கச் சம்மதித்திருக்கிறான் என்றால் நான் சொன்னது சரியாகத்தான் இருக்கும்.

“அது புரிகிறது ராகவ்… ஆனால்… மனம் ஒப்ப மறுக்கிறதே.” ஒரு சகோதரியாய், தம்பிக்கு அன்னையாய் அவர் கலங்க,

“நமக்கு ஒன்று தேவை என்றால், இன்னொன்றை இழந்துதான் ஆகவேண்டும். நமக்குக் குழந்தை வேண்டும். அதுவும் நமக்கு உரிமையுடையதாக வேண்டும். இதை விட்டால் வேறு வழியில்லை. அவனே சம்மதம் சொன்ன பிறகு நீ எதற்கு வருந்திக் கலங்குகிறாய்? பிளீஸ்மா… நம்முடைய அமலனின் குழந்தைக்காக. அவனுடைய எதிர் காலத்திற்காக. மறுக்காதே சம்மதம் சொல்” என்று அழுத்தமாகச் சொல்ல சற்று நேரம் அமைதியாக இருந்தார் ஈஷ்வரி.

“சரி… அமலனுக்காக, அவன் குழந்தைக்காக இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்கிறேன்…” இறுகிய குரலில் கூற, விஜயராகவனின் முகம் நிம்மதியில் மலர்ந்தது. அதுவரை ஒரு வித இறுக்கத்திலிருந்த மனம் இளகிப் போனது. அதன் விளைவாக நிம்மதியோடு விழிகளை மூடியவர் ஈஷ்வரி அறிந்து கொள்ளாத வகையில் அதுவரை உள்ளே இழுத்துப் பிடித்திருந்த மூச்சை வெளியே விட்டார்.

அவர் செய்த தவற்றுக்குப் பிராயச்சித்தம் செய்த உணர்வில் நிம்மதியுடன் இளம் புன்னகை ஒன்றையும் சிந்தினார்.

(24)

அன்று வந்திருந்த விருந்தினர்கள் விடை பெற்றுச் செல்லும் வரைக்கும் திகழ்வஞ்சி அறையை விட்டு வெளியே வந்தாளில்லை. வர அவளுக்குப் பிடிக்கவும் இல்லை.

மனம் முழுக்க ஈஷ்வரியின் கணவரை நினைத்து இரணப்பட்டுப் போனது. வாழ்க்கையில் யாரைப் பார்க்கக் கூடாது என்று நினைத்திருந்தாளோ, எவரின் நிழல் கூட அவள் பக்கம் சாயக்கூடாது என்று உறுதியாக இருந்தாளோ, அந்த மனிதர் கண்முன்னே உயிரோடு, அதுவும் அபராசிதனின் அத்தானாக, ஆராவமுதனின் உறவினராக வந்து நிற்கிறார் என்றால் இதை விதி என்பதா இல்லை விதி செய்த சதி என்பதா? கடவுளே இப்படியாகும் என்று அவள் கனவிலும் கண்டிருக்கவில்லையே? ஒரு வேளை முன்பே இவர்தான் அபராசிதனின் அத்தான் என்று தெரிந்திருந்தால், அவன் கூட வந்திருக்க மாட்டாளே. இப்போது என்ன செய்வது? திரும்பா முனை என்பார்களே. அங்கும் போக முடியாது, இங்கும் திரும்ப முடியாது என்கிற நிலையில் கதிகலங்கிப் போய் நின்றிருந்தாள்.

அவரைக் கண்ட அந்த நொடியே, அங்கிருந்து எங்காவது ஆயிரம் மைல்கற்களுக்கு அப்பால் ஓடிவிடவேண்டும் என்று மனது துடிக்க, அதைச் செயலாற்ற முடியாத தன் கையாலாகத்தனத்தை வெறுத்தவாறு அப்படியே தரையில் அமர்ந்து கொண்டவளுக்கு ஏதேதோ நினைவுள், தவிப்புகள், தாயின் கதறல், கோபம் என்று ஒன்றன்பின் ஒன்றாக மனக்கண்ணில் வந்து போனது.

அவர்களின் வாழ்க்கை சிதறிப் போனதற்கு முழுமுதற் காரணமே இவர்தானே. இவர் மட்டும் ஒழுங்காக இருந்திருந்தால் இத்தனை சித்திரவதை இவளுக்கு ஏன்?

மீண்டும் மண்டிக்கிடந்த வெறுப்பு அழுகையாக வெடித்துக் கிளம்ப, எங்கே சத்தம் வெளியே கேட்டுவிடுமோ என்று அஞ்சியவளாக வாயைக் கரங்களால் பொத்திக் கொண்டவளுக்குத் தன் மீதே தீராத வெறுப்பு வந்தது.

எதற்கு அழவேண்டும்? நான் ஏன் அழ வேண்டும். அழவேண்டியது அந்தாள் அல்லவா. நோ… நான் அழ மாட்டேன். அழவே மாட்டேன்…’ மனதிற்குள் மந்திரமாக அவள் உச்சரித்தாலும், நெஞ்சம் வெடித்துக் கொட்டும் இரத்தம் கண்ணீராக விழுவதை அவளால் தடுக்க முடியவில்லை.

எத்தனை நேரமாக அப்படியே இருந்தாளோ, கதவு தட்டும் சத்தம் கேட்க உடல் விறைத்தது. தட்டும் விதத்திலேயே அது அபராசிதன் என்று புரிந்து போகத் தன் சட்டையைக் கொண்டு முகத்தை அழுந்தத் துடைத்தவள், ஆழ இரண்டு முறை மூச்செடுத்துத் தன்னை சமப்படுத்தியவளாக் கதவைத் திறந்தாள்.

அங்கே ஆராவமுதனை ஏந்தியவாறு நின்று இருந்தான் அவன்.

அவனைக் கண்டதும் அவசரமாகத் தன் விழிகளைத் தரைசாய்த்துக் கரங்களை விரித்து ஆராவமுதனை ஏற்றுக்கொள்ள முயல, அவனோ நிதானமாக அவளுடைய அறைக்குள் நுழைந்து குழந்தையை அதன் தொட்டிலில் இறக்கிவிட்டுத் திரும்பி அவளைப் பார்த்தான்.

இப்போதும் நிமிர்ந்து அவனைப் பார்த்தாளில்லை திகழ்வஞ்சி. ஆனால் அவனுடைய விழிகள் அவளை விட்டு விலகவில்லை. அழுந்தத் துடைத்ததால் சிவந்துவிட்ட கன்னம். சற்றுத் தடித்த இமை, கண்டிச் சிவந்த மூக்கின் நுணி இது போதாதா அவள் அழுதாள் என்பதைப் பறைசாற்ற. ஏனோ நெஞ்சில் வதை அவனுக்கு.

“அக்காவின் நடத்தைக்காக நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன் திகழ்… அவர்கள் அமரனின் மரணத்திலிருந்து இன்னும் வெளியே வரவில்லை… அந்த ஆதங்கத்தை உன்னிடம் காட்டிவிட்டார்கள்…” அவன் சமாதானம் சொல்ல, நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் திகழ்வஞ்சி. திரும்பக் கண்ணீர் அவளின் விழிகளின் ஓரம் கோர்க்க,

“உங்கள் மன்னிப்பால் நான் சமாதானம் ஆகிவிட்டேன்… நன்றி…” என்று அவள் சொல்ல, அதில்தான் எத்தனை இகழ்ச்சி.

அப்போது அவர்கள் பேசும்போது, வாயை மூடிக்கொண்டுதானே இருந்தான். அது சரி, இவன் ஏன் எனக்குச் சார்பாகப் பேசவேண்டும்? அவனைப் பொறுத்தவரையும் அவள் அதே தகுதியோடுதானே இருக்கிறாள். தன்னை நினைத்தே கழிவிரக்கம் வந்தது அவளுக்கு.

“திகழ்…!” அவன் எதுவோ சொல்ல வர, கையெடுத்துக் கும்பிட்டவள்,

“நான் செய்த தப்புக்குத் தண்டனை இது என்று ஏற்றுக் கொள்கிறேன்… தயவு செய்து நீங்களும் எதையாவது சொல்லி இருக்கிற வலியை அதிகரிக்கச் செய்யாதீர்கள். பிளீஸ்… கீழே போங்கள்…” மீண்டும் தொண்டை கரகரத்துக்கொண்டு வர, ஏனோ அவளை இழுத்து மார்பில் சாய்த்து எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லும் வேகம் வந்தது.

கூடவே அக்கா ஒன்றும் தப்பாகச் சொல்ல வில்லையே. என்று சொல்லவேண்டும் போலவும் தோன்றியது. அங்கே நின்றால் அதையும் சொல்லி விடுவோமோ என்று பயந்தவனாக வெளியேறிச் செல்ல, குழந்தையைப் பார்த்தாள். அவன் சாப்பிடும் நேரம்.

தற்காலிகமாகத் தன் வலியை ஓரம் கட்டியவள், அறையை விட்டு வெளியே வந்தாள். முன்னறையில் அவர்கள் நின்று பேசிக்கொண்டிருக்க, குடுகுடு என்று சமையலறைக்குள் நுழைந்தவள், ஆராவுக்கு வேண்டிய உணவைத் தட்டில் போட்டுக்கொண்டு திரும்பவும் அறைக்கு வந்தாள்.

குழந்தைக்கு உணவை ஊட்டி, உறங்க வைத்த பின், சோர்வோடு வந்து படுக்கையில் அமர்ந்தாள். மனமோ விண்டுபோகும் அளவுக்கு வலித்தது. அவளுடைய காயத்தின் வலியெல்லாம் என்ன வலி. இதோ இப்போது மனது கிடந்து வலிக்கிறதே. அதற்கு முன்னால் எம்மாத்திரம். நினைத்தவளுக்குத் தன்மீதே பச்சாதாபம் எழுந்தது.

ஏன் அவளுக்கு மட்டும் இத்தனை வலிகள். அவளுடைய வாழ்க்கையில் நிம்மதியே வராதா? எழுந்த கேள்விக்குப் பதிலின்றி, ஏதேதோ பழைய நினைவில் மூழ்கிக்கிடக்க எத்தனை நேரமாக அப்படியே கிடந்தாளோ, திரும்பவும் அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்டது.

அப்போதிருந்த மனநிலைக்கு அந்தக் கதவைத் திறக்கவேண்டும் போலவும் தோன்றவில்லை, யாருடைய முகத்தையும் பார்க்கப் பிடிக்கவில்லை.

ஆனால் மீண்டும் கதவு தட்டும் சத்தத்தில், வேறு வழியில்லாமல் திறக்க, அவன்தான் நின்றிருந்தான்.

இவள் என்ன என்பது போலப் பார்க்க

“நான் உன் கூடக் கொஞ்சம் பேசவேண்டும்… கீழே வா… ” என்றான் அறிக்கை போல.

“என்னிடம் பேச என்ன இருக்கிறது? எதுவாக இருந்தாலும் இங்கேயே சொல்லுங்கள்… நான் கீழே வரவில்லை…” சொன்னவளுக்கு இன்னொரு முறை அந்த ஈஷ்வரியின் புருஷனின் முகத்தில் விழிக்கும் தைரியம் இருக்கவில்லை. கூடவே அந்த ஈஷ்வரியையும்தான்.

அவனோ ஒரு கணம் தயங்கி நின்றான். ஒற்றைக் கரம் தயக்கமாகப் பிடரி மயிரை வருடிக் கொடுக்க, அவனுடைய அந்தச் செயலில் ஏற்பட்ட குழப்பத்தில் என்ன என்பது போல அவனைப் பார்த்தாள் திகழ்வஞ்சி.

அபராசிதனோடு பழகிய இந்த ஒரு சில நாட்களில் அவனுடைய உடல் மொழியை ஓரளவு அறிந்து வைத்திருந்தாள். அவனிடம் தயக்கம் இருக்காது. எதுவாக இருந்தாலும் அது சரியோ தவறோ பட் என்று பேசிவிடுவான். ஆனால் இப்போது அவனிடம் தெரியும் அந்தத் தயக்கம், அவளுக்கு ஒரு வித படபடப்பைக் கொடுக்க,

“எ… என்ன பேசவேண்டும்…?” என்றாள்.

“சொல்கிறேன் கீழே வா…” அவன் சொன்ன விதத்திலேயே அவன் பேசப்போகும் செய்தி முக்கியமானது என்று புரிந்தது.

அதைப் புரிந்து கொண்டவளுக்கு அச்சம் உச்சந்தலையில் வந்து அடித்தது. என்ன பேசப் போகிறான். வீட்டைவிட்டுக் கிளம்பு என்று சொல்லப் போகிறானா? அப்படிச் சொன்னால் மகிழ்ச்சியாகவே போய்விடுவாள்தான். ஆனால் ஆராவை விட்டு விலகு என்றால்? ஐயோ இது என்ன சோதனை? சட்டென்று மனது ஆயிரம் விதமாக யோசிக்க,

“இ… இல்லை… நா.. நான் வரவில்லை… அங்கே… உங்கள் அக்கா…” அவள் முடிக்க முடியாமல் திணற,

“அவர்கள் போய்விட்டார்கள்… வா…” என்று சொல்ல வேறு வழியில்லாமல் நகர மறுத்த கால்களை இழுத்துக் கொண்டு அவன் பின்னால் சென்றாள் திகழ்வஞ்சி.

கீழ்த்தளம் வந்ததும், வீட்டின் மறுபக்கமாக அழைத்துச் செல்ல, அங்கே விரிந்தது மதுவகம். அங்கே குவிந்து கிடந்த மதுப் போத்தல்களைக் கண்டவள், வியந்து அவனைப் பார்க்க, அவளை இருக்கையில் அமருமாறு பணிந்துவிட்டு,

“உனக்கு என்ன பிடிக்கும்? விஸ்கி? ரம்? வைன்?” அவன் கேட்க, அவளோ மறுப்பாகத் தலையசைத்து,

“இல்லை… பழக்கமில்லை…” என்றாள்.

அதைக் கேட்டவனின் புருவங்கள் சுருங்கின. புரியாத பாவனையுடன் அவளை ஏறிட்டு,

“பழக்கம் இல்லையா?” என்றான் சந்தேகமாக.

“ம்…” அவள் சொல்லத் திரும்பவும் குழம்பினான் அவன்.

“அது எப்படி? அமலனோடு நிறைய விழாக்களுக்குப் போயிருக்கிறாய். அவனோடு மது எல்லாம் அருந்தியிருக்கிறாய். இப்போது பழக்கம் இல்லை என்கிறாய்?” அவன் கேட்க, ஆழ மூச்செடுத்து அவனைப் பார்த்தாள் திகழ்வஞ்சி.

“ம்… ஆரா வயிற்றில் வந்த பிறகு மது அருந்துவதை முற்றாக நிறுத்திவிட்டேன். அதைத் தான் சொன்னேன்…”

“குடிப்பதை நிறுத்தி விட்டேன் என்பதற்கும், பழக்கமில்லை என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது…” அவன் அழுத்தமாகக் கூற, உதடுகளைக் கடித்தாள் திகழ்வஞ்சி.

“ஏன் அபராசிதன், இப்போது இந்த ஆராய்ச்சி செய்யத்தான் என்னை வரச் சொன்னீர்களா?” அவளுடைய குரலில் பொறுமையின்மை தெரிய,

“இல்லை…” என்றவன், எந்த மதுப்போத்தலையும் எடுக்காமல் விலக,

“நீ.. நீங்கள் குடிக்கவில்லை?” என்றாள் வியந்து.

“ம்கூம்… எனக்கும் அந்தளவு பழக்கமில்லை. பல்கலைக் கழகத்தில் படித்தபோது நண்பர்களோடு சேர்ந்து ஒரு சில முறை அருந்தியிருக்கிறேன். மருத்துவனான பின், மது தொடுவதில்லை… கூடவே புகைபிடிப்பதுமில்லை. நானே மது அருந்திக் கொண்டு, புகைபிடித்துக் கொண்டு என்னிடம் வரும் நோயாளரிடம் மது அருந்தாதே, புகை பிடிக்காதே என்று எப்படிச் சொல்வது? ” என்று அவன் சொல்ல, வியந்தவள், அங்கே அழகாக அடுக்கியிருந்த மதுப் போத்தல்களைக் குழப்பத்துடன் பார்க்க, அவனும் அதைத்தான் திரும்பிப் பார்த்தான்.

உதடுகள் பிதுக்கியவன்,

“நான் குடிப்பதில்லையே தவிர, எனக்கு விதம் விதமாக மது சேகரிப்பது பிடிக்கும். பரிசாகக் கிடைப்பதை எல்லாம் இங்கே அடுக்கி வைத்திருக்கிறேன். விருந்தினர்கள் வரும்போது கொடுப்பேன்.

அவன் சொல்ல, அவனை மதிப்பும் மரியாதையுமாகப் பார்த்தாள் திகழ்வஞ்சி.

“சரி… உட்கார்…” என்றவன், அவள் அமர்ந்ததும், அவளுக்கு அருகே ஒரு இருக்கையை இழுத்து அமர்ந்த கொண்டான்.

முதலில் அவனுக்கு எப்படித் தொடங்குவது என்று தெரியவில்லை. அமைதியாக இருக்க,

“ஏதோ… பேசவேண்டும் என்றீர்களே…?” கேட்டவளிடம் ஆம் என்றான் தலையசைப்பாக.

“யெஸ்… பேசத்தான் வேண்டும். ஆனால்… அதை எப்படித் தொடங்குவது என்றுதான் புரிய வில்லை…” என்றவனைக் கலக்கத்தோடு பார்த்தாள் திகழ்வஞ்சி. அவள் அப்போது சந்தேகப்பட்டது போல, இவளை எப்படி வெளியே அனுப்புவது என்று யோசிக்கிறானா? கலங்கியவளாக,

“எ.. என்னை இங்கே தங்க வேண்டாம் என்று உங்கள் அக்கா சொன்னார்களா? நான் உடனே வெளியேற வேண்டுமா? அப்படியென்றால் ஆரா?” கலக்கத்துடன் கேட்க, பலமாக மறுத்துத் தலையசைத்தான் அபராசிதன்.

“இல்லை… அப்படியெல்லாம் இல்லை… சொல்லப்போனால், நீ இங்கே நிரந்தரமாகத் தங்குவது பற்றித்தான் பேசிக்கொண்டோம்.. முடிவும் எடுத்தோம்… ஆனால்… நான் கூறப்போவதை நீ எப்படி எற்றுக்கொள்வாய் என்றுதான் எனக்குப் புரியவில்லை…” என்று மீண்டும் தயங்கியவனை ஏறிட்டவள்…

“அபராசிதன்… எதுவாக இருந்தாலும் உடைத்துச் சொல்லுங்கள்… நீங்கள் தயங்கி நிற்பதைப் பார்த்தால் எனக்குத்தான் பயமாக இருக்கிறது…” அவள் சொல்லி முடிக்கவில்லை, அவளை நிமிர்ந்து அழுத்தமாகப் பார்த்தவன்,

“நான் உன்னைத் திருமணம் செய்யலாம் என்று முடிவுசெய்திருக்கிறேன்…” என்றான்.

அதிர்ந்து போனாள் அவள். அவன் இப்போது என்ன சொன்னான்? அவள் சரியாகத்தான் கேட்டாளா? இல்லை காதில் தவறாக வந்து விழுந்ததா?

“எக்ஸ்கியூஸ்மி… சாரி… சாரியாகக் கேட்க வில்லை. என்ன சொன்னீர்கள்?” திக்கித் திணறிக் கேட்க, மெல்லிய புன்னகை ஒன்றைச் சிந்தினான் அபராசிதன்.

“நீ சரியாகத்தான் கேட்டாய். உன்னைத் திருமணம் செய்ய முடிவுசெய்துவிட்டேன்…” அவன் சொல்ல,

“வட்…?” என்று கிட்டத்தட்டக் கத்தியவாறு எழுந்து நின்றே விட்டாள் திகழ்வஞ்சி.

அந்த இருண்ட நேர நிசப்தத்தில் அவளுடைய ‘வாட்’ சத்தம் மட்டும் அலறலாய் எதிரொலிக்க, அதற்கும் பயந்தவளாக அவனை ஏறிட்டுப் பார்த்து மலங்க மலங்க விழித்தாள். அவளும்தான் எத்தனை அதிர்ச்சிகளை ஒரே நாளில் சந்திப்பது.

ஆனால் அவனோ நிதானமாக எழுந்து தன் பான்ட் பாக்கட்டிற்குள் கரங்களைத் திணித்தவாறு அதிர்ச்சியில் நின்றிருந்தவளைப் பார்த்து,

“இது அவசரப்பட்டு எடுத்த முடிவில்லை. நிறைய விஷயங்களைக் கருத்தில் கொண்டு எடுத்த முடிவு…!” அவன் சொல்ல, வெறுமையாக அவனைப் பார்த்தாள் திகழ்வஞ்சி. பின் அதற்கு பதில்சொல்லாமல் அங்கிருந்து விலகிச் செல்ல முயல, சட்டென்று அவளுடைய கரத்தைப் பற்றித் தடுத்தான் அவன்.

இவள் அதிர்ந்துபோய் அவனைப் பார்க்க, அவனோ,

“நான் உன்னைத் திருமணம் செய்வது பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன்… அதற்குப் பதில் சொல்லாமல் போனால் என்ன அர்த்தம்?” என்றவனை வெறித்தவள், அவன் கரத்தில் சிக்கி இருந்த, தன் கரத்தை உதறி விலக்க முயன்று தோற்றவளாக, அவனைப் பார்த்து முறைத்து,.

“பைத்தியக்காரத் தனமான கூற்றுக்கெல்லாம் பதில் கூறவேண்டிய அவசியம் எனக்கில்லை. தயவு செய்து கையை விடுங்கள்…” என்று கோமாகச் சீறியவள், தன் கரத்தை விடுவிக்க முயல, எங்கே அவனுடைய பிடிதான் இரும்புப் பிடியாக இருந்ததே. பற்றிய கரத்தை விடாது மேலும் இறுகப் பற்றியவாறே,

“நீ எனக்குப் பதில் கூறாது இங்கிருந்து போகமுடியாது திகழ்…” என்றவனின் குரலிலிருந்த அழுத்தத்தைக் கண்டு கொண்டவள், அவனைப் பார்த்து முறைத்து,

“என்ன பதிலை என்னிடமிருந்து எதிர் பார்க்கிறீர்கள் அபராசிதன்? நானும் நீங்களும் திருமணம்… சீ… நினைக்கும் போதே…” தன் ஒவ்வாமையை முகத்தில் காட்ட, ஏளனத்துடன் சிரித்தான் அபராசிதன்.

“இதில ‘சீ’ சொல்ல என்ன இருக்கிறது? சொல்லப்போனால், அமலனை விட என்னிடம் அதிகப் பணம் இருக்கிறது. என்னுடைய ஒரு வருட வருமானமே நானூராயிரம் டாலர்கள். இது தவிர அண்ணாவின் சொத்து முழுக்க இப்போது என் பொறுப்பில்தான் இருக்கிறது. அதிலிருந்து மட்டுமே வருடம் தோறும் பத்து மில்லியன் கனேடிய டாலர்கள் வரும். நீ ஆசைப்பட்டது போலப் பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்து விரும்பிய வாழ்க்கையை வாழலாம்…” சொன்னவனை வெறுப்போடு பார்த்தாள் திகழ்வஞ்சி.

“பணமா…? பணம் மட்டும்தான் வாழ்க்கையா? அதைக் எடுத்துப் போய்க் குப்பையில் போடுங்கள். யாருக்கு வேண்டும் உங்கள் பணம்…? கோடியில் கொடுத்தாலும் உங்களைத் திருமணம் முடிக்க மாட்டேன்.” என்றவள் அவன் கரத்தை விலக்கப் படாத பாடு பட, அபராசிதனின் முகத்தில் இனம்புரியாத உணர்ச்சி.

தன் கரத்திலிருந்த அவளுடைய கையை ஒரு இழுவை இழுக்க, அதை எதிர்பாராதவள், அவன் மேனி மீது பலமாக மோதி நிற்க, அபராசிதனோ மோதியவள் அசையாதிருக்க மறுகரத்தை அவள் இடை நோக்கி எடுத்துச் சென்று தன் உடலோடு இறுகப் பற்றப் பதறிப் போனாள் திகழ்வஞ்சி. அந்தப் பதட்டத்தோடு இடை வளைத்த கரத்தை விலக்க முயன்று தோற்றவளாக அவனை நிமிர்ந்த பார்க்க, அவனும் அவளைத்தான் தன் கூரிய விழிகளால் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்த நீண்ட பெரிய கயல்விழிகளை மாறி மறிப் பார்த்தவனின் பார்வை அவளை ஊடுருவிச் சென்று இதயத்திற்குள் நுழைவது போலத் தோன்ற, அந்த ஆண்மகனின் பார்வையின் வீரியத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் அவசரமாகத் தன் விழிகளை விலக்க முயன்றாள் திகழ்வஞ்சி. அதைப் புரிந்து கொண்டவனாக அவளது கரத்தைப் பற்றியிருந்த தன் கரத்தை விடுவித்து, அவளுடைய முகத்தை அழுந்த பற்றித் தன்னை நோக்கித் திருப்பியவன், துள்ளும் அந்த நீண்ட விழிகளை உற்றுப் பார்க்க முயன்றான்.

அந்தப் பார்வை தேகத்தில் எங்கெங்கோ உணர்ச்சிகளைத் தட்டி எழுப்ப, அவளையும் மீறி கை கால்கள் குழைந்து போக, அவசரமாகப் பிறந்த அந்த சூடான மூச்சுக்காற்றை அடக்கும் வழி தெரியாமல், உள்ளே எழுந்த அந்தப் புதுவித உணர்வில் நடுங்கிப் போய் நின்றவளை இமைக்காது பார்த்தவன்,

“நிஜமாகவே நீ திகழ்வஞ்சியா? இல்லை… அவளைப் போல இருக்கும் இன்னொருத்தியா?” என்றான் அவளுடைய விழிகளை மாறி மாறிப் பார்த்தவாறு. அதைக் கேட்டவள் அதிர்ந்து போனாள்.

அவசரமாக அவனிடமிருந்து விலக முயல, அவனோ மேலும் அவளைத் தன் உடலோடு அழுந்தப் பொருத்த, பதற்றத்தோடு அவனைப் பார்த்தாள் திகழ்வஞ்சி.

“டிட் ஐ மிஸ் எனிதிங்?” கூர்மையான அவனுடைய பார்வை அவளைத் துளைக்க, நா வறண்டு போனது அவளுக்கு.

“எ… என்ன உளறுகிறீர்கள்? நான்…” என்றவள் அவனுடைய கரங்களில் சிக்கியிருப்பதால் செயல் இழந்த புத்தியைத் தட்டி எழுப்ப முயன்று முடியாமல் தோற்று, தன் பலம் அனைத்தையும் கூட்டி அவனை உதறித் தள்ளிவிட்டு,

“உளறாமல் போய்த் தூங்குங்கள்.. தூங்கி எழுந்தால் பித்தம் தெளியும்…” என்றவள் தன் பலவீனத்தையும், பயத்தையும் அவனுக்கு மறைத்தவாறு அவசரமாகத் தன் அறை நோக்கித் திரும்ப, அவளுடைய வழியை மறித்து நின்றான் அபராசிதன்.

“என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் நீ இங்கிருந்து போக முடியாது திகழ்வஞ்சி… நீ ஆசைப்பட்ட பணம், சந்தோஷமான வாழ்க்கை, நிம்மதியான எதிர்காலம்… எல்லாமே கிடைக்கும் போது, அதை மறுக்கக் காரணம் என்ன? அதுவும் பெரிய உத்தமி போல அல்லவா மறுக்கிறாய்? அமலன் சொல்லும் திகழ்வஞ்சி என்றால், இவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அறிந்ததும் வாயைப் பிளந்திருக்க வேண்டும். நான் கேட்க முதலே என்னை மணந்து கொள்கிறாயா என்று நீயாகக் கேட்டிருக்க வேண்டும். ஆனால் நீ அப்படி எதுவும் கேட்காமல் பணமே வேண்டாம் என்கிறாய். மதுவும் குடிப்பதில்லை என்கிறாய்… அந்தத் திகழ்வஞ்சிக்கும் இந்த திகழ்வஞ்சிக்கும் மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கிறதே…” குறுகுறு என்று அவளைப் பார்த்தவாறு அவன் கேட்க, அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஒரு விநாடித் தயங்கி நின்றாள் அவள். பின் ஆத்திரத்தோடு அவனைப் பார்த்து,

“ஆமாம் நான் பணத்துக்கு ஆசைப்பட்டு உங்களை அண்ணனை மயக்கியவள்தான். அவர் கூட ஒன்றாக…” அவள் முடிக்க முதல் அவளுடைய உதட்டில் தன் விரலைப் பதித்து மறுப்பாகத் தலையை அசைத்தான் அபராசிதன்.

“டோன்ட் சே தட்…” என்றபோது அவனுடைய முகம் இறுகிக் கறுத்துப் போனது. அவனுடைய அந்த செயலில் தடுமாறியவள், மறு கணம் சட்டென்று அவனைத் தள்ளிவிட்டு விலகி நின்று சொல்ல வந்ததை முடிக்காமல் முழுங்கிவிட்டு,

“ஏற்கெனவே உங்களுக்குச் சொல்லிவிட்டேன். என் தவறை உணர்ந்து அதைத் திருத்தி வாழ முயற்சி செய்கிறேன் என்று. திரும்பத் திரும்ப அதைக் குத்திக் காட்டும்போது எனக்கு வெறுப்பாக இருக்கிறது. ஒரு காலத்தில் பணத்துக்கு ஆசைப் பட்டது உண்மை. அதை மறுக்கவில்லை. ஆனால் அது எந்தளவு பெரிய தவறு என்று பிறகுதான் புரிந்தது. தப்பு செய்த ஒருத்தி திருந்தி வாழக் கூடாதா? இல்லை வாழத்தான் முடியாதா? இதோ பாருங்கள், உங்களுக்கு நான் ஏற்றவள் அல்ல. உங்கள் மொழியில் சொல்லவேண்டும் என்றால், பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யக் கூடியவள். என்னை விட, நல்லவளாக உங்களுக்குப் பொருத்தமானவளைத் தேர்ந்து மணம் செய்து கொள்ளுங்கள்.” உறுதியாகச் சொல்ல, உதடுகளைப் பிதுக்கினான் அபராசிதன்.

“இதோ பார் வஞ்சி… உனக்கு மட்டுமில்லை, எனக்கும் உன்னை மணப்பது ஒன்றும் சந்தோஷத்தைக் கொடுக்கப் போவதில்லை. ஆனால், ஆராவமுதனின் எதிர்காலத்திற்காக இந்தத் திருமணம் அவசியம். ஒரு குழந்தையின் நல் வாழ்க்கைக்குத் தாய் தந்தை இருவரும் எந்தளவு முக்கியம் என்று நான் உனக்குச் சொல்லவேண்டிய அவசியமில்லை. நீ எப்படியாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் ஆராவுக்கு நல்ல தாயாக இருக்கிறாய். அதே போல அவனுக்கு நல்ல தந்தையாக நான் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவனுக்கு அழகான குடும்பம் வேண்டும்… அதற்காகவாவது என்னை நீ திருமணம் செய்துதான் ஆகவேண்டும்…” சொன்னவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் பார்த்தாள் திகழ்வஞ்சி.

ஆராவுக்காக அவள் உயிரையும் கொடுப்பாள் தான். ஆனால் இந்தத் திருமணம். அதுவும் இவனை..? நினைத்தவளுக்கு இன்னொரு அச்சமும் பிறந்தது. கூடவே பல கேள்விகள். பயங்கள்.

“அபராசிதன்… உங்களை மணம்முடித்தால், நீங்களும் நானும் முள்ளில் நிற்பதுபோலத்தான் வாழ்க்கையைத் தொடங்கவேண்டிவரும்… வீணாக நீங்களோ, நானோ வேதனைப்பட்டுக் கருகி நசிவதை விட இப்படியே இருந்துவிடலாமே…” அவள் கேட்க மறுப்பாகத் தலையை அசைத்தான் அபராசிதன்.

“நீ சொல்வது நிஜம். அது தெரிந்தும் உன்னை மணக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன் என்றால், அந்த முடிவுக்குப் பின்னால் இருக்கிற நிதர்சனத்தை நீ புரிந்து கொள்ள வேண்டும். என் முடிவுக்குப் பின்னால் இருக்கிற ஒரே காரணம் ஆராவமுதன் மட்டுமே. எந்த நேரம் நீ அவனை எங்களிடமிருந்து பிரித்துச் செல்வாய் என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் காத்திருக்க முடியாது. எனக்கு ஆராவமுதன் உரிமையானவனாக வேண்டும். அதற்கு ஒரே வழி உன்னை நான் மணப்பது மட்டுமே. நாம் இருவரும் மணந்து கொண்ட பிறகு, அவனை என் குழந்தையாகத் தத்தெடுக்க முடிவு செய்துவிட்டேன். இல்லை முடியாது, இதற்குச் சம்மதிக்க மாட்டேன் என்றால், குழந்தையை முழுமனதாக எங்களிடம் ஒப்படைத்து விட்டு, நீ விலகிச் செல். போக முதல் ஆராவமுதன் உன் குழந்தையில்லை, அவனுக்கும் உனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கையொப்பம் இட்டுக் கொடுத்துவிட்டுப் போ. அது ஒன்றும் உனக்குச் சிரமமாக இருக்காது. நீ ஏற்கெனவே குழந்தையை என்னோடு எடுத்துச் செல்ல சம்மதம் சொன்னவள்தானே…” அவன் சொல்ல முகம் வெளிறிப் போனாள் திகழ்வஞ்சி.

அன்று உடலும் மனதும் பலவீனம் அடைந்திருந்த நேரத்தில் முட்டாள்தனமாக அப்படிச் சொன்னாள் என்றால், அதுவே நடந்துவிடுமா. இதோ இந்த விநாடியில் அன்றைய நாளை நினைத்தால் இதயமே வெடித்துச் சிதறிவிடும் பொல வலிக்கிறதே. ஐயோ அவள் என்னதான் செய்யப் போகிறாள்?

தவித்து நிற்கையில் அவளை நெருங்கியவன், அவளுடைய தோள்களில் கரத்தைப் பதித்து அழுத்திக் கொடுத்தான் அபராசிதன்.

“திகழ்வஞ்சி நீ சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்தத் திருமணம் நம் இருவருக்குமே மகிழ்ச்சியைக் கொடுக்கப்போவதில்லை. ஆனால்… ஆராவுக்காக யோசி. அவனுடைய எதிர்காலத்திற்காக யோசியேன். அவனுக்குத் தாய் மட்டுமில்லாமல் தந்தையும் அவசியம். அந்தக் கண்ணோட்டத்தில் யோசி. ஒரு வேளை குழந்தையை என்னிடம் ஒப்படைத்துவிட்டு நீ விலகிச் செல்கிறாய் என்றே எடுத்துக் கொள்வோம், என்றாவது ஒரு நாள் என் வாழ்க்கையில் பெண் என்று ஒருத்தி மனைவியாக வருவாள். அவள் ஆராவை எப்படிப் பார்த்துக் கொள்வாள்? என்னதான் அவனுக்கு அன்னையாக இன்னொருத்தி வந்தாலும், பெற்ற தாய் இருப்பது போல வருமா… அதே போல இன்னும் ஐந்து வருடங்களிலோ, பத்து வருடங்களிலோ உன்னுடைய வாழ்க்கையிலும் ஒரு ஆண் வருவான். அவன் ஆராவின் வாழ்க்கையில் எந்தவிதமான பங்களிப்பைச் செய்வான் என்று உன்னால் சொல்ல முடியுமா? எத்தனை கேள்விப்படுகிறோம். சிற்றன்னை கொடுமை, இரண்டாம் தந்தையின் கொடுமை என்று. இதை நம் ஆராவுக்குக் கொடுக்க வேண்டுமா… ஆராவின் இடத்திலிருந்து யோசி. அது மட்டுமில்லை, என்னை மணப்பதால் உனக்கு நன்மைதான் அதிகம். உன் மீது பூசப்பட்டிருக்கும் கழிசடை என்கிற கரும் புள்ளி நீங்கும். ” சொன்னவன், இப்போது அவளுடைய தோள்களிலிருந்து கரத்தை விலக்கித் தன் பான்ட் பாக்கட்டிற்குள் திணித்து,

“அது மட்டுமில்லை திகழ்… யோசித்துப் பார்…! ஆரா வளர்ந்த பின்னாடி, தான் உருவான விதம் அவனுக்குத் தெரிந்தால், அவன் உன்னை மதிப்பானா?” அவன் கேட்க, பெரும் வலியோடு அவனைப் பார்த்தாள் திகழ்வஞ்சி.

அன்று அவளும் இதைத்தானே யோசித்துத் துடித்தாள். தவித்தாள். இப்போது அதையே அவனும் சொல்ல, அவளால் தாள முடியவில்லை. முகம் கசங்க அவனைப் பார்க்க, அவனோ,

“அது எதுவும் அவனுடைய கவனத்திற்கு வராதவாறு என்னால் செய்ய முடியும் திகழ். சத்தியம் செய்கிறேன், கடைசிவரை ஆராவுக்கு என் அண்ணன்தான் தந்தை என்று தெரியாது. தெரியவும் விட மாட்டேன்… அவனுக்கு அப்பா நான்தான். தாய் நீதான். என்று நீ என்னை மணந்து கொள்கிறாயோ, அந்த நொடியிலிருந்து நீ என்னில் பாதி. நீ எப்படிப்பட்டவளாக இருந்தாலும் மன்னித்து மறந்து விடுகிறேன். நாம் புதிதாக ஒரு வாழ்க்கையை வாழலாம். நல்லதோ கெட்டதோ நம் ஆராவுக்காக வாழலாம். ஆரா என்னை ஏற்றுக் கொண்டு விட்டான். அது உனக்கும் தெரியும். இரண்டு நாட்கள் அவகாசம் தருகிறேன். யோசி. நிறைய யோசி… உன் முடிவைச் சொல்…” என்றவன் என்ன நினைத்தானோ தன் கரத்தைத் தூக்கி அவளுடைய கன்னத்தில் தன் உள்ளங்கையை வைக்க, படபடப்போடு அவனைப் பார்த்தாள் திகழ்வஞ்சி.

முழு நிமிடம் அவளுடைய முகத்தை உற்றுப் பார்த்தான்.

“எவ்வளவுதான் கற்பனை செய்தாலும், உன்னைக் கெட்டவளாக என்னால் நினைக்க முடியவில்லை திகழ்வஞ்சி. அதற்கான காரணமும் தெரியவில்லை. அன்றைய உன்னுடைய வயது, பணத் தேவை அனைத்தும் உன்னைத் தப்பானவளாக மாற்றிவிட்டது போல. இந்த விநாடி வரை, நீ தப்புச் செய்திருக்க மாட்டாய் என்று என் உள் மனது சொல்கிறது…” என்றவன் மெதுவாகப் பெருவிரலால் அவளுடைய கன்னத்தை வருடிக் கொடுக்க, அவளுடைய தேகம் எங்கும் அந்த விரலிதின் வருடலில் சிலிர்த்துப் போக, அவனை இமைக்காமல் பார்த்தாள் திகழ்வஞ்சி.

அவனும் கொஞ்ச நேரம் அந்த நீண்ட விழிகளை உற்றப் பார்த்தான்.

“இந்த விழிகள்… இவை இரண்டும் உன்னை நல்லவளாகத்தான் காட்டுகிறது. ஆனால் நீ நீ பெரிய தப்பு செய்திருக்கிறாய். இதில் எது உண்மை? நீ யார்? பணத்துக்காக என் அண்ணனை வளைத்த திகழ்வஞ்சி நிஜமா, இல்லை பணம் கிடைக்க வாய்ப்பிருந்தும் அதை மறுக்க நினைக்கும் நீ நிஜமா? இதில் எது நிஜம்?” அவன் குழம்பிக் கேட்கையில், அவளுடைய விழிகளில் முனுக் என்று கண்ணீர் பூத்தது. அந்தக் கண்ணீரைக் கண்டவன் மேலும் குழம்பிப் போக,

“திகழ்…!” என்றவாறு அவளை மேலும் நெருங்க முயன்றான். அவசரமாக அவனைத் தள்ளிவிட்டு விலகியவள், கண்ணீரைப் புறங்கையால் துடைத்து விட்டு, அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் ஒரே ஓட்டமாகத் தன் அறைக்குள் நுழைந்து கதவை அறைந்து சாற்றிவிட்டு, தன்னை மறந்து விம்மி வெடிக்கத் தொடங்க, அபராசிதனோ குழப்பத்தோடு நீள் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

‘எனக்கு என்னதான் ஆயிற்று. நான் ஏன் இப்படி நடந்த கொள்கிறேன். அக்காவிடம், இந்தத் திருமணம் ஆராவமுதனுக்காக மட்டும்தான் என்று சொல்லிவிட்டு, இங்கே அவளிடம் மனதாரப் பேசுகிறேனே… எப்படி? இத்தனை நடந்திருக்கிறது, ஏன் என்னால் இவளை வெறுக்க முடியவில்லை. அவளை முதன் முறையாகப் பார்த்த நொடியில் மனது எப்படித் தவித்ததோ, அப்படித்தானே இப்போதும் தவிக்கிறது? இது என்ன வேதனை. இதோ இப்போது கூட அவள் அழுததை ஏன் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை?’ அவனுக்குத் தன் மீதே எரிச்சல் வந்தது.

குழம்பியவன் தன் கரங்களால் தலைமுடியை வாரி இழுத்துவிட்டு முகத்தைக் கரங்களில் தாங்கிச் சற்று நேரம் யோசித்தான். எதுவும் பிடிபடவில்லை அவனுக்கு.

எது எப்படியோ, அவனுக்குத் திகழ்வஞ்சியையும் விட்டுக் கொடுக்க முடியாது ஆராவமுதனையும் விட்டுக் கொடுக்க முடியாது. கூடவே அமலனைப் போலத் தானும் அவளுடைய மாயவலைக்குள் விழுவதையும் அவனால் தடுக்க முடியவில்லை.

இந்த மனம் இருக்கிறதே, அதைப் போலக் குரங்கு உலகில் எதுவும் இல்லை. ஒன்றில் மட்டும் நிலைத்திருக்காது. தத்தித் தாவும். எது பிடிக்கிறதோ, அது மட்டும்தான் சிறந்தது என்று நினைக்கும். நன்மை தீமை எதையும் யோசிக்காது. சரி தவறு எதைப் பற்றியும் கவலைப்படாது. தேவையா அதை நோக்கி மட்டும்தான் ஓடும். இப்போது அவனுடைய மனதுக்கு அவளும் குழந்தையும் மட்டும்தான் தேவை என்று படுகிறது. விளைவு அதை நோக்கி ஓடுகிறது. அதை அடக்க முடியாத கையாலாத் தனத்துடன் அப்படியே அமர்ந்திருந்தான் அபராசிதன்.

 

What’s your Reaction?
+1
56
+1
13
+1
4
+1
1
+1
3
+1
1

Related Post

8 thoughts on “தொலைந்த எனை மீட்க வா…!- 23/24”
  1. அருமையான பதிவு 😍😍😍😍.
    எதே செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தம் செய்யறதா சொல்லறானே இந்த ராகவ்வு?🙄🙄🙄🙄🙄 திகழோட வெறுப்பை பாக்கும் போது திகழோட அம்மாவோட இறந்த காலமா இருப்பானோ?🙄🙄🙄🙄.

    டேய் தம்ப்றீ இதெல்லாம் ஆரம்பந்தான். போகபோக என்றாளை பேசுனதுக்கெல்லாம் வட்டி மொதலுமா அனுபவிக்க போறேடா😂😂😂😂😂. இன்னும் கொஞ்சம் மண்டைய பிச்சுக்கோ😆😆😆😆😆. நாந்தான் சொன்னேனே லோலோன்னு என்றாளு பின்னாடி சுத்தப்போறே😎😎😎😎

    1. ஹா ஹா ஹா அவன் சுத்திறானோ இல்லையோ. நீங்க எல்லாருமா அவனை சுத்த வச்சிருவீங்க. பாவம் என்ற ஹீரோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!