Tue. Apr 15th, 2025

தொலைந்த எனை மீட்க வா…!-2

(2)

வினிபெக் குழந்தைகள் மருத்துவமனையில்…

“ஷ்… பேபி… இட்ஸ் ஓக்கே.. இட்ஸ் ஓக்கே… கண்ணா… அம்மாதான் இருக்கிறேனே.. அழாதே தங்கம்…!” என்று ஒருவயதே நிறைந்த அழுத குழந்தையைத் தேற்றிக்கொண்டிருந்தாள் அவள்.

சுருண்ட கார்குழலை சரியாக வார நேரம் இல்லாமலோ என்னவோ, ஏனோ தானோ என்று மண்டையின் நடுவில் கொண்டையாகப் போட்டு இருக்க, அதில் சிதம்பி வெளியே நீட்டி நின்றன ஒரு சில முடிக் கற்றைகள். அதில் முன்பக்கமாக விழுந்த இரட்டை மயிர் கற்றைகள் அவளுடைய வில்போன்ற நீண்ட அடர்ந்த இமையின் ஓரமாகப் பட்டுச் சரசமாட, அதைச் செழித்த செவ்விய உதடுகளைக் குவித்து ஊதித் தள்ள முயன்று தோற்றுக்கொண்டிருந்தாள் அவள். அதற்கு மேல் அளவான கூரிய நாசியில் சின்னதாய் ஒரு வளைய மூக்குத்தி. செதுக்கிய மாசு மருவற்ற முகம். சங்குக் கழுத்தில் தொட்டால் அறுந்துவிடும் போலச் சின்னதாய் ஒரு சங்கிலி. அதில் ‘டிவி’ எனப் பொறிக்கப்பட்ட குட்டி பென்டன் தொங்கிக் கொண்டிருந்தது. இன்னும் கீழே பார்த்தால் பெண்களுக்கே இலக்கணமான பெண்மை உடல் அவயவங்களோடு வெண்ணிறத்தில் ஒரு ஷேர்ட்டும் தொடைகளைக் கவ்விப் பிடித்த டெனிமும் பான்டும், காலில் வெண்ணிற ரன்னிங் ஷூவும் அணிந்து பார்த்தால் சுண்டி இழுக்கும் வகையில் நின்றிருந்தாள் அந்த இளம் தாய்.

ஆம் தாய்தான். அவளுடைய கரங்களில் ஒரு வயது குழந்தை நிற்கமாட்டேன் என்று அடம்பிடித்து இறக்கி விடு என்கிற கட்டளையோடு அங்கும் இங்கும் நெளிந்து கொண்டிருக்க, அவனைக் கையில் வைத்திருக்க முடியாமல் தள்ளு வண்டியில் குழந்தையை அமர்த்திப் பூட்டத் தொடங்கிய நேரம், உடனே வாயைப் பிளந்தான் அவள் மகன்.

“ஆஆஆஆஆ” தன் தொண்டையைத் திறந்து குழந்தை வீறிட, அவளுக்குப் பக்கத்திலிருந்த நோயாளர்களோ, இல்லை பார்வையாளர்களோ, அவளை ஒரு மாதிரிப் பார்க்க, சங்கடமாக ஒரு புன்னகையைச் சிந்தியவள்,

“சா… சாரி…” என்றுவிட்டுத் தன் குழந்தையைக் கண்டிப்பது போலப் பார்த்தாள்.

“நோ… ஆரா…” அவள் கூறும் போதே,

“ஆராவமுதன்… ஆராவமுதன்…” என்று ஏலமிட்டவாறு வந்தார் வெள்ளை நிறத் தாதி.

“யப்… ஹியர்…” என்று கை நீட்டித் தன் இருப்பைச் சொன்னவள், உடனே குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவரை நோக்கிச் செல்ல, அந்தத் தாதி தன் கரத்தில் இருந்த கோப்பிலிருந்த தகவல்களைச் சரிபார்க்கும் விதமாகக் குழந்தையின் பிறந்த திகதி வருடம் முதலியவற்றைக் கேட்டுச் சரி பார்த்துவிட்டு,

“அன்ட்… யு… ஆர்…?” என்று இழுத்தார்.

“நான் இவனுடைய அம்மா… திகழ்வஞ்சி…” அவள் சொல்லக் காற்று கூடத் திகைத்துப் போய் அவளைப் பார்த்தது.

அவளிடம்தான் இப்போது எத்தனை மாற்றம்? அந்த நவநாகரீக மங்கை எங்கே போனாள்? அலட்சியமாகப் பார்க்கும் பார்வையும், ஆடம்பரமாக அணியும் ஆடைகளும் எங்கே போனது? அந்த மெலிந்த தேகம் குழந்தை பெற்றதாலோ என்னவோ சற்று செழித்திருந்தது. முன்பு அதீதமாகப் போடும் முகப்பூச்சைக் காணோம். குழந்தை பிறந்ததால் தன்னை அலங்கரிக்கக் கூட அவளுக்கு நேரம் கிடைக்கவில்லை போல. புருவத்தில் குத்தி இருந்ததும் இப்போது இல்லை. அதனால் புருவங்கள் அழகாக வில்லெனத் தெரிந்தன. மிக அழகிய இளம் தாய்தான் அவள்.

அந்தத் தாதி அனைத்து விபரங்களும் சரி என்று பதிவு செய்துவிட்டு, “என் கூட வாருங்கள்…” என்றவாறு அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

சற்றுத் தூரம் போனதும், ஒரு அறையைக் காட்டி உட்காரப் பணித்துவிட்டு வெளியேறத் திரும்பவும் மகன் கரங்களில் கிடந்து என்னை விடு என்பது போல நெளிந்தான்.

அவன் இப்போதுதான் நடக்க ஆரம்பித்து இருந்தான். அன்றிலிருந்து ஒரு இடத்தில் நிற்க மாட்டேன் என்று அழிச்சாட்டம் செய்கிறான். அவனுடைய குறும்புத்தனம், மாயக் கண்ணனையும் விஞ்சிவிடும் அளவுக்கு இருக்கிறது.

“ஆரா…! சும்மா இருடா…! இன்னும் கொஞ்ச நேரத்தில் வைத்தியர் வந்துவிடுவார்… அதுவரைக்கும் நல்ல பிள்ளையா இரு…” அவள் அதட்டலோடு சமாதானம் செய்யும் போதே புன்னகையுடன் உள்ளே வந்தார் வைத்தியர்.

“என்ன சொல்கிறான் உங்கள் மகன்…?” கேட்டவாறு அவளுக்கு முன்பாக இருந்த இருக்கையில் அமர்ந்தார்.

பதிலுக்கு அழகிய புன்னகையைச் சிந்தியவள், மகனைத் தன்னோடு இறுக அணைத்தவாறு,

“ஒரு வயதுக்குரிய துருதுருதான் டாக்டர்… மற்றும்படி ஆரோக்கியமாக இருக்கிறான்…” என்றவள் குனிந்து குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அதைக் கேட்டுத் திருப்தியாகத் தலையசைத்த வைத்தியர், எப்போதும் போலக் குழந்தையைப் பரிசோதித்து விட்டு,

“ம்… எவ்ரிதிங் பேர்ஃபக்ட்…” என்றவர், அந்த வயதுக்குப் போடவேண்டிய தடுப்பு மருந்தை ஊசியில் ஏற்றி குழந்தையின் தொடையில் செலுத்த ஆரம்பிக்க, இவளோ சட்டென்று குழந்தையின் கருத்தை வேறு திசைக்குத் திருப்பும் முகமாக,

“ஆரா… அங்கே பார்டா…! குட்டிக் குருவி…” என்று கையைக் காட்ட, தன் தாயின் மெல்லிய சங்கிலியோடு விளையாடிக் கொண்டிருந்த ஆராவமுதன், தாய் காட்டிய திசைக்கு முகத்தைத் திருப்பிய நேரம், வைத்தியர் ஊசியைப் போட்டு விட்டு விலகினார்.

சுளீர் என்று ஏற்பட்ட வலியில் ஒரு கணம் யோசித்த குழந்தை அதிர்ச்சியோடு திரும்பி தாயைப் பார்த்துவிட்டு, நான் அழவா விடவா என்பது போல நின்றிருக்க, அதைப் புரிந்து கொண்ட அவளுக்கு, சிரிப்பு வந்தது.

ஆனாலும் அடக்கியவளாக, குழந்தையின் வயிற்றில் முகம் புதைத்து கிச்சு கிச்சு மூட்ட, தன் இரண்டு பற்களையும் காட்டி கிளுகிளுத்துச் சிரித்தது குழந்தை. அதைக் கண்டு புன்னகைத்த வைத்தியரும்,

“குட்… இனி அடுத்த தடுப்பூசி இந்த அட்டையில் இருக்கிறது. அதைப் பார்த்து வாருங்கள்…” என்ற வைத்தியருக்கு நன்றி கூறிவிட்டுக் குழந்தையுடன் வெளியே வந்தாள் திகழ்வஞ்சி. திரும்பவும் குழந்தையைத் தள்ளுவண்டியில் கிடத்தித் தள்ளியவாறு கார் தரிப்பிடத்திற்கு வந்தாள்.

குழந்தையைத் தூக்கி, ‘கார்சீட்டில்’ கிடத்தி விட்டு, பாதுகாப்பு பட்டியையும் அணிவித்தவள், குழந்தையைச் சிறு போர்வையால் போர்த்தி விட்டு ஓட்டுனர் இருக்கையில் வந்து அமர்ந்து வண்டியைக் கிளப்ப,

“மமா…!” என்றது குழந்தை.

“என்னடா கண்ணா…?”

“பா… பா…” என்றான் மகன். குழந்தைக்குப் பசிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டவள் உடனே வண்டியை நிறுத்தி, குழந்தையின் பையிலிருந்த பால் போத்தலை எடுத்து மகனின் வாயில் வைக்க, அவனே பால் போத்தலைக் கையால் பற்றியவாறு கடகடவென்று குடிக்கத் தொடங்க, குழந்தையைக் கனிவோடு பார்த்தாள் அவள்.

கடந்த ஒரு வருடத்தில்தான் எத்தனை மாற்றங்கள். வாழ்க்கை அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டதே. எதிர்பாராத நேரத்தில் கையில் குழந்தையோடு, தனித்து விடப்பட்ட போது கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலத்தான் இருந்தது. ஆனால் குழந்தையைக் கரங்களில் ஏந்திய அந்த நொடி, அவனுக்காகவே வாழத் தொடங்கி விட்டாள் அவள். பழைய நினைவில் ஒரு கணம் முகம் வாடி நின்றவள், ஒரு பெருமூச்சோடு வண்டியை எடுக்க அடுத்த இருபதாவது நிமிடத்தில் அந்த சிறிய வீட்டின் முன்னால் வந்து நின்றாள்..

மீண்டும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு உள்ளே செல்ல, பக்கத்து வீட்டின் உரிமையாளர் ஜார்ஜ் இவளைப் பார்த்துக் கையாட்டி,

“ஹே… ஹவ் ஆர் யு…? ஹவ் இஸ் லிட்டில் டீமன்…?” புன்னகையுடன் கேட்க, சிரித்தவாறு தன் மகனைப் பார்த்தாள் அவள்.

“ஹி இஸ் ஓகே ஜார்ஜ்..! நீ எப்படி இருக்கிறாய்…?”

“ம்.. ஹெல்த்தி அஸ் எ ஹார்ஸ்…” கூறிவிட்டு அவளிடம் விடைபெற்றுச் செல்ல, கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் அவள்.

ஆராவமுதன் பிறந்ததும், ஒட்டாவாவை விட்டு வினிபெக் வந்துவிட்டாள். அவள் தங்கியிருக்கும் வீடு நகரத்தை விடச் சற்றுத் தள்ளி இருந்ததால் அதிக ஜன நெருக்கடியில்லை.

சின்ன வீடு என்பதாலும், சற்று ஒதுக்குப்புறமாக இருந்ததாலும், வாடகை கொஞ்சம் குறைவுதான். அதனால் நொய் நொய் என்று கேள்வி கேட்க ஆட்கள் இல்லாத அழகான இடம். சுற்றியிருக்கும் அயலவர் அனைவரும் வெள்ளையர்கள் என்பதால் எந்தவிதமான அநாவசியப் பேச்சுக்களுக்கும் அவசியம் இருந்ததில்லை. ஒரு வேளை வெள்ளையர்கள் நிறைந்த இடத்தில் அவள் மட்டும் மாநிறமாக இருந்தது அவர்களுக்கு ஒதுக்கத்தைக் கொடுத்ததோ என்னவோ.  அவளுக்கும் அதுதானே தேவையாக இருந்தது. இப்போதிருக்கும் சூழ்நிலையில் யார் கூடவும் நெருங்கிப் பழகும் நிலையில் அவள் இல்லையே.

ஆனால் பக்கத்திலிருந்த ஜார்ஜுக்கும் அவர் மனைவி ஈவாக்கும் இவளை மிகவும் பிடிக்கும். அவர்களின் உருவத்தைப்போலவே, உள்ளமும் வெள்ளையானது. அவர்கள் திருமணம் முடித்துப் பதினைந்து வருடங்களாகக் குழந்தைகள் இல்லை. இனியும் குழந்தை பிறக்கும் என்கிற நம்பிக்கையை இழந்த காரணத்தால், வீட்டிலேயே குழந்தைகளைப் பராமரித்துக் கொடுக்கலாம் என்கிற எண்ணத்தில் குழந்தைக் காப்பகம் ஒன்றை ஆரம்பித்தார்கள். அது அந்தச் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களுக்குப் பெரும் வசதியாகிப் போக, தங்கள் குழந்தைகளை ஈவாவிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வார்கள்.

திகழ்வஞ்சி அந்த வீட்டை வாடகைக்கு எடுக்க அதுவும் ஒரு காரணம். குழந்தை காப்பகம் மிக அருகாமையிலிருந்ததால், வேலைக்குப் போகும் போது எட்டிக் குழந்தையைக் கொடுத்துவிட்டு, வேலை முடிந்ததும், ஓடிவந்து குழந்தையை வாங்கிக் கொள்ளலாம்.

அவள் இப்போது ஒரு கடையில்தான் வேலை செய்கிறாள். அதன் வருமானம், அவளுக்கும் ஆராவமுதனுக்கும் போதுமானதாக இருந்தாலும், முன்னையது போல ஆடம்பரச் செலவு எதுவும் செய்ய முடிவதில்லை. வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு கட்டணம், குழந்தைக் காப்பகத்துக்கான செலவு என்று, வரும் சம்பளம் முக்கால்வாசியும், இவற்றிற்குப் போய்விடும். மீதியிருப்பதில் குழந்தையின் செலவு, அவளுடைய சாப்பாடு என்று சரியாகிவிடும். இவள் ‘சிங்கிள் மம்’ என்பதால் அரச உதவியும் அவளுக்குக் கிடைப்பதால் ஓரளவு அவளால் சமாளிக்க முடிகிறது. இல்லை என்றால் அவள் பாடு திண்டாட்டம்தான். ஆனாலும் அதீதமாக எந்தச் செலவையும் இழுத்துவிட முடியாது. அப்படி இழுத்து விட்டால் தலையில் துண்டுதான்.

வீட்டிற்குள் நுழைந்தவள், நேரத்தைப் பார்த்தாள். இன்னும் இருபது நிமிடங்களில் வேலைத்தளத்தில் நின்றாகவேண்டும்..

“****” திட்டியவள் அரக்கப்பரக்க, ஆராவமுதனுக்கு உணவையூட்டும் போதே வாசல் மணி அடித்தது.

இந்த நேரத்தில் யார்? குழம்பியவள், குழந்தையின் உணவைத் தட்டில் வைத்துவிட்டுப் போய்க் கதவைத் திறந்தால் யாருமில்லை.

கோபம் கொண்டவளாகச் சற்று வெளியே வந்து எட்டிப் பார்க்க, பதின்மூன்று வயது வெள்ளையினத்துச் சிறுவன் ஒருவன் தலைதெறிக்க ஓடுவது தெரிந்தது.

அதைக் கண்டதும் கோபம் வந்தாலும் கூடவே புன்னகையும் வந்தது.

அவள் அங்க வந்த பிற்பாடு இப்படி அடிக்கடி நடப்பது உண்டு. அவள் வேற்று இனத்தவள் என்பதால், சீண்டிப் பார்க்கவென்று விடலைப் பருவத்தை நெருங்கிய வெள்ளையினத்துச் சிறுவர்கள், வீட்டு அழைப்பு மணியை அடிப்பதும், இவள் வந்து திறப்பதற்குள் ஓடுவதும், என்று அவளை வைத்துச் செய்தார்கள். ஆரம்பத்தில் கோபம் வந்தது உண்மை. பின்னாளில் அதுவே பழகிப் போன ஒன்றாக மாறிவிட்டிருந்தது. இப்போது அடிக்கடி என்றில்லாவிட்டாலும், இதோ இப்படி எப்போதாவது அடித்துவிட்டுச் செல்வார்கள். இவள் கதவைத் திறக்கவில்லை என்றால் போச்சு. திரும்பத் திரும்ப அடித்துக்கொண்டே இருப்பார்கள்.

வாய்க்குள் எதையோ முனங்கியவாறு கதவை மூடிவிட்டு உள்ளே வந்தவள் அங்கே கண்ட காட்சியில் வாய் பிளந்து நின்றாள்.

அங்கே ஆராவமுதன் அவள் வைத்து விட்டுப் போன உணவைக் கவிழ்த்துக் கொட்டி அதில் தாளம் தப்பிக்கொண்டிருந்தான். உடை முழுவதும் உணவு சிந்தியிருக்க கை முகம் தலை என்று எல்லா இடமும் உணவைப் பூசியிருந்தான் அந்தக் குட்டிக் குறும்பன்.

தலையில் கை வைத்தவள்,

“டேய்…! என்ன காரியம்டா செய்திருக்கிறாய்?” மகனைத் திட்டியவாறே திரும்ப அவனைக் குளிக்க வைத்து, ஆடை மாற்றி, ஈவாவிடம் ஒப்படைத்துவிட்டுப் பரபரவென்று, வண்டியில் ஏறி வேலைக்குப் பறந்தாள் திகழ்வஞ்சி.

ஏற்கெனவே ஒரு மணி நேரம் விடுப்பு எடுத்து இருந்தவள், அதையும் தாண்டி அரைமணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்ததைக் கண்டதும், சற்று கோப விழிகளுடன் அவளைப் பார்த்தார் ஜனிட்டன்.

அவரைக் கண்டதும் அசட்டுப் புன்னகையைச் சிந்தி, விழிகளாலேயே மன்னிப்புக் கேட்டு, வேலையாளர்கள் ஒதுங்கும் அறைக்குள் நுழைந்து, தன் பொருட்களைத் தனக்குரிய இடத்தில் வைத்து விட்டுக் கவுன்டரில் வந்து நின்றாள். ஜானிட்டரும் அங்கேதான் நின்றிருந்தார்.

மதிய நேரம் என்பதால் அதிகக் கூட்டம் இருக்கவில்லை. வந்து நின்றவளை ஏறிட்ட ஜனிட்டர்,

“மகன் எப்படி…? எல்லாத் தடுப்பூசியும் போட்டாகிவிட்டதா?” அக்கறையாகக் கேட்க, தலையை ஆட்டியவள்,

“ம்… அவன் நன்றாக இருக்கிறான்… எல்லா ஊசியும் போட்டாயிற்று..” என்று அவனுக்குப் பதில் உரைக்கும்போதே ஒரு வாடிக்கையாளர் பொருட்களை எடுத்து வந்து கவுன்டரில் வைத்தார்.

இனிய புன்னகையுடன் அவரைப் பார்த்து தலை அசைத்தவள்,

“ஹாய்… எப்படி இருக்கிறீர்கள்…? உங்களுக்கு வேண்டியது அனைத்தும் எடுக்கக் கூடியதாக இருந்ததா?” எப்போதும் வாடிக்கையாளர்களிடம் கேட்கும் அந்தக் கேள்வியை அழகிய புன்னகையுடன் கேட்க, வந்த வாடிக்கையாளரின் முகம் தானாகக் கனிந்தது.

“ம்… அனைத்தும் எடுத்துவிட்டேன்…” என்றார் அவர் பதிலுக்கு மலர்ந்த முகத்துடன்.

ஆரம்பத்தில் அவள் அந்தக் கடையில் வேலைக்குச் சேர்ந்த போது அவர் முகத்தை நீட்டியவாறுதான் வந்து பொருட்களை வாங்கிச் செல்வார். காரணம் அவர்களோடு ஒப்பிடும் போது அவள் கொஞ்சம் மாநிறமாக இருப்பாள். அந்த இடம் முழுவதுமே வெள்ளையர்களுக்கு உரிய இடம். இதில் மாநிறத்தோடு ஒருத்தி தங்களில் ஒருத்தியாகக் கலக்க வந்தால், அவளை ஏற்றுக் கொள்வது அத்தனை சுலபம் அல்லவே. ஆனால், அவளுடைய இனிய புன்னகையும், அன்பாகப் பேசும் விதமும், அரவணைத்து நடக்கும் முறையும், வேண்டிய பொருட்களைக் காணவில்லை என்று தேடினால், ஓடிப்போய் எடுத்துக் கொடுக்கும் பாணியும், அங்கே வரும் வாடிக்கையாளர்கள் கவர்ந் திழுக்க, அத்தனை வாடிக்கையாளர்களுக்கும் அவள் பிடித்தமாகிப் போனாள். அதனால் அவளையும் தங்களில் ஒருத்தியாக அவர்கள் ஏற்றுக்கொள்ள, அவளோடு பேசி சிரிக்க என்றே ஒரு சிலர் அந்தக் கடையைத் தேடி வருவார்கள்.

அதில் இப்போது வந்து நின்ற வாடிக்கையாளரும் ஒருவர்.

கொஞ்ச நேரம் அவளோடு பேசிவிட்டு விடை பெற, அடுத்து உள்ளே நுழைந்தான் கிறிஸ்டீன். அவனைக் கண்டதும் நெஞ்சம் பக் என்றது அவளுக்கு.

கிறிஸ்டீன் வேறு யாருமில்லை, ஜனிட்டனின் மகன். என்னதான் வாழ்க்கையில் பிரச்சனை இல்லாமல் போனாலும், அதுகூடச் சுவைக்காது அல்லவா? இதோ அவளுக்கு வந்த சோதனைதான் இந்தக் கிறிஸ்டீன்.

ஒரே ஒரு பையன். அதிகச் செல்லம் என்பதாலோ என்னவோ தான்தோன்றியாகத் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவன். நிறையத் தப்பான நட்பு வட்டாரத்தில் சிக்கிக் கொண்டதால், பன்றியோடு சேர்ந்த கன்றும் எதையோ தின்னும் என்பது போல, அவனும் தப்பானவனாக மாறிக் கொண்டவன். அவன் தவறான பாதையில் போகிறான் இனி திருத்தவேண்டும் என்று ஜனிட்டர் யோசிப்பதற்குள்ளாகக் கைமீறிப் போய்விட்டான் கிறிஸ்டீன்.

ஒரு நாள் காவல்துறையிடமிருந்து அவனைக் கைதி செய்து வைத்திருக்கிறோம் என்கிற செய்தி அறிந்து பதறிப்போய் ஓடினார் ஜனிட்டர்.

யாரோ நண்பர்களோடு சேர்ந்து ஒரு வீட்டில் திருட முயன்றதில் கைதி செய்திருக்கிறோம் என்பதைக் கேட்டு ஆடிப்போனார் ஜனிட்டர்.

எப்படியோ இருக்கிற பணத்தைக் கொடுத்துப் பிணையில் அவனை வெளியே எடுத்து வந்தவர், அவனைக் கையோடு கடைக்கும் அழைத்து வந்து விட்டிருந்தார். அன்றைக்குப் பிடித்த சனியன், இன்று வரை அவளை விட்டு விலகவில்லை.

கடைக்கு வந்த கிறிஸ்டீனின் விழிகளில் முதலில் விழுந்தது இவள்தான். அதுவும் ஒரு வாடிக்கையாளருடன் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தவள் இவன் கண்ணில் பட்டுத் தொலைத்தாள். அன்றிலிருந்து படுக்கைக்கு அவள் தேவைப்பட்டாள். அவளை எப்படியாவது தன் வலையில் போடவேண்டி தந்தையுடன் அடிக்கடி கடைக்கு வரத்தொடங்கினான். சந்தேகம் வராதவாறு நடந்து கொண்டான். தன் மகனின் உள் நோக்கம் தெரியாமல், ஜனிட்டனுக்கும் தன் மகன் பொறுப்பானவனாக மாறிவிட்டான் என்று பெரும் மகிழ்ச்சிதான்.

ஆரம்பத்தில் இவளும் கிறிஸ்டீனோடு அன்பாக நட்பாகத்தான் பழகினாள். ஆனால், நாட்கள் போகப் போக கிறிஸ்டீனின் பார்வை இவளை எச்சரிக்கத் தொடங்கியது.

அதுவும் அவள் எங்கு சென்றாலும் அவனுடைய பார்வை அவளையே தொடர்வதையும் பொருட்கள் எடுப்பதற்காகக் கரங்களைத் தூக்கும் போது ஏறும் ஆடைக்கூடாகத் தெரியும் இடையை வெறிப்பதும், சற்று குனிந்து பொருளை எடுக்கும் போது, அவள் அறியாமலே தெரியும் பெண்மையைக் கண்டு இளிப்பதும் என்று மெல்ல மெல்ல அவளுடைய மனதில் கசப்பை ஏற்றத் தொடங்கினான். அதில் உச்சக் கட்டமாக ஒரு நாள், இவள் கணினியில் என்ன பொருட்கள் இல்லை என்று பட்டியலிடும் போது அந்தப் பக்கமாக வந்தவன், ஏதோ பொருட்களை எடுப்பது போலக் கரத்தை எடுத்துச் சென்றவன், சட்டென்று மறு கரத்தால் அவளுடைய மார்பை வருடி விட்டுச் செல்ல, துள்ளி எழுந்து விட்டாள் திகழ்வஞ்சி.

ஆத்திரமும், அழுகையும், பயமுமாகத் திரும்பி அவனைப் பார்க்க, அவனோ அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பது போல வாடிக்கையாளரிடம் பேசத் தொடங்க, இவளுக்குத்தான் கைகால்கள் நடுங்கிப் போனது.

இது பாலியல் வன்முறை. நிச்சயமாகக் காவல் துறைக்கு அறிவிக்க வேண்டிய விடயம். ஆனால் அவளால் அது முடியவில்லை. மூன்று வேளை உணவு இந்த வேலையால்தானே கிடைக்கிறது. அவள் இருக்கும் கிடப்புக்கு, அத்தனை வேலைத் தளங்களும், இவளுக்கு வேலை கொடுக்கவா காத்திருக்கிறது? விரக்தியாக நினைத்தவள், அந்த வேலையின் முக்கியத்துவத்தால், பேசா மடந்தையாகிப் போனாள்.

ஓரளவு படிப்பை முடித்திருந்தாலாவது நல்ல வேலையில் சேர்ந்திருக்கலாம். ஆனால் அவள்தான் படிப்பை அரைவாசியில் நிறுத்தி விட்டாளே. அப்படி இருக்கையில், எங்கே நல்ல வேலை கிடைக்கப் போகிறது. அப்படியே கிடைத்தாலும், அங்கே அத்தனை பேரும் ஒழுக்க சீலர்களாகத்தான் இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதனால் வேறு வழியில்லாமல் அந்த வேலையிலேயே தொடர்ந்து இருக்கிறாள்.

இவள் நிலை நன்கு தெரிந்துதான் கிறிஸ்டீனும் தைரியமாக அவளிடம் வம்பு செய்தான். கூடவே அவளுடைய அமைதி அவனுக்குக் கூடுதல் வாய்ப்பாகிப் போயிருக்க வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தன் சில்மிஷங்களை அவளிடம் காட்டுவான்.

இது எதுவும் தெரியாத ஜனிட்டனோ, தன் மகன் முற்றாகத் திருந்திவிட்டான் என்று நம்பி கடைப் பொறுப்பை அவனிடமே ஒப்படைத்துவிட்டு ஒதுங்கத் தொடங்கினார். அதற்குப் பிறகுதான் கிறிஸ்டினின் அடாவடி மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.

முன்பு அவள் அவதானிக்காத போது செய்ததை, அவள் உணர்ந்து பார்க்கும் போதும் செய்தான். வாடிக்கையாளர்கள் நிற்கும் போது வேண்டும் என்றே முட்டி நிற்பதும், உரசுவதும், பிட்டத்தில் வருடுவதும் அவள் எதேச்சையாகப் பார்க்கும் போது, அசிங்கமாகச் சமிக்ஞை செய்வதும் என்று பாலியல் தொல்லை கொடுக்க, இவளுக்குத்தான் முள்ளின் மீது நிற்பது போன்ற நிலை.

சில வேளைகளில், போடா நீயும் உன் வேலையும் என்று உதறிவிட்டுப் போகவேண்டும் என்று கூட யோசிப்பாள். ஆனால் அடுத்து அவள் நிலை? அவள் எப்படியோ போனாலும், மகனைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமே. ஒரு வயது நிரம்பிய பாலகனுக்கு எத்தனை செலவுகள். டயப்பர் முதல் கொண்டு, பால் மா, கூடவே சத்தான உணவுகள் என்று பட்டியல் நீண்டுபோயிருக்கிறதே. இன்றைய நாட்டில் ஏற்பட்ட பொருட்களின் விலை உயர்வால், அவளைப் போன்ற சாதாரணக் குடிகள் தானே திணறிப் போகின்றன.

அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாமல் பற்களைக் கடித்துக் கிறிஸ்டீனின் தொல்லைகளைக் கண்டும் காணாததுமாகச் சமாளிக்க முயன்றவள், கையோடு வேறு வேலைகளுக்கும் மனுக்கள் போட தொடங்கினாள். ஆனால் போட்ட மனுக்கள் அனைத்தும் கடலில் விழுந்த கல்லாகப் போக இந்த வேலையிலேயே தொடரவேண்டிய நிலை.

அந்த நேரத்தில் உதவி செய்தது பட்ரீஷியா தான். அவளோடு சேர்ந்து வேலை செய்யும் பெண். கிறிஸ்டீன் இவளோடு நடந்து கொள்ளும் முறையைக் கண்டு தானாகவே இவளுக்கு உதவியாக வந்தாள்.

“திகழ்… இவன் போக்கே சரியில்லை… பார்த்து நடந்துகொள்…” என்று எச்சரிக்கை செய்தவள்.

சில நேரங்களில், கிறிஸ்டீனுடன் தனித்திருக்க வேண்டி வரும் போதெல்லாம், ஏதோ வேலை இருப்பது போல அங்கேயே நின்று எதையாவது செய்வாள். கிறிஸ்டின் முறைத்து அவளை வேறு இடத்திற்கு அனுப்ப முயன்றாலும் ஏதோ சாக்குப் போக்கு சொல்லி இவளைச் சுற்றியே நிற்பாள்.

ஆனால் அதற்கும் ஒரு நாள் கெடுகாலம் வந்தது.

What’s your Reaction?
+1
26
+1
5
+1
5
+1
0
+1
0
+1
10

Related Post

10 thoughts on “தொலைந்த எனை மீட்க வா…!-2”
  1. அருமையான பதிவு 😍😍😍😍.
    அடேய் கொரங்குங்களா எங்கிட்டு போனாலும் ஏன் டா பொண்ணுங்களை பாடாப் படுத்தறீங்க😤😤😤😤😤😤😤😤😤😡😡😡😡😡😡😡😡😡 உங்களையெல்லாம் மாறுகால் மாறுகை வாங்கனும் டா🫤🫤🫤🫤

    1. அப்படி சொல்லுங்க. அப்படியே தலையையும் சீவிரனும். ஹாய் வைஷ் எப்படி இருக்கீங்க. ரொம்ப நாளாச்சுபா உங்களை இங்கன பாத்து

      1. ஹாய் நயணிம்மா நான் நலம் ப்பா. நீங்க நலம்தானே ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
        எனக்கு கொஞ்ச நாளாவே இங்கன கமண்ட்ஸ் போட முடியாம ரிஜக்ட் ஆச்சுப்பா.
        அதனாலதான் வரமுடியலை கமண்ட்ஸ் பொட்டி க்கு.
        ஆனா ஸ்டோரி வாசிச்சேன் நயணிம்மா🥰🥰🥰🥰

        1. நிஜமாவா. ரொம்ப சந்தோஷம்பா. நீங்க கமன்ட் போட்டதும் இந்த பேஜே வெளிச்சமாச்சு

  2. அப்ப வஞ்சிக்கு பையன் பொறந்திருக்கானா?🙄🙄🙄🙄🙄

    வல்லபை எங்கிட்டு போனா???🙄🙄🙄🙄🙄ன

    1. அவதான் உன்னோட உறவும் வேணாம் ஒன்னும் வேணாம்னு போய்ட்டாளே. எங்கன போய் இருக்காளோ. என்ன பண்றாளோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!