Fri. May 23rd, 2025

தொலைந்த எனை மீட்க வா…!- 19

(19)

அதே நேரம் திகழ்வஞ்சிக்கு மருத்துவம் பார்த்துவிட்டு வெளியே வந்த அபராசிதனுடைய முகம் பெரும் குழப்பத்தில் இருந்தது. எங்கோ ஏதோ தவறு நடப்பது போல அவனுடைய மனது அடித்துக் கொண்டது. கூடவே அவளைப் பற்றிய முழு விபரமும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் மனது சொன்னது. அதேநேரம் இவளை பற்றித் தெரிந்து என்ன செய்யப் போகிறாய்? அப்படியே கேட்டாலும், உன் கேள்விக்கான தக்க பதிலை அவள் கொடுப்பாள் என்பது என்ன நிச்சயம்?’ அவனுடைய மனதே அவனிடம் திரும்பக் கேள்வி கேட்க, சோர்வோடு நீளிருக்கையில் சாய்வாக அமர்ந்து நெற்றிப் பொட்டை அழுத்திக் கொடுத்தான் அபராசிதன்.

ஏனோ அவள் உடலில் குத்தப்பட்டிருந்த பச்சை காணாமல் போனதையிட்டுக் குழப்பம் வந்தது. அதற்கு அவள் சொன்ன காரணமும் திருப்தியாக இல்லை. ஆனாலும் அதை ஏற்காமலும் இருக்க முடியவில்லை. நிறையப் பேர் இப்படி பச்சை குத்துவதும், குறிப்பிட்ட காலத்தின் பின்பு அது பிடிக்காமல் சீரொளி (laser) மூலம் அதை நீக்குவதும் நடப்பதுதான். திகழ்வஞ்சியும் அப்படிப்பட்ட ஒருத்திதான். ஒன்றில் நிலை இல்லாதவள் என்பதை அமலனின் குறிப்பேட்டில் படித்துத் தெரிந்து கொண்டிருக்கிறான். ஆனாலும் அவனுக்கு ஏதோ ஒன்று தெளிவில்லாதது போலத் தோன்றியது.

அவன் யோசனையில் இருக்க, திடீர் என்று கால்களுக்கிடையில் எதுவோ வந்து விழுந்தது.

சட்டென்று குனிந்து பார்க்க வேறு யார், அந்த ஒற்றை வயதைத் தொட்டுவிட்ட குறும்பன்தான் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

“ஆரா..” என்றவன் குழந்தையைத் தூக்க, குழந்தையோ சித்தப்பாவை இறுக அணைத்து அவனுடைய தோளில் தன் தலையைச் சாய்த்துக் கொண்டது. குழந்தையின் அந்த அன்பில் சிலிர்த்துப் போனான் அபராசிதன். குழந்தைக்கு அவன் பாதுகாப்பாகத் தெரிகிறான். அதனால்தான் தயக்கமின்றி அவன் மீது ஏறி, அவன் தோளில் தலைசாய்த்துப் படுத்திருக்கிறது. அதை உணர்ந்தவனின் உதடுகள் புன்னகையில் மலர்ந்தன.

கடந்த இரண்டு நாட்களாக நேரலையில் நடந்த முக்கிய மருத்துவ கூட்டத்தைத் தவிர எஞ்சிய நேரம் முழுவதும் குழந்தையோடுதான் நேரத்தைச் செலவழித்திருந்தான் அபராசிதன். குழந்தையின் நம்பிக்கையையும் அன்பையும் பெறுவதற்காக நிறையவே போராடியவன் அதில் வெற்றியும் பெற்றான். குழந்தை அவனோடு ஒட்டி உரிமையாகவே பழகத் தொடங்கி விட்டது.

இதோ, அவன் தன்னவன் என்கிற உரிமை இருந்ததால்தானே குழந்தை தயக்கத்தை விடுத்து அவன் மீது வந்து விழுந்தது. அவன் தோளில் தலை சாய்த்துக் கிடக்கிறது. நெஞ்சம் எல்லாம் அன்பில் உருகக் குழந்தையை இறுக அணைத்துக்கொண்ட நேரம், அவனைப் பராமரிக்கும் ஜெனி குழந்தையை நோக்கி ஓடி வந்தார்.

“சாரி டாக்டர்… குழந்தை இப்படித் திடீர் என்று உங்களிடம் ஓடிவரும் என்று நினைக்கவில்லை…” சொல்ல, இதமாய்ச் சிரித்தான் அபராசிதன். அவனைக் கண்டதும் குழந்தை ஓடிவருகிறது என்றால், குழந்தையின் முழு நம்பிக்கைக்குப் பாத்திரமாக அவன் மாறிவிட்டான் என்றுதானே அர்த்தம்.

“பரவாயில்லை… இனி நான் பார்த்துக் கொள்கிறேன். பணத்தை ‘இ ட்ரான்ஸ்ஃபர்’ பண்ணி விடுகிறேன்… நீங்கள் கிளம்புங்கள்.” என்று அவரை அனுப்பி வைத்து விட்டு, கையில் கிடந்த குழந்தையோடு விளையாடத் தொடங்கினான் அபராசிதன்.

என்னவோ தெரியவில்லை, ஆராவோடு விளையாடும் போது அவனும் குழந்தையாக மாறிப் போகிறான்.

அந்த நேரம் கதவு திறக்கும் சத்தம் கேட்கத் திரும்பிப் பார்த்தான். திகழ்வஞ்சிதான். காயத்திற்குத் தோதாகத் தொளதொள ஷேர்ட்டும், பகி பான்டும் அணிந்திருந்தாள். அவள் குளித்துவிட்டு வந்ததால் முகம் தெளிவாக இருந்தாலும், அதையும் தாண்டிய வலி அவளுடைய முகத்தில் தெரிய, ஏனோ மனது தவித்தது அவனுக்கு. பயனற்ற தவிப்புதான். ஆனாலும் அவனால் அதை நிறுத்த முடியவில்லை.

“என்ன… வலிக்கிறதா?” என்றான் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல். குரலில் கொஞ்சம் அக்கறை இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ. அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

“ம்.” மறுக்காமல் தலையை ஆட்ட, தன் கரத்தில் இருந்த குழந்தையைப் பக்கத்தில் அமர்த்தியவன்,

“உட்கார்…” என்று விட்டு உள்ளே சென்று வலி நிவாரணியையும் ஒரு குவளை தண்ணீரையும் எடுத்து வந்து அவளிடம் நீட்ட, நன்றியோடு வாங்கிக் கொண்டவள், உடனே அதை வாயில் போட்டு விழுங்கினாள்.

அவளிடமிருந்த குவளையை வாங்கி அங்கு இருந்த தேநீர் மேசையில் வைத்தவன்,

“யு ஓகே…?” என்றான்.

அந்த அக்கறையில் இதயம் இளகிப்போனாள் திகழ்வஞ்சி. இப்படியான அக்கறையான இரண்டு வார்த்தைகள் கேட்டு எத்தனை காலம் ஆகிவிட்டது. யாரும் வேண்டாம் என்று தனியாக இந்த உலகில் வாழப் போராடும் மனிதனுக்குத்தான் அந்தக் கேள்வியின் அழகும் அருமையும் புரியும்.

“ஆம்…” என்பது போலத் தலையை ஆட்டியவள் விழிகளை மூடி சுள் என்று குத்திய வலியைப் புறந் தள்ள முயன்றாள். முடியாமல் உதடுகளை அழுந்த மூடியவாறு கிடக்க, அபராசிதன் நேரத்தைப் பார்த்தான். அது அதன் பாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது.

“ஐந்து மணிக்கு விமானம்… அதனால் நாம் விரைவாகப் புறப்படவேண்டும்…” சொன்னவன், குழந்தையை அவளுக்கு அருகாமையில் அமர்த்தி விட்டு,

“ஒரு பத்து நிமிடங்கள் இவனைப் பார்த்துக் கொள். வந்து விடுகிறேன்…” என்றவன் சற்றுத் தயங்கினான்.

இரண்டு நாட்களுக்கு முன், அவன் குளித்து விட்டு வரும் போது, அவன் செய்த குறும்புத்தனம் வாழ்க்கையில் மறக்குமா.

“உன்னால் முடியும்தானே… இவன் அதிகம் குறும்பு செய்வான்…” அவன் தயங்க, இப்போது அவனை அழுத்தமாகப் பார்த்தாள் திகழ்வஞ்சி.

“எனக்கே என்னுடைய மகனைப் பற்றிச் சொல்கிறீர்களா?” கேட்டவளின் குரலில் இப்போது கோபம் குடிகொண்டிருந்தது.

எந்தத் தாயிடமும் குழந்தையை இப்படிப் பார்த்துக் கொள், அப்படிப் பார்த்துக்கொள் என்றால் கோபம் வரத்தானே செய்யும். இதுவரை யாருடைய உதவியும் இல்லாமல் குழந்தையைத் தனி ஒருத்தியாக வளர்த்தவளுக்கு, எப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரியாதா? வெறும் இரண்டு நாட்கள் வைத்திருந்தவன் சொல்ல வேண்டுமா. கடுப்புதான் வந்தது அவளுக்கு.

ஆனாலும் அவளைத் தயக்கமாக ஏறிட்டான் அபராசிதன்.

“அவனைத் தூக்காதே… சும்மா பார்த்துக் கொள் போதும்” என்றவன் அவளுடைய முறைப்பைப் பரிசாகப் பெற்றுக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்.

அவன் தயாராகி வெளியே வந்தபோது, ஆராவமுதன் திகழ்வஞ்சியின் மடியில் இரண்டு பக்கமும் கால்களைப் போட்டவாறு குதிரை ஓடிக் கொண்டிருந்தான். அவளும் மகனின் கரங்களைப் பற்றியவாறு கால்களை மேலும் கீழும் ஆட்டி குழந்தையோடு கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தாள்.

அதைக் கண்ட அபராசிதனின் விழிகளில் வியப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு அவனைக் கொஞ்ச நேரம் தனியாக விட்டபோது எத்தனை தறுகுறும்பு செய்தான். இப்போது பெற்றவளிடம் இருக்கும் போது எத்தனை சமத்தாக இருக்கிறான்.

அதனால்தான் தாயை உலகமே போற்றுகிறதோ? வியந்தவன், கிளம்புவதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான். உதவிக்கு வந்த திகழ்வஞ்சிய மறுத்து விட்டுத் தானே அனைத்து பெட்டிகளையும் எடுத்து வந்து முன்னறையில் வைத்தான்.

வாடகை வண்டியை வரவழைத்து, தங்களின் பொருட்கள் அனைத்தையும் அதில் ஏற்றியதும் வண்டி தனியார் விமானநிலையத்தை நோக்கிப் பறந்தது.

இருவரும் விமானத்தில் ஏறியதும், ஆராவமுதனை ஜன்னலோரமாக இருந்த குழந்தைகளின் இருக்கையில் கிடத்தி கவனமாகப் பட்டியைப் போட்டுவிட்டு, அவனுக்குப் பக்கத்தில் தான் அமர்ந்துகொள்ள. அடுத்த இருக்கையில் திகழ்வஞ்சி அமர்ந்து கொண்டாள்.

அடுத்த பதினைந்து நிமிடங்களில் விமானம் மேலே எழும்பத் தயாராக, ஆராமுதன் அந்தப் புதிய பயணத்தைக் கண்கள் விரிய, குதுகலமாக ஏதோ கதை பேசியவாறு இரசித்துக் கொண்டிருந்தான்.

திகழ்வஞ்சியோ எதுவும் பேசாமல் தன் மகனையே ஆசையோடு பார்த்திருக்க, அபராசிதனும், தன் பெறாமகனைத்தான் இரசித்துக் கொண்டிருந்தான்.

அதுவும் கால் கையை ஆட்டியவாறு வாயில் ஒரு விரலை வைத்து எச்சில் வடிய மமம்ம்ம்மா… புபாபு என்று எதையோ பேசிக்கொண்டிருந்த குழந்தையை நோக்கிச் சரிந்த அபராசிதனின் முகம் அதுவரை இருந்த இறுக்கத்தைத் தொலைத்து மெல்லிய புன்னகை ஒன்றைச் சிந்தியது.

குனிந்து குழந்தையின் பட்டு முடியை வருடிக் கொடுக்க விழிகளை உயர்த்தித் தன் சித்தப்பனைப் பார்த்து அழகாய் சிரித்தான் குழந்தை.

இதயம் உருகிப் போனான் அவன். தன்னை மறந்து சிரித்தவன்,

“ஹே படி…” என்று மென்மையாக அழைத்தவாறு குழந்தையோடு விளையாடத் தொடங்கினான்.

அதை இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவாறு இரசித்துக் கொண்டிருந்தாள் திகழ்வஞ்சி.

அதுவும் இளகிப்போய் மலர்ந்து சிரிக்கும் அபராசிதனின் முகம், நச்சென்று மனதில் பதிந்து போக, குழந்தையை விட அவனைத்தான் வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தாள்.

அதே நேரம் ஒருவித குறுகுறுப்பில் திரும்பிப் பார்த்த அபராசிதன், திகழ்வஞ்சி தன்னையே பார்த்துக்கொண்டு இருப்பதைக் கண்டதும், என்ன என்பது போலப் புருவத்தை மேலேற்றிக் கேட்க, முகம் சிவந்து போனாள் அவள்.

உடனே ஒன்றுமில்லை என்று தலையசைத்து விட்டு, அவசரமாகத் தன் பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொள்ள, அவனோ திரும்ப தன் கவனத்தைக் குழந்தையிடம் செலுத்தினான்.

விமானம் மேலேறிப் பறக்கத் தொடங்கியது.

வெளியே வேடிக்கை பார்த்தவாறே உறங்கிப் போனான் ஆராவமுதன். கொஞ்ச நேரம் ஆசையாகக் குழந்தையின் பட்டு முடியை வருடிக் கொடுத்தவன் திகழ்வஞ்சியை பார்த்தான். அவள் இலக்கற்று எங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள்.

அமலனின் குறிப்பேட்டில் அவளுக்குத் தாய் தந்தை என்று யாருமில்லை என்று எழுதியிருந்தான். அவர்களுக்கு என்னாச்சு என்று அறியும் ஆவல் பிறக்க,

“திகழ்…” இவன் அழைக்க, என்ன என்பது போலத் திரும்பிப் பார்த்தாள்.

“உன்னைப் பெற்றவர்களுக்கு என்னாச்சு?” அவன் கேட்க, அந்தக் கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை என்பது விரிந்த விழிகளில் தெரிய,

“ஏன் கேட்கிறீர்கள்?” என்றாள்.

“தெரியவில்லை… ஏனோ உன்னைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது… நீ விரும்புகிறாயோ, இல்லையோ, இனி உன்னுடைய வாழ்க்கை என் கூடத்தான்… ஐ மீன்… கொஞ்ச நாட்களுக்கு எங்கள் கூடத்தான். அப்படியிருக்கிற போது, உன்னைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம் என்று தோன்றுகிறது…”

“ஏன் உங்கள் அண்ணா, தன்னுடைய குறிப்பேட்டில் அது எதையும் எழுதவில்லையா?” சந்தேகத்துடன் கேட்க, அவனுடைய உதடுகள் இளக்காரமாகச் சிரித்தன.

“ம் எழுதியிருந்தான். நிறையவே எழுதி இருந்தான்… அவனிடம் என்னவெல்லாம் சொல்லி பணம் பறித்தாய் எதற்காகப் பறித்தாய் என்பதை எல்லாம் இரசித்து எழுதியிருந்தான். அது மட்டுமில்லை, நீ உதடுகள் சுழிக்கும் அழகு, பேசும் அழகு, சிணுங்கும் அழகு என்று நிறையவே எழுதியிருந்தான். கூடவே நீ படுக்கையில்…” அவன் முடிக்கவில்லை, சட்டென்று காதுகளைப் பொத்திக்கொண்டாள் திகழ்வஞ்சி.

அவளுக்கு அதற்கு மேல் கேட்க முடிந்திருக்கவில்லை. இப்படியெல்லாமா அவன் எழுதி வைத்திருக்கிறான். அதை வேறு வெட்கமின்றிப் படித்திருக்கிறான். சே…

“போதும்.. போதும்… இதற்கு மேல் எதையும் சொல்லாதீர்கள்…” அவள் கிட்டத்தட்ட கிரீச்சிட, அதைக் கண்டு ஏளனமாகச் சிரித்தவன்,

“ஐ மீன்… நீ படுக்கையில் உறங்கும் போது எப்படி இருப்பாய் என்று வர்ணித்திருந்தான் என்று சொல்ல வந்தேன்…” அவன் சொல்ல நிமிர்ந்து அவனை முறைத்துப் பார்த்தாள் திகழ்வஞ்சி.

“ஒருத்தரின் தனிப்பட்ட குறிப்பேட்டை படிப்பது எத்தனை பெரிய அசிங்கம் தெரியுமா…?” என்றாள் கோபத்தோடு. அவனோ உதடுகளைப் பிதுக்கிவிட்டு,

“நான் ஒன்றும் உயிரோடு இருந்தவனின் குறிப்பேட்டைப் படிக்கவில்லையே. செத்துப் போன என் அண்ணாவின் குறிப்பேட்டைத்தானே படித்தேன். அதைப் படித்ததால்தானே எந்தளவு அவன் முட்டாளாக்கப்பட்டிருக்கிறான் என்பதே எனக்குத் தெரிந்தது… நீயும் எந்த எல்லைவரை போவாய் என்பதும் புரிந்தது…” என்றவனுக்கு என்ன பதிலைச் சொல்வது. பற்களைக் கடித்துத் தலை குனிந்து நிற்க,

“என்ன பதிலைக் காணோம்…?” கேட்டவனிடம் பதில் சொல்லப் பிடிக்காமல் தலையைத் திருப்பிக் கொள்ள,

“சோ… கடைசிவரை சொல்வதாக இல்லை அப்படித்தானே…?” கேட்டான் அவன். அவனைத் திரும்பி எரிச்சலோடு பார்த்தவள்,

“சொல்லப் பிடிக்கவில்லை அபராசிதன்… ஏன் என்றால் என்னுடைய இளமைக் காலம் அத்தனை சிறப்பானதாக இருக்கவில்லை… முடிந்தவரை அதை மறக்க முயல்கிறேன்… திரும்பவும் பிரேதப்பரிசோதனை செய்யப் பிடிக்கவில்லை…” என்றவளுக்கு ஏனோ தொண்டையை அடைத்தது.

தன் பலவீனத்தை அவனுக்குக் காட்டப் பிடிக்காமல் விழிகளை அழுந்த மூட, அவனோ தோள்களைக் குலுக்கிவிட்டு,

“இளம் வயதில் தந்தையை இழந்த பெண்களுக்கு, தங்களை விட அதிக வயதுடைய ஆண் மீது காதல் தோன்றும் என்று ஆராய்ச்சி சொல்கிறது. தந்தையிடமிருந்து கிடைக்காத அன்பையும் அரவணைப்பையும் அந்தக் காதலனிடம் எதிர்பார்ப்பார்கள். இது ஒரு வகை உளவியல் பிரச்சனை. இதையும் தாண்டி, தங்கள் பொருளாதாரச் சிக்கலைத் தீர்த்துக் கொள்ளவும், வசதியாக வாழ்வதற்கும் வயது முதிர்ந்த ஆண்களைப் பெண்கள் தேர்வு செய்கிறார்களாம். இதில் நீ எந்த இரகம்…?” அவன் கேட்க, திரும்பி அவனை அழுத்தமாகப் பார்த்தாள். வேண்டும் என்றே அவளுடைய வாயைக் கிளறப் பார்க்கிறான். சுத்திவளைத்து அவளுடைய தந்தையைப் பற்றி அறிய முயல்கிறான்.

ஒரு விநாடி அவனுடைய விழிகளுக்குள் தன் விழிகளைக் கலந்தவள்,

“பெண்கள் தங்களை விட அதிக வயதுடைய ஆண்களைத் தேடிப்போவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. தங்களுக்கு அவர்கள் சரியான அறிவுரை கூறி, சரியாக வழிநடத்திப் பாதுகாப்பாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கை…” அவள் கூற ஏளனமாகச் சிரித்தான் அபராசிதன்.

“நிச்சயமாக நீ அந்த வகையில்லை. அப்படி என் அண்ணாவின் அறிவுரை கேட்டு அவரிடம் பாதுகாப்பை எதிர்பார்த்திருந்தால், அவன் குழந்தையைச் சுமப்பதற்குப் பணம் கேட்டிருக்க மாட்டாய்..” அவன் சொல்ல முகம் இறுகினாள் திகழ்வஞ்சி.

இதை விட அவள் பேசாமல் இருந்திருக்கலாம்.

“இப்போது என்ன? எதற்காக உங்கள் அண்ணாவை வளைத்துப் பிடித்தேன் என்பது தெரியவேண்டும் அவ்வளவுதானே… சரி… உங்கள் ஆசைப்படியே வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் முதலில் சொன்னீர்களே, இளவயதில் அப்பாவை இழந்த பெண்கள் அந்தப் பாசத்தைப் பெறுவதற்காகவும், பணத்திற்காகவும் வயது முதிர்ந்த ஆண்களைத் தேடிச் சொல்கிறார்கள் என்று..! இந்த இரண்டும்தான் காரணம் போதுமா? திருப்தியா? உங்கள் மனம் குளிர்ந்து விட்டதா” அவள் எரிச்சலுடன் கேட்க, உதடுகளைப் பிதுக்கினான் அபராசிதன்.

“அப்படியென்றால் உனக்கு அப்பா இல்லை! ஏன்… அவருக்கு என்னாச்சு?”

“ம்.. அவர் உயிரோடு இல்லை… செத்து விட்டார்…” என்றாள் இவள் இழுத்துப் பிடித்த பொறுமையோடு.

“ஓ… அப்படி என்றால், உன் அம்மா?”

“அவர்களும் உயிரோடு இல்லை…” அவள் சொல்லும்போதே குரல் கம்மியது அவளுக்கு. அதைக் கேட்டவனும் ஒரு விநாடி எதுவும் பேசாமல் அமைதி காத்தான்.

“எத்தனை வயசு?” கேட்டபோதே முன்னம் இருந்த எகத்தாளம் இப்போது இல்லை. அவளுக்காக வருந்தினான் போல.

“ம்?” புரியாமல் கேட்க,

“இல்லை உன் அம்மா இறந்த போது உனக்கு எத்தனை வயசு என்று கேட்டேன்…”

“ப…பன்னிரண்டு…” அவள் சொல்ல இப்போது அவளைப் பரிதாபமாகப் பார்த்தான் அபராசிதன். தாய் தந்தை இல்லாமல் வாழ்வது எத்தனை கொடுமை என்று தெரியாதவனா அவன். அவனுக்காவது தாயாக அவனைப் பார்த்துக் கொள்ள, சகோதரி இருந்தாள். இவளுக்கு? அதனால்தான் தடம்புரண்டாளா? ஏனோ அவளுக்குச் சாதகமாக யோசித்தது மனது.

நல்ல வேளை அவனை அதிகம் யோசிக்க விடாமல், கொஞ்ச நேரம் விழிகளை மூடிக் கொண்டிருந்த ஆராவமுதன், இப்போது விழிகளைத் திறந்து அங்கும் இங்கும் பார்த்தான். பின் தன் இருக்கையிலிருந்து கீழே இறங்க முயன்றான். அது முடியாமல் போனதால் கோபம் கொண்டு தன் மொழியில் எதையோ பேசிக்கொண்டும் பின் உடலை முறுக்கிக்கொண்டும் அமர்ந்திருந்தான். அவனுடைய அந்த முயற்சியைக் கண்டு சிரித்தவன், குழந்தையின் கன்னத்தைப் புறச் சுட்டுவிரலால் வருடிக் கொடுக்க, தன் முயற்சியை விடுத்து சித்தப்பாக்காரனை ஏறிட்டது குழந்தை.

பின் இரண்டு கரங்களையும் விரித்து, தூக்கு என்று கேட்க, குழந்தையின் மென்முடியை வருடிவிட்டவன்,

“இப்போதுதான் அரை மணி நேரம் போய் இருக்கிறது. இன்னும் இரண்டு மணி நேரம் பொறுத்துக்கொள்… டொரன்டோ வந்துவிடும்… அதற்குப் பிறகு தூக்கிக் கொள்கிறேன்…” மென்மையாகச் சொல்ல, அவளும் திருப்பித் தன் கடிகாரத்தைப் பார்த்தாள். அவன் சொன்னது சரிதான். டொரன்டோவைச் சென்றடைய இன்னும் நேரம் இருந்தது. அதுவரை என்ன செய்வது? சும்மா என்றால் இரண்டு மணி நேரம் இரண்டு நிமிடங்களாகப் பறந்திருக்கும். இப்படி விமானத்தில் ஆகாயத்தில் பறக்கும் போது, பேச்சுத் துணையின்றிச் சும்மா இருப்பது என்றால், அது நாற்பது மணி நேரம் போலக் காட்சி கொடுக்கும்.

எரிச்சலுடன் முன் இருக்கையிலிருந்த திரையை உயிர்ப்பிக்க, யாரோ யாரையோ சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தார்கள்.

சுத்தம். இருக்கிற நிலைக்கு அந்தக் காட்சிகளைப் பார்க்கும் மனநிலையில் அவளில்லை. அணைத்தவள்,

“உங்களிடம் ஏதாவது புத்தகங்கள் கிடைக்குமா வாசிக்க?” கேட்ட பிறகுதான் கேட்காமலே இருந்து இருக்கலாமோ என்று தோன்றியது. அவனோ இவள் பக்கமாகத் திரும்பிப் பார்த்து,

“நீ படிக்கத் தகுந்த வகையில் புத்தகங்கள் இல்லை… என்னிடம் இருப்பது எல்லாம் மருத்துவம் சார்ந்த புத்தகங்கள்” என்றான் விட்டேற்றியாக.

“நான் படிக்கத் தகுந்த புத்தகங்கள் என்றால்?” இவள் குழப்பமாகக் கேட்கத் திரும்பி அவளை அலட்சியமாகப் பார்த்தான் அபராசிதன்.

“ரொமான்ஸ், செக்ஸ், லவ் மேக்கிங்…” அவன் அடுக்க, திகழ்வஞ்சியின் முகம் கறுத்துச் சிவந்து போயிற்று. அதைக் கண்டவன்,

“ஹே… நான் தப்பாகச் சொல்லவில்லை. இந்த வயசுக்கு அதுதான் படிக்கப் பிடிக்கும் என்பதால் சொன்னேன்…” என்னதான் முயன்றும் அவன் குரலிலிருந்த நக்கலை மறைக்க முடியவில்லை. அதை உணர்ந்து கொண்டவளுக்குக் கோபம் சுருசுரு என்று ஏறியது.

அவனின் பேச்சுத் தொனி பிடிக்காதவளாக அவனை உற்றுப் பார்த்தவள்,

“என்ன…? அனுபவம் பேசுகிறதாக்கும்..” என்றாள் மறைக்காத கோபத்தோடு.

“ஒஃப் கோர்ஸ்… நான் அதை மறுக்கப் போவதில்லை. ஒவ்வொரு வயதிற்கும் ஒவ்வொரு தேடலிருக்கும். அந்த வயதில் பாலினத்திற்குரிய தேடல் இல்லை என்றால், அது உட்சுரப்பிகளில் ஏதோ பிழை என்று அர்த்தம்.” சொன்னவனுக்குப் பதில் சொல்லாமல் வேறு எங்கோ பார்த்தாள் திகழ்வஞ்சி.

அவன் ஒரு வைத்தியன். வெட்கமின்றிச் சொல்ல முடியும். அவள் அப்படியா? பற்களைக் கடித்தவாறு முகம் சிவக்க அமர்ந்திருக்க,

“என்ன பேச்சையே காணவில்லை…” என்றான் கிண்டல் சற்றும் மாறாமல். அவனைத் திரும்பிப் பார்த்தவள்,

“நீங்கள் வைத்தியர்தானே… இப்படிப் பேசுவது உங்களுக்கு அபத்தமாகத் தெரியவில்லையா? அது அவநாகரிகம்…” என்றாள் முகம் சிவக்க. அதைக் கேட்டுச் சிரித்தவன்,

“இதை நீ சொல்கிறாயா? இந்த நாகரீகம் நவநாகரீகம் எல்லாம், திருமணம் முடித்த ஒருவனின் வாழ்க்கைக்குள் நுழையும் போது எங்கே போனது. தவிர இதில் வெட்கப் பட என்ன இருக்கிறது. இது எல்லாம் இயற்கை… ஆனாலும் ஆச்சரியமாக இருக்கிறது. நீ எல்லாம், இதைச் சங்கடமாக நினைக்கிறாய் பார்… இது சார்ந்து அண்ணாவுக்கு நிறையக் குறுஞ்செய்திகள் அனுப்பியிருந்தாயே. அப்போதெல்லாம் இந்த சங்கடம் எங்கே போய் இருந்தது” என்று கேட்க,

“நான் ஒன்றும் யாரோ ஒருத்தருக்கு அனுப்பவில்லையே. என் காதலனுக்குத்தானே அனுப்பினேன்…” என்றாள் இவள் அலட்சியமாக.

“காதலனா? ஹா ஹா குட் ஜோக்…” என்றான் ஏளனச் சிரிப்போடு.

இதற்கான பதிலைச் சொல்லிவிடலாம்தான். அதற்குப் பிறகு? நெஞ்சத்தில் எழுந்த ரணத்தை அடக்கும் வழி தெரியாமல், முகம் இறுக,

“இப்படி உங்கள் முன்னால் பலவீனத்தோடு இருப்பதை மனதார வெறுக்கிறேன் அபராசிதன். என்மீது தவறு இருப்பதால், என்னால் எதுவும் சொல்ல முடியவில்லையே செய்ய முடியவில்லையே என்கிற இந்த நிலையை அறவே வெறுக்கிறேன்… நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், நான் பலவீனமானவள் என்று என்னை உணரவைக்கிறது. அது என்னைக் கொல்லாமல் கொல்கிறது. வெட்கம் விட்டு உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன், இப்படிப் பேசாதீர்கள்…” என்றவள் சட்டென்று எழ,

“எங்கே போகிறாய்?” என்றான் கறாராக.

“இங்கிருந்து வெளியே குதிக்க முடியாது. அதுதான் வேறு இருக்கை கிடைக்குமா என்று பார்க்கிறேன்…” எரிச்சலோடு சொன்னவள் சுத்தவரப் பார்க்க, அவள் கிரகம் எந்த இருக்கையும் வெறுமையாக இல்லை. வேறு வழியில்லை, அவனுக்கு அருகேதான் அமர்ந்தாகவேண்டும். ஆனாலும் பிடிக்கவில்லை. மனம் நிறைந்த வெறுப்போடு அவனருகே எப்படி அமர்வது? அதற்கு முதல் நெஞ்சில் முட்டியிருக்கும் வலியைக் கொஞ்சமாவது இறக்க வேண்டும்.

நேராகக் கழிவறை சென்று கதவை மூடியவளுக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது. அதைச் சமப்படுத்தும் விதமாக, தண்ணீரை அள்ளி முகத்தைக் கழுவ, கண்ணீர் அந்தத் தண்ணீரோடு கலந்து வழிந்தது.

‘எதற்கு இப்போது அழவேண்டும்? அப்படி என்ன பெரிய தவறைச் செய்துவிட்டேன். மனத்தைத் திடப்படுத்திக்கொள் திகழ்…’ தன்னைத் தானே திடப்படுத்தியவள் ஆழ மூச்செடுத்துத் தன்னை சமப்படுத்திவிட்டு, முகத்தைத் துடைத்துக்கொண்டு திரும்பவும் இருக்கை நோக்கி வந்தாள்.

சிவந்திருந்த விழிகளே அவள் அழுதிருப்பதை அவனுக்குப் பறைசாற்ற, உதடுகளைப் பிதுக்கினான் அவன். அவனுடைய முகம் பார்க்தக் தவிர்த்தவள், இருக்கையில் அமர முயல, குழந்தை தாயைக் கண்டுகொண்டது.

உடனே தன்னைத் தூக்கு என்பது போல இரண்டு கரங்களையும் உயர்த்தி, உடலை நெளித்து உதடுகளை வளைத்து அழுவதற்கு நான் தயார் என்று சமிக்ஞை செய்ய அன்னையாகப் பதறிப் போனாள் திகழ்வஞ்சி.

பதட்டத்தோடு, எட்டி ஒற்றைக் கரத்தால் குழந்தையைத் தூக்க முயல, சட்டென்று அவளுடைய மணிக்கட்டைத் தன் வெம்மையான கரங்களால் பற்றித் தடுத்தான் அபராசிதன். அவனுடைய கரம் பட்டதும், அவளையும் மீறிச் சிலிர்த்த தேகத்தை உணர்ந்து வியந்தவளாகத் திரும்பிப் பார்க்க,

“என்ன செய்கிறாய்?” என்றான் கோபமாக.

“இல்லை… குழந்தை அழப் போகிறான்…”

“குழந்தை அழுவதால் ஒன்றும் உலகம் உருளுவதை நிறுத்திவிடாது… முதலில் உட்கார்…” கறாராகச் சொன்னவன், இருக்கைப் பட்டியை விலக்கிக் குழந்தையைத் தூக்கித் தன்னோடு அணைத்துக் கொள்ள, ஏனோ அந்தக் காட்சி இவளுக்குப் பெரும் பொறாமையைக் கிளப்பியது.

“நான் வைத்திருக்கிறேன்… என்னிடம் கொடுங்கள்…” என்றாள் ஏக்கமாக.

குழந்தையின் தேகம் படாத மார்போ அவன் தொடுகைக்காக ஏங்கி வலித்தது. ஆசையோடு குழந்தைக்காகக் கரங்களை நீட்ட,

“எதற்குத் திரும்பவும் தையல் அவிழ்ந்து இன்னொரு நாடகம் போடவா… பேசாமல் உட்கார்…” அவன் சொன்னதும் தாய் கரத்தை நீட்டுவதைக் கண்ட குழந்தை அன்னையிடம் பாய முயல, சட்டென்று அவனை அணைத்துப் பிடித்தான் அபராசிதன்.

“நோ… ஆரா…! அம்மாவால் உன்னைத் தூக்க முடியாது… என்னிடமே இரு…” சொன்னவன் குழந்தையின் முதுகைத் தட்டிக் கொடுக்க, தாயின் உடல் சூட்டுக்குப் பழக்கப்பட்ட குழந்தை விடுமா என்ன? அவனிடமிருந்து திகழ்வஞ்சியை நோக்கித் தாவ, அதற்கு மேல் மறுக்க முடியாமல் குழந்தையை ஒற்றைக் கரத்தால் அள்ளி எடுத்துக் கொண்டாள் திகழ்வஞ்சி.

“ஹே… பார்த்து…” அவன் தடுப்பதற்குள் தாயின் கால்களுக்கு இரு பக்கமும் தன் கால்களைப் போட்டு, தன் முகத்தைத் தாயின் மார்பின் மத்தியில் புதைத்துக்கொண்டான் அந்தக் குட்டிக் கள்வன்.

குளிர்ந்து போனாள் திகழ்வஞ்சி. அதுவரை ஆட்டிப்படைத்திருந்த மனவலியும், வேதனையும் கண்ணிமைக்கும் நொடியில் காணாமல் போக, முகமோ நிம்மதியிலும் திருப்தியிலும் மலர்ந்து போனது. இந்தப் பாசம் இருக்கும் வரை, யார் எவர் வந்தாலும் குழந்தையைத் தன்னிடமிருந்து பிரிக்க முடியாது என்கிற உறுதியில் குழந்தையை இறுக அணைத்து அதன் உச்சியில் முத்தமிட்டவளுக்கு தன் வாழ்க்கை போகும் திசையை நினைத்து வியப்புதான் வந்தது.

ஐந்து நாட்களுக்கு முன்பு, இவன் யார் என்றும் தெரியாது. திடீர் என்று ஆராவின் சித்தப்பா என்று வந்து நிற்கிறான். இப்போது அவனோடு பயணிக்கிறாள். அடுத்து என்ன நடக்கும்? இவனிடம் கூனிக் குறுகி நிற்பது போல இன்னும் எத்தனை பேருக்கு முன்னால் நிற்கப்போகிறாள்? இவன் நாவென்னும் சவுக்கால் வதைப்பது போல இன்னும் எத்தனை பேர் வதைக்கப்போகிறார்கள்?

நினைத்தாலே தேகம் உதறியது. இதை எல்லாம் தாங்கும் சக்தி அவளுக்கு இருக்கிறதா? எண்ணிப் பார்க்கும் போதே, ஆயாசமானது அவளுக்கு. அடுத்து அவள் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று கூடப் புரியவில்லை. நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்,

“வந்து… வந்து… நான்… நானும் ஆராமுதனும் டொரன்டோவில் எங்கே தங்கப்போகிறோம்..” கேட்டவளை புருவங்கள் சுருங்கப் பார்த்தான் அபராசிதன்.

“எங்கே தங்குவதாக உத்தேசம்?” அவளிடமே அவன் கேட்க, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினாள் திகழ்வஞ்சி. அதை எரிச்சலோடு பார்த்தவன்,

“இது என்ன கேள்வி? என்னுடன்தான்…” என்றவன், அந்த என்னுடன் என்பதை அழுத்திச் சொல்ல திகழ்வஞ்சி அதிர்வோடு அவனைப் பார்த்தாள்.

‘இவனுடன் தங்குவதா? ஒரு மணி நேரம் கூட இவனோடு ஒன்றாகப் பயணம் செய்ய முடியவில்லை. வார்த்தைகளாலே இவளைப் பல முறை தீக்குளிக்கச் செய்கிறான். அப்படியிருக்கிற போது ஒரே வீட்டில் தங்குவது… நோ… நிச்சயமாக முடியாது…” மறுப்பாகத் தலை அசைத்தவள்,

“இ.. இல்லை… வேண்டாம்… நான் உங்களுடன் தங்கமாட்டேன்…” என்றாள் முடிவாக.

“ஏன்…? ஏன் தங்க முடியாது…?”

“அது… சரிப்படாது…”

“வை நாட்…? உனக்கொன்றும், ஆண் கூடத் தங்குவது புதிதல்லவே…?” என்றான் அவளை மட்டந்தட்டும் முகமாக. இதோ, இதற்காகத்தானே பயப்படுகிறாள்.

“உண்மைதான்… ஆனால்.. உங்களுடன் தங்க எனக்குப் பிரியமில்லை…” என்றாள் எரிச்சலாக.

“ப்ச்… பயப்படாதே… என்னிடமும் பணம் நிறையவே இருக்கிறது…” அவன் சொல்ல ஓங்கி அவனை அறைந்தால் என்ன என்பது போலப் பார்த்தாள் திகழ்வஞ்சி. ஆனாலும் தன்னை அடக்கிக் கொண்டாள்.

இப்போது அவள் கோபப்படும் இடத்தில் இல்லையே. யார் அவள் மீது எச்சில் உமிழ்ந்தாலும், அதைத் துடைத்துவிட்டுப் போகவேண்டிய அவல நிலையில் இருப்பவளுக்கு வெட்கமாவது மானமாவது. திகழ்… உன்னைக் கட்டுப்படுத்திக் கொள். ஆராவுக்காக. அவனுடைய நன்மைக்காக. அவன் உன் கரத்தில் இருக்கவேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகக் கொஞ்சம் அடங்கிப் போ…’ மந்திரமாக மனதில் உச்சரித்தவள், பின் விழிகளைத் திறந்து மறுப்பாகத் தலையை அசைத்து,

“இல்லை… உங்கள் கூடத் தங்க எனக்குப் பிரியமில்லை. எனக்கும் ஆராவுக்குமாக உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் தனியாக ஒரு இடம் எடுத்துக் கொடுங்கள் போதும்…” அவள் முடிக்கக் கிண்டலாகச் சிரித்தான் அவன்.

“தனி வீடா…? சாரிமா… அதற்கு வாய்ப்பில்லை. ஆராவமுதன் என் கண்காணிப்பில் என் வீட்டில் என் கூடத்தான் இருக்க வேண்டும். வேண்டுமானால் நீ தனியாகப் போய்க் கொள்ளலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் தனியாக வீடு எடுப்பதும் சுலபமில்லை… அப்படியே எடுத்தாலும் மாத வாடகை ஆகக் குறைந்தது இரண்டாயிரம் டாலர்களாவது தேவை. உன்னால் முடியுமா?” அவன் கேட்க இதற்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினாள் திகழ்வஞ்சி.

“தவிரச் சாப்பாட்டுச் செலவு அது இது என்று உனக்கு மட்டும் மூவாயிரம் டாலர்கள் வரை வேண்டும். பணத்துக்கு எங்கே போவாய்? உன்னிடம் ஏமாறவும், பணத்தை அள்ளிக் கொட்டவும் நான் ஒன்றும் அமலன் அல்ல. உன் தேவைகளைப் பூர்த்திசெய்ய நீ ஒரு வேலையைத் தேடவேண்டும். அதுவும் உடனே கிடைக்குமா என்பது சந்தேகம்தான்” அவன் கூறி முடிக்க முகம் இறுகிக் கறுத்துப் போனாள் அவள்.

என்னதான் மனத்தைச் சமாதானப் படுத்த முயன்றாலும், கொடுக்காய் மாறி அவன் குத்தும் போது மனம் இரணப்பட்டு வலிக்கத்தானே செய்கிறது. அவள் செத்த பாம்பு என்று தெரிந்தும் திரும்பத் திரும்ப அவளை அடிப்பவனை என்ன செய்வது? மீண்டும் கலங்க முயன்ற கண்களைச் சண்டித்தனமாக அடக்கிக் கொள்ள முயல,

“இப்போதைக்கு உனக்கு எந்த வழியுமில்லை. என்கூடத் தங்குவதைத் தவிர…” என்று ஏளனம் மாறாமல் கூறியவனை வெறித்துப் பார்த்தாள் திகழ்வஞ்சி. அவனும் அவளைத்தான் இமைக்காமல் பார்த்திருந்தான். கடைசியில் விழிகளைத் திருப்புவது இவள் முறையாயிற்று.

எருது ஓட்டுபவன் இளப்பமானால் எருதுக்குக் கொண்டாட்டமாம். அவள் நிலையும் அதுதான். என்ன செய்வது ஆராவமுதன் என்கிற ஒருவனுக்காக இதை எல்லாம் அவள் தாங்கித்தானே ஆகவேண்டும். தாங்கிக் கொண்டாள் திகழ்வஞ்சி. வேறு வழி?

 

What’s your Reaction?
+1
48
+1
7
+1
2
+1
1
+1
6
+1
7

Related Post

10 thoughts on “தொலைந்த எனை மீட்க வா…!- 19”
  1. அருமையான பதிவு 😍😍😍😍😍
    அடேய் நாரவாயா எதுக்கு டா என்றாளை வஞ்சுகொட்டிட்டே இருக்குறே.
    வந்துட்டான் வடிகட்டுன வண்டல் மண்ணை மண்டைல வச்சவன் 😤😤😤😤😤🫤🫤🫤🫤🫤🫤🫤🫤
    இதுல இவுனுக்கு நெஞ்சு வேற பெசையுதாம்.
    அதுல இருக்கற மாஞ்சசோத்தை எடுத்து காக்காய்க்கு போட்டுருவேன் பாத்துக்க.😈😈😈😈😡😡😡

    1. சாத்தியமா என்னால முடியல வைஷு சிரிச்சு. ஹா ஹா ஹா. எலே எப்ப பாரு அவனையே திதிக்கிட்டு. அப்படி அவன் என்ன தப்பு பன்னிட்டான். இவ தப்பு பண்ணினா அவன் கேக்கதான் செய்வான்.

      1. ஹாய் நயணிம்மா 🥰🥰🥰
        உங்களுக்கு இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் 💖💖💖💖💖

        1. நன்றி தங்கமே. உங்களுக்கும் என் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!