(17)
இத்தோடு அனைத்தும் முடிந்ததா? இனி அவளுக்கும், ஆராமுதனுக்கும் தொடர்பே இருக்காதா? இனி எப்போது அவனைப் பார்ப்பாள்? பொங்கிய அழுகையைக் கட்டுப் படுத்த முடியாமல் சுருண்டு பொய்க் கிடந்தாள் அவள்.
இரண்டு நாட்கள் எப்படிக் கடந்தன என்று கேட்டாள் திகழ்வஞ்சிக்குத் தெரியாது. அந்த இரண்டு நாட்களும் அபராசிதன் அவளைத் தேடி வரவில்லை. குழந்தையையும் அழைத்து வரவில்லை. அந்த இரு நாட்களும் இரவில் தாதி வந்து அவளுக்கு மருந்திட்டுச் சென்ற பிறகுதான் அந்த மருந்தின் வீரியத்தில் உறங்கிப் போவாள். விழித்திருக்கும் நேரத்தில் உலகமே திக்கற்றது போலத் தவித்துப் போனாள் அவள்.
இப்போது அவன் குழந்தையை அழைத்துக் கொண்டு டொரன்டோ சென்றிருப்பான். பாவம் குழந்தை. நிச்சயமாக என்னைத் தேடுவான். அழுவான். எப்படிச் சமாளிப்பான் அபராசிதன்.
ஐயோ…! எந்தத் தைரியத்தில் ஆராவமுதனை அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னேன்? இப்போது அவனைப் பார்க்காமல், அவன் குரல் கேட்காமல் உயிரே மரித்துப் போகிறதே. தவறு செய்து விட்டேன். எந்த நிலையிலும் என் குழந்தையை அழைத்துச் செல் என்று சொல்லி இருக்கவே கூடாது…’ என்று நினைத்து நினைத்து மன உளைச்சலுக்கு உள்ளானவளுக்கு இப்படியே போனால் தனக்குப் பைத்தியமே பிடித்துவிடும் என்று புரிந்து போனது.
ஒரு கட்டத்தில், ‘இல்லை… ஆராவைப் பார்க்காமல் முடியாது. மருத்துவமனை என்னை விடுவித்ததும் நேராக டொரன்டோ போய், மகனைத் தூர நின்றாவது பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும். கண்மறைவிலாவது அவன் பூமுகத்தைப் பார்த்து விட வேண்டும். அபராசிதனின் விலாசத்தை கண்டு பிடிப்பது ஒன்றும் சிரமமில்லை. அவனுடைய பெயரை இணையத்தில் தேடினாலே விபரங்கள் அனைத்தும் வந்துவிடும்.’ முடிவு செய்தவள், மருந்து கொடுக்க வந்த தாதியிடம் தன்னை விடுவிக்குமாறு நச்சரிக்கத் தொடங்கிவிட்டாள்.
“சாரி திகழ்… வைத்தியர் உங்களை விடுவிக்கச் சொன்னால் மட்டும்தான் எங்களால் உங்களை விடுவிக்க முடியும்…” கொடுக்கும் மருந்தைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். இவளுக்குத்தான் நெஞ்சம் பிசைந்தது.
இடையில் ஈவா இவளைப் பார்க்க வந்தாள். அவளிடம் ஆராவைப் பற்றி ஆவலாகக் கேட்க, ஒரு நாள் தன்னிடம் அவனைப் பார்த்துக்கொள்ள அழைத்து வந்ததாகவும் அதற்குப் பிறகு ஆராவை அழைத்து வரவில்லை என்றும் ஈவா சொல்ல, மேலும் வாடிப்போனாள் திகழ்வஞ்சி. அப்படி என்றால், அவள் நினைத்தது போல ஆராவை அழைத்துச் சென்றுவிட்டானா?
இதோ இரண்டு நாட்களும் கடந்து விட்டன. அன்று மதியம்போல உள்ளே வந்த தாதி, அவளுடைய கரத்திலிருந்த டிரிப் மற்றும் ஐவி (IV – Intravenous) கழற்ற, புரிந்து போனது, அவளை விடுவிக்கப் போகிறார்கள் என்று. அவளையும் மீறி மனது மகிழ்ச்சியில் குதித்தது.
“எ… எப்போது என்னை விடுவிக்கப் போகிறார்கள்?” பரபரப்புடன் கேட்டவளிடம் புன்னகைத்தார் தாதி.
“அந்த வேலைதான் நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் ‘பேப்பர் வேர்க்ஸ்’ முடியவில்லை. முடிந்ததும் நீங்கள் புறப்படலாம்…” என்ற தாதி, வெளியேற, மகிழ்வோடு படுக்கையை விட்டு எழுந்தாள் அவள்.
வலி அவளைத் தின்று மென்றது. ஆனாலும் உள்ளே எழுந்த மகிழ்ச்சி அதை ஓரம் தள்ளியது. எழுந்து கழிவறை சென்றவள், தன் தேவையை முடித்துக் கொண்டு எழுந்து நின்றபோது அங்கிருந்த கண்ணாடியில் அவளுடைய பிம்பம் தெரிந்தது.
அங்கே பரிதாபமாக நின்றிருந்த தன் உருவத்தைக் கண்டவளுக்கு மனம் கசங்கிப் போனது.
ஏன் அவளுடைய வாழ்க்கையில் மட்டும் எதிர்பார்த்தது எதுவுமே நடக்க மாட்டேன் என்கிறது. அவள் மீது அன்பு வைத்தவர்கள் யாரும் நிரந்தரமாக அவளோடு தங்க மாட்டேன் என்கிறார்கள். இது தான் அவள் வாங்கி வந்த வரமோ? விரக்தியாகச் சிரித்தவள், தண்ணீரை மொண்டு முகத்தைக் கழுவும் போதே, யாரோ கதவைத் தட்டினார்கள்.
அவளை விடுவிக்கும் நேரம் வந்துவிட்டது போல. யாரோ தாதிதான் தட்டுகிறார்கள். அதுவரையிருந்த சோர்வு பறந்து போக, வேகமாக வந்து கதவைத் திறந்தவள், அங்கே நின்றிருந்தவனைக் கண்டதும் நம்ப முடியாத திகைப்போடு நின்றுவிட்டாள்.
இவன் இங்கே என்ன செய்கிறான்? இவன் டொரன்டோ போகவில்லையா? வியந்தவள் பரபரப்போடு தன் மகன் அங்கே இருக்கிறானா என்று தேடினாள். அவனைக் காணாமல்
“ஆரா… ஆரா எங்கே…? அவன் வரவில்லை?” கேட்கும் போதே அவளுடைய குரல் தழுதழுத்தது.
அவனோ அதற்குப் பதில் சொல்லாமல் தன் கரத்திலிருந்த பையை அவளை நோக்கி நீட்ட,
“என்ன இது…?” என்றாள் புரியாமல்.
“உனக்குச் சுலபமாகப் போட்டுக் கொள்ள ஆடைகள் வாங்கி வந்தேன். இந்த மருத்துவமனை அங்கியைக் கழற்றவிட்டு இதை அணிந்து கொள்… இன்னும் கொஞ்ச நேரத்தில் நாம் புறப்பட வேண்டும்..” அவன் சொல்ல இவளுடைய விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.
“எ.. என்ன சொல்கிறீர்கள்? நாங்கள் எங்கே போகப் போகிறோம்…?” என்று திகைப்போடு கேட்டவளைப் பொறுமை இழந்து பார்த்தான் அபராசிதன்.
“இது என்ன கேள்வி? எங்கே போகப் போகிறோம் என்றால்…? என் இருப்பிடத்திற்குத் தான். டொரன்டோவிற்கு… இப்போது நீ ஓரளவு சரியாகி விட்டதால், மிகுதி சிகிச்சையை டொரன்டோவில் பார்த்துக் கொள்ளச் சம்மதித்து விட்டார்கள்…” அவன் உத்தரவாகச் சொல்ல, அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் திகழ்வஞ்சி.
“அ.. அப்படியென்றால்… அபராசிதன்… நீங்கள்… நான்… உண்மையாக என்னையும்… உங்கள் கூட… அப்போ நான் ஆராவோடு…” அவள் முடிக்க முடியாமல் திக்கித் திணற, அவனோ சட்டென்று தன் கரத்தை நீட்டி அவளுடைய பேச்சைத் தடுத்தான்.
அவளை நெருங்கி, அவளுடைய கரங்களில் அந்தப் பையை வைத்தவன்,
“சொன்னதை மட்டும் செய் திகழ்… உன்னை இந்த நிலையில் இங்கே விட்டுவிட்டுப் போக மனசு ஒப்பவில்லை… இப்போதைக்கு எங்கள் கூட வா. உடலைத் தெற்று. கூடவே குழந்தை நம் கூடப் பழகும் வரைக்கும் எங்களுடன் இரு. அதற்குப் பிறகு நீ விலகிவிடு.” அவன் கூற, அவளுக்கு எப்படி அதை உணர்ந்து கொள்வது என்று புரியவில்லை. நயாகரா அருவி அவள் தலையிலிருந்து உள்ளங் கால் வரை கொட்டித் தீர்ப்பது போன்ற மகிழ்ச்சியில் சிலிர்த்துப் போனாள்.
எதிர்பார்க்காத மகிழ்ச்சி திடீர் என்று தாக்கினால் எப்படி இருக்கும். கொஞ்ச நேரம் அவளிடம் அசைவே இல்லை. மறு கணம் அவனை நெருங்கியவள், அவன் என்ன என்று உணர்வதற்குள்ளாக அவனை இறுக அணைத்து அவனுடைய மார்பில் தன் முகத்தைப் புதைத்து உதடுகளைக் குவித்து அவன் நெஞ்சுக் குழியில் மென் முத்தம் ஒன்றையும் வைத்தாள் திகழ்வஞ்சி.
அவளுடைய உதடுகளோ, மூன்று நாட்களின் பின்பு மலர்ந்து சிரித்தன. அவளால் அந்த மகிழ்ச்சியை தாங்கவே முடியவில்லை.
இனி ஆராவைப் பார்ப்பதே கடினம் என்று நினைத்திருக்கும் வேளையில், வரமாக அவளையும் அழைத்துச் செல்ல அவன் சம்மதித்துவிட்டானே. இதைவிட வேறு என்ன வேண்டும் அவளுக்கு? அவள் ஆராவோடு இருக்கப் போகிறாள். அந்த உணர்வு கொடுத்த இன்பத்தை எப்படி வார்த்தைகளால் வெளிப்படுத்துவது என்று கூடத் தெரியவில்லை. மகிழ்ச்சி மசிழ்ச்சி மகிழ்ச்சி. அத்தனை மகிழ்ச்சி அவளுக்கு. கடன் கழுத்தை நெரிக்க எந்தத் திசையிலிருந்தும் உதவி வராத நிலையில், அதிர்ஷ்டச் சீட்டில் பரிசு விழுந்தால் எப்படி இருக்கும். அந்த நிலையிலிருந்தவளுக்கு, திக்குமுக்காட வைத்த ஆனந்தத்தை எப்படி வெளிக்காட்டுவது என்றுகூடத் தெரியவில்லை. அதுதான், அந்த நற்செய்தியைச் சொன்னவனையே இறுக அணைத்து விட்டாள் திகழ்வஞ்சி.
“நன்றி… நன்றி அபராசிதன்… நன்றி. என் ஆராவைப் பார்க்காமல் மூச்சு முட்டியே செத்துப் போவேன் என்று நினைத்தேன். ஆனால்… எனக்கு வரம் கொடுத்துவிட்டீர்கள்… இந்த நன்றியைச் சொல்ல எனக்கு வார்த்தைகள் கூட வரவில்லை…” விம்மலோடு அவனை அணைத்தவாறு சொன்னவளுக்கு அந்தப் பரந்த மார்பை விட்டு விலக முடிந்திருக்கவில்லை.
இதம்… அத்தனை இதமாக இருந்தது அவளுக்கு. அவனுடைய ஆண்மை ததும்பிய உடலும், அது கொடுத்த வெம்மையும் சோர்ந்த அவளுடைய உடலுக்குள் கடத்தப்பட, அத்தனை வலியும் வேதனையும் சூரியனைக் கண்ட பனியாக வடிந்து சென்றது. கடலில் தத்தளிக்கும் நேரத்தில் கைக்குக் கிடைத்த துடுப்பாக வந்து நின்றவனை விட்டுவிட மனமின்றி, அவனுக்குள் ஒன்றிக் கிடந்த நேரம், அபராசிதனோ பேச்சற்று அப்படியே நின்றிருந்தான்.
அவள் இப்படித் திடீர் என்று தன்னை அணைத்துப் பிடித்து மார்பில் முகம் சாய்ப்பாள் என்று சத்தியமாக அவன் எதிர்பார்க்கவில்லை. அதுவும் அவள் அணைத்துப் பிடித்து நெஞ்சுக் குழியில் முத்தமிட்ட அந்த நொடி, ஒரு விநாடி உடலின் அத்தனை அணுக்களும் தன் செயல்களை இழந்து விட்டது போல உணர்ந்தான் அவன். புத்தியோ மரத்துப் போனது. மறு கணம் முன்னதை விடப் பலமடங்கு வேகமாக இவனுடைய அணுக்கள் செயல் பட, அவள் தேகத்தை உணர்ந்து கொண்ட அவனுடைய ஆண் தேகமோ முதன் முறையாகச் சிலிர்த்துத் திணறிப் போனது.
அவன் ஒன்றும் பெண்களை அணைக்காதவன் அல்ல. வேலை நிமித்தம் சக மனிதர்களை மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ, நன்றியையோ வெளிக்காட்டும் விதமாக லேசாக அணைத்த விடுவிப்பவன்தான். ஆனால் அந்த அணைப்பில் வேறு எதுவும் இருக்காது. வெற்று அணைப்பு. ஆனால் இது…! அவள் அணைத்ததும் ஏன் உடலில் சூடு பரவுகிறது? ஏன் இரத்தத்தின் வேகம் அதிகமாகிறது? ஏன் இதயத் துடிப்பு வண்மையாகிறது? ஏன் மயிர்க்கால்கள் எழுந்து நிற்கின்றன? ஏன் அடிவயிற்றில் ஒரு வித பூரிப்பு? ஏன் ஆண்மை சிலிர்த்துக் கொள்கிறது? புரியாத குழப்பத்தில் தவித்தவனுக்குச் சற்று நேரம் எடுத்தது சுயத்திற்கு வர. இத்தனைக்கும் அவனுடைய கரங்கள் அவளைத் தொடவில்லை. அணைக்கவில்லை. ஆனாலும் அணைத்தது போல உணர்ந்தவனுக்குக் கண்முன்னால் அமலன் வந்தான். கூடவே அவனை அணைத்தவாறு அவளும்.
அந்த நொடியே அத்தனை உணர்வும் வடிந்து வறண்டு போக உடல் இறுகியது. ஆத்திரம் கனன்றது. அடிவயிற்றிலிருந்து சுடர்விட்டு எழுந்த பொறாமைத் தீ அவனை எரித்தது. அதுவரை இளகி இருந்த அவன் விழிகள், இப்போது கடுமையிலும், ஆத்திரத்திலும் சிவந்தன.
“என்ன…? என்னை அமலன் என்று நினைத்து விட்டாயா? இல்லை இப்படி அணைத்ததும் உன் வலையில் விழுந்துவிடுவேன் என்று நினைத்தாயா?” என்று அவன் கறாராகக் கேட்க, அதுவரை அவன் மார்பில் விழுந்து, தன் நன்றியை உரைத்துக் கொண்டிருந்தவளுக்கும் அப்போதுதான் தான் செய்த காரியம் புரிந்தது. தான் அவனை அணைத்திருக்கும் விதமும், அவன் மார்பில் தலை சாய்த்திருந்த விதமும் அவள் புத்திக்கு உறைக்க, அதிர்ந்து போனவளாய் சட்டென்று அவனை விட்டு விலகி நின்றுகொண்டாள் திகழ்வஞ்சி.
என்ன காரியம் செய்திருக்கிறாள்? அவளாகச் சென்று அவனை அணைத்தாளா. இது எப்படி நிகழ்ந்தது? இது என்ன விந்தை? அதீத மகிழ்ச்சி அவளை நிலை குலையச் செய்து விட்டதே. பதறி விலகுவதற்குள் தீக் கங்குகளை அவள் மீது துப்பிவிட்டானே.
குற்றம் அவளிடம்தான். என்னதான் அவன் தாமரை இதழ்களை அவள் மீது தூவியிருந்தாலும், இப்படிச் சுயம் இழந்து அவனை அணைத்திருக்கக் கூடாது. அது அவளுடைய தவறுதான். சங்கடமும், தவிப்புமாக அவன் முகம் பார்க்க சக்தியின்றித் தலை குனிந்தவள்,
“சா… சாரி… நான் வேண்டும் என்று உங்களை… அது வந்து… என் மகிழ்ச்சியை எப்படி வெளிக் காட்டுவது என்று தெரியாமல்… சாரி…” அவள் திக்கித் திணற, அவளை ஒரு மாதிரிப் பார்த்தவன்,
“விரைவாகத் தயாராகு… நேரம் போகிறது…” என்றவன் வாசலை நெருங்கியதும் நின்று திரும்பிப் பார்த்து,
“கொஞ்சம் காத்திரு… நான் போய் ஒரு தாதியை வரச் சொல்கிறேன்…?” என்றவன் அங்கிருந்து விலகத் தொடங்க, இவளோ
“எதற்கு?” என்றாள்.
“இது என்ன கேள்வி? உன்னால் தனியாக இவற்றை அணிய முடியாது. ஒருத்தரின் உதவி நிச்சயம் வேண்டும்…” என்றான் அவன்.
“இல்லை… வேண்டாம்… நானே அணிந்து கொள்கிறேன்…” என்றவள் அந்தப் பையிலிருந்தவற்றை எடுத்துப் பார்த்தாள்.
“இலகுவாக அணியக் கூடிய டீஷேர்ட். டெனிம் பாவாடை. சின்னதாக மேக்கப் செட். சீப்பு, உள்ளாடைகள் என்று கையோடு வர,
“சாரி… போன கடையில் இவைதான் கிடைத்தன. அளவு எதுவும் சரியாகத் தெரியவில்லை…” என்றான் சற்று சங்கடமாக.
“இல்லை… பரவாயில்லை… இதுவே போதும்…” அவள் நன்றியுடன் சொல்ல, அதற்கு மேல் வாதிடாமல் வெளியே சென்றுவிட்டான் அபராசிதன்.
ஆடைகளை மாற்றத் தொடங்கியவளுக்கு அது எத்தனை சிரமம் என்று பிறகுதான் புரிந்தது. இரண்டு கரங்களையும் தூக்க முடியாத வலியோடு ஆடை மாற்றுவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை.
ஒரு மாதிரி டீஷேர்ட்டை அணிந்துவிட்டாள். ஆனால் அவன் வாங்கி வந்த பாவாடையின் ஜிப் பின் பக்கம். அதனால் பாவாடையை முன் பக்கம் எடுத்து வந்தவள், வலக் கரத்தால் ஜிப்பை இழுக்க முயன்றாள். அந்த கிறிஸ்டீன், ஆத்திரத்தில் அவனுடைய சப்பாத்துக் காலால் அவளுடைய விரல்களை நசித்திருந்ததால், விரல்கள் மடியச் சிரமப்பட்டன. வலித்தன. சரி இடது கரத்தால் இழுக்கலாம் என்று பார்த்தால், சின்ன அசைவும் உயிர்வலியைக் கொடுத்தது.
கடைசியில் என்ன செய்வது என்று புரியாமல் அவள் விழிக்கும் போது, கதவு தட்டும் சத்தம் கேட்டது.
மெதுவாகக் கதவைத் திறந்தவன், “தயாராகி விட்டாயா?” என்றான் உள்ளே பார்க்காமல்.
ஒரு கணம் தயங்கியவள், “யெஸ்… யு ஆர் ரைட்…” என்றாள் முணுமுணுப்பாக.
“வட்?” என்றவாறு அவன் உள்ளே பார்க்க, இடது கரத்தால் பாவாடையைப் பற்றியவாறு சங்கடத்தோடு அவனைப் பார்த்துவிட்டுத் தலை குனிந்து நின்றிருக்க அதைக் கண்டு பற்களைக் கடித்தான் அபராசிதன்.
இதற்காகத்தான் தாதியை வரச்சொல்வதாகச் சொன்னான். ஆனால் பிடிவாதக் காரி எங்கே சம்மதித்தாள்.
எரிச்சலுடன் அவளை நெருங்கியவன்,
“ஐ ஆம் ஆல்வேஸ் ரைட்..” என்றவன், அவளை நெருங்கி அவளுடைய பாவாடையைக் கைப்பற்ற, இவளோ சங்கடமும், அவமானமுமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவனோ அவளுடைய முகத்தை மட்டும் பார்த்தவாறு பாவாடையைச் சுழற்றி ஜிப் பகுதியைப் பின்பக்கம் கொண்டு வந்தவன், அவளுடைய விழிகளிலிருந்து தன் விழிகளை விலக்காமல், ஜப்பை மேலே இழுத்து விட்டு, அதன் மேல் இருந்த பொத்தானையும் சரியாகப் போட்டுவிட்டுக் கரத்தை விலக்க, திகழவஞ்சியோ அவனுடைய அந்தச் செயலில் இதயம் படபடக்க மூச்சு முட்ட அப்படியே நின்றிருந்தாள்.
இப்போது அவளை அழுத்தமாகப் பார்த்தவன்,
“இனியாவது புறப்படலாமா?” என்றான்.
உடனே சுயத்திற்கு வந்தவள், ஆம் என்று தலையை அசைத்துவிட்டு, அவனுடைய முகத்தைப் பார்க்கும் தைரியம் இல்லாமல்,
“ந.. நன்றி…” என்றாள்.
“உன் நன்றிக்காக நான் எதுவும் செய்ய வில்லை… புறப்படு…” என்றவன், பின் எதையோ நினைத்தவனாக,
“கொஞ்சம் இரு, நான் போய் சக்கர நாற்காலி எடுத்து வருகிறேன்…” என்றவாறு திரும்பினான் அபராசிதன்.
“இல்ல… வேண்டாம். நான் நடந்தே வருகிறேன். கொஞ்சத்திற்கு முன்புதான் வலி நிவாரணி கொடுத்தார்கள். எனக்கு வலிக்கவில்லை…” சொன்னவளை நிமிர்ந்து பார்ததான் அபராசிதன்.
“அவள் சொன்ன விதத்திலேயே, அவளுடைய பலவீனத்தை அவன் அறிந்துகொள்வதை அவள் விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டவன் முதன் முறையாக அவளை நினைத்து வியக்கவும் செய்தான்.
அவன் ஒரு வைத்தியன். அவளுடைய நெஞ்சின் கீழ் ஏறிய கத்தியின் ஆழமும், அதனால் ஏற்பட்ட இரத்த வெளியேற்றமும், அது கொடுக்கும் வலியும் அவன் அறியாததா என்ன? நிச்சயமாக இந்த இடத்தில் வேறு பெண் இருந்திருந்தால், அலறியிருப்பாள். கத்தியிருப்பாள். குறைந்தது வலியில் முனங்கியாவது இருப்பாள். ஆனால் இவள், அந்த வலியைத் தாங்கிக் கொள்கிறாள். அதைப் பிறர் அறியாதிருக்க மறைக்கவும் முயல்கிறாள். மனத்திடம் நிறையக் கொண்டவள் என்று எண்ணியவன் கூடவே இகழ்ச்சியாக உதடுகளை வளைத்தான்.
மனது என்று ஒன்று இருந்தால்தானே அவளுக்கு வலிக்க. அது இருந்திருந்தால், தன்னை விட இருபது வயதுக்கும் அதிகமானவனைப் பணம் இருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காகக் காதலிப்பது போல நடித்து, குழந்தையைச் சுமந்திருப்பாளா? இவள் எல்லாம்.. இகழ்ச்சியாக நினைத்தவன், அதை லாவகமாக மறைத்துவிட்டு,
“இல்லை… உனக்கு இரத்தம் நிறைய வெளியேறி இருந்தது. அதிகத் தூரம் நடப்பதால் மயக்கம் வர வாய்ப்புண்டு. இரு நான் போய்ச் சக்கர நாற்காலி எடுத்து வருகிறேன்…” அவன் கூறிவிட்டு, அவளுடைய பதிலையும் எதிர்பாராமல் சென்றவன், திரும்பி வந்தபோது ஒரு நாற்காலியோடு வந்தான்.
“உட்கார்…” சொன்னவன் அவள் அமர்ந்ததும் சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு நடக்கத் தொடங்கினான்.
Wow awesome
Thank you so much
அருமையான பதிவு 😍😍😍😍.
அடப்பாவி ஆராகூட இருக்கலாம் ன்னு சொன்னதுக்கு சந்தோசப்பட்டு
ஹக் பண்ணுனா என்னாமோ உன்னைய கத்தி வச்சு சதக் சதக் ன்னு குத்துன மாதிரி அலறி தேவையில்லாத பேச்சு பேசறே😤😤😤😤😤😤😤😤😤
போடோங் நெட்டைக்கொக்கா😤😤😤😤😤😤 வந்துட்டான் பெரிய புடலங்காயாட்டம்🫤🫤🫤🫤🫤🫤🫤
இத்தனை பேசற உனக்கு பிற்பாடு இருக்குடி உன்னைய வச்சு செய்யப் போறா அப்ப குர்ர்ன்னு குரங்காட்டம் என்றாளோட பேச்சு+ டச்சு க்கு லோலோன்னு ஏங்கப் போறேடா. இது என்ற சாபம் டா😎😎😎😎😇😇😇
பலமா சிரிக்கிட்டேன் பா. ஹா ஹா ஹா. உங்க ஆள் தான் கட்டிபுடி வைத்தியம் பன்னிச்சு. நம்ம ஆளு அசாயாம இருந்தான்ல. அங்க இருக்கான்யா நம்ம ஆளு. போங்க போங்க காத்து வரட்டும்.