Wed. Apr 16th, 2025

தொலைந்த எனை மீட்க வா…!-1

(1)

பேரிடியாகத் தங்கை சொன்ன செய்தியில் அதிர்ந்தவளாகக் காதுகள் அடைக்க விழிகள் விரியத் தன் முன்னால் நின்றிருந்த திகழ்வஞ்சியைப் பார்த்தாள் திகழ்வல்லபை.

அவளால் தன் தங்கை சொன்னதை நம்பவே முடியவில்லை. தொண்டை அடைத்து வறண்டு போனது. அவளையும் மீறிக் கால்களும் கைகளும் நடுங்கின.

இவளால் எப்படி இத்தனை பெரிய குண்டை சர்வசாதாரணமாகத் தலையில் போட முடிகிறது. இதன் விபரீதம் இவளுக்குத் தெரிகிறதா இல்லையா? உடல் சில்லிடத் தன் தங்கையைப் பார்த்தாள் திகழ்.

“வஞ்சி… யு ஜஸ்ட் கிடிங் ரைட்…?” எங்கே தன் தங்கை சொல்வது பொய்யாகிவிடக் கூடாதா என்கிற பரிதவிப்பு அவளுடைய குரலில் அப்பட்டமாகத் தெரிந்தாலும், அந்தப் பதட்டத்தில் இம்மியளவு கூட அவளுடைய தங்கையிடம் இருக்கவில்லை என்பதுதான் பரிதாபமே.

கொஞ்சம் கூடக் குற்ற உணர்ச்சி எதுவும் இல்லாதவளாக,

“நோப்… இது விளையாட்டுக்குச் சொல்லும் விஷயமா… நான் உண்மையைத்தான் சொல்கிறேன். நான் இப்போது இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்..” என்றதும், தங்கையின் உறுதியான பதிலில் தலை சுற்றிக் கொண்டு வந்தது திகழ்வல்லபைக்கு.

காதுகள் அடைக்கத் தன் தலையைப் பற்றிக் கொண்டு பக்கத்திலிருந்த நீள் இருக்கையில் தொப்பென்று அமர்ந்துவிட்டாள் அவள்.

அவளால் இன்னும் தன் தங்கை சொன்னதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. வெறும் பத்தொன்பது வயதுதான் அவளுக்கு. அவள் எப்படிக் கர்ப்பமாக… அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

கூடவே பெரும் குழப்பமும் எழுந்தது.

இருவரும் ஒன்றாகத்தான் அந்த ஒற்றை அறை கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறார்கள். இருவரும் ஒன்றாகத்தான் வெளியே போகிறார்கள் வருகிறார்கள். உள்ளிருப்பு பயிற்சிக்காக மட்டும் இருவரும் வேறு வேறு இடங்களில் வேலை செய்கிறார்கள். இவள் என்ன செய்தாலும் தங்கைக்குச் சொல்லுவாள். அவளும் அப்படியே. அப்படி இருக்கிறபோது, இது எப்போது நடந்தது? சொல்லப்போனால், இப்படி ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதையே இதுவரை அவள் வாய்விட்டுச் சொன்னதில்லையே. குழப்பத்தொடு தங்கையைப் பார்த்தவள்,

“எ.. எப்படி வஞ்சி…? அதுவும் எனக்குத் தெரியாமல்? நீ யார் கூடவும் பழகியதில்லையே? அப்படி இருக்கிறபோது…?” என்றவள் எதுவோ உறுத்த, அதிர்வுடன் தன் தங்கையைப் பார்த்தாள். நடுக்கத்தோடு உமிழ்நீர் கூட்டி விழுங்கியவள்,

“வஞ்சி… அப்படியென்றால் இது… இந்தக் குழந்தை… உன்னுடைய அனுமதியில்லாமல்… உனக்கே தெரியாமல்…” முடிக்க முடியாமல் திணற, திகழ்வஞ்சியோ அலட்சியத்தோடு தன் உதடுகளைப் பிதுக்கி

“நோப்…!” என்றாள்.

அப்படியென்றால் யாரும் அவளைப் பலாத்காரம் செய்யவில்லை. அது ஒருபக்கம் நிம்மதியைக் கொடுத்தாலும், அவளை இந்த நிலைக்குத் தள்ளியது யார்? அதை அறிந்து விடும் வேகத்தில்,

“அப்படியென்றால்… இது… உன் விருப்பத்தின் பேரில்தான் ந..நடந்ததா?”

“ம்… ஐ லைக் ஹிம்… அவரோடு விரும்பிதான் படுத்தேன். இப்போது குழந்தையைச் சுமக்கிறேன்…” எந்த விதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அவள் சொல்ல மேலும் அதிர்ந்தாள் திகழ்வல்லபை.

“இதற்குக் காரணம் யார்?” என்றாள் கரகரத்த குரலில். இன்னும் அவளால் தங்கை சொன்ன செய்தியை ஜீரணிக்க முடியவில்லை.

“சொல்கிறேன் ஆனால் இப்போதல்ல…” என்று அவள் சொல்ல, தன் தங்கையை ஓங்கி அறைந்தால் என்ன என்று வந்தது திகழ்வல்லபைக்கு.

“சரி… இப்போதில்லை என்றால் எப்போது சொல்லப்போகிறாய்…? குழந்தை பிறந்த பிறகா?” அடக்கி வைத்த ஆத்திரத்துடன் கேட்க,

“ஐ டோன்ட் நோ… நேரம் வரும் போது” என்று அவள் தோள்களைக் குலுக்க, இவளுடைய இரத்த அழுத்தம்தான் ஏகத்துக்கும் எகிறியது. ஆனாலும் அடக்கிக் கொண்டாள். தங்கையிடம் இந்தக் கோபம் செல்லுபடியாகாது. இவள் எகிறினால் அவள் இரண்டு மடங்காக எகிறுவாள். கடைசியாக இருக்கிறதும் கெட்டுப் போகும். இதை அமைதியாகத் தான் கையாள வேண்டும். ஆனால் எப்படி? அது புரியாமல் தவிப்போடு தன் நெற்றியை அழுந்த வருடிக் கொடுத்தாள் திகழ்வல்லபை. அடுத்து என்ன செய்வது என்று சுத்தமாகத் தெரியவில்லை. அவள் செய்தது தவறு என்று எப்படிப் புரிய வைப்பது என்றும் புரியவில்லை. சோர்வோடு தன் தங்கையைப் பார்த்தவள்,

“வஞ்சி நீ என்ன காரியம் செய்திருக்கிறாய் என்று உனக்குப் புரிகிறதா இல்லையா…? இதனுடைய பின்விளைவுகள் பற்றி நீ யோசிக்கவே இல்லையா? காட்… யு ஆர் பிரக்னன்ட்… இது அத்தைக்கும் மாமாவுக்கும் தெரிந்தால் என்னாகும்? அவர்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்களா…?” என்று கேட்ட சகோதரியை அலட்சியமாகப் பார்த்தாள் திகழ்வஞ்சி.

“அவர்கள் எதற்கு என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்? கமான் வல்லபை… வி ஆர் நாட் எ கிட்ஸ். எங்களுக்குப் பத்தொன்பது வயதாகிவிட்டது. இனி அவர்களின் உதவி நமக்குத் தேவையில்லை… இது என் வாழ்க்கை. என் வாழ்க்கையில் மூக்கை நுழைக்க அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.” சொன்னவளை கொல்லும் வெறியுடன் பார்த்தாள் திகழ்வல்லபை. செய்வதையும் செய்துவிட்டு எத்தனை அலட்சியமாகப் பேசுகிறாள். சீற்றத்தோடு தங்கையைப் பார்க்க, அவளோ தைரியமாகத் தன் சகோதரியை ஏறிட்டாள்.

“சே… வாயிருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? வஞ்சி… நீ உன் வாழ்க்கையை மட்டுமல்ல, சேர்த்து என் வாழ்க்கையையும் புதை குழிக்குள் தள்ளுகிறாய். இது உனக்குப் புரிகிறதா இல்லையா…?” சீற்றத்தோடு சொன்னபோதே வல்லபையின் குரல் அழுகையில் கசங்கிப் போனது.

தவறு செய்தவள் தைரியமாகத்தான் இருக்கிறாள். இவளால்தான் அதைத் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. ஏதோ, தான்தான் தவறு செய்தது போலக் கலங்கியவள், தங்கையை ஏறிட்டு,

“அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தால், இப்படி எல்லாம் ஆகியிருக்குமா? தினம் தினம் அவர்களின் இழப்பை பூதாகரமாகத் தாக்கச் செய்கிறாய்” சொல்லும்போதே அழுகை உடைப்பெடுத்திருந்தது அவளுக்கு.

திகழ்வல்லபை அப்படித்தான். சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு உடைந்து போவாள். ஆனால் திகழ்வஞ்சி அதற்கு நேர் மாறு. சட்டென்றெல்லாம் அழ மாட்டாள். சரியோ தவறோ, தன் வாதத்திலேயே நிற்பாள். மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதைக் காதுகொடுத்துக் கேட்கும் பழக்கம் அவள் அகராதியில் இல்லை. அவள் ஒன்றை நினைத்து விட்டால், அது சரியோ தப்போ செய்துவிட்டுத்தான் மறு வேலை.

இருவரும் குருத்தாக இருக்கும் போதே நிறைய வலிகளைச் சந்தித்து விட்டார்கள். இதற்கு மேலும் கஷ்டத்தைக் கடவுள் கொடுப்பதென்றால், நிஜமாகவே அந்தக் கடவுள் இருக்கா இல்லையா? மனது அடித்துக் கொள்ள, கன்னத்தில் வழிந்த கண்ணீரை அழுந்த துடைத்துவிட்டு சகோதரியை ஏறிட்டாள் திகழ்வல்லபை.

திகழ்வஞ்சி என்பதற்கு நிலைத்தவள், ஒளி கொண்டவள், செழித்தவள் என்கிற பொருள். அதற்குத் தகுந்தாற் போல அன்றைய நவநாகரீகத் திற்கு ஏற்றாற்போல கொள்ளை கொள்ளும் அழகிதான். காதுக்கு மேலே ஒரு வளையம் போட்டிருந்தாள். தொடையிலும் இடையிலும் கேலிச் சித்திரங்கள் வர்ணத்தில் பச்சை குத்தப்பட்டிருந்தன.

பழுத்த மிளகாய் நிறத்தில் உதட்டுச் சாயம். நீண்ட விழிகளுக்கு அடர்த்தியாகக் கண்மை. இயற்கையான கரிய விழிகளைப் பழுப்பு நிறத்தில் மாற்றிய லென்ஸ். கரிய சுழல் தலைமுடி மண் நிறமும் நீலமுமாக மாற்றப்பட்டிருந்தது. மார்பை மறைக்க ஒரு டீஷேர்ட். இடைக்குக் கீழ் கிழிந்து நைந்துபோன டெனிம். அது அவளுடைய தொடை யழகின் வெண்மையை அப்பட்டமாகப் பறைசாற்றிக் கொண்டிருந்தது. அதன் ஊடே அவள் குத்திய வண்ண நிற வண்ணத்துப் பூச்சி பச்சையாகக் குத்தப்பட்டிருப்பது, அந்தக் கிழிசலின் வழியே தெளிவாகத் தெரிந்தது. மேல் ஆடைக்கும் கீழ் ஆடைக்கும் இடையே தெரிந்த பளிங்கு வயிற்றின் தொப்புளில் வளையமாக எதையோ குத்தியிருந் தாள். அதற்குக் கீழேயும் வண்ணத்துப் பூச்சி பச்சை குத்தப்பட்டிருந்தது. உடல் எழிலை அழகாகக் காட்டும் வகையில், சாப்பாட்டைக் குறைத்த மெலிந்த உடல் என்று கவர்ந்திழுத்தாள் அவள்.

ஆனால் திகழ்வல்லபையோ அதற்கு எதிர் மாறாக நின்றிருந்தாள். தங்கையைப் போலவே நீண்ட கண்களும், கூரிய நாசியும், சதைப்பற்றுக் கொண்ட உதடுகளுமாய் அழகாகத்தான் இருந்தாள். உயரக் கூட்டிக் கட்டிய அடர் சுழல் முடி தோள்வரை தொங்கிக்கொண்டிருந்தது. முகத்தில் பட்டும் படாமலும் ஏதோ பூசியிருந்தாள். மிதமான கண்மை. இயற்கையான கரிய கண்மணிகள். அதிகம் உதட்டுச்சாயம் படாத உதடுகளில் மினுமினுப்பைக் கொடுக்க வஸ்லின். கழுத்தில் சின்னதாக ஒரு சங்கிலியில் முத்துபோல ஒரு டாலர் தொங்கிக் கொண்டிருந்தது. அரைக்கை பிங்க் நிற டீஷேர்ட் நடுவில் மினிமவுஸ் வாயைத் திறந்து சிரித்துக் கொண்டிருந்தது. கரத்தை அதிகம் தூக்கினால் மட்டும் கொஞ்சமாக எட்டிப்பார்க்கும் வெண்ணிற வயிறு. பாகி பான்ட். தேவைக்குச் சாப்பிடுவதால் கொஞ்சம் பூசினால் போலத் தேகம். அவ்வளவும்தான் திகழ்வல்லபை.

இருவரும் இரட்டையர்கள். உற்றுப்பார்த்தால் ஒற்றுமை நிறையவே தெரியும். ஆனாலும் அவர்களின் உடை அலங்கரிப்பு முதல் கொண்டு, அவர்களின் நடத்தை வரை இருவரையும் வேறு வேறாகக் காட்டும்.

வஞ்சி கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழும் இரகம். வல்லபையோ ‘நாம் இருக்கிற இடம் தெரியாமல் இருந்திட்டுப் போயிரணும்’ என்கிற வகை. அதனால்தானோ என்னவோ எப்போது பார்த்தாலும் திகழ்வஞ்சி எதையாவது ஒரு பிரச்சனையை இழுத்து வந்து விடுவாள். இதோ இப்போது இழுத்து வந்தது போல.

“வஞ்சி… நம் வாழ்க்கையில் நடந்தது அனைத்தையும் மறந்துவிட்டாயா? நம் அம்மா பட்ட வலிகள்… எதுவுமே உனக்கு நினைவில் இல்லையா? அப்பா நமது நாலாவது வயதில், தன் பழைய காதலியோடு எங்களை அம்போ என்று விட்டுப் போய்விட்டார். எங்களை ஒற்றை மனுஷியாக வளர்த்தது அம்மாதான். எங்கள் விதி பன்னிரண்டாவது வயதில், அவர்களையும் இழக்கவேண்டிய நிர்ப்பந்தம். அப்போது நம்மை ஏற்றுக்கொண்டவர்கள் வேறு யாருமில்லை…! அப்பாவின் தங்கை சந்திரா அத்தைதான். அவர்கள் மட்டும் முன்வரவில்லை என்றால் எங்களின் நிலைமை என்னவாகி இருக்கும்? எங்காவது யார் எவர் என்றே தெரியாத ஒரு வீட்டில் வளர்ப்பினிகளாக இருந்திருப்போம். யார் கண்டா, ஒரு வேளை நீ ஒரு விட்டிலும் நான் வேறு ஒரு வீட்டிலும் பிரிந்து வாழ்ந்திருப்போம். அங்கே என்ன என்ன கொடுமைகளை அனுபவித்திருப்போமோ…? இன்று நானும் நீயும் ஒன்றாக ஒரே வீட்டில் இணை பிரியாமல் இருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் அத்தைதான்… தக்க நேரத்தில் உதவி செய்தவர்களையா அலட்சியமாகப் பேசுகிறாய்? மனிதனாகப் பிறந்தால் நன்றி இருக்கவேண்டும் வஞ்சி…” சொன்ன சகோதரியை இளக்காரமாகப் பார்த்தாள் திகழ்வஞ்சி.

“எனக்கு என்னவோ வளர்ப்பு வீட்டிற்கும், அத்தை வீட்டிற்கும் வித்தியாசம் இருப்பது போலத் தெரியவில்லையே…?” என்றாள் விரக்தியாக.

“வஞ்சி…”

“அவர்கள் ஒன்றும் நம் மீதிருந்த அன்பால் எங்களை அழைத்துச் செல்லவில்லை. அம்மா விட்டுச் சென்ற ஐம்பதாயிரம் டாலர்கள், நம்மை அழைத்துச் செல்ல வைத்தது… ஆனால் பாசம்… அன்பு… அரவணைப்பு… என் குழந்தைகள் என்கிற அங்கீகாரம்… சொல்லு வல்லபை…! இதில் எது எங்களுக்குக் கிடைத்தது? எங்கே நெஞ்சைத் தொட்டுச் சொல்லு சந்திரா அத்தை அப்பாவின் சொந்தத் தங்கையாக இருந்தும், எங்களைத் தங்கள் பிள்ளைகளை வளர்த்தது போலவா வளர்த்தார்…? இல்லைதானே…? ஏதோ ஒதுக்கப்பட்டவர்கள் போல, தீண்டத் தகாதவர்கள் போல, அழைத்துச் சென்ற உடனே, நிலக்கீழ் வீட்டில் தள்ளிவிட்டார்கள். ஏதோ உறவு என்பதால் மூன்று வேளை சாப்பாடு மட்டும் போட்டார்கள். இதை விட வேறு என்ன நமக்குச் செய்தார்கள்…?” கேட்ட தங்கையின் குரலில் மிதமிஞ்சித் தெரிந்த விரக்தியையும் ஏக்கத்தையும் கண்டு கொண்ட திகழ்வல்லபைக்கு நெஞ்சம் பிசைந்தது.

என்னதான் இல்லை என்று மறுத்தாலும், நிஜம் அதுதானே. ஆனால், அந்த நேரம் அவர்கள் மட்டும் இல்லை என்றால் நிச்சயமாக இருவரும் பிரிந்திருப்பார்கள். அது நடக்காமல் இருக்கக் காரணம் சந்திரா அத்தையும் அவர் கணவன் பரமகுருவும்தான். ‘காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது’ என்கிற போது அவர்கள் செய்தது இமாலய உதவி அல்லவா. அதை அலட்சியப் படுத்துவது எத்தனை பெரிய தவறு?

“இப்படிப் பேசுவதே பாவம் வஞ்சி. நாம் இருவரும் ஒரே வீட்டில் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாக இருக்கிறோமே இது போதாதா?”

“போதாது அக்கா… போதாது… எங்கே உன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லு, நாம் ஆசைப்படுவது எல்லாம் நம்மால் வாங்க முடிகிறதா? இல்லை வாங்கித் தரத்தான் யாராவது இருக்கிறார்களா. வினோத், பிரவின், சித்தாரா.. இவர்கள் இம் என்பதற்கு முன் அம் என்று மாமாவும் அத்தையும் வாங்கிக் கொடுக்கிறார்களே. அப்படி வாங்கிக் கொடுக்க நமக்கு யார் இருக்கிறார்கள்? இத்தனைக்கும் அப்பாவின் சொந்தத் தங்கைதான் சந்திரா அத்தை. இருந்தும் என்ன பயன்? இருவருமே நம்மை ஒரு பொருட்டாக மதித்ததில்லையே” பெரும் ஏக்கத்துடன் சொன்ன தங்கையை வலியோடு பார்த்தாள் திகழ்வல்லபை.

“இதெல்லாம் ஒரு நாளைக்கு மாறும் வஞ்சி…”

“எப்போது? எப்போது மாறும்…? இன்று…? நாளை…? நாளை மறு நாள்? போதும் வல்லபை. இந்தப் புராணக் கதையைக் கேட்டுச் சலித்து விட்டேன்..” சொன்னவளைக் கோபமாகப் பார்த்தாள் வல்லபை.

“அப்படியல்ல வஞ்சி… நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்…?” என்று எதையோ சொல்ல வந்த சகோதரியின் முன்னால் தன் கரத்தை நீட்டி அவளுடைய பேச்சைத் தடுத்தாள் திகழ்வஞ்சி..

“கமான் வல்லபை… திரும்பவும் நியாயம் நீதி நேர்மை என்று போர் அடிக்காதே… கேட்கும் மனநிலையில் நான் இல்லை… கேட்டாலும் நான் மாறப்போவதில்லை.. அதனால் நடந்து முடிந்ததைப் பற்றிப் பேசாமல் அடுத்து என்ன செய்வது என்று பேசு…” செய்த தவறுக்குக் கொஞ்சம் கூட வருந்தாமல் பேசிய தன் தங்கையை ஆத்திரத்துடன் வெறித்தாள் திகழ்வல்லபை.

இதில் யாரைக் குற்றம் சொல்வது? குழந்தைகள் சரியான முறையில் வளரவேண்டும் என்றால் நல்ல தாய் தந்தை கிடைக்கவேண்டும். அதற்குக் கொடுப்பினை இல்லாத குழந்தைகள் இதோ இப்படித்தான் தறிகெட்டுப் போகும். இத்தனைக்கும் அவர்களின் தாய் நல்லவள்தான். ஆனால் தந்தை…?

ஒரு நாள், பழைய காதலியின் தொடர்பு கிடைத்ததாம். அவருக்குத் தன் மனைவி பிள்ளைகளை விட, அந்தக் காதலி பெரிதாகப் போயிற்று. அதனால் இவர்களை அம்போ என்று விட்டுவிட்டு காதலியிடமே சென்றுவிட்டார். விளைவு அவரைப் பெற்ற உறவுகளும், அவர் கட்டிய மனைவியும் அவரை முற்றாக ஒதுக்கி வைத்து விட்டார்கள். இற்றை வரைக்கும் அவர் இருக்கிறாரா இல்லையா, இருந்தால் எங்கிருக்கிறார், என்ன செய்கிறார், எதுவும் அவர்களுக்குத் தெரியாது. தெரிய விரும்பவுமில்லை.

கணவன் பழைய காதலியிடம் சென்றுவிட்டதை அறிந்த மஞ்சுளா, அன்றே அவரை ஒரேயடியாகத் தலை முழுகி விட்டு, அவர் சார்ந்த அத்தனை நினைவுகளையும், ஆவணங்களையும், பொருட்களையும் முற்றாக அழித்தார். இவ்வளவு ஏன், தன் பெண்களுக்கு அவர்தான் பெயர் வைத்தார் என்கிற ஒரே காரணத்திற்காக, அவர்களின் பெயர்களைக் கூட மாற்றி வேறு பெயர் வைத்து, முற்றாகக் கணவனின் நினைவுகளை அழித்துவிட்டு, ஊரில் இருக்கப் பிடிக்காமல் கனடா வந்து சேர்ந்தார்.

அதன் பின் தன் பெண்கள்தான் உலகம் என்று வாழத் தொடங்கினார் மஞ்சுளா. தந்தையைத் தாய்க்குப் பிடிக்காது போனதால் இவர்களுக்கும் தந்தை என்றாலே பாகற்காய் சாப்பிட்டது போல அந்தளவு கசக்கும். கனடா வந்த பிறகு அவர்களின் வாழ்க்கையிலும் நிறைய மாற்றம். ஓரளவு வாழ்க்கை நன்றாகத்தான் போனது அந்த நாள் வரும் வரை. திடீர் என்று ஒரு நாள் முடியாமல் வேலைத்தளத்தில் மயங்கிச் சரிந்தவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார்கள்.

அதீத மன உளைச்சலினால் மூளைக்குப் போகும் நரம்பு வெடித்து மரணம் என்று பெரிய இடியை இறக்கினார் வைத்தியர்கள்.

தந்தையும் இல்லாமல், தாயும் இல்லாமல், அடுத்து என்ன செய்வது யாருடைய பொறுப்பில் இருப்பது என்று எதுவும் புரியாமல் மலங்க மலங்க விழித்து நின்ற இரண்டு பெண் குழந்தைகளையும் ஏற்றுக்கொள்ளச் சொந்த உறவினர்கள் யாரும் முன்வரவில்லை. இதில் தலை விதி என்னவென்றால் மஞ்சுளாவோடு கூடப்பிறந்தது ஒரே ஒரு அண்ணன். அவரும் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகத் தங்கி விட, அவராலும் இவர்களின் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை. ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை விட, ஏற்றுக்கொள்ள மனமில்லை என்பதே சாலப் பொருந்தும். அவர்களையும் பிழை சொல்ல முடியாதுதான். அவரவர் வாழ்க்கையை அவரவர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய பொருளாதாரச் சிக்கலில் எல்லாமே சிரமம்தானே. அவர்களின் வாழ்க்கை நிலையை ஒழுங்காகப் பார்த்துக்கொள்ள முடியாத நிலையில், தங்கையின் மகள்களை எப்படி முழுமனதாக ஏற்றுக் கொள்ள முடியும்?

கடைசியாகத் தந்தையின் கூடப்பிறந்த சகோதரி சந்திராதான், இவர்களை ஏற்க முன்வந்தார். அவர் வந்ததற்குப் பின்னால், தாய் தன் பெயரில் போட்டுவைத்த காப்புறுதிப் பணம்தான் காரணம் என்று பின்னாளில்தான் தெரிய வந்தது.

அதற்காக இவர்களைக் கொடுமைப்படுத்தி வளர்த்தார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. அவர்கள் தங்குவதற்காக நிலக்கீழ் வீட்டைக் கொடுத்திருந்தார்கள். அதில் ஒரு அறை, கட்டில், சின்னதாகச் சமையலறை என்று எல்லாம் இருந்தது. இவர்கள் சமைக்க வேண்டிய நிலை இல்லாமல் மூன்று வேளையும் சாப்பாடு கொடுத்து அனுப்புவார்கள். அவ்வளவுதான். அதற்கு மேல் உன் பாட்டை நீ பார்த்துக் கொள் எங்கள் பாட்டை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்பதோடு சரி.

அன்பாய் அரவணைப்பில்லை. சாப்பிட்டீர்களா? தூங்கினீர்களா? படிப்பு எப்படிப் போகிறது? பள்ளிக்கூடம் நன்றாக இருக்கிறதா? என்ன உடல் மெலிந்து விட்டாய்…? உடலைப் பார்த்துக் கொள்… இப்படியான அக்கறையான விசாரிப்புகள் இல்லை.

தாயையும் இழந்துவிட்டு தந்தையும் இல்லாமல், உறவினரின் வீட்டில் தனியாக நிலக்கீழ் விட்டில் தங்குவது என்பது அந்தப் பதின்ம வயது சிறுமிகளுக்குப் பெரும் சவாலாகத்தான் இருந்தது.

திகழ்வல்லபை உடனே தன்னைத் தேற்றிக் கொண்டு நிதர்சனம் புரிந்தவளாக அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கினாள். ஆனால், திகழ்வஞ்சி…? அழுதாள். கத்தினாள். சின்னது என்றாலும் சீறினாள். அவளால் தாயின் இழப்பை அத்தனை சுலபத்தில் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

இவள்தான் தனக்குத் தெரிந்தது போலத் தேற்றினாள். சமாதானப் படுத்தினாள். ஆரம்பத்தில் அந்தத் திடீர் மாற்றங்கள் பெரும் வலியைக் கொடுத்தாலும், காலப்போக்கில் அது பழகியும் போயிற்று.

இதில் சந்திராவையும் குறை சொல்ல முடியாதுதான். சந்திராவுக்கும் பரமமரகுருவுக்கும், ஏற்கெனவே மூன்று பிள்ளைகள். இதில் இவர்கள் இருவரும் வந்து சேர, மூன்று அறை கொண்ட வீடு எப்படிப் போதும்? அவர்களைப் பொறுத்தவரை இவர்கள் விருப்பமற்ற வரவுதான்.

அதனால் இரு சாராருக்கும் இடையில் ஒரு வித ஒதுக்கம் இருந்து வந்தது என்பது நிஜம். இது என்ன திரைப்படமா, இல்லை தொடர் நாடகமா பிறத்தியான் பிள்ளையைத் தன் பிள்ளையாக வளர்ப்பது போலக் காட்ட. எதார்த்தத்தில் அது சாத்தியப்படாது என்பதுதானே நிஜம்.

நீயும் உன் எல்லையைத் தாண்டி வராதே, நானும் வரமாட்டேன் என்பது போலச் சற்று ஒதுங்கிக் கொண்டார்கள். ஆனால் அந்த இளம் குருத்துகள் பாசத்துக்கு மிகவும் ஏங்கினார்கள் என்பதுதான் நிஜம்.

இவர்களும் பள்ளிக்கூடம் முடித்து, பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பிக்க, சற்றுத் தள்ளியே போகலாம் என்று முடிவு செய்த போது சந்திராவும் அதை வரவேற்கவே செய்தார். எத்தனை நாளுக்குத் தான் அந்த இருவரையும் பொறுப்பேற்க முடியும். பதினெட்டு வயது வந்ததும், அவர்களுக்குக் கிடைக்கும் அரச உதவியும் நின்று போகுமே. அதற்கு மேல் தண்டமாக வைத்திருக்க அவருக்குப் பைத்தியமா என்ன?

அதை அந்த இரண்டு பெண்களுமே உணர்ந்து கொண்டார்கள். அதனால், பல்கலைக் கழகத்திற்குச் சற்றுத் தள்ளியே போகலாம் என்கிற நினைப்போடு ஒட்டாவா பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்து அங்கேயே வந்து சேர்ந்தார்கள்.

இங்கே ஒட்டாவா வந்து இரண்டு வருடங்கள் ஆகியிருந்தன. முன்னை விட வஞ்சியும், வல்லபையும் மிகுந்த மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள். நிறையப் பேசினார்கள். சிரித்தார்கள். சொல்லப்போனல் கிங்ஸ்டனில் இருந்தபோது இருந்த இறுக்கம் இருவருக்கும் இடையில் குறைந்துதான் போனது. ஆனால் திகழ்வஞ்சி தான் அந்தச் சுதந்திரத்தைக் கொஞ்சம் தன் இஷ்டத்திற்கு மாற்றிக்கொண்டாள்.

ஒரு நாள் பார்த்தால், தோளிலும் கழுத்திலும் இடுப்பிலும் என்று பச்சை குத்திக்கொண்டு வந்தாள். அதைக் கண்டு அதிர்ந்து போனாள் திகழ்வல்லபை.

“வஞ்சி… என்ன செய்து வைத்திருக்கிறாய்.. இது எல்லாம் அம்மாவுக்குச் சுத்தமாகப் பிடிக்காது தெரியம்தானே…” அவள் அதட்ட, அலட்சியமாக உதடுகளைச் சுளித்தவள்,

“அதுதான் இப்போது அவர்கள் உயிரோடு இல்லையே…” என்றாள். இன்னொரு நாள் தலைக்கு மஞ்சள் பச்சை என்று டை அடித்துக் கொண்டு வந்தாள். மயங்கி விழாத குறை வல்லபைக்கு.

“மை காட்… ஆர் யு எ லெஸ்பியன்?” என்றாள் ஏற்க முடியாத அச்சத்துடன். அதைக் கேட்டுச் சிரித்துவிட்டாள் திகழ்வஞ்சி.

“நோ வல்லபை… ஐ ஆம் நாட்… இப்படிப் பண்ண பிடித்திருந்தது… செய்தேன்…” சொன்ன தங்கையை என்ன செய்வது என்று தெரியாமல் கைகளைப் பிசைந்தாள் வல்லபை.

இன்னொரு நாள் காதின் மேல் பெரியதாக ஒரு வளையம் போட்டுக் கொண்டு வந்தாள். சரி அதுதான் தமிழ்ப் பண்பாட்டின் ஒரு வகை என்று பேசாமல் இருந்தால், நாக்கில் குத்திக்கொண்டு வந்தாள்.

அடுத்த ஒரு வாரத்தில் நாக்கு வீங்கி காய்ச்சலாகி, மருத்துவமனையில் இரண்டு நாட்கள் அனுமதிக்கப்பட்டுத் திரும்பி வந்தவள், தானாகவே அதைக் கழற்றி எறிந்தும் விட்டாள். பின்னர் ஒரு நாள் புருவத்தில் குத்திக்கொண்டு வந்தாள்.

திகழ்வல்லபைக்கு அதற்கான காரணம் தெரியாமல் இல்லை. உள்ளூர அன்புக்காக ஏங்கும் தங்கை, அதை வேறு வழியில் தேடுகிறாள் என்று புரிந்து போக, அதற்கு மேல் வாதிடாமல் அமைதியாகவே இருந்துவிட்டாள். இவள் மட்டும் அன்புக்காக ஏங்கவில்லையா என்று கேட்டாள் ஏங்கினாள்தான். நிறையவே ஏங்கினாள். அவளுக்கும் அந்த வயதுக்கான ஆசைகள் அதிகம் உண்டு. ஆசைப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும், அனுபவிக்கவேண்டும் என்று கொள்ளை கொள்ளையாக ஆசை இருந்ததுதான். ஆனால், நினைவு தெரிந்த நாளிலிருந்து அன்னையின் கண்டிப்பிலும் கறாரிலும் இருந்து வந்தவளுக்குச் சட்டென்று அதிலிருந்து வெளியேறித் தன் இஷ்டத்திற்கு வாழ முடிந்திருக்கவில்லை.

ஏதோ போய்க்கொண்டிருக்கிற வாழ்க்கையில், இப்படித் திடீர் என்று பெரிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போடுவாள் என்று சத்தியமாக எதிர்பார்க்க வில்லை..

“எப்படி வஞ்சி…? உனக்குக் கொஞ்சம் கூடவா உறுத்தவில்லை? மனது தவறு என்று சொல்லவில்லை…?”

“எதற்கு உறுத்தவேண்டும்? எனக்கு அவரைப் பிடித்திருந்தது. அவருக்கும் என்னைப் பிடித்து இருந்தது. இருவருக்கும் தனிமை கிடைத்தபோது அதைப் பயன்படுத்திக் கொண்டோம். ஒரு ஆணும் பெண்ணும் உறவு வைத்துக் கொள்வது பெரிய இமாலயக் குற்றமா என்ன? எத்தனை அன்பாக இருந்தார் தெரியுமா…? அதெல்லாம் உனக்குச் சொன்னால் புரியாது. அனுபவித்தால்தான் தெரியும்… இந்த அன்பு இருக்கிறதே… அது ஒரு போதை தெரியுமா!… ஒரு முறை அனுபவித்து விட்டால், திரும்பத் திரும்ப வேண்டும் என்று மனதும் புத்தியும் அடித்துக் கொள்ளும். அவர் மிக மிக நல்லவர்… இவை அனைத்தையும் விடக் கொள்ளை கொள்ளையாகப் பணம் வைத்திருக்கிறார்… நான் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுக்கிறார். நான் வைத்திருந்த ஐஃபோன் 14 எப்போது வாங்கினேன் என்று அன்று வியந்து கேட்டாயே…? அதை நான் வாங்க வில்லை. அவர்தான் வாங்கிக் கொடுத்தார்… இப்படி என்ன கேட்டாலும் உடனே செய்கிறார் தெரியுமா” சொன்ன தங்கையை வெறித்தாள் திகழ்வல்லபை.

இவளை அந்த மனிதன் தன் தேவைக்குப் பயன்படுத்துகிறார் என்று புரிகிறதா இல்லையா? ஒருத்தன் ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்கிறான் என்றால், அதற்குப் பின்னால் இருக்கும் அவனுடைய தேவை என்னவென்று இவளுக்குப் புரியவில்லையா? கடவுளே, வெறும் பத்தொன்பது வயதுதானே இவளுக்கு. அந்த முட்டாள்தனமான வயதை, அந்த யாரோ ஒருத்தன் நன்கு பயன்படுத்துகிறான் என்பதை எப்படி இவளுக்குப் புரிய வைப்பேன்…

கலங்கிய திகழ்வல்லபைக்கு ஒன்று மட்டும் அப்போது தெரியாது போனது. அது, இவள்தான் அந்த ஆடவனைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப வளைத்துப் பிடித்துக் களிமண்ணாக வைத்து இருக்கிறாள் என்று.

“வஞ்சி… நாங்கள் ஒன்றும் வெள்ளையர்களோ, கறுப்பர்களோ இல்லை இஷ்டப்பட்டு ஒருத்தனோடு இருந்துவிட்டு வேண்டாம் என்று உதறிவிட்டுச் செல்ல. தமிழர்கள்… புரிகிறதா உனக்கு… நாம் தமிழர்கள்… உலகத்தில் எந்த மூலையிலிருந்தாலும், நாம் தமிழர்கள் என்கிற அடையாளம் மாறாது. அந்தத் தமிழனுக்கு என்று ஒரு கட்டமைப்பு இருக்கிறது. ஒழுக்கம் இருக்கிறது. அதை மீறுவது நம்மை அழிப்பதற்குச் சமம். அது உனக்குப் புரிகிறதா இல்லையா?” ஆதங்கத்தோடு கேட்கத் தன்னை விட நான்கு நிமிடங்கள் முன்னதாகப் பிறந்த சகோதரியை ஏளனமாகப் பார்த்தாள் திகழ்வஞ்சி.

“தமிழ்…! மை ஃபுட்…! தமிழ்ப் பண்பாடு பழக்கவழக்கம் பேசுவதாக இருந்தால் ஒன்றில் நாம் ஈழத்தில் இருக்கவேண்டும். இல்லையா… தமிழ்நாட்டில் இருக்க வேண்டும். வெள்ளையர்கள் நாட்டிலிருந்து கொண்டு இந்த ஒழுக்கம் பண்பாடு பற்றிப் பேசுவது எல்லாம் பேத்தல்…” எரிச்சலோடு சொன்ன தங்கையைக் கொலை வெறியோடு பார்த்தாள் திகழ்வல்லபை.

எந்த நாட்டுக்குப் போனாலும் தமிழ் என்கிற நம் இனம் அழியாது முட்டாள் என்று அவளுக்கு எப்படிச் சொல்வது. சொன்னாலும் புரியுமா..? தன் தங்கை செய்து வந்த காரியம் பூதாகரமாகத் தாக்க, தலையில் கைவைத்தவாறு அங்கும் இங்கும் நடந்தாள்.

தவறு நடந்து விட்டது. இனி அதற்காக வருந்தியோ, இல்லை கோபப் பட்டோ எதுவும் ஆகப்போவதில்லை. முதலில் இதற்கான தீர்வு என்ன என்று அறிவதுதான் முக்கியம். இவளை மிரட்டியோ அதட்டி உருட்டியோ விஷயத்தைப் பெற முடியாது. இவளை அன்பால் மட்டும்தான் கட்டுப் படுத்த முடியும். ஆழ மூச்செடுத்துத் தன்னைச் சமப்படுத்தியவள்,

“சரி வஞ்சி…! நடந்தது நடந்து விட்டது… அடுத்து நீ என்ன செய்வதாக உத்தேசம்?” என்று முடிந்தவரை குரலில் அமைதியைத் தேக்கிக் கேட்டாள் வல்லபை. ஆனால் உள்ளமோ உலைக் களமாகக் கொதித்துக் கொண்டுதான் இருந்தது. கூடவே பதறவும் செய்தது. இந்தப் பிரச்சனையை அவர்கள் இருவராலும் சமாளிக்க முடியுமா என்று கூடத் தெரியவில்லை.

“எதைப் பற்றிக் கேட்கிறாய்?” அழுத்தமாகக் கேட்டாள் திகழ்வஞ்சி.

“இந்தக் குழந்தையைப் பற்றி. இதை அழி…” அவள் முடிக்க முதலே,

“நோ… ஐ நீட் திஸ் பேபி.” என்றாள் ஒற்றைச் சொல்லாக.

“வஞ்சி… நம்மால் இந்தக் குழந்தையைத் தனியாக வளர்க்க முடியுமா? அதன் தேவையைப் பூர்த்தி செய்ய முடியுமா? இதற்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா” இந்தக் கேள்விக்குத் திகழ்வஞ்சியிடம் பதில் இல்லைதான். ஆனாலும் தன் வயிற்றில் கரத்தை வைத்தவள்,

“எனக்கு இந்தக் குழந்தை வேண்டும்… இதை வைத்து நான் நிறையத் திட்டங்கள் போட்டு இருக்கிறேன்…”

“தி… திட்டமா? என்ன திட்டம்?” குரல் நடுங்கியது வல்லபைக்கு.

“ப்ச்.. உனக்கு எதற்கு அது…? எனக்கு இந்தக் குழந்தை வேண்டும்… அவ்வளவுதான்…” என்றவளை வெறித்த திகழ்வல்லபைக்கு எதுவோ புரிந்தும் புரியாமலும் இருந்தது.

“வஞ்சி…!” என்றவள் உமிழ்நீரைக் கூட்டி விழுங்கி, “வோஸ் திஸ் எ பிலான் பிரக்னன்சி… இது.. இதை நீ திட்டமிட்டுத்தான்…” முடிக்க முடியாமல் நடுங்கும் குரலில் கேட்க, ஒரு விநாடி அமைதி காத்தாள் திகழ்வஞ்சி.

அந்த அமைதியே சொன்னது தங்கை திட்டமிட்டுத்தான் அந்தக் குழந்தையைச் சுமந்து இருக்கிறாள் என்று. அதைக் கேட்டதும் முகம் வெளிறிப் போனாள் திகழ்வல்லபை.

“பட்… வை?” இவள் திக்கித் திணற, அலட்சியமாகத் தன் தோள்களைக் குலுக்கியவள்,

“ஐ நீட் எ பேபி. எனக்கே எனக்காக.. விளையாட, சண்டை பிடிக்க… அது தவிர…” என்றவளின் உதட்டில் சின்னதாக ஒரு வில்லச் சிரிப்பு. அதைக் கண்டவளின் அடிவயிறு கலங்க,

“வஞ்சி…!” என்றாள் கலக்கத்தோடு. ஆனால் எந்தத் தயக்கமுமின்றி திகழ்வல்லபையைப் பார்த்தவள்,

“நாம் மகிழ்ச்சியாக வாழப் பணம் அவசியம் வல்லபை… இந்தக் குழந்தையின் தந்தையிடம் நிறையப் பணம் இருக்கிறது… என் விருப்பப்படி சந்தோஷமாக வாழ அந்தப் பணம் வேண்டும். தவிர அவர் நல்ல மனிதர்… நான் ஆசைப்படுவது எல்லாம் அவரிடமிருந்து எனக்குக் கிடைக்கும்… எனக்குக் கிடைக்காத அன்பு உட்பட…” சொன்ன தங்கையை ஆடிப்போய் பார்த்தாள் திகழ்வல்லபை.

இத்தனை பெரிய பாரதூரமான திட்டம் அவளிடமிருக்கும் என்று அவள் நினைத்திருக்க வில்லை. இது மிகப் பெரும் ஏமாற்று என்று இவளுக்குப் புரியவில்லையா… இவளுடைய மகிழ்ச்சிக்காக, ஆடம்பரத் தேவைக்காக ஒரு ஆணுடைய வாழ்க்கையில் விளையாடுவது எந்த விதத்தில் நியாயம்..? ஒரு வேளை அந்த மனிதர் திருமணம் முடித்தவராக இருந்தால்…? அதை நினைத்ததுமே உடல் வெளிறிப் போனாள் திகல்வல்லபை.

“வஞ்சி… அவர்… உன் குழந்தையின் தந்தை… அவர் தனியாள் தானே…?” திக்கித் திணறிக் கேட்க அலட்சியமாகத் தன் தோள்களைக் குலுக்கினாள் இளையவள்.

“நோ…ஹி இஸ் மரிட்… மனைவி இருக்கிறது. குழந்தை இல்லை… அதனால்தான்… இந்தக் குழந்தையை சுமக்கிறேன். இனி அவர் எனக்கு மட்டும்தான்…” முடிக்கவில்லை, இடியெனத் திகழ்வஞ்சியின் கன்னத்தில் வல்லபையின் கரம் வந்து விழுந்தது.

தன் சகோதரி இப்படிக் கட்டுப்பாட்டை இழந்து தன்னை அறைவாள் என்று எதிர்பாராத திகழ்வஞ்சி, கன்னத்தைப் பிடித்தவாறு சகோதரியை முறைக்க அவளை அருவெறுப்போடு பார்த்தாள் திகழ்வல்லபை.

“சீ… நீ எல்லாம்… நானும் நீயும் ஒரே வயிற்றில் சொல்லப்போனால் ஒரே நேரம்தானே பிறந்தோம். நீ ஏன் இப்படிக் கேவலமாக இருக்கிறாய்… நீ ஒருத்தனின் வாழ்க்கையில் மட்டுமல்ல, நீ உன்னுடைய சுயநலத்திற்காக இன்னொரு பெண்ணின் வாழ்க்கையிலும் விளையாடியிருக்கிறாய்… காட்… இது எத்தனை பெரிய விபரீதம்…? நோ… ஐ ஆம் டன்… சத்தியமாக நீ இழுக்கிற இடத்திற்கெல்லாம் என்னால் வர முடியாது. டு யு நோ வட்… நீ செய்த காரியத்தின் பின்விளைவுகளை நீ பட்டுத்தான் தெளிய வேண்டும். அப்போதுதான் நிதர்சன வாழ்க்கையின் அர்த்தம் உனக்குப் புரியும்…” சொன்ன திகழ்வல்லபை, கோபமாகத் தன் அறைக்குள் நுழைய, திகழ்வஞ்சியோ அலட்சியமாகத் தன் சகோதரி சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

இதழ்களின் ஓரம் ஏளனப் புன்னகை ஒன்று மலர்ந்தது.

“உன்னை யாரும் கெஞ்சிக்கொண்டு இருக்க வில்லை. இது என் வாழ்க்கை. இதை என் விருப்பத்திற்குத்தான் அமைத்துக் கொள்வேன். அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. நீ உட்பட. உனக்குப் பிடிக்கவில்லை என்றால் போ… யாரும் உன்னைத் தடுக்கப் போவதில்லை. போய் உனக்குப் பிடித்த வாழ்க்கையை அமைத்துக் கொள்… யாரும் உன்னிடம் கையேந்தி நிற்க வில்லை…” சொன்னவள் அலட்சியமாகச் சென்று நீளிருக்கையில் அமர்ந்து கொள்ள, அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் ஒரு பெட்டியை எடுத்த திகழ்வல்லபை, அதில் தன் ஆடைகளைப் போட்டு அடுக்கத் தொடங்கினாள்.

 

What’s your Reaction?
+1
36
+1
7
+1
3
+1
1
+1
1
+1
9

Related Post

2 thoughts on “தொலைந்த எனை மீட்க வா…!-1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!