Tue. Oct 21st, 2025

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே” அத்தியாயம் 9& 10

சேதி என்ன வனக்கிளியே!!!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

சேதி 9

=====

 

Nayak fireworks என பிரம்மாண்டமான எழுத்துக்களை வளைவுமுகப்பாய் கொண்ட நுழைவாசலுக்குள் வேகம் குறைக்காமல் நுழைந்து சில மீட்டர் தூரம் கடந்து, குளிரூட்டப்பட்ட அலுவலக அறை யின் முன் சமர்த்தாக நின்றது , சிறியதாய் இருந்தாலும் பல லட்சங்களை விலையாக கொண்ட அந்த இறக்குமதி வாகனம். ஓட்டுநர் பணிவுடன் இறங்கி கதவை திறக்க இறங்கினர் வனராஜனும் சௌந்தர ராஜனும்.

 

அரசு விடுமுறை தினம் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லாம வழக்கம் போல் இயங்கி கொண்டிருந்தது நாயக் பயர்வோர்க்ஸ். இறங்கியவரை வரவேற்க நின்று கொண்டிருந்த தன் உதவியாளரிடம் தன் கைப் பெட்டியைக் கொடுத்துவிட்டு அலுவலகத் தொடர்பான சில கேள்விகள் கேட்டவாறு நடந்தவர், தன்னை வனராஜன் தொடராதத்தை உணர்ந்தவராய் நின்று திரும்பி பார்த்தார்..கண்களில் கேள்விகளுடன் அலுவலகத்தையும் அங்கிருந்த பணியாளர்களையும் பார்த்து கொண்டிருந்தான் வன ராஜன்.. அவன் பார்ப்பதை அறிந்ததும் வேலை நிமித்தம் நடந்து கொண்டிருந்தவர்கள் நின்று அவனுக்கு வணக்கம் சொல்லிவிட்டு தங்கள் வேலைகளை தொடர்ந்தனர்.

அங்கிருந்து பல மீட்டர் தொலைவில் பிரம்மாண்டமான தொழிற்சாலை . காற்றில் வெடி தயாரிப்பில் முக்கிய பொருளான கந்தகத்தின் வாசனை கலந்து இருந்தது. மின்சார வேலிகளா ல் கிரீடம் அமைக்கப்பட்டிருந்த கனத்த சுவர்களால் பாதுகாக்கப்பட்டிருந்த களமும் அதில் உலர்ந்து கொண்டிருந்த காகித உருட்டுகளும்…வெடிகள் தயாரிப்பில் மூல பொருட்களும்.அதை உலர்த்தும் நூற்றுக்கணக்கான பணியாளர்களும் என மிக துரித கதியில் இயங்கி கொண்டிருந்தது அந்த தொழிற்சாலை.

 

தனது உதவியாளரிடம் வனராஜனிற்கு உடன் செல்லும் படி பணித்து விட்டு தன் அலுவலக அறைக்குள் நுழைந்தார் சௌந்தரராஜன்.

 

“தம்பி சௌக்கியமா? எப்போ வந்தீங்க பங்களூர் ல இருந்து?” என்று கேட்டவரிடம்,

 

“ நல்லாருக்கேன்.நீங்க எப்படி இருக்கீங்க ? “ என்றவன் தொழிற்சாலை நோக்கி நடக்கத்தொடங்கினான்.

அவனுடன் இணைந்து நடந்தவர் ,” எங்களுக்கு என்ன குறை தம்பி!!தம்பி படிப்பு முடிச்சுடீங்கன்னு கேள்வி பட்டேன், பங்களூருள வேலை பாக்கறீங்க போல” என்றவரிடம்,

சிரித்தவாறே தலை அசைத்து,” அடுத்து என்ன சொல்ல போறீங்க தெரியும் …பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் சரியா செய்திருக்கு தானே ?..” என்றவாறே நடத்தான்.

 

“அதெல்லாம் பக்கவா இருக்கு தம்பி! நம்ம பெரிய அய்யா அதிலெல்லாம் கணக்கு பாக்குறதில்லை!!” , என்றவர் எல்லா இடத்தையும் காட்டினார்.பட்டாசு செய்வதற்கு தேவையான வெடிமருந்துகள் வைத்திருக்கும்பெரிய பாதுகாப்பு இடத்தையும் சோதித்தவன்…ஆள்கள் வேலை செய்யும் இடம் நோக்கி சென்றான்.

 

அங்கு கிட்ட தட்ட நூறு பேர் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தனர். வெடிக்காக இயந்திரங்கள் அளவாக வெட்டி கொடுக்க..அதனுள் கருமருந்தையும் திரியையும் வைக்கும் வேலை ஆட்கள் கைகளால் செய்து கொண்டிருந்தனர்..அந்த மருந்தின் காரணமாக சிலர் கருப்பு நிற சிலை உருவங்கள் போலவும் சிலர் வெள்ளி நிற சிலைகள் போலும் தோன்றுவதைக் கண்டவன் மனம் அதிர ,”இதற்கு பாதுகாப்பு செய்யப்பட்ட உடைகள் கொடுப்பதில்லையா நாம? இதெல்லாம் அலர்ஜி உருவாக்குற மருந்துகள்” என்றான்.

 

அசட்டுத் தனமான சிரிப்பொன்றை சிந்தியவர்,”அதெல்லாம் இவுகளுக்கு பழகி போச்சுது தம்பி, அடிக்குற அனலுக்கு அப்படி மூடி உடுப்பு போட்டா வேலை செய்ய முடியுமா?” என்றவர், அவனின் பார்வை ஒரு பெண்ணின் மேல் நிலைப்பதை பார்த்து லேசாய் கதி கலங்கப் பார்த்தார்.

 

“இந்த பொண்ணுக்கு என்ன வயசு? பார்த்த 15_16 வயசு தான் இருக்கும் போலவே! வெளிய gate ல ‘ ‘இங்கே குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்த படவில்லை ‘ னு போர்டு இருக்கே” எனவும் முகத்தில் எதையும் காட்டாதவராய்,”கிராமத்து பொண்ணுங்களுக்கு வயசு தெரியாது தம்பி..அந்த பொண்ணுக்கு 19 வயசாச்சு .நாம பிறப்பு சான்றிதழ் பார்த்து தான் வேலைக்கு எடுக்கிறது!” என்றார் தன்மையாய்.

 

“ இந்தா பொண்ணு இங்க வா” என்று அழைத்ததும், மிரண்டவாறே அந்த பெண் அருகில் வந்தாள், பால் மனம் மாறாத பிஞ்சு முகத்துடன் இருந்தவள் கை முழுதும் கருப்பாய் வெடி மருந்து.

 

“ என்ன வயசு உனக்கு எவ்ளோ படிச்சுருக்க?”

 

“19 வயசுங்க சின்னையா! எட்டாவது படிச்சிருக்கேன்!”

 

“எப்போ வேலைக்கு சேர்ந்த? ஏன் மேல படிக்கல”

 

“போன வருசம்.. அது வீட்டு நிலமை அப்படி”

 

“ போன வருசம் 8 வது படிச்சியா?”

 

“ஆமா “ என்றவள் செயலாளரின் இருமலில் திரும்பி பார்த்தவள்,” போன வருஷம் வேலைக்கு சேர்ந்தேன். 4 வருஷம் முன்ன 8 வது முடிச்சேன்” என்றாள்.

 

அவளையே பார்த்தவன், பின் திரும்பி செயலாளரை பார்க்க, அவர் சற்று அவஸ்தையுடன் இருப்பது போல் பட்டது.

 

போ என்பது போல் தலை அசைத்தவன் .. ஒரு முறை சுற்றி நோட்டமிட்டவன், உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் திரும்பி நடந்தான்.

 

“தம்பி, பிரஸ் பாக்க போலாமா? இங்கனயே இடையில ஒரு கதவு இருக்கு …அந்த வழியா போய்க்கிடலாம்!” என்றவரை ஏறிட்டவன் சரி என்பது போல் தலை அசைத்தான்.

 

பிரஸ் ஐ அடைந்தவன் , காற்றோட்டமே இல்லாமல் இருந்த அறைகளை அதிருப்தியோடு பார்த்தவன், தரை எங்கும் அச்சக வர்ணங்கள் சிதறி கிடப்பதையும் பணியாளர்கள் காலணிகளோ கைக்கு பாதுகாப்பு உறைகளோ இல்லாமல் வேலை செய்வதை பார்த்தான்.

 

அங்கும் வேகவேகமாக வேலை நடப்பதை கண்டு ,” நல்ல ஆர்டர்ஸ் எல்லாம் கிடைக்குதா! இன்னைக்கு கூட வேலை வேகமா நடக்குது”

 

“இதெல்லாம் எப்பவும் நமக்கு இருக்குற ஆர்டர்ஸ் தம்பி.பல கம்பெனிக்கு நாம தான் நிரந்தரமா கவர் அட்டை ல அடிச்சு கொடுக்கிறது..சென்னை மாதிரி நகரத்துல இருக்கிற பெரிய நகரங்கள் ல இருக்குற பெரிய கடைகள் ல இருந்து வட இந்தியால இருக்குற சின்ன சுவீட்டு பாக்ஸ்க்கு ஊதுபத்தி அட்டை க்கு கூட நாம அச்சடிச்சு கொடுக்குறோம். எல்லாம் அப்பா திறமை.!”

என்றார் உண்மையான ஊழியராக.

 

அவரின் விசுவாசமான பேச்சில் சிரித்தவன்,” இன்சூரன்ஸ்,மெடிக்கல் பேசிலிட்டிஸ் எல்லாம் இருக்கு தானே?” என்றான்.

 

“ அதெல்லாம் சரியா வச்சுருக்கு தம்பி” என்றார்.

 

“ வந்த பின்ன ஒண்ணுமே செய்ய முடியாது.. வராம இருக்குறதுக்கு என்னவெல்லாம் செய்யணுமோ கவனமா இருக்கணும்” என்றவன் தன் தந்தை இருந்த அலுவலக அறைக்கு சென்று தந்தையிடம் சொல்லிவிட்டு தாத்தா வான கோவிந்த ராஜனின் அலுவலக அறைக்குள் சென்றான்.

 

பைலில் காசோலைகளில் கையெழுத்து இட்டுக்கொண்டும், போனில் உரையாடிக்கொண்டும் இருந்த சௌந்தர ராஜன் தன் உதவியாளரிடம்,” என சொன்னான் ராஜன்?” என்றார்,

 

“அது…தம்பி புதுசுல்ல.. போக போக சரியாகிடும் அய்யா!” என்றார் சமாதானமாய் .

 

“ என்ன சொன்னான்னு கேட்டேன்” என்றவரின் விழிகள் கூர்மை அடைந்ததும்..மிரண்டவராய்,

“பாதுகாப்பு பத்தி கேட்டாரு…இன்ஷுரன்ஸு…அடிபட்டா போட மருந்து பொருளெல்லாம் இருக்கான்னு கேட்டாரு.. அதுக்கெல்லாம் தேவை இல்லை..பாதுக்காப்பெல்லாம் பக்கவா இருக்கு தம்பி னு சொன்னேன்..பெரிய அய்யா காலத்துல இருந்து நாற்பது வருசமா தொழில் பண்றோம்ங்குறது… தம்பி சின்ன புள்ளையில்ல தெரியல”

 

‘அவனா சின்ன புள்ளை..வீக்கா இருக்குற இடமா அவன் கண்ணு லேசர் மாதிரி பாய்ஞ்சு பிடிக்குது ’ என்று எண்ணியவர், வழக்கம் போல் அடி மனது கூறிய எச்சரிக்கையை திரும்ப அடியில் தள்ளியவர் அலைபேசியில் அடுத்த அழைப்பை ஏற்று பதில் சொல்ல ஆரம்பித்தார்.

 

cctv மூலமாக அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த கோவிந்தராஜன் பேரனை மகிழ்ச்சியோடு வரவேற்றார்.

 

சற்று நேரம் அவரின் பாசமான கேள்விகளுக்கு பதிலளித்தவன்,” அய்யப்பா! ரெண்டு விஷயம்..நம்ம பயர் ஒர்க்ஸ் பேக்டரி ல பாதுகாப்பு கம்மியா இருக்கு..ஏதேனும் விபத்து நடந்தா தப்பிக்க தனி வழி..பெரிய கதவுகளோட இருக்கணும். தீயனைக்குற கருவிகள் எல்லாம் எக்ஸ்பயர் அதாவது காலம் முடிந்து

ரொம்ப காலம் ஆகிருக்குது. அதெல்லாம் மாத்தி சரி செய்யணும்.” என்றவன் ,” அப்புறம் சுற்று சூழல் பாதிக்காத மாசு புகை கம்மியா வெளியிடுற பட்டாசு தயாரிக்கணும்..அதுக்கான புது தயரிப்புகளுக்கு ஏதும் ஆராய்ச்சி செய்ற மாதிரி இல்லை போல” என

 

அவனை ஆச்சரியமாக பார்த்தவர்,”நல்ல யோசனைகள்.நீயே இங்கே இருந்து செயல் படுத்தலாமே ..ஏன் ராஜன் வெளிய வேலைக்குன்னு போய்ட்டே! ஏதாவது காரணம் இருக்கா?”

“அய்யப்பா…ஏற்கனவே நீங்களும் டேடும் நல்லா பார்த்துட்டு இருக்கும் போது நான் வந்து என்ன பண்ண? கொஞ்ச காலம் worker ஆ இருந்து பார்த்தா தான் மத்தவங்களை எப்படி வேலை வாங்கணும் னு கத்துக்க முடியும்! வேலை செய்றதுல உள்ள பிரச்சனைகளை தெரிஞ்சுக்க முடியும் னு தோணுச்சு! அதான் “ என்று கைகளை விரித்து விட்டு இடக்கையை இருக்கையின் சாய்வு பகுதியில் வைத்தவன், சாய்ந்து அமர்ந்தான்.

 

தன் பேரனின் கம்பீரத்தை ரசித்தவராய் கோவிந்தராஜன், “ எவ்ளோ நாள் வேலை பார்க்கலாம்னு இருக்க! உன் அறிவும் திறமையும் இங்கேயும் தேவை படுதே!!” என

 

அழகாய் சிரித்தவனாய்,” குறைஞ்சது மூன்று வருஷம்..கூடுனது ஐந்து வருஷம் MBA வும் முடிச்சுருவேன் அதற்குள் ” என்றான்.

 

“கோ அ ஹெ ட் மை டியர் பாய்” என்வும் ,

 

முறுவலித்தவாறே தலை அசைத்து ஏற்றுக்கொண்டான்.

 

********************

 

சாப்பிட்டு கொண்டிருந்த தன் அண்ணன் பூங்காவனத்த்தை ப் பார்த்தவள்,” எப்போ வந்தே நீ..காலை ல வந்துருவ எப்பவும்! ட்ரெயின் லேட்டா?” என்று கேட்டாள் ஈஸ்வரி.

 

 

“ இல்லை வேற ட்ரெயின்.விருதுநகர் ல இருந்து மாறி வராத போச்சுது..அதான் லேட்..உனக்கு அரை நேரம் தானா..மதியம் மேல ஸ்கூல் இல்லியா?” என்ற பூங்காவனத்திற்கு பதிலாக,

 

“ ம்ம்ம் “ என்று தலை அசைத்தவள் உடை மாற்ற அறைக்குள் சென்றாள்.

 

தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்து திரையை வெறித்தபடி ஏதோ யோசனையில் இருந்தவனின் அருகில் சாப்பிட்டு தட்டுடன் வந்தவள், தொலைவு இயக்கியை ப் பறித்து வேறு அலைவரிசைக்கு மாற்றினாள் ஈஸ்வரி.

 

வழக்கமாக சண்டைக்கு வரும் பூங்காவனம் அன்று அமைதியாக இருப்பதை பார்த்து வியந்தவளாய்’ திருந்ட்திட்டன் போலவே..எதனாலும் சொல்லிட்டு செய்யுங்கடா…காலை ல இருந்து எம்பூட்டு மாத்தத்தைந்தான் பாக்குறது’ என்று எண்ணி யவள் வேண்டுமென்றே தேசபக்தி படம் என்ற பெயரில் தீவிர வாதிகளை எல்லாம் பேசியே தேசத்தை விட்டே ஓட வைக்கும் நாயகனின் ஒரு படத்தை வைத்து விட்டு குறும்பு சிரிப்புடன் ஓர க் கண்ணால் பூங்காவணத்தை நோக்கினாள். அதனையும் அவன் கண்டு கொள்ளாது யோசனையில்இருப்பதைக் கண்டு,” எந்த கோட்டையை பிடிக்க யோசனை?” என்று கேட்டவாறு சாதத்தை பிசைந்து உண்ணத்தொடங்கினாள்.

 

“ம்ம்ம்” என்றவாறு அவளை நோக்கி திரும்பியவன்,

 

“இப்படி ஆளுக்கு ஒரு பக்கமாய் இருக்கிறோமே..அம்மாவிற்கு வேற உடம்பு சரியில்லாம போய்டுது அடிக்கடி ..அதான் vrs வாங்க வச்சு எல்லோரையும் என் கூட சென்னை கூட்டிட்டு போய்டலாம்ணு யோசிக்குறேன் “ என்றதும் சாப்பாடு புரை ஏறிக்கொள்ள இருமியவளிற்கு தண்ணீர் தம்பளரை நகர்த்தியவன் சிரித்தவாறே தலையில் தட்டுவது போல் கையை ஓங்கியதும் இடதுக்கையால் அவன் கையைப்பிடித்து அவனின் பாஆஆஆசமான தட்டில் இருந்து தற்காத்துக் கொண்டவள், முறைத்தவாறு வேண்மென்பது போல் அசைத்தாள்…

விளையாட்டை விட்டவனாய்,

“காலைல அப்பாட்ட சொன்னதுக்கு முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அம்மாக்கு அரமனசு… அப்பா வேலை நாமனு எல்ல பக்கமும் அல்லாடுறாங்க…”என்று சொன்னவன் ,

“அப்புறம் உன் படிப்பு எப்படி போகுது? பாடம் புரியுதா?”..என்றவன் சற்றே தலை திருப்பி,” உன் பிரன்ட் எப்படி இருக்கா எப்படி படிக்குறா” என்றான் மெதுவாய்..

 

“ஓ இது வெக்கமா? இல்ல நீ நல்லவன்னு நான் நம்புறதுக்கா..டேய் அண்ணே.. உன் நல்லதுக்கு சொல்றேன்..நீ பாட்டுக்கு ஏதாச்சும் நினைப்பை வளர்த்திட்டு இருக்காத. அவா வேற மாதிரி..எந்த காலத்திலயும் மாறமாட்டா… அதுமில்லாம இப்போ எல்லாம் அவ அத்த பையன் அந்த வனராஜன் அண்ணே….அவுங்க…அடிக்கடி அவுங்க வீட்டுல தென்படுறாங்க..இன்னிக்கு நீட் பரிச்சைக்கு புக்கு கொடுக்க நேர்லயே வந்துட்டாங்க.” என்றாள் கண்களை அகல விரித்தவளாய்.

 

“வனராஜனா…” என்றவன்…”நாயக் பயர்ஒர்க்ஸ் காரங்க பேரன் தானே …அவுங்க வீட்டுக்கும் இவுங்க வீட்டுக்கும் ஆகாதுல்ல…..வேதநாயகி அம்மா பேரன்..அவன் எங்க இங்கன வரான்? “ என்றான் ஆச்சரியமாய்.

 

“ம்க்கும் அது போன வருஷம்..இது இந்த வருஷம்.அவுங்க வீட்ல பத்தி தெரியலை..ஆனா இந்த அண்ணே..இங்க வீட்டுக்கு வர போக இருக்காங்க”எனவும்

நெற்றியினை இரு விரல்களால் யோசனையாய் தடவியவன்,” கிளி மனசுல கண்டிப்பா அந்த மாதிரி இருக்ககாது..எனக்கு தெரியும் அவளை பத்தி..” என்றான் நிச்சயமாய். தன் தோழி பற்றி தன்னிடமே கூறும் தன் தமையனை ஆழ்ந்து பார்த்தவள்,

 

“நானும் அப்படி தான் நினைச்சேன் இவளும் எதார்த்தமா தான் இருக்கா..ஆனா அந்த அண்ணா அப்படி இல்லைனு எனக்கென்னவோ தோணுது..அதெல்லாம் என்னாத்துக்கு உனக்கு. அவுக உறவுகரவுக இனிக்கு அடிச்சுக்குவாக நாளைக்கு கூடிக்குவாக..நீ மனசுல ஆசை வளர்த்து கஷ்டப்படாதே..அம்புட்டு தா சொல்லுவேன் “ என்றவள் கை கழுவ எழுந்தாள்.

 

“அந்த வனராஜன் எப்படின்னு எனக்கு தெரியாது ஆனா வேத நாயகி அம்மா சௌந்தரராஜன் பத்தி இந்த ஊருக்கே தெரியும் ..அவுக செல்லகிளியை சந்தோஷமா வச்சுக்க மாட்டாக.சொந்தமின்னா வாழ்க்கைளையும் சொந்தமாகணும்னு இல்ல..அவளுக்கு நலலதுக்காக நான் என்ன வேணா செய்வே….நிறுத்தியவன்…தங்கை முகத்தில் பார்வையை அசையாமல் நிறுத்தி,”என்ன வேணுன்னாலும்….” என்றவனின் பேச்சில் சற்று அதிர்ந்தவள் அவனையே உற்றுப்பார்த்தவள்,”என் பிரிண்டுக்கு இஷ்டமில்லாத எந்த விஷயமும் நானும் நடக்க விட மாட்டேன்” என்றவள் தட்டுடன் நகர்ந்தாள்.

******

 

அன்று அதிசயமாக சாப்பிட வீட்டிற்கு வந்திருந்தார் வேல்ராஜன். சாப்பிட்டவர் அங்கிருந்த சிறு மேஜையில் இருந்த பெரிய பெரிய ஆங்கில புத்தகங்களைப் பார்த்து வியந்தவராய் முகப்பு அட்டையின் எழுத்துக்களை வாசித்தவர், தன் மனைவி கற்பக வள்ளியை கேள்வியாய் பார்த்தவர், “ஏது வள்ளி இந்த புக் ஸ்கூல்ல கொடுக்குறாங்களா? மதுரைல சொல்லி வச்சு நீ வாங்கினியா?

 

“இல்லல்ல, உங்க அக்கா மகன் கொண்டு வந்து கொடுத்தாப்புல!”என பதில் வரவும் யோசனையாக ,” செல்லம் கேட்டுருந்தாளா?” என்று அங்கு அமர்ந்து தன் உயிரியல் செய்முறை பயிற்சி புத்தகத்தில் வரைவதில் ஈடுபட்டிருந்த மகளைப் பார்த்தவாறே கேட்டார். தன் பெயர் கேட்ட செல்லக்கிளி அனிச்சையாக திரும்பி பார்த்தாள்,

 

“கேட்ட மாதிரி தெரியல. இவ தான் dr ஆகணும் னு எல்லோர்ட்டையும் சொல்லிக்கிட்டு திரியுறல்ல. அதை கேட்டு அந்த புள்ள வாங்கிட்டு வந்து கொடுத்திருக்கற்பகவள்ளி சொல்லவும் தன்னை பற்றிய பேச்சு என்று உணர்ந்தவளாய் புத்தகத்தை மூடி வைத்தவள் அங்கிருந்தே பார்த்தவாறு இருந்தாள்.

“ செல்லம் இங்க வாடா!” என் கையசைத்த தந்தையின் அருகில் வந்தாள்.

 

“உனக்கு நிசம்மாவே டாக்டர் ஆகணும் னு நினைப்பிருக்கா? நாம விவசாயம் , தொழில் பண்ற குடும்பத்தை சேர்ந்தவுங்க அது சம்பந்தமான படிச்சா நாளை பின்ன உபயோகமா இருக்கும்..உனக்கு ரொம்ப பிடிச்சுருக்குனா டாக்டர் படிப்புக்கு நா தடை சொல்லலை..நல்லா யோசிச்சு முடிவு பண்ணுடா!” என்றார் வாஞ்சையுடன்.

 

“அய்யா ! எனக்கு எல்லாத்தை விட உயிரியல் பாடம் ரொம்ப பிடிக்குது ஆர்வமா இருக்கு .அப்புறம்ம் ….. இப்போ பணம் அதிகமா விளையாடுறது கல்வியும் மருத்துவத்துலயும்… குடும்பத்துக்கு ஒரு dr இருந்தாதான் நம்மை நாமே காப்பாத்திக்க முடியும் போல இருக்கு..நாட்டுக்கு வீட்டுக்கு ரெண்டுக்கும் தேவையான படிப்புன்னு தோணுச்சு..அதான் !” என்றாள் விளையாட்டு குரலில் உண்மையாக…

 

தன் மகள் இவ்வளவு யோசிப்பாளா பேசுவாளா என் அதிசயித்து பார்த்தார் கற்பகம்.

 

கண்களில் பெருமையும் கனிவும் மின்ன ,”படி..நல்லா படி..நல்ல மார்க்கு வாங்கினா அய்யா நிச்சயமா உன்னை dr கு படிக்க வைக்குறேன்” என்று தன் மகளின் தலையின் உச்சியைத் தொட்டவராய் வாக்களித்தார் வேலராஜன்,” போ உன் பாடவேலைகளை முடி “ என்று மகளை அனுப்பியவர் கண்களால் மனைவியை பின்வருமாறு பணித்து விட்டு வேறு அறைக்கு சென்றார்.

 

“என்னங்க!” என்றவாறு வந்தவர் கணவரின் முகம் குழப்பத்தை சுமந்திருப்பதை பார்த்து ,” என்ன ஆச்சு? “

என கேட்டார்,

 

“ராஜன் புக்கு வாங்கித்தறது மச்சானுக்கு தெரிஞ்சா நிச்சயமா அவுங்களுக்கு பிடிக்காது..இவன் ஏன் இதெல்லாம் பண்றான்? நாள பின்ன ஒரு சொல்லு அந்த வீட்டுல இருந்து வந்துருச்சுன்னா நாம… நம்ம பொண்ணோ …..ம்ம்ம்..என்ன செய்து இதை நிப்பாட்ட?”

 

“ எனக்கும் சங்கடமா இருக்கு..பாசமா இருக்க புள்ளய என்ன சொல்ல னு? அதே நேரம் சித்தி…. சௌந்தரண்ண ந நினைச்சா வயித்தை கலக்குது..நாள பின்ன ஒரு பிரச்சனை வந்துப்பிட கூடாது.மதினியும் சங்கட படுவாங்க..யாரு மனசும் கோணாம சூதானமா செய்யுங்க” என்று விட்டு அங்கிருந்து சென்றார்

 

இன்னமும் யோசனை வலுத்தவராக அமர்ந்த வேல்ராஜன், சற்று பொறுத்து பெருமூச்சு விட்டவராக தன் அலுவலை கவனிக்க கிளம்பினார்.

 

********************************

 

பிள்ளை மனங்களில்

பல கனவுகள்..

 

பெற்றவர் குணங்களில்

எதிரெதிர் நிலைகள்..

 

கருமருந்தும் கருத்தாய் பேசுபவளும்

அருகிருக்க இயலுமா??

 

யார் மனதில் யார் நின்றாலும்..

யார் வாழ்வில் யார் வென்றாலும்..

மனம் வெல்ல போவது யார்..

வனமா!!கிளியா!!!

 

***********

 

சேதி 10

**********

 

 

இரவின் மடியில் உலகமே அமைதியுற்று துயில ஆரம்பிக்க , இளையவர்கள் தொலைகாட்சித் திரையையும், கணிப்பொறித் திரையையும் கண்டு இரவை பகல் போல எண்ணி களிக்கும் முன்னிரவு நேரம்.

 

இரவு உணவு முடித்து தனது அறையில் அமர்ந்து புத்தகம் படித்து கொண்டு இருந்த வனராஜனைக் கதவை தட்டும் ஒலி திரும்பி பார்க்கச்செய்தது.

 

கதவுக்கு அருகில் நின்று கொண்டிருந்த தாயைக் கண்டு புன்முறுவல் சிந்தியவன்,” மகன் ரூமுக்குள்ள வரதுக்கு கதவை தட்டி அனுமதி கேக்கும் அம்மா , இந்த ஊர்ல நீங்க மட்டும் தான் இருப்பீங்க னு நினைக்குறே..ஏம்மா!!!” என்றவாறு கை பற்றி இழுக்க போனவன் அவர் கையில் இருந்த தம்பளரை பார்த்து சற்று நிதானித்தான்.

 

“ நான் என்ன சின்ன குழந்தையா..night பால் சாப்பிட்டு தூங்க…இதுல என்ன போட்ருக்கீங்க.. பூஸ்ட் ஆ காம்பிளான் ஆ…இதுக்கும் மேல என்னை வளர வைக்க போறீங்களா??” என்று சிரித்தவாறு கேட்டான்.

 

“என்னை கிண்டல் பன்னது போதும். பாலை குடிச்சுட்டு அப்பா அலுவலக அறைக்கு போவியாம்..அய்யப்பாவும் உனக்காக அங்கன காத்துகிட்டு இருக்காக!! “

 

“என்னவாம் ..சாப்பிடும்போது கூட ஒன்னும் சொல்லலியே!!டாட்! “ என்றான் சற்று வியந்த குரலில்.

 

“ தெரியலை. அய்யப்பா பேசிக்கிட்டு இருந்தாங்க. உங்கப்பா உன்னை கூப்பிட சொன்னாக”

 

மதியம்தொழிற்சாலையில் பற்ற வைத்த திரி, இப்போதே வெடிக்க போகிறதா!! என்ற சிந்தனையோடு ,” சரிம்மா போறேன், என் செல்ல அம்மால்ல… இந்த பால் வேணாம்” என்று விட்டு தந்தையின் அலுவலக அறை நோக்கிச் சென்றான்.

 

கதவை தட்டி விட்டு உள்ளெ நுழைந்த பேரனை கண்ணில் வாஞ்சையுடன் எதிர் கொண்டார் தாத்தா கோவிந்த ராஜன். ,” ராஜன் ! நீ உன் ஐடியா ஸ் எல்லாம் அப்பாட்ட சொல்லலையா? அதும் நீ சொன்ன சுற்றுசூழல் கு மாசு விளைவிக்காத பட்டாசுக்கு ஆராய்ச்சி பண்ணனும் னு சொன்னது இப்போ நமக்கு ரொம்ப தேவையானது. மத்திய அரசு பட்டாசு வெடிக்க காலக்கெடு விதிச்சுட்டாங்க. காற்று, பூமி,நீர் அப்புறம் ஒலி மாசும் ஏற்படுதாம். ஏற்கனவே சீன பட்டாசுகளால் நம்ம தொழில் செய்யுறவுங்களுக்கெல்லாம் பெரிய பாதிப்பு சில வருஷங்களாவே…இப்போ இந்த அறிவிப்பு..

இதை நம்பி பல ஊர்கள்ள ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள், லட்சக்கணக்கான மக்கள் இருக்குறாங்க.. நாம பாதை மாற்றி நம்ம தொழிலை, நம்மை நம்பி இருங்குறவுங்கள காப்பாற்ற வேண்டிய தருணம் இது!!” எனவும்,

 

“ அய்யப்பா! இனி பசுமை பட்டாசு தான் கொண்டு வரணும் னும்…. பேரியம் நைட்ரேட் போன்ற அதிக புகை ஒளி கொடுக்குற வேதிப் பொருளகள் உபயோக படுத்த கூடாது னும் அரசாங்கம் சொல்லுது “ என்றவனை இடையிட்டார் சௌந்தர ராஜன்,

 

“பேரியம் சேர்க்காம எந்த பட்டாசும் பண்ண முடியாது..வேதிப்பொருட்கள் பத்தி படிச்சவன் நீ ராஜ், பேரியம் இல்லாம எப்படி கலர் ,வெளிச்சம் கொடுக்க முடியும்..சொல்லு “ என்றார் கோபம் இழையோடும் குரலில்.

 

அவரின் கோபம் கண்டு சற்று நிதானித்தவன்,”டாட்! இது அரசு சொல்லுறது.நாம என்ன பண்ணலாம்னு யோசிக்குறது தான் புத்திசாலித்தனம். மத்திய அரசோட ‘ neeri’ ( National environmental engineering research institute ) இது பற்றி ஆராய்ச்சி செய்து சில வழிமுறைகள் நமக்கு பரிந்துரை செய்துருக்குறாங்க. அதை நடைமுறை படுத்துறது ரொம்ப சிரமம் என்றாலும் , முயற்சி செய்யலாம். நாம பலருக்கு வழிகாட்டியா இருக்கலாம்” எனவும் தாத்தா கோவிந்தராஜன் சிரித்தவாறே தன் பேரனின் தோளில் தட்டினார்.

 

“அப்புறம் டாட்! பாதுகாப்புக்கு நான் சில விஷயங்கள் அய்யாப்பாட்ட சொன்னேன். அதெல்லாம் எவ்ளோ சீக்கிரம் செயரோமோ அவ்ளோ நல்லது.” என்றதும்

 

“ராஜன் நீ செலவுக்கா… தான் வழி சொல்ற !!” என்றார் சற்றே சலிப்பாய்.

 

“ நான் பேசுறது உயிர்கள், ஆரோக்கியம் பத்தி.அதுக்கெல்லாம் விலை மதிப்பு இல்ல டாட்!.சரி, உங்க பார்வைக்கே வரேன். ஏதாவது பிரச்சன வந்தா கோர்ட்டு கேசு..நஷ்டஈடு னு கொடுக்குற தொகை ..கணக்கு பாருங்க…அந்த செலவு கம்மி தான் “ என்றான் அழுத்தமான குரலில்.

 

தன் அலைபேசி எடுத்து மின்னஞ்சலை திறந்து சில அஞ்சல்களை காட்டினான். சில லட்சங்களுக்கான பிரிண்டிங் ஆர்டர் தாங்கி வந்திருந்த அவற்றை கண்டு சௌந்தர ராஜன் ஆச்சர்யம் , சந்தோஷம் அடைந்தாலும் அதிகம் வெளிக்காட்டாதவராய் அடக்கிய குரலில்,” ம்ம் வேலை பார்க்க போன இடத்தில இந்த வேலையும் பார்திருக்கியா? இந்த சாமர்த்தியம் தான்.. நம்ம பரம்பரை குணம். “ என்றார் அதையும் தன் பரம்பரையின் வெற்றியாக.

 

வந்த முறுவலை வாய்க்குள்ளேயே அடக்கியவனாய் ‘ எப்போ இருந்து இப்படி ஆனீங்க டாட்’ என்று மனதினுள் எண்ணியவனாய் அவரை பார்த்தான்.

 

இருவரின் உரையாடலை பார்த்து கொண்டிருந்த பெரியவரை நோக்கி திரும்பிய வனராஜன்,”பெங்களூரு ல பெரிய கம்பனிஸ் ல இருந்து நமக்கு பிரிண்டிங் ஆர்டர் ஸ் அய்யாப்பா. வரவுக்கும் வழி சொல்லிருக்கேன். இதை சிறப்பா செய்தா இன்னும் நிறைய ஆர்டர் ஸ் கிடைக்கும். என் பிரின்ட்ஸ் காம்பனிஸ் , பிரின்ட்ஸோட பிரின்ட்ஸ் கம்பனிஸ், நம்ம வேலை திறன் பார்த்து வரபோற காம்பனிஸ் … அப்படி விரிஞ்சுட்டே போகும் ,,நாம பெஸ்ட் ஆ பண்ணி கொடுக்கணும் . டாட் கொஞ்சம் கவனிச்சுப் பார்த்துக்கோங்க. தேவை பட்டா இதை கவனிச்சுக என் கூட யூ ஜீ படிச்ச பிரன்ட் ஒருத்தனை இங்க வர வைக்குறேன். அவனை உங்களுக்கு உதவியாளரா வச்சுக்கோங்க.” என்றார்.

 

“இவ்ளோ செய்யுற நீ இங்க இருந்தேஅதை செய்யலாமே, எவ்ளோ நாள் தான். நாமெல்லாம் பிரிஞ்சு இருக்கிறது ,இதை விடவா நீ அங்க சம்பாதிச்சுர போற ராஜன் ? உன் சேவை இங்க தேவை “ என்று விளையாட்டு தொனியில் ஆதங்கமும் அடுக்கு மொழியாலும் பாசத்தைக் காட்டிய பெரியவரை ,

 

பிரியமுடன் பார்த்தவன், “ காரணம் சொன்னேனே அய்யப்பா. கொஞ்ச வருஷம் பொறுத்துகொங்க” என்றவன் , கதவு தள்ளப்படும் அசைவில் திரும்பி பார்த்தான்.

 

“ நாளைக்கு திருணாமலை கோவிலுக்கு போலாமா கண்ணா(வனராஜன்) வெள்ளன போய்ட்டா வெயிலுக்குள்ள மலை ஏறி சீனிவாச பெருமாளை தரிசிச்சுட்டு சுருக்கா இறங்கிடலாம் “ என்றார் சொர்ணக்கிளி.

 

சௌந்தர்ராஜனின் விழிகள் தன் மனைவி முகத்தை ஆழ்ந்து கவனிப்பதை பார்த்த வனராஜனின் விழிகள் யோசனையுடன் தந்தையும் தாயையும் பார்த்தாலும் “போலாம் மா நான் சாயங்காலமா ஆச்சி தாத்தாவையும் பார்க்கலாம்னு நினைச்சே”

 

என்றதும் சௌந்தர ராஜனின் விழிகள் மகனின் பக்கமாய் வேகமாய் திரும்பியன. ஏதோ சொல்ல வந்தவரை கோவிந்தராஜனின் கை அழுத்தமும் குரலும் தடை செய்யத்தது.

 

“ அப்போ போய் சீக்கிரம் தூங்கு ராஜா” என்றவாறு தானும் எழுந்தார் தாத்தா கோவிந்தராஜன்.

 

விழிகளால் கணவரை யாசித்தவராய் அங்கிருந்து நகர்ந்தார் சொர்ணக்கிளி.

 

தாயை பின்பற்றி அந்த அறைவிட்டு வெளி வந்த வனராஜன்,”கோவிலுக்கு போறேன்னு சொன்னதுக்கு டாட் ஏன்மா முறைக்குறாங்க?” என்வும் ,

 

லேசாக சிரித்தவாறு” நான் கோவிலுக்காக மட்டும் போகலை னு அவுங்களுக்கு நினைப்பு..அதா,நீ போய் தூங்கு கண்ணா. காலைல ஆறுக்கெல்லாம் கிளம்பினாத்தான் ஏழுக்கு மின்ன அங்கன போக முடியும்.அலமேலு நாச்சியார் கு பொங்கல் வேற வைக்கணும். கூட மாட ஒத்தாசைக்கி கனகத்தை வேற கூட்டிட்டு போனும். அவளும் இல்லாம இங்கன சமையல் வேலை நடக்காது. வெள்ளன போய்ட்டு வெரசா வரணும் “ என்று தன் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்த அன்னையின் பேச்சை புன்முறுவலொடு கேட்டு கொண்டிருந்தவன் ,

 

அவர் நிறுத்தியதும்,”அப்ப்பா…… முடிச்சுடீங்களா!!!போங்க நீங்க முதல்ல போய் தூங்குங்க. மாத்திரை போட்டுடீங்களா !” என்று விட்டு அவர். சிரிப்புடன் சொர்ணக்கிளி ஆமென்று தலை அசைத்ததும் தானும் சிரித்தவாறு தாயின் தலையிட பாசமாக தொட்டவன், அங்கிருந்து தன் அறை நோக்கி சென்றான்.

 

************

 

தென் திருப்பதி என்று அழைக்க படும் திருவண்ணாமலை. விருதுநகர் மாவட்டத்தில் ஆண்டாள் பிறந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் கு மிக அருகில் மேற்கு தொடர்ச்சி மலையின் நிழலில் சிறிய குன்றாக அமைந்துள்ள அந்த மலை உச்சியில் ஸ்ரீனிவாசபெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

 

இது வைணவ தலம் ஆகும். திருப்பதி மலையில்

இருக்கும் ஸ்ரீனிவாசனை போலவே நின்ற திருமேனியாக அதே அலங்காரத்தில் மூலவர். மலையடிவாரத்தில் அழகான தாமரை குளம் , கோனேரி தீர்த்தம். அதன் கரையில் அரசமரதடியில் வேருக்குள் புதைந்த நிலையில் பல நாக சிற்பங்கள் புடை சூழ இரு மருங்கிலும் நாக சிற்பங்கள் காவல் நிற்க, ஈரமாய் அமர்ந்திருந்தார் நாக கணபதி.

 

 

செல்லக்கிளியும் சரவணனும் தாமரைக்குளத்தில் இருந்து சிறு குடத்தில் நீர் முகந்து கொண்டு வந்து அரச மரத்தை சுற்றி இருந்த நாகங்களின்மீது ஊற்றிக் கொண்டே வந்து மிச்சமிருந்த நீர் அனைத்தையும் கணபதி க்கு ஊற்றினார். விளையாட்டு போல நீ முந்தி நான் முந்தி என் இருவரும் ஓடுவதை பார்த்து படி , “ஈரத்தில் கால் வழுகிடாம பண்ணுங்க” என்று எச்சரித்தவாறு நின்று தன் குழந்தைகளின் குதூகலத்த்தை சிரிப்புடன் ரசித்துக் கொண்டிருந்தார் வேல் ராஜன். மூன்று முறை அவ்வாறு நீர் முகந்து வந்து ஊற்றியவர்கள் தீப ஆராதனை தொட்டு வணங்கி விட்டு,அருகில் இருந்த பிரம்மாண்ட கணபதியை வணங்கினார்கள். பூஜைக்கு தேவையான துளசி மாலை,தேங்காய் பழம் போன்ற பொருட்களை வாங்கி கொண்டு படி ஏற த் தொடங்கினர்…பெருமாளை தரிசித்து விட்டு சற்று கீழே வலதுபுறத்தில் தனியாய் அமர்ந்திருந்த அலமேலு மங்கை தாயாரை பார்க்க ஒருவரை ஒருவர் விஞ்சும் வேகத்தில் ஓடி வந்தவர்கள் அங்கு பொங்கல் வைத்து கொண்டிருந்த அத்தை சொர்ணக் கிளியை பார்த்து ஆவலுடன் அருகில் சென்றனர்.

கூட ஒரு பெண்மணி உதவிக்கொண்டு இருக்க பொங்கல் பானையை துணி வைத்து இறக்கி வைத்து கொண்டிருந்த சகோதரியைக் கண்டு வேலராஜன் வேகமாக அருகில் சென்றார்.

 

“ தனியா ஏன் கா பொங்கல் வைக்குற? கூட மாட ஏத்த இறக்க யாராச்சும் பசங்களை கூட்டிட்டு வந்துருக்கலாம் ல..எனக்கச்சும் முதலிலேயே போன் பண்ணிருக்கலாம் . நான் நேர இங்க வந்துருப்பேன்!” என்றார் . தம்பியின் பாசத்தில் கண்கள் மலர,மனம் நெகிழ,

 

“கூட கண்ணன் ( வனராஜன்) வந்துருக்கான் தம்பி. இவ்ளோ நேரம் இங்கன தான் இருந்தான். இப்போ தான் ஏதோ முக்கியமான போன் வந்துச்சு னு..இங்கன சிக்னல் கிடைக்கலை னு இறங்கி அந்த பக்கமா போனான்.”என்று கூறியவர் தம்பியின் அக்கறையில் மனம் நெகிழ்ந்தவராய்,” சின்ன பானை தானே. நீ கண்ணன் கிட்ட கொஞ்சம் பேசனும் தம்பி அதான் நீ வார நாளாச்சுதேனு அவனை இங்கன கூட்டிட்டு வந்தே “ என,

 

“ என்னக்கா! என்ன பிரச்சனை!?” என்று கேள்வி எழுப்பினார் வேலராஜன்.

 

“பிரச்சனை னு இல்ல,தொழில் பத்தி பாதுகாப்பு விஷயமா நீ முந்தி சொன்ன போது கேக்காதவுக இன்னிக்கு மகன் சொன்னதும் யோசிக்குறப்புலஇருக்கு, இரும்பு கனிஞ்ச நேரம் வளச்சுப்புடலாம்னு ஒரு நப்பாசை. அதான் நீ இன்னிக்கு வருவேன் னு ஆசை ல அவனை இங்க கூட்டிட்டு வந்தேன்” என்றார்,

 

“ அக்கா நம்ம ராஜன் படிச்ச பையன். அவனுக்கு நா என்ன யோசனை சொல்லிபுட போறேன் நான் தான் அவன்கிட்ட ஆயிரம் யோசனை கேக்கணும்” என் கூற

 

“ ஆஹ்….அவன் படிச்சவன் நா நீ அனுபவசாலி. வேலை செய்யுறவுக விவகாரம் எல்லாம் சரியா பார்த்து தொழில் நடத்துறவன். உன் நல்ல மனசு அவனுக்கும் இருக்கு . கலந்து பேசினா நீ சொன்ன யோசனைகளை அவுக கிட்ட பேசி ஒப்புத்துக்க வச்சுருவான் கண்ணன்(வனராஜன்) “ என்று அவர் சொல்லி முடிக்க,

“ அத்தான்” என்ற சரவணன் குரலில் அனைவரும் திரும்பி பார்த்தனர்.

 

பழுப்பு வண்ண கார்கோ பாண்டும் இளநீல முழுக்கை சட்டையும் அணிந்து, தலை முடி எண்ணெய் க் குளியலுக்கு பின்பான ஷாம்பூக் குளியலில் அழகாய் மின்னி சிலும்பி நிற்க வலது கையில் அலைபேசியும் இடதுகையால் மலைக்காற்றி ல் முன்நெற்றி யில் வந்து விழுந்த கேசத்தை விரல்களால் கோதி பின் தள்ளியவாறு வந்த வனராஜனைக் கண்டு, அக்கா மகனின் அழகிலும் ஆளுமையான நடையிலும் அசந்து பார்த்தார் வேலராஜன்.

 

படிக்கும் போது இருந்ததற்கு இப்போதுக்கும் பதினோரு வித்தியாசம் சொல்லிவிடலாம் போலவே என்று எண்ணியவாறு அவனின் கம்பீரமான உடல்மொழிகளில் மகிழ்ந்து பார்த்து கொண்டிருந்தவர் ,அருகில் வந்ததும்,”வா ராஜா!” என்றார்,

 

அருகில் வந்தவன் வடநாட்டு மக்களின் பாணியில் சட்டென்று குனிந்து தன் தாய்மாமனின் பாதம் தொட்டு நெற்றியில் வைக்க,”கோவில்ல மத்தவுகல கும்பிட கூடாது ராஜா” என்றவாறு தன் மருமகனின் தோள்களை தழுவிக்கொண்டார் வேலராஜன்.

 

“உங்களோட முற்போக்கு சிந்தனை கள் புரிஞ்சதால் வந்த மதிப்பு மாமா!” என்றவனை ஆசையோடு கைப்பற்றிக் கொண்ட சரவணனை ,”வாடா மாப்பிள்ளை,நேத்து உன்னை பார்க்க முடியலை.எப்படி படிக்குற?” என்றவன்,

அவனைப் பார்த்ததும் நழுவி பொங்கல் அருகில் இருந்த வேலைக்கார பெண்ணிடம் செல்லக்கிளி செல்வதை பார்த்து,”பொங்கல் பூசை ஆனதும் தருவாங்க..இப்போவே பக்கத்துல போய் வரிசைல நிக்காதே!” என்றான் , வழக்கம் போல் வம்பிழுக்கும் குரலில்,

“ எங்க அத்தை வச்ச பொங்கல் எனக்கு தான் முதல்ல அதுக்கு நான் வரிசைல நிக்கணுமினு இல்ல. உங்களுக்கு வேணுமின்னா அடுதாப்புல வந்து நில்லுங்க..இன்னிக்கு கோவில்ல கூட்டம் ஜாஸ்தி..அப்புறம் வெறும் பானை தான் கிடைக்கும்” என பதிலுக்கு வாயாடுவதை க் கண்டு அனைவரும் வியந்து பார்த்தனர்.

“ அடடா வந்ததும் அவளை வம்பிலுக்க ஆரம்பிச்சுட்டியா! பார்த்தியா எம் மருமக பதிலை!! எவ்ளோ நாள் உன் வாயையே எல்லோரும் பார்த்துட்டு அசந்து இருப்பாங்க.!? “ என்று சிரித்தவாறு சொல்லியவர், “கண்ணா! மாமாட்ட தொழிலாளர் விவகாரமெல்லாம் பேசிக்கோ . நீ வாடி ராசாத்தி. நாம பொங்கலை அலமேலு தாயார்கிட்ட எடுத்துட்டு பொம்பளைக வரிசைல போவோம். அவுக ஆம்பளைங்க வரிசைல வரட்டும் “ என்று விட்டு இவ்வளவு நேரம் உதவி செய்து கொண்டிருந்த பெண்மணியின் உதவியுடன்அவ்விடத்தை சுத்தம் செய்துவிட்டு அடுப்பை நீர் ஊற்றி தணிய செய்து விட்டு கவனிக்க சென்றார் சொர்ணக்கிளி.

 

பொங்கலை வைத்து சாமி கும்பிட்டதும் சிறு குச்சி கொண்டு ஆண்டாளின் நாமம் போல்சிவப்பு சாந்து போட்டு அங்கிருந்த பெண்மணியால் வைக்கப்பட்டு கொண்டிருந்தது. அதை வரிசையில் நின்று இட்டு கொண்டவர்கள் திரும்ப வரும் போது பெரியவர்கள் பேசியவாறு முன்பே சென்று விட சிறியவர்கள் வரிசையில் வந்து பொங்கல் வைத்த இடம் வந்தனர். மலையின் ஒரு ஓரத்தில் அலமேலுவின் சிறு சன்னிதி. பொங்கல் வைக்கும் இடம் வெட்டவெளி. மலைக் காற்று வேகமாக அடித்தத்தில் பொங்கல் அடுப்புகளில் இருந்து கரித்தூசி, அங்கிருந்த மரங்களின் காய்ந்த இலைச்சருகுகள் பறக்க ஆரம்பிக்க அனைவரும் கண்களை மூடிக்கொண்டு தற்காத்து கொள்ளவும், பறக்க தொடங்கிய ஆடைகளை பற்றி கொள்ளவும் செய்தனர்.

 

காற்றாடித்ததும் கிளம்பிய தூசிகண்டு,”அம்மா!” என்று மெலிதாய் அலறிய

செல்லக்கிளி கண்களை இரு கைகள் கொண்டு மூடியவாறு அப்படியே நின்று விட்டாள்.

 

அவள் நிற்பாள் என்று எதிர் பாராமல் அரைக் கண்ணை மூடியவாறு வந்து கொண்டிருந்த வனராஜன் சுதாரித்தும் முடியாமல் அவள் மேல் மோதி நின்றான்.

 

அவன் மோதியதில் தடுமாறியவள் முன்னும் பின்னும் அசைந்தாடி சமாளிக்க முயல, காற்றில் ஆடும் கொடியாய் தடுமாறியவள், பின்புறம் சாய்ந்து அவனின் மார்பில் அடைக்கலமாகி நின்றாள்.

தூசி விழுந்து இருந்த கண்ணை வலது கை கசக்க.. இடது கையால் பற்றுதலுக்காக துழாவியவளின் கையில் பிடி பட்டது வனராஜனின் சட்டை.

 

அதிர்ந்தவளாய் அண்ணாந்து பின்புறமாய் பார்த்தவளின் பார்வையில் பட்டது தன் மேல் விழுந்த மலர்கொடியை தாங்கி நின்று மலரணைய முகத்தை பார்த்து கொண்டிருந்த தன் அத்தானின் முகம்.

 

பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க மலைத்து நின்றவளை, மெதுவாக தோள் தொட்டு திருப்பியவனின் வலது கரம் உயர்ந்து அவளின் வலது கையை விலக்கி கயல்விழியாளின் மீனனைய விழிகள் நீரில் துடித்துக் கொண்டிருப்பதை கண்டு, உதடு குவித்து ஊதினான் .

 

ஆண்மகனின் நெருக்கத்தில் மிரண்டவள், இந்த மூச்சுக் காற்றுத் தாக்குதலில் உறைந்தே போனாள்.

 

அவன் விட்ட மூச்சை தன் சுவாசமாய் உள்ளிழுத்தவள், அதில் மூச்சடைக்க… திணறி… மிரண்டு விழித்தாள்.

 

“ இப்போ தூசி போய்டுச்சா, இல்லாட்டி அங்கே குழாய் இருக்கு வா ..தண்ணி ஊத்தி கழுவிப் பார்க்கலாம்” என்றான் மென்மையான குரலில்.

 

சுழன்றடித்த காற்று சற்றே தன் வேகத்தைக் குறைத்ததும் அங்கிருந்த அனைவரும் சிரித்தவாறே ஆடைகளை சரி செய்து..கன்னாபின்னாவென்று கலைந்து கிடந்த தலைமுடி சரி செய்து நிதானித்தனர்.

 

‘ம்ம்ம் இல்லை’ என்பது போல் குழப்பமாகத் தலை அசைத்தவள் தன் தந்தை இருக்கும் இடத்தை கண்டு அவன் பிடியில் இருந்து தன்னை விலக்கி கொண்டு வேகமாக ஓடினாள்.

 

“பார்த்து பார்த்து” என்றவாறு அவள் பின் வந்த அவனைக் குரோதத்துடன் முறைத்தன இருவிழிகள்..

 

******************

 

குழந்தையாய் நின்ற மகள்

குமரியாய் மலரும் நேரம்…

மனமொரு கோவில் என்றவள்..

தன் மனம் தட்டும் மன்னவனை,

தள்ளிவிட்டு ..சொல்லிவிட்டு

மனக்கதவை அடைப்பாளா…

 

பிள்ளைக்கனவுகள் கண்ணுக்குள் துடிக்க..

பருவ ஆசைகள் பின்னுக்கு துரத்த..

தானும் காயப்பட்டு

தலைவனையும் காயப்படுத்தி..

கிள்ளை மொழியால்

உள்ளம் கொள்வாளா!!! கொல்வாளா!!!

*********************

 

கிளி பேசும்!!!!!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

What’s your Reaction?
+1
2
+1
3
+1
2
+1
0
+1
0
+1
0

Related Post

error: Content is protected !!