சேதி 8
‘என்ன சிடுமூஞ்சி சிரிக்குது’ என்று அதிசயித்தவளாய் தன் தோழியை எட்டி பிடித்த ஈஸ்வரி,
“என்ன காரணம்னு சொல்லு பிள்ள நானும் தெரிஞ்சுக்குறேன்.” என்றாள்.
புன்னகையை மறைத்தவளாய்,
“ம்ம்.. கதை கேட்டுட்டு பள்ளிக்கூடத்துக்கு லேட்டா போய் ஹெச்சம் ரூம் வாசலை காவல் காக்கப் போறியா? செய் செய்… நா வரல அந்த வேலைக்கு…” என்றவள் வேகமாய் நடந்தாள்.
“உன்னோட நெருங்கின தோழின்னு பேரு தான் இருக்கு எனக்கு… நீ என்ன நினைக்க, என்ன செய்யறேன்னு புரியாம கிடக்கிறேன். இதா நல்ல நட்புக்கு இலக்கோணம்…!” எனப் போலியாய் மூக்கு சிந்தியவளைக் கண்டு,
“சொல்லாமலே தெரிஞ்சுக்கணும் என் மனசுல ஓடுறத… அது தா நல்ல நட்புக்கு இலக்கோணம்” என்று பதிலுக்கு பதில் வாயாடும் செல்லக்கிளி, ஈஸ்வரியின் கண்களுக்குப் புதிதாய் தெரிந்தாள்.
தன்னைத் தாங்க, தன் கனவை கேட்க, ஒரு நட்பு இதயம் இருப்பதை கொண்டாடும் பிள்ளை மனதின் குதூகலம் இப்படி அவளை புதிதாய் மாற்றிய சேதி… அவளின் தோழி அறியாதது தானே…!
******************
அன்று சுதந்திர தினம். பள்ளியில் அணிவகுப்பிற்காக வெள்ளை சீருடையில், தரை இறங்கிய மின்னல் கீற்றுக்களாய், சிறகு விரிந்த அன்னங்களாய் நடை பயின்று வந்தனர் செல்லக்கிளியும் ஈஸ்வரியும்… பள்ளிப் பைகளின் சுமையில்லாத காரணத்தால் நடையில் துள்ளல் மிகுந்து இருந்தது.
வழக்கம் போல் வனராஜனின் கோவில் பக்கமாய் திரும்பியவளை கைப்பற்றிய ஈஸ்வரி,
“அம்மா தாயே! இன்னிக்கு சீக்கிரம் போகலைன்னா அந்த பீட்டி மிஸ்ஸு பிரம்பாலையே ரெண்டு போடும்…, வா போகலாம்!” என்றாள் ஈஸ்வரி.
“ஒரு நிமிசத்தில என்ன ஆகிடும், வா பிள்ள” என்றவாறு வாசல் மணியை ஒலிக்க செய்து உள்ளே நடந்தவள் தனக்கு முன்பே அங்கு இருந்தவனை எதிர் பார்க்கவில்லை.
சாமி வனராஜனின் கூரையாக நின்ற மரத்தில் மார்பின் குறுக்கே இரு கைகளை கட்டியவனாய் சாய்ந்தவாறு நின்று கொண்டிருந்தான் சுந்தரனாய் வனராஜன். ஆகாய நீல நிற லேவி ஜீன்ஸும் ஆகாயத்தில் நீந்தும் தூய புதிய மேகத்தினை ஒத்த வெள்ளை நிற முழுக்கை சட்டை அணிந்து அதை முழங்கைக்கு சற்று கீழ் வரை மடித்து விட்டு இருந்தான். சட்டையின் மேல் பட்டன் பூட்ட படாமல் இருந்ததால் வி. ஆர். என்ற எழுத்துக்கள் இணைத்த பொன் சங்கிலி, காலை ஒளியில் கழுத்தடியில் மின்னி விளக்கு போல் ஒளிர்ந்து, முகத்தை பொன்னிறமாகக் காட்டியது.
அந்த நேரத்தில் அவனை அங்கு கண்டு திடுக்கிட்ட ஈஸ்வரி இருவரையும் மாறி மாறி சந்தேகத்துடன் பார்த்தாள்.
சாமி கும்பிடப் போகவா…, சத்தமில்லாமல் ஓடி விடலாமா என்ற குழப்பத்தில் நின்ற செல்லகிளியை, அவளின் முகத்தை விட்டு அசையாத வனராஜனின் பார்வை மிரட்ட, கைகளை இணைத்து விரல்களைப் பிணைத்து, பதட்டத்தை சற்று தணித்துக் கொண்டவள் அன்னமென தலை குனிந்து தரையில் பார்வையை பதித்தவாறே சன்னதியை நெருங்கினாள்.
நந்தவனத்தின் பச்சை நிற செடிகளின் பின்னணியில் கால் முளைத்த வெள்ளை ரோஜாவாய் நடந்து வந்தவளை பார்வையால் தொடர்ந்தவன் அருகில் வந்ததும் சுய உணர்வு பெற்றவனாய்,
“ போன்ல கூப்பிட்டா பேச மாட்டியோ…?” எனறான் அதிரடியாய்…,
அமைதியான இடத்தில் திடுமென ஒலித்த அவனின் குரலில் மிரண்டவள், மேலுதட்டிலும் நெற்றியிலும், வியர்வை முத்துக்கள் பூக்க, மலர்ந்த கண்களால் அவனை நோக்கி, பின் தன் தோழியை ஒரு முறை பார்த்து கொண்டு,
“ம்ம் அது அது… அய்யா வந்ததும் நம்பர் கேட்டு பேச நினைச்சேன். வேலைல மறந்துருச்சு…” என்றாள்.
“ஓ அப்படி என்னமா வெட்டி முறிக்குற வேலை பாக்குற …! சரி தான்… நான் ஆர்டர் பண்ணி அனுப்பிச்சு வச்ச புக்ஸ் ஏன் திருப்பி அனுப்பிச்சுட்ட? அதுக்கும் ஒரு கதை சொல்லு கேக்குறேன்…!” என்றான் எகத்தாளம் தெறிக்கும் குரலில்…
“அது வந்து…. அது… இப்போ தேவை இல்லைனு தோணுச்சு…”
“ ஓ… ஹோ…! எப்போ தேவையாகுமாம்…?”
“மம்… பன்னெண்டாவது போனதும் தான் தேவைபடுமினு நினைக்குறேன். இப்போ வெறும் புக்கை வச்சு என்ன செய்ய? பாடம் இன்னும் முடிக்கலையே…? அதுவரை அந்த புக்குல உள்ளது படிச்சாலும் புரியாது அதான்…”
“ஓ… இதெல்லாம் தெரியாமத் தான் நா உனக்கு புக் ஆர்டர் பண்ணேன்னு நினைக்குறியா…?”
“… … … . “
“கேக்குறேன்ல… சொல்லு…!” என்று அதட்டியதும்,
சினம் வரப் பெற்றவளாய்…
“ இதுல சொல்ல என்ன இருக்கு… படிக்க நினைக்குற எனக்குத் தானே தெரியும் என்ன புக்கு எப்போ வாங்கணும்… படிக்கணும்னு… அதுமில்லாம… நீங்க ஏன் உங்க … காசு கொடுத்து வாங்கி அனுப்பனும்… அய்யாகிட்ட சொன்னா வாங்கித் தருவாங்க.”
“ஆங் அப்படிச் சொல்லு…! ஏன்? நான் காசு போட்டு வாங்கிக் கொடுத்தா ஆகாதாமா…? என் மாமன் மகளுக்கு அவ ஆசைப்பட்ட படிப்புக்கு அடித்தளமான புத்தகத்த…, நான் என் உழைப்புல சம்பாதிச்ச காசு போட்டு வாங்கி கொடுத்தேன். அதை நீ கையால கூட தொட மாட்டியாக்கும். இங்க பாரு செல்லம்…, பெரியவுங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும் அதுக்காக நான் உன் அத்தாங்குறது மாறாது! என் அம்மா உன் அத்தங்குறதும் மாறாது! நீ பாட்டுக்கு ஏதாவது எடக்கு மடக்கா யோசிச்சு ஏதாவது பண்ணி என் கோபத்தை கிளப்பாதே…!” என்றவன் குரலில் ஏறிய சூடை உணர்ந்த செல்லக்கிளி…
‘என்ன மிரட்டுறியா…?’ என்பது போல் லேசாக புருவம் சுழித்து, உதடுகள் சுழித்து கூம்பிக் கொள்ள சற்றே கோப பார்வை பார்த்ததும்,
“செல்லம்… ” என்று ஏதோ சொல்ல வந்தவன்,
“ ஸ்கூலுக்கு நேரமாச்சுது” என்ற ஈஸ்வரியின் குரலில் திரும்பி, அவளை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தவன், செல்லகிளியிடம் மீண்டும் திரும்பி தணிவான குரலில்…
“போற வழில வீட்ல புக்ஸ் கொடுத்துட்டு போறேன். இப்போதிருந்தே எப்படி தயார் பண்ணனும்னு தனியா ஒரு பாகம் இருக்கு. கொஞ்சம் பிரிச்சு படிச்சு பாரு அப்போ தான் எதுக்கு அனுப்பினேன்னு தெரியும்.”
“இல்ல… அப்பாட்ட சொன்னா வாங்கித் தருவாங்க…” என்றாள் சின்னதாகி போனாலும் உறுதியான குரலில்,
“ அப்போ… நான் கொடுத்தா வாங்க மாட்ட…?”
“வேணாம்…”
“என்ன வேணாம்…?”
“உங்க அப்பாக்கு தெரிஞ்சா திட்டப் போறாக…”என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு
“என் அப்பா …” என்றவன்,புரிந்து கொண்டவனாய்,
“அப்படியே திட்டினாலும் அது என் பிரச்சனை நீ ஏன் கவலை படுற?”
“எங்க அப்பாவை பிடிக்காத வீட்டிலிருந்து எதுவும் எனக்கு வேணாம்…” என்றதும் திகைத்தாலும், அடுத்த நொடி உறுதி ஏற்றிய குரலில்,
“அது வேற இது வேற. நான் கொடுத்தா வாங்கிக்கணும் நீ…! ஏன்னா…, நான் உனக்கு சொந்தக்காரன். நீ… எனக்குச் சொந்தம். வர்றியா மாமாட்ட…, உங்க அப்பாட்டையே கேட்ருவோம் நான் உனக்கு வாங்கிக் கொடுக்கலாமா கூடாதான்னு…?” என்றவன் அவளின் கைப்பற்ற விழைய, அவனின் அடாவடியில் அதிர்ந்தவளாய்,
“அய்யோ எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு…” என்றவாறே கைகளை பின்னுக்கு வைத்து கொண்டு நகர்ந்தாள்.
“ம்ம் அது… அப்படி ஸ்கூல் பாடம் படிப்புன்னு இரு…! அநாவசியமா குடும்ப பிரச்சனை எல்லாம் இந்த சின்ன மண்டைக்குள்ள போட்டு குழப்பிக்காதே…!” என்றவாறு தலையை தொட வந்தவனை கண்டு அனிச்சையாக பின்னடந்தாள் செல்லக்கிளி.
அவளின் விலகலைக் கண்டு கொள்ளதாவனாய் இடது கையை இடுப்பில் வைத்து கொண்டு வலது கையை போ என்பது போல் அசைத்து…
“சரி சரி சாமியை கும்பிட்டுட்டு போ…! வேல்ராஜன், சௌந்தரராஜன் ஏன் கோவிந்தராஜனையும்…” வலது கையின் நான்கு விரல்களால் தன்னை சுட்டியவன்…
“இந்த வன ராஜன் பார்த்துக்குவான்” என்றான் சிரித்தபடி.
அடர் மீசையின் கீழ் முத்துப்பற்கள் மின்ன… கண்ணில் மின்னல் வெட்ட ஒளிர்ந்த அவனின் சிரிப்பைக் கண்டவள், சட்டென்று குனிந்து கொண்டு அவசரமாய்… வனராஜனை வலம் வந்து… ஓட்டமும் நடையுமாக அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
‘என்னடா நடக்குதிங்கே…?’ என்று திரு திருத்தவாறே அவளைப் பின் தொடர்ந்தாள் ஈஸ்வரி.
இப்போ கேட்டால் பதில் வராது என்று யூகித்தவள்…, சரியாய் பள்ளி விட்டு வரும் போது தான் விசாரணையை ஆரம்பித்தாள்.
“வித்தாரக் கள்ளி விறகு வெட்ட போனாலாம் கத்தாழ முள்ளு கொத்தோட பத்திக்குச்சாம் மாதிரி…, என்னடி நடக்குது? அந்த அண்ணே உன்கிட்ட எம்பூட்டு உரிமையா பேசுராக! என்ன புக்கு? என்ன வேணாம்? என்ன குடும்ப சண்டை? ஒன்னும் புரியலை போ…!”
“ஸ்ஸ்… ஒன் கற்பனை குதிரையை… அங்கன இருக்குற மரத்துல கட்டிப் போடு. நான் நீட்டுக்கு தயார் பண்ணனும்னு, டாக்டர் ஆக ஆசை படுறேன்னு கேள்வி பட்டு புக்கு அனுப்பினாக… அதை வாங்கலனு கோவிக்குறாக அவ்ளோ தா…”
“ ம்ம் எனக்கென்னமோ சரியா படலை… அந்த அண்ணே பார்வை என்ன? பேச்சு என்ன? பொசுக்குன்னு நீ என் சொந்தமின்னிட்டாகளே…?” என்றாள் விழிகளை விரித்தவளாய்…
அவளை வினோதமாக நோக்கியவாறே,
“ம்ம் மாமன் மகன்னா சொந்தமில்லாம என்னவாம். வர வர நீ ரொம்ப யோசிக்குற. மூளை தேஞ்சுர போது கம்மி யா யோசி…!” என
சிரிப்பு வந்தாலும் அழுத்தமான குரலில்,
“வர வர நீ ரொம்ப பேசுரடியம்மா… பல்லு தேஞ்சுர போது பார்த்து பேசு… ” என்று பதிலுக்கு நக்கல் அடித்தாள் ஈஸ்வரி.
“ஹும்” என்றவாறு கழுத்தை வெட்டி திரும்பிய செல்லக்கிளி அமைதி ஆகி வீடு நோக்கி வேகமாக நடக்க,
‘ம்ம்… ஒரு சின்ன விசயத்துக்கே, அந்த அண்ணே இப்படி வனராஜனுக்கு போட்டியா வாளெடுக்காத குறையா நேர்ல வந்து நிக்காக… என் லூசு அண்ணன் ஏதோ நினைப்பை வச்சுக்கிட்டு திரியுதான். இது எங்கன போய் முடியப் போகுதோ…?’ என்று மனதிற்குள் புலம்பியவளாய் இணைந்து நடந்தாள் ஈஸ்வரி.
****************
தன் வீட்டிற்குள் நுழைந்த வனராஜனை எதிர் கொண்டார் வேதநாயகி,
“என்ன ராசு! காலைல எங்க போய்ட்டு வார? ஊர்ல இருந்து வந்தவன் அய்யாம்மாட்ட பேசுவோம்னு நினைப்பில்லையே…?” என்றார் அங்கலாய்ப்பாய்…
புன்முறுவலுடன்…
“க்ராண்ட்மா…! பேச தானே வந்திருக்கேன். வாங்க பேசலாம்.” என்று அவரின் தோளைப் பற்றி சோஃபாவில் அமர்த்தினான்.
“சொல்லச் சொல்ல கேக்காம போய் எவன்கிட்டயோ கை கட்டி வேலை பாக்குறியே. ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்குற பரம்பரைல வந்தவன் இப்படிப் பன்றியேனு எவ்ளோ விசனமா இருக்கு தெரியுமா?”
“ஹா ஹா மன்னர் பரம்பரை ஜமீன் பரம்பரை இப்போ இருக்குற இடம் தெரியலையாம்…, இதுல வேலை கொடுத்த பரம்பரையா…!” என்று நகைத்தவனை போலி கோபத்தோடு வேதநாயகி தோளில் தட்ட…
“ஆமா ராசு இந்த ராசனுக்கேத்த ராணி தேடி வரது இந்த பரம்பரை பெருமைக்குத்தானே…! வேம்பகோட்டை வேதநாயகி பேரனை கைபுடிக்க மருதக்கோட்டைல இருந்து சம்பந்தம் தேடியில்ல வந்துருக்கு. நல்ல இடம்…, நம்ம அளவு வசதி விலாசமுள்ள ஆளுக பொண்ணு பேரு மந்திரா தேவி!” என்றார் பெருமையில் முகம் மின்ன,
“மந்திரா தேவியா… மந்திரம் போடத் தெரிஞ்ச பொண்ணா? பேரக் கேட்டாலே சும்மா அதிருது” என்று நகைத்தான் வனராஜன்.
“ச்சு என்ன ராசு என்ன சொன்னாலும் நையாண்டி பண்ணுற! அவுக அப்பா மருதைல(மதுரை) பெரிய ஆளு. அந்த பொண்ணும் நல்ல அழகு. இப்போ தான் காலேசு முடிச்சுருக்கா! நம்மை பத்தி…, உன்னை பத்தி கேள்விப் பட்டு சம்பந்தம் பண்ண ஆசை படுறாக”
“க்ராண்ட்மா இப்போ ஏன் அவசரமா கல்யாணம் பண்ண நினைக்குறீங்க, எனக்கென்ன அப்படி வயசாகிடுச்சு…?” என்றான் நம்பாத குரலில் சற்றே நகைத்தவாறே,
“என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலியே…!” என்றான்
“நம்ம பக்கம் சீக்கிரமா கல்யாணம் பண்றதுதா வழக்கம். இது மாதிரி நல்ல இடம் நம்மத் தேடி வரும் போது எடுத்துக்குடுறது தான் புத்திசாலித் தனம்” என அவர் அழுத்தி சொன்னதும்…
சிரிப்பை விட்டவனாய் சற்று புன்னகை சிந்தியவாறு,
“ நா இப்போ தான் என் கால்ல நிக்குறே… தொழில் கத்துகிட்டு இருக்கேன். அதுக்குள்ள கால்ல விலங்கு போட பாக்குறீங்களே க்ராண்ட்மா…? என் மேல என்ன கோவம் உங்களுக்கு…? இந்த கலியானப் பேச்சை இதோட விடுங்க…! நானே எனக்கு கல்யாணம் பண்ணனுங்குற போது வந்து கேக்குறேன் அப்போ பண்ணி வைங்க!” என்றவன் எழுந்தவாறே,
” டாட் எங்கே…?” என,
ஏமாற்றத்தில் முகம் தொங்க அமர்ந்திருந்தவர்,
“ பயர்வொர்க்ஸுக்கு கிளம்பிட்டு இருந்தான்”,என்றார்
“இன்னிக்கு சுதந்திர தினம், கவனர்மெண்ட் ஹாலிடே. இன்னிக்குமா வேலை நடக்குது!” என்றான்.
“சுதந்திர தினம்னா வேலைக்கார பயலுவளுக்கு என்ன வந்தது…! கொடியேத்தி முட்டாய் சாப்பிட போராணுங்களா என்ன? வழக்கம் போல வேலை வச்சுருவோம் ராசா “ என்றார் வேதநாயகி பெருமையாய்,
யோசனையாக அவரைப் பார்த்தவனின் இதழோரம் இடக்காய் வளைந்தது…
பெரிய ஹாலின் வாசலை ஒட்டி இருந்த தந்தையின் அலுவலக அறையில் அவரின் நடமாட்டம் கண்டு அங்கு சென்றான்.
“இன்னிக்கு பேக்டரி, பிரஸ் ரன் ஆகுமாப்பா?”
“என்ன புதுசா கேக்குற? அங்கே தான் கிளம்பிட்டு இருக்குறேன்.” என்றவாறு கோப்புகளை பெட்டியில் வைத்து மூடினார்.
“இன்னிக்கு அரசு விடுமுறை ஆச்சே…! வேலை வச்சா ஒர்கேர்ஸ்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டித்திருக்குமே…?” என்றவனை நிதானமாக ஏறிட்டு பார்த்தன தங்க ப்ரேமிட்ட கண்ணாடிக்குள் சிறைப்பட்ட சௌந்தர்ராஜனின் விழிகள். மிடுக்காய் தலை உயர்த்தி மெலிதாய் சிரித்து விட்டு,
“இதெல்லாம யார் சொல்லிக் கொடுத்த பாடம்? நம்ம தொழிலுக்கு உபயோகமான படிப்பு படிக்க அனுப்பினா வேண்டாத விஷயமெல்லாம் படிச்சுட்டு வந்துருகிறியே…? இப்படித் தான் இந்த ஊர்ல ஒரு புதுப் பணக்காரன் பேசிட்டு திரியுறான். தொழிலாளர்கள் உடல் நலன்… பாதுகாப்பு… சுற்று சூழல் மாசுக் கட்டுப்பாடு… அப்படி இப்படின்னு…. அந்த காத்து உனக்கும் அடிச்சிருச்சு போலவே…!”
பெட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு மெதுவாய் நடந்து வந்தவர் இடது கையை வனராஜனின் தோளில் வைத்து,
” நாமெல்லாம் ஆளப்பிறந்தவுங்க ராஜன்…, அடிமைகளுக்கு அளவுக்கு அதிகமா சலுகை கொடுத்தா அப்புறம் அவனுங்க நம்மை ஆள ஆரம்பிச்சுடுவாங்க…! படிப்பு இருக்கட்டும் ஒரு பக்கம்… தொழிலை பற்றி படிக்கணும்…, எப்பவும் ஜெயிக்கணும்னா என் கூட வா…, நான் உன்னை ஜெயிக்க வைக்குறேன்…!” என்றார் கர்வமாய்.
“அப்போ என்ன, இப்போவே வரேன் உங்க கூட…! நம்ம பிரஸ் ஆரம்பிச்ச போது அங்கே வந்தது. அதுக்கப்புறம் அங்கே போகவே இல்லை. நம்ம பேக்டரி பார்த்தும் பல வருஷமான பீல்… நானும் வரேன் உங்க கூட”
என்றவனை அர்த்தம் பொதிந்த ஒரு பார்வை பார்த்தவர்,
” வா…! நான் உனக்காக உருவாக்கி வைத்திருக்கும் சாம்ராஜ்யத்தை பார்க்க வா…!” என்றார் பெருமை வழியும் குரலில்…
சொந்தத்தை விட்டு தராதவன்…
சொன்ன சொல் மாறாதவன்…
பணம் பவிசு என்று பேசும் வீட்டில்
பந்தமென பாசமென மாறுபட்டு நிற்பவன்…!
ஆண்டான் அடிமை என அலட்டும் ஆதிக்கத்தை
அஸ்தமிக்க செய்வானோ…?
சாதனையாய் காட்ட
சோதனைகளே சங்கமித்தால் …
சாம்ராஜயம் ஆளவந்த இளவல்…
வாளெடுப்பானா…, வாளாவிருப்பனா…?
°°°°°°°°°°°
தன்னையே உணராத பிள்ளையவள்…
தனக்கென்று ஒரு பாதை வகுத்தவள்…
பருவத்தின் ஆசைகள் நெருங்காதவள்…
பாசம் வந்து தாக்கும் போது என் செய்வாளோ…?
**************
கிளி பேசும்…!