சேதி 7
மாலை மயங்கி வானை சிவக்க வைக்க, பலவேறு வர்ண ஜாலங்கள் காட்டும் சந்தியாகாலம். நட்புடன் கரம் நீட்டிய நிலவு மகளை பார்த்தபடி எதிர் திசையில் கதிரவன் மறையத் தொடங்கினான்.
செல்லகிளியுடன் பேசிக்கொண்டிருந்த வனராஜனின் அலைபேசி அதிர்வுடன் ஒளிர்ந்தது… அழைப்பை ஏற்றவன்,
“ டாட்…. !” என,
அழுத்தமாய் ஒலித்தது அவன் தந்தையான சௌந்தர ராஜனின் குரல்,
” ராஜன்! எங்கப்பா இருக்க?”
“குற்றாலம் பா. ப்ரன்ட்ஸ் கூட வந்துருக்கேன்னு சொன்னேனே. இங்க ஐந்தருவி பக்கத்துல காட்டேஜ் எடுத்து தங்கி இருக்கோம்”
“ம்ம்… ட்ரக்கிங் போனீங்களா?”
“ஆமாப்பா… நேத்து. ”
“… … … அங்க தான் வேல்ராஜன் பேமிலி இருக்காங்க போல….?”
“ ம்ம்… ஆமா பா… ஆச்சி, தாத்தா எல்லோரும் இருக்காங்க. போனேனே பார்க்க…” என்றான் வனராஜன்
சற்றுநேரம் மௌனம்…, பின்
“ என்கிட்ட அனுமதி கேக்கணும்னு உனக்கு தோணலை இல்ல?”
செல்லக்கிளியை மெதுவாக திரும்பிப் பார்த்தவன் அவள் தன் மாமன் மகளைத் தூக்கி கொஞ்சிக் கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு, மெதுவாக எழுந்து எதிர் திசையில் நடந்து கொண்டே
“அனுமதியா…! எதுக்கு பா? ஆச்சி, தாத்தா பார்க்க எதுக்கு அனுமதி கேக்கணும்!” என்றான் அடக்கிய குரலில்
“ஓ… பெரிய ஆள் ஆகிட்டேன்னு சொல்ல வர்ற!”
சுற்றுமுற்றும் பார்த்தவன்,
“இல்லை பா… எனக்கு சொந்தங்கள் வேணும்னு சொல்ல வரேன்”
“ என்னை எல்லா இடத்திலயும் எதிர்த்து நிக்கிற அவனை நான் என் சொந்தமா மதிக்கணும்… ம்ம்!”
“டாட்! தொழில்ல ஆயிரம் இருக்கும்…, அதை வீட்டுக்குள்ள கொண்டு வரனுமா? அதும் …” என்றவனை இடையிட்டவராய்,
“ தொழில்ல மட்டுமா? ஆரம்பத்திலிருந்தே அவன் எனக்கு எதிரா தான் இருந்தான், இப்போ தொழில்லயும், என்னை மச்சினர்னு மதிக்காம எவ்வளவோ இடைஞ்சல் பண்றான்… தெரியுமா!”
“ டாட்… நம்ம வீட்டு விவகாரத்தை இப்படி போன்ல தான் பேசனுமா! நான் நாளைக்கு இரவு வீட்டுக்கு வந்துருவேன் பேசிக்கலாமா?”
“ ராஜன்! இதுல பேச எதுவும் இல்லை, எனக்கு எதிரினா உனக்கும் எதிரி தான்”
“ மாமா எப்பவும் உங்கள எதிரியா நினைக்கலை. பார்க்கவும் இல்லைனு தோணுது டாட்”
“என்னை எதிரியா நினைக்கக் கூட ஒரு தகுதி வேணும்”
என்று ஆணவம் தெறிக்கும் குரலில் பேசியதைகேட்டு, ஆயாசம் அடைந்த வனராஜன் மௌனமாக… ,தொடர்ந்தார் சௌந்தரராஜன்,
“நீ அவுங்களோட பேசுறது,பழகுறது எதையும் நான் விரும்ப மாட்டேன், திரும்ப இதை சொல்ற நிலை வைக்க மாட்டேன்னு நினைக்குறேன்…” என்று கர்ஜித்தவர் அழைப்பை துண்டித்தார்.
முதல்முறையாக தன் தந்தையின் கோபத்தையும், புதிய முகத்தையும் சந்தித்த வனராஜன் யோசனையோடு திரும்ப அங்கே உணர்ச்சி துடைத்த முகத்துடன் நின்ற செல்லக்கிளியைக் கண்டு சன்னமாய் அதிர்ந்தான்.
“ஐயாம்மா உங்களை சாப்பிட கூப்பிட்டாங்க” என்றாள். சற்று நேரம் முன்பு இருந்த சொந்தம் இழையோடிய குரலை தொலைத்தவளாய்…
‘வேண்டாம்’ என்பது போல் மறுப்பாய் தலை அசைத்தவனை வெறித்து நோக்கியவள், பின் சட்டென்று திரும்பி,
“அதை நீங்களே போய் சொல்லிடுங்க” என்றவள் தன் மாமன் மக்கள் விளையாடிய இடம் நோக்கி சென்றாள்.
ஒற்றையாய் பின்னப்பட்டு தொங்கிய சடை அசைய, மெல்லிய இடை அசைய சென்றவளை பார்த்தவனின் நெஞ்சில் லேசாய் ஏதோ அசைந்து நகர்ந்தது…
*****************************
வீடு திரும்பிய வனராஜன் நேராக தாயிடம் சென்று நின்றான்.
“என்னம்மா நடக்குது இங்க? க்ராண்ட்மா தான் பணம், தகுதினு பேசுவாங்க… டாட் எப்போ அப்படி மாறினாங்க?”
மகனை அமைதியாக ஏறிட்டார் சொர்ணக்கிளி, “ …”
“சொல்லுங்க மாம். மாமாக்கும் அப்பாக்கும் என்ன பிரச்சனை?” எனக் கேட்க, திகைத்து,
“என்ன ஆச்சு பா?” என் வினவினார்,
“சின்ன வயசுல இருந்து படிப்பு படிப்புன்னு என்னை இங்க இருந்து பிரிச்சே வச்சுட்டாங்க. நான் லீவுக்கு வரும் போதெல்லாம் பெரிசா தெரியலை. ஆனா இப்போ ஏதோ வித்தியாசமா தெரியுது. என்ன ப்ரச்சனை ?”
பெருமூச்சு விட்டவர்…,
“என்ன இந்த வீட்டுக்கு மருமகளாக்க ஆசைப்பட்டது உன் ஐயாம்மா தா, ஒரு கல்யாண வீட்டுல பார்த்து பிடிச்சு என்னை பொண்ணு கேட்டாக”, சற்றே தயங்கியவராய்,
“பணக்கார வீட்டு சம்பந்தம் சரி வராதுன்னு உன் மாமா வேணாம்னு சொல்லிட்டான். அது தெரிஞ்ச உன் அப்பாக்கு தன்னை ஒருத்தன் மறுப்பதான்னு கோபம் வந்துருச்சு போல. அப்புறம் சொந்தக்காரவுக எல்லாம் நல்ல சம்பந்தம் பெரிய இடம் அப்படி இப்படினு பேசி ஒத்துக்க வச்சுட்டாங்க. ஆனாலும் உன் அப்பாக்கு மனசுல ஆத்திரம் இருந்துருக்கு. அப்புறம் நீ பிறந்த பின் ஒரு பிரச்சனை…, அதுல உன் மாமா மேல அப்பாக்கு ரொம்ப கோபம். அதுக்கப்புறம் என்னை அம்மா வீட்டுக்கு போக அனுமதிக்கவே இல்ல. இப்போ ரெண்டு வருஷமா ஊர்ல எல்லோரும் என்ன விஷயமினாலும் உங்க மாமன தேடுறது, அவன் அவரை விட பெரியளாகுறது பிடிக்காம இன்னும் வெறுப்பு வளர்த்துக்குறாங்க. என் தம்பி எல்லாத்தையும் பொறுத்து தான் போறான். தணிஞ்சு தான் போறான். இதுக்கு மேல அவனும் தா என்ன செய்வான்.” என்றார் சொர்ணக்கிளி.
“எனக்கு பெங்களூருல வேலை கிடைச்சிருக்கு மா, போலாமா வேணாமன்னு யோசிச்சுட்டு இருந்தேன். இப்போ…. போலாம்னு தோணுது. நான் அப்படியே எம்பிஏ வும் பண்ணலாம்னு இருக்கேன் “
“இங்கன தொழில்ல அப்பாக்கு உதவியா இருக்கலாம்ல கண்ணா… அதுக்காகத் தானே ஆசையா அந்த படிப்பு சேர்ந்த நீ…!”
“இல்லை மா கொஞ்ச நாள் வெளிய வேலை பார்த்தா தான் நல்லதுன்னு எனக்கு தோணுது. அனுபவமும் கிடைக்கும். சொந்த காலில் நிக்கிற மாதிரி இருக்கும்.”
கண்களில் நீர் திரையிட,
“இவ்ளோ நாளா படிப்புன்னு பிரிஞ்சுருந்த… இனியாவது என்கூட இருப்பேன்னு நினச்சேன் கண்ணா”, தாயின் கைகளை பற்றி அழுத்தியவனாய் வனராஜன்,
“இல்ல மாம் கொஞ்ச காலம் ஆகட்டும். முதலாளியா இருக்கணும்னா தொழிலாளியா வேலை செய்யவும் தெரிஞ்சுக்கணும். அதுக்காகத் தான்…, சீக்கிரம் வந்துருறேன்.”
“ இப்போ தானே வந்தே எங்க கிளம்புறே” என்றவாறு வந்தார் சௌந்தரராஜன்.
தந்தையை நோக்கி திரும்பியவன்,
“இவ்ளோ நாள் ராஜா வீட்டு கன்னுக்குட்டியா இருந்துட்டேன். அதான் கொஞ்ச நாள் வேலை செய்றது எப்படின்னு கத்துக்கலாம்னு பெங்களூரு போறேன் டாட். எனக்கு கேம்பஸ் இன்டெர்வியூல வேலை கிடைச்சது. அங்கேயே நல்ல காலேஜ்ல எம்பிஏ வும் பண்ணலாம்னு இருக்கேன்” என்றவனை யோசனையுடன் பார்த்தவர்,
“ அதெல்லாம் சரிதான். நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு…, காப்பாத்துவனு நம்புறேன். நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சுக்கோ…!” என்று விட்டு நகர்ந்தார்.
ஏதோதோ புலம்பி தடுக்க நினைத்த வேதநாயகியையும் பேசி சமாளித்தவன்… கிளம்பிவிட்டான்.
****************
வேல்ராஜனின் வீட்டு வாசல் கற்பகம் குழப்பத்துடன் எதிரில் சீருடையுடன் நின்ற ஆளை பார்த்துக் கேட்டார்,
“செல்லம் பேருக்கா! இது என்ன பார்சல்ல வந்துருக்கு?” என
“அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்கில் செல்லகிளிங்குற பேருக்கு நீட் பரீட்சைக்கு தயார் செய்வதற்கான புத்தகங்கள் பதிவு செஞ்சுருக்கீங்க மேடம். ” என்றவர், பார்சலை திருப்பி பார்த்தவர்,
“வனராஜன்ங்குற பேர்ல ஆர்டர் கொடுத்துருக்காங்க”, என்றதும் குழப்பம் அடைந்தவராய் மகளை அழைத்தார்.
விவரம் அறிந்தவளுக்கு துக்கமும் சந்தோஷமும் ஒரே சமயத்தில்.
தன் கனவுகளுக்கு உதவுகின்றானே என்று சந்தோஷம்… அவனிடம் இருந்து எதையும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலை தந்த துக்கம் இரண்டையும் காட்ட இயலாமல் அமைதியாக நின்றவள், தன்மானம் தலை தூக்க,
” இது வேணாம்னு சொல்லி திருப்பி கொடுத்திருங்கம்மா “ என்று விட்டு வீட்டிற்குள் செல்லத் திரும்பினாள்.
அவளையும் புத்தகத்தையும் மாறி மாறி பார்த்த கற்பகம், ஏதோ நினைத்தவராய்,
“இதற்கு எவ்ளோ ரூபா தரனுமய்யா?” என டெலிவரி கொடுக்க வந்தவரிடம் கேட்க,
“ பணம் கட்டியாச்சுங்கம்மா”
“இப்போ திருப்பி கொடுத்திட்டா அவுகளுக்கே பணம் திரும்பப் போயிருமா” எனக் கேட்டுத் தெளிந்தவர்.
“அப்போ, இது தவறா எங்க விலாசத்துக்கு வந்துருச்சுனு சொல்லி திருப்பி அனுப்பிருங்க” என்றுவிட்டு அவர் கையில் கொடுத்தார். அவர் குழப்பத்துடன் வாங்கி கொண்டு முணுமுணுத்தவாறே திரும்பி நடந்தார்.
அடுத்த பத்தாவது நிமிடம் வீட்டின் தொலைபேசி ஒலித்தது. எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்க்க, சரவணன் தொலைபேசியை எடுத்தான்.
மறுமுனையில் வனராஜன்,
“அத்தைட்ட போன கொடு சரவணா” என…
‘யார்?’ என்ற சைகைக் கேள்விக்கு, ஒலி எழுப்பாமல்…
‘அத்தான்’ என்று வாயை அசைத்தான் சரவணன்.
கற்பகம் சற்றே திகைத்தவராய் தொலைபேசி ஒலிவாங்கியை கையில் வாங்கினார்,
“ சொல்லு ராசா… ” என,
“அத்த நான் தான் செல்லத்துக்காக அந்த புத்தகங்கள் அனுப்பினேன் ஏன் திருப்பி அனுப்பிச்சுட்டிங்க அவளுக்கு நீட் பரீச்சைக்கு தயார் செய்ய உபயோகமானதா இருக்கும்” என, தயக்கத்துடன் கற்பகம்…,
“அவதான் புத்தகம் வேண்டாம் னு சொல்லிட்டாய்யா!” எனவும் சற்றே வியப்புற்றவனாய்,
” அவ கிட்ட கொடுங்க” ஒலிவாங்கியை மறைத்து கொண்டு,
“ செல்லம் இங்கன வா அத்தான் பேசச் சொல்லுறாங்க”,
‘மாட்டேன்’ எனபதுபோல் மறுப்பாய் தலை அசைத்தாள் செல்லகிளி… என்ன ஆச்சு இவளுக்கு என்று திகைத்தவர்,
“கொஞ்ச நேரம் கழிச்சு பேச சொல்லுதேன் தம்பி, அவ இங்க இல்லை போல” என்றவர் ஒலிவாங்கியை அதன் இடத்தில் வைத்து அழைப்பை துண்டித்தார்.
“ஏண்டி பிள்ள உனக்கு தேவப்படுமின்னு தானே அனுப்பிருக்கான். என்ன ஏதுன்னு பேசுனா குறைஞ்சுருவயோ?” என சிறிது கோபத்துடன் கேட்டவரை,
“எனக்கு ஏன் அவுக வாங்கி தரணும் எங்க அய்யா இருக்காங்க வாங்கி தர… யாரும் எனக்கு ஏதும் செய்ய வேண்டாம் முக்கியமா இவுங்க வீட்டில இருந்து எதுவும் வேணா” என சிறு குரலென்றாலும் சினத்துடன் மொழிந்தவளை பார்த்து மலைத்த கற்பகம் மகளின் எண்ணப்போக்கு புரியாதவராய் குழப்பத்துடன் அங்கிருந்து நகர்ந்தார்.
அடுத்த ஐந்தாவது நிமிடம் மீண்டும் மணி ஒலிக்க… எடுக்கப்போன சரவணன் கைப்பற்றி தடுத்தவள் தலையும் அசைத்து எடுக்காத என்றாள். முழுதும் ஒலித்து அடங்கும் வரை தம்பியின் கைப்பற்றி இருந்தவள் பிறகே அவனின் கையை விட்டாள்.
மறுமுனையில் அழைத்துவிட்டு க் காத்திருந்த வனராஜன்…, குழப்பமும் யோசனையும் மிக கையிலிருந்த அலைபேசியை சிவப்பு விசையை அழுத்தி இணைப்பைத் தூண்டித்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.
********************
வழக்கம் போல பள்ளிக்கு இணைந்து சென்று கொண்டிருந்தனர் செல்லக்கிளியும் ஈஸ்வரியும்…
செல்லக்கிளி அறிவியலும் ஈஸ்வரி பொருளாதாரமும் எடுத்திருந்ததால் இருவரும் ஒரே பள்ளி என்றாலும் வேறு வேறு பாடபிரிவு வேறு வேறு வகுப்பறை. ஆனாலும் ஒன்றாகவே சென்று ஒன்றாகவே திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
“சாதா நாள்லயே நீ வாயத் தொறந்து பேச மாட்ட… இப்போவெல்லாம் ரொம்பவே அமைதியாயிருக்காப்புல இருக்கு என்ன ஆச்சு பிள்ள உனக்கு?”
“ஒன்னுமில்லியே…”
“இல்ல… வித்யாசம் தெரியுது. புது கிளாசு புது ப்ரெண்டுன்னு என் கூட சரியா பேச மாட்டிக்கியோ…? ” எனவும், நின்று முறைத்தவளை பார்த்தும் கண்டு கொள்ளதாவளாய் நடந்தபடி
“அப்படின்னு நினைக்கவும் வழில்லாம…, புதுசா எவ கூடயும் நீ பேசுற மாதிரியும் தெரியலை. ஒரு வேளை புதுசா லவ்வு கிவ்வு பண்றியோ…! ம்ம்… குத்தாலத்துக்கு உங்க அத்தமகன் வந்தாகன்னு சொன்னியே… அங்க வச்சு ஏதாச்சும் தோனி போச்சுதோ” என்று விட்டு ஓரகண்ணால் பார்த்தவள், செல்லக்கிளி கை ஓங்குவது கண்டு சட்டென்று ஓட்டம் பிடித்தவள் சில அடி தூரம் சென்று நின்று கொண்டு,
“அப்படி ஏதாச்சும்னா சொல்லு… எனக்கும் ரொம்ப போர் அடிக்குது.” என்று சொன்னவள் ஒரு விரலை மட்டும் மடக்கி நீட்டி வக்களம் காட்டிச் சிரித்தாள்.
சிரித்தவளைப் பார்த்து முறைத்தவள், பின் முகம் கோபத்தில் சிவக்க, வேகமாக நடந்து தாண்டிச் சென்றாள், செல்லக்கிளி.
‘அச்சச்சோ கோச்சுக்கிட்டா போலவே’ என்றவாறு தொடர்ந்து ஓடினாள் ஈஸ்வரி.
“இங்க பாரு பிள்ள… சும்மா விள்ளாட்டுக்கு தானே சொன்னே!”
“ அப்படி இப்படின்னு எல்லாம் பேசுறதுக்கு அது என்ன விளையாட்டு பொருளா…? காதல் கல்யாணம் இதெல்லாம் விளையாட்டு இல்ல…! வயசுகோளாறுல வர்றதெல்லாம் காதலும் இல்ல…! வாழ்க்கை முழுசுக்கும் இவன் தான்னு நினைக்குறது தான் காதல். அவனை தவிர யாரையும் நினைக்கவிடாம, எதையும் ஏத்துக்க விடாமச் செய்யுறது தான் காதல்…! கண்டவனெல்லா வந்துட்டு போக மனசொன்னும் சத்திரமில்ல, அது கோயில்…! அப்படி சுத்தமா வச்சுகனும் மனச… இப்போ இதெல்லாம் யோசிக்குற வயசுமில்ல நமக்கு. இன்னொரு தடவை இது மாதிரி பேசுனா ஃப்ரன்டுன்னும் பார்க்கமாட்டேன், உன் கூட பேசவே மாட்டேன்…! பார்த்துக்கோ…” என்றாள்.
“அடடா காதல் கல்யாணம் பத்தி பேசுனாலே முறைக்குற சீமச் சித்திராங்கிக்குள் இப்படி ஒரு எண்ணமா புல்லரிக்குது போ…!” என
தோன்றிய முறுவலை அடக்கியவள்,
“அப்போ நான் முறைச்சதுக்கும் வெறுத்ததுக்கும் ஒரு காரணம் இருந்தா… இப்போ நான் பேசுறதுக்கும் ஒரு காரணம் இருக்குடி என் நாட்டு முள்ளங்கீ… ” என்று விட்டு புன்னகையுடன் நிமிர்ந்து நடந்தாள் செல்லக்கிளி.
தன் தோழியின் பேச்சைக் கேட்டு மலைத்து நின்ற ஈஸ்வரி…, தலையை குலுக்கிக் கொண்டு வேகமாக சென்று எட்டிப் பிடித்தாள்.
பதின்வயதில் பருவத்தின் அழைப்பில்
பாதை மாறுவோர் எத்தனை பேர்…!
கடை சரக்காய் காதலை
கை மாற்றுவோர் எத்தனை பேர்…!
பணம் பகட்டு காழ்ப்பு என்று
பண்பை மறந்தோர் எத்தனை பேர்…!
நிலை மாறும் உலகில்
களையாய் முளைக்கும்
குணக்கேடுகள் …
கலியுகமென்று சொல்லி தப்பிக்கவா…!
களை நீக்கி பொலியுகமாய் மாற்றவா…!
பொறுப்போ நம் கையில்…!
இளையவர்கள் கையில்…!
கிளி பேசும்!!!