~~~~~~~~~~~~~~~~~~~~
சேதி 11
*********
அலைகழிக்கப் பட்ட அனைவரும் ,யார் யார் எங்கிருகிறார்கள் என்று விழி விரித்து தேடி தம்மவர்களிடம் சிரித்தவாறு சென்று சேர்ந்து கொண்டனர்.
சூறைகாற்றாய் சுழற்றி அடித்த மலைகாற்றின் தாக்கமா …இளமனதை குழப்பத்தில் ஆழ்த்தும் உணர்வுகளின் தாக்கமா, என் வரையறுக்க இயலா நிலையில்,உடலும் மனமும் சற்றே படபடக்க தந்தையின் அருகில் சென்றாள் செல்லக்கிளி.
அவளைத் தொடர்ந்து மந்தகாச சிரிப்புடன் வந்தவன் , “ விழுந்தடிச்சு ஓடி வார! உனக்கு அந்த சூரக் காத்தே தேவலாம் போல னு திருணாமலையே அதிர்ந்து நடுங்கிப் போச்சு!!!” என்றான்.
மீண்டும் மீண்டும் சீண்டுபவனை முறைத்தவள், ‘இவுகளுக்கு இதெல்லாம் சாதாரணம் போல’ என்று எண்ணியவள், அவனைப் பார்ப்பதை தவிர்க்க எண்ணியவளாய் ,”சரவணா! வா! நாம பாலக்ரிஷ்ணர் சன்னதிக்கு போவோம்…,”, என தம்பியை நகர்த்தப் பார்த்தாள்.
“தனியா எதுக்கு கா? எல்லோரும் சேர்ந்து போகலாம் !” என்று ஆட்சேபணை தெரிவித்து, நேரத்திற்கு.. உதவாத தம்பியின் மீது
கோபம் கொண்டவள்,” நீ வராட்டி இரு.நான் போக போறேன்” என்றவள் முகத்தை தூக்கி வைத்து கொண்டு நடக்க தொடங்கியதும்,,
“ அக்கா தனியா போக வேண்டாம், நீ கூட போயேன் சரவணா “ என்று பணித்த தந்தையின் ஆணை கேட்டு , ஆசை அத்தானை பிரிய மனமில்லாதவனாய் தமக்கையை முறைத்த தம்பியை , பதிலுக்கு முறைத்தவாறு செல்லக்கிளி நகர தொடங்க,
வனராஜன்,”நீ உங்கக்கா கூட நட மாப்பிள்ளை, நான் அம்மாக்கு க்கொஞ்சம் உதவிட்டு உன் அப்பா கூட பேசிட்டே அங்க வந்துருறேன் “ என,
“ சேர்ந்தே போலாம்ல! நீ அங்க இருக்குற மரத்துல கொடுக்காபுளி பறிக்க துணைக்கு கூப்பிடுறியா?” என்று மானத்தை வாங்கிய தம்பியைப் பார்த்து பல்லை கடித்தவள்,
“இங்கன புகையா இருக்கு, அங்க போய்ட்டா கண்ணு காந்தாது அதுக்கு தான்!” என்று விளக்கிவள், வந்தா வா வராட்டி போ என்பது போல் தனியே நடக்க தொடங்கினாள்.
அலமேலு நாச்சியாரின் சன்னதிக்கு எதிரே சற்று க் கீழே இறங்கினால் பாலகிருஷ்ணரின் தனி கோவில் மண்டபம். அதை சுற்றி வர நடை பாதையும் , மரங்களும் மலர்கள் தங்கிய அரளி செம்பருத்தி போன்ற சிறு புதர்ச்செடிகளும் இருக்கும்.
கொஞ்சம் காற்றோட்டமான இடம் போனால் நன்றாயிருக்கும் போல் தோன்றவே, செல்லக்கிளி அந்த மண்டபத்தை அடைந்து உள்ளே செல்லாமல் நடை பாதைக்கு சென்றாள். அங்கிருந்து பார்த்த போது மேற்கு தொடர்ச்சி மலை அழகும், கோனேரி தீர்த்த தாமரை குளமும் , பச்சை சமவெளியாய் பரந்து இருந்த மலை அடிவாரமும் அவளைக் கொஞ்சம் அமைதி படுத்தியது.
“செல்லக்கிளி …” என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்…யாராக இருக்க கூடாது என்று பயந்தாளோ அவன்…. பூங்காவனம்.! கண்களில் காதலும் ஆதங்கமும் கலந்து நிற்க உறுத்து நோக்கி கொண்டு இருந்தான்.
வழக்கம் போல் பயபந்து வயிற்றில் உருள ஆரம்பிக்க வேகமாக நடை பாதைக்கு திரும்ப வர இருந்தவளை கை நீட்டித் தடுத்தவன்,
“ என்னை பார்த்தா பொண்ணுங்க பின்னாடி சுத்துற பொறுக்கி மாதிரி இருக்கா? ஏன் பயப்படுற? என்னால எப்பவும் உனக்கு ஒரு கெடுதலும் வராது நம்பு! அதான் என் தங்கையை மிக பெரிய பாதுகாப்பாளியா கூடவே வச்சுருக்கியே! என்னையே மிரட்டுறா அவ “ என்றான் இலகுவான குரலில்.
என்ன என்பது போல் ஏறிட்டு பார்த்தவள் சற்று தயங்க அதை சாதகமாக்கி கொண்டவன் தடுக்க நீட்டிய கையை விலக்கி கொண்டு , “ நல்லாருக்கியா! , நல்ல படி ! நீ விரும்பினாலும் விரும்பாட்டியும் நான் உன்னை நினைச்சுட்டே இருப்பேன். எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். நீ என் வாழ்க்கைத் தலைவியா வர னும் னு காத்துட்டு இருப்பேன் .அவ்ளோ தான்…..” என்றவன் கட்டியிருந்த கரங்களில் இடக்கையை மட்டும் எடுத்து பாதையை காட்டி,”போ” என்றான்.
‘என்ன சொல்றான்.. எதுக்கு வந்தான்’ என விழித்தவள், கடைசி வாக்கியத்தில் உதட்டோரம் சுழித்தவள்,
விட்டால் போதும் என்று வேகமாக நடந்தாள். அங்கு மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்த சரவணனையும் வனராஜனையும் கண்டு சற்று மிரண்டாள்.
“ கோவிலுக்கு போறேன்னு சொல்லிட்டு கொடுகாப்புளி அடிக்க தான் போனாளா உங்கக்கா” என்று சிரித்தவாறு வந்தவன், அவளுக்கு பின்னே தெரிந்த பூங்காவனத்தை க் கண்டு பேச்சை நிறுத்திவிட்டு மெதுவாக படி இறங்கி வந்தான்.
நடை பாதை தாண்டி நின்று கொண்டிருந்த பூங்காவனம் வனராஜனைக் கண்டு சற்றும் அலட்டாமல் மார்பின் குறுக்கே கட்டிய கையை கூட விலக்காமல் அழுத்தமான பார்வையை வனராஜனைக் கண்டு வீசி நின்றான்.
வனராஜனுக்கு பின்பாக வேலராஜன்,சொர்ணக்கிளி வருவதை கண்டவன், கோவிலை வலம் வந்தவன் போல் நடந்து வந்து செல்லக்கிளியைத் தாண்டி, படிகளில் ஏறினான்.
“ ஹை..வனம் அண்ணே! கோவிலுக்கு வந்தீங்களா? ஈஸ்வரி அக்கா,பிரதாப்(ஈஸ்வரியின் தம்பி) வந்துருக்கங்களா!” என்று சிரித்தவாறு கேட்ட சரவணனின் அருகில் சென்றவன்,
“இல்லை சரவணா! நான் மட்டும் தான் “ என்ற பூங்காவனத்தின் இதழ்கள் சிரித்தாலும், கண்கள் எச்சரிப்பவை போன்று வனராஜனை துளைத்து நின்றன.
விழிகளால் மிரட்டும் அவனை கூர்ந்து நோக்கிய வனராஜன்,”தெரிஞ்சவங்களா மாப்பிள்ளை “என
“
ஆமா அத்தான். அக்கா பிரண்டோட அண்ணே”,என்று சரவணன் கூறியதும்,
“ஓ..” என்றவன் விழிகளை அவன் முகத்தை விட்டு விலகவில்லை.
படிகள் ஏறிய பூங்காவனம், வேலராஜன்க் கண்டு அறிமுகமனா புன்னகை செலுத்தியவனாய் முறுவலித்து விட்டு மலை இறங்கும் படிகளை அடைந்து நிதானமாய் சென்றான்.
அனைவரும் பாலகிருஷ்ணரின் கோவிலுக்குள் செல்ல வனராஜனின் பார்வை செல்லகிளியை கேள்வியாய் துளைத்தது.
நிமிர்ந்தால் தானே அவன் பார்ப்பது தெரியும், செல்லக்கிளி தன் அத்தை அருகே சென்றவள் தன் போக்கில் சாமி கும்பிட்டு கோவில் வலம் வரும் வேலையை தன்போக்கில் செய்து கொண்டிருந்தாள்.
சலசலத்த சரவணனின் கேள்விகளுக்கு ஆமா இல்லை என்று பதிலளித்தவாறு தொடர்ந்து கொண்டிருந்த வனராஜனின் பார்வை மட்டும் தன்னைத் தொடருவதை உணர்ந்தவள், கண்டு கொள்ளாமல்முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் முன்னால் சென்று கொண்டிருந்தாள்.
அவளின் உதாசீனம் அவனைத் தாக்கியதோ! முகம் இறுகத் தொடங்கியது.
ஓட்டுனருடன் கார் எடுத்து வந்திருந்த வேலராஜன் முதலில் தம் வாகனத்தில் ஏற, அனைவருக்கும் விடை கொடுத்து விட்டு ஜன்னலின் ஓரம் வந்த வனராஜன், “ நாளைக்கு ஊருக்கு கிளம்பிருவேன் மாமா !” என்றவாறு குனிந்து சரவணனைப் பார்த்து தலைசைத்தவன் நிமிராமல் அமர்ந்திருந்த செல்லக்கிளியின் கதவு மேல் இருந்த தளிர்விரல்களின் மேல் தன் கரத்தை வைத்தான். திடுக்கிட்டு உருவ எண்ணியவளின் முயற்சி அழுந்த பற்றிய அவனின் பிடியில் முடியாமல் போனது.
அவள் கண்களை நோக்கி வேக மூச்சுடன்,”படிப்புல கவனம் வை. கண்ட விஷயங்களில் மனசு போனா இலக்கு தவறி போகும் “ என்று விரல்களில் அழுத்தம் கொடுத்தவன்,” ஒழுங்கா படி” என்றவனின் வார்த்தைகளில் பெண்ணவளின் சினம் ஏற புருவம் நெறிபட கண்களில் கனல் கூடியது.
பக்கத்தில அமர்ந்திருந்தவருக்கு அவன் சொல்வது சாதாரண அறிவுரையாக, தோன்றும்.
அவனின் கண் பேசிய மொழியும், கை யின் அழுத்தமும் செல்லக்கிளியை குற்றம் சாட்டியது. அதனை அவளால் உணர்ந்து கொள்ள முடிய,’இவக யார் இதெல்லாம் சொல்ல ? என்னை சந்தேகப்படராகளா!’ என்ற ஆத்திரம் கண் மறைக்க, தலையை திருப்பிக் கொண்டாள்.
அவளின் முகம்திருப்பல் அவனுக்கு வழக்கம் போல் சிரிப்பை ,ரசனையை தூண்ட, லேசான சிரிப்புடன்
கையை மீண்டும் ஒரு முறை அழுத்தி விட்டு, எடுத்துக் கொண்டான்.
“ நேரமாகுது கண்ணா! இப்போ கிளம்பினா தான் பத்துக்குள வீட்டுக்கு போக முடியும்!” என்ற தாயின் குரலில் திரும்பி அவருடன் நடந்தான் வனராஜன்.
ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன், நகர்ந்து செல்லும் மாமனின் வாகனத்தைக் கண்டு,மனதில் ஏதோ வெறுமையை உணர்ந்தவனாய், பெருமூச்சு விட்டு தனது வாகனத்தைக் கிளப்பினான்.
******************
இரவு நேரம் தனது படுக்கையில் அமர்ந்தவாறு அலைபேசியில் நண்பர்களுடன் உரையாடலில் ஈடுபட்டவன்,அதிலும் சலிப்புற்றவனாய் , அனைத்து chat களிலும் good night போட்டு விட்டு வெளிய வந்தவன், galary கு சென்று அன்று பொங்கல் வைக்கும் இடத்தில் எடுத்த படங்களை பார்த்தான்.
சிவப்புக்கரையிட்ட பச்சை வண்ணப் பட்டு பாவாடை,சிவப்பு நிற தாவணியில், இரட்டை பின்னல் இடையை தாண்டி நீளமாய் தொங்க,மல்லிகைச்சரம் கழுத்தைத்தொட்டு வருடி நிற்க, குத்தலிட்டு அமர்ந்து பொங்கலை சிறு தொன்னைகளில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளை பார்த்தவனின் கை விரல்கள், அனிச்சையாக தொட்டு வருடின.
சிறுகுழந்தையாக அவள் இருக்கும் போதே, அவளை தூக்கி வைத்து கொண்டு இருந்த ஞாபகம் வந்தது. குண்டு விழிகளும் குறுகுறுவென பார்வையும், மயக்கும் சிரிப்புமாய் இருப்பவள், எப்போதிருந்து சிரிப்பதை நிறுத்தினாள் என்று யோசித்தான்!!!
சிறு வயதிலிருந்தே நகரங்களில் பெரிய பள்ளிகளின் ஹாஸ்டலில் தங்கி படித்த காரணத்தால் உறவுகளை சந்திப்பது அபூர்வம். தேர்வு விடுமுறைகளில் கூட பள்ளிகளில் நடைபெறும் பயிற்சி வகுப்புகள், சிறப்பு பயிற்சி முகாம்கள் களில் கலந்து கொள்ள சொல்லி விடுவார் சௌந்தர ராஜன். வீடு வரும் நாட்களில் சுற்றுலாக்களுக்கு அழைத்து சென்று விடுவார். கோடை விடுமுறையின் போது கரிசக்குளத்தில் நடக்கும் அம்மன் திருவிழாவில் தான் அவன் தாய்வழி உறவினர்களை சந்திப்பது..அதுவும் ஒரு நாள் மட்டுமே அங்கு போவது மாதிரி அவனின் பயண திட்டம் வகுக்கப் பட்டிருக்கும்.
சிறு வயதிலிருந்தே நகரங்களின் இருபாலரும் படிக்கும் பள்ளிகளில் படித்தவன் ஆதலால் பெண்களுடன் சாதாரணமாக உரையாடுவான். வயது காலத்தில் எதிர்பாலினத்தவரிடம் ஏற்படும் ஈர்ப்பு கூட சில நாட்களில் மறைந்து விடுவதை உணர்ந்தவன், நட்புடன் பழகும் எல்லோரையும் ஒன்றாகவே பாவித்தான். காதல் என்று சுற்றி வரும் சிலரையும் சிரித்தவாறே சமாளித்து திருப்பி விட்டு விடுவான்.
இந்த சிறு பெண்ணிடம் தான் என்ன உணர்கிறோம் என்றே அவனால் வரையறுக்க முடியவில்லை. சொந்தம் என்று தோன்றுகிறதா! சொந்தமாகவே ஆக்கி கொள்ள தோன்றுகிறதா! என்ற கேள்வி தோன்ற திடுக்கிட்டு அவளின் படத்தை உற்று பார்த்தான். சிறு பெண்.பதினாறு வயது. இவ்வாறு நினைப்பது கூட தவறு என்று எண்ணியவன் அந்த படத்தை அழிக்க முனைந்தவன், ஏனோ தடுமாறி , பார்த்தவாறே இருந்தான்.
கதவு தட்டும் ஓசையில் திரும்பியவன் உள்ளே வந்த தாயாரை கண்டு முறுவலித்த வாறே,” பால் கொண்டு வரலைல மாம்… தப்பிச்சேன் “ என்றான்.
“ஆச்சி தாத்தா எப்படி இருக்காங்க கண்ணா ?”
என்று கேட்டவரை வாஞ்சையுடன் பார்த்தவன்,”நல்லாருக்காங்க..உங்களை கூட்டிட்டு வரலையா னு தாத்தா நாலு முறை கேட்டுட்டாங்க” என்றதும் பெருமூச்சு விட்டவர்,” அதெல்லாம் எப்போ நடக்க? நீ தூங்கலியா கண்ணா?” என்றவர் அலைபேசியில் செல்லகிளியின் படத்தை பார்த்து லேசாய் அதிர்ந்தார்.
“கண்ணா! கீழ அய்யப்பா ஐயாம்மா மதுரை சம்பந்தம் பத்தி உன் அப்பாட்ட பேசிட்டு இருக்காங்க “ எனவும்,
“எனக்கு இப்போ கல்யாணம் பண்ற ஐடியா இல்லை மா…. அஞ்சு வருஷம் கழிச்சு இந்த பேச்சை ஆரம்பிக்க சொல்லுங்க உங்க அருமை மாமியாரை” என்றான்.
தயங்கியவாறு ,”நீ செல்லகிளியை விரும்புறியா?”
எனக்கேட்டவரை , அதிர்வின்றி பார்த்தவன்,”அவ சின்ன பொண்ணு மா” என்றான் யோசனையாக.
“இந்த யோசனையே வேணாம் கண்ணா , இது சரி வராது. உன் அப்பாவும் மாமாவும் ஒன்னுசேர்க்குறது ரொம்ப கஷ்டம், அதுக்கு மேல உன் ஐயாம்மா,அப்படி ஏதும் நினைப்பிருந்தா விட்டுரு கண்ணா..” என்றார்.
ஆச்சரியமாக பார்த்தவன்,”ஏன் மா? டாட் ஏன் மாமாகிட்ட இவ்ளோ கோபமா இருக்காரு. தொழிற்சாலை விஷயத்துல மாமா சொல்றது எல்லாம் டாட் நன்மைக்கு தான். அது டாட் கு புரியலையா எனக்கென்னவோ டாட் வேணும்னே பண்ற மாதிரி , மாமா வை எதிர்க்கணும்னு பண்ற மாதிரி னு தோணுது. “ என்றான் யோசனையாக.
“பரம்பரை, பணம் அப்படி எல்லாம் பேசுறது கூட போலியா தெரியுது. டாட் மனசுல ஏதோ கோபம் இருக்கு மாமா மேல. அதை இப்படி எல்லாம் வெளி காட்டுறார்..” என்றான் நாடியை தடவியவனாய்.
மகனின் பேச்சில் அதிர்ந்த சொர்ணக்கிளி, கண்களில் நீர் திரையிட, சட்டென்று தலை கவிழ்ந்து அதை மறைத்தார்.
சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு தழுதழுத்த குரலை செருமி சரி செய்து ,
“ இந்த ஆராய்ச்சி எல்லாம் வேணாம் கண்ணா! நீ தூங்கு. மாமா வை சங்கடப் படுத்தர வேலை நமக்கு வேணாம். உன் அப்பாவை எதிர்த்து ஏதும் செய்யவும் வேணாம் கண்ணா..”
“பிரச்சனை என்னனு சொன்ன தானே தெரியும்மா” என்று மெதுவாய் கேட்டவனை
நிமிர்ந்தும் பாராமல்,” வேணாம் கண்ணா! அது ஒரு தாய் மகனிடம் சொல்ல முடியாத விசயம்……இதுக்கு மேல கேக்காதே” என்றவர் நகர முற்பட, கைப்பற்றி நிறுத்தினான்.
நிமிர்ந்த தாயின் கண்களில் கண்ணீரை கண்டவன் அதிர்ந்தவனாய் ….பற்றிய கரத்தை அழுத்தி,”எதுவானாலும் நான் இருக்குறேன் மா…கவலை படாதீங்க “ என்று ஆறுதல் அளித்தவன், கைகளை விலக்கினான்.
பொங்கிய கண்ணீரை துடைத்தவர் கண்களில் கண்ணீரும் உதடுகளில் புன்னகையுமாய் மகனின் தலைகோதிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்..
அன்னை சென்றதும் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான் வனராஜன். என்ன பிரச்சனை என்று அவனால் புள்ளி குத்த இயலவில்லை. யாரிடம் கேட்பது என்று யோசித்தவனிற்கு யாரும் இது பற்றி வாய் திறக்க மாட்டார்கள் என்று தோன்றியது.
பெருமூச்சு விட்டவாறு தூங்க முயன்றவனின் கண்களுக்குள் வந்து உதடுகளில் கோபமும் கண்களில் மின்னலுமாய் வந்து நின்று ஒளிர்ந்தாள் அவனின் செல்லக்கிளி……..
*********************************
கண்களை மூடினாலும்
கனவுகள் தொடர்கின்றதே!!!!
மனதுக்கு கதவில்லை….
எண்ணங்களுக்கு எல்லையில்லை…
பாசம் கொண்ட கிள்ளையவள்…
நேசம் கொண்ட மன்னனவன்..
பாசமே தடையாக..
நேசமே விலையாக…
கோபமே ஈர்ப்பாக..
தாபமே நிலையாக…
காலமே விடையாகுமோ??…
*********************
கிளி பேசும்………