Thu. Sep 19th, 2024

தகிக்கும் தீயே குளிர்காயவா 44/45/46

(44)

 

என்ன சொன்னீர்கள்… ர… ரகுவைக் கடத்திச் சென்றது… நீ… நீங்களா…” என்று நம்ப மாட்டாதவளாகக் கேட்க,

 

“நான்தான்… நானேதான்… ஆனால் என்ன பயன்… அவனுக்குமே முக்கிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இந்த இடத்தில் வாமதேவனைப் பாராட்டாமல் என்னால் இருக்க முடியவில்லை. என்ன மாதிரி திட்டம் போட்டுச் செயற்படுத்தியிருக்கிறான். யார் மீதும் நம்பிக்கை வைக்காமல், எவரும் கண்டு பிடிக்காத அளவில்… புரிந்துகொள்ள முடியாத வகையில் அனைத்தையும் பாடல்களாகவோ, குறிப்பாகவோ குறிப்பிட்டு… இத்தனை செய்த ரகுவிடம் கூட அவன் உண்மையைக் கூறவில்லையே” என்று கூற, சிவார்ப்பணா அந்த நிலையிலும் தீரனை நினைத்துப் பெருமையில் இதயம் விம்மினாள்.

 

‘அவள் தீரன் கண்டு பிடித்தானே… எத்தனை விரைவாக, அத்தனையையும் கண்டு பிடித்தான். என் தந்தை எட்டடி பாய்ந்தார். அவன் பதினாறடியல்லவா பாய்ந்தான்…” பெருமையில் பூரிக்க, அந்த ராகவன் சொல்வதைக் கேட்கத் தொடங்கினாள்.

 

“இத்தனை செய்த ரகுவிற்கே, அதை இயக்கும் கடவுச் சொல் தெரியவில்லையென்றால் பார்த்துக்கொள்ளேன். அந்த ஆவணங்களைப் பெறுவதற்கான கடவுச்சொல், இதோ தூங்கிக்கொண்டிருக்கும் இந்த ஏவுகணையை எப்படி இயக்குவது? எதுவுமே அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவனுக்குத் தெரிந்தது எல்லாம், அந்த ஆயுதத்திற்குச் செய்த, ஏவுகணை மட்டுமே. ஆனால் நம்முடைய விசாரணை பூர்த்தியாவதற்கு முன்னால், அந்த அநபாயன் வந்து அனைத்தையும் கெடுத்துவிட்டான்.

 

நம்முடைய கட்டுப்பாட்டிலிருந்த ரகுவைக் காப்பாற்றி விட்டான்.. இல்லை என்றால் எப்போதோ எனக்கு உண்மை தெரிந்திருக்கும்…” என்று கூற, சிவார்ப்பணாவிற்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

 

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. எந்த ஒரு தந்தையாலும் நினைத்துப் பார்க்க முடியாத காரியம்… இவன் மனிதனல்ல… மிருகம்… பிணத்தைப் பணமாக்கித் தின்னும் மிருகம்…

 

“சே… நீயெல்லாம் ஒரு மனுஷனா… பெற்ற பிள்ளையை உன் பேராசைக்காகக் கொல்ல நினைதைதாயே… இத்தனை கோடிக்கணக்கில் பணத்தைச் சேர்த்து வைத்து என்ன செய்யப்போகிறாய்? இருந்த ஒரே பிள்ளையையும் கொன்று விட்டு, சாகும் போது பணப் பெட்டியில் வைத்துக்கொண்டா போகப்போகிறாய்… அப்போது கூட அந்தப் பணம் உன்னோடு வராது சேவியர்…” என்று குரல் கம்மச் சீற்றத்துடன் சிவார்ப்பணா கூற, கடகட என்று சிரித்தார் அவர்.

 

“என்னம்மா நீ… என் காரக்டரையே புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாயே… உனக்கொன்று தெரியுமா? பானுமதி என் மனைவிதான்… ஆனால் உன்மையான மனைவி கிடையாது… புரியவில்லை… இந்த உலகம் என்னை நம்பவேண்டும் என்பதற்காக நான் வைத்திருக்கும் முகம்தான் ராகவன் என்கிற முகம். அந்த நாடகத்தில் பிறந்தவன்தான் ரகு. முட்டாள் பானு… நான் எதைச் சொன்னாலும் அப்படியே நம்புவாள்… அவளுக்கு நான் எப்போதும் ராகவன்தான்.

 

அநா… எனக்கு இன்னொரு குடும்பம், நிஜக் குடும்பம் இருக்கிறது… தெரியுமா? அதுவும் ரஷ்யாவில்… பார்க்கப்போகிறாயா?” என்றவாறு நக்கலுடன், தன் பான்ட் பாக்கட்டிலிருந்த அந்தப் பணப்பையை எடுத்துத் திறந்த காட்ட, அதில் ஒரு வெள்ளையினப் பெண்மணியை அணைத்தவாறு சேவியர் இருக்க, ஆறு வயதில் ஒரு ஆண் பிள்ளையும், நான்கு வயதில் ஒரு பெண்ணுமாக அந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது.

 

அந்தப் படத்தைப் பார்த்து சிரித்தவர், “அடிக்கடி வேலையென்று வெளியூர் சென்றுவிட்டு வருவேனே ஏன் என்று நினைத்தாய்? இவர்களைக் காணத்தான்…” என்றவன் அதை மடித்துப் பான்ட் பாக்கட்டில் வைத்தவாறு,

 

இந்த உலகத்தின் பார்வையில் அவர்களின் நிலை வேறு… அநா… யாரும் நெருங்க முடியாத மலை உச்சியில் ரஷ்யாவில் இருக்கிறார்கள். நான் சேர்த்த சொத்திற்கு உரிமையானவர்கள் அவர்கள்தான்…” என்றவரை வெறுப்புடன் பார்த்தவள்,

 

“அவர்களுக்காகவாவது உன்னுடைய உன்மையான முகம் தெரியுமா… இல்லை…” என்று இழுக்க, மெல்லியதாக நகைத்த சேவியர் எழுந்து,

 

“எனக்குப் பிறகு, என் தலைமைப் பதவியை வகிக்கப்போகிறவனே என் பிள்ளைதான்… உனக்கொன்று தெரியுமா? என் பிள்ளை ரோயல் கனடிய விமானப்படையில் முக்கிய பதவியில் இருக்கிறான்… அவனை உனக்குத் தெரியாதில்லையா…” என்று இவர் கிண்டலுடன் கூற, சிவார்ப்பணாவால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

 

“உன்னை அந்தக் கடவுளால் கூடக் காப்பாற்ற முடியாது சேவியர்… சத்தியமாக முடியாது. இப்போது சொல்கிறேன் கேட்டுக்கொள்… உன் சாவு பயங்கரமாக, அதி பயங்கரமாக இருக்கும்… நீ வாழ்நாளில் நினைத்துப் பார்க்க முடியாத வலியை அனுபவிப்பாய்… நிச்சயமாக அனுபவிப்பாய்…” என்று சீறியவளுக்கு இயலாமையும், வலியும், வேதனையும், கோபமும் என்ற எல்லா உணர்ச்சிகளும் ஒன்றிணைந்து பொங்கிப் பாயத் தயாரானது.

 

இவனை அழிக்கத் தீரன் வரவேண்டும். அவளுடைய தீரன் வரவேண்டும்… அவனால் மட்டுமே இவர்களை அழிக்க முடியும். அதற்கு அவன் இங்கே வரவேண்டும்… எப்படி… எப்படி வருவான்… எப்படி அவனை இங்கே வரவழைப்பது… யோசித்தவளுக்குப் பளிச் என்று அந்த எண்ணம் தோன்றியது. முடிவெடுத்தவள் அவளையும் மீறிய கர்வத்துடன் தன் தலையை நிமிர்த்தி,

“இதோ பார்… சத்தியமாக இது பற்றி எதுவும் எனக்குத் தெரியாது… ஆனால் ஒரே ஒருவனுக்கு மட்டும்தான் இதை எப்படி இயக்குவது, இதன் கடவுச்சொல், இதை இயக்குவதற்கான படி முறைகள் அனைத்தும் தெரியும்… அவன் வந்தால் மட்டுமே உன் ஆசை நிறைவேறும்… ஆனால் உன்னால் அவனை இங்கே வரவழைக்க முடியாது…” என்று இவள் அலட்சியமாகக் கூற,

 

“என்ன கூறுகிறாய்? யார் அவன்…? எந்தக் கொம்பனாக இருந்தாலும், அவனை இங்கே வரவழைக்க முடியும்… சொல் யார் அவன்…” என்று பரபரப்புடன் ராகவன் கேட்க, ஏளனத்துடன் நகைத்த சிவார்பப்ணா, ராகவனை உற்றுப் பார்த்து,

 

“தீரன்… அநபாயதீரன்….” என்றாள் கர்வமாக.

 

“என்ன சொல்கிறாய் நீ?” என்று அந்த சேவியர் எரிச்சலுடன் கேட்க,

 

“நான் சொல்வது சத்தியம் ராகவன். இத்தினை பேர் நின்று எப்படி அந்தக் கணினியை இயக்குவது என்று குழம்பிப்போயிருக்கிறார்கள் அல்லவா… என் தீரன், அதை எப்படி இயக்குவது என்று எப்போதோ கண்டு பிடித்துவிட்டான்… அது மட்டுமல்ல, அந்த ஆயுதம் இயக்குவதற்கான கடவுச்சொல் முதல், அதை எவ்வாறு இயக்கவேண்டும் என்கிற படிமுதல் வரை அனைத்தும் அவனுக்குத் தெரியும்… முடிந்தால் உனக்கு உன்மையாகவே தைரியம் இருந்தால், அவனிடம் உன் இருப்பிடத்தைக் கூறி வரச்சொல்…” என்று ஆக்ரோஷமாகச் சீறியவளின் முகம், தன்னவனின் நினைப்பில், பிரகாசமாக ஜொலித்தது.

 

அவளுக்கு ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிந்தது. இவனை அழிக்கவேண்டுமானால் அது அநபாயதீரனால் மட்டுமே முடியும். அவனை இங்கே வரவழைக்க வேண்டுமானால், இந்த ராட்சசனுக்கு உண்மை தெரியவேண்டும். இதை வைத்து நிச்சயமா அவனை இங்கே வரவழைப்பான். அவன் வரட்டும்… அதுக்குப் பிறகுதான் இவனுக்கிருக்கிறது கச்சேரி… குடும்பத்தை மட்டுமா ஏமாற்றினான்… சோறு போடும் நாட்டுக்குமல்லவா துரோகம் செய்கிறான். இவன் உயிரோடே இருக்கக் கூடாது. இருக்கும் ஒவ்வொரு விநாடியும் இந்த நாட்டுக்கு அவமானம். தீரன்… விரைந்து வாருங்கள்…” என்று மனதார வேண்ட, அவள் எய்த அம்பு கச்சிதமாக வேலை செய்தது.

 

“என்ன சொல்கிறாய் நீ… தீரன் அனைத்தையும் கண்டுபிடித்துவிட்டானா?” என்று தன் அதிர்ச்சியை மறைக்க முயன்றவாறு கேட்க,

 

“பென்ட்ரைவ் உட்பட…” என்றாள் இவள் அழுத்தமாக. ஒரு கணம் ராகவன் ஆடிப்போனார்.

 

அனைத்தும் அவனிடமிருக்கிறது என்றால், அதை வைத்து என்னவெல்லாம் செய்திருப்பான்? தாமதிக்காமல், அநபாயதீரனுக்குக் கைப்பேசி எடுக்க முயல,

 

“நோ… டாட்… இந்தப் பெண் சொல்வதை நம்பி அவனை இங்கே அழைக்காதீர்கள்…” என்றவாறு தன்னுடைய ராணுவ சீருடையைக் கூட மாற்றாமல் உள்ளே வந்தான் அவன்.

 

உயரமாக இருந்தான். இறுகிய தசைகள் பிதுங்கி வழிந்தன.

 

இவன்தான் ராகவன்… இல்லை இல்லை சேவியரின் மகனா? என் தீரன் எங்கே இவன் எங்கே… தன் தாய் நாட்டுக்காக உயிரையும் கொடுக்கும் அவன் வீரம் எங்கே, பணத்திற்காகத் தன் சொந்த நாட்டை… இல்லை இல்லை… இவன் தாய் ரஷ்யா என்றல்லவா இந்த ராகவன் சொன்னார்… அப்படியானால், இவன் எதற்காக கனடிய இராணுவத்தில் சேர்ந்தான்… ஒரு வேளை இவன ஒற்றனாக இயங்குகிறானோ?’ நினைத்த மாத்திரத்திலேயே கொதித்துப்போனாள் சிவார்ப்பணா. அதே நேரம், தன் மகன் தடுத்ததும் கோபத்துடன் திரும்பிய ராகவன்,

 

“ஏன் அவனுக்கு எடுக்கக் கூடாது?” என்று சீறினார்.

 

“டாட்.. அவனைப் பற்றி நன்கு தெரிந்தும் அவனை வரவழைக்கிறீர்கள். நம்மால் அனுப்பப்பட்ட அத்தனை பேரையும் கண்ணிமைக்கும் நொடியில் துவசம் செய்தவன் அவன்.. அவன் பெயர் தெரியுமல்லவா? ஃபயர்… வைல்ட் ஃபயர்… நாம யோசிப்பதற்கு முன்னாலேயே நம்மையெல்லாம் எரித்துச் சாம்பலாக்கிவிடுவான்… சிறு நுணியைப் பற்றினாலே, அனைத்தையும் அழித்து விட்டுத்தான் ஓய்வான். சாதாரண மனிதனுடைய செயலாற்றும் வேகம் இரண்டு விநாடிகள் என்றால், அநபாயதீரனுடையது அரை விநாடிக்கும் குறைவானதே… அவனுடைய எதிர்வினை… மின்னல் கூட சற்றுத் தாமதமாகத்தான் தெரியும் டாட். அவனுடைய ஓட்டத்தின் வேகம் மட்டும் 62 km/hr. அவனை இங்கே அழைத்து. நம் தலையில் மண்ணை அள்ளிப் போடக் கூடாது… டாட்” என்று அந்த மல்லன் கூற,

 

“ஆர் யு ஸ்டுபிட்… அந்தக் குறிப்புகளைப் பார்த்தாய் அல்லவா… ஒரு மண்ணும் புரியவில்லை. இதோ… ஏழு பேர்… இருந்து அதைக் குடைகிறார்கள். ஒன்றரை மணிநேரமாகிவிட்டது… இன்னும் அரை மணி நேரத்தில் நாம் தரையிறங்கிவிடுவோம். நாளைக் காலைக்கு ரஷ்யர்கள் பேரம் பேச இங்கே வருகிறார்கள். அவர்களிடம் கைவிரிக்கச் சொல்கிறாயா? இவர்களை நம்பிப் பயனில்லை… அந்தத் தீரன் ஏற்கெனவே அனைத்தையும் கண்டுபிடித்து விட்டான்…” என்று எகிற,

 

“எனக்குப் புரிகிறது… அதே நேரம் தீரனைப் பற்றியும் எனக்கு நன்கு தெரியும். அவன் சாணக்கியன்… கூடவே உடல் பலமும் கொண்டவன். எல்லாவற்றிற்கும் மேலாக எதற்கும் அடங்காத திமிர் பிடித்தவன். நாட்டுக்காக எந்த எல்லைக்கும் போகத் தயங்காதவன். தவிர இன்று வரை அவனை ஜெயிக்க யாரும் பிறந்ததில்லை. பிறக்கப்போவதும் இல்லை…” என்று அவன் அமைதியாகக் கூற,

 

“என்ன உளறுகிறாய்… அவனைப் பற்றி இப்படிக் கூற உனக்கு வெட்கமாக இல்லை… ராணுவத்தில் சேர்ந்து குப்பையா கொட்டினாய்? பார்த்தாய் அல்லவா? நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் நமக்குக் காவல் காப்பதற்காக நம்மைச் சுற்றியிருக்கிறார்கள். அத்தனை பேரும் வடிகட்டி எடுத்த பலசாளிகள். அவர்களை மிஞ்சி, ஒற்றையாளாக அவனால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்க, இவன் சிரித்தான்.

 

“அவர்கள் பலசாளிகள்… ஒத்துக்கொள்கிறேன். அவர்களிடம் இல்லாத சிலது ஃபயரிடம் இருக்கிறது. அதில் முக்கியமானது அவனுடைய புத்திக் கூர்மையும் வேகமும். எந்த இடத்தில் எப்படித் தாக்கவேண்டும் என்பதைக் கண்ணிமைக்கும் நொடியில் செயல்படுத்தக் கூடியவன். அத்தகைய வேகத்தை, இதுவரை யாரும் கண்டுகொண்டதில்லை. இந்த வயதில் அவனுக்குக் கேர்ணல் என்கிற பதவி, கிடைத்தது சும்மா அல்ல…” என்றான் அநபாயதீரனை நன்கு புரிந்துவைத்தவனாக.

 

“அவனைப் பற்றி என்னிடமே கூறுகிறாயா? முப்பது வருடங்கள்… முப்பது வருடங்களாகக் கனடிய அரசின் கண்ணுக்குள் விரல் வைத்து ஆட்டிக்கொண்டிருப்பவன் நான்… என்னிடமே நேற்றுப் பிறந்த பயலைப் பற்றிக் கூறுகிறாயா? பார்க்கலாம்… நானா அவனா என்று…” எனக் கர்வத்துடன் கூறியவாறு தன் கரத்தை நீட்ட, அவன் ஏதோ ஒரு பெட்டிபோன்ற சாதனத்தை எடுத்து வந்து, அந்த கைப்பேசியில் கொளுவ, கைப்பேசியைக் காதில் பொருத்திக்கொண்டார்.

 

அநபாயதீரனுக்கு தொலைபேசி எடுத்ததும், மறு முனையில் மணி அடிக்கும் சத்தம் கேட்டது. அடுத்த நிமிடம் தொலைபேசி எடுக்கப்பட்டது.

 

மறு மறுபக்கமிருந்து வந்த சத்தத்திலிருந்து அது அநபாயதீரன் என்பதை சிவார்ப்பணா ஊகித்துக்கொண்டாள். ராகவன் அநபாயதீரனுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே, இரு முறை அறை வாங்கியவளுக்கு, அந்த அடி கூட வலிக்கவில்லை.

 

விமானம் தரையிறங்கியதும், அவளை இழுத்துச் சென்று ஒரு வாகனத்தில் ஏத்த, மேலும் இருபது நிமிடப் பயணத்தில், எங்கும் இருள் சூழ்ந்திருக்க, ஒரு இடத்தில் மட்டும் வெளிச்சம் தெரிய, அங்கிருந்த கட்டடத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டாள் சிவார்ப்பணா.

 

எங்கு பார்த்தாலும் பொருட்கள் இரைந்து கிடந்தன. பெரிய பெரிய தூண்களும், விஸ்தாரமாகவும் இருந்தது அந்த மாளிகை. அது  மாளிகையல்ல, அரண்மனை. பேரிய பெரிய தூண்களுடன் கம்பீரமாக இருந்தாலும், அது பராமரிக்கப்படாது விட்டதால், பல இடங்கள் இடிந்து கிடந்தன.

 

பால நூற்றாண்டுகளுக்கு முந்தைய அரண்மனை போலும். அந்த அரண்மனையையே பார்த்துக்கொண்டு வந்தவளை, இழுத்துக்கொண்டு அங்கிருந்த ஒரு அறைக்குள் தள்ளிவிட்டுக் கதவைப் பூட்டிவிட்டுச் செல்ல, சிவார்ப்பணாவின் உதடுகளில் நகைப்பு தாண்டவமாடியது.

 

வருகிறான்… அவள் தீரன் வருகிறான்… சூர சம்காரம் செய்ய வருகிறான்… ஒவ்வொருவரையும் பொடிப்பொடியாக அவன் வருகிறான்… சிங்கத்தின் உறுமலுடனும், புலியின் பாய்ச்சலுடனும் இந்தக் காட்டில் அவளைக் காக்க, அவன் நாட்டைக் காக்க வருகிறான்…’ என்று குதூகலத்துடன் எண்ணியவள், தன்னவனைக் காணும் ஆவலில் அப்போதே தயாராகத் தொடங்கினாள் அந்தப் பேதை…

 

(45)

 

“கட கட கட கட கட…” கியூபெக் காட்டின் மீது பறந்துசென்றுகொண்டிருந்தது அந்த ஹெலிக்காப்டர். கீழே காடு முழுவதும் வெண்ணிறக் கம்பளம் போர்த்தியது போலப் பனி படர்ந்திருக்க, ஊசியிலை மரங்கள் மட்டும் பனியைத் தேக்கிவைக்காது உதறிவிட்டுப், பச்சையாக அடர்ந்து நிமிர்ந்து நின்றுகொண்டிருந்தன.

 

தன் தொலைநோக்கியால், ஹெலிக்காப்டரின் ஜன்னலிலிருந்து பார்த்துக்கொண்டு வந்தவன், தன் இடம்காண் கருவி பொருத்தியிருந்த கைக்கடிகாரத்தைத் திருப்பி தாம் வந்திருக்கும் இடம் சரியானதா என்பதைப் பரிசோதித்துத் திருப்திப் பட்டவனாக, விமான ஓட்டியிடம், வலப் புறமாகத் திரும்புமாறு கட்டளையிட்டுத் தன் தலையிலிருந்த ஹெட்செட்டைக் கழற்றி வைத்தவாறு எழுந்தவன் பின்னிருக்கைக்கு விரைந்து சென்றான்.

 

அந்த ஹெலிக்காப்டரின் உட்புறமிருந்த இழுப்பறையைத் திறந்து அங்கிருந்த ஒரு டப்பாவில் க்ரீஸ் இருக்க, அதை மூன்று விரல்களாலும் எடுத்து முகம் முழுவதும் பூசிக்கொண்டான்.

 

இருக்கையில் போட்டிருந்த, துப்பாக்கி கொண்ட பையை முதுகில் போட்டு, ஒரு ஓரமாகத் தொங்கிக்கொண்டிருந்த ஒரு கயிற்றின் கொளுவியை எடுத்துத் தன் இடைப் பட்டியில் கொளுவிக்கொண்டான். மீண்டும் தன் கைக்கடிகாரத்தில் இடத்தை நன்கு அவதானித்தவன், எதிரிகளின் கவனத்தைக் கவரமுடியாத இடம் வந்ததும், தன் கரத்தை நீட்டி அங்கேயே நிற்குமாறு கூற, ஹெலிக்காப்டர் ஆடாது அசையாது ஒரு இடத்தில் அப்படியே நின்றது.

 

அநபாயதீரன் விமான ஓட்டியைப் பார்த்துத் தான் தயார் என்பது போலப் பெரும் விரலை உயர்த்திக் காட்டிவிட்டு, கதவைத் திறக்க பயங்கரமாகக் காற்று வீசியது. காற்று வீசிய வேகத்துக்கு வானூர்தி சற்று அசைய, அதை பொருட்படுத்தாமல், அப்படியே கீழே குதிக்க, வானூர்தி ஓட்டியும் முன் புறமிருந்த ஒரு பொத்தானை அழுத்த, அநபாயதீரனின் பாரத்திற்கு ஏற்ப கயிறு வேகமாகக் கீழே இறங்கத் தொடங்கியது.

 

அவன் தரையைத் தொட்டதும், தன் இடுப்புப் பட்டியிலிருந்த கொளுவியை அவிழ்த்துவிட்டுத் தன் சட்டைப்பையிலிருந்த தடித்த அகன்ற குளிர் கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டான். அதிலிருந்த பட்டியைத் தலைக்குப் பின்னால் விட அது தலையோடு இறுகி நின்றது. அதிலிருந்த பொத்தான் ஒன்றைத் தட்ட, அது சற்று இருட்டை விலக்கிப் பாதையைத் தெளிவாகக் காட்டியது.

 

தன் கைக்கடிகாரத்தின் இடம்காண் கருவியின் மூலம் தான் போக வேண்டிய பாதையை அறிந்து அந்த இருட்டைக் கிழித்துக்கொண்டு எதிரிகளின் இடம் நோக்கி அதி வேகமாக ஓடத் தொடங்கினான். அவனுக்குத் தடைகள் ஒன்றும் பொருட்டாக இல்லை. சரிந்து விழுந்த மரங்களையும், அடர்ந்த உயர்ந்த பாறைகளையும் சுலபமாகவே பாய்ந்து தாண்டியவனுக்கு அந்த ஓட்டம் ஒன்றும் பெரிய சாதனையாகத் தெரியவில்லை.

 

அரை மணி நேர ஓட்டத்தில், எதிரிகளின் நடமாட்டம் தெரிய, உடனே அங்கிருந்த மரம் ஒன்றின் பின்னால் மறைந்துகொண்டான். ஓடிய வேகத்தில் அவனுக்கு மூச்சு வாங்க, அவன் விட்ட பெரிய மூச்சுக்கள் அந்தக் குளிரில் புகை போல வெளியேறியது. ஒரு கணம் நின்று தன்னை ஆசுவாசப்படுத்தியவன், சத்தம் போடாது தரையில் அமர்ந்து, தன் ஆயுதங்கள் அடங்கிய பையைக் கழற்றித் தரையில் வைத்துத் திறந்தான்.

 

ஒவ்வொரு விதங்களில், ஒவ்வொரு வடிவங்களில் ஆயுதங்கள் இருக்க, அவற்றை ஒன்றோடு ஒன்று இணைத்துப் பொருத்தத் தொடங்கினான்.

 

பொருத்தும் போது, அவனுடைய பார்வை அடிக்கடி நாலா பக்கமும் சுத்தி வந்தது. எதிரிகள் அருகே வருகிறார்களா என்பதை மிகக் கவனமாக ஆராய்ந்தவாறு இருக்கக் கரங்களோ தம்போக்கில் ஆயுதங்களின் பாகங்களை ஒன்றோடொன்று இணைத்துக்கொண்டிருந்தன. கிட்டத்தட்ட மூன்று நிமிடங்களில் நான்கு விதமான ஆயுதங்களைப் பூட்டி நிறைவு செய்திருந்தான்.

 

பூர்த்திசெய்த எம் 16 இற்கு சைலன்சரைப் பூட்டித் தோளில் மாட்டிக்கொண்டான். மிகச் சக்திவாய்ந்த நவீன ரகக் குறுக்கு வில்லை (crossbow) மறுபக்கத் தோளில் மாட்டினான். வில்லுக்குத் தேவையான அம்புகளைப் பின் புறம் செருகியவன், இரண்டு பக்கமும் அதிநவீன கைத்துப்பாக்கிகளைக் கொளுவி எஞ்சியவற்றைப் பைக்குள் வைத்து மூடியவன், அதையும் முதுகில் கொழுவியவாறு சருகின் சத்தம் கூடக் கேட்காத அளவுக்கு  மெதுவாக நடக்கத் தொடங்கினான்.

 

சற்றுத் தள்ளி இருவர் நடந்து வருவது தெரிய மரத்திற்குப் பின்னால் பதுங்கிக்கொண்டவன், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைச் சற்று எட்டிப் பார்த்தான். அவர்கள் இயற்கைக் கடன் கழிக்க வந்திருப்பது புரிய, அவர்கள் அவனைத் தாண்டிச் செல்லும் போது, இருட்டின் உதவியோடு மரத்தோடு மரமாக ஒட்டி நின்றவன், அவர்கள் சற்றுத் தள்ளியிருந்த புதர்களுக்குப் பின்னால் ஒதுங்கியதும், வேறு யாரும் வருகிறார்களா என்று அவதானித்தான். யாருமில்லை. அடுத்த விநாடி அவர்களுக்குப் பின்னால் நின்றிருந்தான் அநபாயதீரன்.

 

இருவரும் ஏதோ பேசிச் சிரித்துக்கொண்டு சிறுநீர் கழிக்கத் தயாராகிக்கொண்டிருக்க, அதில் ஒருவன், தன் பின்னால் ஏதோ அரவம் கேட்க, வந்த வேலையை விட்டுவிட்டு, யோசனையுடன் திரும்பிப் பார்த்ததுதான் தெரியும். திடீர் என்று ஒன்றரைட் டண் பலத்துடன் அவன் முகத்திலும், கழுத்திலும் மார்பிலும் குத்து விட, அந்தக் கணமே உலகம் இருண்டு தரையில் விழுந்தான்.

 

அதிர்ந்து போன, மற்றவன் சுதாரித்து அநபாயதீரனைத் தாக்க வர, இலகுவாக அவன் தாக்குதலிலிருந்து விலகியவன், சடார் என்று பாய்ந்து எதிரியின் வாயைப் பொத்தி, தன் இடக்காலால், அவனுடைய முழங்காலின் பின்புறத்தில் ஒரு அடி கொடுக்க, அவன் மடங்கி அமர்ந்தான். அந்தத் தருணம், எதிரியின் வாயிலிருந்து தன் கரத்தை எடுத்தவன், அவனுடைய தலையைப் பற்றி ஒரு திருப்புத் திருப்ப, தலை திரும்பியவாறே இரத்தம் கக்கத் தரையை  முத்தமிட்டான்.

 

பின் வேகமெடுத்த அநபாயதீரன், கொஞ்சத் தூரம் ஓடிப் போனவன் யாருடையதோ தலை தெரிவது போலத் தோன்ற இன்னொரு மரத்திற்குப் பின்னால்  பதுங்கி நின்றவாறு எட்டிப் பார்த்தான்.

 

மூன்று பேர், அந்தப் பகுதிக்குக் காவல் காப்பவர்கள் போலும், மாறி மாறி நடந்துகொண்டிருக்க, சத்தம் போடாது தன் தொடையிலிருந்த கத்திகளை இரு கரங்களிலும் உருவி எடுத்தவன், அவர்களை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

 

குறிப்பிட்ட தூரம் வந்ததும் பாய்ந்தவன், ‘சதக் சதக்’ ஒரே நேரத்தில் ஒருவனின் மார்பின் நடுப்பகுதியிலும் இன்னொருவனின் கழுத்திலும் இறக்கியவாறு முன்னால் நின்றவனை ஓங்கித் தன் காலால் உதைய, அவன் நான்கடித் தள்ளிப்போய் மல்லாக்காக விழுந்தான். கண்ணிமைக்கும் நொடியில் குத்திய கத்திகளை உருவி மீண்டும் குத்தியவர்களின் மார்புகளில் இன்னொரு முறை ஆழ இறக்கிவிட்டுத், தள்ளிப்போய் விழுந்தவனை நெருங்கினான்.

 

அவன் ஆவேசத்துடன் துப்பாக்கியை எடுக்க முயல, அநபாயதீரனின் கரத்திலிருந்த இரத்தம் தேய்ந்த கத்தி அவன் தொண்டையில். ஆழ இறங்கியிருந்தது.

 

இந்த சலசலப்புக் கேட்டு மேலும் இருவர் அந்தப் பக்கமாக வர, அவர்கள் வந்த வேகத்தினால் ஏற்பட்ட சலசலப்பை வைத்து, யாரோ வருவதை அறிந்துகொண்டவன், சடார் என்று திரும்பி என்ன ஏது என்பதை உணர்வதற்குள்ளாக தன் கரத்திலிருந்த மறு கத்தியை ஓங்கி வீச, அது கச்சிதமாக ஒருத்தனின் கழுத்தைத் தைத்து நின்றது. அருகே நின்றிருந்தவன் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கப் பாய்ந்தவன், சுழன்று வலக்காலால் அவனுடைய கழுத்தைத் தாக்க, மறுகணம் அவனும் தன் தோழர்களுக்காக உயிரை விட்டான்.

 

சற்றுப் பின்னால் தங்கி வந்துகொண்டிருந்தவன், தன் சகாக்கள் தரையில் விழுந்திருப்பதைக் கண்டு அதிர்ந்துபோய் சிலையெனச் செய்வதறியாது, விழிகள் தெறிக்க மலைத்துப்போய் நின்றவன், அச்சத்துடன் சுத்தவரப் பார்க்க, அதற்குள் இவன் வருவதைக் கண்டு மரத்தின் பின்னால் மறைந்திருந்தவன் சுழன்று திரும்பி, எதிரியின் வாயை இடது கரத்தால் பொத்திக் கை வளைவிற்குள் கொண்டு வந்து, தொடையிலிருந்து ஒரு கத்தியை எடுத்து,  அவனுடைய  மார்பின் கரையோரத்தில் இதயம் நோக்கிச் செலுத்தி, தன் இடது கரத்தால் அதன் பிடியில் ஓங்கி அடிக்க அந்தக் கத்தி முழுவதுமாக இதயத்தைக் கிழித்துக்கொண்டு உள்ளே இறங்கியது. அவன் கத்தமுடியாது துடிக்க, இவன் குத்திய கத்தியை வெளியே எடுத்துவிட்டுக் கரத்தை விடுவித்த உடன் தரையில் சரிந்தான். அவன்,

 

அவர்களால் இனி ஆபத்தில்லை என்பதை உறுதிசெய்தவன், கையிலிருந்த கத்தியை வைக்காமலே,  பதுங்கும் புலிபோல, எந்தச் சத்தமும் எழுப்பாமல் பாய்ந்து முன்னேறத் தொடங்கினான்.

 

சற்றுத் தொலைவில் வெளியே நெருப்பை எரித்துவிட்டுக் கொஞ்சப்பேர் குளிர் காய்ந்து கொண்டிருப்பது தெரிய, எப்படியும் அவர்களைச் சுற்றி ஆட்கள் இருப்பார்கள் என்பதை ஊகித்தவன், அருகேயிருந்த உயரமான மரத்தை அண்ணாந்து பார்த்தான்.

 

திருப்திப் பட்டவனாக, கையிலிருந்த கத்தியைப் பட்டியில் சொருகிவிட்டு, இலைகளை உதிர்த்திருந்த அந்த மொட்டை மரத்தைப் பிடித்தவாறு, சேர்க்கஸ் வீரன் போல மேலே ஒடி ஏறத் தொடங்கினான். அதற்கேற்ப கைகளும் மேலேறி, மேலேறிச் சென்றன. ஒரு குறிப்பிட்ட தூரம் ஏறியதும் நின்றான்.

 

இடக் கரத்தை விலக்கி, தன் இடையிலிருந்த பட்டியை அவிழ்த்து, அதைப் பெரிதாக்கி மரத்தோடு தன்னை பிணைத்துக் கட்டினான். இப்போது அவன் இரு கால்களும் மரத்தை அணைத்தவாறு ஒன்றோடு ஒன்று செருகி இணைந்திருக்க, பாதுகாப்புப் பட்டி மரத்தோடு இடையை இறுக்கியிருக்க, இப்போது எந்தப் பிடிமானமும் இல்லாமல் கரங்களை மரத்திலிருந்து விடுவித்தான் அநபாயதீரன்.

 

அதுவரை அணிந்திருந்த கண்ணடியைக் கழற்றி, நெற்றி மேல் கொண்டு சென்று விட்டவன், தன் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தொலைநோக்கியை எடுத்துக் கண்ணில் பொருத்தினான். அதன் கண்ணாடி வில்லை, தொலைவிலிருந்த உருவங்களைச் சிவப்பும் மஞ்சளும் கலந்த உருவங்களாகக் காட்டின.

 

கிட்டத்தட்ட முப்பது பேர் அந்தச் சுற்று வட்டாரத்தில் நின்றிருந்தனர். எத்தனை பேர் எங்கெங்கு இருக்கிறார்கள் என்பதைக் குறித்துக்கொண்டவனுக்கு அவர்களைத் திசைதிருப்ப வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டான். அப்போதுதான் அவர்களை வீழ்த்துவது சுலபமாக இருக்கும். அதே நேரம், அவன் இருந்த மரத்தடியை நோக்கி, நான்கு பேர் எதையோ தேடிக்கொண்டு வந்தனர். அதில் ஒருவன்,

 

“விக்டர்… வெயர் ஆர் யு…” என்று கத்த, சற்று முன் தன் கரத்தால் மரணித்தவர்களைத் தேடி வருகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட அநபாயதீரன், சற்றும் தாமதிக்காமல் தன் ஒரு தோளில் தொங்கிக்கொண்டிருந்த குறுக்குவில்லை எடுத்தான். அதில் ஏற்கெனவே ஐந்து அம்பு பொருத்தப்பட்டிருக்க, ஒன்றை எடுத்து, வில்லில் வைத்துக் குறிபார்த்தான்.

 

வசமாக ஒருவன் முன்னால் வர, அவனுடைய கழுத்தை நோக்கி அம்பை ஏவ, அது நச் என்று அவனுடைய கழுத்திற்குள் செருகி வெளிப்பக்கம் வந்து அப்படியே நின்றது.

 

மற்றவர்கள், அதிர்ந்துபோய், அம்பு எங்கிருந்து வருகிறது என்று புரியாமல் நின்றிருந்த நேரத்தில் இருவரின் தலையிலும் அம்புகள் ஏறியிருந்தன. மீண்டும் திரும்பி நெருப்பு எரியும் திசையைப் பார்த்தான்.

 

எப்படி வீழ்த்தவேண்டும் என்கிற யுக்தி உதயமாக, மரத்தோடு கட்டியிருந்த பட்டியை அவிழ்த்து, வெண்ணெய்யில் வழுக்குவது போல, மரத்திலிருந்து வழுக்கித் தரையில் இறங்கினான்.

 

எதிரிகளின் கவனத்தைத் திருப்பாத வகையில் அவர்களைத் துவசம் செய்யவேண்டும். அதற்குக் குறுக்கு வில்தான் ஏதுவாக இருக்கும் என்று எண்ணியவன், தன் குறுக்கு வில்லை முன்னால் பிடித்தவாறு புயல் வேகத்தில் ஓடி, ஒரு மரத்தின் பின்னால் நின்றான்.

 

தன் பான்ட் பாக்கட்டிலிருந்து, ஒன்றிரண்டு மாபிள்களை எடுத்தவன், அதைத் தான் நின்ற இடத்திற்குச் சற்றுத் தள்ளி எறிய. அவ்விடத்தில் சிற சலசலப்பு ஏற்பட்டது. அந்த சலசலப்பில், நெருப்பில் நின்றவாறு குளிர்காய்ந்துகொண்டிருந்தவர்கள், தமது கவனம் கலைந்து திரும்பிப் பார்த்தனர்.

 

அதில் இருவர் என்ன சத்தம்? என்று பேசியவாறு, அந்தப் புதர் நோக்கிச் செல்ல, அநபாயதீரன் குனிந்து பதுங்கியவாறு அந்தப் புதரை நோக்கி ஓடினான்.

 

புதருக்குள்ளே வந்தவர்கள் என்ன சத்தம் என்பதைத் தேடிக்கொண்டிருக்கும் போதே, இருவரின் கழுத்தையும் தன் இரு கை வளைவுகளிலும் கொண்டு வந்து, அவர்களின் வாயைத் தன் பலம் பொருந்திய கரத்தால் பொத்தியவாறு, இருவரின் தலைகளையும் பலம் கொண்ட மட்டும் மேத, பொறிகலங்கியவர்கள், தமது தலையைப் பிடித்தவாறு சுதாரிக்க முயன்ற கணம், அநபாயதீரனின் கராத்தே பயின்ற கரங்கள் கத்தியென அவர்களின் கழுத்தில் படிய, குரல்வளை உடைந்து, சத்தம் போட முடியாது, கீழே விழுந்தனர்.

 

இந்தச் சண்டையில் ஏற்பட்ட அதீத சலசலப்பால் சந்தேகம் ஏற்பட, அந்தக் குழுவுக்குத் தலைவன் போலும், அவன் என்ன நடக்கிறது என்று பார்க்குமாறு நால்வரை அனுப்பிவிட, புதருக்குள்ளே சென்ற நால்வரும் திரும்பி வரவேயில்லை.

 

ஏதோ சரியில்லை என்பதைப் புரிந்துகொண்ட அந்தத் தலைவன், குழப்பத்துடன் தன் துப்பாக்கியை, உயர்த்திப் பிடித்துக்கொண்டு புதருக்குள்ளே நுழைய, அவனுடைய கூட்டாளிகளும் தலைவனைப் பின்பற்றத் தொடங்கினர்.

 

முன்னால் சென்ற தலைவனின் காலில் எதுவோ தட்டுப்பட, என்னவாக இருக்கும் என்று குனிந்து பார்த்தான்.

 

குனிந்து பார்த்தவன் பேச்சற்றுப் போனான். காலின் கீழ் அவனுடைய ஆட்கள் மடிந்து கிடந்தனர். அதைக் கண்டதும் அச்சம் பெருக, கரங்கள் நடுங்கத் தன் துப்பாக்கியை மேலும் கவனமாகப் பற்றி, எதிராளியைச் சுடுவதற்குத் தயாராக இருக்க, அவரோடு இணைந்து வந்த மற்றைய கூட்டாளிகள் ஒவ்வொருவரும், ஒன்றின் பின் ஒன்றாக மாயமாக மறைந்து போகத் தொடங்கினர்.

 

கடைசியில் தனித்து நின்ற அந்தத் தலைவனின் பயம் மேலும் அதிகரிக்க, எந்தப் பக்கத்தில் அநபாயதீரன் நிற்கிறான் என்பது கூடத் தெரியாமல், தவித்தவன், ஒரு பக்கம் நிழல் அசைய, அச்சத்துடன் அந்த நிழலை நோக்கிச் சுட்டான்.

 

துப்பாக்கிச் சத்தம் கேட்டதும், தன் பல்லைக் கடித்த அநபாயதீரன், “டாமிட்…” என்றவாறு அந்தத் தலைவனின் முன்னால் வந்து நின்று அவன் கரத்திலிருந்த துப்பாக்கியைப் பற்றி ஒரு திருப்புத் திருப்ப. இப்போது துப்பாக்கி இவன் கரத்தில் வீற்றிருந்தது.

 

நிச்சயமாக இந்தத் துப்பாக்கிச் சத்தத்திற்கு, அந்தப் பகுதியில் இருக்கும் எஞ்சிய கூட்டாளிகள் வந்துவிடுவார்கள்… எரிச்சலுடன், தன் கத்தியை வெளியே எடுத்து, அந்தத் தலைவனின் இறுதி மூச்சை எடுத்தவன், சற்றும் தாமதிக்காமல் மின்னல் விரைவுடன் அம்பையும் வில்லையும் எடுத்துக்கொண்டு முன்னேறத் தொடங்கினான்.

 

அவன் நினைத்ததுபோலவே, துப்பாக்கிச் சத்தம் கேட்டதும், அனைவரும் சுதாரித்து, தமது ஆயுதங்களை ஏந்தியவாறு, சத்தம் வந்த திசையை நோக்கி வரத் தொடங்கினர்.

 

உடனே அநபாயன், தன் கண்ணுக்குத் தெரிந்தவர்களை நோக்கி அம்பை மழையெனப் பொழியத் தொடங்க, அவன் எய்த அம்பு கண்ட மேனிக்கு ஒவ்வொருவரின் உடல் பாகத்திலும் சத்தமின்றி ஏறத் தொடங்கியது. அந்த அம்பில், பூசப்பட்டிருந்த கடும் நஞ்சு, அவர்களை மறு பேச்சுப் பேசுவதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை.

 

தன்னிடமிருந்த இறுதி அம்பையும் பிரயோகித்தவன், இனி அந்தக் குறுக்கு வில்லால் பயனில்லை என்பதைப் புரிந்து அதை ஒரு எறிந்துவிட்டு, தன் தொடையிலிருந்த கத்தியை எடுத்து, மேலும் முன்னேறத் தொடங்கினான்.

 

எந்த எதிரிக்கும் அவன் யோசிக்க அவகாசம் கொடுக்கவேயில்லை. எத்தனை பேர் வீழ்ந்தார்கள் என்பதைக் கணக்கெடுக்க அவனுக்கு நேரமிருக்கவில்லை.

 

இறுதியாக அந்தக் கட்டடத்தின் அருகே வந்தான். பாதுகாப்புக் கருதிச் சுற்றிவர ஆறடியில் மதில் கட்டியிருந்ததால், மதிலோரம் ஒட்டி நின்றவன், தன் சைலன்சர் பொருத்திய கைத்துப்பாக்கியை கரத்தில் எடுத்துக்கொண்டான்.

 

சுற்றிவர விளக்குகள் போடப்பட்டிருந்தால், அனைத்தும் தெளிவாக இருந்தது. இனி இருட்டை வெளிச்சமாக்கும் கண்ணாடி தேவையில்லை என்பதால், அதையும் கழற்றித் தன் இடையில் கட்டியிருந்த ஒரு பையில் சொருகிவிட்டு, மதிலின் மேல் மட்டத்தைப் பற்றி, எம்பி, மெதுவாகப் பாய்ந்து கீழே விழும்போது சிறிதும் சப்தம் எழுப்பாது விழுந்தான். விழிகளால் சுற்று முற்றும் ஆராய்ந்தான்.

 

துப்பாக்கி தரையை நோக்கியிருக்குமாறு இரு கரங்களாலும் அழுந்தப் பற்றியவன், மெதுவாக முன்னேறி, அந்தக் கட்டடத்தை அலசி ஆராய்ந்து பார்த்தான். அவனுடைய விழிகள் கூர்மையாக சில இடத்தில் நிலைத்துப் பின் ஆராய்ந்தன.

 

கிட்டத்தட்ட பத்துபேர்…  நேர் வலம், இடம், இடம், வலம், இடம்… வலம் நேர் இடம் இடம்… மனத்திற்குள் ஒவ்வொன்றாகக் கணக்குப் போட்டவன், தன் துப்பாக்கியைக் கண்ணுக்கு நேராகத் தூக்கிப் பிடித்துக் கூர்மையாக அவதானித்த இடங்களை நோக்கிக் குறி பார்த்துச் சுட்டவாறு நடக்கத் தொடங்கினான்.

 

சைலன்சர் பொருத்தப் பட்ட துப்பாக்கியிலிருந்து டப் டப் டப் என்கிற சத்தத்துடன், பாய்ந்த குண்டுகள் கச்சிதமாக அவன் குறிபார்த்த இடத்தில் நின்றிருந்த எதிரிகளின் மீது  பாயத்தொடங்கின. தமக்கு என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள்ளாகவே அவர்கள் ஒவ்வொரு கோணத்தில் இறந்து விழுந்தனர்.

 

இப்படி ஒவ்வொன்றாக அவன் வீழ்த்திக்கொண்டு வந்த வேளையில் பின் புறமாக ஒருவன் தன்னைக் கவனித்து விட்டான் என்பதை உணர்ந்து, எதிரி வேகமாகத் தன் துப்பாக்கியைத் தூக்கி, இவனைச் சுட முயல்வதற்குள், கண்ணிமைக்கும் நொடியில், திரும்பியவனுக்கு, அவன் நின்ற இடம் சரியாகத் தெரியவில்லை. ஆனாலும் அவன் எந்தத் திசையில் இருக்கிறான் என்பதை ஊகித்து, இடப்புறமாகச் சரிந்து பாய்ந்தவாறு தன் துப்பாக்கி விசையை அழுத்த, எதிரி, நெற்றியில் இரத்தம் கசிய, பின்புற மண்டை சிதறத் தரையில் குப்புற விழுந்தான்.

 

அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது என்பது அநபாயதீரனுக்குப் புரிந்தது. எந்த நேரத்திலும் முக்கியமான எதிரிக்குத் தகவல் போயிருக்கும். அதை உண்மையாக்குவது போல, சிலர் அவன் பக்கமாக ஓடி வந்தனர்.

 

தேவையற்றுத் துப்பாக்கிகளின் குண்டை விரயமாக்கக் கூடாது என்று எண்ணியவன், அவற்றை மீண்டும் இடையில் சொருகிவிட்டுத் தன் பையில் போட்டிருந்த மாபில்களை ஓடிவந்த எதிரிகளை நோக்கித் தரையில் போட, அது உருண்டு சென்று முன்னால் ஓடிவந்தவர்களின் காலில் மோத, அதைக் கவனிக்காமல் அவர்களும் கால்வைக்க, அந்த மாபில் வஞ்சகமில்லாமல் அனைவரது காலையும் வாரிவிட்டது.

 

அவர்கள் வந்த வேகத்திற்குச் சமப்படுத்த முடியாமல் தரையில் விழ, சுழன்று அவர்களின் அருகே வந்தவன் தன் தொடையிலிருந்து கத்திகளை இரு கரங்களிலும் இழுத்து எடுத்து, ஒருவனின் மார்பிலும், இடையிலும் செலுத்தி, மற்றவனின் கழுத்தில் வெட்டி, இன்னொருவனின் வயிற்றில் சொருகி அதை அப்படியே மேலாக இழுத்து, விடுவித்து மார்பைக் குத்தி, அருகே நின்றவனின் கரையோரத்து மார்பினூடாகக் கத்தியைச் சரித்து இதயத்தினை நோக்கிச் செலுத்தி விடுவித்துக் கூடவே, எதிர் புறமாக நின்றவாறு இவனைச் சுடுவதற்குக் குறிபார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்ணிமைக்கும் நொடியில், வலது கரத்திலிருந்த கத்தியைச் சுழற்றி அவனை நோக்கி வீசக் குறி அச்சரம் பிசகாமல் கழுத்துக் குழியை அறுத்துக்கொண்டு உள் நுழைந்த போது, அத்தனை பேரையும் சரிக்க வெறும் இரண்டே நிமிடங்கள்தான் எடுத்தன.

 

இன்னொரு பக்கத்திலிருந்து அவனை நோக்கி ஆக்ரோஷமாக இருவர் ஓடிவர, தன் கரத்திலிருந்த ஒரு கத்தியாலும், தொடையிலிருந்து ஒரு கத்தியையும் உருவி அவர்களை நோக்கிப் படு வேகமாக வீச, அது குறி தப்பாமல் அவர்களின் நெஞ்சைப் பிளந்து குத்தி நின்றன. அவர்களை நெருங்கியவன், குத்திய கத்திகளை உருவி எடுத்தவாறு,

 

“ப்ளீஸ்… டோன்ட் மெஸ் வித் மி…” என்றுவிட்டு, முன்னோக்கிப் போகத் தொடங்கினான்.

 

அதற்கிடையில் அவன் தங்கள் கட்டடத்திற்குள் நுழைந்துவிட்டான் என்கிற செய்தி, பரவத் தொடங்க, எஞ்சியிருந்தவர்கள், உசாராகி, ஒவ்வொரு திக்காக ஓடிவரத் தொடங்கினர்.

 

ஒருவன் அநபாயதீரனைக் கண்டதும், தாமதிக்காமல் தன் துப்பாக்கியின் குண்டைத் துப்ப, அது அவனுடைய கரத்தின் மேற்புறத்தை உரசிக்கொண்டு சென்றது.. அதிலிருந்து லாகவமாகத் தப்பித்த அநபாயதீரன் தன் காயத்தை அலட்சியம் செய்து, வேகமாக அங்கிருந்த ஒரு சிவரின் பின்னால் மறைந்து நின்றான்.

 

தன் கத்திகளை அதன் இடத்தே வைத்துவிட்டுத் தன் எம் 16 ஐக் கரத்தில் எடுத்து அதன் பிடி, தோளில் தாங்கி நிற்குமாறு பிடித்தவன், குறிபார்த்து, பட பட என்று சுடத் தொடங்கினான். அவனுடைய குறி எதுவும் தப்பாமல் ஒவ்வொரு திக்கிலும் ஒவ்வொருவராக மடியத்தொடங்கினர்.

 

அவனுடைய அசுரத் தாக்குதலுக்கு எதிரிகளால் பதில் சொல்ல முடியாமல் போனது, அவனுடைய திறமையா, இல்லை அவர்களுக்குப் போதாமல் இருந்த பயிற்சியா? இல்லை அவனால் தம்மை ஒன்றும் செய்துவிட முடியாது என்கிற அலட்சியமா?

 

அவனை நோக்கி மீண்டும் தோட்டாக்கள் பாய்ந்து வர, அடுத்த குழு வந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டவன், அருகேயிருந்த ஒரு தூணின் பின்னால் பாதுகாப்பிற்காக நின்று கொண்டவாறு தன்னை நோக்கிச் சுட்ட எதிரிகளுக்குப் பதில் கொடுத்துக்கொண்டும் இருந்தான் அநபாயதீரன்.

 

அதே நேரம் திடீர் என்று அவன் பின் புற மண்டையில் ஒரு துப்பாக்கி அழுத்தி நின்றது. தன் கரத்திலிருந்த துப்பாக்கியைக் கைவிட்டவன், கண்ணிமைக்கும் நொடியில், தன் கரத்தை மடக்கி, முழங்கையால், ஓங்கி எதிரியின் மார்பைக் குத்திவிட்டு, வேகமாகத் திரும்பி, துப்பாக்கி ஏந்தியிருந்தவனின் கரத்தைப் பற்றி ஒரு திருப்புத் திருப்ப, இப்போது அந்தத் துப்பாக்கி அநபாயதீரனின் கரத்தில் வீற்றிருந்தது. பார்க்கும்போது அவன் அடித்துப் பெற்றதுபோலத் தெரியவில்லை. ஏதோ கேட்டு வாங்கியதுபோலத் தோன்றியது. அத்தனை சுமுகமாக  இருந்தது அந்தத் துப்பாக்கி அவன் கைக்கு வந்தபோது,

 

(46)

 

தன்னவனின் வரவுக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த சிவார்ப்பணாவின், பரவசத்தைக் கலைப்பதுபோல, அவளுடைய அறைக் கதவு படார் என்று திறக்கத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் சிவார்ப்பணா.

 

வந்தது ராகவன்தான். அவருடன் கூடவே இருவர் நின்றிருக்க, அவர்களைப் பார்த்துக் கண்ணால் எதையோ கூற, வேகமாக அவளைக் கட்டியிருந்த கயிற்றை அவர்கள் அவிழ்த்து விட்டனர். அவிழ்த்து விட்டதும், சிவார்ப்பணாவின் மேல்க் கரத்தில் தன் கரத்தை முரட்டுத்தனமாகப் படித்து, எழுப்பி விட, ஒருவன் அவளுடைய கரங்களைப் பலமாக இழுத்துப் பின் புறமாகக் கட்டினான்.

 

அவன் இழுத்த வேகத்தில், தன் கரங்கள் கழன்று விட்டதோ என்கிற அச்சம் அவளுக்கு எழுந்தது. தொடர்ந்து அவளைத் தர தர என்று இழுத்தவாறு வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்து ஆறு வெள்ளையர்கள் ராகவனிற்குக் காவலாக நின்று கொண்டனர்.

 

ராகவனால் வெளியே இழுத்து வரப்பட்ட சிவார்ப்பணா தரையில் சிந்தியிருந்த குருதியும், கிடந்த உயிரற்ற பிணங்களையும், கூடவே வலியில் துடித்துக்கொண்டு குற்றுயிராய் இருந்த மனித உடல்களையும் கண்டு முதலில் அதிர்ந்து பின் உள்ளம் துள்ளத் தன் விழிகளால் அநபாயதீரனைத் தேடினாள்.

 

வந்துவிட்டான்… அவளவன் வந்துவிட்டான்… இதோ அவனுடைய சுவாசக் காற்று நான் சுவாசிக்கும் காற்றோடு கலந்திருக்கிறது. அவன் விட்ட சுவாசக் காற்றைத்தான் நான் இப்போது சுவாசிக்கிறேன்… என் தீரன்… என் பக்கத்தில், கையெட்டும் தொலைவில்தான் இருக்கிறான்.

 

தன்னையும் மீறி உதடுகள் மலர விழிகள் அங்கும் இங்கும் அலைந்தன. அவளுடைய திடீர் மலர்ச்சியைக் கண்ட ராகவனுக்குத் தாங்கமுடியாத ஆத்திரம் கொழுந்து விட்டெறிந்தது.

 

சினம் மிகுதியால், அவளுடைய நெற்றிப் பொட்டில் துப்பாக்கியைப் பதித்தவர்,

 

“அநபாயதீரன்… மரியாதையாக வெளியே வா… இல்லையென்றால்… இந்த விநாடியே சிவார்ப்பணாவைக் கொன்று விடுவேன்…” என்று அவர் உறுதியுடன் கூற இதோ வரப்போகிறான் என்கிற எண்ணம் புதிய உற்சாகத்தைக் கொடுக்க, விழிகளை மலர்த்தி சுற்றும் முற்றும் பார்த்தாள்.

 

“ம்… வெளியே வா…” என்று அவர் கொக்கரிக்க, மறு பக்கத்திலிருந்த ஒரு தூணின் பின்னாலிருந்து அவன் வெளியே வந்தான்.

 

அநபாயதீரன்… அவளுடைய அநபாயதீரன்… அவளைக் காக்க, அவளுக்கே அவளுக்காக வந்துவிட்டான். அவளைத் தன் உயிருக்குள் புதைக்க வந்துவிட்டான்… சிவார்ப்பணாவின் மனம் சொல்லமுடியா நிம்மதியில், மகிழ்ச்சியில் நிறைந்திருக்க, விழிகள் கண்ணீரால் நிரம்பின. அவனுடைய முகத்தை விட்டு விழிகளை அகற்ற முடியாது, விட்டால் அவனுடைய கரங்களுக்குள் சென்று அடைக்கலமாகிவிடவேண்டும் என்கிற வெறியில் உடல் முழுவதும் பரபரக்க, அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போதுதான் கவனித்தாள்.

 

“அவனுடைய உடல் முழுவதும் இரத்தம்… ஐயோ… காயப் பட்டிருக்கிறான்… எங்கே…” என்று பரபரப்புடன் தன் விழிகளால் அவன் உடலை அலசினாள். கரிய ஆடை… இருட்டு நேரம்… இருந்தாலும் இரத்தம் தரையில் சிந்துவதை அறிந்துகொண்டவளுக்கு மெய்யது கெட்டது. கண்ணீரோ இரக்கமற்று அவளுடைய பார்வையைத் தடுத்தன. “சே… இந்தக் கண்ணீர் வேறு நேரம் காலம் தெரியாமல்…” என்று சினத்துடன் எண்ணியவளுக்கு வழிந்த கண்ணீரைக் கூடத் துடைக்க முடியாத நிலை.

 

அதே நேரம் அநபாயதீரனும் பெரும் பரிதவிப்புடன் சிவார்ப்பணாவைத்தான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய விழிகள் அவளை, அழுத்தமாக அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தன. அவள் முகத்தின் வீக்கமும், இரத்தக் கறைகளும், கிழிந்துபோயிருந்த உதட்டோரமும், அழுக்காகிக் கிழிந்திருந்த ஆடைகளும். எதுவும் அவன் பார்வையிலிருந்து தப்பவில்லை. எப்படித் தவித்திருப்பாள்… எப்படியெல்லாம் பயந்திருப்பாள்… அதை நினைக்கும்போதே, அவனுடைய விழிகள் மேலும் இரத்த நிறம் கொண்டன. அவளிடமிருந்து தன் விழிகளை விலக்க முடியாமல் அப்படியேத் தன்னை மறந்து நின்றிருந்தான் அந்தத் தீரன்.

 

“ஹாய் யங் மான்… நைஸ் டு சீ யு…” என்று அந்த ராகவன் கூற, அதுவரை தன்னவளிடம் மட்டும் தன் கவனத்தை வைத்திருந்த அநபாயதீரன், இப்போது தன் கூரிய பார்வையை ராகவன் மீது பதித்தான். அவனுடைய உதடுகளும் மெல்லிய கிண்டலுடனான ஏளனப் புன்னகையைச் சிந்தின.

 

“மீ டூ ஓல்ட் மான்…” என்று கூற, உன்மையாக சிவார்ப்பணா திகைத்தாள்.

 

அவளுக்கே ராகவன்தான் சேவியர் என்பதை இன்னும் நம்பமுடியாமல் இருந்தது. ஆனால் இவன், முதலே தெரியும் என்பது போலச் சர்வசாதாரணமாகப் பேசுகிறானே… அப்படியானால் ஆரம்பத்திலேயே அநபாயதீரனுக்கு இவன்தான் அந்த சேவியர் என்று தெரியுமா?’ திகைக்க, அந்த சேவியரும் தன் திகைப்பை மறைக்க முடியாதவராக,

 

“அதிர்ந்து நிற்பாய் என்று நினைத்தேன்… நாட் பாட்… உன் மனம் உன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது…” என்று சிலாகிக்க, மெல்லியதாக நகைத்த அநபாயதீரன்,

 

“நான் எதற்கு அதிரவேண்டும்…” என்று அநபாயதீரன் புரியாமல் கேட்க,

 

“ஏனா?… அப்பாவி ராகவன், இப்படி இந்த வேலை செய்வேன் என்பதை நீ நினைத்திருக்கமாட்டாயே…” என்று ராகவன் கேட்க,

 

“வெல் ராகவன் செய்திருக்க மாட்டார்தான்… ஆனால் ராகவன் பெயரிலிருக்கும் சேவியர் செய்திருப்பான் என்று எனக்குத் தெரியுமே…” என்று அவன் கூற, முதன் முறையாக அதிர்ந்த நின்றார் ராகவன்.

 

“நான்… சேவியர் என்று… உனக்கு… எப்படித் தெரியும்?” என்று அவர் சீற,

 

“உன் வீட்டிற்கு ரகுவைத் தேடிவந்தேன் என்று நினைத்தாயா? முட்டாள்… ப்ச்.. ப்ச்… இல்லை சேவியர், உன்னைப்பற்றித் துப்புத் துலக்கவே வந்தேன்…” என்று அநபாயதீரன் கூற,

 

“என்ன உளறுகிறாய் நீ…” என்றார் ராகவன் கோபத்துடன்.

 

“உளறுகிறேனா… இல்லை சேவியர்… நான் உண்மையைத்தான் சொல்கிறேன்… ரகுவைப் பற்றி விசாரணையில் இறங்கியபோது, உன்னைப் பற்றிய விசாரணையில் இறங்காமல் இருப்பேன் என்று நினைத்தாயா? ரகுவின் அதிநவீன ஏவுகணை செய்வதற்குக் குறைந்த பட்சம் நாற்பதாயிரம் டாலர்கள் வேண்டும். ராகவன் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர், அவர் மகனுக்கு ஏவுகணை செய்யும் அளவுக்கு வசதி எங்கிருந்து வந்தது? இதை நான் யோசித்திருக்க மாட்டேனா? ரகு தன் பெயரில் எந்தக் கடனும் எடுக்கவில்லை. யாரும் அவனுக்குப் பணம் கொடுக்கவுமில்லை… அந்த பணத்தை கொடுக்கவேண்டிய வாமதேவன் கொடுக்கவில்லை… ஐ மீன் கொடுக்க தேவைப்படவில்லை. ஏன் என்றால் முந்திரிக்கொட்டைத் தனமாய் நீ அல்லவா கொடுத்தாய்.  நீ ஒரு முட்டாள் சேவியர். இல்லையென்றால் உன் வங்கியிலிருந்தே பணம் எடுத்துக் கொடுத்திருக்க மாட்டாய். அதுவும் கிடத்தட்ட ஐம்பதினாயிரம் டாலர்கள் கடனில் இருப்பவனுக்கு இந்த நாற்பதாயிரம் டாலர்கள் எங்கிருந்து வந்திருக்கும். யோசித்திருக்க மாட்டேனா? அந்தளவு முட்டாளா நான்? இது போதாதா எனக்கு உன்னைச் சந்தேகப்பட. அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேயத்தொடங்கினேன்… உன்னுடைய கணினியை ஊடுருவிப் பார்த்தேன்… அப்போதுதான் நீ முழுதாக சிக்கினாய்… ஐந்து பில்லியன் அமரிக்கன் டாலர் பெறுமதியான பிட்காய்ன் (Bitcoin) வைத்திருப்பதைக் கண்டுபிடித்தேன். ஐம்பதினாயிரம்  டாலர் கடனை அடைக்க முடியாமல் திண்டாடும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த உன்னிடம் ஐந்து பில்லியன் டாலர்களுக்கான பிட்கொய்னா? ஆச்சரியமாக இல்லை…” என்று கூறியவன்…

 

“பிறகென்ன… அதிலிருந்து தொடங்கி, உன் ரஷ்யா குடும்பம் வரை கண்டுபிடித்தேன். ஆ… சொல்ல மறந்துவிட்டேனே… உன் மகனையும் கண்டுகொண்டேன் சேவியர்…” என்று கூற, இப்போது அந்த சேவியர் அதிர்ந்து போய் நின்றார் என்றார், சிவார்ப்பணா, தலை சுற்றிப்போய் நின்றாள்.

 

அநபாயதீரனோ, இதற்கு மேலும் பொறுமைகாக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டவனாக,

 

“இனி நீ தப்ப முடியாது சேவியர்… பேசாமல் சரண்டரானால், ஆயுள் தண்டனையோடு இங்கே உயிரோடு இருப்பாய்… இல்லை…” என்றவாறு அநபாயதீரன் ஓரடி முன்வைக்க முயல, அவனுடைய நோக்கத்தைப் புரிந்துகொண்ட ராகவன், சிவார்ப்பணாவை இழுத்துத் தன் முன்னாக நிறுத்தித் துப்பாக்கியை அவளுடைய கழுத்தின் கரையோரமாகப் பிடித்து,

 

“நில்… ஒரு அடி… ஒரு அடி நீ முன்னால் வைத்தாலும் இவளுடைய உயிரை எடுத்துவிடுவேன்…” என்று எச்சரிக்க ஒரு கணம் ஆடாமல் அப்படியே நின்றான் அநபாயதீரன்.

 

“ம்… உன்னுடைய துப்பாக்கிகளைக் கீழே போடு…” என்று ராகவன் உத்தரவிட, அச்சத்தில் மூச்சடக்க மறந்தவளாக நின்றிருந்த சிவார்ப்பணாவைப் பார்த்து விழிகளாலேயே தைரியம் கொடுத்தவன், தயங்காமல் தன் ஆயுதங்களைக் களைந்து ஓரமாகப் போட்டான்.

 

ராகவன் திருப்தி பெறாதவராகத் தன் அருகேயிருந்த இருவரைப் பார்த்துக் கண் காட்ட, அவர்கள் விரைந்து அநபாயதீரனை நெருங்கி, அவனைக் கவனமாகப் பரிசோதித்தனர்.

 

வந்த கோபத்திற்கு அவர்களைத் தன் கை வளைவில் எடுத்துக் கழுத்தை முறித்து உடைத்து விடவேண்டும் என்கிற ஆத்திரம் எழுந்தது. ஆனால் இது அதற்குரிய நேரமல்ல என்பதால் அமைதி காத்தான். அவன் தனி ஒருவனாக இருந்திருந்தால், நிச்சயமாக நினைத்ததைச் செய்திருப்பான். ஆனால் பணையக் கைதியாக சிவார்ப்பணா இருக்கும் போது, அவன் இடரை விலைகொடுத்து வாங்கத் தயாராக இல்லை.

 

அவனைப் பரிசோதித்தவர்கள் இறுதியாக, அவனுடைய கைப்பேசியையும், மினி மௌஸ் கைக்கடிகாரத்தையும் எடுத்து ராகவனிடம் நீட்ட, அந்தக் கைக்கடிகாரத்தைக் கண்ட ராகவனின் முகத்தில் எள்ளல் நகையொன்று உற்பத்தியானது.

 

“உன்னுடைய வயதுக்கு இந்தக் கைக்கடிகாரம் எதற்கு?” என்று கிண்டலுடன் கேட்டவர், பின், “எங்கே அந்தப் பென் ட்ரைவ்?” என்றார் தன் புன்னகையைத் தொலைத்து.

 

சற்று நேரம் அமைதி காத்தவன், தருகிறேன்… அதற்கு முதல், சிவார்ப்பணாவை விடு…” என்று கறாராகக் கூற, ராகவனோ, கிண்டலுடன் சிவார்ப்பணாவைப் பார்த்து,

 

“என்னம்மா… அதிக சூடாக இருக்கிறானே…” என்று கிண்டலடித்தவர், பின் அநபாயதீரனைப் பார்த்து,

 

“மரியாதையாக பென்ட்ரைவைத் தா… இல்லை…” என்று மேலும் துப்பாக்கியை அழுத்த, தன் பல்லைக் கடித்துத் தன் கோபத்தை அடக்க முயன்றவனுக்கு இப்போதைக்குச் சிவார்ப்பணாதான் முக்கியம் என்பது புரிய,

 

“அதைத்தான் கையில் வைத்திருக்கிறாயே…” என்றான்.

 

“வட்…”

 

“அந்தக் கைக்கடிகாரத்தில்தான் பென்ட்ரைவ் இருக்கிறது…“ என்றதும், நம்ப முடியாதவராக, அதைத் தூக்கிப் பார்த்தார்.

 

“இதிலா இருக்கிறது?“ என்று கேட்டவர், புரியாமல் அநபாயதீரனைப் பார்க்க அவன் அமைதியாக நின்றான்.

 

“இதை எப்படித் திறப்பது… எங்கிருக்கிறது… பென்ட்ரைவ்…“ என்று அவர் கேட்க, தன் இதழ்களை அழுந்த மூடியவாறு ராகவனை வெறித்தான் அவன்.

 

“கேட்கிறேன் அல்லவா… சொல்… “ என்று இவர் சீற,

 

“சொல்கிறேன்… முதலில் சிவார்ப்பணாவின் கைக்கட்டை அவிழ்த்துவிடு…“ என்று கூற, ராகவன் என்ன செய்வது என்று சற்றுத் தடுமாறினார். அவர் தடுமாற்றத்தைக் குறுத்துக்கொண்டவனாக,.

 

“லிசின்… உனக்கு இது திறப்பதற்கு உதவி செய்கிறேன்… அவளை விடு…“ என்று பேரம் பேச, வேறு வழியில்லாமல் அவனை நோக்கி சிவரப்பனாவை   தள்ளி விட்டார்.

 

தள்ளப்பட்ட வேகத்தில், அவள் தன்னை நிலைப்படுத்த முடியாமல் தடுமாறித் தரையில் விழப்போக, அவள் நிலத்தைத் தொடுவதற்குள்ளாக  பாய்ந்து  தாங்கிக்கொண்ட நேரம் பின் புறமாக நின்றவனின் துப்பாக்கி இவனுடைய பின் தலையில் அழுத்தமாகப் பதிந்து நிலைத்து நின்றது.

 

இந்தத் துப்பாக்கிக்குப் பயப்படுபவனா அவன். தவிர, உண்மையை அறியும் வரை அவனைக் கொல்லமாட்டார்கள் என்பது நிச்சயம்.

 

அதனால் அநபாயதீரன் எதற்கும் அஞ்சவில்லை. அவசரமாக அவளைத் தன் பிடியிலிருந்து விலக்கியவன், பின்னால் கட்டியிருந்த கயிற்றை வேகமாக அவிழ்த்து எறிந்தான்.

 

கட்டிய அழுத்தத்தில், கரங்கள் கண்டிப் போயிருக்க, இதயத்தில் எழுந்த வலியைச் சிரமப்பட்டு அடக்கியவனாக அவளைத் தன் புறமாகத் திருப்பினான்.

சிவார்ப்பணாவின் விழிகளோ, தாகத்திலிருந்தவனுக்கு மழை கிடைப்பது எத்தகைய வரப்பிரசாதமோ, அதே போல தன் விழிகளை அகற்றாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

அவனோ தன் விழிகளால், அவள் முகம் முழுவதும் ஊர்வலம் நடத்தி, இரண்டு கரங்களாலும் அவளுடைய முகத்தைப் பற்றித் துக்கி, விரல் கொண்டு அவள் முகத்தை வருடிக் கொடுத்தான்.

 

காயம் பட்ட நெற்றி, ஐந்து விரல்கள் பட்டுக் கண்டிய கன்னங்கள், உதட்டோரத்திலிருந்து வழிந்த இரத்தம் என்று தடவியும், அழுத்தியும் கொடுத்துக்கொண்டிருந்தவனுக்கு, மனம் கொதித்துக்கொண்டிருந்தது.

 

கரங்கள், என்னவோ, அவளுடைய காயத்தைத் துடைத்தாலும், மனம் எரிமலையாகக்  கணன்றுகொண்டிருந்ததை , சீறிய சுடு மூச்சிலிருந்தும், அழுத்தமாக இறுகிப்போயிருந்த முகத்திலிருந்தும் தெரிந்தது. அதைக் கண்டவள், தன்னவனின் பரிதவிப்பைப் புரிந்துகொண்டவளாக, அவன் கன்னத்தில் தன் நடுங்கும் கரத்தைப் பதித்து,

 

“எனக்கொன்றுமில்லை தீரா… அதுதான் நீங்கள் வந்துவிட்டீர்கள் அல்லவா… இனி எனக்கு ஒன்றுமாகாது…“ என்று புன்னகையுடன் முகம் மலரக் கூறியவளை வலியுடன் பார்த்தான் அவன்.

 

அவள் எப்படியெல்லாம் துடித்திருப்பாள் என்பதை எண்ணும்போதே இவனால் தாளவில்லை. அவளைக் காயப்படுத்தியவர்களை நினைக்கும்போதே கோபத்தில் அவனுடைய இதயம் வெடித்துவிடும் போல வேகமாக அடித்தது. அதற்கு மேலும் பொறுக்க முடியாதவனாக, தன்னவளின் முகத்திலிருந்து தன் விழிகளை விலக்காமலே,

 

“இவளின் உடம்பில் சிறிய கீறல் இருந்தாலும் உன்னை சும்மா விடமாட்டேன் என்று எச்சரித்திருந்தேன்…. சேவியர்… ஆனால் நீ…” என்று கூறியவன், கண்ணிமைக்கும் நொடியில், தன் பின்னால் நின்றிருந்தவனின் தலையைத் தன் கரத்தால் வளைத்துப் பிடித்து, இழுத்துக் குனிய, அவன் முன்புறம் பொதார் என்று விழுந்த கணம், அவன் கரத்திலிருந்த துப்பாக்கியைப் பறித்து சேவியரின் துப்பாக்கி ஏந்திய கரத்தை நோக்கிச் சுட்டான்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!