Thu. Sep 19th, 2024

தகிக்கும் தீயே குளிர்காயவா 40/41

(40)

 

தன் முன்னால் தலை குனிந்திருந்தவளின் முடியை விலக்கியதும், மேகம் விலகியதும் தெரியும் நிலா போல, அவளுடைய வெண் கழுத்து, அவன் விழிகளுக்கு விருந்தாக, அந்த நிலையிலும் தன்னை மறந்து, அவள் கழுத்தில் வளர்ந்திருந்த பூனை முடிகளை மெதுவாக வருடிக் கொடுக்க, இவளுக்கு உடல் சிலிர்த்தது.

 

அதனால் அவள் மேனி மெல்லியதாக நடுங்க, தன் வெம்மை கொண்ட வலது உள்ளங்கரத்தைக் கழுத்தின் பின் புறத்தில் மெதுவாகப் பதித்துத் தன் பார்வைக்கு வாகாக அவள் கழுத்தை நிலை நிறுத்தித் தன் பெருவிரலாலும், சுண்டு விரலாலும், கடவுச் சொல்லை மறைத்திருந்த முடியை விலக்கி, அதிலிருந்த இலக்கங்களைத் தன் மனதில் பச்சைகுத்தியவன், இடது கரத்திலிருந்த லேசர் இரேசரால் கடவுச்சொல்லைத் தடையமின்றி அழித்தான்.

 

அந்தப் பெரிய கரங்கள் அவள் மீது படும்போதெல்லாம், அவளையும் மீறிய பதற்றமும், பயமும் மாயமாக மறைந்து போக, அந்தக் கரங்களுக்குள் அடைக்கலமாகவேண்டும் என்கிற வெறி கிளர்ந்துவிட்டெரிந்தது.

 

அந்தக் கடவுச்சொல்லை அழிப்பதற்காக அவன் குனிந்திருந்த போது, அவன் சுவாசமென வந்த உயிர் மூச்சு அவளுடைய கழுத்தில் பதமான வெம்மையுடன் பட்டு உரசிச் செல்ல, அந்த இரேசர் கொடுத்த வலி கூட அவளுக்குத் தெரியாமல் போனது.

 

ஒவ்வொரு முறையும் அவன் ஒரு இலக்கத்தை அழிக்கும் போது, ஏற்பட்ட எரிச்சலைச் சமப்படுத்துவது போல, அவனுடைய பெரு விரல், அவள் பட்டுச் சருமத்தை வருடி வருடிக் கொடுத்து, அந்த எரிச்சலைப் போக்க முயன்றது. அந்த வருடலின் சுகத்தில், இன்னும் எத்தனை கடவுச்சொல்லை வேண்டுமானாலும் அவள் பச்சை குத்தி அழிக்கத் தயாராக இருந்தாள்.

 

அதே நேரம், நீண்ட நேரமாகத் தலை குனிந்திருந்தால், கழுத்து மெதுவாக வலிக்கத் தொடங்க, அரைவாசி அழித்த நிலையில், அதை அவனாகவே புரிந்துகொண்டு, இரேசரை மேசையில் வைத்து விட்டு, அவளுடைய கழுத்தின் இரு புறமும் தன் பெரிய வெம்மையான உள்ளங்கைகளை வைத்து, அவளுடைய தலையை நிமிர்த்தியவன், மெதுவாகப் பதமாக அழுத்திக் கெடுக்கத் தொடங்கினான். அந்த இதமான அழுத்தலில் சிவார்ப்பணாவிற்கு விழிகள் கூட சொக்கின.

 

அவனுடைய இரு கரங்களும், மெதுவாகக் கீழிறங்கி, அவளுடைய வெற்றுத் தோளில் படிந்து, அழுத்திக் கொடுக்க, விரல்களோ, அவளுடைய தோல்களின் வழவழப்பை ஆராய்ச்சி செய்வது போல, சற்று அதிகமாகவே தீண்டிப் பார்த்தன.

 

கூடவே, தோளின் கரையோரமாகத் தையலிட்ட இடத்தைச் சுற்றி மெதுவாக வருடிக்கொடுத்தவன், அதைக் குனிந்து அவதானமாகப் பார்த்தான்.

 

அந்தக் காயம், நன்கு காய்ந்திருந்தது. திருப்திப் பட்டவனாக, அவளுடைய மேற்புறத்து கரங்களை அழுத்தி விட்டுக் கொண்டான்.

 

அதோடு நின்றால் பரவாயில்லை… கண்ணுக்குத் தெரிந்த முதுகின் முள்ளந்தண்டில் தன் பெரும் விரலை வைத்து நீவிக் கொடுக்க, சிவார்ப்பணா வானத்தில் பறக்கத் தொடங்கினாள்.

 

இது வரை உருவிவிட்டது போதும் என்று எண்ணியவனாக, தன் வலது உள்ளங்கையால், மென்மையாகப் பின் புறக் கழுத்தை வருடிக் கொடுக்க, இன்னும் மெய் தீண்ட மாட்டானா என்கிற ஏக்கம் சிவார்ப்பணாவின் மனதில் எழுந்து அவளைத் தவிக்க வைத்தது.

 

மீண்டும் இரேசரை எடுத்து, அவளைக் குனியப்பண்ணி மிகுதியையும் அழிக்கத் தொடங்கினான்.

 

அவை முடிகளுக்குள் மறைந்திருந்ததால், மிகக் கவனமாக அழிக்கவேண்டியிருந்தது. ஒவ்வொரு முடியையும் பிரித்துப் பிரித்துச் செய்ததால், சற்று அதிக நேரம் எடுத்தது.

 

அந்தக் கடவுச்சொல்லை வெறுமனே அழித்துவிட்டுச் செல்வதாக இருந்தால் எப்போதோ முடிந்திருக்கும்தான். ஆனால், அவனுக்குத்தான் அவள் கழுத்தடியில் செய்யவேண்டிய பிற வேலைகள் அதிகம் இருந்தனவே…

 

ஒருமாதிரி திருப்திகரமாக அழித்து முடித்ததும், மீண்டும் எங்காவது சிறு புள்ளிகள் விடுபட்டிருக்கின்றனவா என்று நன்கு பரிசோதித்துப் பார்த்தான். இல்லை. திருப்திப்பட்டவனாக,

 

“ஆர் யு ஓக்கே…” என்றான் அழிபட்டதால், சற்றுச் சிவந்துபோயிருந்த, அவளுடைய கழுத்துப் புறத்தை வருடிக்கொடுத்தவாறு.

 

அவளுக்குப் பேச முடிந்தால் அல்லவோ. அவள்தான் இப்போது வேறு உலகில் அநபாயதீரனின் கரங்களில் தன்னை மறந்து, சஞ்சரித்ததிருந்தாளே.

 

பதில் சொல்லாமல் அவள் விழிகள் மூடியிருக்க,

 

“அர்ப்பணா…” என்றான் சற்றுத் தன் குரலை உயர்த்தி.

 

“ஆ…” என்று பதறியவாறு தன் விழிகளைத் திறந்து நிமிர்ந்து பார்க்க, அவளுடைய முகத்தை வைத்தே, அவள் தன்நிலையில் இல்லை என்பதைப் புரிந்துகொண்டவன், தன் கரத்திலிருந்த இரேசரை அதே பையில் போட்டுக் கட்டி, ஓரமாக வைத்துவிட்டு,

 

“சேஞ்ச் யுவர் ட்ரெஸ்…” என்று அவளைப் பார்க்காமலே, கட்டளையிட்டு விலகியவன், அவள் தோளிலிருந்து இழுத்துக் கட்டிலில் போட்ட துவாயை எடுத்துத் தன் தோள் மீது போட்டவாறு அவளைத் திரும்பிப் பார்த்தவாறு,

 

“எகெய்ன்… ஐ ஆம் வோர்னிங் யு… டோன்ட் டூ எனிதிங் ஸ்டுபிட் அர்பப்ணா… இனியும் என்னால் பொறுமையாக உன் பின்னால் அலைய முடியாது… குளித்து விட்டு வரும் வரையும், இங்கேயே உட்கார்ந்திரு… அப்படியே மீறி நீ வெளியே போனாய் என்றால், முன்பு போல உன் பின்னால் நான் வரமாட்டேன்… எக்கேடும் கெட்டு ஒழி என்று கைகழுவி விட்டு என் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்விடுவேன்… என்ன புரிந்ததா?” என்று அவன் கடுமையாகக் கேட்க, அவள் தொப் என்று படுக்கையில் அமர்ந்தவாறு, ஆம் என்று கோவில் மாடு போலத் தலையை ஆட்டினாள்.

 

ஏனோ அவள் ஆட்டிய விதத்தைக் கட்டதும், அநபாயதீரனின் கோபம் குறைந்து, அங்கே மெல்லிய நகைப்பும் வந்து சேர்ந்திருந்தது.

 

தன் தலையைக் குலுக்கி, குளியலறைக்குள் நுழைந்து, கதவைச் சாத்திவிட்டு, ஆடைகளைக் கழைந்து எறிந்தான்.

 

காயங்கள் வலிக்க, அதைக் கண்ணாடியில் நின்றவாறு பரிசோதித்தான். மார்புக்காயம் ஓரளவு காய்ந்திருந்தாலும், கவனிக்கப்படாமல் விட்ட கையின் காயம்தான் நன்கு சிவந்து மேலும் பிளந்திருந்தது. போதாததற்கு இரத்தமும் வெளியேறியிருந்தது. அழுத்தி அழுத்திப் பார்த்தான். உள்ளே கண்டல் தெரிந்தது.

 

அந்த எதிரியின் கையை வேகமாகத் திருப்பியபோது, ஏற்பட்ட தசையின் விரிவால் ஓரளவு காய்ந்திருந்த கயம், மீண்டும் பிளந்திருக்க வேண்டும்.

 

“டாமிட்…” என்று முணுமுணுத்தவாறு, கைகழுவும் தொட்டிலில் தன் இரு கரங்களையும் பதித்து நின்றவனுக்கு அர்ப்பணாவின் விம்பம் வந்து வந்து போனது.

 

கூடவே அவளுடைய பெண்மையும் மென்மையும் அவனைப் பெரிதும் பாடாய்ப் படுத்தின.

 

அதுவும் அவனையும் அந்த இரேசரையும் பார்த்துவிட்டு, “என்னைக் கொல்லப்போகிறீர்களா?” என்று கேட்டாளே… அதை நினைத்ததும் இவனுக்கு வலித்தது. அவளைக் கொல்ல இவனால் முடியுமா? தன் உயிரைக் கொடுத்தாவது அவளைக் காப்பானே தவிர, அவள் மீது சின்னக் கீறல் விழவும் அவன் விடமாட்டானே. இதை அவள் இன்னும் புரிந்துகொள்ளவில்லையே…’ என்று மனதின் ஓரத்தில் மெல்லிய வேதனை வந்து அமர்ந்து கொண்டது.

 

அவளும் என்னதான் செய்வாள்? பாவம். இது வரை அவளைச் சூழ இருந்தவை அனைத்துமே பொய் பொய் பொய். எது உண்மை என்று நினைத்தாளோ அவை அனைத்துமே உண்மையல்ல.இவ்வளவு ஏன்? பெற்ற தந்தையே உண்மையாக இல்லை என்கிற போது, நேற்று வந்தவன் இவன். இவனை அவள் எப்படி நம்புவாள்? அதுவும் அவன் கூட பொய்யாகிப்போனானே. ரகுவின் நண்பன் என்று அறிமுகமானவன, அவளிடமிருந்து எதையோ அறிந்து கொள்ள வந்த ஒற்றன் என்பதை அறிந்தபோது, அவள் எப்படித் துடித்தாள்.

 

அநபாயதீரனுக்கு சிவார்பப்ணாவின் நிலையை எண்ணி வருந்தத்தான் முடியுமே, தவிர, அவளுடைய வேதனையை அவனால் எப்படிப் போக்க முடியும்? அவனுடைய மனம் வேதனையில் தவித்தது.

 

இந்த வலி, வேதனை, பதற்றம், பயம் இது எல்லாமே அவனுக்குப் புதிது. எப்போதம் அறியாத ஒன்று. ஆனால், முதன் முதலாக அவற்றை அனுபவிக்கும் போது, ஏனோ அவை பெரும் பூதாகரமாகத் தெரிந்தது அவனுக்கு.

 

“டாமிட்… அநபாயன்… கன்ட்ரோல் யுவர் செல்ஃப்…” என்று தன்னையே சமாதானப் படுத்த முயன்றவனுக்கு, மீண்டும் அவளுடைய குறும்பும், பொறுப்பற்ற தன்மையும், குழந்தைப் புத்தியும், அதையும் மீறிய பெண்மையின் லாவண்யங்களும் அவனைப் பெரிதும் இம்சிக்கத் தன் விழிகளை மூடித் தன்னைச் சமாளிக்க முயன்றவன் முடியாமல் விழிகளைத் திறந்து, கண்ணாடியில் தன் முகத்தை வெறித்தான்.

 

“ஏய்… என்னுடைய பணி முடியும் வரைக்கும் உன்னை எப்படிக் கையாளப்போகிறேனோ தெரியவில்லையே… இன்னும் என்னென்ன சிக்கலில் என்னையும் மாட்டி, நீயும் மாட்டப்போகிறாயோ…” என்று முணுமுணுத்தவனுக்கு அர்ப்பணாவைப் படம் பிடித்தவனின் நினைவு வந்தது. கூடவே அவனுடைய சாரதி அனுமதிப் பத்திரத்தைப் படம் பிடித்ததும் நினைவுக்கு வந்தது.

 

‘அட… அதை எப்படி மறந்தோம் என்று நினைத்தவன், தன் கைபேசியை வெளியே எடுத்தான்.

 

அதில் தான் எடுத்த படத்தை டானியலுக்கு அனுப்பி வைத்து, அவன் பற்றிய செய்திகளைத் தனக்கு உடனே அனுப்புமாறு கட்டளையிட்டுத் தன் கைபேசியை கைகழுவும் மேசையில் போட்டுவிட்டு, ஷவரின் கீழ் வந்து நின்றான்.

 

நீர் உடலில் படும் போது, குளியல் தொட்டியிலிருந்தவாறு அவனை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்ட சிவார்ப்பணாவே மனதில் வந்து வந்து போக, மீண்டும் அவள் நினைவில் உடல் சூடேற, அதைத் தணிக்க முயன்றவனாகக், குளிர் நீரைத் திறந்து விட்டு அதன் கீழ் நின்றான்.

 

ஷவரிலிருந்து கொட்டிய நீர், அவனைத் தழுவும் ஆவலுடன் சற்று அதிகமாகவே அவன் மீது குளிர் நீரை வாரி இறைக்கத் தொடங்கியது.

 

கொட்டிய நீரோ, அவனுடைய சற்று ஒட்ட வெட்டிய சுருள் குழலில் பட்டு, அப்படியே அவன் கோபத்திலிருந்ததால், சுழித்திருந்த அடர்ந்த புருவத்திலும், செதுக்கிய மூக்கிலும், அழுத்தமாக இறுகியிருந்த உதடுகளிலும் முத்தமிட்டுச் சற்றுக் கறுத்து இறுகிப்போயிருந்த அந்தக் கம்பீர முகத்தைத் தன் கரங்களால் வருடி, தினவெடுத்திருந்த புஜங்களையும், நரம்புகள் ஓடிப் புடைத்திருந்த கைத் தசைகளையும் காதலுடன் தழுவி, அப்படியே பரந்து விரிந்த பாறையென இறுகிய மார்பில் படர்ந்து தஞ்சம் புகுந்து, சற்று மெல்லிய இடையிலும், உடற்பயிற்சி அப்போது செய்யாததால், சற்று இளகியிருந்தாலும் எய்ட் பாக்கை எடுத்துக்காட்டிய வயிறையும் அணைத்து, அப்படியே கால்களையும் வருடியவாறு தரையில் கொட்ட, இவனோ தன் இரு கரங்களையும் சுவரில் பதித்தவாறு, கொட்டிக்கொண்டிருந்த குளிர் நீரிற்குத் தன் முகத்தைக் காட்டித் தன் கொதிப்பை அடக்க முயன்று வெற்றிகரமாகத் தோற்றுக்கொண்டிருந்தான். அந்தோ பரிதாபம், அவளுடைய நினைவுகளை அடக்க முடியாமல், குளிர் நீரைச் சுடு நீராக மாற்றிக்கொண்டிருந்தான்.

 

அதே நேரம் சிவார்ப்பணாவோ, அநபாயதீரன் குளியலறைக்குள் நுழைந்ததும், தன் முகத்தையும் உதட்டையும் சுழித்து, அவனுக்கு அழகு காட்டியவாறு ஆடை மாற்றிவிட்டுப் படுக்கையில் தொப் என்று விழுந்தாள். சற்றுத் தள்ளியிருந்த தலையணியை இழுத்துத் தன் கழுத்துக்கு வாகாக வைத்து சௌகரியமாகப் படுத்தவளின் நினைவிலும் அவனே நிறைந்திருந்தான்.

 

முதன் முதலாக அவனை அந்தப் பேருந்தில் வைத்துக் கண்டதிலிருந்து, அவளை அவன் காத்தது, பின் அவளை அணைத்து அவன் முத்தம் கொடுத்தது, ஒவ்வொரு ஆபத்திலும், அரணாக நின்று அவளைக் காத்தது, என்று அனைத்தும் படமாக ஓடிக்கொண்டிருந்தன.

 

சிவார்ப்பணாவிற்குத் தன்னை எண்ணியே வியப்பாக இருந்தது.

 

மீண்டும் அவனைக் காணும் வரை, அவன் நினைவுகளைக் களைந்தெறிய முடியாமல், அவள் பட்ட தவிப்பு… அவனை மீண்டும் கண்ட போது மனதில் ஏற்பட்ட பரவசம்… தன்னைத் தெரியாது அவன் நடந்து கொண்டதால் வந்த ஏமாற்றம்… அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக மனதில் ஓடிக்கொண்டிருந்தன.

 

என்னதான் சூழ் நிலை ஏற்புடையவையாக அல்லாமல், எந்த நேரமும், அவர்களைச் சுற்றி ஏதோ ஒரு அபாயம் சூழ்ந்திருந்தாலும், அந்த நிலையிலும், அவள் ஓரளவு தைரியமாக இருந்தாள் என்றால், அதற்கு முழு முதற் காரணம் அநபாயதீரன் மட்டுமே.

 

அவன் இல்லையென்றால், அவள் இப்போது விலாசம் இல்லாத பிணமாக எங்கோ கிடந்திருப்பாள். இல்லை, எங்கோ கைதியாகி சித்திரவதைப் பட்டுக்கொண்டு இருந்திருப்பாள்.

 

எந்தத் துன்பத்திலும், அவனுடைய கரங்களைப் பற்றும் போது, அவனுடைய மூச்சுக் காற்று அவள் மீது படும் போது, அவனுடைய வியர்வையின் மணம் அவளின் நாசியைச் சென்றடையும் போதெல்லாம் அவள் பெரும் பலத்தை உணர்ந்து கொண்டாள். எந்த இக்கட்டையும் தன்னால் சமாளித்து விட முடியும் என்கிற உத்வேகம் அவளை வந்தடையும்.  ஆனால் அவன் எப்போதும் அவள் கூடவா இருக்கப் போகிறான். இல்லையே… அந்த பேன்ட்ரைவ் கிடைத்ததும் அவள் யாரோ, அவன் யாரா… அதன் பின் வரக்கூடிய பிரச்சனைகளை அவள்தான் தனியாகச் சமாளித்தாகவேண்டும். அவனில்லாமல் அவளால் முடியுமா?

 

எத்தனை எதிரிகள் அவள் பின்னால் வருவார்களோ, எத்தனை பேர் அவள் கழுத்தில் கத்தியை வைப்பார்களோ? அடிப்பார்களே… அந்த வலியை எப்படித் தாங்குவது… தீரன் போனால் என்னைக் காக்க யாருமே வரமாட்டார்கள் அல்லவா? நினைக்கும் போதே அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

 

கொஞ்ச நேரம் தன் கையறு நிலையை எண்ணிக் கலங்கிக்கொண்டிருந்தவளின் விழிகள் அவளையும் அறியாமல் மெது மெதுவாக மூடத் தொடங்கின.

 

அதே நேரம் குளிர் நீரில் குளித்து, ஓரளவு தன் நினைவுகளைச் சமப்படுத்தி, தன் கைக்காயத்திற்கும் மருந்திட்டு, வேறு ஆடைகளை மாற்றி வெளியே வந்தவனின் விழிகள் முதலில் தேடியது சிவார்ப்பணாவைத்தான்.

 

தன்னை மறந்து, விழிகள் மூடி உறங்கிக்கொண்டிருக்கும் அர்ப்பணாவைக் கண்டதும், நிம்மதிப் பெருமூச்சுடன் அவளை நெருங்கி அவள் முகத்தைப் பார்த்தான்.

 

இன்னும் சிறு குழந்தை பொலிருந்தது அவள் முகம். இதயம் முழுவதும் கனிய, பெரும் வாஞ்சையுடன் கலைந்திருந்த அவள் முடியைத் தன் கரத்தால் ஒதுக்கி விட்டு, பின் அருகேயிருந்த போர்வையை எடுத்து அவள் மீது போர்த்திவிட்டான்.

 

சற்று நேரம் அங்கேயே இருந்து, உறங்கிக்கொண்டிருந்தவளின் அழகைத் தன்னை மறந்து பார்த்து ரசித்துக்கொண்டிருந்தவன், அரவம் எழுப்பாது, விலகிச் சென்று, அந்த மடிக்கணினியையும், குறிப்பேட்டையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்த மேசையில் அமர்ந்தான். ஏற்கெனவே சார்ஜ் போயிருந்த மடிக்கணினியின் சார்ஜைப்  போட்டுவிட்டு, உயிர்ப்பித்தான்.

 

அது இயங்குவதற்குச் சற்று நேரம் எடுத்தது. உயிர்த்துக்கொண்ட லாப்டாபின் உள்ளே நுழைந்தவனுக்கு, அங்கே வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை. சாதாரண மடிக்கணனியைப் போலவே அது தெரிந்தது. அங்கிருந்து எந்தக் குறிப்பையும் அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

 

மீண்டும் அந்தக் குறிப்பேட்டை அங்குலம் அங்குலமாகப் படித்து, அதில் மறைந்திருந்த பொருளை அறிய முயன்றான். ஓரளவுக்குப் புதிர்கள் சரியாக வந்தாலும், அதை முழுவதுமாகச் சரிப்படுத்துவதற்கு அந்தப் பென் ட்ரைவ் வேண்டும்.

 

அந்த பென் ட்ரைவ் இருந்தால் மட்டுமே எதையும் அவனால் மேற்கொள்ள முடியும். அது எங்கே? இந்த நிமிடம் வரை அர்ப்பணாவிடம் இல்லை. அப்படியானால் அது அவளுடைய வீட்டிலா இருக்கிறது? நிச்சயமாக அவளுக்குத் தெரியாமல்தான் அது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். எதுவாக இருக்கும்? அந்தக் கதிரையில் சாய்ந்து அமர்ந்துகொண்டவன் அந்தக் குறிப்பேட்டில் ஏதாவது துப்புக் கிடைக்குமா என்று மீண்டும் பரிசோதித்தான்.

 

ம்கூம் எதுவும் கண்டு பிடிக்க முடியவில்லை.இதை வைத்து, அந்தப் பென் ட்ரைவ் எங்கே இருக்கிறது எதில் வைக்கப்பட்டிருக்கிறது என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

 

அந்த பென் ட்ரைவ் இரண்டு இடங்களில் இருக்க மட்டுமே வாய்ப்பிருக்கிறது. ஒன்று ரகு வீடு… மற்றையது அர்ப்பணாவிடம். நிச்சயமாக அது ரகுவிடமும், அவன் வீட்டிலும் இல்லை. வாமதேவனால் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்தும், அர்ப்பணாவிடம் சேர்ப்பித்தது போல, முக்கியமான இந்த பென் ட்ரைவையம் அர்ப்பணாவிடமே ரகு கொடுத்திருக்கவேண்டும்

 

எப்படிக் கொடுத்தான்… எதில் வைத்துக் கொடுத்தான். உடனேயே அர்பப்ணாவை எழுப்பிக் கேட்கவேண்டும் போல மனம் பரபரத்தது. ஆனால் ஆழ்ந்து உறங்குபவளை எழுப்பிக் கேட்க அவன் மனம் இடம் கொடுக்கவில்லை.

 

பாவம் மனதளவில் பல அதிர்ச்சிகளைக் குறுகிய காலத்தில் அனுபவித்து விட்டாள். அவளுக்கு நிச்சயம் ஓய்வு தேவை. அது மட்டுமல்ல, இதை விட பல அதிர்ச்சிகளை அவள் தாங்க வேண்டியிருக்கிறது. அதற்கும் அவளுக்கு மனதில் அமைதி வேண்டும். அவள் உறங்கினால் மட்டுமே அந்த அமைதி கிடைக்கும்.’ என்று எண்ணியவன், அவளை எழுப்பும் எண்ணத்தைக் கைவிட்டு, யோசிக்கத் தொடங்கினான்.

 

இப்போது அந்த பென் ட்ரைவ் எங்கே.. ‘ஹா… ரகு… எதில் வைத்துக் கொடுத்திருக்கிறாய்?” என்று அவன் தன் தலையைக் கதிரையின் சட்டத்தில் சரித்து வைத்தவாறு, யோசித்தான். வலது காலைத் தூக்கி இடது காலின் மீது போட்டவனின் கரங்கள்   தொடையில் தாளம் போட்டன.

 

‘அது எங்கேயிருக்கும்… எங்கே வைக்கப்பட்டிருக்கும்…’ பலவாறு பல இடங்களுக்குப் புத்தி சென்று சென்று வந்தது.

 

மனக் கண்ணில் பல சம்பவங்கள் படங்களாக ஓடின. அவளுடைய கீ பென்டன், இந்தக் குறிப்பு… அதில் படிமுறைகள்… அந்தப் படிமுறைகள் சொல்வது என்ன? பென் ட்ரைவ்… அது ஒரே ஒரு லாப்டாப்பில் மட்டுமே இயங்கும். அந்த மடிக்கணினி இங்கே இருக்கிறது… ஆனால் அந்தப் பென்ட்ரைவ் எங்கே… அதை எதில் மறைத்து வைத்துக் கொடுத்திருப்பான்… இல்லை கொடுக்கப்படாமலே எங்கோ அவள் வீட்டில் இருக்கிறதா? மடிக்கணினி… பென் ட்ரைவ்… லாப்டாப்… கீ பெண்டன். குறிப்பு. மடிக்கணினி… குறிப்பு… பென்ட்ரைவ். பெண்டன்,”’ என்று தன் மூளையைக் கசக்கி யோசித்துக்கொண்டிருந்தவனுக்கு, சடார் என்று அது நினைவிற்கு வந்தது.

 

அன்று ரகுவின் வீட்டில் கீ பெண்டனில், மறைந்திருந்த ரகசியத்தைக் கண்டு பிடித்தபோது, பதறிப்போய் அவள் கூறியது மீண்டும் மனதில் ஓடியது.

 

“என் பிறந்த நாளுக்குப் பரிசுகள் தருவது ரகுவின் வழக்கம்… ஏன் இந்தக் கைக்கடிகாரம் கூட அவன்தான் கொடுத்தான்… இந்த கீ பென்டனையும் இரண்டு வருடங்களுக்கு முன்பு என் பிறந்தநாள் பரிசாகக் கொடுத்தான்.”

 

“இந்தக் கைக்கடிகாரம் கூட அவன்தான் கொடுத்தான்… இந்தக் கைக்கடிகாரம் கூட அவன்தான் கொடுத்தான்…” திரும்பத் திரும்ப அது மனதில் எழ, சடார் என்று இருக்கையை விட்டு எழுந்தான் அநபாயதீரன்.

 

விரைந்து சென்று, அவள் கைக்கடிகாரம் கட்டியிருந்த கரத்தைப் பற்றித் தூக்கிப் பார்த்தான். வெறுமையாகக் கிடந்தது.

 

திக் என்றது அவனுக்கு. எங்கே அது? எங்கே வைத்தாள்…? மீண்டும் தன் நினைவாற்றலை உசுப்பி விட்டான். அவனுக்குத்தான் அவளுடைய ஒவ்வொரு அசைவும் அத்துப்படியே.

 

அன்று அந்தரத்தில் தொங்கியபோதும் அது அவளுடைய கையில் தொங்கிக்கொண்டிருந்தது. இன்று காலையில் கூடததெரியாதவன் ஒருவன் படம் எடுத்த போது, அந்தப் படத்திலும் அந்தக் கைக்கடிகாரத்தை அவன் பார்த்திருக்கிறான்… அப்படியானால், இங்கே எங்கோதான் அவன் அந்தக் கைக்கடிகாரத்தை வைத்திருக்கவேண்டும். எங்கே… எங்கே…’ என்று யோசித்வதன், விரைந்து சென்று அவள் கொண்டு வந்த பையை, மேசையில் கொட்டிப் பார்த்தான். அதற்குள்ளும் இல்லை. எங்கே போயிருக்கும்?

 

“குளியலறை…” விரைந்து சென்றவன், அங்கே எல்லா இடத்திலும் தேடினான். தேடுவதற்கும் அதிக இடங்கள் இல்லையே… ஆனால் அந்தக் கைக்கடிகாரம் இல்லை.

 

“வெயர் த ஹெல் இட் இஸ்…” என்று தன்னையும் மறந்து முணுமுணுத்தவன் தன் முடியை அழுந்த வாரிக் கொடுத்துத் திரும்ப மெல்லியதாகத் திறந்திருந்த கபோர்டின் ஓரமாக இருந்த குப்பைத் தொட்டி கண்ணில் பட, தாமதிக்காமல் அதை எடுத்துத் தரையில் கொட்டினான். குப்பையோடு குப்பையாக வந்து விழுந்தது, கைக்கடிகாரம்.

(41)

 

குப்பைத் தொட்டியிலிருந்து விழுந்த கடிகாரத்தை, நிம்மதி பெருமூச்சுடன், எடுத்துத் தூக்கிப் பார்த்தான். சாதாரண கைக்கடிகாரம்தான். அவள் வயதுக்கல்ல, அவள் குணத்திற்கேற்ப, மினி மௌஸ் படம் போட்டு, மெல்லிய இளஞ்சிவப்பு நிறத்தில் சற்றுப் பெரியதாக இருந்தது கடிகாரம்.

 

அந்தக் கடிகாரம் தன் ஓட்டத்தை நிறுத்தியிருந்ததாலோ, இல்லை ரகு கொடுத்தான் என்கிற காரணத்தினாலோ, அதைக் குப்பைத்தொட்டியில் போட்டிருக்கிறாள் போலும். எது எப்படியோ, அவன் தேடியது அதற்குள் இருந்தால் அவனுக்குப் போதும்.

 

அதைச் சுழற்றிச் சுழற்றிப் பார்த்தான். அதில் எங்கும் மறைத்து வைத்ததுபோலத் தெரியவில்லை. மணிக்கூட்டின் பின் பகுதியைத் தன் சுவிஸ் ஆர்மி கத்திக் கொண்டு பிளந்து பார்த்தான். உள்ளே மணிக்கூட்டிற்குரிய சாதனங்கள் மட்டும்தான் இருந்தன.

 

சோர்வுடன் முன்னறைக்கு வந்தவன், அந்தக் கைக்கடிகாரத்தை மேசையில் போட்டுவிட்டு, மீண்டும் இருக்கையில் அமர்ந்தவனுக்கு, முக்கிய பிரச்சனையாக அந்த பென்ட்ரைவ் மனதைப் பிறாண்டியது.

 

மேசையில் போட்டதை மீண்டும் எடுத்துத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். உள்ளேயிருந்த அனைத்துச் சாதனங்களையும் முழுவதுமாக வெளியே எடுத்துப் பார்த்தான். ம்கூம்… இல்லை. எரிச்சலுடன் மீண்டும் அதே போல வைத்துக் கைக்கடிகாரமாக்கியவனுக்கு மூளை வேலை நிறுத்தம் செய்திருந்தது.

 

முதலில் எதையும் தெளிவாகச் சிந்திக்க அவனுக்கு ஓய்வு வேண்டும். அந்தக் கைக்கடிகாரத்தை யோசனையுடன் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவன், திரும்பி சிவார்ப்பணாவைப் பார்த்தான்.

 

இவள் எழுந்தால் மட்டுமே எதையாவது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்… அவள் எழுந்து கொள்ளும் வரைக்கும் சற்று ஓய்வெடுக்கலாம் என்று எண்ணியவன், அவளுடைய கடிகாரத்தைத் தன் கரத்தில் வைத்தவாறே, உள்ளங்கைகளால், தன் முகத்தைத் தேய்த்து விட்டான். தன் கடிகாரத்தின் நேரத்தைப் பார்த்தான். மாலை ஆறு முப்பது என்றது கடிகாரம்.

 

சரிதான் என்று சோர்வுடன் கரத்திலிருந்த கைக்கடிகாரத்தை மிண்டும் மேசையில் போட்டுவிட்டு, எழுந்து, கட்டிலருகே வந்தவன், குறுக்காகப் படுத்திருந்தவளை ஒரு கணம் வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

ஆழ்ந்த உறக்கத்தில், சற்று உதடுகள் பிரிய, நீண்ட மெல்லிய மூச்சுக்களை எடுத்தவாறு அவன் பக்கமாகத் தலையைத் திருப்பி வைத்து இடக்கரத்தை மடித்துத் தன் கழுத்தின் மீது போட்டுக் குப்புறக் கிடந்தவளைப் பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை அவனுக்கு.

 

மெல்லிய சிரிப்புடன் அவளைத் தூக்கி நேராகப் படுக்க வைத்தவன், அப்படியே அவளைத் தன்னோடு இறுக அணைத்தவாறு மறுபக்கம் விழுந்து, அவள் கூந்தலின் மீது தன் முகத்தைப் புதைத்தவாறு தன் விழிகளை மூடியதுதான் தெரியும், அடுத்து, அந்த உலகமே அவனுக்கு இருட்டாக, ஆழ்ந்த உறக்கத்தின் வசமானான்.

 

எங்கோ வாமதேவனின் குறிப்பேடு விரிக்கப்பட்டிருக்க, ஒரு கடிகாரத்தின் முள், நம்பர் டயல் லாக் போல, சில இலக்கங்களை முன்னும் பின்னுமாகத் தொட்டுச் செல்ல, உடனே அது தாமாகப் பிரிந்து உதிர்ந்து விழ, அந்த நேரம் யாரோ அர்ப்பணாவின் இடையை அணைத்தவாறு இழுத்துச் சென்றனர். இவனும் பின்னால் அவர்களைத் துரத்திக்கொண்டு ஓடத் தொடங்க திடீர் என்று மாயமாகிப்போனாள் சிவார்ப்பணா. திடுக்கிட்டு விருக்கென்று தன் விழிகளைத் திறந்தான் அநபாயதீரன்.

 

முதலில் அவனுக்குத் தான் எங்கே இருக்கிறோம் என்பதே புரியவில்லை. மெது மெதுவாகச் சுயநினைவுக்கு வந்தவன் குனிந்து தன் கையணைப்பில் உறங்கிக்கொண்டிருந்தவளைப் பார்த்தான்.

 

அவனுடைய பெரிய உருவத்திற்குக் கோழிக்குஞ்சு போலத் தூங்கிக்கொண்டிருந்தவளைக் கண்டதும், அது வரை அழுத்தியிருந்த பாரம் காணாமல் போக, பெரும் நிம்மதி மூச்சுடன் தன் முகத்தை மேலும் அவள் தலையுடன் புதைத்துக்கொண்டான்.

 

தன் கால்களைக் குறுக்கிச் சுறுண்டு கிடந்தவாறு தன் பின் முதுகு முழுவதும் அவன் முன்னுடலுடன் அழுந்தப் படியுமாறு, தன் கையணைப்பில் கிடந்தவளை இன்னும் இறுக்கியவாறு, அதே போலத் தானும் தன் கால்களைக் குறுக்கி அவளுடைய கால்களும் தன் கால்களுடன் இணையுமாறு சற்று நேரம் கிடந்தான்.

 

அவளுடைய முழு உடலின் சூட்டையும் தன் உடலால் உணர்ந்து கொண்டவன், கனவில்தான் அவள் மாயமாக மறைந்துபோனாள், நிஜத்தில் அல்ல என்பதை உறுதிப் படுத்திக்கொண்டவனாகத் தன்னோடு மேலும் அவளைப் புதைத்து விடுபவன் போல இறுக்கிப் பின் மெதுவாக அவளை விடுவித்தான் அநபாயதீரன்.

 

அவள் நினைவுடனே உறங்கியதால், யாரோ அவளைக் கடத்திச் செல்வது போல அவனுக்குத் தோன்றியிருக்கிறது.

 

அவள் இடையையும் மார்பினூடாகச் சென்று தோளில் சுற்றியிருந்த தன் வலக்கரத்தை மெதுவாக விலக்கியவன், தன் மறு கரத்தின் மீது படுத்திருந்தவளின் தலையைத் தன் வலக் கரத்தால் தூக்கிக் கவனமாகத் தலையணியில் வைத்து விட்டுப் சத்தம் எழுப்பாமல் எழுந்தான்.

 

குளியலறைக்குள் ஒரு முறை சென்று வந்தவன் நேரத்தைப் பார்த்தான். பதினொரு மணி.

நான்கு மணி நேர உறக்கம், புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருக்க, மீண்டும் கைக்கடிகாரத்துடன் மாரடிப்பதற்காக, மேசையினருகே வந்தமர்ந்தவனுக்குக் கனவில் கண்டது படமாக ஓடியது.

 

எதையோ யோசித்தவன், மீண்டும் அந்தக் குறிப்பேட்டை எடுத்துப் புரட்டிப் பார்த்தான். ஒவ்வொரு மணித்தியாலங்களும் அந்தக் குறிப்பேட்டில் பதியப்பட்டிருந்ததால், தன்னுடைய குறிப்புகளை அவர் கண்டுபிடித்த நேரத்திற்கமைய அவர் பதிந்திருந்தார்.

 

அந்தக் குறிப்பேடுகள் முழுவதும் ஏதோ ஒரு வகையில் கவிதைகளாகவும், புதிர்களாகவுமே எழுதப்பட்டிருந்தன. மீண்டும் அந்தக் குறிப்பேட்டை முழுவதுமாகப் படித்தான் அநபாயதீரன்.

 

எதிலிருந்தும் அவனால் எந்தக் குறிப்பையும் முதலில் காண முடியவில்லை. மீண்டும் படித்தான்… மீண்டும்…. மீண்டும்… அப்போதுதான் ஒரு குறிப்பிட்ட கவிதை அவன் கவனத்தைக் கவர்ந்தது.

 

எல்லாப் பாடல்களும், ஏதோ ஒரு வகையில் அந்தக் கிருமிகளைப் பற்றியும், அந்த ஏவுகணைகளைப் பற்றியதுமான குறிப்புகளே கூறியிருக்க, ஒரு பாடல் மட்டும் ஒரு காலை வேளையின் அழகைக் குறிப்பிடுவதாக இருந்தது. அந்தக் குறிப்பை இரண்டு மூன்று முறை படித்தவனுக்கு எதுவோ புரிவது போல இருந்தது.

 

மூன்று முறை சுற்றும் பூமியின் இன்றைய காலை சூரிய உதயம் ரம்மியமாக இருந்தது. பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத காட்சி. நேற்று போல் இன்றில்லை… இன்றை அஸ்தமனம் நாளைய உதயம். நேற்றைய அஸ்தமனம் இன்றைய உதயம்… கிடைக்கும் இறுதி நிமிடத்தை அனுபவித்து விடு அதுவே தேடுதலின் முடிவு.

 

இதிலிருந்து என்ன கூற வருகிறார்? மீண்டும் மீண்டும் அதைப் படித்தவனுக்கு எதுவோ புரிவதும் புரியாததும் போல இருந்தது. அவசரமாக, அந்தக் குறிப்பு எழுதப்பட்ட திகதியைப் பார்த்தான். 2015/05/08 அன்று எழுதப்பட்டிருந்தது.

 

அன்றுதானே அவர் முற்று முழுதாக அந்தக் கிருமிகள் கண்டு பிடிப்பதில் வெற்றியைக் கண்டார். உடனே உசாரானவன், மீண்டும் ஒரு முறை அதைப் படித்தான்.

 

மே எட்டாம் திகதி அன்று எத்தனை மணிக்கு சூர்யோதயம் நடந்தது? முன் தினம் தன் கைப்பேசியை குளியலறையில் வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வர, விரைந்து சென்று அதை எடுத்து வந்து, 2015/05/08 சூரிய உதயத்திற்கான நேரத்தைப் பார்த்தான். 6:00 மணி என்றது இணையதளம். அதைக் குறித்துக்கொண்டான்.

 

நேற்று போல் இன்று இல்லை… அப்படியானால், 7 ஆம் திகதியுடைய சூர்யோதயம் எப்போது? 6:01. இன்றைய அஸ்தமனம் 8:28… நாளைய உதயம்… நாளை என்பது 9 ஆம் திகதி. அன்றைய சூர்யோதயம் 5:59. நேற்றைய அஸ்தமனம் 7ஆம் திகதி. அன்று 8:26 இதற்குச் சூரியன் மறைவு. ‘நிமிடத்தை அனுபவித்து விடு…’ 0-1-8-9-6.

 

உடனே கைக்கடிகாரத்தை எடுத்தவன், நேரம் மாற்றும் விசையை இழுக்க, அது எம்பி நின்றது. நம்மிடமுள்ள  6:00 மணியின் கடைசி நிமிடம் சைவரில் வலப் புறமாக மூன்று முறை சுழற்றி நிறுத்தினான். பின் நேற்று என்பதால், இடப்புறமாகச் சுற்றி ஒன்றிலும், இன்று என்பதால் வலப் புறமாகச் சுழற்றி எட்டிலும், நாளை என்பதில் மீண்டும் வலப் புறமாகச் சுற்றி ஒன்பதிலும், இன்றைய உதயம் என்பது முடிந்து போனதால், மீண்டும் இடப்புறம் சுழற்றி ஆறிலும் விட, க்ளிக் என்கிற மிக மெல்லிய சத்தத்துடன், கைக்கடிகாரத்தின் வலப் புறத்து, வார் பிரிந்து வந்தது.

 

முதலில் அவன் அதை நம்பவில்லை. திகைப்புடனும், பெரும் நிம்மதியும், மகிழ்ச்சியுடனும் அதை இழுத்து எடுத்துப் பார்க்க மிகச் சிறிய பென்ட்ரைவ் அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது. கண்டுபிடித்து விட்டோம் என்கிற மகிழ்ச்சியில், அதை அந்த மடிக்கணினியில் செருக முயன்ற நேரம்,

 

அவனுடைய கைப்பேசி அழைத்தது.

 

மீண்டும் அந்த பென்ட்ரைவை பழையது போலக் கைக்கடிகாரத்தில் செருகியவன், அதைத் தன் பான்ட் பாக்கட்டில் வைத்தவாறு கைப்பேசியை எடுத்துப் பார்த்தான்.

 

டேவிட்டிடமிருந்துதான் செய்தி வந்திருந்தது. அவன் அனுப்பிய செய்தியைப் பார்க்கப் பார்க்க இவன் உடல் இறுகியது. கூடவே தான் செய்த தவறும் புரிந்தது. அவனை அங்கேயே கொன்று விட்டு வந்திருக்கவேண்டும். ஏன் எனில், அவன் எதிரிகளால் அனுப்பப்பட்டவன்.

 

தடம் கண்காணிக்கும் சாதனம் பொய்த்துப்போனதை அறிந்ததும், அவர்களைத் தேடிப் பல இடங்களுக்கு ஆட்கள் அனுப்பப்பட்டிருக்கிறது. இப்போது அவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்பதை எதிரிகள் கண்டுபிடித்து விட்டார்கள்… எந்த நேரமும் அவர்களைத் தேடி வரலாம்…’ அவன் எண்ணி முடிக்கவில்லை, உடனடியாக அங்கிருந்து கிளம்ப வேண்டும்… அவன் எண்ணிக்கொண்டிருக்கும் போதே, அவர்களின் அறைக்குப் பின் புறமாக மெல்லிய சலசலப்புக் கேட்க இவன் விறைத்தான்.

 

கைப்பேசியைத் தன் பான்ட் பையில் செருகியவாறே, தன் செவிகளைக் கூர்மையாக்கி, மீண்டும் அந்த ஓசை கேட்கிறதா என்று அவதானித்தான். ஜன்னல் பக்கமாக வந்து, அதன் திரையை விலக்கி, எட்டிப் பார்த்தான்.

சரியாகத் தெரியாவிட்டாலும், விரும்பத்தகாத ஏதோ ஒன்று நடக்கப்போவதை அவனுடைய உள்ளுணர்வு சொல்ல, மெதுவாகத் திரும்பிச் சிவார்ப்பணாவைப் பார்த்தான். இன்னும் அசைவில்லாமல் கிடந்தாள் அவள்.

 

மீண்டும் ஜன்னலோரம் எட்டிப் பார்க்க, சிலர் மறைந்து மறைந்து ஓடுவது அந்த இருட்டிலும், இவன் கூரிய விழிகளுக்குத் தெரிந்தது.

 

சற்றும் தாமதிக்காமல், விரைந்து சென்று மேசையிலிருந்த அத்தனை பொருட்களையும், கீழே கிடந்த சிவார்ப்பணாவின் பையில் திணித்தவன், அதை எடுத்துக்கொண்டு, அங்கிருந்த இன்னொரு சிறிய மேசையை நெருங்கினான்.

 

அதன் கீழ் கையை விட்டுத் தடவி எதையோ இழுக்க, அவன் கையோடு ஒரு துப்பாக்கி வந்தது. அதை மேசையின் மேல் வைத்து விட்டு, மடிக்கணினி தாங்கிய பையை, அந்த மேசையின் உட்புறமாகச் செருக, அது மறைந்து கொண்டது.

 

துப்பாக்கியை இழுத்து குண்டுகள் சரியாக இருக்கின்றனவா என்பதைப் பரிசோதித்து விட்டு அதைத் தன் பான்ட்டின் பின் புறம் செருகிக்கொண்டு, சிவார்ப்பணாவின் அருகே வந்தான்.

 

“அர்ப்பணா… வேக் அப்…” என்று அவள் தோளைத் தட்டிக் கூற, தூக்கம் கலையாமலே, இவள் திரும்பிப் படுத்தவாறு,

 

“ப்ளீஸ்… இன்னும் ஐந்து நிமிடம்…” என்று மீண்டும் உறங்கப் போக, பொறுமையிழந்தவன், அவளை நெருங்கி, அவளுடைய தோள்களின் மீது கரத்தைப் பதித்து உலுப்பி,

 

“அர்ப்பணா… நேரமில்லை… எழுந்துகொள்… நாம் கிளம்பவேண்டும்…” என்றான் அவன். அவளோ,

‘சரிதான் போய்யா…’ என்பது போல, வாகாகத் தன் காலைத் தூக்கித் தலையணியில் பதித்தவள், இரு கால்களுக்கு இடையேயும் தன் கரங்களை வைத்து, மீண்டும் உறங்கத் தொடங்க, இவனோ, அதற்கு மேல் பேச முடியாது, அவளைத் தன் இரு கரங்களாலும், அள்ளி எடுத்தான்.

 

அப்போதும் அவள் தூக்கம் கலைவதாயில்லை.

 

கடித்த பற்களுக்கிடையே எதையோ முணுமுணுத்தவன், அவளை ஏந்திச் சென்று குளியல் தொட்டியில் தொப் என்று போட்டு சற்றும் தாமதிக்காமல், குளிர் நீரைத் திறந்து விட, கீழே போட்ட போதே ஏற்பட்ட வலியில், ஓரளவு சுய நினைவுக்கு வந்தவள், குளிர் நீர் ஊசியாகக் குத்த, பதறித் துடித்துத் தூக்கமெல்லாம் பறந்து போக, குளிர் தாங்க முடியாது,

 

“அம்மா… வட் த ஹெல் ஆர் யு டூயிங்… ஆர் யு கிரேசி…” என்றவாறு எழ முயன்றாள்.

 

“பத்து நிமிடம் அர்ப்பணா… ஜெஸ்ட் டென் மினிட்ஸ்… அதற்குள் நீ தயாராக இருக்க வேண்டும்…” என்கிற கட்டளையுடன் வெளியே வந்து, ஜன்னலைத் திறந்தான்.

பூச்சிகள் உள்ளே வராதவாறு அமைக்கப்பட்டிருந்த வலையைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு விட்டு, இரண்டு கரங்களாலும், அந்த ஜன்னலைப் பற்றி, ஒரு எம்பலில் வெளியே குதித்தான்.

 

அவன் குதித்ததுதான் தாமதம், மறைவிலிருந்த மூவர் வேகமாக ஓடத் தொடங்க, இவன் அவர்களைத் துரத்தத் தொடங்கினான். அவன் தெருவைத் தாண்டிய ஓட, இவனும் தாண்டினான். முன்புறம் அமர்ந்து சாப்பிடும் உணவகத்தைக் கடந்து ஓட, இவனும் மின்னல் விரைவுடன் கடந்தான். மூவருக்குமான தூரம் நெருங்க, தம் பின்னால் அநபாயதீரன் நெருங்கி வந்துவிட்டான் என்பதைப் புரிந்ததும் அக்கே கிடந்த மேசையை அவன் பக்கமாகத் தள்ளிவிட்டுப் பாய, குறுக்கே விழுந்த மேசையை, ஒரு துள்ளலில் கால் மடக்கிக் கடந்தவன், மீண்டும் எதிரிகளை நோக்கி ஜெட் வேகத்தில் பாயத்தொடங்கினான்.

 

எப்படியோ அவன் பிடியில் ஒருவன் சிக்க, அவனுக்குப் பேசக் கூட வாய்ப்புக் கொடுக்காமல், தன் முழங்காலால் அவனைக் குனிய வைத்து ஓங்கி உதைய, அப்படியே அவன் பேச்சு மூச்சற்றுத் தரையில் விழுந்தான்.

 

அவனை அப்படியே விட்டு விட்டுச் சற்றுத் தூரம் ஓடிக்கொண்டிருந்த மற்றைய இருவரையும் துரத்தத் தொடங்கினான். அவர்கள் முக்கிய வீதியின் குறுக்காக ஓடத் தொடங்க, நேரம் பன்னிரண்டு மணியாகிவிட்டதால், அதிக போக்குவரத்துகள் இல்லாமல் போனாலும், ஓரிரண்டு வாகனங்கள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டுதான் இருந்தன.

 

அநபாயதீரனோ, எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. அவன் தெருவைக் கடந்து ஓட முயல, மறுபக்கமிருந்து வேகமாக இன்னனொரு வாகனம் பாய்ந்து வர, கண்ணிமைக்கும் நொடியில், ஓடிய வேகத்தில் ஒற்றைக் காலை ஊன்றி மேலே பாய்ந்தான். அந்த வாகனம் அவனைத் தாண்டவும், தோள் புறமாகச் சுழன்று, அந்தக் காரைத் தாண்டி மறுபக்கம் விழவும் நேரம் கன கச்சிதமாகப் பொருந்தியிருந்தது.

 

பாய்ந்த வேகத்தில் கால் மடங்க, கீழே விழப்போகிறோம் என்பதை நொடியில் ஊகித்தவன், வலது தோளைத் தரையில் தாங்கி அப்படியே நொடிக்கும் குறைவான நேரத்தில் சுழன்று எழுந்து மீண்டும் ஓடத் தொடங்கினான்.

 

அவர்கள் கட்டடங்களின் பக்கமாக ஓடத் தொடங்க, இவனும் விடாமல் ஓடினான். ஒரு கட்டத்தில் இருவரும் அவன் கண்பார்வையிலிருந்து தப்பியிருந்தனர்.

 

ஓடிய வேகத்தில் மேல் மூச்சு வாங்கி, கண்ணுக்கு மறைந்த எதிரிகள் எங்கு என்று, முழங்கால்களில் தன் கரங்களைப் பதித்துத் தலை நிமிர்த்தி வலம் இடம் என்று கவனமாகப் பார்த்தான். வேகமாக ஓடியதால் ஏற்பட்ட களைப்பையும் மீறி, உதடுகள் காய்ந்திருக்கத் தன் நாக்கால் உதடுகளை ஈரப்படுத்தி எங்காவது சிறு அசைவு தெரிகிறதாக என்பதைக் கவனித்தான்.

 

விழிகள் சென்ற இடமெல்லாம், வெறிச்சோடிக் கிடந்தது. மறு பக்கம், எதுவோ உறுத்தத் திரும்பிப் பார்த்தான். ஒருவன் எதிர்த்திசை நோக்கி வேகமாக ஓடுவது தெரிய, அவனை நோக்கிப் பாய்ந்தான்.

 

தன்னை அநபாயதீரன் கண்டுகொண்டான் என்பதைப் புரிந்துகொண்ட அந்த எதிரி, விட்டால் போதும் என்பது போல, மேலும் தன் வேகத்தைக் கூட்டி ஓடத் தொடங்க, அவனைத் தொடர்ந்து இவன் தன் வேகத்தைக் கூட்டினான்.

 

எதிரியும் தன் வேகத்தை அதிகரிக்க, இவனும் தன் வேகத்தை உயர்த்தினான். இடையில் வந்த நான்கடி கம்பி வேலியை ஓட்டத்தினூடே தடைகள ஓட்ட வீரன் போலத் ஒற்றைக்கால் கொண்டு தாண்டியவன், ஓரளவு எதிரியின் அருகே நெருங்கிய நேரம், குறுக்காக வந்த ஆறடி வேலியை அந்த எதிரி ஓடிச் சென்று பற்றி எம்பி மறுபக்கம் விழுந்து ஓடினான்.

அநபாயதீரன் சற்றும் யோசிக்கவில்லை. இன்னும் தன் வேகத்தைக் கூட்டியவன், தரையில் கால் வைத்து, எழும்பி இரண்டு கரங்களாலும், வேலியின் மேல் மட்டத்தைப் பற்றி, கரத்தின் பலத்தால், கால்களை மேல்த் தூக்கி இடப்பக்கமாகக் கொண்டு சென்று சுழற்றி மறுபக்கம் விழ, ஏதோ ஒலிம்பிக்கில், பொம்மர் ஹோர்சில் தேர்ந்த விளையாட்டு வீரன் விளையாடியது போலக் கண கச்சிதமாக இருந்தது.

 

அதையும் கடந்து ஓடியவன், அவன் ஒரு சந்தில் புகுந்து ஓட, இவனும் விடாமல் தொடர்ந்தான். ஓடும் போது, அங்கே கிடந்த கல் ஒன்றைக் குனிந்து எடுத்தவன், எடுத்த வேகத்திலேயே குறிவைத்து எறிய, அது கச்சிதமாக அவனுடைய பின் தலையில் பலமாக மோத, அப்படியே பொத் என்று முன் பக்கமாகச் சரிந்து விழுந்தான் எதிரி.

 

இப்போது மூன்றாமவன், இவனைப் பார்த்தவாறு மறு திசையில் ஓடத் தொடங்க, இவனும் விடாமல் துரத்தினான். தன் பான்டிலிருந்து துப்பாக்கியை வெளியே எடுத்தவன், எதிராளியை நோக்கிக் குறிவைக்க, அவன் காணாமல் போனான்.

 

எங்கே போனான்…? விரைந்து அவனைத் தேடத் தொடங்கினான் அநபாயதீரன்.

திடீர் என்று அவன் ஒரு திருப்பத்தில் திரும்பி ஓடினான். இவனும் அவனைப் பின் தொடர, அங்கே கண்ட காட்சியில் திகைத்துப்போய் நின்றான் .

 

அந்த இடம், உணவகங்கள் நிறைந்த இடம். அதனால் அதிக மக்கள் அங்கே நடமாடிக்கொண்டிருக்க இவன் குழம்பினான்.

 

இத்தனை கூட்டத்தில் அவனை எப்படிக் கண்டு பிடிப்பது… யோசித்தவன், அவன் அணிந்திருந்த மேற்சட்டை நிறத்தை மனதில் இருத்தி அந்த நிறத்தில் யாராவது மேற்சட்டை போட்டிருக்கிறார்களா என்று பார்த்தான்.

 

அப்படி யாரும் தென்பட வில்லை. அந்த எதிரியோ, கூட்டத்தோடு கூட்டமாகச் சேரும் போதே, தன் மேற்சட்டையைக் கழற்றித் திருப்பிப் போட, இப்போது சிவப்பு நிற மேற்சட்டை, கறுப்பு நிறமாக மாறியிருந்ததால் அநபாயதீரனால் எதிரியை இனம்கண்டு கொள்ள முடியவில்லை.

 

இத்தினைக்கும் அவன் அநபாயதீரனைத் தாண்டி, மெல்லிய கிண்டல் சிரிப்புடன் நடந்து போனதை அவன் கவனிக்கவில்லை.

 

ஆனாலும் அவனுடைய மூளை படு வேகமாக வேலை செய்தது. எதிரிகள் அவனை ஏன் தாக்க முயலவில்லை. அவர்கள் ஓடுவதிலேயே குறியாக இருந்தார்களே தவிர, எதிர்த்து நிற்கவில்லை. ஏன்? எதற்காக? இது அவனைத் திசை திருப்பச் செய்த சூழ்ச்சியா? எதற்காக அவனை இத்தனை தூரம் வரவளைத்திருக்க வேண்டும்? ஏன் வரவளைத்தார்கள்?

 

தன் நெற்றியை வருடிக்கொடுத்தவனுக்கு அப்போதுதான் ஒன்று உறைத்தது.

 

“ஓ… ஷிட்… அ…அர்ப்பணா… அவளைத் தனியாக விட்டு விட்டு, இத்தனை தூரம்…” நினைத்தவனுக்கு நெஞ்சுக்கூடே காலியான உணர்வில் பரிதவித்துப் போனான்.

 

“ஓ… நோ… நோ… நோ…” என்று தன்னையும் மீறிக் கத்தியவன், மீண்டும் தன் இருப்பிடம் நோக்கி மின்னல் விரைவுடன் ஓடத் தொடங்கினான்.

 

அவனுடைய இருப்பிடம் வந்ததும் அவனுடைய இதயம் படு வேகமாக அடித்துக்கொண்டது. மூச்சுக்காற்றே வெளி வரமாட்டேன் என்பது போல அடம் பிடித்தது.

 

“ப்ளீஸ்…. ப்ளீஸ் பி தெயர்… அர்ப்பணா…” என்று மனதார வேண்டியபடி, பதறிய மனதைத் தன் வலக் கரத்தால் சமாதானப் படுத்த முயல்வது போல நெஞ்சை வருடிக் கொடுத்தவன், நடுங்கும் கரம் கொண்டு டோர் கார்ட் கீயை எடுத்து, ஸகான் அறைக் கதவைப் படாரென்று திறந்தான்.

 

திறந்தவன் பேச்சற்று சிலையாகிப் போனான்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!