Thu. Sep 19th, 2024

தகிக்கும் தீயே குளிர்காயவா 37/39

(37)

 

இன்று விடுதியில்

 

அந்த உயிரியல் ஆயுதத்தைத் தயாரித்தவர் உன் தந்தை என்றதும், அர்ப்பணாவினால் அதை நம்வே முடியவில்லை.

 

“நோ… இருக்காது… நிச்சயமாக இருக்காது… அது எப்படி… எப்படி சாத்தியம்… என் தந்தை… என் தந்தை… அவர்… அவர் பல்கலைக்கழக, இயற்பியல் (physics) பேராசிரியர்… அவர் எப்படி…” என்று இவள் குழம்ப,

 

“இல்லை அர்ப்பணா… உன் தந்தை, இயற்பியல் பேராசிரியர் அல்ல… அவர்… உயிர்வேதியியலில் (Biochemical) முனைவர் பட்டம் பெற்ற, உலகின் விரல் விட்டு எண்ணக்கூடிய திறமையான ஆராய்ச்சியாளர்… அவரால்தான் இந்த சக்திவாய்ந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அது பெரும் அபாயகரமானது என்பதைத் தெரிந்ததும், அரசு எட்டு வருடங்களுக்கு முன்பே, அந்த ஆராய்ச்சியை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தது. ஆனால், உன் தந்தை, அதை அலட்சியம் செய்து நினைத்த காரியத்தைச் சாதித்துக்கொண்டார்.

 

அதைக் கேட்டதும் செவிப்பறைகள் இரண்டும் அடைக்க, இரத்தம் வடிவது போன்ற அதிர்வில், மூச்செடுக்க மறந்துபோய், அநபாயதீரனை வெறித்தாள் அவள்.

 

“என்… எனக்கு… அப்பா… இப்படியெல்லாம் செய்தார் என்று தெரியாது தீரன்… சத்தியமாகத் தெரியாது…” என்று கம்மிய குரலில் கூறியவளுக்கு உடல் எல்லாம் நடுங்கத் தொடங்கியது. தான் சொல்வதை இவன் நம்புவானா என்கிற சந்தேகம் கூட எழுந்தது.

 

உதடுகள் நடுங்க, இதழ்கள் கடித்து நின்றவளை வெறித்துப் பார்த்தவன், தன் கரத்திலிருந்த அந்தக் குறிப்பேட்டை அவள் முன்னால் போட்டு,

 

“முழு விபரமும் இதில் இருக்கிறது அர்ப்பணா…” என்றான் இறுக்கமான குரலில்.

 

“என்… அப்பா… அதை விற்றாரா?” என்றாள் பெரும் வலியுடன்.

 

“இல்லை… அதை விற்க மறுத்துவிட்டார்…” என்றதும் இவள் முகத்தில் பெரும் நிம்மதி வந்து உட்கார்ந்து கொண்டது.

 

“அந்த நோய்க் கிருமிகளை அடைவதற்கு உன் தந்தையைப் பல விதமாக மிரட்டினார்கள். உன் தந்தை மசியவில்லை. இதனால் தன் உயிருக்குப் பெரும் ஆபத்து விளையும் என்பதை அவர் எப்படியோ அறிந்திருக்கவேண்டும்… அதனால்தான், அனைத்து ஆவணங்களையும் ஒரு இடத்தில் மட்டும் பதிவுசெய்திருக்கிறார். உன் தந்தை மறுத்துவிட்ட கோபத்தில் அவரைக் கொலை செய்யப் பல முறை முயன்று இறுதியில், இரண்டு வருடங்களுக்கு முன்பு, அவருடைய காரை விபத்துக்குள்ளாக்கினார்கள். அதில் அவர் பிழைத்துக் கொள்ளவில்லை. என்றதும், திரும்பி சிவார்ப்பணாவைப் பார்க்க, அவள் முகம் வெளிறிப் போயிருந்தது.

 

“அப்படியானால்… என் தந்தை விபத்தில்… விபத்தில் இறக்கவில்லையா… அவர்… அவர்…”

 

“யெஸ்… கொலை செய்யப்பட்டார்… பரிதாபமாக உன் தாயும் அந்த இடத்தில் இறந்து விட்டார்…” என்றதும், சிவார்ப்பணாவிடமிருந்து பெரும் கேவல் வந்தது.

 

அது வரை இறுகியிருந்தவன், வேகமாக விரைந்து அவளை நெருங்கித் தன்னோடு இறுக அணைத்துக்கொண்டான். அவளை ஆசுவாசப் படுத்தும் வகையில், முதுகை வருடிக்கொடுத்தவன்,

 

“ப்ளீஸ்… அர்ப்பணா… கொன்ட்ரோல் யுவர் செல்ஃப்…” என்றான். கொஞ்ச நேரம் அழ விட்டவனிடம்,

 

“அந்த ஆயுதம்… இ… இப்போது… எங்….கே… அதுக்கு எ…ன்ன நடந்த…து?” என்றாள் விழிகளில் கண்ணீர் வழியக் கம்மிவிட்ட குரலுடன். அவளுடைய கண்ணீரைத் துடைத்தவாறே,

 

“உன் தந்தை இறப்பதற்கு முன், அந்த நோய்க்கிருமிகளை, பத்திரமாக, குண்டுகள் கூடத் துளைக்காத கணினி மயமாக்கப் பட்ட ஒரு பெட்டியை உருவாக்கி, அதில் வைத்து விட்டார். அந்தப் பெட்டியைத் திறக்கவேண்டுமானால், அதற்குரிய கடவுச்சொல்லைப் பக்குவமாகப் பயன்படுத்த வேண்டும்.” என்றவன் மீண்டும் எழுந்து தள்ளி நின்று சிவார்ப்பணாவைப் பார்த்தான்.

 

“இப்போது செயற்பட்டுக்கொண்டிருக்கும் நோய்க்கிருமிகளைச் செயலிழக்கச் செய்வதற்குரிய கடவுச் சொல்லை அவர் குறிப்பிட்ட விதிகளைப் படிப்படியாகப் பின்பற்றி, நாம் பயன்படுத்தவில்லை என்றால், அந்த நோய்க்கிருமிகள் கசிவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். அவை கசிந்தால்… கனடாவை யாராலும் காப்பாற்ற முடியாது அர்ப்பணா…

 

அந்த நோய்க் கிருமிகளை முற்றாகச் செயலிழக்கச் செய்வதற்குரிய வழிகள்… வழி முறைகள் அனைத்தையும், ஒரு பென் டரைவில்  பதிவு செய்யப்பட்டிருக்கிறது…அதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அது கிடைத்தால்தான் நம்மால் எதையும் செய்ய முடியும்…” என்றதும் தன் தலையைப் பற்றிக்கொண்டாள் சிவார்ப்பணா. இதற்க்கு மேல் அவளால் எதையுமே செவிமடுத்துக் கேட்கமுடியும் போலத் தோன்றவேயில்லை. யாரோ நெஞ்சின்மீதேறி அழுந்த  இதயத்தை  கசக்குவது போன்ற உணர்வில் துடித்துப்போனாள் அவள். எதோ கண்ணுக்குத் தெரியாத மாயைக்குள் சிக்கியவள் போலத் தவித்தவள்,

 

“ஸ்டாப்… சத்தியமாக நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை. என் கழுத்தில் இருப்பதுதான் கடவுச் சொல் என்றால் அதை வைத்து அந்தக் கிருமிகளை அழிக்காமல் என் கூடப் பேசிக்கொண்டிருக்கிறீர்களே… ஏன்…?”  என்று சீற, அவனோ அவளை இயலாமையுடன் பார்த்து,

 

“அது அத்தனை சுலபமில்லை… உன்னுடைய அப்பா, நாச காரியச் செயலைச் செய்தாலும், அதை யாரும் பயன்படுத்தாதவாறு பாதுகாப்பாக வைத்திருக்கிறார். முதலாவது நமக்கு வேண்டியது அந்த பேன்ட்ரைவ், அந்த பேன்ட்ரைவ் வேலை செய்யக் கூடிய கணினி, அப்படியே அந்த பேன்ட்ரைவ் போட்டாலும், அதற்குரிய தகுந்த கடவுச் சொல்லைப் போட வேண்டும். இல்லாத பட்சத்தில் தவறாக நாம் எதையாவது அழுத்தினால் அத்தனை தகவல்களும் அழிந்து போகும். அது அழிந்து போனால் எப்போதுமே அந்தக் கிருமிகளை அழிக்க முடியாது. அப்படியே சரியான கடவுச் சொல்லைப் பேட்டு நாம் அழிக்கும் வகையைக் கண்டுகொண்டாலும், அவர் குறிப்பிட்ட படிமுறைக்கு ஏற்பக் கண்ணாடிப் பெட்டியைத் திறந்து அந்த ஏவுகணையைச் செயல் இழக்கச் செய்யவேண்டும். இதில் ஒரு படிமுறை தவறினாலும், அந்த ஏவுகணை நம் நாட்டையே அழிக்கும்… சோ… நாம் எடுத்து வைக்கும்  அடியை மிக  அவதானமாகச் செய்யவேண்டும்… அதற்கு முதல் அந்த பேன்ட்ரைவ் எங்கே என்று கண்டுபிடிக்க வேண்டும்…” என்றவன், ஒரு கணம் அமைதி காத்து,

 

“உன்னிடம் உன் தந்தை ஏதாவது கொடுத்திருந்தாரா அர்ப்பணா?” என்றான். அவளோ மறுப்பாகத் தலையை ஆட்டி,

 

“இல்லை தீரன்… எதுவுமே என்னிடம் கொடுக்கவில்லை… இதுவரை அப்பா எனக்கு எதுவும் கொடுத்ததில்லை…” என்று மீண்டும் விழிகள் கலங்கியவாறு கூறத் தன் நெற்றியை அழுத்திக் கொடுத்தான் அநபாயதீரன்.

 

“அவர் குறிப்பேட்டில் கூடவா அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை?” என்று இவள் கேட்கத் தலையை மறுப்பாக ஆட்டியவன்,

 

கவிதையாக எதை எதையோ குறிப்பிட்டிருக்கிறார். அனைத்தும் அந்த ஏவுகணைகள் வெடித்தால் நடக்கும் அபாயங்களும், அது எப்படிச் செயல்படும் என்பது பற்றியும்தான் இருக்கிறது. அது தவிர, இயற்கைக் காட்சிகளைப் பற்றிய கவிதைகள்… இதைத் தவிர வேறு எதுவுமில்லை.” என்றான் தன் நெற்றியை அழுந்த வருடிக் கொடுத்தவாறு.

 

“இப்போது என்னுடைய தலையாய கடமை, திருடப்பட்ட அந்த உயிரியல் ஆயுதத்தை நான் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்து, உயிரோடு இருக்கும் அந்தக் கிருமிகளை முழுதாக செயலிழக்கச் செய்யவேண்டும். உயிரியல் ஆயுதத்தின் ஆய்வுக் கட்டுரைகளையும், அது சார்ந்த விபரங்களையும் கண்டுபிடித்து ஒன்று விடாது அழிக்கவேண்டும். இதற்குப் பின்னால் இருக்கக் கூடிய பாதாளக் கும்பல்களை இனம் கண்டு ஒழித்துக்கட்டவேண்டும்… இந்தப் பணிகளுக்காகவே நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன். ” என்றவன், மார்பில் கட்டியிருந்த தன் கரத்தை விலக்கித் தலையைக் கோதிக்கொண்டான். பின்

 

அங்கிருந்த ஜன்னலருகே சென்றவன், மீண்டும் கரத்தைப் பான்ட் பாக்கட்டில் வைத்து, கால்ளைச் சற்று அகட்டி, வெளியே வெறித்தவாறு,

 

“அதனால்தான்… நான் உன்னைப் பின் தொடர்ந்தேன் அர்ப்பணா… உன்னைக் கண்காணித்தேன்… உன் தந்தை சார்ந்த செய்திகள் உனக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்பதை அறியவேண்டிய அவசியம் எனக்கு இருந்தது.” என்று கூற, சிவார்ப்பணாவின் உதடுகள் மேலும் நடுங்கின.

 

“எதற்காக, என் வீட்டில் என்னைப் பார்த்தபோது தெரியாதவர் போல நடித்தீர்கள்…”

 

“எனக்கு வேறு வழி இருக்கவில்லை… உன் பின்னால் சில கும்பல்கள் பின் தொடரத் தொடங்கியதும், மறைந்திருந்து உன்னைக் கண்காணிக்க என்னால் முடியவில்லை. முன்னமே நான் உன்னைக் காத்தேன் என்பது வெளியே தெரிந்தால், என்னையும் கண்டுகொள்வார்களோ என்பதால்தான், உன்னைத் தெரியாதது போலவும் ரகுவுடைய நண்பன் என்பது போலவும் நடந்துகொண்டேன்… தவிர… நான் ரகுவினுடைய நண்பன் என்று கூறியதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அது, ரகுவுடைய தாய் தந்தை.

 

வாமதேவனுக்கும், ரகுவிற்கும் இடையில் உள்ள நட்பை விசாரணையின் போது நான் அறிந்து கொண்டதும், முதல் திட்டமாக, அவனுடைய வீட்டையும், அவனுடைய அறையையும் பரிசோதிக்கவேண்டிய அவசியம் எனக்கிருந்தது. யாருடைய கவனத்தையும் கவராது அங்கே நுழைய எனக்குக் கிடைத்த ஒரே ஒரு வழி, ரகுவின் நண்பன் என்று சொல்லி உள்ளே நுழைவதுதான்…”

 

உள்ளே நுழைந்ததால்தான், எந்தளவு பெரிய சிக்கலில் மாட்டுப்பட்டிருக்கிறாய் என்பதை நான் கண்டுகொண்டேன். எப்படியும் நீ என் பாதுகாப்பில் இருக்கவேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண்டேன். அதனால்தான், என்னோடு உன்னை வைத்திருக்க முயன்றேன்…” என்றான் அவன்.

 

“இதை முதலிலேயே சொல்லியிருந்தால், பல சிக்கல்களிலிருந்து தப்பியிருக்கலாமே…” என்றபோது, அவளுடைய குரல் மீண்டும் கம்மியிருந்தது.

 

“அர்ப்பணா… உனக்கு உன்னைப் பற்றித் தெரிவதை விட, எனக்கு உன்னைப் பற்றி நன்கு தெரியும். இதை முதல்லேயெ உன்னிடம் சொல்லியிருந்தேன் என்று வை, நிச்சயமாக நீ என்னை நம்பியிருக்கமாட்டாய். அது மட்டுமா? முதல் வேலையாகக் காவல்துறைக்குப் போயிருப்பாய், இல்லை உனக்குத் தெரிந்தவர்கள் அனைவரிடமும் கூறியிருப்பாய்… குறைந்தது ரகுவிடமாவது சொல்லியிருப்பாய்….” என்றான் அநபாயதீரன் அழுத்தமாக.

 

இதை எப்படி மறுப்பது…. அவளைப் பற்றி நன்கு தெரிந்தல்லவா பேசுகிறான்.

 

“ரகு இப்போது எங்கே? அவனிற்கும், இந்த ஆபத்தான திட்டத்திற்கும் என்ன சம்பந்தம்? இந்தக் குறிப்பேடு எப்படி ரகுவிடம் போனது? ரகு ஏன்… அந்த கீ டாலரையும், இந்த மடிக்கணினியையும் எனக்குக் கொடுத்தான்… அவனிடம் இவை எப்படி வந்தன?” என்று அடுத்த கேள்வியைக் கேட்க, முதலாவது கேள்வியைச் சாமர்த்தியமாகத் தவிர்த்தவன், பின் ரகுவிற்கும், வாமதேவனுக்கும் இடையே உள்ள நட்பையும், அவருக்காக அவன் செய்து கொடுத்த ஏவு கணை பற்றியும் அவன் விவரித்து விட்டு,

 

“தனது உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்ததும், உன் தந்தை, தன்னுடைய ஆவணங்களை, யாருக்கும் சந்தேகம் வராதவகையில், ரகுவின் பாதுகாப்பிற்கு அனுப்பியிருக்க வேண்டும்.

 

உன் தந்தை இறந்ததும், மனதில் ஏற்பட்ட பயம், தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற அச்சம், கனடிய அரசுக்குத் தெரிந்தாலோ, இல்லை பாதாளக் குழுக்களுக்குத் தெரிந்தாலோ, எதிர் விழைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொண்டதனால், உன் தந்தையுடைய பொருட்களை உன்னிடம் சேர்ப்பிக்க அவன் எண்ணியிருக்கலாம்.

 

அல்லது, தன்னிடம் இருப்பதை விட உன்னிடமிருந்தால் அதிக பாதுகாப்பாக இருக்கும் என்று அவன் யோசித்திருக்கலாம்… எனக்குத் தெரியவில்லை அர்ப்பணா… எது எப்படியாக இருந்தாலும், அவனும் உன் தந்தையின் தவற்றுக்கு உடந்தையாகிப் போனவன். அரசு தடை செய்தும், அதை மதிக்காது, மேற்கொண்ட ஆய்வுக்கு உதவி செய்து, சட்டத்திற்குப் புறம்பான ஏவுகணையைத் தயாரித்தது ரகு செய்த குற்றம்.” என்றான் அமைதியாக.

 

“என்… என் கழுத்தில் குத்தப்பட்டிருக்கிற இலக்கம் என்ன?”

 

“நான் சரியென்றால், அது தான் நாம் எல்லோரும் தேடிக்கொண்டிருக்கும் பிரதான கடவுச்சொல் மற்றும் தாய்க்குறியீடு” என்றான் சலனமே இல்லாமல்.

 

சிவார்ப்பணாவிற்கு அதைக் கேட்டதும், கொஞ்ச நேரம் எதுவும் ஓடவில்லை.

 

“வட்… கடவுச் சொல்லா… அதுவும் இந்தப் பயங்கரமான ஆயுதத்திற்குரிய கடவுச் சொல் என் கழுத்திலா…. ஓ.. நோ.. நோ… யு ஆர் மிஸ்டேகின் தீ… சாரி கேர்னல்…” என்று அவள் பலமாகத் தலையை ஆட்ட,

 

“அது தவறாக இருக்கவேண்டும் என்பதுதான் என் எண்ணமும் அர்ப்பணா… பட்…” என்று அவன் இழுக்க,

 

“நோ… நோ வே…. எனக்குத் தெரியாமல் எப்படிக் குத்தப்பட்டிருக்கும் தீரன்… எனக்கு இவை குத்தியது எதுவும் நினைவில் இல்லையே…” என்று சிவார்ப்பணா பரிதவிப்புடன் கூற, அதற்குப் பதில் தெரியாமல் அநபாயதீரனும் அமைதி காத்தான்.

 

“தெரியவில்லை… உன் கழுத்தில் உனக்கே தெரியாமல் எப்படி பச்சை குத்தினார், இதற்கு உன் தந்தை வாமதேவன் வந்து கூறினால் மட்டுமே நமக்குத் தெரியும் அர்ப்பணா…” என்றவன் சற்று அமைதி காத்தான்.

 

அவனுடைய அமைதி, அவன் தன்னை முழுவதும் நம்பவில்லை என்பதை எடுத்துக் காட்ட உள்ளம் வலித்தது. அந்த வலியுடனேயே அவனை ஏறிட்டுப் பார்த்தவள்,

 

“நீங்கள் சந்தேகப் பட்டாலும், சந்தேகப் படாமல் விட்டாலும் உண்மை மாறப்போவதில்லை. நான் தப்பு செய்யவில்லை. எனக்கு இவை எப்படி இங்கே வந்தது என்று தெரியாது…” என்று விரக்தியுடன் கூறியவள் தன் கழுத்தை வருடிக் கொடுத்தாள்.

 

“அப்படியே நீ சொல்வது போல, உனக்குத் தெரியாமல், அவர் அந்தக் கடவுச் சொல்லை அங்கே யாரும் கண்டுகொள்ளாத வகையில் பதிந்திருக்கிறார் என்றால், அதற்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான் இருக்க முடியும்…” என்று அவன் கூற, என்ன என்பது போலப் பார்த்தாள் சிவார்பப்ணா.

 

“எதிரிகளின் கையில் நீ சிக்கினால், அவர்கள் எப்படி உன்னிடம் விசாரித்தாலும் கடவுச்சொல் பற்றி நீ கூற முடியாது… நீ உயிரோடு இருக்கும் வரை அதுவும் பாதுகாப்பாக இருக்கும்… சோ… உன்னுடைய உயிருக்கும் ஆபத்தில்லை, கடவுச்சொல்லும் பத்திரமாக இருக்கும்…” என்று கூற,

 

“ஒரு வேளை கண்டுபிடித்தால்…” என்றாள் அச்சத்துடன்.

 

“அதற்கு நிச்சயமாக வாய்ப்பில்லை அர்ப்பணா… அதுவும், உன் முடிகளுக்குள் மறைந்திருக்கும் கடவுச்சொல்லைக் கண்டறிய வாய்ப்பேயில்லை. அப்படி ஒரு வேளை கண்டிருந்தால்…” என்றவன் அவளை வலியோடு பார்த்து, அதுதான் உன் இறுதி நிமிடமாக இருக்கும்…” என்றதும் அவனை அதிர்வுடன் பார்த்தாள் சிவார்ப்பணா.

 

மரணம்… எதற்காக உலகம் அஞ்சுகிறதோ, எதைக் கண்டு மனிதன் பயந்து ஓடுகிறானோ, அதே மரணம் அவள் பிடரியில் தொத்திக்கொண்டிருக்கிறது கடவுச் சொல்லாக. முகம் வெளிற அவனை ஏறிட, ஏனோ அவள் முகத்தைப் பார்த்துப் பரிதவித்துப் போனான்  அந்த ஆண்மகன்.

 

அழுது அழுது வீங்கியிருந்தன முகம். விழிகள் கூட சிவந்து, இன்னும் நீரைத் தேக்கிவைத்திருந்தது. மூக்கின் நுணியோ, ஏற்கெனவே சிவந்த முகத்திற்குப் போட்டியாக மேலும் கன்றிச் சிவந்திருந்து. உதடுகள், அவளுடைய பற்களுக்கிடையில் சிறைப்பட்டு, அழுவதற்குக் கூடத் துடிக்க முடியாமல் நடுங்கிக்கொண்டிருந்தன.

 

ஏறியிறங்கிய மார்பு, கட்டியிருந்த கரங்களுக்குள்ளாக மறைந்திருக்க, இன்னும் அவனுடைய டீ ஷேர்ட் அணிந்திருந்தால், அவள் அமர்ந்திருந்த விதத்தில் அது சற்று மேலேறி வழுவழுத்த செதுக்கிய தொடைகளை வெளிக்காட்டியிருக்க, அவற்றைத் தன் விரல்கள் கொண்டு வீணை மீட்டவேண்டும் என்று எழுந்த வேகத்தை அடக்க முடியாமல், நிமிர்ந்தவனின் தொண்டை தாபத்தில் வறண்டுபோயிருந்தது.

 

தன் தொண்டையைச் செருமிக் குளிர்சாதனப் பெட்டியின் அருகே சென்று அதைத் திறந்தான்.

 

அது அடித்த குளிரில் ஓரளவு அவன் உடலில் எழுந்த தீ அணையுமோ என்கிற நப்பாசையில் தன் முகத்தைக் குனிந்து அந்தக் குளிர் காற்றைச் சுவாசிக்க முயன்றான். ம்கூம்… அந்தச் சூட்டை அவள் கையணைப்பு மட்டுமே தணிக்கும் என்பதைப் புரிந்துகொண்டவனாக, விரக்தி மேலிட, குளிர்சாதனப் பெட்டியின் கரையிலிருந்த தண்ணீர் போத்தலை எடுத்த, மட மட என்று குடிக்கத் தொடங்கினான்.

 

ஆனால் அர்ப்பணாவிற்கோ எல்லாமே வெறுமையாத் தோன்றியது. குறிப்பாக அநபாயதீரனுடைய அக்கறை, அவளைக் காப்பதற்காக அவன் எடுத்துக் கொண்ட முயற்சி அனைத்தும் அவள் மீது கொண்ட அக்கறையால் அல்ல. அந்த பயங்கர ஆயுதம் எதிரிகளுக்குப் போகக் கூடாது என்கிற அவசியம். அதற்கு அவள் உயிரோடு இருக்கவேண்டும். ஆனாலும் அதை அவன் வாயால் கேட்டுவிடவேண்டம் என்கிற வேகம் எழ,

 

“அப்படியானால், அந்த ஆயுதத்திற்காகத்தான் என்னைக் காத்தீர்களா…?” என்றாள் சிறுத்துவிட்ட குரலில்.

 

“யெஸ்… உன்னை எதிரிகள் தேடுகிறார்கள் என்பதை அறிந்ததும், உன்னைப் பாதுகாக்கவேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. உன்னிடமிருந்து அவர்கள் உண்மையை அறிந்துகொள்வதற்கு முதல், நான் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது… அதனால்தான்…. கடந்த ஆறு மாதங்களாக உன்னைப் பின் தொடர்ந்து வந்தேன்…” என்றான் அவன் உடல் இறுக.

 

‘ஆமாம்… அவனும் பின்தொடர்ந்து வந்திருக்கிறான்… அவளைப் பெறுவதற்காக அல்ல, அவளிடமிருந்து ஏதோ ஒன்றைப் பெறுவதற்காக. அவளைக் காத்தது, பாதுகாத்தது அனைத்தும் அவள் மீது உள்ள அக்கறையால் அல்ல, எல்லாம் அந்தக் கடவுச் சொல்லைக் கண்டு பிடிப்பதற்காக. அவன் காரியம் முடிந்ததும், அவளை விட்டு விட்டு அவன் தன் பாதையில் போய் விடுவான்… கடந்த ஆறு மாதங்களாக, அவன் நினைவிலேயே அவள் மயங்கிக் கிடந்ததற்கு அர்த்தமேயில்லாது போய்விட்டது.

 

அன்று முதன் முதலாகக் கொடுத்தானே இதழ்கள் தீண்டும் முத்தம்… அதற்கு அர்த்தம் என்னவாக இருக்க முடியும்? அன்று மட்டுமா? எத்தனை முறை.. எல்லாமே, அவள் வெறும் பெண் என்கிறதனால் வந்த வெறும் ஈர்ப்பு தானா? நான், என்னுள் துடிக்கும் மனசு… இதையேன் அவன் என் புரிந்துகொள்ளவில்லை.?” நினைக்கும் போதே தாங்க முடியாது மனம் பெரிதும் தவித்துத் துடித்து மருகியது.

 

அநபாயதீரன் பொய்த்துப்போனது ஒரு பக்கம் இருக்கட்டும்…. ஆனால் இன்று அவள் எத்தனை பெரும் சிலந்தி வலைக்குள் அகப்பட்டு விட்டாள். எங்கே கைகளை நீட்டினாலும், அங்கிருந்து விடுபட முடியாமல் இருக்கிறதே… அதிலிருந்து எப்படி வெளியே வருவது. இனி அவளை வெளியே கொண்டு வர யார் இருக்கிறார்கள்… தீரனும் தன் வேலை முடிந்ததும் சென்றுவிடுவானே… அதற்குப் பிறகு நடக்கும் அவலத்திற்கு யார் பொறுப்பு… கடவுளே…  அவள் வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒன்றிற்குப் பயந்து ஓடவேண்டியதுதானா?’  எண்ணும்போதே அவளால் தாங்க முடியவில்லை.

 

எதுவோ அடைத்துக் கொண்டு வர, என்ன செய்கிறோம் என்பது கூடப் புரியாமல்,

 

“கோ டு ஹெல் தீரன்…” என்றவாறு வெளியே வேகமாக ஓடத் தொடங்கினாள்.

 

(38)

 

அநபாயதீரன் ஒரு கணம் அதிர்ந்து போய் நின்றான். இப்படித் திடீர் என்று அவள் வீட்டை விட்டு வெளியேறுவாள் என்று அவன் எண்ணவில்லை.

 

அதுவும் அவனுடைய டீ ஷேர்ட்டும், கூடவே வெறும் காலுடன், அந்தக் குளிரில் போவது என்றால்,… நினைக்கும் போதே இவனுக்குக் குளிர் படாமலே உடல் நடுங்கியது. உடனே அவளைத் தடுப்பதற்காக அவள் பின்னால் ஓடத் தொடங்கினான்.

 

எங்கே போகிறோம் என்பதுகூடத் தெரியாமல் வேகமாக ஓடினாள் சிவார்ப்பணா. பனி வேறு வெளியே பெய்துகொண்டிருக்க அதைக் கூட உணராமல், கொஞ்சத் தூரம் ஓடியவளுக்கு, மெது மெதுவாகச் சுரணை வரத் தொடங்கியது.

 

ஒரு மனிதனால், எத்தனை அதிர்ச்சிகளைத் தாங்க முடியும்… தந்தை நல்லவர்… ஆனால் நல்லவர் அல்ல, ரகு நல்லவன்… ஆனாலும் அவன் நல்லவன் அல்ல… தீரன்… மிக மிக நல்லவன்… ஆனால் அவன் கூட நல்லவன் அல்ல… அப்போ யார் நல்லவர்கள்… யாரை நம்புவது? புரியாமல் தலையைப் பற்றிக் கொண்டவளுக்கு, தெளிவை எங்கிருந்து பெறுவது என்று தெரியவில்லை. எதை யோசிப்பது, எதை விடுவது, எது சரி எது பிழை என்று புரியாமல், குழம்பிப்போய் நின்றாள்.

 

மாறி மாறி ஏதோ ஒன்று அவள் மண்டையைக் குடையத் தொடங்கியது. கால் தன் போக்கிற்குப் போக, மனம் மட்டும் எதை எதையோ யோசித்துக்கொண்டிருந்தன. டெஸ்ட் டியூபினுடன் தந்தை பார்த்துச் சிரித்தார். மடிக்கணினியுடன் பார்த்துச் சிரித்தான் ரகு. வெற்று மேலுடன் அவளை அணைத்தவாறு ஒரு கயிற்றைப் பற்றித் தொங்கிக்கொண்டிருந்தான் தீரன்… தாய் தந்தையரின் பிணத்தைக் கண்டு, அழுது கதறியவளை என் கண்ணே என்று மார்போடு அணைத்துக்கொண்டிருந்தார் பானுமா. “சாரிடா…” என்று தலையை வருடிக்கொடுத்தவாறு நின்றார் ராகவன்… கண்ணிமைக்கும் நொடியில் கத்தியால் இருவரைக் குத்தினான் அநபாயதீரன். கூடவே அவளுடன் பத்தொன்பதாம் மாடியில் முகத்தில் காற்றுப் பலமாக வீசக் கரத்தைப் பற்றியவாறு நின்றான். எதிரும் புதிருமாக வேகமாக ஓடிய வாகனங்கள். தன் நடு விரலை யாருக்கோ காட்டியது… அந்த கீ செய்ன்…’ என்று வேக வேமகாகப் படங்களாக மனதில் ஓடிக்கொண்டிருக்கப் பெரிதும் குழம்பிப் போய், அடுத்த அடி எங்கே எப்படி வைப்பது என்பது கூடத் தெரியாமல் பரிதவித்தவாறு மறு அடியை வைக்க முயல,

 

எங்கிருந்தோ, ‘அர்ப்பணா ஸ்டாப்…’ என்று கத்தும் அநபாயதீரனின் குரல் கேட்க, விதிர் விதிர்த்துத் திரும்பிப் பார்த்தாள் சிவார்ப்பணா.

 

அநபாயதீரன்தான்… எப்படியோ அவளைத் தேடிக் கண்டுபிடித்து வந்து விட்டிருந்தான்.

 

‘வராமல் என்ன செய்வான்… அவனுக்கு வேண்டியது அவளிடம் இருக்கிறதே… இலகில் விட்டு விடுவானா?’ விரக்தியில் சிவார்ப்பணாவின் உதடுகள் நெளிய,

 

“ப்ளீஸ் தீரன்… ஐ நீட் ஸ்பேஸ்… கொஞ்ச நேரம் நான்… தனியாக இருக்கவேண்டும்… ஐ ப்ராமிஸ் யு… நான் ஓடிவிட மாட்டேன்”  என்று இவள் சலிப்புடன் கூற. இவனோ சற்று நேரம் அமைதியாக சிவார்ப்பணாவை வெறித்துப் பார்த்தான். அவளுடைய நிலை அவனுக்கு நன்கு புரிந்தது.

 

“ஐ அண்டர்ஸ்டான்ட் அர்ப்பணா… பட் இது அதற்குரிய நேரமில்லை வா உள்ளே போகலாம்…” என்றான் அவன் சற்றுத் தன் குரலை உயர்த்தி.

 

அவனுக்கு சிவார்ப்பணாவின் நிலை புரியாமல் இல்லை. ஆனால், அவர்கள் இருக்கும் நிலையில், நாகரீகம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. எந்த நேரமும், தலைக்கு மேல் தொங்கும் கத்தி, கீழே விழலாம். அதற்கும் முதல் சுதாரித்துக்கொள்ள வேண்டும். இவள் என்னவென்றால்,

 

“அர்ப்பணா… உள்ளே வா… திஸ் இஸ் நாட் த டைம் டு ப்ளே…” என்று கூற,

 

“கோ டு ஹெல் தீரன்…” என்று சீறியவாறு மேலும் நான்கடி எடுத்து வைக்க முயல, பொறுமையிழந்தவன், விரைந்து சிவார்ப்பணாவை நெருங்கி அவள் கரத்தைப் பற்றி,

 

“உன் தந்தை செய்து வைத்த, தவறுகளைத் திருத்தும் வரைக்கும் நீ எங்கும் போகமுடியாது அர்ப்பணா…” என்று அவன் சினத்துடன் கூற, பொறுமையற்ற மூச்சுடன் அவனுடைய கரத்தை உதறியவள்,

 

“அவர் என்னைக் கேட்டா தவறுகள் செய்தார்? என்னைக் கேட்டா அந்த… அந்த ஆயுதத்தைக் கண்டு பிடித்தார்… என்னைக் கேட்டா செத்துப்போனார்… இல்லையல்லவா… பிறகு எதற்கு நான் வருந்தவேண்டும்… நோ…. ஐ டேன்ட் கெயர் தீரன்… போதும் எல்லோருக்காகவும் நான் வருந்தியது போதும்… இனி எனக்கு யாரைப் பற்றியும் கவலையில்லை… இந்த விநாடியிலிருந்து நான் என்னைப் பற்றி மட்டும்தான் யோசிக்கப்போகிறேன்….” என்றவாறு, அவள் திரும்ப, அதற்கு மேல் பெருமையை இழுத்துப் பிடிக்க முடியாமல், அவளுடைய மேல் கரத்தை அழுந்தப் பற்றியிருந்தான் அநபாயதீரன்.

 

“விடுங்கள் தீரன்… நான் போக வேண்டும்…” என்று கரத்தை உதற,

 

“சாரி அர்ப்பணா… அந்த பென்ட்ரைவ்… எங்கே என்று தெரியும் வரையும், அதை உன்னிமிருந்து பெறும் வரைக்கும், நீ எங்கும் போக முடியாது…” என்று இவன் கூற, அவன் பிடியிலிருந்து விடுபடத் திமிறிக்கொண்டிருந்தவள், அதைக் கேட்டதும், விறைத்துப் போய் அசையாது நின்றாள். பின் அவனைத் திரும்பிப் பார்த்தாள். பின் விரக்தியாகச் சிரித்தவள்,

 

“ஓ… அது ஒன்றுதான் நீங்கள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை அல்லவா?” என்றவளுக்கு ஏனோ குரல் கம்மியது.

 

இதோ பாருங்கள், இந்த கீ, மடிக்கணினி… அப்புறம் இந்த…” என்று தன் பிடரியை விரலால் சுட்டிக்காட்டி “மண்ணாங்கட்டி எதுவுமே எனக்குத் தெரிந்து வரவில்லை. அது போல அந்த யுஎஸபியும் எங்கேயிருக்கிறது என்று எனக்குத் தெரியாது. வேண்டுமானால் நீங்களே கண்டு பிடியுங்கள்…” என்று சீறியவாறு அவள் திரும்ப, வேகமாக அவளைப் பற்றி நிறுத்திய நேரம், அந்தக் காட்சியை ஒருவன் தள்ளி நின்று தன் கைப்பேசியில் படம் எடுத்துக்கொண்டிருந்தான்.

 

அதை யாரும் கவனிக்கும் நிலையில் இருக்கவில்லை.

 

சிவார்ப்பணாவோ, அவனுடைய கரங்கள் பட்டதும், தீ சுட்டாற் போல, திமிறியவாறு,

 

“ஹெள டெயர் யு… லீவ் மி… ஐ செட் லீவ் மி…” என்று எவ்வளவுதான் போராடினாலும், இவனுடைய இறுகிய கையணைப்பிலிருந்து அவளால் ஒரு அடி தன்னும் விலக முடியவில்லை.

 

தன்னிடமிருந்து விலகத் துடித்தவளைக் குனிந்து பார்த்தவன்,

 

“சொல் புத்தி இருக்கவேண்டும். அது இல்லை என்றால் சொந்த புத்தியாவது இருக்க வேண்டும் இது இரண்டும் இல்லையென்றால் நான் என்ன செய்வது?” என்று கேட்டவன், அவளைக் கண்ணிமைக்கும் நொடியில் தன் கரங்களில் ஏந்தியிருந்தான்.

 

அவளோ இதை எதிர்பார்க்காததால், அவனுடைய பிடியிலிருந்து விடுவிக்கப் பலவாறு முயன்றும் முடியாமல் வெற்றிகரமாகத் தோற்றுப் போனாள்.

பேதாதற்கு, அவள் திமிறத் திமிற மேலேறிய ஆடைகள் வேறு சிவார்ப்பணாவிற்கு பெரும் சங்கடத்தைக் கொடுக்க,

 

“விடுங்கள் தீரன்…” என்றாள் அவஸ்தையாக.

 

அவனோ, மிகுந்த இரசனையுடன் அவளுடைய முகம் முதல், பாதம் வரை தன் விழிகளால் வருடிச் செல்ல, அது மேலும் அவளுடைய அவஸ்தையை அதிகரிக்கச் செய்ய, அதுவரையிருந்த பதட்டமும், பயமும், வேதனையும் மறைந்து போய், அந்த இடத்தில் ஒரு வித சங்கடம் வந்து அடைந்தது.

 

தன் செவ்விதழ்களைக் கடித்துத் தன்னை அடக்க முயன்றவள்,

 

“தீரன் ப்ளீஸ்…” என்றபோது, ஏனோ குரலுக்குப் பதில் காற்றுதான் வந்தது. தன் அவஸ்தையை விழுங்க முயன்றவாறு எதையோ கூற வர அநபாயதீரனோ, சடார் என்று நின்றான். ஏதோ ஒரு வித சந்தேகம் தோன்ற, மெதுவாகத் தன் தலையை மட்டும் திருப்பிப் பக்கவாட்டில் பார்த்தான்.

 

ஒரே ஒருவன் மட்டும் திரும்பியிருந்து எதையோ செய்துகொண்டிருந்தான். வேறு யாரும் அங்கே இருந்ததற்கான அறி குறிகள் தென்படவில்லை.

 

இருந்தும் ஏதோ எச்சரிக்கை மணி அவனுடைய ஏழாம் அறிவைத் தட்டிவிட, கரத்திலிருந்தவளைத் தூக்கிச் சென்று பாதுகாப்பான ஒரு இருக்கையில் அமர்த்திவிட்டு, தன் சுண்டுவிரலை அவள் முன்பாக நீட்டி,

 

“டோன்ட் மூவ்… ஸ்டே தெயர்…” என்று எச்சரித்தவாறு திரும்பிச் செல்ல, அவனைப் பார்த்து அவளால் முறைக்க மட்டுமே முடிந்தது.

 

அவனோ, வேகமாக எங்கோ சென்றான்.

 

அதே நேரம், அவர்களைப் படம் பிடித்துக்கொண்டிருந்தவன், மேலும் சிவார்ப்பணா தெரிகிறாளா என்று எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருக்க, அவன் பின்னால் யாரோ, ஒருவர் தோளைத் தட்ட, யாராக இருக்கும் என்று, யோசித்தவாறு திரும்பியதுதான் தாமதம், அவனுக்குப் பின்னால் நின்றிருந்த அநபாயதீரன், தன் பலத்த கரத்தை முஷ்டியாக்கி, படமெடுத்தவனின், மூக்கில் ஓங்கிக் குத்த, மூக்கிலிருந்து இரத்தம் குபு குபு என்று வழியத் தொடங்கியது. எதிர்பாராத பொறிகலங்க வைக்கும் அடி. இரத்தம் வழிந்த மூக்கைப் பொத்தியவாறு சரிந்து விழுந்தான் அவன்.

 

கீழே விழுந்து கிடந்தவனின் கரத்திலிருந்த கைப்பேசியை, எதையோ முணுமுணுத்தவாறு பறித்து எடுத்தவன், அதை உயிர்ப்பிக்கச் செய்ய, கடவுச்சொல் கேட்டது.

 

அந்தக் கைப்பேசியை, விழுந்து கிடந்தவனின் முன்னால் நீட்ட, அவன் என்ன கேட்கிறான் என்பதைப் புரிந்துகொண்டவன், பயத்துடன் தன் கைப்பேசியின் கடவுச்சொல்லை அழுத்தத் திறந்துகொண்டது கைப்பேசி உள்ளே அவன் எடுத்த படத்தைப் பார்த்தவனுக்கு, கண் மண் தெரியாத ஆத்திரம் வந்தது.

 

சிவார்ப்பணாவை பல முறை படம் எடுத்திருந்தான். தோளிலிருந்து வழிந்த ஆடையைக் கவனிக்காமல், மார்புக்குக் குறுக்காகத் தன் கரங்களைக் கட்டியிருந்ததால் ஆடை சற்று மேலேயே ஏறி, தொடைகளின் ஆரம்பப் பகுதியை அப்பழுக்கில்லாமல் காட்டிக்கொண்டிருந்தது. கூடவே, தோளிலிருந்து ஆடை வழுக்கி விழுந்ததால் பார்ப்பதற்குப் ப்ளேபாய் சஞ்சிகைக்கு முன் அட்டைப்படமாக வருவதற்கான தகுதியோடு அந்தப் படங்கள் இருந்தன. கூடவே வேறு பெண்களுடைய படங்களும் அதில் இருக்க,

 

அதைப் பார்க்கப் பார்க்க இவனுக்குச் சினம் தலைக்கேறியது.

 

அந்த ஐ ஃபோன் டென்னை அநபாயதீரன் ஒரு மடக்கு மடக்க, அது அப்படியே வளைந்து, உடைந்து போக, கீழே விழுந்து கிடந்தவனை எரித்தவாறு, உடைந்த கைப்பேசியை தூக்கி அங்கிருந்த உறைந்தும் உறையாமலும் இருந்த குளத்தை நோக்கி விட்டெறிந்தான்.

 

கீழே கிடந்தவனுக்கோ, ஐ ஃபோன் உடைந்ததை விட, இனி தன் முன்னால் ராட்சசன் போல நிற்பவன் என்ன செய்யப்போகிறான் என்கிற பயமே அதிகமாக இருக்க,

 

அவன் பயத்துடன், “சா… சாரி சார்… நான்…” என்று எதையோ கூறிச் சமாளிக்க முயல, அவனுடைய, ஷேர்ட்டை ஒற்றைக் கரத்தால் பற்றித் தூக்கி நிமிர்த்தினான் அநபாயதீரன்.

 

“ஒரு பெண்ணின் அனுமதியில்லாமல் இவ்வாறு படங்கள் எடுப்பது எத்தனைப் பெரிய குற்றம் என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டவாறு, பயத்தில் வெளிறிப் போயிருந்தவனின் பான்ட் பையிலிருந்து, பணப்பையை வெளியே எடுத்து, அதைத் திறந்து பார்த்தான்.

 

அவனுடைய சாரதி அனுமதிப் பத்திரத்தை எடுத்துப் பெயர் விலாசம் அனைத்தையும் பார்த்துவிட்டு, அதைத் தன் கைப்பேசியில் படம் பிடித்தான்.

 

“என்ன வேலை செய்கிறாய்?” என்றான் அநபாயதீரன்.

 

“ஒரு பத்திரிகைக்குப் படம் எடுக்கும் வேலை சார்…” என்று தடுமாற,

 

“எவ்வளவு காலமாக வேலை செய்கிறாய்?” என்று கேட்டவாறு அவனுடைய சாரதிப்பத்திரத்தை மீண்டும் அவனுடைய பணப்பையில் வைத்துக்கொண்டிருக்கும் போதே,

 

“ஐ… ஐந்து வருடமாக… சார்…” என்றான் அவன் தடுமாறியவாறு. அவனுடைய பணப்பையை மீண்டும் அவனுடைய பாண்ட் பயில் திணித்து விட்டு, அவன் வலது கரத்தின் மீது தட்டிக் கொடுத்து,

 

“லிசின்… இப்போது நீ செய்திருக்கும் வேலை மன்னிக்க முடியாதது. அதையும் யாரைப் படம் எடுத்திருக்கிறாய் என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டவன், தட்டிக்கொடுத்த கரத்தைத் திடீர் என்று தன் இரு கரங்களாலும் பற்றி, எதிர்பாரா தருணத்தில் ஒரு திருப்புத் திருப்ப, “கறக்…” என்கிற சத்தத்துடன், அது முறிந்து தொங்கியது.

 

திடீர் என்று ஏற்பட்ட இந்த நிகழ்வில் அதிர்ச்சியான அந்த இளைஞன், கத்துவதற்காத் தன் வாயைத் திறக்க, உடைந்து தொங்கிய கரத்தின் மணிக்கட்டைத் தூக்கி அவன் வாயில் பதித்து,

 

“கத்தாதே… எனக்குக் கத்துவது பிடிக்காது…” என்றவாறு அவன் சட்டையை விட, அதற்கு மேல் நிற்கச் சக்தியில்லாதவனாக, மடங்கித் தரையில் சரிந்தான் அவன். நல்ல வேளை, இவை மரத்திற்குப் பின்னால் நடந்திருந்ததால், இந்தக் காட்சியை சிவார்ப்பணா பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

 

ஆனாலும், அவனுடைய கவனத்தையும் மீறி அந்தக் காட்சிகளை இரு கண்கள் கவனித்துக்கொண்டிருந்தாலும்,  அதை அறியாமல் அந்த இளைஞனிடமிருந்து விலகிய அநபாய தீரன், கண் மண் தெரியாத ஆத்திரத்துடன் சிவார்ப்பணாவை நோக்கிப் போன நேரம், அந்த மறைவிலிருந்து அவன் வெளியே வந்தான்.

 

தரையில் வலியில் முனங்கியவாறு விழுந்து கிடந்தவனை நெருங்கியவன், அந்த நேரத்திலும், அவன் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டு,

 

“அவன் கவனிப்பது போலவா படம் எடுத்தாய்? அறிவு வேண்டாம்?” என்று சீறியவன், தன் கைபெசியில் யாருடனோ தொடர்பு கொண்டான்.

 

“வட்…” என்று மறுபக்கம் கேட்க,

 

“அவர்களைக் கண்டுபிடித்துவிட்டோம்…” என்று கூற, இங்கே, அர்ப்பணாவைத் தேடிக்கொண்டு சென்ற அநபாயதீரன், அவளைக் காணாமல் திகைத்துப்போய் நின்றான்.

 

(39)

 

உள்ளம் சில்லிட, இங்கே எங்காவது தான் இருப்பாள் என்று தனக்குத்தானே ஆறுதல் கூறியவாறு, விழிகளால் அவளைத் தேடி அலசினான். எங்கும் அவள் கண்ணுக்குத் தெரியவில்லை.

 

அவளைக் காணவில்லை என்றதும், முதலில் அவன் மனதில் தோன்றியது, எந்த ஆபத்தில் அவள் சிக்கினால் என்பதுதான்.

 

அதை நினைத்ததும், கொஞ்ச நேரம் என்ன செய்வது என்று அவனுக்கு ஒன்றுமாகப் புரியவில்லை. அவளுக்கு ஒன்றும் ஆகியிருக்காது என்று புத்தி சொன்னாலும், அதை நம்ப முடியாமல் மனம் தடுமாறியது.  எல்லாம் மறந்து போன உணர்வில், மரத்துவிட்ட தவிப்பில் அப்படியே கொஞ்ச நேரம் நின்றான்.

 

அவனையும் அறியாமல், அவனுடைய கரங்கள் அவனுடைய நெற்றியை நீவி விட்டன.

 

‘இங்கேதானே நிற்கச் சொன்னேன்… எங்கே போய்த் தொலைந்தாள்…?’ அது வரை பதறிக்கொண்டிருந்தவனின் பதற்றம் மெது மெதுவாக்க குறையக் கண் மண் தெரியாத ஆத்திரம் வந்தது.

 

நான்கு பக்கமும் விரைந்து சென்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிகிறாளா என்று பார்த்தான். இல்லை. .

 

அவனையும் மீறி இதயம் வேகமாக அடித்துக்கொண்டது.

 

“எங்கே போய்த் தொலைந்தாள்?’ என்று மனதிற்குள் நினைத்தவாறு, அங்கும் இங்கும் அலைந்தவன், அந்த ஆடையோடு இந்தக் குளிரில் அதிக தூரம் போயிருக்க முடியாது என்கிற எண்ணத்தில், ஒரு வேளை, அறைக்குப் போயிருப்பாளோ என்கிற சந்தேகத்துடன் தன் அறையை நோக்கி ஓடத் தொடங்கினான்.

 

அறைக்குள் நுழைந்த போது, அறையில் அவள் இருந்ததற்கான தடையம் எதுவும் இருக்கவில்லை. அறைக்குள்ளும் இல்லை… அப்படியானால் எங்கே போயிருப்பாள்… டாமிட்…’ என்று கலங்கியவாறு உள்ளே வந்தவனுக்கு மெல்லிய சத்தம்  குளியலறையிலிருந்த வருவது போலத் தோன்ற, அதன் முன்னால் வந்து நின்று, “அர்ப்பணா… ஆர் யு தெயர்?” என்று அழைத்துப் பார்த்தான்.

 

மிகூம்… எந்தச் சத்தமும் இல்லை. இப்போது தட்டிப் பார்த்தான்.

 

“அர்ப்பணா…” என்றான். இதயம் ஏதோ தொண்டையில் வந்து துடிப்பதுபோல அவனுக்குத் தோன்றியது.

 

உள்ளேயிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

 

சற்றுக் குரலைக் கூட்டி அழைத்தான். அப்போதும் பதில் வரவில்லை. உள்ளேதான் இருக்கவேண்டும் என்கிற வேண்டுதலுடனும், பரிதவிப்புடனும் “ப்ளீஸ்.. பி இன்  தெயர்…” என்று மன்றாடியவாறு, கதவை அவன் வேகமாகத் திறக்க, அங்கே கண்ட காட்சியில் விறைத்துப்போய் நின்றான் அநபாயதீரன்.

 

தன்னவனைப் பதறவைத்துவிட்டோம் என்கிற எந்த வித எண்ணமும் இல்லாமல், அங்கே பாத் ட்ப்பில் நீர் நிறைத்து அதில் அமிழ்ந்து, அதன் சுகத்தில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள் சிவார்ப்பணா.

 

தன்னை மறந்து அவளையே பல கணங்கள் கண் வெட்டாது பார்த்தவனுக்கு அது வரை மார்பை அடைத்திருந்த மூச்சு மெதுவாக வெளியேற, நிம்மதிப் பெருமூச்சுடன், கதவடியில் தொப் என்று சாய்ந்து நின்றவாறு பெருத்த ஆறுதலுடன், தன் தலையைக் கோதிவிட்டான்.

 

மீண்டும், அதற்குள் அமிழ்ந்து கிடந்தவளைத் தலையை மட்டும் திருப்பிப், பார்த்தவனின் பதற்றம் மெல்ல மெல்ல மறைந்து போக, அந்த இடத்தில் கடுமையும், கோபமும் உருத்திரவ தாண்டவம் ஆடின.

 

“அங்கே அவனை அரை மணி நேரமாகப் பதறவைத்துவிட்டு, இங்கே நிம்மதியாக ஜலக்கிரீடையில் ஆழ்ந்திருக்கிறாளாக்கும்… இவளை…” என்று கடுப்புடன் எண்ணியவன், விரைந்து உள்ளே சென்று, அங்கு, தொங்கிக்கொண்டிருந்த துவாயை இழுத்து எடுத்து அதனைப் பந்தாக்கி, சிவார்ப்பணாவை நோக்கி விட்டெறிந்தான்.

 

அது வரை ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவளின் முகத்தில் வேகமாக அந்தத் துவாய்ப் பந்து, வந்து மோதித் தண்ணீரில் விழ, தன்னை மறந்த தூக்கத்திலிருந்தவள், பலமாக எதுவோ மோதுப்பட, அந்தக் கிருமிகள் கொண்ட ஏவுகணைதான் வெடித்துவிட்டது என்று அதிர்ந்துபோய் பதறியடித்தவாறு, “நோ…” எனக் கதறியவாறு, தன் விழிகளைத் திறந்தவாறு எழுந்தமர்ந்தாள்.

 

முதலில் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. மெது மெதுவாக ஸ்மரனை வர, இன்னும் தான் குளியலறைக்குள் தான் இருக்கிறேன் என்கிற, நிம்மதி மூச்சுடன், பயத்தில் படபடத்த தன் மார்பை அழுத்தியவாறு, தன் மீது என்ன மோதுப்பட்டது என்று குனிந்து பார்த்தாள். துவாய்… இது எப்படி இங்கே என்கிற யோசனையுடன் புரியாமல் தன் கரங்களில் எடுத்துப் பார்த்தவள், அது வந்த திசையை நோக்கித் திரும்ப,

 

அங்கே குளியலறை வாசலில், அத்தனை எரிமலைகளையும் தன் விழிகளில் தாங்கியவாறு, நின்றிருந்தான் அவன்.

 

‘கிங்காங்… எதற்கு  திரிபுரம் எரித்த சிவன் போல இப்படி முறைக்கிறான்?’ பெரும் திகைப்புடன்,

 

“எ… என்னாச்சு…” என்றாள் இன்னும் தூக்கத்திலிருந்து வெளிவராதவளாக.

 

“என்னாச்சா… உன்னிடம் என்ன சொன்னேன்… நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்…” என்று இவன் சீறிய சீறலில் இவன் மேலும் மலங்க மலங்க விழிக்கத் தொடங்கினாள்.

 

எதற்காக இப்போது தொன் கணக்கில், இஞ்சி தின்ற கிங்காங் ஆட்டம் முறைக்கிறான்? என்று மனதிற்குள் எண்ணியவள்,

 

“எ… என்ன சொன்…னீர்கள்…?” என்றாள் உண்மையாகவே அவன் என்க கேட்கிறான் என்பதை அறியாமல்.

 

அவனோ தன் பற்களை இறுகக் கடித்துத் தன் கோபத்தை அடக்க முயன்றவன், முடியாமல் தாடையை அழுந்த வருடிக்கொடுத்து… அதே சினத்துடன்,

 

“உன்னை எங்கும் போகக் கூடாது என்று சொல்லிவிட்டல்லவா சென்றேன்…” என்றான்.

 

அவன் சொன்னான்தான்… போனவனைக் காணவில்லை என்றதும், அந்தக் குளிரில் அதிக நேரம் நிற்க முடியாமல் போக, சரி அறைக்கு வரலாம் என்று வந்தாள். வந்தவளுக்குத் தன் பிம்பம் கண்ணாடியில் தெரிய, ‘அடக் கடவுளே… இப்படியேவா வெளியில் போனோம்…?’ என்று தோன்ற, சரிதான் கிங்காங் இல்லை, குளிக்கலாம் என்று தன் ஆடைகளை எடுத்துக்கொண்டு, குளியலறைக்குள் நுழைந்தாள்.

 

அங்கேயிருந்த குளியல் தொட்டி அவளை வா வா என்று அழைக்க, அதற்குள் புகுந்தால் தத்தளித்துத் தவிக்கும் மனம் கொஞ்சம் சமப்படுமே என்று, எதையும் யோசிக்காமல் இறங்கிவிட்டாள். அவளுக்குத்தெரியுமா அவன், இப்படி வந்து சீறுவான் என்று?

 

தொட்டியின் முன் புறத்தில் முழங்கைகளை முட்டுக்கொடுத்து, உள்ளங்கையில் தன் முகத்தைத் தாங்கி,

 

“என்னைச் சொல்கிறீர்களே… இதோ வருகிறேன் என்று விட்டு, எங்கே போய் நின்று பராக்குப் பார்த்தீர்கள்…? உங்களைக் காணவில்லை… குளிர்ந்தது… அதுதான்… இங்கேயே வந்தேன்… ஏன் கேர்னல்… குளிப்பது கூடக் குற்றமா?” என்று முகத்தை அப்பாவிபோல வைத்தவாறு கேட்க, இவனுக்கு மேலும் சூடேறியது.

 

“முட்டாள்… அதை முதலிலேயே சொல்லிவிட்டு வரவேண்டியதுதானே… நான் எப்படிப் பதறிப்போனேன் தெரியுமா? ஐ… ஐ தோட்… ஐ லொஸ்ட் யு.. யு இடியட்… நம்மைச் சுற்றி எத்தனைப் பெரிய ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்று உனக்குத் தெரியுமல்லவா? தெரிந்தும் முட்டாள் போல வெளியே ஓடியது மட்டுமல்லாமல், அரை மணி நேரமாக என்னைப் பைத்தியக் காரன் போல அலைய வைத்துவிட்டாயே… உனக்கு என்னாச்சோ… ஏதாச்சோ என்று நான் எப்படி…” என்று அவன் கூறிக்கொண்டு வந்தவன், உணர்ச்சிவசத்தில் தான் வார்த்தைகளை விட இருப்பது புரியத் தன்னைக் கட்டுப்படுத்த முயன்றான். அப்படியிருந்தும் மனம் சமப்பட மாட்டேன் என்று சண்டித்தனம் புரிந்தது.

 

“உனக்கு அறிவில்லை… ஸ்டுபின்… XXX  இடியட் ஃபூல்…” என்று சீறினான். அது வரை, அவனிடம் சொல்லாமல் வந்ததால் பதறுகிறான் என்று, சிறு சஞ்சலத்துடன் இருந்தவள், அவன் இருந்த கோபத்தில் வார்த்தைகளை விட, இவளுக்குக் கொதியேறியது. அவளும் தன் நீண்ட நெற்றிக் கண்ணைத் திறந்து,

 

“என்னது… இடியட்… ஃபூலா… ஸ்டுபிட்டா… ஆமா சார்… ஆமாம்… உங்களை நம்பினேன் பாருங்கள்… நீங்கள் என்னிடம் நடித்திருக்கிறீர்கள் என்று தெரிந்தும், இதோ இங்கே இருந்து உங்களோடு மல்லுக்கட்டுகிறேன் பாருங்கள்… நான் ஸ்டுபிட் தான்… இடியட் தான், ஃபூல் தான்… வாய்ப்புக் கிடைத்த உடன் எஸ் ஆகியிருக்கவேண்டும்” என்று இவள் ஏகத்திற்கு எகிற,

 

“கிழித்தாய்… அதுதான் இரு முறை தப்பிக்க முயன்றும் எத்தனைப் பெரிய ஆபத்தை விலைக்கு வாங்க வந்தாய்… நினைவில்லை… என்னோடு இருப்பதால்தான் நீ இப்போது உயிரோடு இருந்து பேசுகிறாய்” என்றான் இவன்.

“உங்களோடு இருந்து சித்திரவதை அனுபவிப்பதை விட, அது எவ்வளவோ பரவாயில்லை. இருக்கிற உயிர் ஒன்று… போய்விட்டால் எனக்கு நிம்மதியாக இருக்கும்… இதோ இத்தனை ஓட்டமும் இருந்திருக்காது…” என்று கூறியவளுக்கு ஏனோ குரல் கம்மியிருந்தது.

 

அவள் கூறியதைக் கேட்டதும், நாண் இழுத்த வில்லாக நிமிர்ந்து நின்றவன், எதையோ கூறத் தன் வாயைத் திறந்தான். பின் என்ன நினைத்தானோ, தன் வாயை மூடிவிட்டு, கொஞ்ச நேரம் அவளையே வெறித்துப் பார்த்தான். பின் தன் தலையைக் குலுக்கி,

 

“தட்ஸ் இனஃப்… ஏதாவது ஒன்றை அணிந்துகொண்டு வெளியே வா…” என்று தன் பற்களை நெருமியவாறு அவன் கரிஜிக்க, எதை அணிவது? என்பது போலத் தன் புருவத்தைச் சுருக்கியவள், ஏதோ ஒன்று அவளை எச்சரிக்கச் சற்றுக் குனிந்து பார்த்தவளுக்கு, அப்போதுதான் தன் நிலை முழுவதுமாக உறைத்தது.

 

“ஐயையோ…” என்றவாறு பெரும் பதற்றத்துடன், தன்னைக் கழுத்து வரை தண்ணீருக்குள் அமிழ்ந்து போக முயன்றவளுக்குக் கால் இடறி விட, அப்படியே முழுவதுமாக அமிழ்ந்து போனாள்.

 

உடனேயே நீரை விட்டுத் தலையை வெளியே நீட்ட முடியாது தடுமாறிப் பின், எப்படியோ துடித்துப் பதறி அடித்து, மூச்சைப் பிடித்துத் தலையை நிமிர்த்தி, அப்படியிருந்தும், இரண்டு மிடறு தண்ணீரை மூக்கு உரிஞ்சியிருக்க, உடனே சுவாசம் எடுக்க முடியாது தடுமாறி, வாயைத் திறந்து, அதுவும் முடியாமல் தவித்து, மீண்டும் மூச்செடுத்தபோது அது பெரும் இருமலுடன் வெளி வந்தது.

 

தலை முழுவதும் நனைந்து ஈரம் சொட்டச் சொட்ட, முழுவதுமாக தண்ணீருக்குள் அமிழ்ந்ததால் ஏற்பட்ட சிரமத்தில் முகம் கண்டிச் சிவக்க, பேசக் கூட முடியாமல் இருமியவள், தானே தன் தலையைத் தட்டித் தன்னை ஆசுவாசப் படுத்த முயன்றாள்.

 

இத்தனை கலவரத்திலும் அநபாயன் அசைந்தான் இல்லை. மார்பின் குறுக்கேத் தன் கரங்களைக் கட்டியவாறு அவளைப் பார்த்து வெறித்துக்கொண்டிருக்க, ஒருவாறு தன்னை சமப்படுத்தியவள், பேசுவதற்கு முடியாமல் இருமியவாறே கரத்தை மட்டும் அசைத்து அவனை வெளியே போகுமாறு சைகை செய்தாள்.

 

அந்த விடாக் கண்டனோ, இன்னும் காலூன்றி அங்கேயே நின்றவாறு,

 

“அர்ப்பணா… உனக்குத் தந்த நேரம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே. இப்போதே இரண்டு நிமிடங்கள் கடந்து விட்டன… மரியாதையாக எழுந்து வெளியே வா…” என்றான் அவன் சினம் சற்றும் குறையாதவனாக.

 

‘டாமிட்… வெளியே வா…வா என்றால் எப்படிப் போவதாம்… கல்லுலிமங்கான்… கொஞ்சமாவது புத்தி வேண்டாம்…’ என்று மனதிற்குள் திட்டியவள்,

 

“நான் வருகிறேன்… வெளியே போங்கள்…” என்றாள் அவள் கரகரத்த குரலுடன். அது கூட பெரிய வாக்கியமாக இருக்க, இருமத் தொடங்கினாள்.

 

அவனோ தன் இரு கால்களையும் அகட்டித் தன் முதுகுக்குப் பின்னால் கரங்களைக் கட்டி,

 

“நோ… ஐ ஆம் நாட் கோயிங் எனி வெயர்… இன்னும் இரண்டு நிமிடங்கள்தான் இருக்கின்றன அர்ப்பணா… அதற்குள் நீ வெளிவரவில்லை என்றால், நான் வந்து உன்னைத் தூக்கி வெளியே எடுக்கவேண்டியதாக இருக்கும்…” என்றான் அவன் சற்றும் இரக்கமில்லாமல்.

 

“ராட்ஷசன்…” மனதிற்குள் திட்டியவாறு,

 

“தீரன்… ஆர் யு கிரேசி… இப்படியே உங்கள் முன்னால் என்னால் எப்படி வெளியே வர முடியும்… ப்ளீஸ்… வெளியே போங்கள்… நான்.. நான் வந்துவிடுகிறேன்…” என்று அவள் கூற, ஒரு கணம் அவளை வெறித்துப் பார்த்தவன், என்ன நினைத்தானோ, தன் பார்வையால், அந்தக் குளியலறையின் ஜன்னல்களை ஒரு முறை நோட்டம் விட்டான்.

 

ஜன்னல் சற்று உயரத்தில்தான் இருந்தது. முட்டாள் போல அதில் ஏறித் தப்பிக்க அவளால் முடியாது. அதை எட்டுவதற்கு ஏதாவது சிறிய ஏணி வேண்டும். நிம்மதியுடன்,

 

“இன்னும் இரண்டு நிமிடங்கள் மட்டும்தான் அர்ப்பணா….” என்கிற எச்சரிக்கையுடன், அவன் வெளியேற, ஒரு கணம் நிம்மதியுடன் பெருமூச்சொன்றை விட்டவள், எங்கே மீண்டும் உள்ளே வந்துவிடுவானோ என்கிற அச்சத்தில், அவசர அவசரமாக எழுந்தவள், ஷவரின் கீழ் நின்று தன்னை சுத்தப்படுத்திவிட்டு, எட்டித் தன் ஆடையை எடுக்க முயல, அவளுடைய போதாத காலம், அது பாத் ட்ப்பில் நிறைந்திருந்த தண்ணீரின் மீது விழுந்திருந்தது.

 

“ஓ… நோ…” என்று அலறியவள், அவசரமாக அங்கிருந்த இன்னொரு துவாயை எடுத்துக் குறுக்குக் கட்டாகக் கட்டி, பதட்டத்துடன் வெளியே வந்து, தண்ணீரில் விழுந்த ஆடைகளை எடுத்துப் பார்த்தாள்.

சுத்தம் முழுவதுமாக நனைந்திருந்தன… தன் தலை மீது கை வைத்தவள், இப்போது அந்த கிங்காங் உள்ளே வரப்போகிறானே…” என்று பதறி, அங்கிருந்த கபேர்ட்டைத் திறந்து பார்த்தாள். அது முழுவதும் துவாலைகள் அடுக்கப் பட்டிருந்தன.

 

அதே நேரம் இரண்டு நிமிடங்கள் என்றவன், கிட்டத்தட்ட பத்து நிமிடங்களின் பின்தான், கதவைப் பலமாகத் தட்டினான்.

 

நீரின் சலசலப்பு நின்றுவிட்டதால், அவள் குளித்து முடித்துவிட்டாள் என்பது தெரிந்தாலும்,  தற்காலிகமாக வெளியே சென்றுவிட்டு வந்தவனுக்கு ஏனோ அவளை உடனேயே பார்க்க வேண்டும் போல உள்ளம் பரபரத்தது.

 

சற்றிற்கு முன் அவன் பட்ட வேதனை அப்படிப் பட்டது. தன் கண்ணுக்கு முன்னாலேயே அவள் கடத்துப்பட்டு விட்டாளோ என்று அவன் எப்படித் தவித்தான். அது மட்டுமா… அந்த மெல்லிய ஆடையுடன் அந்தக் குளிரில் எப்படிச் சமாளித்திருப்பாள் என்கிற பயமும் அவனை ஆட்டிப் படைத்திருந்தது.

 

அத்தனையும் மொத்தமாகச் சேர்த்து, சிவார்ப்பணாவைக் குதறிவிடும் எண்ணத்தில்தான் குளியலறையை அவன் திறந்தான். ஆனால் அங்கே அவன் கண்ட காட்சி… மீண்டும் தண்ணீரில் அமுங்கியிருந்தவளின் நிழல் உருவமும், அவனுடைய கர்ஜனையைக் கேட்டுப் பதறி அடித்து எழுந்த நிலையும் இப்போது நினைத்தால் மெல்லிய சிரிப்புத்தான் தோன்றியது. தவிர, தன் மீது தவறில்லை என்பது போல அவள் நின்ற விதத்தை எண்ண மேலும் அவன் புன்னகை மலர்ந்தது.

 

இந்த நிலையில், எதை அணிவது என்கிற குழப்பத்துடன் கபேர்டைப் பார்த்துக்கொண்டிருந்தவள், திடீர் என்று அவன் கதவைத் தட்டவும் பதறித் துள்ளித் தன் கரத்திலிருந்த துவாயைக் கீழே போட்டு, அதிர்ச்சியுடன் குளியலறைக் கதவை வெறித்துப் பார்த்தாள்.

 

“அர்ப்பணா… உன்னுடைய நேரம் முடிந்து விட்டது…” என்று அவன் கூற, இவளோ,

 

“இ… இல்லை… இதோ வந்துவிடுகிறேன்…” என்ற பதறியவாறு கபேர்டை மேலும் பார்த்தாள்.

 

இரண்டு மூன்று வெண்ணிறத் துவாய் மடித்து அழகாக வைக்கப்பட்டிருந்தன. அதை எடுத்து உதறியவள், ஒன்றைத் தலையில் சொட்டும் ஈரத்தை உரிஞ்சி எடுப்பதற்காகச் சுற்றி, மற்றைய ஒன்றால் உடலைச் சுற்றினாள்.

 

“இதோ வந்துவிட்டேன்…” என்றவாறு அங்கேயிருந்த இன்னொன்றைத் துவாலையை வெற்றுத் தோளின் மேல் போட்டு மூடியவாறு, மெதுவாகக் கதவைத் திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்தாள்.

 

அவளுக்கேத் தன்னை எண்ணி அவமானமாக இருந்தது.

 

அரை குறை ஆடையாக அவன் முன்னால் நிற்கச் சங்கடமாக இருந்தது. அது சரி, முழுதும் நனைந்தாகிவிட்டது, இனி முக்காடு எதற்கு?

 

இது ஒன்றும் அவனுக்குப் புதிதல்லத்தான். அவள் இந்த நாற்பத்து எட்டு மணி நேரமாக அவனுடைய மேல் சட்டையைத்தானே போட்டுக்கொண்டு சமாளித்தாள். பார்க்கப் போனால் அது தான் சங்கடம். ஆனால் அப்போதிருந்த பதட்டத்தில் அது பெரிதாகத் தெரியவில்லை. இப்போது ஏனோ அவன் முன்னால் இப்படி நிற்க, கூச்சமாக இருந்தது.

 

அநபாயதீரன் திரும்பி நின்று எதையோ செய்துகொண்டிருக்க, நிம்மதியுடன் தன் பார்வையால் தன் ஆடைகள் வைத்திருந்த பை எங்கே என்று பார்த்தாள். அவள் கிரகம், அவனுக்குப் பக்கத்தில்தான் இருந்தது.

 

வேறு வழியில்லை, மெதுவாக வெளியே வந்தவளைத் திரும்பிப் பார்த்தவன், நிமிர்ந்து அவளை நெருங்கி, அவளுடைய தேளிலிருந்து துவாயை வெடுக்கென்று இழுத்து எடுக்க, இவள் அதிர்ச்சியுடன், “எ… என்ன செய்…கிறீர்கள்?” என்றாள்.

 

அவனோ, கட்டிலில் வைக்கப்பட்டிருந்த ஒரு பையிலிருந்து ஒரு சாதனத்தை வெளியே எடுக்க, இது எப்படி இங்கே வந்தது என்று புரியாமல் யோசித்தவளுக்கு, அவள் குளித்துக்கொண்டிருந்த நேரத்தில் அவன் வெளியே சென்றிருக்கவேண்டும் என்பது புரிந்தது.

 

அவனோ, தன் கரத்திலிருந்த அந்தச் சாதனத்தின், கீழிருந்த பொத்தானை அழுத்த, அதன் முன் பக்கம் திறந்து, “க்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்கிற சத்தத்துடன் இயங்கத் தொடங்கியது. திருப்திப்பட்டவனாக, தன் அருகேயிருந்த இருக்கையை அவள் புறமாகக் காலால் தள்ளிவிட்டு,

 

“உட்கார் அர்ப்பணா…” என்றான் தன் கரத்திலிருந்த சாதனத்தைப் பார்த்தவாறு.

 

“நோ… இது… இது என்ன… என்னை என்ன செய்யப்போகிறீர்கள்…” என்று இவள் பதற, அதற்கு மேல் அவளுடைய பேச்சைக் கேட்கப் பிடிக்காதவனாக, அவளை நெருங்கி, அவள் கரத்தின் மேல் புறத்தைப் பற்றி, அந்த இருக்கையில் அமர்த்திவிட்டான்.

அவளோ தன் விழிகள் முழுவதும் அச்சத்தைத் தேக்கி,

 

“தீ…தீரன்… என்னை…க் கொல்…லப் போகிறீர்களா?” என்றாள் பெரும் கலக்கத்துடன். அதைக் கேட்டதும் இவனுடைய உடல் விறைத்து நிமிர்ந்தது.

 

அர்ப்பணாவை ஆக்ரோஷத்துடன் பார்த்தவன்,

 

“ஷட் அப்… அன்ட் பென்ட் டவுன்…” என்று சிடுசிடுத்தவன், அவள் மேலும் கலக்கத்துடன் பார்க்க, அவளுடைய தலையைப் பற்றிக் குனியச் செய்து, அவளுக்குப் பின்னால் வந்து நின்றவாறு, தன் கரத்திலிருந்த லேசர் இரேசரால், அவள் கழுத்தில் பதிக்கப்பட்ட கடவுச்சொல்லைத் துப்புக் கிடைக்காத வகையில் அழிக்கத் தொடங்கினான்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Post

2 thoughts on “தகிக்கும் தீயே குளிர்காயவா 37/39”
  1. Please publish the last episode of பாலையில் பூத்த காதல் முள் part 2 I missed it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!