Thu. Sep 19th, 2024

தகிக்கும் தீயே குளிர்காயவா 35/36

(35)

 

“இது… இந்தக் குறிப்பேடு என் தந்தையோடது… அவர் இதை வைத்து எதையோ எழுதுவதை நான் பார்த்திருக்கிறேன்…” என்றவளின் விழிகளில் மேலும் கண்ணீர் வழிய, அதைக் காணப் பிடிக்காதவனாகத் தன் பற்களைக் கடித்து அமைதி காத்தவன், அவள் அருகே சென்றான்.

 

“எனக்குத் தெரியும் அர்ப்பணா…” என்று கூறியவாறு, அவள் அணைத்துக்கொண்டிருந்த அந்தக் குறிப்பேட்டை, அவள் கரத்திலிருந்து எடுக்க, அவன் கூறியதில் அதிர்ச்சி அடைந்தவளாக,

“எ… என்ன சொல்கிறீர்கள்…எப்படித் தெரியும்?” என்றாள் இவள் திகைப்பும் குழப்பமுமாக.

 

“ஐ ஹாவ் மை ஆன் வேய்ஸ்…” என்றவன், அருகேயிருந்த இருக்கையில் அவளை அமருமாறு பணித்தான்.

 

இருக்கையில் அமர்ந்தவள், இன்னும் என்னென்ன அதிர்ச்சிகளைச் சந்திக்கப்போகிறேனோ, என்று கலங்கியவளாகத் தன் கால்களை இருக்கையின் மீது தூக்கிப்போட்டு, முழங்கால்களைக் கட்டியவாறு, அச்சத்துடன் அநபாயதீரனைப் பார்த்துக்கொண்டிருக்க, அவனோ சற்று நேரம், அமைதி காத்தான். பின் நிமிர்ந்து, அவளுடைய விழிகளுடன் தன் விழிகளைக் கலக்கவிட்டான்.

 

அவளுடைய குழப்பம் நிறைந்த முகத்தை ஏறிட்டவன், அங்கேயிருந்த மேசையில் சாய்ந்தவாறு, வலக் காலுக்குக் குறுக்காக இடக்காலை வைத்து, கரங்களை மார்புக்குக் குறுக்காகக் கட்டி நின்றவன், எப்படிச் சொல்வது என்று யோசிப்பது போல, சற்று நேரம் இருந்தான்.

 

அதன் பின் இடது கரத்தை மட்டும் தூக்கி அதன், உள்ளங்கையாலும் விரல்களாலும் தன் சொர சொரத்த நாடியையும் கன்னத்தையும், வருடிக் கொடுத்து, தன் அடர்ந்த மீசையை பெரும் விரலாலும், சுட்டு விரலாலும் நீவி விட்டுப் பின், கீழ் பற்களால் உதட்டுக்குள் நுழைந்த மீசையையும், மேல் உதட்டையும் மெதுவாக நன்னி விட்டான்.

 

மீண்டும் தாடியை வருடிக்கொடுத்தவன், தன் தலையைக் குலுக்கி,

 

“அர்ப்பணா… நீ நினைப்பது போல நான் ரகுவின் நண்பனல்ல…” என்றான் சற்று அழுத்தமாக.

ஏதோ பூதாகரமாக அவன் வாயிலிருந்து வரப்போகிறது என்பதை உள் உணர்வு அவளுக்குக் கூற, எதுவும் பேசாமல் அவனை விறைத்துப் பார்த்தவாறு இருக்க, அவன் தன் நிலை மாறி கால்களை நேராக வைத்து, இரு உள்ளங் கரங்களையும் பின் புறமாக மேசையில் முட்டுக்கொடுத்து வைத்துக் கொஞ்ச நேரம் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

 

அவளும் அவனைத்தான் வெறித்துக்கொண்டிருந்தாள்.

 

“ஐ ஆம்… சீனியர் ஆஃபீசர் டாக்டர் கேர்னல் அநபாயதீரன் விஷ்வநாத்… ரோயல் கனடியன் எயர்ஃபோர்ஸ் …” என்று கூறியதுதான் தாமதம், முழங்கால்களைக் கட்டியிருந்த தன் கரங்களைப் பட் என்று விலக்கி, கதிரையில் தூக்கிப் போட்டிருந்த தன் கால்ளை அச்சத்துடன் மெது மெதுவாகத் தரையில் இறக்கி நம்ப மாட்டாத் தன்மையுடன், அவனை வெறித்தாள்.

 

அவளுக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை. புத்தி முழுவதும் மழுங்கடித்ததுபோல அவள் விறைத்துப் போனாள்.

 

“என்… என்ன சொன்…னீர்கள்…” என்றாள் ஏதோ தன் மீதே சந்தேகப்பட்டவள் போல.

 

“நீ கேட்டது சரி அர்ப்பணா… நான் ரகுவினுடைய நண்பன் அல்ல… நான் கனடிய விமானப்படையைச் சேர்ந்தவன். டாக்டர் கேர்னல் அநபாயதீரன் விஸ்வநாத்” என்றான் அவன்.

 

அவன் கூறியதைக் கேட்டு அதிர்ந்துபோயிருந்தவள், மீண்டும் நம்ப மாட்டாதவள் போலத் தன் காதுகளில் ஏதாவது பிழையோ என்று எண்ணத் தொடங்கினாள்.

 

ஆனாலும் அவனுடைய ஒவ்வொரு செயலும் மனக் கண் முன்னால் படமாக விரிய, அவனுடைய பல் திறமைக்கான காரணமும் இப்போது புரிந்தது. பயம் என்றால் என்ன விலை என்று கேட்கும் அந்த மனப்பாங்கு. எதையும் தைரியமாகக் கையாளும் திடம். மருத்துவம் தொடக்கம், தெளிவாகக் கச்சிதமாக எதிரிகளை வீழ்த்தும் திறன். கண்ணிமைக்கும் நொடியில் சூழ்நிலைக்குத் தக்க யூகிக்கும் திறமை… இதையெல்லாம் அவன் அங்கிருந்துதான் பெற்றிருக்கவேண்டும். அத்தனை அப்பழுக்கில்லாது திறம்பட இருந்ததற்கான காரணம், இராணுவத்தில் அவனுக்குக் கிடைத்த பயிற்சி.

 

கொஞ்ச நேரம் பேச்சு வராது தவித்தவள், உடலும், உள்ளமும் ஒருங்கு சேர நடுங்க,

 

“விமானப் படையைச் சேர்ந்தவரா…” என்றாள் மீண்டும்.

 

“யெஸ் ஐ ஆம்…” என்று எழுந்து நின்று கால்களைச் சற்று அகட்டி வைத்து, மார்புக்குக் குறுக்காகத் தன் கரங்களைக் கட்டியவாறு அவன் கூற, இப்போதும் அவளால் நம்ப முடியவில்லை. அவனை ஏறிட்டாள் சிவார்ப்பணா.

 

‘எந்த உயரத்தில் இருப்பவன் இவன்… இவன் எதற்காக என் பின்னால் வந்தான்? வேவு பார்க்கத்தானா? நான் வேறு தவறாக, ஏதேதோ கற்பனையில்…” பெரும் வலியுடன் எண்ணியவள், தன் இரு விழிகளையும் மூடிச் சமப்படுத்த முயன்று அதில் மெது மெதுவாகத் தோற்கவும் தொடங்கினாள்.

 

இவன் கூட உண்மையானவன் இல்லையா… ரகு பொய்த்ததுபோல இவனும் பொய்த்துப் போனானா… அதுவும் விமானப்படையின் ஐந்தாவது உயர் பதவியில் இருக்கும் உயர் அதிகாரி அவன். அதுவும் இந்த வயதில் அந்தப் பதவியைப் பெற்றிருக்கிறான் என்றால், அவனுடைய திறமை, எவரிடமும் இல்லாத ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். நிச்சயமாக இவன் சாதாரணமானவனாக இருக்க முடியாது… இவன் என் பின்னால், என்னைத் தொடர்கிறான் என்றால்… கடவுளே… இன்னும் என்ன என்ன அதிர்ச்சியை நான் சந்திக்கப்போகிறேன்… இன்னும் என் இதயம் நிற்காமல் துடிக்கிறதே… எப்படி?’ என்று எண்ணியவளுக்கு அடுத்து என்ன யோசிப்பது என்றே புரியவில்லை.

 

தான் சரியாக யோசிக்கிறோமா, இல்லை பிழையாக யோசிக்கிறோமா என்கிற எண்ணமேயில்லாமல், அதிர்ச்சியில் ஒரே விஷயம் மட்டும் திரும்பத் திரும்ப மனதில் ஓட, பெரிதும் குழம்பிப் போயிருந்தவள், எதையோ கூறத் தன் வாயைத் திறந்தாள். பின் என்ன கூறுவது என்று புரியாமல் வாயை அழுந்த மூடிப் பின் திறந்து வார்த்தைகள் வராமல் தடுமாறினாள்.

 

அழுவதா? கோபப்படுவதா? கத்துவதா? இல்லை விட்டு விலகுவதா? எதையும் அவளால் ஒரு நிலையிலிருந்து யோசிக்க முடியவில்லை. கடைசியில் இவனும் காணல் நீர்தானா? அவளால் தாங்க முடியவில்லை.

 

“கடைசியில் நீங்கள் கூட பொய்தானா?” என்று கேட்டவளுக்கு அடுத்து என்ன செய்வது என்பதும் புரியவில்லை. உள்ளத்தில் ஏற்பட்ட உணர்ச்சியில், அப்படியே எங்காவது கண்காணாத இடத்திற்கு ஓடிச் சென்று ஓ.. என்று கதறவேண்டும் என்று மனம் ஏங்கியது.

 

ஏன்… ஏன் அவளுக்கு மட்டும் எல்லாமே தலைகீழாக நடக்கின்றது… அவள் யாருக்கு என்ன துரோகம் செய்தாள்…? மீண்டும் அநபாய தீரனை வெறித்தவளுக்கு, இப்போது அதிர்ச்சியும், வேதனையும் மறைய. அங்கே சினம் கட்டுக்கடங்காமல் வந்தது.

 

“ஏன்… ஏன்… எதற்காகப் பொய் சொல்லி என் பின்னால் வந்தீர்கள்…” என்று கேட்டவளுக்கு அப்போதுதான் ஒன்று உறைத்தது. மேலும் சினம் துளிர்க்க, எழுந்து அநபாயதீரனை நெருங்கி வந்தவள்,

 

“என்னை முதன் முதலாகக் கண்ட போது, நான் கூறாமலே என்னுடைய பெயரைக் கூறியிருந்தீர்கள்… இதை எப்படிக் கவனிக்காமல் விட்டேன்… அப்படியானால் ஆரம்பத்திலிருந்து என்னைப் பின்பற்றி வருகிறீர்களா… ஓ… மை… காட்… ஒவ்வொரு முறையும் ஆபத்திலிருக்கும் போது காத்தது, எனக்குப் பிடித்த உணவு வகை பற்றி அறிந்து வைத்திருந்தது… இதெல்லாம் ஏற்கெனவே என்னைப் பற்றி அறிந்து வைத்ததால்தானா… இரண்டாம் முறையாகக் கண்டபோது, தெரியாதவர் போலவே  நடந்துகொண்டீர்கள்… பின்பு பத்தொன்பதாம் மாடியில், நாம் அந்தரத்தில் நின்றபோது, பேருந்து விபத்து பற்றிக் கூறினீர்கள்… இது கூடப் புரிந்துகொள்ளாமல்… கடவுளே… எத்தனை பெரிய முட்டாளாக… நான்…” என்றவளுக்கு ஏனோ சிரிப்பு வந்தது.

 

தன்னை மறந்து பைத்தியக் காரி போலச் சிரித்தவள்,

 

“ஓ… மை காட்… ஓ மை…. காட்… இந்த உலகத்தில் என்னைப் போல முட்டாள்கள் யாருமே இருக்கமாட்டார்கள் தீரன்… யாருமே இருக்கமாட்டார்கள்… என் நிலையைப் பார்த்தீர்களா… இந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி நடப்பது என்று கூட எனக்குப் புரிய வில்லை…” என்று பெரும் சிரிப்புடன் கூறினாலும், விழிகள் மட்டும் தாரை தாரையாகக் கண்ணீரைச் சிந்தியது.

 

“அர்ப்பணா…” என்று அநபாயதீரன் எதையோ கூற வர,

 

“டோன்ட்… டோன்ட் சே எ வேர்ட் தீரன்… சாரி கேர்னல் அநபாயதீரன்… ஐ ஆம் சோ சாரி… எத்தனைப் பெரிய உயரத்தில் இருப்பவர் நீங்கள்… நான் ஒரு மடச்சி… அது புரியாமல்…” என்றவளுக்குக் கேவல் வர, தன் இதழ்களை இறுக மூடி அந்தக் கேவலை அடக்க முயன்றாலும், மூக்குகள் விடைத்து, அதீத கோபத்தாலும், அதீத ஏமாற்றத்தாலும், முகம் சிவந்து போக, விழிகளை மேலும் கீழுமாகக் கொண்டு சென்று தன்னை சமப் படுத்த முயன்று முடியாமல், அழுத்திய இதழ்கள் நடுங்க, நடுங்கிய கீழ் உதட்டினை, மேல் பற்களால் அழுந்தக் கடித்துத் தன் உணர்வினை நிதானப் படுத்த முயன்று பின் தோற்று என்று தன்னுடனே போராடிக்கொண்டிருக்க,

 

சற்றை நேரம், அவளை அவள் போக்கிலேயே விட்டான் தீரன். அதற்கு மேல் அவள் படும் வேதனையைப் பார்க்க முடியாதவனாக,

 

“அர்பப்ணா…” என்றவாறு அவளை நெருங்க்ப போக, வேகமாக இரண்டடி பின்னால் வைத்து, அவனை வெறித்துப் பார்த்தவள்,

 

“வேண்டாம்… தீரன்… நீங்கள் என்னைத் தொடுவதை நான் விரும்பவில்லை… உங்கள் எல்லைக் கோடு… அதுதான்… அங்கேயே நில்லுங்கள்…” என்று கடுமையாகக் கூறியவள், வேகமாகத் தன் இரு கரங்களாலும், தன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை ஆத்திரத்துடன் அழுந்தத் துடைத்து மார்புக்குக் குறுக்காகத் தன் கரங்களைக் கட்டி, அநபாயதீரனை வெறித்துப் பார்த்தாள்.

 

“ஐம்… ஓக்கே…. ஐம் ஓக்கே…” என்றவளின் உதடுகள் மேலும் நடுங்கத் தொடங்க,

 

“ஓ காட்…” என்றவளுக்குத் தான் படும் அவஸ்தையை அவன் பார்க்கக் கூடாது என்கிற வேகம் வர, அவனுக்குத் தன் முதுகைக் காட்டி நின்றவள், தன் இரு உள்ளங்கை விரல்களையும் பிணைத்துத் தலையின் பின்புறமாக வைத்து, தலையோடு இறுகிப் பிடித்து,

 

“ஸ்டாப் இட் அநா… ஜெஸ்ட் ஸ்டாப் இட்… எதற்கு அழுகிறாய்… ஏமாற்றங்கள் உனக்கென்ன புதிதா… எத்தனை ஏமாற்றங்களை நீ சந்தித்து விட்டாய்… இது வெறும் ஜூஜூபி… ஜெஸ்ட் ரிலாக்ஸ்…” என்று தனக்குத் தானே சொன்னவள், பின் தன் கரங்களை விடுவித்து விரல்களால் முகத்தை அழுந்தத் துடைத்தவாறு திரும்பி அநபாயதீரனைப் பார்த்தவள்,

 

“ஐம் சாரி… கொஞ்சம் பைத்தியக்காரி போல நடந்துகொள்கிறேன் அல்லவா… இல்லை எனக்கு உன்மையாகவே பைத்தியம் தானா? எதற்காக நீங்கள் பொய்த்துப் போனதை என்னால் தாங்க முடியவில்லை. ரகு பொய்த்தபோது கூட நான் இப்படிக் கலங்கினதில்லை… என் அம்மா அப்பா இறந்த போது கூட நான் இப்படிக் கலங்கியதில்லை… ஆனால் இப்போது…” என்றவள் தன் மார்பை அழுத்திக் கொடுத்தவாறு,

 

“இங்கே வலிக்கிறது தீரன்… அதிகமாக வலிக்கிறது… நீங்கள் கழுத்தை அழுத்தியபோது கூட இப்படி வலிக்கவில்லை தெரியுமா. ஆனால் இப்போது…” என்றவள் கண்ணீரை விழுங்கியவாறு,

 

“சொல்லுங்கள்… எதற்காக என்னிடம் பொய் சொன்னீர்கள்… எதற்காக என் பின்னால் வந்தீர்கள்… ரகு எங்கே, அவனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்…” என்றாள் இப்போது இறுக்கமாக.

 

“அர்ப்பணா… ஃபெஸ்ட் காம் டவுன்…”

 

“டோன்ட் டெல் மி டு காம் டௌன்… ஓர் ஐல் த்ரோ த ஒஒஒ செயர் அட் யுவர் ஃபேஸ்… “ என்று சீறியவள், அதே கேபாம் மாறாமல் அவனை நெருங்கி நின்றாள்.

 

அவன் உயரத்திற்கு ஈடு கொடுக்குமாறு தன் தலையை நிமிர்த்தி அவனைப் பர்த்து முறைத்தவள்,

 

“டெல் மி த ட்ரூத்… எதற்காக என் பின்னால் வந்தீர்கள்… அப்படி என்னிடம் என்ன இருக்கிறது…. சொல்லுங்கள்…?” என்ற சினம் தணியாமலே அவள் சீற, அவனோ சளைக்காமல் அவள் விழிகளுடன் தன் விழிகளைக் கலக்க விட்டான்.

 

என்ன தான் முயன்றும், சிவார்ப்பணாவால், அவன் நேர் விழிகளுடன் போட்டிப் போட முடியவில்லை. அந்தக் கூரிய பார்வை, அவளைத் துளைத்துக்கொண்டு, அவள் உணர்வுகள் அனைத்தையும் உரிஞ்சி எடுத்துவிடுவன போல, மாயாஜாலம் காட்ட, அவனைப் பார்க்கப் பிடிக்காமல், திரும்பி நின்று கொண்டு,

 

“தயவு செய்து சொல்லுங்கள் தீ… சாரி கேர்னல்… எதற்காக என் பின்னால் வந்தீர்கள்… எதற்காக என்னைத் தெரியாது போல நடித்தீர்கள்… ஐ வோன்ட் டு நோ எவ்ரிதிங்…” என்று கூற, அவள் பின் புறத்தையே உற்றுப் பார்த்தவனுக்கு அவளுடைய கோபம் நன்கு புரிந்தது.

 

“சொல்கிறேன்… உட்கார்…” என்றான் அவனும் அழுத்தமாக.

 

விரக்தியாகச் சிரித்தவள், அப்படியே திரும்பி அவனைப் பார்த்து,

 

“ஏன் நான் உட்கார்ந்தால்தான், உங்கள் உதடுகள் வார்த்தைகளைத் துப்புமோ?” என்றாள் அவள் அலட்சியமாக.

 

“அர்ப்பணா… இனஃப் இட்ஸ் இனஃப்… ஜெஸ்ட் சிட் டவுன்…” என்று அவன் தன் குரலை உயர்த்திக் கூற, எப்போதும் போல, மனம் பயத்தில் படபடக்கத் தன்னையும் மீறிப் பட் என்று இருக்கையில் அமர்ந்து அவனை எரிச்சலுடன் பார்த்தாள் சிவார்ப்பணா.

 

ஏனோ அவளுடைய நிலையைக் கண்டதும் அநபாயதீரனுக்கு மெல்லிய நகைப்பு கூட வந்தது. ஆனாலும் அதனை அவளுக்குக் காட்டாமல், திரும்பியவனின் விழிகள் சற்றுத் தள்ளியிருந்த சாப்பாட்டில் நிலைத்தது. அப்போதுதான் அவளும் தானும் சாப்பிடாதது நினைவுக்கு வந்தது.

 

விரைந்து சாப்பாட்டினருகே சென்றவன், திறந்து பார்த்தான். பஸ்டாதான் தருவிக்கப்பட்டிருந்தது.

 

ஆனால் ஆறியிருக்க, அதை எடுத்துச் சென்று நுண்ணலை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் முள் கரண்டியை வைத்து, ஒன்றை அர்ப்பணாவிடம் நீட்ட,

 

அவள் அவனைப் பார்த்து முறைத்தாளே அன்றி, அவளுக்கு வாங்கும் எண்ணம் இருக்கவில்லை.

 

பொறுமையிழந்த மூச்சுடன் அவளை ஏறிட்டவன்,

 

“இப்போது உனக்கு உண்மை தெரியவேண்டுமா இல்லையா?” என்று கேட்க, மறுப்புக் கூடாமல், அவன் கரத்திலிருந்த தட்டொன்றை வெடுக் என்று பறித்தவள், சுவையறியாமலே, இரண்டு நிமிடத்தில், தட்டைக் காலியாக்கி மேசையில் வைத்து விட்டு மூக்கை வேகமாக உறிஞ்சினாள்.

 

ஒருவகையில் அவளை என்னும்போது அவனுக்குப் பாவமாகக் கூட இருந்தது. அருகேயிருந்த கைதுடைக்கும் தாளை இழுத்து எடுத்து சிவார்ப்பணாவிடம் நீட்டி,

 

“துடைத்துக் கொள்…” என்றான் அவன்.

 

‘ஆமாம்… இது நிறைய முக்கியம்…’ என்று மனதிற்குள் சினந்தவள், தன் மூக்கைப் பலமாகச் சீறி, அதைப் பேப்பரில் துடைத்து விட்டு, அதை அநபாயதீரனை நோக்கி நீட்ட, அவன் எந்த அருவெறுப்பும் இல்லாமல், வாங்கி, அருகேயிருந்த குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு,

 

“ஆர் யு ஃபீலிங் பெட்டர் நவ்?” என்றான்.

 

“இல்லை என்றால் என்ன செய்யப்போகிறீர்கள்…” என்று வெடுக் என்று கேட்டவள், மீண்டும் தன் கரத்தைக் கட்டியவாறு, எங்கோ வெறிக்க,

 

“ஓக்கே தென்… நீ நார்மல் ஆனதும் சொல்… அதற்குப் பிறகு உண்மைகளைச் சொல்கிறேன்…” என்றான் அந்த விடாக் கண்டன்.

 

எரிச்சலுடன் அநபாயதீரனைப் பார்த்தவள், அதுதான் முழுவதும் நனைந்தாகி விட்டதே, முக்காடு எதற்கு… சொல்லுங்கள்…” என்றாள் சற்றும் எரிச்சல் மாறாமல்.

 

சற்று நேரம் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், அவளின் கொதி முகத்தைப் பார்த்துப் பெருமூச்சொன்றை விட்டவாறு, அங்கேயிருந்த ஜன்னலை நோக்கிச் சென்றான். மறைத்திருந்த திரையை விலக்கி, வெளியே வெறித்துவிட்டுப் பின் திரும்பி, சிவார்ப்பணாவை ஏறிட்டு,

 

“எனக்கு ஒரு முக்கியமான பணி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது… அதை நிறைவேற்ற வேண்டி வந்தேன்…” என்றதும் இவள் இன்னும் வலி குறையாதவளாகவே அவனைப் பார்த்தாள்.

 

“இதில் நான் எங்கே வந்தேன்…” என்றாள் கம்மிப்போன குரலில்.

 

“சொல்கிறேன்…” என்றவாறு, அவளுக்கருகே இருந்த மேசையருகே வந்தவன், அதில் இடக்கால், நிலத்திலும், மற்றைய காலின் தொடை மேசையிலும் படிய, அமர்ந்தவாறு இரு கரங்களும் வலது காலின் மீது படிய, வலது கரத்தின் சுண்டு விரலும், பெருவிரலும் ஒன்றோடு ஒன்று உரச, அதைப் பார்த்தவாறு,

 

“மூன்று வருடங்களுக்கு முன்பு, நம்முடைய நாட்டின் சட்டதிட்டங்களுக்குப் புறம்பாக, அரச அனுமதியில்லாமல், உயிரியல் ஆயுதம் (biological vepon) ஒன்று ‘ஷார்ப் நோர்ஸ்’ என்கிற பெயருடன் உருவாக்கப்பட்டது.

 

அந்த உயிரியல் ஆயுதத்திற்காக, உருவாக்கப்பட்ட நுண்கிருமி (Virus) மற்றும் நுண்ணுயிரி (bacteria) இரண்டும், இது வரை கண்டுபிடிக்கப்பட்ட உயிரியலின் பலத்தை விட, பல ஆயிரம் மடங்கு சக்திவாய்ந்தவை. இரண்டையும் இணைத்து உருவாக்கப்பட்ட அந்த ஆயுதம், மிகப் பெரும் அபாயத்தை விளைவிக்கக் கூடிது.

 

அது வெடித்தால், உலகின் பெரிய நாடான ரஷ்யாவையே சுடுகாடாக்கிவிடும் என்றால், மற்றைய நாடுகளைப் பற்றி நான் கூறவேண்டியதில்லை… அந்த நுண்கிருமிகள் உள்ள காற்றைச் சுவாசித்தால், வெறும் ஐந்து மணி நேரத்தில் உடலுக்குள் சென்று பலமடங்காகப் பெருகி சுவாசித்தவரை மரணிக்கச் செய்துவிடும். மரணம் என்றால் சாதாரண மரணமல்ல அர்ப்பணா… கொதி எண்ணெய்க்குள் ஒருவரைத் தூக்கிப் போட்டால் எப்படியிருக்கும்… அத்தகைய உருமாற்றத்தைக் கொடுத்துக் கொல்லும்.” என்றவன் சற்று அமைதி காத்தான்.

 

இதை எதற்காக அவன் தன்னிடம் கூறுகிறான் என்று புரியாமல் சிவார்ப்பணா யோசித்தவாறே, “எதற்காக இதை உருவாக்கவேண்டும்… அதை உருவாக்குவதால் என்ன நன்மை கிடைக்கப்போகிறது?” என்று புரியாமல் கேட்க,

 

“எல்லாவற்றிற்கும் காரணம் பேராசை… யாருடைய நாடு வல்லரசு என்பதை நிலை நிறுத்த, இத்தகைய தவறான குறுக்கு வழிகளை சில நாடுகள் பின்பற்ற நினைக்கின்றன. அந்த உயிரியல் ஆயுதத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதற்குப் பல நாடுகள் தயாராக இருந்தன. இந்த ஆயுதத்தின் உருவாக்கம், வெளியே தெரிந்தால், உலக நாடுகளுக்கே பெரும் அச்சுறுத்தலைக் கொடுக்கும். தவிர, இத்தகைய ஆயுதங்கள் உருவாக்கப்பட்டாலோ இல்லை விற்கப்பட்டாலோ, அது உலகம் முழுவதும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். தவிர உயிரியல் போர் (biological warfare) தொடங்கும் அபாயத்தையும் அது ஏற்படுத்தும். அதனாலேயே, அணு ஆயுதங்கள் எவ்வாறு தடைசெய்யப்பட்டதோ, அதே போல இந்த உயிரியல் ஆயுதங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன.” என்றவாறு மேசையை விட்டு எழுந்தவன், அதிலேயே மார்புக்குக் குறுக்காத் தன் கரங்களைக் கட்டி, சாய்வாக அந்த மேசையில் அமர்ந்தவாறு,

 

“மூன்று வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஷார்ப் நோர்சையும், அதன் ஆய்வுக் கட்டுரைகளையும் வாங்குவதற்குப் பல நாடுகளின் பாதாளக் கும்பல்கள் போட்டிப் போட்டன. ஆதில் முக்கியமானவன் சேவியர் ஆர்னல். அவன் யார், எங்கேயிருக்கிறான், எப்படி இருப்பான் என்கிறது இதுவரை யாருக்கும் தெரியாது… அவனைப் பற்றிய சின்னத் தடையமும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. அதுவே அவனைக் கனடாவின் பயங்கரவாதத்தின் தலைவனாகச் செயல்பட உதவிக்கொண்டிருக்கிறது. இப்போது அவனுக்கு இந்த ஏவுகணை தேவைப்படுகிறது. ஒரு முறைக் கடத்திச் செல்லவும் முயன்றான். ஆனால் அந்த ஆயுதம், கைமாறுவதற்கு முன்பாக, என்னுடைய தலைமையில் அது தடைசெய்யப்பட்டுக் கைப்பற்றப்பட்டது.

 

இந்தச் செய்தி வெளியே கசியாத வகையில், மிகக் கவனமாக, அனைத்துப் பாதுகாப்புக்களுடனும் யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில், நிலக்கீழடியில் பதுக்கிவைத்திருந்தோம். அந்தக் கிருமிகளைச் செயல் இழக்க வைப்பதற்கான நடவடிக்கைகள் இன்று வரை நடைபெற்று வந்தாலும், இது வரை யாராலும் அவற்றைச் செயலிழக்க வைக்க முடியவில்லை.” என்று கூறியதும்,

 

“அதை… உருவாக்கியவரால் கூட செயலிழக்க வைக்க முடியவில்லையா?” என்றாள் சிவார்ப்பணா பயத்துடன்.

 

“அவரால் செயல் இழக்க வைக்க முடியாது அர்ப்பணா… நாம்தான் அதற்கு முயற்சிசெய்யவேண்டும்…” என்றான் அவன் ஒரு பெருமூச்சை விட்டவாறு.

 

“ஏன்… ஏன் அவரால் முடியாது?”

 

“காரணம் இப்போது அவர் உயிரோடு இல்லை…” என்றதும் அவள் அதிர்ந்தாள்.

 

“அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்து விட்டார்… “

 

“ஓ…” என்று அவள் சோர்வுடன் கூற, அவளை உற்றுப் பார்த்தவாறு எழுந்து நின்றவன், தன் பான்ட் பாக்கட்டில், கைகளை விட்டவாறு,

 

“அந்தப் பயங்கர ஆயுதத்தை உருவாக்கியவர் வேறு யாருமில்லை அர்ப்பணா… அவர் உன் தந்தை…” என்றான் சலனமற்று.

 

(36)

 

2012/04/07

நேரம் 11:42

 

இடம் கியூபக் மாநகரத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள, தனியார் உயிரியல் இரசாயன ஆய்வுக் கூடம்.

 

வெளியே பார்ப்பதற்குச் சாதாரணமான ஆய்வுக்கூடமாக இருந்தது, உள்ளே நுழைய நுழைய ஏதோ திரைப்படங்களில் காட்டும் பிரமாண்டத்தை அந்த ஆய்வுக்கூடம் எடுத்துக் காட்டியது.

 

மேசைகளில் வரிசையாக அமைக்கப்பட்ட கண்ணாடிப் பெட்டிகளுள், பல வகையான எலிகளும், சிறிய சிறிய பூச்சி புழுக்களும் அடைத்துவைக்கப்பட்டிருந்தன. மறு பக்கம், பூனைகளும், முயல்களும் கூடவே சிலந்தி வகைகளும் பெட்டிகளுக்குள் கிடந்தன. இன்னொரு பக்கம் இரண்டு மூன்று நாய்கள். சற்றுத் தள்ளி விஷம் உள்ள பாம்புகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.

 

கூடவே அதற்குள் பல வகையான வயர்கள் கொழுவப் பட்டிருந்தன. எங்கு பார்த்தாலும் திரையில் புரியாத பல கணக்குகளும், டி என் ஏ பற்றிய குறிப்புகளும், அந்த அறையின் காற்றழுத்தம், வெப்பம், குளிர்மையின் அளவுகளும் என்று என்னென்னவோ ஓடிக்கொண்டிருந்தன.

 

சில கண்ணாடிப் பேழைகளில் பூச்சிகள் மட்டும் நிறைந்திருந்தன. அதைப் பரிசோதிப்பதற்கென பிரத்தியேகக் கணினி ஒன்று அதனுடைய அறிக்கையை விநாடிக்கு விநாடி பதிவிட்டுக்கொண்டிருந்தது

 

இவை எல்லாம் தாண்டிப் போக, அங்கிருந்த மேசையில் நூற்றுக்கணக்கான சோதனைக் குழாய்களில் பல நிறங்களில் திரவங்கள். பெரிய பெரிய குளிர்சாதனப் பெட்டிகள். ஒரு பக்கத்தில் இறந்துபோன மனிதனின் நிர்வாண உடல்.

 

அதையும் தாண்டி உள்ளே செல்ல, அசுத்தக் காற்றோ, வாய்வோ உள் நுழைய முடியாதவாறு கண்ணாடியினால்,  அமைக்கப்பட்ட அறை. அதன் உள்ள, சுழல் நாற்காலியில் அமர்ந்தவாறு, வலமும் இடமுமாக ஆடிக்கொண்டிருந்தார் அவர்.

 

அவருடைய முகத்தில் பெரும் ஏமாற்றமும், கூடவே பெரும் கோபமும் சதிராடிக்கொண்டிருக்க, அவருடைய விழிகளோ, வெறுப்புடன் அவர் கரத்திலிருந்த கடிதம் ஒன்றை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன.

 

உலகப் புகழ் பெற்ற, மாபெரும் மதிப்பிற்குரிய உயிர் வேதியல் ஆய்வாளரான முனைவர் வாமதேவன், அரச முத்திரையுடன் வந்திருந்த அந்தக் கடிதத்தைப் படித்து விட்டு எரிச்சலுடன் அதைக் கசக்கியவாறு தன் நெற்றியை அக் கரத்தால் வருடிக் கொடுக்தக் கொண்டிருந்தார்.

 

“நோ… நோ… நோ… முடியாது… எப்படி முடியும்…” என்று சினத்துடன் வாய்விட்டுக் கூறியவன் தன் கரத்திலிருந்த கசக்கிய காகிதத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு எழுந்தார்.

 

அந்த அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவர், கண்ணாடியினூடாகத் தன் ஆய்வுக்கூடத்தைக் கோபத்துடன் அவதானித்தார். வெறித்த கண்களுக்கு அப்பால், அவருடைய புத்தி, மீண்டும் அந்தக் கடிதத்தை இரைமீட்கத் தொடங்கியது.

 

“டாக்டர் வாமதேவன்

 

உங்கள் ஆய்வு பற்றிய அறிக்கை நமக்குக் கிடைக்கப்பெற்றது. ஆனால் உங்கள் ஆய்வுக்கான அறிக்கையை எங்கள் நிபுணர்கள் பரிசீலித்தனர். பரிசீலித்ததில், தற்போது கனடிய அரசு தொடர்ந்து உங்களின் ஆய்வினை மேற்கொள்ளுவதற்கான, உதவிகளைச் செய்வதற்கு மறுக்கிறது. நீங்கள் கண்டுபிடித்துள்ள நோய்க்கிருமிகள், உலகுக்கே அச்சுறுத்தலைக் கொடுக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், அந்த ஆய்வினை உடனடியாகக் காலதாமதமின்றி நிறுத்தவேண்டும் என்று கனடிய உயிர் வேதியல் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அதன் பிரகாரம், நிபுணர்களின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட அரசு, உங்கள் ஆய்வினைத் தடைசெய்கிறது. கனடிய அரசின் கட்டளையை மீறும் பட்சத்தில், எதிர்மறையான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை இக் கடிதம் மூலம் அரசு தெரிவிக்கிறது.

 

இந்தக் கடிதத்தைப் படித்ததில் இருந்து வாமதேவனால், ஒரு நிலையில் இருக்முடியவில்லை.

 

எத்தனைப் பெரிய கண்டுபிடிப்பு அவருடையது. எத்தனை கால உழைப்பு. கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் தன் மகள் மனைவியை விடுத்து, இதிலேயே தன் முழுக் கவனத்தையும் செலுத்தி, பைத்தியக்காரன் போல வாழ்ந்தவருக்கு கனடிய அரசு தரும் பரிசு இதுதானா. இன்னும் ஒரு சில  வருடங்கள்… அதற்குள் அவர் தன் ஆய்வை முற்று முழுதாக நிறைவேற்றி விடுவாரே…

 

சே… இத்தனை கால உழைப்பு வெறும் விழலுக்கு இறைத்த நீர்தானா? உடனே நிறுத்து என்றால், இத்தனை சிரமப்பட்டதற்குப் பலன் என்ன? எத்தனை பெரிய கண்டு பிடிப்பு. இது இருந்தால், கனடிய அரசின் கீழ் உலக நாடுகளே மண்டியிடுமே… அது புரியாமல் தடைசெய் என்றால்… பட்ட சிரமங்களுக்குப் பலன்தான் என்ன? என் திறமையைப் போற்றாமல் விட்டாலும், அதைத் தடுக்காமல் இருக்கலாமே. இந்த நோய்க்கிருமிகளைக் கண்டு பிடித்ததால், எத்தனை பெரிய விருதுகள் என்னை வந்து சேரும்… அவர்களுக்கென்ன… ஒரு சொல்… எனக்கல்லவா தலைச் சுமை..’ என்று எண்ணியவாறு குறுக்கும் நெடுக்குமாக நடந்தவருக்கு, நிச்சயமாக அந்த ஆய்வை இடைநிறுத்த முடியாது என்பது புரிந்தது.

 

கனடிய அரசுக்குத் தெரியாமல் எப்படியாவது இதை நிறைவேற்ற வேண்டும்… யெஸ்.. ஐ வில் டூ தட்…’ என்று முடிவு செய்த வாமதேவன், கனடிய அரசுக்கு, அவர்களின் வேண்டுகோளைத் தான் ஏற்றுக்கொள்வதாக வாக்களித்து, ஒரு கடிதத்தை முதல் கட்டமாக அனுப்பியவர், மறைமுகமாகத் தன் ஆய்வினை மேற்கொண்டார்.

 

அந்த ஆய்வின் மீதிருந்த வெறியில், டொரன்டோவில் இருக்கும் தன் மனைவி பிள்ளையுடன் தொலைபேசியில் மட்டும் உறவாடினாரே தவிர அங்கே சென்று வருவதைப் பெரிதும் குறைத்துக்கொண்டார்.

 

அவருடைய மனைவி கருணாகரிக்கும், தன் பதின்மூன்று வயதான மகள் சிவார்ப்பணாவின் கல்வி கெட்டுப்போகக் கூடாது என்கிற காரணத்தினால் கணவரின் அறிவுரைப்படி டோரன்டோவிலேயே தங்கிக் கொண்டார்.   ஆனால் விடுதலை நாட்களில் தன் மகளையும் அழைத்துக்கொண்டு, யூனிவேர்சிட்டி ஒஃப் கியூபெக்கில் வேதியல் (அப்படித்தான் சொல்லிவைக்கப்பட்டிருந்தது) கற்பிக்கும் கணவரிடம் சென்று மகிழ்ந்திருந்துவிட்டுத் திரும்பி வருவார்.

 

தன் மனைவி பிள்ளைகளுக்குக் கூடத் தெரியாது, மேற்கொண்ட அந்த ஆராய்ச்சியில், மெல்ல மெல் அவர் வெற்றியும் காணத் தொடங்கினார்.

 

இரண்டு வருட இரவு பகல் பாராக் கடும் உழைப்பில், வாமதேவன், தன் ஆய்வின் வெற்றிப் புள்ளியை அடைய, அவர் மகிழ்ச்சிக்கு அளவேயிருக்கவில்லை. தனி ஒரு மனிதனாக, யாருடைய உதவியும் இன்றி, ஒற்றையாளாக அந்தப் பயங்கர நோய்க் கிருமிகளைக் கண்டுபிடிப்பது என்பது சாதாரணமா என்ன? அது சாதனையாயிற்றே.

 

அவர் பரிசோதனையில் இறந்த எலிகள் லட்சத்திற்கும் மேல். நாய்கள் பூனைகள் என்று அதற்குப் பயன்படுத்திய உயிர்களின் அளவு கணக்கில்லாதவை. தன் ஆய்வு வெற்றி பெறவேண்டும் என்கிற வெறியோடு உழைத்தவருக்கு, உயிரிழந்த உயிரினங்களின் வலி அவருக்குத் தெரியாமலே போனது. இல்லை… தன் கண்டுபிடிப்பின் மீதிருந்த வெறியில், அவை உணரப்படாமலே போனதோ?

 

எந்த நோய்க் கிருமிகளுக்காக அவர் இத்தனை உயிர்களைக் கொன்றாரோ, அதே நோய்க்கிருமி ஒரு நாட்டையே அழித்துவிடும் என்கிற உண்மையை ஏனோ அவர் உணர்ந்துகொள்ளவில்லை. தவிர, அவற்றிற்குப் பின்னால், அவர் சந்திக்க இருக்கும் பெரும் இழப்புக்களும் அவருக்குத் தெரியாமலே போனது.

 

மேலும் அவற்றை மெருகேற்ற அவர் எடுத்துக்கொண்ட ஒரு வருடத்தின் இறுதிக் கட்டப் பரிசோதனையை அவர் தொடங்கியபோதுதான், அவருக்கு வரப்பிரசாதமாக ரகு கிடைத்தான்.

 

ரகு, வாமதேவனின் நண்பன் ராகவனின் ஒரே மகன். தன் தோழி, சிவார்ப்பணாவுடன், முதன் முதலாக கியூபெக் வந்திருந்தவனின் ரசனையைக் கண்டு திகைத்துப்போனார் வாமதேவன். அவனுடைய விருப்பத்தைத் தெரிந்துகொண்டவர், அவனை மேலும் மேலும் ஊக்கப்படுத்த, எப்படியாவது விண்வெளிப் பொறியியலாளர் ஆகவேண்டும் என்கிற வெறியும் அவனை வந்து தொற்றிக்கொண்டது. இருவருடைய ரசனையும் ஒன்றாக இருந்ததால், அவர்கள் நல்ல தோழர்கள் ஆனார்கள். அந்தத் தோழமைக்கு வயது ஒரு கட்டுப்பாடாக இருக்கவில்லை.

 

மெது மெதுவாக ரகுவிற்கு வாமதேவன் மறைமுகமாக நடத்திக்கொண்டிருக்கும் ஆய்வு பற்றித் தெரியவர, முதலில் அதிர்ந்தவன், பின், அவனுடைய இள இரத்தமும், அந்த எதிர்மறை சாகசத்தில், பங்குகொள்ள வேண்டும் என்று துடிக்க, அவருடன் சேர்ந்து இயங்கத் தொடங்கினான்.

 

2015/05/08

 

காலம் 22:07

 

யாரும் இல்லா அந்த ஆய்வுக் கூடத்தில் பெரும் சிரிப்பொலி கேட்டது.

 

“சக்சஸ்… சக்சஸ்… ஹா… ஹா… ஹா… ஐ டிட் இட்… ஐ டிட் இட்… இனி என்னை யாரும் அசைக்க முடியாது… நான் வென்று விட்டேன்… ஹூரே…” என்று தன் வயதையும் மீறித் துள்ளிக் குதித்த வாமதேவன், தன் மகிழ்ச்சியை யாருக்காவது சொல்லவேண்டும் என்கிற பதட்டத்தில் ரகுவிற்கு தொலைபேசி எடுத்தார் வாமதேவன்.

 

தூக்கக் கலக்கத்தில் எழுந்தவனிடம்,

 

“சன்… ஐ டிட் இட்…” என்று பெரும் ஆர்ப்பாட்டமாகக் கூற, தூக்கம் முழுவதையும் இழந்த ரகு,

 

“ரியலி அங்கிள்…” என்றான் நம்ப முடியாத மகிழ்வுடன்.

 

“ஆமாம்பா… சின்ன துளிதான் எலிகளின் கூட்டுக்குள் போட்டேன்… வித்தின் எ செக்கன்ட்… அத்தனை எலிகளின் தோல்களும் கொப்பளமாக, எண்ணெய்யில் பொரித்தது போல, டூ யு நோ வட்… இது வரை இத்தனை சக்தி வாய்ந்த நோய்க்கிருமிகளை யாரும் கண்டுபிடிக்கவில்லை. கண்டுபிடிக்கப் போவதும் இல்லை… ஓ மை காட்… ஐ ஆம் சோ ஹப்பி மை சன்…” என்றான் அவர் சிறு குழந்தை போல.

 

“ஐ அன்டர் ஸ்டான்ட் அங்கிள்… பட்… தயவு செய்து இதை வெளியே சொல்லாதீர்கள்… இது உங்களுக்குத் தான் ஆபத்தைக் கொடுக்கும்… ப்ளீஸ் அங்கிள்…” என்று உண்மையான அக்கரையுடன் ரகு கூற,

 

“கவலைப் படாதே ரகு… நான் சொல்லமாட்டேன். எப்போது நீ இங்கே வருகிறாய்… உன்னை நான் பார்க்கவேண்டும். என்னுடைய தாகத்தையும் வெறியையும் புரிந்துகொண்டவன் நீ… உன்னோடு பகிர்ந்து கொண்டால்… ஐ வில் ஹாப்பி…” என்று ஐந்து வயது சிறுவன் போலக் குதூகலத்துடன் அவர் கூற,

 

“நாளை பல்கலைக் கழகத்திற்கு விடுதலை ஆங்கிள்… சோ உங்கள் மகளுடன் சேர்ந்து வருகிறேன்…” என்று சத்தியம் செய்ய,

 

“வா… வா..” என்று மகிழ்ச்சியில் பொங்கியவாறு, கைப்பேசியை வைத்தவர், தன் முன்னால் நான்கு குப்பிகளில் வைக்கப்பட்டிருந்த பச்சை நிறத் திரவத்தை எடுத்துத் தூக்கிப் பார்த்தார். அவர் முகத்தில் என்றுமில்லாதவாறு மகிழ்ச்சி பொங்கிக்கொண்டிருந்தது. அது பெற்ற குழந்தையைப் பார்க்கும் ஒரு தாயினுடைய பாசம் அது. அந்தக் குப்பியை வருடிக் கொடுத்தவர்,

 

“ஓ… ஐ ஆம் சோ ஹாப்பி… என்று கூறியவர், அந்த நோய்க்கிருமிகளின் பன்னிரண்டாயிரம் மடங்கு பெரிதாக்கப்பட்ட புகைப்படம் மனதில் தோன்ற, அதன் உருவத்தை நினைத்ததும், மனதில் தோன்றிய பெயர் “ஷார்ப் நோர்ஸ்…”

 

தன் கரத்திலிருந்த நுண்ணுயிரி மற்றும் நுண்கிருமிகளின் சேர்க்கையால் உருவான அந்தப் பயங்கரத் திரவத்தைப் பக்குவமாக அதன் இடத்தில் பாதுகாப்பாக வைத்தவர், அங்கிருந்த மேசையின் இழுப்பறையைத் திறந்து, அதிலிருந்த மிகச் சிறிய பேன்ட்ரைவ்வை வெளியே எடுத்தார்.

 

தன்னுடைய ஆய்வை ஒன்றுவிடாமல், அதில் பதிவேற்றம் செய்யத் தொடங்கி அதிலிருந்து எக்காரணம் கொண்டும், இன்னொரு நகல் எடுக்க முடியாதவாறும், குறிப்பிட்ட ஒரே ஒரு கணினியில் மட்டுமே அது செயற்படுமாறு, நிரலாக்கம் (programming) செய்தார். தவிர அந்தக் கணினிக்கு, குறிப்பிட்ட பேன்ட்ரைவ் போட்டு இயக்கி அவருடைய ஆய்வறிக்கையைப் படிக்கவேண்டுமானால் அதற்குரிய கடவுச்சொல்லை உருவாக்கியது மட்டுமன்றி, அந்தக் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்ளே போவதற்குச் சில விதிகளைப் படிமுறைகளாக, உருவாக்கி, ஒவ்வொரு படிமுறைகளும் மிக மிகக் கவனமாகச் செயற்படுத்தவும், இதில் ஒரு படிமுறை தவறினாலும், அத்தனை ஆய்வுகளும் தாமாக அழிந்துபோகுமாறும் வடிவமைத்தார். கூடவே, தான் செய்த அந்தப் பயங்கர நோய்க்கிருமிகளை, எவ்வாறு அழிப்பது, அதற்குரிய வழிகள் என்ன என்பதையும் அந்த பென்ட்ரைவில் பதிந்தார். அனைத்தும் பதியப்பட்டு விட்டது என்பதை உறுதி செய்ததும், மற்றைய அனைத்து ஆவணங்களையும், சல்லடை போட்டாலும் கிடைக்காதவாறு, ஒன்றும் விடாது எரித்து சாம்பலாக்கினார். தன் கணினியில் அது சார்ந்த அனைத்து ஆவணங்களையும் அழித்தார். அந்த பென்ட்ரைவ் யாரும் கண்டுபிடிக்க முடியாத ஊகிக்க முடியாத இடத்தில் பத்திரப்படுத்தினார். அந்த பென்ட்ரைவை எப்படி எடுக்க வேண்டும் என்பதை குறிப்பேட்டில் யாரும் புரிந்துகொள்ளாத வகையில் பதிவுசெய்தார்.

இரண்டு நாட்கள் கழிய ரகு, சிவார்ப்பணா, கருணாகரியுடன் கியூபெக் வந்திருந்தான். நேராக அவருடைய ஆய்வுக் கூடத்திற்குச் சென்று, அவரின் ஆய்வின் வெற்றியைக் கண்டு அதிர்ந்து போனான்.

 

அவருடைய வேண்டுகோளுக்கு இணங்கி, அந்த நோய்க்கிருமிகளை வைத்து அனுப்புவதற்கான ஏவுகணையை வடிவமைத்துத் தருவதாக வாக்குக் கொடுத்தான். அதன் படி பல்கலைக்கழகம் அவனுக்குப் பெரும் தடையாக இருக்க, அதை விடுத்து, வாமதேவனுக்காக இரவு பகல் பாராது, உழைத்தான்.

 

அனைத்தும் கச்சிதமாகப் பொருந்தி, எந்த நாட்டின் மீதும் அந்த ஏவுகணையைச் செலுத்தலாம் என்கிற நிலையில் முற்று முழுதாக உருவாக்கப்பட்டது. அதை அப்படியே யாருக்கும் தெரியாமல் நிலத்தின் கீழ் புதைத்தும் வைத்துவிட்டார்.

 

ஆனால், தன்னுடைய ஆய்வு யாருக்கும் தெரியாது என்று எண்ணிய நிலையில், கண்ணுக்குத் தெரியாத பாதாளக் குழுக்களுக்கு, அவர் கண்டுபிடிப்பு தெரிய வந்தது. அவர் தயாரித்த அறிக்கையையும், அவரால் செய்யப்பட்ட ஏவுகணையையும், தங்களுக்குத் தருமாறு கேட்டு அவரை மறைமுகமாக மிரட்டத் தொடங்கின.

 

நினைத்திருந்தால், உலக அக்கறை அவருக்குக் கொஞ்சமாவது இருந்திருந்தால், வாமதேவனே அந்தக் கிருமிகளையும், அவருடைய ஆய்வறிக்கைகளையும் முற்று முழுதாக அழித்து, உலக வரலாற்றிலிருந்து அதை இல்லாமல் செய்திருக்கலாம். ஆனால், தான் பெற்ற குழந்தையாகத் தன் கண்டுபிடிப்பை எண்ணியவருக்கு அதை ஏனோ அழிக்க முடியவில்லை.

 

அந்த வேளையில்தான், அவருக்குக் கொலை மிரட்டல் விட்டும், அவர் மசியாததால், அவரைக் கொன்றாவது, அந்த ஆயுதத்தையும், அவருடைய ஆராய்ச்சி அறிக்கைகளையும் பெறுவதற்காகக் களமிறங்கியது பாதாளக் குழு.

 

அதிலிருந்து எப்படியோ தப்பித்தவர், இனியும் காலதாமதம் செய்ய முடியாது என்பதைப் புரிந்துகொண்டவராக, கண் துடைப்பிற்காகத் தான் செய்து வந்த பேராசிரியர் வேலையை இராஜினாமா செய்துவிட்டுத் தன் மனைவி பிள்ளைகளிடம் வந்து சேர்ந்தார்.

 

அவர்களும், எப்படியோ கணவன் வந்துவிட்டார் என்கிற மகிழ்ச்சியில், பெரிதாக எதையும் தோண்டித் துருவவில்லை. ஆனாலும் காலம் அவரை நிம்மதியாக இருக்க விடவில்லை. அவருடைய புது விலாசத்தை அறிந்துகொண்ட எதிரிகள், மீண்டும் தங்களுடன் பேச்சு வார்த்தைக்கு வருமாறு உத்தரவிட, தான் வாழும் காலத்தின் அளவு குறைந்துகொண்டு போவதை வாமதேவன் நன்கு உணர்ந்தார்.

 

தன்னுடைய மடிக் கணினியையும், பென்ட்ரைவையும் எடுத்தவர், மடிக் கணினிக்குள், “டியர் ரகு… ப்ளீஸ் கீப் திஸ் சேஃப்… அங்கிள் வி’’ என்கிற குறிப்பையும் வைத்து அதனைப் பக்குவமாகப் பொதிசெய்து, அதன் மேல் ரகுவின் விலாசத்தை எழுதி வைத்தார்.

 

ஆனாலும், முக்கிய தாய்நிலை கடவுச்சொல்லை யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் பத்திரப்படுத்தவேண்டும் என்கிற எண்ணம் மட்டும் அவரை விட்டுப் போகவேயில்லை. ஏன் எனில் அந்த மடிக்கணணியில் குறிப்பிட்ட பேன்ட்ரைவ் போட்டாலும், அந்தக் கடவுச் சொல் இல்லாமல், உள்ளே நுழையவும் முடியாது,  அவருடைய ஆய்வறிக்கையைப் படிக்கவும் முடியாது, ஏவுகணையை இயக்கவும் முடியாது கூடவே, அந்தக் கிருமிகளை அழிக்கவும் முடியாது.

 

திடீர் என்று “அப்பா…” என்று அழைத்தவாறு மகள் ஒரு கையில் முயல் குட்டியுடனும், மறு கையில் ஃபிசிக்ஸ் 11 என்கிற புத்தகத்துடனும், நிலக்கீழ் அறைக்குள் துள்ளிக்கொண்டு வந்த, பதினாறு வயது மகளைக் கண்டு முகம் கனியத் தான் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, அவளிடம் திரும்பினார் வாமதேவன்.

 

“என்னடா?” என்று வாஞ்சையுடன் கேட்டவரிடம்,

 

“ப்பா… நாளைக்கு ஃபிசிக்ஸ் எக்சாம்… சோ… ஐ நீட் யுவர் ஹெல்ப்…” என்று தன் கரத்திலிருந்த முயல் குட்டியைக் கொஞ்சியவாறு கேட்க,

 

“வாடா..” என்று அழைத்த தந்தையிடம், தன் கரத்திலிருந்த முயலை மேசையில் விட்டுவிட்டு, தந்தையிடம் போனாள் மகள். அப்போதுதான் அது நடந்தது.

 

துள்ளிக்கொண்டு பாய்ந்த முயல், அங்கிருந்த சோதனைக் குழாயைத் தட்டிவிட, அது பெரிய ஓசையுடன் தரையில் விழுந்து உடைய, என்ன உடைந்தது என்பதை உடனேயே புரிந்துகொண்ட வாமதேவன், தன் மூக்கைப் பொத்தியவாறு மகளிடம், அருகேயிருந்த மாஸ்க்கைத் தூக்கிக் கொடுக்க முயல்வதற்கு முன்பாக, அவள் முயலைத் தூக்கும் அவசரத்தில் என்ன செய்கிறோம் என்பது புரியாமல், அவ்விடம் பாய்ந்து கொண்டு ஓட, அவளைத் தடுப்பதற்குள் உடைந்திருந்த குழாய்க்குள்ளாக இருந்து வெளியேறிய க்ளோராஃபோம் வாயு அவளைத் தாக்க, அப்படியே தரையில் மடங்கி மயங்கிச் சரிந்தாள்.

 

தன் மூக்கில் மாஸ்க்கைப் போட்டவாறு ஓடிவந்த வாமதேவன், தன் மகளைத் தூக்கியவாறு, மேலே போக முயலும் போது உடனே அந்த யோசனை தோன்றியது. அதன் பின் அவர் சற்றும் தாமதிக்கவில்லை.

 

விரைந்து சென்று தன் பரிசோதனைக்காக வாங்கிவந்த, பச்சைகுத்தும் இயந்திரத்தை எடுத்துக்கொண்டு தன் மகளின் அருகே வந்தார்.

 

இதனால் தன் மகளைச் சுற்றிப் பெரும் ஆபத்து வரும் என்றோ, இல்லை அது அவளுடைய உயிருக்குப் பெரும் உலைவைக்கும் என்றோ, அவர் சிறிதும் சிந்திக்கவில்லை. அன்றைய மன நிலையில், அவருக்குத் தன் மகளை விட அதி முக்கியமாக இருந்தது, தன் உயிரைப் பணயம் வைத்துக் கண்டுபிடித்த அந்த நோய்க்கிருமிகளின் பாதுகாப்பு மட்டுமே.

 

தன் வேலையை முடித்துக்  ‍கொண்டு எழுந்தவர் தன் குறிப்பேட்டை எடுத்து எழுதினார்

 

“அர்ப்பணம் அகண்டம்… கண்டம்… கடவுள்”

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!