Tue. Dec 3rd, 2024

தகிகும் தீயே குளிர்காயவா 3/4

(3)

 

மெதுவாக அசைந்து அசைந்து பேருந்து ஓட்டுநரை நெருங்கியவனுக்கு, அவர் விழுந்து கிடந்த நிலையை வைத்தே, அவருடைய உயிர் பிரிந்து சென்றுவிட்டது என்பதைப் புரிந்துகொண்டான். இருந்தாலும் சந்தேகம் கொண்டவனாக, அவருடைய மடங்கிக்கிடந்த கழுத்தில் தன் கரத்தை வைத்து நாடித் துடிப்பை அவதானிக்க முயன்றான். பலன் பூஜ்யம்.

 

அதே நேரம், பேருந்து ஆடியது… அவசரமாக நிமிர்ந்து பார்த்தான். இப்போது பேருந்து இன்னும் கொஞ்சம் முன்னால் சென்றிருந்தது.

 

“டாமிட்…” என்று முனங்கியவன், அந்த ஓட்டுநரை அப்படியே விட்டுவிட்டு மெதுவாகப் பின்னோக்கி சென்றான்.

 

சிவார்ப்பணாக்கு சற்றுத் தள்ளி ஒரு இளைஞன் விழுந்து கிடக்க, அவனை அசைத்துப் பார்த்தான்.

 

அந்த இளைஞனுக்குத் தலையில் நல்ல அடி. இரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

 

மீண்டும் பேருந்தின் முன்புறம் சென்றவன், முதலுதவிப் பெட்டி வைத்திருந்த கண்ணாடிக் கபினட்டைத் திறக்க முயன்றான். அது இறுகியிருந்தது. தன் கரத்தை முஷ்டியாக்கி ஓங்கிக் குத்த, அது உடைந்து சிதறியது. அதிலிருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு அந்த இளைஞனை நோக்கிச் செல்லும்போதே, சிவார்ப்பணாவைப் பார்த்து,

 

“ஹேல்ப் மீ…” என்றான்.

 

அது வரை அசையாமல் அந்த கிங்காங் செய்வதையே பார்த்துக்கொண்டிருந்த சிவார்ப்பணாவிற்கு முதலில் அவன் என்ன கேட்கிறான் என்று புரியாமல், “ஙே…” என்று விழித்தவாறு,

 

“வட்…” என்றாள். ஒரு கணம் அவளை ஆழப் பார்த்து முறைத்தவன்,

 

“கான் யு ப்ளீஸ்… ஹெல்ப் மீ…” என்றபோது, அவனுடைய பற்கள் ஒவ்வொன்றும் அரைபட்டு, வார்த்தைகள் மாவாகி வெளியே வந்து விழ, உடனே நிலைமை புரிந்து பதறிக்கொண்டு அவனருகே வந்தவளிடம், தன் கரத்திலிருந்த முதலுதவிப் பொருட்களை, கொடுத்துவிட்டு அந்த இளைஞனின் காயத்தைப் பரிசோதித்தான்.

தலையில் மூன்று தையல்களாவது போட வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டவன், சிவார்ப்பணாவின் கரத்திலிருந்த பொருட்களில் தேவையானதை எடுத்து, அதிக இரத்தம் வெளிவராதவாறு, அவனுடைய தலையில் இறுகக் கட்டுப்போட்டான்.

 

காயம் பட்டவனின் சேர்ட்டைப் பற்றி, இழுத்து ஒழுங்காக நிமிர்த்திப் படுக்கவைத்தவன், அவனுடைய நாடித்துடிப்பை அவதானித்தான்.

 

நல்லவேளை பலமாகவே இருந்தது. கூடவே அவன் கண் விழிக்க,

 

“ஹேள… ஆர் யு…” என்று கேட்க, வலியிலே முகத்தைச் சுழித்தவாறு எழ முயன்றான் அந்த இளைஞன். அவன் தோளில் கரத்தைப் போட்டு,

 

“யு ஓக்கே…?” என்று மீண்டும் அந்த கிங்காங் கேட்க,

 

“யெஸ் சேர்… ஐ… ஆம் ஓக்கே…” என்று அந்த நிலையிலும் சற்று விறைப்பாகப் பதில் கொடுத்தவனை ஆழமாகப் பார்த்து,

 

‘உன்னுடைய பெயர் என்ன? என்று கேட்டவாறே, அவனுடைய தலை முதல் பாதம் வரை, அழுத்திப் பார்த்தான். கூடவே… “உன் பெயர் கேட்டேனே…” என்றான் அழுத்தமாக. அவன்,

 

“டானியல் டக்கர்…” என்று கூற நிம்மதிப் பெருமூச்சு விட்டான் அந்த கிங்காங். ‘நல்ல வேளை நினைவில் மாறாட்டமில்லை…’ மனதிற்குள் எண்ணியவன்,

 

சில இடங்களில், வலிக்கிறதா? வலிக்கிறதா? என்று கேட்டவாறே அழுத்திக் கொடுத்தான்.

 

“உனக்குத் தலைச் சுற்று, இல்லை வாந்தி வருவது போலத் தோன்றுகிறதா?” என்றான் அடுத்து.

 

அதற்கும் அவன் இல்லை என்றதும், “குட்…” என்று நிம்மதியுடன் கூறியவன், “லிசின்… ஐ ஆம் அநபாயதீரன்…” என்றவாறு தன் கரத்தை நீட்ட, அந்த டானியல் டக்கரும் தன் கரத்தை நீட்ட இருவரும் கைகுலுக்கிக்கொண்டனர்.

 

அதைக் கண்ட சிவார்ப்பணாவிற்கு எரிச்சல்தான் வந்தது.

 

“ஆமாம் இவர் பெரிய ஜஸ்டின் ட்ரூடோ… அவர் பெரிய டொனால்ட் ட்ரம்ப்… இருவரும் முக்கிய உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டு விட்டார்கள்… டேய் டேய் ஃப்லிம் ஓட்டியது போதும், முதலில் எழும்பி வெளியே போவதற்கான வழிகளைப்பாருங்கள்…’ என்று மனதிற்குள் எதிர்ப்பாட்டுப் பாடினாலும், ஏனோ அவன் கூரிய அநபாயதீரன் என்கிற பெயர் அவள் ஆழ் மனதில் பதாகையாக, பதிந்து போனது.

 

‘பயமற்றவன். பயமற்ற செயல்திறம் கொண்டவன். அழிவில்லாதவன். வல்லவன் மரணத்தைக் கடந்தவன். செயல்வீரன்… வெல்லப்பட முடியாதவன். அடேங்கப்பா… அந்த ஒற்றைப்பெயரில் எத்தனை பொருளைக் கொண்டிருக்கிறான்.’ என்று தன்னை மறந்து சிலாகித்துக் கொண்டிருந்தவளின் கவனத்தை, அந்த கிங்காங்கின்… சே அநபாயதீரனின் ஆழ்ந்த குரல் கலைத்தது.

 

“டானியல், வி ஹாவ் டு மூவ் க்விக் அஸ் பாசிபிள்… ஓக்கே…” என்று கேட்க, அவனும் தன் தலையைப் பற்றியவாறு ‘ஆம்’ என்றான். அவனுடைய தோளில் தட்டிவிட்டு மேலும் பேருந்தின் பின்புறமாகச் செல்லத் தொடங்கினான் அந்த அநபாயதீரன்.

 

‘அட பயபுள்ள தீயா வேலை செய்கிறானே…’ என்று மனதிற்குள் சிலாகித்தவாறு அந்த கிங்காங்கையும், டானியலையும் வால் எனப் பின்பற்றிச் சென்றாள், சிவார்ப்பணா.

 

ஒரு வயோதிபத் தம்பதி எழ முடியாமல் தவித்துக்கொண்டிருக்க சிவார்ப்பணாவும், டானியலுமாக் அவர்கள் எழ உதவிசெய்தனர்.

 

சற்றுத் தள்ளி விழுந்திருந்த ஒரு இளம் பெண். கிட்டத்தட்ட வயது பதினெட்டுதான் இருக்கும். சுயநினைவின்றி இருக்க, விரைவாக அவளை நெருங்கினான் அநபாயதீரன்.

 

அவள் விழுந்திருந்த விதமே, அவளுக்குரிய ஆபத்தைச் சுட்டிக்காட்ட, ஒருவாறு அவளைத் தூக்கி, ஒழுங்காகப்படுக்கவைத்து, பரிசோதித்தான்

 

‘அடேங்கப்பா… நம்முடைய கிங்காங் மருத்துவரா? ஆனால், அவனுடைய உருவத்திற்கும் மருத்துவருக்கும் சம்பந்தமேயில்லையே. வைத்தியர்கள் என்றால், முகத்தில் கருணையிருக்கும். இவனைப் பார்த்தால் கருணைக்கொலையையே சந்தோஷமாகச் செய்வான் போல இருக்கிறதே… அதோடு இந்த உடல்… வில்லன்களுக்குப் பொருந்தும்… வைத்தியர்களுக்கு…’ என்று தனக்குள் எண்ணியவளுக்கு ஏனோ அவனை வைத்தியராக எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.

 

ஆனால் அந்த அநபாயதீரனோ, “ஹேய்… டு யு ஹியர் மி… வேக்கப்… ஹலோ…” என்று பலமுறை அழைத்துப் பார்த்தான். அந்தப் பெண்ணிடமிருந்து எந்த மாற்றமும் இருக்கவில்லை.

 

அசைவில்லாதிருந்த அந்தப் பெண்ணின் நாடித்துடிப்பைப்பரிசோதித்தான். எதுவும் புலப்படவில்லை. மூக்கில் தன் கரத்தை வைத்துப் பார்த்தான். மூச்சு இருப்பதுபோலத் தோன்றவில்லை. அந்தப் பெண்ணின் தலையைக் காற்று இலகுவாக உள்ளே நுழைவதற்கு ஏதுவாகப் பின்புறமாகச் சற்றுச் சரித்து, தன் காதை மிக அருகே கொண்டு சென்று, மூச்சுக்காற்று வருகிறதா என்றும், மார்பு அசைக்கிறதா என்பதையும் கவனித்தான்.

 

“டாமிட்… உடனடியாக சிபிஆர் கொடுக்கவேண்டும்…’ என்ற முணுமுணுத்தவன், அவள் அணிந்திருந்த திக் ஜாக்கட்டின் சிப்பைக் கழற்றி, அந்தப் பெண்ணின் மார்புக் குழியின் மையத்தில் உள்ளங்கை குதியை வைத்து, அதன் மேல், தன்னுடைய மறு கரத்தையும் வைத்து விரல்களைப் பிணைத்து, ஒரு பதினெட்டு விநாடிகளுக்கு முப்பது முறை என்கிற வேகத்தில், அந்தப் பெண்ணின் உடல் எடைக்கேற்ப, இரண்டு இஞ்ச் ஆழத்தில் மேலும் கீழுமாக அழுத்தத் தொடங்கினான்.

 

பின் அவளுடைய மூக்கைப் பொத்தி, வாயோடு வாய் வைத்து இரண்டு முறை ஆழ மூச்சைக் கொடுத்தவன், மீண்டும் அதே போல முப்பது முறை வேகமாக அழுத்தத்தொடங்கினான். இப்படி நான்காம் சுற்று முடிய, இப்போது அந்தப் பெண்ணிடம், சிறு மாற்றம் தெரிந்தது. மீண்டும் அவள் இதயத்தை அழுத்த, அந்தப் பெண் திடீர் என்று இருமினாள்.

 

அதே வேளை டானியல், 911க்கு அழைத்து செய்தியை அறிவிக்க, பல இடங்களில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தால், உடனடியாக வருவது சிரமம் என்றும், முடிந்த அளவு விரைவாக வருவதாகவும் கூற. இவன் கைப்பேசியை வைத்துவிட்டு, அநபாயதீரனுக்கு உதவியாக வந்தான்.

 

“குட்… டேக் இட் ஈசி… டேக் இட் ஈசி… யு ஆர் ஓக்கே…” என்றவாறு அந்தப் பெண்ணின் தலையை வருடிக் கொடுக்க, அந்தப்பெண்ணோ விழி முழுவதும் கண்ணீர் நிறைந்திருக்க, பேசமுடியாது தவித்தாள்.

 

“யு ஓக்கே… கான் யு கெட் அப்…” என்று கேட்டவாறு, அவளுடைய கரத்தைப் பற்றி மெதுவாக எழுப்பி, ஒரு பக்கம் சாய்ந்தவாறு இருத்தினான் அநபாயதீரன்.

 

இதை ஏனோ பெரும் எரிச்சலுடன் கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் சிவார்ப்பணா.

 

‘ஆமாம்… இவர் பெரிய ட்வல்லைட்டில் வருகிற ஜாக்கோப்… அவ பெல்லா… சிபிஆர் செய்து பிழைக்கவைக்க’ என்று எண்ணாமல் அவளால் இருக்கவே முடியவில்லை.

 

அந்த நிலையிலும் அந்தப் பெண் மீது கோபம் வந்தது. “இப்படிப் பூஞ்சையாக இருக்கிறாளே…” என்று தனக்குள் எரிச்சலுடன் எண்ணியவள், அநபாயதீரனைப் பார்த்து முறைத்தாள்.

 

எதற்காக அவள் முறைத்தாள்? அவன் மீது இவள் எதற்காகக் கோபப்படவேண்டும் என்கிற கேள்விக்கு அவளிடம் பதிலே இருக்கவில்லை. எப்படி அவன் ஒரு பெண்ணைத் தொடலாம் என்கிற எரிச்சல் மட்டும் அவளை நிம்மதி இழக்கச் செய்தது.

 

அதே நேரம், சற்றுத் தள்ளி, ஒரு முனங்கல் சத்தம் கேட்க, அநபாயதீரன் சந்தம் வந்த திசைக்கு வேகமாகச் சென்றான்.

 

அங்கே ஒரு இளைஞனுக்குத் தலையில் நல்ல அடி. இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. தன் காயத்தைக் கையால் பற்றியபடி எழுவதற்கு முயன்றுகொண்டிருந்தான். அப்போதுதான் தெரிந்தது, விழுந்த வேகத்தில் அவனுடைய இடதுகால் எப்படியோ பேருந்தின் ஜன்னல் கண்ணாடிக்குள்ளாக வெளியே சென்றிருப்பது. அது அங்கிருந்த இரும்பு கேர்டரில் நசிந்துபோய் பார்ப்பதற்கே அகோரமாக இருக்க, அதைக் கண்ட சிவார்ப்பனாவிற்கு மயக்கமே வரும் போலிருந்தது.

 

அவளுடைய வாழ்வில் இப்படியொரு காட்சியைக் கண்டதேயில்லை. என்ன கொடூரம் அது. அந்த இளைஞனும் வலியில் துடிக்க, இவளுக்கு இரு காதுகளும் அடைத்தது. ஆனால் அந்த உணர்வே இல்லாதவனாக அநபாயதீரன் செயற்பட்டான்.

 

அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இருக்கவில்லை. எந்தப் பதற்றமும், எந்தப் பயமும் அவனுடைய விழிகளிலோ, இல்லை முகத்திலோ எள்ளளவும் தெரியவில்லை.

 

திரும்பி சிவார்ப்பணாவையும், டானியலையும் பார்த்த அநபாயதீரன், சிவார்ப்பணாவின் நிலையைப் புரிந்துகொண்டவனாக, டானியலைப் பார்த்து,

 

“ஐ நீட் யுவர் ஹேல்ப்… ஹோல்ட் ஹிம்…” என்றவன், தன் வலது முழங்கையை மடித்து, உடைந்திருந்த பேருந்து ஜன்னல் கண்ணாடிகளை ஓங்கிக் குத்த, அவனுடைய பலத்திற்குக் கண்ணடிகள் சுக்கு நூறாக உடைந்து கொட்டுண்டன.

 

அந்த ஜன்னலுக்குள்ளாகத் தன் கரத்தை வெளியே விட்டு அந்த இளைஞனின் முறிந்துபோயிருந்த காலை இழுக்கப்பார்த்தான். அது பேருந்திற்கும் கம்பிக்கும் இடையே நசிந்துபோயிருந்ததால், இழுக்கப் பெரும் சிரமமாக இருந்தது. கூடவே அந்த இளைஞன் வலியில் கத்த, சிவார்ப்பணாவிற்கு ஈரக்குலையே நடுங்கியது.

 

உயிர் போவதுபோலக் கத்திய இளைஞனால், ஓரளவுக்கு மேல் கத்தமுடியாது போக, மெது மெதுவாக ஒரு வித மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டான். அந்த உடைந்த காலை சுலபமாக எடுப்பதற்கு ஒரே ஒரு வழிதான் இருந்தது. அந்த பேருந்து இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும். தாமதிக்காமல் உடனே முடிவெடுத்தவன், திரும்பி டானியலைப் பார்த்து,

 

“இழுக்கச் சொல்லும்போது, தாமதமின்றி இவனை இழுக்கவேண்டும்…“ என்று உத்தரவு பிறப்பித்துவிட்டு, சிவார்ப்பணாவைத் திரும்பிப் பார்த்தான்.

 

“அர்ப்பணா…” என்று அழைக்க, திடுக்கிட்டு விழித்து அவனைப் பார்த்தாள் சிவார்ப்பணா.

 

‘அர்ப்பணாவா என்பெயர் இவனுக்கெப்படி? ‘அப்போது கூட சொல்லவந்து நிறுத்திக் கொண்டேனே… ஆனால் இவன்…’  என்று அவள் குழம்பும்போதே அவனுடைய அழுத்தமான குரல் அவள் செவிப்பறையைக் கிழித்தது.

 

“லிசின் அர்ப்பணா… கோ பக்…“ என்றான் தன் தலையைச் சற்றுச் சரித்து மேலும் கீழும் ஆட்டியவாறு.

 

“ஆ…“ என்று இவள் புரியாமல் விழிக்க, தன் இரு விழிகளையும் இறுக மூடித் தன் கோபத்தை அடக்க முயன்றவன், அதுமுடியாமல் வேகமாகத் திறந்து.

 

“ஐ செட் கோ பக்…“ என்று கர்ஜிக்க, அந்தக் குரலில் பயந்து நடுங்கி, வேகமாக நான்கடி வைக்க, அவளுடைய வேகத்திற்கு பேருந்து சற்று முன்னே வழுக்கிக்கொண்டு செல்ல, இப்போது சிவார்ப்பணா, சர்வ நாடியும் அதிரத் தன் காதுகளில் இரு உள்ளங்கைகளையும் பதித்து,

 

“அம்மா…“ என்று அலறினாள்.

 

அலறியவளைச் சற்றும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத அந்த அநபாயதீரன், பேருந்து, முன்னேறிய அந்த விநாடித் தருணத்தில்,

 

“புள் ஹிம்…“ என்று கட்டளையிட்டவாறு, கேர்டருக்குள் சிக்கியிருந்த காலை மடித்து இழுக்க, இரண்டும் ஒரே கணத்தில் நிறைவேற்றப்பட, அந்த இளைஞன் பேருந்தின் நடுப்பகுதிக்கு, வேகமாக முழுவதுமாக இழுக்கப்பட்டான்.

 

வலியால் அந்த இளைஞன் கத்திய கத்தலில் உயிரே துடித்துப்போனாள் சிவார்ப்பணா. அவளால் அந்தக்கொடுமையைக் கண்கொண்டு பார்க்கமுடியவில்லை. அந்த இளைஞனின் காயத்தைப் பார்க்கும்போதே, அவளுக்கு வாந்தி வருவது போலிருந்தது. உடல் நடுங்கியது… இரத்தம் உடலை விட்டு வழிந்தோடியதுபோல, சற்றுத் தள்ளாட, வேகமாக அருகேயிருந்த கம்பியொன்றைப் பிடித்தவாறு அப்படியே தரையில் சரிந்தமர்ந்தாள். அதற்கு மேல் அவளால் அந்தக் கொடூரத்தைப் பார்க்கமுடியவில்லை.

 

அவளுக்கு சும்மாவே இரத்தத்தைக் கண்டால் மயக்கம் வரும். அப்படி இருக்கையில் கால் பிய்ந்து சதை தொங்கி… அதற்க்கு மேல் அவளால் அந்தக் கொடுமையைப் பார்க்க சக்தி இருக்கவில்லை.

 

அதே நேரம் அந்த இளைஞனின் காலைப் பரிசோதித்தவனின் முகம் யோசனையில் சுருங்கியது. மூன்று இடங்களில் பயங்கர முறிவு ஏற்பட்டிருந்தது. எதையும் யோசிக்காது சுற்று முற்றும் பார்த்தவன், எழுந்தான்.

 

பஸ் விழுந்த வேகத்தில் சில பாகங்கள் உடைந்து தொங்கிக்கொண்டிருந்தன. அதில் இரண்டடி நீளமும் ஓரடி அகலமும் கொண்ட தகரம் ஒன்று பிய்ந்திருக்க, அதை, வேகமாக ஒரு இழுவை இழுத்தான். அவன் இழுத்த வேகத்திற்கு, அந்தத் தகரத்தின் அரைப்பகுதி ஏதோ மரத்திலிருந்து கிளையொன்றை உடைத்து வந்ததுபோல, அவன் கரத்தோடு வந்தது.

 

நிச்சயமாக ஒரு சாமானிய மனிதரால், அந்தத் தகரத்தை இப்படிப் பிய்த்து எடுக்க முடியாது.

 

அந்த அதிர்ச்சியிலும், சிவார்ப்பனா அநபாயதீரனை இமை மூடாது வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

அவனோ பிய்த்தெடுத்த அந்தத் தகரத்தை மடக்கிப் பார்த்தான். அது மடங்கிக் கொடுக்கத் திருப்திப்பட்டவனாக, விரைவுடன், அந்த இளைஞனின் அருகே சென்றான்.

 

அந்த இளைஞனோ, வலி தாங்க முடியாது, மயங்கியும் மயங்காத நிலையிலும் இருக்க,

 

“ஹே… லிசின்… உனது காலுக்குக் கட்டுப்போடப்போகிறேன்… புரிந்ததா… எங்கே என்னை விழித்துப் பார்… வட்ஸ் யுவர் நேம்…“ என்று அவனுடைய உணர்வை விழிப்படையச் செய்வதுபோல பேசிக்கொண்டு தன் காரியத்தில் கண்ணாக இருந்தான்.

 

ஒருவாறு உடைந்த காலைச் சரிப்படுத்தி, ஒழுங்காக வைக்க முயல, அந்த இளைஞன் வலியில் துடித்தான்.

 

“இட்ஸ் ஓக்கே படி… இட்ஸ் ஓக்கே…“ என்று வாய் சமாதானப் படுத்தினாலும், சரியாக்கிக்கொண்டிருந்த காலை அவன் இம்மியளவும் கைவிட்டானில்லை.

 

துருத்திக்கொண்டிருந்த எலும்புகளை, ஒருவாறு இணைத்தவன், அந்த இளைஞனின் வலியைப் புரிந்துகொண்டவனாக, அவனுடைய மனநிலையை வேறு பக்கம் திசை திருப்பும் பொருட்டு,

 

“ஹே மை ஃப்ரன்ட்… டு யு ஹாவ் எ கேர்ள்ஃப்ரன்ட்…? இஸ் ஷி பியூட்டிஃபுள்…” என்றான் அவனுடைய முகத்தையும் காலையும் மாறி மாறிப் பார்த்தவாறு. கைகள் தன்பாட்டுக்கு எதை எதையோ சொய்துகொண்டிருந்தன.

 

அநபாயதீரனின் கேள்வியில் ஒரு கணம் திகைத்த அந்த இளைஞனின் முகம் மெல்லியதாக மலர்ந்தது.

 

“நோ… பட் ஐ ஹாவ்… ஹ..க்… இட்ஸ் ஹேர்ட் டாமிட்… ஐ ஹாவ் எ வைஃப் ” என்றான் பல்லைக் கடித்து வேதனையைத் தாங்க முடியாமல்.

 

அதைக் கேட்டு மெல்லியதாக நகைத்தவன், ஹெள எபவுட் கிட்ஸ்…” என்றவாறு, தன் பொக்கில், அந்தத் தகரத்தை, அவனுடைய காலின் கீழே தள்ளி, கவனமாக, பொருத்திக்கொண்டிருந்தான். அவன் நினைத்தற்கும் மேலாகக் கச்சிதமாகக் காலைக் கவ்வி நின்றது அந்தத் தகரம்.

 

அவனோ முனங்க, “இட்ஸ் ஓக்கே படி…” என்று கூறியவாறு, தான் அணிந்திருந்த ஷேர்ட்டை இரு கரம் கொண்டு பொத்தான் அணைத்தும் தெறிக்க, இழுத்து, கழற்றியவன், கூடவே தான் அணிந்திருந்த ஆம் கட் பெனியனையும் கழற்றி எடுத்தான். அதனைக் கொண்டு, அந்தத் தகரத்தை அவனுடைய காலுடன் சேர்த்துக் கட்ட, இப்போது உடைந்த காலுக்கு வலுவான காஸ்ட் கட்டப்பட்டிருந்தது.

 

திருப்தியுடன் எழுந்தவன்,

 

“யு ஆர் ஓக்கே நவ்… இன்னும் கொஞ்ச நேரத்தில் நாம் வெளியேறிவிடுவோம்… அது வரை ஸ்டே வித் அஸ்…” என்று கூறி விட்டுத் திரும்பியவனை, வியப்பு மாறாமலே பார்த்தாள் சிவார்ப்பனா…

 

அவளுக்குக் காலம் மறந்தது, தாம் நிற்கும் நிலை மறந்தது. சூழ்நிலை மறந்தது… இடம் பொருள் ஏவல் அனைத்தும் மறந்தன… உடல் பொருள் ஆவி அனைத்தும், தன் முன்னால் வெற்று மார்புடன் நின்றிருந்த, அந்த ராட்ஷசனின் உருவத்திலேயே நிலைத்து நின்றிருந்தன.

ஆம் அவன் ராட்ஷசன்தான்… அழகிய, கம்பீரமான திடகாத்திரமாக ராட்ஷசன்… அவர்களைக் காக்க வந்த ராட்ஷதன்…

 

அடேங்கப்பா… இவன் என்ன மிஸ்டர் வேர்ல்ட்டுக்கு பயிற்சி எடுக்கிறானா… ஒவ்வொரு கைகளிலும் ஐந்து கிலோ சதையைத் தேக்கிவைத்திருக்கிறானே… அம்மாடியோவ்… இது என்ன புஜங்களா… இல்லை, படுத்திருக்கும் குட்டி யானைகளின் உடல்களா… இராவணனுக்குக் கூட இப்படி உடல் அமைப்பு இருக்குமா என்ன? கழுத்து… அது வேறு அகன்று… அந்தக் கழுத்தை வளைத்துப் பற்றவேண்டுமானால், அவளுடையதைப் போல நான்கு உள்ளங்கைகள் வேண்டும். அகன்ற தோள்களும், இறுகிய மார்புகளும், எந்தக் கன்னிப் பெண்ணிற்கும் அதில் சாய்ந்துகொள்ள மனம் ஏங்கும். அப்படியே குறுகிய இடையோடு ஓடிய எய்ட் பாக் வயிறு… சர்வ நிச்சயமாகப் பல பெண்களின் கதாநாயகனாக வலம் வந்திருக்கவேண்டும் தவிர, இவன் பாடிபில்டிங்கில் அலாதி பிரியமாக… என்பதை விட வெறியாக இருந்திருக்கவேண்டும். இல்லையென்றால் இவனுக்கு இத்தகைய உடலமைப்பு வந்திருக்க வாய்ப்பேயில்லை.

 

முன்பெல்லாம் தன்னுடைய நீண்ட நாள் கதாநாயகனான இராவணன், எப்படி இருந்திருப்பான் என்று கற்பனையில் கண்டிருக்கிறாள்தான். ஆனால் ஒரு போதும் அந்த உருவத்தில் அவள் திருப்திப் பட்டுக்கொண்டதில்லை . இப்போது… அந்த அநபாயதீரனைக் கண்டபின், இராவணன் இப்படித்தான் இருப்பான் என்று அவள் உள்ளம் ஏகமாக ஏற்றுக்கொண்டது.

 

கம்பீரமாய், பெரும் ஆளுமையுடன், எந்த அலட்டலுமின்றி, ஆண்மை கொண்டவனாய் இருந்த அந்த கிங்காங், இராவணன், அந்தக் கணம் அவளுக்குக் கதாநாயகனாகிப்போனான்.

 

(4)

 

அதே நேரம் ஓரளவு தம்மை நிலைப்படுத்திய பயணிகள், எழுந்து தாம் இருந்த நிலையைக் கவனிக்கத் தொடங்கினர். அப்போதுதான், அவர்களுக்குத் தாம் சந்திக்க இருக்கும் ஆபத்து உறைத்தது. பெரும் அதிர்ச்சியுடன் முகம் வெளிறத் தம்முடைய வெளி சூழலை உடல் நடுங்க உள்வாங்கத் தொடங்கினர்

 

காரணம், பாலத்தை உடைத்துக்கொண்டு வெளியேறியிருந்த பேருந்து, ஐம்பதடிக்கும் கூடிய ஆழமுள்ள ஆற்றை முத்தமிடத் தயாராகிக்கொண்டிருந்தது. போதாததற்கு மேலும் பயமுறுத்துவது போல, மேலும் கீழுமாக மெல்லியதாக ஆடிக்கொண்டிருந்தது.

 

“ஓ… நோ… வி ஹாவ் டு கெட் அவுட் அஸ் சூன் அஸ் பாசிபிள்…” என்றனர் தமது உயிரைக் கையில் படித்துக்கொண்டு.

 

சிலருக்குப் பேசவே முடியவில்லை. மரணம் கண்களுக்கு முன்னால் நின்று நர்த்தனம்  ஆடிக்கொண்டிருந்தால் யாரால்தான் தெளிவாகச் சிந்திக்க முடியும்? அதே நேரம், பின்புறமிருந்து என்ஜின் ஆய்ல் வழிவதைக் கண்ட டானியல்,

 

“சார் வி ஹாவ் அன் அதர் ப்ராப்ளம்…” என்று கூறத் திரும்பிப் பார்த்தான் அநபாயதீரன்.

 

நிலைமை புரிய எந்த நேரமும் தீப்பிடிக்கலாம் என்பதைத் தெரிந்துகெர்ணடவனுக்குச் சற்றும் தாமதிக்காமல் பயணிகள் காப்பாற்றப் படவேண்டும் என்கிற உண்மையைப் புரிந்துகொண்டான். உடைந்த உலோகங்கள், ஒன்றை ஒன்று உராய்வதால் ஏற்படும் தீப்பொறியிலிருந்தும், மின்கலத்தின் சிதைவிலிருந்தும் எந்த நேரமும் பரவலாம். அதன் பிறகு காப்பாற்றுவது அத்தனை சுலபமில்லை. நல்ல வேளை அன்றைக்கென்று சொற்ப பயணிகள்தான் இருந்தார்கள். இல்லையென்றால் அவர்களின் கனத்திற்குப் பேருந்து ஏபோதோ ஆற்றில் விழுந்திருக்கும்.

 

அதைக் கண்ட பயணிகள் பயத்துடன் பேருந்தின் முன்புறம் அசையத் தொடங்க, பயணிகளின் பாரத்திற்குப் பேருந்து மேலும் முன்னோக்கிச் சரியத்தொடங்கியது. அதை உணர்ந்ததும் அனைவரும் ஆணியடித்தாற்போல அப்படியே நின்றனர். பயத்தில் இதயம் படு வேகமாகத் துடிக்கத் தொடங்க,

 

“ஹே… ஹே… ஈசி காய்ஸ்… சில்…”என்று எச்சரித்த அநபாயதீரன், மெதுவாகக் கால்களை இரண்டடி முன்வைக்க, அதிக மழை பெய்ததால், நிலமும் வழுக்கிச் செல்வதற்கு உதவி செய்ய, இப்போது பேருந்து மேலும் ஓரடி ஆற்றை நோக்கி முன்னேறியது.

 

ஏற்கனவே பயத்தில் உறைந்திருந்த பயணிகளுக்கு அதுவே கடைசி நிமிடத்துளியாகத் தோன்ற, அதற்கு மேலும் அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாத அங்கிருந்த அந்த வயோதிபக் கறுப்பினப் பெண்,

 

“ஓ… நோ… ஐ கான்ட்… ஐ கான்ட் ஸ்டே ஹியர்… ஐ நீட் டு கோ ஹோம்… ஓ ஜீசஸ் ஹேல்ப்மீ…” என்றவாறு என்ன செய்கிறோம் என்பது கூட உணராமல் பாய்ந்து முன்னோக்கி ஓட,

 

“நோ… டோன்ட் மூவ்…” என்று அநபாயதீரன் கர்ஜித்தவாறு அவரைப் பற்றப் போக, அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாத பேருந்து, வேகமாக ஆற்றை நோக்கிச் சரியத் தொடங்கியது.

 

வேகமாக ஓடியவரால், தன்னைச் சமப்படுத்த முடியாமல் போக, ஈர்ப்பு விசைக்கு ஏற்ப பேருந்தின் முன்புறக் கண்ணாடி மீது விழ, ஏற்கெனவே வெடித்திருந்த கண்ணாடி, அவருடைய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது, வாய் பிளக்க, அந்த வயோதிபப் பெண், கண்ணாடிச் சிதரல்களுடன் அதாளபாதாளத்திற்குள் கதறியவாறு விழத் தொடங்கினார். கூடவே பேருந்தும் விழத் தொடங்கியது.

 

முடிந்தது… அனைவரின் கதையும் இத்தோடு முடிந்தது… என்று கதறியவாறு கைக்குக் கிடைத்த கம்பிகளைத் தம்மோடு இறுகப் பற்றி இறுதி நிமிடத்திற்காகக் காத்திருந்த விநாடி, செங்குத்தாக விழுந்த பேருந்தின் பின்புறச் சில்லு, பாலத்தின் கார்ட் ரெய்ல்லில் சிக்கிக் கொள்ள, சரிந்த பேருந்து அந்தரத்தில் தொங்கத் தொடங்கியது.

 

முதலில் இதை யாரும் நம்பவில்லை. உண்மையாகவே பேருந்து விழவில்லையா என்பதை உணர்வதற்கு அவர்களுக்குச் சற்று நேரம் எடுத்தது. பின் உண்மை புரியக் கிடைத்த இறுதி நிமிட வாய்ப்பை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமல் குழம்பியவர்களுக்கு அப்போதைக்குத் தெரிந்த ஒன்றே ஒன்று  தம்மைக் காக்குமாறு கடவுளிடம் வேண்டுவது மட்டுமே.

 

யாரிடம் வேண்டுவது? யாரை அழைத்தால் உதவிக்கு வருவார்கள்? அல்லா? ஜீசஸ்? சிவன்? காக்கும் மதம் எது? இஸ்லாம், கிறிஸ்தவம், சைவம்? இல்லை முன்னம் செய்த நல்வினையா? எது அவர்களைக் காக்கப் போகிறது? தெரியவில்லை… ஆனாலும் நம்பிக்கையை விடாமல் தங்கள் உயிரைக் காக்கும் இறுதி நிமிடத்தில் நின்றிருந்தனர் அனைவரும்.

 

சிவார்ப்பணாவோ இறுகக் கம்பியைப் பற்றியிருந்தாலும், பயத்தில் வியர்த்த கரங்கள் வழுக்க ஆரம்பித்தன. கையை விட்டால் பரலோகப் பதவி நிச்சயம் என்பதை நம்பியவள் முடிந்த வரை கம்பியை இறுகப் பற்றிக்கொண்டாள். ஆனாலும் பழாய் போன கம்பி வழுக்கத் தொடங்கியது.

 

எவ்வளவு முயன்றும், வழுக்கிய கம்பியை அவளால் சரியாகப் பற்ற முடியவில்லை. ஒரு கட்டத்தில் தாமும், அந்தக்கறுப்பினப் பெண்போல கீழே விழுந்து சாகப்போகிறோம் என்று நிச்சயமாக நம்பியவள், முயன்று முயன்று இறுகப் பற்றி இறுதியில் ஈரமான கரங்கள் கரங்களை விட, இறுதி நேர மூச்சை விடப்போகிறோம் என்பதைப் புரிந்தவளாக அலறியவாறு பேருந்தின் கண்ணாடிகளுக்குள்ளாக, கீழே விழத் தொடங்கினாள்.

 

இதோ… பிளந்த கண்ணாடிக்குள்ளாக விழுகிறாள்… அவளுடைய கதை இத்தோடு முடிந்தது… இனி அவளுக்கும் இந்த உலகுக்கும் சம்பந்தமில்லை… முடிவாக எண்ணியவளாக விழிகளை இறுக மூடியவளின் வலக் கரத்தை திடீர் என்று மிகப் பலமான, இறுகிய பெரிய கரம் ஒன்று அழுத்தமாகப் பற்றிக் கொண்டது.

முதலில் அவள் அதை நம்பவில்லை. விழுந்துகொண்டிருக்கிறோம் என்றுதான் நினைத்தாள். ஆனால் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருப்பது புரிய, நம்பமுடியாத தவிப்புடன் நிமிர்ந்து பார்த்தாள்.

 

அந்தக் கிங்காங்தான் கைபிடிக்கும் கம்பி ஒன்றின் மீது குரங்குகள் போலக் கால்களை மடித்தவாறு தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தான். அவனுடைய இடது கரம், இவளுடைய ஒற்றைக் கரத்தை இறுகப் பற்றியிருந்தது.

 

எப்படி இது சாத்தியம். அவளுக்கு இப்போதும் நினைவிருக்கிறது… அவன் கடைசியில்தான் தொங்கிக்கொண்டிருந்தான்… தொலைவிலிருந்தவன், எப்படி அத்தனை விரைவாக அவளருகே வந்திருக்க முடியும்? அதுவும் இத்தனை கம்பிகள், தொங்கிய மனிதர்கள் அனைத்தையும் கடந்து வந்திருக்கிறான் என்றால், அவன் வேற்றுக் கிரக வாசியாகத்தான் இருக்கவேண்டும். இல்லை மாயாஜாலம் தெரிந்திருக்க வேண்டும்… அல்லது அவளையே கவனித்திருக்க வேண்டும். அவள் விழ முதல் பாய்ந்து வந்திருக்க வேண்டும்.

 

எது எப்படியோ கண்ணிமைக்கும் நெடியில், மின்னல் விரைவுடன் வந்து அவளைக் காத்துவிட்டான்… நன்றிப் பெருக்கில் விழிகள் குளமாக, தன்னைக் காத்த அந்தக் கரத்தைக் கைவிட மனமில்லாமல் தன் மறு கரத்தால் அவன் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டாள். அவளுடைய முகம் அச்சத்தில் வெளிறியிருந்தது. உதடுகள் துடிக்க அவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவளை ஒரு விநாடிக்கும் மேலாகப் பார்த்தவன்,

 

“யு ஓக்கே…“ என்றான் தன் காந்தக் குரலில். அவளுக்கு வார்த்தைக்குப் பதில் காற்றுதான் வந்தது. ஆனாலும் அவன் கேட்ட கேள்விக்குப் பதில் கூற வேண்டுமே. பலமாகத் தலையை மட்டும் ஆட்டி, ‘ஆம்’ என்றாள்.

 

“குட்…” என்றவன்.. “இதோ பார்… உன்னை உடையாத பகுதியில் விடப் போகிறேன்… நான் சொல்லும் வரைக்கும் உன் விரலைக் கூட அசைக்கக் கூடாது… புரிந்ததா?” என்று எச்சரிக்க, அவளும் ஆம் என்பது போலத் தலையசைத்த மறு கணம். அவளை மெதுவாகப் பக்குவமாகப் பேருந்தின் உடையாத பகுதியின் மேல் கைவிட்டவன், மீண்டும், தான் தொங்கிக்கொண்டிருந்த கம்பியைக் கரத்தால் பற்றி, காலை இறக்கி, எங்கும் எந்த சலசலப்போ, அசைவோ இன்றி, குரங்கு மரங்களைத் தாவுவது போல, அங்கும் இங்குமாக, அசைந்து அசைந்து காலுடைந்திருந்தவன் தொங்கிக் கொண்டிருந்த கம்பியருகே வந்தான்.

 

கம்பியை விடாது அவனுக்கு முதுகு காட்டித் திரும்பி நின்றவாறு

 

“ஹோல்ட் மீ…“ என்றான்.

 

உடனே அவன் கூறியதற்கேற்பப் பாய்ந்து அவனுடைய கழுத்தை இறுகக் கட்டிக்கொள்ள, ஏதோ பாவப்பிள்ளை ஒன்றைச் சுமப்பது போல, அவனைச் சுமந்துகொண்டு, மிக மிக லாகவமாக, சிவார்ப்பணாவின் அருகே வந்து மெதுவாகக் குதித்துக் கவனமாக அவனை இறக்கிவிட்டு அமரச் செய்தான் அநபாயதீரன்.

 

அதே போல டானியலும், அந்த இளம் பெண்ணைப் பக்குமாகக் கொண்டு வந்து இறக்க, அநபாயதீரன் அந்த வயோதிபரையும் அதுபோலவே கீழே இறக்கிவிட்டான்.

 

இன்னும் சிவார்ப்பணாவிற்குத் நம்ப முடியவில்லை. எப்படிக் கண்ணிமைக்கும் நொடியில் அவன் செயற்பட்டான் என்பதை அவளால் சற்றும் சிந்தித்துப்பார்கக் முடியவில்லை. அவன் மட்டும் அந்த இடத்தில் இல்லாமல் இருந்திருந்தால் எண்ணும் போதே உடல் சிலிர்த்தது.

 

அந்த நிம்மதி சொற்ப நேரமே நிலைத்தது. இப்போது பேருந்தின் எடையைத் தாங்க முடியாது கார்ட் ரெய்லும் மெல்லமாக வளையத் தொடங்க, எந்த நேரமும் பேருந்து ஆற்றை நோக்கி விழலாம்.

 

இப்போது தப்புவதற்கு இருக்கும் ஒரே ஒரு வழி, முன்புறக் கதவு. அநபாயதீரன், சற்றும் யோசிக்கவில்லை.

 

மெதுவாக அசைந்து, டோர் ஓப்பினரை அழுத்தக் கதவு திறந்து கொண்டது. கதவு திறந்ததுதான் தாமதம், காற்றும் மழையும் படு வேகமாக அவர்களை நோக்கிச் சுழன்ற அடித்தது. முகத்தில் மழை தெறிக்க, அநபாயதீரன், தப்பும் வழி தேடி எட்டிப் பார்த்தான். எதைப் பிடித்து ஏறுவது? எப்படித் தப்பிப்பது?

 

எந்தப் பிடிமானமும் இல்லை. அவன் என்ன ஸ்பைடர் மானா, தாவித் தாவி ஏறுவதற்கு. என்ன செய்வது என்று புரியாமல் புத்தியைத் தட்டிவிட்டு யோசித்த நேரம், படபடவென்கிற சத்தம் தொலைவில் கேட்கத் தொடங்கியது. நிம்மதியுடன் அடித்துப் பெய்த மழையையும் பொருட்படுத்தாது அண்ணாந்து பார்த்தான்.

 

அப்போது, கடவுளே மனித உருக் கொண்டதுபோல, ஃபயர் ட்ரக்கும், ஹேலிக்காப்டரும் அவர்களை நோக்கி வேகமாகவரத் தொடங்கின.

 

அடுத்த ஐந்து நிமிடங்களில் அவர்களுக்கு முன்னால், ஹேலிக்காப்டரிலிருந்து கயிற்றேணி ஒன்று இறக்கப்பட்டது. தொடர்ந்து, மீட்புப் பணியினரும் இறங்க, அடுத்து வேகமாகக் காரியங்கள் நடந்தேறின. காயம் பட்டவர்கள் கவனமாகப் பாதுகாப்பாக எயர் அம்புலன்சில் ஏற்றப்பட்டனர்.

 

நிலைமையைப் புரிந்துகொண்ட அநபாயதீரன், அதிக நேரம், தாமதிக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டவனாக,

 

“வீ ஹாவ் டு மூவ் ஆன் க்விக்லி…” என்று முணுமுணுத்தவாறு, எஞ்சியிருந்த சிவார்ப்பணாவை ஏறச் சொன்னான். அவள் நடுக்கத்துடன் அநபாயதீரனின் அருகே வர, அவளுடைய இடையைப் பற்றித் தூக்கியவன் திறந்திருந்த கதவின் மீது ஏற்றிவிட, எயர் அம்புலன்சிலிருந்து கீழே இறங்கிய மீட்பாளர், அவளை நோக்கிக் கரத்தை நீட்டினார்.

 

அப்போதுதான் அவளுக்குத் தாம் நிற்கின்ற நிலையின் ஆபத்து உறைத்தது.

 

பேதாதற்கு மழைவேறு அடித்துப் பெய்துகொண்டிருந்தது. சற்று வழுக்கினாலும், அவள் பரலோகம் போகவேண்டியதுதான்… கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலை.

 

“ஓ… நோ… ஐ கான்ட்… ஐ கான்ட்…” என்று உடல் நடுங்கக் கூறியவள், அதற்கு மேல் ஏறி நிற்க முடியாமல் உடல் தள்ளாடியவாறு பின்புறம் சரிய, அவள் நிலையை உடனே புரிந்துகொண்டவனாக, அவள் விழுந்துவிடாதவாறு தன்னோடு சாய்த்துக்கொண்டவனின் கரங்கள், பின்புறமாகச் சரிந்ததால் சற்று மேலேறிய ஆடைக்கூடடாக வெளியே தெரிந்த இடையுடன் கூடிய வெற்று வயிற்றைச் சுற்றிப்பற்றிக்கொண்டது.

 

அந்த நிலையிலும், கிட்டத்தட்ட தன்வயிற்றில் முழுவதுமாகப் படர்ந்திருந்த, அவன் கரத்தின் வெம்மையைப் புரிந்துகொண்டவள், அவன் தொடுகையில் பெரும் பாதுகாப்பை உணர்ந்தவள் போன்று, விழிகளை மூடிப் பெரும் மூச்சொன்றை விட்டாள் சிவார்ப்பணா.

 

அவனுக்கு கிங்காங் என்று பட்டப்பெயர் வைத்ததில் தப்பேயில்லை. ஏனெனில் அவனுடைய பெரிய உருவத்திக்கு அவள் சிறுமிபோலவே அவன் அணைப்பில் சிக்கியிருந்தாள் அந்தப் பேதை. ஏனோ ஒரு விநாடியாக இருந்தாலும், அந்தப் பயங்கர விநாடிகள் கூட இருவருக்கும் மறந்துதான் போனது.

 

அதனால் சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது.

 

முதலில் நிலைமையை உணர்ந்து செயற்படத் தொடங்கியது அநபாயதீரனே. அவள் புறமாகக் காதருகே குனிந்தவன்,

 

“வி டோன்ட் ஹாவ் மச் டைம்…“ என்று கூறியபோது, அவள் செவிகளில் மெதுவாகத் தீண்டிச் சென்ற அந்த அழுத்தமான உதடுகளில், ஒரு கணம் சிலிர்த்து அடங்கிப்போனாள் சிவார்ப்பணா.

 

எப்படியோ, சிரமப்பட்டுத் தன்னை சமப்படுத்தியவளாக ஆம் என்று கூற, மெதுவாக அவள் வயிற்றிலிருந்து கரத்தை விலக்கினான் அந்தத் தீரன்.

ஏனோ அவனுடைய கரம் விலகியபோது, ஏற்பட்ட மெல்லிய குளிர்மை, சற்று ஏறியிருந்த நம்பிக்கையை முற்றிலுமாக அழித்துவிட, பெரும் தவிப்புடன் அவனைத் திரும்பிப் பார்க்க முயன்றாள், அந்த வேல்விழியாள்.

 

அதே நேரம், பின்புறத்திலிருந்து வந்த புகை அதிகரிக்கத் தொடங்க, கூடவே மெல்லிய வெடிப்புச் சந்தங்களும், அவர்களின் கவனத்தை ஈர்க்க, அவர்களை அழைத்துப் பார்த்த எயர் அம்புலன்ஸின் மீட்புப் பணியாளர்கள், இவர்களிடமிருந்து எந்த சத்தமும் வராது போக, இனியும் தாமதித்தால், எயர் அம்புலன்ஸிற்குப் பெரும் ஆபத்து என்பதைப் புரிந்துகொண்டவர்களாக, உடனே அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றனர்.

 

“கமோன் ஆர்ப்பணா… இதில் பயப்பட ஒன்றுமில்லை. நாம் விரைவாக இந்த பேருந்தை விட்டு வெளியேற வேண்டும்… ம் க்விக்…” என்று அவன் அவசரப்படுத்த, அச்சத்துடன் அவன் முகத்தையே பார்த்தாள்.

 

“லிசின்… பேருந்து தீப்பிடிக்கத் தொடங்கிவிட்டது… தவிர எந்த நேரமும் பேருந்து கீழே விழலாம்… இந்த நேரம் நீ இப்படி அடம்பிடித்தால், நாம் இந்த பேருந்தோடு விழுந்து காணாமல் போகவேண்டியதுதான்…”

 

“நோ… என்னால் முடியாது… என்னால் முடியாது…” என்ற சிவார்ப்பணாவின் முகம் இரத்தப் பசையற்றுப் போக உடல் நடுங்கியது. அவள் வேகமாகக் கீழ் இறங்க, இப்போதே பேருந்து வேகமாக ஆடியது.

 

அதே நேரம் பேருந்தின் முன்புறக் கண்ணாடி வெடிக்கத் தொடங்கியது. அதைக் கண்டதும் உடல் பொருள் ஆவி அணைத்தும் உறைய, விறைத்துப்போய் நின்றாள் சிவார்ப்பணா. அவள் நிலையைப் புரிந்துகொண்ட அநபாயதீரன், விரைந்து அவளை நெருங்கி,

 

“லிசின்… நான் இங்கே உன் கூடத்தான் இருக்கிறேன்… பயப்படாதே… லுக் அட் மி…” என்று அவன் மென்மையாகக் கூற, உதறல் மாறாமலே அந்த அநபாயதீரனை ஏறிட்டாள் சிவார்ப்பணா.

பயத்தில் கலங்கிப்போயிருந்த விழிகளை சில விநாடிகள் உற்றுப் பார்த்தான். அந்த விழிகளில் என்ன கண்டானோ, அவள் முகத்தைத் தன் கரங்களில் ஏந்தி,

 

“உனக்கு என் மீது நம்பிக்கை இருக்கிறதா?” என்றான் தன் ஆழமான கவர்ச்சி நிறைந்த குரலில்.

 

தன்னையும் மறந்து அவள் ஆம் என்பதுபோலத் தலையாட்ட,

 

“குட்… லிசின் டு மி… உனக்கொன்றும் ஆகாது… ஆகவும் விடமாட்டேன்… ஐ ப்ராமிஸ் யு… ப்ளீஸ்… கம் வித் மி… ஐ வில்டேக் கெயர் ஒஃப் யு…” என்று அவன் ஆழமான அழுத்தமான குரலில் கூற, அந்தக் குரலின் காந்த விசைக்குக் கட்டுப்பட்டு, சிவார்ப்பனா, அவன் இழுப்புக்கு இசைந்து நடக்கத்தொடங்க,

 

“தட்ஸ் மை கேர்ள்…” என்று தட்டிக் கொடுத்தவன், அவளை மெதுவாகக் கதவினருகே அழைத்து வந்தான்.

 

மீண்டும் அவள் விழிகளில் அச்சத்தைக் கண்டவன், முதலில் தான் ஏறி நின்றவாறு, அவளை நோக்கித் தன் கரத்தை நீட்டினான்.

 

ஒரு கணம் தயங்கியவள், பின் தன் மெல்லிய பட்டை ஒத்த கரத்தை அவனுடைய பெரிய, கடினமான, பாறை போன்றிருந்த கரத்தில் வைக்க, அதை இறுகிப்பிடித்திருந்தவனின் கரம், அவளுடைய கரத்தை முற்றும் முழுதாகத் தன்னுள் உள்வாங்கிக் கொண்டது.

 

அவனுடைய கூர்மையான விழிகள் அவள் விழிகளுடன் கலக்க, அந்த விழிகளிலிருந்து தன் விழிகளை விலக்க முடியாது, அவற்றிற்குள்ளேயே மூழ்கிக் கரைந்துகொண்டிருந்தவளை, மேல் நோக்கி இழுக்க, இழுவிசைக்கேற்ப இவளும் மேலே சென்று, அவன் உடலோடு, ஸ்டிக்கர் போல ஒட்டிக்கொள்ள, அவள் மீண்டும் விழுந்து விடாதவாறுத் தன்னோடு இறுக அணைத்து நின்றுகொண்டான் அநபாயதீரன்.

 

சிவார்ப்பணாவோ, இன்னும் தன் விழிகளை அவன் விழிகளிடமிருந்து பிரித்தாளில்லை. அவனுடைய கண்களின் கருமணிகளோ, அவள் முகத்தை அங்கும் இங்கும் பார்த்தவாறு சில விநாடிகள் நர்த்தனம் புரிந்தன. பின்,.

 

“க்ளோஸ் யுவர் ஐஸ்…” என்றதும், சுயநினைவு பெற்றவள், தான் நிற்கும் நிலை புரிந்து, மீண்டும் பயத்துடன் அவனைப்பார்க்க,

 

“பிலீவ் மி… க்ளோஸ் யுவர் ஐஸ்…” என்றான் அதே கவரும் காந்தக் குரலில். அவன் குரலுக்கு மறுக்கமுடியாமல், தன்விழிகளை மூடினாள் சிவார்ப்பணா.

 

அவள் இடையைப் பற்றித் தன்னோடு இழுக்க, அவனுடைய அந்த வெற்று மார்பில் மோதி, அவன் அணைப்பில் புதைந்துபோனவளுக்கு ஏனோ அந்த நிலையிலும் உடல் கூச, உள்ளத்திற்குள் ஏதோ கலவரம் நடக்க, தன் விழிகளைத் திறக்க முயன்றாள் அந்தப் பேதை.

 

“டோன்ட்… டோன்ட் ஓப்பன் யுவர் ஐஸ்…” என்று எச்சரித்த அந்த நேரம், அத்தனை நேரமாக, அவர்களைத் தாங்கிக்கொண்டதே பெரும் பாடு என்று எண்ணிய காட் ரெய்ல் பேருந்தைக் கைவிட, பெரும் புகையைக் கக்கியவாறு அது கீழே விழத்தொடங்க, தன் அணைப்பிலிருந்தவளையும் இழுத்துக்கொண்டு அவன் பாய்ந்தான்.

 

தன்னை மறந்து. தன் முகத்தை அவனுடைய பரந்த மார்பில் புதைத்துக் கொண்ட சிவார்ப்பணா, இன்றோடு தன் கதை முடிந்துவிட்டது என்று எண்ணியவளாக, அவனை இறுகத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள். இருவரின் உடலும் அந்தரத்தில் பறந்து செல்வது அவளுக்குப் புரிந்தது. இதோ இன்னும் கொஞ்ச விநாடிகள்தான். அதன் பின் அவளும் அந்த ஆற்றுக்குள் சென்று காணாமல் போகப்போகிறாள்.

 

அவளுடைய உடல் கூடக் கிடைக்குமோ கிடைக்காதோ…. மனம் முழுவதும் வலியில் கதற, எங்கேயோ காதைப் பிளக்கும் பெரிய சத்தத்துடன் பேருந்து வெடிக்கும் ஓசை கேட்க, அவளும் அவனுமாக வானை நோக்கிப் பறக்கத் தொடங்கினர்

 

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!