Sun. Nov 24th, 2024

தகிகும் தீயே குளிர்காயவா 1/2

முன் கதை

 

“கேர்னல் ஃபயர்… உங்களுக்கு அழைப்பு வந்திருக்கிறது…” என்றவாறு வந்து நின்றான் ஃபயரின் கீழ் அதிகாரியான டேவிட்சன்.

 

“யாரிடமிருந்து…?” என்று அதிகாரமாகக் கேட்டான் ஃபயர்.

 

“மேலிடம் கேர்னல்…”

 

“ஓ… இதோ… இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுகிறேன்…” என்று கூறியவன் சுத்தமாகத் துடைத்துக்கொண்டிருந்த நவீன ரகக் கைத் துப்பாக்கியைத் தன் பான்டின் பின்புறம் பத்திரமாகச் செருகிக் கொண்டு எழுந்தான்.

 

ஆறடி நான்கங்குல உயரம். கண்களைக் கவரும் மாணிறம். கைகளை மடிக்கும் போது அவன் அணிந்திருந்த சீருடையைக் கிழித்துவிடுவோம் என்பது போலத் திரண்டு எழுந்த தசைக் குன்றுகள். பெண்களைச் சாயத் தூண்டும் பரந்த மார்பு. கராத்தேயில் பிளக் பெல்ட் வாங்கியிருக்க வேண்டும் என்பதைக் காட்டும் குறுகிய இடை. அவன் பார்வையிலிருந்து எதிரிகள் தப்ப முடியாது என்பதையும், அவனுடைய விழி வீச்சிற்கும் முன்னால் எதிரிகளால் தாக்குப் பிடித்து நிற்க முடியாது என்பதையும் எடுத்துக் காட்டும் கூர்மையான துளைக்கும் விழிகள். உலக அறிவு என் கைப்பிடியில் என்பதை அழுத்தமாக எடுத்துக் காட்டும் நெற்றி. சடார் என்று கோபப் படுவான் என்பதை எடுத்துக் காட்டும் கூரிய சற்று சிவந்த நாசி. அழுத்தமான சற்று இறுகிய உதடுகள். சரியான முடிவுகளை விநாடிப் பொழுதில் தப்பின்றி எடுத்து எதிரிகளைப் பந்தாடும் நடை… கால் தடங்கள் ஒவ்வொன்றும் மிகுந்த அழுத்தமானவை. அவை அவனுடைய மன அழுத்தத்தையும், அவனுடைய தைரியத்தையும் தெளிவாக எடுத்துக் காட்டுபவையாக இருந்தன.

 

மொத்தத்தில், அவனைப் பார்க்கும் இளம் பெண்கள் அந்த விநாடியே தங்கள் இதயத்தைப் பரிசாகக் கொடுத்துவிடுவார்கள். ஆனால் அதெல்லாம் அவனுக்குத் தூசு என்பதைச் சொல்லாமல் சொல்லும் நிமிர்ந்த தோற்றத்துடனான அலட்சியமான பார்வை. இப்படி எத்தனையோ அவனைப் பற்றிச் சொல்லிக்கொண்டு போகலாம்.

 

அவனுடைய குணத்துக்கு அவனுடைய கூட்டணி செல்லமாக வைத்த பெயர் ‘வைல்ட் ஃபயர்’ அது அவனுக்கு மிக மிகப் பொருத்தமான பெயரே.

 

ஒன்றை முடிவு செய்தால் அது கடவுளாகவே இருந்தாலும், அவனை நிறுத்தவும் முடியாது அடக்கவும் முடியாது. கொடுக்கப்பட்ட காரியத்தைக் காட்டுத் தீப்போல் வேகமாகச் செயற்பட்டு முடித்துக் கொடுக்கும் பாங்கு யாரிடமும் பார்க்க முடியாதது. இடையில் தடையாக எது வந்தாலும், அவனுடைய சூரசம்காரத்தில் பொசுங்கிப்போய்விடும். அதனால் அவனுக்கு எதிரிகளும் அதிகம். அவன் எடுத்த பதக்கங்களும் அதிகம். அதனாலேயே அவனிடம் ஒரு வேலை கொடுப்பதாக இருந்தால், அதற்குப் பல முறை சிந்தித்தே கொடுப்பார்கள். ஏனெனில் கொடுக்கப்பட்டால் அதை இடையில் நிறுத்தவும் முடியாது, அதை மீளப்பெறவும் இயலாது.

 

அப்படிப் பட்டவனை… மேலிடம் அழைக்கிறது என்றால்… நிச்சயமாக அது சாதாரணமானதாக இருக்காது என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

 

அதை அங்கிருந்த அவனுடைய சகாக்கள் அனைவரும் புரிந்து கொள்ள, வைல்ட் ஃபயரின் முன்பாகத் தமது கரத்தை முஷ்டியாக்கி, “தெயர் யு கோ…” என்றவாறு அவன் முன் நீட்ட அதை ஏற்றுக்கொண்டவனாகத் தன் முஷ்டியால் குத்திவிட்டு, அவர்களின் வாழ்த்தை பெற்றுக்கொண்டு தலையை மட்டும் அசைத்து உள்ளே சென்று, தொலைபேசியை எடுத்தான்.

 

மறு முனையில் அவனுடைய ஐடி இலக்கம் கேட்கப்பட்டது.

 

உடனேயே அவன் கூற, மறுபக்கம் உடனே சரிபார்க்கப் பட்டது.

 

“ஓக்கே… கமான்டர்… உங்களுக்காக நாங்கள் ஒரு முன்னுரிமைப் பணி வைத்திருக்கிறோம். அதைப் பிசகின்றி முடித்துக்கொடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

 

“ஷூவர்  … என்ன செய்யவேண்டும்…” என்றபோதே, தன் வாழ்வின் அடுத்த சுவாரசிய நிமிடங்கள் தொடங்கிவிட்டன என்பதை உணர்ந்துகொண்டவனாக நிமிர்ந்து நின்றான். கூடவே முகத்தில் மெல்லிய… மிக மெல்லிய மலர்ச்சி நீண்ட நாட்களுக்குப் பிறகு தோன்றி மறைந்தது.

 

“ஷார்ப் நோர்சைக் காணவில்லை…” என்றதும் ஃபயர் கொஞ்ச நேரம் அமைதி காத்தான்.

 

“எப்போது…”

 

“இரண்டு கிழமைகளுக்கு முன்பு…”

 

“எப்போது கண்டுபிடிக்கப் பட்டது…”

 

“இப்போதுதான்… சற்று நெரத்திற்கு முன்பு”

 

“இதுவரை காலமும் என்ன செய்தீர்கள்” சுள் என்று கேட்டவனின் முகம் பாறையாக இறுகிப்போயிருந்தது. இந்த இரண்டு கிழமைகளுக்குள்ளும் என்னென்னவோ நடந்திருக்கலாம்.

 

“இப்போதுதான் நம்மிடம் இருக்கும் ஷார்ப் நோர்ஸ் நகல் என்பது தெரிந்தது…’ என்றார் அந்த மேலதிகாரி தயக்கமாக. அவருக்குத்தான் ஃபயரைப் பற்றி நன்கு தெரியுமே… வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்னும் ரகம். கோபம் வந்தால் அடக்குவது சிரமம்.

 

“இட்ஸ் டூ லேட்… மேஜர்” என்றான் அவன் அடக்கி வைத்த சினத்துடன்.

 

“யெஸ் ஐ நோ… பட்… அது இன்னும் இறந்தே கிடக்கிறது… எந்த நேரமும் உயிர்ப்பிக்கப்படலாம்… வி நீட் டு  ஃபைன்ட் இட் சூன். வி டோன்ட் ஹாவ் எனி எக்ஸ்ட்ரா மினிட்ஸ்… நாங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால், அதன் பாதிப்பு பாரதூரமானதாக இருக்கும்…”

 

“புரிகிறது… நான் முயற்சி செய்கிறேன் அன்ட் ஐ வில் ட்ரை மை பெஸ்ட்… டீட்டெய்ல்ஸ்…?

 

“உங்களுடைய இரகசிய மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது…”

 

“எனித்திங் எல்ஸ்…”

 

“நத்திங் எல்ஸ்… கமான்டர்… எங்களுக்கு உங்கள்மேல் முழு நம்பிக்கை இருக்கிறது… பட் ப்ளீஸ்… டோன்ட் கோ எனி எக்ஸ்ட்ரீம்…” என்றார் மேஜர் எச்சரிப்பது போல.

 

“அது என் கையில் இல்லை…” என்றவன், தொலைபேசியை அணைத்து வைக்க, மறுபக்கம் நிச்சயமாக, அவனுக்குக் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை விழுந்துகொண்டிருக்கும் என்று நினைத்தவனின் உதடுகளில் மெல்லிய நகைப்பு வந்து மறைந்தது.

 

வேகமாக வந்தவன் தன் மடிக்கணணியை திறந்து ரகசிய மின்னஞ்சலை பரிசோதித்தான்.

 

அதில் வெளியாகியிருந்த ஒவ்வொரு செய்தியும் அவனுடைய  மூளையின் ஒவ்வொரு செல்லிலும் அழுத்தமாகப் பதிவாக, அடுத்து அந்த மின்னஞ்சலை முற்று முழுதாக அழித்துவிட்டுக் கணினியை மூடினான்.

 

மூடிவிட்டுத் திரும்பியவனின் எதிரில் டேவிட்சன்.

 

காதிலே இயர் பில்லரை அடைந்து கொண்டிருந்தான். அவனுக்கு இது ஒரு பிரச்சனை. குளிர் காலம் தொடங்கும் நேரத்தில் காதில் பெரும் வலி தொட்கி விடும். மிகவும் சிரமப்படுவான். சில நாட்கள் இந்தக் காது வலியால் வைத்திய சாலையில் கூட அனுமதிக்கப்பட்டிருக்கிறான். இப்போது கூட அவனுடைய முகத்தில் வலியின் வேதனை தெரிந்தது. முகம் வியர்த்திருந்தது.

 

“என்ன டேவிட்சன்… இஸ் எனி திங் ராங்?” என்று கேட்டான் ஃபயர் அக்கறையாக.

 

“நோ கேர்னல்… வழமை போலத்தான். நேற்று சற்றுக் குளிரைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன். அது தான்… இப்போ… கொஞ்சம் வலியாக இருக்கிறது… பட்…  ஐ வில் பி ஓக்கே…” என்று புன்னகையுடன் கூறியவனின் தோளில் தட்டிக் கொடுத்து எழுந்தவனிடம்,

 

“எனிதிங்க் சீரியஸ்… உங்களை மேஜர் அழைத்தாரே…” என்றான் யோசனையாக.

 

“ஓ… நத்திங் மச்… லீவு கேட்டிருந்தேன்… இப்போதுதான் அதற்குச் சம்மதித்திருக்கிறார்கள்…” என்றுவிட்டுத் திரும்பியவனை வாய் பிளக்கப் பார்த்துக்கொண்டிருந்தான் டேவிட்சன் சேவியர்.

 

“வட்… ஃபயர் லீவ் கேட்டிருந்தானா? இன்று மழை, அதுவும் அடை மழைதான் பெய்யப்போகிறது…” என்று அதிர்ந்து திகைத்தவாறு, வெளியே சென்றுகொண்டிருந்தவனையே நம்பாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

(1)

 

அதுவரை நேரமும் மழையைப் பொழிந்துகொண்டிருந்த கார்மேகங்களுக்கு ஓய்வுநேரமோ? சற்றுத் தன் அழுகையை நிறுத்திவிட்டு, தமது செயல்பாட்டால் பூமி என்ன செய்கிறது என்று கீழ்நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்த நேரம். உங்கள் வேலைதான் முடிந்துவிட்டதே… இனியாவது எனக்கு இடம் விடுங்கள் என்று சூரியக் கதிர்கள் கிடைத்த இடைவெளிக்குள் தமது கரங்களைச் செலுத்த முயல, அந்த விடாக்கண்டனான கார்மேகங்கள் தமது வேலை இன்னும் முடியவில்லை என்பது போலப் பிடிவாதமாக அவனை மறைத்துச் சத்தியாகிரகம் செய்துகொண்டிருந்தவாறு மேலும் மழையைப் பொழியத் தொடங்கிய வேளை.

 

ஈரமாகிவிட்ட தரையில் சப்பாத்துக் கால் பதியப் பொழிந்த மழையை எதிர்த்து ஓடிவந்தாள் அந்த தேவதை. நனைந்து விட்ட உடலை மறைக்க முடியாது பேருந்து தரிப்பிடத்திற்குள் நுழைந்தவள் பிடித்திருந்த குடையை விலக்காது அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள். அந்த நேரம் குடையை விட்டு அழகிய வதனம் வெளியே தெரிய, அடடே வானில் இருக்க வேண்டிய சந்திரன் இடம் மாறித் தரையில் விழுந்துவிட்டதோ…? அதனால்தான் வானம் அழுகிறதோ?

 

அடேங்கப்பா… பிரம்மன் படைக்கும் போதே மொத்த அழகையும் அவளுக்குக் குத்தகைக்குக் கொடுத்துவிட்டான் போலும். பெரிய நீண்ட விழிகளில், துரு துரு வென்று அலைந்து திரிந்த கருமணிகள். சற்று மேலே, கரிய வில் போன்ற புருவங்கள், நடுவிலே சிறிய கருஞ்சாந்துப் பொட்டு. மெல்லிய கூரிய மூக்கில், வெண் கல் பதித்த சிறிய ஒற்றைக்கல் மூக்குத்தி. துடித்த செவ்விய உதடுகளில், மழை பட்டதால், அது நனைந்து, மேலும் இதழ்களைச் சிவப்பாக்க, சங்குக் கழுத்துக்குக் கீழே, பெண்மையின் திரண்ட மென்மை. கைப்பிடி இடையின் கீழே திரண்டு செழித்திருந்ததால், அது அவள் இடையை மேலும் குறுக்கிக் காட்ட, அவள் மேனி அழகைப் பார்க்கும் ஆண்கள் சொக்கித்தான் போவார்கள்.

 

சுண்டினால் சிவக்கும் அவள் நிறத்திற்கு மெல்லிய அழுத்தம் கொடுத்தாலே கண்டிப் போகும் மென்மையான தோல்களுடன், வானிலிருந்து வழுக்கிவிழுந்த தேவதையென வந்து நின்றவளைக் காண்பதற்கு நல்லவேளை மன்மதன் அங்கே இருக்கவில்லை. இருந்திருந்தால், ரதிக்குப் பதிலாக, அவள் அவனருகே இருந்திருப்பாள். ஆனாலும் இத்தனை அழகையும், மொத்தமாய்க் கொண்டிருக்கிறோம் என்கின்ற சிறு எண்ணமும் இல்லாமல், நின்றிருந்தவளின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. இடைவிடாது பெய்த மழையில் உதடுகளைச் சுழித்திருந்தது கூட, அவள் அழகை மேலும் தூக்கியே காட்டியது.

 

எவ்வளவு கவனமாகக் குடைக்குள் தன்னைப் புதைக்க முயன்றும் முடியாமல், மழையின் வேகத்திற்கும், அது பொழிந்த கனத்திற்கும் ஈடு கொடுக்க முடியாமல் நனைந்து விட்டிருந்தாள் அந்தக் கண்ணழகி.

 

இன்று மட்டும் பரீட்சை இல்லை என்றால் அவள் நிச்சயமாக இந்த மழைக்குள் கிளம்பியே இருக்கமாட்டாள். பல்கலைக்கழகத்துக்கும் ஒரு பாய், மழைக்கும் ஒரு பாய் என்று வீட்டிலேயே முடங்கியிருந்திருப்பாள். பேசாமல் பரீட்சை நேரத்தில் அவள் தோழி அனுராதாவின் விடுதியில் தங்கியிருந்திருக்கலாம் என்கிற எண்ணம் காலம் கடந்து தோன்றியது. அவளும் தங்கச் சொல்லிச் சொன்னாள்தான். இவள்தான் அலட்சியமாக வேண்டாம் என்று விட்டுவிட்டாள்.

 

யாருக்குத் தெரியும் இப்படி ஜூன் மாதத்தில் திடீர் என்று ‘தண்டர் ஸ்டோம்’ காலைவாரும் என்று.

 

எரிச்சலுடன் தன் குடையை மடித்து உதறிவிட்டுத் தன்னைக் குனிந்து பார்த்தாள்.

 

அணிந்திருந்த டெனிம் ஸ்கேர்ட் ஈரத்தை நன்றாக உரிஞ்சிவைத்திருந்து. அது எகிறியிருந்த கடுப்பு என்கிற நெருப்புக்கு எண்ணெய் வார்த்தது. மேலே அணிந்திருந்த வெள்ளை டாப்ஸ் மார்புக்குக் கீழ் வரை நனைந்திருந்தது.

 

நல்ல வேளை அவள் உள்ளே ஒரு பெனியன் அணிந்திருந்ததால் தப்பித்தாள். இல்லை என்றால்… அவள் உடல் அழகை எல்லோருக்கும் இலவசமாகத் தண்டோராப் போட்டுக் காட்டவேண்டி வந்திருக்கும். இருந்தாலும் சற்றுக் கூச்சம் எழவே செய்தது. தன்னை யாராவது தப்பாகப் பார்க்கிறார்களா என்று சங்கடத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். அவரவர்களுக்கு ஆயிரம் வேலைகள். இவளையா பார்க்கப் போகிறார்கள்… அவர்களும் அவளைப்போலத்தான் பேருந்து வருகிறதா என்று எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

 

“சே… இந்த மழையில் நாம் கிளம்பியது பெரும் பிழை போல இருக்கிறது… பேசாமல் வீட்டில் தங்கியிருக்கலாம்…” எனகிற ஒலி வரத் திரும்பிப் பார்த்தாள். இரு வெள்ளையர்கள் பேசிக்கொண்டிருந்தனர். சற்றுத் தள்ளி ஒரு கறுபினத்தவனும், இந்தியனும் கையிலிருந்த கைப்பேசியை வைத்து எதையோ கிண்டிக்கொண்டிருந்தனர். பார்வையாலேயே அவர்களைத் தழுவிவிட்டுத் திரும்பியவளுக்கு ‘அவர்கள் சொன்னதுபோலச் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்…’ என்கிற ஏக்கம் தோன்ற, வானத்தைப் அண்ணாந்து பார்த்தாள். அது இன்னும் இருட்டிக்கொண்டு போனதே தவிர சற்றும் வெளிச்சம் தெரிவதாய் இல்லை. இப்போது பேருந்து வருமா வராதா?. எரிச்சலுடன் கைபேசியை எடுத்து தன் தோழியுடன் தொடர்பு கொள்ள முயன்றாள்.

 

அது நாட் ரீச்சபிள் என்று வந்தது.

 

“ப்ச்… இது வேறு நேரம் காலமில்லாமல்…” என்று முணுமுணுத்தவள், சற்று முன்னால் சென்று பேருந்து தொலைவில் வருகிறதா என்று எட்டிப் பார்த்தாள்.

 

பொழிந்த மழைதான் அவளைப் பார்த்துச் சிரித்ததேயன்றித் தெரு கண்ணுக்குத் தெரியவேயில்லை.

 

எரிச்சலுடன் தன் கரத்தில் கட்டியிருந்த சற்றுப் பெரிய அவள் வயதுக்கும் பொருத்தமில்லாத மிக்கிமவுஸ் கைக் கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தாள். மணி ஒன்பது முப்பது என்றது. அதில் பட்டிருந்த ஈரத்தை அவசரமாகத் துடைத்துவிட்டவள், பின் ஆவலுடன் முகம் கனிய அதை வருடிக் கொடுத்தாள். அவளுடைய நண்பன் ரகு பிறந்தநாள் பரிசாகக் கொடுத்த கடிகாரம் அது. அதற்குப் பிறகு கீ பென்டனும் கொடுத்திருந்தான். அவனை நினைக்கும் போதே இவள் முகம் கனிந்து போனது. அவளுக்கிருக்கும் ஒரே ஒரு நண்பன். அவளுடைய தாய் தந்தையை மொத்தமாகப் பறிகொடுத்த போது, அவளைத் தாங்கிக்கொண்டவன் அவன்தான். பெருமூச்சுடன் நேரத்தைப் பார்த்தவளுக்கு, இன்னும் அரை மணி நேரத்தில் பல்கலைக் கழகம் போயாகவேண்டும் என்பது உறைத்தது. இல்லை என்றால் அங்கே போயும் பயனில்லை. இப்போது என்ன செய்வது? பேருந்து வருமா வராதா?” என்று எண்ணியவள் மீண்டும் எட்டிப் பார்த்தாள்.

 

தூரத்தில் இரண்டு வெளிச்சங்கள் தென் பட, உள்ளம் துள்ளியது.

 

‘பேருந்து வந்துவிட்டது. அப்பாடா…’ என்று தன்னையும் மறந்து குதித்தவள், பின் நிம்மதிப் பெருமூச்சுடன் பேருந்து வந்து நிற்கும் வரைக்கும் காத்திருந்தாள். அது அருகே வந்ததும், பாய்ந்து ஏறியவள் உள்ளே பார்த்தாள். நல்லவேளை பேருந்தில் அதிக கூட்டம் இருக்கவில்லை. நான்கைந்து பேர்தான் இருந்தார்கள். அதனால் நிறைய இருக்கைகள் கலியாக இருந்தன. இதுவே சாதாரண நாட்கள் என்றால், மூச்சு முட்டியிருக்கும்.

நிம்மதியுடன் அருகே இருந்த இருக்கையில் தொப் என்று அமர்ந்தவளுக்குக் குளிர்ந்தது.

 

மடித்த குடையை அருகேயிருந்த இருக்கையில் சாத்தியவள் நன்றாக சாய்ந்தமர்ந்து விநாடி கூட ஆகவில்லை,

 

“ஹலோ மாடம்…” என்று அழுத்தமான, கரகரத்த, ஆழமான, தெளிந்த குரல் இவள் செவிப்பறையை மோதியது. ஏனோ அந்தக் குரலிலொரு கணம் உடல் சிலிர்த்து மயங்கிப் போனாள் அந்த தேவதை.

 

‘என்ன குரலடா சாமி இது… எங்காவது வானொலியில் வேலைசெய்கிறானோ… இப்படிக் குரலை இதுவரை நான் கேட்டதேயில்லை… எய்டன் டேர்னர் (Aidan Turner) க்ரிஸ் ஹேம்ஸ்வோர்த் (Chris hemsworth) அவர்களின் குரல்கூட இவன் குரலுக்கு இணையாக இருக்காது போல் இருக்கிறதே’ என்று திகைத்தவள், ஆவலுடன் திரும்பி அந்த குரலுக்குரியவனைப் பார்க்க அடுத்த கணம் உலகம் அப்படியே அந்தரத்தில் நின்று போனது.

 

முன் பின் பார்த்திராத அவனுக்கு, வயது முப்பதிற்குள்தான் இருக்கும். ஆனாலும் அந்தக் குரல் அவனுக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. அவனுக்கு மட்டும்தான் பொருத்தமாக இருக்கும். ஆறடி நான்கங்குலத்திற்கு மேல் இருப்பான் என்பது நின்றிருந்த தோரனையில் நன்கு தெரிந்தது. அவன் அணிந்திருந்த கோர்ட் டை அனைத்தும் டிசைனர்ஸ்… பார்க்கும்போதே அதன் விலை புரிந்தது. இவனெல்லாம் ஃபெராரியில் போகவேண்டியவன், இவனுக்குப் பேருந்தில் என்ன வேலை? என்று ஒரு பக்க சிந்தனை ஓடினாலும், அவன் கம்பீரத்தில் தன்னை மறந்து ஒரு சாதாரண பெண்ணாக, அவனை மேலும் விழிகளால் குடையத் தொடங்கினாள்.

 

கறுப்புக்கும் பொது நிறத்திற்கும் இடையில் இருக்குமே ஒரு நிறம். அந்த நிறம். ஆனால் அது அவனுடைய கம்பீரத்தைக்கூட்டிக் காட்டியதேயன்றி, சற்றும் குறைத்துக் காட்டவில்லை.

 

அடேங்கப்பா… இவை என்ன கண்களா… அவன், அவளைக் கோபமாகவும் எரிச்சலாகவும் பார்க்கிறான் என்பதைக் கூடக் கவனத்தில் கொள்ளாது, அதைப் புறந்தள்ளிவிட்டு, அவன் விழிகளைப் பார்க்க முயன்றவளுக்கு, ஏனோ, ஒரு விநாடிக்கும்மேல் அந்த தகிக்கும் கூரிய விழிகளைத் தொடர்ந்தும் பார்க்கமுடியவில்லை. அந்த விழிகள் காரணமின்றியே அவளை நிலைகுலையச் செய்ததால் தன் விழிகளைத் தாழ்த்தினாலும் அந்த விழிகளைப் பார்க்கவேண்டுமே என்று மனம் பரபரத்தது. ஏனோ அவன் பார்வை, அவளுடைய விழிகளுக்குள்ளாக நுழைந்து, அவளுடைய மனதில் அழுத்தியிருக்கும் பொக்கிஷங்கள் ஒவ்வொன்றையும், வெளியே எடுத்துவிடும் என்பதுபோலத் துளைத்துக் கொண்டிருக்க, அவனைப் பார்க்காமலே, அவனுடைய விழிகளின் ஊடுருவலை அவளால் நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்தது.

 

மெதுவாகத் தரையைப் பார்த்த விழிகளை மேல் கொண்டு சென்று அவனுடைய நாசியில் கவனத்தைச் செலுத்தினாள் அந்தப் பேதை.

 

அவனுடைய நாசி  கல்லில் செதுக்கியதோ… இல்லை கிரேக்கச் சிலையிலிருந்து பிய்த்து எடுத்து வைத்துக்கொண்டானோ… எவ்வளவு கூர்மை? அவனுடைய விழிகள் கூர்மையா? இல்லை மூக்கு கூர்மையா என்கிற ஆராய்ச்சியில் மனம் இறங்கத் தொடங்க, ‘இது இப்போது ரொம்ப அவசியம்…’ என்று தன்னையே கடிந்தவள், அவனுடைய உதடுகளைப் பார்த்தாள்.

 

இரு உதடுகளும் ஒன்றையொன்று பிரியாமல் அழுந்த மூடியிருந்தது. ‘தம்பி சிரிப்பதற்குப் பணம் கேட்பாரோ… கொஞ்சம் சிரிப்பா…’ என்று ஆவலாகவே மனதிற்குள் நினைத்தவதள், அந்த உதடுகள் எதையோ அடக்கப் பெரும் பாடு படுபவைபோல, மெல்லியதாக நடுங்கிக்கொண்டிருக்க, ‘பயப்புள்ள ஏன் இஞ்சி தின்ற குரங்காட்டம்.. சே.. இவன் குரங்கு மாதிரியா இருக்கிறான்… நீயும் உன் உவமையும்… எதை இவனுக்கு உவமையாகச் சொல்லலாம்…’ என்று எண்ணியவளுக்கு, அவளுடன் ஒப்பிட எந்த ஜந்துவும் அவசரத்திற்கு நினைவில் வரவில்லை.

 

அதனால், ‘ஏன் இவன் இஞ்சி தின்ற எதுவோ போல இப்படி இருக்கிறான்?’ என்று புரியாமல் யோசித்தவள், ஹலிவூட் திரைப்பட  இயக்குநர்கள்  விழிகளுக்கு அவன் இன்னும் தட்டுப்படவில்லை போலும்… அப்படித் தட்டுப்பட்டிருந்தால், அடுத்த படத்திற்கு வில்லன் அவன்தான்…’ என்று எண்ணியவளின் சிந்தனையைக் குலைப்பது போல, அவனுடைய

 

“ஹலோ மிஸ்…” என்கிற கடினக் குரல் நினைவுலகிற்குக் கொண்டு வந்தது.

 

மீண்டும் அவன் குரலில் மயங்கியவள் முழுவதுமாக மயக்கத்திலிருந்து விடுபடாதவளாக, தன்னை மறந்து

 

“சிவார்ப்பனா…” என்று தன் பெயரை சொல்ல வந்தவளுக்கு, எரிச்சலுடன் ஏறியிறங்கிய அவன் புருவத்தைக் கண்டதும் முழுவதுமாகத் தன் நினைவுக்கு வந்தாள் அந்தக் கோதை. அவளுக்குத் தன்னை எண்ணியே ஆச்சரியமாக இருந்தது. யாரோ ஊர்ப் பெயர் தெரியாத ஒருவனுக்கு அவளையும் மீறிப் பெயரைக் கூறத் தலைப்பட்டாளே… அவன் கேட்டானா என்ன?’ தன் மீதே எரிச்சல் வர,

 

“யெஸ் மிஸ்டர்… வட் கான் ஐ டு ஃபோர் யு?” என்றாள் தான் அசடுவழிந்ததைச், சமாளிக்கும் முகமாக.

 

“ஒரு மண்ணும் வேண்டாம்… உங்கள் குடையை எடுத்துக் கொஞ்சம் அந்தப் பக்கம் வைக்கிறீர்களா? அதில் வழிகிற தண்ணீர் என் பையின் மீது கொட்டுகிறது…” என்றான் அவன் தமிழில் அதுவும் தன் எரிச்சலை மறைக்காத குரலில். ஆனால் அவளோ,

 

“ஐ… நீங்கள் தமிழா… நானும்தான்… எங்கள்…” என்று அவள் தன்னை மறந்து எதையோ சொல்லப் போக,

 

“எக்ஸ்கியூஸ் மீ… மாம்… வில் யு ப்ளீஸ் ஷட் அப் அன்ட் டேக் யுவர் டாம்… அம்ப்ரளா?” என்று அவன் கூற அவன் கூறிய விதத்தில் ஒரு கணம் ஆடித்தான் போனாள்.

 

அவன் குரலை உயர்த்தவில்லை… நெற்றி சுருங்கவில்லை, உதடுகளில் கூட கோபம் தெரியவில்லை… ஆனால் அவனுடைய சீற்றத்தை அவனுடைய குரலும், கூடவே, அதை அவன் வெளிக்காட்டிய விதமும் நன்றாக எடுத்துக் காட்ட, உள்ளம் நடுங்கிப் போனாள்.

 

இருந்தாலும், அவனுடைய உதாசீனமும், எரிச்சலும் அவளுடைய தன்மானத்தைச் சீண்டிவிட்டது.

 

அவன் மேலிருந்த அபிப்பிராயம், ஊசி பட்ட பலூனாக உடைந்து போக, அங்கே கடும் சினம் வந்து உட்கார்ந்து கொண்டது.

 

‘பெரிய அப்பாடக்கர் என்கிற எண்ணமோ? அட பார்க்க… சுமாராக… சரி சரி… பார்க்க ஓரளவு பரவாயில்லாமல் இருக்கிறானே… பார்த்து வைப்போமே என்று எண்ணினால், ஏதோ பெரிய, இவன் போலப் பாய்கிறான்… புதுமனிதர்களிடம் எப்படிப் பேசவேண்டும் என்கிற ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாதவனிடம் எனக்கென்ன பேச்சு…? விவஸ்தை இல்லாதவன்… காட்டான்… மரமண்டை… எந்த நாட்டுப் புறத்திலிருந்து வந்தவனோ?…” என்று எண்ணியவள், இவன் சொல்லி நான் என்ன குடையை எடுப்பது போல அலட்சியமாகத் திரும்பிப் பார்த்தவளின் வாய் அவளையும் அறியாது பிளந்தது.

 

“அடக் கடவுளே…” என்று அதிர்ந்தவள், தன் முன்னால் புருவம் சுருங்க நின்றிருந்தவனைச் சங்கடத்துடன் ஏறிட்டுவிட்டு மீண்டும் குடையைப் பார்த்தாள்.

 

அவள் குடையை வைக்கும் அவசரத்தில், அதில் ஒரு பை இருந்ததைக் கவனிக்கவில்லை. தவறுதலாக அந்த ’கிங்காங்கின்’ பையின்மீது வைத்துவிட்டிருந்தாள். நல்ல வேளை அது லதர் பை. தப்பித்தது.

 

“ஐ ஆம் சாரி சார்… உங்கள் பையைக் கவனிக்கவில்லை…” என்றவாறு, தன் குடையை எடுத்து மறு பக்கமாக வைக்க, அலட்சியமாகத் தன் பையை எடுத்தவன், அதை ஒரு உதறு உதறிவிட்டு, அதில் வழிந்துகொண்டிருந்த ஈரத்தைத் தட்டிவிட்டான்.

 

ஏனோ தன் அஜாக்கிரதையால் தானே அவன் பை நனைந்தது என்கிற கழிவிரக்கம் தோன்ற வேகமாகத் தன் கைப்பையிலிருந்த கிளீனக்சை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

 

“இந்தாருங்கள் இதால் துடைத்துக் கொள்ளுங்கள்…” என்று அவள் கூற அவளை நிமிர்ந்து பார்த்தவன், அவளையும், அந்த டிஷ்யூவையும் மாறி மாறிப் பார்த்தான். பின் அலட்சியம் செய்தவனாக மீண்டும் தன் பையைத் தட்டத் தொடங்க,

 

“உங்களைத்தான்… இதை பிடியுங்கள்… இதால் துடையுங்கள். ஈரத்தை அப்படியே உறிஞ்சி எடுத்துவிடும்…” என்று வலியுறுத்த, அவளை எரிச்சலுடன் பார்த்தான் அவன்.

 

“உங்களிடம் நான் கேட்டேனா? தயவு செய்து உங்கள் வேலையை மட்டும் பார்க்கிறீர்களா?” என்று இறுக்கத்துடன் சொன்னவன் தன் எரிச்சல் மாறாதவனாக அவளுக்கு எதிர் புறத்திலிருந்த இருக்கையில் பையைப் போட்டுவிட்டு அதனருகே தொப்பென்று அமர்ந்தான்.

 

சிவார்ப்பண கொஞ்ச நேரம் என்ன பேசுவது என்று புரியாமல் அவனையே வெறித்தாள்.

 

‘பெரிய விசுவாமித்திரர் என்று நினைப்பு… கோபம் வந்ததும் சுட்டு எரிக்கும் விழி பார்க்க. இல்லை ஐயா ரிஷ்யசிருங்கரோ. பெண்களின் காற்றுப் பட்டாலே கற்புப் போவதற்கு. என்ன மனுசனோ… ஒரு பெண் அதுவும் அழகான பெண்… இறங்கிவந்து, மன்னிப்புக் கேட்டால் அதை ஏற்றுக் கொள்ளாமல்… இப்படியா நெருப்பில் விழுந்த உப்புக்கல் போல வெடிப்பார்கள்… இவன் வயிற்றில் இருக்கும்போது, இவனுடைய அம்மா நெருப்பையா தின்று தொலைத்தார்கள். சரியான சிடுமூஞ்சி. கடுவன் பூனை, தேவாங்கு… காட்டான்… ராட்சசன் என்று பெரும் கோபத்துடன் மனதிற்குள் திட்டியவள், பின்பு அவனைத் திட்டுவதால் ஏதாவது நல்லது நடக்கப் போகிறதா என்ன? இல்லையே… பிறகு ஏன் வீணாக அவனைத் திட்டி என் நேரத்தைக் கெடுக்கவேண்டும் என்று எண்ணியவளாக, “எக்கோடும் கெட்டு ஒழி…’ என்பது போலத் தன் கரத்திலிருந்த டிஷ்யூ பேப்பரை உள்ளே வைக்கும் போதுதான் கவனித்தாள். அவளுடைய டிஷ்யூ பேப்பரும் தண்ணீரில் நனைந்து ‘ஙே’ என்று அவளைப் பார்த்துக்கொண்டிருந்தது.

 

அப்போதுதான் ஏதோ புரிந்தவளாக அவசரமாகத் தன் பையைத் தூக்கிப் பார்த்தாள். அது அவளுடைய ஆடையை விட நனைந்து போயிருக்க, பதட்டத்துடன் தான் படிக்கும் புத்தகத்தை வெளியே எடுத்துப் பார்த்தவள், அதிர்ச்சியில் மீண்டும் தன் வாயைப் பிளந்தாள்.

 

அவளுடைய புத்தகம், அதுவும் 250 டாலர் புத்தகம், மழையில் நனைந்து தாள்கள் ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று ஒட்டி, இவளைப் பார்த்து, சிரித்துக்கொண்டிருந்தது.

 

“ஓ  காட்…” என்று தன்னை மறந்து கத்தியவள் தன் கையிலிருந்த நனைந்த டிஷ்யு பேப்பரால் தன் புத்தகத்தில் படிந்திருந்த ஈரத்தைத் துடைக்கப் போக, அது, அந்தப் புத்தகத்துடன் ஒட்டி நின்று இவளைப் பார்த்து முறைத்தது.

 

அவளுக்குத் தன் மீதும், தன் நிலைமை மீதும் கோபம் கோபமாக வந்தது.

 

“பானும்மா அப்போதே சொன்னார்கள், உனக்கு அட்டமத்தில் வியாழன், கவனமாக இரு என்று… வாரா வாரம் வருகிற வியாழன்தானே… அது அட்டமத்தில் வந்தால் என்ன, தசமத்தில் வந்தால் என்ன என்று கிண்டலடித்திருந்தாள். இப்போது நிலைமையைப் பார்த்தால், வியாழ பகவான் அட்டமத்தில், கொங்கிரீட் இருக்கை போட்டு உட்கார்ந்துவிட்டார் போலத்தோன்றியது.

 

“மிஸ்டர் வியாழ பகவான்… வை திஸ் கொலை வெறி… இன்றைய வருடத்திற்கான இறுதிப் பரீட்சையை முடிக்கும் வரை பொறுத்துக்கொள்ளக் கூடாதா?” என்று சாடிக்கொண்டிருக்கும் போதே, அது வியாழ பகவானுக்குக் கேட்டதோ?

 

ஒரு ஆற்றுக்குக் கட்டிய பாலத்தினூடாகப் போய்க்கொண்டிருந்த பேருந்து, திடீர் என்று “படார்…” என்கிற பெரும் சத்தத்துடன் ஒரு குலுங்கு குலுங்கிப் பின் அசைந்து வேகமாகச் சுழன்று, அங்கிருந்த இரும்பு சுவரில் பலமாக மோதியவாறு மறுபக்கம் சரியத் தொடங்கியது.

 

விழப்போகிறோம் என்பதைப் புரிந்துகொண்ட சிவார்ப்பணா,

 

“ஓ நோ…” என்று பதறியவாறு தலைக்கு மேலிருந்த கம்பியை இறுகப் பற்றி, விழாதிருக்க எவ்வளவுதான் முயன்றும், சரிந்த வேகத்திற்கு நிலைப்படுத்த முடியாதவளாக, தனக்கு முன்புறமாக அமர்ந்திருந்த அந்த கிங்காங்கின் மீது முழுவதுமாக விழுந்தாள்.

விழுந்த வேகத்தில் அவளுடைய தலை பேருந்தின் இருக்கையில் அமைத்திருந்த இரும்புக் கம்பியில் பலமாக மோதி பின் அவன் தலையுடன் முட்ட, அவனுடைய முகம் கச்சிதமாக அவள் மார்பில் தஞ்சம் புகுந்திருந்தது.

 

அப்படியே, பேருந்து சரிய, அந்தச் சரிவிற்கேற்ப, இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு சுழன்று நச்சென்று கீழே விழுந்தனர்.

 

(2)

 

கொஞ்ச நேரம் அங்கே என்ன நடந்தது என்பது எவருக்குமே புரியவில்லை. பேருந்து முழுவதும் புழுதியும் புகையும் நிரம்பியிருந்தன. திடீர் என்று ஏற்பட்ட விபத்தில், பேச்சு மூச்சின்றி அனைவரும் ஸ்தம்பித்திருந்தது சில கணங்களே, அடுத்து அனைவருக்கும் நிலைமை புரிய, பெரும் கூக்குரல்களுடன் விழுந்திருந்தவர்கள் எழ முயன்றுகொண்டிருந்தனர்.

 

தன் மீது பஞ்சுப்போதியென விழுந்துகிடந்தவளை தன்னோடு இறுக அணைத்துக்கொண்டிருந்தவன் பின் அவளுடைய தோள்களிலே கரத்தை வைத்து, தன்னிடமிருந்து பிரித்துத் தள்ள அவன் செய்த முயற்சிகள் எதுவும் பயனளிக்காமல் போக, எழ முடியாமல் அவன் அப்படியே கொஞ்ச நேரம், அவளைத் தாங்கியவாறு கிடந்தான்.

 

முதலாவதாக சுய நினைவு பெற்றவன் அந்த இளைஞன்தான். அவளுடைய நீண்ட கூந்தல், அவன் முகத்தை மறைத்திருக்க, அதை ஒதுக்கிவிட்டவாறு,

 

“ஹலோ மிஸ்… கான்யு கெட் அப்…?” என்றான் எரிச்சலையும் கோபத்தையும் மறைக்காத குரலில்.

 

முதலில் அவன் கூறுவது சிவார்ப்பணாவிற்குக் கேட்கவே இல்லை. அவள்தான் அடிபட்ட வேகத்தில் மயக்கத்திலிருந்தாளே.

 

“ஹலோ மிஸ்… உங்களைத்தான்…” என்று அவளைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டு, உலுப்பியவாறு அழைத்துப் பார்த்தான். அப்போதும் அவளிடம் சிறு அசைவும் இருக்கவில்லை. அப்படியே அவளுடன் சுழன்று திரும்ப, இப்போது அவள் கீழும் அவன் மேலுமாக இருந்தனர்.

 

நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான் அந்த இளைஞன். அவள் விழிகள் மூடிக்கிடந்தன. நெற்றி புடைத்திருந்தது.

 

அப்படியே அவள் தொடைகளின் இரு பக்கமும் தன் கால்களைப் போட்டு, வலது முழங்கால் தரையில் பதிந்திருக்கவும், இடது கால் மடிந்து, பாதம் தரையில் பதிந்திருக்குமாறும் அமர்ந்தவன், அவளை நோக்கிக் குனிந்தான்.

 

“ஹே… வேக்கப்…” என்று அவளுடைய கன்னத்தைத் தட்டிப் பார்த்தான்.

 

மூடியிருந்த விழிகளில் எந்த அசைவும் இருக்கவில்லை. யோசனையாக அவள் கழுத்தில் சுட்டு விரலையும் நடுவிரலையும் வைத்து நாடித்துடிப்பைப் பரீட்சித்துப் பார்த்தான். மெல்லியதாக அது துடிக்க, பெரும் நிம்மதியுடன் தன் தலையை அசைத்து வாயைக் குவித்துப் பெருமூச்சு விட்டவன், புடைத்திருந்த நெற்றியை அழுத்திப் பார்த்தான். வேறெங்காவது அடிபட்டிருக்கிறதா என்று நாடியைப் பற்றித் திருப்பித் திருப்பிப் பார்த்தான்.

 

அடுத்து அவளுடைய கழுத்து, மார்பின் பக்கப் பகுதி, விலா எலும்புகள்… என அழுத்திப் பார்த்து அவளிடமிருந்து ஏதாவது அசாதாரண அசைவு வருகிறதா என்று கவனித்தான். அவள் அமைதியாக இருக்க, அப்படியே அவளுடைய வயிற்றையும் அழுத்திப் பார்த்தான். பயப்படும்படி எதுவும் தெரியவில்லை என்றதும், அவனுடைய இறுக்கம் மெல்லத் தளர்ந்தது.

 

தொடைகள் முதல் கால் வரை அழுத்தி வந்தவன், அவள் அணிந்திருந்த டெனிம் பாவாடை அவனுக்கு இடைஞ்சலாக இருக்க, அதைச் சற்று ஒதுக்கிவிட்டு சப்பாத்திற்கு மேலாக இரு கணுக்கால்களையும் கவனமாக ஆராய்ந்தான். அவளுடைய சப்பாத்தைக் கழற்றி எழுந்தவன்  பாதங்களில், ஏதாவது வீக்கம் இருக்கிறதா என்று பார்த்தான்.

 

அசாதாரணமாக எதுவும் தெரியவில்லை. நிம்மதி எழுந்தது அவனுக்கு.

 

அவன்தான் பேருந்து சரிய முதலே அடுத்து, என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே ஊகித்து, அவள் தன் மீதுவிழத் தொடங்கியதும், தயாராகித் தன்னோடு பற்றி இறுக்கி, அவள் தலையின் பின்புறம் அடிபடாதவாறு, தன்னுடைய பெரிய கரத்தைத் தலைக்குக் கவசமாகிப் பிடித்திருந்தானே. மீண்டும் அவள் கன்னத்தைத் தட்டி,

 

“ஹலோ மிஸ்… டிட் யு ஹியர் மி… ஹலோ…” என்று அவள் வயிற்றில் கரம் பதித்து அசைத்துப் பார்த்தான்.

 

இப்போது அவள் புருவங்கள் மெலியதாக அசைய மெதுவாக விழிகளைத் திறந்தாள்.

 

திறந்தவளுக்கு முதலில் மங்கலாகத் தெரிந்தது அந்த கிங்காங்தான். பின் தன் விழிகளைச் சிமிட்டி உற்றுப் பார்க்க, இப்போது அந்தக் கிங்காங்கின் முகம் சற்றுத் தெளிவாகத் தெரிந்தது.

தலை விண் விண் என்று தெறிக்க, அடிபட்ட இடத்தை மெதுவாக வருடிக்கொடுத்தவாறு,

 

“நான்… எங்கே இருக்கிறேன்…” என்றாள் குழப்பமாக.

 

“ம்… சொர்க்கத்தில்…” என்றான் இவன் எரிச்சலாக.

 

“வட்…” என்றவள் சடார் என்று எழுந்தமர, இவளுக்கு மேலும் தலை சுற்றத் தன் வலக்கரத்தின் உள்ளங்கையால், தலையைப் பற்றிக்கொண்டாள்.

 

எங்கே விழுந்துவிடுவாளோ என்று அஞ்சியவன் போல, அவளுடைய மேல் கரங்களில் தன் பெரிய அழுத்தமான கரங்களைப் பதித்தவன்,

 

“ஈசி… ஈசி… ஆர் யு ஓக்கே…” என்றான் அவன் சற்று இளக்கமாக.

 

“எ… என்னாச்சு…” என்றாள் சிவார்ப்பணா மீண்டும் பெரும் குழப்பத்துடன்.

 

“அதை இனித்தான் பார்க்கவேண்டும்… ஆர் யு ஓக்கே…” என்றான் மீண்டும்.

 

நெற்றி விண் விண் என்று வலிக்க, அதை வருடிக்கொடுத்தவாறு,

 

“ஐ திங்க் சோ…” என்றவளின் உடல் இப்போது குளிரிலும், பயத்திலும் நடுங்கத் தொடங்கியது. அதை உணர்ந்து உடனே அவன் தான் அணிந்திருந்த கோர்ட்டை வேகமாகக் கழற்றி, அவளுடைய தோளிலே போட்டவாறு,

 

“ஆர் யு ஷூவர்? நீ உன்னை சமாளித்துக் கொள்வாய் அல்லவா…” என்றான் இப்போது சற்றுப் புடைத்திருந்த காயத்தைப் பெரும் விரலால் வருடிக் கொடுத்தவாறு. கூடவே அவனுடைய குரலில் சிறு அக்கறையும் தெரிய,

 

அவள் ஆம் என்பது போலத் தலையை ஆட்டி எழ முயன்றாள். அவனோ அவளைத் தடுத்தவாறு,

 

“டோன்ட் மூவ்… ஜெஸ்ட் சிட் டவுன் ஃபோர் எ செக்…” என்று உத்தரவிட்டுவிட்டு, அதற்கு மேல் கவனிக்க ஒன்றுமில்லை என்பதைப் புரிந்துகொண்டவனாக, அவளை விட்டு விலகி எழுந்தான்.

எழுந்தவனின் விழிகள் தற்போது சிக்கியிருக்கும் சூழ்நிலையை ஆராயத் தொடங்கியது. ஆராய்ந்தவனின் புருவங்கள் நெரிந்தன. சற்று முன் நகர்ந்து ஜன்னலூடாக எட்டிப் பார்த்தான்.

 

பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்திருந்தது. விழுந்த வேகத்தில் ஒரு பக்கம் நசுங்கிப்போயிருந்தது.

 

நிச்சயமாக அந்தப்பக்கம் வெளியேற வாய்ப்பில்லை. மறு புறத்தைப் பார்த்தான்… பர்த்தவனின் முகத்தில் பெரும் யோசனை குடிகொண்டது.

 

அந்த நேரம் சிவார்ப்பண மெதுவாக அசைந்தாள். அசைந்தவளுக்கு அப்போதுதான் நடந்தவை முழுவதுமாக நினைவுக்கு வந்தது. பேருந்து சரிந்தது நினைவிற்குவந்தது. அந்தச் சிடு சிடு இளைஞனின் மீது விழுந்ததும் நினைவிற்கு வந்தது. கூடவே அவள் அடிபடாதவாறு அவன் தன்னோடு இறுகிப்பிடித்ததும் நினைவுக்கு வந்தது.

 

அந்த நேரத்தில் கூட அந்த அணைப்பைப் பாதுகாப்பாக உணர்ந்தாளே… அதன் பின்தான் அவளுக்கு எதுவும் நினைவில் இருக்கவில்லை.

 

‘சும்மாவே அவன் சாப்பாட்டிற்குப் பதிலாக செந்தணலைத்தான் தின்பான் போலிருக்கிறது. போதாதற்கு அவன் மீது விழுந்தும் வைத்துவிட்டாள். நல்லவேளை… அவன் எதுவும் திட்டவில்லை…’ சிரமப்பட்டு எழ முயன்றவளுக்குப் பேருந்து சரிந்திருப்பது அப்போதுதான் புரிந்தது.

 

நெற்றிவேறு விண் விண் என்று தெறிக்க, மீண்டும் தன் நெற்றியை வலது கரத்தால் பற்றி வருடிக் கொடுக்கும் போதுதான் அதிலிருந்த வீக்கம் தெரிந்தது. வலி பொறுக்க முடியாது, கரத்தால் தேய்த்து விட்டவாறே, எழ முயன்றவள், முடியாமல் மீண்டும் சரிந்தாள்.

 

சரிந்தவளிடம் விரைந்தவன்,

 

“ஹே… ஆர் யு ஓக்கே… மயக்கமாக இருக்கிறதா?” என்றான். ஆம் என்பது போல அவள் தலையாட்ட,

 

“லிசின்… நாம் இங்கிருந்து விரைவாக வெளியேறவேண்டும்… இங்கிருக்கிறவர்களைக் காப்பாற்ற வேண்டும்… அதற்கு உன்னுடைய உதவி வேண்டும்… சோ… ஸ்டெடி யுவர் செல்ஃப்…” என்று கீழே அமர்ந்திருந்தவளின் தோள்களில் தன் கரத்தைப் போட்டு வருடியவாறு கூற, அப்போதுதான் மற்றைய பயணிகளைப் பற்றிய எண்ணம் வந்தது. பயத்துடன் விழிகளைத் திருப்பி அவர்களைத் தேட, அவர்கள் ஆளுக்கொரு பக்கமாக விழுந்திருந்தனர்.

அவர்கள் விழுந்திருந்த நிலையைப் பார்க்கும் போதே பயமாக இருந்தது. இன்னுமா எழவில்லை… ஆனால் அவள் விழித்துவிட்டாளே… அதுவும் எப்படி எந்தச்சேதாரமும் இன்றித் தப்பினாள்…? எண்ணியவளுக்கு  அப்போதுதான் அதற்குரிய காரணமும் புரிந்தது.

 

அந்த கிங்காங்… மட்டும் முன்னால் அமர்ந்திருக்கவில்லை என்றால், இப்போது அவளும் எழுந்துகொள்ளாமல் பல கோணங்களில் உடல் வளைந்திருக்கக் குறைந்தது எங்காவது ஒரு பாகத்தை உடைத்து வைத்திருந்திருப்பாள்.

 

ஒருவாறு தன்னை சமப்படுத்தியவள், தன் வலியையும் பொருட்படுத்தாமல், மற்றைய பயணிகளுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்யவேண்டும் என்கிற வேகத்தில், தடுமாறியவாறு எழ, அவள் எழுவதற்கு உதவி செய்தவன், அவளை விட்டு மற்றைய பயணிகளை நோக்கிச் செல்லத் தொடங்கினான். இவளும், அந்த கிங்காங்கை பின்தொடர்ந்தாள்.

 

இருவரும் ஒன்றாக முன்னேறிச் செல்ல இப்போது பேருந்து மேலும் கீழுமாக மெதுவாக ஆடியது. கூடவே வழுக்கிக்கொண்டு சற்ற முன்னேறிச் சென்றது.

 

அதன் ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாது, சிவார்ப்பணா, தடுமாறிச் சரிய, அவளைப் பார்க்காமலே, எட்டி அவள் கரத்தைப் பற்றியவன், பின் திரும்பி அவளைப் பார்த்து,

 

“டோன்ட் மூவ்…” என்று எச்சரித்தான். அப்போதுதான் அவளும் சரியாகக் கவனித்தாள்.

 

அந்த பஸ்ஸின் அரைவாசிப் பகுதி பாலத்தையும் தாண்டி ஆற்றுப் பக்கமாக நீண்டிருந்தது.

 

இன்னும் கொஞ்சத் தூரம் சென்றால் அவர்கள் எல்லோரும் பரலோகம் போகவேண்டியதுதான். அதை நினைத்ததும், அத்தனை தைரியமும் காற்றோடு கரைந்து போக, முகம் அச்சத்தில் வெளுறிப் போனது.

 

‘ஓ… நோ… கடவுள் அத்தனை கொடூரமானவனா…? அவளுக்கு சொந்தமென்று சொல்ல யாருமேயில்லைதான்… ஆனால்… இப்படி அநாதையாகவா சாகப்போகிறாள்? அவளைக் காணாமல் பானுமா, ரகு, ராகவேந்தர் அங்கிள் எல்லோரும் பதறிப்போவார்களே… அதுவும் ரகு… அவளுக்கென்றிருக்கும் ஒரே ஒரு நண்பன். உற்ற நண்பன்… அவனிடம் கூட விடைபெறாமல் சாகப்போகிறாளா? தன்னைத் தாய்போலப் பார்த்துக்கொண்ட பானும்மா… அதை நினைத்ததும், இவளுடைய உதடுகள் அழுகையில் பிதுங்க, அவள் விசும்பலைக் கேட்ட அந்த கிங்காங், திரும்பிப் பார்த்தான்.

 

உதடுகள் பிதுக்கி, விழிகளில் கண்ணீர் மல்க நின்றிருந்தவளைப் புரியாமல் பார்த்து,

 

“வட்… எதற்கு அழுகிறாய்… ஆர் யு ஹேர்ட்…” என்றான் சற்று படபடப்புடன். அவளோ இல்லை என்று தலையை ஆட்ட,

 

“அப்போது எதற்கு அழுகிறாய்?” என்றான் அவன் சற்றுக் கேபாத்துடன்.

 

“நான்… வீட்டுக்குப் போகவேண்டும்…” என்றவளின் கன்னங்களில் கண்ணீர் தாரையாக வழிந்தது. கூடவே உதடுகளும் நடுங்கின.

 

இவன் பொறுமையற்ற மூச்சுடன் இவளை முறைத்தான்.

 

‘எந்த நிலையில் இருக்கிறோம், வர இருக்கும் ஆபத்து என்ன? இதைப் பற்றி கொஞ்சமாவது யோசிக்கிறாளா?” என்று எரிச்சலுடன் நினைத்தவன், முகத்தில் புன்னகையைத் தேக்கி,

 

“போகலாமே… இதோ… இப்படியே முன்னால் போனாய் என்றால், கதவிருக்கிறது… திறந்து வெளியே சென்றாயானால், பொடி நடையாக உன் வீட்டிற்குப் போய்விடலாம்…” என்று கடுப்புடன் கூற, சிவார்ப்பணா தன் அழுகையை நிறுத்தி அவனை முறைத்தாள்.

 

வீட்டிற்குப் போகும் வழியைக் கேட்டால், மோற்சத்திற்குப் போவதற்கல்லவா வழி சொல்கிறான்… எரிச்சலுடன் எதையோ கூற வர, தன் கரத்தை நீட்டி அவள் பேச்சைத் தடுத்தவன்,

 

“லிசின்… நமக்கு இப்போது நேரம் கிடையாது… ஏதுவாக இருந்தாலும், வெளியேறிய பிறகு பேசிக்கொள்ளலாம்…. என்ன புரிந்ததா?” என்றான் சற்றுக் கடுமையாக.

 

இவளும் ஆம் என்பது போலத் தலையசைத்து விட்டு, ஓரடி முன் நோக்கி வைக்க முயல, சடார் என்று அவளைத் திரும்பிப் பார்த்தவன், வலக்கரத்தின் சுண்டுவிரலும், நடுவிரலும் நீண்டிருக்க, மற்றைய விரல்கள் மடிந்தும் மடியாதவாறும் இருக்க, அவள் முன்பாக நீட்டி உயர்த்தித் தடுத்து,

 

“டோன்ட் மூவ்… ஸ்டே தெயர்… நான் சொல்லும் வரை எங்கும் அசையாதே…?” என்று கூறியவாறு ஒவ்வொரு அடியையும் மிகக் கவனமாக எடுத்து வைத்து, முன்னேறினான் அந்த கிங்காங்.

 

அந்த இடத்தில் மறுத்தேதும் கூற முடியாது, அவள் பயத்துடன் தலையாட்டி ஆணி அடித்ததுபோல அதிலேயே நின்றாலும், அவளுடைய விழிகள் அந்த கிங்காங்கை விட்டு விலகவேயில்லை.

 

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!