சேதி 12
*********
புள்ளினங்கள் கீச் கீச் என்று கத்திய படி இரைதேடி பறக்க, எங்கோ சேவல் கூவும் ஒலி கேட்டது. அதிகாலைக் காற்றில் புதிதாய் மலர்ந்த மலர்களில் இருந்து கிளம்பிய நறுமணம் மூச்சுப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வனராஜனின் நாசியில் நுழைந்து புத்துணர்ச்சி ஊட்ட சிறுமுறுவலுடன் பயிற்சியில் மூழ்கி இருந்தான் .
க்கீ க்கீ என்ற ஒலி கேட்டதும் பட்டென்று அவனின் விழிகள் திறந்தன…. குதூகலமாய் க்கீ க்கீ என்று கத்தியபடி பறந்த சென்று கொண்டிருந்தன கிளிகள்….பொன்னிற கதிர்களை விரியச் செய்து கொண்டிருந்த ஆதவனின் பொன்மஞ்சள் பின்னணியில் பசுங்கிளிகள்…..கூட்டமாய்.. ஆண் கிளிகள், தம் பேடுகளுடனும்(பெண் கிளிகள்) குஞ்சுகளுடனும் ….
பசுங்கிளிகளும்… பொன்னிற ஆதவனும், ஏன் பச்சை ஆடை கட்டி வந்த பொன்மஞ்சள் முகத்தை
நினைவூட்ட வேண்டும்!!!!! கைகளால் கண்களை அழுந்த தேய்த்துக் கொண்டான் வனராஜன்.
பயிற்சியின் போது கவனம் சிதறடிக்கும் நினைவுகளைத் தள்ள எண்ணியவனாய்..கண்கள் மூடி மூச்சை ஆழ உள் இழுத்தவனின் மூச்சுக்குள் இறங்கியது அருகிருந்த மல்லிகை கொடியில் இருந்து வந்த மயக்கும் வாசனை..அது தன் மேல் மோதிய பூங்கொடி மகளின் கூந்தலில் இருந்த வந்த வாசனையை நினைவு படுத்த ,”சட்” என்று உரைத்தவனாய் வஜ்ராசனத்தில் இருந்து எழுந்தான்.
மனமெல்லாம் புது உணர்வால் மலர்ந்து கிடக்க, எண்ணங்கள் வேண்டாமென அறிவுரை கூற , எந்த வழி செல்வது என் புரியாமல் கண்மூடி நின்றவன், யாரோ வரும் அரவம் கேட்டு மெல்ல விழி திறந்தான்.
“உனக்காக தானே ஜிம் தயார் செய்து வச்சுருக்கு ராஜன். மொட்டை மாடியில mat விரிச்சு என்ன பண்ற?”என்று கேட்டார் சௌந்தரராஜன்.
இனிய உணர்வில், தவிப்பில் இருந்தவன் சற்று நிதானித்துக் கொண்டவனாய்,
“அங்கே முடிச்சுட்டு தான் இங்கே வந்தேன் டாட் . எப்பவும் உள்ளுறுப்புகளை பலப்படுத்த பிராணாயாமம் பண்ணுவேன்..நீங்க ? த்ரெட்மில் கூட பயன் படுத்துறது இல்லை போல!!” எனவும்
“ம்ம்.தோட்டத்துல நடக்கிறது தான் மனசுக்கும் புத்துணர்ச்சியா இருக்கு. உடற்பயிற்சியும் அங்கேயே முடிச்சுருவேன்” என்றவர் அங்கிருந்த கல் இருக்கைகளில் அமர்ந்தார்.
“முடிச்சுட்டியா?” என்று வினவியவர், தனக்கு அருகில் இருந்த இடத்தைக் காட்ட, “இட்ஸ் ஓகே டாட், நீங்க பேசுங்க…” என்றவாறு சிறு அசைவுப் பயிற்சிகள் மூலம் தசைகளை தளரவைக்கும் முயற்சியில் இறங்கினான்.
“ மதுரை தனஜ்ஜெயன் பொண்ணு …வீட்ல இருந்து கல்யாணத்துக்கு கேட்டுருக்கங்க …|”
“நான் தான் கொஞ்ச வருஷம் போகட்டும் னு க்ராண்ட்மா ட்ட சொன்னேனே…”
“நல்ல இடம்…பொண்ணு,குடும்பம் பத்தி விசரிச்சதுல எல்லோரும் நல்ல விதமா சொல்றாங்க… நம்ம அந்தஸ்துக்கு ஏத்த இடம்..”
“இதெல்லாம் க்ராண்ட்மா சொன்னது தான்..நான் என் முடிவு சொல்லிட்டேனே டாட்..”
“நீ யாரையாவது விரும்புறியா…??”
என்று தன்மையாய் கேட்டவரை தன் உடற்பயிற்சி அசைவுகளை நிறுத்தி விட்டு கூர்ந்து பார்த்தவன்.பின் விழிகளை விலக்கிக் கொண்டு தொலைவில் பொன்நிறத்திலிருந்து வெண்ணிறத்திற்கு மாறிக்கொண்டிருந்த பகலவனைப்பார்த்தான்.
“அப்படி எதுவும்னா சொல்லு ராஜன்!, உன் விருப்பத்தை நிறைவேற்றி வைக்குறேன்…” என்று தன்மையாய் சொன்னவரைப் பார்த்தவன், ‘இது தான்…. இது தான் என் தந்தையின் இயல்பு’ என்று எண்ணியவனாய்,
” இப்போ என் கல்யாண பேச்சு வேணாம் டாட்… நான் புதுசா ஒரு தொழில் தொடங்கும் யோசனை ல இருக்கேன். என் கம்பெனி ல மூன்று வருஷம் காண்ட்ராக்ட் ல வெளிநாடு அனுப்பறதா இருக்காங்க.போய்ட்டு வரும்போது அதற்கான வேலைகள் ஆரம்பிச்சுறுவேன் .. நான் இங்கே வந்ததே அதை உங்கள்ட்ட நேர்ல சொல்லணும் னு தான்…” என்றதும் அதிர்வாய் மகனை நோக்கினார்.
“நம்ம பரம்பரைத் தொழில்களை விட்டு நீ ஏன் புதுசா ஒரு தொழில் ஆரம்பிக்கணும்….?”
“விடணும் னு சொல்லலை டாட்… அய்யாப்பாவோட பயர் வோர்க்ஸ் பார்த்தா போதும்னு நினைக்காம நீங்க பிரஸ் ஆரம்பிசீங்களே அது மாதிரி..மருத்துவத்துக்கு பயன்படுற பாண்டஜ், பஞ்சு தொழிற்சாலை என்னோட கனவு..படிக்கும் போதே அதற்கான விவரங்களை சேகரிச்சுட்டே தான் இருந்தேன்.. நம்மூர் பருத்தி விளையுற மண்ணு..அதுனால் அது இங்கேயே அமைக்கிறது நல்லது.அதற்கான ஏற்பாடுகளில் இறங்கணும்.. அதற்கு தேவைப்படும் மூலதனம்,இயந்திரங்கள் இதுபற்றி எல்லாம் தெரிஞ்சுக்க, ஏற்பாடுகள்பண்ண உபயோகமா இருக்கும் இந்த பயணம். நான் போக போற ஜெர்மன் கம்பெனி எனக்கு ஒரு நல்ல எக்ஸ்போஷர் ஆ இருக்கும்.”
என்று கண்களில் கனவுகள் மின்ன சொன்னவனை ஆச்சரியத்துடனும் யோசனையுடனும் பார்த்தார் சௌந்தரராஜன்.தந்தையை திரும்பி பார்த்த வனராஜன் அவரின் இளக்கநிலையை பயன்படுத்த எண்ணியவனாய்
“டாட் உங்களுக்கும் மாமாக்கும் என்ன பிரச்சனை? “
சட்டென்று சௌந்தர்ராஜனின் முகம் இறுகியது.
“எல்லாமே பிரச்சனை தான். …..” என்றவாறு நகர தொடங்கினார்.
“சொல்லுங்க டாட். சொன்னாதானே எனக்கு தெரியும் “என்று வற்புறுத்தும் குரலில் கூறியவனை கடக்க இயலாதவராய் நின்றவர்,
“என்னை பற்றி ஒரு தவறான இமேஜ் ஐ உருவாக்கி வச்சுருக்குறதே அவன் தான். என்றோ செய்த சிறு சிறு தவறுகளை பூதாகரமாக்கி குடும்பத்துல ஊருல எனக்கு மரியாதை இல்லாம பண்ணிட்டான்…”
புரியாதவனாய் குழப்பத்துடன் பார்த்த வனராஜனை ,” உன் மாமனுக்கு பணக்காரங்கனாலே ஏதோ தப்பு பண்றவங்கன்னு எண்ணம். என்னை பற்றி அவனே ஏதேதோ நினைக்குறதும் இல்லாம உங்கம்மா மனசையும் கெடுத்து வெச்சுட்டான் . அதோட பலனை நான் இருபத்தஞ்சு வருஷமா அனுபவிக்குறேன் “ என்றவர் பெருமூச்சு விட்டவராக,”இந்த ஊருக்குள்ள யும் அவன் சொன்னாதானே எதையும் நம்புறாங்க.. அப்படி என்ன சொக்கு பொடி போட்டு வச்சுருக்கானோ தெரியலை” என்று வெறுப்புடன் சொன்னவர்,”அவனை பத்தின பேச்சு எதற்கு!! நீ சீக்கிரம் உன் யோகா வை முடிச்சுட்டு கீழே வா…” என்றுவிட்டு அவர் கீழே இறங்கி செல்ல , குழப்பத்துடன் தனது பயிற்சிகளை முடித்தவன் மனதில் ஓடிய கேள்வி ‘யாரை கேட்டால் இந்த இடியாப்ப சிக்கலின் நுனி கிடைக்கும்?’
****************************
தன் அறையில் அலமாரியில் ஏதோ தேடிக்க கொண்டிருந்த பூங்காவனத்தின் பின் சென்று நின்ற ஈஸ்வரி,” என்ன தேடுற?” என், காதில் விழாதவன் போல் தன் போக்கில் அதிலிருந்த பொருட்களை வெளியில் எடுத்து வைத்து கொண்டிருந்தான் பூங்காவனம்.
“அதுல இருந்த என் ஸ்கூல் போட்டோ, டூர் போட்டோ எல்லாம் என் அலமாரிக்கு மாத்தி,பூட்டி ரொம்ப நாள் ஆச்சு..” என்றால் லேசான நக்கல் தொனிக்கும் குரலில்,திரும்பியவன் விழிகளின் பாவனையில் ஈஸ்வரியின் தொனி மாறியது.கெஞ்சும் குரலில்
“உன் நல்லதுக்கு தா சொல்றேன், வேணாம் ணே….இவ்ளோ தீவிரமா இருக்காத…அந்த அண்ணே பாக்கிற பார்வை பேசுற பேச்சு அந்த மக்குக்கு புரியலை..எதிர்ல நின்னு பார்த்த எனக்கு புரியுது..அவுக அவ்ளோ சீக்கிறதுல விட்டு கொடுக்க மாட்டாக… உங்க ரெண்டு பேத்துக்கு இடையில அவள காயப்படுதீரதேக..நீ உண்மையா நேசிக்குரன்ன அந்த நேசம் உன்னையும் வாழ வச்சு அவளையும் வாழ வைக்கணும்..அவ ஆசைப்பட்ட படிப்பு படிக்கட்டும் அது வரை தொந்தரவு பண்ணாதேண்ணே…”
“இது ஒரு வருஷம் ரெண்டு வருஷமா இருக்குறது இல்ல அவ அழகை பார்த்து வந்ததுமில்ல..அவ குணத்தை பார்த்து, பண்பை பார்த்து எட்டு வருஷமா வளர்த்தது , அவ்ளோ சீக்கிறதுல எவனோ ஒருத்தனுக்கு..உறவுன்னு சொல்லிட்டு உரிமை கொண்டாட்டிட்டு வரவனுக்கெல்லாம் விட்டு கொடுக்க முடியாது” என்றவன் , “நீ சொல்றதுல ஒன்னு…ஒன்னு மட்டு சரி தான் அவளை கஷ்டப்படுத்த மாட்டேன்..அவ இலக்கை அடைய ற வரை காத்திருப்பேன்..அதே சமயம் அவளை நெருங்க யாரையும் விடவும் மாட்டேன்..அதை தான் அவட்டையும் சொல்லிட்டு வந்துருக்கேன்..” என்றான் உறுதியான குரலில்..
அதை கேட்டு அதிர்ந்தவள்,”சொல்லிட்டு வந்துருக்கியா???எப்போ பார்த்த எங்கன வச்சு பேசுனா!!!”
“நேத்து…திருணாமலைல”
எனவும் தலையில் கை வைத்து கொண்டவளாக,
”உனக்கு ஏன் அண்ணே இந்த வேண்டாத வேல? அவ என்கிட்ட இதை சொல்லவே இல்லியே!!”
“நீ பெரிய கலெக்டரு… என்ன நடந்தாலும் உன்கிட்ட வந்து ரிப்போர்ட் கொடுக்கணுமா?? போ போயி வேலய பாரு…” என்று சிரித்தவனை கனிவுடன் பார்த்தவள், “எப்பவும் இதே சிரிப்போட இரு….” என…அவளின் தலையை செல்லமாய் தட்டினான் பூங்காவனம்.
****************************
அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் சரவணனும் செல்லக்கிளியும் scrable விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். ஞாயிறு மதிய ஆதலால் கற்பகவள்ளி சமையலறையில் வேலையாக இருக்க தான் குழந்தைகள் விளையாடுவதை பார்த்தவாறு, அலைபேசி உரையாடல்களை நடத்திக்கொண்டிருந்தர் வேலராஜன்.
பைக் வந்து நிற்கும் ஒலி கேட்டு தலை திரும்பிக் பார்த்தவர், தன் அக்கா மகனை அந்த நேரத்தில் எதிர் பார்க்காத தால், சற்று திகைப்படைந்து அலைபேசி உரையாடலை வேகமாக முடித்து நிறுத்தினார்.
தன் உயரத்தால் அந்த வீட்டின் வாசல்நிலை சிறிதாகதோற்றமளிக்க செய்தபடி உள்ளே நுழைந்தான் வனராஜன்.
மதிய வெயிலின் வெளிச்சம் உள்ளே நுழைந்தவனின் கண்களை இருளச் செய்தாலும், குளிர் நிலவாய் , வெள்ளையில் இளஞ்சிவப்பு வண்ணப்பூக்கள் சிதறிகிடந்த சுடிதார் அணிந்து இளம்சிவப்பு மேல்துணியை மடியில் போட்டு கால் மடக்கி அமர்ந்திருந்த செல்லகிளியின் உருவம்தெளிவாய் தெரிந்தது.
‘ பார்க்காதே’ என அறிவு உத்தரவிட சற்று நேரம் கண்களை மூடி நிதானித்தவன், விழிகளைத் திறந்த போது எதிரே நின்ற மாமனை க் கண்டு புன்முறுவல் சிந்தினான்.
“வாப்பா… சாப்பிடு “ என்று உபசரித்த அத்தையிடம் ,”இப்போ தான் சாப்பிட்டு வரேன்.மாமாட்ட கொஞ்சம் பேசனும்..அவுங்க சாப்பிட்டங்களா?”
“வா ராஜன் ! நாம உள்ள போய் பேசலாம் !” ,என்றவரின் அலைபேசி சிணுங்கியது
அரிசிஆலையிலிருந்து வந்த அழைப்பு, சிறு பிரச்சனை. அவர் நேரில் சென்றால் தான் தீரும்..நிலை..யோசித்தவரிடம்,”வாங்க மாமா பேசிட்டே போய்ட லாம் எனக்கும் கிளம்பனும் இன்று ஈவினிங் ஊருக்கு போகணும்” என
“இல்லை ராசா அங்கே பேச தோது படாது நீ இங்கனையே இரு வள்ளி பார்த்துக்கோ நான் சரியா பதினஞ்சு நிமிஷத்துல வந்துருவேன்” என்றவர், அவசரமாக கிளம்பினார்.
நெற்றியில் இடக்கை விரலால் தடவி யோசித்தவன் வந்திருக்கும் அலுவலின் முக்கியத்துவம் உணர்ந்தவனாய் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான்…
அவனின் விழிகள் அவன் கட்டளையை மீறி நிலவுமகளை த் தேடி காணாமல் சோர்ந்தன.
அவளின் முகதரிசனம் கிடைக்காததால் சோர்ந்த உள்ளம் ,”செல்லம்! சரவணா இங்க வாங்க யார் வந்துருக்கான்னு பாருங்க!” என்ற அத்தையின் குரலில் சற்று நிமிர்ந்தது. அப்போதும் சரவணன் மட்டுமே வந்தான். செல்லக்கிளி வரவில்லை.சுருண்ட மனதை சற்றே விரிக்க சரவணனின் பாசம் உதவ,
அவனுடன் பேசியவாறு பொழுதைப் போக்கியவன் , தன் மனதின் தவிப்பை உணர்ந்தவனாய் ,’பதின் வயசுல கூட இவ்ளோ பாடு படுத்தலைடா நீ “ என்று தன் மனதைத் கடிந்து கொண்டான்.
சொன்னவாறு பதினைந்து நிமிடத்தில்வந்த வேலராஜன், அடுத்தடுத்து போட போகும் குண்டுகளை அறியாதவனாய் தனி அறை நோக்கி அவர் பின்னே சென்றான் வனராஜன்.
தொழிலாளர் சம்பந்தமாக பேச வந்து இருப்பான் என்று எண்ணிய மருமகன் திடுக்கென்று உங்களுக்கும் அப்பாக்கு என்ன பிரச்சனை மாமா என்று நேரிடையாக வினவியதும் திகைத்தவர்,” என்ன ராஜா திடீர்னு கேக்குற ?” என்றவரின் விழிகள் யோசனையாய் அவன் மீது படிந்தன.
“ஏதோ தவறான புரிதல் இருக்கு னு தோணுது..அதனால மாம் தான் ரொம்ப கஷ்டப்படுறாங்க… என்னபிரச்சனை? உங்களுக்கும் அப்பாக்கும் நடுவில் என்று மீண்டும் கேட்டவனிடம், இனியும் மறைப்பது சரியில்லை என்று நினைத்தவர் ஆழ்ந்த மூச்சு இழுத்தவராய் தன்னை நிலை படுத்தி கொண்டு,” எப்படி ஆரம்பிக்க என சொல்லனு தெரியலை ராஜா..ஆனா இது எல்லாம் நீ தெரிஞ்சு இருக்க வேண்டிய விவரம்…ம்ம்ம்ம்…உன் அப்பாக்கு வேற ஒரு தொடுப்பு இருந்தது….என்றார் தயங்கியவாறு.
அவரின் கிராமத்து வழக்கு புரியாதவனாய் குழப்பமான பார்த்தவனின் முகத்தை பார்த்து சற்று நிதானித்தவர்,” உன் அப்பா காலேஜுல படிக்கும் போதே ஒரு வட நாட்டுப் பெண்ணை விரும்பிருக்காக…அந்த பொண்ணு வீட்டுல அது தெரிஞ்சோ தெரியாமலோ அதை சொந்த ஊரான வட நாட்டுக்கு அனுப்பிட்டாக போல. அங்கேயே அவுக சாதி பையனா பார்த்து கலயாணமும் முடிச்சுப்புட்டாக போல.
அந்த நினைப்புல சோகமா இருந்தவரை தான் கலியாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணி என் அக்காவை பொண்ணு கேட்டுருக்கங்க..எனக்கு இந்த விவரம் எல்லா அப்போ தெரியாது… இவ்ளோ பணக்காரக வீட்ல கொடுக்க வேண்டாமின்னு அப்போவே எனக்கு மனசு அடிச்சுக்கிச்சு.சொந்தக்காரவுக அத்தை இத்தை சொல்லி ஆச்சி, தாத்தா மனசை மாத்தி கல்யாணத்துக்கு சமமதிக்க வச்சுப்புட்டாங்க…
ஏனோதானொன்னு வாழ்ந்த அவரையும் அனுசரிச்சு நல்ல குடும்ப வாழ்க்கையை கொடுத்து ரெண்டு புள்ளைகளையும் தந்து அவரு வாழ்வை வசந்தமாக்குன எங்க அக்கா வாழ்க்கைல திருப்பி புயலா வந்து சேர்ந்தா அந்த பொண்ணு ….
வந்தவளை வேலைக்கு சேர்த்து கூடவே வச்சுகிட்டதுமில்லாம , வீடு எடுத்து தங்க வச்சு அவ குடும்பத்தையே வச்சு தாங்கி கிட்டு இருக்காரு ன்னு கேள்வி பட்டு போய் விசாரிச்சதுக்கு ரொம்ப எகத்தாளமா பேசுனாக உங்க ஐயாம்மா…பக்கத்தில இருந்த இவரு கோபமா முறைச்சு பார்த்ததோட சரி..இவனுக்கெல்லாம் ஏன் பதில் சொல்லணும்னு தெனாவட்டு அவரு முகத்துல.உங்க அய்யப்பா ஏதேதோ சொல்லி சமாதான படுத்துனாக..என் மனசு ஆரல….” என்று பெருமூச்செரிந்தவர்…
“நீ பொறந்து இருந்த வீட்டுக்குள்ளே தான் இம்புட்டுக்
களேபரமும்…. அதே நேரத்துல அந்த பொண்ணும் குழந்த உண்டாகி இருக்குனு கேள்வி பட்டு என் ரத்தம் கொதிச்சுப் போச்சு…உங்க அம்மாவுக்கு…என் கூட பிறந்தவளுக்கு எப்படி இருந்திருக்கும்..??” என்றவரின் கண்களில் கண்ணீர்…
மாமனின் கண்களில் கண்ணீரைக் கண்டவன் அதிர்ந்து நம்ப இயலா கனவு கண்டவன் போல் கண்களைத் தேய்த்து முகம் பொத்தி கொண்டவனின் மனம் அலைகடலாய் ஆர்பரிக்க ஆரம்பித்தது…..
***********************
த்ரோகத்தில் பெரும் துரோகம்
நம்பிக்கைத் துரோகம்….
பாவத்தில் பெரும் பாவம்..
பெண் பாவம்….
மனையாள் ஒருவள்..
இனியாள் ஒருவள்..
எனபது ஆண் திமிரோ..
இணைவி.. துணைவி..மனைவி..
என்று பெயருக்கு ஒன்று தேடுவது..
ஆணவன் செருக்கோ…
கலியின் ஆட்டத்தில்..
இந்நிலை பெண்ணும் எடுக்க..
புலியின் கூண்டில் சிக்கிய
மான்களாய் பிள்ளைகள்..
எதிர்காலம்??????????
**********************************
கிளி பேசும்!!!!!!!!!