Fri. Oct 18th, 2024

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 3

(3)

 

இதோ, வரப்போகும் கந்தழிதரனை வரவேற்க, அன்று அந்த வீடே விழாக்கோலம் பூண்டது. யசோதா பரபரப்புடன் ஓடி ஓடி வேலைகளைச் செய்யவும், அம்மேதினி, அன்னையிடமிருந்து வேலைகளைப் பறித்துத் தானே செய்தாள். விரைவாகவே சமையல் வேலைகளைச் செய்தாலும், அங்கு இழுத்து, இங்கு இழுத்து நேரம் மாலையை எட்டிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் கதவை யார் தட்டினாலும், வாசலில் மோட்டார் வண்டியின் ஓசை கேட்டாலும் அது கந்தழிதரனாக இருக்கும் என்று வாசலுக்கும் சமையலறைக்குள்ளுமாகப் பலவாட்டி ஓடிக் களைத்திருந்தார் யசோதா.

அதைக் கண்டு உதடுகளைச் சுருக்கிய அம்மேதினி, “இத்தனைக்கும் மரதன் ஓடியிருந்தாலாவது முதல் பரிசைத் தட்டியிருக்கலாம்…” என்று கிண்டலடித்தாலும், தாய்க்கு முன்பாக அவன் வந்துவிட்டானா, வந்துவிட்டானா என்று ஆவலாக எதிர்பார்ப்பது மட்டும் நிற்கவில்லை.

இதற்கிடையில் சில பொருட்கள் வாங்கவேண்டி நிர்ப்பந்தம் ஏற்பட,

“அம்மா அம்மேதினி… ஓடிப்போய்ச் செல்வராசா கடையில் இரண்டு கிலோ சர்க்கரை வாங்கி வருகிறாயா…? தீர்ந்துபோய்விட்டது… அத்தோடு, கோதுமை மாவும் முடிந்துவிட்டது… கையோடு பச்சைமிளகாய், மஞ்சள், கொஞ்சம் பெருஞ்சீரகம், அப்புறம்… ஆ… வெந்தயம், கறிவேப்பிள்ளை…” என்று யசோ ஒவ்வொன்றாக யோசித்து யோசித்துச் சொல்ல,

“பொறுங்கள் பொறுங்கள் பொறுங்கள்… ஏனம்மா இல்லாததைச் சொல்கிறீர்கள். இருப்பதைச் சொல்லுங்கள்.. நான் இல்லாதவற்றை வாங்கி வருகிறேன்…” என்று சொல்லப் புரியாமல் விழித்த யசோதா,

“என்னடி சொல்கிறாய்…” என்று அன்னை குழம்ப,

“பின்னே? நீங்கள் சொல்லும் பட்டியலைப் பார்த்தால் வீட்டில் எதுவுமே இல்லை போல இருக்கிறது. வீணாக இல்லாததைச் சொல்லி அதைப் பட்டியலில் எழுதி, என் கைகள் வலிப்பதை விட, இருப்பதைச் சொன்னால் அதைப் பார்த்து இல்லாததை வாங்கிவரலாமே…” என்று போலியாகப் பெருமூச்சுவிட்டவளின் காதைப் பிடித்தாள் பெரியவள்.

“உனக்கு வர வர வாய் வானளவாக நீண்டு கொண்டு வருகிறது… பொறு உன் வாயை அடைக்க ஒரு வழி செய்கிறேன்… முதலில் சீக்கிரமாகப் போய்ச் சொன்னதை வாங்கிவா…” என்ற தாயிடம் மறுக்கமுடியாமல், வேகமாக மிதிவண்டியை எடுத்துக்கொண்டு செல்வராசா கடை நோக்கி விரைந்தாள் அம்மேதினி.

வண்டியை மிதிக்கும்போதும் கந்தழிதரன்தான் மனதிற்குள் வந்து நின்றான். அவன்தானே மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொடுத்தான். அப்போது அவன் நடு மண்டையில் கொட்டியது நினைவுக்கு வர, இப்போதும்  உச்சியில் வலித்தது. தன்னை மறந்து நடு மண்டையை வருடிக் கொடுத்தவளுக்குத் தான் செய்யும் காரியம் புரிய, அவளையும் மீறி உதடுகள் சிரித்தன.

‘ஏனோ அவனைப் பார்க்கப் போகும் அந்த நிமிடத்திற்காக உள்ளம் பராபரத்தது. எதற்காக இந்தப் பரபரப்பு? எதற்காக இந்தத் தவிப்பு.’ அவளுக்குப் புரியவில்லை.

கந்தழிதரனின் நினைவில், கடைக்குள் புகுந்தவள், எல்லாம் வாங்கிப் பொருட்களை மூட்டையாகக் கட்டி வண்டியின் தாங்கியில் வைத்துவிட்டு, மிதிவண்டியில் ஏறி அமர்ந்து, பின்னால் வாகனங்கள் ஏதாவது வருகிறதா என்று கூடப் பார்க்காமல் சடார் என்று தெருவில் வண்டியை எடுக்க, அப்போதுதான் அது நடந்தது.

அம்மேதினி மிதிவண்டியைத் தெருவில் எடுக்கவும், வேகமாக வந்த முச்சக்கர வண்டி ஒன்று, அவள் அருகே உராய்வதுபோல் வரவும் நேரம் சரியாக இருந்தது. இதை எதிர்பார்க்காதவள், சமநிலை தவறி பொதார் என்று மிதிவண்டியோடு தரையில் விழ, அதை உணர்ந்தது போல அந்த முச்சக்கர வண்டியும் உடனேயே நின்றது. அதன் ஓட்டுநர் பதட்டத்துடன் இறங்கி வந்து,

“சாரிம்மா… நீங்கள் சடார் என்று வீதியோரம் மிதிவண்டியை எடுத்ததும், என்னால் வண்டியைத் திருப்ப முடியவில்லை…” என்று சங்கடத்துடன் சொல்ல, தரையில் அமர்ந்தவாறே அவனை முறைத்துப் பார்த்தாள் அம்மேதினி.

“என்னையா… குடித்துவிட்டா வண்டியை ஓட்டுகிறாய்…? இடிப்பதையும் இடித்து விட்டுச் சாரி சொல்லிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா… முதலில் சாரியைச் சொன்ன வெள்ளைக் காரனை உதைக்க வேண்டும்… சே… ஆட்டோ ஓட்டத் தெரிய வில்லை என்றால் பிறகேன் அதனோடு மாரடித்துத் தொலைக்கிறாய்…” என்று சிடுசிடுத்தவள் தரையில் பதித்திருந்த உள்ளங் கரத்தைத் தூக்கிப் பார்த்தாள். கற்கள் குத்தி உள்ளங்கைகளில் அடையாளம் விழுந்திருந்த. தன் இடது முழங்கையில் எரிச்சல் தோன்ற, திருப்பிப் பார்த்தாள். அங்கே தோல் பிய்ந்திருக்க, அதிலிருந்து இரத்தம் வேறு புதிதாகத் தோன்றிக் கொண்டிருந்தது. முழங்கால்கள் வேறு நொய் நொய் என்றது. அதை உணர்ந்த போது, ஆத்திரம் மேலும் அதிகரித்தது. கோபத்துடன் முன்னால் நின்றிருந்த வண்டிக்காரனை முறைக்க,

“அடடே… கையில் காயம் பட்டுவிட்டதே… வலிக்கிறதா…?” என்று அருகே அழுத்தமான ஒரு குரல் வரத் திரும்பிப் பார்த்தாள்.

பார்த்தவளின் விழிகள் ஒரு கணம் சுருங்கிப் பின் விரிந்தன. ‘அவனை எங்கோ பார்த்தது போலத் தோன்றியது. எங்கே’ என்றுதான் நினைவில்லை. தாடி வைத்திருந்தான். மிக மிக உயரம். அதற்கேற்ற உடல் கட்டு. விழிகளில் கூர்மை. அந்த விழிகள்… ஏனோ அவளைச் சுருட்டி உள்ளே இழுப்பது போலத் தோன்றக் குழம்பிப் போனாள் அம்மேதினி.

‘அதுவும் அந்த விழிகளின் நிறம்… அதன் கூர்மை, அதன் அமைப்பு இதுவரை யாரிடமும் பார்க்காதது… இந்த விழிகளை… எங்கோ பார்த்திருக்கிறாள். எங்கே பார்த்தாள்?’ நினைவில் வரவில்லை. ஆனாலும் அவனைத் தெரிந்ததுபோலத் தோன்றியது. கூடவே அந்தக் குரல் வேறு இவளைத் தடுமாறச் செய்ய, அவள் முகத்திற்கு முன்னால் விரல்களைச் சுண்டி அவள் நினைவலைகளைச் சிதைத்தவன்,

“ஹலோ… உங்களைத்தான்… ரொம்ப வலிக்கிறதா?” என்று அக்கறையாகக் கேட்டான் அவன், திடுக்கிட்டவளாய் விழிகளைச் சிமிட்டி, தன் நினைவுகளை உதறிவிட்டு அவனை எரிச்சலுடன் பார்த்து,

“வலியா… சேச்சே… சும்மா… அப்படியே பனிக்கட்டி வைத்ததுபோல் குளுகுளு என்றிருக்கிறது…” என்று உதடுகளைப் பிளந்து சிரிப்பது போல இழித்துவிட்டு, பின் முகத்தைச் சுருக்கி,

“யாராவது உங்களிடம் பஞ்சாயத்திற்கு வந்தார்களா? இல்லையல்லவா… வேலையைப் பார்த்துவிட்டுப் போவீர்களா…” என்றவள் கையைப் பிசைந்து கொண்டிருந்த ஓட்டுநரை முறைத்துவிட்டு,

“இடிப்பதையும் இடித்துவிட்டுப் கைகளைப் பிசைகிறான் கபோதி…” என்று முனங்க,

“எப்போதும் போகும்போது அவதானமாகப் போகவேண்டும்… புலனை வேறு எங்காவது வைத்துக்கொண்டு வண்டியை ஓட்டினால், நிலைமை இப்படித்தான்…” என்று அவன் அழுத்தமான குரலால் கூற, அம்மேதினி கோபத்துடன் அவனை முறைத்தாள்.

ஆமாம் ‘பெரிய மனுநீதிகண்ட சோழன், நியாயம் பிளந்துகொண்டு வந்துவிட்டார்…’ என்று உள்ளுக்குள் எரிந்தவள், அதை முகத்தில் காட்டியவாறு,

“என்ன… கிண்டலா…? முதலில் எங்காவது போகும் போது, நீங்கள் பார்த்துப் போங்கள். அல்லது இப்படித்தான், ரோட்டில் போகிறவர்களை இடித்துக் கொண்டே இருக்கவேண்டும்… இடிப்பதையும் இடித்துவிட்டுப் பேச்சைப் பார் பேச்சை… சே…” என்று சுடச்சுடக் கூறியவள், எழ முயல, கால் வண்டிக்குள் சிக்குப் பட்டிருந்தது. அதனால் உடனே அவளால் எழுந்திருக்க முடியவில்லை. சற்றுத் தடுமாற, அவசரமாக அவள் பக்கமாகக் குனிந்த அப்புதியவன் சரிந்திருந்த வண்டிக்குள் சிக்கியிருந்த அவள் செழித்த காலைப் பற்றி விலக்க அவளாலும் தடுக்க முடியவில்லை. இப்போதைக்கு அவளுக்கு உதவி தேவைப் பட்டதே.

அவனோ, வண்டியை நிமிர்த்தி ஓரமாக வைத்துவிட்டு, அவளை நோக்கிக் கரத்தை நீட்டினான். அவளோ அவனையும் கரத்தையும் மாறி மாறிப் பார்க்கப் பொறுமையை இழந்தானோ? குனிந்து அவளுடைய தோள்களைப் பற்றி எழுப்பி விட, வந்ததே ஒரு கோபம். சும்மாவே சுடு தண்ணீரின் மீது நின்றவள், அவன் தொட்டதுதான் தாமதம்.

“யார் மீது கை வைத்தாய்?” என்று சீற்றத்துடன் கேட்டவாறு, ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்து விட்டிருந்தாள்.

யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. அவள் கூட இப்படிக் கைநீட்டுவோம் என்று யோசிக்கவேயில்லை. அதிர்ந்துபோய் அவனை அடித்த கரத்தைத் தூக்கிப் பார்த்தவள், அச்சத்துடன் தன் முன்னால் நின்றிருந்தவனை ஏறிட, அவனோ அடித்த கன்னத்தை வருடியவாறு அவளைத்தான் முறைத்தவாறு நின்றிருந்தான்.

அந்தப் பார்வை, இவளுக்குள் குளிர் பரப்ப, அவசரமாக அவ்விடத்தை விட்டு ஓடும் நோக்கில் திரும்ப முழங்காலிலும் உயிர்போகும் வலி. தன்னை மறந்து,

“ம்மா…” என்றவள், பற்களைக் கடித்து வலியை அடக்கியவளாகத் துவிச்சக்கர வண்டியை எடுக்கப் போனபோதுதான் அதன் முன் சில்லு நெளிந்து வளைந்து ‘ஙே’ என்றவாறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டதும் இவளையும் அறியாமல் வாய் ஆவெனப் பிளந்துகொண்டது.

இந்த வண்டியை வாங்க அவள் தாயிடம் எப்படியெல்லாம் கெஞ்சினாள். இறுதியில் எட்டாம் வகுப்பு போகும் போதுதான் கருணை கூர்ந்து இந்த வண்டியை வாங்கிக் கொடுத்தாள். அதுவும் ஆயிரம் பத்திரம் சொல்லித்தான் கொடுத்தார். ஏதோ மோட்டார் வண்டியை வாங்கிக் கொடுத்த நினைப்பு. அன்றிலிருந்து அந்த வண்டி அவளுடைய தங்கைபோல.

‘ஐயையோ… இப்போது என்ன செய்வது?’ தவித்தவாறு திரும்பிப் பார்க்க இன்னும் அவன் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய முறைப்பைக் கண்டு கலங்குவதா, இல்லை இப்படி வண்டியை உடைத்து விட்டார்களே என்று கோபப்படுவதா என்று புரியாமல் தடுமாறியவளுக்கு அவனுடைய கோபத்தை விட அடிவாங்கிய வண்டி முக்கியமாகப் பட, இப்போது இவளுக்கும் ஆத்திரம் வந்தது. இவர்களால்தானே அவளுடைய துவிச்சக்கர வண்டி இந்த நிலையிலிருக்கிறது.

“சே… ஓடத்தெரியாத நாய்களெல்லாம், குருக்கே பாய்ந்தால் இப்படித்தான். கண்ட கண்ட இடத்திலெல்லாம் விழுந்து வைக்கவேண்டி இருக்கிறது…” என்று முணுமுணுத்தவாறு வண்டியைத் தள்ளிச் செல்ல முயல, அவளின் புலம்பல் அந்த இரு ஆண்களின் செவிகளிலும் திவ்வியமாக விழுந்து தொலைத்தது.

உடனேயே முச்சக்கர வண்டிக் காரனுக்குக் கோபம் கொப்பளித்துக் கொண்டு வர, தன் சரத்தை மடித்துக் கட்டியவாறு,

“என்னம்மா… அதிகமாகப் பேசுகிறாய்… யாரைப் பார்த்து நாய் என்கிறாய்… முதலில் நீதான் சரியாகப் பார்த்துத் தெருவில் வண்டியை எடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எங்களைச் சொல்கிறாய்… முதலில் ஒழுங்காக ஓட்டிப்பழகு… இஷ்டத்திற்கு வண்டியை எடுத்தால் இப்படித்தான்…” என்று கோபத்துடன் அவளை நோக்கி வர, உடனே புதியவன் அவனைத் தடுத்தவாறு,

“கோபப்படாதீர்கள் தவம்…” என்று சமாதானப்படுத்த,

“என்ன சார் சும்மா விடச் சொல்கிறீர்கள்? வாயிருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?” என்று எகிற, இவனோ,

“தவம், விடுங்கள்… சிறுமி… ஏதோ உளறுகிறாள்” என்றுவிட்டு அம்மேதினியைக் கோபத்துடன் ஆழமாகப் பார்த்தான்.

அவளோ, தன் கரத்திலிருந்த வண்டியைப் பொதார் என்று தரையில் போட்டுவிட்டு, வேகமாக இவர்கள் பக்கமாகத் திரும்பி எள்ளும் கொள்ளும் வெடிக்க,

“யாரைச் சிறுமி என்றீர்கள். என்னைப் பார்க்கச் சிறுமி போலவா இருக்கிறது? பதினாறு வயது ஆகிவிட்டது தெரியுமா?” என்று எகிற தொடங்க, ஏனோ இவனையும் மீறி, உதட்டில் மெல்லிய சிரிப்பு ஒன்று தோன்றியது. அந்தத் துடிப்பு, அந்த எகிறல் அவனுக்கு வேறு யாரையோ நினைவுப் படுத்தியதோ, இப்போது அவன் முகம் கனிந்து போனது.

“உன் பெயர் என்ன?” என்று அவன் கேட்க, உதடுகளைச் சுழித்தவாறு

“என் பெயர் உங்களுக்கு எதற்கு…?” என்றாள் அதற்கும் சுள்ளென்று.

“இல்லை… முந்திரிக்கொட்டைத் தனம் அப்படி என்று சொல்வதற்குப் பதிலாக, உன் பெயரை அதற்கு வைத்திருந்தால் பொருத்தமாக இருக்குமே என்று கேட்டேன்…” என அவன் கிண்டலுடன் கூற, அம்மேதினிக்கு உடல் மட்டுமல்ல உள்ளமும் தீப்பற்றிக் கொண்டது.

“டேய்… யாரையடா முந்திரிக்கொட்டை என்றாய்…” என்று ஆத்திரத்துடன் அவனை நெருங்க முயல, இவனோ இரண்டடி பின்னால் வைத்தவாறு,

“பெண்களுக்குச் சும்மாவே வாய் சற்று நீளம்தான்… ஆனால் உனக்குக் கடவுள் வாய் வைக்க வேண்டிய இடத்தில், பெரிய மோட்டார் பம்பையே வைத்து விட்டான். அதுதான் இப்படி நிறுத்தாமல், கட கடவென்று கொட்டுகிறாய்.” என்று மேலும் நெய்யை ஊற்றிவிட்டு, வெளியே தெரியத் துடித்த சிரிப்பை அடக்க முயன்றவனாக,

“ஏனோ மீண்டும் உன்னைச் சந்திப்பேன் என்று ஒரு பட்சி சொல்கிறதே… உனக்கு ஏதாவது அப்படிச் சொல்கிறதா” என்று மிகத் தீவிரமாகக் கேட்க, இவளோ

“ம்… நீ போகும் இடத்தில் தலைக்குப்பிற கவிழ்ந்து கிடக்கப்போகிறாய் என்று ஒரு சொச்சி சொல்கிறது…” என்றாள் பதிலுக்கு. அதுவரை தன்னை அடக்கிக் கொண்டிருந்தவனுக்கு முடியவில்லையோ, தன்னை மறந்து பக் என்று சிரித்து விட்டான். ஏனோ அந்தச் சிறுமி தன்னை அடித்தது ஒரு பொருட்டாகவே அவனுக்குத் தெரியவில்லை. அந்தச் சிரிப்புடனே வண்டிக்காரனைப் பார்த்து,

“வண்டியை எடுங்கள்… தவம், அவர்கள் நிதானமாகவே வீட்டிற்குச் செல்லட்டும்…” என்றுவிட்டு வண்டியில் ஏறி அமர முயன்றவன், என்ன நினைத்தானோ, இவள் பக்கமாகத் திரும்பி,

“சரி சரி… அதிகம் தாமதிக்காமல் விரைவாக வீட்டிற்குப் போ… உன் வீட்டில் காத்திருக்கப் போகிறார்கள்…” என்றவன், “ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது, உனக்கு வாய்… காது வரையில்லை… அதற்கு அப்பாலும் கிழிந்துதான் இருக்கிறது…” என்றவன், அவள் கற்களைத் தேடி இவர்களை நோக்கி எறிவதற்குள்ளாக அவன் ஏறிவந்த வண்டி அவ் இடத்தை விட்டுப் பறந்திருந்தது.

எரிச்சலுடன் தன் கரத்திலிருந்த கல்லையும், சென்று கொண்டிருந்த வண்டியையும் மாறி மாறிப் பார்த்தவளுக்கு ஆத்திரம் மேலும் எகிறியது.

‘எத்தனை தைரியம் அவனுக்கு. வாய் இருப்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா… எனக்கா வாய் நீளம் என்று சொல்லிவிட்டுப் போகிறான்…? டேய்… மவனே… எங்காவது உன்னைச் சந்திக்காமலா இருக்கப்போகிறேன்? அப்போது ஊதுகிறேன் சங்கு…’ என்று மனதிற்குள் எகிறும் போதே,

“என்ன கண்ணு… என்ன பிரச்சனை?” என்று இழித்துக்கொண்டு ஒருவன் வந்தான். அவனை எரிப்பது போலப் பார்த்தவள்,

“ம்… ஒருத்தனைக் கொலை செய்யவேண்டும் வருகிறாயா?” என்றாள் சுள் என்று. அவனோ திகைத்து நிற்க,

“ஒரு பெண் வெளியே தனியாக இருந்துவிடக் கூடாதே… உடனே வந்து விடுவார்கள் பல்லை இழித்துக் கொண்டு… கபோதிப் பயல்கள்… இவர்களுக்குப் போராளிகள்தான் சரி… மறு பேச்சில்லாமல் சந்தியில் கட்டித் தொங்கவிட்டு விடுவார்கள்…” என்று முணுமுணுத்தவாறு, மிதிவண்டியை உருட்டத் தொடங்கிய போதுதான் முழங்காலின் வலி புரிந்தது.

தன்னை மறந்து முனங்கியவள், அங்கே தெருவில் நின்று காயத்தைப் பார்க்கக் கூச்சப் பட்டவளாக, வண்டியை உருட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

புழுதி படிந்த ஆடையும், நெளிந்து போன மிதிவண்டியுடன் நடக்கமுடியாமல் சிரமத்துடன் வந்த மகளின் கோலத்தைப் பார்த்த யசோதா அதிர்ந்துபோனாள்.

“என்னடி… ஏன் இப்படிப் பிச்சைக்காரி போல வந்திருக்கிறாய்?” என்று கேட்டதும் அவ்வளவு நேரமாகக் கொதித்துக்கொண்டிருந்த அம்மேதினி வெடித்தாள்.

“ஆமாமாம்… பிச்சைக்காரிதான்… இப்படி வருவதாகப் பிள்ளையார் கோவிலுக்கு வேண்டினேன் பாருங்கள்… அதுதான்…” என்று சிடுசிடுத்தபோது, ஏனோ அந்த இளைஞன் மனத்தில் வந்து நின்றான். அவளையும் மீறிப் பற்கள் ஒன்றோடு ஒன்று அரைபட்டன. ‘அவன் மட்டும் என் கையில் கிடைத்தான்… அவனை ஆட்டுக்கல்லில் போட்டு உழுந்து அரைப்பதுபோல அரைத்து, வடகம் செய்து வெய்யிலில் காயவைத்துக் காக்காய்க்கு உணவாகப் போட்டுவிடுவேன்….’ என்று உள்ளுக்குள் கொந்தளிக்கும்போதே, அவளைப் புரியாமல் பார்த்தாள் யசோ.

“என்னடி ஆகிவிட்டது உனக்கு…? போகும்போது நன்றாகத்தானே இருந்தாய்… திடீர் என்று என்ன நடந்தது?” என்று கேட்க அம்மேதினி நடந்ததைச் சொன்னாள்.

“அடப்பாவமே… நன்றாக அடி பட்டுவிட்டதா கண்ணு…” என்று பரிதவிக்க,

“ப்ச்… அதெல்லாம் இல்லை… சின்னக் காயம்தான் அம்மா…” என்றுவிட்டுச் மிதிவணடியைச் சாய்த்து ஒரு புறமாக வைத்துவிட்டு, அதில் இருந்த பொருட்களை உள்ளே வைப்பதற்காக அவிழ்க்கத் தொடங்க தாய் யசோதா தடுத்தாள்.

“பரவாயில்லை அதை அப்படியே விடம்மா… வேலனைக் கொண்டு உள்ளே எடுத்து வைக்கலாம். நீ முதலில் உள்ளே வந்து காயத்திற்கு மருந்தைப் போடு… வா” என்று மகளை அழைக்க, அம்மேதினியோ கவலையோடு தன் வண்டியின் முன்னால் குந்தி அமர்ந்தாள்.

முன் சில்லு நிச்சயமாக மாற்றவேண்டும். அதோடு சேர்த்து தடைகளும் மாற்ற வேண்டும். மட்காட் வேறு நெளிந்து விட்டது… எப்படியும் ஆஆஆயிரம் ரூபாயாவது வேண்டும்… இப்போது பயத்துடன் அன்னையைப் பார்க்க, அன்னையோ தன் மகளை ஏறிட்டு என்ன என்பது போலப் பார்த்தார்.

“வண்டியைத் திருத்தவேண்டும்…” என்று கூறும்போதே கண்கள் கலங்கி விட்டிருந்தன.

“சரி… சரி… திருத்தலாம்… உள்ளே வா…” என்று அன்னை கூற இவளுடைய முகம் பளிச்சிட்டது.

எழுந்தவள் பாய்ந்து சென்று அன்னையை இறுக அணைத்து முத்தமிட்டவள்,

“நன்றிம்மா…” என்று குதுகலத்துடன் உள்ளே செல்ல, யசோதாவின் முகம் மலர்ந்து போனது.

பொதுவாக யசோதா தன் மகளின் கரத்தில் தேவையற்றுப் பணம் கொடுப்பதில்லை. கையிலிருக்கும் பணம்தான் அதீத செலவை ஊக்குவிப்பதோடு, குழந்தைகளைத் தவறான பாதையில் செல்ல வைக்கும் என்பது அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கை.  அவசர தேவை ஏற்பட்டால், தேவைப்படும் என்று இருபது ரூபாய் கொடுத்து வைத்திருப்பார். அது கூட அவளைப் பொறுத்தவரை பெரிய தொகைதான். தமிழ் வருடப்பிறப்பிற்கென்று கைவிசேடம் யசோதா கொடுப்பார். அதைச் செலவு செய்யாமல் வங்கியிலும் போட வைத்துவிடுவார்.

அப்படியிருக்கையில், வண்டியைத் திருத்துவதற்காக, பணம் தர தாய் சம்மதித்ததும், தன் வண்டியைத் திருத்திவிடலாம் என்கிற உற்சாகம் எழ, துள்ளியவாறு வீட்டிற்குள் நுழைந்தாள் அம்மேதினி. நுழையும் போதே,

“ஆமாம்… உங்கள் பாசமலர் மருமகன் வந்துவிட்டாரா? இல்லை வீடு ஏதும் மாறிப் போய் விட்டாரா…” என்று கிண்டலாக வினவியவாறு சமையலறைக்குள் நுழைந்தவள், ஒரு குவளை தண்ணீர் அள்ளி அருந்த தொடங்க, அதுவரை மகளை எண்ணி வருந்திக் கொண்டிருந்த யசோதா அம்மேதினியைப் பார்த்து முறைத்தார்.

“சும்மா கிண்டல் பண்ணாதே மேதினி… நானே அவர்களைக் காணவில்லை என்று பயந்து போய் இருக்கிறேன்… நீ வேறு…” என்று கலக்கத்துடன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, முச்சக்கர வண்டி ஒன்று வாசல் பக்கமாக வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

முகம் மலர, பூரிப்புடன், “வந்துவிட்டார்கள் போல் இருக்கிறது சீக்கிரமாக வா…” என்றவாறு வாசலுக்கு விரைந்து செல்ல, அதுவரையிருந்த சஞ்சலங்கள் வலிகள் அனைத்தும் மாயமாக மறைந்து போக, கந்தழிதரனைக் காணும் வேகத்துடன் கரத்திலிருந்த குவளையை மேசையில் வைத்துவிட்டு, அன்னையைப் பரபரப்புடன் பின் தொடர்ந்தாள் அம்மேதினி.

ஏனோ அவளுடைய நடை சற்றுத் தடுமாறியது. நெஞ்சம் படபடத்தது. முகத்தில் மெல்லிய வியர்வைப் பூக்கள். அவளையும் மீறிய ஒரு பதட்டம்.

ஐந்து வருடங்கள்… ஐந்து வருடங்களுக்குப் பிறகல்லவா அவனைப் பார்க்கப் போகிறாள். அதனால் வந்த தவிப்புதான் அது வேறு என்ன? மனம் முழுவதும் ஒரு வித அவஸ்தை ஊற்றெடுக்க, கால்கள் பின்ன, அடிவயிற்றில் ஒரு வித சிலிர்ப்பு பரவ, கதவின் பின்னால் மறைந்து நின்றவாறு எட்டிப் பார்த்தாள்.

முச்சக்கர வண்டியிலிருந்து இறங்கியவன், ஓட்டுநரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டுப் படலையைத் திறந்துகொண்டு உள்ளே வர, யசோதோ வெளியே வந்துவிட்டிருந்தார்.

இங்கே கதவுக்குப் பின்னால் மறைந்து நின்றிருந்தவளுக்கு இறங்கி வந்தவனின் உருவத்தை மறைத்துக் கொண்டு அன்னை நின்றதால் அவனைச் சரியாகத் தெரியவில்லை. அதனால் சற்று எட்டி எக்கிப் பார்த்தாள். ம்கூம்… எரிச்சல் தோன்ற, அன்னையின் முதுகை வெறித்தாள் அம்மேதினி.

அதே நேரம் வண்டியிலிருந்து இறங்கி உள்ளே வந்துகொண்டிருந்தவனைக் கண்ட யசோதா ஒரு கணம் திகைத்துப் போனார். அவரால் தன் விழிகளையே நம்பமுடியவில்லை. ‘இவன் கந்தழிதரனா? உண்மையாகவே அவன்தானா? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டானே.’ முன்பு ஒடிசலாக இருந்தவன் இப்போது ஆணழகனாக மாறியல்லவா வந்திருக்கிறான். வெளிநாட்டு வாசமோ என்னவோ முன்னைவிட ஒருபிடி வெளுத்திருந்தான். முன்பு தாடி மீசையில்லாதிருந்தவன். இப்போது அளவான தாடி மீசையோடு மிக மிக அ கம்பீரமாக, ஆளுமையுடன் இருந்தான். எப்போதும் அலட்சியமாகப் போடும் ஆடைகள் மாறிக் கச்சிதமாகப் பொருத்தமாக அணிந்திருந்தான். ஏனோ முன்னிருந்த உரிமை மறைந்து அங்கே ஒரு வித மதிப்பும் மரியாதையும் தோன்றியது யசோதாவிற்கு.

‘அடேங்கப்பா… என் கந்தழி எத்தனை கம்பீரமாக இருக்கிறான்… கடவுளே என் கண்ணே பட்டுவிடும் போல இருக்கிறதே…’ என்று வியந்து நின்றது ஒரு சில நொடிகளே. அவனைக் கண்ட மகிழ்ச்சியில் அவனை நோக்கிப் பாய்ந்தவாறு படிகளில் இறங்கத் தொடங்க, அந்த நேரம் அவனை மறைத்திருந்த திரை விலக, கந்தழிதரனைப் பார்க்கும் ஆர்வத்தில், கதவின் இடுக்கிலிருந்து எக்கி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த அம்மேதினி அங்கே நின்றிருந்தவனைக் கண்டதும் அதிர்ந்து போய் விழிகள் மூட மறந்தவளாக அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளால் தன் விழிகளையே நம்பமுடியவில்லை.

What’s your Reaction?
+1
16
+1
6
+1
0
+1
4
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!