(25)
கந்தழிதரன் மெதுவாக விழிகளைத் திறந்தபோது யாரோ சம்மட்டியால் தன்னை அடிப்பது போன்ற வலியில் முனங்கியவாறு எழுந்தான்..
வெளிச்சம் இன்னும் முழுதாக மறையவில்லை. நேரத்தைப் பார்க்கும்போதே மாலை ஆறு மணி இருக்கும் என்பது புரிந்தது. சிரமப்பட்டு எழ முயன்றவனுக்கு யாரோ நெஞ்சைக் கூரிய நகங்கள் கொண்டு பிறாண்டுவது போலத் தோன்றச் சிரமப்பட்டு விழிகளைத் திறந்தான். அம்மேதினி இன்னும் அவன் மார்பில் சாய்ந்து உறங்கிக்கொண்டுதான் இருந்தாள்.
மெதுவாக அவளை விலக்கித் தரையில் படுக்க வைத்துவிட்டுச் சிரமப்பட்டு எழுந்தவன்நொண்டியவாறே பதுங்கு குழியின் வாசலுக்கு அருகே வந்தான். சத்தமில்லாது கற்களை விலக்கியவன் ஏதாவது சந்தேகப்படும்படி இருக்கிறதா என்று எட்டிப்பார்த்தான்.
நல்லவேளை அப்படி எதுவும் தெரியவில்லை. நிம்மதியுடன், உடலைக் குறுக்கிக் கிடைத்த இடைவெளிக்கூடாக வெளியே வந்தவன், எங்காவது கிணறு கிடைக்குமா என்று தேடிக்கொண்டு சற்றுத் தூரம் போனான்.
கிணறில்லாத யாழ்ப்பாணமா என்ன? அவன் யூகித்தது போலக் கிணறு ஒன்று இருந்தது. கூடவே நைந்துபோன வாளியொன்றும் சற்றுத் தள்ளி விழுந்திருந்தது. தூக்கிப் பார்த்தான். நெளிந்திருந்தாலும் தண்ணீர் சேகரிக்கக் கூடிய வாளிதான். இப்போது எப்படித் தண்ணீர் எடுப்பது. அங்கிருந்த கயிறு நைந்துபோயிருந்ததால் அதைப் பயன்படுத்த முடியாது. திரும்பியவனின் விழிகளில் சற்றுத் தொலைவில் பெரிய ஆலமரத்தில் தொங்கிக்கொண்டிருந்த விழுதுகளைக் கண்டதும் முகம் மலர்ந்தது.
முடிந்த வரை விரைந்து சென்று அதிலிருந்த மெல்லிய விழுதைப் பற்றி இழுக்க, சிரமப்பட்டு அவன் கையோடு வந்தது அந்த விழுது. அதைக் கொண்டு வாளியைக் கட்டியவன் கிணற்றிற்குள் இறக்கினான். தூசி படிந்திருந்த தண்ணீரை அடித்து விலக்கிவிட்டு தண்ணீரை அள்ளி மேலே இழுத்தான், அத்தனை தண்ணீரையும் காணாததைக் கண்டவன் போல, சொட்டு விடாது குடித்துத் தண்ணீர் தாகத்தைத் தீர்த்தான்.
எதோ புதிதாய் பிறந்த உணர்வு தோன்ற, முகத்தையும், கை கால்களையும் கழுவி விட்டு நிமிர்ந்தபோது சோர்வு மறைந்து சென்ற உணர்வு. மீண்டும் தண்ணீரை அள்ளி எடுத்தவன், பதுங்கு குழியை நோக்கிச் சென்றான்.
உள்ளே வந்தவன் மீண்டும் பாதையை அடைத்துவிட்டு அம்மேதினியின் அருகே வந்து மெதுவாக அவளைத் தட்டி எழுப்ப அவளோ எழமாட்டேன் என்று அடம் பிடித்தவள் போலத் திரும்பிப் படுக்க, அந்த நிலையிலும் இவனுடைய உதடுகளில் மெல்லிய புன்னகை தோன்றியது.
“அம்மணி… எழுந்து கொள்…” என்று உசுப்பியவாறு அவளருகே அமர்ந்துகொள்ள, மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி. உடனே அவள் புறமாகக் குனிந்து, அவளைப் பற்றித் தூக்கித் தன்னோடு அணைத்துப் பிடித்தவன் அந்த வாளியைத் தூக்கி அவள் உதட்டருகே வைக்க, தாய்ப்பசு மடி தேடிய கன்றாகக் கடகட என்று அத்தனை தண்ணீரையும் குடித்து முடித்த அம்மேதினிக்கு அப்போதுதான் உயிரே வந்தது.
இன்னும் தண்ணீர் குடிக்காது இருந்திருந்தால் நீரிழப்பு ஏற்பட்டு உயிரையே விட்டிருப்பாள். ஏற்கெனவே உடல் நடுங்கத் தொடங்கியிருந்தது. மயக்கம் வேறு அவளை ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது. தொண்டை வேறு வறண்டு உதடுகள் வெடித்து ஒரு நாளிலேயே பாதியாகி விட்டிருந்தாள் அம்மேதினி. இந்த நிலையில் கிடைத்த தண்ணீர் மாபெரும் வரப்பிரசாதம் அவளுக்கு.
தண்ணீர் குடித்த களைப்பில் விழிகள் மீண்டும் இழுத்து மூடத் தொடங்க, அவளையும் மீறிக் கந்தழிதரனின் மீது விழ, அவளைத் தன் மடியில் தாங்கிக் கொண்டான் அவன்.
எவ்வளவு நேரமாக அப்படியே இருந்தார்களோ தெரியாது… திடீர் என்று குண்டு அவர்கள் இருந்த இடத்திற்குச் சற்றுத் தள்ளிப்போய் விழுந்தது. அந்த ஓசையைக் கேட்டதும் இவளுடைய உடல் நடுங்கியது.
அவளுடைய தோழி வான்மதியும் ஈழ புவனும் சிதைந்த உருவங்களாய் அவளைத் தம்மோடு வருமாறு அழைத்தனர். இவள் மறுத்தும் அவர்கள் விடவில்லை. இவள் பதறியவளாகக் கந்தழிதரனைத் தேட, அவனோ மார்பில் இரத்தம் வடியத் தரைசாய்ந்திருந்தான். ஒரு இராணுவவீரன் அவனுடைய மார்பைச் சப்பாத்துக் காலால் அழுத்திக்கொண்டிருந்தான்… அதைக் கண்டு தன்னவனைக் காக்கும் நோக்கோடு பதறித் துடித்தவாறு எழ, அந்த இடமே இருள் மாயாணமாக இருந்தது.
வியர்வை கொப்பளிக்கத் துடித்துப் பதைத்தவாறு சுற்றுமுற்றும் பார்க்க, மெழுகுதிரி ஒன்று அணையும் நிலையில் இறுதித் தருவாயில் எரிந்துகொண்டிருப்பதைக் கண்டாள். அப்போதுதான் தான் கண்டது கனவென்றே அவளுக்குப் புரிந்தது. கூடவே பயங்கரமாகக் குண்டு விழும் ஓசை கேட்க ஒவ்வொரு முறை குண்டு விழும்போதும் இவளுடைய உடல் உதறி நடுங்கியது.
பதட்டத்துடன் திரும்பிப் பார்க்கக் கந்தழித்தரன் இவளை மடிதாங்கியவாறு உறங்கிக் கொண்டிருந்தான். மெழுகு வர்த்தியோ எந்தநேரமும் அணைந்துவிடுவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது.
சரி எழுந்து சென்று வேறு மெழுகு திரியைக் ஏற்றலாம் என்று எண்ணியவளாக கந்தழிதரனின் தூக்கத்தைக் கலைக்காத வகையில் எழத் தொடையில் பயங்கர வலி.
‘அம்மா…’ என்று முனங்கியவாறு காயத்தைப் பற்ற, அவளுடைய முணங்கலில் சடார் என்று விழிகளைத் திறந்து எழுந்தமர்ந்தான் கந்தழிதரன். எழுந்த வேகத்தில் தலையைச் சுற்றியது. ஆனாலும் தன்னைச் சமப்படுத்தியவனாக, எழுந்து நின்ற அம்மெதினியை அந்த மங்கிய வெளிச்சத்திலும் பார்த்து,
“என்னம்மா வலிக்கிறதா…?” என்றான் கனிவோடு. அந்தக் கனிவு அன்னையை நினைவு படுத்த, அதுவரை இருந்த அழுத்தம் அவளைக் கலங்கச் செய்ய, ஒரு விம்மலுடன் பாய்ந்து அவன் மார்பில் சரண் புகுந்தாள் அம்மேதினி.
விசும்பியவளின் தலையை வருடிக் கொடுத்தவனாக,
“எ… என்ன அம்மணி…” என்று கேட்க,
“அம்மா… அம்மா என்னைக் காணவில்லை என்று பதறப்போகிறார்கள்… நான் இப்போதே வீட்டிற்குப் போகவேண்டும்…” என்று மேலும் அழத் தொடங்க, அவளுடைய அழுகையும் பதட்டமும் அன்னையைக் காணாதது மட்டுமல்ல, நடந்த சம்பவத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியின் விளைவு என்பதைப் புரிந்து கொண்டவனாக,
“போகலாம் அம்மணி. இப்போதைக்கல்ல… கொஞ்சம் பொறுத்து… இந்த நிலைமையில் நாம் எங்குமே போகமுடியாது. வெளியே போனால் மறு நிமிடம் நாம் சட்டினிதான்…” என்று சிறு கண்டிப்புடன் குழந்தைக்குக் கூறுவது போலக் கூற, அவளோ…
“பயமாக இருக்கிறது கந்து… மிக மிகப் பயமாக இருக்கிறது… நாம் உயிரோடு இருப்போமா என்று அச்சமாக இருக்கிறது…” என்று அழத் தொடங்கியவளின் இடைக்கூடாகத் தன் கரத்தைக் கொண்டு சென்றவன் அவளைத் தன்னோடு இறுக்கியவாறு,
“ஷ்… இதென்ன குழந்தைகள் போல… அதுதான் நான் இருக்கிறேன் அல்லவா… பிறகு என்ன…” என்று அவன் அன்பாகக் கடிய, என்ன நினைத்தாளோ சற்று நேரம் அமைதியாக இருந்தவள் பின் நிமிர்ந்து அவனைப் பார்த்து,
“கந்து… இப்போதே… இந்தக் கணமே என்னைத் திருமணம் முடிக்கிறாயா…” என்றாள் உதடுகள் துடிக்க. அதிர்ந்துபோனான் கந்தழிதரன்.
“ஏய்… என்ன உளறல் இது…? என்று அவன் சீற அவளோ மறுப்பாகத் தலையை ஆட்டி,
“இல்லை கந்து… நிஜமாகத்தான் கேட்கிறேன்… எப்படியும் சாகப்போகிறோம்… இதோ இங்கே புதைகுழியில் யாருமற்ற அநாதைப் பிணங்களாக உக்கி மண்ணோடு மண்ணாகப் போகிறோம். அதற்கிடையில் என் ஆசையை நிறைவேற்றிவிடு கந்து…” என்று அவள் அழுகையில் குலுங்க இவன் உடல் இறுகியது.
“முட்டாள் தனமாகப் பேசாதே அம்மணி. உனக்கு ஒன்றும்… ஒன்றுமே நடக்காது… நம்பு… நான்தான் இருக்கிறேன் அல்லவா… பிறகு என்ன…?” என்று இவன் கடிய,
“நீயும் உயிரோடு இருக்கவேண்டுமே கந்து என்னைக் காக்க… இப்போதுதான் ஒரு கனவு கண்டேன். என்னோடு பேசிச் சிரித்த என் தோழி, கண்ணிமைக்கும் நொடியில் இறந்து போனாள்… உன்னை… அந்த இராணுவம்… காலில் மிதித்து… கடவுளே… நிரந்தரமில்லாத வாழ்க்கை கந்து… எந்த நேரம் என்ன நடக்கும் என்று தெரியாது.. வாழ்க்கையை அனுபவிக்காமல் செத்துப்போக நான் தயாரில்லை… நாம் தப்புவோம் என்கிற நம்பிக்கையும் எனக்குச் சுத்தமாக இல்லை… எனக்கு ஏதோ நாம் சாகப்போகிறோம் என்பது போலவே தோன்றுகிறது… தயவு செய்து என்னைத் திருமணம் செய்துகொள்…. இறக்கும் போதாவது உன் மனைவியாக உரிமையோடு இறந்துபோகிறேன்…” என்று கெஞ்சச் சற்று நேரம் உதடுகளை அழுந்த மூடி நின்றவன்,
“எப்படி அம்மணி… உனக்கு மட்டும் இப்படி முட்டாள்தனமான யோசனை வருகிறது… நமக்கு எதுவும் ஆகாது… பேசாமல் தூங்கு…” என்று அவன் எரிச்சலுடன் கூற,
இவளோ அவனை விட்டு விலகி முழங்கால்களைக் கட்டியவாறு,
“ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு உனக்குத் தெரியும்தானே… அவன் கூட அப்படித்தான் நினைத்திருந்தான்… ஆனால் இறுதித் தருவாயில் மரணத்தை நோக்கிச் செல்கிறோம் என்று தெரிந்தபோது, தன் காதலியை மணந்து கொண்டான்… இப்போது நாமும் அந்த நிலையில்தான் இருக்கிறோம்… நம்மால் தப்ப முடியாது என்று புரிந்து போயிற்று. சாகப்போகிறோம் என்கிறது உறுதியான பிறகு, நம் விருப்பத்தை நிறைவேற்றுவதில் என்ன தப்பு… எனக்கு உன்னோடு வாழவேண்டும்… ஒரு நாளானாலும் பரவாயில்லை, ஒரு விநாடியானாலும் பரவாயில்லை… உன் கரத்தில்… உன் மனைவியாகச் செத்துப் போகிறேன்… மறுக்காதே கந்து… நீ ஏற்றுக்கொள்ள மாட்டாய் என்று எனக்குத் தெரியும்… குறைந்தது என் கடைசி ஆசையையாவது நிறைவு செய்யேன்… ஒரே ஒரு நாளாக இருந்தாலும் உனக்கு மனைவியாக இருந்துவிட்டுச் சாகிறேன்… தயவு செய்து என்னை இப்போதே மணந்துகொள் கந்து…” என்று கெஞ்சக் கந்தழிதரன்தான் திணறிப்போனான்.
“அம்மணி… மனதைத் தளர விடாதே… நீ நினைப்பது போல எதுவும்… எதுவுமே நடக்காது… ஐ ப்ராமிஸ் யு…” என்று சமாதானப் படுத்த முயல, அவளோ,
“பார்த்தாயல்லவா… கண்ணிமைக்கும் நொடியில் என்னவெல்லாம் நடந்து விட்டன என்று… இப்போது இருக்கும் உயிருக்குக் கூட உத்தரவாதமில்லை. இங்கிருந்து தப்புவோமா தெரியவில்லை. தப்பினாலும் கூடப் போகும் வழியில் என்ன நடக்கும் என்பதற்கும் உத்தரவாதமில்லை… இங்கிருந்து புறப்படும்போது எத்தனை பயங்கரங்களைச் சந்திப்போமோ… இல்லை கந்து… நாம் உயிர் பிழைப்பதற்குச் சாத்தியங்களே இல்லை…” என்று அவள் முடிக்கவில்லை எங்கோ சற்றுத் தொலைவில் பயங்கரமாகக் குண்டு விழும் ஓசை கேட்க நடுக்கத்துடன் கந்தழிதரனை நெருங்கியவள்,
“எதற்குத் தப்பினாலும், விழும் குண்டுகளுக்குத் தப்புவோமா தெரியாது கந்து……” என்றவள் அண்ணாந்து அவனைப் பார்த்து,
“நம்முடைய ஆயுளுக்குக் காலங்கள் மிக மிகக் குறைவு கந்து… கடவுள் நாட்களை எண்ணச் சொல்லிவிட்டான்…” என்றவள் நடுங்கியவாறு,
“இன்று நீ தண்ணீர் எடுத்துத் தரவில்லை என்றால் நீரிழப்பால் என் உயிர் போயிருக்கும்… இப்போது கூட இந்தக் காயம் வலிக்கிறது கந்து… ஒரு வேளை நம்மால் வெளியே போக முடியாமல் போனால் இதற்குள்ளேயே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால்… எனது காயமும் உனது காயமும் தக்க சிகிச்சையில்லாமல் நோய்த்தொற்றாகி இறக்க நேர்ந்தால்… நான் தனியாளாக இறக்கக் கூடாது கந்து… உன் மனைவி என்கிற பெயரோடு உன் கரங்களைக் கோர்த்தவாறு இறக்கவேண்டும். ப்ளீஸ் கந்து… அந்த மூன்றாவது பகுதியில் எலும்புக்கூடுகள்… கண்டேன்… ஏன் இறந்தார்கள். சுடுபட்டு இறந்தார்களா…? வெளியே போக முடியாமல் இதற்குள் சிக்கி இறந்தார்களா? அவர்களைப் போலத்தான் நாமும் இறந்து போவோமோ… எப்படியும் இராணுவம் நம்மைத் தேடி வந்துவிடும்… நாம் சாகத்தான் போகிறோம். சாகும்போதாவது கணவன் மனைவியாக உறவு முறையோடு சாகலாம்… ப்ளீஸ் கந்து… எப்போதாவது இந்த இடத்தைக் கிண்டும்போது நம் எலும்புக்கூடுகளைக் கண்டால், அந்த எலும்புக்கூடுகள் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இருக்கட்டும் கந்து. அதற்கு என்னைத் திருமணம் முடித்துக்கொள்ளேன்… நமக்குக் கடவுள் கொடுத்த காலம் எத்தனை என்று தெரியாது. அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ இல்லை ஒரு நாளோ… அத்தனை நேரத்திலும் உன் மனைவியாக இருந்து விடுகிறேன்…” என்று கெஞ்ச கந்தழிதரனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளோ,
“பசிக்கிறது கந்து… ஒரு வேளை சாப்பாடு இல்லாமலே கூட நாம் இறந்து போவோம்… கந்து… கேட்டாய் அல்லவா… குண்டு மழை பொழியத் தொடங்கி விட்டது… அதில் ஒரு குண்டு இந்தப் பதுங்கு குழியில் விழுந்தால்? இதற்குள் நாம் தப்ப முடியாது…” அவள் முடிக்கவில்லை மிக மிக அருகே ஒரு குண்டு வந்து விழுந்தது. கூட அந்த இடமே பயங்கரமாக நடுங்கியது. காதுகள் அடைத்துக் கொண்டன. பதற்றத்தோடு அவனை இறுகக் கட்டிக் கொண்டாள் அம்மேதினி. கந்தழிதரனுடைய உடலும் ஒரு கணம் நடுங்கித்தான் போனது.
ஒரு வேளை இவள் சொல்வது போல இருவரின் உயிரும் மரணிக்குமானால், யாருமில்லா அநாதையாகத்தானே இறக்கவேண்டி வரும். அதை விட அவளுடைய ஆசையை நிறைவேற்றுவதில் என்ன தவறிருக்கிறது. ஆனால் அவளுக்கு வயது வெறும் பதினாறாயிற்றே… எப்படி அவளைத் திருமணம் முடிப்பது? ஏன் கூடாது… மரணத்திற்கு வயது ஒரு தடையா என்ன? எது எப்படியாக இருந்தாலும் அடுத்த விநாடி என்ன நடக்கும் என்பது தெரியாது. இப்போதிருக்கும் இந்த நொடி மட்டும்தானே உண்மை. நீ பார்க்கும் வயதை மரணம் பார்க்காது… இதோ இப்போது இந்தக் கணம் உனக்குக் கிடைத்த இந்தக் குறுகிய காலம் மட்டும்தான் நிதர்சனம். இந்த நிலையில் ஏன் அவளுடைய ஆசையை நிறைவேற்றக் கூடாது… ஒரு வேளை இதுதான் இறுதித் தருவாயின் வேண்டுகோளாக இருக்குமோ… அப்படியானால் அவளுடைய வேண்டுகோளை நிறைவேற்றாமல் மரணிப்பதை விட, நிறைவேற்றிவிட்டுச் சாகலாமே இப்படிப் பலவாறாக மனம் சிந்திக்க அம்மேதினியோ,
“இதுதான் என் கடைசி ஆசை கந்து… அதைக் கூட நீ நிறைவேற்ற மாட்டாயா?” என்று பலவீனக் குரலில் கேட்க, அப்போதுதான் கவனித்தான் அவளுடைய முகம் இரத்தப்பசையை இழந்து கொண்டிருப்பதை. பதட்டத்துடன் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். சந்தேகமேயில்லை. உடல் சுட்டது. காய்ச்சல் ஏறியிருந்தது. கழுத்தையும் தொட்டுப் பார்த்தான். பயங்கரமாகச் சுட்டது. நடுங்கிப் போனான் கந்தழிதரன்.
அப்படியானால் அவள் சொல்வது போலத் தப்ப முடியாமல் போய்க் காயங்களுக்கு வைத்தியமும் இல்லாமல் தொற்று ஏற்பட்டு இறந்துவிடப் போகிறார்களா? சாப்பாடு இல்லாமல் செத்து மடிவார்களா? தப்ப முயன்று குண்டில் சிக்கி இறப்பார்களா? இல்லை இராணுவத்தின் பிடியில் சிக்கிச் சீரழிந்து சாவார்களா? எந்தப் பக்கத்திலிருந்து மரணம் அவர்களைத் தேடி வரப்போகிறது? அவனுடைய அம்மணிக்கும் ஏதாவது ஆகிவிடுமா? அதற்கு மேல் அவனால் சிந்திக்கவே முடியவில்லை. தவிப்புடன்
“அம்மணி…” என்று நடுங்க,
“ப்ளீஸ் கந்து… என்னைத் திருமணம் முடித்துக்கொள்ளேன்…” என்று கெஞ்ச அதற்கு மேல் அவனால் எதையும் சிந்திக்க முடியவில்லை. தவிப்புடன்,
“என்னிடம் தாலி இல்லையேடி…” என்று பெரும் வலியோடு கூற, அந்த நிலையிலும் குறும்புப் புன்னகையுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள்
“இதற்கு நாள்பார்த்து தாலி உருக்கித் திருமணம் முடிக்க ஆசாரியைத் தேடவா முடியும்?” என்று கேட்டவள், சோர்வுடன் விழிகளை மூடி மூடித் திறந்து, அவன் கழுத்தில் அம்மையப்பன் உருவம் பொரித்த பதக்கத்துடன் தொங்கிக்கொண்டிருந்த சங்கிலியைப் பற்றி,
“இதையே தாலியாக ஏற்றுக்கொள்கிறேன்… கட்டிவிடு…” என்றாள் முனங்கலாய். மறுக்காது அவள் கழுத்தில் தன் சங்கிலியைக் கழற்றி அவளுடைய கழுத்தில் போட்டுவிட்டான்.
அந்த சங்கிலியைக் கழுத்தில் போட்டதும் உலகையே ஜெயித்து விட்ட ஆனந்தம் அவளுக்கு. அதைத் தூக்கிப் பார்த்தவளுக்கு நெஞ்சம் நிறைந்து போனது. முகம் மலர, உதடுகள் துடிக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவள்.
“கந்து இது போதும் எனக்கு… இது போதும்… இப்போது உனக்குச் சத்தியம் செய்கிறேன்… வாழ்விலும் சாவிலும் உன் கூடவே வருவேன் கந்து… உனக்காகவே வாழ்வேன்… உன் மூச்சாய் வாழ்வேன்… உன் சுக துக்கங்கள் என்னதாகும்… எனக்கு நீ… உனக்கு நான்…” என்றவள் அவனுடைய கரத்தைப் பற்றித் தன் மார்போடு அணைத்தவாறு எழுந்தாள். அவனும் அவள் கூட எழுந்தான். எழும்போதே இவனுடைய உடலும் தள்ளாடியது.
இதோ உருகி முடிக்கிறேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த மெழுகுதிரியைப் பார்த்தவள், கந்தழிதரனின் கரத்தைப் பற்றி, மெழுகுதிரியைச் சுற்றி நடக்கத் தொடங்க மறுக்காது அவளோடு சேர்ந்து நடந்தவனின் நடையும் சற்றுத் தடுமாறியது.
அவனுக்கு வேதனையில் நெஞ்சே வெடித்துவிடும் போலத் தோன்றியது. மீண்டும் சடசடவென்று சுடுபடும் ஓசை. கூடவே குண்டு விழும் ஓசை,
“நம்முடைய திருமணத்தைப் போல உலகில் யாருக்குமே திருமணம் நடந்திருக்காது கந்து… பார்த்தாயா… குண்டுகள் மேளங்களாக, துப்பாக்கிச் சூடு பட்டாசுகளாக… பாயும் ஷெல்களின் கூவல்களே நாதஸ்வரமாக” என்றவள் அவனை இழுத்துக்கொண்டே அந்த மெழுகுதிரியை மூன்று முறை வலம் வந்தாள்.
“அக்கினியைக் கூடச் சாட்சிக்கு அழைத்தாயிற்று…” என்று மென்மையாகக் கூறியவள், அவனை நிமிர்ந்து பார்த்து
“பொட்டு வைக்க மறந்துபோனாயே கந்து…” என்றாள் ஆர்வமாய்.
“பொட்டா… அதற்கு நான் எங்கே போவேன்…” என்று குழம்ப. அவனுடைய வலது கரத்துப் பெருவிரலைப் பற்றி மார்பிலிருந்து கசிந்துகொண்டிருந்த உதிரத்தில் தொட்டுத் தன் நெற்றியில் வைத்தெடுக்க, இவனுக்கோ வலியையும் மீறி சிரிப்பு வந்தது.
“நிறையவே திரைப்படங்கள் பார்த்திருக்கிறாய் அம்மணி…” என்றான் அந்த நிலையிலும் கிண்டலாய். ஆனால் அவளோ முகம் பூரிக்க, தன் இரு கரங்களையும் விரித்து
“என்னை எடுத்துக்கொள் கந்து…” என்றாள் ஒரு வித ஏக்கத்துடன். அதுவரை அவளுடைய விருப்பத்திற்காய் நடந்து கொண்டிருந்தவனுக்கு அவளுடைய அழைப்பில் தூக்கிவாரிப் போட்டது. பதட்டத்துடன் இரண்டடி தள்ளி நின்று,
“நோ…” என்று வேகமாக மறுத்தான். பின், தலையையும் ஆட்டி “நோ… என்னால் முடியாது அம்மணி…” என்ற கூற,
அவளோ புன்னகை மாறாது,
“ஏன்… அந்தப் பதினாறு வயது உன்னைத் தடுக்கிறதா? அது மரணத்திற்குத் தெரியாதே… எடுத்துக்கொள் கந்து… இந்தக் கணம், இந்த நொடி நீ வேண்டும்… உன்னோடான வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இந்தக் குறுகிய நேரத்தில் நான் அறிந்து கொள்ள வேண்டும்… நமக்குக் கொடுத்த காலம் குறுகிக் கொண்டிருக்கிறது. இப்போது நான் உன் மனைவி… உன்னிடம் என்னை முழுதாக ஒப்படைக்க வேண்டும்… எடுத்துக்கொள் முழுவதுமாக உன் மனைவியாக இறந்து போகிறேன்… ப்ளீஸ்…” என்று கெஞ்ச அவனோ மறுப்பாகத் தலையை அசைத்தவாறு,
“இல்லைம்மா… அதற்கான வயது… இதில்லை… ப்ளீஸ்… புரிந்துகொள்…” என்று கெஞ்ச அவனை நெருங்கியவள்,
“திருமணம் என்றால் வெறும் தாலி மட்டுமல்ல… எல்லாம் சேர்த்துத்தான்…” என்று கூறியவள் வேகமாக அவனை இறுக அணைத்து அவனுடைய உதடுகளில் தன் உதடுகளைப் பதித்து இறுக்கிக் கொள்ள, அதற்கு மேல் அவனாலும் மறுக்க முடியவில்லை.
அவன் என்ன வெறும் ஜடப்பொருளா என்ன. காலம் சூழல் தேவை இவை அனைத்தும் சேர்ந்து அவனைத் தடுமாற வைக்க, தன்னிலை கெட்டான் அவன்.
பயத்திற்கும், வயதிற்கும், காதலுக்குமான ஓட்டப்போட்டியில் காதலே முதலிடம் பெற்று வென்றது. காதலுக்கும் காமத்திற்குமான போட்டியில் காமம் முதலிடம் பெற்றது.
எதைத் தவறு என்று நினைத்தானோ அது அந்த நேரத்திற்குச் சரியானது. எது குற்றம் என்று ஒதுங்கினானோ அந்தக் குற்றம் அக்கணத்தில் தூய்மையானது. எதை எதிர்மறை என்று நினைத்தானோ அது நேர்மறையானது. எது ஒவ்வாது என்று நினைத்தானோ அது கச்சிதமாய்ப் பொருந்திக் கொண்டது. சரி தவறு என்பதற்குமான வேறு பாடு வெறும் நூலிழை மட்டும்தானே. அந்த நூல் அறுந்து போகத் தவறும் சரியானது.
அவனுடைய தேடலிலும் வேகத்திலும் அவளைப் பற்றியிருந்த காய்ச்சல் மெல்ல மெல்லக் காணாமல் போக, அங்கே காமத்தின் ஆட்சி மெல்ல மெல்லப் பொங்கிப் பிரவாகிக்கத் தொடங்கியது. அவனுடைய கடிய உடல் அவளுக்குப் பஞ்சணையாக, அவளுடைய மென்னுடல் அவனுக்கு மஞ்சமானது.
எல்லைகளைக் கடந்ததுதானே காதல். காதலுக்கு ஏது வயது. அதை அப்போது அந்தக் கணம் புரிந்துகொண்டான் கந்தழிதரன். அந்தக் கணம், அந்த விநாடி ஏற்பட்ட பயமும், பதட்டமும் சந்தித்த பயங்கர நிகழ்வுகளும் இருவரையுமே செயலிழக்கச் செய்ய, இறுதியாகக் கிடைத்திருக்கும் காலம் அது என்கிற உணர்வில், ஒருவரை ஒருவர் அவசரமான அவசியத்துடன் அவதானமாகக் கையாளத் தொடங்கினர். அவர்களின் இல்லற அரங்கேற்றத்தின் வேகத்தைக் கண்டு வெட்கம் கொண்டு மெழுகுதிரி கூடத் தன் விழிகளை மூடிக் கொள்ள, அந்தப் பயங்கர இருட்டு இருவருக்கும் காதல் யுத்தம் செய்யத் துணை புரிந்தது. அதுவரை இருந்த வெட்கம் களைந்து வேகம் பெற்று ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ள, அங்கே அழகிய முதலுறவு இறுதி உறவென்ற எண்ணத்தில் கடுமையாகப் பொழிந்த குண்டு மழையிலும், துப்பாக்கிச் சூட்டிலும் இனிமையாய் நிறைவாக முடிவடைந்தது.
அந்த நேரம் இருவருக்குமே காயம் மறந்து போனது. காலமும் மறந்து போனது. உலகமே மறந்து போனது. இறுதியாக அவள் உதடுகளில் தன் உதடுகளைப் பொருத்தியபோது அவளுடைய விழிகளில் மட்டுமல்ல, அவனுடைய விழிகளிலும் கண்ணீர் மழை,
எல்லாம் முடிந்த பின்தான், செய்த செயலின் வீரியம் அவனுக்குப் புரிந்தது.
மெதுவாக அவளை விட்டு விலகியவன் அவளுக்கு அருகாமையில் சரிந்து படுக்க, அம்மேதினியோ எதையோ சாதித்த பெரும் நிறைவுடன் இன்னொரு மெழுகுதிரியை உயிர்ப்பித்து இருளை போக்கிவிட்டுத் தன்னவனின் மார்பில் தலையைப் பதித்து விழிகளை மூடி,
“கந்து… நன்றி கந்து… இது போதும் எனக்கு… ஆண்டாண்டு காலங்கள் உன்னோடு வாழ்ந்துவிட்ட பேரமைதி என்னிடம் வந்துவிட்டது. இதோ இந்தக் கணம்கூட மரணம் என்னைத் தழுவினால் மகிழ்ச்சியாகவே அதை வரவேற்பேன்…” என்றவாறு தன் விழிகளை மூட, அவளை இறுக அணைத்துக்கொண்டான். ஆனாலும் அவனுடைய உள்ளத்தில் மாபெரும் போர்க்களம்.
‘என்ன காரியம் செய்துவிட்டான். கடவுளே… அம்மணியைப் போய் அவன்…’ அதற்கு மேல் அவனால் நினைக்கக் கூட முடியவில்லை. நெஞ்சம் வேதனையில் தவிக்க, மெதுவாகத் திரும்பித் தன்னவனைப் பார்த்தாள் அம்மேதினி. கலங்கிய அவன் முகத்தைக் கண்டு புன்னகையைச் சிந்தியவள், அவன் கன்னத்தில் தன் கரத்தைப் பதித்து, அவனை நோக்கிக் குனிந்து மீண்டும் அவனுடைய உதடுகளில் தன் உதடுகளைப் பொருத்தி, கன்னத்தில் பதித்து வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு, அவன் இமைகளைத் தன் பெருவிரலால் வருடிக் கொடுத்தவாறு,
“என் மீது கோபமா?” என்றாள் மென்மையாக.
இவனோ மறுப்பாகத் தலையை ஆட்டி,
“என் மீதுதான் கோபம் அம்மணி… எதுவாக இருந்தாலும் உன்னைத் தொட்டிருக்கக் கூடாது… என்னை விடச் சிறியவள் வயதில் மட்டுமல்ல, உடலாலும்… உன்னை நான்…” என்றவன் கூற முடியாமல் பற்களைக் கடித்து விழிகளை இறுக மூட, அவளை மீறி உதடுகள் பிளந்து சிரிப்பைச் சிந்தின.
அவளை அணைத்தபோது அவன் காட்டிய வேகமும் துடிப்பும் நினைவுக்கு வர, அவள் மீது காதல் இல்லாமலா இத்தனை அவசரமும் ஆவேசமும் வேகமும் காட்டினான். அந்த வேகத்திலும் அவளுக்கு வலித்துவிடுமோ என்கிற கவனம்தானே அதிகமாக இருந்தது. அது மட்டுமா, அவளைப் பூக்குவியலை வருடுவது போல அல்லவா தன் மென்மையைக் காட்டினான். அவளைத் தொட்ட கரங்கள் கூறாதா அவள் மீது அவன் வைத்த காதலை. ஆனால் அதைப் புரிந்துகொள்ள அல்லவா மறுக்கிறான். அதற்குக் காரணம் அவளுடைய வயது. பதினாறு வயதெல்லாம் குழந்தைப்பருவம் அல்ல என்று அவனுக்கு யார் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள். மீண்டும் அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு,
“பால் கொட்டியாயிற்று இனி அதைப் பாத்திரம் கொண்டு அள்ளப்போகிறீர்களா என்ன?” என்றவள்,
அவன் கரத்தின் மீதே தலைவைத்து மல்லாக்காகப் படுத்தவள்,
“எது எப்படியாக இருந்தாலும் எனக்கு நிறைவாக இருக்கிறது. எதையோ பெரிதாகச் சாதித்தது போல மனம் துள்ளிக் குதிக்கிறது… இனி எதைக்கண்டும் நான் அஞ்சப்போவதில்லை. மரணத்தைக் கூட…” என்றதும் சீற்றத்துடன் அவள் பக்கமாகத் திரும்பிப் பார்த்தவன்,
“இனி ஒரு முறை கூட மரணத்தைப் பற்றிப் பேசாதே அம்மணி…” என்றவன், தன் இடது மார்பில் கைவைத்து, இங்கே வலிக்கிறது…” என்று கூற, மெல்லியதாகச் சிரித்தவள்,
“எதை அருகில் வைத்திருக்கிறோமோ அதைப் பற்றிப் பேசவேண்டாம் என்கிறீர்களே என் கணவா…” விழிகளை மூட, வலியுடன் திரும்பி அவளைத் தனக்குள் புதைப்பவன் போல அணைத்துக்கொள்ள. இருவருடைய விழிகளும் தாமாக மூடிக்கொண்டன.
அந்தத் தூக்கத்திற்கு ஆயுள் சொற்பம் என்பதைச் சீக்கிரமே இருவரும் புரிந்துகொள்ளும் வகையில், பதுங்கு குழிக்கு மேல் மெல்லிய சரசரப்புச் சத்தம் கேட்கத் தொடங்கியது.