Thu. Nov 14th, 2024

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 23/24

(23)

 

இராணுவத்தினால் சுற்றிவளைக்கப்பட்டது புரிந்ததும் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தது ஒரு சில கணங்களே. பின் வேகமாகத் தப்புவதற்கான வாய்ப்பு எத்தனை சதவிகிதம் என்பதை ஆராய்வது போலச் சுற்றும் முற்றும் பார்த்தான்.

அதே நேரம் அம்மேதினியும் நடக்கப்போகும் விபரீதத்தைப் புரிந்துகொண்டவள் போல இரத்தம் உறைய அச்சத்துடன் கந்தழிதரனைப் பார்க்கக் கரங்களோ அவனுடைய இரத்தம் படிந்த உள் பெனியனை இறுகப் பற்றிக்கொண்டது.

உடனே தன் நிலையை மறைத்தவனாக அவளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டவனுக்கு எப்படி அவளைக் காக்கப்போகிறோம் என்று தெரியாமல் சற்றுத் தடுமாறினான்.

ஏதாவது வழி… ஏதாவது வழி… யோசனையுடன் நிமிர்ந்து பார்க்க அவன் விழிகளுக்குத் தெரிந்தது அருகேயிருந்த அந்த உயர்ந்த அடர்ந்த மரம்தான். சற்றும் யோசிக்காமல் எழுந்தவன், அந்த மரத்தைப் பற்றி மேலேறி எட்டி நின்ற கிளையைப் பாய்ந்து பற்றி, அதில் ஏறி அகலமான இரு கொப்புகளுக்கு இடைப்பட்ட இடத்தில் தங்கி நின்றவன், அப்படியே கால்களால் ஒரு கொப்பை வளைத்துப் பிடித்து அப்படியே தலைகீழாகச் சரிந்து அவளை நோக்கித் தன் கரத்தை நீட்டி,

“அம்மணி… என் கரத்தை இறுகப் பற்று… சீக்கிரம்…” என்றான். அவளும் தாமதிக்காது அவன் நீட்டிய கரத்தைப் பற்ற முயன்றாள். அந்தோ பரிதாபம் எட்டவில்லை. அதே நேரம் காலடியோசைகள் மிக அருகாமையில் கேட்கத் தொடங்க,

“பாய்ந்து பற்றிக்கொள்…” என்றான் அழுத்தமான மெல்லிய குரலில் அவன் சொன்னதுபோலப் பாய அவனுடைய நடுவிரலைத்தான் முட்டி நின்றாள் அம்மேதினி.

தவிப்புடன் சத்தம் வந்த திசை நோக்கிப் பார்த்துவிட்டு விழிகள் கலங்க மீண்டும் கந்தழிதரனைப் பார்க்க,

“யு கான் டு இட் அம்மணி… அன்று மாமரத்தில் ஏறினாய் அல்லவா அது போலத்தான் இதுவும். நான் இருக்கிறேன் பயப்படாதே…” என்றவன் இப்போது தன் கால்களின் பிணைப்பை விடுவித்து, ஒற்றைக் கால் மடிப்பால் கிளையைப் பற்றிக்கொண்டு மறு காலை சற்று இளக்கி இவள் பக்கமாகச் சற்று முன்னேற இப்போது நான்கு அங்குலம் கீழே இறங்கியிருந்தான் கந்தழிதரன்.

இப்போதும் பாய்ந்து அவனுடைய கரத்தைப் பற்ற முயல, அவளுக்குக் கை வழுக்கிய தருணம் மறு கரத்தால் அவளுடைய கரத்தைப் பற்றி மேலே இழுத்தான். அவன் இழுத்த வேகத்தில் அவள் மேலே சென்ற அடர்ந்த இலைகளுக்குள் மறையவும் இராணுவ வீரர்கள் அந்த இடத்தை வந்து சேரவும் நேரம் சரியாக இருந்தது..

எந்தச் சலசலப்புமில்லாது அவளுடைய கரத்தை ஒரு கொப்பைப் பிடிக்குமாறு செய்தவன், இப்போது சரியாக நிமிர்ந்தமர்ந்து தொங்கிக் கொண்டிருந்தவளைப் பற்றி ஏற உதவி செய்து மரத்தின் பெரிய அகன்ற கொப்பில் அமரச் செய்ய அவன் முகம் பார்த்தவாறு இரு பக்கமும் கால்களைப் போட்டு அமர்ந்தாள் அம்மேதினி. அந்த நேரம் இருவருக்குமே ஏதோ ஒரு மலையைப் புரட்டிப்போட்ட உணர்வு.

எத்தனை பெரிய ஆபத்திலிருந்து தப்பிவிட்டார்கள். கொஞ்சம்… கொஞ்சம் தாமதித்திருந்தாலும் அவர்களின் உடல் தரையில் சாய்ந்திருக்கும். அந்த உணர்வே நடுக்கம் கொடுக்க, தன் முன்னால் அமர்ந்தவனை ஏறிட்டு எதையோ கூற வாய் எடுத்தாள். உடனே அவளுடைய வாயைப் பொத்தியவன், தன் சுட்டுவிரலால் வாயில் வைத்து உஷ் என்று அடக்கிவிட்டுச் சற்றுப் பின்புறமாகத் திரும்பி, இலைகள் விட்டுவைத்த இடைவெளிக்கூடாக எட்டிப் பார்த்தான். அங்கே துப்பாக்கிகளை ஏந்தியவாறு பதுங்கிப் பதுங்கி வந்த இராணுவத்தைக் கண்டு இவனுடைய தேகமும் மெல்லியதாக நடுங்கியது.

கதிர் முணையளவு வித்தியாசத்தில் தப்பியிருக்கிறார்கள். இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும்! அதே நேரம்,

கந்தழிதரன் இலைகளுக்கூடாக உற்று உற்றுப் பார்ப்பதைக் கண்ட அம்மேதினியும், அவனை நெருங்கி அமர்ந்தவாறு, அவன் பார்த்த திசைக்கு எட்டிப் பார்த்தாள். பார்த்தவளின் உடல் வெளிப்படையாகவே நடுங்கத் தொடங்கியது. அதைப் புரிந்துகொண்டவனாக அவள் பக்கமாகத் திரும்பி, அவளை இழுத்துத் தன் மீது போட்டுக்கொண்டு அவள் காதுகளுக்கூடாகக் குனிந்து,

“ஷ்… சிறு ஒலி கூட எழுப்பாதே… மெல்லிய அசைவு கூட உன்னிடமிருந்து வரக்கூடாது… புரிந்ததா?” என்று கிசுகிசுக்க, இவளோ நடுக்கம் மாறாமலே தலையசைத்தாள். இராணுவ வீரர்கள். மெது மெதுவாக இவர்கள் மறைந்திருந்த மரத்திற்கு அருகே வரத் தொடங்க கந்தழிதரன், அம்மேதினியைத் தன்னோடு இறுக்கியவாறே மரத்தோடு மரமாக ஒட்டி நின்றவாறு கிடைத்த இடைவெளிக்கூடாகக் கீழே என்ன நடக்கிறது என்பதை மிக அவதானமாகப் பார்க்கத் தொடங்கினான்.

சுத்த வரப் பார்த்த இராணுவம், சிங்களத்தில் எதையோ கூறியவாறு அந்த இடத்தை விட்டு மறு திசைக்கு நகரத் தொடங்க, அதில் நால்வர் முன்னேறிப் போக ஒருவன் மட்டும் ஏனோ சந்தேகம் கொண்டவன் போலப் பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே இவர்களிருந்த மரத்தடியின் கீழ் வந்து நின்றான். அவன் கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தாலும் இவர்கள் இருப்பது தெரிந்துபோகும்.

சரியாக இவர்கள் நின்றிருந்த இடத்திற்குக் கீழாக வந்து நின்ற இராணுவ வீரன் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருக்க இவர்களுடைய போதாத காலமோ என்னவோ, கந்தழிரனின் காலிலிருந்து வழிந்த இரத்தம் பயணித்து அவன் அணிந்திருந்த சப்பாத்தில் தேங்கி, அதை மீறி வெளியேறிச் சரியாக இராணுவ வீரனின் இரும்புத் தொப்பியில் ‘டொட்… டொட்…’ என்று விழ, அந்த இராணுவ வீரன் அதை உணர்வதற்கு முன்பாகவே கந்தழிதரன் நிலைமையைப் புரிந்துகொண்டான்.

பதட்டத்துடன் திரும்பி எஞ்சிய இராணுவ வீரர்களைப் பார்க்க, அவர்கள் கடந்து சென்றுவிட்டிருந்தனர். பெரும் நிம்மதி அடைந்தவனாகப் பெருமூச்சு விட்டவன் இப்போது கீழே குனிந்து பார்த்தான்.

அந்த இராணுவ வீரனும் தன் தொப்பியில் எதுவோ விழுந்த சத்தம் கேட்க என்ன அது என்பது போலக் கரத்தைத் தூக்கித் தொட்டுப்பார்த்தான். பிசுபிசுக்க விரல்களை எடுத்துப் பார்ப்பதற்கு முன், அடுத்து என்ன நடக்கும் என்பதைக் கணப்பொழுதில் புரிந்துகொண்ட கந்தழிதரன் அதற்குப் பிறகு சற்றும் தாமதிக்கவில்லை.

சடார் என்று அம்மேதினியை விலக்கியவன், சற்றும் யோசிக்காமல் மரத்திலிருந்து சரியாக அந்த இராணுவ வீரனின் மீது சத்தமில்லாது குதிக்க அதை அந்த இராணுவ வீரன் எதிர்பார்க்கவில்லை போலும். அதிர்ச்சியில் தடுமாறி கந்தழிதரனுடன் கீழே விழ, விழுந்தவன் சுதாரித்துக் கரத்திலிருந்த ஏகே 47ஐ தூக்கி விசையை அழுத்த முதல், அவன் விசையை அழுத்தா வன்னம் தன் வலது கரத்தின் பெருவிரலை அதற்குள் செருகிவிட்டு, இடது கரத்தை முஷ்டியாக்கி ஓங்கி அவன் முகத்தில் குத்தப் பொறிகலங்கிப்போனான் அந்த இராணுவவீரன்.

கூடவே, துப்பாக்கியின் மகசினின் லாக்கை விடுவித்துக் கீழே விழச் செய்து அதனைச் செயலிழக்கச் செய்த கந்தழிதரன், கீழே விழுந்த மகசினை எடுத்து அதையே ஆயுதமாக்கி ஓங்கி இராணுவ வீரனின் தொண்டையில் குத்தி இறக்க, மறு கணம் மூச்சுக்குழாய் அடைபட்டு இருமக்கூட வழியில்லாதவனாகத் தன் உயிரை விட்டான் எதிரி.

நிம்மதியுடன் இராணுவ வீரனை விட்டு விலகியவன், அவனுடைய உடலை வருடிப் பார்த்தான். கிடைத்த கைத்துப்பாக்கியை எடுத்துத் தன் பின் பான்டடில் செருகிவிட்டு, கழற்றிப் போட்ட ஏகே 47 ஐயும் சரியாகப் பூட்டி அதன் லாக்கை விடுவித்துக் கழுத்தில் அணிந்து கொண்டவன் அந்த வீரனின் வெஸ்டில் கொளுவியிருந்த கிரனைட் குண்டுகளை எடுத்துத் தன் பான்ட் பாக்கட்டில் போட்டுக்கொண்டான். அடுத்துத் தன் சப்பாத்தைக் கழற்றி ஓரமாகப் போட்டுவிட்டு, அந்த இராணுவ வீரனின் சப்பாத்தை அணிந்துகொண்டான். இரத்தம் வடிய வடிய நடந்தால், அதை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுகொள்வார்கள். இராணுவ பூட்ஸ் இரத்தத்தைச் சற்றுத் தேக்கிவைக்கும். அடுத்து இராணுவ வீரனின் துப்பாக்கிக் குண்டு புகா வெஸ்டைக் கழட்டியவன். மரத்திற்குக் கீழே வந்து,

“அம்மணி… சீக்கிரம் இறங்கு…” என்று கிசுகிசுப்புடன் அழைக்க, அதுவரை நடந்ததையே நம்பாமல் பார்த்துக்கொண்டிருந்தவள் இப்போது அச்சத்துடன் கந்தழிதரனைப் பார்த்தாள்.

“அதிர்ந்து நிற்க இது நேரமில்லை. இறங்கு… மற்றைய நால்வரும் திரும்பி வர முதல் நாங்கள் இங்கிருந்து தப்பிக்கவேண்டும்… இறங்கு…” என்று அவன் கிட்டத்தட்ட சத்தமில்லாது சீற, அவசரமாக மரத்திலிருந்து கீழே இறங்க முயன்றவள் கந்தழிதரன் கீழே நிற்கிறான் என்கிற நம்பிக்கையில் சற்றும் யோசிக்காமல் கரங்களை விட, அவளுடைய நம்பிக்கையைப் பொய்ப்பிக்காமல் அவளைத் தாங்கி இறக்கியவன், தன் கரத்திலிருந்த வெஸ்டை அவளுக்குப் போட்டுவிட்டு, அவள் கரம்பற்றி இழுத்துக்கொண்டு மறு திசை நோக்கி ஓடத் தொடங்கினான்.

இவர்கள் ஓடியதால் ஏற்பட்ட சரசரப்பு இராணுவத்தின் கவனத்தைத் திசை திருப்பியதோ. இல்லை ஐந்தாமவனைக் காணாமல் சந்தேகம் கொண்டார்களோ, மீண்டும் திரும்பி வர, இவர்கள் ஓடிய சரசரப்பு அவர்களை விழிப்படையச் செய்த கணம், சத்தம் வந்த திசை நோக்கிச் சடசடவென்று சுடத் தொடங்கினார்கள்.

நல்ல வேளை நிறைய மரங்கள் இருந்ததால் சுட்ட தோட்டாக்கள் மரங்களில் பட்டுத் தெறித்தனவே அன்றி இவர்களுக்குப் பாரதூரமான காயங்களை ஏற்படுத்தவில்லை. அதில் ஒரு துப்பாக்கிக் குண்டு மரத்தைச் சீவிக்கொண்டு போக, அதிலிருந்து தெறித்த துண்டு சுழன்று சென்று அம்மேதினியின் கன்னத்தை வெட்டிக்கொண்டு சென்றதன்றி வேறு ஆபத்தேதும் நிகழவில்லை.

அதே நேரம் கந்தழிதரன் ஓடிய ஓட்டத்திற்கு அம்மேதினியால் ஈடு கொடுக்கவே முடியவில்லை. அதுவும் ஏற்கெனவே தொடையில் ஏற்பட்ட காயத்தால் அவளால் சுத்தமாக ஓட முடிந்திருக்கவில்லை.

ஆனாலும் இருவருக்கும் யோசிப்பதற்கோ சிந்திப்பதற்கோ நேரமே கிடைக்கவில்லை. அவர்களுக்கு எதை நோக்கி ஓடுகிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை. இருவரின் குறிக்கோளும் தப்பவேண்டும். அது மட்டும்தான். ஆனால் எங்கே எப்படி…? அதுதான் பெரிய கேள்வியே… இந்த நிலையில் கந்தழிதரன் அம்மேதினியின் கரத்தை விடவும் இல்லை. ஓட்டத்தை நிறுத்தவும் இல்லை. பொழியும் துப்பாக்கிகளின் வேகம் தடைப்படவும் இல்லை.

இப்போது அடர்ந்த மரங்களிருந்த பிரதேசம் நிறைவுக்கு வரப் பாதுகாப்பு அரண் முடிந்து பாழடைந்த கட்டடங்கள் நிறைந்த பகுதிக்கு வந்து சேர்ந்தனர். அப்படியிருந்தும் அவன் நிற்கவில்லை. கிடைத்த சந்துபொந்துக்குள் எல்லாம் நிற்காமல் ஓடினான்.

இதற்கிடையில் இவர்கள் தப்பியது உடனே இராணுவப் படைக்குத் தெரிவிக்கப்பட, அடுத்து, மீண்டும் இவர்கள் திசை நோக்கி உலங்குவானூர்தி சட சட சட எனச் சுழன்றவாறு வானில் வரத் தொடங்கியது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட கந்தழிதரன், தன் பிடியிலிருந்தவளையும் இழுத்துக்கொண்டு அங்கே உடைந்திருந்த ஒரு கட்டடத்தின் பின்னால் மறைந்துகொண்டான்.

இருவருக்குமே மேல்மூச்சு கீழ்மூச்சுக் கடுமையாக வாங்கியது. அம்மேதினிக்கோ கால்வலி. கந்தழிதரனுக்கு உடல் முழுதும் வலி. ஆனாலும் ஆசுவாசப்படுத்த நேரமில்லை. வானூர்தி அவ்விடத்தைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு சற்றுத் தள்ளிச் சென்றதும் மீண்டும் அம்மேதினியை இழுத்துக்கொண்டு ஓட்டத்தைத் தொடர்ந்தான் கந்தழிதரன்.

மேலே இருப்பவர்களுக்கு அவர்கள் போராளிகளா இல்லை சாதாரணக் குடிமக்களா என்பது தெரியாது. தெரிந்தாலும் விட்டுவைப்பார்களா என்பது கேள்விக்குறிதான். இவர்களைத் தேடிக் கண்டுபிடித்துச் சுட்டுக் கொல்லும் வரைக்கும் ஓய மாட்டார்கள். எது எப்படியாக இருந்தாலும் அப்போதைக்கு அவர்களின் உயிர் அவர்களுக்கு உரித்தானது அல்ல. அது மட்டும்தான் நிஜம்.

அதற்காக மனதைத் தளர விட முடியாதே. இந்த உயிரைக் காக்கவேண்டி ஓடத்தான் வேண்டும். வேறு வழியில்லை. அதனால் கண் மண் தெரியாமல் ஓடினான் கந்தழிதரன்.

அப்போதுதான் அவன் ஒன்றைக் கவனித்தான். அவர்கள் ஓடிக்கொண்டிருக்கும் திசை அபாயகரமான திசை. தெல்லிப்பளை. ஓடும் வேகத்தில் எந்தத் திசை நோக்கி ஓடுகிறோம் என்பது கூட அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. இப்போது இராணுவத்தின் பாதுகாப்புப் பகுதிக்கே ஓடி வந்திருக்கிறான். இன்றும் இரண்டு கிலோமீட்டர்கள் தள்ளிப்போனால் பலாலியை நெருங்கிவிடுவான். அங்கே முழுவதும் இருப்பது இராணுவம். கடவுளே… இப்போது என்ன செய்வது? அடுப்புக்குத் தப்பி வாணலியில் விழுந்த கதையாயிற்றே. சோர்வுற்றவனாகத் தன் ஓட்டத்தை நிறுத்தியவாறு, அங்கே நொறுங்கிக் கிடந்த ஒரு கட்டத்தின் பின்னால் தொப்பென்று சாய்ந்து நின்று மேல்மூச்சுக் கீழ் மூச்சு வாங்கினான்.

நா வறண்டு போனது. தண்ணீர் வேண்டும் என்று உடல் கெஞ்சியது. எங்கே என்று தண்ணீருக்குப் போவான். போதாததற்கு உடல் சோர்ந்தது. இந்த நிலையில் நிற்க முடியாது அம்மேதினியும் தொப்பென்று தரையில் சரிந்து இரு கரங்களையும் தரையில் பதித்தவாறு கந்தழிதரனை இயலாமையுடன் பார்த்தாள். அவளுக்குத் தொண்டையில் ஈரப்பசையே அற்றுப்போயிருந்தது.. தண்ணீர் குடித்தேயாகவேண்டித் தாகம் உயிரைப் பிறாண்டியது.

“கந்து… தண்ணீர்… தண்ணீர்…” என்று தவிக்கத் தவித்த வாய்க்குத் தண்ணீர் எடுக்க எங்கே போவான். வறண்ட நாக்கால் தன் காய்ந்த சொண்டை வருடிக் கொடுத்தவன், தன் களைப்பை மறந்தவனாக, விரைந்து சென்று அவள் முன்பாக அமர்ந்து தன் மார்போடு அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன், களைப்பு சற்றும் மாறாமல், மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்க,

“மை…. மை… பேபி கேர்ள்… இன்னும்… இன்னும் கொஞ்சம்… கொஞ்சம் பொறுத்துக்கொள்… என் கண்ணல்லவா… முதலில் பாதுகாப்பாக ஒரு இடத்தைக் கண்டுபிடிப்போம். அத… அதற்குப் பிறகு தண்ணீர்… தண்ணீர்… தேடலாம்… சரியா…” என்று களைப்புற்றவனாக மார்பு மேலும் கீழும் ஏறி இறங்கக் கூற, அந்த நிலையில் இல்லை இப்போதே தண்ணீர் வேண்டும் என்று பிடிவாதமா பிடிக்க முடியும்.

அவனுக்காய் வறண்ட தொண்டையை மறந்தவளாகச் சரி என்பது போலத் தலையை ஆட்டக் குனிந்து அவளுடைய உச்சந்தலையில் தன் உதடுகளைப் பொருத்தி எடுத்தவன் விழிகளைச் சுருக்கிச் சுற்றும் முற்றும் பார்த்தான். இப்போது நேரம் இரண்டுமணியாவது இருக்கும். வெய்யில் வேறு தலையைப் பிளந்தது.

இந்த நிலையில் அதிகத் தூரம் அம்மேதினியால் ஓட முடியாது என்பதைக் கந்தழிதரன் புரிந்துகொண்டான். கூடவே அவளைச் சுமந்துகொண்டும் இவனால் ஓட முடியாது. அதற்கு அவனுடைய உடலும் ஒத்துழைக்காது. தவிர எந்த நேரமும் இராணுவம் வந்துவிடலாம். இந்நிலையில் ஓய்வும் தேவை. அந்த ஓய்வை எங்கே என்று பெறுவான். இரத்த இழப்பால் உடல் வேறு இவனுக்கு வெடவடத்தது. இருட்டிக்கொண்டு வேறு வந்தது. என்ன செய்யப்போகிறான். இராணுவத்திடம் சிக்கப்போகிறானா. அதுவும் அவனுடைய அம்மணியோடு. கையாலாகாத் தனத்துடன், நெஞ்சம் விம்ம சுத்தவரப் பார்த்தான் கந்தழிதரன்.

(24)

பயத்தோடும், தப்பவேண்டுமே என்கிற தவிப்போடும் சுத்தவரப் பார்த்தவனு, அப்போது தட்டுப்பட்டது அந்த இடம்.

சுத்திவர உடைந்த வீடுகள், மதில்கள். அதற்கு ஒதுக்குப்புறமான இடத்தில் பார்ப்பதற்குச் சமதரை போல இருந்தாலும் சுவாசிப்பதற்காக வெளியே நீட்டியிருந்த சிறிய குழாய்களைப் பார்த்தபோதே தெரிந்தது அது பதுங்குகுழி என்று.. உடனே அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்தவாறு அந்த இடத்தை நோக்கிப் பாய்ந்தான் கந்தழிதரன்.

பதுங்கு குழிக்குள் எப்போதோ போட்ட குண்டில் முன் புறம் கற்களால் மூடப்பட்டிருந்தது.

அவசரமாக அந்தக் கற்களை அப்புறப் படுத்த தொடங்கியவன், திரும்பி அம்மேதினியைப் பார்த்து,

“என்ன வேடிக்கை பார்க்கிறாய்… முடிந்த கற்களை விலக்கு…” என்று உத்தரவிட்டவாறு பெரிய கல்லை இழுத்து விலக்க, ஒருவர் உட்புகும் அளவுக்கு இடைவெளி கிடைத்தது திரும்பி அம்மேதினியைப் பார்த்தவன்,

“உள்ளே போ அம்மணி…” என்றான். இவள் தயங்க,

“உள்ளே போ…” என்று கர்ஜிக்க, உடனே உள்ளே நுழைய, இவனும் சுத்தவரப் பார்த்தவாறு உள்ளே சென்றான். நுழைந்தபோதே பக்கென்று அடித்தது மக்கிய மணம். அதைப் பார்த்தால் உயிரை விடவேண்டியதுதான். நுழைந்ததும் முடிந்தவரை பாதையைக் கற்கள் கொண்டு மூடினான். அப்போது அவன் கவனிக்கவில்லை தோளிலிருந்து வழிந்த இரத்தம் அங்கிருந்த கல்லில் தாராளமாக வழிந்திருந்தது என்பதை.

கொஞ்ச நேரம் பயமில்லாது நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணியவனுக்கு பதுங்கு குழியின் அடைபட்ட மனம்தான் கமறச் செய்தது. ஆனாலும் வேறு வழியில்லை. இரவு ஆகும் வரைக்கும் அங்கேதான் தங்க வேண்டும்…

தளர்வுடன் அந்த இடத்தையே சுற்றிப்பார்த்தான். கிட்டத்தட்டக் குட்டி வீடு போல வடிவமைத்திருந்தார்கள். பார்க்கும் போதே புரிந்தது போராளிகளுக்கான பதுங்கு குழி அதுவென்று. உள்ளே நுழைந்ததும் இருட்டடித்திருந்தாலும் அமைக்கப்பட்ட மெல்லிய குழாய்களுக்கூடாக வந்த வெளிச்சம் ஓரளவு அந்த இடத்தைத் தெளிவாகக் காட்டியிருந்தது.

சற்று நேரம் கிடைத்த அசுவாசத்தில், பெருமூச்சொன்று விட்டவன், தன் கரத்திலிருந்த ஆயுதங்களைத் தரையில் வைத்துவிட்டு இன்னும் உள்ளே போவதற்கான வழியைக் கண்டு, திரும்பி அம்மேதினியைப் பார்த்தான்.

“உள்ளே போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன். சிலவேளை பாம்பு பூரான்கள் இருக்கலாம்… அதனால் இங்கேயே இரு… அசையாதே இதோ வருகிறேன்…” என்றவன் உள்ளே நுழைய இருட்டடித்திருந்தது பதுங்குகுழி. உள்ளே நுழைய நுழைய பயங்கரமாக மணத்தது. மூக்கைத் தேய்த்து விட்டுக் கொண்டவன், மேலும் உள்ளே நுழைந்தான். ஒவ்வொரு பகுதியிலும் வெளிச்சத்திற்காகவும் சுவாசத்திற்காகவும் இரண்டு இரண்டு குழாய்கள் பதித்திருந்ததால் மெல்லிய வெளிச்சம் மட்டும் தெரிந்தது.

மேலும் உள்ளே போக அந்தப் பதுங்கு குழியை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கட்டியிருந்தார்கள். கூடவே இராணுவம் உள்ளே நுழைய பதுங்கியிருந்து சுடுவதற்கு ஏதுவாக மறைவுகளும் அமைத்துக் கட்டியிருந்தார்கள். ஒவ்வொரு பகுதிகளிலும் ஆறுபேர் தூங்குவதற்கான அடுக்குக் கட்டில்கள் வேறு போடப்பட்டிருந்தன. அந்தக் கட்டில்கள் அனைத்தும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்ததால் மெத்தைகள் பிய்ந்து பஞ்சுகள் பறந்து அந்த இடத்தையே நிறைத்திருந்தன. இறுதியாக மூன்றாவது பகுதியைக் கண்டதும் அதிர்ந்துபோனான்.

அவன் நினைத்தது சரிதான். போராளிகளுக்கான பதுங்கு குழிதான் அது. அதற்குச் சான்றாக நான்கு எலும்புக்கூடுகள் தலை சரிந்த நிலையில் அமர்ந்திருந்தன. எப்போதோ சுடுபட்டு இறந்திருக்க வேண்டும். சதைகள் அனைத்தும் உக்கிப்போய் ஒரு வித வாடையைக் கொடுத்துக்கொண்டிருந்தது. அந்த வாடை குமட்டலைக் கொடுக்க அவசரமாகப் பின்னேறியவன், பின்னால் நின்றிருந்த அம்மேதினியுடன் இடிபட்டு நின்றான்.

முதலில் வேறு யாரோ என்கிற அதிர்ச்சியில் அவனை அடித்து வீழ்த்தக் கரத்தைத் தூக்கியவன், அங்கே அவனுடைய வேகத்தைக் கண்டு அச்சத்தில் பதுங்க முயன்ற அம்மேதினியைக் கண்டு, அதிர்ந்து போய் நின்றான். கொஞ்சம் யோசிக்காது கரத்தை வீசியிருந்தாலும், அவளுடைய கழுத்தில் அவனுடைய கராத்தே வெட்டு சென்று விழுந்திருக்கும்.

அவன் என்ன சொல்லிவிட்டு வந்தான், இவள் என்ன செய்கிறாள்? ஆத்திரம் கொண்டவனாக,

“இங்கே என்ன செய்கிறாய்… உன்னை அசையவேண்டாம் என்று சொன்னேன்…” என்று சுள்ளென்று விழுந்தவன், அவளை இழுத்துக்கொண்டு முன்னேற, அப்போது சிதைந்திருந்த சில பெட்டிகள் கன்னுக்குத் தட்டுப்பட்டன. அதில் துருத்திக்கொண்டிருந்த மெழுகுதிரையைக் கண்டு, அம்மெதினியின் கரத்தை விடுவித்துவிட்டு, ஓடிப்போய்க் காலால் அந்தப் பெட்டியைத் தட்டிப் பார்த்தான். அதற்குள்ளிருந்து சில மெழுகுதிரிகளும் நெருப்புப்பெட்டியும் இருக்க இவனுடைய முகம் மலர்ந்தது.

உடனே மெழுகுதிரையை ஏற்றியவன், அதன் வெளிச்சத்தில் மற்றைய பெட்டிகளையும் பரிசோதித்தான்.

கடவுளுக்கு நன்றி. முதுலுதவிக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் இருந்தன. மறு பெட்டிகளையும் திறந்து பார்த்தான். எல்லாமே முதலுதவிக்கு வேண்டிய பொருட்கள்தான். நிம்மதியோடு அத்தனை பெட்டிகளையும் தூக்கிக்கொண்டு முன்பக்கம் வந்து அவற்றைத் தரையில் கொட்டிவிட்டு அதனருகே சுவரோடு சாய்ந்து அமர்ந்தான்.

அமர்ந்தவாறே தனக்கு வேண்டிய பொருட்களைத் தேடத் தொடங்க கையில் சிக்கியது மருந்துக் குப்பி. எடுத்துப் பார்க்க, அது நான்கு வருடங்களுக்கு முன்பே இறுதி நாளை எட்டியிருந்ததைக் கண்டு எரிச்சலுடன் எடுத்து விசிறி அடித்துவிட்டு மேலும் கிண்டக் கரத்தில் சிக்கியது ஸ்பிரிட் போத்தல். நிம்மதியுடன் அதை எடுத்தவன் மறு பெட்டியைக் கவிழ்க்க, கட்டுவதற்கு வேண்டிய துணிச் சுருள்கள் கீழே விழுந்தன.

அம்மெதினியோ அந்த இடத்தை மேலும் வெளிச்சமாகும் நோக்கில் மற்றைய மெழுகுதிரிகளையும் கொழுத்த முயல,

“வேண்டாம்…. விளக்கேற்றாதே. இங்கே வெளிச்சம் எரிவது வெளியே தெரியக்கூடாது…” என்று தடுத்துவிட்டு, கரத்தை தூக்கித் தன்னை நோக்கி அழைத்தவாறு “இங்கே வா…” என்றான். அவன் சொன்னது போலத் தன் முயற்சியைக் கை விட்டவளாக அவனருகே வர, தன்னருகே தரையில் தட்டிக்கொடுத்து,

“இப்படி உட்கார்…” என்றான். மறுக்காது அமர, சற்றும் யோசிக்காது அவளுடைய வலது காலைத் தூக்கித் தன் மடியில் வைத்தவன், அவளுடைய ஆடையை விலக்க கட்டையும் மீறி இரத்தம் கசிந்திருந்தது. அப்போதுதான் அம்மேதினிக்கே தான் காயம் பட்டது தெரிய வந்தது.

எப்போது காயம்பட்டது, எப்போது கட்டுப்போடப்பட்டது. இது எதுவும் அவளுக்கு நினைவில்லை.

ஆனால் கந்தழிதரனோ கட்டையும் மீறிச் சிந்திய இரத்தத்தைக் கண்டு மனம் வருந்தியவனாக, மெதுவாகக் கட்டை அவிழ்க்கத் தொடங்க இவள் வலியில் முனங்கினாள்.

“இட்ஸ் ஓக்கே… இட்ஸ் ஓக்கே…” என்று சமாதானப் படுத்தியவன், முழுதாகக் கட்டை அவிழ்க்க இரத்தப்போக்கு நின்றிருந்தாலும் காயம் சற்று விரிந்திருந்தது. மனம் வலிக்க, கட்டுப்போடும் துண்டுச் சுருளை எடுத்தவாறு,

“ஆ சொல்லு…” என்றான். இவளோ புரியாமல் ”ஆ…” என்று வாயைத் திறக்க அதில் அந்தச் சுருளை வைத்து

“இப்பொது இதைப் பற்களால் கடித்து வாயை மூடு…” என்றான். மறுக்காமல் செய்தாள் அம்மேதினி.

பின் ஸ்பிரிட் போத்தலைத் தூக்கி அவள் முன்பாகக் காட்டிவிட்டு,

“அம்மணி… இது ஸ்பிரிட்… இதைப் போட்டுத்தான் காயத்தைத் துடைக்கப்போகிறேன். பயங்கரமாக எரியும்… நீ கத்துவாய்… அதனால்தான் இந்தச் சுருளை உன் வாய்க்குள் வைத்தேன்… சரியா…” என்று கூற இப்போது அவளுடைய விழிகளில் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது. கலக்கத்துடன் அவனைப் பார்த்து மறுப்பாகத் தலையை ஆட்ட,  அவளுடைய தலையை வருடிக் கொடுத்து,

“அதுதான் நான் இருக்கிறேன் அல்லவா… கொஞ்சம் சமாளித்துக்கொள்… செய்வாய் தானே…” என்று கேட்க ஆம் என்று தலையாட்டியதும்,

“குட் கேர்ள்…” என்றவன்” அவள் சுதாரிக்க முதலே அவளை இழுத்து அவளுடைய துண்டடைபட்ட வாயை ஒற்றைக்கரத்தால் மூடி, ஸ்பிரிட்டை ஊற்ற அது கொடுத்த எரிச்சலில் உயிரே போய்விடும் என்பது போலக் கதறியவளாகக் காலை இழுக்க முயன்றாள். ஆனால் அவனுடைய இறுகிய பிடியிலிருந்து அவளால் விலகவும் முடியவில்லை, அலறிய ஓசை வெளியே வரவுமில்லை.

அவள் துடித்த துடிப்பில் இவனுடைய கண்கள்தான் கலங்கிப் போனது. அவளை சமாதானப் படுத்தும் முகமாக அவளுடைய கன்னத்தோடு கன்னம் இளைய நின்றவன்,

“ஷ்… ஷ்… இட்ஸ் ஓக்கே பேபிகேர்ள்… இட்ஸ் ஓக்கே…” என்று சமாதானப் படுத்தினாலும், தான் செய்யும் காரியத்தைக் கை விட்டானில்லை. இப்போது எரிச்சல் அடங்கி அவள் அழத் தொடங்க, தன் கரத்தை விலக்கியவன், காயத்தைச் சுத்தவரத் துடைத்து, சற்றுப் பிளந்த காயத்தைப் பிளாஸ்டர் கொண்டு முடிந்தவரை இணைத்து ஒட்டி கட்டு போட்ட பின் மெதுவாக அவள் பக்கமாகச் சரிந்து வாயிலிருந்த துண்டுச் சுருளை இழுத்தெடுத்துவிட்டு, அவளுடைய கன்னத்தைத் தட்டி,

“அம்மணி… மை பேபி கேர்ள்…” என்று அழைக்கச் சிரமப்பட்டு விழிகளைத் திறந்தாள் அம்மேதினி. முகமோ சிவந்து கசங்கிப்போயிருந்தது.

“யு வில் பி ஓக்கே?” என்று அவளுடைய கலைந்திருந்த முடிக்கற்றைகளைச் சரியாக்கிவிட்டு, நெற்றியிலும் கன்னத்திலும் ஏற்பட்ட கண்ணீரைத் துடைத்துவிட்டு

“வேறு எங்காவது காயம் பட்டிருக்கிறதா அம்மணி…” என்றான். பதில் கூறாது தன் மேல்கரத்தைக் காட்ட, பற்றைக்குள் ஓடியபோது எதுவோ கையில் கீறியிருந்தது. பெரிதாக இரத்தம் வரவில்லை. ஆனாலும் துடைத்துவிட்டு, விலகியவன் இப்போது தான் அணிந்திருந்த சப்பாத்தைக் கழற்றினான். கால் முழுவதும் இரத்தத்தில் குளித்திருந்தது.

வலது காலின் பான்டை மேலே தூக்கத் தூக்க எல்லா இடமும் குருதி. அதுவும் ஆடுதொடையில் இருந்த காயத்தைக் கண்டு அதிர்ந்துபோனாள் அம்மேதினி. கறுத்த பான்ட் அணிந்திருந்ததால் அதில் படிந்திருந்த இரத்தம் இதுவரை தெரியவில்லை. இப்போது காலில் ஆறாகப் பெருகியிருந்த இரத்தத்தைக் கண்டபோதுதான் எவ்வளவு இரத்தத்தை இழந்திருக்கிறான் என்பதே அவளுக்குத் தெரிந்தது.  துடித்துப்போனாள் அம்மேதினி.

“கடவுளே… கந்து… பெரிய காயம்…” என்றவாறு தன் வலியை மறந்தவளாய் அவன் காலைப் பற்றிக் கதறத் தயாராக,

“ஷ்… டோன்ட்… தயவு செய்து கண்ணீர் குழாயைத் திறக்காதே… வெளியே இருக்கிற இராணுவம் உள்ளே வந்திவிடப்போகிறது, என்று கிண்டலாய் எச்சரிக்கச் சிரமப்பட்டுக் குரலைக் கட்டுப்படுத்தியவள்,

“கந்து… உள்ளே… உள்ளே குண்டு இருக்கிறது போலவே…” என்று விம்ம,

“ஆமாம்… செம வலி… துப்பாக்கிக் குண்டு உள்ளே இருக்க ஓடுவது எத்தனை சிரமம் தெரியுமா…” என்று வலியில் முனங்கியவன் காயத்தைப் பார்ப்பதற்காக அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தான். நிச்சயமாக அவனால் அந்தக் குண்டை வெளியே எடுக்க முடியாது. நிமிர்ந்து அம்மேதினியைப் பார்த்து,

“என்னால் இதை எடுக்க முடியாது… உன்னால் எடுக்கமுடியுமா?” என்று கேட்க இவளோ பதட்டத்துடன்,

“இல்லை… இல்லை… என்னால் முடியாது…” என்று பலமாகத் தலையை ஆட்டி மறுக்க, அந்தப் பெட்டிக்குள் எதை எதையோ தேடினான். இறுதியில் டுவிசர் வகையறா சேர்ந்த சிறிய பெட்டி ஒன்று சிக்குப்பட அதைத் திறந்து டுவிசரை வெளியே எடுத்து அதை ஸ்பிரிட்டால் கழுவிவிட்டு அம்மேதினியிடம் நீட்டி,

“இதால் எடுத்துவிடு அம்மணி…” என்றவன் குப்பிறப் படுத்தவாறு வலியில் முனங்க, இவளோ,

“நான்.. நான் எப்படி… உனக்கு வலிக்குமே…” என்றாள் கலக்கமாய்.

தன் பற்களைக் கடித்தவன்,

“நான் ஒன்றும் செத்துவிட மாட்டேன்… எடுத்துவிடு… வலியில் உயிர் போகிறது…” என்றுவிட்டு, “கொஞ்சம் காயத்தில் ஸ்பிரிட் ஊற்றிவிட்டு குண்டை எடு…” என்று கூற அவன் கரத்திலிருந்து டுவிஸ்ஸரை வாங்கியவளுக்குக் கரங்கள் நடுங்கின.

“வ… வலிக்கும் கந்து…” என்றவளுக்கு ஏனோ தன்வலியை விட அவனுடைய வலி பெரிதாகத் தெரிந்தது.

“ப்ச்… எடும்மா… நானே எடுக்க முயல்வேன், ஆனால் இந்தக் கையை அசைக்கக் கூட முடியவில்லை தெரியுமா…” என்று கூற அதற்கு மேல் மறுக்க முடியாது. அவன் சொன்னது போலவே காயத்தில் ஸ்பிரிட்டை ஊற்ற முனங்கினான் கந்தழிதரன். இவளுடைய கரங்களோ நடுங்கின. வேறு வழி இல்லாமல் காயத்திற்குள் ட்விசரைக் கொண்டு போகத் தட்டுப்பட்டது சிக்கியிருந்த குண்டு.

பயத்தில் ட்விசரை வெளியே எடுத்துவிட்டாள் அம்மேதினி. ஏற்கனவே தொண்டை வறண்டிருந்தது. இப்போது இவளுக்குத் தலை சுற்றிக்கொண்டு வந்தது. முகம் வெளுறக் குப்புறக் கிடந்தவனைப் பார்த்தாள்.

அவனோ மடக்கிய கரங்களுக்குள் தலையைக் கவிழ்த்தவாறு கிடந்தான். மீண்டும் நடுங்கிய கரம் கொண்டு ட்விசரால் சிக்கிய தோட்டாவைப் பற்றிக் கொண்டவள், அழுத்திப் பிடித்தவாறு மேலே இழுக்க அது வரமாட்டேன் என்று அடம் பிடித்தது. இவனுக்கோ வலியில் உயிர் போகப் பல்லைக் கடித்தவாறு ஆழ மூச்செடுக்க, இவள்தான் பதறிப்போனாள்.

வேகமாகத் தன் கரத்தை விலக்கியவள்,

“முடியாது… சத்தியமாக என்னால் முடியாது…” என்று அழத் தொடங்க, சற்றுப் பொறுமை இழந்தவன்,

“இப்போது எதற்குக் கண்ணீர் அணையைத் திறந்து விடுகிறாய்… என்னால் முடியாததால்தானே கேட்கிறேன். இதுவே என்னால் செய்ய முடியும் என்றால் உன்னையேன் கேட்கிறேன்… வலிக்கிறதுடி…” என்று அவன் எரிச்சலும் கோபமுமாகக் குரலை உயர்த்த, தன் கண்களைத் துடைத்துக்கொண்டவள், மீண்டும் முயற்சி செய்து பல்லைக் கடித்தவாறு ஒரு இழுவை இழுக்க வெளியே வந்தது அந்தத் தோட்டா.

அது கொடுத்த வலியில் ஓங்கி நிலத்தை அடித்தவனுக்குச் சற்று நேரம் எடுத்தது ஒழுங்காக மூச்சு விட. அதே நேரம் இரத்தம் கொடகொட என்று கொட்டத் தொடங்க, உடனே துண்டினால் இரத்தம் வராதிருக்க அழுத்திப் பார்த்தாள் அம்மேதினி. ஆனாலும் அதை மீறி இரத்தம் வழியத் தொடங்க கொஞ்ச நேரம் அழுத்திப் பிடித்தவாறு, மேலும் மேலும் துண்டை வைத்து இரத்தப்போக்கை நிறுத்த முயன்று ஓரளவு வெற்றியும் கண்டாள். பின் அழுத்திக் கட்டுப்போட்டுவிட்டு,

“கந்து… மிகவும் வலிக்கிறதா?” என்றாள் விழிகள் கலங்க.

இவனுக்கோ உடல் குளிர்ந்து. வியர்த்துக் கொட்டியது. எதோ மாபெரும் பலவீனம் வந்தது போலத் தோன்றியது. ஆனாலும் அவளுக்குக் காட்டினானில்லை. சிரமப்பட்டு எழுந்தவன்,

“சரியாகிவிடும் அம்மணி… நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு… இப்போதைக்கு நம்மால் வெளியே போக முடியாது.” என்று முடிந்தவரைத் திடக் குரலில் உத்தரவிட்டவாறு எழுந்தமர்ந்தவன், அணிந்திருந்த உள் பெனியனைக் கழற்றி ஓரமாகப் போட அப்போதுதான் மார்பின் காயத்தைப் பார்த்தாள்.

“ஐயோ… மார்பில் பட்டிருக்கிறதே… இதயத்தைத் துளைத்துச் சென்றிருக்குமோ…” என்று அந்த நேரத் துடிப்பில் பதறியவளுக்கு, இதயத்தில் குண்டு பட்டிருந்தால் இத்தனை நேரம் தன் கூடப் பேசிக்கொண்டிருப்பானா என்கிற யோசனையே தோன்றவில்லை.

இவளோ பதற, அந்த நிலையிலும் அவளுடைய தலையில் ஒரு கொட்டு வைத்தவன்,

“முட்டாள்… இதயம் வலப்பக்கமா இருக்கிறது…” என்று கடிந்தவன் அவள் கசங்கிய முகத்தைக் கண்டு,

“ஹே… இட்ஸ் ஓக்கே… அத்தனை ஆழமில்லை…” என்றவன் ஸ்ப்ரிட் போத்தலை எடுத்துக் காயத்தின் மீது கவிழ்க்க, தீ பட்டது போல எரிந்தது காயம்.

“ம்கூம்…” என்கிற முனங்கலுடன் பல்லைக் கடித்தவாறு உடல் உதற நிற்க, வேகமாக அவனை நெருங்கி,

“கந்து…” என்றாள் அழுகையினூடே. அவள் அழுவது பிடிக்காமல்,

“ஐ… ஐ ஆம் ஓக்கே…” என்று முனங்கியவன், கையிலிருந்த துனிச்சுருளை எடுத்துக் காயத்தின் மீது வைத்துக் கட்ட முயல, அவன் கரத்திலிருந்த துணியைப் பறித்தவள் கவனமாகக் காயத்தைப் பரிசீலித்தாள். அவளுடைய சுட்டுவிரல் அவனுடைய காயத்தைச் சுற்றி நகர, அந்த நிலையிலும் இவனுடைய உடல் சிலிர்த்தது.

பதட்டத்துடன் அவளுடைய கரத்தைப் பற்ற, அவளோ அவன் விழிகளுக்குள் தன் விழிகளைக் கலந்து குனிந்து அவன் காயத்தில் உதடுகளைப் பதிக்க, காயத்தை விட அவளுடைய முத்தம் இவனுக்கு இன்னும் வலித்தது.

“அம்மணி…” என்று மென்மையாக முனங்க, மீண்டும் அவளுடைய உதடுகள் அவனுடைய காயத்தில் தன் உதடுகளைப் பதித்தன. கிறங்கிப்போனான் கந்தழிதரன். அதுவரை ஓடாது இருந்த இரத்த ஓட்டம் பயங்கரமாய்த் தறிகெட்டு ஓடியது. பலவீனத்தால் நடுங்கிய உடல், இப்போது மாபெரும் அவஸ்தையில் நடுங்கியது. கூடவே அந்த முத்தத்தில் நிலை கெட்டுப்போகிறோம் என்பதைப் புரிந்தவன் போல,

“ஷ்… ப்ளீஸ்டி…” என்று அவன் தவிக்க இப்போது, அவனுடைய இரத்தத்தை அவளுடைய உதடுகள் பூசிக்கொள்ள விலகியவள், தானே அவன் காயத்தைக் கட்டத் தொடங்கியவாறு,

“மிகவும் வலிக்கிறதா கந்து…” என்றாள் கண்கள் கலங்க. அவளுடைய உதடுகள் கொடுக்கும் அவஸ்தையைத் தாங்கிக்கொள்வதை விட, காயம் கொடுக்கும் வலியைத் தாங்கிக்கொள்ளலாம் போல இருந்தது அவனுக்கு.

“இல்லை…” என்று தலையாட்டியவன் பற்களைக் கடித்தவாறு தன்னைச் சமப்படுத்த முயன்றான்.

கன்னத்தில் கண்ணீர் வழியக் கட்டுப்போட்டவளுக்கு இன்னும் கொஞ்சம் தள்ளிப் போயிருந்தாலும் அவனுடைய இதயத்தையல்லவா கிழித்திருக்கும். “கடவுளே…” என்று பதறித் துடிக்க, அவனோ அவள் படும் அவஸ்தையைக் காணச் சகிக்காதவனாகத் தன் கரத்தை விலக்கி,

“இங்கே வா…” என்றான். மறுக்காது அவனை நெருங்க, அவளுடைய தலையைப் பற்றித் தன் தோள்வளைவில் வைத்து,

“எல்லாம் சரியாகிவிடும்… பேசாமல் தூங்கு…” என்றான் மென்மையாக. அந்தக் கட்டளைக்கு உட்பட்டுத் தன் விழிகளை மூட, களைப்பையும் மீறி அதிக இரத்தப்போக்கால் ஏற்பட்ட மயக்கத்துடன் விழிகள் மூடிக்கொண்டன.

What’s your Reaction?
+1
18
+1
0
+1
0
+1
0
+1
5
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!