Thu. Sep 19th, 2024

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 1

(1)

 

 

1995 ஆம் ஆண்டு

 

 

 

“என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?”

 

இதைச் சொன்ன தாயை அதிர்ச்சியுடன் பார்த்தாள் அம்மேதினி. அவரோ மதிய சமையலுக்கான காய்கறிகளை, வாளியிலிருந்து தண்ணீரை ஒரு குவளையில் அள்ளி ஊற்றிக் கழுவிக் கொண்டிருக்க,

 

“அடேங்கப்பா… ஐந்து வருடங்களுக்கு முன்பு நாட்டுக் கலவரத்தில் ஊரை விட்டு ஓடியவருக்கு இப்போதுதான் இங்கே வரத் தெரிந்ததாமா?” என்றாள்.

 

கிண்டலும் ஏளனமுமாகக் கேட்ட மகளைக் கோபமாகப் பார்த்தார் அன்னை.

 

கரத்திலிருந்த கருணைக்கிழங்கின் தோல்களைக் கத்தியால் அவதானமாகச் சீவியவாறே தன் மகளைப் பார்த்துவிட்டு, மீண்டும் வேலையில் கவனமாகியவராக,

 

“என்னடி பேசுகிறாய்? அந்தத் தம்பி இலங்கை இராணுவத்தின் அட்டூழியத்தில் கோபம் கொண்டு, அவர்களுக்கு எதிராகப் போராட வேண்டி போராட்டத்தில் இணைந்தது உனக்குத் தெரியும்தானே. நாங்கள் எல்லாம் எப்படிப் பரிதவித்துப் போனோம். கறிவேப்பிலைக் கொத்தாக ஒரே ஒரு மகன். ஏதோ அவர்கள் அழுது குழற, அவர்களின் நிலை கருதி அவனை விடுவித்தார்கள். இல்லையென்றால் இப்போது தமிழ் மண்ணைக் காக்கவேண்டி வீர மரணம் அடைந்திருப்பான்… இங்கே இருந்தால் மீண்டும் ஏதாவது பாரதூரமாகச் செய்து விடுவானோ என்று அஞ்சித்தானே கொழும்புக்கு அழைத்துச் சென்றார்கள்… நீ என்னவென்றால்…” என அன்னை சிடுசிடுக்க, தன் உதடுகளைச் சுழித்தவள்,

 

“ஆமாம் பெரிய கம்பிதான்… சீ… தம்பிதான்… இத்தனை நாட்களாக நாம் எப்படியிருக்கிறோம் என்று ஒரு வார்த்தை அறிய முயன்றிருப்பாரா…” என்று தன் ஆதங்கத்தை வார்த்தைகளாக வெளிப்படுத்த, அன்னையோ,

 

“எப்படிடி…? இலங்கையில் இருக்கிறோம் என்றுதான் பெயர். ஒரு தொலைத் தொடர்பும் கிடையாதே. கடிதப் போக்குவரத்தும் இல்லை. அங்கிருந்து இங்கு தொலைபேசியில் கூட பேசமுடியாது. அப்படியிருக்கையில் எப்படித் தொடர்பு கொள்வார்கள் என்று நினைக்கிறாய்? கொழும்பிலிருந்தும் இங்கு வரமுடியாது. இங்கிருந்தும் அங்கு போக முடியாது. ஏதோ இப்போதான் போக்குவரத்தைக் கொஞ்சம் இலகுவாக்கியிருக்கிறார்கள்… கடிதப் போக்குவரத்துக் கூட அதிசயமாக எப்போதாவதுதான் நடக்கிறது.” என்று பெருமூச்சுடன் கூற,

 

“ம்கூம்… நீங்கள்தான் மெச்சிக்கொள்ள வேண்டும்… ஆமாம்… அந்தத் தங்கக் கம்பி எப்போது வருகிறாராம்…?” என்று அலட்சியமாகக் கேட்டாலும், அந்தப் பதினாறு வயது பாவையின் இதயம் சற்றுத் தாறுமாறாகத் துடிக்கத்தான் செய்தது. அது என்ன மாயமோ மந்திரமோ தெரியாது… கந்தழிதரனை நினைத்தாலே இத்தகைய மாற்றம் அவளையும் அறியாது வந்து தொலைத்து விடுகிறது. உள்ளே இனம்தெரியாத ஒரு படபடப்பு. சிலிர்ப்பு. அதற்கான காரணம் கேட்டால் அவளுக்கு பதில் தெரியாது.

 

“இன்னும் இரண்டு கிழமைகளில் வருகிறானாம் கண்ணு…” என்று அன்னை கூற,

 

‘இரண்டு கிழமைகளா… இன்னும் பதினான்கு நாட்கள்… முந்நூற்று முப்பத்தாறு மணி நேரங்கள், 20160 நிமிடங்கள்… 1,209,600 விநாடிகள்… அடி ஆத்தி… இம்பிட்டு நேரம் எடுக்குமா மீண்டும் அவனைப் பார்க்க ஏன் சீக்கிரம் வந்தால் தும்பியின் தலை வெடித்து விடுமா என்ன’ என்று எரிச்சலுடன் எண்ணியவள் அன்னையைப் பார்த்து,

 

“எங்கே தங்கப் போகிறார்களாம்?” என்றாள் அடுத்து.

 

“இது என்ன கேள்வி… நம்மோடுதான் தங்கம்…” என்று அன்னை கூற, கோபத்துடன் தன் அன்னையை ஏறிட்டவள்,

 

“இன்னாது… நம்முடைய வீட்டிலா… அதெல்லாம் முடியாது… இந்த வீட்டில் இருப்பதே இரண்டு அறைகள். அதில் என் அறையை எல்லாம் தாரை வார்த்துக் கொடுக்க முடியாது…” என்று அவள் கறாராகக் கூற, அன்னை யசோதாவோ தன் மகளை அடப் பாவமே என்பது போலப் பார்த்தார். அதைக் கண்டு தன் சுருதியைக் குறைத்துக் கொண்டவள்,

 

“என்ன… என்ன அப்படிப் பரிதாபமாகப் பார்க்கிறீர்கள்?” என்றவளைக் கிண்டலுடன் பார்த்த அன்னை,

 

“இடம் கொடுத்தால் மடத்தைப் பிடிப்பதற்கான அர்த்தம் இப்போதுதான் தெரிகிறது. இந்த வீடே அவர்களோடது… அப்படியிருக்கையில் அவனுக்கே இடமில்லை என்கிறாயே  தங்கம். 87ஆம் ஆண்டுப் பலாலியை இந்திய இராணுவம் கைப்பற்றியபோது, அதைச் சுற்றியிருந்த பிரதேச மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயத்தில், நாங்கள் தெல்லிப்பளையிலிருந்து இடம் பெயர்ந்து இங்கே வந்தோம். அந்த நேரத்தில் எத்தனையோ பேர் இருக்க இடமில்லாது அங்கும் இங்குமாகச் சிதறிப்போனபோது, அண்ணாவுடைய இந்த வீடுதான் நமக்கு அடைக்கலம் கொடுத்தது. கொஞ்சக் காலத்துக்குப் பிறகு அண்ணாவும் அண்ணியும் கந்தழியோடு கொழும்புக்குப் போகும்போது இந்த வீட்டை எங்கள் கையில் ஒப்படைத்துவிட்டுச் சென்றார்கள்.. அவர்கள் கொடுத்தது தங்குவதற்காக மட்டுமல்ல பராமரிப்பதற்காகவும் தான். அவர்கள் வந்து இந்த வீட்டைத் திருப்பிக் கேட்டால், நாம் திருப்பிக் கொடுக்கவேணும். நீ என்னவென்றால், உரிமை கொண்டாடப் பார்க்கிறாயே…” என்று கூற, அவரைக்  கோபத்துடன் பார்த்தவள்,

 

“ஆமாம் பெரிய அக்கறைதான்! நாங்களா இங்கே இருக்கிறோம் என்று சொன்னோம்…? தங்கச்சி தங்கச்சி… நமக்கு இன்னொரு வீடிருக்கிறதே… உங்களுக்கு அது போதும்… தாராளமாக அங்கேயே தங்கிக் கொள்ளுங்கள்…” என்று தன் மாமன் போலக் குரலை மாற்றிப் பேசியவள், பின் தாயைப் பார்த்து “இப்படிச் சொல்லி இங்கே இருக்க வைத்தது உங்கள் அண்ணன்தான்… அதை மறந்துவிடாதீர்கள்…” என்று உதடுகளைச் சுளுக்கியவாறு கூற, தன் மகளின் பேச்சில் கோபம் கொண்டவராய், அவள் தலையில் ஒரு கொட்டு வைத்துவிட்டுத் தன் கரத்திலிருந்த கழுவிய மரக்கறிகள் நிறைந்த பாத்திரத்தை அவளிடம் நீட்டியவாறு,

 

“தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்கிறாயே… உன்னை என்ன செய்யலாம்…” என்றார் கடுப்பாக. தொடர்ந்து கோபம் மாறாதவராக,

 

“சரி… இந்தா…! மரக்கறிகளை வெட்டு…” என்று நீட்ட, , உதடுகளைச் சுழித்தவள், அன்னை நீட்டிய அந்தப் பாத்திரத்தைப் பறித்துக்கொண்டு திரும்ப, யசோதா மகளின் முதுகை முறைத்துவிட்டு,

 

“என் அண்ணனைப் பற்றி என்னிடமே சொல்கிறாயா?” உன்னை என்ன செய்யலாம்?” என்றுவிட்டு அடுப்புக்குக் கீழே அடுக்கியிருந்த விறகுக் கட்டைகளில் வேண்டிய விறகுகளைத் தேர்வு செய்யத் தொடங்க, இவளோ பாத்திரத்தை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு, மரக்கறிகளை அளவாக வெட்டத் தொடங்கியவாறு,

 

“ப்ச்… உங்கள் அண்ணனைப் பற்றி யார் குறை சொன்னார்கள்… கந்து வந்தால் என்னுடைய அறையைக் கொடுக்கமாட்டேன் அவ்வளவுதான்… அந்த வளர்ந்து கெட்டவனிடம் சொல்லிவிடுங்கள்… வேண்டுமானால் வெறும் கட்டாந்தரையில் படுக்கச் சொல்லுங்கள்…” என்று உடலைச் சிலிர்த்துக் கொள்ள, தன் கரத்திலிருந்த விறகுக்கட்டையை உயர்த்திக்கொண்டு மகளை நெருங்கினார் யசோதா.

 

அதைக் கண்டதும், எங்கே தனக்கு விறகுக் கட்டையால் சாத்து விழுந்து விடுமோ என்று அஞ்சியவள் போல, விழிகளை விரித்து, உதடுகளைப் பிளந்து, கரங்கள் இரண்டையும் தூக்கித் தன் முகத்துக்கு முன்னால் பிடித்தவாறு கிடைத்த இடைவெளிக்கூடாக அன்னையைப் பார்க்க, அவளுடைய அஞ்சிய பாவனைக்குச் சற்றும் அசராத யசோதா, அவளுக்கு முன்னால் கட்டையை ஆட்டியவாறு,

 

“அடியே… நீ யாரைப் பற்றி வேண்டுமானாலும் பேசு… மவளே… கந்தழியைப் பற்றிப் பேசினாய்… மகள் என்றும் பார்க்கமாட்டேன்… இதாலேயே நான்கு சாத்து சாத்திவிடுவேன் ஜாக்கிரதை…” என்றதும் அந்தக் கட்டைக்குப் பயந்தவள் போலத் திறந்த வாயில் இரு கரங்களையும் கத்தியோடு சேர்ந்து பொத்திக்கொள்ள, அதைக் கண்டு எழுந்த நகைப்பை அடக்க முயன்றவாறு மீண்டும் அடுப்படிக்குத் திரும்பி,

 

“அவன் ஏன்டி தரையில் தூங்கவேண்டும். வேண்டுமானால் நீ தரையில் படுத்துக்கொள்… இது அவனுடைய வீடு… தவிரத் தரையில் படுக்க எல்லாம் அவன் தயங்குவான் என்று நினைத்தாயா? அந்தப் போராட்டக் காலத்திலும் விளக்கில்லாத நேரத்தில் கூட, இதோ இந்தக் கட்டாந்தரையில் மண்ணெண்ணெய் விளக்கில் படித்து, உயர் தரப்பரீட்சையில் நான்கு பாடங்களுக்கும், ‘ஏ’ எடுத்துப் புள்ளியடிப்படையில் அகில இலங்கையில் இரண்டாவது இடத்தை எடுத்து நம்முடைய குடும்பத்திற்கே பெருமை சேர்த்துக் கொடுத்தவன்டி அவன்…! அவனைப் போலப் பிள்ளை கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்? அவனையா குறைத்துப் பேசுகிறாய்?” என்று தாய் பெருமையாகவும், கோபத்தோடும் கூறியவாறு கட்டைகளை அடுப்புக்குள் திணித்துவிட்டுக் கொஞ்சமாக மண்ணெண்ணெய்யை அதற்குள் ஊற்றி அடுப்பைப் பற்றவைக்க, பக்கென்று எரிந்தது விறகு.

 

அதில் தண்ணீர் நிறைந்த சோற்றுப்பானையை வைத்துவிட்டு, இன்னொரு பாத்திரத்தில் அரிசியைக் களையத் தொடங்க, வெட்டிக்கொண்டிருந்த மரவள்ளிக் கிழங்கின் ஒரு சின்னத் துண்டை வாய்க்குள் திணித்து மென்றவாறே,

 

“ஆமாம் ஆமாம் பெரிய எருமைதான்… சீ… பெருமைதான்… எடுத்து என்ன புண்ணியம்… அவர்தான் வெளிநாட்டிற்கு ஓடிவிட்டாரே…” என்றாள் ஏளனமும், ஒரு வித வலியோடும்.

 

யசோதாவோ இவள் ஏளனத்தை ஒரு பொருட்டாக எடுத்ததுபோலவே இல்லை. களைந்த அரிசியிலிருந்து உமிகளை எடுத்து எறிந்தவாறு, பெரும் வேதனையுடன்,

 

“இங்கே இருந்தும் என்ன செய்வது? குண்டுச் சட்டியில் குதிரையா ஓட்ட முடியும்? அவனுடைய திறமைக்கும், தகுதிக்கும் எங்கோ இருக்க வேண்டியவன்… பாவம் இந்த நாசமாய்ப் போன நாட்டில் பிறந்து மிகவும் சிரமப்பட்டு விட்டான். இதுவே வெளிநாட்டில் பிறந்திருந்தால், அந்தத் திறமைக்காக அந்த நாடே தலையில் தூக்கிக் கொண்டாடியிருக்கும்…” என்று ஆதங்கத்தோடு கூறியவருக்கு, அவரையும் மீறிக் கண்கள் கலங்கின.

 

ஒரு கணம் பழைய நினைவில் மனம் சென்று வர, ஒரு பெருமூச்சு விட்ட யசோதா, களைந்த அரிசியைச் சூடேறத் தொடங்கிய பானையில் போட்டவாறே,

 

“இல்லாதவன்தான் வெளியே போக யோசிக்கவேண்டும்… அவர்களிடம் பணம் இருக்கிறது மேதினி… அவர்களால் அவனை அனுப்பிப் படிப்பிக்க முடியும். எப்படியோ நன்றாகப் படித்து முடித்து, இப்போது அண்ணா அண்ணியையும் அழைத்துவிட்டான்… அவர்கள் இன்னும் ஆறு மாதங்களில் கனடாவிற்குப் போய்விடுவார்கள். தவிர, அந்தப் பையனுடைய திறமைக்கு நிச்சயமாக நன்றாக வருவான் மேதினி… வேண்டுமானால் இருந்து பார்… அவன் வெற்றியின் உச்சத்தில் நிற்கப் போகிறான்…” என்றுவிட்டு எரியத் திணறிய விறகுகளை ஒரு தட்டுத் தட்டி, திருப்பி அசைத்து நேராக்க, இப்போது பற்றிக்கொண்டது தீ.

 

இவளோ திரும்பி அன்னையை எரிச்சலுடன் பார்த்து விட்டு,

 

“உங்கள் மரக்கறி வெட்டியாயிற்று… நான் போகிறேன்… இல்லையென்றால் உங்கள் மருமகன் புராணம் பாடி, என்னை உண்டு இல்லையென்றாக்கி விடுவீர்கள்…” என்றவள், வெட்டிய மரக்கறிகளை அங்கேயே வைத்துவிட்டுத் தன் அறைக்குள் நுழைந்து படுக்கையில் தொப்பென்று அமர்ந்தாள். ஏனோ நெஞ்சமெல்லாம் படபடத்தது.

 

‘உண்மைதான்… அன்னை சொன்னது போலக் கந்தழிதரன் படிப்பில் பயங்கரப் புலிதான். அதுவும் மின்சாரம் இல்லாமல் முணுமுணுக்கும் வெறும் லாந்தர் விளக்கில் படித்து, அத்தனை பாடங்களுக்கும் ‘ஏ’ எடுப்பது என்பது சாதாரணமானது அல்ல. அந்த நேரம் சிங்கள அரசுக்கு ஆதரவாக வடக்கலிருந்து வந்த இராணும் யாழ்ப்பாணத்திற்குள் ஊடுருவிய காலம். நிறைய சிக்கல்கள், பிரச்சனைகள் நடந்த நேரம். அதற்குள் படித்து உயர்தரப் பரீட்சை எடுத்துச் சாதிப்பது என்பது மகத்தான சாதனையே.

 

எண்பத்தேழாம் ஆண்டு அமைதிப்  படை என்கிற பெயரில் வடக்கிலிருந்து வந்த இராணுவம் ஈழத்தமிழர்களின் அமைதியை மொத்தமாய்க் குலைத்துச் சென்ற காலம் அது. மனித தலையின் கறுப்புத் தெரிந்தாலே சுட்டு வீழ்த்தும் நேரம் அது, பசிக்கும்… ஆனால் உணவு தேட முடியாது. தண்ணீர் விடாய்க்கும், ஆனால் எடுத்துக் குடிக்க வெளியே செல்ல முடியாது. கதறி அழும் குழந்தை கூட வாய் மூடித்தான் கதற முடியும். இல்லையேல், தள்ளி நிற்கும் இராணுவத்தின் தேவைக்கு வேறு பதில் கொடுக்க வேண்டும். அது பெண்ணாயும் இருக்கலாம், வெளியே சென்ற ஆளுடைய உயிராகவும் இருக்கலாம். இதில் திடீர் என்று உள்ளே நுழையும் ராணுவம் குடும்பத்தாரை ஒரு அறைக்குள் தள்ளிவிட்டுப் பெண்களைப் பலவந்தப்படுத்திக் கற்பழிப்பது சர்வ சாதாரணமாக நடக்கும் ஒன்று. அதற்காகவே யாரும் மெல்லிய ஓசை கூட எழுப்ப மாட்டார்கள்.

 

அந்த நேரத்தில் பசியால் உயிர்போகுமோ என்றஞ்சி, ஈரத்துணியை வயிற்றில் கட்டி, வாழ முயன்றது தமிழ் ஈழம். பசிவந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள். ஆனால், ஈழத்தமிழனின் தன்மானத்துக்கு முன்னால் அந்தப் பத்தும் அடங்கி ஒடுங்கிப்போக, உயிரிருக்கும்வரைதானே இந்தக் கொடுமை என்று,  பசிக்கொடுமையை தங்க முடியாமலே, குழந்தைகளின் பசிக்கதறலைக் கேட்கமுடியாமல் அமைதிப்படையின் துப்பாக்கிச்சூட்டை வாங்கி உயிரிழந்த மக்கள் கூட்டமும் ஏராளம் ஏராளம்.

 

இன்னொருபக்கம் காண்போர் எல்லோரும் போராளிகள் என்று முத்திரைகுத்ததப்பட்டு, நாம் விடுதலை போராளிகள் அல்ல என்பதை உணர்த்த முதலே உயிர்பிரிந்த அவலம். அப்போது ஒட்டுமொத்த ஈழத் தமிழனும் போராளிகள் என்று முத்திரை குத்தப்பட்டு  நசுக்கிப் பிழிந்த காலம்.

 

எந்த நேரம் எந்தப் பக்கத்திலிருந்து குண்டுகள் வந்து விழும் என்று தெரியாது. எந்தப்பக்கத்திலிருந்து துப்பாக்கிச் சூடு பாயும் என்றும் தெரியாது. இரண்டு வருடங்கள் நரகத்தைக் கற்றறிந்த காலம். நரகம் கூட ஈழத்தமிழர்களின் நிலையை நினைத்து வெட்கப்பட்டிருக்கும். அது ஈழத் தமிழனின் வரலாற்றில் அழிக்க முடியாத இருண்ட காலம்.

 

அதற்குள்ளும் அவன் படித்து இத்தனை பெறு பேறுகள் எடுத்தது நினைத்துப் பார்க்க முடியாத சாதனையே. அவன் மட்டுமல்ல. அவனைப் போல ஆயிரம் ஈழத் தமிழ் மாணவர்கள் இலங்கையே திரும்பிப் பார்க்க வைத்தார்கள். இது வரலாறு. இப்போது அவனை நினைத்தாலும் வியந்து போவாள் அம்மேதினி.’

 

எப்போதும் போல, அப்போதும் கடிவாளத்தை அறுத்த குதிரை போல அவளுடைய நினைவுகள் கந்தழிதரனை நோக்கிப் பாய்ந்து செல்ல, உதட்டோரத்தில் மெல்லிய துடிப்பு.

 

கந்தழிதரன்… உலகில் அவளுக்குப் பிடித்த, பிடிக்கிற பிடித்துக்கொண்டிருக்கிற ஒரே ஒரு ஆண்மகன். அதே வேளை முற்றாக அவளால் வெறுக்கப் படுகிறவனும் அவன்தான்.

 

ஒருத்திக்கு ஒருவனைப் பிடிக்க வேண்டும், இல்லை வெறுப்புத் தோன்ற வேண்டும். இது என்னவென்றால், இரண்டுமே சம அளவில் அல்லவா இருக்கிறது.

 

அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, அவன் என்றால் இவளுக்கு உயிர். யாருக்கும் அடங்காதவள், கந்தழிதரனுக்காக அடங்குவாள். இவளை விடப் பதினொரு… இல்லை இல்லை… பத்து வருடங்கள் பெரியவன். அதனால் அவள் சிறுமியாக இருந்தபோது இவளுக்கான பாதுகாவலனும் அவன்தான்.

 

இவளின் தாய் வழி மாமன் மகன்தான் கந்தழிதரன். பரந்தாமன் அம்பிகாவின் ஒரே ஒரு புத்திரன். நாட்டுப் பிரச்சனைகள் காரணமாக நிறைய உறவுகள் ஈழத்தை விட்டு வேறு நாடுகளுக்குப் போன பின், எஞ்சிய சொச்ச உறவுகளுக்குள் பரந்தாமனும் யசோதாவும்தான் நெருங்கிய இரத்த உறவுகள். அதனால் நல்ல நாள் பெரு நாளுக்கு எப்போதும் இரு குடும்பமும் சந்தித்து உறவாடும். அதுவும் 87 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் பலாலியை முற்றுகையிட்டு, விமான நிலையத்தைக் கைப்பற்றியபோது, அதற்கு அருகேயிருந்த சொந்த ஊரான தெல்லிப்பளையில் இருக்க முடியாது சண்டிலிப்பாய்க்கு இடம்பெயர்ந்து வந்தது அம்மேதினியின் குடும்பம்.

 

அப்போது, பத்துப் பரப்புக் கொண்ட பெரிய காணியில் கட்டிய பரம்பரையான மாடமாளிகையையும், ராஜபோக வசதிகளையும் இழந்துவிட்டு அன்னை யசோதா, தந்தை காசிநாதன், தம்பி செல்வகுமரன், இவள் என்று நால்வராக வந்தவர்களை இரு கரம் நீட்டி வரவேற்றதோடு, பக்கத்திலேயே இருந்த இன்னொரு வீட்டையும் இவர்களிடம் கொடுத்துத் தங்க அனுமதித்தார் யசோதாவின் அண்ணன் பரந்தாமன். பிறகென்ன, முன்பு அடிக்கடி சந்திக்கும் வழக்கம் அதன் பின் எப்போதும் சந்திக்கும் வழக்கமாயிற்று.

 

இங்கே சமைத்தால் அங்கே போகும். அங்கே சமைத்தால் இங்கே வரும். அத்தனை ஒட்டு இரு குடும்பங்களுக்கும் இடையில்.

 

ஆதிகாலம் தொட்டு இவளுக்கும் கந்தழிதரனுக்கும் இடையில் ஒரு போதும் ஒத்துப் போகாது. இருவருக்குமே என்றால், இவளுக்குத்தான் ஒத்துப் போகாது. இவள் வேறு கொஞ்சமே கொஞ்சமாய்ப் பூசிய தேகத்துடன் இருப்பாளா, இவளை விடப் பெரியவனான கந்தழிரன் எப்போது பார்த்தாலும் இவளைக் கிண்டலடித்துக்கொண்டே இருப்பான்.

 

அதுவும் இடம் பெயர்ந்து வந்த பிறகு அவனுடைய கிண்டல் மேலும் அதிகரித்தது என்றுதான் சொல்லவேண்டும். அவன் ஏதாவது சொல்ல வேண்டியது தான், ஒன்றில் இவனை அடிப்பதற்குத் துரத்திக்கொண்டு போவாள். இல்லை கையில் கிடைப்பதால் அவனை நோக்கி எறிவாள்.

 

கந்தழிதரனுக்கும் அம்மேதினியை மிக மிகப் பிடிக்கும். குண்டுக் கன்னங்களும், நீண்ட விழிகளும், பார்க்கும் போதே ஏதோ கொத்து ரோஜாக்களைப் பார்க்கும் நிறைவு அவனுக்கு. அதுவும்  கோபமாக அவள் முறைக்கும் போது இவனுக்குச் சிரிப்புப் பீரிட்டுக் கொண்டு வரும். அதனால் அந்த எட்டு வயது சிறுமியை வம்புக்கு இழுப்பது இவனுடைய பிடித்தமான பொழுது போக்கு.

 

என்னதான் அவன் இவளை வம்புக்கு இழுத்தாலும், அம்மேதினி என்ன கேட்டாலும் தலையை அடகு வைத்தாவது செய்துவிடுவான். அதனால் கோபத்தையும் மீறி கந்தழிதரன் என்றால் எப்போதும் அம்மேதினிக்குத் தனிதான்.

 

அவன் புத்தகம் படிக்கும்போது ஓடிப்போய் அவன் மீது தொப்பென்று விழுவதிலிருந்து, அதுவும் நல்ல சாப்பாடு என்றால் அவனுக்கு முன்பாக அமர்ந்து வாய் பார்க்க, அதைக் காணச் சகிக்காது, தன்னதை அவளுக்கு ஊட்டிவிடுவதிலிருந்து, அவன் எதாவது வம்பு பேசினால், சாப்பிடும்போது அவன் சாப்பாட்டில் வேண்டும் என்றே தண்ணீரை ஊற்றுவதிலிருந்து, கிணற்றடியில் குளிக்கும்போது, காஞ்சோண்டிச் செடியின் இலையை எடுத்துவந்து (காஞ்சோண்டி யாழ்ப்பாணத்தில் புதர்களுக்குள் வளரும் செடி. அதன் இலை பட்டாலே, அரித்துத் தடிக்கத் தொடங்கிவிடும். கூடவே எரிச்சலையும் கொடுக்கும்.) அவன் முதுகில் தேய்த்துவிட்டு ஓடுவதிலிருந்து, படுக்கும் போர்வைக்குள் நெருஞ்சி முள்ளைப் பரப்பி வைப்பதிலிருந்து அவள் செய்யாத தறுகுறும்புகள் கிடையாது.

 

அதனால் இவனும் சும்மா விட்டுவைத்ததில்லை. இவள் என்ன என்ன செய்தாளோ அத்தனையையும் மாற்றுப் பிசகாமல் செய்துவிடுவான். அவள் காஞ்சோண்டியை இவன் மீது தேய்த்துவிட்டு ஓடினால், அவளைத் துரத்திப் பிடித்து எங்காவது ஒரு மரத்தின் உடைந்த கிளையில் இவளைத் தூக்கித் தொங்கவிட்டு வந்துவிடுவான். இவள் எவ்வளவு கத்தினாலும் குழறினாலும் கருத்தில் எடுக்கவே மாட்டான். அவன் குளித்து ஆடைகளை மாற்றிய பிறகுதான் கீழே இறக்கி விடுவான்.

 

சாப்பிடும் சாப்பாட்டில் தண்ணீர் ஊற்றினால்,

 

“ஒரு வேளை சாப்பாட்டிற்கு எத்தனை பேர் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கிறார்கள்… நீ என்னவென்றால் அத்தனையையும் வீணாக்குகிறாயா?” என்று திட்டியவாறு அவளை அமுக்கிப் பிடித்துப் பச்சைப் பாவைக்காய் முழுவதையும் சாப்பிட வைப்பான். எவ்வளவு திமிறினாலும் விடுபடவும் முடியாது, உண்ணாமல் அங்கிருந்து தப்பவும் முடியாது.

 

படுக்கையில் நெருஞ்சி முள் பரவியிருந்தால், அவளுடைய படுக்கையில் தண்ணீரை ஊற்றிவைப்பான். இல்லை அவள் நடக்கும்போது கால்களை இடறிவிட்டு விழவைப்பான்… அவள் பாவம் சிறுமி என்றெல்லாம் பார்க்க மாட்டான். என்ன அவள் ஏதாவது செய்தால் பிடிபட்டுவிடுவாள். இவன் செய்தால் பிடிபடுவது கிடையாது. அத்தனை பக்காவாகத் திட்டம்போட்டுக் கவிழ்ப்பான்.

 

ஆனால் அவளுக்கு ஏதாவதென்றால் துடிப்பவனும் இவனே.

 

ஒரு முறை துவிச்சக்கர வண்டி பழகிவருகிறேன் என்று போனவள் முழங்காலைத் தேய்த்துக்கொண்டு “ஊ ஊ ஊ…” என்றவாறு இவனைத் தேடி வந்தாந்.

 

முன் விறாந்தையில் சுவரில் சாய்ந்தமர்ந்தவாறு ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்த கந்தழிதரனைக் கண்டதும், அவனை நோக்கிச் சென்று அவனுடைய மடியில் தொப்பென்று விழ, அவள் விழுந்த இடம்  வேறு ஏடாகூடமாக இருக்க உயிர்போகும் வலியில் தன்னை மறந்து “அம்மா…!” என்று அலறிவிட்டான் கந்தழிதான்.

 

அவனுக்குச் சற்று நேரம் எடுத்தது சுயத்திற்கு வர. அடிபட்ட இடத்தை அழுத்தவும் முடியாது சமாளிக்கவும் முடியாது, விழிகளில் கண்ணீர் வரத் திணற, அவளோ அழுதவாறு நிமிர்ந்து கந்தழிதரனைப் பார்த்தாள்.

 

இதில் அவன் தான் அழுவதைப் பார்த்துத்தான் அழுகிறான் என்று நினைத்தவளாக, மேலும் வீறிட்டு அழ, அந்த அழுகையில் தன் மடியில் கிடந்தவளைப் பார்த்து முறைத்தான் கந்தழிதரன்.

 

கண்டுகொண்டாளா அவள். மீண்டும் தன் அழுகையை அதிகப்படுத்த, தன் வலி மறந்தவனாகப் புத்தகத்தை ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு, அவளைச் சமாதானப்படுத்தும் நோக்கில், அவளைத் தன்னோடு அணைத்து,

 

“என்ன அம்மணி… என்னாச்சு… என்னுடைய பேபி கேர்ள் ஏன் அழுகிறாள்” என்று கேட்டான். அவளோ மீண்டும் அழத் தொடங்க, அப்போதுதான் அவளுடைய ஆடையில் படிந்திருந்த மண்ணையும் அழுக்கையும் கண்டு, எங்கோ விழுந்தெழும்பி வந்திருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டான். உடனே அவள் மீது படிந்திருந்த அழுக்கைத் துடைத்தவாறு

 

“ப்ச்… கேட்கிறேன் அல்லவா…” என்று சற்றுக் கடிய, அவன் பக்கமாகத் திரும்பி, அவன் அணிந்திருந்த டீ ஷேர்ட்டை இழுத்து அதில் தன் மூக்கை உறிஞ்சித் துடைத்தவள், தன் நீளப் பாவாடையைத் தூக்கிக் காட்ட, அங்கே இருந்த காயத்தைக் கண்டு துடித்துப்போனான் கந்தழிதரன்.

 

“மை பேபி கேர்ள்…” என்று வருந்தியவனாக, அவளைத் தூக்கிக்கொண்டே எழுந்து,

 

“என்னடி ஆச்சு…?” என்றான் மெய்யான வருத்தத்துடன். கூடவே கிணற்றடிக்கு ஏந்திச் சென்று, அங்கிருந்த துவைக்கும் கல்லில் அவளை அமர்த்திவிட்டுத் துலாவில் தண்ணீரை மொண்டெடுத்து அங்கிருந்த இன்னொரு வாளியில் ஊற்றிவிட்டு, அவள் பாவாடையைத் தூக்கித் தொடைகளின் மீது போட மீண்டும் வீறிட்டாள். உடனே ஊதி ஊதிக் காயத்தை ஆற்ற முயன்றவன், அழுக்காகிப் போன காயத்தைச் சுத்தமாக்கவேண்டி, கரத்தால் தண்ணீரை அள்ளி எடுத்துக் காயத்தில் ஊற்ற, யாரோ கழுத்தை நெரித்துக் கொல்வது போன்று அலறினாள் அம்மேதினி.

 

இவனுக்கோ காதுகள் அடைத்தன. அவள் சத்தத்தைத் தாங்க முடியாதவன் போலத் தலையைச் சற்று சரித்தவன், முகத்தைச் சுளித்தவாறே அவளைப் பார்த்து,

 

“ஷ்… எதுக்கிடி இப்படி அலறுகிறாய்? காது ஜவ்வு கிழிந்துவிட்டது எனக்கு…” என்று கடிந்தவன், மேலும் காயத்தைக் கழுவியவாறு,

 

“கேட்கிறேன் அல்லவா… சொல்லித் தொலையேன்…” என்று சிடுசிடுத்தான். அதற்குத் தலையைச் சரித்து, மூக்கை சீறி, சளியை வெளியேற்றியவள் அவன் முறைப்பையும் பொருட்படுத்தாமல், அவன் புறம் குனிந்து தோள் புறத்தில் மூக்கை துடைத்துவிட்டு,

 

“ரவி இருக்கிறான் அல்லவா…” என்றாள் இன்னும் அழத் தயார் என்பது போல.

 

“ஆமாம்…”

 

“அவனுடைய தங்கை இருக்கிறாள் அல்லவா…”

 

“யாரு… எலிவாலா…”

 

“ஆமா…”

 

“சரி…”

 

“அவளுக்கு அந்தக் குரங்கு வண்டி ஓட்டக் கற்றுக் கொடுத்தானா, எனக்கும் கற்றுக்கொடு என்றேனா… அவனும் சரி என்று கற்றுக்கொடுத்தானா…”

 

“ம்…”

 

“பழகும்போது நடுவில் கையை விட்டுட்டான்டா கந்து… நான் விழுந்துவிட்டேன்… அதுதான் காலில் காயம் வந்துவிட்டது…” என்று அந்தச் சிறுமி உதடுகளைப் பிதுக்க,

 

“சரி… சரி… அழாதே… மிதிவண்டி கற்றுக் கொள்வதற்கு எதற்கு அவனிடம் போய்க் கேட்டாய்… என்னைக் கேட்டிருக்கலாம் அல்லவா?” என்று சற்றுக் கோபத்துடன் கேட்க, இவளோ,

 

“நீ தான் என் தலையில் கொட்டுவாயே… அவன் என்றால் எத்தனை தரம் நான் கொட்டினாலும் அழுது கொண்டே சொல்லிக் கொடுப்பான்… ஒன்றும் சொல்ல மாட்டான்…” என்றதும் இப்போது நிதானமாக அவளை நிமிர்ந்து பார்த்தான் கந்தழிதரன்.

 

“நீ கொட்டுவாயா? அப்படியானால் அவன் கை விட முதல் அவனை கொட்டினாயா?” என்று முக்கியப் புள்ளியைப் பிடித்துக் கேட்டான் கந்தழிதரன். ஒரு கணம் அசடு வழிந்தவள்,

 

“ஹீ.. ஹீ… அது என்னுடைய தப்பில்லை கந்து… என்னை வண்டியோடு பிடித்து உருட்டிக்கொண்டே பெடலை மிதிக்கச் சொன்னானா… நான் பெடலில் காலை வைத்துக்கொண்டே மிதிக்காமல் அப்படியே கைப்பிடியைப் பிடித்துக்கொண்டே இருந்தேனா, பத்து சுற்றுச் சுற்றியதும் அவன் களைத்துவிட்டான்… எனக்குக் கோபம் வந்துச்சா… அதுதான் அவன் தலையில் ஹீ ஹீ ஓங்கிக் கொட்டிவிட்டேன்…” என்று கூற கந்தழிதரனுக்குத்தான் பீரிட்டு எழுந்த சிரிப்பை அடக்கக் கடும் சிரமப்படவேண்டி இருந்தது.

 

“அசடு… பெடலை அழுத்தாமல் எப்படி வண்டி ஓட்டப் பழகுவது?” என்று கேட்க,

 

“அந்த ஈர வெங்காயம் எனக்குத் தெரியாதா? அதுதான் அழுத்த அழுத்த வரமாட்டேன் என்கிறதே… நான் என்ன செய்ய…” என்று மூக்கை உறிஞ்ச, காயம் சுத்தமானதும் தன் மேல் டீ ஷேர்ட்டைக் கழற்றி அவள் மூக்கையும் துடைத்துவிட்டு, அங்கிருந்த வாளியில் போட்டுவிட்டு எழுந்தவன், மீண்டும் அவளைக் கரங்களில் ஏந்தி, உள்ளே எடுத்து வந்து காயத்திற்கு மருந்துபோட்டு, அதன் பின் அவளுக்கு வண்டியோட்டக் கற்றுக்கொடுத்தது, அதற்காகப் பல முறை அவனிடம் கொட்டு வாங்கியது என்பதெல்லாம் பெரிய சரித்திரம்.

 

இப்படியே மகிழ்ச்சியாகத்தான் இரண்டு வருடங்கள் கழிந்தன.

 

ஒரு நாள் பள்ளிக்கூடம் விட்டு வந்த போது, தோழிகளுடன் போய்க் கொண்டிருந்தவளைக் மதிலின் மீது அமர்ந்தவாறு நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தவன் கண்டு விட்டான். சும்மா விட்டிருக்கலாம். வேலியில் போன ஓணானை மடியில் விட்டவன் கதையாக, கிண்டல் தொனிக்க,

 

“ஹே… என்னடா… பூசணிக்குக் கைகால் முளைத்திருக்கிறதே… என்ன ஆச்சரியம்…” என்றான். நண்பர்கள் வேறு அதைக் கேட்டுச் சிரிக்க வந்ததே கோபம். குனிந்து தரையிலிருந்த கல்லை எடுத்து அவனை நோக்கி எறிய அது கச்சிதமாக நெற்றியில் பட்டு, இரத்தம் கொட கொட என்ற கொட்டத் தொடங்கியது. அவனுக்கல்ல. அவனுக்குப் பக்கத்திலிருந்த நண்பனுக்கு. அதிர்ந்து போனார்கள் அனைவரும்.

 

இவன் கோபத்துடன் இவளை நிமிர்ந்து பார்க்க, அங்கே நிற்பதற்கு அவளுக்கென்ன பைத்தியமா? குறி தப்பிய உடனேயே தோழிகளை இழுத்துக் கொண்டு மாயமாக மறைந்துவிட்டிருந்தாள் அம்மேதினி.

 

ஆனாலும் தன் நண்பனைக் காயப்படுத்தவிட்டாள் என்கிற கன ஆத்திரத்தில் இருந்தவன், அன்று மாலையே அவளைத் தேடி வீட்டுக்கு வந்தான்.

 

வாசலில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த காசிநாதன், சிவந்திருந்த தன் மருமகனின் முகத்தைக் கண்டு, ஏதோ சரியில்லை என்பதைப் புரிந்து கொண்டவராக,

 

“என்ன… முகம் சுண்ட வைத்த வத்தல் குழம்பு போல இப்படிச் சுண்டிக் கிடக்கிறது?” என்று கிண்டலுடன் கேட்க, அவரைப் பார்த்து முறைத்தவன்,

 

“எங்கே உங்கள் அருமந்த புத்திரி?” என்றான் சீற்றமாக. (அருமந்த – அரு மருந்து அன்ன – கிடைக்க முடியாத பொருள் என்று பொருள்) பிரச்சனை தன் மகளுக்கும் அவனுக்கும் என்பதைப் புரிந்தவராக, ‘கடவுளே… இன்று என்ன சிக்கலை வாங்கி வந்திருக்கிறாளோ?’ என்று கலங்கியவராக,

 

“ஏன்பா… பாவம் இன்று அவளுக்கு உடல் நலம் சரியில்லையே… படுத்திருக்கிறாள்…” என்று சமாதானப் படுத்த முயன்றார்.

 

அவர் சொன்னதை நம்பவில்லை என்பது போல  முறைத்தவன்,

 

“சமாளிக்காதீர்கள் மாமா… என்ன காரியம் செய்துவிட்டு வந்திருக்கிறாள் தெரியுமா? என்னுடைய நண்பனின் மண்டையை உடைத்து விட்டு, இங்கே எதுவுமே நடக்காதது போல வந்து படுத்திருக்கிறாளா? அவனுக்கு இரண்டு தையல் போடவேண்டியாயிற்று. இவள்தான் மண்டையை உடைத்தாள் என்பதை அவன் பெற்றோருக்குத் தெரியாமல் மறைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது… எங்கே அவள்?” என்று அவன் கோபத்துடன் எகிற, தன் மருமகன் தேவையற்று இப்படிக் கோபப் பட மாட்டான் என்பதைப் புரிந்து கொண்ட காசிநாதன்,

 

“அது… அது… அவள் சின்னக் குழந்தை தம்பி… அவளோடு கோபப் படுகிறாயே…” என்று சமாளிக்க முயல,

 

“நல்ல சின்னக் குழந்தைதான். இன்னும் இரண்டு மாதங்களில் பத்து வயதாகிவிடும்… இன்னும் குழந்தை என்கிறீர்களே…” என்றவன் விறுவிறு என்று உள்ளே சென்று அவளுடைய அறைக் கதவை அடித்துத் திறக்க, ஏற்கெனவே அவன் வந்துவிட்ட செய்தியை எகிறிய அவன் குரலிலிருந்து தெரிந்து கொண்டவளாக, முகத்தைப் போர்வையால் போர்த்திக்கொண்டு சுருண்டு படுத்துவிட்டாள் அம்மேதினி.

 

உள்ளே வந்தவனுக்கு அந்தக் காட்சியைக் கண்டதும் இன்னும் எகிறியது கோபம்.

 

தன்னைப் போய் நண்பனிடம் கெஞ்ச வைத்துவிட்டானே. அவளுக்காகத்தான் கெஞ்சினான் என்றாலும், அது அவனுக்கு அவமானம் தானே.

 

“ஏன்டி எருமை… குண்டுப் பூசணி… ஒழுங்காகக் குறிபார்த்து எறியத் தெரியவில்லை, இங்கே வந்து போர்த்திக் கட்டிக்கொண்டு படுத்திருக்கிறாயா?” என்று சீறியவாறு வர, இவளுக்கே உள்ளே குளிர் எடுத்தது.

 

“கடவுளே… ப்ளீஸ்… ப்ளீஸ்… காப்பாற்று காப்பாத்து…” என்று கெஞ்சிக் கொண்டிருக்கும் போதே திடீர் என்று அவள் மீது குளிர் தண்ணீர் ஊற்றப்பட்டது. அதுவும் கச்சிதமாக முகத்தில். அதுவும் மூக்கிற்கு நேராக.

 

பதறி அடித்துப் போர்வையை விலக்கி எழுந்தவளுக்குச் சற்று நேரம் எடுத்தது ஒழுங்காக மூச்சு விட, வாயைத் திறந்து சுவாசத்திற்காகச் சிரமப்பட, பளார் என்று அவளுடைய முதுகில் ஓங்கி ஒரு மொத்து விழுந்தது. அந்த மொத்தில் விட்ட மூச்சு சரிப்பட, கூடவே இருமலும் வர, மொத்து விழுந்த வேகத்தில் எழுந்த வலியைச் சமப்படுத்துவதா, இல்லை இருமலைச் சமாதானப் படுத்துவதா என்று புரியாமல், திணறி அடித்து ஒருவாறு சமாதானப் பட்டு நிமிர்ந்த போது, இப்போது பத்திரகாளியாக மாறியிருந்தாள் அம்மேதினி.

 

“அடே… எடுபட்ட பயலே… என் மீதா தண்ணீர் ஊற்றினாய்… என்னையா அடித்தாய்… உன்னை…” என்றவாறு ஆவேசத்துடன் எழுந்தவள், அந்த இருபது வயது ஆண்மகனின் அடர் சுழல் குழலைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்துக் குனிய வைத்துத் தன் வயிற்றோடு அவன் முகத்தை அழுத்திப் பிடித்து முதுகில் மொங்கு மொங்கென்று நான்கு கொடுக்க, அவனோ கொசுறு தட்டிய உணர்வில் அவள் கால்களைப் பற்றி இழுக்கப் பொதார் என்று மல்லாக்காகக் கட்டிலில் விழுந்தாள் அம்மேதினி.

 

அத்தோடு விட்டானா அந்தக் கிராதகன். அவள் கால்களைப் பற்றி மேலே தூக்க, இப்போது தலைகீழாக நின்றாள் அவள். அவளுடைய பின்புறத் தலை அவன் முழங்காலோடு மோதி நின்றது.

 

அவன் நெடு நெடு என்கிற உயரம்தான். ஆறு அடி மூன்றங்குலமாவது இருப்பான். பார்க்கும் போது பெரிய திடகாத்திரம் என்றெல்லாம் சொல்லி விட முடியாது. மெல்லிய தேகம்தான். அதற்காக நோஞ்சானும் கிடையாது. ஒருவனாகவே ஒரு மணி நேரத்தில் சரிந்த பனை மரத்தை விறகுக்காகத் துண்டு துண்டாக வெட்டி வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்க்கும் வல்லமை கொண்டவன்தான். ஆனால் அவனுடைய உடல் அமைப்பு, பார்க்கும் போது அடிமட்டம் (அளவுகோல்) போல மெலிந்த நேர் கோடுதான். எப்படித்தான் இவளைத் தூக்குமளவுக்குப் பலம் வைத்திருந்தானோ… பெரும் ஆச்சரியம்தான் அவளுக்கு.

 

இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. இவள் பூசிய தேகமானாலும் நான்கடி ஏழு அங்குலங்களாவது இருப்பாள். அவனுடைய உயரத்திற்கு அவள் கொசுறு என்பதை அப்போது அவள் அறிந்திருக்கவில்லை.

 

நல்ல வேளை அவளைத் தலைகீழாகப் பிடிக்கும் போதே அவன் பாவாடை யையும் சேர்த்துத்தான் பிடித்திருந்தான். இல்லை என்றால் என்னவாகி இருக்கும். ஆனாலும் பதற்றம் விடவில்லை.

 

“டேய்… டேய்… விடுடா… அம்மா… இந்தக் கடா மாட்டைக் கூப்பிடுங்கள்…” என்று கத்த, அவனோ இன்னும் இறுகப் பிடித்து மேலே தூக்க,

 

“டேய்… விடுடா… பயமாக இருக்கிறது… விடுடா… தடி மாடு…” என்று கால்களை உதற முயன்று தோற்றவளாகக் கரங்களை அடித்துப் பார்த்து அலற, அவனோ அவளோடு கட்டிலை விட்டு விலகி மேலும் உயரே தூக்கித் தரையை நோக்கி விழுத்துவது போலப் பாசாங்கு செய்ய, அலறிப்போனாள் அம்மேதினி. இரண்டு உள்ளங்கைகளாலும் தலையைப் பற்றிக் கொண்டவள்,

 

“ஐயோ என் தலை போச்சே…” என்று அலறியவள் இன்னும் அவன் தரை விழுத்தவில்லை என்பதை உணர்வதற்குச் சற்று நேரம் எடுத்தது. ஒருவாறு தன்னைச் சுதாரித்தவளாக,

 

“டேய்… கீழே போட்டு விடாதேடா… எனக்கு ஒரு தலைதாண்டா இருக்கு… அம்மா… ஐயோ… என் மண்டை… என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையா… ஐயோ.. கொல்கிறானே… அம்மா… அப்பா… செல்வன்…” என்று அலறிய அலறலில் பக்கத்து வீட்டவர்கள் வராது போனது அதிசயமே. ஒரு வேளை அடிக்கடி இப்படி நடப்பதால், அவர்களும் பெரிதாக எடுக்கவில்லையோ என்னவோ.

 

அவள் என்ன கத்தியும் கந்தழிதரன் விட்டானில்லை.

 

“உனக்கு ஒரு தலை… மற்றவர்களுக்குப் பத்து தலையா இருக்கிறது… உன்னை இப்படியே கொண்டு சென்று கிணற்றில் போடுகிறேன் பொறு…” என்று கூறியவன் அவளோடு நடக்கத் தொடங்க, அதை உண்மையென்று நம்பியவளாகக் கரங்களைப் பின் புறமாகக் கொண்டு சென்று அவன் கால்களை இறுகக் கட்டிக்கொண்டவள்,

 

“டேய்… விடுடா… ப்ளீஸ்… இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன்… சத்தியம்… நம்பு… விடுடா…” என்றபோது இப்போது கண்ணீர் அவளுக்கு வரத் தொடங்கியிருந்தது. அவளை உலுப்பியவன்,

 

“மவளே… வாய்ப்பேச்சை விட்டுக் கைப்பேச்சை வைத்துக்கொண்டாய்… அவ்வளவுதான்…” என்று அவன் எகிற, இவளோ,

 

“சாரி… இனிமேல் அப்படிச் செய்ய மாட்டேன்…” என்ற போது அவளுடைய குரல் கமறி ஒலிக்க, அவள் அழுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டவனாகச் சடார் என்று அவளுடைய கால்களை இன்னும் மேலே தூக்கித் தன்னோடு அணைத்து மறு கரத்தைக் கழுத்துக்கூடாகக் கொண்டு சென்று அணைத்துத் துக்க இப்போது அவன் கரங்களுக்குள் மாலையெனக் கிடந்தாள் அம்மேதினி.

 

தான் அழுவதை அவன் பார்க்கக் கூடாது என்பதற்காகவே விழிகளை மூட அதைக் கண்டு கொண்டவனின் முகம் கனிந்து போனது.

 

என்ன நினைத்தானோ. தன் கரத்தில் கிடந்தவளை மெதுவாகக் கட்டிலில் அமர்த்தியவன், அவளுக்கு முன்பாக மண்டியிட்டு அமர்ந்து,

 

“ஹே… இப்போது எதற்கு அழுகிறாய்?” என்று கடிந்தவனாகக் கண்ணீரைத் துடைத்துவிட்டு,

 

“எதுவாக இருந்தாலும் சண்டை பிடிடி… இப்படி அழாதே… உனக்கு நன்றாகவே இல்லை தெரியுமா?” என்று அவள் மூக்கைப் பற்றி ஆட்டி விடுவித்தவன், அவள் கன்னத்தில் தன் வலது உள்ளங்கையைப் பதித்து,

 

“நீ செய்தது சரியா… ம்… கவினுடைய நெற்றியில் இரண்டு தையல் தெரியுமா… நிறைய இரத்தம் வேறு வெளியேறிவிட்டது… நம்முடைய சண்டையில் இன்னொருத்தன் பாதிப்படைவது சரியா சொல்?” என்று கேட்க இப்போது சிவந்த விழிகளைத் திறந்து அவனை முறைத்துப் பார்த்தவள்,

 

“நீ தானே என்னை… என்னை…” என்றவள் மூக்கை உரிஞ்சியவாறு,

 

“நீ தானே என்னை… குண்டம்மா என்றாய்… அதுதான்… அதுதான்…” என்று விக்கியவள், தன் புறக்கரத்தால் மூக்கைத் துடைத்து அக் கரத்தை அவனுடைய தோள் புறத்து டீ ஷேர்ட்டில் துடைத்துவிட்டு, மேலும் அவனை நோக்கிக் குனிந்து மறு தோள் புறத்தில் தன் மூக்கைத் துடைத்தவாறு, “கல்லெறிந்தேன்… அது… குறி… குறி… தப்பி… அவன் மீது… விழுந்து விட்டது… உன் பக்கத்தில் அவனை… யார் உட்காரச் சொன்னது… இல்லையென்றால்… இன்னொரு கல் எடுத்து உன் மீது குறி தப்பாமலே வீசியிருப்பேன் தெரியுமா…” என்றபோது இப்போது அவள் முகத்தில் கோபம் வந்திருந்தது. அதைக் கண்டு நகைத்தவன், அவள் தலையில் இடக்கரத்தை வைத்து ஆட்டிவிட்டு,

 

“நான் எங்கே குண்டு என்றேன்? பூசணிக்காய்க்கு கைகால் முளைத்தது போல என்றுதானே சொன்னேன்…” என்று நகைத்தவன், பின் அவள் தலையிலிருந்து கரத்தை எடுக்காமலே,

 

“அடுத்த முறை கல்லெறியும் போது குறித் தப்பாமல் எறி…” என்று விட்டு எழுந்து, தன் டீ ஷேர்ட்டைக் கழற்றி அவள் முகத்தில் விட்டெறிய, அவளோ எரிச்சலுடன் என்ன என்பது போலப் பார்த்தாள்.

 

“ம்… உன் மூக்குச் சளி என் சட்டையில், ஒரு வாட்டிக்கு நான்கு வாட்டி துவைத்து எடுத்து வந்து கொடு…” என்று விட்டுக் கையில்லா பெனியனோடு அறையை விட்டு வெளியேற, இவளோ அவனுடைய முதுகை எரிப்பது போலப் பார்த்து,

 

“நானே என் ஆடைகளைத் துவைப்பதில்லை… உன்னதைத் துவைப்பேன் என்று நினைத்தாயா?” என்றாள் பெரும் சீறலாய். அதைக் கேட்டதும் நின்று திரும்பிப் பார்த்தவன்,

 

“இனியாவது துவைக்கப் பழகு… எத்தனை நாட்களுக்குச் சிறுமியாக இருக்கப் போகிறாய்… உருளையம்மா…” என்று விட்டு அந்த இடத்தை விட்டு ஓட முயல,

 

“டேய்… இருடா.. மிளகாய்ப் பொடி போட்டுத் துவைத்து வைக்கிறேன்… இல்லை இல்லை… காஞ்சோண்டி போட்டுத் துவைக்கிறேன்.. மவனே… உடம்பெல்லாம் அரித்துத் தடிக்கவில்லை… என் பெயர் அம்மேதினி இல்லை…” என்று சீற,

 

“ம்… முதலில் உனக்குப் போட்டுப் பார்த்துவிட்டுத்தான் நான் போடுவேன்டி…” என்றான் நகைப்புடன். அவளோ,

 

“உன்னை எல்லாம் அத்தை மாமா பெற்றார்களா செய்தார்களா… பனைமரமே…” என்று சிடுசிடுக்க, மெல்லிய புன்னகையுடன் திரும்பி அம்மேதினியைப் பார்த்தவன்,

 

“அதை நீ அவர்களிடம்தான் கேட்கவேண்டும்…” என்றுவிட்டுச் சமையலறை நோக்கிப் போக, அவன் முதுகை இவளால் முறைக்க மட்டும்தான் முடிந்தது.

 

தூக்கி அவன் முகத்தில் இந்த டீஷேர்ட்டை எறிய முடியும். அதற்குப் பிறகு… இப்போது தலைகீழாகப் பிடித்தான். அடுத்த முறை… கிணற்றில் தூக்கிப் போட்டாலும் போடுவான்… இல்லை எங்காவது மரத்தில் தொங்கவிடுவான். அந்தப் பயத்தில் கரங்களைக் கட்டிக்கொண்டிருந்தாள் அம்மேதினி.

 

இவனோ சர்வசாதாரணமாகச் சமையலறைக்குப் போய், அங்கே இவர்களின் சண்டையை ஒரு பொருட்டாகவே மதிக்காதிருந்த அத்தையை நெருங்கி, அங்கிருந்த மேசையில் பாய்ந்தமர்ந்து,

 

“அத்தை… பசிக்கிறது… டீ…” என்று விட்டு அங்கே பறித்து வைத்த கொய்யாவைக் கடித்துச் சுவைக்கத் தொடங்க, சற்று முன் நடந்த சண்டையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்தானே,

 

“என்னடா, அந்தப் பையனுக்குக் காயம் அதிகமா?” என்றார் யசோதா வருத்தமாய்.

 

“தையல் போட்டிருக்கிறது… நெற்றியில்… சரியாகிவிடும்…” என்று சமாதானம் கூற,

 

“இவள் ரொம்பக் கை நீட்டுகிறாளேடா…” என்றார் மிக வருத்தமாய். தன் அன்பு அத்தை கலங்குவது பிடிக்காமல், மேசையை விட்டு இறங்கியவன் அவரைப் பின்னால் நின்றவாறே இறுக அணைத்து விடுவித்து,

 

“அவள் குழந்தை அத்தை… என்ன கொஞ்சம் செல்லம் அதிகமா… அதுதான் அப்படி நடந்து கொள்கிறாள். கொஞ்சம் முதிர்ச்சி வந்ததும் சரியாகி விடுவாள்… அவளைப் பற்றி வருந்தாதீர்கள்… நான் இருக்கிறேன்… அவளைப் பார்த்துக் கொள்வேன்… அவளுக்கு எந்தத் தீங்கும் வராது காத்துக் கொள்வேன்… இது சத்தியம் அத்தை” என்று உறுதி கொடுத்தபோது அந்த உறுதியில் மனம் நிறைந்து போனார் யசோதா.

What’s your Reaction?
+1
14
+1
4
+1
0
+1
1
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!