(49)
எப்படியோ ஏகவாமன் அலரந்திரியை விடுவித்தபோது நேரம் எட்டுமணியையும் தாண்டியிருந்தது. அப்போதும் அவளை விடாது தன் கரத்தில் அவளைப் பிடித்து வைத்திருக்க, இறுதியில் பாட்டி, இவர்களுக்காகக் காத்திருந்து காத்திருந்து சலித்துப்போய், உறவினர்களின் வரவைத் தொடர்ந்து இவர்களின் அறையைத் தட்டினார்.
பாட்டி அறையைத் தட்டியதும், பதறியவளாக அவனிடமிருந்து விலக முயல, அவனோ மேலும் அவளை அணைத்துத் தன் மீது போட்டுக்கொண்டவனாக,
“ஹே… என்ன அவசரம்… பேசாமல் படு… இரவு முழுவதும் தூங்கவில்லை…” என்று முணுமுணுக்க, இவளோ அவன் பிடியைத் தளர்த்த முயன்று தோற்றவளாக,
“ஐயோ… கதவைத் தட்டுகிறார்கள் ஏகன்… விடுங்கள்…” என்று அவள் கெஞ்ச அசைந்தானா அந்தப் படுபாவி. முகத்திலே குறும்பு மின்ன,
“தட்டிக் களைத்துப்போய் அவர்களே போய்விடுவார்கள்… தூங்கு அலர்… நீ தூங்காமல் என்னால் தூங்க முடியாது…’ என்று விழிகளைத் திறக்காமலே அவன் சிணுங்க, முதன் முறையாக அந்தப் புதிய முகத்தைக் கண்ட அலரந்திரி வாயைப் பிளந்தாள்.
ஒரு சில மாதங்களுக்கு முன்பு பார்த்த ஏகவாமனா இது… அவனிடமிருந்த கடுமையும் திடமும் எங்கே? இவனிடமிருக்கும் கண்ணனின் குறும்பு எங்கே?
“ஏகன்… நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? விடுங்கள்…” என்று முயன்று அவனிடமிருந்து விட முயல,
“என்ன நினைப்பார்கள்… புதிதாகத் திருமணம் முடித்தவர்கள்… தூங்க நேரம் சென்றிருக்கும் என்று நினைத்திருப்பார்கள்…” அவள் முடிக்கவில்லை,
“வாமன்… அலரந்திரியை விடப்போகிறாயா இல்லையா…” என்கிற கண்டிப்புச் சத்தம் கதவுப் புறமிருந்து வரப் பாட்டி உள்ளே வந்துவிட்டாரோ என்று பயந்தவனாகத் தன்னவளை விடாமலே முதுகை மட்டும் சற்றுத் தூக்கிக் கதவைப் பார்த்தான் ஏகவாமன். கதவு பூட்டித்தான் இருந்தது. குழப்பத்துடன் தன் பிடியிலிருந்து நெளிந்துகொண்டிருந்தவளைக் கண்டு,
“இருடி… நெளியாமல்…” என்றவன் இப்போது கட்டிலிலேயே சப்பாணி கட்டியமர்ந்து, அவளை இழுத்துத் தன் மடியில் போட்டு அணைத்தவாறு கழுத்தில் முகம் புதைத்து,
“உன்னை விட்டு விலகவே முடியவில்லைடி… இன்னும் இது நிஜம்தானா என்று கூட நம்பமுடியவில்லை…” என்று கிசுகிசுப்புடன் கூறும்போதே,
“வாமன்… அவளை விட்டுவிட்டாயா…” என்றார் பாட்டி மீண்டும். இவனோ,
“இந்தப் பாட்டிக்கு வயது எறிய அளவுக்கு அறிவு ஏறியிருக்கிறதா பார்… சிறிசுகள் அப்படி இப்படி இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறதா?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கழுத்தில் மூக்கை உரசியவாறு சிடுசிடுக்க, இவளோ, அவனை முறைத்துப் பார்த்து,
“நேரம் எட்டு முப்பது… இதற்கு மேல் அறைக்குள் இருந்தால் என்ன நினைப்பார்கள்…” என்றாள் மேலும் அவனிடமிருந்து தன்னை விடுவிக்க முயன்றவளாக.
“வாமன்… உன்னிடம்தான் கேட்கிறேன்… அலரந்திரி எங்கே…” என்று சற்று சுருதியை உயர்த்தியவாறு பாட்டி கேட்க, இவனோ,
“உங்கள் பேத்தியை நான் எதற்குப் பிடித்து வைத்திருக்கிறேன்… அவள் குளிக்கச் சென்றுவிட்டாள்…” என்றான் அவள் கழுத்திலிருந்து முகத்தை விலக்காமலே. இவளோ திமிறியவாறு அவனிடமிருந்து விடுபடப் போராடிக் கொண்டிருந்தாள்.
“டேய்… உன் தாத்தனுக்குத் தப்பாமல் பிறந்தவன் நீ… உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா… உறவினர்கள் வந்துவிட்டார்கள்டா… நேரத்திற்குச் சாப்பாடு போடவேண்டும்… சீக்கிரம் வெளியே வாருங்கள்…” என்று கடிந்துவிட்டு அவர் விலக, வேகமாக அவன் பிடியை உதறிவிட்டு, அங்கிருந்த போர்வையால் தன் மேனியைச் சுற்றியவாறு எழ முயல. அந்த மாயக் கள்வனோ, போர்வையை இழுத்துப் பிடித்தவாறு,
“சரி… ஒரு முத்தம் கொடுத்துவிட்டுப் போ…” என்றான் ஒற்றைக் கண் அடித்து.
“ஏகன் விளையாடுவதற்கு இதுவா நேரம்… விடுங்கள்…” என்றவள், முத்தம் கொடுக்காது அவன் விடமாட்டான் என்பதைப் புரிந்துகொண்டவளாக. அவனை நோக்கிக் குனிந்தாள்.
தன்னவளின் முத்தத்தைப் பெற வேண்டி, உதடுகளை ஈரமாக்கியவாறு ஆவலுடன் காத்திருக்க, அவன் இளகிய நேரம் பார்த்துக் கட்டிலில் தள்ளிவிட்டவள், போர்வையை இழுத்துக்கொண்டே குளியலறைக்குள் ஓடிப்போய்க் கதவைச் சாத்த, அவனோ கோபத்துடன் வடைபோச்சே… என்பது போல அப்படியே கிடந்தான்.
அதே நேரம் குளியலறைக்குள் நுழைந்த அலரந்திரிக்கு தன்னிலைக்கு வரச் சற்று நேரம் எடுத்தது. கதவிலேயே சாய்ந்து நின்றவளுக்குத் தன் வாழ்க்கை இத்தனை அழகிய நந்தவனமாக மாறும் என்று நினைத்துப் பார்க்கவேயில்லை. மெதுவாக அங்கிருந்த கண்ணாடியினருகே சென்றவள் தன் உருவத்தை அதில் பார்த்துத் திகைத்துப் போனாள்.
‘இது அவள்தானா?’ முகம் சிவந்து, கண்கள் மின்ன, உதடுகள் துடிக்க, பெரும் பூரிப்புடன், அத்தனை மகிழ்ச்சியையும் மொத்தமாய்ப் பெற்றவள் போல அங்கிருப்பது அவள்தானா? அந்த வறண்ட அலரந்திரி எங்கே போனாள்… வாழ்வில் அடிபட்டு அடிபட்டு நொந்துபோன அலரந்திரி எங்கே தொலைந்தாள்… இவள் புதியவள் அல்லவா… கம்பீரம் பெருகி மகிழ்ச்சி பொங்கி… இத்தனை அழகாக… மனதிற்குப் பிடித்த ஆண் ஒரு பெண்ணை எப்படியெல்லாம் மாற்றி விடுகிறான்…? தன்னையே கண்டு ரசித்தவள், தண்ணீரைத் திறந்துவிட்டு அதன் கீழ் நின்றாள். குளிர் நீர்த் தலையில் பட்டுத் தேகத்தில் விழுந்தபோது ஏற்பட்ட எரிச்சலில் கூடச் சுகம்கண்டாள் அத்தையலவள்.
அதே நேரம் தன் மனைவி குளியலறைக்குள் மறைந்து கொண்டதும், மெல்லிய புன்னகையுடன் சரிந்து படுத்தவனுக்கு முதல் கூடல் நினைவுக்கு வர, அவனுடைய மார்பு பெருமையிலும் மகிழ்ச்சியிலும் விம்மியது. அவள் என்னவள்… எனக்கு மட்டுமே உரித்தானவள் என்கிற கர்வம் அவன் மார்பை நிமிரச் செய்தது.
“யு மேக் மி கிரேசி… பேபி…” என்று முணுமுணுத்தவாறு அவள் பக்கத்திற்குச் சுழன்ற வந்து படுத்து, தன் மனைவியின் வாசனையை அனுபவிக்க முயன்றான். அசல் சற்றுத் தள்ளி இருக்க நகலின் வாசனை பெரிதாகக் கிறங்க வைத்துவிடுமா என்ன?
ஆனாலும் அவள் அருகே இருப்பது போன்ற ஒரு ஆனந்தத்தில் தன் விழிகளை மூடி அப்படியே கிடந்தான்.
அதே நேரம் குளித்துவிட்டு நிமிர்ந்தவளுக்கு அப்போதுதான் ஆடை எடுத்து வராததே நினைவுக்கு வந்தது.
“ஐயோ… அதை மறந்துவிட்டோமே… இப்போது என்ன செய்வது… அவர் அங்கேயே இருப்பாரே…” என்று கலங்கியவள், இருந்த துவாயைத் தன்னைச் சுற்றிக் கட்டிக்கொண்டு மெதுவாகக் கதவைத் திறந்து பார்த்தாள். நல்ல வேளை மீண்டும் விழிகளை மூடி உறங்கிக்கொண்டிருந்தான் ஏகவாமன்.
நிம்மதியுடன் சத்தம் வராது வெளியே வந்தவளின் கால் சரசரப்பு அவனை எழுப்பி விட, சடார் என்று விழிகளைத் திறந்தவன், நிமிர்ந்து பார்த்தான். அங்கே புத்தம் புது மலராய் அவன் மனையாள் மேனியைத் துவாயால் மூடிக் கட்டியவாறு பதுங்கிப் பதுங்கிப் போவதைக் கண்டதும், ஸ்பிரங் போலத் துள்ளி எழுந்தவன், இரண்டெட்டில் அவளைப் பின் புறமாகச் சென்று வயிறு கொண்டு அணைத்து அவள் கழுத்து வளைவில் தன் மூக்கைச் செருகி அவள் வாசனையை நுகர, துவட்டிய துவாயைக் கை நழுவ விட்டவள், வயிற்றை அணைத்த கரத்தைப் பற்றி,
“ஏகன்… என்ன இது… போ… ஹா ஹா… ஹா… விடுங்கள்… ஹா.. ஹா… ஏகன்… பாட்டி… அவுச்… ஐயோ… விடு… விடுங்களேன்… ஹா ஹா…” என்று அவன் செய்த சேட்டையிலும், அவன் செய்த அழும்பிலும் கிளுகிளுத்துச் சிரித்துக் கத்தி தன்னை விடுவிக்க முயல,
“என்னை விட்டா ஓடினாய்… உன்னை…” என்றவன் வலப்பக்கமாக அவிழ்ந்து விழுந்த கூந்தலை ஒதுக்கிவிட்டு, அவள் கழுத்தில் உதடுகளைப் பதித்து, மெதுவாய்க் கடித்து, சுவைக்க, இவளோ அவனிடமிருந்து விடு பட முயன்று தோற்றபோது, அவளை மீண்டும் படுக்கையில் விழுதியிருந்தான் ஏகவாமன்.
அடுத்து என்ன நடக்கும் என்பதைப் புரிந்துகொண்டவளாக,
“நோ… இல்லை… பாட்டி திட்டப்போகிறார்கள்…என்னை விட்டுவிடுங்கள்…” என்று கட்டிலிலிருந்து பின்னால் போகப் பார்க்க,
“இனிமேல் என்னிடமிருந்து ஓடுவாய் நீ…” என்று முடிக்கவில்லை,
“வாமன்… உனக்குக் கொடுத்த நேரம் முடிந்துவிட்டது, இப்போது அலரை வெளியே விடுகிறாய்… இல்லை… கதவைத் திறந்துகொண்டு நான் உள்ளே வருவேன்…” என்கிற பாட்டியின் அதட்டல் கேட்க, தன்னவளின் மீது பாயத் தயாராகிக்கொண்டிருந்தவன் பாட்டியின் மிரட்டலில் தடை போட்டது போல நின்று திருதிரு என்று விழித்தான்.
அதே நேரம் அறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்க,
“மை காட்… பாட்டி நிஜமாகவே உள்ளே வருகிறார்கள்…” என்று அலறியவன் அடுத்த விநாடி தன் மனைவியை அம்போ என்ற விட்டுவிட்டுக் குளியலறைக்குள் ஓடி மறைய. இவளோ ஐந்தும் கெட்டு, அறிவும் கெட்டு, அப்படியே கிடந்தாள். பின் பதறி அடித்து அவிழ்ந்த துவாயை இறுகக் கட்டியவாறு ஓடிப்போய்க் கைக்குக் கிடைத்த சேலையை இழுத்தெடுத்து அணியத் தொடங்க,
“இதோ… கதவைத் திறக்கிறேன்… உள்ளே வருகிறேன்…” என்று பாட்டி மிரட்ட இருந்த பதட்டத்தில் சேலை நழுவித் தரையில் விழுந்தது. அதை அப்படியே விட்டுவிட்டு, இழுத்த மேற்சட்டையை வளம் மாறிப் போட்டுப் பின் கழைந்து சரியாகப் போட்டு, மேலும் ஒரு நிமிடத்தை விழுங்கி, பொருத்தமில்லாத பாவாடையை அணிந்து கீழே கிடந்த சேலையில் தலை வளம் புரியாமல் ஏதோ ஒரு நுணியைச் செருகி, முடிந்த வரை தப்புத் தப்பாகச் சுத்தி, எப்படியோ முந்தானையைப் போட்டுவிட்டு கதவைத் திறக்க முயன்றபோது, மரதன் ஓடிய களைப்பு அவளுக்கு.
பெரிய மூச்செடுத்துத் தன்னைச் சமப்படுத்தியவள், கதவுக் குமிழில் கைவைத்துத் திறக்க, அது உள்ளே பூட்டியிருப்பது புரிந்தது.
இன்னும் பூட்டியா இருக்கிறது… பாட்டி திறந்தார்களே…?” என்று அவள் குழம்பியவாறு தாழை நீக்கிக் கதவைத் திறந்தால், முள்ளுக்கரண்டியுடன் நின்றிருந்தார் பாட்டி.
மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க நின்ற அலரந்திரியைக் கண்ட பாட்டிக்கு ஒரு பக்கம் சிரிப்புத் தோன்றியது.
“எங்கே போனான் அந்தப் பயல்… குளிக்கச் சென்றுவிட்டானா?” என்று கறாராகக் கேட்க, இவளோ திருத் திரு என்று விழித்தவாறு தலையை மேலும் கீழுமாக ஆட்டி ஆம் என்றாள்.
“சரி சரி… எவ்வளவு நேரம்தான் நானும் சமாளிப்பது… அந்தப் பயல் குளித்து வருவதற்குள் வேறு நல்ல சேலையைச் சரியாக அணிந்துகொண்டு வா அந்திரி… அவன் வெளியே வந்தான், இன்னும் இரண்டு மணி நேரம் உன்னை விடமாட்டான்…” என்று கூறிவிட்டுத் திரும்ப,
“நீங்கள்… கதவைத் திறக்கவில்லையா?” என்றாள் அலரந்திரி தன்னை மறந்து. அவரோ முள் கரண்டியைத் தூக்கிக் காட்டி,
“இதால்தான் திறப்பதுபோல நடித்தேன்… இல்லையென்றால், இன்று முழுவதும் நீ அறைக்குள்தான் இருந்திருப்பாய்… சீக்கிரம் வா… எல்லாரும் காத்திருக்கிறார்கள்…” என்றுவிட்டு வெளியேற, அலரந்திரிக்கோ வெட்கத்தில் உயிரே போய்விடும் போல இருந்தது.
இந்த எகவாமனை என்ன செய்தால் தகும்? கோபத்துடன் திரும்பியவள், படுக்கையைப் பார்த்தாள். எல்லாம் தாறுமாறாக இருந்தது. நகைகள் வேறு இரைந்து கிடந்தது.
ஓடிச்சென்று அனைத்தையும் பத்திரமாகச் சேகரித்து அங்கிருந்த பெட்டியில் வைத்துவிட்டுப் படுக்கை விரிப்பை இழுத்துத் துவைப்பதற்காகப் போட்டுவிட்டுப் புதிய விரிப்பை விரித்து, தரையில் சிந்திய மலர்களைக் கூட்டி அள்ளிக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டு நிமிர, இப்போது அறை ஒழுங்காக மாறியிருந்தது. திருப்தியுடன், அலமாரியைத் திறந்தவள், அதிலிருந்து ஒரு சேலையை எடுத்து நேர்த்தியாகக் கட்டிவிட்டு, கண்ணாடியின் முன்னால் நிற்க மேலும் அழகு கூடியிருந்தது அவளுக்கு.
அதே நேரம் குளித்துவிட்டு இடையில் துவாயுடன் தலையைத் துவட்டிக்கொண்டு வந்த ஏகவாமன், கண்ணாடி முன்னால் நின்றிருந்த தன் மனைவியைக் கண்டு, காதல் பெருக்கெடுத்து ஓட அவளை நெருங்கிப் பின்புறமாக அணைக்க, தன் கணவனின் வாசனையை ஆழ மூச்செடுத்து உள்ளத்தை நிரப்பியவாறு கனிவுடன் சிரித்தாள் அலரந்திரி. கூடவே கண்ணாடியில் தெரிந்த தன் கள்வனின் கம்பீர உருவத்தைக் கண்டு மலைத்துப் போனாள் அலரந்திரி.
உலக ஆண் அழகன் போட்டிக்கு இவன் போனால் நிச்சயம் முதலாவதாக வருவான்… அத்தகைய அழகும் கம்பீரமும் கொண்டிருந்தான் அவன். இவன் மொத்தமாகத் தனக்குத்தான் என்பதை நம்புவதற்கு அவளுக்குப் பெரும் சிரமமாகவே இருந்தது. இவனிடம்தானே என் மனதைப் பறிகொடுத்தேன்… இவனிடம்தானே என் பெண்மையைக் கொடுத்தேன் என்று நினைத்தபோதே கர்வம் ஓங்கி வளர்ந்தது. எங்கே இமைத்தால் மாயமாகிவிடுவானோ என்று அஞ்சியவள் போல விழிகளைத் திறந்து அவனையே பார்த்துக்கொண்டிருக்க, அக்கள்வனோ தன்னவளின் அழகில் சொக்கியவனாக அவள் வெற்றுக் காதின் வளைவில் முத்தமிட்டவனாக,
“இன்னும் நகை அணியவில்லை…” என்றான் கிரக்கமாய்.
“அணிய வேண்டும் ஏகன், ஆனால்…” என்று தயக்கத்துடன் கூறியவள், மேசையில் கிடந்த நகைகளைக் காட்டி,
“இவற்றைப் பார்க்கவே பயமாக இருக்கிறது… அதிகம் கனமாக இருக்கிறது… தவிர இவற்றோடு வெளியே செல்லவே பயமாக இருக்கும்… எனக்கு மெல்லியதாக… ஏதாவது வேண்டுமே…” என்று தயக்கத்துடன் கேட்க, அவளைத் தன் பக்கமாகத் திருப்பியவன்,
“ஹே… எதற்கு இத்தனை தயக்கம்… வேறு நகை வேண்டும் என்று கேட்டால் தந்துவிட்டுப் போகிறேன்…” என்றவன் அவளுயைட கன்னத்தைப் பற்றி,
“இது உன்னுடைய வீடு… இங்கே இருக்கும் பொருட்கள் அனைத்தும் உனக்குச் சொந்தம்… நீ எதுவாக இருந்தாலும் உன் இஷ்டத்திற்குத் தாராளமாகச் செய்யலாம்…” என்றவன், “இங்கே வா…” என்றவாறு அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்த லாக்கர் ஒன்றின் அருகே வந்தான்.
அவள் கரம்பற்றி அக்கரம் கொண்டே அந்தப் பெட்டகத்துக்குரிய கடவுச்சொல்லை அழுத்த, பூட்டு விடுபட்டது. அதைத் திறக்க, மூன்று தட்டுக்கள் கொண்ட பெட்டகத்தில் கடைசி இரண்டு தட்டுகளிலும் பணம் கட்டுக் கட்டாக அடுக்கப்பட்டிருந்தன. மேல் தட்டில் நகைப்பெட்டிகள் கிடக்க,
“இதெல்லாம் உனக்குத்தான்… பிடித்தமான நகையை எடுத்து அணிந்துகொள்…” என்றுவிட்டு அவளை விட்டு விலகித் தன் ஆடையை இழுத்தெடுக்க, இவளோ அதைத் தொடவே பயந்தவள், போல,
“இல்லை… நீங்களே… நீங்களே எடுத்துத் தாருங்களேன்…” என்றாள் மிரட்சியுடன்.
“ப்ச்… அலர்… ஸ்டாப் ஃபஸ்ஸிங்… பிடித்ததை எடுத்துக்கொள்… இனி ஒவ்வொரு முறையும் உனக்கு நகை வேண்டும் என்றால், நானா எடுத்துக் கொடுப்பேன்… எடும்மா…” என்க, மேலும் தயங்கினாள் அந்தத் தையலவள்.
இத்தனை பணத்தையும், இப்படி நகையையும் காண்பது இதுதானே முதன் முறை. இதில் எப்படிக் கைவைப்பாள்.
தன் மனைவியின் தயக்கத்தைப் புரிந்துகொண்டவனாக, தானே கைவிட்டு ஒரு நகைப்பெட்டியை எடுத்தவன், அதை அலரந்திரியின் முன்னால் நீட்டி,
“இவற்றைப் போட்டுக்கொள்…” என்றான்.
தயக்கத்துடன் வாங்கித் திறந்து பார்த்தாள். அவள் விரும்பியது போல எளிமையான நகைகள்தான்… ஆனால் பார்க்கும்போதே அதன் பெறுமதி தெரிந்தது. இனியும் மறுக்க முடியாமல் ஒரு சோடி வளையலைக் கரத்தில் அணிந்தவள், அதற்குச் சோடியாக இருந்த சங்கிலியை எடுத்து அணியப் போக, அவள் கரத்தைப் பற்றியவன்,
“நான் போட்டுவிடுகிறேன்…” என்று விட்டு, அவள் கரத்திலிருந்து வாங்கியவன், தானே கழுத்தில் அணிவித்து விட்டுக் கரத்தை எடுக்கப் பிடிக்காமல் விரல்களால் பின் கழுத்தை வருடியவாறு,
“சோ… சாஃப்ட்…” என்று முனுமுணுமுணுத்தவன், பெரும் வேட்கையுடன் அவளுடைய பின் கழுத்தில் தன் உதடுகளைப் பொருத்த, அந்த உதடுகள் கொடுத்த வெம்மையில் அவளையும் மீறி விழிகள் மூடிக் கொண்டன.
அவனுடைய அந்தமென் தீண்டல் ஆயிரம் கதைகளை அவளுக்குக் கூறின. அதோடு அவன் விட்டிருக்கலாம், விரல்களை மடித்து அவள் கன்னக் கதுப்பை மென்மையாக வருட அலரந்திரி மூச்செடுக்க மறந்து போய்ச் சிலையாக நின்றாள்.
“உன்னைத் தீண்டும்போது மலர்களைத் தீண்டும் இன்பம்தான் கிடைக்கிறது…” என்றவன் பெருவிரலால் அவள் உதட்டை வருடினான்.
இப்போது அவளுடைய உதடுகள் துடிக்க, மறு கணம் அவளுடைய செழித்த உதடுகள் அவன் வசத்தில் சிக்கியிருந்தன. அவளோ பாட்டி வந்துவிடுவாரோ என்று அஞ்சியவளாக, அவனிடமிருந்து விடுபட முயல, அவனோ நின்று நிதானமாய், சுவைத்து விடுவித்துவிட்டு, மெல்லிய கிண்டல் புன்னகையுடன் அவளைப் பார்த்து
“ரம்புட்டான்…” என்றான். இவளோ புரியாமல் விழிக்க,
“உன் இதழ்களின் சுவை…” என்று கிசுகிசுத்துவிட்டு, பின் எதையோ யோசித்தவனாக,
“ம்… அதையும் மீறி வேறு சுவை தெரிகிறதே… இரு… இன்னொரு முறை ருசித்துப் பார்க்கிறேன்…” என்று மேலும் அவளை நோக்கிக் குனிந்து இப்போது அழுத்தமாக இன்னொரு முத்தம் வைத்துவிட்டு,
“என்னடி ஒவ்வொரு முறையும் விதம் விதமாகச் சுவைக்கிறது… இப்போது ஜம்பு போலத் தித்திக்குதே… கூடவே” என்றவன் அவன் குடுத்த முத்தத்தால், சற்று வீங்கத்தொடங்கிய செழித்த உதடுகளைக் கண்டு, தன் நாவால், தன் உதடுகளை ஈரமாக்கி, சுட்டுவிரலாலும் பெருவிரலாலும் அவளுடைய கீழுதட்டைப் பற்றி இழுத்து, தாபத்துடன் அதன் மீது விழிகளைப் பதித்து…
“கூடவே, கறுத்தக்கொழும்பான் மாங்கனியுடன், மாதுளையும் சேர்ந்த சுவை பழரசமானவை…” என்றான் மென்குரலில். அதைக் கேட்டதும் அவளுடைய முகம் அந்திவானமாய்ச் சிவந்துபோனது, அதைக்கண்டு, மேலும் மலர்ந்து சிரித்தவன்,
“இன்னொருவாட்டி சுவைத்துப்பார்க்கவா… வேறு ஏதாவது சுரை தெரிகிறதா என்று பாக்க…” என்று குனிய, அவளோ, ஆளை விடு சாமி என்பது போல, அவனை விட்டு விலகி ஓட எத்தனிக்க, அவனோ குலுங்கிச் சிரித்தவாறு, அவளுடைய கரம்பற்றி இழுத்துத் தன் மார்பில் போட்டு, அவளுடைய நாடியைப் பற்றித் தூக்கி, அவள் விழிகளுடன் தன் விழிகளைக் கலக்க விட்டான்.
“இத்தனை நாட்கள் நம் மகிழ்ச்சியான தருணத்தை இழந்துவிட்டோமே என்று கவலையாகவும் இருக்கிறது… இப்போதாவது தொடர்ந்தோம் என்று மகிழ்ச்சியாகவும் இருக்கிறது… உன்னோடு வாழ்வதற்கு இந்த ஆயுள் போதம்போல தெரியவில்லை கண்ணம்மா… ஐ லவ் யு… ஐ லவ் யு சோ மச்…” என்றவன், பின் அவளை விட்டு விலகி,
“சரி நீ கீழேபோ… இல்லை என்றால் பாட்டி வந்து இன்னொரு பஞ்சாயத்து வைப்பார்கள்… அவர்களோடு என்னால் மல்லு கட்ட முடியாது… போ… நான் வந்துகொண்டே இருக்கிறேன்…” என்று அனுப்பிவிட்டு ஆடை மாற்றத் தொடங்க, இவளும் பெரும் மகிழ்ச்சிக் கொந்தளிப்புடன் கீழே வந்துகொண்டிருந்தாள்.
கீழே வந்தபோது முதல் தரிசனம் சேதுதான். அவள் முகத்தில் பூத்திருந்த வெட்கத்தையும், மலர்ச்சியையும் கண்டவன், ஒரு நமட்டுச்சிரிப்புடன் விலகிச் செல்ல, பெரும் சங்கடத்துடன், எப்படியோ சமாளித்து வெளியே வந்தபோது, நிறையப் பேர் வாசலில் அவளுக்காக் காத்திருந்தனர்.
பின்னால் வந்த ஏகவாமன், தன் மனையாளின் அருகே சென்று உரிமையுடன், தோளின் மீது தன் கரத்தைப் போட்டுத் தன்னுடன் இழுத்து வைத்துக் கொள்ள அங்கே நின்ற ஊர் மக்களிடமிருந்து பெரும் ஆரவாரமான ஓசை கேட்டது.
அப்படியே சிவனும் பார்வதியும் அருகே நிற்பது போலப் பாந்தமாக இருக்கிறது”தம்பி… நீ நிறையப் பிள்ளைகளைப் பெற்று உங்கள் அப்பா வாழ்ந்தது போல வாழ வேண்டும்…” என்றார் ஒரு கிழவி கண்களில் கண்ணீர் வர.
உடனே அவருடைய கரங்களைப் பற்றிய ஏகவாமன்,
“நீங்கள் சொல்ல வேண்டுமா பாட்டி? நிச்சயமாக அப்பாவின் ஆசியுடனும் உங்கள் வாழ்த்துடனும் நாங்கள் நன்றாக இருப்போம்…” என்றான் கனிவுடன்.
இதற்கிடையில் ஒரு பெண்மணி தன் இடையிலிருந்த ஒரு சுருக்குப் பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து ஏகவாமன்விடம் நீட்டினாள்.
“தம்பி… ஒரு பெண் திருமணம் முடித்தால் பூவும் பொட்டும் இல்லாமல் இருக்கக் கூடாது. அழகான மனைவியைக் கட்டிக்கொண்டு வந்துவிட்டாய். பொட்டில்லாமல் பார்க்க என்னவோ போல இருக்கிறது.” என்றவாறு,
“இது உங்கள் பெயரில் அம்மன் கோவிலில் அர்ச்சனை செய்தோம்… அவர்கள் கொடுத்த பூ குங்குமம்… இதை அவளுக்கு வைத்துவிடப்பா… நாங்கள்தான் உங்கள் திருமணத்தைப் பார்க்கவே இல்லையே. இப்படிப் பர்த்தாவது ஆறுதல் பட்டுக் கொள்கிறோம்…” என்றதும் மறுக்காமல் அந்தப் பொட்டலத்தை வாங்கினான் ஏகவாமன்.
கூர்மையாக அலரந்திரியைப் பார்க்க, அவள் அவனைத்தான் குறையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளை யோசித்து ஒரு செயலைச் செய்ய விட்டானா அவன்… அவன் செய்த அழும்பில் பொட்டு வைக்கக் கூட மறந்துவிட்டாளே… அவனைப் பார்த்து மெல்லியதாக முறைக்க, அந்தக் குறும்பனோ ஒற்றைக் கண்ணை அடித்து, அவள் நெற்றியிலும் வகிட்டிலும் பொட்டிட்டான். அதிலிருந்த ஒற்றைப் பூவை எடுத்து அவளுடைய கூந்தலில் செருகியவன், சற்றுக் குனிந்து அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்,
“கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திவிடவேண்டும் ஏஞ்சல்…” என்றுவிட்டுத் திரும்பி அங்கிருந்தவர்களைப் பார்த்து,
“எல்லோரும் சாப்பிட்டுவிட்டுத்தான் செல்லவேண்டும்…” என்கிற கட்டளையுடன், சாப்பாட்டு மண்டபத்திற்கு அவர்களை அனுப்பி வைத்துவிட்டு, இவளைத் திரும்பிப் பார்த்து,
“நாமும் அங்கே போகலாமா அலர்… அங்கே உன்னை ஆவலாக எதிர்பார்ப்பார்கள்…” என்றான் மென்மையாய். மறுக்காது அவனுடன் அங்கே செல்ல, ஏகவாமன் அங்கிருந்த பெரியவர்களுடன் கலந்துகொண்டான்.
அலரந்திரி சாப்பாட்டு மண்டபத்திற்குள் நுழைய, அனைவரும் தரையில் அமர்ந்திருந்தனர். எல்லோருக்கும் முன்பாக வாழை இலை வைக்கப்பட்டிருந்தது.
ஒரு பெண்மணி அவள் கையில் தூக்குச் சட்டியைக் கொடுக்க, எல்லோருக்கும் வரிசையாகப் பரிமாறிக்கொண்டு வந்தாள்.
திடீர் என்று ஒரு இலையின் முன்னால் அமர்ந்திருந்தவனைக் கண்டதும் திகைத்தாள். ஏன் என்றால் அமர்ந்திருந்தது ஏகவாமன். யாரோ ஒரு பெரிய மனிதனோடு பேசிக்கொண்டு சுவாதீனமாக அமர்ந்திருந்தான்.
ஆச்சரியத்துடன். அவனை நிமிர்ந்து பார்க்காமல் இலையைச் சுற்றிக் கறிகளைப் பரிமாறிவிட்டு, எழ முயல, முடியாமல் எதுவோ தடுத்தது.
குழப்பத்துடன் குனிந்து பார்த்தால், அவளுடைய முந்தானை அவனுடைய பெருவிரல் இடுக்கில் சிக்கியிருந்தது. போதாததற்குப் பெருவிரலை மடித்து வைத்திருந்த விதத்தில் அவளால் முந்தானையை இழுத்து எடுக்க முடியவில்லை.
பல முறை முயன்று முடியாமல் தடுமாற்றத்துடன் தன் கணவனைப் பார்க்க, அவனோ, அருகிலிருந்தவனுடன் முக்கியமாக நாட்டு நிலவரம்பற்றிப் பேசிக்கொண்டிருந்தான்.
“ரொம்ப முக்கியம்…” என்று சிடுசிடுத்தவள், மற்றவர்களின் கவனத்தைத் திசை திருப்பாது இழுத்துப் பார்த்தாள். அதில் ஒரு பெண்மணி,
“ஆத்தா… எல்லாச் சாப்பாட்டையும் உன் புருஷனுக்குப் போட்டால்… நாம் என்ன செய்வது… வந்து எங்களுக்கும் பரிமாறுறது…” என்று கேட்க அருகிலிருந்தவர் எதையோ தாறுமாறாகச் சொன்னார் போலும், அங்கிருந்தவர்கள் அனைவரும் பலமாகச் சிரிக்கத் தொடங்க, அலரந்திரிக்கோ வெட்கத்தில் உயிரே போய்விடும் போல இருந்தது. சற்று அசடு வழிந்தவாறு அவர்களைப் பார்த்து நகைத்தவள், திரும்பித் தன் கணவனைப் பார்த்துக் கெஞ்ச, அந்த விடாக்கண்டனோ, அவளுடைய முந்தானையைக் கால் விடாது,
“எவ… அவ… வசந்தி அக்காவா… என் பெண்டாட்டி… என் பக்கத்தில் இருக்கிறதை எவ கேட்கிறது… உங்களுக்குப் பந்தி வைக்க இவள்தான் வேண்டுமா… பசித்தால் போட்டுச் சாப்பிடுறது… இல்லை… பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறாரே… உங்கள் ஆசை புருஷன்… அவர் கிட்ட கேட்கிறது… அவளை எல்லாம் சட்டென்று அனுப்ப முடியாது…” என்று இவன் காலை வார, வசந்தியின் கணவரோ தன் பெயர் அடிபட்டதும், சாப்பாட்டில் கவனமாக இருந்தவர் எதற்குத் தன் பெயரைக் கூறினார்கள் என்று புரியாமல் திருத் திரு என்று விழித்தார்.
“டேய்… எதுக்குடா என்னுடைய புருசனை இழுக்கிறாய்… காலம்தான் நீண்டு கிடக்கிறதே… நீயே உன் பொண்டாட்டியைப் பக்கத்தில் வைத்திருந்தால்… நாங்கள் எப்போது பார்க்கிறது… காலையிலிருந்து நானும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறேன்… அறையை விட்டு வெளியே வரப் பய விட்டானா… மரியாதையா சொல்லிவிட்டேன்… அவளை இங்கு அனுப்பு இல்லை… நடக்கிற சேதாரத்திற்கு நான் பொறுப்பில்லை ஜாக்கிரதை…” என்று கோபத்துடன் எகிற,
“நீங்கள் பார்க்கத்தான் இவளைக் கட்டிக்கொண்டு வந்தேனாக்கும்…” என்று பெரிதாகக் கேட்டவன், அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்,
“நானே… இன்னும் சரியாகப் பார்க்கவில்லையே என்கிற கவலையில் இருக்கிறேன்… அவர்களின் பேச்சைப் பார்த்தாயா…” என்று கூற, இவளுக்கோ ஐயோ என்றிருந்தது. காது மடல்வரை சிவந்துபோனது. அவனோ, அவளுடைய அவஸ்தையைக் கண்டு, நமட்டுச் சிரிப்புடன் குலுங்கிச் சிரிக்க,
“அப்படி என்ன சிரிப்பு… சொன்னால் நாங்களும் சிரிப்போம் அல்லவா?” என்றார் வசந்தி ஆவலாக.
“திருமணம் முடித்துப் பத்து வருஷம் ஆன பிறகு கேட்கிற கேள்வியா இது… எனக்கும் பெண்டாட்டிக்கு இடையில் ஆயிரம் இருக்கும்… அதுவும் புதுசா திருமணம் முடித்தவர்கள்… நாம் பேசியதை எல்லாம் எப்படிச் சொல்வது…” என்று இவன் கிண்டலாய்க்கேக்க,
“இதப்பாரடா… தேவாங்கு போல மூஞ்சியை உர்ர்ர்ன்னு வைத்திருந்த பயபுள்ள, என்ன கலாய்கிறத… உலகம் தலைகீழாகச் சுத்துதா என்ன? எல்லாம் பொண்டாட்டி வந்த ராசிபோல… பயல் பழையது போல ஏட்டிக்குப் போட்டியால்ல பேசுது…” என்று வசந்தி வாய் பிளக்க, பக்கத்திலிருந்தவரோ,
“எதற்கு வாய் பிளக்கிறாய்… அதுதான் கல்யாணம் கட்டி வந்திருக்கிறானே… தொலைந்த திறப்பைப் பொண்டாட்டி கண்டுபிடித்து, நேற்று இரவே திறந்துவிட்டாள் போல… அதுதான்… பயலுக்கு ரொம்ப நீளுகிறது…” என்று அவர் நக்கலடிக்க, இவனோ,
“அப்படிப் போடு அருவாளை, இப்போது தானே தெரிகிறது… திருமணத்துக்குப் பின்னாடி இம்புட்டு நீளமாகப் பேச எப்புடி கற்றுக்கொண்டீர்கள் என்று…” என்றவன், ராசு அண்ணனிடம் சொல்லித் திரும்பப் பூட்டச் சொல்லிவிட வேண்டும்…” என்றதும் அதைக்கேட்டு அந்தப் பெண்மணியின் முகம் சிவந்து போனது.
“அட போடாப் போக்கற்றவனே…” என்றுவிட்டு உண்பதில் கவனமாக, அதைக்கண்டு பலமாகச் சிரித்தான் ஏகவாமன். இவளோ அவர்களின் இந்த இருபொருள் பட்ட பேச்சை கேட்டுப் புரிந்தும் புரியாமலும் விழித்துக்கொண்டிருக்க, அதைக்கண்டவன், மேலும் நகைத்து,
“என்ன புரியவில்லையா?” என்றான். அவளோ ஆம் என்பது போலத் தலையை ஆட்ட,
“கிட்டே வா…” என்றான். இவளும் சற்று நெருங்க,
“இரவு படுக்கும் நேரம் சொல்லுகிறேன்… இல்லை இல்லை… செய்தே காட்டுகிறேன்… இப்போது ரசத்தை ஊற்று…” என்று கூற, இவளோ எரிச்சலுடன் அவனை முறைத்துப் பார்த்தவாறு பலமாகத் தன் முந்தானையை இழுக்க முயன்றாள். ஆனால் அவனோ, மிக முக்கியமாகக் கறியிலிருந்த கறிவேப்பிலையை எடுத்துக்கொண்டிருந்தான்.
“ஏகன்… இப்போது விடப்போகிறீர்களா இல்லையா…” என்று கறாராகக் கேட்க, கெஞ்சினாலே மிஞ்சுவான்… இதில் அதிகாரமாகக் கேட்டால் விட்டுவிடுவானா என்ன? காதே கேட்காதவன் போல, உண்டுகொண்டிருக்க, சற்றுத் தொலைவிலிருந்த பாட்டியைக் கண்டு,
“பாட்டி…” என்றாள். எத்தனை பெரிய தாரக மந்திரம் அது… சடார் என்று தன் பெருவிரலை இளக்கியவன், பதற்றத்துடன் நிமிர்ந்து பாட்டியைப் பார்க்கப் பாட்டி அந்த இடத்திலேயே இல்லை. திரும்பி மனைவியைப் பார்த்தால், அவள் வசந்தியின் அருகே சென்று உணவைப் பரிமாறிக்கொண்டிருந்தாள். அவள் முதுகை முறைத்துப் பார்க்க, இவளோ கிண்டலுடன் திரும்பித் தன் கணவனைப் பார்த்துப் புருவங்களை மேலேற்றி மெல்லியதாகச் சிரிக்க,
“சிரிடி… சிரி… இன்று இரவு அறைக்கு வருவாய் தானே… அப்போது வைத்துக்கொள்கிறேன் கச்சேரியை… வாய் திரைக்கதை மாதிரி பெரிய பூட்டாகவே போட்டுவிடுகிறேன்…” என்று முணுமுணுத்துக்கொண்டிருக்க. திடீர் என்று ஒருவன் ஏகவாமன்வின் அருகே வந்தான்.
அவனுடைய முதுகு புறத்தில் பெரிய கத்தியின் பிடி தெரிந்தது. மீண்டும் தன் கணவனைப் பார்க்கத் திரும்பியவள், கணவனிடம் பேசிக்கொண்டிருந்தவனின் முதுகில் துருத்தி நின்ற கத்தியைக் கண்டதும் அதுவரையிருந்த மகிழ்ச்சி வடிந்துபோக, அச்சத்தில் இதயம் வேகமாகத் துடிக்க, வெலவெலத்துப்போனவளாகத் தன்னவனை நெருங்க முயல, அந்தப் புதியவனோ, குனிந்து ஏகவாமனின் காதில் எதையோ முணுமுணுத்தான்.
அவன் கூறியதைக் கேட்டதும் தன் கரத்திலிருந்த உணவை உதறிவிட்டு, குடிக்க வைத்திருந்த தண்ணீரால் காரத்தைக் கழுவிவிட்டு, விறுக்கென்று எழுந்தான். அதுவரை அவன் முகத்திலிருந்த சிருங்கார நிலை முற்றாகத் தொலைந்திருந்தது. அந்த இடத்தில் அகோரமும், கோபமும், ஆத்திரமும் குடி புகுந்திருந்தது.