(18)
தாத்தாவை நெருங்கிய ஏகவாமன் அவர் முகத்தில் தெரிந்த வியப்பைக் கண்டு புருவத்தை மேலே தூக்கியவாறு யாரோ நீட்டிய வேட்டியை எடுத்துக் கட்டியவாறு, அவரை நோக்கிச் சென்றவன்,
“என்ன தாத்தா… அப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று வியந்தவாறு கேட்க,
“இல்லைடா… உன்னைப் பேரனாகப் பெறப் பூர்வஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கிறேனோ என்று நினைக்கிறேன்…” என்றவர் அவன் தோளின் மீது தன் கரத்தைப் போட்டுக் கோவிலைத் திரும்பிப் பார்த்து,
“முருகன் கூட அநீதியை அழிக்கப் பிறந்தவன்தான்டா… நீயும் அதற்குப் பிறந்தவன்…” என்று கூற மெல்லிய சிரிப்புடன் தாத்தாவை அணைத்து விடுவிக்க, இருவருக்கும் முன்னால், பாட்டி முறைத்துக் கொண்டு நின்றிருந்தார். அவர் எதற்கு முறைக்கிறார். ஒரு வேளை, தான் செய்த காரியம் பிடிக்கவில்லையோ…? புருவம் சுருங்க அவரை ஏறிட்டவன்
“பாட்டி…” என்றான். அவரோ கோபம் சற்றும் மாறாமலே, அவனுடைய கரத்தைப் பற்றித் தரத் தரவென்று இழுத்துச் செல்ல,
“பாட்டி… நான் சொல்வதை…” என்று முடிக்கவில்லை, அவனைத் திரும்பி அழுத்தத்துடன் பார்த்து,
“பேசாதே…” என்றுவிட்டு, அங்கும் இங்கும் பார்க்க, மறு கணம் அவர்களின் முன்னால் வாகனம் வந்து நின்றது.
“ஏறு” என்றுவிட்டுக் கதவைத் திறந்து, அவனைத் தள்ளித் தானும் ஏறி, “வேங்கையா! வேகமாகக் காரை வீட்டுக்கு விடு…” என்று உத்தரவிட, அடுத்த ஐந்தாவது நிமிடம் வீட்டில் நின்றிருந்தனர். முதலில் இறங்கிய பாட்டி யோசனையுடன் நின்றிருந்த பேரனின் கரத்தைப் பற்றிக் கீழே இறக்கி வீட்டு வாசல்வரை அழைத்துச் சென்று,
“இங்கேயே இரு…” என்று உத்தரவிட்டுவிட்டு, உள்ளே செல்ல, தொடர்ந்து மற்றவர்களும் வந்து இறங்கினர். வெளியே யோசனையுடன் நின்றிருந்த பேரனைக் கண்டு வியந்த சேதுபதி,
“டேய்… ஏன்டா வெளியே நிற்கிறாய்…?” என்று கேட்க,
“தெரியவில்லையேப்பா… பாட்டிதான்… இங்கேயே நிற்கச் சொன்னார்கள்…” என்று முடிக்கவில்லை, பாட்டி ஒரு தட்டில் செத்தல் மிளகாயும், உப்பும், ஏந்தியவாறு அவனை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது, கண்ணூறு எடுக்கத்தான் பாட்டி இழுத்து வந்தாள் என்பது.
“பாட்டி… ஐந்து பேரைக் கொன்று விட்டு வந்திருக்கிறேன்… இதற்குப் போய்க் கண்ணூறு எடுக்கப் பார்க்கிறாயே…” என்று இவன் கடிய,
“யாரைக் கொன்றாய்… நல்லவர்களையா கொன்றாய்… இல்லைப்பா… இல்லை… சூரசம்காரம் செய்துவிட்டு வந்திருக்கிறாய்… கெட்டதை அழிக்கக் கடவுள் கூட அவதாரம் எடுத்து வந்திருக்கிறார்… நீயும் அப்படித்தான்… அந்த முருகனே கண் முன்னால் வந்தது போல, அந்த ருத்திரனே அவதாரம் எடுப்பது போல அந்தப் பத்ரகாளியே உன் ரூபத்தில் வந்தது போல, நரசிம்மனே உன் மேனியில் புகுந்தது போலத் தோன்றியது கண்ணா… ஒரு பெண்ணாய்… உன் காலுக்குப் பாத பூஜை செய்யவேண்டும்… ஆனால் முடியாதே…” என்று பெருமையாகக் கூறியவர், செத்தல் மிளகாயும், உப்பும் ஒரு பிடி அள்ளி, “நாய்க்கண்ணு, நரிக்கண்ணு… பேய்க்கண்ணு… கொள்ளிக்கண்…” என்று ஆயிரத்தெட்டுக் கண்ணு சொல்லி கரத்தைச் சுற்றோ சுற்றென்று சுத்தி, வெளியே எரிந்துகொண்டிருந்த அடுப்பில் போட, அது படபடவென்று வெடிக்கத் தொடங்கியது.
அதைக் கண்டு நாடியில் கைவைத்த பாட்டி,
“இந்த ஊர் கண்ணே என் பேரன் மேல்தான் விழுந்திருக்கிறது கமலா… பார்த்தாயா… எப்படி வெடிக்கிறது என்று… வியக்க, அதைக் கேட்ட ஜெயவாமன்,
“பாட்டி… உப்பு நெருப்பில் போட்டால் படபடவென்று வெடிக்கத்தான் செய்யும்… அதைப் போய்க் கண்ணூறு என்கிறாயே… என்ன லாஜிக் பாட்டி இதெல்லாம்” என்று கிண்டலடிக்க,
“அடப் போடாப் போக்கற்றவனே… இதைப்பற்றியெல்லாம் உனக்கென்ன தெரியும்…?” என்றவர் இன்னொரு பிடி அள்ளி,
“நீயும் அசையாதே…” என்றுவிட்டு அவனுக்கும், தன் குடும்பத்திற்கும் சுற்றிப்போட்டு அடுப்பில் எறிந்துவிட்டுத் திரும்ப, வாடிய முகத்துடன் நின்றிருந்த மருமகள்தான் அவர் கண்ணில் பட்டார்.
“த… எதற்கு முகம் வாடி நிக்கிறவ…” என்று பாட்டி கேட்க,
“இல்லைம்மா… வாமன் செய்தது நல்ல காரியம்தான்… ஆனால் ஏனோ பயமாக இருக்கிறதும்மா… அதுவும் இந்த நல்ல நாளில் இப்படி நடந்துவிட்டதே…” என்று வருத்தத்துடன் கூற,
“அவன் வாங்கிய வரம் அது… யார் என்ன செய்ய முடியும்… அவனும் நம்முடைய குழந்தைகள்போலக் கோவில் வழிபாடு, வீர விளையாட்டுக்கள் என்று ஈடுபட்டிருந்தால், மனசு இப்படி இராட்சசனா யோசிக்குமா?” என்று பாட்டி நொடிய,
“என்ன பாட்டி சொல்கிறீர்கள்… கோவில் கேளிக்கைகளுக்கும், அந்த அந்த…” என்றவள் அந்தத் தீயவனுக்கு எதை உதாரணமாகக் கூறுவது என்று புரியாமல் திணறிவிட்டு, “அந்தச் சாக்கடை குணத்திற்கும் என்ன சம்பந்தம்?” என்று சௌந்தர்யா எரிச்சலுடன் கேட்க,
“இருக்கிறதுடி… பேத்தி… நிறையவே இருக்கிறது… முன்பு எல்லாம் மனுசனுக்கு இருக்க நிற்க நேரமிருக்காது. அத்தனை வேலைகள்… கடும் உழைப்புகள் என்று காலம் ஓடும். ஓய்வான நேரத்தில் இருக்கவே இருக்கிறது கோவில்களும் விழாக்களும். அந்த விழாக்களில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த, காவடியாட்டம், ஏறு தழுவுதல், என்று நிறைய வீர விளையாட்டுகளில் நேரத்தைச் செலவிடுவார்கள். அந்த நேரத்தில் மன அழுத்தத்திற்கு நல்ல தீர்வாக இந்தக் கேளிக்கைகள்தான் இருந்தன. தவிர, தமது வீரத்தைக் காட்டவும், சகிப்புத் தன்மையை வளர்க்கவும், போர்க் குணத்தை மறக்காது இருக்கவும் இப்படி அலகு குத்தி, செடில் குத்திக்கொண்டு தங்கள் திடத்தை வளர்த்துக் கொண்டார்கள்… கூடவே இத்தகைய விளையாட்டுகளில் உடலோடு மனமும் சேர்ந்து களைத்துவிடுவதால் அவனுடைய உடலுக்கு வேறு தேவை பெரும்பாலும் இருந்ததில்லை. இப்போது யார் இதைப் பின் பற்றுகிறார்கள்… எத்தனை பேர் உடல் வலியைத் தாங்கத் தயாராக இருக்கிறார்கள். சும்மா கைபேசியை நோண்டுவதும், கணினிகளில் முன் அமர்ந்து கண்ட கண்டதை பார்த்து மனசை அசுத்தமாக்குவதிலும்தான் காலத்தைக் கடக்கிறார்கள்…” என்று எரிச்சலுடன் கூறிய பாட்டி,
“கடைசியாக இன்றைய குழந்தைகளுக்கு மனத் தைரியமும் கிடையாது… உடல் தைரியமும் கிடையாது… ஆனாலும் வீரனாகக் காட்ட வேண்டுமே… அதற்கு இதோ… இப்படிச் செயல்பட முடியாத குழந்தைகளிடமும், எதுவும் தெரியாத அப்பாவிப் பெண்களிடமும் காட்டித் தங்கள் வீரத்தை நிலை நிறுத்த முயல்கின்றனர்… இதெல்லாம் சிகிச்சை செய்யவேண்டிய மனவியாதிதான் கண்ணு…” என்று கூற,
“அது சரி… அப்படியானால் அலகு குத்தி காவடி எடுப்பதாலும், ஏறு தழுவுவதாலும், வீர விளையாட்டுகளை விளையாடுவதாலும், ஒருத்தன் தப்பாக யோசிக்கமாட்டானா என்ன?” என்று ஒத்துக்கொள்ளாத தன்மையுடன் கேட்க,
“நிச்சயமாகக் கண்ணு… இதெல்லாம் மதம் சார்ந்ததாகப் பார்க்கக் கூடாது… காவடிதான் எடுக்கவேண்டும் என்றில்லை… கடுமையான உடற்பயிற்சி, யுத்தக்கலைகள், பாதுகாப்புக் கலைகள்… இது பயின்றாலே போதும்… ஆணாக இருக்கட்டும். பெண்ணாக இருக்கட்டும் யுத்தக்கலைகள் பயில்வது மிக அவசியம். அது மனதில் உள்ள ராட்சச புத்தியை அடக்கும்… சரியான பாதையில் வழி நடத்தும்… மன தைரியத்தையும், திடத்தையும் அதிகரிக்கும்… அப்படி வளரும் குழந்தைகள் ஒரு போதும் தவறு செய்யாது…” என்றதும்,
“அடப் போ பாட்டி… இதற்கெல்லாம் யாருக்கு நேரம் இருக்கிறது…” என்ற சௌந்தர்யா சலித்துக் கொள்ள,
“இது ஒன்று எப்போது கேட்டாலும் நேரமில்லை என்று கூறுவது நாகரிகமாகிவிட்டது. நாம் தான் நேரத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமேயன்றி, நேரம் நம்மைக் கட்டுப்படுத்த கூடாது…” என்று கடிந்தவர், “இந்த வீர விளையாட்டுகளுக்குப் பின்னால் இன்னொரு சுவாரசியமான சம்பவமும் இருக்கிறது சௌந்தர்யா…” என்றார் பாட்டி.
“அப்படியா பாட்டி… என்ன பாட்டி அது…?” என்று ஆவலுடன் கேட்க,
“இப்படி வீர விளையாட்டுகளில், உடல் முழுவதும் வலியைச் சுமந்து தமது திடத்தைக் காட்டும் காளையர்களைக் கண்ட கன்னிப் பெண்கள்… தமது மனத்தைப் பறி கொடுப்பார்கள்…” என்று கூறிய போதே ஏனோ அவருடைய முகம் சிவந்து போனது. அதைக் கண்ட சௌந்தர்யா, குதூகலமாக நகைத்து,
“வரே… வா… தாத்தாவை இப்படிக் கண்டுதான் மயங்கினீர்களாக்கும்…” என்று கைகொட்டிச் சிரிக்க,
“சே… போடி… அப்படி எல்லாம் இல்லை… யாருமே அடக்க முடியாத காளையை அவர் ஒற்றையாளாக அடக்கினாரா…” என்று அதற்கு மேல் கூற முடியாது வெட்கத்தில் திணற, பல முறை கேட்ட காதல் கதை என்பதால் மேலும் நகைத்தவாறு,
“ஆ… தெரியும் தெரியும்… அன்று அவர்மீது காதலில் விழுந்தீர்கள்… அதன் பிறகு காவடியாட்டத்தில் கண்டீர்கள்… இப்படி உடல் முழுவதும் குத்தியபோது ஆடாமல் அசையாமல் நின்றாராமே… எங்கள் அண்ணாவைப் போலவே முகத்தில் எந்த வலியும் காட்டவில்லையாமே… அப்போது முடிவு செய்தீர்கள் இவர்தான் என் கணவர் என்று… அவரைப் பற்றி விசாரித்து, அவர் போர்க் கலை பயின்றவர் என்பதை அறிந்து, தாத்தாவைப் பார்ப்பதற்காகவே சிலம்பம் கற்றுக் கொண்டீர்கள்… பிறகென்ன… கண்ணொடு கண்ணினை கவ்வி ஒன்றை ஒன்று உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” என்று அவள் ராகம் பாட, பாட்டியின் முகம் முற்றாகச் சிவந்து போனது. அதைச் சற்றுத் தொலைவிலிருந்து பார்த்த தாத்தா,
“ஓஹோன்னானாம் வெள்ளைக் காரன்… யாருடி அது… என் பெண்டாட்டியைச் சிவக்க வைக்கிறது…” என்றவாறு மீசையை முறுக்கிக் கொண்டு வர, அதைக் கண்ட பாட்டி மேலும் சிவந்து போனவராக,
“பெரியவரே… அது ஒன்றுமில்லை… நீர் உம்முடைய வேலையைப் பாரும்…” என்று திணறியவாறு கடிய,
“அடியே… கிழவி… உன்னைச் சைட் அடிப்பதுதான்டி என்னுடைய வேலையே… ஏய்… குட்டி வாலு… என்ன பேசிக்கொண்டிருந்தாய்… என் லேடி வெட்கப் படுவது போல…” என்றவாறு சுவாரசியமாகக் கேட்க,
“தாத்தா… உங்கள் காதல் கதையைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்… செம இன்ட்ரஸ்டிங்…” என்று நகைத்த பேத்தியின் காதைப் பற்றித் திருகிய தாத்தா,
“ஏன் குட்டி பிசாசு… அதற்கு என் மனைவிதான் உனக்குக் கிடைத்தாளா…” என்று கடிய, கமலாதேவி ஆச்சரியத்துடன் தன் மாமனாரைப் பார்த்தார்.
அவர் எப்போதும் அப்படித்தான்… தன் மனைவியை எவ்வளவு வேண்டுமானாலும் கலாய்ப்பார். ஆனார் வேறு யாரும் அப்படிக் கலாய்ப்பதற்கோ, தவறாகப் பேசுவதற்கோ இடம் கொடுக்கமாட்டார். அது தன் மகனாக இருந்தாலும் சரி, பேரக் குழந்தைகளாக இருந்தாலும் சரி. அவரைப் பொருத்த வரைக்கும் அவருடைய மனைவி அந்த உலகுக்கே அரசி… என்று அவரைக் கண்டு விரும்பினாரோ, அன்றிலிருந்து இந்த நிமிடம்வரைக்கும் பாட்டிதான் அவர் உலகம். அவர்தான் இவரின் மூச்சு.
சேதுபதி கூடக் கமலாதேவி மீது காதல் கொண்டவர்தான்… ஆனால் நற்குனசேகரன் அளவுக்கு வெறித்தனமான காதலெல்லாம் கிடையாது. இல்லையென்றால், மனைவி, குழந்தைப்பேற்றில் போராடிக் கோமாவில் விழுந்தபோது, அவள் இந்த உலகிலிருந்தால் மட்டுமே தானும் இருப்பேன் என்று மரணத்தைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்திருப்பாரா… தன் மனைவியை வம்புக்கு இழுப்பார்… கிண்டலடிப்பார்… அதையும் மீறி அங்கே அளவு கடந்த காதல் இருக்கும். எப்போதாவது மீனாட்சி சற்று மனம் சுணங்கினாலும், அதைச் சரிக்கட்ட ஏடாகூடமாகப் பேசி, அந்த வேதனையைக் கோபமாக்கித் திசை திருப்பி விடுவார் நற்குணசேரம். இதோ இப்போது கூடத் தன் மனைவிக்காக வந்துவிட்டாரே.
அந்தக் காட்சியைப் பார்த்தபோது, ஏனோ ஏகவாமன்தான் அவர் மனதில் வந்தமர்ந்து கொண்டான். தாத்தாவிற்கும் பேரனுக்கும் அதிக வித்தியாசம் இருந்ததில்லை. ஒன்றே ஒன்றைத் தவிர, தாத்தாவிற்கு அத்தனை கோபம் வராது… ஏகவாமனுக்கு அநீதியைக் கண்டால் பொறுக்காது. மற்றும் படி, அதே பிடிவாதம், அதே ஆளுமை… அதே அன்பு… திடீர் என்று அவர் கண் முன்னால் ஏகவாமன் வயது போன தோற்றத்தில் நற்குனசேகரனின் இடத்திலிருந்தான். அவருக்கு அருகே அமர்ந்திருந்த மீனாட்சி யாரோ முகம் தெரியாத ஒரு பெண்ணாக, அதே திறமையுடனும், அதே அழுத்தத்துடனும், அச்சமற்ற தன்மையுடன் ஏகவாமனுக்கு இணையாக இருக்க, சிலிர்த்துப் போனார் கமலாதேவி. ஏனோ அந்தக் கணம் மனம் பெரும் அமைதியை அடைந்தது. தன் மகனை முதுமைக் கோலத்துடன் மன நிறைவான வாழ்வைப் பார்த்த பேருவகைத் தோன்ற, அவரையும் மீறி விழிகள் நிறைந்தன. அதைக் கண்ட மீனாட்சி பாட்டி,
“எவ அவ கண் கலங்குவது…” என்று கடிய, அவசரமாகத் தன் கண்ணீரைத் தட்டிவிட்ட கமலாதேவி,
“ஒன்றுமில்லைம்மா… நம் ஏகவாமன் அப்பா போலவே இருக்கிறானா… அதுதான்… அவனுடைய நிறைவான வாழ்வை எண்ணிப் பார்த்தேன்… கண்கள் கலங்கிவிட்டன…” என்று கூற,
“அசடு… இருந்து அவன் பேரனைக் காணும் காலம்வரைக்கும் இருந்து பார்க்கத்தானே போகிறாய்… எதற்கு இப்போதே அவனை வயசானவனாகப் பார்க்க அவசரப்படுகிறாய்…” என்றுவிட்டு, திரும்பித் தன் பேத்தியைப் பார்த்து,
“ஏன்டி கூறு கெட்டவளே… வக்கணையாகப் பேசுகிறாயே… உன்னை எத்தனை வாட்டித் தாத்தாவிடம் குறைந்தது சிலம்பமாவது கற்றுக்கொள் என்று கெஞ்சினேன்… கேட்கிறாயா நீ… ஒரு சிக்கல் வரும்போது உன்னை எப்படிக் காப்பாற்றிக்கொள்வாய்?” என்று கடிய,
“அதற்குத்தான் அண்ணா இருக்கிறானே… பிறகு எனக்கென்ன பயம்… தேவையென்றால் அவன் வந்து காத்துக்கொள்ள மாட்டானா…” என்று சிலிர்த்தபோது, அது நடக்க முடியாத கதையாக மாறிவிட்டிருந்தது.
(19)
“ஒரு மாதம் கழிய ஏகவாமன் புறப்படும் நாளும் வந்தது. அதனால் சமையலறையே தடபுடல் பட்டது. தன் பேரனுக்குப் பிடித்த பதார்த்தங்களை ஓயாமல் செய்து பெரிய பெரிய தூக்குச்சட்டிகளுக்குள் வைத்துக்கொண்டிருந்தார் பாட்டி.
நற்குணசேகரனோ, என்றும் இல்லாதவாறு, தன் மனைவியைச் சைட் அடிப்பதற்குப் பதிலாக, அவர் எடுத்து வைத்துக்கொண்டிருந்த பதார்த்தத்தைச் சைட் அடித்துக்கொண்டிருக்க, கமலாதேவி வாணலியில் போட்டு எடுத்துக்கொண்டிருந்த முறுக்கை ஒரு தட்டில் போட்டுக்கொண்டிருந்தார். அருகேயிருந்த சௌந்தர்யா அதற்கு உதவிக்கொண்டிருந்தாள்.
மெதுவாகத் தூக்குச்சட்டியை நெருங்கிய கிழவர், அதற்குள் ஒரு கை வைக்க, பலமாகக் கரண்டியால் ஒரு அடி விழுந்தது.
அது கொடுத்த வலியில் முகம் சுருங்க, வடை போச்சே என்பது போலத் தன் மனைவியைப் பார்த்தார்.
மீனாட்சி பாட்டியோ இடையில் கை வைத்துத் தன் கணவனைத்தான் முறைத்து,
போகும் இடத்தில் குழந்தைக்கு இது கிடைக்குமோ கிடைக்காதோ… அதை எடுத்துச் சாப்பிடுகிறீர்களே… அறிவில்லை…” என்று காய,
“ம்கும்… அது இருந்திருந்தால் உன்னையேன் காதலித்துக் கல்யாணம் பண்ணுகிறேன்…” என்று தனக்குள் முணுமுணுக்க,
“என்ன…” என்றார் பாட்டி தன் நெற்றிக் கண்ணைத் திறந்து. அப்போதுதான் வாய்விட்டு உளறியது புரிந்தது. உடனே
“இல்லை கிழவி… உப்பு உறைப்புச் சரியாக இருக்கிறதா என்று கவனிக்க வேண்டாமா…” என்று சமாளிக்க,
“அந்த ஈர வெங்காயத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்… இடத்தைக் காலி செய்யும்…” என்று விட்டு முறுக்கைப் பிழியத் தொடங்க,
“இல்லைடி… கிழவி… அதிகம் சிரமப் படுகிறாயா… உதவி செய்யலாமே… என்றவரின் விழிகள் மட்டும், ஒரு ஓரமாக அடுக்கியிருந்த தேன்மிட்டாயிலிருந்து விலகவேயில்லை.
ஐம்பது வருடத் தாம்பத்திய வாழ்க்கையில் கணவனைப் பற்றி அறிந்துகொள்ளாதவரா அவர்.
“ஆணியே பிடுங்கவேண்டாம் பெரியவரே…. பெண்கள் இருக்கும் இடத்தில் உமக்கென்ன வேலை… மரியாதையாக இடத்தைக் காலி செய்யும்…” என்று கறாராகக் கூறியவாறு தன் கவனத்திலிருக்க,
“ம்கும்… உன்னையெல்லாம் பெண் என்று சொல்கிறாய் பார்… அதுதான் தாங்க முடியவில்லை கிழவி?” என்று பெருமூச்சுடன் நற்குணசேகரம் கூற, அதைக் கேட்டுக்கொண்டிருந்த சௌந்தர்யா தன்னை மறந்து க்ளுக் என்று சிரித்து விட்டாள்.
“ஏய்… என்னடி சிரிப்பு வேண்டிக் கெடக்கு… வேலையைப் பார்…” என்று பேத்தியைக் கடிந்துவிட்டு மேசையின் ஒரு ஓரமாக இருந்த கத்தியை எடுத்துக் கொண்டு திரும்ப, திரும்பிய மீனாட்சிப்பாட்டியின் கையிலிருந்த கூரான கத்தியைக் கண்டு,
“கொலைசெய்வாள் பத்தினி என்று கேள்விப்பட்டிருக்கிறேன்… அதுதானாடி இது…” என்றவர், சட்டியின் மூடியைக் கேடயமாக்கி தன் மார்புக்குக் குறுக்காகப் படித்தவாறு,
“எங்கே வேண்டுமானாலும் குத்து… இதயத்தை மட்டம் குத்திவிடாதே… என் டார்லிங்குக்கு வலிக்கும்…” என்று அவர் சீரியசாகக் கூற, பாட்டிக்குத் தலையை எங்கே கொண்டு சென்று முட்டுவது என்று புரியவில்லை. பதட்டமாகத் திரும்பித் தன் மருமகளையும் பேத்தியையும் பார்க்க அவர்களோ வந்த சிரிப்பை அடக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தனர்.
ஐயோ இப்படி இவர்களின் முன்னால் மானத்தை வாங்குகிறாரே என்று நொந்துகொண்ட பாட்டி,
“கிழவா…” என்று பல்லைக் கடித்தவாறு சீற,
“என்னடி கிழவி…” என்றார் அவர்.
“ஓ காட்… கான் யு ப்ளீஸ் லீவ் அஸ் அலோன்…?” என்று சீற,
“வை ஷ_ட் ஐ… திஸ் இஸ் மை ஹவுஸ்… மை கிச்சன்… ஐ கான் ஸ்டே வெயர் எவர் ஐ வோன்ட் மை டியர் டார்லிங் கிழவி…” என்று அவர் கெத்தாக நிற்க.
“இஸ் இட்… ஸ்டே தெயர்…” என்றவர் சுத்தவரப் பார்த்தார். அவர் கண்களுக்கு அச்சுப் பலகாரம் செய்வதற்காக வைத்திருந்த முட்டைக் கண்ணில் பட, விரைந்து சென்று ஒன்றை எடுத்தவர், கணவனை நெருங்கி, தன்னை விட உயரமாக இருந்தவரிடம் எக்கித் தலையில் அடித்துச் சிதைக்க, உடை பட்ட முட்டை அவர் முடிக்கூடாக வழிந்து முகத்தில் வழிய, அதைக் கண்ட கமலாதேவியும் சௌந்தர்யாவும் அதிர்ச்சியில் வாய்பிளந்து நின்றனர். ஆனால் கிழவரோ,
“அசடு… இதைத் தலையில் அடித்து உடைத்த நேரம், வாய்க்குள் விட்டிருந்தாயானால், அது உள்ளே போயிருக்கும்… உடம்புக்குச் சக்தியும் கூடியிருக்கும்… இன்னும் ஸ்டார்ங்கா பெண்களைச் சைட் அடித்திருப்பேன்… இப்படி வேஸ்ட் ஆக்கிவிட்டாயே… கிழவி…” என்று வீணாய்ப் போன முட்டையை எண்ணி வருந்த, பாட்டிக்கு மட்டுமல்ல, அங்கிருந்தவர்களுக்குமே ஐயோ என்றானது.
“பெரியவரே! மரியாதையாக இடத்தைக் காலி செய்கிறீர்களா… இல்லை… சேதுபதியைக் கூப்பிடவா…” என்று பல்லைக் கடிக்க,
“ஏய்… எதுவாக இருந்தாலும் பேசித் தீர்க்கலாம்டி… இப்போது எதற்கு அவனைக் கூப்பிடுகிறாய்?” என்று முடிக்கவில்லை,
“அப்பா… அங்கே என்ன செய்கிறீர்கள்…” என்று சேதுபதியின் குரல் கேட்க,
“இவன் ஒருத்தன்… எப்படித்தான் மூக்கு வியர்க்கிறதோ…” என்று எரிச்சலுடன் முணுமுணுத்தவாறு, குளிப்பதற்காகக் கிணற்றை நோக்கி ஓடினார்.
அதுவரை அடைபட்டிருந்த புன்னகை வெளியே வர, தன்னை மறந்து தலையை ஆட்டிச் சிரித்த மீனாட்சி பாட்டியின் முகம் கனிந்து போனது.
“கிரேசி மான்…” என்று முணுமுணுத்தவாறு திரும்ப, மருமகளும், பேத்தியும் தன்னையே பார்ப்பது தெரிந்தது. வெட்கம் எழுந்தாலும், அதை மறைத்து,
“ஏய்… எதற்கடி என் மூஞ்சையைப் பார்க்கிறீர்கள்… இங்கே ஏதாவது எழுதி இருக்கிறதா? வேலையைப் பார்ப்பீர்களா…” என்று கடிந்துவிட்டு, வேலைகளை முடித்துவிட்டு பெரிய தூக்குச்சட்டிகளில் பலகாரங்களை வைத்து மூடிவிட்டு நிமிர்ந்தபோது அனைவருக்குமே நாரி விட்டுப்போயிருந்தது.
அதே நேரம் தன் அறையில் பெட்டிகளை அடுக்கிக்கொண்டிருந்த ஏகவாமன், பெட்டிகளை மூடும்போது எதையோ நினைத்தவனாகத் தன் தாய் தந்தையின் அறைக்குள் நுழைந்தான். அங்கிருந்த அலமாரியைத் திறந்து அதிலிருந்து தாயின் பழைய சேலை ஒன்றை இழுத்தெடுத்துத் தன்னோடு இறுக அணைத்தபோதே அவனுடைய விழிகளில் கண்ணீர் மெல்லியதாகப் படர்ந்தது. கூடவே பத்திரமாக மடித்து வைக்கப்பட்டிருந்த தந்தையின் அங்கவஸ்திரத்தை எடுத்துத் தன் தோளின் மீது போட்டபோது, அவனையும் அறியாமல் நெஞ்சம் நிமிர்ந்து நின்றது. தன் குழந்தைத் தனத்தை எண்ணி மெல்லியதாக நகைத்தவன் இரண்டையும் எடுத்துக் கொண்டு தன் அறைக்கு வந்து, அவற்றையும் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டு, நிமிர ஜெயவாமன் அவனுடைய பெட்டியைத் தூக்கிச் செல்லத் தயாராக நின்றிருந்தான்.
“நான் கொண்டு வருவேன்டா…” என்று ஏகவாமன் மறுக்க,
“ப்ச்… இன்னும் இரண்டு வருடங்கள் நீதானே சுமக்கப் போகிறாய்… இப்போது நான் சுமக்கிறேன்… விடு…” என்றுவிட்டுப் பெட்டியுடன் கீழே இறங்க, முன்னறையில் அவனுக்காக அனைவரும் குழுமி நின்றிருந்தனர்.
அவன் புறப்படும் நேரம், அந்த ஊரே அழுதது. எப்போதும் கம்பீரமாக இருக்கும் சேதுபதி கூட, சற்று உடைந்துதான் போனார். கலங்கிய தந்தையை அணைத்தபோது ஏகவாமனும் கண்கலங்கிவிட்டிருந்தான்.
“நீ இல்லாமல்… எப்படிக் காலங்களைக் கழிக்கப்போகிறோமோ தெரியவில்லை…” என்று தந்தையாய் உருகியபோது, அவருடைய கரத்தைப் பற்றி உதட்டில் பொருத்தி,
“இரண்டு வருடங்கள்தானே… வந்துவிடுவேன்… உடம்பைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்… நான் வரும் வரை பெரிதாக எந்தத் திட்டமும் தீர்மானிக்க வேண்டாம்…” என்று கேட்டுக் கொண்டவனாக, மீண்டும் தந்தையை அணைத்து விடுவித்தவன், தாயையும் அணைத்து சற்று நேரம் நின்றான்.
தாய் குலுங்கி அழுவது பிடிக்காமல்,
“ஷ்… அம்மா… இப்படி அழுதாள் நான் எப்படிச் சந்தோஷமாகப் போவேன்… வேண்டுமானால் நிக்கட்டுமா?” என்று அவர் முகத்தை உள்ளங்கையில் தாங்கியவாறு கேட்க, அழுகையினூடே புன்னகைத்த கமலாதேவி,
“இல்லை… இல்லை… நீ போய்விட்டு வா.. பத்திரமா இரு… நேரத்துக்கு நேரம் சாப்பிடு… முன்கோபத்தை அடக்கி வை… ஒவ்வொரு நாளும் கூப்பிடு… கூப்பிடுவாயில்லயா…” என்று ஏக்கத்துடன் கேட்க,
“என்னம்மா இது… அதைவிட எனக்கு வேறு என்ன வேலை… உங்களையெல்லாம் பிரிந்து நானும் சந்தோஷமாகவா இருக்கப் போகிறேன்….?” என்று அன்புடன் கூறியவன், ஜெயவாமனை நெருங்கினான். அவன் திடமாகத்தான் இருந்தான். ஆனால் ஜெயவாமன்தான் அழுது விட்டான்.
“டேய் பைத்தியம்… எதற்கு இப்போது அழுகிறாய்… கண்ணைத் துடை… அம்மா அப்பா, தாத்தா, பாட்டி, சௌந்தர்யா… எல்லோரையும் பார்த்துக்கொள்… புரிந்ததா…? வேளை கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வராதே… உன்னை நம்பித்தான் தைரியமாகத் தொலை தூரம் போகிறேன்…?” என்று தைரியம் கூறியவன், சொளந்தர்யாவின் அருகே வந்தபோது சற்றுத் திணறித்தான் போனான்.
“ஹே… மை ஸ்வீட் ஏஞ்சல்…” என்று தன்னோடு அணைத்துக் கொண்டவன்,
“ஒழுங்காகப் படி… அதிகம் குறும்பு செய்யாதே… அம்மாவையும் அப்பாவையும் பார்த்துக்கொள்… இப்படி நிறைய அறிவுரைகளைக் கொடுத்துவிட்டு விலக, ஏனோ நெஞ்சில் பெரிய பாரம் ஏறி உட்கார்ந்து கொண்டது.
அடுத்து தாத்தாவையும் பாட்டியையும் தேட, பாட்டி ஒரு கரத்தில் தூக்குச்சட்டியைச் சுமக்க முடியாமல் வரப் பின்னால் நற்குனசேகரம் கரத்தின் இடுக்கிலும், தலையிலும் சுமந்தவாறு வந்துகொண்டிருந்தார். அதைக் கண்டு விரைந்து சென்று அவர் தலையிலிருந்த பாத்திரத்தைக் கீழே இறக்கிவிட்டு,
“என்ன தாத்தா இதெல்லாம்…” என்றான்.
“என்னை ஏன்டா கேட்கிறாய்… இந்தக் கிழவியைக் கேள்…” என்க,
“இல்லேடா கண்ணா… நீ போகும் இடத்தில் நாக்குக்கு ருசியாகச் சாப்பாடுகள் கிடைக்குமோ என்னவோ… அதுதான்பா…” என்று பாசத்தைப் பிழிய,
“பாட்டி… இதை ஃப்ளைட்டில் கொண்டுபோனால் என்னை உள்ளே தள்ளிவிடுவார்கள் பாட்டி…” என்றான் கோபத்துடன். அதைக் கேட்டதும் பாட்டியின் முகம் வாடிப் போனது. அதைக் கண்டு பொறுக்க முடியாதவனாக,
“பரவாயில்லை பாட்டி… இன்னும் இரண்டு கிழமைகள் கொழும்பில் தங்கித்தான் செல்வேன்… அதற்கிடையில் இவற்றை முடித்து விடுகிறேன் போதுமா?” என்று சமாதானப் படுத்த பாட்டியின் முகம் மலர்ந்து போனது. அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பியதும் அவன் வாகனம் சென்று மறையும் வரைக்கும் அனைவரும் விழிகள் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவன் சென்றபின், எட்டு மாதங்கள் எல்லாமே சந்தோஷமாக… மிக்கச் சந்தோஷமாகத்தான் போய்க்கொண்டிருந்தது… அந்த நாள் வரும் வரை…