Wed. Jan 15th, 2025

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 12/13

(12)

அலரந்திரி பெரும் ஆவேசத்துடன் அந்த இளைஞர்களை அடித்துக்கொண்டிருக்கும்போது ஒரு வெண்ணிற வாகனம் வந்ததையோ, அதிலிருந்து ஏகவாமன் பெரும் சீற்றத்துடன் இறங்கியதையோ அவள் கவனிக்கவில்லை. இறங்கியவன், அங்கே அவள், பெண் புலியாய் சீறிப் பாய்வதைக் கண்டு, வேகம் தடைப்பட, அதை ஒரு வித சுவாரசியத்துடன் பார்க்கத் தொடங்கினான்.

 

அவள் அடிப்பதையும், அந்தக் கயவர்கள் வாங்குவதையும் ஒரு வித மலர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்க, அவனுடன் வந்தவர்கள், விரைந்து சென்று அதைத் தடுக்க முயன்ற நேரம், தன் சுண்டுவிரலையும், நடுவிரலையும் உயர்த்தி விரல்களை மேலும் கீழுமாக ஆட்டிப் பொறுமைகாக்குமாறு சைகை செய்துவிட்டுத் திறந்த கதவின் மேற்புரத்தில், கரங்களைக் கட்டி வைத்தவாறு, அந்தக் காட்சியை ரசித்துக் காணத் தொடங்கினான்.

மெல்ல மெல்ல அடிப்பவளின் சக்தி தளர்வதையும், அவளுடைய கரங்கள் தடுமாறுவதையும் கண்டவனுக்கு அவளுக்கு உதவி தேவை என்பது புரிந்தது. கூடவே, ஆவேசமாக எகிறியதால் விலகிய அடையையும், அதனால் ஏடாகூடமாகத் தெரிந்த வெண்ணிற இடை முதல் ஆலிலை வயிற்றையும் கண்டு ஒரு கணம் தடுமாறினான். அந்த நிலையிலும், சுத்தவர நின்றிருந்த ஆண்கள் அவளை வாய் திறந்து வேடிக்கை பார்ப்பதைக் கண்டதும் உடல் எல்லாம் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

‘ஒரு பெண் தனியாக இத்தனை பேரை அடிக்கிறாள்… அதற்குக் காரணம் என்ன என்று அறிந்து அதற்குரிய தீர்வைச் சொல்லத் துப்பில்லை, நின்று வேடிக்கை பார்ப்பது மட்டுமில்லாமல் இந்த நிலையிலும் பெண்மையை வெறிக்கிறார்களே… இவர்களை எல்லாம்…’ எழுந்த சீற்றத்தில், அந்தக் கயவர்களை முதலில் சாத்தவேண்டும் என்று தோன்றியது.

அதற்கு மேல் பொறுமைகாக்க முடியாது தன் கண்ணாடியைக் கழற்றி முன்னிருக்கையில் வீசிவிட்டுக் கூடவே கைக் கடிகாரத்தையும் அவிழ்த்து இருக்கையில் வைத்துவிட்டுக் வாகனத்தைவிட்டு விலகிக் காலால் வாகனத்தின் கதவைச் சாத்திவிட்டு அவளை நோக்கி நடக்கத் தொடங்கினான். நடக்கும் போதே விரல்களை ஒன்றோடு ஒன்று கோர்த்து, மேலே கொண்டு சென்று தலையின் பின்புறமாக வைத்து, இரு முழங்கைகளையும் முகத்துக்கு நேராகக் கொண்டு வந்து, உடலை இறுக்கி நெட்டி முடித்தவன், பின் கரத்தைக் கீழிறக்கியவாறு அலரந்திரியை நெருங்கத் தொடங்கினான்.

இவன் நெருங்கவும், இவனை அடிப்பதற்காகக் கட்டையை வீசியவாறு அவள் திரும்பவும் நேரம் சரியாக இருந்தது. கண்ணிமைக்கும் நொடியில் முகத்திற்கு நேராக வந்த கட்டையைத் தன் வலக்கரத்தால் பற்றியவன், மெதுவாக அதைக் கீழே இறக்க, சீற்றத்தில் செந்தீயை தெறிக்கவிட்ட விழிகளில் மின்னிய கண்ணீர்தான் முதலில் இவன் கண்களுக்குத் தெரிந்தது. கூடவே, ஆவேசத்தில் முகம் இரத்த நிறம் கொண்டிருந்தது. கன்னத்தின் ஓரமாக வடிந்த வியர்வை அப்படியே கீழே பயணித்துக் கழுத்தில் விழுந்து அவள் அணிந்திருந்த ரவிக்கைக்குள் மறைந்து செல்ல, அவனுடைய விழிகளோ தன்னை மறந்து அந்த வியர்வைத் துளிகளுடன் பயணித்தன.

ஒரு கணம்தான்… ஒரே ஒரு கணம்தான் அவன் விழிகள் சற்றுத் தடுமாறின. பின் நிலைமை அறிந்து அவசரமாக அவள் விழிகளுடன் தன் விழிகளைக் கலக்க விட, அவனைக் கண்டதும் அதுவரை இருந்த சீற்றம் இப்போது தொலைந்திருந்தது. ஆந்த இடத்தில் ஒரு வித அச்சமும் அவஸ்தையும் தேங்கியிருந்தன.

வந்தவன் தான் பற்றியிருந்த கட்டையை இறுகப் பற்றியிருப்பதைக் கண்டதும், அவசரமாகத் தன் கரத்தை இழுத்து எடுத்தவள், ‘இவன் எங்கே இங்கே…’ என்பது போலப் பார்க்க, அவனோ, சுத்தவரப் பார்த்துவிட்டு எரிச்சலுடன்,

“முதலில் ஆடையைச் சரிப்படுத்து…” என்றான் கடித்த பற்களுக்கூடாக. இவளோ இவன் சொன்னது புரியாமல்,

“என்ன?” என்று கேட்க, விரைந்து சென்று விலகிய சேலையைச் சரிப்படுத்தவேண்டும் என்று எழுந்த வேகத்தைச் சிரமப்பட்டு அடக்கியவன், அவள் விழிகளை மட்டும் நோக்கி,

“உன் சேலையைச் சரியாக்கு… என்றேன்…” என்றதும்தான் தன்னைக் குனிந்து பார்த்தாள்.

பார்த்தவள் அதிர்ந்து போனாள். அவசரமாகத் தன் சேலையைச் சரிப்படுத்தித் தெரிந்த எழிலை மறைத்தவள் சங்கடத்துடன் சுற்றிவரப் பார்த்தாள். அப்போதுதான் அவளைப் பலர் வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பது புரிய, அந்த நிலையிலும் பெரும் ஆவேசம் எழுந்தது.

ஒருத்தி தனியாக இத்தனை ஆண்களுடன் போராடுகிறாள்… யாரும் ஒருவனுக்காவது வந்து உதவவேண்டும் என்று தோன்றுகிறதா பார்… ஆனால் பெண்களின் சேலை எப்போது விலகும், அவர்களின் அங்கங்களை எப்போது பார்க்கலாம் என்று அலைந்து திரியும் மானம் கெட்ட ஜென்மங்கள்…” என்று எண்ணியவள் சிறு அவஸ்தையுடன் நிமிர்ந்து ஏகவாமனைப் பார்க்க அவனோ தன் கைப்பிடியிலிருந்த கட்டையைப் பரிசோதித்துக்கொண்டிருந்தான்.

 

அதிகம் பலமில்லாத கட்டை. இதனால் அடித்தால் அவர்களுக்கு வலிக்குமா என்ன? அதுவும் இவள் அடித்தால், யோசனையுடன் திரும்பிப் பார்க்க, யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. சிறு கண்டல் கூட அவர்களிடமில்லை.

அதிர்ச்சியில்தான் அவள் அடிப்பதை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். இதுவே அவர்கள் சுயத்துக்கு வந்தால், காட்சிகள் மாறும். அவள் தனி ஒருத்தி. அவர்கள் நான்கு பேர்… அவர்களுடைய பலம், இவளுடைய பலவீனம்… ஒழுங்காக வளர்க்கப்படாத ஆண்களின் புத்தி எப்படிப் போகும் என்பதை அறியாதவனா அவன்? இழுத்துச் செல்லப்படுவாள்… அதற்கு மேல் என்ன நடக்கும் என்பதைக் கற்பனை பண்ணித்தான் அறியவேண்டுமா என்ன? மூச்சு சீறலாக வெளிவரத் திரும்பி அலரந்திரியைப் பார்த்தான்,

மெலிந்து சிறுத்த உடலைக் கண்டு ஒருபக்கம் பரிதாபம் எழுந்தாலும் இன்னொரு பக்கம் கோபமும் தோன்றியது. உடலில் பலம் இல்லாதவளுக்கு எதற்கு இந்த வேலை… இந்தக் கட்டையைத் தூக்கவே இரண்டு முட்டை குடிக்கவேண்டும். இதில் அடிக்கவேறு வந்துவிட்டாள்…’ என்று எண்ணியவனாகத் தன் கரத்திலிருந்த கட்டையை ஒரு சுழற்று சுழற்ற அது பலமுறை சுழன்று அவன் கரங்களில் தங்க, அடிவாங்கியவர்களை நோக்கி மெதுவாக நடக்கத் தொடங்கினான்.

திடீர் என்று ஒருத்தன் இப்படி மலைபோல வருவான் என்று அவர்கள் கனவா கண்டார்கள்? அவன் நெருங்க நெருங்கப் பின்னால் சென்றவர்கள்,

“சார்… சார்… எங்கள்மீது எந்தத் தப்புமில்லை. அந்தப் பெண்தான்…” என்று கூறிய ஒருவன் அடுத்த கணம் தரையில் குப்புற விழுந்து வயிற்றைப் பிடித்தவாறு முனங்கத் தொடங்கினான்.

அதைக் கண்டு திருப்தி கொண்டவன், திரும்பி மற்றைய மூவரையும் பார்த்தான். அவர்களோ அதிர்ச்சியுடன் தமது நண்பனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தனர்.

மீண்டும் தன் கரத்திலிருந்த கட்டையைச் சுழற்றியவன், கரத்தை இடமிருந்து வலமாகத் துடுப்பால் பந்தை அடிப்பதுபோல ஒரே ஒரு வீச்சுதான், மற்றவனும் அதே போலத் தரையில் குப்புற விழுந்து துடிக்கத் தொடங்கினான்.

பின் திரும்பிச் சற்றுத் தொலைவைப் பார்க்க, அங்கிருந்த சைக்கிள் கடை இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவன் தலையை மேலும் கீழுமாக ஆட்டி எதையோ உணர்த்த, தன் முன்னால் நின்றிருந்தவனை வெறித்துப் பார்த்தான் ஏகவாமன். அவன்தான் அலரந்திரியின் மீது கல்லை எறிந்தவன் என்பதைப் புரிந்து கொண்டவன், அடுத்த கணம் அவனுடைய வலது கரத்தைப் பற்றிச் சடார் என்று ஒரு திருப்புத் திருப்ப, அவன் திருப்பிய வேகத்தில் கை மூட்டு விலகிப் போனது. கை மூட்டு விலகியதுதான் தாமதம், அது கொடுத்த வலியில் உயிர் போகும் வலியை உணர்ந்தவனாக அவன் அலற. அந்த இடமே கிடுகிடுத்தது.

அதுவரை அதிர்ந்துபோயிருந்த அலரந்திரி, அவனுடைய சத்தத்தில் உள்ளம் பதறத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க அங்கே கண்ட காட்சியில் சர்வமும் நடுங்கிப்போனது. தரையிலிருந்த இளைஞர்களையும், ஏகவாமனின் பிடியிலிருந்த இளைஞனையும் பார்த்தவளுக்கு வயிற்றைக் கலக்கியது.

கூடவே அவனுடைய ஆவேசமும் அகோரத் தாண்டவத்தையும் கண்டவளுக்கு உடலே நடுங்கியது. அந்த இளைஞன் கத்திய கத்தலில் அவளுடைய தாயுணர்வு விழித்துக் கொள்ள நெஞ்சம் பதைபதைத்தது. போதாததற்கு ஏகவாமன் அந்த இளைஞனின் முகத்தில் ஒரு அப்பு அப்ப, அந்த இளைஞனின் மூக்கு உடைந்து இரத்தம் கொடகொடவென்று கொட்டத் தொடங்கியது.

அதற்கு மேல் அந்தக் காட்சியைப் பார்க்க முடியாதவளாக, பதறிப் போனவளாக எகவாமனை நெருங்கி,

“எ… என்ன இது… காட்டுமிராண்டித்தனம்… எதற்காக இப்படி வதைக்கிறீர்கள்… விடுங்கள் அவரை…” என்று பதட்டமாகக் கூற, அவனோ, அந்த இளைஞனைப் பிடித்த பிடியை விடாமல் மேலும் முறுக்கியவாறு, அலரந்திரியை எரிப்பது போலப் பார்த்தான்.

“தெரியாது? ஏன் என்று தெரியாது? அவன் உன்மீது கல்லை விட்டெறிகிறான்… அதை அறிந்த பின்னும் கேட்டுக்கொண்டிருக்கச் சொல்கிறாயா?” என்று சினத்துடன் சீறியவன், அடங்காத தன் கோபத்தை அவன் பிடியிலிருந்த அந்த இளைஞன் மீது நன்றாகவே காட்ட அந்த இளைஞனை விட இவள்தான் அலறிப்போனாள்.

வலியில் கதறியவனின் பரிதாபக் குரலைக் கேட்க முடியாதவளாக,

“அது என் பிரச்சனை… எப்படித் தீர்க்கவேண்டுமோ அதை அப்படியே தீர்த்துக்கொள்வேன்.. அதில் தலையிட நீங்கள் யார்? உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது… யாரோ ஒருவர் யாரோ ஒருத்தியிடம் எப்படியோ நடந்துகொண்டால் உங்களுக்கென்ன வந்தது… மரியாதையாக அவரை விடுங்கள்…” என்று அதிகாரமாகக் கூற,

“என்ன சொன்னாய்?” என்றவன் தன் பிடியிலிருந்தவனை உதறிவிட்டு, அவளை நெருங்கி, அவளுடைய கன்னத்தைத் தன்னுடைய வலது கரத்தால் அழுந்தப் பற்றி மேலே தூக்கி,

“என்ன கேட்டாய்? யாரோ ஒருவர் யாரோ ஒருத்தியிடமா?” என்று கேட்டவன் தனது இடது கரத்துச் சுட்டுவிரலால், அவளுடைய நெஞ்சின் மேற்புறத்தில் பலமாக இரு முறை தொட்டு,

“யாரோ ஒருத்தன் யாரோ ஒருத்தியிடம் எப்படி நடந்துகொண்டாலும் ஐ டோன்ட் கெயர்… பட் அவன் கைவைக்க முயன்றது… உன்னிடம்… சும்மா போவேன் என்றா நினைத்தாய்? அவர்களுக்கு இந்த ஏகவாமன் யார் என்று காட்டவேண்டாம்… உன்னை நெருங்கினால் என்ன நடக்கும் என்று அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டாம்… ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பில்லையென்றால் என்றவேண்டுமானாலும் பேசலாமா” என்று அவன் கடுமையாகக் கேட்டவனின் பிடியிலிருந்து ஆவேசமாகத் தன்னை உதறி விடுவித்தவள் அவனை ஏளனத்துடன் பார்த்துச் சிரித்தாள்.

அன்று காருண்யனுக்காகப் பிச்சைக்காரிபோலப் போய் நின்றபோது, என்னவெல்லாம் பேசினான். இப்போது என்னவென்றால், எனக்காக யார் யாரிடமோ எல்லாம் சண்டை பிடிக்கிறேன் என்கிறானே… ஆச்சரியமாக இல்லை…?’ அவனை ஏறிட்டுப் பார்த்துக் கிண்டலாக நகைத்து,

“நான் யார் உங்களுக்கு? உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? பெரிய பிஸ்னஸ் மேன்… நாட்டையே கிடுகிடுக்க வைக்கும் ரௌடி… மன்னிக்க வெண்டும்… பெரிய மனிதர்… எங்கோ தெருவில் போகும் ஒருத்திக்காக, அதுவும் ஒரு ஏழைக்காக இப்படித் தெருவில் இறங்கி கீழ்மட்ட மனிதர்கள் செய்யவும் கூசுகின்ற அடிதடி வேலையில் இறங்கிவிட்டீர்களே… அடடா… உங்கள் மானம் மரியாதை எல்லாம் என்னாவது? அதுவும் உங்கள் அந்தஸ்தென்ன, என்னுடைய அந்தஸ்தென்ன… ஏணி வைத்தாலும் எட்டாத உயரத்தில் இருப்பவர்கள் நீங்கள்… நாங்களெல்லாம் அதலபாதாளத்தில் இருப்பவர்கள்… நீங்கள் போய் இறங்கி வரலாமா?” என்று அதீத எகத்தாளமாகக் கூறியவளை வெறித்துப் பார்த்தான் ஏகவாமன்.

மாறி மாறி அவளுடைய விழிகளைப் பார்த்தவன், என்ன நினைத்தானோ, மெல்லியதாகச் சிரித்தான். அது பார்ப்பதற்குத்தான் நகைப்பு போலத் தெரிந்தது. ஆனால் அந்தச் சிரிப்பில், அலரந்திரியின் உள்ளம் சில்லிட்டுப் போனது மட்டும் உண்மை. சிரித்த முகம் கடுமையாக மாற,

“நீ அதிகம் பேசுகிறாய்… பெண்ணே… இதுவரை என் முகத்தை யாரும் நேராகப் பார்த்துப் பேசியதில்லை. முதன் முதலாக நீ தான் இப்படிப் பேசுகிறாய். அதுவும் என்னை அலட்சியமாகப் பார்த்துப் பேசிக்கொண்டிருக்கிறாய்…” என்றான் கடித்த பற்களுக்குள்ளாக. ஆனால் அவளோ,

“உங்களைக் கண்டதும் பயந்து நடுங்குவதற்கு இது என்ன சேதுபதி கிராமம் என்றா நினைத்தீர்கள்? இது எங்கள் பேட்டை… இங்கெல்லாம் உங்களுடைய அடாவடித்தனம் செல்லுபடியாகாது.” என்றதும், இவனுடைய முகம் கோபத்தில் கண்டியது. அவளிடமிருந்து விலகியவன், திரும்பி எஞ்சி நின்றவனைப் பார்த்தான்.

அவனோ ஒன்றுக்குப் போனது கூடத் தெரியாமல் நடுங்கிக் கொண்டிருக்க,

“ஏன்டா… நீயெல்லாம் எப்படிடா ஒரு பெண்ணைக் கிண்டலடித்தாய்… கறுமம்…” என்றவன் எச்சரிக்கை கொடுக்காமலே ஆவேசம் அனைத்தையும் ஒன்றிணைத்து அவன் தலையில் ஓங்கி அடிக்க, இப்போது அடித்த வேகத்தில் அவன் கரத்திலிருந்த கட்டை இரண்டு மூன்று துண்டுகளாகச் சிதறித் தெறித்தன. அடி வாங்கியவனோ தலை உடைந்து இரத்தம் சிந்தத் தரையில் விழ அலரந்திரி வாயடைத்துப் போனாள். அதுவும் தரையில் விழுந்தவனிடம் அசைவில்லாது போகச் செய்வதறியாது திகைத்தாள்.

அவன் உயிரோடு இருக்கிறானா இல்லை… எதையோ சொல்ல முயன்றவள் முடியாமல் தடுமாற, நடுங்கும் கரங்கள் கொண்டு தன் வாயை மூடியவள், அதிர்ச்சியுடன் நிமிர்ந்து ஏகவாமனைப் பார்த்தாள்.

அவனோ, கோபம் மட்டுப்படாதவனாகக் கரத்திலிருந்த எஞ்சிய கட்டையைத் தூக்கிப் பார்த்தான். பின் அதைக் குறிபார்த்து ஒரு இடம் நோக்கி வீச அந்தக் கட்டையின் கூரிய முனை அப்போதிலிருந்து அலரந்திரியை ரசித்துக்கொண்டிருந்த ஒருவனின் தலைமீது பலமாகப் பட்டுக் கீழே விழுந்தது.

அவனோ வலியில்”ஆ…” என்றவாறு ஏகவாமனை வெறிக்க, அவனோ ஒற்றை விரலைத் தூக்கிக் காட்டிப் பத்திரம் என்பதுபோல எச்சரித்துவிட்டு,

“அப்போதிலிருந்தே என்னை இரிட்டேட் பண்ணிக்கொண்டிருக்கிறான்…” என்று முணுமுணுத்துவிட்டுத் திரும்பி அருகே நின்ற தன் அடியாட்களைப் பார்த்து விழிகளால் எதையோ உத்தரவிட, உடனேயே அவர்கள் செயற்பட்டனர்.

அடிபட்ட நான்கு பேரும், குண்டுக் கட்டாகத் தூக்கிப் பின்புறம் நின்றிருந்த வண்டியொன்றில் ஏற்றப்பட்ட மறு கணம் அந்த வாகனம், அந்த இடத்தை விட்டுப் பறந்து சென்றது. அதைக் கண்ட அலரந்திரிக்கு இதயம் நின்றுவிடும் போலத் தோன்றியது.

அந்த இளைஞர்கள் சாதாரணமானவர்கள் அல்ல… அவர்களின் பின்புலம் பயங்கரமானது. அதனால்தான் இதுவரை யாரும் அவர்களை எதிர்த்து ஒரு சொல் சொன்னதில்லை. ஆனால் இவன்… கடவுளே… இதனால் இவன் என்ன என்ன விளைவுகளைச் சந்திக்கப்போகிறானோ…?’ என்று கலங்கியவளை ஏறிட்டுப் பார்த்தவன், அந்த விழிகளில் தெரிந்த அச்சத்தைக் கண்டு,

“அச்சமடைய எதுவுமில்லை. அவர்களுக்கு வேண்டிய புத்திமதியை என்னுடைய ஆட்கள் சொல்லவேண்டிய முறையில் சொல்லி அனுப்பிவைத்து விடுவார்கள். அந்தப் புத்திமதியின் பிறகு உன்னை மட்டுமல்ல, எந்தப் பெண்ணையும் அவர்கள் கிண்டல் அடிக்கமாட்டார்கள்… பெண்களைப் போதைப்பொருளாகப் பார்க்கும் ஒவ்வொரு ஆணுக்கும் இப்படியான தண்டனை கொடுத்தால், தப்பாகப் பெண்களைத் தொட எவனுக்கும் தைரியம் வராது…” என்று கூற, அவளோ அவனை மேலும் அச்சத்துடன் பார்த்து,

“அவர்களைப் பற்றித் தெரியாமல் பேசுகிறீர்கள்… அவர்களின் பின்புலம் என்ன தெரியுமா? அதில் ஒருவனின் மாமன் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்… இப்படி நீங்கள் அவர்களைச் சிதைத்தது தெரிந்தால் உங்களை உயிரோடு விடமாட்டார்கள்… தயவு செய்து அவர்களை விட்டுவிடுங்கள்…” என்று பதறித் துடித்தவளை ஒரு கணம் ஆழமாகப் பார்த்தான் ஏகவாமன்.

“இதைக் கட்டையால் அவர்களை அடிக்க முதல் நீ யோசித்திருக்க வேண்டும். நீ அடித்தபின் என்ன நடக்கும் என்று கொஞ்சமாவது எண்ணிப்பார்த்தாயா? அவர்களின் பலத்துக்கு முன்னால் உன்னால் என்ன செய்திருக்க முடியும் என்று நினைக்கிறாய்…? சுத்தவர பார்த்தாயல்லவா? புதினம் பார்க்கத்தான் மக்கள் கூட்டமே தவிர உதவுவதற்கு ஒரு ஈக்காக்கா கூட வராது…” என்று அவன் சிறு எரிச்சலுடன் கேட்க, அதிலிருந்த உண்மை புரிந்தவளாகச் சற்று நேரம் அமைதி காத்தாள் அலரந்திரி.

கோபத்திற்காக எகிறலாம்தான்… ஆனால் அவன் சொன்னதில் நூறுவீதம் உண்மையிருக்கிறதே… அவளைக் காக்க யாருமே வரப்போவதில்லை… அந்தக் கடவுள் உட்பட. அப்படியிருக்கையில் எந்தத் தைரியத்தில் அவர்களை அடித்தாள்? இரவு அவளால் நிம்மதியாகத் தூங்க முடியுமா? உண்மை தெரிந்தால் அந்த எம்பி என்ன செய்வார்? கடவுளே… இதை ஏன் நினைக்க மறந்தாள்? இனி தனியாக எப்படி அந்த வீட்டில் இருப்பாள்? இப்போது நினைக்கும்போதே உடல் நடுங்கியது. தன்னை மறந்து விழிகள் கலங்க ஏறிட்டவள்,

“நா… நான் பொறுமையாகத்தான் இருந்தேன்… கல்லை விட்டெறிந்ததும்… என்னை மறந்து…” என்று அவள் தடுமாற,

“சரி சரி… இனி அவர்களால் உனக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது… அதை நான் பார்த்துக்கொள்கிறேன்… வீட்டுக்குப் போ…” என்றதும் மறுக்காமல் திரும்பியவளைத் திரும்பிப் பார்த்தவன், தன் நெற்றியின் மேற்புறத்தைச் சுண்டுவிரலால் வருடிக் கொடுத்து,

“ஒரு நிமிஷம்…” என்றான். இவள் நின்று திரும்பிப் பார்க்க,

“இப்போது கைக்காயம் எப்படியிருக்கிறது” என்று அவன் கேட்க, அப்போதுதான் அவளுக்கே அந்தக் கைக்காயம் நினைவுக்கு வந்தது.

இருந்த ஆவேசத்தில் அதை அவள் யோசிக்கவேயில்லை. தன்னையும் மறந்து விரலைத் தூக்கிப் பார்க்க, அது கண்டிக் கறுத்திருந்ததன்றி, இரத்தம் கசியவில்லை. ஆனால் வலி அதிகமாகியிருந்தது.

 

“இ… இப்போது பரவாயில்லை…” என்று முணுமுணுத்தவளை ஒரு கணம் ஆழமாகப் பார்த்தவன்,

“சரி… காயம் ஆறியதும் வேலைக்கு வா… அதுவரை ரெஸ்ட் எடு… இப்போது வீட்டுக்குப் போ…” என்று கூறிவிட்டுத் திரும்பியவனை வியப்புடன் ஏறிட்டாள் அலரந்திரி.

ஏனோ அந்த நிலையிலும் அவனுடைய அக்கறையான பேச்சு நெஞ்சைத் தொட, அவளையும் மீறி இதயத்தில் மெல்லிய அமைதி பிறக்கத் தன் வீட்டை நோக்கிச் சென்றாள் அலரந்திரி.

அதே நேரம் தன் ஜீப்பை நோக்கிச் சென்றவனின் கைப்பேசி அடிக்க, எடுத்துப் பார்த்தான்.

அதிலிருந்த இலக்கத்தைக் கண்டவன் துடிப்புடன் எடுத்துக் காதில் பொருத்தி,

“சொல்லுங்கள்… அங்கிள்” என்றான். மறுபக்கம் என்ன சொன்னதோ, இவனுடைய முகத்தில் பலவகையான உணர்வுகள் கலவையாக வந்து போயின.

“இதோ முடிந்தவரை விரைவாக வருகிறேன்…” என்று கூறியவன் தன் ஜீப்பில் பாய்ந்து ஏறி அதைச் சீற விட்டான்.

 

(13)

 

ஏகவாமனின் வாகனம், கிளிநொச்சியிலிருந்து, கொழும்பு வரை இரண்டு மணிநேர ஓட்டத்தின் பின், அந்தப் பிரமாண்டமான மருத்துவமனையின் முன் வந்து நின்றது. வாகனத்தைவிட்டு இறங்கியவன், வேக நடையுடன் உள்ளே சென்று குறிப்பிட்ட இடத்தில் திரும்பிச் சற்றுத் தூரம் போனான். அங்கே ஒரு கதவிருக்க, பொறுமையற்றவன் போலத் திறந்து உள்ளே நுழைய இன்னொரு கொரிடோர்… படு சுத்தமாக இருந்தது அந்த இடம். பார்க்கும் போதே அதி நவீன வசதிகள் கொண்ட மருத்துவ அறை. அங்கே பெரிய பிரமுகர்கள் அனுமதிக்கப்படுவதால் அதிகக் காவல் இருந்தது. அனைத்துப் பாதுகாப்புகளையும் கடந்து நடக்கத் தொடங்கியவன் குறிப்பிட்ட ஒரு கதவைத் திறக்க, இவனைத்தான் எதிர்பார்த்துக் காத்திருந்தார் வைத்தியர்.

“வா… வாமன்…” என்று கூறியவரின் முகத்தைக் கொண்டே அவர் அறிவிக்கப்போகும் செய்தியின் பாரதூரம் புரிய, அவனுடைய உதடுகள் ஒன்றோடு ஒன்று அழுத்தத்துடன் மூடிக்கொண்டன.

சற்று நேரம் அமைதி காத்த வைத்தியர், நிமிர்ந்து ஏகவாமனைப் பார்த்து,

“ஹி இஸ் எவேக்…” என்றார். தொடர்ந்து, எதையோ சொல்லத் தடுமாறியவர் போலச் சற்றுத் தயங்க, அதைப் புரிந்துகொண்டவனின் முகம் மேலும் களையிழந்தது. தன்னைத் திடப்படுத்துபவன் போல முஷ்டிகளை இறுக்கிக்கொண்டவன்,

“எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் அங்கிள்… தாங்கிக்கொள்வேன்…” என்றவனின் குரலில் தெரிந்த அழுத்தமும், அதை மீறித் தெரிந்த கரகரப்பும், விழிகளில் பட்டும் படாமலும் வரியாய் தெரிந்த கண்ணீரும் அவனுடைய வலியை அப்பட்டமாக எடுத்துக் காட்ட, வேகமாக ஏகவாமனை நெருங்கிய வைத்தியர் பரராஜசிங்கம்,

“ஐ நோ கண்ணா… ஆனால் உன்னை நீதான் திடப்படுத்திக்கொள்ளவேண்டும்…” என்று சமாதானப் படுத்த, விரக்தியாகச் சிரித்தவன்,

“அம்மா, அப்பா… தங்கை… இவர்கள் இறந்தபோதே தாங்கிக்கொண்டவன்… இதைத் தாங்கிக்கொள்ள மாட்டேனா… சொல்லுங்கள்… ஐ கான் ஹான்டில் இட்…” என்றான் கரகரத்த குரலில். அதைப் புரிந்துகொண்டவர் போல அவனுடைய தோளில் தட்டிக் கொடுத்தவர்,

“சரி என்னுடன் வா…” என்றவாறு அவனுடைய தோளின் மீது கரத்தைப் பொட்டு அழைத்துச் சென்றவர், சற்றுத் தூரம் சென்றதும், இன்னொரு கதவின் கைப்பிடியில் கையை வைத்து உள்ளே தள்ளித் திறந்தவாறு நுழைய, அவருக்குப் பின்னால் தன் வேதனையை மறைத்தவனாக, அழுந்த மூடிய உதடுகளுடனும், இறுகிய உடலுடனும் நுழைந்தவன் நிமிர்ந்து பார்த்தான்.

 

அங்கே, படுக்கையில் எலும்பும் தோலுமாகக் கிடந்தவனைக் கண்ட ஏகவாமனுக்கு இதயத்தில் இரத்தம் கசிந்தது. எழுந்த வேதனையை அடக்க முடியாதவனாக, இரண்டெட்டில் நெருங்கி விழிகளால் அந்த உருவத்தைப் பருகினான்.

படுத்துக் கிடந்த அந்த உடலில் எல்லாப் பாகங்களிலும் ஏதேதோ வயர்கள் பூட்டப்பட்டிருந்தன. எது எங்கே போகிறது என்று கூடத் தெரியவில்லை.

மூன்று வருடங்களுக்கு முன்பு இருந்தவனுக்கும் இப்போது இருப்பவனுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டு நெஞ்சமே நடுங்கிப்போனது. அவனையும் மீறி விழிகள் கலங்கின. அவனை நோக்கிக் குனிந்தவன், தன் பலம் பொருந்திய உள்ளங்கையைக் காய்ந்துபோன அவனுடைய கன்னத்தில் மெதுவாகப் பதித்தான். அதை அவன் சற்றும் உணராதவன் போல விழிகள் மூடிக் கிடக்க, ஒரு வித ஏமாற்றத்துடன் நிமிர்ந்து வைத்தியரைப் பார்த்தான். அவரோ தன் விழிகளை மூடித் திறந்து, தைரியம் கொடுக்க, சிரமப்பட்டுத் தன்னைத் திடப்படுத்தியவனாக,

“ஜெயன்…” என்றான். ஆனாலும் படுத்திருந்தவனின் விழிகள் திறக்கவில்லை. பெரும் ஏமாற்றத்துடன் மீண்டும் அழைத்துப் பார்த்தான். ம்கூம்… மூடிய விழிகள் திறக்கவேயில்லை. வேதனையுடன் நிமிர, பரராஜசிங்கமோ, அவனைச் சமாதானப் படுத்தும் முகமாக, அவன் தோள்களில் தட்டி,

“வெளியே வா வாமன்… உன்னோடு பேசவேண்டும்” என்று விட்டு வெளியேற, தாங்க முடியாத வேதனையில் நடை தள்ளாட அவரைப் பின்தொடர்ந்தான் அவன்.

அடுத்து இருவரும் பரராஜசிங்கத்தின் அலுவலகத்தில் அமர்ந்திருந்தாலும் சற்று நேரத்திற்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. எத்தனை நேரத்திற்கு அப்படியே அமைதியாக இருக்க முடியும்? பெரிய மூச்சை எடுத்துவிட்ட வைத்தியர் பரராஜசிங்கம்,

“உன் தம்பி இப்போது விழித்துவிட்டான்… பட்… அதிக நாட்களுக்கில்லை…” என்றதும் அடைத்த நெஞ்சைச் சமப்படுத்த முடியாதவனாக வைத்தியரைப் பார்த்தான் ஏகவாமன்.

“ஏன்… உங்களை நம்பித்தானே அவனை இங்கே அழைத்து வந்தேன்… நீங்களே இப்படிச் சொன்னால்… நான் எங்கே போவேன்… அங்கிள்…” என்று வேதனையை மறைக்க முடியாதவனாகப் படபடக்க,

“நான் என்ன செய்வது வாமன்… எதுவும் நம் கையில் இல்லையே…” என்று அவரும் வருந்த,

“உங்கள் கையில் இல்லையென்றால் யாருடைய கையில் இருக்கிறது… அந்தக் கடவுளின் கரங்களிலா…?” என்று விரக்தியாகக் கேட்டவன்,

“அந்த நம்பிக்கை தொலைந்து மூன்று வருடங்களாகிவிட்டன… இப்போதெல்லாம் அந்தச் சாமி, பூதம் எதன் மீதும் எனக்கு நம்பிக்கையில்லை…” என்றபோது ஏனோ அவனுடைய குரல் அடைபட்டது. பின் எங்கோ பார்வையைச் செலுத்தியவாறு”அப்படி இருந்திருந்தால்… இன்று நமக்கு இந்த நிலை வந்திருக்காது… இதோ… இப்படி உணர்வற்று என் தம்பி படுத்திருக்க மாட்டான்…” என்றவனின் குரலில் மெல்லிய அடைப்புத் தெரிய, அதைக் கண்டு வருந்தியவராக ஏகவானைப் பார்த்தார் பரராஜசிங்கம்.

எதற்கும் கலங்காத தன் நண்பனின் மகன் இப்படிக் கலங்குவது கண்டு பிடிக்காதவராக,

“ஹே… எந்தப் பிரச்சனையையும் அசால்ட்டாகக் கையாளும் நீயா இப்படிக் கலங்குகிறாய்… ப்ளீஸ்பா… உன்னைத் தேற்றிக்கொள்…” என்று சமாதானப் படுத்த முயல, சீற்றத்துடன் அவரைப் பார்த்தவன், தன் தம்பியின் அறைப் பக்கமாகக் கரத்தை நீட்டிக் காட்டி,

“அவனை இந்த நிலையில் பார்த்த பின்னும் என்னை எப்படி அமைதியாக இருக்கச் சொல்கிறீர்கள்… அவன் எப்படி இருந்தான்… உங்களுக்குத் தெரியுமல்லவா… அவனுக்கு ஏன் இந்த நிலைமை… அப்படி அவன் என்ன தப்பு செய்தான்… என் தம்பியாகப் பிறந்ததா? அவனைப் போய்” என்று பெரும் வலியுடன் கூறியவன், பின் ஆத்திரத்தில் கண்கள் சிவக்க, சினம் கொப்பளிக்க,

“இப்படிப் படுக்கை வைத்துவிட்டார்களே… சத்தியமாக இதை நான் சும்மா விடமாட்டேன் அங்கிள்… இதற்கு அந்தக் கருந்தேவன் பதில் சொல்லியே ஆகவேண்டும்” என்று கடித்த பற்களுக்குள்ளாக வார்த்தைகளைத் துப்பினான்.

 

“ஐ அன்டர்ஸ்டான்ட் யுவர் பெய்ன்… பட்… உணர்ச்சிவசப்படும் நேரமில்லை இது… அடுத்து என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கும் நேரம்…” என்றவர், சற்று நிதானித்து,

“உன் தம்பியால் அதிகக் காலங்கள் வாழ முடியாது வாமன்… ஈவின் கோமாவில் இருந்தாலும் கூட…” என்றதும் அதிர்ச்சியுடன் பார்த்தான் ஏகவாமன்.

“என்ன சொல்கிறீர்கள்… ஏன்… அவன் மூன்று வருடங்களாக…” என்று தடுமாற,

“சொல்கிறேன்… இந்த மூன்று வருடங்களாக அவன் குடித்த மாத்திரைகளின் பக்கவிளைவாக, இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்து விட்டன. இப்போதைக்கு ஹீமோ டயலிசிங்தான் செய்கிறோம்… தவிர…” என்றவர் சற்றுத் தயங்கிவிட்டு,

“அவனுடைய சுவாசப்பையில் ஒரு பக்கமாகத் தடித்திருந்தது… பரிசோதனைக்கு அதில் ஒரு சின்னத் துண்டெடுத்து அனுப்பிப் பார்த்தோம்… இன்றுதான் பதில் வந்திருக்கிறது… அது அத்தனை நல்ல பதிலில்லை ஏகவாமன்…” என்றதும் அடிபட்ட பாவனையுடன் வைத்தியரைப் பார்த்தவனுக்கு வார்த்தைகள் வெளியே வரமுடியாது தடுமாறின.

“அ…. அப்படியென்றால்…”

“சுவாசப் புற்றுநோய்… இட்ஸ் அக்ரசிவ்… அவனுடைய உடல் நிலைக்கு மருத்துவம் நாட் பாசிபிள்…” என்றதும் ஏனோ உடலிலிருந்து இரத்தம் வடிந்த உணர்வில் சிலையானான் ஏகவாமன். அவனால் இதைத் தாங்க முடியும் பொலத் தோன்றவில்லை.

மூன்று வருடங்கள்… மூன்று வருடங்களாக அவனைத் தேடி அலைந்து, இனி கிடைக்கவே மாட்டானோ என்று சோர்ந்த நேரத்தில், எங்கோ ஒரு மருத்துவமனையில் அநாதையாகக் கிடந்தவனைக் கண்டு அவன் துடித்த துடிப்பு. அவன் பிறந்தபோது, தந்தை சேதுபதிசேகரும், தாய் கமலாதேவியும் பட்ட ஆனந்தம்… ஐந்து வயது மூத்தவனான அவனுக்கு இன்றும் நினைவிருக்கிறதே.

பிறந்த குழந்தையை முதன் முதலாக அவன் கரங்களில் ஒப்படைத்தபோது அவன் எப்படித் துள்ளிக் குதித்தான்… அன்று முதல் ஜெயவாமன் அவனுக்குத் தம்பியாக இல்லாது, ஒரு மகனாக மாறிப்போனானே… கடவுளே… எப்போதும் அண்ணா அண்ணா என்று அவனைச் சுற்றிவரும் தம்பிக்கா இந்த நிலைமை… எங்கே தவறாகிப் போனது… எங்கே தப்பு நடந்தது… தாங்க முடியாத வேதனையுடன் அருகேயிருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்தவனை எதுவும் செய்ய முடியாதவராகப் பெரும் வேதனையுடன் பார்த்தார் பரராஜசிங்கம்.

அவன் குழந்தையாக இருந்தபோதே பார்த்து வருபவராயிற்றே… எதற்கும் கலங்காதவன், தம்பிக்காகக் கலங்கும்போது அவருக்குப் பெரும் வேதனையாக இருந்தது.

ஏகவாமனை நெருங்கியவர், அவனுடைய இரு தோள்களிலும் தன் கரங்களைப் பதித்து,

“எத்தனை வலியைக் கொடுக்கும் என்று எனக்குத் தெரியும் வாமன்… ஆனால் அடுத்து நடப்பதைப் பற்றியும் நாம் யோசிக்கவேண்டுமல்லவா…” என்று தட்டிக் கொடுக்க அப்போதுதான் தன் விழிகளிலிருந்து கண்ணீர் வழிவதை உணர்ந்தான் ஏகவாமன். அவசரமாகத் துடைத்துவிட்டு,

“எத்தனை நாட்கள் அங்கிள்…?” என்றான் கலக்கத்துடன்.

“தெரியவில்லை… ஒரு கிழமை… ஒரு மாதம்… மூன்று மாதம்… இல்லை ஒரு வருஷம்… ஆனால் வாழும் ஒவ்வொரு நாளும் அவனுக்கு மரணவேதனையைத்தான் கொடுக்கும்…” என்று கூற, ஏகவாமனுக்கு ஓ என்று வந்தது.

அவனுடைய இரத்த பந்தம் அனைவரையும் இழந்துவிட்டான்… இப்போது தம்பியையும் இழக்கப் போகிறானா… அது அவனால் முடியுமா? கடவுளே… காலம் முழுவதும் யாருமில்லாதவனாகத் தனி மரமாகத்தான் பயணிக்கப் போகிறானா? தவிப்புடனும் இயலாமையில் விளைந்த துடிப்புடனும் பரராஜசிங்கத்தை ஏறிட்டவன்,

“அங்கிள்… எனக்கு என் தம்பி வேண்டும் அங்கிள்… அவனாவது எனக்கு மிச்சமாய் வேண்டும்… ப்ளீஸ்… சேவ் ஹிம்… ஐ பெக் யு… சேவ் ஹிம்…” என்று யாசகம் போலக் கேட்டவனிடம், அதற்கு மேல் சமப்படுத்த முடியாதவராக அவனை நெருங்கி இழுத்துத் தன்னோடு அணைத்துக்கொண்டவராக,

“விதியை நம்மால் எப்போதும் வெல்ல முடியாது கண்ணா… நடக்க இருப்பதைத் தைரியமாகத் தாங்கிக் கொள்ளத் தான் வேண்டும்… நீ இப்படிக் கலங்குவதைப் பார்த்தால் தாங்கமுடியவில்லை ராஜா… கடவுளே… உனக்கு நான் எப்படித் தைரியம் சொல்லப்போகிறேன்… நல்லவேளை உன்னுடைய இந்த நிலையைக் காணச் சேது உயிரோடு இல்லை. இருந்திருந்தால் துடித்திருப்பான்…” என்று இறுக அணைத்துவிட்டுக் கூரிய பரராஜசிங்கத்தின் விழிகளும் கலங்கித்தான் இருந்தன.

மெதுவாகப் பரராஜசிங்கத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்த ஏகவாமன், தன் கசங்கிய முகத்தை அவருக்குக் காட்டப் பிடிக்காதவனாக எழுந்து,

“நான் ஜெயனைப் பார்க்கப் போகிறேன் அங்கிள்…” என்றுவிட்டு அவருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் தளர்ந்த நடையுடன் தன் தம்பியின் அறை நோக்கிச் சென்றான்.

உள்ளே நுழைந்ததும் எந்த மாற்றமும் இல்லாமல் கிடந்தவனைப் பார்க்கும்போது ஈரக்குலையை யாரோ உருவி எடுப்பது போலத் தோன்றியது அவனுக்கு. தம்பியின் கரத்தைப் பற்றியவாறு அருகேயிருந்த இருக்கையில் அமர்ந்து அவனையே வெறித்துப் பார்க்கத் தொடங்கினான்.

அவனையும் மீறி மனம் பழைய நினைவில் லயித்துப் போக, தன் தம்பியின் கரத்தை மென்மையாக முத்தமிட்டவாறு நிமிர்ந்து பார்க்க, இப்போது ஜெயவாமனின் விழிகள் திறந்திருந்தன. அதைக் கண்டதும், மூன்று வருடங்களுக்குப் பிறகு தன் தம்பியைக் காண்கிறோம் என்று மகிழ்வதா, இல்லை இன்னும் சொற்ப நாட்களுக்குள் அந்த வரம் கிடைக்காது போகும் என்று கலங்குவதா என்று தெரியாமல் துடித்தவன், அவசரமாகத் தன் வலியைத் தனக்குள் புதைத்தவாறு, முகம் மலரக் கண்களில் கண்ணீர் பொங்க, அவனுடைய கரத்தை இறுகப் பற்றியவாறு,

“ஹே… மை பாய்…” என்றான் கனிவுடன்.

அதுவரை தான் காண்பது கனவு என்று நினைத்திருந்தான் போலும். அது கனவல்ல நிஜம் என்பதை உணர்ந்ததும், படுத்திருந்தவனின் காய்ந்த முகம் சடார் என்று மலர்ந்தது.

“அ… அண்… அண்ணா… நிஜமாக நீதானா” என்றான் அத்தனை அன்பையும் மொத்தமாய்க் குரலில் வழியவிட்டவாறு. அதைக் கேட்டதும் பெரிதும் உடைந்துபோனான் ஏகவாமன். ஆனாலும் அதை வெளிக்காட்டாது, மெல்லியதாகச் சிரித்து,

“டேய்… ஜெயன்… உனக்கு ஒன்றுமில்லை… பரா அங்கிளே சொல்லிவிட்டார் தெரியுமா… சீக்கிரம் நாம் வீட்டிற்குப் போகப்போகிறோம்… நாம் எல்லோரும் சந்தோஷமாக…” என்று அவன் முடிக்கவில்லை, தன் தமையனை ஏக்கத்துடன் பார்த்தான் ஜெயவாமன்,

“நா… நான்… டாக்…டருக்குப்… படித்…தேன்… என்…பதை மறந்துவிட்…டாயா…” என்று அந்த வேதனையிலும் சிரிக்க, துடித்துப்போனான் ஏகவாமன்.

“டேய்… உனக்கு ஒன்றுமில்லைடா… சத்தியமாக ஒன்றுமில்லை…” என்று இவன் பதற,

“அண்ணா… லி…சின்… ஐ டோன்ட்… ஹாவ்… இனஃப்… டைம்… அது… எனக்…குத் தெரியும்…” என்றவன், ஆழ மூச்செடுத்து விட்டவாறு, தன் விழிகளால் நாலா பக்கமும் எதையோ தேடினான். தேடியது கிடைக்கவில்லையோ? ஒரு வித ஏமாற்றத்துடன் தன் அண்ணனைப் பார்த்து,

“எங்கே… எங்கே அவள்…” என்றான் ஒரு வித எதிர்பார்ப்புடன்.

“யாரைக் கேட்கிறாய் ஜெயன்…” என்று அவனுடைய கரத்தை அழுந்தப் பற்றியவாறு கேட்க,

“மை வைஃப்…” என்றான் ஜெயவாமன் அந்த நிலையிலும் கண்கள் மின்ன.

அதைக் கேட்டதும், ஏனோ இவனுடைய நெஞ்சத்தில் ஒரு வித அதிர்வு. கூடவே பிடிக்காத செய்தியைக் கேட்கப்போகிறோம் என்று உள் மனது சொல்ல,

“வைஃப்பா… யா… யாரது…” என்று கேட்டான் தன் உயிரைக் கையில் பிடித்தவாறு.

“உன… உனக்குத் தெரியாது அல்..லவா… நான்… திருமணம் முடித்துவிட்டேன்… அண்ணா… அவளுடைய பெயர்…” என்றவன் திடீர் என்று சுவாசிக்கத் திணறினான். தடுமாறினான். பதறியவாறு எழுந்த ஏகவாமன்,

“ஜெயன்…” என்று கத்தியவாறு அங்கிருந்த பொத்தான் ஒன்றை அழுத்த, மறு கணம் ஒரு தாதி உள்ளே வந்தார். ஜெயவாமனின் நிலையை அறிந்து அவசரமாக வெளியே சென்று பின் ஒரு ஊசியோடு உள்ளே நுழைந்தார். அவன் கரத்தில் போட்டிருந்த ஐவியில் ஊசியை நுழைத்து மருந்தைச் செலுத்த, ஜெயவாமனின் மூச்சுத் திணறல் விநாடிக்குள் சற்று மட்டுப்பட்டது. ஆனாலும் விழிகள் உறங்கும் நிலைக்குச் செல்ல,

“சார்… அவரை டிஸ்டர்ப் பண்ணாதீர்கள்… உறங்கட்டும்… பிறகு பேசிக்கொள்ளுங்கள்…” என்று விட்டுத் தாதி வெளியேற, படபடத்த நெஞ்சு மட்டுப்படாமலே எழுந்த ஏகவாமன் வெளியேறத் தொடங்க,

“அண்ணா…” என்றவாறு அவனுடைய கரத்தைப் பற்றினான் ஜெயவாமன். இவன் திரும்பிப் பார்க்க,

“அ… அவள்… பெயர்… அலரந்திரி…” என்று முடிக்க அந்த நிலையிலும் ஏகவாமனின் உலகமே உடைந்து நொறுங்கிப் போனது.

‘அப்படியானால் அவள் சொன்னது உன்மைதானா… அவள் அவனுடைய தம்பியின் மனைவிதானா… ஆனால் அவனுக்குக் கிடைத்த தகவல்… ஓ காட்… அவள் சொன்னதை நம்பாமல் என்ன காரியம் செய்துவிட்டேன்… கடவுளே… தம்பி மனைவியிடம் போய்…” அதற்கு மேல் எதையும் சிந்திக்க முடியாதவனாக, இதயத்தை முள்ளாய் அந்த நினைவுகள் குத்த பரிதவிப்புடன் தன் தம்பியைப் பார்த்தான் ஏகவாமன். அவனோ தன் தமையனின் முகத்தை ஒரு வித அவசரத்துடன் பார்த்து,

“அவள் எங்கே அண்ணா… எனக்கு முடியவில்லை என்றதும் விட்டுப் போய்விட்டாளா…?” என்று கேட்டான் ஒரு வித அவசரத்துடன். விழிகளோ உறங்குவது போல மூடுவதும், பின் எதையோ நினைத்துத் திறப்பதுமாக இருக்க, தன் தம்பியின் நிலையை உணர்ந்தவனாக,

“இ… இல்லை… இல்லைடா… மூன்று வருடங்களாக… அவள்தான்… உன்னைப் பார்த்துக்கொண்டாள்… இப்போது… அருகில்தான்…” என்று அவன் தவித்தவன், இல்லை துடித்தவன் பெரும் குற்ற உணர்ச்சிக்குள் ஆட்பட்டவனாகத் தொண்டையோடு உதடுகளும் வறண்டு போகப் பரிதாபமாகத் தன் தம்பியை ஏறிட்டான்.

“நா… நான் அவளைப் பார்க்கவேண்டும்… ந… நன்றி… சொல்லவேண்டும்… அழைத்து வருகிறாயா?” என்று மீண்டும் திணற, தன் கரத்திலிருந்த தம்பியின் கரத்தைப் பற்றி உதட்டில் பொருத்தி விடுவித்தவன்,

“இப்போது… இப்போதே போய் அழைத்து வருகிறேன்… நீ தூங்கு…” என்றுவிட்டு அவனுடைய தலையை வருட மறு கணம் ஜெயவாமனின் விழிகள் மூடிக்கொண்டன. அடுத்த கணம் அவனுடைய கரத்தைக் கீழே வைத்துவிட்டுப் புயல் போல வெளியே வந்தான்.

அவனுடைய கண்களைக் கண்ணீர் மறைத்து. இனி அலரந்திரி அவனுக்கு உரியவள் அல்ல. அவள் தம்பியின்… மனைவி… தம்… தம்பியின்… மனை…’ அதற்கு மேல் அவனால் எதையும் சிந்திக்க முடியவில்லை. வாகனத்திற்குள் ஏறி உட்கார்ந்தவனுக்கு உலகமே வெற்றிடமாகிப்போன உணர்வில் திக்கற்றவன் போல நின்றான். சற்று நேரம் எதுவும் செய்யத் தோன்றவில்லை. கூடவே வியர்த்துக் கொட்டியது. எத்தனை ஏமாற்றங்களைத்தான் தாங்குவான் ஒரே நாளில். எத்தனை அதிர்ச்சிகளைத்தான் தனி ஒருவனாய் சமாளிப்பான்.

அமைதியாகவே வெளியே வெறித்துக்கொண்டிருந்தவனுக்கு இன்னும் அலரந்திரி தன் தம்பியின் மனைவி என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன் விழிகளை இறுக அழுந்த மூடி வாகனத்தின் சீட்டில் தலையைச் சாய்த்தவனுக்கு முகம் கசங்கிப் போனது.

வர்ணிக்க முடியாத மாபெரும் ஏமாற்றத்தில் மனம் அலக்கழிந்தது. எதற்காக அலக்கழிய வேண்டும்… அவள் தம்பியின் மனைவியென்றால் அவனுக்கு என்ன? எதற்காக நெஞ்சம் விம்மி வெடிக்க வேண்டும்… எதற்காக, இதயமே பிளந்ததுபோல வலிக்க வேண்டும்? எதற்காகப் பெரும் ஏமாற்றச் சுழலில் சிக்கியது போல வெம்ப வேண்டும்… புத்தியெல்லாம் விறைத்துப் போய், எதையும் சிந்திக்கத் திராணியற்றதாக எதற்குச் செயலிழந்து போகவேண்டும்… அப்படியானால்… அவன் அலரந்திரியைக் காதலிக்கிறானா என்ன?’ நினைத்த மாத்திரத்திலேயே அவனுடைய உடலிலிருந்து இரத்தம் வடிந்து சென்றது. பயங்கரமான உண்மை நெஞ்சைச் சுடத் திடுக்கிட்டு விழித்தான் ஏகவாமன்.

எப்போது காதலில் விழுந்தான்? அவளைக் கண்ட அந்த ஒரு நொடிப் பொழுதிலா… அவனை ஏக்கமாகப் பார்த்தாளே… அந்தக் கணப் பொழுதிலா…? இல்லை பிடிவாதமாக உன்மையை அறியவேண்டும் என்று காத்திருந்தாளே… அந்தத் தருணத்திலா? பசி மயக்கத்தில் விழுந்தபோது கூட, அவனிடம் கையேந்தாமல் சென்றாளே… அந்தத் தருணத்திலா… எப்போது காதலில் விழுந்தான்… தெரியவில்லை… அவளுக்காகத் துடித்ததும், எவராலும் அவளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சி அத்தனை தூரம் அவளைத் தேடிப் போனதும்… இதற்கெல்லாம் என்ன அர்த்தம் இருக்க முடியும்…? உள்ளம் தௌளத் தெளிவாகப் புரிந்துபோக, வாழ்வில் இரண்டாம் முறையாக விதியிடம் தோற்றுப்போய் நின்றான் அந்த ஆண்மகன்.

மீண்டும் அவளைப் பார்க்கும்போது மனம் தறிகெட்டுத் தவிக்குமே… அதை எப்படி அடக்கி ஆழ்வேன்? என்று அவன் கலங்கியவனாய், உடலுடன் உள்ளமும் ஏமாற்றத்தில் வெந்து போக, அது கொடுத்த ஆத்திரத்தில், அத்தனை கோபத்தையும் மொத்தமாய்த் திரட்டிக் காரை உயிர்ப்பித்து, அக்சிலரேட்டரை அழுத்த, அது 180 கிமீ இற்கும் அதிகமான வேகத்துடன் பறக்கத் தொடங்கியது.

What’s your Reaction?
+1
19
+1
0
+1
4
+1
0
+1
5
+1
4

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!