Mon. Dec 8th, 2025

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-11/12

(11)

 

“ஆரு… தொடங்கிவிட்டாயா… எதுக்கடி அவனை வம்புக்கு இழக்கிறாய்?” என்று கோபப் பட,

“நானா உன்னுடைய தம்பியை வம்புக்கு இழுத்தேன்… அவர்தான் என்னை இழுத்தார்… என்னைக் குண்டு பூசணி என்றார்மா…” என்று கோபத்துடன் கூற.

“ஏய்… பூச ணிக்கா… யாரு சொன்னா குண்டு அழகில்லை என்று… அதுதான்டி பெண்களுக்கு அழகு… அதுதான் கண்ணுக்கு நிறைவாய் இருக்கும்… இதைச் சொன்னால் அடிக்க வருகிறாயே… இது நியாயமா… கேள் அக்கா நன்றாகக் கேள்… பெரியவன் என்கிற மரியாதையே இல்லாமல் தடியை வேறு தூக்குகிறாள்…” என்று தப்பி ஓடியவாறு சகோதரியை இன்னும் தூண்டிவிட,

“யார் பெரிய மனிதன்…? நீங்களா…? நீங்களா…? உங்களை…!” என்றவாறு இன்னும் தன் வேகத்தைக் கூட்ட, காந்திமதியோ, எங்கே தன் தம்பிக்கு அடி விழுந்திடுமோ என்று பயந்தவராக,

“இது என்னடி பழக்கம் மாமாவுக்குத் தடி தூக்குவது… மரியாதையாகக் கீழே போடு…” என்று கடிந்தவாறு தடியைப் பறிக்க வர, தன் தாயிடமிருந்து தப்பியவள்,

“அம்மா… இது தடியில்லை… பேஸ்போல் பாட்…” என்று விளக்கம் கொடுத்தவாறு அவனை நோக்கிப் பலமாக வீசினாள். அவனோ லாவகமாகப் பின்னால் சரிந்து நிமிர்ந்து,

“ஹா ஹா ஹா… கட்டச்சி…” என்றான் ஓடுவதில் கவனமாக.

“யார் கட்டச்சி… நானா… அப்போ உங்கள் பொண்டாட்டி என்னவாம்? அவர்களை விட நான் ஓரங்குலம் உயரம்…” என்றவாறு மேலும் பேட்டைத் தூக்கி அவனை நோக்கி வீசினாள். அப்போதுதான் மிளிர்மிருதையும் அவர்களின் களோபரத்தில் கவரப்பட்டு விரைந்து வெளியே வந்து மேல்மாடியிலிருந்து எட்டிப் பார்த்தாள். அவள் வந்தபின் அதிசயிக்கும் விதமாக எப்போதாவது நடக்கும் சம்பவம் அது. பெரும் சுவாரசியத்துடன், அவர்களைக் கண்டு நகைத்தவாறே கீழே இறங்கத் தொடங்கினாள்.

அதுவும் கணவனுக்கு அடிவிழுந்துவிடுமோ என்கிற பதற்றம் வேறு அவளைத் தொற்றிக் கொண்டது. அது அவளுடைய வலியை மறக்கச் செய்ய, மின்னல் விரைவுடன் கீழே இறங்கியிருந்தாள்.

ஆத்வீகனும் சாத்வீகனும் தங்களுக்கே ‘டஃப்’ கொடுக்கும் தந்தையையும், ஆராதனாவையும் வாய் பிளக்கப் பார்த்துக்கொண்டிருந்தனர். காந்திமதியோ ஆராதனாவை திட்டிக்கொண்டிருந்தார்.

மிளிர்மிருதைக்கு ஒன்றுமே புரியவில்லை. எதுவும் புரியாமல் அபயவிதுலனை நிமிர்ந்து பார்த்தால், அவனோ பலமாக நகைத்தவாறு அவளிடமிருந்த உச்சி தப்பிக்கொண்டிருந்தான்.

“அவள் அழகிடி… உன்னைப் போலவா…” என்றான் அபயவிதுலன் சற்றும் நகைப்பு மாறாது. அதைக் கேட்டதும்,

“இருவருக்கும் ஒரே அப்பன்தானே மாமா… அது எப்படி அவர்கள் அழகாக இருக்கிறார்கள் நான் அழகாக இல்லை…” என்றதும் அபயவிதுலன் தடை போட்டது போல அப்படியே நின்றான். அவனையும் மீறி முகம் கறுத்துக் கடினமானது. உடல் இறுக நிமிர்ந்து பார்த்தவனின் விழிகள் அவசரமாகக் காந்திமதியை ஏறிட்டது.

அவரும் முகம் கசங்க நின்றிருந்தார். அதைக் கண்டதும் இவனுடைய ஆத்திரமும் சீற்றமும் அதிகரிக்க, சற்று நேரம் தன் விழிகளை இறுக மூடியவாறு அப்படியே நின்றான். எத்தனை காலம் சென்றாலும், அந்த ஆத்திரமும் அகோரமும் இன்றுவரை இம்மியும் குறையவில்லை. இப்போது கூட வாய்ப்பிருந்தால் அந்த மனிதரின் கழுத்தை நெரித்துக் கொல்லும் அளவுக்கு வெறி பயங்கரமாக எழுந்தது.

ஆராதனாவிற்கு அப்போதுதான் தான் என்ன சொன்னோம் என்பதே புரிந்தது.

அதற்கு மேல் யோசிக்க முடியாதவளாகப் பேட்டைக் கீழே போட்டவள், பதறியவாறு மாமனை நெருங்கிய, அவன் மார்பில் விழுந்தவள், அவன் இடைய இறுகக் கட்டி,

“ஓ… மாமா… ஐ ஆம் சோ சாரி…. நான்.. நான்… வேண்டும் என்று… கூறவில்லை…” என்று கலங்கித் தவிக்க, கடைசியில் இவன்தான் அவளைச் சமாதானப் படுத்தவேண்டியதாயிற்று.

சற்று நேரம் அப்படியே நின்றவன், அவளை அணைத்தவாறு அவள் உச்சியில் தன் உதடுகளைப் பதித்து, ஓரளவுக்குத் தன்னைச் சமாதானப் படுத்தியவனாக,

“எப்போதும்… எந்தச் சந்தர்ப்பத்திலும்… அந்தாளைப் பற்றி என் முன்னால் பேசாதே ஆராதனா… புரிந்ததா?” என்று கடுமையாகக் கூற, ஆம் என்பது போல வேகமாகத் தன் தலையை ஆட்டியவளின் தோளைத் தட்டிக்கொடுத்து விலகியவன், நிமிர்ந்து பார்க்க, மிளிர்மிருதையும் அதே வலியுடன் அவர்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அதைக் கண்டதும் தன், பின்புறத் தலையை அழுத்தமாக வருடிக் கொடுத்தவன், வேகமாக அவ்விடத்தை விட்டு விலகித் தோட்டத்திற்குச் செல்ல, அதன் பின் நீண்ட நேரமாக வீட்டிற்குள் மயான அமைதி எழுந்தது. எத்தனை காலம் சென்றாலும் ஆறாதோ இந்த வடு?

முதலில் சுதாரித்தது காந்திமதிதான்.

கலங்கிய கண்களை வேகமாகத் துடைத்தவாறு குழந்தைகளை நெருங்கியவர், அவர்களைச் சாப்பிட அழைத்துச் செல்ல, ஆராதனாதான் குற்ற உணர்ச்சியில் என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.

அவள் மாமனை அடிக்கவில்லை… ஆனால் அந்த மனிதரை நினைவு படுத்தி அவள் உயிருக்கும் மேலான மாமனைக் கலங்க வைத்துவிட்டாளே. பழைய கசப்புகளை நினைக்கச் செய்து விட்டாளே. தவிப்புடன் கண்கலங்கியவாறு விசும்ப, அவள் விசும்பலில், தன்நினைவுக்கு வந்த மிளிர்மிருதைக்கு ஆராதனாவின் வேதனை புரிந்துபோயிற்று. தன்னைத் தேற்றிக்கொண்டவள், விரைவாக அவளை நெருங்கி ஆராதனாவின் தோளில் கையை வைத்தாள்.

திரும்பிய ஆராதனா, தன் சகோதரியைக் கண்டதும், மேலும் முகம் கசங்க,

“சாரிக்கா… அந்தாளை வேண்டும் என்று நினைவு படுத்தவில்லை…” என்று கலங்கி நின்றவளின் கன்னத்தில் தன் வலது கரத்தைப் பதித்தவள், இடது கரத்தை அவளுடைய தோளில் வைத்து அழுத்திக் கொடுத்து,

“இட்ஸ் ஓக்கே ஆரு… லீவ் இட்… வாழ்க்கையில் நடந்த கசப்புகளை அத்தனை சுலபத்தில் மறந்துவிட முடியுமா என்ன?” என்று மென்மையாகக் கேட்க, தலையை மேலும் கீழும் ஆட்டிய ஆராதனா, பின் நிமிர்ந்து பார்த்து,

“ஆனால் மாமா… மறந்திருந்த கசப்பை நினைவு படுத்திவிட்டேனே…” என்றாள் மீண்டும் பொங்கிய கண்ணீரை அழுந்த துடைத்துவிட்டவாறு.

“உன் மாமாவைப் பற்றி உனக்குத் தெரியாதா… இதற்குப் போய் வருந்துகிறாய்… கல்யாணப் பெண், இப்படி அழுது கரைந்தால் நன்றாகவா இருக்கும்… இது என்ன அழுகுணி பெண்டாட்டி என்று சித்தார்த் ‘எஸ்’ ஆகிவிடப் போகிறார் … பார்த்து…” என்று கிண்டலாகக் கூற, மீண்டும் வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறு,

“ஓடுவார்… ஓடுவார்… ஏன் ஓட மாட்டார்… ஓடுற காலை அடித்து முறித்து விட மாட்டேன்…” என்று சிலிர்த்துக் கொண்டவள், மீண்டும் மனம் கசங்க தன் சகோதரியை ஏறிட்டவள்,

“மாமா பாவம்கா…” என்றாள் பெரும் வலியுடன்.

“ஏய்… அதை நான் பார்த்துக்கொள்கிறேன்… போ… போய்ச் சாப்பிடு… நான் உன் மாமாவை அழைத்து வருகிறேன்…” என்று புன்னகைத்து விட்டு அபயவிதுலனை நோக்கிச் சென்றாள்.

அவனோ இடையில் தன் கரத்தைப் பதித்து எங்கோ தொலைவை வெறித்துக் கொண்டிருக்க இவளுக்கும் உள்ளம் கலங்கிப் போனது.

மெதுவாக அவனை நெருங்கியவள், அவன் கலங்குவது பொறுக்காது பின்புறமாக அவன் கரங்களுக்குள்ளாகத் தன் கரங்களை எடுத்துச் சென்று மார்பில் அழுத்த பதித்து, உள்ளங்கைகளால் அவனுடைய மார்பை வருடிக் கொடுத்தவாறு வடுவாகிப்போன அவன் முதுகில் தன் கன்னத்தை அழுத்தித் தேய்த்து,

“கண்ணா… இட்ஸ் ஓக்கேபா… வாய் தவறிச் சொல்லிவிட்டாள்… அதற்குப் போய்க் கலங்கலாமா… ப்ளீஸ்பா… மறந்துவிடுங்களேன்…?” என்றாள் தன் உதடுகளை உணர்ச்சியற்றுப்போன அந்த முதுகில் பொருத்தியவாறு.

அதைக் கேட்டதும், இவன் உடல் விறைத்தது. தன் கரங்களால் மார்பில் பதிந்திருந்த அவள் தளிர் கரங்களை அழுத்தி பற்றி, அவள் விரல்களுடன் தன் விரல்களைப் பிணைத்து அவளுடைய புறங்கையில் தன் பெரு விரல்களால் வருடியவாறு,

“உன்னால் முடிந்ததா பேபி…” என்றான் இறுக்கத்துடன்.

“நான் அந்தாளை நினைத்தால்தானே மறப்பதற்கு…!” என்று மேலும் அவனைத் தன்னோடு இறுக்கியவாறு கூற, முதுகில் உணர்ச்சி இல்லாது இருந்தாலும் கூட, அவள் மென்மையில் சற்றுக் கரைந்தவனாக, அவள் கரத்தைப் பற்றி விலக்கி அக்கரங்களை விடாமலே, அவளை நோக்கித் திரும்பியவன், அக் கரங்களைத் தன் இடுப்பைச் சுற்றி எடுத்துச் சென்று அணைக்க வைத்தவன், அவளை அணைத்தவாறு அவள் முகத்தை உற்றுப் பார்த்தான். அவளுடைய விழிகளைத் தன் கூரிய விழிகளால் மாறி மாறிப் பார்த்தவன் பின் அவற்றுடன் தன் கண்களைக் கலக்க விட்டான்.

“நான் அதைப் பற்றிப் பேசவில்லை மிருதா… நான் உனக்குச் செய்த கொடுமையை உன்னால் மறக்க முடிந்ததா?” என்றான் அழுத்தமாக.

ஆம் என்று சொல்லத் தன் வாயை எடுத்தவள் உடனே மூடிக்கொண்டாள். அவனை ஏற்றுக்கொள்ள அவள் தயாராக இருந்தாலும் அவன் செய்ததை முற்று முழுதாக மறந்துவிட்டாளா என்ன? இல்லையே… இப்போது எண்ணினாலும், அன்றைய நாள் கசப்பாகத்தானே உணர முடிகிறது… அதை எண்ணும்போதே உள்ளமே வலியில் உருகிப் போனது.

எதுவும் கூற முடியாது அவன் மார்பில் தன் தலையைப் பதித்தவள்,

“நிச்சயமாக மறந்துவிடுவேன் விதுலா…!” என்று கலக்கத்துடன் கூற, அவள் முகத்தைப் பற்றித் தன் பெருவிரலால் அவள் கன்னத்தை வருடிக் கொடுத்தவாறு,

“அது உன்னால் முடியாது என்று எனக்குத் தெரியும் கண்ணம்மா… அது இயலவும் இயலாது என்பதும் எனக்குப் புரிகிறது… உனக்கு வெறும் ஆறுவருட வலி… எனக்கு இருபத்திரண்டு வருடங்களுக்கான வலி… அத்தனை சுலபத்தில் மறக்க முடியாது கண்ணம்மா… இப்போதும் அந்த… அவனுடைய நினைவு வந்தாலே… என்னால் தாங்க முடியவில்லையே… நான் என்ன செய்யட்டும்?” என்று கலங்கியவாறு கேட்டவனின் வலியைத் தாங்க முடியாது துடித்தவள், அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“ஷ்… ஷ்… இட்ஸ் ஓக்கே விதுலா…! இட்ஸ் ஓக்கே… ப்ளீஸ்… கொன்ட்ரோல் யுவர் செல்ஃப்…” என்று அவன் கன்னத்தை வேதனையுடன் வருடியவாறு அவள் கூற,

“ஐ ட்ரை மை பெஸ்ட்… ஆனால்… அந்தாளின் நினைப்பு வந்தாலே ஒன்றன்பின் ஒன்றாக எல்லாம் வந்து தொலைக்கிறதே… எவ்வளவு முயன்றும் அதிலிருந்து என்னால் வெளி வரமுடியவில்லை மிருதா… தொடர்ந்து உனக்குச் செய்தது… அதுதான்… என்னை அதிகம் குற்ற உணர்ச்சிக்குள் தள்ளுகிறது… ஏதோ… என்னையே எரித்துவிட வேண்டும் என்கிற வேகமா…” அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, தன்னையும் மறந்து வருடிக்கொண்டிருந்த அவன் கன்னத்தில் ஓங்கி ஒன்று விட்டாள் மிளிர்மிருதை.

“பைத்தியமா உங்களுக்கு… என்ன பேச்சுப் பேசுகிறீர்கள்… இதை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை…! உங்களை எரித்தால் அதன் பிறகு நாங்கள் என்ன செய்வோம்… யோசிக்க மாட்டீர்களா?” என்று கடுமையாகக் கேட்க, கலக்கம் சற்றும் மாறாது குனிந்து தன்னவளைப் பார்த்தான் அபயவிதுலன்.

“ஓ மை ஏஞ்சல்… உன்னை ஏன் வதைக்கச் செய்தேன்…” என்றவன் அவளை இறுக அணைத்துக்கொள்ளச் சற்று நேரம் அவன் அணைப்பில் கிடந்தாள் மளிர்ம்ருதைக்கு அவனை விட அவள் உள்ளம்தான் மேலும் வலித்தது.

சற்று நேரம் அப்படியே இருந்தவள்,

“விதுலா…! பாவம்பா நம்முடைய ஆரு… மிகவும் கலங்கிப்போனாள்… வந்து அவளைச் சமாதானப் படுத்துங்கள்… இன்னும் கொஞ்ச நாள்தான் நம்மோடு இருக்கப்போகிறாள்… அவளைக் கலங்கடிக்க வேண்டுமா…” என்று தலை நிமிர்த்தி அவன் முகம் பார்த்துக் கேட்க, அவள் கன்னத்தை வருடிக் கொடுத்தவன்,

“ஆமாம் மிருதா… அதை நினக்கும் போதே மனம் எல்லாம் வலிக்கிறது…” என்று கம்மிய குரலில் கூறியவன், அவளுடைய தோளைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டு அணைத்தவாறு வீடு நோக்கிச் சென்றான் அபயவிதுலன்.

(12)

 

தன் மனைவியை அணைத்தவாறு உள்ளே வந்தவன் கலங்கிய முகத்துடன் நின்ற சகோதரியைக் கண்டு, மிளிர்மிருதையை விடுவித்து விரைந்து அவரை நெருங்கியவன், அவருடைய இரு கரங்களையும் பற்றித் தன் உதட்டில் பொருத்தி எடுத்து,

“சாரிக்கா… கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்…” என்று மன்னிப்புக் கேட்க உடைந்து போனார் காந்திமதி.

“நீ எதுக்குப்பா சாரி சொல்கிறாய்… உன் மனசு எனக்குப் புரியாதா… ம்… சரி… போ… ஆரு அறைக்குள் இருக்கிறாள்… நீ போய் அழைத்தால்தான் வெளியே வருவாள்.. போய்ச் சாப்பிட அழைத்து வா…” என்று அனுப்பிவிட்டு மிளிரைப் பார்த்து,

“குழந்தைகளுக்கு உணவு ஊட்டிவிட்டேன் கண்ணம்மா… இனி நீங்கள்தான் சாப்பிடவேண்டும்…” என்று கூறிவிட்டுத் தன் அறைக்குள் நுழையத் திரும்ப,

“அம்மா… நீங்கள் சாப்பிட்டுவிட்டீர்களா?” என்றாள் கனத்த மனதுடன். சற்று நேரம் அமைதி காத்த காந்திமதி,

“பசிக்கவில்லை கண்ணம்மா… பிறகு சாப்பிடுகிறேன்…” என்றுவிட்டுக் கலங்கிய கண்களை மறைத்தவாறு அறைக்குள் நுழைந்து கதவைச் சாற்றியவரைக் கண்டு இவள் உள்ளம்தான் கலங்கிப்போனது.

எத்தனை வருடங்கள் சென்றாலும் வலி ரணமாக அப்படியேதானே இருக்கிறது. தப்புச் செய்வது சுலபம். ஆனால் அதைத் தாங்குவதும் மறப்பதும், அந்த வலியோடு சேர்ந்து வாழ்வதும் எத்தனை கடினம். இயலாதகாரியமாகவல்லவா இருக்கிறது.

விழிகளை மூடி நின்றவளுக்குத் தந்தையின் நினைப்பு வந்தது. எப்போதும் அவளைக் கண்டால் நகைக்கும் அந்தக் கருனை முகமும், அவளுக்காய் பார்த்துப் பார்த்துச் செய்யும் அன்பு உள்ளமும், கடைசியில் அனைத்தும் பொய்யாகி மாயமான தருணமும்… நினைக்கும் போதே அவள் தந்தை மீது கடும் அருவெறுப்புத் தோன்றியது.

அவர் செய்த வேலையால் எத்தனை பேர் கலங்கித் தவிக்கின்றனர். துடிக்கின்றனர். சே… முற்பிறப்பில் என்ன பாவம் செய்து பிறந்தோமோ…’ என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே, அபயவிதுலன் ஆராதனாவை அழைத்துக் கொண்டு வந்திருந்தான்.

அவசரமாகத் தன் கலக்கத்தை மறைத்தவாறு அவர்களுடன் இணைய, மூவரும் ஏதோ பேருக்குக் கொறித்தனர். அதுவும் அபயவிதுலனும் ஆராதனாவும் இன்னும் இறுகியிருப்பது புரிய, அவர்களை எப்படிப் பழைய நிலைக்குக் கொண்டுவருவது என்று புரியாமல் குழம்பினாள் மிளிர்மிருதை.

அப்போதுதான் மின்னலாகச் சித்தார்த்தின் நினைவு வந்து போக, இவள் உள்ளம் குதூகலித்தது. தோசையைப் பிய்த்து வாய்க்குள் போட்டவாறு,

“விதுலா…!” என்றாள்.

வேண்டா வெறுப்பாகத் தோசையை வாய்க்குள் கொண்டு போனவன் நிமிர்ந்து பார்த்தான்.

“சித்தார்த்தோடு பேசினீர்களே… என்ன சொன்னார்… நிச்சயதார்த்தத்தை நாளை மறுநாள் வைத்துக்கொள்ளலாமா…” என்று கடைக்கண்ணால் இருவரையும் பார்த்தவாறு கேட்க, அவள் எதிர்பார்த்தது போல இறுக்கம் தளர்ந்து இருவரின் முகங்களும் மலர்ந்தன.

அவசரமாகத் தன் வலியை ஒதூக்கி வைத்தவன்,

“பேசினேன் மா… ஆனால்…” என்றவன் ஆறுதலாகத் தன் கரத்திலிருந்த தோசையை வாய்க்குள் வைத்து குதப்பியவாறு தன் மருமகளைக் கடைக்கண்ணால் பார்க்க, அவளோ உண்பதை நிறுத்தித் தன் மாமனை அடுத்து என்ன சொல்லப்போகிறான் என்று ஆவலுடன் பார்க்க, சே அவளுடைய போதாத காலம் அவனுடைய தட்டில் சட்னி குறைந்திருந்தது.

ஏகத்திற்கு இருவரின் ஆர்வத்தையும் எகிற வைத்தவன், எந்த அலட்டலும் இல்லாமல் சட்னியை எடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் தட்டில் போட்டுப் பின் நிமிர்ந்து ஆராதனாவைப் பார்த்து,

“அவன்…” என்றவன் இன்னும் ஒரு வாய் எடுத்துத் தன் வாய்க்குள் போட்டு, தன்னையே ஆவென்று வாய் பிளக்கப் பார்த்துக் கொண்டிருந்த மருமகளிடம்,

“என்னடா… ஊட்டிவிடவா?” என்றான் அதுதான் முக்கியம் என்பது போல. அவளோ அவசரமாகத் தன் வாயை மூடியவளாய்,

“அவர்… அவர் என்ன சொன்னார்…” என்றாள் தன்னை மறந்து.

“யாரு” என்றான் அபயவிதுலன். மிளிர்மிருதைக்கோ ஓங்கி அவன் நடு மண்டையில் ஒன்று கொட்டவேண்டும் என்கிற வெறி வந்தது. நேரம் காலம் தெரியாமல் இப்படியா விளையாடுவது.

“மாமா… சித்தார்த்திடம் பேசினீர்களே… அவர் என்ன சொன்னார்…” என்று தன் கோபத்தைச் சிரமப்பட்டு அடக்கியவாறு ஆராதனா படபடக்க,

“சொன்னான்மா… என்னவென்றால்…” திரும்பி மிளிரைப் பார்த்து,

“பேபி… அந்தத் தோசையை இந்தப் பக்கம் தள்ளு…” என்றவாறு நிமிர, அங்கே கொலைவெறியுடன் நின்றிருந்தாள் மிளிர்மிருதை.

“என்னம்மா… அப்படி முறைக்கிறாய்… தோசைதானே கேட்டேன்… முத்தமா கேட்டேன்…” என்று அப்பாவியாகக் கேட்டவனிடம்,

“விதுலா…!” என்று சீறியவள் சிரமப்பட்டுத் தன்னை அடக்க முயன்று தோற்க, அதைக்கண்டு தன்னை மறந்து வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கிவிட்டான் அபயவிதுலன்.

“யு ஆர் சோ ஸ்வீட் மிசஸ் அபயவிதுலன்… அதுவும் கோபமாக இப்படி முறைக்கும் போது… ஹா ஹா ஹா… சான்சே இல்லை…” அவன் முடிக்கவில்லை இரு பெண்களும் ஆளுக்கொரு கரண்டியுடன் அவனை நெருங்கியிருந்தனர்.

அதைக் கண்டு மேலும் நகைத்தவன்,

“கொலையும் செய்வாள் பத்தினி என்று கேள்விப்பட்டிருக்கிறேன்… இது என்னம்மா… சின்னப் புள்ள தனமால்ல இருக்கு…” என்றவனின் தலை முடியை இறுகப் பற்றியிருந்தாள் ஆராதனா.

“மாமா… மரியாதையாகச் சித்தார்த் என்ன சொன்னார் என்று சொல்லுங்கள்… இல்லை… அதற்குப் பிறகு உங்களுக்கு நடக்கும் சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை… அக்கா தடுத்தால் கூடக் கேட்கமாட்டேன்… ஒரே போடாகப் போட்டுவிடுவேன்… சொல்லுங்கள் மாமா…” என்று அவள் அவன் தலையை ஆட்டியவாறு கேட்க, அவள் ஆட்டிய திசைக்குத் தலையைக் கொண்டு சென்றவனாக,

“ஆஹா… ஆஹா… செமையா மசாஜ் செய்கிறாய் அம்முக்குட்டி… தூக்கம் வருகிறதே… நான் தூக்கப் போகிறேன்… நாளைக்கு இந்த மசாஜைத் தொடரலாமா…” என்றவாறு எழுந்தவனை இரு பெண்களும் கொன்றுவிடும் வெறியுடன் பார்த்தனர்.

அதைக் கண்டு மேலும் பொங்கி நகைத்தவன், அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாதவனாக ஆராதனாவை இழுத்துத் தன்னோடு அணைத்து அவள் தலை உச்சியில் தன் முத்தத்தைப் பதித்தவன்,

“உன்னுடைய சித்தார்த் நிச்சயதார்த்தம் வேண்டாமாம்…” என்றதும் அதுவரை மாமனின் மார்பில் சொகுசாகச் சாய்ந்திருந்தவள் உடல் விறைக்கத் தலையை நிமிர்த்தி,

“வேண்டாமாமா…?” என்றாள் அதிர்வுடன். இவனோ சோர்வுடன் தலையை ஆட்டி,

“அன்றே திருமணத்தை வைக்கலாமா என்று கேட்கிறான்…” என்று அதே சோகத்துடன் கூற, இவளுக்கு முதலில் புரியவில்லை. அவன் சொன்ன பாணியில் சித்தார்த் மறுத்துவிட்டான் போலும் என்று புரிய, கண்கள் குளம் கட்ட, வேண்டாம் என்றால் போகட்டும், அவருக்காக யாரும் இங்கே காத்திருக்கவி…ல்….லை…” என்றவளுக்கு அப்போதுதான் அவன் சொன்னதின் அர்த்தமே உறைத்தது.

“வட்…” என்று அதிர்ந்த நிமிர்ந்து பார்க்க மிளிர்மிருதையோ ஆராதனாவின் முகத்தில் தெரிந்த பாவனையைக் கண்டு தன்னை மறந்து கலகல என்று சிரிக்கத் தொடங்கிவிட்டாள்.

தன் கணவனின் விளையாட்டைக் கண்டு இரசித்துச் சிரித்தவள் அவன் தோளில் மெல்லியதாக ஒரு அடி போட்டுவிட்டு அவன் இடது தோளோடு சரிய, அவனும் தன்னவளை இடது கரம் கொண்டு வளைத்துத் தன்னோடு இறுக்கிக்கொண்டான் அபயவிதுலன்.

நகைத்த மாமனின் மார்பில் படபடவென்று அடித்தவளையும் தன் கை வளைவில் இறுக்கிக் கொண்ட அபயவிதுலனுக்குச் சிரிப்போடு கண்களும் பணித்தது.

அவனுடைய சொர்க்கமல்லவா அவர்கள். ஒருத்தி ஆத்மாவிற்கும் உணர்விற்கும் உயிரானவள் என்றால் மற்றையவள் உயிருக்கு நிகரானவள். இருவரின் தலையிலும் முத்தம் பதிக்கத் தன் கணவனை நிமிர்ந்து பார்த்து முறைத்த மிளிர்மிருதை,

“இதைக் கேட்டபோது சொல்லி இருக்கலாம் அல்லவா? இத்தனை இழுபாடு தேவையா?” என்று கேட்க,

“உடனே செய்தியை சொன்னா அந்தச் செய்திக்கே மதிப்பில்லை மிருது… இப்போ பார்… ஏங்க வைத்துக் கூறியபோது, அந்தச் செய்தியின் மதிப்பே உயர்ந்து விட்டது இல்லையா…? தவிர இந்தக் கிக் கிடைத்திருக்காது…” என்று கூறியவனிடம்,

“நல்ல கிக்தான்… உங்களை…” என்று ஆராதனா திட்டத் தொடங்க,

“சரி சரி… ஒன்பது மணியாகிவிட்டது… போய்ப் படுங்கள்… நாளைக்குப் பேசலாம்…” என்று அவளிடமிருந்து தப்பித்தவன், திரும்பி மிளிர்மிருதையைப் பார்த்து,

“கண்ணம்மா… நாளை மறுநாள் நிச்சயதார்த்தம் என்பதால் நிறைய வேலைகள் இருக்கின்றன. வீட்டோடுதான் என்றாலும் சேலை துணிமணிகள் வாங்க வேண்டும்… நாளைக்கு என்னுடைய வேலைகளைச் சீக்கிரம் முடித்துவிட்டு வருகிறேன்… கடைக்குப் போய் வரலாம்…” என்று கூறிவிட்டுக் கரத்தைக் கழுவப் போனான் அபயவிதுலன்.

இப்போது அந்த வீட்டிலிருந்த சிறிய இறுக்கமும் தளர்ந்து மகிழ்ச்சி இழையோட தொடங்கியது.

அபயவிதுலன் தூக்கம் வரவில்லையென்று தொலைக்காட்சிக்கு முன்னால் அமர, மிளிர்மிருதையோ தங்கள் பொது அறைக்குச் சென்ற தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளைக் கண்டு மென்னகை உதட்டில் மலர, அவர்களுக்குக் குளிராது தடித்த கம்பளியைப் போர்த்துவிட்டு ஒரு பக்கமாக ஒருக்களித்துப் படுக்க, அன்னையின் அருகாமையைப் புரிந்துகொண்ட சாத்விகன் தூக்கத்துடனேயே எழுந்து அவள் மீது விழ, விழுந்த மகனை இழுத்துத் தனக்கு முன்புறமாகப் போட்டுத் தன்னோடு இறுக்கியவாறு விழிகளை மூடினாள் மிளிர்மிருதை.

நினைவுகள் அபயவிதுலனையே சுற்ற, அவனுடைய குறும்புத்தனத்தை இரசித்தவாறே மெல்ல மெல்ல உறக்கத்தின் வசமானாள் அந்தக் காரிகை.

கிட்டத்தட்டப் பன்னிரண்டு மணியளவில் தூக்கம் மெதுவாக எட்டிப்பார்க்கத் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு எழுந்தவனின் கவனத்திற்குக் காந்திமதி கொடுத்த எண்ணெய் தட்டுப்பட்டது.

‘அட இதை மறந்து விட்டோமே’ என்று எண்ணியவனாக, கட்டுப்போடுவதற்கு வேண்டிய பொருட்களுடன் எண்ணெயையும் எடுத்துக்கொண்டு முன்னறையை விட்டு வெளியேற மின்விளக்குகள் தாமாக அணைந்துகொண்டன.

 

 

 

What’s your Reaction?
+1
21
+1
2
+1
1
+1
4
+1
1
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!