Wed. Oct 22nd, 2025

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-7/8

(7)

 

அது வரை அந்தக் கேலிச்சித்திரத்தில் தன்னை மறந்திருந்த மிளிர்மிருதை, திடீர் என்று அபயவிதுலனின்

“ஹாய் காய்ஸ்… ஹெள ஆர் யு…? நைஸ் டு சீ யு எகெய்ன்…” என்கிற அவன் அழுத்தம் நிறைந்த குரல் செவிகளைத் தீண்டிச் செல்ல, அதுவரை படித்துக்கொண்டிருந்தது மறந்து போக, குரல் வந்த திசைக்கு, மெதுவாக விழிகளை உயர்த்திப் பார்த்தாள்.

அவளுடைய ஆணழகன், இருக்கையில் சாய்ந்தமர்ந்தவாறு காலுக்கு மேல் காலைப் போட்டுக் கம்பீரமாக அமர்ந்திருந்தான். அவனுடைய வலது முழங்கை இருக்கைச் சட்டத்தில் பதிந்திருக்க, அதன் விரல்களோ பேனாவை வைத்துச் சுழற்றி எடுத்து வித்தை காட்டிக்கொண்டிருந்தன. இடது கரத்தில் சற்று முன் எடுத்த கூட்டத்திற்கான ஏதோ ஒரு நகல் வீற்றிருந்தது. அவனுடைய கூரிய விழிகளோ, அந்தத் தாளின் எழுத்துக்களைக் கூர்மையாக அளவிட்டுக்கொண்டிருக்கச் செவிகளோ, மறுபக்கமிருந்து பேசுபவர்களின் பேச்சை உள்வாங்கிக்கொண்டிருந்தன.

அவன் அணிந்திருந்த வெண்ணிற நீண்ட சட்டை அவன் கம்பீரத்தை மேலும் எடுத்துக் காட்ட, சுருண்ட அடர்ந்த குழலும், அடர்ந்த புருவமும் அவனுடைய ஆளுமையை மேலும் எடுத்துக் காட்ட, அதைக் கண்டவளின் உலகம் சட்டென்று வண்ணமயமாகிப்போனது. அப்போதே நாடிச்சென்று அவன் மடிசாய மனம் ஏங்கியது.

ஆனால் அதற்கு நேரம் இதுவல்லவவே… மீண்டும் அவளுடைய உதட்டில் ரகசியப் புன்னகை மலர, அவனுடைய பிறந்தநாள் விரைவாகவே வரவேண்டும் என்று மனம் ஏங்கியது.

அவனுடைய விரல்களின் வருடலை இப்போது உடல் ஏற்றுக்கொள்கிறது. காரணம் அவன் மீதான நம்பிக்கை. ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு கணமும் அந்த நம்பிக்கை பரந்து விரிந்து வானளாவி கிடக்கிறது. அவன் மீதிருந்த சிறிய சந்தேகமும் முற்று முழுதாக விடைபெற்றுச் சென்றதால், அவனுடைய விரல்களினது மட்டுமல்ல, அவனுடைய மெய்யது கொண்டு உயிர் தீண்டும் நாளுக்காக அவள் காதல் உள்ளம் ஏங்கத் தொடங்கியது.

தன்னை மறந்த தன்னவனின் நினைவிலும் அவன் கம்பீரத்திலும் திளைத்திருக்க, அதுவரை கணினியில் தன் கவனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தவன், எதேச்சையாகத் திரும்பிப் பார்த்தான்.

அவன் நாயகி, மடியில் புத்தகத்தை வைத்தவாறு, இவனைத்தான் இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தாள்.

திரைக்கு மறுபக்கம் நின்றிருந்தவர் கூறியதைக் கவனமாகச் செவிமடுத்தவாறு, தன் ஒற்றைப் புருவத்தை மேலேற்றி இறக்கித் தலையைச் சற்று மேலும் கீழும் ஆட்டி என்ன என்பது போலக் கேட்க, அவளோ அதைக் கூட உணராது இமைக்கக் கூடச் சக்தியற்றவளாக அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அதைக் கண்டதும், அபயவிதுலனின் உலகமும் சட்டென்று மாறிப்போனது. கணினியில் பேசிக்கொண்டிருந்தவர்கள் மாயமாக மறைந்து போக, மேசை கதிரை இத்யாதி அனைத்தும் தொலைந்து போக, அங்கே அவனும் அவளும் மட்டுமாய் வேறொரு உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கினர். உள்ளம் சிலிர்த்துப்போக, அவனுடைய ஆத்மா உடலை விட்டுப் பிரிந்து வேகமாக அவளருகே சென்று அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தது.

கரங்களால் அவள் தலை முடியைக் கோதிக் கொடுத்தவன், அப்படியே கீழிறக்கிக் கன்னத்தை வருடிக் கழுத்தில் பயணித்து மூங்கில் தோள்களில் சங்கமிக்க, விழிகளோ அவளுடைய இமையா கண்களுடன் சங்கமித்தன.

மெதுவாக அவளை நோக்கிக் குனிந்த அவன் ஆன்மா, அவள் நெற்றியில் தன் உதடுகளைக் குவித்து முத்திரையைப் பதித்தது. அப்படியே கீழிறங்கி நாசியின் கூர்மையில் குவிந்து எழுந்து பின் செவ்விய இதழ்களுக்கு முன்பாகச் சென்று நின்றது.

இயற்கையாய் சிவந்த சதைப் பற்றுக் கொண்ட இதழ்கள். சற்றுத் தீண்டினாலும் உடல் முழுவதும் பற்றிக் கொள்ளும். அவன் அனுமதியையும் மீறி அந்த ஆன்மாவின் உதடுகள் படுவேகமாக அந்தக் காரிகையில் கீழ் உதடுகளை இறுகக் கவ்விக்கொண்டன. பல் கொண்டு மெதுவாய்க் கடித்தன. அது போதவில்லையோ, அவ் உதடுகள் முழு ஆதிக்கத்தையும் கொண்டு கவ்விக்கொண்டன.

உலகம் இப்படியே நின்றுவிடாதோ… அவள் உதடுகளுக்குள் புகுந்து இந்த ஆன்மா குடித்தனம் நடத்திவிடாதோ… ஈருடல் ஓருடல் ஆகாதோ… இரு இதயங்களின் துடிப்பு ஓரிதயத்தின் துடிப்பாகாதோ… பெரும் ஆவேசம் கொண்ட அவன் உணர்வுகள் படு வேகமாக அவள் உடல் முழுவதையும் தன் ஆதிக்கத்திற்குள் கொண்டு வர முயன்றன. அவளுடன் பின்னிப் பிணைந்து கொண்டன. அவளுக்குள் புகுந்து அவனும் அவளாய் மாற விளைந்தன.

“சோ மிஸ்டர் அபயவிதுலன்… உங்கள் செயல்திட்டம் எங்களுக்குப் பிடித்திருக்கிறது… அதனால் உங்களுக்கே நமது ஒப்பந்தத்தைக் கொடுப்பதாக முடிவு செய்திருக்கிறோம்…” என்று கூற அவன்தான் அந்த உலகில் இல்லையே. அவன் பார்வைத் தன்னவளையே வெறித்துக்கொண்டிருக்க,

“மிஸ்டர் அபயவிதுலன்… ஹலோ… ஆர் யு தெயர்… மிஸ்டர் அபயவிதுலன்… இட்ஸ் லைக் ஸ்க்ரீன் ஃப்ரோசின்… ஹலோ…” என்று மறுபக்கம் சற்றுப் பலமாகச் சத்தம் போட திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான் அபயவிதுலன்.

அவனுக்கு அவர்கள் கூறிய எதுவும் மண்டைக்குள் ஏறவில்லை. என்ன பேசினார்கள், என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் எதுவும் நினைவில் இல்லை. இன்னும் அவள் மட்டும் மனம் முழுவதும் வியாபித்திருக்க, சற்று முன் அனுபவித்த காதல் ரசத்தை விட்டு வெளியேற முடியாதவனாத் திண்டாடிச் சற்றுக் குழம்பியவனுக்குப் பின்புதான் நடந்ததே நினைவுக்கு வந்தது.

கிட்டத்தட்ட பத்து நிமிடங்களாக அவன் இந்த உலகத்திலில்லை… இது என்ன மாயை… நம்ப முடியாத தன்மையுடன், ஒரு வித வெட்கம் ஆட்ககொள்ள, அதனால் எழுந்த மெல்லிய புன்னகையுடன் தன் நெற்றியை வருடிக் கொடுத்து முழுதாகப் பூலோகத்திற்கு வந்தவன் சற்று அசடு வழிந்தவாறு,

“ஐ ஆம் சாரி காய்ஸ்… நெட்வேர்க்கில் ஏதோ சிக்கல் போலும்… திரும்ப ஒரு முறை சொல்ல முடியுமா?” என்று தன் சங்கடத்தை மறைத்தவாறு கேட்டான்.

“நாமும் அதைத்தான் நினைத்தோம் மிஸ்டர் அபயவிதுலன். எங்கள் எல்லோருக்கும் உங்கள் செயல்திட்டம் பிடித்திருக்கிறது. அதனால் உங்களுக்கே அந்த ஒப்பந்தத்தைத் தரலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்… ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடும் போது, அதைக் கொண்டாடும் வகையில் விழா ஒன்று வைக்கலாம்… என்ன சொல்கிறீர்கள்…” என்று கேட்க,

“வை நாட்… அப்படியே செய்யலாம்…” என்று திரையை அணைத்துவிட்டுத் திரும்பித் தன் மனைவியைப் பார்த்தான்.

அவளோ இன்னும் அப்படியே தான் அவனை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க, ‘தூர நின்றும் கொல்கிறாய்… அருகே நின்றும் கொல்கிறாய்… உன்னை என்ன செய்யட்டும்?’ என்று முணுமுணுத்தவன், புருவம் சுருங்கத் தன் வலது கரத்தில் நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்த பேனாவை அவளை நோக்கி வீசினான். அது சரியாக அவள் மார்பில் பட்டு மடியில் விழுந்தது.

அதுவரை தன்னவனின் கற்பனையில் தன்னை இழந்திருந்தவள், சுயநினைவு பெற்றுத் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்து ‘என்ன?’ என்று தலையை ஆட்டிக் கேட்க, இவனோ குறும்புப் புன்னகையுடன்,

“நான் சொன்ன குறிப்புகளைக் கட்டுரையாக்கி தட்டச்சில் ஏற்றி நகல் எடுத்து வா…” என்று விட்டுக் கணினியில் எதையோ அடிக்கத் தொடங்கினான்.

“வாட்… நீங்கள் சொன்ன குறிப்பா… என்ன குறிப்பு…” என்று இவள் புரியாமல் விழிக்க,

“அடிப்பாவி… இவ்வளவு நேரம் கதாகாலச்சேபமா நடத்திக்கொண்டிருந்தேன். முக்கிய ஒப்பந்தம்மமா… இரண்டு மில்லியன் டாலருக்கான ஒப்பந்தம். அதை இத்தனை நேரமாக இவ்வளவு தெளிவாக விளக்கிக்கொண்டிருக்கிறேன்… ஆனால் நீ… எங்கே பராக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்…” என்று கடுமையாகக் கேட்க இவளுக்கோ அடியும் புரியவில்லை நுனியும் புரியவில்லை.

“என்னுடன் பேசிக்கொண்டிருந்தீர்களா… ஆனால் ஏதோ கூட்டம் என்று… கணினியில்…’ என்று குழம்ப, தன் தொண்டையைக் கனைத்தவன்,

“அவர்கள் கூடப் பேசி முடித்துவிட்டு, உன்னிடம் குறிப்பு எடுக்கச் சொல்லிச் சொன்னேன்… கோவில் மாடுபோலத் தலையை ஆட்டிவிட்டு இப்போது முழிக்கிறாயா?” என்று கோபத்துடன் கேட்க,

“அவன் எப்போது என் கூடப் பேசத் தொடங்கினான். அவன் பேசுவது கூடப் புரியாமலா அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன்… சே… இப்போது எப்படி இவனிடமிருந்து தப்புவது? ம்…” என்று குழம்பியவளுக்கு அப்போதுதான், நீ ஒரு வேலையும் செய்யவேண்டாம் இந்தப் புத்தகத்தை மட்டும் படி என்று அபயவிதுலன் கூறியது நினைவுக்கு வந்தது.

உடனே முகம் மலர,

“அது… வந்து… நீங்கள்தானே சொன்னீர்கள்… ஒரு வேலையும் செய்ய வேண்டாம் என்று… அதனால்… நீங்கள் சொன்ன குறிப்பை நான் எடுக்கவில்லை…” என்று அவள் கறாராகக் கூற,

“அப்போது சொன்னேன்… செய்ய வேண்டாம் என்று… இப்போத சொல்கிறேன் செய் என்று… சரி சரி… குறைந்தபட்சம் நான் சொன்னது நினைவிருக்கிறது அல்லவா அதை வைத்துக் குறிப்பை எழுதிக் கொடு… எப்படியோ அதை வைத்துச் சமாளிக்கிறேன்” என்று அவன் கூற, மலங்க மலங்க விழித்தாள் மிளிர்மிருதை.

அவள் எங்கே அவன் சொன்னதைக் கேட்டாள்… ஐயோ… இவனிடமிருந்து எப்படித் தப்புவது…? குழம்பியவள்.

“அது… வந்து… என்னால்… குறிப்பு எடுத்துத் தர முடியாது… ஏன் என்றால்… எனக்கு… கால் வலிக்கிறது…” என்றாள் உர் என்றவாறு. .

உடனே இருக்கையை விட்டு எழுந்தவன் எழுந்த நகைப்பை அடக்கியவனாக,

“என்ன விளையாடுகிறாயா… உனக்குக் காலில்தானே வலி… கையில் இல்லையே… ப்ளீஸ்மா… விளையாடாதே… முக்கியச் செயல்திட்டம்…” என்றவாறு அவளை நோக்கி வர, இவளோ பயத்தில் எதையோ தொண்டைக்குள் விழுங்கினாள்.

“அது… அது… வந்து… எனக்குத் தேநீர் வேண்டும்…. வார்க்கப் போகிறேன்… உங்களுக்கு வேண்டுமா?” என்றவாறு இதழ்களை இழுத்துப் பிடித்தவாறு கேட்க, இவனுக்குத்தான் சிரிப்புப் பொங்கிக்கொண்டு வந்தது. ஆனாலும்,

“ஏய் நான் என்ன கேட்கிறேன் நீ என்ன செய்கிறாய்? மரியாதையாக நான் சொன்னவற்றைக் குறிப்புகளாக்கி என்னிடம் தந்துவிட்டுப் போ…” என்றவாறு அவளை நெருங்க, இவளுடைய பாடுதான் படு திண்டாட்டமாகப் போனது.

பாவம் மினக்கட்டு அவளிடம் சொல்லியிருக்கிறான்… இவள்தான் அலட்சியமாக… தன் மீதே கோபம் கொண்டவளாக எழுந்தவளுக்குத் தன் மீது தப்பென்று சொல்லவும் மனம் வரவில்லை. அதனால்,

“நீங்கள்தானே சொன்னீர்கள்… ஒரு வேலையும் செய்யவேண்டாம் என்று… அதனால்… நான்… இன்று ஒன்றும் செய்யப்போவதில்லை…” என்று நெஞ்சை நிமிர்த்திச் சொன்னவளைக் கிண்டலுடன் பார்த்தவன்,

“மில்லியன் டாலர் ஒப்பந்தம்மா…” என்று கூற,

“ஆமாம்… இருக்கிற பணத்தையே என்ன செய்வதென்றே தெரியவில்லை… இது வேறு… போங்கள் விதுலா…! நான் காபி வார்க்கப் போகிறேன்… வேண்டுமா வேண்டாமா…” என்றவள் அப்போதுதான் அவன் முகத்தில் தெரிந்த கிண்டலையும், உதட்டோரம் துடித்த நகைப்பையும் கண்டாள். உடனேயே அவளுக்குப் புரிந்து போக,

“விதுலா…! இது பொய்… பொய்தானே…” என்று சீற, அதற்கு மேல் தன்னை அடக்க முடியாதவனாக வாய் விட்டு நகைக்கத் தொடங்கினான்.

அவனையும் மீறி கண்ணீர் வரும் வரைக்கும் நகைத்தவன், எப்படியோ தன்னைச் சமாளித்தவனாகத் தன் மனைவியின் எள்ளும் கொள்ளும் வெடித்த முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். மீண்டும் நகைப்புப் பீரிட்டு வர, அதை அடக்க முயன்றவாறு,

“சா… சாரிடி… ஹா ஹா ஹா… அது எப்படி… உடனேயே நம்பினாய்… ஹா ஹா ஹா… அதுவும் கலாய்ப்பது கூடத் தெரியாமல்… ஹா ஹா ஹா…” என்று நகைதவனை ஒரு கணம் கண்ணிமைக்காமல் பார்த்தாள் மிளிர்மிருதை.

அவனுடைய இந்தச் சிரிப்பு மிக மிக அபூர்வமானது… குறிஞ்சி மலர் போல எப்போதாவது தன்னிலை கெட்டு இப்படிச் சிரிக்கும் அழகைக் காண கோடிக் கண்கள் இருந்தாலும் போதாது. மனம் விட்டு, கவலை மறந்து உண்மையான அபயவிதுலனாக, எந்த விதப் போலித்தனமும் இல்லாத நிறைந்த குதூகலத்துடன் சிரிக்கும் அவன் அழகைப் பார்ப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

தன்னை மறந்து அவனை நோக்கி எழுந்தவளுக்கு முழங்காலில் சுலீர் என்று வலிக்க,

“ஷ்… ஆ…” என்றவாறு முன்பக்கம் குனிந்தவளிடம் கண்ணிமைக்கும் நொடியில் நெருங்கியிருந்தான் அபயவிதுலன். இப்போது அவனுடைய சிரிப்பு மாயமாக மறைந்துவிட்டிருந்தது. அதற்குப் பதில் கரிசனையும் பதட்டமும் குடிகொள்ள,

“இட்ஸ் ஓக்கே… இட்ஸ்… ஓக்கே…” என்றவாறு அவளுடைய பாவாடையை விலக்கிக் காயத்தைப் பார்த்தான். கட்டையும் மீறி இரத்தம் கசிந்திருந்தது.

தனக்கே வலித்ததுபோல, தன் பெருவிரலால் காயத்தின் மீது வருடிக் கொடுத்தவன், பின் பாவாடையைக் கீழிறக்கிவிட்டு, எழுந்தவன்

“நீ உட்கார்… நான் வார்த்துத் தருகிறேன்…” என்றவாறு தன் கழுத்தை இறுக்கியிருந்த டையை லேசாக்கினான்.

“இல்லை விதுலா…! நான் வார்த்துத் தருகிறேனே ப்ளீஸ்… ஒவ்வொரு முறை காலையிலும் நீங்கள்தான் வார்த்துக் கொடுக்கிறீர்கள்… குறைந்தபட்சம்… இப்போதாவது நான் செய்கிறேனே…” என்றவாறு அங்கிருந்த சிறிய கவுன்டர் டாப்பிற்குச் செல்ல இவனும் இரும்பிழுத்தக் காந்தமாக அவளைப் பின்தொடர்ந்து சென்றான்.

(8)

 

மேடையில் சாய்ந்தமர்ந்தவாறு மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டித் தன் மனைவி தேநீர் வார்க்கும் அழகையே தரிசித்துக் கொண்டிருந்தான் அபயவிதுலன்.

வேண்டிய பொருட்களை எடுப்பதற்காக அவள் எக்கியபோது சற்று மேலெழுந்த மேலாடையும் மெல்லிய பிறை வயிற்றைச் சற்று வெளிக்காட்ட, அதன் வெண்மையின் அழகில் சொடுக்கித்தான் போனான் அபயவிதுலன்.

கீறாகத் தெரிந்த வெண்ணிடையில் தன் கரம் கொண்டு ஓவியம் வரையத் துடித்த மனத்தை அடக்கியவனாக, சற்றுத் தன் விழிகளை மேல் கொண்டு செல்ல, அவளுடைய உடலின் அழகு அவனைப் போதை கொள்ளத்தான் செய்தது. விழிகளால் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னவளை வருடியவனுக்கு மனதிற்குள் என்னென்னவோ எல்லாம் தோன்றியது.

வேகமாகத் தன் பலம் பொருந்திய கரங்களை அவள் மேலாடைக்குள்ளாகச் செலுத்தி மெல்லிய இடையில் பதித்து அவ் இடையின் வெம்மையை நுகர்ந்து அதன் இனிமையில் திளைத்து, கழுத்து வளைவில் தன் உதடுகளைப் பொருத்திவிட்டு, பின் கூந்தலின் வாசனையை நுகர்ந்து தன்னை மறந்துகிடக்கப் பெரும் ஏக்கமாக எழுந்தது. ஆனால் அது இயலாதே. வெறும் கற்பனையில் மட்டுமே அவளைத் தொட முடியும். நுகர முடியும். அணைக்க முடியும். அதை எண்ணும்போதே பெரும் ஏக்க மூச்சு ஒன்று வெளிப்பட்டது.

காஃபி மேக்கரில் தேநீர் வார்த்துக்கொண்டிருந்தவளுக்கு, அவனுடைய கூரிய விழிகள் தன் உடல் முழுவதும் மேய்வதை உணர்ந்தபோது, மெல்லியதாக உடல் நடுங்கத் தொடங்கியது.

அது பயத்தால் அல்ல, அந்த ஆண்மகனின் விழிகளின் நெருக்கத்தாலும் கூடவே எப்போதாவது வெளிப்படும் அவனுடைய ஏக்க மூச்சும், இவள் நெஞ்சைக் குறுகுறுக்க வைத்தது.

அவன் தீண்டவில்லை, அவளை வருடவில்லை ஆனால் அவற்றை அவன் விழிகள் எவ்வித கிலேசமுமின்றிச் செய்து முடிக்க, அந்த உணர்வில் உடல் நடுங்கியது என்னவோ உண்மைதான். அப்பார்வையின் வீரியத்தில் உடலே உருகி வழிந்து செல்லும் ஒரு உணர்வு.

கால்களில் பலம் சற்று மந்தப்பட, தன்னை நிலைப்படுத்துவதற்காக மேடையில் தன் இரு கரங்களையும் பதித்தவளுக்குத் தன்னிலை மறந்துபோனது.

அதற்க்கு மேல் அவன் அவஸ்த்தையைப் பார்க்க முடியாதவளாய், விழிகளை மூட, இப்போது திரை மறைவில் அவனுடைய ஆலிங்கனம். அவன் விழிகளால் செய்துகொண்டிருந்தவை இப்போது இவளுக்குள் செயலால் நிறைவேறிக்கொண்டிருப்பது போலத் தோன்ற, உடல் தளர்ந்து போனாள் அக்கோதை. உடல் முழுவதும் சூடேறியது. உலகம் மறந்தது. அந்தக் கணமே தன் ஏக்கத்தை அவனிடம் சொல்லிவிட வேண்டும் என்கிற உந்துதலில் தன்னையும் மறந்து,

“விதுலா…!” என்றாள் கிசுகிசுப்பாய்.

“ம்…”

என்றவனின் பார்வை சற்றும் அவளை விட்டு விலகவில்லை. மாறாக மேலும் அவளுக்குள் சென்று பெரிதும் இம்சிக்கவே செய்தது.

“நான்… வந்து…” என்று அதற்கு மேல் சொல்ல முடியாது திணற

“நீ… வந்து…” என்றவனின் வாய்தான் அசைந்ததன்றி, மனம் வேறு எங்கோதான் கிடந்தது.

“அது வந்து… நான்… உங்கள்…” என்று திணறியவளுக்கு அதற்கு மேல் எப்படிக் கூறுவது என்று புரியவில்லை. பெரிதும் தவிக்க, அவனோ, அவள் நிலை புரிந்தவன் போல, எழுந்து அவளை நோக்கி வரத் தொடங்கினான்.

அவன் நெருங்க நெருங்க அவளுடைய படபடப்பு மேலும் அதிகரித்ததன்றி, சற்றும் குறையவில்லை. கூடவே நாக்குப் பிறழாமல் சண்டித்தனம் செய்ய, அவனோ அவள் பின்னால் நின்றவாறு அவள் இரு தோள்களிலும் தன் கரத்தைப் பதித்து அழுத்திக் கொடுத்தவனாக,

“ம்… நான் உங்கள்…” என்றவனின் நாசி அவளுடைய முடிக்குள் புகுந்து அதன் வாசனையை மெல்லியதாய் நுகர்ந்து நுரையீரலை நிரப்பத் தொடங்கியது.

அதுவரை எதோ ஒரு மோனத்திலிருந்தவள், அவனுடைய இந்த நெருக்கத்தையும், அவள் கூந்தலில் நுழைந்த நாசியின் குறுகுறுப்பிலும் என்ன செய்கிறோம் என்று புரியாமல் பதற்றத்துடன் அவனைத் தள்ளிவிட்டுத் திரும்பி நின்றாள். நின்றவளின் இதயம் வெடித்துவிடும் போலப் பலமாகத் துடித்தது.

மிளிர்மிருதை தள்ளிவிட்டதும்தான் அபயவிதுலனுக்குச் சுயநினைவே வந்தது. கூடவே அவளுடைய இந்தத் திடீர் விலகலில் அடிபட்டவன் போல உள்ளம் வாடிப்போனான் அபயவிதுலன்.

அவனுடைய சின்ன நெருக்கத்தையே தாங்கிக்கொள்ள முடியாதவள் எப்படி முழுதாக அவனை ஏற்றுக்கொள்வாள்? சிரமப்பட்டுத் தன் வலியை மறைக்க முயன்றவனுக்கு, முகத்தில் யாரோ ஓங்கிக் குத்தியது போன்ற உணர்வும் தோன்றியது. தன் இத்தகைய நெருக்கம் பிடிக்காமல்தானே தள்ளிவிட்டு முதுகு காட்டி நிற்கிறாள் என்று எண்ணியவனாய் இரண்டடி பின்னால் வைத்தவனின் முகம் இப்போது இறுகிப்போயிருந்தது.

“நான்.. வந்து… அது… நான்…” என்று தடுமாறியவனுக்கு அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

அதே நேரம், தன் சிவந்த முகத்தை மறைக்கவேண்டித் திரும்பி நின்றவளுக்குத் தன் மண்டையில் ஓங்கி ஒன்று போடவேண்டும் போலத் தோன்றியது. அவசரப்பட்டு வாயை விட இருந்தாளே… சே…’ என்று தன்னையே வைதவள், எங்கே தன் முகத்தை வைத்தே தன் நிலையை அறிந்து கொள்வானோ என்கிற ஒரு வித சங்கடம் தோன்றப் பல்லைக் கடித்துத் தன்னைச் சமப்படுத்தியவளாகத் தேநீரை இரு குவளைகளில் ஊற்றி, ஒன்றைத் திரும்பாமலே அவன் புறமாக நீட்டினாள்.

அவளுடைய அந்தப் பாராமுகம் அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு அவளையே வெறித்துப்பார்க்க, அவளோ இன்னும் அவன் குவளையை வாங்கவில்லையே என்கிற யோசனையுடன் மெதுவாகத் திரும்பினாள்.

திரும்பியவளின் முகத்தைக் கண்டவனுடைய இறுக்கம் மெல்ல மெல்லத் தளர அதற்கேற்ப உடலும் இளகத் தொடங்கியது.

அங்கே அச்சத்திற்குப் பதிலாக மலர்ச்சி தெரிந்தது. கோபத்திற்குப் பதிலாக நாணம் தெரிந்தது. அவளுடைய சிவந்த முகத்தையும், உதட்டில் தெரிந்த மிக மெல்லிய நகைப்பையும் கண்டவனுக்கு, அதுவரையிருந்த சங்கடம் தொலைந்து காணாமல் போனது.

தன் மனைவி தன்னை முழுதாக ஏற்றுக் கொள்ளும் காலம் அதிகத் தூரத்திலில்லை என்பதைப் புரிந்துகொண்டவனுக்கு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும் போலத் தோன்றியது.

அவளின் மனம் மெல்ல மெல்லத் தன்னை ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டது என்பது அவனுக்குத் தெரியும்தான். ஆனாலும் அவன் அவசரப்படவில்லை. அதற்குக் காரணம் அவளாக நெருங்கும் வரைக்கும் காத்திருப்பதாய் கொடுத்த வாக்கு. அந்த வாக்கை அவன் இதுவரை மீறியதில்லை. இனி ஒரு போதும் மீறப்போவதுமில்லை. அவளாக அவனிடம் வந்து, தன் உணர்வை வெளிச்சம் போட்டுக் காட்டினால் அன்றி அவனுடையதும், அவளுடையதுமான வாழ்க்கை இப்படித்தான் நகரும். அது அவனுக்குச் சிரமம்தான். இதோ இப்போது தவிப்பது போலப் பல மடங்கு தவிப்பாகத்தான் இருக்கும்… அவள் மாறியது புரிந்தும் நெருங்க முடியாத கொடுமையில் தன்னை அடக்குவது எண்ணிப்பார்க்க முடியாத வலியைக் கொடுக்கும்தான். ஆனாலும் சொன்ன வாக்கை எப்படி மீறுவான்.

அதுவும் அவனை முழுதாக நம்பவே அவளுக்கு ஒரு வருடம் எடுத்தது. அடுத்த ஒரு வருடமும், அவனை மெல்ல மெல்ல ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்தாள். அந்த நிலையில் அவளை அவசரப்படுத்தி, அவளை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தி விட்டால், அவனாலேயே அவனை மன்னிக்க முடியாதே. தானாகக் காய் கனிந்து கரங்களில் விழுந்தால்தானே சுவைக்கும்… அந்த நாளுக்காக ஏக்கத்துடன் காத்திருந்த அபயவிதுலனுக்குச் சில வேளைகளில் தன் கட்டுப்பாட்டை இறுக்கிப் பிடித்திருப்பது பெரும் சிரமமாகவே இருந்தது. தறிகெட்டு ஓடும் மனதை அடக்கி ஆழ்வது மிகக் கடினமான செயலே.

இதோ, தன் முன்னால் தேநீர் குவளையை நீட்டிக்கொண்டிருப்பவளின் கரத்தைப் பற்றி இழுத்துத் தன்னுள் புதைக்க ஏங்கும் மனத்தை அடக்க எத்தனை சிரமப்படுகிறான் என்று அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

எத்தனை நேரமாகத் தன்னவளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தானோ, அவளுடைய விதுலா என்கிற அழைப்பு அவனைச் சற்றும் எட்டவில்லை. மீண்டும் அழைத்துப் பார்த்தாள். ம்கூம் அவனுடைய பார்வை அவளை விட்டு அங்கும் இங்கும் அசைவதாயில்லை. எரிச்சலுடன் அவனை நெருங்கியவள், எக்கி,

“விதுலா…!” என்று அவன் காதுக்குள் கத்த, அது வரை வேறு உலகில் சஞ்சரித்திருந்தவன், திடுக்கிட்டுத் தன்னிலைக்கு வந்தான்.

முதலில் ஒன்றும் புரியவில்லை. காதுக்குள் ஙொய்…. என்கிற சத்தம் கேட்கத் தன் விழிகளைச் சுருக்கிச் சுண்டுவிரலால் காதைக் குடைந்தவன், சற்றுக் கோபத்துடன் மிளிர்மிருதையை நிமிர்ந்து பார்த்து,

“ஏய்… எதற்கடி கத்தினாய்…” என்று கேட்க உதடுகளில் குறும்புப் புன்னகை தவழ,

“ம்… நேரம் போகவில்லையா…. அதுதான்…” என்றாள் அவள்.

“உன்னை…” என்றவாறு அவளைப் பார்த்து முறைக்க, அவன் பக்கமாகத் தேநீர் குவளையை நீட்டி,

“முதலில் தேநீரைக் குடியுங்கள்… பிறகு… என்னை… என்னவேண்டுமானாலும் செய்யுங்கள்…” என்று அலட்சியமாகக் கூறிவிட்டு, குவளையை நீட்ட, அவனோ அவளையும் குவளையையும் மாறி மறிப் பார்த்தான். அவனுடைய முகத்தில் குறும்புப் புன்னகை தாண்டவமாட,

“என்ன வேண்டுமானாலும் செய்யலாமா…” என்றான் கிசுகிசுத்த குரலில்.

“ம்… என்னவேண்டுமானாலும் செய்யுங்கள்… இப்போது இதைக் குடியுங்கள்…” என்று நீட்டியவாறு அதே நிலையில் நிற்க, அவளை நெருங்கியவன், பின் அவள் கரத்தலிருந்த குவளையைத் தன் கரத்தில் வாங்காது, குனிந்து அதில் தன் உதடுகளைப் பதித்து, உறிஞ்சி, ஒரு இழுவை இழுத்துத் தொண்டையை நனைத்தவாறு விழிகளால் அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்து,

“என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் அல்லவா…” என்றான் காந்தமென இழுத்த குரலில். முதலில் திகைத்தவள், பின் அவன் சொல்வதன், செய்ததன் பொருள் உணர, செங்கொழுந்தாகிப் போனாள் மிளிர்மிருதை.

சிரமப்பட்டு அவனைப் பார்த்து முறைத்தவள்,

“அஸ்கு புஸ்கு அப்பளம் வடை… நான் எதைச் சொன்னேன் என்று நன்றாகத் தெரிந்துகொண்டும்… இப்படிக் கேட்கும் உங்களைக் கழுவில் ஏற்றிவிடுவேன் ஜாக்கிரதை…” என்றவள், அவனுடைய கரத்தைப் பற்றி, அதில் குவளையைத் திணிக்க,

“இதில் மட்டும் தெளிவாக இரு…” என்று முணுமுணுத்தவனாக, அவள் கரத்தில் வைத்த தேநீர் குவளையைச் சோர்வுடன் பற்றிக்கொண்டான் அபயவிதுலன்.

அவளோ மேடையில் சாய்ந்தமர்ந்தவாறு தேநீரை ஒரு இழுவை இழுத்துத் தொண்டையை நனைத்தாள்.

தேநீர் அந்தக் குளிருக்கு மிக இதமாக இருந்தது. ருசித்துக் குடிக்க, அவனும் மெல்லிய நகைப்புடன் அவளுக்கு அருகாமையில் சாய்ந்தமர்ந்தவாறு, மனைவியின் கரத்தால் தயாரிக்கப்பட்ட தேநீரை ரசித்து ருசித்து அருந்தத் தொடங்கினான். அவனுடைய உயிரானவனின் கரத்தினால் தயாரிக்கப்பட்டது… சுவை பற்றிக் கேட்கவேண்டுமா என்ன? அதை அனுபவித்தவாறு, மிளிர்மிருதையை ஏறிட்டுப் பார்க்க, அவளோ மேடையில் ஏறி அமர்ந்தவாறு தனது பாணத்தை உறிஞ்சிக் குடிக்க ஆரம்பித்திருந்தாள்.

அவனுடைய விழிகளோ, அந்தக் குவித்து உதடுகளிலேயே தஞ்சம் புகுந்தன. அவள் மேல் உதட்டில் ஒட்டியிருந்த நுரையைக் கண்டு அந்தக் கணமே தன் நுனி உதட்டால் அம் மேல் உதட்டைத் துடைத்துவிட வேண்டும் என்கிற ஏக்கம் பூதாகரமாக எழுந்தது. கூடவே அவள் மூக்கின் மீது விழுந்திருந்த ஒற்றை முடிக்கற்றையைக் கண்டு, அவள் புறமாகச் சரிந்தவன், தன் வாயில் தேநீர் குவளையைச் சரித்தவாறே, அவள் மூக்கின் மீது விழுந்திருந்த முடியைச் சுட்டுவிரல் கொண்டு ஒதூக்கிவிட்டு,

“மிருதா… அப்போது ஏதோ என்னிடம் சொல்ல வந்தாயே… என்னது?” என்று கேட்க, அப்போதுதான் இன்னொரு மிடற்றை வாய்க்குள் எடுத்தவள், அவன் கேட்டதும் தாமதம், அதிர்ச்சியுடன் பிரக்கேற, தன் வாய்க்குள் இருந்ததை அவன் மீது துப்பிவிட்டிருந்தாள்.

அதிர்ந்துபோனாள் மிளிர்மிருதை. அவளுடைய எச்சி நிறைந்த தேநீர் அபயவிதுலனின் முகத்தில் மட்டுமல்ல, அவன் ஆடை முழுவதும் தெறித்திருந்ததைக் கண்டவளுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.

பதறியடித்துக் கீழே இறங்கியவள், அவனை நெருங்கி,

“சா… சாரி விதுலா…! ரியலி சாரி… நான்… திடீர் என்று… கேட்டதும்… அதிர்ச்சியில்…” என்று அவன் முகத்தைத் துடைக்கத் தொடங்க, அபயவிதுலனுக்கு அவள் துப்பியது உறைக்கவேயில்லை. மாறாக அவள் தளிர் கரம் முகத்தில் பட்டதும், மீண்டும் கனவுலகிற்குள் சஞ்சரிக்கும் நிலைக்குச் செல்லத் தொடங்கினான். சற்று நேரம் அவளுடைய வருடலை ரசித்து அனுபவித்தவன், அவளுடைய பதட்டத்தைக் கண்டதும், அவளுடைய கரத்தைப் பற்றித் தன் நெஞ்சின் மீது வைத்து அழுத்திக் கொடு து

“ஹே… இட்ஸ் ஓக்கே… எதற்கு இந்தப் பதட்டம் ம்…?” என்றவாறு, அவள் கரத்தை விடுவித்தவன், தன்னைக் குனிந்து பார்த்தான்.

டை முதல் ஷேர்ட் வரை ஈரமாகிவிட்டிருந்தது. போதாதற்கு அவனுடைய வெண்ணிற ஷேர்ட்டின் மீது காஃபிக் கறை. புருவம் சுருக்கி யோசித்தவன், சற்றும் தாமதிக்காது தன் டையைக் கழற்றி அங்கிருந்த மேசையில் எறிந்தவன், ஷேர்ட்டின் ஒவ்வொரு பொத்தானாகக் கழற்றத் தொடங்கியவாறு,

“அப்படி என்ன கேட்டுவிட்டேன் என்று இத்தனை அதிர்ச்சி…?” என்றவாறு மிளிர்மிருதையைப் ஏறிட்டுப் பார்க்க, அதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாது திருத் திருவென்று விழித்தாள்.

‘உன்னைச் சேரும் நாளுக்காகக் காத்திருக்கிறேன் என்று எப்படி வெட்கத்தை விட்டுச் சொல்வாள்? பதில் கூற முடியாது கீழ் உதட்டை மேல் பற்களால் கடிக்க,

அவளிடமிருந்து இன்னும் பதில் வராது போகத் தன் ஷேர்ட்டையும், உள்ளே அணிந்திருந்த பெனியனையும் கழற்றி மேசையில் எறிந்துவிட்டு வெற்றுடம்புடன் அவளை நெருங்க இவளுக்குத்தான் படபடத்துக்கொண்டு வந்தது.

ஆனால் அவனோ, அவளுக்கு அருகாமையிலிருந்த இழுவையைத் திறந்து அதிலிருந்த வெண்ணிறக் கை துடைக்கும் துணி ஒன்றை இழுத்தெடுத்துத் தண்ணீர் குழாயடியை நெருங்கி, அதில் துண்டை நனைத்துப் பிழிந்துவிட்டு, முகத்தையும் உடலையும் துடைத்துவிட்டவாறு,

“நீ பதில் சொல்வதற்குத் தயங்குவதைப் பார்த்தால், பயங்கரமாக எதையோ யோசித்திருப்பாய் போல‍ேவே…?” என்றான் குறும்புப் புன்னகையுடன்.

அவளோ, அவன் தன் உடலைத் துடைக்கும் அழகையே கண் வெட்டாது பார்த்துக்கொண்டிருக்க அவனோ துடைத்த துணியை அங்கிருந்த அழுக்குக் கூடையில் எறிந்துவிட்டு இவளை நோக்கித் திரும்பி,

“ஏய்… என்னடி ஆச்சு… நான் என்னவோ கேட்டுக்கொண்டிருக்கிறேன்… நீ என்னவென்றால் வேறு எங்கோ பராக்குப் பார்க்கிறாயே…” என்று அவன் இழுத்துப் பிடித்த பொறுமையுடன் கேட்க, அவளோ பதில் சொல்லத் திராணியற்று நெழிந்தவாறு,

“அது… அது வந்து….

“ம்… அரை மணி நேரமாக வந்துகொண்டுதான் இருக்கிறாய்… ஆனால் இன்னும் வந்து சேரும் வழியைத்தான் காணவில்லை…” என்று சலிப்புடன் கூறியவன், அங்கிருந்த கபேர்ட்டை நோக்கிச் செல்ல, அவனுடைய அகன்ற தோள்களும், கரங்களில் எம்பியிருந்த குன்றுகளும், திரும்பிய போது காயம் பட்டிருந்த முதுகையும் மீறித் தெரிந்த இறுகித் திரண்ட தசைகளும், முள்ளந்தண்டின் முடிவில் அதன் இரு பக்கமும் சற்று ஆழமாகத் தெரிந்த குழியும், குறுகிய அந்த இடையும், அவளைப் பித்தம் கொள்ளச் செய்ய, கூடவே சிறுநீரகத்தைத் தானம் செய்ததற்கு ஆதாரமாக வலது பக்கத்தில் ஒரு வெட்டைக் கண்டதும், அந்தப் பித்தம் வடிந்து போய். மனம் கலங்கிப்போனது.

அவன் இழந்து மீளப் பெற முடியாதவற்றில் அதுவும் ஒன்றல்லவா. விழிகள் கலங்கிப் போனது அவளுக்கு.

அபயவிதுலனோ தன் ஆடைகளை அணிந்துவிட்டு, சரி சரி… நீ பதிலை நிதானமாகவே யோசித்து வை, நான் உனக்கான புது வாகன ஓட்டுனரைத் தேடிப் பிடிக்கிறேன்…” என்றுவிட்டுத் தன் அலுவலக அறை நோக்கிச் செல்ல அப்போதுதான் மிளிர்மிருதைக்கு டேவிட்சனின் நினைப்பு வந்தது.

அவளால் அல்லவா அவனுக்கு வேலை போனது. அவசரமாகக் கீழே இறங்கியவள்,

“டேவிட்சன் பாவம் விதுலா…! அவருடைய தப்பு எதுவுமே இல்லை… என்னுடைய கட்டளைக்காகத்தான் காரையே நிறுத்தினார்… அவரை நம்பி ஒரு குடும்பமே இருக்கிறது… ப்ளீஸ் விதுலா…! அவனுக்கு வேலை கொடுக்கக் கூடாதா?” என்று கேட்க, டையைக் கட்டிக்கொண்டிருந்தவன் அதை நிறுத்திவிட்டுக் கோபத்துடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்த்தான்.

இதற்காகத்தானாக இத்தனை பில்டப் போட்டாள்… அவனும் வேறு ஏதோ நினைத்திருந்தான்… நினைக்கும் போதே எரிச்சலும் கோபமும் வந்தது.

ஏதோ சொல்ல வாய் எடுத்தவன், அவள் முகத்தில் தெரிந்த கெஞ்சலைக் கண்டு, பற்களை நறநறவென்று கடித்துவிட்டு, டையை வேகமாகக் கட்டியவாறு மேசையருகே சென்றவன், அங்கே போட்டிருந்த தன் கைப்பேசியை வெளியே எடுத்து சில இலக்கங்களைத் தட்ட, மறு பக்கம் அழைப்புப் போனது. ஒரு சில விநாடிகளில்,

“ஹாய்… இட்ஸ் சர்வாகமன்…” என்கிற அழுத்தமான குரல் மறுபக்கத்திலிருந்து கேட்டது.

“ஆகமா… இட்ஸ் மீ… அபயவிதுலன்…” என்றதும்,

“ஹேய்… மான்… ஹெள ஆர் யு…” என்றது மறு குரல்.

“ஐ ஆம் ஓக்கே… உன்னுடைய மனைவி எப்படி இருக்கிறார்கள்… அம்மா… அப்பா…”

“தே ஆர் ஓக்கேடா… நிரந்தரி நன்றாகப் பேசுகிறாள்… அம்மா அப்பா… எல்லோரும் நலம்… சரி விஷயத்தைச் சொல்… தேவையில்லாமல் அழைக்க மாட்டாயே…” என்று கிண்டலுடன் மறு பக்கம் கூற, மெல்லியதாக நகைத்த அபயவிதுலன்,

“நத்திங் ஸ்பெஷல்டா… ஒரு முறை என்னோடு பேசும்போது, உன் அம்மாவை அழைத்துச் செல்வதற்கு நம்பிக்கையான சாரதி வேண்டும் என்று கேட்டாயல்லவா… கிடைத்துவிட்டானா?” என்று கேட்க,

“நாட் யெட் மான்… யாரும் திருப்தியாக இல்லை… ஏன் யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா?” என்று ஆவலாகக் கேட்டான் சர்வாகமன்.

“யெஸ்… ஒருவன் இருக்கிறான்… அவனுடைய தொலைபேசி இலக்கம் தருகிறேன்… பேசிப் பார்… பிடித்தால் வேலைக்கு வைத்துக்கொள்… உனக்குப் பிடிக்கவில்லை என்றால், எனக்காகப் பார்க்காதே… வேலையிலிருந்து தூக்கிவிடு…” என்றுவிட்டு மேலும் ஓரிரு வார்த்தைகளைப் பேசிவிட்டுத் தொலைபேசியை அணைத்தவன், கையோடு டேவிட்சனின் கைப்பேசி இலக்கத்தைக் குறுஞ்செய்தியாக அனுப்பிவிட்டுத் திரும்பி தன் மனைவியைப் பார்த்து,

“இப்போது உனக்குச் சந்தோஷம்தானே…” என்றான்.

முகம் மலர, காயத்தின் வலி உறுத்தினாலும் அதைப் பொருட்படுத்தாது துள்ளிக் குதித்தவள், பாய்ந்து சென்று அபயவிதுலனை இறுக அணைத்து அவன் மார்பில் தன் தலையைப் பதித்து,

“தாங்க் யு… தாங்க்… யு தாங்க் யு சோ மச் விதுலா…! இத்தனை நேரம் குற்ற உணர்ச்சியிலிருந்தேன்… இப்போதுதான் சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா…” என்று அணைப்பை விடாமலே கூறியவள், பின் விலகி, சரியாகப் போடப்படாத அவனுடைய டையைச் சரியாக்கிவிடத் தொடங்க, அவனோ, அவளுடைய கன்னத்தில் தன் கரத்தைப் பதித்து வருடிக் கொடுத்தவாறு,

“நீ வேண்டி நான் எதை மாட்டேன் என்றேன்…” என்றான் கனிவுடன். அவளோ உதடுகளைக் சுளுக்கி,

“ம்கும்… இதில் மட்டும் குறைச்சலில்லை… எனக்குத்தான் யாருடைய தொல்லையும் இல்லாமல் வெளியே போய்வரவேண்டும் என்று ஆசை… அதற்கு மதிப்புக் கொடுக்கிறீர்களா என்ன?” என்று எரிச்சலுடன் கேட்க, அவளுடைய இரு கன்னங்களையும் உள்ளங்கரங்களால் பற்றித் தன்னை நோக்கி இழுத்து, அவளுடைய நெற்றியோடு தன் நொற்றியை முட்டி விலக்கியவன்,

“அது வேறு இது வேறு… ஆனாலும் உன் விருப்பப்படி போய் முட்டிக்கொண்டு வந்தாயே… அது போதாதா?” என்றான் கிண்டலாய். பின் அவளிடமிருந்து விலகிப் பா ண்டைச் சற்று இளக்கி அதற்குள் ஷேர்ட்டைச் சொருகத் தொடங்க, இவளோ, உதடுகளைக் சுளுக்கி,

“ம்கூம்… இல்லையென்றாலும் விட்டுவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பீர்களாக்கும்…” என்று முணுமுணுத்தவள், நடந்து சென்று அங்கிருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்தாள். அவனோ,

“எதற்காக இப்படி நடந்து கொள்கிறேன் என்று உனக்குத் தெரியும் மிருதா… அக்காவிற்கு, ஆராதனாவிற்கு உனக்கு ஏதாவது நடந்தால், சத்தியமாக அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது… அதனால்தான் சற்றுக் கவனமாக இருக்கிறேன் மிருதா..” என்றதும், இவளுக்கு அப்போதுதான் ஆராதனாவின் நினைவு வந்தது.

அன்று காலை, காந்திமதிக்குக் கொடுத்த வாக்கு நினைவுக்கு வர,

“விதுலா…!” என்றாள். நிமிர்ந்து பார்த்தவன்,

“இன்னும் என்ன?” என்றான் போடாமல் விட்ட தன் கைச் சட்டையின் பொத்தான்களைப் போட முயன்றவாறு.

“இல்லை… இன்று அம்மா உங்களிடம் கேட்டார்களே ஆராதனாவின் திருமணம் பற்றி… நீங்கள் பிறகு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டீர்கள்… அவளை மணம் முடித்து அனுப்பும் எண்ணம் இருக்கிறதா இல்லையா… உங்கள் முடிவு தெரியாமல் எப்படிச் சந்திரன் அங்கிளோடு, மேற்கொண்டு பேசுவது?” என்று கேட்க, பொத்தானைப் போட்டுக்கொண்டிருந்த அபயவிதுலனின் கரம் அப்படியே நின்றது.

அதுவரையிருந்த இனிமை துணிகொண்டு துடைத்தது போலத் தொலைந்து போக ஒரு கணம் மிளிர்மிருதையை ஒரு வித வலியோடு பார்த்தான் அபயவிதுலன்.

பின் சற்று நேரம் தலையைக் குனிந்து நின்றான். பின் ஒரு வித கலக்கத்தோடு அங்கிருந்த ஜன்னலை நோக்கிச் சென்றவன், வெளியே வெறித்தவாறு நிற்க,

“இதில் யோசிக்க என்ன இருக்கிறது விதுலா…! இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள்… நம்முடைய ஆராதனாவின் படிப்பு முடிந்து விட்டது.. இனி காத்திருந்து பயனில்லை… அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் கொண்டு நடத்தவேண்டும் அல்லவா?” என்று கூற அவனோ இன்னும் தெளியாதவனாக,

“ஆனால்… அவள் இன்னும் குழந்தை போலவே தோன்றுகிறது மிருதா… அவளுக்கு இருபத்தொரு வயதாகிவிட்டதென்று நம்பவே முடியவில்லை…” என்று குறைபட, மிளிர்மிருதைக்கு அதுவரையிருந்த இலகுத் தன்மை மறைந்து போனது. தன் முன்னால் நின்றவனை அழுத்தத்துடன் ஏறிட்டவள் எப்போதும் போல நா துடுக்குத் தனமாக அசைய முயன்றது.

‘தன் வீட்டுப் பெண் என்றால் குழந்தைபோலத் தெரிகிறது… அடுத்த வீட்டுப் பெண் என்றால், குமரியாகத் தெரிகிறதா?’ என்று கேட்பதற்கு வாய் எடுத்தவள் உடனே அவசரமாக அதை அடக்கிக் கொண்டாள்.

அவள் கேட்டுவிடுவாள். ஆனால் அவன்தான் உடைந்துபோவான். அதிலிருந்து அவனால் அத்தனை எளிதில் வெளியே வர முடியாது. அதைக் கண்டு இவள்தான் கலங்கவேண்டியதாக இருக்கும். அதனால் உடனே தோன்றிய எண்ணத்தை அவசரமாகக் குழி தோன்றிப் புதைத்த விநாடி, அவனுடைய முகம் அடிபட்ட பாவனையுடன் அவளை வலியுடன் திரும்பிப் பார்த்தது.

“ஆராதனாவிற்காக நான் பதறுகிறேன்… ஆனால் அன்று பதினெட்டு வயதேயான உன்னை… நான்…” அவன் முடிக்க முடியாது திணறத் தன் வலியை மறந்தவளாகக் கதிரையிலிருந்து எழுந்தவள், வலித்த தன் காயத்தைக் கூடப் பொருட்படுத்தாது, தன்னவனை நோக்கி வேகமாக நெருங்கினாள் மிளிர்மிருதை.

சற்றும் தாமதிக்காமல் பின்புறம் நின்றவாறே, அவன் கரங்களுக்கூடாகத் தன் கரங்களைக் கொண்டு சென்று அவனை இழுத்துத் தன்னோடு அணைத்துககொள்ள, அவனோ விறைத்தவனாக விழிகளை மூடியவாறு அப்படியே நின்றிருந்தான். பின், அவள் புரமாகத் திரும்பி அவளை இழுத்து மேலும் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

“முழங்காலில் பட்ட வலியையே உன்னால் தாங்க முடியவில்லை… அன்று எப்படித் துடித்திருப்பாய்… உயிரே விட்டுப் போகுதடி… சாரிடி… என் தேவதை நீ… உன்னை வலிக்கச் செய்தேனே… நான்… நான்…” அதற்கு மேல் முடியாதவனாக அவள் கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைக்க, அவனுடைய இரு துளிக் கண்ணீர் பாவமன்னிப்புக் கேட்டவாறு வழிந்து செல்ல, அதைத் தாங்க முடியாதவளாக,

“ஓ… விதுலா…! ப்ளீஸ்… கொன்ட்ரோல் யுவர் செல்ஃப்…” என்று பதைத்தவளுக்கு அவனை எப்படி ஆறுதல் படுத்துவது என்று தெரியவில்லை.

குற்றம் செய்யும் போது தெரிவதில்லை அந்தக் குற்ற உணர்ச்சியின் தாற்பரியம். ஆனால் தெரியும் போது, அதிலிருந்து மீள முடிவதில்லை. இதோ எப்போதோ செய்த தவறு, இப்போதம் பச்சை ரணமாகத் துடிக்க வைக்கிறதே… அதுவும் உயிரானவளுக்குச் செய்துவிட்டு அதிலிருந்து மீள முயன்று முடியாமல் அவன் படும் சித்திரவதை… வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. மரணிக்கும் தறுவாயில் கூட அந்த வலி கூறு போட்டு அறுக்குமே… தவறு செய்வது சுலபம்.. ஆனால் திருத்த முயல்வதுதான் இயலாத காரியம்… அன்று செய்த தவறு, விரும்பியோ விரும்பாமலோ அவன் கூடப் பயணிக்கத்தானே போகிறது… அதுதானே மறுக்க முடியாத நிதர்சனம்.

மிளிர்மிருதைக்கு அபயவிதுலனை நினைக்கும் போது இரத்தக் கண்ணீரே வந்தது.

இத்தனை வருடம் கழித்தும் ரணம் சற்றும் குறையாது அப்படியே இருக்கிறதே… அதிலிருந்து எப்படி வெளியேறுவான். எப்படி விடுபடுவான்… எல்லையில்லா வேதனையுடன் பரந்து விரிந்த அவன் மார்பைத் தட்டியும் வருடியும் கொடுத்தவள், பின் அவன் இடையை மேலும் கீழுமாக வருடிக் கொடுத்து,

“விதுலா…! எதையும் கடந்து செல்லவேண்டும் என்று சொல்வீர்கள்… நீங்களே இப்படி உடைந்து போகலாமா?” என்று தட்டிக் கொடுக்க, அவளுடைய வெற்றுக் கழுத்தில் தன் மூக்கை அழுத்தித் தேய்த்தவன்,

“அந்த நாளை நினைக்கும் போதே தாளமுடியவில்லை… என்ன செய்யட்டும்…” என்றவன், சற்று நேரம் மனைவியின் அணைப்பில் கட்டுண்டு கிடந்தான். பின் மெதுவாக அவளை விட்டு விலகி, அவள் கன்னங்களில் தன் கரங்களைப் பதித்து,

“உனக்கொரு வாக்குத் தருகிறேன் கண்ணம்மா… எப்போதும், எந்தச் சந்தர்ப்பத்திலும், உனக்கு வேதனை தரும் செயலை செய்ய மாட்டேன்… உன் விழிகளிலிருந்து ஒரு துளி கண்ணீர் சிந்தவும் நான் விட மாட்டேன்… ஐ ப்ராமிஸ் யு…” என்றவன் கலங்கிய அவள் விழிகளில் தன் உதடுகளைப் பொருத்தி எடுக்க,

“ம்… எழுநூற்று முப்பது… அதில் ஓரிரு நாநாட்களைக் கழித்தாலும்… எழுநூற்று இருபத்தைந்து நாட்கள்…” என்றாள் சம்பந்தமே இல்லாமல். அவன் புரியாமல் விழிக்க,

“என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்… அதுதான், உனக்கொரு வாக்குத் தருகிறேன்.. எந்தச் சந்தர்ப்பத்திலும் உன் விழிகளிலிருந்து ஒரு துளி கண்ணீர் சிந்த விடமாட்டேன்… இந்த வசனம் ஒரு நாளைக்கு ஒரு முறை என்றாலும் கூட எழுநூற்று முப்பது நாட்கள்… ஓரிரு நாட்கள் சொல்லியிருக்க மாட்டீர்கள்… அதுதான் மட்டமாக இரண்டு வருடங்களுக்கும் சேர்த்து, எழுநூற்று இருபத்தைந்து தடவைகள் இதைச் சொல்லிவிட்டீர்கள்…” என்றவாறு அவள் கிளுகிளுத்துச் சிரிக்க, அதைக் கண்டு வலியை மறந்தவனாகத் தன்னவளின் நெற்றியில் தன் நெற்றியை முட்டி எடுத்தவன்,

“ஐ லவ் யு பேபி… ஐ லவ் யு சோ மச்…” என்று அவள் கன்னத்தை மெதுவாகக் கிள்ளி விடுவித்தவன், தன் மேசையை நோக்கி விரைந்து செல்ல இவளோ, தன் விழிகள் கலங்க அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

இதோ கடந்த இரண்டு வருடங்களாக அவன் கூடவே இருக்கிறாள். இத்தனை காலத்தில் அவன் தான் செய்த குற்றத்தை மறந்தானில்லை. இப்போது போல, ஏதாவது ஒன்றைக் கூறிவிட்டு, இப்படித் தன்னவளுக்குச் செய்த கொடுமையை ஒப்பிட்டுத் தவித்துத் துடித்துப் போவான்.

இவளும் முடிந்த வரை அவனைத் தட்டிக் கொடுப்பாள். ஆனாலும் அவன் அதிலிருந்து வெளிவரவில்லை.

அந்தக் குற்ற உணர்ச்சி ஓரளவு குறையவேண்டுமானால், அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அவனை முழுதாக அவள் ஏற்றுக்கொள்வது. மனதால், உணர்வால் மட்டுமல்ல, உடலாலும் அதே காதலுடன் அவனை ஏற்றுக் கொள்ளவேண்டும். அவள் முழுதாக அவனுடன் ஐக்கியமாகும் வரைக்கும் அந்தக் குற்ற உணர்ச்சி அவனை வதைக்கும். அவள் தன்னை முழுதாக ஏற்றுக்கொள்ளவில்லையே என்கிற நெருடல், அவனை நிலையிழக்கச் செய்யும்.

அது மிளிர்மிருதைக்குப் புரியாமலில்லை.

அதற்குக் காலம் கனிந்து விட்டது. ஆனால் இப்போதல்ல. அவனுடைய பிறந்த நாள் அன்று… அவனுக்குக் கொடுக்கும் பரிசாக, அவளை ஒப்படைக்கப் போகிறாள். அது அவனுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத பரிசாக இருக்கப் போகிறது… அன்று அதுவரையிருந்த ஆசு அறுந்து அவன் புதிய அபயவிதுலனாக மாறப்போகிறான்… நினைக்கும் போதே அந்த நாள் விரைவில் வந்துவிடாதா என்று ஏக்கமாக இருந்தது.

அவனுடைய தாபங்களையும் ஏக்கங்களையும் தீர்க்கும் நாள் அதிகத் தொலைவில் இல்லை அதுவரை…

‘காத்திருங்கள் விதுலா…! இத்தனை நாள் காத்திருந்தீர்கள்… இன்னும் கொஞ்ச நாட்கள்தான் காத்திருக்க மாட்டீர்களா… அன்று.. உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அற்புத நாளாக இருக்கும்…’ என்று எண்ணியவளின் உதட்டில் மென் புன்னகை ஒன்று வந்து அமர்ந்து கொண்டது.

 

 

What’s your Reaction?
+1
20
+1
5
+1
3
+1
4
+1
0
+1
0

Related Post

error: Content is protected !!