Wed. Oct 22nd, 2025

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 2/27

(27)

 

அந்த அறையைக் கண்ட மிளிர்ம்ருதைக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அதிர்ச்சியுடன்,

“அ… அம்மா… இது…” என்று பெரும் தவிப்புடன் கேட்டவாறு உள்ளே நுழைந்தவளுக்கு ஏதோ ஒரு கோவிலுக்குள் நுழையும் உணர்வு. தரையில் கூடச் சிறு தூசியின்றிப் படு சுத்தமாக இருந்தது. கூடவே, அந்த அறையின் அமைதியும், அங்கிருந்து வந்த ஒரு வித சுகந்தமான வாசனையும்… அவளையும் மீறி மனத்தைச் சற்று அமைதிப் படுத்தியது.

அதைக் கூட உணராமல், அவளுடைய பார்வை அங்கிருந்த சுவர்களையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. அவள் காண்பது கனவா இல்லை… நிஜமா? நடுங்கும் கால்களைச் சிரமப்பட்டு அசைத்தவாறு அதனருகே சென்றாள். அவளால் இன்னும் நம்பமுடியவில்லை.

அதனருகே சென்றவளுக்குத் தான் மூச்செடுப்பதே மறந்துபோயிற்று. அங்கே அந்தச் சுவரின் நடுநயமாகப் பிரமாண்டமாக அவளே அண்ணாந்து பார்க்கும் வகையில் சட்டமிடப்பட்டிருந்தது மிளிர்ம்ருதையின் புகைப்படம்.

பாடசாலை சீருடையில் இரட்டைப் பின்னல் மார்பில் விழக் கன்னத்தில் குழிவிழக் கண்கள் மின்னச் சிரித்துக் கொண்டிருந்தாள் பதினாறு வயது நிரம்பிய பாவை.

விழிகளில் கண்ணீர் தேங்கத் தவிப்புடன் தன் பின்னால் நின்றிருந்த காந்திமதியைப் பார்த்து,“இது…” என்றாள் குரல் கம்ம.

அவள் நிலையை உணர்ந்தவராக, மிளிர்ம்ருதையை நெருங்கிய காந்திமதி, அவளைச் சமாதானப் படுத்தும் முகமாக, அவள் தோளிலே தன் கரத்தைப் போட்டுக் கருனையுடன் அவளைத் தன்னோடு இறுக்கியவாறு அந்தப் படத்தை ஆசையுடன் பார்த்தார். அவர் தம்பியின் உயிராகிப்போன சாம்ராஜ்யமல்லவா அது… அவனைக் கொஞ்சமாவது மகிழ்ச்சியாக வைத்திருக்கும் இடம் என்றால் அது இந்த அறைதானே…

மெதுவாகத் தலையைத் திருப்பி மிளிர்ம்ருதையைப் பார்த்தவர்,

“உன்னைப் பிரிந்து இங்கே வந்த பிற்பாடு, தன் வேலை நேரம் தவிர முழு நேரமும் இங்கேதான் இருப்பான் தெரியுமா…” என்றவர், மீண்டும் அந்தப் படத்தைப் பார்த்தவாறே,

“இந்தப் படத்தை ஆறு வருடங்களுக்கு முன்பு உன்னை முதன் முதலாகக் கண்ட பின், ஒரு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு வரைபடக் கலைஞரைக் கொண்டு, கீறுவித்தான்…” என்றதும் அதிர்ந்துபோனாள் மிளிர்ம்ருதை. இது தீட்டிய ஓவியமா? நம்ப மாட்டாமல் திரும்பித் தன் படத்தை உற்றுப் பார்த்தாள்.

இன்னும் அது வரையப்பட்ட ஓவியமென்று அவளால் நம்ப மடியவில்லை. சின்னச் சின்ன விஷயங்களைக் கூற, அச்சொட்டாக வரைந்திருந்தார் அந்தக் கலைஞர். சிரிக்கும் போது இதழோரம் தோன்றிய மெல்லிய சுருக்கம், கண்களிலிருந்த மின்னல், முகத்திலிருந்த மலர்ச்சி… அடேங்கப்பா… அது கூட அந்தப் படத்தில் தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது.

தன்னையும் மீறி எழுந்த கேவலுடன், நடுங்கும் கரம் கொண்டு, அந்தப் படத்தை வருடிக் கொடுக்க, அவளை நெருங்கிய காந்திமதி, அவள் கரத்தைப் பற்றி, இன்னொரு பக்கமாக அழைத்துச் சென்றார்.

அங்கே திரைபோட்டு எதையோ மறைத்து வைக்கப்பட்டிருந்தது. எங்கே வலித்துவிடுமோ என்று அஞ்சியவர் பேல, அந்தத் திரையை விலக்க, அங்கே இன்னொரு மிளிர்ம்ருதை திருமணக் கோலத்துடன், இவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தாள்.

அதைக் கண்டதும் முதலில் மிளிர்ம்ருதை சற்றுப் பயந்துபோனாள். தன்னையும் மீறி இரண்டடி பின்னோக்கி வைத்துவிட்டிருந்தாள். என்னைப் போல ஒருத்தி, இங்கே என்ன செய்கிறாள்? அதுவும் திருமணக் கோலத்தில்… எப்படி? ஏன்? யார் இவள்?” என்று அதிர்ந்தவாறு நின்றவளுக்குச் சற்று நேரம் எடுத்தது புத்தி வேலை செய்ய.

ஆடாமல் அசையாமல் இருந்த உருவத்தைக் கண்டவளுக்குப் பிறகுதான் புரிந்தது, அது தன்னைப்போல இருக்கும் மெழுகு பொம்மையென்று.

இது உண்மையா… இல்லை… அவள் கனவு காண்கிறாளா? அடேங்கப்பா… எங்கும் சிறு மாற்றமும் இல்லாது வடிக்கப்பட்டிருக்கிறதே அந்தச் சிலை. அதுவும் கழுத்தோடு ஓடிய பச்சை நரம்பு கூட அப்படியே அச்சொட்டாகப் பதியப்பட்டிருந்தது. கரங்களில் ஓடிய மெல்லிய நரம்புகள், சேலை கட்டியிருந்தாலும் அந்த இடையில் கண்ணுக்கும் தெரியாத பூனை முடிகள், அவளுடைய உதட்டின் மேல் புறத்தில் தெரிந்தும் தெரியாமலும் ஒரு மச்சமிருக்கும். அது கூடப் பதியப்பட்டிருந்தது. கழுத்துக்கு அருகாமையில் பச்சை நரம்புக்குப் பக்கத்தில் ஒரு மச்சம்… நெற்றியில், இடது புறமாகத் தலைமுடிக்கு ஓரமாக ஒரு கற்றை முடிகள் சுருண்டிருக்கும். அதைக் கூடப் பதிந்திருந்தார்கள். இவளால் தன் கண்களையே நம்பவே முடியவில்லை.

அவள் மெழுகு பொம்மைகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாள்… பெரிய பெரிய பிரசித்தி பெற்றவர்களை மெழுகில் வடித்துக் கண்காட்சிக்கு வைத்திருப்பது பற்றி அறிந்திருக்கிறாள்தான்… ஆனால் இது… இதுவரை கேள்விப்படாத ஒன்று… அறியாத ஒன்று. இது சாத்தியமா என்று கூடத் தெரியவில்லை. ஆனால் இதுவும் சாத்தியம் என்று காட்டியிருக்கிறான் அபயவிதுலன்.

எங்கே தான் கண்ணாடிக்கு முன்பாக நிற்கிறோமோ என்று குழம்பிக்கொண்டிருந்தவளைப் பார்த்துக்கொண்டிருந்த காந்திமதி,“இதை லண்டனில் மேடம் துஷாட்சில் வேலைசெய்யும் பிரசித்தி பெற்ற, மெழுகு சிற்பக் கலைஞரைக் கொண்டு பிரத்தியேகமாக வடிப்பித்தான் மிளிர்…” என்று கூறியவர், திரும்பி மிளிரைப் பார்த்து,

“இராமன் சீதாபிராட்டியின் உருவபொம்மையை வைத்து அஸ்வமேதை யாகம் செய்தானா இல்லையா என்று எனக்குத் தெரியாது… என் அபயன், தன் கடந்த வாழ்க்கையை இந்த உருவ பொம்மையோடும், இந்தப் படங்களோடுதான் கடத்தினான் என்று சொன்னால் நீ நம்புவாயா?” என்றவாறு அருகே கொளுவியிருந்த கண்ணாடியைக் காட்டி,

“இந்தக் கண்ணாடியைப் பார் மிளிர்ம்ருதை…” என்றார். அதை நெருங்கிய மிளிர்ம்ருதை உற்றுப் பார்க்க, அந்தக் கண்ணாடியின் கரையோரங்களில் அழகாக வர்ணம் தீட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு பூவிலும் மிளிர்ம்ருதையின் முகம் பளிச்சிடுமாறு அமைக்கப்பட்டிருந்தது. மிளிர்ம்ருதையால் எதையுமே நம்ப முடியவில்லை.

ஒரு விரலால் அந்தக் கண்ணாடியை வருடிக் கொடுத்தவளுடைய பார்வை கீழே எழுதியிருந்த எழுத்துக்களின் மீது பட்டதும் விரிந்தது.

“என்னுடைய உயிர் தேவதைக்கு, என் உயிரின் சமர்ப்பணம்…” என்கிற எழுத்துப் பொறிக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டதும், யாரோ இதயத்தைப் பிசைவது போன்ற உணர்வில் தவித்துப்போனாள் மிளிர்ம்ருதை.

அப்படியானால் அவனுடைய உயிர் அவளா? இதை அவளால் நம்ப முடியவில்லை.

போதாததற்குச் சுவர் முழுவதும் அவளுடைய படங்கள்தான் கொளுவியிருந்தன. ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு தோற்றம். எல்லாமே எளிமையான உடையில்… அவளுக்குத் தெரியாமலே எடுக்கப்பட்டிருக்கவேண்டும்.

“இதுதான் என் தம்பியின் உலகம் மிளிர்ம்ருதை… அவன் எந்த மனநிலையிலிருந்தாலும் இந்த அறைக்குள் வந்துவிட்டால், சாதாரண அபயனாக மாறிவிடுவான்… அவனுடைய சந்தோஷம், மகிழ்ச்சி எல்லாமே இந்த அறையில்தான்…” என்றவர் ஒரு பெருமூச்சை விட்டார்.

பின் அவளை அழைத்துச் சென்று அங்கிருந்த பெரிய அலமாரியைத் திறந்து காட்ட, ஒரு பக்கம் முழுவதும் வண்ண வண்ண சேலைகள், இன்னொரு பக்கம் நகைப்பெட்டிகள். இவள் புரியாமல் பார்க்க,

“இவை எல்லாம் உனக்காக வாங்கியவை மிளிர்… உன்னுடைய பிறந்தநாள், வருடப்பிறப்பு, தீபாவளி… எதையும் அவன் விட்டுவைத்ததில்லை. எங்களுக்கு வாங்கும்போது, உனக்காகவும் ஒரு செட் வாங்கிவிடுவான்… உன்னிடம்தான் கொடுக்க முடியாதே… அதனால் இங்கே உறங்குகின்றன.” என்றவாறு கதவைப் பூட்டியவர், அப்படியே நின்றவாறு,

“இந்த அறைக்குள் யாரும் நுழையக் கூடாது. ஒரே ஒரு முறைதான் நான் இதற்குள் நுழைந்திருக்கிறேன்… அதுவும் உனக்காக…” என்றவர் அருகேயிருந்த மேசையில் சாய்ந்தமர்ந்துகொண்டார்.

“அப்போது உன் தந்தை இறந்திருந்த நேரம்… உன்னை அழைத்துவருமாறு கேட்டுக்கொண்டு இந்த அறைக்குள் வந்திருக்கிறேன்… அப்போதுதான் அவன் உன்னை மனமாற விரும்பியிருக்கிறான் என்பதையே நான் அறிந்துகொண்டேன். ஆனால் அந்த நேரம் அவனுக்கு அவனுடைய காதலை விடப் பழிவாங்கும் உணர்ச்சிதான் அதிகமாக இருந்திருக்கிறது… நான் எதைச் சொல்லியும் அவன் கேட்கவில்லை…” என்றதும் இவளுடைய கண்களும் கரைந்தன.

“அதுதான் அவருடைய வெறி அடங்கிவிட்டதே… அதற்குப் பிறகு நான் எதற்கு… அதனால்தான் என்னைத் தேடவேயில்லை…” என்று குரல் கம்ம வலியுடன் கூறியவளிடம்,

“யார் சொன்னார்கள் உன்னைத் தேடிவரவில்லையென்று…” என்றார் பட்டென்று. அதைக் கேட்டதும் அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்தாள் மிளிர்ம்ருதை.

“என்னைத் தே… தேடி வந்தாரா…” என்று திகைக்க,

எதுவும் கூறாமல் அருகேயிருந்த மேசையின் இழுப்பறையைத் திறந்து, அதிலிருந்த ஒரு கோப்பை எடுத்து மிளிர்ம்ருதையை நோக்கி நீட்டினாள்.

வியப்புடன் அதைப் பிரித்துப் பார்த்த மிளிர்ம்ருதை மேலும் அதிர்ந்தாள்.

‘இது…” என்றாள் நம்ப முடியாதவளாக.

“உன்னுடைய கொழும்பு வீட்டுப் பத்திரம். நீ யாருக்கோ விற்றுவிட்டாய் அல்லவா?…”

“ஆமாம்… ஆனால் இதை எப்படி அவர்…”

உன் தந்தை இறந்தது அவனுக்கு மகிழ்ச்சிதான்… நான் கூட உன்னை அழைத்து வரும்படி கேட்டேன். ஆனால் அவன் மறுத்துவிட்டான்… என்னிடம் மறுத்துவிட்டு அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை மிளிர்… உன் நிலை அறியவேண்டி, உனக்குத் தெரியாமலே உன்னை ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்கிற வேகத்துடன் தேடி வந்தான்… ஆனால்… நீ வீட்டை விட்டுப் போய்விட்டாய் என்பது தெரிந்ததும் அவன் பட்ட பாடு… இப்போத நினைத்தாலும்…” என்றவர் பின் குரல் கம்ம,

“உன்னை மணமுடித்து விட்டு விலகிய பின் ஒரு முறை அழுதான்… உன்னைத் தேடிவந்து காணவில்லை என்று தெரிந்த பின் என் மடி தேடி வந்து அழுதான்… உனக்கு என்ன ஆனதோ, என்கிற பரிதவிப்பில் அவன் பட்ட பாட்டை நான் மட்டுமே அறிவேன் மிளிர்… நீ வாழ்ந்த வீட்டில் யார் குடியிருப்பதையும் அவன் விரும்பவில்லை. அதனால் அந்த வீட்டிற்கு இரண்டு மடங்கு அதிகமான பணத்தைக் கொடுத்து உன் பெயருக்கே வாங்கினான். இந்த நான்கு வருடங்களாக அந்த வீட்டில் யாருமே இல்லை. சும்மா பூட்டிக் கிடக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை அதைப் பராமரிப்பதற்காக ஒருவரை நியமித்திருக்கிறான்…” என்றதும் மிளிர்ம்ருதைக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.

“உன்னைக் காணாமல் தவித்துக் கலங்கியிருந்த போதுதான், இந்தப் பொம்மையைச் செய்வித்துக் கொண்டுவந்தான்… கொழும்பிலேயே தன் தொழிலை ஆரம்பித்ததற்குக் காரணமும் நீதான்… எப்படியாவது உன்னைச் சந்தித்து விடுவோம் என்கிற நம்பிக்கைதான் அவனுக்கு… இதை உனக்கு நம்புவது சிரமமாகத்தான் இருக்கும்… பட் இதுதான் உண்மை மிளிர்ம்ருதை… இல்லையென்றால், அவன் தன் வியாபாரத்தை இலங்கைக்குக் கொண்டுவரவேண்டிய அவசியமே இல்லை…” என்றவர், பின் வலிக்கும் குரலில்,

“அபயன் தப்பானவன் கிடையாதும்மா… சந்தர்ப்பம் சூழ்நிலை… அவனைத் தப்பாக யோசிக்க வைத்துவிட்டது…” என்றவளை விரக்தியாகா பார்த்த மிளிர்ம்ருதை,

“எப்படிம்மா… நீங்களும் என்னைப் போலத்தானே… பாதிக்கப்பட்டிருகள்… எப்படி விதுலனை நான் மன்னிப்பேன்… நான் பட்ட வலியை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்தானே… அதற்குப் பிறகும் அவனை எப்படி ஏற்றுக்கொள்வேன்… நம்பினேன்மா… அவரை… என் உயிருக்கும் மேலாக நம்பினேன்.. வெறும் ஒரு புகைப்படத்தைக் கண்டு காதலில் விழுந்தேன்… இவர்தான் என் உலகம் என்று இறுமாந்திருந்த நேரத்தில், ஒன்றுமேயில்லாமல் ஆக்கிவிட்டுச் சென்றாரே… எப்படி அவரை நான் ஏற்றுக்கொள்வேன்…? என்று கேட்டவள், கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறு,

“ஒருவேளை அப்பா… வந்து… உங்களிடம் மன்னித்து ஏற்றுக் கொள் என்றால் ஏற்றிருப்பீர்களா…” என்றாள் மெல்லிய ஏளனத்துடன். அதைக் கேட்டதும், ஒரு கணம் அவளை ஆழ்ந்து பார்த்தார் காந்திமதி.

தலை குனிந்து சற்று நேரம் நின்றவர் பின் நிமிர்ந்து பார்த்து,

“நிச்சயமாக இல்லைம்மா…” என்றதும்,

“என்னை மட்டும் ஏற்றுக் கொள்ளச் சொல்கிறீர்களே… இது நியாயமா?” என்றாள் விரக்தியுடன். மெல்லியதாகச் சிரித்த காந்திமதி,

“உன் தந்தை மீது நான் கொண்ட காதல் உண்மையானது மிளிர்ம்ருதை… உன் தந்தை என் அபயவிதுலன் போல இருந்திருந்தால், நிச்சயமாக அவரை மன்னித்து ஏற்றிருப்பேன்… அவர் என்னைச் சீரழித்து ஒரு குழந்தையைக் கொடுத்துவிட்டுச் சென்றபோதும், அவர் மீதிருந்த என் காதல் அழியவேயில்லை… உண்மைக் காதல் அழியவும் அழியாது. ஆனால் உன் அப்பா… என்னை விரும்பவில்லையே… அவருக்கிருந்த வெறும் உடல் பசி… அந்தப் பதினாறு வயது பருவம் மட்டும்தான் அவருக்குத் தேவையாக இருந்தது… இந்தக் காந்திமதி, அவளுக்குள் இருந்த அப்பழுக்கில்லா காதல், எதுவுமே அவருக்கு வேண்டியிருக்கவில்லை… தவிர…” என்றவர் தன் சேலை முந்தானையால், அபயவிதுலனின் மேசையிலிருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துத் துடைத்தவாறு,

“மனைவியும் குழந்தையும் இருக்கும் போது அவர்களுக்குத் துரோகம் செய்துவிட்டு, ஒரு பெண்ணைத் தேடிய காம மிருகத்தை நான் எப்படி ஏற்றுக்கொள்வேன் சொல்லு…” என்றவர் நேராக அவள் விழிகளுக்குள் தன் விழிகளைக் கலந்து,

“என் தம்பி, அன்றும் இன்றும் என்றும் விரும்பியது ஒருத்தியை… அது நீ… இதற்காக அவனை மன்னித்து ஏற்றுக்கொள் என்றெல்லாம் கெஞ்ச மாட்டேன் மிளிர்ம்ருதை… அவனைப் புரிந்துகொள்ள முயற்சி செய் என்றுதான் கேட்டுக்கொள்கிறேன்…” என்றவாறு அந்தப் பொருளை மேசையில் வைத்துவிட்டு,

“அவன் செய்தது தப்புத் தப்புத் தப்பு என்கிறாயே… என் வாழ்க்கையை விடு… என் தம்பியாகப் பிறந்த குற்றத்திற்கு உன் தந்தை செய்துவிட்டுச் சென்ற பாதகத்தால், அவன் அல்லவா தண்டிக்கப்பட்டான்… அவனுடைய வாழ்க்கையே சிதைந்துவிட்டதே… உன் அப்பா செய்த பாதகத்திற்கு எனக்கு எதற்குத் தண்டனை என்று கேட்டாயே.. இப்போது நான் கேட்கிறேன்… நான் சிதைந்த பாவத்திற்கு என் தம்பி ஏன் சிதையவேண்டும்? அவன் என்ன தப்புச் செய்தான்? சொல் மிளிர்… அவன் என்ன தப்பு செய்தான்?” என்று கேட்டவருக்கு நெஞ்சமெல்லாம் வெடித்துவிடும் போல வலித்தது. தன் மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டவர்,

“என்னுடன் சேர்ந்து எத்தனை சித்திரவதை பட்டிருப்பான் தெரியுமா… எந்த ஆண்மகனும் செய்யாத செய்ய யோசிக்கும், செய்யக் கூசும் வேலைகள் எல்லாம் எனக்குச் செய்தான் கண்ணம்மா… மன நலம் சரியில்லாத போது, ஆண்கள் என்றாலே எனக்கு வெறி வரும்… அப்போது என்னை அடக்குவதே பெரும் பாடாக இருக்கும் மிளிர்… அப்போதெல்லாம் இரும்புக் கம்பியை என்னிடம் கொடுத்து அடிவாங்குவான் தெரியுமா…” நடுங்கும் இரு கரங்களையும் தூக்கி வெறுப்புடன் பார்த்த காந்திமதி,

“எந்தக் கையால் உணவூட்டினேனோ, எந்தக் கையால் அவனைத் தூங்க வைக்கத் தட்டிக்கொடுத்தேனோ… அதே கரத்தால் அவனை…” என்றவர் பெரும் வலியுடன், விரல்களைச் சுருக்கி இறுக்கிப் பிடித்துக் கொண்டு,

“உணர்வு வந்த பின்புதான் நான் செய்த காரியமே எனக்குத் தெரியும்… அதை மறைக்க அவன் முகத்தில் புன்னகையைச் சுமந்தவாறு என்னை அரவணைப்பான்… எத்தனை முறை நொடிந்து போனேன் தெரியுமா… எனக்காகச் சிலுவை சுமந்தவன் கண்ணம்மா அவன்… பிற ஆண்களிடமிருந்து என்னைக் காக்கப் போய், தான் அடி வாங்கியிருக்கிறான்… ஆனால் ஒரு போதும் என்னை விட்டு விலகியதில்லை..” என்றவரின் விழிகளிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. அதைத் துடைக்கத் தோன்றாதவராக,

“குழந்தைம்மா அவன்… தன் சந்தோஷம், மகிழ்ச்சி எல்லாவற்றையும் எனக்காகத் தொலைத்தவன் அவன். நான் செய்த கொடுமையில் அவன் என்னை விட்டுவிட்டு எங்காவது ஓடி சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாம். எனக்காய் எல்லா வலிகளையும் சுமந்தான் தெரியுமா… என்னைக் காக்கச் சாக்கடை கூட அள்ளினான்மா… என் மகளுக்காகவே பள்ளிக்கூடம் போவதை ஒரு வருடம் நிறுத்தி வைத்தான்.” என்று நடந்தவை அனைத்தையும் பிசுறு தட்டாமல் கம்மிய குரலில் கூறி முடிய இவள்தான் பேயறைந்தது போல நிற்கவேண்டியதாயிற்று. அவளுக்குப் பேசவே நா எழவில்லை.

அதுவும், ‘உன் தந்தை செய்த குற்றத்திற்கு உனக்குத் தண்டனை ஏன் என்று கேட்டாயே… நான் சிதைந்த பாவத்திற்கு என் தம்பி ஏன் சிதையவேண்டும்…’ என்று கேட்டபோது, யாரோ சம்மட்டியால் அடித்தது போல அலமலந்துபோனாள் மிளிர்ம்ருதை.

அவள் பெற்றவருக்காகத் தண்டனை பெற்றாள்… அவனோ, கூடப்பிறந்தவளுக்காகச் சிதைந்து போனானே… சிதைந்தவனின் வலி பெரியதா, தண்டிக்கப்பட்டவளின் வலி பெரியதா? எது பெரியது? எது சிறியது…? நினைக்கும் போதே உடலிலிருந்து குருதி வடிந்து செல்வதுபோலத் துடித்துப்போனாள் மிளிர்ம்ருதை.

எதையெல்லாம் நடிப்பு நடிப்பு என்று எண்ணி நம்ப மறுத்து ஒதுக்கினாளோ, அதையெல்லாம் நிஜமாக்கிக் கொண்டிருக்கிறதே…. அதுவும் அவர் கேட்ட கேள்விக்கு எங்கிருந்து பதில் தேடுவாள். யாரிடம் கேட்பாள்… பதில் சொல்ல முடியாது வாயடைத்துப் போனவளை வேதனையுடன் பார்த்த காந்திமதி,

“எனக்கு வலித்தது, நான் தண்டிக்கப்பட்டேன், நான் துடித்தேன், என்று ஒவ்வொரு கணமும் யோசிக்கிறாயே, அவன் மீது உனக்கு உன்மையான காதலிருந்திருந்தால், குறைந்தது அவன் பக்கத்து நியாயத்தைக் கொஞ்சமாவது நீ புரிந்திருப்பாய்… ஆனால் நீ… இப்போது சொல்லு…” என்றவர் சுத்தவாரே இருந்த பொருட்களையெல்லாம் காட்டி,

“என் தம்பியின் காதலை விடவா உன்னது பெரிதாக இருக்கப்போகிறது… என் தம்பியை விடவா வேறுயாரும் உன்னை இந்தளவு காதலித்து விடப்போகிறார்கள். இல்லைம்மா… நிச்சயமாக இல்லை… அவனுடைய அன்புக்கு முன்னால், எதுவும் கிட்டே கூட நெருங்கி வர முடியாது. அவன் அன்பு அப்பழுக்கில்லாதது… குற்றம் அற்றது……” என்றவரின் குரல் வலியில் மெலிந்து ஒலித்தது. சற்று நேரம் அப்படியே நின்றவர்,

“வலிக்கிறதும்மா… அவன் வலியைப் போக்க என்னால் முடியவில்லையே என்று நினைக்கிறபோது, என்னால் தாள முடியவில்லை…” என்றவர், அழுகையில் கமறிய குரலைச் சமப்படுத்த முயன்று தோற்றவாறு,

“இனியாவது சந்தோஷமாக இருப்பான் என்று நினைத்தேன்… ப்ச்… இது வரைக்கும் அது எட்டாக்கனியாகவே போய்விட்டது…” என்று விட்டுத் தன் விழிகளை அழுந்த துடைத்து,

“எந்தக் குழந்தையும் கெட்டவர்களாகப் பிறப்பதில்லை மிளிர்… கெட்டவர்களாக ஆக்கப்படுகிறார்கள்… என் தம்பி நல்லவன்… மிக மிக நல்லவன்… அவனை அந்த நிலைக்குத் தள்ளியது உன் அப்பா… இந்தச் சமூகம்… நான்… எல்லோரும்தான்… உன் தந்தையைப் பழிதீர்த்து விட்டு ஒன்றும் அவன் மகிழ்ச்சியாக வாழவில்லை… உன்னை விட அவன்தான் துடித்தான்…” என்றவர்

“எப்போதாவது அவனுடைய முதுகைப் பார்த்திருக்கிறாயா?” என்று தன் மூக்கை இழுத்தவாறு, வலியுடன் கேட்டார் காந்திமதி.

ஒரு முறை மின்னலாகப் பார்த்திருக்கிறாள்… அந்த ஒரு விநாடியே அந்த முதுகின் தழும்புகளைப் பார்த்துத் துடித்திருக்கிறாள். அவள் ஆம் என்று தலையை ஆட்ட,

“அது எப்படி நடந்தது என்று உனக்குத் தெரியுமா?”

“ஏதோ தவறாக… தீக் கங்குகளில்… விழுந்ததாக..” அவள் முடிக்கவில்லை மெதுவாகச் சிரித்தார் காந்திமதி.

“தவறாகவா…” என்றவர் மேலும் சிரித்து,

“இல்லைம்மா… நெருப்புக் கங்குகளின் மீது போய்ப் படுத்தான்…” என்றதும் இவள் அதிர்ந்து போய், ..

“அம்மா… என்ன… என்ன சொல்கிறீர்கள்…” என்று துடித்துப் பதைத்தவாறு கேட்க,

“உன்னைச் சீரழித்தான் அல்லவா… தன் தேவதையை வலிக்கச்செய்துவிட்டோம் என்கிற குற்ற உணர்ச்சி, தவிப்பு, தன் மீது ஏற்பட்ட கோபம், நீ பட்ட வலியைத் தானும் படவேண்டும் என்கிற வெறி, எல்லாவற்றிற்கும் சேர்த்துத் தானே தனக்குத் தண்டனை கொடுத்துக்கொண்டான் கண்ணம்மா… நீ ஒரு முறைதான் வலியைச் சந்தித்தாய்… அவன் ஒவ்வொரு வருடமும் வலியைச் சந்திக்கிறான்.. புரியவில்லை…. என்று உன்னை வலிக்கச் செய்தானோ, அந்த நாளில் தன்னையே தண்டித்துக்கொள்வான்… திருக்கை வாலால் தன்னை அடிக்க வைக்க, ஈரானுக்குப் போய் வருவான் என்றால் நம்புவாயா? பைத்திய காரன்.. இதெல்லாம் எனக்குத் தெரியாது என்கிற நினைப்பு… அவனின் ஒவ்வொரு செயலையும் வைத்து அவன் நிலையைப் புரிந்துகொள்பவள் நான்… இது தெரியாதா எனக்கு…” என்றவரை வாயடைக்கப் பார்த்தாள் மிளிர்ம்ருதை. அதிர்ச்சியுடன் காந்திமதியைப் பார்த்து, ..

“தெரிந்தும் தடுக்காமலா இருந்தீர்கள்…” என்று சற்றுக் கோபத்துடன் கேட்க, மறுப்பாகத் தலையை ஆட்டிய காந்திமதி

“எதற்குத் தடுக்கவேண்டும்? அவன் செய்தது சின்னத் தப்பாமா? மாபெரும் குற்றம்… மன்னிக்க முடியாத தப்பு… ஒரு பெண்மையை அழிப்பது அத்தனை இலகுவா என்ன… அவன் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும்…” என்று கடுமையாகச் சொன்னவர், பின் சற்ற இளகி,

“அவனுடைய பழிதீர்க்கும் மனது… தப்பானதைச் செய்தது. நல்ல மனது தண்டனை கொடுக்க விளைகிறது… அதில் என் தம்பியை எண்ணி எனக்குப் பெருமைதான் மிளிர்…! இன்னொருவனால் தனக்குத் தண்டனை கிடைக்காது என்று அவனுக்குத் தெரியும்… அதுதான் தானே தன்னைத் தண்டித்துக்கொண்டான்… உனக்கொன்று தெரியுமா… செய்த குற்றத்திற்கு யாரோ ஒருவர் தண்டனை கொடுப்பதை விட, என் தவற்றை நானே உணர்ந்து எனக்கு நானே தண்டனை கொடுக்கும்  போது, அதன் வலி பலமடங்காக இருக்கும்… என் தம்பி செய்தது தவறல்ல… தப்பு… தெரிந்தே செய்த குற்றம்… மாபாதகம்… அனுபவிக்க வேண்டியது அவன் கடமை… அவன் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்… யெஸ்… அஸ் எச் சிஸ்டர் இட்ஸ் ஹேர்டஸ் மி லாட்… ஒரு பெண்ணாக, அதுவும் நேரடியாக அனுபவித்தவள் என்கிற ரீதியில் அவன் தண்டனையை வரவேற்கிறேன்… என்ன… உன் அப்பாவிற்கும் இப்படிக் கொடுத்திருக்க வேண்டும்… நல்ல காலம்… போய்ச் சேர்ந்து விட்டான்…” என்று வெறுப்புடன் கூறி விட்டு,

“இதோ பார் மிளிர்…! அவன் வசந்த காலமும் நீதான், அவனைச் சுழற்றி அடிக்கும் சூறாவளியும் நீதான்… அவனுடைய தீர்ப்பு உன் கையில்… அவன் வாழ்வதும், வீழ்வதும் உன் கரத்தில்தான் இருக்கிறது…” என்று கூற, அது வரை அவர் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தவளுக்குச் சற்றும் நா அசைவதாயில்லை.

அன்று, அவனிடமா நான் பெற்ற வலியைப் பற்றிக் கூறினேன் அவன் பட்ட வலியைவிடவா அவள் அதிகம் பட்டுவிட்டாள்…? ’ தாள முடியா வேதனையுடன் காந்திமதியைப் பார்த்த மிளிர்ம்ருதை,

“என்னிடம்… என்னிடம் சொல்லியிருக்கலாமே… அவர் எதையும் கூறவில்லைம்மா… என்னை வலிக்கச் செய்ததால், தன்னைத் தண்டித்தார் என்று அவர் சொல்லவேயில்லை…” என்றாள் குரல் கம்ம.

“சொல்லியிருந்தால் நம்பியிருப்பாயா?” என்று அடுத்தக் கேள்வியைக் கேட்க வாயடைத்துப் போனாள் அவள்.

உன்மைதானே… கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்திருந்தாலும் நம்பியிருக்கமாட்டாள்… அவள்தான் எல்லாம் நடிப்பு நடிப்பு என்று அவன் சொன்னவை அனைத்தையும் ஒதுக்கிவைத்தாளே… இதையும் எப்படி நம்பியிருப்பாள்…? முகம் கசங்க, மறுப்பாகத் தலையை ஆட்டியவளைக் கருனையுடன் பார்த்தார் காந்திமதி.

“பின்பு எப்படிச் சொல்வான் மிளிர்… இதைச் சொல்ல அவன் தன்மானம் இடம் கொடுத்திருக்காது கண்ணம்மா… தவிரத் தனக்கு அடிபட்டால் உனக்கும் வலிக்கும் என்பது அவனுக்குத் தெரியும். அப்படியிருக்கையில், உன்னை வலிக்கச் செய்ததற்காக இந்தத் தண்டனையை அனுபவித்தேன் என்று சொன்னால் நீ தாங்கியிருப்பாயா? உனக்காக அவன் காயப்படும் போதெல்லாம் மகிழந்துபோவான் மிளிர்… ஏதோ உனக்குப் பதில் கொடுத்த திருப்தி… உனக்கு நீதி பிறந்த மகிழ்ச்சி… அதனால் உயிர் போனாலும், உண்மையைச் சொல்லியிருக்க மாட்டான்…” என்றவர் மெல்லியதாகப் புன்னகைத்து ,

“ஒரு தம்பியாய் எனக்கு நியாயம் செய்து உன்னை வலிக்க வைத்தான்… ஒரு கணவனாய் தன்னைத் தண்டித்த உனக்கு நியாயம் செய்தான்… அதனால் அவன் மன்னிக்கப்படவேண்டியவன்தான் மிளிர்…” என்றவர் பெரு மூச்சொன்றை வெளிவிட்டு,

“ஆனால்… இன்று வரை ஒன்று மட்டும் புரியவில்லை மிளிர்… உன்னைக் கண்ட முதல் காதலில் விழுந்தவன், உனக்கு ஒன்றென்றால் துடித்துப் போபவன், உனக்கென்றால் சற்றும் தயங்காமல், தன் உயிரைக் கூடக் கொடுக்கக் கூடியவன், எப்படி உன்னை… வலிக்கச் செய்யத் துணிந்தான் அதற்கு எப்படி மனம் வந்தது… இது வரை அது எனக்குப் புரியாத புதிர்தான் மிளிர்… விரும்பியவளையே சிதைக்கும் அளவுக்குப் போயிருக்கிறான் என்றால், அவனுடைய மனநிலை எந்தளவு பாதிக்கப்பட்டிருக்கவேண்டும்…” என்றவரிடம் எப்படிக் கூறுவாள், அவன் போதை மருந்தை உட்கொண்டுதான் தன்னைச் சீரழித்தான் என்று.

“எது எப்படியாக இருந்தாலும். என் தம்பி நல்லவன்மா… பால் வெண்மை என்பது எத்தனை உன்மையோ, அதை விட உன்மையானது என் தம்பியின் காதல். உன்மையானது மட்டுமல்ல. சுத்தமானதும் கூட” என்று விட்டு ஒரு பெருமூச்சை வெளிவிட்டவர்,

“கூற வேண்டியதைக் கூறிவிட்டேன்… இனி அவனைப் புரிந்து கொள்வதும், புரிந்து கொள்ள மறுப்பதும் உன் பொறுப்பு… குற்றம் செய்யாமலே தண்டனை அனுபவித்தவன். அதன் பிறகும் தண்டனையை அனுபவிப்பவன்… இருபது வருடங்களாக வலியை மட்டுமே கண்டு வந்தவன்… அவன் தோளில் சுமந்த சுமைகள் ரொம்ப அதிகம் மிளிர்… இனியாவது அந்தச் சுமை இறங்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்…” என்று வலியுடன் கூறிவிட்டு, மீண்டும் கண்களைத் துடைத்தவாறு அந்த அறையை விட்டு வெளியேற, தன்னை மறந்து பொத்தென்று தரையில் விழுந்தாள் மிளிர்ம்ருதை.

அவளுக்கு மூச்செடுப்பதற்கே சிரமமாகிப் போனது…

‘மூச்சு எடுக்க வேண்டுமா என்ன? எங்கே தொலைந்து போனது என் சுவாசம்… எப்படித் தேடிக் கண்டுபிடிப்பேன்…? கடவுளே… எத்தனை பெரிய பாதகம் செய்துவிட்டேன்… அவன் உடலால் வருத்தினான்… ஆனால் நான்… என் வார்த்தைகளால் அவனைத் தண்டித்துவிட்டேனே… அவன் என்னை வலிக்கச் செய்ய முயன்றபோது கூடத் தன் சுய சிந்தனையை இழக்கச் செய்துதான் தண்டித்தான்… ஆனால் நான்.. சுயமாகச் சிந்தித்தவாறே, அவனை வார்த்தைகளால் உணர்வுகளால் அவனைக் கொன்று புதைத்துவிட்டேனே… அவனுடைய காதல் பொய் பொய் நடிப்பு என்று ஒதுக்கிவைத்தேனே… ஆனால்… என் காதல் அவனுடையதுடன் ஒப்பிடும் போது, வெறும் புள்ளியாகத் தெரிந்து தேய்ந்து போகிறதே… எனது காதலா பெரிது.. சீ சீ… அவனது காதலுடன் ஒப்பிடும் போது, என்காதல் தாழ்ந்து போடுகிறதே… காந்திமதி சொன்னது போல உண்மை காதல் தவறை மன்னிக்கும்… ஆனால் நான்… அவன் செய்த குற்றங்களைப் பட்டியலிட்டு வன்மத்தையல்லவா வளர்த்துவிட்டேன்… கொழும்பில், வேலைத்தளத்தில் என்னைக் கண்டபின்னும், அதன் பின்பும் அவன் தவித்த தவிப்பை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையே… எப்படியெல்லாம் கெஞ்சினான்… ஆனால் நான்… கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்காமல், பிடிவாதமாய், அவனை மட்டுமா தண்டித்தேன்… அவனுடன் சேர்ந்து காந்திமதி, ஆராதனா எல்லாரையும் அல்லவா தண்டித்து விட்டேன்… கடவுளே…” என்று கலங்கித் தவித்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று கூடத் தெரியவில்லை. அதை எண்ண எண்ண அவளால் தாள முடியவில்லை..

கால்களை மடித்து அதைச் சுற்றித் தன் கரங்களைப் போட்டவள், முழங்கால்களுக்கு இடையில் தன் தலையைப் பதித்துக் கேவியபோது, அன்று அவன் வலிக்கச் செய்ததை விடப் பலமடங்கு அதிகமாக இப்போது வலித்தது. காலில் கிடந்தவனைப் பித்தலை என்றெண்ணி உதைத்து எறிந்துவிட்டாளே… ஆனால் அதுதான் இத்தனை காலமாக அவள் ஏங்கி ஏங்கித் தேடித் திரிந்த பொற்கலசம் என்று அவளுக்குத் தெரியாது போயிற்றே…

அன்று கூட அவன் சொன்னானே…”எத்தனை முறை அடித்தாலும் எனக்கு வலிக்கும்மா… அந்த வலி, எல்லையைத் தாண்டக்கூடாதென்று அடக்கி வைத்திருக்கிறேன்… அது தாண்டினால், என்னை விட நீதான் துடித்துப்போவாய்…” யெஸ்… யெஸ்… அவன் சொன்னது மறுக்க முடியாத உன்மை… அப்போது அது புரியவில்லை… புரிந்த போது… அதைத் திருத்தும் வழி தெரியவில்லை…

அன்று என்னவெல்லாம் பேசினாள்… தன் வலி பெரிதென்று வாதிட்டாளே… அவனிடமே போய்த் தீக்காயம் பற்றிச் சொன்னாளே… சவுக்கால் அடிப்பது பற்றிக் கூடக் கூறினாளே… ஆனால் அவன் இத்தனையும் அனுபவித்துவிட்டு, ஒன்றும் கூறாமல் கேட்டுக்கொண்டிருந்தான்… .

அதை எண்ணும் போதே மிளிர்ம்ருதை பெரிதும் உடைந்து போனாள். அவன் பட்ட வலிகள் ஒவ்வொன்றும் கண் முன்னால் படமாய் விரிந்தன. நெருப்புக் கங்குகளின் மீது படுப்பது அத்தனை இலகுவா… எப்படித் துடித்திருப்பான். தேகமெல்லாம் எரிந்திருக்குமே… திருக்கை வால் சவுக்கால் அடிவாங்கினான் என்றால்… எப்படியெல்லாம் தவித்திருப்பான். அவனுடைய தோலைக் கிழித்து… நினைக்கும் போதே உடல் நடுங்கியது… அவனுடைய வலியுடன் தன் வலியை ஒப்பிடும் போது, அது ஒன்றுமேயில்லை என்பது போலத் தோன்றியது மிளிர்ம்ருதைக்கு.

அவன் பட்ட வேதனையை என்னும்போது, தன் ஆவியே தன்னை விட்டு நீங்கிவிடும் போலத் துடித்துப்போனாள் அந்தக் காரிகை. எதோ அவனுக்குப் பட்ட அடி தனக்குப் பட்டது போல வியர்த்துக் கொட்டியது. உள்ளமெல்லாம் நடுங்கியது… ‘ஓ… விதுலா… ஏன் உங்களை வலிக்கச் செய்தீர்கள்.. நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறதே… என் உயிரே கருகிப்போவது போலத் தோன்றுகிறதே… நான் என்ன செய்யட்டும்…’ என்று தன்னை மறந்து பிதற்றியவளுக்கு எதுவும் யோசிக்காத தோன்றவில்லை.

கலங்கி தவித்துத் துடித்து உருகி கிடந்தவள், சற்று நேரத்தின் பின் தலை நிமிர்த்திப் பார்க்க அவளுடைய சித்திரம் கண்ணில் பட்டது. அதற்கு மேல் முடிந்திருக்கவில்லை. மெது மெதுவாக அதிகரித்த கேவல், இறுதியில்

“வி… விதுலா…” என்று முடிந்தது.

“விதுலா… ஐ ஆம் சோ சாரி… இப்போது உங்களைப் புரிந்துகொண்டேன்… பளீஸ்… ப்ளீஸ்… என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்…” என்று மனதிற்குள் எண்ணிக் கதறியவளை அணைத்து ஆறுதல் சொல்ல அப்போது அபயவிதுலன் அருகிலிருக்கவில்லை.

What’s your Reaction?
+1
23
+1
0
+1
5
+1
0
+1
9
+1
7

Related Post

error: Content is protected !!