(43)
அழுத தன் பேத்தியைக் கரத்தில் ஏந்தியவாறு அங்கும் இங்குமாக நடந்துகொண்டிருந்த காந்திமதிக்கு, மிளிர்மிருதையையும், அபயவிதுலனையும் கண்டபின்புதான் பெரும் நிம்மதியானது.
கோபத்துடன் அவர்களைத் திட்டுதவற்காக வாய் எடுத்தவர், மிளிர்மிருதையின் முகத்தில் தெரிந்த மாற்றத்தைக் கண்டு, ஏதோ புரிவதும் புரியாததுமாக இருந்தது. சந்தேகத்துடன் அவளை நெருங்கித் தலை முதல் கால் வரை அளவிட்டார். அங்கே அவள் கழுத்தருகே இருந்த கண்டலைக் கண்டு, அவர்களின் அமைதிக்கான காரணம் புரிந்து போக, மகிழ்ச்சியில் இதயமே நின்றுவிடும்போலத் தோன்றியது அவருக்கு. தாங்க முடியாத மகிழ்ச்சியில், அங்கேயே குதியாட்டம் போடவேண்டும் போல வேகம் வந்தது. ஆனாலும் நம்ப முடியாதவராக மிளிர்மிருதைமிளிர்மிருதையை ஒரு எதிர்பார்ப்போடு பார்கக், அவளோ என்ன பேசுவது எதைப் பேசுவது, எப்படிப் பேசுவது என்று தெரியாமல் முகம் சிவக்கத் தரை பார்க்க, அபயவிதுலனோ, வேண்டும் என்றே தன் மனையாளின் பின்னால் அவளை உரசியவாறு நின்று தன் சகோதரியைப் பார்த்துத் தன் விழிகளை மூடித் திறக்க, காந்திமதியின், விழிகளில் ஆனந்தக் கண்ணீர்.
காந்திமதிக்குத் தெரிந்துவிட்டது என்பதைப் புரிந்தகொண்ட மிளிர்மிருதைக்கு அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல்,
“அ… அம்மா… நான்… வந்து… குழந்தைக்கு… தண்ணீர் எடுத்து… வருகிறேன்…” என்றவாறு அவ்விடத்தை விட்டு ஓட, அபயவிதுலனோ தன் சகோதரியை ஈ என்று முப்பத்திரண்டையும் வெளியே காட்டியவாறு தன் மனைவியின் பின்னால் இரும்பிழுத்தக் காந்தமாகச் செல்ல, காந்திமதி பெரும் மலர்ச்சியுடன் தன் பேத்தியின் வயிற்றில் முகத்தைப் புதைத்து எடுத்தவர்,
“நீங்கள் வந்த ராசி, உங்கள் பெரியப்பாவும் பெரியம்மாவும் சேர்ந்துவிட்டார்கள்…” என்று குதுகலித்தார்.
அங்கே காந்திமதியின் முகத்தைப் பார்க்க முடியாமல் வெட்கத்தில் வெளியே ஓடிவந்தவளுக்கு முதலில் எங்கே போவது என்று தெரியவில்லை. ஏதோ கிடைத்த கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தால், அது குளியலறை. எந்த அறையாக இருந்தால் என்ன, அப்போதிருக்கும் நிலையில் தனிமை தேவைப்பட்டதால் கைகழுவும் தொட்டியின் மீது சாய்ந்தமர்ந்தவாறு தன் பெருவிரலைக் கடிக்கத் தொடங்கினாள்.
எதற்காக இப்படி வெட்கப்படுகிறாள் என்று இவளுக்குத் தெரியவேயில்லை. இதெல்லாம் எல்லாக் கணவன் மனைவியருக்கும் இடையில் நடப்பதுதானே. இதில் என்ன விந்தை இருக்கிறது? என்று சமாதானப்படுத்த முயன்றாலும், இடம்பொருள் ஏவல் என்றில்லாமல் காதலால் தன்னைத் துளையிடும் கணவனைப் பார்க்கும் சக்தி ஏனோ இவளுக்கு இருக்கவில்லை.
ஒரு வேளை ஆரம்பத்தில் எல்லா மனைவியருக்கும் இந்த வெட்கம் இருக்குமோ? தவித்துக்கொண்டிருக்க, அந்தக் கிராதகனோ, அந்தக் கதவைத் திறந்து உள் நுழைந்து கதவைச் சாற்றிவிட்டுத் திரும்பித் தன் மனைவியைப் பார்க்க, மீண்டும் இவளுக்குள் பெரும் மாற்றம். தவிப்புடன் தன்னவனைப் பார்க்க, அவனோ அவளை நெருங்கி, அவள் பற்களுக்குள் படாதபாடு பட்டுக்கொண்டிருந்த பெருவிரலைப் பற்றி இழுத்து, அதில் மெல்லிய முத்தம் ஒன்றை வைக்க, மிளிர்மிருதை, மேலும் குழைந்து போனாள்.
இவனா அவளைத் தொடத் தயங்கினான் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா…? அவனோ மெதுவாக அவளை நெருங்கி அவளின் இருபக்கமும் கைகழுவும் தொட்டியின் மீது தன் கரங்களைப் பதித்து அவளோடு உரசும் அளவுக்கு நெருங்கியவாறு அவள் முகம் நோக்கிக் குனிய, இவளோ, தன் உதடுகளைக் கடித்து விட்டு அவனைப் பார்க்கும் சக்தியற்றறவளாக, எங்கோ பார்த்தவாறு,
“கன்ட்ரோல்… மாப்பிள்ளை… இது மருத்துவமனை… உங்கள் வீடில்லை… மிகவும் அதிகமாகப் போனீர்கள் என்றால் இன்னும் ஆறு வருடங்கள் காத்திருக்க வைத்துவிடுவேன் ஜாக்கிரதை…” என்று மிரட்ட,
“வட்…” என்று அதிர்ந்தவன், “ஆறு விநாடிகளே என்னால் பிரிந்திருக்க முடியவில்லை… ஆறு வருடங்களா… அம்மாடி…” என்று தன் நெஞ்சில் கை வைக்க, கொடுப்பிற்குள் நகைத்தவள், அவன் மார்பில் கரங்களைப் பதித்துத் தள்ளிவிட்டு, வெளியே ஓட முயல,
மீண்டும் அவள் கரத்தைப் பற்றிச் சுண்டி இழுக்க அவளுடைய பின்னுடல் அவனுடைய முன்னுடலோடு மோதி நின்றது. அவள் இடை கொண்டு வயிற்றோடு தன்னோடு இறுக்கியவன், அவளுடைய கூந்தலின் மீது தன் முகத்தைப் புதைத்து அதன் மென்மையில் தொலைய முயன்றவனாக,
“கொஞ்ச நாட்கள் இலங்கை போய் வரலாமா… நம்முடைய குடிலுக்கு… நீயும் நானுமாய்?” என்றான் மயங்கிய குரலில். இப்போது அவனை நோக்கித் திரும்பியவள், அவன் மார்பில் தன் கரங்களைப் பதித்து,
“இலங்கை என்றாலே கதறும் நீங்களா அங்கே போகக் கேட்கிறீர்கள்… அடேங்கப்பா… மழைதான் வரப் போகிறது…” என்றவளின் மூக்கோடு மூக்கை உரசியவன்,
“நீண்டநாள் ஏக்கம்டி… அங்கே நம் தேன்நிலைவைக் கொண்டாடவேண்டும் என்று எண்ணாத நாளில்லை தெரியுமா?” என்றவனைப் புன்னகையுடன் பார்த்தவள்,
“இரண்டு ஆறுவயது குழந்தைகளுக்கு அப்பாவாக இருந்துகொண்டு தேனிலவு கேட்கிறதா… உங்களை…” என்று சிரித்தவள் பின் அவன் விழிகளுடன் தன் விழிகளைக் கலந்து,
“நீங்கள் எங்கே கூப்பிட்டாலும் யோசிக்காமல் வருவேன் விதுலா…! அது நரகமாக இருந்தாலும்…” என்று கூறியவள், அவசரமாய் அவனுடைய பிடியை விலக்கிவிட்டு, மீண்டும் ஆராதனாவின் அறைநோக்கிச் செல்ல, மீண்டும் அவளை உரசியவாறு வந்து சேர்ந்தான் அபயவிதுலன்.
அங்கே காந்திமதி வெந்நீரால் குழந்தையைத் துடைத்துச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். குழந்தைக்கு இப்போது எல்லாம் சரியானதால், வேண்டாத அத்தனை மருத்துவக் குழாய்களையும் கழற்றிவிட்டிருந்தனர். ஆனாலும் குழந்தை மிகச் சிறியவளாகவே இருந்தாள்.
இவனைக் கண்டதும், பேத்தியை நன்றாகத் துடைத்து டயப்பர் போட்டு, புதிய ஆடை அணிந்து அவனிடம் நீட்ட, ஏதோ கிடைத்தற்கரிய பொக்கிஷமொன்றை ஏந்துவது போன்ற உணர்வில் வாங்கிக்கொண்டவனின் உடலில் மெல்லிய சிலிர்ப்பு. கூடவே மனமும் கனத்துப் போனது.
அவன் வாழ்வில் மறுக்கப்பட்ட அற்புதத் தருணமல்லவா அது… அவனுடைய உயிரில் பிறந்த குழந்தைகளைக் கரங்களில் ஏந்தும் பாக்கியத்தை அவன் பெறவில்லை.. ஆனால் அவனுடைய மகளாகிப்போனவளின் குழந்தையையாவது ஏந்தும் கொடுப்பினையை அவன் பெற்றிருக்கிறானே… ஏக்கத்துடன் தன் கரத்தில் தவழ்ந்த அந்தச் சின்னஞ்சிறு பிஞ்சை இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தான் அபயவிதுலன்.
அபயவிதுலனின் உணர்வைப் புரிந்துகொண்ட மிளிர்மிருதைக்கு நெஞ்சைப் பிசைந்தது.
“ரொம்ப அழகாக இருக்கிறாள் அல்லவா…?” என்று கேட்டு மார்போடு குழந்தையை அணைக்கத் தன் மாமனைக் கனிவுடன் பார்த்தாள் ஆராதனா.
“மாமா… இவளைப் பிடித்திருக்கிறதா? என்னைப் பார்த்துக்கொண்டது போல இவளையும் பார்த்துக் கொள்வீர்களா” என்று மென்மையாகக் கேட்க, பூரிப்புடன் நிமிர்ந்து ஆராதனாவைப் பார்த்தவன்,
“இதென்னம்மா கேள்வி… உன்னைப் போலவே அழகா இருக்கிறாள்டா… உன்னைத் தூக்கியது போலவே உணர்கிறேன்… பார்த்துக் கொள்வதென்ன… உயிருக்குள் வைத்துக் காத்துக் கொள்வேன் ” என்று விழிகள் பணிக்கக் குழந்தையைப் பார்த்தவாறே கூற, மலர்ந்த ஆராதனா தலைமாட்டில் நின்றிருந்த சித்தார்த்தை அண்ணாந்து பார்த்தாள்.
அவள் விழிகளால் எதையோ வேண்ட, அவன் தன் விழிகளை மூடித் திறந்து சம்மதம் கொடுக்கத் திரும்பி அபயவிதுலனைப் பார்த்தவள்,
“அப்போ… நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் மாமா…” என்றாள். முதலில் புரியாமல் குழம்பியவன், பின் அவள் என்ன சொன்னாள் என்பது புரிய, முகம் கோபத்தில் சிவந்து போனது. மிளிர்மிருதையும் அதிர்ந்து போனவளாக இருக்கையை விட்டு எழுந்திருந்தாள்.
“ஆராதனா… இது… என்ன பேச்சு… உனக்குப் பைத்தியமா?” என்று அவன் கண்டிப்புடன் கேட்க, அவள் மறுப்பாகத் தலையை ஆட்டி,
“இல்லை மாமா… நீங்கள் எங்களுக்குச் செய்தவை கற்பனைக்கும் எட்டாதவை… அப்படிப் பட்ட என் மாமாவிற்குப் பரிசாக நான் எதைக் கொடுத்தாலும் ஈடாகாது… அதுதான்… இவளை உங்களுக்கே கொடுக்க முடிவு செய்திருக்கிறோம்…” என்றவள் அபயவிதுலனின் கரத்திலிருந்த குழந்தையின் தலைமுடியை வருடிக் கொடுத்தவள்,
“உங்களுக்குக் குழந்தைகள் என்றால் உயிர் என்றும் எனக்குத் தெரியும். நம்முடைய ஆத்விகன் சாத்விகன் குழந்தையாக இருந்த போது அவர்களின் வளர்ச்சியை, மகிழ்ச்சியைப் பார்க்க உங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை… அக்காவின் மனநிலையில் அவளால் இன்னொரு குழந்தையை உங்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை… ஒவ்வொரு முறையும் என்னைப் பார்க்கும் போது உங்கள் விழிகள் ஏக்கத்துடன் அக்காவைப் பார்ப்பதை நான் கண்டிருக்கிறேன்.. அப்போது முடிவு செய்தேன் மாமா… இந்தக் குழந்தையைப் பெற்று உங்கள் கரங்களில் கொடுத்துவிடுவதென்று…” என்றவள் நிமிர்ந்து பார்க்க அபயவிதுலனின் கண்கள் கலங்கி இருப்பதைக் கண்டதும் சிரமப்பட்டு எழ, அவளுக்கு உதவிக்காகச் சித்தார்த் வந்து அவளைப் பற்றிக்கொண்டான்.
அவனுடைய கைப் பலத்தில் தன் மாமனை நெருங்கியவள், முகம் கசங்க நின்ற மாமனின் கன்னத்தில் தன் கரத்தைப் பதித்து,
“என் மாமா… எதற்கும் வருந்த கூடாது… எனக்கானதைப் பார்த்துப் பார்த்துச் செய்யும் என் மாமா… எதை எண்ணியும் ஏங்கக் கூடாது… அதனால்தான் இவளை உங்களுக்கே கொடுக்கிறேன்… இப்போது இந்தப் பட்டுக் குட்டி உங்கள் கரங்களிலேயே வளரட்டும் மாமா… என்னை வளர்த்தது போல அவளையும் நீங்கள் வளர்க்க வேண்டும்… இது என்னுடைய முடிவு மட்டுமல்ல… சித்துவின் விருப்பமும்தான்… நம்மை விட நீங்கள்தான் குழந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்வீர்கள்…” என்று அவள் உண்மையான அன்புடன் கூறத் தன் மருமகளை முறைத்தான் அபயவிதுலன். பின் சித்தார்த்தை ஏறிட்டு,
“சித்தார்த்… தப்பாக நினைத்துக்கொள்ளாதே… இவளுக்கு மூளை குழம்பிவிட்டது. அதனால்தான் எதையோ உளறுகிறாள்…” என்று கோபத்துடன் கூறத் தன் கரத்திலிருந்த மனைவியை அருகேயிருந்த இருக்கையில் அமர்த்தியவன், பின் அபயவிதுலனை நெருங்கி, அவன் தோள்களில் கரத்தைப் பதித்து,
“இல்லை அபயன்… அவள் சரியாகத்தான் சொல்கிறாள்… நீ இழந்ததைத் திருப்பத் தர முயல்கிறாள்… அவளுடைய முடிவில் எனக்கும் சம்மதம்தான்…” என்று கூற, அபவிதுலன் பேசும் திறனற்று அப்படியே சற்று நேரம் இருந்தான். பின் நிமிர்ந்து ஆராதனாவையும், சித்தார்த்தையும் மாறி மாறிப் பார்த்தவன், மிளிர்மிருதையிடம் தன் விழிகளைப் பதித்து,
“நான் இழந்தேன் என்று யார் சொன்னார்கள்… இன்னும் ஒரு வருடம்… ஒரே ஒரு வருடம்…” என்று குறிப்பாக எதையோ கூறுவது போலச் சொல்லிவிட்டு இப்போது தன் கரத்திலிருந்த குழந்தையைத் தூக்கி அதன் கன்னத்தில் தன் கூரிய மூக்கால் வருடியவாறு,
“இவளைப் போலவே அழகான குட்டி தேவதையை நாங்கள் பெற்றுத் தருகிறோம்… வேண்டுமானால் அவளை நீங்கள் வளருங்கள்” என்று கூற, மற்றவர்களுக்கென்னவோ, மிளிர்மிருதைதான் வெட்கத்தில் உடல் சிவந்து போனாள்.
இவனோ தன் கடைக்கண்ணால் மனைவியைப் பார்க்க அவள் சிவந்த முகத்தைக் கண்டவனுக்கு வானமே வசப்பட்டுப் போனது.
“மாமா…” என்று வியப்பும் மகிழ்ச்சியுமாக ஆராதனா தன் வலியையும் மறந்து மகிழ்ச்சியில் கத்த, காந்திமதியோ, நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியில் அவர்களைப் பார்க்க,
“ஹூரே… நமது அபயன் வயதுக்கு வந்திட்டான்” என்று கத்த, அந்தக் கூக்குரலில் மருத்துவமனையே ஒரு கணம் கிடுகிடுத்து நடுங்கியது.
அவர்களின் கூக்குரலில் குழந்தை பயந்து அலறத் தொடங்க அபயவிதுலன்,
“ஷ்… ஷ்… கண்ணம்மா…” என்றவாறு தன் மார்போடு குழந்தையை அணைத்தவாறு சித்தார்த்தை முறைக்க, அவசரமாக அவன் தன் வாயை மூடிக்கொண்டாலும் வியப்பு மாறாமல் அபயவிதலனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
தன்னைச் சுற்றியிருந்தவர்களின் பார்வையைத் தாங்க முடியாது சங்கடத்தில் சற்று நெளிந்தவன், குனிந்து தன் மார்போடு அணைத்திருந்த குழந்தையை ஆவலுடன் பார்த்தான். கூடவே குழந்தையின் தலைமுடியை வருடிக் கொடுத்து,
“இவள் என்னுடைய மகள்தான் அம்முக்குட்டி… இவளுக்குச் செய்யவேண்டிய அனைத்து சீரும் நான்தான் செய்வேன்… என் குழந்தைகளுக்கும், இவளுக்கும் எந்தப் பாரபட்சமும் பார்க்க மாட்டேன்…” என்று கூறிவிட்டுக் குழந்தையைத் தொட்டிலில் கிடத்திவிட்டுப் பின் நிமிர்ந்து,
“வெல்… நான் என் மனைவியை அழைத்துச் செல்லப்போகிறேன்…” என்று கூற, ஆராதனா க்ளுக் என்று சிரித்துவிட்டாள். மிளிர்மிருதைக்கோ அவனுடைய நேரடியான அழைப்பில் சீற்றம் தோன்றினாலும், காந்திமதியின் புன்னகையையும், ஆராதனாவின் கிண்டலையும் கண்டதும் அவளுக்கு வெட்கத்தில் உயிரே போய்விடும் போல இருந்தது.
அபயவிதுலன் மற்றவர்களின் கிண்டல் பார்வையைக் கண்டு, கோபம் கொண்டவனாக,
“ஷ்… எதற்கு இந்தக் கிண்டல் சிரிப்பு… பக்கத்து வார்டில் இருப்பவளையா கூப்பிட்டேன்… என் மனைவியைத்தானே கூப்பிட்டேன்…” என்று கெத்தாகக் கேட்டவன் திரும்பி சொன்னவளை நோக்கிக் கரத்தை நீட்டி, “கம்…” என்றான்.
மறுக்காமல் தன் கணவனின் கரத்தில் கையை வைக்க, அதை இறுகப் பற்றிக்கொண்டவன், தன் சகோதரியை ஏறிட்டான். அவரோ, அதே நிறைவுடன் அவனைப் பார்த்து விழிகளால் வாழ்த்த, தன் தலையை மேலும் கீழுமாக ஆட்டி தன்னவளோடு இணைந்து வெளியேறத் தொடங்கினான்.
(44)
இதோ தேன் நிலவுக்காக, அவளை அழைத்துக்கொண்டு கண்டிக்கு அந்தக் குடிலுக்கே வந்திருந்தான் அபயவிதுலன். அவர்களுக்கே அவர்களுக்கான பகுதி அந்தக் குடில். அங்கே யாருமே நுழைய முடியாத வகையில், அந்த மலையில் ஒரு படி உயரமான பகுதியில் கட்டியிருந்தான். குடிலுக்குச் சற்றுத் தொலைவில் பாறைகளின் இடையேயாக அருவி போல வெந்நீர் கொட்டிக்கொண்டிருக்க, வேலியாக அழகிய மலர்களின் கொடிகள் படர்ந்திருந்தன. போதாததற்கு அவன் அமைத்த குடில் முழுவதும் அழகிய மலர்களைச் சுமந்த கொடிகள் அங்கும் இங்கும் தாறுமாறாக ஓடிக்கொண்டிருக்க, அந்த அழகைக் காணத் தவம் இருக்கவேண்டும்.
அவர்களின் பகுதி வந்ததும், அபயவிதுலன் கரத்திலிருந்த பெட்டிகளைக் கீழே போட்டுவிட்டு, மிளிர்மிருதையின் பாதம் தரையில் படாதவாறு தன் கரங்களில் ஏந்திக்கொண்டவன், அதற்கு மேல் அவளை எதற்கும் பேசவிடவில்லை. புதிய புதிய அத்தியாயங்கள், புதிய புதிய காவியங்கள் அவளைக் கொண்டு படைத்தான். படித்தான். படிப்பித்தான். எதை எதையெல்லாம் இழந்தானோ அதையெல்லாம் மீளப்பெற முயன்றான். இப்போது அவளுடைய அச்சத்தை அவன் சுத்தமாக வடித்துத் துடைத்து எறிந்ததால், நிம்மதியாகவே தன் கணவனின் அணைப்பில் விழிகளை மூடினாற் மிளிர்மிருதை.
ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மிளிர்மிருதையின் எழில் முகத்தில் அப்போது மலர்ந்த சூரிய கதிர்கள் இளஞ் சூட்டுடன் மூடிய விழிகளுக்கூடாகத் துளைக்க, மெதுவாகத் தூக்கம் கலைந்து அசைந்தாள் அந்தத் தேவதை. கூடவே மலர்களின் அப்பழுக்கில்லா வாசனை நாசியை வருட என்றுமில்லாதவாறு இதயத்தில் ஒரு நிறைவு தோன்ற, அது முகத்தில் மலர்ந்து தெரிய, இதழ் விரிக்கும் மலராகத் தன் விழிகளைத் திறந்தாள் அந்தக் கோதை.
மார்பில் பழக்கமான ஒரு வித அழுத்தம் அவளை உணர்வு கொள்ளச் செய்ய, சற்றுக் குனிந்து பார்த்தாள். அவள் உயிரானவன், அவள் மார்பைப் பஞ்சணையாக்கி அவள் முகத்திற்கு எதிர்ப்பக்கமாகப் பார்த்தவாறு உறங்கிக்கொண்டிருந்தான்.
உதட்டில் எல்லையில்லா மலர்ச்சியால் மெதுவாய் விரிந்து நகைக்கத் தன்னையும் மீறி அவன் சுறுள் குழலை வருடிக் கொடுத்தவளுக்கு உள்ளத்துடன் சேர்ந்து உடலும் சிலிர்த்துப் போனது.
தன் மார்பில் தன்னை மறந்து உறங்கிக் கிடப்பவனைத் தாங்கிக் கொண்டவளுக்கு, அவனுடைய பாரம் கூடப் பெரும் தித்திப்பாகவே இருந்தது. தன்னையும் மறந்து, இவள் தலை வருடலில் சற்று உறக்கம் கலைந்த அபயவிதுலன், அவளைச் சுற்றிப் போட்டிருந்த தன் இடது கரத்தை விலக்கி விழிகளைச் சற்றும் திறக்காமல், கரங்களால் அவள் முகத்தை வருடி உள்ளங்கை அவள் முகத்தைக் கவ்வும் விதமாகப் பிடித்துப் பின் விழிகளை உணர்ந்து நாசியை அறிந்து உதடுகளைப் புரிந்துக் கழுத்தை வருடி இன்னும் தன்னவளின் சொர்க்க அணைப்பில்தான் இருக்கிறோம் என்று உறுதி செய்து கரத்தைக் கீழே இறக்கியபோது, அவனுடைய முகத்தில் எல்லையில்லா இன்பத்தின் பரவசம்.
“ஓ மை பேபி… இட்ஸ் நாட் எ ட்ரீம்…” என்று முணுமுணுத்தவன், தன் தலையை அவள் முகம் நோக்கித் திருப்பியவன், தலையை வசதியாக வைத்தவாறு அதே ஆனந்தப் பரவச நிலையில் மெதுவாகத் தன் விழிகளைத் திறந்தான்.
திறந்தவனின் விழிகளில் மலர்ந்த தன் கோதையின் முகம் தெரிய, தாயைக் கண்ட குழந்தை ஒரு புன்னகை சிந்துமே, அதை விட அப்பழுக்கில்லாத ஒரு அன்புப் புன்னகையைச் சிந்தினான் அக் கந்தர்வன்.
“ஹாய்… மை வேர்ல்ட்… குட் மார்னிங்…” என்றவனுக்கு அப்போதுதான் இரவு முழுவதும் அவள் மீது தலை வைத்து உறங்கிவிட்டோமே என்பது மண்டைக்குள் உறைத்தது. அவன் கனமானவன், எப்படித் தாங்கினாள்? பதறியவனாக எழ முயல, அவளோ, அவனுடைய தலையைப் பற்றி அணைத்தவாறு, காயம் பட்ட முதுகைத் தன் தளிர் கரங்களால் வருடிக் கொடுத்து, மென்மையாகப் புன்னகைத்தவள், அந்தப் புன்னகையுடன் விழிகளை மூடியவாறே மீண்டும் உறங்கத் தொடங்கினாள்.
அவளை விடக் குறைந்தது இரண்டு மடங்காவது பாரமாக இருப்பான். இவனை அவள் எப்படித் தாங்குவாள்?
“ஹே… மிருதா… நான் வெய்ட்டடி… வலிக்கும்… தள்ளியே படுக்கிறேனே…” என்று மெதுவாகக் கிசுகிசுத்தாலும் கிடைத்த சொர்க்கத்தை இழக்கவும் அவன் தயாரில்லை. அதை உணர்த்துவது போல, அவளுடைய தலையைச் சுற்றி இடது கரத்தைக் கொண்டு சென்று அவளுடைய வலது கன்னத்தை வருடிக் கொடுக்க, அவளோ விழிகளைத் திறக்காமலே,
“கொடிக்குக் காய்கள் பாரமாவதில்லை… அது போலத்தான் நீங்கள், ஆத்வி, சாத்வி ஒரு போதும் எனக்குப் பாரமாகப் போவதில்லை. இப்போதுதான் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா… விதுலா…! இழந்த ஒன்றை மீள எடுத்துக் கொண்டது போல நிறைவாக இருக்கிறது. இப்போது என்னிடம் யாராவது உலகில் மகிழ்ச்சியாக இருக்கும் நபர் யார் என்று கேட்டால் அது நான் என்றுதான் சொல்வேன் தெரியுமா?” என்றவள் விழிகளைத் திறந்து சற்றுத் தலையைத் தூக்கித் தன்னவனின் முகத்தைப் பார்த்தாள்.
அவனோ புன்னகை சற்றும் வாடாமல் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். அதைக் கண்டு மேலும் மலர்ந்தவள், மீண்டும் தன் தலையைப் பின்னால் சரித்து,
“என்னுடைய காதல் பொய்யில்லை விதுலா…! அதை நினைக்கும் போது எத்தனை ஆனந்தமாக இருக்கிறது… முன்பெல்லாம் தகுதியில்லாதவன் மீது என் அன்பை வைத்துவிட்டேனே என்று குன்றாத நாளில்லை…” என்றவளின் விழிகளின் ஓரம் கண்ணீர் வடிந்து போக, அவளுடைய உணர்வைப் புரிந்துகொண்டவனின் உடல் இறுகிப் போனது.
அவசரமாக அவள் அணைப்பிலிருந்து விலகியவன், அவள் கால் பாக்கமாகச் சப்பாணி கட்டி அமர்ந்து முகம் கறுக்க நிற்க அதைக் கண்டவளின் இதயத்திலும் இரத்தம் வடிந்தது.
அதைப் பார்க்க முடியாது எழுந்தவள், எழுந்த வேகத்திலேயே அவன் மடியில் தலைவைத்துப் படுக்க, அவனுடைய இறுக்கம் சற்றுத் தளர்ந்தது. கூடவே அவள் முடியை வருடிக் கொடுத்தவன்,
“தகுதியில்லா இடம்தான்மா… இந்த ராட்சஷனுக்கு… நீ ஏற்றவள் இல்லை…” என்று கூற வேகமாக அவன் முகம் பார்த்து நிமிர்ந்து படுத்தாள் மிளிர்மிருதை.
“இல்லை விதுலா…! அப்படிச் சொல்லாதீர்கள்… எனக்குரிய ராமனும் நீங்கள்தான், எனக்கேற்ற ராவணனும் நீங்கள்தான். உங்களோடு பிற ஆண்களை ஒப்பிடும் போது…” என்றவள் தன் விழிகளை அவன் முகத்தைப் பார்க்குமாறு மேலே கொண்டு சென்று வலது கரத்தால், அவன் கன்னத்தை வருடிக் கொடுத்து,
“எத்தனை வலிகளைக் கடந்து வந்துவிட்டோம்… இப்போதுதான் நிழல் கிடைத்து ஓய்வு எடுப்பது போல நிம்மதியாக இருக்கிறது… திருப்தியாக இருக்கிறது விதுலா…! இந்த மகிழ்ச்சி நம் இறுதிக் காலம் வரைக்கும் தொடரவேண்டும்… என்றவள் சரிந்து படுத்தவாறு பெரும் நிம்மதியுடன், தன் கணவனின் அப்பழுக்கில்லா அன்பைப் பெற்று விட்ட பேரானந்தத்துடனும், முன்தினம் அவன் உறங்க விடாது செய்ததின் பலனாகத் தன் விழிகளை மூட சற்று நேரத்தில் நிம்மதியுடன் உறங்கிப்போனாள்.
அவள் உறங்கிவிட்டது புரிய, அபயவிதுலன் அவளுடைய தூக்கம் கலைந்துவிடாத வகையில் கூந்தலை நீண்ட நேரமாகவே வருடிக் கொண்டிருந்தான்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அபயவிதுலன் தன் மடியில் தன்னவளைத் தாங்கியிருக்க மெதுவாக உறக்கம் கலைந்து எழுந்தாள் மிளிர்மிருதை. தன்னைத் தாங்கியிருந்த கணவனைக் கண்டு சிரித்தவள், கரங்களை விலக்கி முறுக்கிச் சோம்பல் முறித்தவாறு அவனிடமிருந்து விலகினாள். தன்னைக் காதலுடன் பார்க்கும் கணவனை முழந்தாளிட்டு அமர்ந்து இறுகத் தன்னோடு அணைத்து விடுவித்தவளுக்கு அப்போதுதான் குளிரே உறைத்தது.
“என்ன விதுலா இப்படிக் குளிர்கிறது…” என்று சிணுங்கியவள், கீழே இறங்கி அவன் முன் தினம் போட்டிருந்த ஷேர்ட்டை எடுத்து அதற்குள் தன்னைப் புதைத்துக்கொண்டவளாக வெளியே வந்தாள்.
அதிகாலை அவளை இரு கரம் நீட்டி அழைக்க, அங்கே கண்ட காட்சியில் தன்னை மறந்துபோனாள் மிளிர்மிருதை.
முன்தினம் வந்தபோது இதை ரசிக்க அபயவிதுலன் நேரம் கொடுக்கவில்லை. இப்போது காலைப் பனியில், புகார் படிந்திருக்க, மங்கிய புகைப்படங்களில் தெரியும் மலர்கள் பொல, பல வர்ண நிறங்களில் பூத்துக் குலுங்கிய அம் மலையின் எழிலைப் பலமடங்கு அதிகமாக எடுத்துக் காட்ட, அதனோடு, சில்லிட்டிருந்த குளிருக்குப் போட்டியாத் தன் பொன் கதிர்களை இவளை நோக்கிப் பரப்பத் தொடங்கியிருந்தான் கதிரவன். அதனால் வெப்பம்கூடச் சற்றுக் குளிர்மையாகவே அவள் மேனியில் பட்டது. கூடவே ஈர வாசனையுடன் மலர்களின் சுகந்தமும் சேர்ந்து நாசிக்கூடாகப் பயணித்து நுரையீரலை நிரப்ப, சற்றுத் தொலைவில் கேட்ட அருவியின் சத்தம் ஏதோ தேவலோகத்தில் இருப்பது பேன்ற உணர்வைக் கொடுக்க விழிகளை மூடி அந்தச் சுத்தமான காற்றை உள்வாங்கித் தன்னைப் புத்துயிர் பெறச் செய்தால் அபயவிதுலனின் உயிரானவள்.
கூடவே அவனுடைய ஷேர்ட்டிலிருந்து வீசிய அவன் மெல்லிய வியர்வை மணம் கூட, அவளுக்கு ஒரு வித போதையையும் பாதுகாப்பையும் கொடுக்க, தன்னை விட இரண்டு மடங்கு பெரியதான ஷேர்ட்டைத் தன் கரங்களால் இழுத்துச் சுருக்கி மார்புக்குக் குறுக்காகக் கட்டியவாறு இறங்கி அழகைத் தரிசித்தவாறு நடக்கத் தொடங்கினாள்.
கொடிகளால் அமைக்கப்பட்ட வேலியினருகே வந்தவள் சற்றுக் கீழே குனிந்து பார்த்தாள். குடில்கள் வரிசையாக அழகாக அமைக்கப்பட்டிருந்தன. கூடவே மனித நடமாட்டங்களும் அதிகமாக இருந்தன.
இந்தக் குடில் பற்றி, டூரிசம் என்கிற உலகநாடு சார்ந்த பத்திரிகையில் தனிக் கட்டுரையாக வந்தது மட்டுமன்றி, உலகின் சுற்றுலாப் பயணிகளின் முழு அபிமானத்தையும் பெற்றிருந்ததால், இதன் மகிமை முன்னையதை விடப் பல மடங்கு அதிகரித்திருந்தது. கூடவே இக் குடிலால், இலங்கை சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவர்ந்ததால், அரச பாதுகாப்பும் இந்த மலைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
அது தன் கணவனின் இடைவிடாத முயற்சி என்பதைப் புரிந்துகொண்டவளின் உள்ளம் பெருமையால் விம்ம, மெதுவாக அந்த இடத்தை ரசித்தவாறு நடக்கத் தொடங்கினாள்.
சொற்ப நேரத்தில், பாலின் மணத்திற்கு இழுபட்ட பூனையாக அபயவிதுலன் தன்னவளைத் தேடிக்கொண்டு அங்கே வந்தான். அங்கே ரவிவர்மனின் ஓவியமாக நின்றிருந்தவளைக் கண்டதும், ஒரு கணம் தான் மூச்செடுப்பதையே மறந்து சொக்கிப்போய் நின்றான்.
ஒரு பக்கமாக அவளுக்குச் சாமரம் வீசும் சூரியன். மறு பக்கம் தன்னவளின் உடலை எழிலுடன் அணைத்திருக்கும் புகார். மறு பக்கம், இனிய மணம் பரப்பி அவளை எழிலாய் மாற்றிக்கொண்டிருந்த மலர்க் கொத்துக்கள், சுற்றிவரப் பாதுகாப்பாய் நிமிர்ந்து நின்ற மலைகள்… ஆஹா… அவன் தேவதை இயற்கையின் எழிலில் இன்னும் மிளிர்கிறாளே… தன்னை மறந்து மிளிரை நெருங்கியவனின், அவள் வயிற்றுக்கூடாகத் தன் கரங்களைக் கொண்டு சென்று இறுகத் தன்னோடு அணைத்துக்கொண்டவன் அவள் தேகம் தன் உடலோடு முட்டி நின்றதும், நன்கு குனிந்து அவள் தோளில் தன் நாடியைப் பதித்த
“ஹே… இயற்கைக்கே நீ சவால் விடுகிறாய் மிருதா…” என்றான் கிசுகிசுப்பாய். இவளோ புரியாமல் திரும்பிப் பார்க்க இவள் கன்னம் அவன் கன்னத்தோடு உரசியது. ஒரு நாள் தாடி, அவள் மென் கன்னங்களை உரச, அதில் கூட ஒரு வித இன்பம் தோன்றியது மிளிர்மிருதைக்கு.
மனம்தான் எத்தனை விசித்திரமானது. ஒருவரைப் பிடிக்காத போது அவர் செய்யும் நன்மைகள் அனைத்தும் தப்பாகப் போனது. அதே நபரைப் பிடித்துவிட்டால், செய்த தவறுகள் அனைத்தும் நல்லதாகவே மாறிவிடுகிறன.
அந்தச் சுகத்தில் தன் விழிகளை மூட அவனோ கிடைத்த இடத்தில் மடம் பிடுங்குபவனாக, அவள் கன்னத்தோடு தன் கன்னம் உரசி, அவள் மென்மையை உணர்ந்தவாறு, தன் கரத்தை அவளைச் சுற்றிப் போட்டு, தன்னோடு இறுக்கி அணைத்தவன்,
“உன்னையும் இந்த இடத்தையும் பார்க்கும் போது பாட்டுப் பாடத் தோன்றுகிறதடி…” என்றான் கிசு கிசுப்பாக.
“பாட்டா… நீங்களா… சுத்தம்…” என்று தன்னைச் சுற்றிப் போட்டிருந்த கரத்தின் மீது தன் உள்ளங்கரங்களை அழுந்த வைத்தவாறு கிண்டலடிக்க, மெல்லியதாகத் தன் தலையால் அவள் தலையை முட்டி விலக்கியவன், நிமிர்ந்து அவளைத் தன் மார்பில் விழுத்தி,
“மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு பனி விழும் காடு
ஒத்தையடி பாத உன் கூடப் பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே”
“மரங்கள் நடுங்கும் மார்கழி எரிக்க
ரத்தம் ஒரையும் குளிரும் நிறுத்த
உஷ்னம் யாசிக்க உடலும் இருக்க
ஒத்த போர்வையில இருவரும் இருக்க
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே”
என்று தன் ஆழமான குரலால் மென்மையாய் பாடியவன்,
“இப்படியே இருந்துவிடத் தோன்றுகிறதடி… எனக்கு” என்று கிசுகிசுக்கச் சிலிர்த்துப் போனாள் மிளிர்மிருதை.
“ஓ விதுலா…!” என்றவாறு திரும்பி அவனை இழுத்து அணைக்க, ஏனோ மனத்தின் நிறைவு பொங்கி கண்களில் வழிந்தனவோ.. இரு துளி கண்ணீர் வழிய அதைக் கண்டு அவளைக் கடிய,
அவளோ தன் கண்களைச் சிமிட்டி கண்ணீரைத் தட்டிவிட்டவாறு, அவன் கழுத்திலிருந்து தன் கரத்தை சற்றும் விலக்காமல், அவனை அண்ணாந்து பார்த்து,
“ஆனாலும் உமது பாடலில் பொருள் குற்றமிருக்கிறது பாடகரே…” என்றாள் மூக்கை உரிஞ்சியவாறு. இவனோ புரியாமல்,
“என்ன குற்றம் தேவி…”
“ம்… இது காலை நேரம்… ஆனால் நீரோ பௌர்ணமி இரவு என்று பாடிவிட்டீர்…” என்றாள் இன்னும் பழைய நிலைக்கு வராமல்.
“ஆமாம் ரொம்ப முக்கியம்… வாடி குளிக்க…” என்றவாறு அவளைத் தன் கரங்களில் எந்த, அவளோ அவனுடைய வேகத்தில் கிளுகிளுத்துச் சிரிக்க, அந்தக் கள்வனோ, அந்தச் சிரிப்பை தன் உதடுகளால் நிறுத்தி, அவள் உடலை சிவக்கவைத்தவாறு,வேகமாக வெந்நீர் அருவியை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
(45)
ஆறு வருடங்களுக்குப் பிறகு
சென்மைக்கல் மருத்துவமனை மகப்பேறு அறையில், உடல் முழுவதும் இரத்தம் தோய உலகையே கிடுகிடுக்க வைத்தவாறு வீறுட்டழுதுகொண்டு பூமியில் வந்து விழுந்த தேவதையின் தொப்புள் கொடியைக் கூட அறுக்காது கரங்களில் ஏந்தியிருந்தான் அபயவிதுலன்.
அவனுடைய விழிகளோ பொங்கி வழிந்துகொண்டிருந்தன. மாறாக அவனுடைய உதடுகளோ அழுகையும், வேதனையும் மகிழ்ச்சியும் போட்டிப்போட அவை கலந்து நகைத்துக்கொண்டிருந்தன.
தன் கரத்தில் புத்தம் புதிய பெண் குழந்தை கிடக்கிறது என்பதை நம்ப முடியாமல்
“ஓ மை லிட்டில் கேர்ள்… தாங்க் யூ.. தாங்க் யூ சோ மச் டு சூஸ் மீ அஸ் யுவர் ஃபாதர்… (ஓ… இளம் தேவதையே… உனக்கு நன்றி சொல்கிறேன்… என்னை உன் தந்தையாகத் தேர்ந்தெடுத்ததற்கு)” என்று குரல் கமறச் சொன்னவனுக்குத் தன் மகிழ்ச்சியை எப்படி அடக்குவது என்று தெரியவில்லை.
தன் மகளிடமிருந்து விழிகளை அகற்ற முடியாமல் அப்படியே நின்றவனிடம்,
“மிஸ்டர் அபயவிதுலன்… குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டவேண்டும்…” என்றவாறு அவனிடம் கத்தரிக்கோலை நீட்ட, அதை வாங்கித் தன் குழந்தையைத் தாதியிடம் கொடுக்காமல் ஒற்றைக் கரத்தில் ஏந்தியவாறு தாய்க்கும் சேய்க்குமான தொப்புள் பந்தத்தை அறுத்து, உயிர் பந்தத்திற்கு விளக்கேற்றி வைத்தான்.
பின் குழந்தையைக் குளிப்பாட்டுவதற்காகக் கேட்க, வந்த தாதியிடம் மனமில்லாமலே தன் குழந்தையைக் கொடுத்துவிட்டுச் சோர்வுடன் படுத்திருந்த தன் மனையாளிடம் பாய்ந்து நெருங்கினான் அபயவிதுலன்.
ஒரு நீண்ட நிமிடம் அவள் முகத்தையே அன்பு பொங்கப் பார்த்தவன், அதற்கு மேல் தாங்க முடியாதவனாக அவள் படுக்கையில் நெருங்கியமர்ந்த அவள் கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்து, குரல் விக்க,
“சா… சாரிடி… பட்… தாங்க்யூ” என்று கூறியவனின் வலி புரிந்தவளாக, புன்னகையைச் சிந்தியவள், ட்ரிப் ஏறாத மறு கரம் கொண்டு அவன் முதுகை வருடிக் கொடுத்து,
“ஆர் யு ஹாப்பி நவ்…” என்றாள் கனிவுடன். தன் தலையை நிமிர்த்தாமலே தன் கண்ணீரைத் துடைத்தவாறு ஆம் என்பது போலத் தலையை ஆட்டினாலும் சலுகையுடன் தன் மனைவியின் கழுத்து வளைவில் விழுந்திருந்தவன் எழுந்து கொள்வதாக இல்லை. அவனுக்கு எழுந்து கொள்ளவேண்டும் போலவும் தோன்றவில்லை.
எத்தனை வருடத் தவம் நிறைவேறியிருக்கிறது…
ஆத்மாவும், உயிரும் மட்டுமாய்க் கலந்த அவர்கள் இல்லற வாழ்க்கை பின் உடலாலும் இணைந்த பின் இருவரும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றிருந்தனர் என்றுதான் சொல்லவேண்டும்.
மறு மாதமே, கர்ப்பம் என்பது புரிந்து, அதைத் தனிமையில் அவனிடம் கூறியபோது, அவன் பட்ட ஆனந்தம். இப்போது நினைத்தாலும் உள்ளம் உவகையில் பொங்கும். ஒவ்வொரு கணத்தையும் தன் மனைவியின் அருகேயிருந்து இழந்த அந்தத் தருணத்தை முடிந்தவரைத் தித்திக்க அனுபவிக்கத் தொடங்கினான். காந்திமதியைக் கூட விடாது அவனே அவளுக்கான அத்தனை காரியங்களையும் செய்தான். சொல்லப்போனால் அவளைப் பெற்ற தாயாகிப் போனான்.
வாந்தியெடுத்த போது, அதைச் சுத்தப்படுத்துவதிலிருந்து, பின் முதுகு வலித்தபோது, அதை அழுத்திக் கொடுத்துச் சமப்படுத்துவதிலிருந்து, வீங்கிய கால்களைத் தன் மடியில் ஏந்தி ஒத்தடம் கொடுப்பதிலிருந்து, வெளியே செல்லும்போது காலணி அணிவிப்பது வரை அவனாகிப்போனான். குழந்தைகளைப் பள்ளிக்கூடம் அழைத்துச் செல்வது வரை அவனுடைய பொறுப்பாயிற்று.
குழந்தைகளும் தங்களுக்கு வரப்போகும் புதுவரவால் மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் சென்றதால், முடிந்தவரை தங்கள் குறும்பைக் குறைத்துக் கொஞ்சம் பொறுப்பானவர்களாக மாறத் தொடங்கினர்.
பிரசவ வலி தொடங்கியபோது அபயவிதுலன் பட்ட அவஸ்தை… ஏதோ தானே பிரசவத்திற்குச் செல்வது போலத் துடித்துப்போனான். அவள் இடையை வருடி, இதமாய்ப் பேசி என்னவெல்லாம் செய்து பார்த்தாலும், அவள் இறுதி நேரத்தில் தன்னை மறந்து அலறிய அலறலில் அவனுக்கு ஈரக் குலையே நடுங்கிப் போயிற்று.
அன்று விதைத்த விதை முழுவதுமாய் ஆண்மகவாய் மண்ணில் உதித்தபோது அது பெண் குழந்தையில்லை என்கிற ஏக்கத்தை மறைத்து அவன் வரம் கேட்டான்… கிடைத்து விட்டது… என்று தன்னைச் சமாதானப் படுத்தியவனுக்கு இரண்டு வருடங்கள் கழிய மீண்டும் அவள் கர்ப்பம் என்றபோது. பேரானந்தம்தான். மீண்டும் அவளை உள்ளங்கையில் தாங்கியபோதும் அது பெண்குழந்தையாக இருக்கவேண்டும் என்று காந்திமதி முதல் மிளிர்மிருதை வரை வேண்டாத தெய்வமில்லை.
ஆனால் அதுவும் ஆண் குழந்தையாகிப் போக அபயவிதுலனின் முகத்தில் ஈயாடவில்லை. அவனுக்குப் பெண் குழந்தைகளுக்கான கொடுப்பினை இல்லையோ? அவன் தேவதை அவனை மன்னித்து விட்டாள். ஆனால், தெய்வம் அவனை ஒரு போதும் மன்னிக்காதோ? அவனுக்குப் பெண் குழந்தைகள் கிடைப்பதற்கான வரம் இல்லையோ? சோர்ந்து போன கணவனைக் கண்டு ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தாலும், அவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற வேகம் அவளிடமிருந்ததால். அடுத்த ஒன்றரை வருடத்தில் மீண்டும் கருத் தரித்தாள் மிளிர்மிருதை.
அப்போது அவன் ஒரு போதும் செய்யாத ஒரு காரியத்தைச் செய்தான். ஆம் தெய்வத்திடம் வேண்டினான். அவன் செய்த குற்றங்களை மன்னித்துப் பெண் குழந்தை கொடுக்குமாறு அந்தத் தெய்வத்திடமே வேண்டினான். அப்படிப் பெண் குழந்தை கிடைத்தால், ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியைப் பெண்களின் உயற்சிக்காகச் செலவிடுவதாக வேண்டுதல் செய்தான்.
மிளிர்மிருதை கூட இதைக் கேட்டுச் சிரித்தாள். நேத்தியென்றால் மொட்டை வழிப்பேன், கோவில் கட்டுவேன், உடலை வருத்துவேன் என்றுதானே வைப்பார்கள். இது என்ன புதுவிதமாக இருக்கிறது? என்று அவள் சிரித்தபோது, அவள் தோள்களில் தன் இரு கரங்களையும் பதித்து,
“நேத்தி என்பது நம்மைச் சார்ந்ததாக இல்லாமல் அது பொது நலமாக இருக்குமானால் அதற்குரிய சக்தி பலமடங்கு அதிகம்… எனக்குப் பெண் குழந்தை கிடைத்தால், அது வரம்… அந்த வரத்தை அடைவதற்கு நான் மொட்டையடித்து, மண் சோறு சாப்பிட்டு என்ன லாபம்… என் குழந்தை பிறக்கும் போது, அவளால் நிறையப் பெண்களின் வாழ்வு மலர்கிறது என்றால் அதை விடப் பெரும் வாழ்த்து வேறு என்ன இருக்கப் போகிறது?” என்று கூறியபோது அதை அவளால் மறுக்கவும் முடியவில்லை.
அவனுடைய வேண்டுதல் நிறைவேறியதோ, இல்லை அவன் வைத்த நேத்தியின் விளைவோ, ஐந்தாவது குழந்தையாகத் தங்க விக்கிரமாகப் பெண்குழந்தையை அவன் கரங்களில் தவழ ஆண்டவன் வரம் கொடுத்துவிட்டான்… அந்தக் கடவுளே அவனை மன்னித்துவிட்டான் பிறகு என்ன? இதோ குழந்தையைக் குளிப்பாட்டி, அவளை ஒரு துணியால் சுத்தி அபயவிதுலனிடம் நீட்ட, அது வரை மனைவியை அணைத்தவாறு கிடந்தவன், எழுந்து தன் குழந்தையைத் தன் கரங்களில் ஏந்திக்கொண்டான். வரையறுக்க முடியா மகிழ்ச்சியுடன் சரிந்து, குழந்தையைத் தன் மனைவியிடம் காட்டியவன், பின் மீண்டும் தன் மார்பில் போட்டவாறு,
“அக்காவிடம் காட்டிவிட்டு வருகிறேன் கண்ணம்மா…” என்றவாறு வெளியேறி, விருந்தினர்கள் அறை நோக்கிச் சென்றான். அங்கே அனைவரும் பதற்றத்துடன் அமர்ந்திருந்தனர்.
இவனைக் கண்டதும்,
“என்ன குழந்தைடா…” என்றவாறு காந்திமதி முன்னால் வர,
“தேவதைக்கா…” என்றான் முகம் முழுக்கப் பூரிப்புடன். அதைக் கேட்ட அனைவருக்கும் மட்டற்ற பெரு மகிழ்ச்சி.
விழிகள் கலங்கத் தன் சின்ன மருமகளை ஓடிப் போய்த் தன் கரங்களில் வாங்கிக்கொண்ட காந்திமதி, ஐந்தாவது பெண் கெஞ்சினாலும் கிடைக்காது என்று சொல்வார்கள் கண்ணா… உனக்குக் கிடைத்துவிட்டது பார்…” என்று குதூகலத்துடன் கூற, ஆராதனாவோ கண்களில் கண்ணீர் நிரம்ப, மாமனை நெருங்கி அவனை இறுக அணைத்துக் கொண்ட வேளை, ஐந்து வயது மகிழ்மதியை ஒரு கரத்தில் பிடித்தவாறு கிட்டத்தட்ட இரண்டு வயதை நெருங்கிய மகன் அபயனை மறு கரத்தில் ஏந்தியவாறு சித்தார்த்தும் அவர்களை நெருங்கினான்.
அதே நேரம் ஆத்விகன் மூன்றாவது தம்பி அற்புதனை ஒரு கரத்தில் பிடித்திருக்க. சாத்விகன் இரண்டரை வயதான நான்காவது தம்பி மகிழனைக் கரங்களில் ஏந்தியவாறு அந்த அறைக்குள் வந்துகொண்டிருந்தனர்.
அங்கே அத்தை குழந்தையை ஏந்தியிருப்பதைக் கண்டு பெரும் மகிழ்ச்சியுடன் விரைந்து வந்தவர்கள், குழந்தையை நெருங்கினர்.
சாத்விகன் தன் கரத்திலிருந்த மகிழனைக் கீழே இறங்கிவிட்டு அத்தையை நெருங்கி, அவர் கரத்திலிருந்த குழந்தையை ஆவலாகப் பார்த்தவாறு,
“அப்பா… இது தங்கச்சிதானே…” என்றான். உடனே அபயவிதுலன் முகத்தைச் சோகமாக வைத்து,
“இல்லைடா… தம்பிதான் பிறந்திருக்கிறது…” என்று கூற ஆத்விகன் சாத்விகன் அற்புதன் ஆகிய மூவரும் தம் வாயைப் பிளந்து
“நாட் எகெய்ன்…” என்று கூறியவாறு அழும் நிலைக்குப் போகத் தரையில் நின்றிருந்த அந்தச் சின்ன வாண்டு, தமையன்மாரின் முகம் போன போக்கைக் கண்டு அது போலவே தானும் வாயைப் பிளந்து விழிகளை விரித்து ”நாத் எகெய்ன்…” என்றது.
அதைக் கண்ட அபயவிதுலன் தன்னை மறந்து சிரித்துவிட்டுக் குனிந்து மகிழனைத் தூக்கி, அவன் வயிற்றில் தன் முகத்தை அழுத்தி எடுத்துத் தன்னோடு அணைத்து உச்சியில் முத்தமிட்டுத் தரையில் இறக்கியவன் தன் செல்வங்களைப் பார்த்து,
“நான் சும்மா சொன்னேன்டா… உங்களுக்குத் தங்கச்சி கிடைத்திருக்கிறாள்…” என்று கூற மறு கணம் அவர்களின் கூக்குரலில் அந்த அறையே நடுங்கியது.
தமையன்மாரின் அலறலில் இளையவன் மகிழனும், பிறந்து ஒரு மணி நேரமேயான தேவதையும் பயந்து திடுக்கிட்டு வாயைப் பிதுக்கத் தொடங்க, அதைக் கண்ட குழந்தை அபயன் கைகொட்டிச் சிரிக்கத் தொடங்கினான்.
உடனே அழுத தம்பியைத் தன் கரங்களில் ஏந்திக்கொண்ட ஆத்விகன், அவனைச் சமாதானப் படுத்தி,
“ஹே… இட்ஸ் ஓக்கே… ப்ரோ…” என்று தட்டிக்கொடுத்தவாறு அத்தையை நெருங்க, அதற்குள் அத்தையின் கரத்திலிருந்த குழந்தையைச் சாத்விகன் தன் கரங்களில் வாங்கிக்கொண்டான்.
பன்னிரண்டு வயது சாத்வீகனுக்குத் தன் தங்கையைக் கரங்களில் ஏந்தியதும், அந்த முதல் ஸ்பரிசத்திலேயே உடல் சிலிர்த்தது. தந்தையைப் போலவே, அந்த நிமிடம் தன் தங்கையை எந்தத் தீய சக்தியும் அண்டிவிடாதவாறு பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்கிற வெறி வர, கண்கள் முட்டக் கண்ணீருடன் தன் தந்தையைப் பாத்து,
“ஐ ஆம் சோ ஹாப்பிப் பா…” என்றான் நடுங்கிய உதடுகளுடன். அதே நேரம் ஆத்விகனின் கண்களும் சாத்வீகனுக்குப் போட்டியாக நிறைந்திருக்க, தன் சகோதரனின் கரத்திலிருந்த தங்கையின் குட்டிப் பாதத்தைப் பற்றி அதன் மென்மையை உணர்ந்தவனாக, .
“சின்னக் குட்டி பாதம்பா…” என்றவாறு அந்தப் பாதத்தைப் பற்றித் தூக்கி அதில் முத்தமிட, கண் கலங்கிப் போனான் அபயவிதுலன்.
“அம்மா போலவே இருக்கிறாள்பா…” என்று ஆத்விகன் கூற, அதற்கும் ஆம் என்பது போலத் தலையை அசைத்தான் அபயவிதுலன். ஏனோ அவனுக்குப் பேச்சு வர மறுத்தது.
அவனுக்குப் பேச்சு வரவேயில்லை. உள்ளமெல்லாம் நிறைந்திருந்தது. அவனுக்கு உலகை வென்றுவிட்ட மகிழ்ச்சி. அதே வேளை கீழே நின்றிருந்த அற்புதனுக்குத் தன் தங்கையைப் பார்க்க முடியவில்லையே என்கிற எரிச்சல் தோன்ற, உதடுகளைப் பிதுக்கத் தொடங்கினான். அதைக் கண்ட அபயவிதுலன்,
“ஓ… மை டியர் சன்…” என்றவாறு அவனை வாரி அணைத்துத் தூக்க அவன் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்த அற்புதன்,
“நான் பேபியைப் பார்க்கவில்லை… நீங்கள் எல்லோரும் பார்க்கிறீர்கள்…” என்று முறையிட, தன் தமையன்மாரை அச்சொட்டாகப் பின்பற்றிப் பிறந்த மகனின் குழலை வருடிக் கொடுத்தவன்,
“ஸாரி கண்ணா… இதோ…” என்றவாறு தன் கரத்தை இருக்கையாக்கி, அவனைத் திருப்பி அமர வைத்துக் குழந்தையைக் காட்ட, அவனோ தன் தங்கையின் குட்டிக் கரத்தைப் பற்றி,
“சோ… சாஃப்ட் பா…” என்றான் குதூகலமாய்.
தன் மூன்றாவது அண்ணன் அப்போதுதான் பிறந்த தன் தாயை ஒத்துப் பிறந்த தங்கையைத் தொடுவது மகிழனுக்குப பிடிக்கவில்லை. சாத்விகனின் கரத்தில் அமர்ந்திருந்தவன், அற்புரனின் கரத்தைத் தன் காலால் உதைந்து,
“ஷ்ஷீ இஸ்ஸ்… மைந்… தோன்ட்… தச்…” என்று வாயைச் சுழித்து விழியை விரித்துத் தலையை அங்கும் இங்கும் பலமாக ஆட்டிக் கூற, மகிழனோ இளைய தம்பியைப் பார்த்து முறைத்து,
“நோ… ஷி இஸ் மைன்… மை பேபி சிஸ்டர்…” என்றதுதான் தாமதம் உடனே மகிழன் வாயைப் பிளக்கத் தொடங்கினான். அதைக் கண்ட ஆத்விகன்,
“ஷ்… இட்ஸ் ஓக்கே ப்ரோ… ஷி இஸ் அவர்ஸ்… ஓக்கே… நாம் எல்லோரும்தான் அவளைப் பார்த்துக் கொள்ளப் போகிறோம்… வளர்க்கப் போகிறோம்… அப்பா நம்மைக் காத்ததுபோல அவளை நாம் நால்வரும் காக்கப்போகிறோம் சரியா…” என்று சமாதானப் படுத்த அபயவிதுலனுக்கு உள்ளம் பெருமையில் பொங்கியது.
தன் கரத்திலிருந்த அற்புதனைக் கீழே இறக்கிவிட்டு, சாத்விகனின் கரத்திலிருந்து தன் மகளை வாங்கியவனுக்கு உள்ளமெல்லாம் ஏதோ செய்தது. எதையோ வென்றுவிட்ட மகிழ்ச்சி…
தன் மனைவியை அச்சொட்டாக உரித்துப் படைத்துப் பிறந்த மகளைத் தன் மார்போடு இறுக அணைத்துக்கொண்டான் அந்த அப்பழுக்கற்ற தந்தை. கூடவே, ஒரு கரத்தை விலக்கி வளர்ந்திருந்த ஆத்வீகனையும் சாத்வீகனையும் இறுகி அணைத்தவன், விழிகளால் மற்றைய இரு குழந்தைகளையும் பார்த்து,
“நான் சத்தியம் செய்கிறேன் வானும் மண்ணும் வியக்கும் வகையில் உங்கள் ஐவரையும் உங்கள் அம்மாவையும் காத்துக்கொள்வேன்…” என்கிற உறுதியுடன் தன் விழிகளை மூட இரு துளி கண்ணீர் வழிந்து மகளின் நெற்றியில் விழ, முதன் முதலாகத் தன் விழிகளைத் திறந்து தந்தையைப் பார்த்தது குழந்தை.
பின் தலையைத் திருப்பிச் சகோதரர்களைப் பார்த்தது. பின் அத்தையைப் பார்த்து சிறியதாயைப் பார்த்தது. பின் மீண்டும் தன் தந்தையைப் பார்த்தது. அதைக் கண்டு சிலிர்த்த அபயவிதுலன், அதன் கன்னத்தை ஒற்றைக் கரத்தால் வருடிக் கொடுத்து,
“ஓ மை ஏஞ்சல்… ஐ ப்ராமிஸ் யு… ஐ வில் மேக் யு ஹப்பி… உனக்கும், உன் அம்மாவுக்கும் எந்த வலிகளும் அண்ட விடமாட்டேன். என் உயிர் இருக்கும் வரை பாதுகாப்பேன்… பூஜிப்பேன். எந்தக் கரிய நிழலும் உன் அருகே வர விடமாட்டேன். எந்தத் தீய சக்தியும் அண்டாது காப்பேன்… உன்னை என் கண்ணுக்குள் வைத்துப் பாதுகாப்பேன்…” என்று உறுதி கூற, அவன் கூறியது புரிந்ததோ, உன்னை நம்புகிறேன் அப்படி என்று சொல்ல விளைந்ததோ, இல்லை எனக்குத் தெரியும் சொல்ல வேண்டியதில்லை என்று சொல்ல வந்ததோ… தன் கரத்தால் தந்தையின் சுட்டு விரலை இறுகப் பற்றிக்கொண்டது, அப்பா நான் உன்னை நம்புகிறேன்’ என்று சொல்வது போலத் தன் பொக்கை வாயை ஒரு விதமாகச் சுளித்துப் பின் திறந்து ஆவென்று சிரிக்க, அந்த நகைப்பில் உயிர் உருகி நின்றனர் அனைவரும். அபயவிதுலனைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை…
“அக்கா… என் மகள் சிரிக்கிறாள்… பார்த்தீர்களா… நம்மையெல்லாம் பார்த்து மகிழ்வுடன் சிரிக்கிறாள்… ஓ மை காட்… இதை மிருதையிடம் காட்டவேண்டும்….” என்றவாறு காந்திமதியின் பதிலையும் கேட்காது, தன் மனைவியைத் தேடி ஓட, அவனைப் பின் தொடர்ந்து நான்கு ஆண் மக்களும் ஓடத் தொடங்கினர். அது ‘அப்பா… உன் வழியே நம் வழி’ என்று சொல்வது போலப் பார்ப்பவர்களுக்குத் தோன்ற, அங்கிருந்தவர்கள் அனைவரும் மன நிறைவுடன் சிரித்தனர்.
கதை முடிந்தது
அவன் மகிழ்ச்சி தொடர் கதையானது.
முற்றும்.

