Sun. Dec 7th, 2025

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-37

(37)

 

ஓரளவு பாதுகாப்பான இடத்தைத் தாண்டியதும் நிம்மதி மூச்சு விட்ட அபயவிதுலன், திரும்பி மிளிர்மிருதையின் தோளைத் தொட, அவளோ இவனைப் பார்க்காது வெளியேதான் வெறித்துக்கொண்டிருந்தாள்.

“மிருதா… எவ்ரிதிங் வில் பி ஓக்கேமா…” என்று சமாதானப்படுத்த விறுக் என்று திரும்பிப் பார்த்தாள் மிளிர்மிருதை.

‘இத்தனை பெரிய ஆபத்தைக் கடந்து வந்துவிட்டு இவனால் எப்படி எதுவுமே நடக்காதது போலத் சாதாரணமாக இருக்க முடிகிறது. இவன் பொல்லாதவன் என்று தெரியும். எதிரிகளைப் பாரபட்சமின்றித் துவசம் செய்வான் என்றும் தெரியும்… ஆனால் அந்த ஆக்ரோஷம்… இதுவரை அவள் கண்டிராதது. அதுவும் அவளுடைய குழந்தைகள் யார் என்று தெரியாத முகமூடி அணிந்திருந்த இருவரின் கரங்களில் உயிருக்காகப் போராடியது நினைவுக்கு வரத் துடித்துப் பதைத்தவாறு திரும்பிப் பார்த்தாள். அங்கே தந்தைக்குக் குறையாத தைரியத்துடன் இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். அதைக் கண்டதும் தாயுள்ளம் வெடித்துச் சிதறியது.

என் குழந்தைகளை இத்தகைய இக்கட்டான நிலையில் வைத்தவர்கள் யார்? எத்தனை தைரியமிருக்க வேண்டும்? ஆவேசத்தில் உடல் நடுங்கத் தொடங்க, அவளுடைய நிலையைப் புரிந்துகொண்ட அபயவிதுலன், நடுங்கிய கரத்தைப் பற்றித் தைரியம் கூற முயல, அவன் கரம் பட்டதுதான் தாமதம், உதறித் தன்னை விடுவித்தவள்,

“டோன்ட்… டோன்ட் டச் மி…” என்று சீறியவாறு அமர்ந்திருந்தவளுக்கு இலகில் அந்தப் பயங்கர நினைவிலிருந்து வெளிவர முடியும் போலத் தோன்றவில்லை. தன் மனைவியின் நிலை நன்கு புரிந்துகொண்டவனாக,

“மிருதா?” என்றான் மென்மையாக. என்னதான் முயன்றும் தடுமாறிய குரலைச் சமப்படுத்த முடியவில்லை. அவளோ அவனைப் பார்க்கப் பிடிக்காதவள் போல முன்புறம் வெறித்துக்கொண்டிருந்தாலும், நடுங்கிய உடலும், கண்களில் வழிந்த கண்ணீரும் அவளுடைய நிலையை அப்பட்டமாக அவனுக்கு எடுத்துக் காட்டியது.

“மிருதா… ப்ளீஸ்… கொன்ட்ரோல் யுவர் செல்ஃப்… நான் சொல்வதைக் கொஞ்சம் கேள்…” என்று அவன் முடிக்கவில்லை,

“யாரது…?” என்றாள் அழுத்தமான குரலில் சற்றுத் தயங்கியவன், மெதுவாக மறுப்பாகத் தன் தலையை அசைத்து,

“ஐ விஷ் ஐ நோ… ஆனால் தெரியவில்லை மிருதா… மார்புக்கு முன்னாடி போராடுபவன் தானே வீரன்… இவன் எனக்கு முன்பாக வர அஞ்சி முதுகில் குத்த பார்க்கிறான்… என்னால் முயன்ற வரை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்டா… என்னால் முடிந்த வரை முயற்சிசெய்து பார்த்துவிட்டேன்… இதுவரை தெரியவில்லை… சிறு துப்புக் கிடைத்தாலும் நான் கண்டுபிடித்துவிடுவேன்…” என்று அவன் கூறிக்கொண்டு போக, அவனை நிமிர்ந்து கலக்கத்துடன் பார்த்தவள்,

“விதுலா…! எனக்கேதோ பயமாக இருக்கிறது… இது தொழில் போட்டிபோலத் தெரியவில்லை. உங்களை அண்டியவர்களைத் தேடித் தேடி அடிக்கிறான் என்றால்… நிச்சயமாகப் பழிவாங்குவதற்காகவே யாரோ செயல்படுகிறார்கள்… முதலில் நான்… அது சரி வரவில்லை என்றதும், உங்களைத் தவிக்க வைத்தார்கள்… இப்போது குழந்தைகள்… அடுத்தது யார்… ஐயோ… அடுத்தது அம்மாவா…? இல்லை ஆராதனாவா” என்று பதறியவாறு மிளிர்மிருதை கேட்கவும், அவசரமாகத் தன் காரை ஒதுக்குப் புறமாக நிறுத்தியவன் எச்சரிக்கை விளக்கைப் போட்டுவிட்டுத் திரும்பித் தன் மனைவியை இழுத்துத் தன்னோடு இறுக அணைத்துக்கொண்டான் அபயவிதுலன்.

“இஷ்… இஷ்… இட்ஸ் ஓகே மா… அதுதான் நான் இருக்கிறேன் அல்லவா? பிறகு எதற்குக் கலங்குவான்… ஐ ப்ராமிஸ் யு… யாருக்கும் எதுவும் நடக்க நான் விடமாட்டேன்… என்னை நம்பு… நான் உயிரோடு இருக்கும் வரைக்கும், எவனும் எதுவும் செய்துவிட முடியாது…” என்று அவளைச் சமாதானப் படுத்தினாலும் இவனுடைய உடலும் பதறத்தான் செய்தது.

மிளிர்மிருதை சொன்னது போல இனி அவர்களின் கவனம் யாரிடம் செல்லும். அக்கா, ஆராதனாவிடமா? நோ… நோ… யாருக்கும் எதுவும் நடக்காது… நடக்கவும் கூடாது…” அவசரமாக மிளிர்மிருதையை விட்டு விலகியவன்,

“வீட்டுக்குப் போனதும் பேசிக்கொள்ளலாம்…” என்றுவிட்டுத் திரும்பித் தன் குழந்தைகளைப் பார்த்தான். அவர்களோ எப்போதும் இல்லாத அமைதியுடன் அமர்ந்திருக்க, அவனுடைய நெஞ்சம் துடித்தது. அவர்களின் அந்த மோன நிலை பிடிக்காதவனாக,

“ஹாய்… மை போய்ஸ்… ஐ ஆம் சோ ப்ரவுட் ஆஃப் யு…” என்று கூறியதும் குழந்தைகளின் முகத்தில் மலர்ச்சி தோன்றியது. இளம் கன்று பயமறியாது என்பது எத்தனை உண்மை.

மலர்ந்த தன் குழந்தைகளைப் பார்த்தவன், “யார் வாகனத்தின் முன்புறக் கண்ணாடியைச் சுட்டது?” என்று கேட்டான். உடனே இருவரும் மற்றவரை மற்றவர் சுட்டிக் காட்ட அதைக் கண்டு தன்னை மறந்து சிரித்துவிட்டான் அபயவிதுலன்.

ஆத்விகன் சற்று விளையாட்டுத் தனம் கொண்டவன். ஆனால் சுடுமளவுக்கு அவனுக்குத் தைரியம் இருந்திருக்காது. சாத்விகன் சற்று அழுத்தமான பேர்வழி. ஆனால் தைரியம் பல மடங்கு அதிகம். ஆக அவன்தான் இந்த வேலை செய்திருப்பான் என்பது தெரிய, காரை ஓட்டியவாறே.

“ஆமாம் எதற்குக் கண்ணாடியைப் பார்த்துச் சுட்டீர்கள்?” என்றான் அவர்களைச் சம நிலைக்குக் கொண்டு வர முயன்றவனாக. உடனே வாய்த் திறந்தான் சாத்விகன்.

“அவர்களுடைய பார்வையை மறைத்தால், வாகனத்தை ஓட்ட முடியாதில்லையா… எப்படியும் எங்களைத் தேடிக்கொண்டு வருவீர்கள் என்று எங்களுக்குத் தெரியும்பா… என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்தேன்… அப்போதைக்கு அவர்களின் வேகத்தைக் குறைப்பதற்கு இதை விட வேறு வழி தெரியவில்லை…” என்று அவன் கூற, உண்மையாகத் தன் மகனின் அறிவில் மெய்சிலிர்த்துப் போனான் அபயவிதுலன். இந்த அறிவு அவர்களைச் சிகரத்தின் உச்சியில் வைக்கும் என்பதைச் சந்தேகமறப் புரிந்துகொண்டவனுக்கு, பெருமையில் மார்பு விம்மத் தன் வேகத்தைக் கூட்டினான்.

வீட்டிற்குள் சென்றதும் முதல் வேலையாகத் தன் குழந்தைகளை இழுத்து அணைத்துச் சற்று நேரம் அப்படியே இருந்தான். அணைப்பை விடுவித்துவிட்டுக் குழந்தைகளை விலக்கிப் பார்த்தான். அப்போதுதான் சாத்வீகனுடைய ஒரு பக்கத்துக் கன்னத்தில் பதிந்திருந்த ஐந்து விரல்களையும், உதட்டோரத்தில் வழிந்த இரத்தத்தையும் கண்டு துடித்துப்போனான்.

“ஓ மை சன்… வலிக்கிறதாப்பா… எதற்கு உன்னை அடித்தான்…” என்று கேட்டபோதே அபயவிதுலனின் இரத்தம் கொதித்தெழுந்தது. ஆனால் குழந்தையோ,

“வாகனத்தின் கண்ணாடியைச் சுட்டேன் அல்லவா… அதுதான்பா…” என்று அலட்சியமாக்கக் கூற,

“ப்ச்… நானல்லவா சொல்லியிருந்தேன்… கவனமாக இருக்கும் படி…” என்று கடிய,

“பேசாமல்தான்பா இருந்தேன்… ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை விடத் தோன்றவில்லை…” என்ற மகன்,

“இட்ஸ் ஓக்கேபா… வாகனம் நின்றதால்தானே சீக்கிரமாக எங்களைக் காப்பாற்றினீர்கள்…” என்று கூற, மிண்டும் குழந்தைகளை இறுக அணைத்து தலை உச்சியில் முத்தமிட்டவன்,

“உங்கள் அம்மா இன்னும் சாப்பிடவில்லை… நடந்த சம்பவத்தை நினைத்துக் கரைந்துகொண்டிருப்பார்கள்… அவளைச் சமாதானப் படுத்துங்கள்… இதோ நான் வருகிறேன்…” என்று அவர்களிடம் கூறி அனுப்பிவிட்டு,. தன் அறைக்குள் நுழைந்தான்.

பான்ட் பாக்கட்லிருந்த எதிரியின் கைப்பேசியை வெளியே எடுத்துப் பார்த்தான். ஐஃபோன் 8. அதை இயக்கிப் பார்த்தான். லாக்காகியிருந்தது. சுத்தம். அதை ஊடுருவிச் சென்று கண்டுபிடிக்க நேரமெடுக்கும். அன்ட்ரோய்ட் போலச் சுலபமல்ல.

ஏனோ அபயவிதுலனுக்கு உடலெல்லாம் சோர்ந்து போன உணர்வு. கைப்பேசியை மீண்டும் பான்ட் பாக்கட்டில் போட்டவன், முதுகில் செருகியிருந்த கைத்துப்பாக்கியை வெளியே எடுத்தவாறு இருக்கையில் தொப்பென்று அமர்ந்தான். ஏனோ அத்தனை சக்தியும் அவனை விட்டு விடைபெற்ற உணர்வு. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்தப் போராட்டமோ…

சலிப்புடன் கைத்துப்பாக்கியை மேசையில் வைத்தவன், தலையைப் பின்னால் சரித்து விழிகளை மூடி சற்று நேரம் அப்படியே இருந்தான். பின் சகோதரியின் நினைவு வர விறுக் என்று எழுந்தவன், உடனேயே சித்தார்த்தை அழைத்து எச்சரிக்கையாக இருக்குமாறு கூறுவதற்காகக் கைப்பேசியை எடுத்தான்.

அவர்களின் இலக்கங்களை இவன் அழுத்தும்போதே, கைப்பேசி சிணுங்கியது. நெற்றியை வருடிக் கொடுத்தவாறு யார் என்று பார்த்தான். காந்திமதிதான் எடுத்திருந்தார்.

என்றுமில்லாததாக இதயம் படுவேகமாகத் துடிக்க, ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டது என்று உள்ளுணர்வு எச்சரிக்க, அதை எடுத்துக் காதில் பொருத்தி,

“அக்கா…” என்றான்.

அடுத்து மறு பக்கம் கூறியதைக் கேட்டதும் அபயவிதுலனின் சர்வமும் நடுங்கி ஒடுங்கிப்போனது… அதே நேரம் அபயவிதுலனுக்குக் குடிப்பதற்காகத் தேநீர் வார்த்துவந்த மிளிர்மிருதை அபயவிதுலனின் நிலை கண்டு,

“வி… விதுலா…! என்னவாகிவிட்டது?” என்று பதறியவாறு வர, அவனோ இவளை மலங்க மலங்கப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய கைப்பேசி கரத்திலிருந்து நழுவ யோசனையுடன் அதை எடுத்துக் காதில் பொருத்தி,

“ஹலோ…” என்றாள் மிளிர்மிருதை.

“மிளிர்…!” என்று கதறிய காந்திமதிக்கு அபயவிதுலனிடம் கூறிய செய்தியை மீண்டும் கூறும் தைரியம் இருக்கவில்லை.

“அம்மா… என்னாச்சு…” என்று கிட்டத்தட்டக் கத்த,

“கண்ணம்மா… ஐயோ… நான் என்ன செய்வேன்… சித்துவும், ஆருவும் வந்துகொண்டிருந்த வண்டி விபத்துக்குள்ளாகி… ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறார்கள்… இப்போதுதான் செய்தி வந்திருக்கிறது… நான்… நான் என்ன செய்ய… என்னால் எதையும் யோசிக்க முடியவில்லையே கண்ணம்மா…” என்று கலங்கித் துடித்தவருக்கு எப்படிச் சமாதானப் படுத்துவது என்று மிளிர்மிருதைக்குத் தெரியவில்லை.

“அம்மா… ஒன்றுமாகாது… கன்ட்ரோல் யுவர் செல்ஃப்…. இதோ… இப்போதே புறப்படுகிறோம்… நாங்கள் இருக்கிறோம் அல்லவா… நமது ஆருக்கும் சித்தார்த்துக்கும் ஒன்றுமாகாது…” என்று அவரைச் சமாதானப் படுத்தியவாறு தானும், தன் குழந்தைகளும் சந்தித்து வந்த ஆபத்தை மறந்தவளாக அபயவிதுலனை நெருங்க, அவனோ அதிர்ச்சியிலிருந்து வெளிவராதவனாக அப்படியே நின்றிருந்தான். .

அவனுக்கு உயிரானவள் ஆராதனா. சொல்லப்போனால் அவனுடைய குழந்தை போல அவள். அவளுக்கு ஏதாவது நடந்தால், அபயவிதுலனால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதையும் அவள் அறிவாள்.

வேகமாக அவனுடைய தோளை உலுப்பியவள்,

“விதுலா…! ப்ளீஸ்… உங்களைத் திடப்படுத்திக்கொள்ளுங்கள்… அதிர்ந்துபோயிருக்க இது நேரமில்லை… நாம் புறப்படவேண்டும்…” என்று அவனை உலுப்ப, அவனோ மொழி புரியாத குழந்தை போலத் தவிப்புடன் மிளிர்மிருதையைப் பார்த்தான்.

சில மணி நேரங்களுக்கு முன் தன் குழந்தைகளுக்காகச் சூரசம்காரம் செய்தவனா இவன் என்கிற சந்தேகமே மிளிர்மிருதைக்கு எழுந்தது. தன் பதட்டத்தையும் தவிப்பையும் மறைத்தவளாக, அவனை நெருங்கி இழுத்துத் தன் மார்பில் போட்டு இறுக அணைத்துக் கொண்டவள்…

“கண்ணா… அவர்களுக்கு ஒன்றுமாகாது… ஒன்றுமே ஆகாது… கடவுள் நல்லவர்களைச் சோதிப்பான் கைவிடமாட்டான்… ப்ளீஸ்… உங்களைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள்… நாம் கிளம்பவேண்டும்…” என்றதும், ஒரு கணம் தன் மனைவியை எலும்பு முறிவது போல இறுகி அணைத்து விடுவித்தவன், முகம் கசங்க தன்னவளைப் பார்த்து,

“பயமாக இருக்கிறது மிருதா…” என்றான் குரல் நடுங்க.

“அவளுக்கு ஒன்றுமாகாது… எதுவும் ஆகாது… வாருங்கள் கிளம்பலாம்…” என்று கூற அடுத்த அரை மணி நேரத்தில் குழந்தைகளுடன் அவனுடைய தனியார் ஜெட்டில் ஏறி அமர்ந்திருந்தான் அபயவிதுலன்.

அவனுக்கு எதுவும் பேசவேண்டும் என்று தோன்றவில்லை. மனம் முழுவதும் ஆராதனாவிலேயே இருந்தது.

மிளிர்மிருதைக்கும் மிக மிகப் பயமாக இருந்தது. இப்போதுதான் அவளுக்கு எட்டு மாதம்… இந்த நிலையில் இந்த விபத்து எத்தகைய பாரதூரமான விழைவைக் கொடுத்திருக்கிறதோ, கொடுக்கப் போகிறதோ…

தவிப்புடன் இறைவனிடம் சரணாகதி அடைந்து பிரார்த்திக்கும் போதே, சில மணித்துளிகளில் அமெரிக்காவை வந்து அடைந்தனர். அவர்களுக்காக லெமோ காத்திருக்க, அடுத்த அரை மணி நேரத்தில் மருத்துவமனையை வந்தடைந்தார்கள்.

விசாரித்து ஆராதனாவை வைத்திருந்த அறைக்குச் சென்றபோது, தலையிலும் கையிலும் காலிலுமாகக் கட்டுப்போட்டவாறு கலங்கிய நிலையிலிருந்த சித்தார்த்தும், அழ கூட முடியாமல் பரிதவிப்புடன் நின்றிருந்த காந்திமதியையும்தான் முதலில் கண்ணில் பட்டார்கள்.

இவனைக் கண்டதும் அதற்கு மேல் தாங்க முடியாதவராகக் காந்திமதி பாய்ந்து தன் தம்பியை இறுக அணைத்துக்கொண்டவருக்கு வார்த்தைகளே வரவில்லை. பெரியதாக அவர் கதறவில்லை… அலறவில்லை… ஆனால் அந்த மௌனமான அழுகை அதை விடக் கொடுமையாக இருந்தது.

“கண்ணா… ரொம்ப ரொம்பப் பயமாக இருக்குதுப்பா… இதுவரை இவளை இப்படிப் பார்த்ததேயில்லை… நான் என்ன செய்யட்டும்…” என்று கிசுகிசுப்புடன் கூறியவாறு மெல்லிய குரலில் அவர் அழத் தன் சகோதரியை இறுக அணைத்துக்கொண்டான் அபயவிதுலன். உடனே தன் வேதனையைத் தனக்குள் புதைத்துக்கொண்டான் அபயவிதுலன்.

“அ… அக்கா… நம்முடைய ஆருக்கு ஒன்றுமாகாது…. ஐ ப்ராமிஸ் யு… எதுவுமே ஆகாது… நான் வந்துவிட்டேன் அல்லவா?” என்று குழந்தைகளுக்குக் கூறுவுது போலக் கூறியவன் தன்னிடமிருந்து அவரைப் பிரித்து அவர் கண்ணீரைத் துடைத்துவிட்டு, அதே நிலையிலிருந்த சித்தார்த்தைக் கண்டு தன் சகோதரியை மிளிரிடம் ஒப்படைத்துச் சித்தார்த்திடம் சென்றான்.

அபயவிதுலனைக் கண்டதும் சித்தார்த்தும் தன் பலம் முழுவதும் திரட்டி அவனை இறுக அணைத்துக்கொண்டான்.

“பயமாக இருக்கிறது அபயன்… எதுவும் சொல்வதற்கில்லை என்றுவிட்டார்கள்… சந்தோஷமாகத்தான் வந்துகொண்டிருந்தோம்… எங்கிருந்து அந்த ட்ரக் வந்தது என்று தெரியவில்லை… எவ்வளவு முயன்றும் காரை நிறுத்த முடியவில்லை… மோதிய பின்புதான் நமது வாகனம் அந்த ட்ரக்கோடு மோதுப்பட்டதே எனக்குத் தெரிந்தது… திரும்பிப் பார்த்தால் என் ஆரு… இரத்த வெள்ளத்தில்… அதற்குப் பின் எனக்கு எதுவும் நினைவில்லை. விழித்துப் பார்த்தபோது மருத்துவமனையிலிருந்தேன். நான் எழுந்துவிட்டேன்… என் ஆரு… என் ஆரு மட்டும் இன்னும் எழவே இல்லை அபயன். அவளிடம் எந்த அசைவும் இல்லை. டாக்டர்ஸ் தங்களால் முயன்றவரைக்கும் முயன்றார்கள். குழந்தை… குழந்தையைச் சத்திர சிகிச்சை செய்து வெளியே எடுத்துவிட்டார்கள்… பெண் குழந்தை அபயன்… அதை இன்கியுபெட்டரில் வைத்திருக்கிறார்கள்… எனக்கு… என் குழந்தையைப் பற்றிக் கவலையில்லை… என் தேவதை… என் ஆரு… எனக்கு முழுதாக வேண்டும்… எனக்கு அவள் முழுதாக வேண்டும்… அவளுக்கு ஏதாச்சும் நடந்தால்…” என்று அவனும் குரலைச் சற்றுத் தாழ்த்தியவாறு கதற, அபயவிதுலனின் பிடி மேலும் சித்தார்த்தைத் தன்னோடு இறுக்கிக் கொண்டது.

அந்த நேரம் அறையிலிருந்து வைத்தியர் ஒருவர் வெளியே வர, குரல் அடைக்கத் தொண்டை வறள, மடிய முயன்ற கால்களைத் திடப்படுத்தியவாறு, வைத்தியரை நெருங்கியவனுக்கு முதலில் என்ன பேசுவது என்று கூடத் தெரியவில்லை.

எப்படியோ தன்னைச் சமாளித்தவன்,

“எ… என்னாச்சு… ஆராதனா…” என்று அவன் திணறியவாறு கேட்க,

“நீங்கள்…” என்று பதில் சொல்லத் தயங்கிய வைத்தியரிடம்,

“நான்… நான் அவளுடைய மாமா… அபயவிதுலன்… அவளுக்கு என்னவாகிவிட்டது? இஸ் ஷி ஓக்கே…” என்று இருந்த திடத்தை ஒன்றிணைத்துக் கேட்டபோது. ஒரு கணம் அபயவிதுலனை இரக்கத்துடன் பார்த்தார் வைத்தியர்,

“சாரி மிஸ்டர் அபயவிதுலன்… இன்டேர்னல் ப்ளீடிங் கொஞ்சம் ஹெவியா இருக்கிறது… முடிந்த வரைக்கும் அவர்களைப் பிழைக்க வைக்கத்தான் பார்க்கிறோம்… ஆனால் அவர்களிடம் எந்த உணர்ச்சியும் இல்லை… அவர்களிடமிருந்து சிறிதும் எதிர்வினையில்லை… பட் வி ட்ரை அவர் பெஸ்ட்…” என்று இரக்கத்துடன் கூறிவிட்டு,

“ஆனால் அவர்கள் பிழைப்பதற்கான சதவிகிதம் மிக மிகக் குறைவே… எதற்கும் உங்களைத் தயார்ப்படுத்துங்கள்… அதைத்தான் என்னால் கூற முடியும்…” என்றதும் அனைவரின் முகங்களும் வெளிறிப் போனது.

அதற்கு மேல் மிளிர்மிருதையால் வைத்தியர் சொல்வதைக் கேட்க முடியவில்லை. ஆராதனா அபயவிதுலனின் உயிர்… அவளுக்கு ஒன்றென்றால் அதை அவனால் நிச்சயமாகத் தாங்க முடியாது… அவன் வலியைப் பார்க்கும் சக்தி இவளுக்கில்லை.

தன் அணைப்பிலிருந்த காந்திமதியை வேகமாக விலக்கியவள்,

“ஐ… ஐ நீட் டு சீ ஹர்…” என்றவாறு உள்ளே சென்றாள்.

உடல் முழுவதும் எதற்காகவோ வயர்கள் ஓடிக்கொண்டிருந்தன. வாய்க்குள் பெரிய குழாய் ஒன்று சொருகப்பட்டிருந்தது. சில இடங்களில் துவாரங்களிட்டு சில குழாய்கள் அதற்குள் செலுத்தப்பட்டிருந்தன. இந்தக் காட்சியை அபயவிதுலன் கண்டால் நிச்சயமாகத் தாங்கமாட்டான்.

‘கடவுளே… இவளுக்கு ஏன் இந்த நிலை… எதற்காக என் விதுலனை மேலும் மேலும் வருந்த செய்கிறாய்?” என்று கலங்கியவளாகத் தன் தங்கையை நெருங்கியவள், அவளுடைய வலது கரத்தைத் தன் இடது கரத்தால் இறுக பற்றி,

“ஆராதனா… வாழ்த்துக்கள் உனக்கு… பெண் குழந்தை பிறந்திருக்கிறது… இன்னும் நாங்கள் அவளைப் பார்க்கவில்லை தெரியுமா?” என்று குரல் கம்மக் கூறியவள் ஆராதனாவை உற்றுப் பார்த்தாள். அவள் கூறியதை உணர்ந்து கொண்டதற்கான அறி குறி எதுவுமில்லை. உள்ளம் வலிக்க, “நீ எழுந்ததும் அவளைப் பார்க்கலாம் என்றிருக்கிறோம் ஆராதனா. சீக்கிரம் எழுந்து வா… உன் தேவதையைப் பார்க்கலாம்…” என்றவாறு ஏறிட்டவளுக்கு அப்படியே கிடந்த ஆராதனாவைக் கண்டதும் நெஞ்செல்லாம் அடைத்துக் கொண்டு வந்தது. தாங்க முடியாதவளாகத் தன் இரு கரங்களாலும் ட்ரிப் ஏறிக்கொண்டிருந்த வலது கரத்தை இறுக பற்றி,

“ஆரு… ப்ளீஸ் ஆரு… திரும்பி வந்துவிடு… ஏற்கெனவே உன் மாமா அனுபவிக்கும் குற்ற உணர்ச்சி போதும்… நீயும் அவருக்கான குற்ற உணர்ச்சியை அதிகரிக்கச் செய்யாதே… அவர் வாழ்வில் பட்ட துன்பங்கள் ஏராளம்… உனக்கே தெரியும்… நீயும் அந்த வலியை அதிகரிக்கச் செய்யாதே ஆரு.. அதன் பிறகு அவருக்கு மகிழ்ச்சி என்றாலே என்னவென்று தெரியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவார்… அவருடைய சந்தோஷம் அனைத்தும் அவரை விட்டுப் போய்விடும்… ப்ளீஸ் ஆரு… எழுந்துவிடு… எங்கள் யாருக்காகவும் வேண்டாம் ஆரு.. உன் மாமாவிற்காகவாவது எழுந்துவிடு… இனியும் அவர் கண்ணீர் சிந்துவதைப் பார்க்கும் சக்தி எனக்கில்லை… ப்ளீஸ்… ப்ளீஸ்…” என்று கூறியவளுக்கு அதற்கு மேல் முடிந்திருக்கவில்லை. ஓவென்று வர, அவசரமாக ஆராதனாவின் கரத்தை விடுவித்து வெளியே பாய்ந்து சுவரில் சாய்ந்தமர்ந்து விக்கத் தொடங்க. அதைக் கண்ட அபயவிதுலன் மேலும் உடைந்து போனான். வேகமாக அவளை நெருங்கி,

“உன் கூட அம்முகுட்டிப் பேசினாளா?” என்று கேட்டதுதான் தாமதம், அதற்கு மேல் தாங்க முடியாதவளாக அவன் மார்பில் விழுந்து கதறிவிட்டாள் மிளிர்மிருதை. மனமோ

‘ஓ விதுலா…! இவளை இந்த நிலையில் எப்படிப் பார்க்கப் போகிறாய்… நொறுங்கிப் போவாயே…’ உள்ளுக்குள் துடிக்க, தன் மனைவியின் முதுகை வருடிக் கொடுத்தவன்,

“ஏய்.. பைத்தியம்… ஆருவின் இந்த நிலையைப் பார்த்துப் பயந்துவிட்டாயா? என் தேவதை போராடப் பிறந்தவள்… அவளை அந்த எமனால் கூட நெருங்க முடியாது… உனக்கு ஒன்று தெரியுமா…? உருவாகும் போதே போராட்டத்தோடுதான் உருவானாள்… பிறக்கும் போதும் பிரளயத்தோடுதான் பிறந்தாள்… இப்போதும் அவள் ஜெயிப்பாள்… என் அம்முக்குட்டி என்னை ஏமாற்றமாட்டாள்…. நிச்சயமாக ஏமாற்ற மாட்டாள்…” என்று அவன் உறுதியுடன் கூற, வலியுடன் அண்ணாந்து தன் கணவனைப் பார்த்தாள் மிளிர்மிருதை. அவனுடைய முகம் உறுதியாகத்தான் இருந்தது. ஆனால் அந்தக் கண்கள். அது அப்பட்டமாக அவனுடைய வலியை எடுத்துக் காட்ட மேலும் உடைந்துபோனாள் மிளிர்மிருதை. பின் என்ன நினைத்தாளோ அவசரமாகத் தன் விழிகளைத் துடைத்தவளாக,

“விதுலா…! ஆருக்கு நீங்கள் என்றால் உயிர்… உங்கள் குரல் அவளுக்குப் பெரும் தைரியத்தைக் கொடுக்கும்… போங்கள் விதுலா…! போய் அவளைப் பார்த்துவிட்டு வாருங்கள்… நீங்கள் இருக்கிறீர்கள் என்கிற உறுதியைக் கொடுங்கள்… நிச்சயமாக அவள் விழித்துவிடுவாள்” என்றவள், அவனுடைய கரத்தைப் பற்றி இழுக்க, எப்போதம் போலத் தன் மனைவியின் இழுப்புக்குச் சேர்ந்து இழு பட்டவன், ஆராதனாவின் அறை வந்ததும், அதற்குள் நுழைய மறுத்தவனாக,.

“நோ… நோ… ஐ… ஐ கான்ட் கண்ணம்மா… ஐ கான்ட்.. இந்த நிலையில் அவளைப் பார்க்கும் சக்தி எனக்கில்லை… என்னை விட்டுடு… ஆருவை நான் பார்க்க மாட்டேன்…” என்று மறுக்க,

“நோ… விதுலா…! ஆருக்கு இப்போது வேண்டிய சக்தியே நீங்கள்தான்… நீங்கள் அருகேயிருந்தால் அவள் தானாகவே எழுந்து விடுவாள்… வாருங்கள்…” என்று அவனைத் திடப்படுத்தி உள்ளே அழைத்துச் செல்ல, அந்த நிலையிலிருந்த தன் மருமகளைக் கண்ட அபயவிதுலனுக்குக் கால்கள் தன் அசைவை நிறுத்திக் கொண்டன.

நம்ப முடியாதவனாகப் படுக்கையில் கிடந்த அந்த உருவத்தை உற்றுப் பார்த்தான். வாயிலும் உடல் முழுவதும் ஏதேதோ குழாய்கள் சென்றிருக்க முகம் கண்டி அதைத்து இரத்தக் கறையுடன் விழிகள் மூடி, இதுவா அவனுடைய அம்முக்குட்டி… பலமாகத் தலையை மறுப்பாக அசைத்தவன்,

“நோ… நோ… இது நம்முடைய ஆரு இல்லை மிருதா… இது வேறு யாரோ… நம்முடைய ஆராதனா எங்கே…” என்று இங்கும் அங்குமாகத் தேட, அவசரமாக எக்கி அவன் முகத்தைத் தன் கரங்களில் பற்றிக்கொண்ட மிளிர்மிருதை,

“விதுலா…! ப்ளீஸ்… கன்ட்ரோல் யுவர் செல்ஃப்… இது… நம்முடைய ஆராதனாதான்…” என்று கூறத் தன் மனைவியின் விழிகளில் தன் விழிகளை ஒரு கணம் கலக்கவிட்ட அபயவிதுலன், திரும்பித் தன் மருமகளை ஏறிட்டான்.

இந்த உருவமா அவன் அம்முக்குட்டி… இந்த உருவமா அவனை வாழவைத்த தெய்வம்? எண்ணும் போதே ஓவென்று வந்தது அபயவிதுலனுக்கு.

இப்போது அவனுக்கு அந்த அறை எதுவும் புலப்படவில்லை. அவனுடைய முதல் குழந்தையான ஆராதனா மட்டுமே அவன் கண்களுக்குத் தெரிய, வெடித்துவிடுமோ என்று பலமாகத் துடித்துக் கதறிய இதயத்தை அடக்கக் கூடத் திராணியற்றவனாகத் தன் மருமகளை நெருங்கினான்.

இது நாள் வரைக்கும் அவள் மீது சிறு துரும்பு கூடப் பட விடாது காத்தவன். தன் கரங்கள் என்றும் சிறகுக்குள் அவளைப் பொத்திப் பாதுகாத்தவன்… திருமணம் என்றதும், நல்ல ஒரு பாதுகாப்பான கரத்தில் ஒப்படைத்துவிட்டு விலகி ஒரு வருடங்கள் கூட முடியவில்லை… அவளைப் படுக்கையில் தள்ளிவிட்டதே விதி… நடுக்கத்துடன் ஆராதனாவை நெருங்கியவன், உணர்வற்றிருந்த அவளுடைய கரத்தைத் தன் இரு கரங்களாலும் அழுந்த பற்றி,

“அ… அம்முக்குட்டி… உன் மாமா வந்திருக்கிறேன்டா…” என்று கரகரத்த குரலை மறைத்துக் கம்பீரமாகக் கூற முயன்று தோற்றுக் கொண்டிருந்த தருணம், அடுத்து நடந்தவை அனைத்தும் அதிசயமே.

அவனுடைய கரத்தின் பிடியும், தன் மாமனின் அம்முக்குட்டி என்கிற குரலும் அவள் மூளைக்கு எட்ட, அதுவரை தொலைந்து போயிருந்த தைரியம் அவளைப் படு வேகமாகப் பற்றிக்கொள்ள, தன் மாமனின் கரத்தில் சிறைப்பட்டிருந்த ஆராதனாவின் கரம், படு வேகமாக அபயவிதுலனின் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டது.

உணர்வில்லாத அவளுடைய உதடுகள் அடுத்த அரை விநாடியில்,

“மாமா…” என்று முணுமுணுத்தன.

 

 

What’s your Reaction?
+1
19
+1
1
+1
6
+1
0
+1
8
+1
1

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!