(22)
அபயவிதுலன் குளித்து முடித்துப் பாத்ரோபை அணிந்து இரு குழந்தைகளையும் நிர்வாணமாகத் தன் கரங்களில் ஏந்தியவாறு வெளியே வரவும், மிளிர்மிருதை மடிப்பை வயிற்றில் செருகவும் நேரம் சரியாக இருந்தது.
வாயில் ஊசியை வைத்தவாறு செருகிய மடிப்பைச் சரியாக்கியவாறு நிமிர்ந்து பார்க்க, அபயவிதுலனோ அசைவை மறந்தவனாக அவளைத்தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இன்னும் எந்த அலங்காரமும் அவள் செய்யவில்லை… ஆனால் அந்த அழகுக்குக் கோடி கொடுத்தாலும் ஈடாகாது… சற்று ஈரம் சிந்திய முடி… அதன் வகிட்டில் கருஞ்சிவப்பில் குங்குமம்… புருவ மத்திக்குச் சற்று மேலே வட்டவடிவில் குங்குமம்… ஒற்றைக் கல் வைர மூக்குத்தி. ஊசியைச் சுமந்திருந்த சிவந்த செழித்த உதடுகள். அதற்கிடையில் தெரிந்த இரு வெண்ணிறப் பற்கள்… சங்குக் கழுத்தில் அவன் அணிவித்த தாலி மட்டும் வீற்றிருக்க, அதன் கீழே… அபயவிதுலனால் தன் விழிகளைச் சற்றும் அசைக்க முடியவில்லை.
முன்தினம் வாங்கிய சேலையில், கோவில் சிற்பம் போல நின்றிருந்தவளின் அழகில் சொக்கித்தான் போனான் அந்தக் காதலன். முந்தானை சுருங்கியிருந்ததால் தெரிந்த வெண்ணிற வயிற்றில் ஓடிப்போய்க் குடியிருக்க உள்ளம் ஏங்கியது.
அபயவிதுலனுக்கு ஏனோ பேச்சே வரவில்லை… இப்படியே காலம் முழுவதும் அவளைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோமா என்கிற வேகமும் ஏக்கமும் தோன்ற, எதுவும் செய்யத் தோன்றாமல் அப்படியே நின்றிருந்தான் அவன்.
எதுவோ உந்த தன் எச்சியைக் கூட்டி விழுங்கியவன், தன் கரத்திலிருந்த குழந்தைகளைக் கீழே இறக்கிவிட்டுத் தன் மனைவியை நெருங்கினான். அவன் நெருங்கிய வேகமும், விழிகள் சொன்ன மொழியும் ஒரு வித படபடப்பை அவளுக்கு ஏற்படுத்த தன்னையும் அறியாமல் இரண்டடி பின்னால் வைத்திருந்தாள் மிளிர்மிருதை.
இவனோ மேலும் நெருங்க, கண்ணாடியில் முட்டுப்பட்டு நின்றவள், நெஞ்சம் படபடக்க ஒருவித எதிர்பார்ப்புடன் தன் கணவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவனோ, அவள் முகத்தை விட்டுத் தன் விழிகளை விலத்தினானில்லை. அதே நேரம் மேலேறிய அவனுடைய வலது கரம், வெளியே தெரிந்த வெண்ணிற வெற்றிடையில் அழுத்தமாகப் பதியச் சிலிர்த்துப் போனாள் அக்காரிகை.
ஒரு வித அவஸ்தையுடன் அவன் கரங்களைப் பற்ற, அவனோ, அவள் இடை முதல் வயிறு வரை விரல்களால் வருடியவாறு நகர்த்திச் சென்றவன், ஒதுங்கியிருந்த சேலையைப் பற்றி, திரையை இழுப்பதுபோல வயிற்றை மறைத்தவாறு இழுத்துவந்தவனின் விரல்கள் மட்டும் மென் தோலினது தீண்டலை விடவேயில்லை. அவனுடைய பார்வையோ அவள் முகத்தில் தெரிந்த கிளர்ச்சியையும் அவஸ்தையையும் கண்டு ரசிக்கத் தொடங்கியது.
திரை மூடியாகிவிட்டது… விரல்களை எடுத்துவிடலாமே… அதை இவளாவது சொல்லலாம்… அல்லது அவனாவது நாகரீகமாக எடுத்திருக்கலாம்… ஆனால் இரண்டையும் செய்வதற்கு இருவருக்குமே மனமிருக்கவில்லை. மெல்ல மெல்ல அபயவிதுலனின் முகம் அவளுடைய தளிர் முகத்தை நோக்கிக் குனிந்தது. முன்னிரவு தேன் சிந்தும் உதடுகளில் பருகிய தேவாமிர்தம் நினைவுக்கு வந்தது. அப்போதும் அதைப் பருகிட மனம் விளைந்தது. மேலும் அவளை நோக்கிக் குனிய,
“மாமா…” என்கிற அழைப்புடன் ஆராதனா மாடிப்படி ஏறி வருவது தெரிந்தது. ஆனாலும், அவன் அவளை விட்டு விலகுவதாகவே இல்லை. இவள்தான் படபடத்துப் போனாள்.
“வி… விதுலா…!!”
“ம்…”
“ஆ… ஆராதனா…” என்றாள் கிசுகிசுப்புடன்.
“அதுக்கு…” என்றவனின் வலது கரம் இப்போதும் இடையை விட்டுத் தொடுகையை மட்டும் விடாது, மேடு பள்ளங்கள் ஏறி இறங்கி, அவளுடைய நாடியைப் பற்றியது. இவளோ மேனி நடுங்கியவளாக,
“அ… அவள் வருகி..றாள்…”
“வரட்டும்…” என்றவாறு அவளுடைய நாடியைத், தன் உதடுகள் நோக்கி நிமிர்த்த, அவள் வாயிலிருந்த ஊசி இவனைப் பார்த்து முறைத்தது.
“பா… பாத்துவிடப் போகிறாள்…” என்று பின்னால் சரிய, அவனும் அவள் புறம் குனிந்தவாறு,
“பார்க்கட்டும்…”
“கு… குழந்தைகள்…”
“இருக்கட்டும்…”
“விதுலா…!” என்றவள் அவன் மார்பில் கரம் வைத்துத் தள்ள முயன்றவளாக,
“ப்ளீஸ்… தள்ளுங்கள்! ஆராதனா…” என்று அவள் சொல்லி முடிக்க முதலே அறைக் கதவு வேகமாகத் திறந்து கொண்டது.
உள்ளே வந்தவள், திரும்பித் தன் மாமனைத் தேட, அவனோ கண்ணாடி மேசையில் சாய்ந்து நின்றவாறு மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டி ஒரு காலுக்குக் குறுக்காக மறு காலைக் வைத்தவாறு எதுவுமே நடக்காதது போல முகத்தைப் பாவமாக வைத்தவாறு நின்றிருந்தான்.
இவளோ கதவு திறந்த விநாடி கண்ணாடியைப் பார்ப்பது போல வாசலுக்கு முதுகைக் காட்டித் திரும்பி நின்றுகொண்டாள்.
மிளிர்மிருதைக்குப் பதட்டத்தில், மார்புகள் வேகமாக மேலும் கீழும் ஏறி இறங்கின. கரங்கள் நடுங்கின. கரங்கள் மட்டுமா அவளுடைய சர்வ நாடியும் நடுங்கியது. அதுவும் பெரும் இன்பத்தில் நடுங்கியது.
அவளுக்கு இன்னும் நம்ப முடியவில்லை. கதவு திறந்ததும், ஐயோ பிடிபடப்போகிறோம் என்று அவள் பதறி அவனைத் தள்ளிவிட முயன்ற விநாடியில், அவனே மின்னலென விலகி, நின்றுகொண்டான். ஆனால் இவளால்தான் சமநிலைக்கு வரமுடியவில்லை.
அபயவிதுலன் விலகிய விநாடியில் திரும்பி நின்று கொண்டிருந்தவளுக்கு அவன் செய்த சேட்டையில் முகம் சிவந்து கண்டிப் போயிற்று. அவளையும் மீறி உதடுகள் வெட்கத்தாலும், மலர்ச்சியாலும் விரிந்து நடுங்கத் தொடங்க, அதை அடக்குவதற்குத்தான் பெரும் பாடுபடவேண்டியிருந்தது.
அவளுக்கு அவனை நினைத்துப் படு கோபம் வந்தது. எப்படி அவனால் மட்டும் உணர்ச்சிகளை ஒரு விநாடிக்குள் அடக்கி, மறைக்க முடிந்தது. அதுவும் செய்வதையும் செய்துவிட்டு. அம்மாடியோவ்… இவள் அல்லவா தவித்துவிட்டாள். அதுவும் குழந்தைகளை அருகே வைத்துக்கொண்டு… நடுங்கிய கரம் கொண்டு உதடுகளை வருடியவளுக்கு, அந்த நிலையிலும் சிலிர்ப்புத் தோன்றியது. நல்லவேளை அவள் ஆராதனாவிற்கு முதுகு காட்டி நின்றாள். இல்லையென்றால்,
சற்றுத் தள்ளியிருந்த சீப்பை இழுத்து எடுக்கக் கரங்கள் ஒத்துழைத்தால் அல்லவோ. அவை நடுங்கிச் சீப்பைக் கீழே போட, அதை எடுக்கிறேன் என்று அவசரமாகக் கரத்தைக் கொண்டு சொல்ல, அது குங்குமச் சிமிழில் தட்டி, அது கொட்டுப்பட, பதறித் துடித்தவள் அதை நிமிர்த்த விநாடி அருகேயிருந்த பவுடர் கீழே விழுந்த உருள, ஒரு கணம் ஆடிப்போனாள் மிளிர்மிருதை.
ஆனால் இந்தக் குறும்பனோ, தன் மனைவியின் அவஸ்தையைப் பொங்கிய சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான் அன்றி, அவளுக்கு உதவச் சிறு விரலைக் கூட அசைத்தானில்லை. ஆனால் பார்வை மட்டும் அவளுடைய தடுமாற்றத்தை அணு அணுவாக ரசித்துக்கொண்டிருந்தது. அதைக் கண்டு எரிச்சல் கொண்டவள், “ராட்சஷன்…” என்று வாய்க்குள் முணுமுணுத்தவாறு, தன் கரத்தில் கண்ணாடி மேசையில் கொட்டிய குங்குமத்தைக் குங்குமச் சிமிழில் போட்டுவிட்டுத் தரையில் விழுந்த பவுடரை எடுத்து மேசையில் வைத்துவிட்டுப், பெருமூச்சை எடுத்து எப்படியோ தன்னைச் சமாளித்தவாறு ஆராதனாவின் பக்கமாகத் திரும்பினாலும், எழுந்த படபடப்பை மட்டும் அவளால் அடக்க முடியவில்லை.
உள்ளே வந்தவளுக்கு அவர்களின் அவஸ்தை நிலை எதுவும் தெரியவில்லை. அவர்கள் சாதாரணமாக இருப்பதுபோலத்தான் தோன்றியது. கூடவே அப்போதுதான் மாமன் குளித்து விட்டு வந்திருப்பது புரிய,
“மாமா… நேரமாகிவிட்டதே… இன்னுமா கிளம்பவில்லை?” என்று வியக்கத் தன் தொண்டையைச் செருமி சமப்படுத்தியவன்,
“இ… இதோ கிளம்புகிறேன் அம்முக்குட்டி…” என்றவாறு திரும்பியவன், அவஸ்தை இனும் மாறாமல் நின்றிருந்த தன் மனைவியை நெருங்கி, அவள் இடது கரத்தைப் பற்றித் துக்க, அவள் திகைப்புடன் நிமிர்ந்து பார்த்தாள். அவனோ தன் நாவை வெளியே நீட்ட, அங்கே சமத்தாக அமர்ந்திருந்தது ஊசி.
அதை விரல்களில் எடுத்துத் திரும்பித் திரும்பிப் பார்த்தவன்,
“ஊசி கூடச் சுவைக்கும் என்று இன்றுதான் கண்டுகொண்டேன்… ஒரே தித்திப்பா இருக்கிறது…” எனறு கூறி, அதை அவளுடைய மென்மையான உள்ளங்கையில் வைத்துப் பொத்த, இவளோ அதிர்ச்சியுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் பார்த்ததும், குறும்புடன் ஒற்றைக் கண் அடித்து நகைத்தவன், தன் ஆடை மாற்றம் அறைக்குள் நுழைய, மிளிர்மிருதை நாணத்தில் தொப்பலாக நனைந்து போனாள்.
ஆராதனா கதவைத் திறக்கும் போதே வேகமாக அவளுடைய உதடுகளை நோக்கிக் குனிந்தவன், அழுத்தமாக முத்தமிட்டவாறே, அவள் உதடுகளிலிருந்த ஊசியைத் தன் உதடுகளுக்கு இடம்மாறிக்கொண்டான் அபயவிதுலன். மாற்றியதும் எதுவும் அறியாதவன் போலக் கண்ணாடிமேசையில் சாய்ந்தும் நின்றுகொண்டான்.
நல்லவேளை ஆராதனாவிற்கு, அவளுடைய அவஸ்தையைப் பார்ப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை. அவள் அதிர்ச்சியுடன் பிறந்த கோலத்திலிருந்த தன் பெறாமக்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“டேய்… என்னடா செய்து வைத்திருக்கிறீர்கள்… இப்பொதுதானே வேட்டி சட்டையோடு நின்றிருந்தீர்கள்… இப்போது இப்படி நிற்கிறீர்களே…” என்று அதிர, முழுவதுமாகச் சுயத்துக்கு வந்த மிளிர்மிருதையும் அவர்களைப் பார்த்து முறைத்தாள்.
“நன்றாகக் கேள் ஆராதனா… உன் மாமாவிற்குக் குளிக்கவார்த்துக் கொண்டிருந்தேன்… உடனே ஆடைகளைக் களைந்து உள்ளே புகுந்து விட்டார்கள்…” என்றவாறு கரத்திலிருந்த ஊசியை எடுத்து மடிப்பைக் குத்தியவாறு நடந்து அவர்களின் அருகே வந்தாள்.
கட்டிலிலிருந்த, இருவரின் வேட்டியையும் எட்டி எடுக்க, ஆராதனாவோ, அதுவரை அங்கேயிருந்த சாத்வீகனைக் காணாது திகைத்தாள்.
“டேய் ஆத்வி… எங்கேடா சாத்வி…” என்றாள்.
அவனோ கட்டிலுக்குப் பின்னால் முட்டிக்காலிலமர்ந்து தன் மேல் உடம்பை மட்டும் வெளியே காட்டி,
“இங்கே இருக்கிறேன் சித்தி…” என்றான் நெளிந்தவாறு.
“அங்கே என்னடா செய்கிறாய்…” என்று திகைக்க, அதைக் கண்டு மிளிர்மிருதைக்குச் சிரிப்பு பீரிட்டுக் கொண்டு வந்தது.
“ஒன்றுமில்லை ஆராதனா… அவனுக்குக் கொஞ்சம் கூச்ச சுபாவம்… அதுதான்” என்றதும்,
“டேய் டேய்… அனியாயத்துக்க நடிக்காதேடா… நீயெல்லாம் வெட்கப்படுவது நம்பக் கூடியதாகவா இருக்கிறது… மரியாதையாக வெளியே வா…” என்று ஆராதனா மிரட்ட, சாத்வீகனோ கட்டிலிலிருந்து துள்ளியவாறு,
“நீங்கள் வெட்கப்படுவதையும்தான் நம்மால் நம்ப முடியவில்லை…” என்றான்.
“டேய் நான் எங்கேடா வெட்கப்பட்டேன்…” என்று இவள் வியக்க,
“ஆ… நேற்று சித்தப்பா உங்களுக்குக் கிஸ் பண்ணினார் அல்லவா… அப்போது…” என்றதும் அதிர்ந்து போனாள் ஆராதனா.
“ஐயோ… இது இவனுக்கு எப்படித் தெரியும்… சித்தார் தனியாக இழுத்துக் கொண்டல்லவா சென்றான்… இவன் எங்கிருந்து பார்த்தான்…” என்று சங்கடமாக நெளிய அதைக் கண்டு தன்னை மறந்து கலகலவென்று சிரித்தாள் மிளிர்மிருதை.
ஆடை மாற்றும் அறைக்குச் சென்ற அபயவிதுலன் அந்தச் சிரிப்பில் தடை போட்டதுபோல அப்படியே நின்றுவிட்டான். முகம் மலர, உள்ளம் பூரிக்க ஆவலுடன் கதவைத் திறந்து பார்க்க, அங்கே அவனுடைய மனையாள் ஒரு கரத்தில் வேட்டியை ஏந்தியவாறு மறு கரத்தை மார்பில் பதித்துத் தலையைச் சற்றுப் பின்னால் சரித்து, குலுங்கிக் குலுங்கி நகைத்துக்கொண்டிருந்தாள்.
அவளுடைய சிவந்த சதைப்பற்றுக் கொண்ட உதடுகள் நன்றாகவே விரிந்து சிரிக்க, அதில் முத்துப் பற்கள் அழகாய் எடுப்பாய் வெளித் தெரிய அந்தச் சிரிப்பினூடே விழிகளும் சிரிக்க… அதைக் கண்டவனுக்கு அவனையும் மீறிக் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது.
முதன் முதலாக அவளைக் காண்பதற்காக மறைந்து நின்று பார்த்தபோது, அவள் தோழிகளுடன் நகைத்த அதே சிரிப்பு. எந்த வித வலியும் வேதனையும் இல்லாது, மனம் நிறைய, சிரித்த அதே சிரிப்பு… இனி ஒரு போதுமே காண முடியாதோ என்று ஏங்கித் தவித்த நகைப்பு. இதே நகைப்பைப் பார்க்க வேண்டும் என்று அவன் எப்படி ஏங்கியிருந்தான்… கடவுளே… இதோ இப்போது அவன் கண் முன்னால் பொங்கி நகைக்கிறாளே… அப்படியானால் அவள் அத்தனை வலியையும் மறந்துவிட்டாள் என்றுதானே பொருள். இல்லையென்றால், இப்படி மனம் விட்டுச் சிரிக்க முடியுமா? என் தேவதை சிரிக்கிறாள்… ஆ… என் தேவதை இவள்… எனக்கே எனக்காக இறைவன் படைத்த அற்புதப் பொக்கிஷம் இவள்…” என்று எண்ணியவனின் விழிகளில் பொங்கிய கண்ணீரை வேகமாகத் துடைத்தவனுக்கு எங்கே அந்த அழகைக் காணாது போய்விடுமோ என்கிற ஏக்கமும் தோன்றியது.
மிளிர்மிருதையோ தன்னைத் தன் கணவன் கண்டு உருகி நிற்கிறான் என்பது தெரியாமல், தன் சிரிப்பை அடக்கியவளாக, “அ… அப்புறம்…” என்றாள் மேலும் பொங்கிய சிரிப்பை அடக்க முயன்றவாறு.
சங்கடத்துடன் நெளிந்த ஆராதனா
“அது… வந்து… அக்கா… அவர் தான்…” என்று நெளிந்தவளின் விழிகளில் வாய் திறந்து தன் மனைவியின் அழகில் லயித்திருந்த மாமன் தெரிய இப்போது சங்கடம் போய் அங்கே கிண்டல் உற்பத்தியானது.
இடையில் கை வைத்தவள், நிமிர்ந்து நினைத்து நினைத்துச் சிரித்துக்கொண்டிருந்த சகோதரியைப் பார்த்து,
“ஹலோ… என்னை எண்ணிச் சிரிப்பது இருக்கட்டும்… அக்கடச் சூடு… அங்கே ஒருத்தர் வாயில் அசடு வழிவது கூடத் தெரியாது, சைட் அடிப்பதை… எங்களைச் சொல்ல வந்துவிட்டீர்கள்…” என்று தோளில் நாடியை இடிக்கத் திரும்பிய மிளிர்மிருதை, அங்கே அபயவிதுலன் அவளை வெறித்துக் கொண்டிருப்பது புரிய மீண்டும் சிவந்து உதடுகள் கடித்தாள். .
அந்தப் பார்வை, அவள் உயிரையே உறிஞ்சி இழுப்பது போலத் தோன்றக் கண்ணிமைப்பது கூட மறந்து போனது அவளுக்கு.
அதைக் கண்டு நகைத்த ஆராதனா, அவள் கரத்திலிருந்த வேட்டிகளையும். கட்டிலிலிருந்த குழந்தைகளின் ஆடைகளையும் வாரி எடுத்தவாறு,
“வாருங்கள்டடா… இப்போதைக்கு உங்கள் அம்மாவும் அப்பாவும் விழித்துக் கொள்ள மாட்டார்கள்…” என்றவாறு அவர்களின் கரத்தைப் பற்றி இழுத்து வெளியே சென்றவள், மறக்காமல் கதவை இழுத்துச் சாற்றிவிட்டே சென்றாள்.
(23)
அதுகூடத் தெரியாமல் இருவரும் ஆளுக்கொருவரைப் பார்த்துக்கொண்டு சற்று நேரம் நிற்க, மிளிர்மிருதைக்கு அவனுடைய கூரான விழிப் பார்வைகளின் தாக்கத்தால் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. மெல்லிய தடுமாற்றத்துடன் அவள் எதையோ கூறுவதற்காக வாயை அசைக்க, அதற்கு மேல் அபயவிதுலனால் அவளை வெறுமே பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.
ஓரெட்டில் அவளை அணுகியவனுக்கு நாகரீகம் சுத்தமாக மறந்து போனது. இறுதி நேரத்தில் மூச்செடுத்தால்தான் உயிர் வாழ முடியும் என்பது போல, அவள் இதழ் சுவையை அருந்தினால்தான் அடுத்த மூச்சையே எடுக்க முடியும் என்பது போல அவளை நோக்கிப் பாய்ந்தவன், சற்றும் தாமதிக்காது தன் உதடுகளால் அவள் உதடுகளைச் சிறைப்படுத்திக்கொண்டான் கணவனாய்.
அந்த உதடுகள் சிறைபிடித்ததோடு மட்டும் நின்றிடவில்லை சிற்பம் வேறு செதுக்கத் தொடங்கியது. மெல்ல மெல்லத் தட்டி தட்டி உதடுகளை அழகிய வடிவமாக்கியது. பின் தன் வேகத்தைக் கூட்டி, வலிமையாய் செதுக்கத் தொடங்க அந்த வலிய உதடுகளின் வேகத்தைத் தாங்க முடியாது அந்த மெல்லிய உதடுகள் நடுங்கத் தொடங்கின. அதனால் அவள் மெதுவாக அவனிடமிருந்து விடு பட முயல, அதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவனாக அவனுடைய கரம் அவள் இடையை வளைத்துத் தன்னோடு நெருக்கி மேலும் தன் யுத்தத்தை நடத்தத் தொடங்கினான்.
அந்த உதடுகளின் முற்றுகையில், இருவரும் மெல்ல மெல்லத் தங்கள் நிலையை இழந்துகொண்டிருந்த நேரம். அவனுடைய காயம் பட்ட கரங்களின் வலிகள் மெல்ல மெல்ல மறைந்து கரைந்து கொண்டிருந்த தருணம். காயம் படாத கரங்கள், அவள் மேனியில் ரவிவர்மனின் ஓவியத்தை வெட்கமின்றித் தீட்டிய காலம்… உள்ளமும் உள்ளமும், ஆன்மாவும் ஆன்மாவும் கலந்த கலவியின் அடுத்தப் படியாக, உடலும் உடலும் இணையும் வேட்கையில் அவனும் அவளுமாய்த் தம் நிலை கெட்ட வேளை, தற்காலிகமாக உதடுகளை விடுவித்து, கன்னம் காதுகள், கழுத்து என்று ஆவேசமாகப் பயணித்த பொழுது, மீண்டும் வேகமாகக் கதவு திறந்து கொண்டது.
முதலில் இருவருக்கும் கதவு திறந்து கொண்டதோ, சூறாவளியாகச் சாத்விகன் ஓடி வந்ததையோ உணரவில்லை. வந்தவன்,
“அம்மா…” என்ற அலற, அப்போதுதான் இருவருக்கும் சுயநினைவே வந்தது. பதறி அடித்துத் துடித்து இருவரும் விலகித் தவிப்புடன் திரும்பிப் பார்க்க, அரைகுறையாகக் கட்டிய வேட்டியுடன் நின்றிருந்தான் அவன்.
அவனைக் கண்டதும், பூஜை வேளை கரடி…’ என்று அபயவிதுலன் முணுமுணுக்க, சாத்வீகனோ இடையில் கட்டிய வேட்டியை மார்போடு அணைத்தவாறு, தந்தை தாயை முறைக்க, அபயவிதுலனும் மிளிர்மிருதையும் ஒருவரை ஒருவர் சங்கடமாகப் பார்த்துவிட்டுத் திரும்பி,
“டேய்… என்னடா வேண்டும் உனக்கு… எதற்கடா வந்தாய்?” என்றான் அபயவிதுலன் சற்றுக் கோபமாக. அதற்கு ஏற்ற கோபத்துடன் தந்தையைப் பார்த்த சாத்விகன்,
“எதற்கு அம்மாவைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தீர்கள்… எதற்கு உங்கள் முகத்தை அம்மாவின் கழுத்தில் புதைத்திருந்தீர்கள் என்று விளக்கம் கேட்க, அபயவிதுலன் முதன் முதலாகத் திருத் திரு என்று விழித்தான்.
அவனுக்கே அவன் எந்த நிலையிலிருந்தான் என்பது மறந்துவிட்டிருந்தது. இந்த நிலையில், சிறியவன் கேட்டால் என்ன பதிலைக் கொடுப்பது. தட்டுத் தடுமாறித் தயங்கிப் பின் ஓரளவு தெளிந்தவன்,
“அதுவாடா… அது வந்து… சேலைக்குப் பின் குத்த சொல்லி அம்மா கேட்டார்கள்… அதைத்தான் செய்தேன்டா…” என்று சமாளிக்க,
“அதைக் கையால் செய்யவேண்டும்பா… யாராச்சும் வாயால் செய்வார்களா?” என்று மகன் அழுத்தமாகக் கேட்க, மிளிர்மிருதையோ தன்னை மறந்து ஒரு கரம் வயிற்றை அணைத்திருக்க, மறு கரத்தை அதன் மேல் வைத்து வாயைப் பொத்திக் கிளுக் என்று சிரித்தாள்.
இவனோ எரிச்சலுடன் தன் மனையாளைப் பார்த்து முறைத்துவிட்டு,
“ஏய்… பதில் தெரியாது நான் திண்டாடுகிறேன்… நீ… சிரிக்கிறாயா…” என்று சுள்ளளென்று விழுந்தவன். பதில் கூற முடியாது தயங்கி, பின்
“அது வந்துடா… எனக்குத்தான் கை அடிபட்டிருக்க… எப்படிக் கையால் குத்துவது… அதுதான் வாயால் குத்தினேன்… போதுமா…” என்று கூறிவிட்டுத் தனக்குத்தானே சபாஷ் சொல்ல, சற்று நேரம் அமைதி காத்த மகன்,
“அப்படியென்றால் சரிதான்… எனக்கு வேட்டி கட்டிவிடுங்கள்பா…” என்றான் இரு கரத்தாலும் வேட்டியை விரித்துப் பிடித்தபடி.
“டேய்… அதுதான் சித்தி அழைத்துச் சென்றார்களே… அவர்களிடம் கட்ட வேண்டியதுதானே…” என்ற மிளிர்மிருதை, திரும்பித் தன் கணவனைப் பார்க்க முடியாது விழிகளைத் தரையை நோக்கித் தளர்த்தி,
“போய்ச் சட்டையை மாற்றுங்கள் விதுலா…! நேரம் செல்கிறது…” என்றதும், அவனுக்கும் அவளுடைய முகத்தைப் பார்க்கச் சங்கடமாக இருந்தது போலும்.
விட்டால் போதும் என்கிற நிலையில் தன் அறைக்குள் நுழைந்து கதவை அறைந்து சாற்றியவனுக்கு அவனையும் மீறி உதடுகள் மலர்ந்து நகைத்தன. தன் முத்தத்தின் வேகத்தைத் தாங்கிக்கொண்ட மனையாளையும், அதனை மறுக்காமலும் ஏற்றுக்கொண்ட அவள் இனிமையையும் எண்ணும் பொது எதிலோ ஜெயித்துவிட்ட பெருமிதம் அவனுக்குள். தன் மனையால் தன் தவறுகளை மறக்க ஆரம்பித்துவிட்டாள் என்பது புரிய உள்ளம் குதூகலித்தது. மகிழ்ச்சியில் ஓங்காரமிட்டுக் கத்தியது… கூடவே அவனுக்காகப் பார்த்துப் பார்த்து அன்னையாக மாறி அவள் செய்யும் சேவையை எண்ணி விழிகள் பணிக்கவும் செய்தது.
“ஐ ப்ராமிஸ் யு பேபி… இந்த முறை உன்னை உள்ளங்கையில் வைத்துத் தாங்கி, நீ பட்ட வலியை மறக்கடித்து, என்னைப் புதிய விதுலனாக உன் உடலுக்கு அறிமுகப் படுத்துகிறேன்…” என்று தனக்குள் கூறியவனுக்கு உற்சாகத்தில் வானில் பறப்பது போலத் தோன்றியது.
அதே வேளை தன் மகனைத் தூக்கிக் கட்டிலில் ஏற்றிவிட்டு வேட்டியைக் கட்டத் தொடங்கியவள்,
“கேட்டேன் அல்லவா… சித்தியிடம் கேட்டுக் கட்டியிருக்க வேண்டியதுதானே…” என்று கேட்டவளுக்குத் தன்னவனின் ஸ்பரிசம் கொடுத்த கிளர்ச்சியை மறக்கவே முடியவில்லை. கூடவே தன் மகனை எண்ணிக் கோபமும் வந்தது. சற்றுப் பொறுத்து வந்திருந்தால்தான் என்னவாம்… கொஞ்ச நேரம், இருவரும் ஒருவரை ஒருவர் மறந்திருந்தால் பொறுக்காதே…’ என்று எண்ணியவளாகத் தன் கோபத்தைக் கட்டிய வேட்டியில் காட்ட, மகனோ, அதைப் பொருட் படுத்தாது,
“சித்தி கட்டிவிடுகிறேன் என்றுதான் சொன்னார்கள்… என்றவாறு மகன் மெல்லியதாக நெளிய, அந்த அழகில் தன்னை மறந்தாள் மிளிர்மிருதை. சிரிப்பில் உடல் குலுங்க,
“இதில் மட்டும் குறைச்சலில்லை…” என்று செல்லமாக வைதுவிட்டு இழுத்து அணைத்து தலை உச்சியில் முத்தமிட்டுவிட்டுத் திரும்ப, அபயவிதுலன், வேட்டியைக் கோணல் மாணலாகக் கட்டியவாறு தோளில் ஷேர்ட்டைப் போட்டுக் கொண்டு வந்தான்.
அவனுக்கும் சாத்வீகனுக்கும் அதிக வித்தியாசம் இருப்பது போல அவளுக்குத் தெரியவில்லை. மேலும் எழுந்த புன்னகையை மறைக்க முயன்றவாறு, தன்னவனை நெருங்கி, அவன் சொருகியிருந்த வேட்டியில் கை வைக்க,
“ஏய்… என்னடி செய்கிறாய்…” என்றான் காயம் படாத கரத்தால் அவள் கரத்தைப் பற்றியவாறு.
“ம்… துகில் உரிகிறேன்… வேண்டுமானால் கிருஷ்ணனை அழைத்துப் பாருங்கள், உங்கள் மானத்தைக் காப்பாற்றுவார்…” என்றவாறு முழுவதுமாக அவிழ்க்க அபயவிதுலனோ தன் இரு கரங்களையும் தூக்கி விரித்தவாறு,
“நான் எதற்குக் கிருஷ்ணனை அழைக்க வேண்டும்… அதுதான் என் மனைவி கண் முன்னே இருக்கிறாளே… அவளை அழைத்து விட்டுப் போகிறேன்…” என்றவாறு, தன் கரங்களின் நடுப் பகுதியை அவள் தோள்களில் பதித்து அவள் நோக்கி நன்கு குனிந்து காதுகளில்,
“மிரதா… மிருதா…. மிருதா…” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் ஏலம் விட, இவள் முகம் மேலும் சிவந்து போனது.
“அப்பா… இப்போது என்னப்பா செய்கிறீர்கள்…” என்று சாத்விகன் கட்டிலில் துள்ளியவாறு கேட்க, அபயவிதுலனோ ரசனையைத் தொலைத்தவாறு தன் பற்களைக் கடித்து விழிகளை இறுக மூடி,
“நமக்கு வில்லன்களை வெளி இடத்தில் தேடவேண்டியதில்லைடி… இதோ இங்கே… நம் கண் முன்னால் இருக்கிறார்கள்… முதலில் இருவரையும் எங்காவது விடுதியில் விடவேண்டும்… அப்போதுதான் நாம் இருவரும் ஆனந்தமாக…” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே மிளிர்மிருதை, அவன் இடையைச் சுற்றி வேட்டியைக் கட்டி உள்ளே செருகிவிட்டு, அவன் தோளில் போட்டிருந் சட்டையை இழுத்தெடுத்து,
“எப்படி எப்படி… நீங்கள்… அவர்களை விடுதியில் விட்டுப் படிப்பிக்கப் போகிறீர்கள்… நடக்கும் காரியமாகச் சொல்லுங்கள் விதுலா…! வீட்டிற்கு வந்தால் ஒரு விநாடியும் அவர்களை விட்டுப் பிரிய மாட்டீர்கள், ஒவ்வொரு மணித்தியாளத்திற்கும் ஒரு முறை அவர்களின் நலன் பற்றி விசாரிப்பீர்கள்… நீங்கள் அவர்களை விட்டுப் பிரிவீர்களாக்கும்… பிரிந்திட்டாலும்…” என்று நொடிந்தவள், அவன் சட்டையை உருட்டித் தூக்க, அதைப் புரிந்துகொண்டவனாக அவள் தலை நோக்கித் தன் தலையை நன்கு குனிந்தான் அபயவிதுலன்.
சட்டையின் தலைப்பக்கத்தை எடுத்து அவன் தலையில் போட்டுக் கீழ் இழுத்துத் தன் தோள்களிலிருந்த கரங்களை விலக்கி. சட்டைக்குள் புகுத்தி நன்றாக இழுத்து விட்டவள், அவனை விட்டு விலகிச் சென்று, கண்ணாடி மேசையிலிருந்த சீப்பை எடுத்தவாறு அவனை நோக்கி நெருங்கினாள்.
அவளை விட மிக மிக அதிக உயரத்திலிருந்தவனை நோக்கிக் கையைத் தூக்க, அவனுடைய முன் புற நெற்றியைத்தான் அவளால் இழுத்து விட முடிந்தது. எரிச்சலுடன்,
“குனியுங்கள் விதுலா…!. இப்படி நின்றால் எப்படித் தலைமுடியை வாருவது…” என்று கடிந்து கொள்ள, அவனோ சற்றும் தாமதிக்காது, குனிந்து அவள் தொடைகளைச் சுற்றித் தன் கரங்களைக் கொண்டு சென்று மேலே தூக்க, இப்போது அவனை விடச் சற்றை உயரத்தில் ஏறியிருந்தாள் மிளிர்மிருதை.
முதலில் அதிர்ந்தவள், பின் தன் தோள்களைக் குலுக்கி, இடது கரத்தால் அவன் நாடியைப் பற்றி, வலது கரத்தால் அவன் தலை முடியின் கன்ன உச்சி பிரித்து ஒழுங்காகச் சீவத் தொடங்க, அபயவிதுலனின் விழிகளோ தன் மனைவியின் முகத்திலிருந்து சற்றும் விலகுவதாயில்லை.
பெரும் தாபத்துடனேயே அவள் முகத்தையும் விழிகளையும் பார்த்துக்கொண்டிருந்தான். கூடவே மெல்லிய அவள் மேனியின் வருடலையும் ஒரு ஆணாய், கணவனாய் உணர்ந்து உருகத் தொடங்க, அந்தக் காரிகையோ அதைக் கணக்கில் எடுத்துக் கொண்டாளில்லை.
தன் காரியமே கண்ணாய், பின் தலை, முன் தலை, பக்கம் என்று கவனமாய் வாரி விட்டவள் பின் வலது கரத்தால் பிடரி முடியை வருடிக் கொடுத்தவாறு இளம் புன்னகையுடன், தன் கணவனின் கம்பீரத்தில் லயித்திருந்தாள்.
அவன் பிடியிலிருந்து இறங்க வேண்டும் என்று அவளுக்கும் தோன்றவில்லை, அவளை விடுவிக்க வேண்டும் என்று அவனுக்கும் தோன்றவில்லை.
எத்தனை நேரம் அப்படியே நின்றிருந்தனரோ
“சாத்வி…” என்கிற அழைப்புத் தொலைவிலிருந்து வர, இவனுக்கோ அவளை விடும் எண்ணம் சற்றும் இருக்கவில்லை. ஏற்கெனவே முன்னர்ப் பட்ட அனுபவம் அவளுக்கு இருந்ததால், தன் காலை உதைந்து அவனிடமிருந்து விடுபட்டுக் கீழே இறங்கியவள், ஆளை விடு சாமி என்பது போலச் சேலை சரசரக்க சாத்விகனின் கரத்தைப் பற்றி இழுத்தவாறு வெளியே ஓட, அதைக் கண்டு ரசித்துச் சிரித்தான் அவள் உள்ளங்கவர் கள்வன்.

