(20)
எத்தனை நேரம் இருவரும் அப்படியே இருந்தனரோ தெரியவில்லை, இன்னும் மிளிர்ம்ருதையைக் காணவில்லையே என்று யோசனையுடன் திரும்பிய ராஜாவிற்கு அப்போதுதான் அவள் வெளியே வராமல் வாகனத்தின் உள்ளேயே இருப்பது புரிந்தது.
யோசனையுடன் வாகனத்தை நெருங்கியவாறு,
“ஹே… மிளிர்ம்ருதை… சாப்பிட வரவில்லை…” என்றவாறு அவள் பக்கத்துக் கதவைத் திறக்க, இப்போது மிகிர்ம்ருதையின் முகத்தில் பெரும் நிம்மதி எழுந்தது. அவள் முகத்தில் தெரிந்த நிம்மதியைக் கண்ட அபயவிதுலனுக்கு மீண்டும் யாரோ முகத்தில் அறைந்ததுபோலத் தோன்றியது. அவளுடைய அந்த மலர்ச்சியைக் கண்டதும், மீண்டும் ஒரு முறை உள்ளுக்குள் இறக்காமல் இறந்து புதைந்தான்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்… ஆம்… அந்த ஒரு சம்பவமே, அவளோடு இனி இணைய முடியாது என்கிற உன்மையை அவனுக்குப் புரியவைக்கப் போதுமானது. அதை உணர்ந்ததும் கலங்கிப்போனான் அவன். எப்போதும் போலத் தன் வலியைப் பிறர் பார்க்காது, தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டவன், அதே கம்பீரத்துடன் நிமிர்ந்து வேகமாக உணவகத்தை நோக்கிச் செல்ல, அவனுடைய அந்தப் பரந்த முதுகை வெறித்தவாறே ராஜாவிற்காக உணவகம் நோக்கி நடக்கத் தொடங்கினாள் மிளிர்ம்ருதை.
உணவகத்திற்குள் நுழைந்த போதும் சரி, அவளுக்குப் பிடித்த உணவை அவன் எடுத்து வருமாறு உத்தரவிட்ட போதும் சரி, உணவுக்காகக் காத்திருந்த போதும் சரி, அவன் ஒரு வார்த்தையும் பேசினானில்லை. ஆனால் அவள் சுவாசித்த காற்றை முன்னேயிருந்து சுவாசிக்கிறோம் என்கிற மலர்ச்சி மட்டுமே அவனுக்குள்.
அதே வேளை, தனக்குப் பிடித்த உணவுகளை அவன் பட்டியலிட்ட போதே, மிளிர்ம்ருதை திகைத்துப் போனாள். ‘இவையெல்லாம் எனக்குப் பிடிக்கும் என்று இவனுக்கு எப்படித் தெரிந்தது?’ என்று குழம்பியவளுக்கு, அவன் வாங்கித் தரும் உணவை உண்ணும் அளவுக்குத் தன் தகுதி தரங்கெட்டுப்போகவில்லை என்கிற கோபமும் வந்தது.
வந்த உணவை நாகரீகமாக மறுத்துவிட்டு, வெறும் தண்ணீரைக் குடித்தவளைத் தன் விழிகளால் ஒரு பார்வை பார்த்தானன்றி வேறு எதுவும் பேசினானில்லை.
ராஜாதான், தான் தருவித்த உணவின் பாதியை அவள் தட்டில் போட்டு, உண்ணுமாறு வற்புறுத்த, அவன் அன்புக்குக் கட்டுண்டு, ஒரு வாய் உண்ணும் போதே நிமிர்ந்த விழிகள், சந்தித்தது, வெறித்த அவன் பார்வையை மட்டுமே.
ஆனாலும் தைரியமாகவே அவன் விழிகளின் வீரியத்தைச் சந்தித்தவள், ஆத்திரம் தாங்காமலே, ராஜா கொடுத்த உணவை மிச்சம் விடாது உண்டு முடித்துவிட்டுத் தட்டை வைக்க, அதைக் கண்டவனின் முஷ்டிகள் மேலும் இறுகின. ஆனாலும் அவன் பேசவில்லை.
பேச முடியாது… பேசவும் கூடாது. அவன் விதைத்த விதை. இப்போது அறுவடை செய்கிறான்.
மௌனமாக எழுந்தவன், அதற்குண்டான பணத்தைக் கொடுப்பதற்காகப் பின் புறப் பான்டில் செருகியிருந்த பணப்பையை எடுக்க முயல, கண்ணிமைக்கும் நொடியில், தன் கைப்பையிலிருந்த வங்கி அட்டையை எடுத்து, அங்கே நின்றிருந்த சர்வரிடம் நீட்ட, ஒரு கணம் அவளை விறைப்புடன் பார்த்தான் அபயவிதுலன். பின் சர்வரை பார்த்து,
“இட்ஸ் ஓக்கேப்பா… நான் கொடுக்கிறேன்…” என்று அழுத்தமாகக் கூறியவன், பணப்பையிலிருந்து சில நோட்டுக்களை வெளியே எடுக்கும்போதே ஆத்திரத்துடன் அவனை ஏறிட்டவள்,
“நான் கொடுக்கிறேன் சார்…!” என்றாள் கடித்த பற்களுக்கூடாக.
“இட்ஸ் ஓக்கே மாடம்… ஆனர் இஸ் மைன்… இந்த முறை நான் கொடுக்கிறேன்… அடுத்த முறை நீங்கள் கொடுத்து விடுங்கள்…” என்று மெல்லிய புன்னகையுடன் கூற, இவளால் அவனைப் பார்த்து முறைக்க மட்டும்தான் முடிந்தது. கூடவே அவனுடைய ‘ங்கள்’ விகுதியும் அவளைக் குற்றம் செய்தவள் போல உணர வைக்க, அதற்கு மேல் பேசாமல் தன் வாயை மூடிக்கொண்டாள்.
இனி எல்லோரும் பார்க்க அவன் கூடச் சண்டை பிடிக்கவா முடியும்? அவனோ, பணத்தைக் கொடுத்துவிட்டு, பணப்பையைப் பான்டின் பின் புறம் செருகியவாறே,
“ஷால் வி கோ…” என்று விட்டு வெளியேற, வேறு வழியில்லாமல் அவர்களைப் பின்தொடர்ந்தாள் மிளிர்மிருதை. ஆனாலும் அவன் பணத்தில் உண்ட உணவு செரிக்கமாட்டேன் என்று அடம்பிடித்தது. ஒரு கட்டத்திற்குமேல் அந்த எரிச்சலைத் தாள முடியாதவளாகத் தன் கைப்பையைத் திறந்து பார்த்தாள். அவசரத்திற்கென்று எப்போதும் பணம் தனியாக எடுத்து வைப்பது வழக்கம். உடனே பணம் எடுத்து வைத்த உறையைக் கைப்பைக்குள் தேட, அது சிக்கியது. அதை எடுத்துத் திறந்து பார்த்தாள். ஐந்நூறு ரூபாய்கள் இருந்தன. நிம்மதியுடன் அந்தத் தாளைக் கரத்தில் எடுத்தவள், வாகனத்தின் பின்னால் ஏறி அமர்ந்தவாறே, கியர் ஷிஃப்டருக்கு அருகாமையில் பணத்தை வைக்க, அப்போதுதான் உள்ளே ஏறி அமர்ந்தவன், அவள் பணம் வைப்பதைக் கண்டு பெரும் சீற்றத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
அவளோ அவனைப் பார்க்காமலே,
“யாருடைய தயவும் எனக்கு வேண்டியதில்லை சார்…! தவிர அன்னியர் கையால் உணவு வாங்கி உண்ணும் நிலையிலும் நான் இல்லை…” என்று ராஜா வருவதற்கு முன்பாக அழுத்தமாகக் கூறிவிட்டு, பேச்சு முடிந்தது என்பது போலக் கார்க் கதவை நெருங்கி அமர்ந்து வெளியே பார்க்கத் தொடங்க, இவனோ எதுவும் சொல்ல முடியாத நிலையில் ஸ்டியரிங் வீலையே இறுகப் பற்றியவாறு முகம் கறுக்க அமர்ந்திருந்தான்.
அடுத்த ஒன்றரை மணி நேரப் பயணத்தில் கண்டிக்கு வந்து சேர்ந்திருந்தனர் அனைவரும். கண்டி மலைப்பிரதேசம் என்பதால் மிதமான குளிர் அவர்களை அன்போடு வரவேற்றது. கூடவே இயற்கை அழகும், கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் மரங்களும், ஆறுகளும், அதன் மேல் கட்டப்பட்ட வீடுகளும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை.
மிளிர்ம்ருதை தன்னை மறந்து ஆவலுடன் அந்த மலைகளையும், அதன் மேல் தொத்திக்கொண்டிருந்த அடர்ந்த மரங்களையும், தொலைவில் தெரிந்த காடுகளையும், இடையாக ஓடிய ஆறுகளையும் தன்னை மறந்து ரசித்துக் கொண்டு வர, வாகனம் ஒரு மேட்டின் மீது ஏறத் தொடங்கியது. மேலே போகப் போக, மெல்லியதாக வீசிய காற்றில் உடல் குளிர்ந்து சிலிர்த்துப் போனாள்.
அதுவரையிருந்த கடினம், அந்தக் குளிரில் கரைந்து போக, அங்கும் இங்குமாய்த் தெரிந்த, ரோஜா மரங்களையும், ஆர்கிட் மலர்களையும், பெயர் தெரிந்தும் தெரியா மலர்களையும் கண்டு இரசித்துக்கொண்டு வந்தவளுக்கு, ஏனோ இந்த இடம் மிகவும் பிடித்துப் போனது. வாகனம் மேலே போகப் போக, குளிரும் சற்று அதிகரிக்கத் தொடங்க, ஒரு கட்டத்தில் தன்னையும் மீறிக் கரங்களைத் தேய்த்து விட்டுக்கொண்டாள் மிளிர்ம்ருதை.
கண்டியில் குளிரும் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் இப்படிக் குளிரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் அணிந்து வந்த நீண்ட கை சட்டையையும் மீறிக் குளிர் ஊடுருவிச் செல்ல, தன் மார்புக்குக் குறுக்காகக் கரத்தைக் கட்டி தோளுடன் சேர்ந்த மேல் கரங்களைத் தன்னை மறந்து தேய்த்துக் கொடுக்க, அதை முன் பதித்திருந்த கண்ணாடியில் கண்டுகொண்டான் அபயவிதுலன்.
உடனே தன் காரை ஓரமாக நிறுத்தியவன், வெளியேறி ட்ரங்கைத் திறந்து, அதிலிருந்து எப்போதும் வைத்திருக்கும் தடித்த மேல் கோர்ட்டை எடுத்துவந்து, அவள் புறத்துக் கதவைத் திறந்து நீட்ட, அதுவரையிருந்த இனிமை காற்றில் கரைந்து போனது மிளிர்ம்ருதைக்கு.
அவனையும், அந்தக் கோர்ட்டையும் மாறி மாறிப் பார்த்தவள், பின் அவன் கண்களுக்குள் தன் கண்களை ஊடுருவ விட்டாள். அவனும் அவளைத்தான் சளைக்காமல் பார்த்தான். ஆனாலும், அவள் விழிகளில் தெரிந்தது என்ன? அவனையும் மீறிக் கரம் தாழ்ந்தது. ஆனாலும் அவள் குளிரில் வாடுவதை அவனால் பார்த்துக்கொண்டும் இருக்க முடியவில்லை.
அதனால், அந்தக் கோர்ட்டை அவளுக்கருகே போட்டுவிட்டு மீண்டும் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து வாகனத்தை ஓட்ட, இவளோ, கோர்ட்டை நகம் கொண்டும் தீண்டாது, மீண்டும் வெளியே வெறிக்கத் தொடங்கினாள். இப்போது இளகியிருந்த மனம் கடுமையில் இறுகிப்போனது.
மேலும் அரை மணி நேரப் பயணத்தின் பின், வாகனம் ஒரு குறிப்பிட்ட மலையினருகே வர, அந்த மலையை இனம்கண்டுகொண்டாள் மிளிர்ம்ருதை. அன்று இரட்ணசிங்கம் அவளிடம் இது பற்றிய கோப்பைக் கொடுக்கும் போது, அவள் கவனத்தைக் கவர்ந்த அந்த ஒரு ஜோடி மலைகள்தான் அவை. படத்தில் பார்த்தபோதே எப்படியோ, அதை நேராகப் பார்க்கும் போது அவளால் தன் விழிகளை நம்பவே முடியவில்லை. அதிகம் உயரமில்லாத மலைதான். மலைகள் என்பதை விடக் குன்றுகள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்குமோ? ஆனால் குன்றை விடச் சற்று உயரமாகத்தான் இருந்தது.
ஒரு மலை சற்றுப் பதிவாகவும், அதனோடு இணைந்த மலை மிக உயரமாகவும் இருந்தது. படத்தில் பார்த்தது போலவே சிறிய மலையை அந்தப் பெரிய மலை அணைத்திருப்பது போலத்தான் தோற்றம் தெரிந்தது. சிறிய மலையில் உச்சியில் பல வர்ண மலர்கள் அதன் எழிலை மேலும் அழகாக்க, அது அந்தப் பெண்ணின் தலையில் சூடிய மலரெனக் காட்சி கொடுத்தது. போதாததற்குச் செம்மஞ்சள் சற்றுத் தூக்கலாக இருந்ததால், இயற்கையாகவே அந்த மலை நாணம் கொண்டது போலவும், அருகேயிருந்த மலை சற்றுக் கோபம் கொண்டது போலவும் தோற்றம் கொடுத்தது.
தன்னை மறந்து வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருக்கையில், வாகனம் சற்று நேரத்தில் மலையின் உச்சியின் ஒரு பிரமாண்டமான கதவுக்கு முன்னால் வந்து நிற்க, அந்தக் கதவுகள் இரண்டும் தாமாகத் திறந்து கொண்டன. வாகனம் உள்ளே மெதுவாக நுழைய, அங்கே கண்ட காட்சியில், மிளிர்மிருதையின் வாய் தானாகத் திறந்து கொண்டது.
(21)
வெண்ணிற மேகங்களுக்கு மத்தியில் விரிந்த பாதையில் தேர் போலச் சென்றது அவனுடைய வாகனம்.
அந்த இடத்தைப் பார்த்தவளுக்குத் தன் விழிகளை இமைக்கவே முடியவில்லை. எங்கே இமைத்தால், அந்தக் காட்சிகள் மறைந்துவிடுமோ என்று அச்சமாக வேறு இருந்தது.
தவறிப்போய், சொர்க்கத்திற்குள் நுழைந்துவிட்டார்களோ? அல்லது ரவிவர்மன் வரைந்த ஓவியம்தான் உயிர்பெற்று கண்முன்னால் விரிந்ததோ…? இல்லை தெய்வம் இளைப்பாற இங்கேதான் வருமோ? எங்கு பார்த்தாலும் வர்ணப் பூக்களின் கம்பளம். அதுதான் தொலைவிலிருந்து பார்க்கும் போது, பெண்ணின் தலையில் அடரச் சூடிய மலரெனக் காட்சி கொடுத்திருந்தது. கூடவே அதனுடன் இணைந்த பெரிய மலையைப் பார்க்கும்போது, உடல் முழுவதும் பச்சையை அப்பிக்கொண்ட இராணுவ வீரன் போல திமிர் கொண்டு நின்றதோடு மட்டுமில்லாமல், தன்னவளைக் காக்க முயலும் காதலன் போல அவளை அணைத்தவாறு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்றிருந்தது. அந்த சிறிய மலையோ, காதலனின் அணைப்பில் சுகம் கண்டது போல வெட்கம் கொண்டதாய் சற்றுத் தலையை அதன் மார்பு நோக்கிச் சரித்திருந்தது. அல்லது அவளுக்குத்தான் அப்படித் தெரிகிறதோ?
தன்னையும் மறந்து வாகனத்தின் கண்ணாடியைக் கீழ் இறக்க, அந்த மலர்களின் மிதமான வாசனையைத் தாங்கியவாறு மெல்லியதாக வீசிய குளிர் காற்று, அவள் நாசியை வந்தடைய, அதுவரை அழுத்தியிருந்த பாரம் ஏனோ காணாமல் போனது அவளுக்கு.
எத்தனை அழகான இயற்கைக் காட்சி அது… காதலர்களுக்கும், புதிதாய் மணமானவர்களுக்கும் ஏற்ற இடமல்லவா… தன்னை மறந்து தன் இரு கரங்களையும் கன்னங்களில் பதித்தவள், விழிகளை மூடி அந்தச் சுகந்தத்தை ஆழ இழுத்து வெளியிட, நெற்றியிலிருந்த மெல்லிய புருவ முடிச்சு கூடக் காணாமல் போனது. கூடவே இனிய புன்னகையுடன் வெண்ணிற முல்லைப் பற்கள் மெதுவே வெளியே எட்டிப் பார்க்க, அதே சுகந்தம் சற்றும் மாறாமல் தன் விழிகளைத் திறந்தாள் மிளிர்ம்ருதை.
அவளுடைய அந்த ஏகாந்த நிலையை, வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தவனும் தன்னை மறந்து பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய உதடுகளும் திருப்தியில் மலர்ந்திருந்தன.
திறந்த ஜன்னலூடாகத் தன் வலக்கரத்தை நீட்டி, அதில் தன் நாடியைப் பதித்து, மலர்ந்த சிரிப்புடன் வந்தவள், சிறிய மலரின் இதழ் ஒன்று அவள் கன்னத்தில் பட்டுச் செல்ல, அதில் ஏற்பட்ட சிலிர்ப்பில் புன்னகை பெரிதாக விரியத் தலையைத் திருப்பியவளின் விழிகள், எதேச்சையாக முன்னிருந்த கண்ணாடியில், இரசனையுடன் இவளைப் பார்த்துக்கொண்டிருந்தவனின் மீது பதிந்தன.
அதுவரை இளகியிருந்த மனம் அவன் விழிகளில் தெரிந்த இரசனையைக் கண்டதும், கொஞ்சம் கொஞ்சமாக மங்கி முற்றும் காணலாம் போக, அதைப் பிரதிபலித்தவாறே முகம் மீண்டும் இறுகிக் கொண்டது. அதுவரையிருந்த அந்த அமைதியும், இனிமையும் துணிகொண்டு துடைத்தாற் போல அழிந்து போக, இலகுத்தன்மை மாறி, ஒரு வித எரிச்சலுடன் நிமிர்ந்தமர்ந்தாள் மிளிர்ம்ருதை.
அபயவிதுலனுக்குத்தான் சீ என்றானது. அவளைப் பார்க்கவும் முடியாமல், பார்க்காமல் இருக்கவும் முடியாமல், ரசிக்கவும் முடியாமல், அந்தரத்தில் நின்றான் அவன்.
ஐந்து நிமிட ஓட்டத்தின் பின், அந்த வாகனம் அவர்கள் இறங்கவேண்டிய விடுதிக்கு முன்னால் வந்து நின்றது.
முதலில் இறங்கியவன், கதவைத் திறந்து விட, அவனைப் பார்க்காமலே இறங்கத் தொடங்கியவளுக்கு மீண்டும் மனம் இலகுவானது.
அழகு.. அழகு… அழகு… எங்குப் பார்த்தாலும் அழகு கொட்டிக் கிடந்தன.
அது விடுதி என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும், மலர்களுக்கு மத்தியில் குடில்களாகக் கட்டப்பட்டிருந்தன. அனைத்துக் குடில்களும், பச்சை மூங்கில்களால் கலை நயத்துடன் கட்டப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட, நூற்று ஐம்பது குடில்கள் இருக்குமா? விழிகள் விரிய, அவன் திறந்து வைத்த கதவினூடாக இறங்குகிறோம் என்று புரியாமலே குதித்திறங்கியவள், அவனை முட்டுவது கூட உறைக்காமல், கால் போன போக்குக்கு நடந்தாள்.
அவனோ மெல்லிய புன்னகையுடன், அவளைப் பின் தொடர, ராஜாவும் தன்னை மறந்து, இடம் பொருள் ஏவல் மறந்து. வாய் பிளக்க. மிளிர்ம்ருதையின் பின்னால் தொடர்ந்து நடக்கத் தொடங்கினான்.
சற்று நேரம் வெளியே பார்த்துக்கொண்டிருந்தவளிடம்,
“நமக்கு நேரம் இருக்கிறது…. பிறகு வந்து வெளியே சுற்றிக்காட்டுகிறேன்… இப்போது குடிலுக்குள் போகலாமா?” என்றவாறு குடிலை நோக்கித் தன் கரத்தை நீட்ட,
“ஷுர் சார்…!” என்றவாறு வியந்த தன் பாவனையைச் சற்றும் மாற்றாது குடில் நோக்கி ராஜா திரும்ப, மிளிர்ம்ருதையும், மலர்ச்சி சற்றும் குறையாமலே அவனைப் பின் தொடர்ந்தாள்.
அவன் அழைத்துச் சென்ற குடில்தான் அந்த இடத்தின் அலுவலகம் போலும். மூங்கிலினால் பின்னிய மேசையும், மூங்கிலினால் வேய்ந்த புத்தக அலமாரியும் என்று வடிவமைக்கப்பட்டிருக்க, அந்த ஷெல்ஃபில் நிறையக் கோப்புகள் அழகாக அடுக்கப்பட்டிருந்தன.
சற்றுத் தள்ளி சுவரில் ஒட்டியிருந்த மலையின் வரைபடம். ஏற்கெனவே நேராகப் பார்த்துவிட்டு வந்தவள் என்பதால், இப்போது இலகுவாகவே அந்த மலையின் வடிவமைப்பைப் புரிந்துகொள்ள முடிந்தது.
அந்த மலையின் அழகில் மயங்கிக் கிடந்தவளின் கற்பனை மனம் வேறு அந்தக் கம்பீர மலை அபயவிதுலனாகவும், அதன் அணைப்பிலிருந்த மலை தான் போலவும் ஒரு மாயைத் தோற்றத்தை உருவாக்க சிலிர்த்துப் போனாள்.
அதன் பின் தன் கற்பனை சென்ற விதத்தைக் கண்டு அதிர்ந்தவள், அவசரமாகத் திரும்ப, இரசனையுடன் அவளையே பார்த்தவாறு பின்னால் நின்றிருந்த அபயவிதுலனோடு பலமாக மோதி நின்றாள். இப்படிப் பின்னால் வந்து நிற்பான் என்று அவள் கனவா கண்டாள். என்னதான் முயன்றும் தன்னைச் சமப்படுத்த முடியாமல் அவனோடு மோதி நிற்க, அவனோ திடீர் என்று கிடைத்த அந்தச் சொர்க்கத்தை விட மனமில்லாது, சட்டென்று அவள் இடையோடு கரத்தைக் கொடுத்துத் தன்னோடு இறுக்கிக் கொள்ள, கிட்டத்தட்ட அந்த மலையின் படம் போலவேயிருந்தது அந்தக் காட்சி.
அவளுக்குப் பின்னாலிருந்த வரைபடத்தையும், தன் கை வளைவில் நின்றிருந்தவளின் எழில் உடலையும் மாறி மாறிப் பார்த்தவனுக்கு உள்ளம் உவகையில் பொங்கியது. இருபது வருடங்களாக மறந்து போன, அவனை விட்டுத் தொலைதூரத்திற்குச் சென்றிருந்த மகிழ்ச்சி அப்போது அவனை ஆட்கொண்டது.
அதுவரை அவளை விட்டு விலகவேண்டும், அவள் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கவேண்டும் என்றெல்லாம் தன்னைத் தேற்றிக்கொண்டவனுக்கு, அந்த எண்ணங்களெல்லாம் அந்த நேரத்தில் சுத்தமாக மறந்துவிட்டிருந்தது. அவனையும் மீறி, இவள் என்னவள், எனக்குரியவள் என்கிற எண்ணம் மட்டுமே அவனைச் சூழ்ந்திருக்க, அவனையும் மீறி அவனுடைய கரங்கள் அவள் இடையை அழுத்திக் கொடுத்தது. அது வரை ஒரு விதப் புதிய மாயையில் தன்னை மறந்து விழுந்திருந்தவளுக்கு அப்போதுதான் சூழ்நிலை முகத்தில் அறைந்தது.
அவனுடைய இறுகிய அணைப்பில் சிக்கியிருக்கிறோம் என்பது புரிய, அவளைச் சுற்றியிருந்த மாயை பட்டென்று வெடித்துக் காணாமல் போனது.
என்ன காரியம் செய்துகொண்டிருக்கிறாள்… அவனுடைய அணைப்பில் அவளா…? அதுவும் என்னை மறந்து…? சே…! வேகமாக அவன் பிடியை உதறி விலகியவள், என்ன செய்கிறோம் என்று உணர்வதற்கு முன்பாகவே அவன் கன்னத்தில் பலமாக அறைந்துவிட்டிருந்தாள்.
இது கண்ணிமைக்கும் நொடியில் நடந்துவிட்டிருந்தது. முதலில் அதிர்ந்து திகைத்தவனுக்கு, அவள் தன் கன்னத்தில் அறைந்தது உறைக்க, என்றுமில்லா சீற்றத்துடன் நிமிர்ந்தவனுக்கு அவள் நின்ற தோற்றத்தையும் கண்டு தன்னைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்.
அவனை அறைந்த அதிர்ச்சியில் அவளும் மலைத்துப்போய் நின்றிருந்தாள். அதைக் கண்டதும் இவனுடைய கோபமும் ஒரு கட்டுக்குள் வந்தது. கூடவே அறைந்தவள் அவள் அல்லவா, அமைதியாகவே ஏற்றுக்கொண்டவன், “சாரி…” என்கிற முணுமுணுப்புடன், அவ்விடம் விட்டு அகல, இவள்தான், பதறிய உள்ளத்தைத் திடப்படுத்த முயன்றும் முடியாமல் அங்கேயே நின்றிருந்தாள்.
அவன் மீது கோபமாக இருப்பது உண்மைதான். அவனை முற்று முழுதாக வெறுப்பதும் உண்மைதான்… ஆனால் அவனை அடிக்கவேண்டும் என்று கனவிலும் எண்ணியிருக்கவில்லை. கூடவே, அவனை அடித்த பின் ஒரு விதமாக உள்ளம் சாந்தியடைவதை உணர்ந்தவளுக்குப் பெரும் வியப்பும் எழுந்தது. இத்தனை நாள் கொந்தளித்த உள்ளத்திற்கு ஒரு வடிகால் கிடைத்ததுபோலத் தோன்றினாலும், அவனை அடித்ததும் வலித்தது.
இரண்டு மன நிலையில் நின்று தவித்தவளை ராஜாதான் மீண்டும் இவ் உலகிற்கு அவளை அழைத்து வந்தான்.
அது வரை உள்ளே அறைகளைச் சுற்றிப் பர்த்துக்கொண்டிருந்தவன், மிளிர்ம்ருதையைக் காணாது அவளைத் தேடி வரவும், அபயவிதுலன் கறுத்த முகத்துடன் அலுவலக அறையை விட்டு வெளியே வரவும் நேரம் சரியாக இருந்தது.
யோசனையுடன் அவனைப் பார்த்தவாறே, அலுவலக அறைக்குள் நுழைய, அங்கே விறைத்துப்போய் நின்றிருந்தாள் மிளிர்ம்ருதை.
“என்ன மிளிர்… அங்கேயே நின்று விட்டாய்… இஸ் எவ்ரிதிங் ஓக்கே…” என்றான் கவலையுடன். உடனே தன்னைச் சரிப்படுத்தியவள்,
“யா… யெஸ்… ஐ ஆம் ஓக்கே… இந்த… இந்த மலையைப் பார்த்துக்கொண்டிருந்தேன்…” என்று தடுமாறிக்கொண்டே, சிரிப்பது போல உதடுகளை நெழித்துத், தன் கூந்தலைச் சரிப்படுத்தியவாறு கூறியவளை முகம் மலர ஏறிட்ட ராஜா,
“அழகென்றால் அழகுதான் இல்லையா மிளிர்ம்ருதை… என்னால் கண்களையே எடுக்க முடியவில்லை… வா… வந்து மற்றைய அறைகளையும் பார்… மிக அழகாக நேர்த்தியாகக் கட்டியிருக்கிறார்கள்…” என்று கூறத் தன் தலையைக் குலுக்கி ஓரளவு தன்னைத் திடப்படுத்தி நிமிர்ந்தவள்,
“இ… இதோ வருகிறேன் ராஜா…!” என்றவாறு தன் வலியை ஒதுக்கிவிட்டு அவன் பின்னால் சென்றாள்.
சற்று பெரிய வரவேற்பறை. கூடவே, குளியலறையுடன் கூடிய பெரிய படுக்கையறையும், இரண்டு சிறிய படுக்கையறைகளும். அவற்றுடன் இணைந்த பொதுக் குளியலறை. அதற்கு அப்பால் ஒரு சமையலறை. சமையல் மேடை கூட, மூங்கிலினால் வேயப்பட்டிருந்தது. அதுவும் எந்த நவீன வசதியும் இல்லாது, கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்குப் பின்னால் போய்விட்ட தோற்றத்தைக் கொடுத்தது. சமைப்பதற்காகச் சூரிய கதிரில் அமைத்திருந்த அடுப்பு, பார்ப்பதற்கு மண்ணடுப்பு போல அழகாக வடிவமைக்கப்ட்டிருந்தது. மொத்தத்தில் பழைய காலத்துக் குடில்போல இருந்தாலும் நவீனத்தையும் புகுத்தி, எந்த வித, அபாயகரமான செயற்கை சாதனங்களும் இல்லாமல், படு நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது.
தன்னை மறந்து,
“சாப்பாட்டிற்கு என்ன செய்வது?” என்று இவள் கரங்களால் மூங்கில்களை வருடியவாறு கேட்க, சற்றுத் தள்ளி நின்றிருந்த அபயவிதுலனின் முகம் மலர்ந்தது.
“ஒவ்வொரு பத்துக் குடிலுக்கும், உணவகம் அமைத்திருக்கிறோம். எல்லாமே, இங்கே விளையக் கூடிய காய்கறிகளைக் கொண்டே சமைக்கப்படும். அனைத்தும், எந்த இரசாயனமும் இல்லாத உணவு… சற்றுத் தள்ளி, பெரிய வெப்ப நீரூற்று இருக்கிறது. அதைக் குளம் போல வடிவமைத்திருக்கிறோம். அதுவும் இந்தக் குடிலுக்கு உட்பட்டதே. குளிப்பதற்காகக் குடில்களுக்குத் தண்ணீர் அங்கிருந்துதான் போகிறது.” என்று அவன் கூறியபோது, எதற்காக இந்த இடத்திற்கு அத்தனை கிராக்கியென்று அன்று இரட்ணசிங்கம் கூறினார் என்று இப்போது புரிந்தது. இது தேவலோகம் அல்லவா… இந்த இடத்தை எடுத்து, அதற்கேற்ப பொருந்த கூடிய வகையில் குடிலமைத்து… அனைத்தும் இயற்கையாலான பொருட்களுடன்… நினைக்கும் போதே மனம் நிறைந்து போனது. கூடவே அங்கேயே தன் குழந்தைகளுடன் தங்கிவிடவேண்டும் என்கிற பெரும் ஏக்கமும் எழுந்தது. வியந்தவாறு திரும்பியவளின் கண்ணுக்கு அந்தக் கட்டில் விழுந்தது.
அதுவும் மூங்கில் மரங்களால் இறுக்கமாக வேயப்பட்டிருந்தது. கூடவே மெத்தையும். அதுவும் இலவம்பஞ்சினால் செய்யப்பட்டிருக்கிறது என்பதை அதன் மென்மையைக் கொண்டே அறியமுடிந்தது.
அந்தக் கட்டிலைக் கண்டதும், அந்த ரம்மியமான காலநிலைக்குத் தகுந்தாற் போலத் தன் இரு குழந்தைகளையும் அணைத்துக்கொண்டு அதில் படுத்து உறங்கிவிடவேண்டும் என்கிற ஏக்கம் தோன்ற, அதையே பிரதிபலிப்பது போல,
“ஹே… மிளிர்ம்ருதை…. இந்தப் படுக்கையைப் பார்க்கும் போதே, அப்படியே விழுந்து படுத்து உறங்கிவிடவேண்டும் போலிருக்கிறது அல்லவா?” என்று ராஜா ரசனையுடன் தன்னை மறந்து கேட்க, இவளும் புன்னகையுடன் ஆம் என்று தலையை ஆட்ட, பின்னால் நின்று கேட்டுக்கொண்டிருந்த அபயவிதுலனுக்கு இருந்த இனிமை தொலைந்து, அனைத்தும் இழந்த உணர்வில் முகம் வாடிப்போனது.
தன்னை அடக்க முடியாதவனாக, அங்கே இருக்கப் பிடிக்காதவனாக,
“லெட்ஸ் கோ…” என்றவாறு முன்னேற, அந்தக் குடிலை விட்டுச் செல்லப் பிரியப்படாதவளாக ராஜாவோடு அபயவிதுலனைப் பின் தொடர்ந்தாள் மிளிர்ம்ருதை.
நீண்ட நடைதான். ஆனாலும் அந்த நடை யாருக்கும் அலுக்கவில்லை. சொல்லப்போனால், இன்னும் அந்த நடை நீளாதோ என்கிற ஏக்கம்தான் அவளுக்கு.
பிரிவுகளாகக் கட்டப்பட்ட அக் குடில்களைப் பற்றி விளக்கியவாறே வந்தான் அபயவிதுலன்.
“இது ஒரு படுக்கையறை மட்டும் கொண்ட பகுதி. சற்றுத் தள்ளிப்போனால் இரண்டு படுக்கையறைகள் கொண்டது. மூன்று படுக்கையறை கொண்ட குடில்களும் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன… நாம் முதல் போன குடில் கொஞ்சம் பெரியது. அலுவலகமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகச் சற்றுப் பெரிதாகக் கட்டுவித்தேன்… கிட்டத்தட்ட பத்துக் கிலோமீட்டர்கள் வரை நமது குடில்கள்தான்… இங்கே வாகனங்கள் பயன் படுத்த முடியாது. நடை மட்டுமே… சுற்றுச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது. இங்கே அனைத்தும் மீள் சுழற்சி செய்யக் கூடிய பொருட்களே பயன்படுத்தப் படும். கைப்பேசிகள், கணணிகள் அலுவலகத்தில் மட்டும் பயன்படுத்தலாம். குடிலுக்குள் கொண்டுவர அனுமதியில்லை. லான்ட் லைன் மட்டும் குடிலுக்குள் இருக்கும். முழுக்க முழுக்க இயற்கையானதாக இயற்கைக்குத் தீங்கில்லாததாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு… நீங்கள் செய்கின்ற அலங்காரங்களும் அதற்கேற்ப இருக்கவேண்டும்… இதன் அழகையும் குறைக்கக் கூடாது, அதற்கேற்ப சுற்றுப் புறச் சூழலுக்கு ஏற்புடையவையாகவும் இருக்கவேண்டும்”
என்று கூறிக்கொண்டு வர, மிளிர்ம்ருதையோ, அவன் பேச்சைக் கேட்டவாறே, காட்சி சுவாரசியத்தில், நடை பாதையில் இயற்கையாய் அமைந்திருந்த பாறையின் மேற்புறத்தைக் கவனிக்கவில்லை.
நடை வேகத்தில், கால் பாதம் அதில் பலமாகப் பட, அதை நொடிப்பொழுதில், உணர்ந்துகொண்டவன்,
“பார்த்து மிருதா…” என்றவாறு அவள் மேற்கரத்தைப் பற்றிக்கொள்ள, மிருதா என்கிற அழைப்பிலும், அவன் தொடுகையிலும் ஒரு கணம் விறைத்தவள், மறு கணம் தீ சுட்டாற்போல அவனை உதறித் விட்டுத் தள்ளி நின்று கொண்டாள். அவளுடைய முகத்தில் அப்பட்டமான அருவெறுப்புத் தெரிய, உள்ளுக்குள் மேலும் உடைந்து போனான் அபயவிதுலன். ஆனாலும் இறுக்கமாக நின்றுகொண்டான்.
“ஹேய்… பார்த்து வரக்கூடாதா மிளிர்ம்ருதை?” என்று ராஜா கண்டித்தவாறு, அவள் தோளில் தன் கரத்தைப் போட்டு அழைத்துச் செல்ல, இவனுக்குள் பூகம்பத்தின் தெறிப்பு.
இருந்த கோபத்தில் ராஜாவின் கரம் தன் தோளைச் சுற்றியிருக்கிறது என்பதை மிளிர்ம்ருதை உணர்ந்து கொள்ளவில்லை. ராஜாவும் கிடைத்த சந்தர்ப்பத்தை விடத் துணியவில்லை.
என்றும் இல்லாத வகையில், அந்த இயற்கைக் காட்சிகள், அவனுடைய மனதில் அது வரை ஆழத்தில் பதிந்திருந்த அவள் மீதான காதலை வஞ்சகமின்றிக் கிளப்பிக்கொண்டிருந்தது. கை வளைவில் மனம் கொள்ளை கொண்ட தேவதை, கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் அழகின் அரசாட்சி… இதை விட மகிழ்ச்சியான தருணம் அவனுக்குக் கிடைக்குமா தெரியவில்லை. கிடைத்ததை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டான். இவள்தான் அதிர்ச்சியில் அதை உணர்ந்து கொள்ளாது சிலையாக நின்றாள்.
சற்றுத் தூரம் போனபின்புதான், மனதின் படபடப்பு சற்று அடங்கியது. தன் தோளில் விழுந்திருந்த ராஜாவின் கரத்தை அப்போதுதான் உணர்ந்து கொண்டாள் மிளிர்ம்ருதை. அவளையும் மீறி சற்றுத் தள்ளி வந்துகொண்டிருந்தவனின் மீது தன் கவனத்தைத் திருப்ப, அவனோ முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாது, அதே இறுக்கத்துடன், இவள் தோளின் மீது விழுந்த ராஜாவின் கரத்தையே வெறித்துக்கொண்டு வந்துகொண்டிருந்தான்.
அவசரமாகத் தன் தலையைத் திரும்பியவள், ராஜாவின் கரம், ஏதோ பெரும் மலைப்பாம்பு ஏறியிருப்பது போன்ற ஒரு வித அவஸ்தையைக் கொடுக்கச் சிரமப்பட்டுத் தன் முகபாவனையை மாற்றாது, அவன் கரத்தைப் பற்றிக் கீழே விட, அப்போதுதான் ராஜாவும் தான் செய்துகொண்டிருப்பதை உணர்ந்தான்.
“ஓ… ஐ ஆம் சாரி மிளிர்ம்ருதை… இந்தச் சூழ்நிலை, ஏனோ ஒரு வித கனவிற்குள் என்னை அழைத்துச் செல்கிறது… தவறாக நினைத்துக் கொள்ளாதே…” என்று தயக்கமாகக் கூறியவனை ஏறிட்டுப் பார்த்து மெல்லியதாக புன்னகைத்து விட்டுத் தன் கவனத்தைப் பாதையில் திசை திருப்பினாள்.
கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் மூவரும் சுற்றிவிட்டுத் திரும்பிய போது, எல்லோருக்கும் கடும் பசி.
ம்ளிர்ம்ருதையின் முகத்தில் தெரிந்த வாட்டத்தைக் கண்ட அபயவிதுலன், உடனே சற்றுத் தள்ளியிருந்த உணவு விடுதிக்கு அழைத்துச் செல்ல, அங்கேயே பிடித்ததை உண்டு விட்டு மீண்டும் அலுவலகத்திற்கு வந்தனர்.
வந்த போது ஏனோ அம்மூவரின் மனதிலும் பெரும் அமைதி நிலைத்திருந்தது. கூடவே, இந்த அழகான இடத்தை விட்டுச் செல்லவேண்டுமா என்கிற வருத்தமும் எழ, மிளிர்ம்ருதையின் முகம் வாடிப்போனது. அங்கிருந்து செல்ல மனமில்லாதவளாக, திரும்பத் திரும்பக் குடில்களையே விழிகளால் ரசித்தவாறு வர, அதைக் கண்ட அபயவிதுலனின் முகம் இறுக்கத்தைத் தொலைத்துக் கனிந்தது.
தன்னையும் மறந்து,
“இன்று ஒரு நாள் இங்கே தங்கப்போகிறீர்களா?” என்று ஆவலாகக் கேட்க, சும்மா விட்டிருந்தால் என்னவோ.. அவன் கேட்டதும், அவளுடைய முகம் இறுகிப் போனது.
“நோ தாங்க் யூ சார்…!” என்று முகத்தில் அடித்தாற் போலக் கூறியவள், அந்தக் குடிலை விட்டு வெளியேறிய நேரத்தில், அபயவிதுலனின் கைப்பேசியில் குறுஞ்செய்தி வந்தது. வாசலை விட்டுச் சென்றவளைப் பார்த்தவாறே கைப்பேசியை எடுத்துப் பார்த்தான்.
நேற்று இரவு வந்த அதே எச்சரிக்கையுடன் வந்திருந்தது அந்தக் குறுஞ்செய்தி. அவசரமாக அக் குறுஞ்செய்தியைத் திறந்து பார்த்தான். அதில்
“யுவர் டைம் ஸ்டார்ட் நவ்…” என்கிற வாசகம் இருக்க, இவன் உதடுகளில் மெல்லிய கிண்டல் புன்னகை. ஆமாம்… பெரிய பிக் பாஸ்… சொன்னதும், அடுத்த டார்கட்டை நோக்கி ஓடுவதற்கு… யாரை யார் மிரட்டுகிறார்கள் என்று அலட்சியமாக எண்ணியவாறு கைப்பேசியைத் தன் பான்ட் பாக்கட்டில் போட்டான்.
அந்த இடத்தை எதிர்ப்பையும் மீறி வாங்கியதற்குப் பல காரணங்கள் இருந்தாலும். முக்கியமான காரணம், அவ்விடத்தைப் பார்க்கும் போது, அவன் மனதிற்குள் படமாய் விரிந்தது மிளிர்ம்ருதையே. அந்தச் சிறிய மலையையும், அதை அணைத்திருக்கும் பெரிய மலையையும் பார்க்கும் போதெல்லாம் தானும் அவளுமாய் ஒரு மாயத் தோற்றத்தை அவனுள் விதைத்திருந்தது. அதுவும் அங்குள்ள இயற்கை வளங்களைக் கண்டு, அந்த இடத்தை விட்டே எங்கும் போக முடியாத ஒரு வித மயக்கத்தில் வீழ்ந்திருந்தான் அவன்.
அதை வாங்கிய பின், தன் நீண்ட நாள் கனவான அந்தக் குடில்களை அவனே வடிவமைத்து, அவனே கட்டுவித்தான். அவன் எதிர்பார்த்ததை விடப் பல மடங்கு வரவேற்பு அந்த இடத்திற்குக் கிடைத்தது. சொல்லப்போனால், அங்கே வந்து தங்குவதற்கு முன்பதிவு செய்தவர்கள், இடம் கிடைக்காமல், இரண்டு வருடங்கள் தள்ளியும் பதிவு செய்திருக்கிறார்கள். அங்கே வருபவர்கள் அனைவரும் அவன் கேட்கும் தொகையைக் கொடுக்கத் தயாராக இருந்தார்கள்.
இந்தக் குடிலைத் திறக்கும் பொது, அவன் வாங்கிய பணத்தை விட, ஆறு மடங்கு அதிக வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் என்பதில் அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.
இப்படி நல்ல வருமானம் பெற்றுத் தரக் கூடிய இடத்தை அவன் கண்டு பிடித்து, வாங்கிக்கொண்டது, அந்த அரசியல்வாதி மகனின் கண்ணை உறுத்திவிட்டது. கொள்ளை கொள்ளையாய் லாபம் தரக்கூடிய இடம் கை நழுவிப்போயிற்றே என்கிற பெரும் ஆத்திரம் அவனுக்கு. கூடவே, இதை வாங்க வெளி நாட்டிலிருந்து ஒருவன் வரவேண்டுமா என்கிற எரிச்சல் வேறு.
வெளிநாட்டில் இருப்பவன் வாங்க முடியாது என்கிற சட்டத்தின் கீழ், அதைப் பறிமுதல் செய்வதற்கு அதிக வாய்ப்பிருந்ததால், அதற்கேற்பக் காயை நகர்த்தியிருந்தான் அபயவிதுலன். ஆம், அந்தக் குடில், மிளிர்ம்ருதையின் பெயரில் வாங்கப்பட்டிருந்தது. யார் அந்த மிளிர்ம்ருதை என்று விசாரித்து அறிவதற்குள்ளாக, அந்த இடம் அபயவிதுலனின் கைக்கு வந்துவிட்டிருந்தது.
பல முறை மறைமுகமாகவும், நேரடியாகவும் தனக்குக் கொடுத்து விடும்படி அபயவிதுலனை எச்சரிக்கை செய்த போது, அவன் சிரித்து விட்டு கொசு தட்டுவது போலத் தட்டிவிட்டு வந்துவிட்டான்.
மிஞ்சி மிஞ்சிப் போனால் என்ன செய்வார்கள். அவன் உயிரை எடுப்பார்கள். தண்டத்திற்கு இருக்கும் உயிர்தானே. போனால் போகட்டும்… இந்த இடம், அவளிடம் சென்றுவிடும் அது போதும் அவனுக்கு… என்று அலட்சியமாக நினைத்தவனுக்கு, இப்போது மிரட்டல் வேறு விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படுபவனா அவன்… பதினொரு வயதிலிருந்து பார்க்காத மிரட்டல்களையா அந்த எதிர்க்கட்சித் தலைவரும், அவர் மகனும் தந்துவிடப் போகிறார்கள்…
‘இந்தப் பூச்சாண்டிக்குப் பயப்பட வேறு யாரையும்தான் அவர்கள் பிடிக்கவேண்டும்…’ என்று எண்ணியவன், அந்தக் குடிலின் ஜன்னலுக்கூடாக எட்டிப் பார்த்தான். மிளிர்ம்ருதை, அங்கேயிருந்த இன்னொரு குடிலின் மூங்கில் வேலைப்பாடுகளை இரசித்தவாறு அதை வருடிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
தொலைதூரம் வரைக்கும் பச்சைப் பசேல் என்றிருக்க, அடர்ந்த வர்ணப் பூக்களின்… நடுவில் ஒற்றை ரோஜாவாக மலர்ந்து சிரித்துக்கொண்டிருந்தவளின் அழகில் மெய்மறந்து போனான் அபயவிதுலன்.
அவனுடைய உதடுகளில் இளநகை ஒன்று மலர்ந்தது. அப்படியே அமர்ந்த வாக்கில் அவளையே பார்த்துக்கொண்டிருக்கவேண்டும் என்கிற பேராவல் எழுந்தது. அந்த மலைக்கே ராணியல்லவா அவள்… இப்போதே சென்று அவளைத் தன் கை வளைவில் வைத்து உச்சிமுகர வேண்டும் என்கிற ஒருவித வெறியே எழுந்தது. தன்னையும் மறந்து ஒரு வித போதையுடன் அவளை நோக்கி நடக்கத் தொடங்கினான் அபயவிதுலன்.
குடிலின் வாசலைக் கடந்து இரண்டடி வைத்திருக்க மாட்டான்… அப்போதுதான் அது நடந்தது…
ஓரடி, இரண்டடி, மூன்றடி….”பூஊஊஊஊம் …” என்கிற பலத்த சப்தத்துடன் அந்தக் குடில் வெடித்துச் சிதற, மிக அருகாமையில் நின்றிருந்த அபயவிதுலன், என்ன என்பதை உணர்வதற்குள்ளாக, அந்தக் குடில் வெடித்த வேகத்தில் தூக்கியெறியப்பட்டுக் காற்றில் மிதந்து, சற்றுத் தள்ளியிருந்த பாறையொன்றின் மீது மோதி விழுந்தான்.